செ. இரா.செல்வக்குமார்

இந்தக் கிழமையின் வல்லமையாளர் பிரேசிலில் இரியோ தி செனரோ (Rio de Janeiro) நகரில் தங்கப்பதக்கம் வென்ற சென்னை மாணவி.

இந்தவார வல்லமையளர்  உலக அளவில் அரிய செயல்  படைத்த ஒரு வியப்பூட்டும் சிறுமி.  இது இனிய செய்தியேயாயினும், இவருடைய செயலைப் புரிந்துகொள்ள சில கசப்பான உண்மைகளை அறிந்தால்தான் வெற்றியின் பின்புலம் தெரியும்.

 தெருவோரக்குழந்தை-Chennai_gir_278389_2784721g

பிரேசிலில் தங்கப்பதக்கம் வென்ற எப்சியா ((ஃகெப்சிபா, ஹெப்சிபா, Hepsiba)[6] )

உலகிலுள்ள 2200 மில்லியன் குழந்தைகளில், 1000 மில்லியன் குழந்தைகள் வறுமையில் வாடுகின்றனர் [1]. வளரும்நாடுகளில் 1900 மில்லியன் குழந்தைகள் இருக்கின்றார்கள். ஆனால் அதில் 640 மில்லியன் குழந்தைகள் தாங்கள் இருக்கச் சரியான இடமில்லாமலும், 400 மில்லியன் குழந்தைகளுக்குச் சரியான குடிநீர் இல்லாமலும் இருக்கின்றார்கள் [1][2].  ஆண்டுதோறும் 10.6 மில்லியன் குழந்தைகள் 5 வயது அடையும் முன்பே இறந்துவிடுகின்றார்கள்.

இந்தக் குழந்தைவறுமை நிலையை நாடுதோறும் அல்லது  உலகத்தின் பகுதிதோறும் அளவிட  குழந்தைகள் வளர்ச்சிச்சுட்டெண் (கு.வ.சு) (Child Development Index, CDI)  என்று ஓர் அளவீட்டை உருவாக்கி அதைப் பயன்படுத்துகின்றனர் [3].  இவ்வெண் குறைவாக இருந்தால் தேவைப்படும் வளர்ச்சி குறைவு என்று பொருள். அதாவது குழந்தை வறுமைநிலை குறைவு.  இவ்வெண் அதிகம் என்றால் வறுமைநிலை அதிகம்.  வளர்ந்தநாடுகளில் இவ்வெண் 2.1, ஆப்பிரிக்காவில் 34.5, இந்தியத்துணைக்கண்டத்தில் 26.4. கிழக்கு ஆசியா 8.5 , உலகத்தின் சராசரி 17.5. [3]

வறுமையில் வாடும் குழந்தைகளுக்குப் புதுநம்பிக்கைத் தரவும் அவர்களுக்கு உதவவும் அவர்களுக்கென தெருவோரக்குழந்தைகளுக்கென ஒரு புதிய அனைத்துலக விளையாட்டுப் போட்டிகள் இவ்வாண்டு தென்னமெரிக்காவில் உள்ள பிரேசிலில்  நடைபெற்றது.  இதனை  Street Child Games 2016 என அழைக்கின்றார்கள்[5].  இதில் 9 நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள் மார்ச்சு 14-20, 2016 ஆகிய நாள்களில் ‘’இரியோ’’ என அழைக்கப்படும் இரியோ தி செனரோ  (Rio de Janeiro) நகரில் கூடி போட்டிப்போட்டார்கள். இங்குதான்  2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக்குப்போட்டிகள் (Rio de Janeiro)நடக்கவிருக்கின்றன.

இப்போட்டியில் சென்னையைச் சேர்ந்த அகவை 16 நிரம்பிய எப்சிபா (ஃகெப்சிபா, ஹெப்சிபா, Hepsiba) என்னும் சிறுமி 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதுமட்டுமல்லாமல் இன்னும் இரண்டு பதக்கங்கள் வென்றுள்ளார்.  இவருக்குக் கருணாலயா என்னும் அமைப்பு உதவி செய்துள்ளது. இவருடைய வாழிடம் முன்பு’’ நேரு உள் விளையாட்டு அரங்கத்துக்கு அருகே இருந்த சாலையோர நடைமேடை, தற்போது சென்னை மாநகராட்சியின் வீடற்றவர்களுக்கான தங்கும் கூடாரம்’’[6]. இவருக்குச் சரியான இருப்பிட முகவரிகூட இல்லாததால் கடவுச்சீட்டு (Passport) வாங்குவதுகூட சிக்கலுடையதாக இருந்தது, பிரேசிலுக்குப் போகவும் பணம் கிடையாது எனினும் கருணாலயாவின் உதவியோடு பிரேசிலுக்குப் போனதுமட்டுமல்லாமல் அங்கே தங்கப்பதக்கத்தையும் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப்பதக்கத்தையும் வென்று வந்திருக்கின்றார். பதக்கங்களைவிட அவர் தனக்குக் கிடைத்தப் புதுநட்புகளைப் பற்றிப் பெருமையாகக் கூறுகின்றார்.  எப்சிபா இப்பொழுது தனக்கு பாக்கித்தான், எகிப்து, பிரிட்டன், அர்ச்சென்டினா, பிரேசில் ஆகிய நாடுகளில் நண்பர்கள் உள்ளார்கள். செல்வி எப்சியா அவர்களின் உணர்வுகளை அவர் கூற்றாகவே:

