இந்த வார வல்லமையாளர் (246)
செல்வன்
இவ்வார வல்லமையாளராக எழுத்தாளர் பா.ராகவன் அவர்களை அறிவிப்பதில் வல்லமை மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.
அமுதசுரபி, தாய் இதழ்களில் இவரது எழுத்துலக பயணம் துவங்கியது. அதன்பின் கல்கியில் துணையாசிரியராகப் பணியாற்றினார். அதன்பின் குமுதம் வார இதழின் துணையாசிரியராக மூன்று ஆண்டு காலம் பணியாற்றினார். குமுதம் குழுமத்திலிருந்து ‘ஜங்ஷன்’ என்ற மாதமிருமுறை இதழ் தொடங்கப்பட்டபோது அதன் பொறுப்பாசிரியராக ஓராண்டுகாலம் பணியாற்றினார். அதன்பின் பத்திரிகைப் பணியிலிருந்து விலகி பதிப்புத்துறைக்கு வந்த இவர், தற்போது நியூ ஒரைசன் மீடியா நிறுவனத்தின் முதன்மை ஆசிரியராகப் பணிபுரிகிறார். சில தொலைக்காட்சித் தொடர்களுக்குத் திரைக்கதை வசனம் எழுதியிருக்கும் இவர், இப்போது திரைப்படங்களுக்கும் திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.
வாணி ராணி தொடரின் வசனகர்த்தாவாக அத்தொடரின் 1400வது எபிசோடை இவ்வாரம் எழுதிமுடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். பாரதிய பாஷா பரிஷத், இலக்கியபீடத்தின் சிறந்த நாவலாசிரியர் விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.
மாய வலை, பாக், ஒரு புதிரின் சரிதம் போன்ற நூல்களை எழுதினாலும் இவரை அனைவரும் திரும்பிப்பார்க்க வைத்தது “நிலமெல்லாம் இரத்தம்” தொடர்தான். இஸ்ரேலிய வரலாற்றை பைபிள் காலம் துவங்கி தற்போதைய பாலஸ்தின பிரச்சனை காலகட்டம் வரை எழுதிய நூல் இதற்கு முன்னரும், பின்னரும் தமிழில் இதுவரை வந்ததில்லை எனலாம்.
அதன்பின் இவரது டாலர்தேசம் எனும் அமெரிக்காவின் வரலாற்றை சொல்லும் தொடரும் வெளிவந்து பெருத்த வெற்றியை அடைந்தது. இவை நூல்களாக வெளிவந்தும் பெருவெற்றி பெற்றன. அவ்விதத்த்தில் தமிழின் மிகச்சிறந்த வரலாற்று நூல் ஆசிரியர்களில் ஒருவர் என இவரை கருதலாம்.
இவரைப்பற்றி பொதுமக்களுக்கு தெரியாத விஷயம் ஒன்று உண்டு. அது இவர் ஒரு சிறந்த சமையல் கலைஞர் என்பதே. பனீர் டிக்கா சில்லி பனீர் , காய்கறிபொறியல், அவியல் என சமையலை கற்றுக்கொண்டு அதில் இவர் காட்டும் நளபாகம் அனைவரையும் வியக்கவைக்கும். இவரது முகநூல் நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்த இவரது நளபாகத்திறனை உலகுக்கு தெரிவிக்கும் விதம் ருசியியல் எனும் தொடரை தமிழ் இந்து பத்திரிக்கையில் எழுதி வாசகர்களுக்கும் கொண்டுபோய் சேர்த்தார்.
ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட இவர் எழுதிய பொலிக, பொலிக எனும் இராமானுஜ முனிவரின் வாழ்க்கைசரிதம் நூலாக வந்து வெற்றிபெற்றது.
இவரது முகநூல் பதிவுகள் பலவும் இவரது நூல்களை மிஞ்சும் அளவு சுவாரசியத்துடன் இருக்கும். புறாவை பிடித்த பூனை பற்றிய இப்பதிவு அதற்கு ஒரு உதாரணம்.
“இன்றைய காலை நடையின்போது ஒரு காட்சியைக் கண்டேன். இந்தக் கணம் வரை கண்ணையும் மனத்தையும்விட்டு நகராத காட்சி.
நான் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தை மொத்தமாக ஒரு சுற்று சுற்றி வந்தால் 618 தப்படிகள் காட்டும். மித வேக நடையில் தோராயமாக அதற்கு ஆறு நிமிடங்கள் பிடிக்கும். பொதுவாக நான் இந்த நீண்ட நடை வட்டத்தைத் தேர்ந்தெடுப்பதில்லை. வளாகத்திலேயே அறுபத்து ஐந்து தப்படிகள் வரக்கூடிய அளவுக்கு ஒரு சிறு ரவுண்டானா உண்டு. அதில்தான் நடப்பேன். நீள் நடையைக் காட்டிலும் சிறு வட்ட நடையில் அதிக கலோரி எரிக்கப்படுகிறது என்பது என் பிரத்தியேக ஆய்வுத் தீர்மானம். [இது அறிவியல்பூர்வமானதோ இல்லையோ, எனக்கு இதுதான் சரிப்பட்டு வருகிறது.]
நிற்க. இன்று ஒரு மாறுதலுக்கு மூன்று சுற்றுகள் நீள்நடை போகலாம் என்று முடிவு செய்தேன். அதாவது சுமார் இரண்டாயிரம் தப்படிகளுக்கு நீண்ட நடை.
முதல் சுற்று முடியும்போது வளாகத்தில் எப்போதும் சுற்றி வரும் பூனையொன்றைக் கண்டேன். முன்னூறு குடும்பங்கள் உள்ள வளாகத்தில் இதற்கு உணவுப் பிரச்னை இராது என்று எப்போதும் நினைத்துக்கொள்வதையே இன்றும் நினைத்துக்கொண்டு நடந்தேன்.
மேலே படபடவென்று புறாக்கள் சிறகடித்துக்கொண்டன. காலைப் பொழுதில் புறாக்களின் புறப்பாட்டைக் கவனிப்பது எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. அவற்றின் சுறுசுறுப்பு, காகங்களிடமும் காண முடியாதது. கொத்தாக பத்து சன் ஷேடுகளின்மீது நூறு புறாக்கள் அமரும். ரெடி ஒன் டூ த்ரீ சொல்லி சொய்யாவென்று எம்பிப் பறக்கத் தொடங்கும். ஒரு நீரூற்று பீய்ச்சியடிப்பது போல.
முன்னூறு குடும்பங்கள் உள்ள வளாகத்தில் இப்புறாக்களுக்கு தானியம் வைப்போர் எத்தனை பேர் என்று எனக்குத் தெரியாது. என் மனைவி தினமும் சமையலறை ஜன்னல் திறந்து ஒரு தட்டு சாதம் வைப்பார். சமர்த்தாக நேரத்துக்கு வந்து சாப்பிட்டுப் போகும் புறாக்கள் சிலவற்றை நானறிவேன். உணவு வைக்கும் மனித உயிர்களிடம் பறவைகள் காட்டும் பிரியம் மகத்தானது. உண்டு முடித்ததும் அவை எழுப்பும் ஒரு வினோதமான ஒலியில் நன்றியை உணர முடியும். மகிழ்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும்.
இன்றைய எனது இரண்டாவது சுற்று நடையின்போது சன்ஷேடுகளில் புறாக்களின் அணிவகுப்பு நிகழ்ந்து முடிந்திருந்தது.
ரெடி ஒன் டூ த்ரீ.
படபடவென்று சிறகுகளை அடித்துக்கொண்டு அவை உயரே எழும்பிப் பறக்கத் தொடங்கின. ஒரு கணம் நின்று அண்ணாந்து பார்த்து ரசித்தேன். பறக்கத் தொடங்கிய ஒரு புறாவுக்கு என்ன தோன்றியதோ, சரேலென்று அறுபது, எழுபது டிகிரி சரிவில் தரையை நோக்கிச் சீறி வந்தது. அதன் கண்ணில் அங்கு ஏதோ தானிய மணிகள் பட்டிருக்க வேண்டும்.
அதனைக் கொத்திக்கொண்டு அது மீண்டும் மேலேறிப் பறக்க ஓரிரு வினாடிகள்கூடப் பிடிக்காது. ஆனால் அந்த ஓரிரு வினாடிகளுக்குள்தான் அந்தச் சம்பவம் நடந்துவிட்டது.
புறா கீழே பாய்ந்து வந்து தானியத்தைக் கொத்திய அதே கணத்தில் எங்கிருந்தோ பாய்ந்து வந்த பூனை ஒரே கவ்வாக அதன் கழுத்தைக் கவ்வியது.
துடித்துவிட்டேன். ஒரு வீராவேசம் வந்து ஏய் என்று கத்திக்கொண்டு நான் அதை நோக்கி ஓடுவதற்குள் கவ்விய புறாவைத் தூக்கிக்கொண்டு பூனை ஒரு காருக்கு அடியில் பாய்ந்தது.
எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. புறாவின் மரண ஓலம் கேட்டுக்கொண்டே இருந்தது. அது தினசரி ஜன்னலில் உண்டு முடித்துவிட்டு நன்றி சொல்லும் குரல் அல்ல. அடி வயிற்றில் இருந்து எழுந்த அவல ஓலம். தனது இறுதி மூச்சை விடப் போகிற பதற்றத்தில் அதன் சிறகுகள் படபடவென்று அடித்துக்கொண்டன.
காருக்கடியில் குனிந்து பூனையை விரட்டப் பார்த்தேன். எடுத்து எறிய ஏதேனும் கல்லோ வேறு பொருளோ கிடைக்குமா என்று தேடினேன். ஒரு வாட்டர் பாட்டில் கிடந்தது. அதை எடுத்து விட்டெறிந்தேன். பூனை உடனே அடுத்த காரின் அடியே ஓடி மறைந்தது. கீழ்த்தளம் முழுதும் கார்கள். குறைந்தது இருநூறு, இருநூற்றைம்பது கார்கள். அந்தப் பூனை சரியான மறைவிடத்தைத்தான் தேர்ந்தெடுத்திருந்தது. என்னால் ஒவ்வொரு காருக்கு அடியிலும் குனிந்து விரட்டுவதென்பது இயலாத காரியம். தவிர ஒவ்வொரு முறையும் அந்தத் தண்ணீர் பாட்டிலையும் பொறுக்கி எடுத்து எறிய வேண்டும். நடக்கிற கதை இல்லை என்று தோன்றியது.
பதற்றத்தில் செக்யூரிடியை அழைத்து விவரம் சொன்னேன். எப்படியாவது அந்தப் பூனையை வெளியே கொண்டு வாருங்கள். அதன் வாயில் கவ்வியிருக்கும் புறாவுக்கு விடுதலை கொடுக்கப் பாருங்கள்.
அவரும் தம்மாலான முயற்சிகளைச் செய்து பார்த்தார். ஆனால் அந்தப் பூனை பிடிபடவேயில்லை. கவ்விய புறா கதறக் கதற அதன் கழுத்தைக் குதறியெடுத்தபடி அது ஓடியேவிட்டது.
எலியை உண்ணும் பூனையை அறிவேன். புறாவைத் தின்னுமா?
தானியத்துக்காகப் புறா தேடிக் கிளம்பியது எத்தனை சரியோ, அதே அளவு தனது உணவைத் தேடியடைந்த பூனை செய்ததும் சரியே. ஆனாலும் அடித்துத் தின்பதை உணர்ச்சிவசப்படாமல் பார்க்க முடியவில்லை. சுய உணர்வின்றி வாட்டர் பாட்டிலைத் தேடியெடுத்து அதன்மீது நாலைந்து முறை விட்டெறிந்த என் கோபத்தை எண்ணிப் பார்த்தேன். பிறகு கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது.
இயற்கையை அதன் அனைத்து குணாதிசயங்களுடனும் ஏற்கும் மனம் எனக்கில்லை. இந்த ஜென்மத்தில் அது வரவும் வராது என்று தோன்றுகிறது.
இன்று மதியம் என் மனைவி ஜன்னல் திறந்து சாப்பாடு வைக்கும்போது என் ஒரு சொட்டுக் கண்ணீர்த்துளியைச் சேர்த்து வைப்பேன். உண்ண வரும் புறாவுக்கு அது நிச்சயம் புரியும்.”
தமிழ்மண்ணின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான பா.ராகவன் அவர்களுக்கு அளிக்கும் இந்த விருதானது அவரைப்போல் சுவாரசியமாக எழுத இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் என வல்ல்மை நம்புகிறது
(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]