புதிய கோணத்தில் ஓகம் (யோகம்) – அசித்தருடன் ஒரு செவ்வி

0

சந்திப்பு: பாவெல் சூரியன்

படம்: அண்ணாகண்ணன்

============================================

Asiththarதமிழனின் தொன்மைக்கும் பண்பாட்டுச் சிறப்பிற்கும் அறிவியல் மேன்மைக்கும் நிலைக்கலனாக நிற்பது ஓகக் (யோக) கலை. உடல்நலனை நல்ல இயங்காற்றலோடு வைத்திருப்பதற்கும் உள்ளுறுப்புகளின் வலிமைக்கும் அடிப்படையானது இந்த “ஓகக் கலை”. இந்தக் கலை முழுவதும் சமற்கிருத மயமாக்கப்பட்டிருக்கிறது. யோகா, யோகாசனம், அத யோகம், இராச யோகம் என்றெல்லாம் வடமொழியாகவே இருக்கிற இந்தக் கலை, நம் தமிழரின் அரிய கலைச்செல்வம், பரம்பரைச்  சொத்து என்று நிறுவுகிறார், அசித்தர். இன்று எந்த இதழைப் புரட்டினாலும் ஊழ்கம் (தியானம்), மனப் பயிற்சி என்று பல பக்கங்களில் படமும் இடமும் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மனம் சார்ந்த செய்தியாகவே ஓகக் கலையை அடையாளம் காட்டுகிறார்கள். ஓகக் கலை முழுக்க முழுக்க உடல் சார்ந்த கலை என்றும் மனத்தை ஒன்றில் திரும்பத் திரும்பச் சுழலவிடுவது பித்துக்கு இட்டுச் செல்லும் என்றும் கவனப்படுத்தி (எச்சரித்து) அறிவுறுத்துகிறார் அசித்தர்.

வாழ்தலுக்கும் பிழைத்தலுக்குமான உறவானது, கோட்பாடு அல்லது கோட்பாட்டுச் சரிவு என்கிற நூலிழை இடைவெளியில்தான் உள்ளுறைந்து இருக்கிறது. பிழைப்பில் கொடிகட்டிப் பறக்கும் பெரும்பான்மை அறிவாளிகள், நடுவில் வாழ்ந்துகொண்டிருக்கும் அறிவாளராகத் திகழ்கிறார் அசித்தர். அவரைச் சந்திப்போம் வாருங்கள்.

============================================
* யோகாசனக் கலையைத் தாங்கள் “ஓக இருக்கை” என்கிறீர்கள். அதன் விளக்கம் என்ன?

“யோக்” என்பது வடமொழிச் சொல். அதுவேதான் ஆங்கிலத்திலும் யோகா என்றாகியது. ஆனால் நம்முடைய தமிழில் “ஓகம்” என்ற சொல்தான், இந்த யோகா என்பதற்கான அடிப்படை மூலம். நெடுங்காலமாக இங்கே புதிர் ஒன்று நடந்துகொண்டு இருக்கிறது. நம்முடைய கலைகளை வடமொழி தனதாகக் கையகப்படுத்திக்கொண்டு மாற்றியமைத்து, திரித்து, தனது போலவும், இவற்றினுடைய மூலமே தங்களது போலவும் தமிழர்களிடம் உள்ள எல்லா நல்லவற்றையும் களவாடிக்கொண்டது. ஓகம் என்றால் முயற்சி, வினை, பாடு, கடினம், உழைப்பு, இது போன்ற பல்வேறு பொருட்கள் உண்டு. ஓகம் என்பதற்கு இணையான இன்னொரு சொல் தவம்.

* தவம் என்பது உழைப்பு என்பதற்கான எதிர்நிலை பொருள் இல்லையா?

பொதுவாக “தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளை” என்பார்கள். எந்தத் தாயும், தகப்பனும் காட்டுக்குப் போனார்கள்? தவமிருந்தார்கள்? அப்படி எதுவும் இல்லை. ஒரு தாய் குழந்தையைப் பெற்றெடுக்கிறது, உருவாக்கிக் கொடுக்கிறது, உலகத்தின் கடினங்களிலேயே மிகப் பெரிய கடினம். வேறு எதுவும் அதற்கு இணையாக, ஈடாக நிற்க முடியாது. அந்தப் பெண்ணுக்குக் கணவனாக, குழந்தைக்குத் தகப்பனாக கூடவே இருந்து வளர வளர எல்லாச் சுமைகளையும் ஏந்துவது இவனது பாடு. அப்படி ஒரு தாயும் தந்தையுமாகக் காப்பாற்றிச் சுமந்து எவ்வளவு பாடுபட்டார்கள். உழைத்தார்கள், முயன்றார்கள், முனைப்பு காட்டினார்கள். இவையெல்லாம்தான் அந்த தவத்திற்குப் பொருள்.

தவம் என்பதற்கான உங்களின் வினாவேறு வகையில் அமைந்திருக்கிறது. தவம் என்றாலே காட்டுக்குப் போவது என்கிற ஒரு காட்சி நமக்குள் வரும். அது நமது சொந்தக் கருத்தல்ல, கருத்தியலாக நமக்குள் விதைக்கப்பட்டது. போலி மெய்யியல் வழியில் நமக்கு வந்து சேர்ந்த தப்பு. ஆரிய கருத்துகள் எங்கெல்லாம் கொண்டு வந்து விடப்பட்டதோ அங்கெல்லாம் இந்தக் கருத்துகளில் மாற்றம் செய்திருக்கிறார்கள். தமிழர்கள் முறையில் இப்படி எங்கேயோ காட்டிலோ, மேட்டிலோ போய் உட்கார்ந்து கொண்டு தவம் செய்வதெல்லாம் கிடையாது. எதற்காகவும் குடும்பத்தை விட்டு ஓடுகிறவன் கோழை. சித்தர்கள், அறிவர்கள் இதைத்தான் சொல்கிறார்கள்.

சாரல் வாழ் தவசிகாள்
சருகருந்தி நீர் குடித்து வாழ்விரேல்
தேகங்குன்றி சஞ்சலம் உண்டாகுமே
உண்டு உடுத்தி வளர்மனை சுகிப்பீரே.
– என்கிறது சித்தர் பாடல்.

* மணமிலி (பிரம்மச்சர்யம்) பற்றிய சித்தர்களின் கோட்பாடு என்ன சொல்கிறது?

ஓர் உயிர் இருப்பிற்கான அடிப்படைத் தேவைகள் நான்கு.

(1) உணவு சாப்பிட்டாக வேண்டும்.
(2) சாப்பிட்டதைக் கழிய வேண்டும்.
(3) குறிப்பிட்ட நேரம் ஓய்வு எடுத்தே தீர வேண்டும்.
(4) இனப்பெருக்கம்.

ஓர் உயிர் என்றால் இந்த நாலும் பொதிந்து இருக்க வேண்டும். இதில் எது இல்லையென்றாலும் அது உயிர் இல்லை. இவை இல்லாமல் ஒரு மாந்தன் இருக்கக் கூடாது என்பது தான் இயற்கையின் சட்டம். இவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு இருப்பது, தவம் இல்லை.

(2) சித்தர்கள் நூலிலேயே அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் இன்னின்ன நூல்கள், இன்ன வகை மருந்து செய்முறைகள், இவற்றைக் கற்றுத் தேறி, மருத்துவத்தைச் செய்யுங்கள். பொருள் கிடைக்கும். உணவு, உடை இருப்பிடம் இந்த அடிப்படைகளை குடும்பத்திற்கு வழங்கி, நீங்கள் வேறு வழியில் ஆய்வு, ஆராய்ச்சி என்று செய்யலாம். குடும்பப் பொருளியலுக்கும் வழி செய்து கொடுத்து, உங்களை வழி நடத்திக்கொண்டு போங்கள். அதைத் தவிர்த்து குடும்பத்தை விட்டு ஓடிப் போவது, தனித்திருப்பது, திருமணம் ஆகாமல் மணமிலியாக (பிரம்மச்சர்யம்) இருக்கிறது. அப்படியாக வாழ வேண்டும் என்கிற கோட்பாடு நம்முடைய வழக்கிலேயே இல்லை. ஓகம் என்பது பல்வேறு உழைப்பு நிலைகளைக் கைக்கொண்டு பயில்வது, பயிற்சி செய்வது தான்.

* ஓக முறைகள் படிமலர்ச்சி (பரிணாமம்) அடைந்தது எப்படி?