” மொதல்ல எனக்கு பிரேசில் போக வாய்ப்பு கிடைக்குமான்னு சந்தேகமா இருந்துச்சு. அங்க போறதுக்கு பணமும் இல்லை. கருணாலயா அமைப்புக்காரங்கதான் உதவி செய்தாங்க. இப்ப டவுட்டன் கவர்மெண்ட் ஸ்கூல்ல [பள்ளியில்] பிளஸ் 1 படிச்சிட்டு இருக்கேன். பிரேசிலில் தெருவோரக் குழந்தைகளுக்கு போட்டி நடக்குதுன்னு எங்களைக் கூட்டிட்டுப் போறதுக்காக டெஸ்ட் மேட்ச்[சு] [தேர்வுப்போட்டி] நடத்துனாங்க. அதுல நான் முதல் ஆளா வந்தேன். ஸ்கூல்ல [பள்ளியில்] நடக்கற போட்டிகள்ல பரிசு வாங்கியிருக்கேன். ஆனா, சர்வதேச அளவுல கலந்துக்குவோம்னு நினைக்கல. சென்னையில இருக்கும்போது காலை சாப்பாடுகிங்கறதே கிடையாது. அம்மா ரொம்ப கஷ்டப்பட்டு பூ விக்கறதால அவங்ககிட்ட எதுவும் கேக்க முடியாது. போட்டிக்குத் தயாராகும்போது முட்டை, சுண்டல்னு நிறைய கொடுத்தாங்க. அதனால நல்லா ஓட முடிஞ்சது. ஜெயிச்சா வாழ்க்கை நல்லா இருக்கும்னு சொன்னாங்க. எப்பவும் போலத்தான் ஓடினேன். நாலு பதக்கம் வாங்குவேன்னு நினைச்சு கூடப் பார்க்கலை சார்…” என்றார் கண்களில் உற்சாகத்தோடு.” [4]

முதல் முயற்சியே தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. செல்வி எப்சியாவுக்கு வல்லமையின் நிறைந்த பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும். மேன்மேலும் வெற்றிகள் சமைத்து நல்வாழ்வு பெற்று நலமுடன் வாழவும் நல்வாழ்த்துகள்.

அடிக்குறிப்புகள்:
[1]  Shah A (2010). Poverty Facts and Stats. Global Issues [ http://www.globalissues.org/article/26/poverty-facts-and-stats ]  .

[2] விக்கிப்பீடியா, [https://en.wikipedia.org/wiki/Child_poverty ]

[3] Save the Children (2008). The Child Development Index: Holding governments to account for children’s wellbeing. Save the Children. London, UK.
[4] ஆனந்தவிகடன் , முகப்புச் செய்தி, ‘’தங்கம் வென்ற ‘தெருவோரத் தங்கம்’…! -பிரேசிலை அதிர வைத்த சென்னை சிறுமி! ‘’ மார்ச்சு 21, 2016
[5] http://www.streetchildgames.org/ [அணுகியநாள் மார்ச்சு 27, 2016]
[6] த இந்து, நாளிதழ் [இ]ரம்யா கண்ணன், ‘’ தெருவோர குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டி: பிரேசிலில் முத்திரை பதித்த சென்னை[ச்] சிறுமி’’, மார்ச்சு 22, 2016

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “இந்த வார வல்லமையாளர்

  1. செல்வி. ஹெப்சிபாவிற்கும், அவரை வல்லமையாளர் விருதுக்குத் தேர்வு செய்த பேராசிரியர் செல்வாவிற்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்.  

  2. இவரை விட பொருத்தமான வல்லமையாளர் தரணி தனில் தோன்றியதில்லை. நண்பர் செல்வாவைத்தான் வாழ்த்த வேண்டும். ‘சென்னையில இருக்கும்போது காலை சாப்பாடுகிங்கறதே கிடையாது. அம்மா ரொம்ப கஷ்டப்பட்டு பூ விக்கறதால அவங்ககிட்ட எதுவும் கேக்க முடியாது.’ என்று கூறும் ஹெப்சிபாவை வாழ்த்தத் துணிவு வேண்டும். அவருக்கு புகழாரம் சூட்டுவதுடன் நிற்காமல், அடுத்து இவரையும் கவனிக்கப்போவதாக உத்தேசம்

  3. வல்லமையாளர் ஹெப்சிபாவிற்கும் தெருவோரக்குழந்தைகளுக்கென ஒரு புதிய அனைத்துலக விளையாட்டுப் போட்டிகளை நடத்தியவர்களுக்கும் பாராட்டுகள். இளைய பாரதத்தினாய் வா வா வா, எதிரிலா வலத்தினாய் வா வா வா.

  4. வல்லமையாளர் விருது உண்மையிலேயே பெருமை பெறுகிறது. அறிந்தேற்பும் பாராட்டும் வழங்கப்பெற வேண்டிய சிறுமி எப்சிபாவிற்கு வல்லமையாளர் விருது வழங்கிய பேரா.செல்வாவிற்குப் பாராட்டுகள். சிறுமி எல்லா நலமும் வளமும் எய்தி முன்னேற்றங்கண்டு சிறப்பாக நூறாண்டு வாழ வாழ்த்துகள்!
    அன்புடன் இலக்குவனார திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *