இவ்வார வல்லமையாளராக திருமதி நூஃப் மர்வாய் அவர்களை தேர்ந்தெடுத்து அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

நூஃப் மர்வாய் சவூதி அரேபியாவின் முதல் அதிகாரபூர்வ யோகா பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கபட்டு சர்வதேச செய்திகளில் இடம் பிடித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்

“யோகா என்றால் என்னவென்றே தெரியாத அரபிகளுக்கு யோகாவை பயிற்றுவிப்பது கடினமான சவால்தான். ஆனால் உடல்நலன் மேல் அவர்கள் அக்கறைகொண்டுள்ளதால், யோகாவை அவர்களுக்கு உடல்நலன் நோக்கில் அறிமுகம் செய்து வருகிறேன்.

நான் சிறுவயது முதல் ஆட்டோஇம்யூன் வியாதியால் பாதிக்கப்பட்டிருந்தேன். இயல்பான வாழ்க்கையை வாழ்வதே சிரமமாக இருந்தது. இந்த சூழலில் யோகா குறித்து படித்தேன். மேலும் படிக்க, படிக்க அது என் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் என நம்பிக்கை பிறந்தது. அதன்பின் ஆஸ்திரேலியாவுக்கு மேற்படிப்புக்கு சென்றேன். அங்கிருந்த போது ஆட்டோஇம்யூன் வியாதி என் கிட்னியையும் தாக்கியதால், கேரளாவுக்கு சென்று ஆயுர்வேத நிபுணர்களை சந்தித்தேன். அங்கே தங்கி இருந்து ஆயுர்வேத சிகிச்சை மற்றும் யோகக்கலை பயிற்சி மூலம் எனக்கு நல்ல நிவாரணம் கிட்டியது. இப்படியே யோகக்கலையுடனான என் தொடர்பு வலுப்பட்டது.

 

1

என் பெற்றோர் எனக்கு ஆதரவாக இருந்தாலும் யோகா பற்றி தெரியாத உறவினர்கள் என்னை விமர்சனம் செய்தார்கள். இப்போது அவர்களில் பலர் என்னிடம் யோகா பயின்று வருகிறார்கள்.

நான் சவூதி அரேபியா திரும்பியபோது அரேபியர்களுக்கு யோகக்கலை பற்றி எதுவுமே தெரியவில்லை என்பதை அறிந்தேன். அவர்கள் அதை ஒரு பவுத்த தியானக்கலையாக கருதினார்கள். பல டிவி நிகழ்ச்சிகள் மூலம் யோகக்கலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினேன். யோகா மதம் சம்பந்தமானதா என பலர் கேள்வி எழுப்பினார்கள். அவர்களுக்கு யோகம் அளிக்கும் நன்மைகளை அறிவியல்ரீதியில் விளக்கினேன்.
நூப்
பிர்தமர் நரேந்திர மோடி ஆட்சியில் யோகக்கலையை பரப்ப பல்வேறு முயற்சிகள் நடந்தன. அதன் விளைவாக ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகம் எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவை அளித்தது.

தற்போது ஜெட்டா, ரியாத், மக்கா, மதீனா உள்ளிட்ட பல நகரங்களில் யோகக்கலை பயிற்றுவிக்கும் நிறுவனங்கள் உள்ளன. அரபியரிடையே யோகா குறித்த விழிப்புணர்வு பரவி வருகிறது. தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் வருகின்றன” என கூறுகிறார்.

தமிழரின் யோகக்கலையை அரபுமண்ணில் பரப்பிவரும் நூஃப் மார்வாயின் உடல்நலன் சார்ந்த விழிப்புணர்வை வாழ்த்தும் விதத்தில் அவரை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. இந்த பரிந்துரையை செய்த அண்ணாகண்ணன் அவர்களுக்கு வல்லமையின் நன்றி.

(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

Leave a Reply

Your email address will not be published.