இவ்வார வல்லமையாளராக விஞ்ஞானி சிவன் அவர்களை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

தமிழகத்தைச் சேர்ந்த கே.சிவன் இஸ்ரோ தலைவராகியுள்ளார். இந்த பதவியில் அமரும் முதல் தமிழர் இவர்தான். கன்னியாகுமரி மாவட்டம் சரக்கல்விளை என்ற கிராமத்தில், அரசுப்பள்ளியில் தமிழ் வழியில் படிப்பைத் தொடங்கி நாட்டின் உயரிய பதவிகளில் ஒன்றான இஸ்ரோ தலைவல் பதவியில் அமர்ந்துள்ளார். குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமிற்கு பிறகு, அகில இந்தியாவிலும் சிவன் என்ற பெயர் ஒரே நாளில் பரவிவிட்டது. சிவனை தமிழர்களாகிய நாம் கொண்டாடுவதில் வியப்பேதுமில்லை.
ஆனால், அண்டை மாநிலம் கூட அவர் தமிழராக இருந்தாலும் மலையாளிதான் என்று உரிமை கொண்டாடுவது வியப்பை அளிக்கிறது. இஸ்ரோ தலைவராக சிவனை அறிவித்ததும், அவரை அதிகம் கொண்டாடியது கேரள மாநிலம்தான். முன்னணி மலையாள பத்திரிகையான மனோரமா வெளியிட்ட செய்தியில், ”கன்னியாகுமரியில் பிறந்தாலும் சிவனுக்கு திருவனந்தபுரம்தான் தாய் வீடு. 30 ஆண்டுகளாக மலையாள மண்ணுடன் கலந்து விட்டவர் சிவன்” என்று கூறியுள்ளது. மேலும் ‘உறக்கம் அறியா விஞ்ஞானி’ என்றும் அந்த பத்திரிகை அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளது.

1983ம் ஆண்டில் இருந்து இஸ்ரோவில் பணி புரிந்து வரும் சிவன், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வுக் கூடத்தின் தலைவராக பணியாற்றி வந்தார். அப்துல் கலாமுக்கு பிறகு அண்டை மாநிலங்கள் கூட தமிழர் ஒருவருக்கு உரிமை கொண்டாடுவது சிவனைத்தான். தமிழர்கள் எப்படி வாழ வேண்டும். எந்த விஷயத்தில் சாதிக்க வேண்டுமென்பதற்கு உதாரணமாக திகழ்கிறார் கே.சிவன்.

இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டப் பிறகு அளித்த பேட்டியில், ” இந்த பதவி எனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அதிர்ஷ்டமும் எனக்கு இருந்தாகவே கருதுகிறேன்’ என்று பணிவுடன் குறிப்பிட்டார். மேலும், ”என் மீது அரசு வைத்த நம்பிக்கையை காப்பாற்றுவேன். பொறுப்பை உணர்ந்திருக்கிறேன். ஆயிரக்கணக்கானத் திறமையானவர்கள் இஸ்ரோவில் நிறைந்துள்ளனர். அவர்களுடன் இணைந்து பெரிய சாதனைகள் நிகழ்த்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இஸ்ரோவை உலக நாடுகளே உன்னிப்பாக கவனிக்கின்றன. குறைந்த செலவில் ராக்கெட் ஏவும் திறன் இஸ்ரோவுக்கு உள்ளது. சந்திராயன் ௧, ஆதித்யா திட்டங்களை வெற்றிக்கரமாக்குவதுதான் இலக்கு” என்று கூறியுள்ளார். (நன்றி: விகடன்)

பரிந்துரை செய்த அணுவிஞ்ஞானி ஜெயபாரதன் அவர்களுக்கு நன்றி.

(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 

1 thought on “இந்த வார வல்லமையாளர் (257)

  1. ராக்கெட் விஞ்ஞான நிபுணர் சிவன் தலைமைக் காலத்தில் “நிலவில் இந்தியர் தடம் பதியும்” என்று உறுதியாக நம்புகிறேன்.

    வல்லவராய்த் தேர்ந்தெடுத்த செல்வனுக்குப் பாராட்டுகள்.

    சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published.