படி மலர்ச்சிக்கு ஒரு நீண்ட இயற்கை வரலாறு உண்டு. எந்தக் கலையையும் திட்டமிட்டு, யாருமே எங்கேயுமே வடிவமைப்பதில்லை. எப்பொழுதுமே இருப்பு நிலைகளில் மாந்தன் எதை எதைப் புரிந்துகொள்ளத் தொடங்குகிறானோ அவற்றை, மெல்ல நடைமுறைகளிலும் பயிற்சிகளிலும் கொண்டுவர, கொண்டுவர அவை முறையாக, ஒரு கலையாக வளர்ச்சியடையும். இதுதான் எல்லாக் கலைகளுக்கும் அடிப்படை. இதில் ஒவ்வொருவர் பட்டறிவு என்று இருக்கும். ஒவ்வொரு இடத்திலே, ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான பட்டறிவை அடைந்திருப்பார்கள். அங்கங்கே மக்களிடையே புழங்கிக்கொண்டிருக்கிற இந்தப் பட்டறிவை ஒரு குறிப்பிட்ட காலக்கட்ட வளர்ச்சியில் தொகுக்கிறவர்கள் தான் பண்டிதர்களாகவும், அறிஞர்களாகவும் இருக்கிறார்கள். நூலாசிரியர்களாக, குருவாக உருவாகிறார்கள். அவர்கள் கிட்டத்தட்ட தொகுப்பாளர்கள் என்று சொல்லலாம். இவைகளே ஒரு முறைக்குள்ளேயும் வடிவத்திற்குள்ளேயும் வந்து கலைகளாகத் தங்கி நிற்கின்றன. இவையே ஒரு கலைக்கு இருக்கக் கூடிய அடிப்படைக் கட்டங்கள்.

* இப்படித்தான் ஓகக் கலையும் தொகுக்கப் பெற்றுள்ளதா?

ஆம். இயற்கையுடன் நமக்கு என்ன உறவு இருக்கிறது. என்பதை மாந்தன் என்றைக்குப் பார்க்கத் தொடங்கினானோ, அப்பொழுதிலிருந்தே இந்தக் கலை வளர்ச்சியடைய தொடங்கிவிட்டது. இது ஏதோ அக நிலையிலிருந்து நாம் பார்க்க முயல்வது இல்லை. மாந்தன் தனக்குள், தன் இனம், குடும்பத்துக்கு உள்ளாகப் பார்க்கிறவை என்பது ஒன்று. தனக்குக் குழந்தை பிறக்கும் போது அதை உற்றுப் பார்க்கிறான் அவன். ஒவ்வொரு கட்டத்திலும் அது என்ன செய்கிறது? பிறந்ததிலிருந்து அதன் அசைவுகளைக் கூர்ந்து கவனித்தாலே இந்த ஓக இருக்கைக் கலைகள் எங்கிருந்து தோன்றின என்பதற்கு விடை கிடைக்கும்.

ஓக இருக்கைக் கலையில் எண்ணிலடங்கா இருக்கை நிலைகள் இருக்கின்றன. குறிப்பிட்ட காலத்தில் அவரவர்கள் உருவாக்கியவை ஓர் எண்ணிக்கை. அவரவர்கள் முயற்சி செய்ய செய்ய இன்று 2000, 3000 வரை வளர்ந்து இருக்கின்றன.

அடிப்படையாக இருக்கக் கூடியவை சிலதான். இந்த அடிப்படையான இருக்கை நிலைகள் மொத்தத்தையும் ஒரு குழந்தை நிற்க, நடக்கத் தொடங்குகிற காலத்துக்குள்ளே இவை எல்லாவற்றையும் பயிற்சி செய்து முடிக்கிறது. அந்த ஒவ்வொரு பயிற்சியையும் செய்யச் செய்யத்தான் அதனால் அடுத்த கட்டத்துக்கு நுழைய முடிகிறது. வளர முடிகிறது. படுத்துக்கொண்டிருப்பது, தவழத் தொடங்குவது, அதிலிருந்து நிமிரத் தொடங்குவது இவைகளுக்கெல்லாம் வலு தேவைப்படுகிறது. கால்களுக்கு, கைகளுக்கு வலு தேவை.

அப்பொழுது அவை கால்களையும் கைகளையும் பல்வேறு கோணங்களில் இயக்கி அந்தந்தப் பயிற்சிகளைச் செய்கின்றன. இவற்றையெல்லாம் கூர்ந்து பார்க்கும் பொழுது தான் அது புலப்படும். குழந்தைகளின் அசைவை, அதன் வளர்ச்சிக் கட்டங்களை அசையும் படப்பிடிப்புக் கருவியில் (MOVIE CAMERA) எடுத்தால் எல்லா ஓக இருக்கை நிலைகளும் அதில் வந்து விடும். முதலில் இந்த வளர்ச்சிக் கட்டங்களைக் கவனித்து, உடலில் இன்னின்ன சிக்கல்கள் வந்தால் இன்னின்ன பயிற்சிகள் செய்யலாம் என்று எதிர் நிலையில் பார்த்தால் அது ஓர் உன்னிப்பாக /  உத்தியாக மாறும்; கலை முறையாக மாறும்.

* மொத்த ஓக இருக்கை நிலைகளும் இவற்றிலேயே அடங்கி விடுகின்றனவா?

முதல் கட்டத்தைத்தான் இப்போது சொல்லியிருக்கின்றேன். அடுத்து இவற்றுக்கு அப்பாற்பட்டு நமக்கு புறத்தே நிலவக்கூடிய இயற்கையை பார்த்தார்கள். கதிரவன், நிலா, நிலவின் பிறை, மரம், மலை இப்படியாக இயற்கையை ஒப்பீட்டளவில் பார்த்தார்கள். மரங்கள் வடிவில், அடியில் பருத்தும், நுனியில் போகப் போக சிறுத்தும் கிளைகள் இலைகள், இவற்றைச் சிந்தித்து பார்த்து அப்பொழுது இன்ன தன்மையில் இருந்தால் இன்ன வலு இருக்கும் என்றும் அது போல நமக்குச் சில வகையான தேறுதல் நமது உடலுக்கு வேண்டும் என்றால் இது போன்ற பயிற்சிகளை நாம் பொருத்திவிட்டோம் என்றால் அந்த வலு கிடைக்கும் என்றும் ஒப்பிட்டுப் பார்த்தார்கள். இயற்கையின் படி மலர்ச்சியில் உயிர் தோன்றியது நீரில் தான். நீர் வாழ்வன, ஊர்வன, பறப்பன, நடப்பன இவற்றை ஆய்ந்தும், தொழில் சார்ந்தனவாகவும், பொருட்கள், கருவிகள் இப்படியும் ஓக இருக்கைக் கலை வளர்ந்தது.

* தொழில் சார்ந்த ஓக இருக்கை என்றால் என்ன?

தொழில் சார்ந்த வடிவங்களை அடிப்படையாக கொள்வது. சான்றாக “தையல் இருக்கை” (COBBLERS POSTURE  – பத்ராசனம்). செருப்பு தைப்பதைப் பார்த்திருப்பீர்கள். இரு கால்களையும் குத்த வைத்து, செருப்பைக் காலடிகளுக்கிடையில் வைத்துத் தைப்பார்கள். அது போலவே செய்கிற ஒரு பயிற்சி தையல் இருக்கை. அவர்களுக்கு எப்பொழுதும் மூத்திரக்காய் தொடர்பான பிணிகள் வருவதில்லை. இது ஒரு பட்டறிவு வரலாறு. சில தலைமுறைகளைக் கணக்கிடும்பொழுது தான் இது போன்று இவர்களுக்கு வருவதில்லை என்று கணக்கிட முடிகிறது. இப்படித்தான் பயன்பாடுகள் தொகுக்கப்படுகின்றன.

* ஓக இருக்கை நிலைகள் எல்லாவற்றையும் தமிழ்ப்படுத்தியிருக்கிறீர்கள். தங்களின் தமிழாக்க முயற்சியின் நோக்கமென்ன?

நம்முடைய வாழ்க்கையிலிருந்து விலகியிருக்கும் ஓகக் கலையை நடைமுறையில் புழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும். நம்முடைய வழக்கங்களுக்குக் கொண்டு வரும்போது மட்டும்தான் ஒரு கலை நம்முடைய கலையாக நிற்கும். ஆக நம்முடைய கலையான இந்தத் தமிழ்க் கலையைத் தமிழ்ச் சொற்களாலே விளம்புவது, தமிழில் நடைமுறைக்குக் கொண்டு வருவது என்பது தான் அடிப்படை நோக்கம். இதிலே என்னென்ன திரிபுகள் உள்ளே வந்திருக்கின்றன? என்னென்ன தப்புகள், குற்றங்கள் இருக்கின்றன என்று அவற்றைக் கண்டுபிடித்து உடைத்தோம் என்றால், விளக்கினால் நம்முடைய மக்களைச் சரியாக, நலமுடன் வைத்திருக்க முடியும். இந்த நோக்கத்தில் தான் முயற்சிகளை தொடங்கினோம்.

ஆங்கில மொழியை எடுத்துக்கொள்ளும்போது அவன் வடமொழிப் பெயர்களை எல்லாம் அப்படியே எடுத்துப் போட்டுக்கொள்வான். ஆனால் தன் மக்களுக்கு தன் மொழியில் விளக்கத்தைக் கொடுத்திருப்பார்கள். இப்பொழுது முதுகுத் தண்டு நிமிர்ந்த நிலையை (SPINE ERECT POSTURE) என்று விளக்கத்தை எழுதியிருப்பான். இப்படி, விளங்கிக்கொள்ள வேண்டும் என்கிற ஒரு முயற்சி அவனிடம் இருக்கிறது. ஆனால் நம்முடைய தமிழர்கள் நம்முடைய கலையைப் பறிகொடுத்து விட்டு அதில் இருக்கிற கலைச் சொற்களையும் தமிழ்ச் சொற்களையும் பறிகொடுத்துவிட்டு வடமொழியாகத் திரிபாக்கம் பெற்றுவிட்ட நிலைமை. அதில் ஒரு சிறு முயற்சி கூட எடுக்காமல் இருப்பது எவ்வளவு இழிவு. நமக்கு மட்டும் அந்த முனைப்பு இல்லை என்றால் எப்படி? என்கிற நோக்கமும் எங்கள் முயற்சிக்கான அடிப்படையாக அமைந்தது.

* தமிழ்ப்படுத்துவது என்றால் நேரடியாக கலைச் சொல் மொழியாக்கமா? என்ன அடிப்படையில் செய்திருக்கிறீர்கள்?

அப்படியே நேருக்கு நேர் கலைச் சொல்லாக்கம் செய்யவில்லை. எந்த ஒரு கலையும் மக்களிடம்தான் பிறக்கிறது. மக்களிடம் தான் இருந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவர்களின் நடைமுறையில் எளிமையான புழக்கத்தில் அருமையான கருத்துகளையும் பொருள்களையும் உள்ளடக்கி வருகிறது. ஆக, தமிழில் ஓக நிலைகளுக்குப் பெயரிடும் பொழுது புழக்கத்திலிருப்பதை எடுத்துக்கொண்டதுதான் அதிகம். நாங்களாகப் பொருத்தியது மிகவும் குறைவு. பல்வேறு பழைய தமிழ் நூல்களிலே அழகிய சொல் ஆக்கங்கள், கையாள்பவை இருக்கின்றன. தேவைப்படுகிற இடங்களிலே அவற்றையும் பயன்படுத்திக்கொண்டோம்.

* உங்களுக்கு முன்பு இந்தத் துறையில் வேறு யாரும் முயற்சி செய்திருக்கிறார்களா?

ஓகக் கலை நிலைகளை மொழிபெயர்க்க வேண்டும் என்று பல பக்கங்களிலிருந்தும் கோரிக்கைகள் பல காலமாக வெளிப்பட்டிருந்தாலும் யாரும் சரியாகச் செய்யவில்லை. எங்ளுக்கு முன்பிருந்தவை அரைகுறை முயற்சிகள்தான். பாதி தமிழும் பாதி வடமொழியுமான வேலை தான் நடந்திருக்கிறது. எங்களுக்குச் சரியான தமிழை பேச வேண்டும் என்கிற முயற்சி இருந்தது. நம்முடைய கலையைச் சரியான கலைச் சொல்லாக்கத்துக்குக் கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பு இருந்தது. இந்தத் துறை பற்றிய புரிதல் இருந்தது. அதனால் செய்வது எங்களுக்கு எளிதாக முற்றுப் பெற்றது.

* மொழி ஆக்கத்தில் தாங்கள் சந்தித்த பட்டறிவுகள் (அனுபவங்கள்)……….. அறைகூவல்கள் (சவால்கள்)……….. !!?

அறைகூவல் என்று சொன்னால், இந்த ஓகக் கலை மட்டும் யாருமே கைத்தொடாத பகுதியாக இருந்தது தான். எங்களுக்கு முன் இருந்தவை அரை குறையான முயற்சிகள் தான். முதலில் படிமலர்ச்சி (பரிணாம) அடிப்படையில் நீர்வாழ் உயிரினங்களிலிருந்து இந்தப் பணியைத் தொடங்கினோம். மீன் இருக்கை (மச்சாசனம்), சுறாமீன் இருக்கை (மகராசனம்) என்று பல. அடுத்து பொருட்கள், கருவிகள். எடுத்துக்காட்டாக தேர் இருக்கை (சாரதாசனம்). தேரைப் போலவே வடிவம், நிலை கொண்டது. ஏர் இருக்கை (அலாசனம்), நாற்காலி இருக்கை (உட்கட்டாசனம்). இப்படி பலவும் பெயரிடப்பட்டன.

உடல் சார்ந்த இருக்கைக்கு மட்டும் தான் பெயரைப் பொருத்துகிற வேலை சற்று கடினமாக இருந்தது. வெறுமனே உடலின் இருப்பு நிலையை மட்டுமே வைத்துச் சொல்லுவதா அல்லது கருத்துகளைப் பொருத்திச் சொல்லுவதா என்கிற தடை வந்தது.

வடமொழியில் சொல்லப்படுகிற சிரசாசனத்துக்கு தலை இருக்கை என்றும் புசங்காசனத்துக்கு முழு உடல் இருக்கை என்றும் பதிவு செய்தோம். இன்னொன்று; அதை விபரீதகரணி என்று சொல்வார்கள். விபரீதம் என்றால் தமிழில் எதிர், முரண் என்று பொருள். இயல்பாக இருக்கிறதை விட கால்களைத் தூக்கி, தலைக்குப் பின்னோக்கி எடுத்துக்கொண்டு போகிறது. முரண் நிலை என வைக்கலாம் என்று எண்ணம் இருந்தது. ஏறுமாறு இருக்கை என்று வைக்கலாமா எனவும் எண்ணிப் பார்த்தோம். நானும் என் இணையரும் பல காலம் உரையாடி பொருத்திப் பார்த்து, உடலை முழுமையாக வளைத்து மேல் தூக்கிச் செய்யும் பயிற்சி முழு உடல் இருக்கை, பாதி மட்டுமே வளைத்து மேல் தூக்கிச் செய்வது அரை உடல் இருக்கை. எனப் பதிவு செய்தோம். இப்படி ஒவ்வொரு அசைவிலும் ஆக்கத்திலும் முனைப்போடும் பொறுப்போடும் செயல்பட்டு முடித்திருக்கின்றோம்.

* இந்த மொழியாக்கத்தின் நடைமுறை பயன்பாடு எப்படி இருக்கிறது?

முதலில் நாங்கள் தமிழிலே சில ஓக இருக்கைப் பெயர்களை முன்மொழிந்த பொழுது எல்லாவற்றுக்கும் முழுமையாகக் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என்றார்கள். நாங்கள் அரும்பாடுபட்டு அதை முழுமையாக்கிக் கொடுத்த பொழுது சில ஓக இருக்கை நிறுவனங்கள் அதை வாங்கி, தங்களின் இதழ்களிலே அச்சிட்டார்கள். ஆனால் அதனைத் தொடர்ந்து புழக்கத்தில் கொண்டு வரவில்லை. பட்டியலே கொடுத்தும் ஏன் பயன்படுத்தவில்லை என்று வினவினால் மிக எளிமையான கரணியத்தைச் சொன்னார்கள்.

“தமிழிலே கலப்பை இருக்கை, நாற்காலி இருக்கை என்று சொன்னால் கலப்பை போல, நாற்காலி போல என்று மாணவர்களுக்கு எளிதாகப் புரிந்து போய் விடுகின்றது. “நவகாசனா” என்று வடமொழியில் சொன்னால் விளக்கம் வேண்டுவார்கள். “நவ்கா” என்றால் படகு, ஆசனான்னா இருக்கை  என்று விளக்கம் சொல்ல முடியும்.”

ஆக இவர்களுக்கு விளக்கிச் சொல்கிறதற்கு, ஒரு ஆசிரியனாக வேலை செய்கிறதற்கு, ஒரு வாய்ப்பு இருக்கிறதை பயன்படுத்திக்கொள்கிறார்கள். இப்படி வணிக நோக்கமும் பிழைப்பும் முதன்மையாக வைத்திருக்கும் இவர்கள், நல்ல தமிழ்ச் சொற்களை எப்படி ஏற்பார்கள்? மக்கள் நலன், குமுக (சமூக) நோக்கம் கொண்டவர்கள் தான் முன்னோடிகளாக இவற்றைக் கையாண்டு புழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும்.

* ஓகக்கலை என்கிறோம். இப்போதெல்லாம் நோய் பண்டுவ (சிகிச்சை) முறையாக, மருத்துவமாகக் கையாள்வதாகச் சொல்கிறார்கள். ஓக இருக்கை ஒரு கலையா? அதையும் தாண்டி ஓர் அறிவியலாக அது வளர்ச்சி கண்டிருக்கிறதா?

உண்மையான அறிவியல் என்பது, மக்களிடம் சென்றடைய வேண்டும். அதைச் செய்யாதது அறிவியல் கிடையாது. மக்களிடம் சேரும் போது தான் அது முழுமையான வடிவத்துக்கு வரும். அறிவு இயலாகவே அது நிற்கும். அப்படியில்லாமல் அது எங்கெங்கேயோ, யார் யாருடைய ஆளுகைக்குள்ளே, மேலாண்மைக்குள்ளே இருக்குமானால் அது அறிவியல் இல்லை. மொழி ஞாயிறு பாவாணர் தொடக்கக் காலக் கட்டத்திலிருந்தே (SCIENCE) என்பதை “கலையியல்” என்று தான் மொழியாக்கம் கொடுத்திருக்கிறார்கள். அது கலைகளுடைய ஓர் இயலாகத்தான் இருக்கிறது. அறிவு இயலாக அது இன்னும் தன்னை வளர்த்துக்கொள்ளவே இல்லை. ஏன் என்றால் அதற்கு மாந்தநேயம் கிடையாது. வணிக நேயமும் மக்களைச் சுரண்டும் எண்ணம் ஆகியவற்றை மட்டுமே கருத்தாக வைத்திருக்கிறது.

மருத்துவத்தையும் பொறியியலையும் தமிழ்ப்படுத்திக் கற்பிக்கக் கூடாதா? அதை ஒரு பாடநூலாக முழுக்கத் தமிழிலே போட்டீர்கள் என்றால், தமிழிலே இருக்கிறதாலே ஊரிலே போகிற வருகிற அத்தனை பேரும் எடுத்துப் படிக்க முடியும். அவனவன் தானே உருவாகிக்கொள்ள முடியும். அப்படி அவனுடைய ஆளும் முதலாளிகளின் வணிக எல்லைக்கு வெளியே போய்விடக் கூடாது என்றும் படிக்க வருகிறவன் இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும். அதிலே இவனும் ஈட்டவேண்டும் என்கிற ஒரு வினைக்காகவும் தடைப்படுத்தி வைத்திருக்கிறான்.

ஆக, மருத்துவம் அது சார்ந்த “ஓகக் கலை” எல்லாம் மக்களிடம் முழுமையாகச் சேரும்போது மட்டும்தான் அது அறிவியலாக வளர முடியும். அதுவரை அது சிலரின் ஆளுகைக்குள் இருக்கிற கலையியல்தான்.

* அப்படியெனில் வாழ்வியல் மூலங்கள் (ஆதாரங்கள்) எல்லாமும் மக்களிடமிருந்து அயன்மைப் (அன்னிய) பட்டுத் தானே இருக்கின்றன?

இல்லை, நாட்டின் மூலை முடுக்குகளில் கூட மூலிகைகள் பற்றிய அறிவுச் செல்வம் ஒவ்வொரு மாந்தரிடத்தும் பெருமளவு குவிந்திருக்கிறது. ஒவ்வொரு மாந்தனின் மண்டைக்குள்ளும் நிரம்பியிருக்கிறது. பாட்டி மருத்துவம் எனக் குடும்பப் பெண்மணிகளிடம் குடிகொண்டு அவர்களைப் பெண் மருத்துவர்களாக ஆக்கி நிலைநிறுத்தி நமது தலைமுறைகளைக் காத்திருக்கிறது. அது அறிவியல். மருத்துவத்தைப் பற்றி அவ்வளவு ஆழமாகக் கொண்டு சென்று பதிப்பித்திருக்கிறார்கள். பெரிய கல்லூரிகள் இல்லாமல் நிறுவனங்கள் என்பது நடத்தப்படாமல் சித்தர்களால் எல்லா மக்களையும் இந்த மருத்துவம் எட்டி அடைந்திருக்கிறது. அசைக்க முடியாதபடி, ஆழமாக வேர்விட்டு இன்னமும் மக்களிடம் தங்கியிருக்கிறது. அதுதான் அறிவு இயலாக மக்களிடையே புழக்கத்தில் இருக்கிறது.

* ஓகக் கலையின் குருவாக பதஞ்சலி முனிவர் என்பாரைக் குறிப்பிடுகிறார்களே. அது பற்றித் தங்கள் கருத்தென்ன?

ஆரியர்கள் இந்த நாட்டிற்குள் வந்து அனைத்தும் எமது எனக் காட்டிக்கொண்டனர். நம்முடையவற்றை அழித்து, சமற்கிருதத்தில் தமது போலவே உருவாக்கிக்கொண்டனர். நமது நான்மறை நால், வேதமானது. நமது ஆயுள் நீட்டிப்பு மருந்து, ஆயுர்வேதமானது. நமது வானியல், வானசாத்திரமானது. நமது கணியம், சோதிடமானது. தமிழிசை, கருநாடக சங்கீதமானது. நடனம், நாட்டியமானது. பண், இராகமானது. வேதியல், வேதமானது. இன்னும் பலவற்றைச் சொல்ல முடியும். களவாடின ஒவ்வொரு துறைக்கும் ஒரு  வல்லுனர் பெயரை நிறுவி, மொழி பெயர்த்து, தமது எனக் காட்டிக்கொள்வது ஆரியத்துக்கு பழகிய வேலை தான்.

அவர் இந்தக் காலத்தில் வாழ்ந்தாரா, இதை அவர்தான் எழுதினாரா என ஒரு சில முரண்களுக்கு, உரையாடுதலுக்கு நாம் இடம் கொடுப்பதில்லை. அது வரலாற்று ஆசிரியர்களுடைய வேலை. ஆயினும் பதஞ்சலியே தமிழ் அறிவர்தான் என்கிற கூற்றும் உண்டு. அந்தத் தொன்மைக் கால்க்கட்டத்தில் வடக்குப் பகுதியும் நாம் வாழ்ந்த பகுதிதானே. நமது கலைகள் எல்லாப் பகுதிகளிலேயும் பரவியிருந்தன. பல காலக் கட்டங்களிலே நம்மவர்கள் செய்த மொழி பெயர்ப்புப் பணிகள் நிறைய உண்டு. நம்முடைய செய்திகள் மற்ற மொழிகளிலேயும் பரவ வேண்டும் என்பதற்காக நிறையவும் நடந்திருக்கின்றன.

இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்க வேண்டும். மற்றபடி பழைமை என்பது நமக்கு மிகவும் சொந்தமானது. தொல்குடி என்பதற்கு வேறு சான்று ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை.

தமிழ் இசையைத் திருடி, கருநாடக சங்கீதம் என்று திரித்தபடி, பெருவங்கியம் என்கிற இசைக் கருவியை நாதசுவரம் என்று பெயர் மாற்றித் திரித்தபடி, ஒருகட்பறையை – ஒரு+ கண்+ பறை –   தபேலா என வடமொழியில் பெயர் மாற்றியபடி, பதலை எனும் கருவியை தவில் என்று மாற்றியபடி, மத்தளம் அல்லது மதங்கம் கருவியை மிருதங்கம் என்று மாற்றியபடி,  சல்லரி கருவியை சால்ரா என்று மாற்றியபடி. தமிழ் இசையையே தியாகராச பாகவதர் இயற்றினார் என்று புளுகு மூட்டை அவிழ்த்துவிட்டபடி,  ஓக இருக்கைக்கும் பதஞ்சலி எனும் முனிவர்தான் தொகுத்தார் எனப் புரட்டு வேலை செய்திருக்கிறார்கள்.

* ஓகக் கலை முதன்மையாக (பிரதானமாக) உடல் பற்றியதா? மனம் பற்றியதா?

முதன்மையாக உடலைப் பற்றியதுதான். மனத்தைப் பற்றியது அல்லவே அல்ல. “உடம்பார் அழியின் உயிரார் அழிவர்” என்பார் திருமூலர். அவரே “உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே”” என்கிறார். எவ்வளவு கருத்து வளர்ச்சி பெற்றும் அவை எனக்கு உதவவில்லை. உடம்பை வளர்த்தேன். உயிர் வளர்ந்தது என்று சொல்வார். அந்த உயிரினுடைய கூறுகள் தான் அறிவு, மனம் இன்னும் பல்வேறு நிலைகளும், உடலை ஓம்பும் கலைதான் ஓகவிருக்கைக் கலை. உடலை ஓம்புவதே ஓகம். ஓம்பு எனும் சொல்லே குறுகி ஓம் என்றானது. உடலைப் போற்றி வாழ்ந்தோமானால் மனம் என்பது தானாகவே சீராக இருக்கும். இது தான் அடிப்படை.

* ஓகக் கலை உடலுழைப்பாளர்களுக்குத் தேவையா (அவசியமா)?

தேவையில்லை, இந்த வினாவே யார் யாரெல்லாம் இந்தப் பயிற்சியை செய்யலாம் என்பீர்களானால் உழைப்பு இல்லாமல் சோம்பி இருப்பவர்கள், கருத்தால் உழைக்கிறவர்கள், உட்கார்ந்த நிலையிலேயே பேச்சுப் பணி, எழுத்துப் பணி செய்கிறவர்கள் ஆகிய இவர்கள் தான். ஆனால் இதில் சில செய்திகளையும் கணக்கிலெடுக்க வேண்டும்.

இன்றைக்கு சூழல் முழுக்க, புதிய ஒருவகை வணிகப் போக்கு வடிவத்திற்குப் போயிருக்கிறது. முன்பு விடியலுக்கு வேலைக்குப் போனால் அந்திவரை வேலை இருக்கும். இப்பொழுதெல்லாம் நகர்ப்புறத்திலேயும், நாட்டுப்புறத்திலேயும் எல்லாமும் குத்தகைப் பணிகளாக மாறிவிட்டன. இவ்வளவு கூலி என்று பேசிக்கொண்டு மொத்தமாக நான்கு, ஐந்து பேர் சேர்ந்து ஒன்றிரண்டு மணிக்குள்ளாகவே வேலையைச் செய்துவிட்டு அடுத்த வேலைக்காக காத்துக்கொண்டு சும்மா உட்கார்ந்து இருக்கிறார்கள். அப்படியானால் அவர்களும் கொஞ்ச நேரம் உழைத்துவிட்டு, மற்ற நேரங்களிலே சோம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களும் உழைக்காத கூட்டத்திலே சேர்ந்துகொண்டு வருகிறதாலே பயிற்சி செய்தாக வேண்டும் என்கிற பட்டியலில் சேருகிறார்கள்.

* நடைமுறையில் ஓகப் பயிற்சிகள் என்பவை உடலைப் பின்னைக்குத் தள்ளி, மனத்தை முன்னிலைப்படுத்தும் ஒரு கருத்தியல் கலையாக ஆதனிய (ஆன்மீக) செய்தியாக (விசயமாக) சித்துவேலை என்கிற மாயையாக ஆக்கப்பட்டிருக்கிறது. இது பற்றிய தங்களின் விளக்கமென்ன?

சித்தர்கள் துறைக்கும் மாயைகளுக்கும் எவ்வகைத் தொடர்பும் கிடையாது. அகத்தியர் “விழி மூடில் ஒளி எங்கே காண்பாய் விளம்புவாயே” என்பார். இப்பொழுதெல்லாம் கண்ணை மூடித் தவம் பண்ணுவது என்று தானே சொல்கிறார்கள். மனத்தை காட்டித்தான் மொத்த வழியிலேயும் மக்களைத் திசை திருப்புகிறார்கள். நம்முடைய மனத்தைக் கவர்ந்திட்டால் தவறான திசை வழிக்குக் கொண்டு போய் ஆளுமை செய்யலாம். அதுதான் மனத்தைக் குறித்துத் தொடும் முயற்சி.

நீங்கள் நேரடியாக ஒரு முத்திரையை போட்டுக்கொள்வதானால், மனம் தொடர்பாக உங்களிடம் பேச வருகிறவர்களெல்லாம் உங்களை ஏமாற்ற – ஏய்க்க வருகிறார்கள் என்று முடிவுகட்டிக்கொள்ளலாம்.

உடலுக்கு ஏற்படும் தூண்டுதல், துலங்கள்களுக்கு இலக்காகி நடந்துகொள்கிற நிலைதான் உணர்ச்சி. அதைப் பற்றிய நிகழ்வுக்குப் பிற்பாடான சிந்தனை அல்லது தெளிவே அறிவு, அறிவு அடிப்படையிலான ஆய்வே உணர்வு.

தூண்டுதல் வந்தவுடன் அதை முடிக்க வேண்டும் என்று செய்துவிட்டு வந்துவிடுவோம். அதற்குப் பின்னாடி தான் செய்தது சரியா, இல்லையா என்று அறிவு வேலை செய்கிறது. அந்த உணர்ச்சிகள் என்பது என்னவென்று சொன்னால், இப்பொழுது எரிச்சல் வருகிறது என்று வைத்துக்கொண்டால் பித்தப்பை மிகையாகப் பணியாற்றுகிறது என்று பொருள். அதில் சுரப்பு ஏற்பட்டால் எரிச்சல் கொடுக்கும். சினம் அதிகமாக வரும். சினம் அதிகமாக வந்தால் கல்லீரல் மிகையான நிலைக்கு போய்விட்டது என்று பொருள். உங்கள் உறுப்புகள் உள்ளே என்னென்ன ஆகிறதோ, அதுதான் உங்கள் வெளிப்பாடுகள். வெளியில் உணர்ச்சிகளும் உணர்வுகளும் உடலும் மனமுமாக இருக்கிறது. ஆக, எளிதாக உடலுக்கும் மனத்திற்கும் உறவு போட்டுப் பார்க்கலாம். ஆக, ஓகப் பயிற்சிகள் மனம் பற்றியது அல்ல. உள்ளொளியியல் பற்றியதல்ல. மாயையாக இருக்கவில்லை. மாறாக உடல் பற்றியது. இயல்பானது. இயற்கையானது.

* அப்படி எனில் ஓக இருக்கை (அத யோகம்), அரச ஓகம் (இராச யோகம்) என்று தனியே உடல், மனம் தொடர்பாக சொல்லப்படுவது ஏன்?

சித்தர்கள் இரு பிரிவுகளாக குறிப்பிடுவது உண்மை தான். உடற்பயிற்சி செய்யும் ஓகத்தை ஓகவிருக்கை (அதயோகம்) என்கிறோம். இப்பயிற்சிகள் எளிய மக்கள் தங்கள் பிணிகளை, உடல் கோளாறுகளைச் சீர்ப்படுத்திக்கொள்ளச் சித்தர்களால் ஆய்வு செய்து வழங்கப்பட்டவை.
அரச ஓகம் என்பதை மனம் சார்ந்த பயிற்சியாகத் திரித்து பரப்பியுள்ளனர். இதனை நிறுவுவதற்காக அதனைச் சமற்கிருதப்படுத்தியவர்கள் ஓகவிருக்கையை உடல் ஓகம் (அத யோகம்) என்று மொழிபெயர்த்தார்கள். சித்தர்கள் அறிவர்கள் கூறும் அரச ஓகம் என்பது, பெருநெறி. பெரும் ஓகம். இதில் கை, கால் நீட்டி பயிற்சிகள் செய்ய வேண்டியதில்லை. சித்தர்களிடமிருந்து பேரறிவைக் களவாட வந்தவர்கள்தான் சமணம், பவுத்தம், ஆரியம், முகமதியம், கிறித்துவம் போன்ற மதங்கள். அறிவுக் களவாட வந்தவர்கள் வணிகமும், அதைப் பாதுகாக்கப் படைகளுடனும் தமிழ்நாட்டின் உள்ளே வந்தேறினர். ஆனால் சித்தர்கள் இம்மரபைக் காப்பிட்டு இன்று வரை பாதுகாத்து வந்துள்ளனர்.

* ஓகக் கலையில் ஊழ்கம் (தியானம்), ஆழ்நிலை ஊழ்கம் (தியானம்), மனப் பயிற்சிகள் முதன்மையாகப் பேசப்படுகிறது. மனம் அமைதி பெற வாழ்வின் தேவையாக அறிவுறுத்தப்படுகிறது. இது பற்றி….

மனத்தை ஆளுமை செய்யக்கூடாது என்று முன்னமே சொன்னேன். மனத்தை அடிமை செய்ய நினைக்கிறீர்களா? மன ஆளுமை என்றால் ஊழ்கம் (தியானம்) செய்தல் என்கிறார்கள். ஓர் எதிர்நிலையிலிருந்து பார்க்கலாம். ஒரு பித்தனை எடுத்துக்கொண்டீர்கள் என்றால் அவனுக்குள் ஏதோ ஒன்றைப் பற்றிய எண்ணங்கள் மட்டுமே சுழன்று கொண்டிருக்கிறது. கீறல் விழுந்த இசைத் தகடு போல ஒரே சொல்லையே திரும்பத் திரும்ப பிதற்றிக்கொண்டிருப்பான்.

இந்த மனப்பயிற்சி எப்படி? ஒரு பொருள் பற்றிய நினைவு, சிந்தனை அல்லது ஒரு சொல்லை / ஓம் / திரும்பத் திரும்பச் சொல்வது. இந்த வகை முயற்சிகளைச் செய்தால் நீங்களும் ஒன்றைப் பற்றி மட்டுமேயான ஒரே சுழலிலேயே போய் வலம் வருகிறீர்கள். இயல்பாகவே ஒருவருக்குப் பித்தம் அதிகமாகக் கூடிவிட்டாலே இந்த எண்ணச் சுழல் அதிகமாகிவிடும். தூக்கம் இல்லாதவர்களுக்கும் குடிகாரருக்கும் ஏதோ ஒன்றைப் பற்றியான எண்ணச் சுழல் அதிகமாயிருக்கும்.

அப்பொழுது பயிற்சி என்று ஒன்றைப் பற்றி மட்டுமேயான எண்ணச் சுழலிலே போய்க்கொண்டிருந்தீர்கள் என்றால் பேரிடரான (ஆபத்தான) நிலையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். எவ்வளவு நேரம் ஊழ்கத்தில் உட்காருகிறீர்களோ அவ்வளவு நேரமும் பித்தனாக ஆகிறீர்கள் என்று பொருள். எவ்வளவு நாள் இதைச் செய்திருக்கிறீர்களோ அவ்வளவு நாட்கள் அளவிற்குப் பித்தனாகிறீர்கள் என்று பொருள்.
இந்தப் பயிற்சிகள் செய்பவர்கள் தவ முனிவர்களைப் போலக் கருதி மாயையில் போய் விழுந்துகொண்டிருக்கிறார்கள். எது ஒன்றையும் திரும்பத் திரும்ப நினைக்காதீர்கள். திரும்பத் திரும்ப ஒலிக்காதீர்கள். அது வேண்டாம். எல்லா மந்திரங்களும் இதே நிலையைதான் உருவாக்கும். மனமது செம்மையானால் மந்திரம் துதிக்க வேண்டாம் என்று  சொல்கிறது அகத்தியர் பாடல். இதுதான் அதற்கான விடை. மனமது செம்மையாக வேண்டும் என்றால், உடலது செம்மையாக வேண்டும்.

* உளவியல் மருத்துவத்தின் மன ஆளுமை என்பது பயனுள்ளதாகத்தானே இருக்கிறது?

மனப் பயிற்சிகளிலேயே சில கலைகள் இருக்கின்றன. மனவசியம் போன்றவை. அதை மருத்துவத்திற்காகச் சிலர் பயன்படுத்துகிறார்கள். வேடிக்கை, பொழுதுபோக்கு, கேளிக்கை போன்றவற்றிற்கும் செய்கிறார்கள். ஆனால் இதை ஒட்டுமொத்தமாக இந்தத் தலைமுறையின் மீது திணித்து வருகிறார்கள். இந்தக் கவர்ச்சியில் ஆட்பட்டு, மன அமைதி அது, இது என்று இளைஞர்கள் இறங்குவது சரியானதல்ல. உடல் அமைதியாகாமல், மனம் அமைதியாகாது. உடல் மகிழ்ச்சி அடையாமல், மனம் மகிழ்ச்சி அடையாது. உடல் ஊக்கம் அடையாமல் மனம் ஊக்கம் அடையாது.

* ஓகக் கலையாகவும், மருத்துவமும் சேர்ந்த சித்தர்கள் முறை சாகாக் கலை என்று கூறப்படுகிறதே, உண்மையில் மாந்தன் சாகாமல் இருக்க முடியுமா?

பிறப்பதெல்லா மிறப்பதுண்டு பேதை மக்கள் தெரிகிலார்..
– சிவ மொழியார் (வாக்கியர்) பாடல் – 643.

சாகாதிருப்பதற்கு தான் கற்ற கல்வியன்றோ
வாகான மெய்க்கல்வி வகுத்தறிநீ கன் மனமே.
– இடைகாட்டுச் சித்தர் பாடல் – 65.

சித்தர்கள் பற்றிய பல்வேறு செய்திகள் இருக்கின்றன. இவர் 700 ஆண்டுகள் வாழ்ந்தார். அகத்தியர் ஏழு கோடி ஆண்டுகள் வாழ்ந்தார் என்றெல்லாம் சொல்வார்கள். இவற்றுக்கெல்லாம் சித்தர்களே விடை சொல்லிவிட்டார்கள். ஐயா, சாகாமல் இருக்க முடியுமா? என்று தன் குரு அகத்தியரிடம் மாணவர் புலத்தியர் கேட்கிறார். பிறந்தவர்கள் எல்லாம் இறந்துதான் ஆகணும் என்பதுதான் அகத்தியரின் விடை. ஆனால்  பிறப்பதெல்லாம் பிறப்பல்ல என்று சித்தர் மெய்யியல் பற்றிய செய்திகள் ஆழ்ந்து போகின்றன. அது வேறு.

சாகாமல் இருக்க வேண்டும் என்றால் மாந்தன் பிணியும் நோயும் இல்லாமல் இருக்க வேண்டும். பிணியும் நோயும் இல்லாமல் இருக்க முடியுமா? இதிலிருந்துதான் மருத்துவத்தைப் பற்றி ஆழமான வேர்கள் போகின்றன. மருத்துவத்தைக் கலையியலாக, அறிவியலாக வளர்த்து எடுத்துக்கொண்டு போகிற முயற்சிகள் அங்கிருந்து தான் தொடங்குகிறது. தாயும் சேயும் அல்லது புடவியும் உலகும் என்று சித்தர்கள் கோட்பாட்டில் சொல்வார்கள்.  வட மொழியில் அண்டம், பிண்டம் என்று சொல்வது. உலகும் வெளியும் அல்லது  உள்ளும் – புறமும் என்பதானவை. அதிலிருந்து தான் உருவானது இது. இரண்டிலும் அதே உறைவடக்கம் தான் வெளிப்பாடாக அமையும். இன்ன விதையிலிருந்து இன்ன மரம்தான் வர முடியும். வேறொன்றாக வராது.

ஆக, இயற்கையிலிருந்து விலகிப் போனால், அதற்கு எதிராகப் போனால் நோயும் பிணியும் வரும். பிணி இல்லாமல் இருந்தால் அதுவே சாகாத வாழ்க்கை. சாகாமல் என்றால் ஒரு மாந்தன் 100 ஆண்டுகளாவது வாழ வேண்டும். சித்தர்கள் நூலில் இப்படியான ஒரு வாழ்க்கைச் சூழல் பற்றிய சில குறிப்புகள் வருகின்றன. நரை என்பது நமது அறுபதாவது அகவையிலும் பல் விழுவது எண்பதாவது அகவையிலும் என்று சொல்கிறார்கள்.  இப்பொழுது எல்லாம் அதில் பாதிக்குள்ளேயே எல்லாம் முடிந்து போய்விடுகிறது. அப்படி ஒரு வாழ்க்கைச் சூழலுக்கே நாம் போய்ச் சேரவில்லை.  வெறும் பிழைப்பு வட்டத்துக்குள்ளேயே இருந்து கொண்டிருக்கிறோம். அப்படியானால் வாழ்க்கைக்கு உள்ளே நாம் எட்டிப் பார்க்க வேண்டும். இயற்கையோடு இயைந்த வாழ்வும் சீரான மூச்சும் நல்ல நடத்தையும் கைக்கொண்டால் பிணிகள் இல்லாமல் வாழ முடியும். இதுதான் சித்தர்களுடைய பேருண்மை. நோய், பிணியில்லாமல் நலமாக வாழ்தலையே சாகாக் கலை என்று சொல்கிறார்கள்.

*  இயற்கையை வெல்வது தான் அறிவியல், நீங்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை என்றீர்களே. எப்படி?

இயற்கையிலிருந்து மிகப் பெரிய தவறான, முரணான திசைக்கு மாந்தன் போயிருக்கிறான். அவனுடைய முயற்சிகள் எல்லாம் இயற்கையை வெல்வதற்காகப் போனவைதான். ஆனால் இயற்கையை வென்று மீளத் திரும்பி வாழ்ந்துகொண்டு வரமுடியாது. இதுபற்றி காரல் மார்க்கசு சொன்ன கருத்துகளின் பொருள் வேறு. எப்பொழுதுமே மாந்தனின் போராட்டம் இயற்கையை வெல்வதாகத்தான் இருந்தது என்று அவர் சொல்வது, அறிநிலை கட்டங்களைத்தான். இயற்கையைப் புரிந்துகொண்டு வளர்கிற மாந்த வாழ்க்கையின் வளர்ச்சிக் கட்டங்களைத்தான். இயற்கையை பற்றிய புரிதல் / அறிநிலை சுழிய {0} நிலையில் இருந்தது. படிப்படியாக இயற்கையின் இயக்கவியலை அறிந்துகொண்டதைத்தான் இயற்கையை வெல்வது என்று காரல் மாக்கசு குறிப்பிட்டார்.

அப்படியான முறையில் இயற்கையை வெல்ல வெல்ல குமுகங்கள் (சமூகம்) மாறிக்கொண்டே இருந்தன. முதலில் எப்பொழுது பழம் பழுக்கிறதோ அப்பொழுதுதான் சாப்பிட வேண்டும் எனும் நிலை. விதை மண்ணில் விழுந்த பிறகு தண்ணீர் பட்டு, கதிரவன் ஒளி கிடைத்தால், செடியாக முளைக்கிறது. செடி முளைத்தால் நமக்குக் காய்கனி கொடுக்கிறது. இதற்குப் பின்னால்தான் வேளாண்மை வந்தது. இயற்கையில் விளைச்சல் (உற்பத்தி) இருந்தது. இயற்கையைப் புரிந்துகொண்ட மாந்தன். மறுவிளைச்சல் (மறு உற்பத்தி) செய்தான். இதுதான் வேளாண்மை. இந்த விளைச்சல் முறைகளில் ஏற்பட்ட மாறுதல்கள்தான் குமுக மாறுதல்களைத் தோற்றுவித்தன.

இன்று முதலாளிய கட்டம் வரை வந்துவிட்டது. இதைத் தான் இயற்கையை வெல்வது என்று சொன்னார்கள். இதை அறிவியல் என்கிற பெயரில் மேலை அறிவியல் கூட்டங்கள் இயற்கையை அழிப்பது, மாசுபடுத்துவது, ஒழிப்பது என்கிற அளவிற்குப் போய் விட்டார்கள். இயற்கையைப் புரிந்து கொள்வதைத்தான் இயற்கையை வெல்வது என்று சொன்னார்கள். அதைச் சீர்கெட வைத்து, அழித்து, முரணாகப் பயன்படுத்துவது இயற்கையை வெல்வது அல்ல. அப்படி எந்த வகையிலும் அதை வெல்ல முடியாது. அதன் எதிர் விளைவுகளை நாம் சந்தித்தே தீர வேண்டும். மீள இயற்கைக்கே நாம் திரும்பியாக வேண்டும். இதுதான் உண்மை. அதனால் சித்தர்கள் வலியுறுத்தியது, “இயற்கை வாழ்வியம்”. இதை இன்னும் பண்பாடு, நாகரீகம் என்பவற்றோடு ஒப்பீட்டளவில் பார்த்தால் நுட்பமான செய்திகள் விளங்கும்.

* பண்பாடு, நாகரிகம் என்பதற்கும் இயற்கைக்குமான உறவு என்ன?

நாம் வழிவழியாக மரபு வழியாக நம் நிலம் சார்ந்தும், இயற்கை சார்ந்தும் ஒரே இடத்தில் வாழ்ந்தவர்கள். இவர்களுக்கு இந்த வகைப்பட்டதுதான் என்று இயற்கையில் வடிவமைந்த சில தன்மைகள் உண்டு. நாம் மூன்று வேளையும் அரிசிச் சோறு சாப்பிடுகிறோம். வட நாட்டானாலே அப்படி முடியாது. ஏன் என்றால் அங்கே பிறந்தவர்கள், அங்கங்கே என்ன விளைகிறதோ அதனோடு வழக்கமாகி இருக்கிறார்கள். இதெல்லாம் மரபு சார்ந்தது. பண்பாடு. நமக்கு வேட்டியினை மடித்து இரண்டு குழாயாக தைத்து போடத் தெரியாதா? இப்படி இருந்தால்தான் இந்த வெய்யில் நாட்டுக்கு, காற்று ஏந்துக்கு (வசதிக்கு) நன்றாகயிருக்கும் என்று நமக்கு ஏற்ற ஆடைகளை வடிவமைத்தோம். இதெல்லாம் பண்பாட்டுக் கூறுகள்.  சிலவற்றை மீறி நாம் செயல்பட முடியாது. செயல்பட்டால் எதிர் விளைவுகள் இயற்கையிடமிருந்து உடனே வரும்.

இந்தக் குமுகம் (சமூகம்) வளர்ச்சியடைந்து கொண்டு இருக்கிறது. வளர்ச்சிக்கேற்ப அன்றாடத் தேவைகள் இருக்கின்றன. அன்றாடத் தேவைகளுக்கு எந்தெந்த ஏந்துகள் (வசதிகள்) வேண்டுமோ அவற்றையே நாகரிகம் என்று சொல்கிறோம்.

நாங்கள் பண்பாட்டை முன்னிருத்துகிறவர்கள். இருப்பினும் நான் இரு சக்கர ஊர்தி வைத்திருக்கிறேன். இது நாகரிகம். விரைவாகப் போய் வேலை முடிக்க, அதைப் பயன்படுத்துகிறேன். நேரம் பார்க்கக் கடிகாரம், தொடர்புக்குச் செல்லிடப்பேசி, செய்திக்குச் தொலைக்காட்சி, இப்படி தேவைக்காகத்தான் அவை. தொலைக்காட்சி இருக்கிறது என்பதற்காக அதையே 24 மணிநேரமும் பார்க்க முடியாது. அது நமது வேலை இல்லை. போக வேண்டிய இடத்துக்குப் போய் வந்த பின்பு வண்டியை வெளியிலேயே விட்டுவிட வேண்டியதுதான். அதிலேயே படுத்துத் தூங்குவது கிடையாது.

வழிவழியாய், பல தலைமுறைகளாய் நடைமுறையில் உள்ளவை வழக்கம் எனப்படும். நம் வாழ்நாளுக்குள் பழகும் நடைமுறைகள் பழக்கம் எனப்படும். வழக்கங்கள்தான் பண்பாடு. பழக்கங்கள்தான் நாகரிகம். ஆனால் இன்றைக்கு நாகரிகம் தான் மொத்தமும் என்று படைத்துக் காட்டப்பட்டிருக்கிறது. வாழ்க்கைக்கான அடிப்படைக் கூறுகளை நாம் மாற்றிக்கொள்ள முடியாது. அது இயற்கையோடு இணைந்தது. அதை தொலைவாகத் தூக்கிப் போட்டால், வாழ்க்கை அழிந்து போய்விடும்.

என்ன ஆடை போட வேண்டும்? என்ன வழக்கங்கள் வைத்திருக்க வேண்டும்? எத்தனை மணிக்கு உண்ண வேண்டும்? தூங்கவேண்டும்? இவ்வளவு செய்திகளும் பண்பாட்டுக் கூறுகளாக வருகின்றன. இவ்வனைத்திலும் நமது மரபுக் கூறுகள் இருக்கின்றன. இப்படித்தான் இப்படித்தான் என்று அறிவால் அன்றைக்கே உணரப்பட்ட செய்திகள் இருக்கின்றன. அவ்வளவையும் புறந்தள்ளிவிட்டு இன்றைக்குப் புதிய புதிய நாகரிகக் கூறுகளை கொண்டு வந்து எல்லாவற்றையும் சேர்த்துவிட்டோம். அதனால் இன்றைக்கு முகாமையாக இருப்பது, பண்பாட்டுப் போர். பண்பாட்டுப் போரில் ஈடுபடாமல் எந்த இனமும் குமுகமும் எந்த ஒரு முன்னேற்றத்துக்கும் போய்ச் சேர முடியாது.

* இப்போது ஓகக் கலையின் வளர்ச்சி எப்படியிருக்கிறது?

மருத்துவம், ஓக இருக்கை, அலகு குத்துதல் / ஊசி மருத்துவம் (ACUPUNCTURE), மருமக்கலை (வர்மம்), ஒடிவு முறிவு சாரி, எலும்பு முறிவு மருத்துவம், இப்படி சித்தர்களின் கலை ஒவ்வொன்றும் ஒவ்வொரு துறையாகப் பிரிந்து இருக்கிறது. ஒன்று தனியாகப் பிரிந்து போகும்போது தான் வளர்ச்சி கண்டு, ஒட்டு மொத்த துறையும் வளர இயலும். அப்படி தனியாகப் பிரிந்து போனவை அதனதன் துறைகளில் வளர்ச்சி கண்டிருக்கின்றன.
அவற்றுள் இந்த  ஓக இருக்கை கலை மிக எளிதாக உலகம் முழுதாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருக்கிறது. எளிய பயிற்சிகள், பயிற்சியின் போது அதிக ஆற்றலைச் செலவழிக்க வைப்பதில்லை. மென்மையாகவே உடலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திக் கொடுப்பதால் பெரியவர்கள், பள்ளிப் பிள்ளைகள் போன்றவர்களுக்கு மன வளர்ச்சிக்கும் உடல் வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமைகிறது.

* மாணவர்களுக்குச் சிறப்பான பயிற்சிகள் என்று எவற்றைப் பரிந்துரைக்கிறீர்கள்?

மாணவர்களும், இளம்பிள்ளைகளும் செய்வதற்காக “திருக்குறள் ஓக இருக்கை” என்று ஒன்றை உருவாக்கி வடிவமைத்திருக்கிறோம். மந்திரம் போன்றவற்றை நீக்கி விட்டு உள்ளே என்ன பொருத்துவது என்று பார்த்தபொழுது தான் திருக்குறளைத் தெரிவு செய்தோம். அதை ஓதும் பொழுது நல்ல சொல்லாடல் பயிற்சியும் உரையாடல், நற்சிந்தனைப் பயிற்சியும் நமக்கு கிடைக்கும். இந்தப் பணிகூட இத்தனை ஆண்டு காலத்தில் எவராலும் செய்யப்படவில்லை என்பது நீங்கள் கவனிக்கவேண்டிய செய்தி.

உடல் நலந்தான் நம் மக்களுக்குச் செல்வம் என்று சொல்வார்கள். ஆக, நம் மக்களுக்கு, பிள்ளைகளுக்கு இளந்தலைமுறையினர்க்கு உடல் நலத்தைத் தவிர வேறு ஒன்றும் கொடுத்துவிட்டுப் போக வேண்டிய தேவையில்லை. அந்த ஓக இருக்கையைச் சிறு பருவத்திலேயே நன்கு கற்றுக் கொடுத்துவிட்டார்கள் என்றால், அவர்கள் வளர்ந்து காலம் முழுக்கக் கைக்கொண்டு பின்பற்றி வருவார்கள். இதை ஒரு பேரியக்கமாகக் கட்டியமைக்க வேண்டும் என்று தான் இந்த வடிவங்களை உருவாக்கினோம். எதையுமே முறைமை என்று வந்தால்தான் ஏற்றுக்கொள்வார்கள். அதனால் கட்டுப்பாடுகளோடு நேரக் கணக்கீடுகளுடன் பயிற்சி செய்முறைகள் ஏற்படுத்தியிருக்கின்றோம். ஒரு பக்கம் திருக்குறள் ஒலித்துக்கொண்டேயிருக்க, இன்னொரு பக்கம் அதற்கேற்ப அசைவுகள், பயிற்சிகள் இருக்கும். குழந்தைகள் கூட்டமாக நின்று செய்கிற அந்த விரைவு வேகம், நம்முடைய மனத்தை ஈர்க்கும். நமது இனத்தின் எதிர்கால நலவாழ்விற்கு இதை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றோம்.

* சித்தர்கள் பாடல்கள், தமிழ் இலக்கியக் கட்டமைப்புக்கு வெளியேயான ஒரு தனி வகை இலக்கியம் என்பதாகக் கவனிக்கப்படுகிறது. இதன் கரணியம் என்ன? அதன் வடிவமா? சாரமா?

சித்தர் பாடல்கள் ஓர் இலக்கியமே கிடையாது என்று சொல்கிறவர்களெல்லாம் உண்டு. அது என்னவோ ஆசிரிய விருத்தப்பாவிலே ஏதோ பேதைத்தனமாக பாடி வைத்திருக்கிறார்கள். அவையெல்லாம் பாட்டே கிடையாது என்று சொல்கிற இலக்கியக்காரர்கள் உண்டு. ஆனால் சித்தர்கள் இதை இப்படி உருவாக்கியதற்கு ஒரு கரணியம் இருந்தது. அவர்கள் அந்தக் காலக்கட்டத்திலேயே எதிர்காலத்தைக் கணக்கிட்டுப் பார்த்துதான் எழுதியிருக்கிறார்கள்.

இவர்களைப் போல வெண்பாவிலேயும் வேறு உயர் வடிவிலேயும், இன்னொருத்தர் நடுவில் உட்கார்ந்து விளக்கம் சொல்கிற அளவுக்கு எழுதினால் அவனுக்கு அது புரியாது. அதனால் அவர்கள் என்ன செய்தார்கள் என்றால் எவனொருவனுக்குப் படிக்கத் தெரியுமோ, அவன் படித்துச் சொன்னால் போதும். இவன் உட்கார்ந்து கேட்டால் போதும் என்பதற்காக, அவனுக்கு அப்படி கேட்டாலே பொருள் புரிய வேண்டும் என்பதற்காக எளிய இலக்கிய வடிவில் நீங்களும் நானும் பேசுகிற வடிவில் அந்தப் பாடல்களை உருவாக்கிக் கொடுத்தார்கள். அவனுடைய மொழியிலேயே, நடையிலேயே ஒரு மிகப் பெரிய மருத்துவ அறிவைக் கொண்டு வந்து அவனுக்குக் கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்து செய்யப்பட்ட இலக்கியந்தான் அது. அதனாலே அதை எல்லா இலக்கியத்துடனும் வைத்துப் பொதுவாகக் கணக்கிட முடியாது. அதற்கும் அப்பாற்பட்டு இந்த மண்ணுக்குச் சொந்தமானவனுக்குச் சொல்லப்பட்ட எளிய பாக்கள் கொண்ட உயர்ந்த இலக்கியம் அதுதான். மக்கள் இலக்கியத்தின் முன்னோடிகள் சித்தர்கள்தான்.

* சித்தர்களின் சுவடிகள் அப்படியே கிடைத்திருக்கிறதா?

அறிவர்களின் பணிகள் தொடக்க காலத்தில் வாய்மொழி அளவில்தான் பாக்கள் வடிவில் வழங்கப்பட்டு வந்தன. மனப்பாட, மனனவழியில் நிற்க வேண்டும் என்பதற்காகவே பாடல் வடிவில் தங்கள் கருத்துகளைப் படைத்தனர்.

பிற்பாடு எழுத்துகள் கற்றுத் தேர்ந்த ஒருவன் சுவடியில் இவற்றை எழுதியிருப்பான். சுவடிகளின் வாழ்நாளே 200 ஆண்டுகள்தான். அதற்கு மேலே அது இருக்காது. சிதைந்து போகும். அப்படியானால் அகத்தியர் எழுதிய சுவடி அப்படியே இங்கே வராது. அது ஒன்று எழுதியிருந்தால் அதை ஒரு 10 மாணவர்கள் மனப்பாடம் செய்திருப்பார்கள்.

அவனும் ஒவ்வொரு ஊருக்குப் போயிருப்பான். அவர்கள் தன் பகுதிகளில் நான்கைந்து தலைமுறைகள் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். அதில் எழுதக் கற்றுக் கொண்டவன் ஒருவன், எத்தனையோ தலைமுறைகள் கழித்துச் சுவடியிலே எழுதி வைப்பான். அதனாலேதான் ஒரே நூல், ஒரே ஒரு குறிப்பிட்ட தலைப்பு சார்ந்த நூல் பல பகுதிகளில் அதனுடைய சுவடிகள் கிடைக்கின்றன. ஒவ்வொன்றிலேயும் சிற்சில பாட வேற்றுமைகள் இருக்கும். ஏனெனில் அதை எழுதுகிறவர்கள் வெவ்வேறு ஆட்கள், வெவ்வேறு காலக்கட்டம் கரணியமாக ஏற்படுகிற வேற்றுமைகள் தான்.

* ஓகக் கலை பயிற்சிகள் நோய்க்கான பண்டுவ (சிகிச்சை) முறையாக வழங்கப்படுவதாகச் சொல்கிறார்களே, அது சரியா?

சரிதான். ஓக இருக்கை என்பதே நம்முடைய உடல் நலத்திற்காகத்தான். பலன் என்னும் போது உடலில் கோளாறுகள், பிணிகள் எந்தச் சிக்கல்கள் இருந்தாலும் அவற்றைத் தீர்ப்பதற்கான ஒரு தீர்வு முறைதான் அது. ஒரு பண்டுவ முறையாக (TREATMENT) இலங்குவதற்கான எல்லாத் தகுதியும் பெற்றது, இந்த ஓக இருக்கைக் கலை. அந்தந்த பிணிகளுக்கு ஏற்றாற்போல, மக்களுக்கு ஏற்றாற்போல, இவற்றைச் செய்வது இயலும், செய்வதும் முறைதான். அப்படி செய்வதனால் பயன்களும் உண்டு.

* சித்தர் என்பதற்கு மாறான பெயராக அசித்தர் என்று பெயர் வைத்திருக்கிறீர்களே, கரணியம் என்ன?

குருவாக இருப்பவர்கள் எங்களுக்குப் பெயரிடுதல் என்று ஒரு நடைமுறை உண்டு. அப்படி அவர்கள் தேர்ந்தெடுத்த இந்தப் பெயரை நானும் விரும்பி ஏற்றுக்கொண்டேன். ஒரு சொல்லுக்கு முன்னாலே “அ” வந்தால் தமிழில் எதிர்மறை ஆகாது. வடமொழியில் தான் அப்படி வரும். வடமொழிச் சொற்களில் பார்த்தோம் என்றால் “சுத்தம்” என்று சொன்னால் “அசுத்தம்,” “யோக்கியன்” என்று சொன்னால் “அயோக்கியன்” என்று இப்படி எதிர்மறைக்குப் போகும். ஆனால் தமிழில் தூய்மை, துப்புரவு என்பதற்கு அதூய்மை, அதுப்புரவு என்றோ அநல்லவன் என்றோ சொல்லுவது இல்லை. (சுத்தம்) –  தூய்மை, துப்புரவு, (யோக்கியன்) – நல்லவன்.

தமிழில் எதிர்மறையாக வேண்டும் என்று சொன்னால் “அ” கூட “வ” அல்லது “ன்” அல்லது அல் சேர்த்தால்தான் எதிர்மறைக்குப் போகும். எடுத்துக்காட்டாக – அவநம்பிக்கை, அன்று, அல்+அது=அல்லது-. அதை வைத்து நீங்கள் அவையெல்லாம் வடமொழி என்று புரிந்துகொள்ளலாம். “அ” என்றால் அகரம். இந்த “அகரம்” தான் சித்தர்களின் அடிப்படை. இந்த அகரத்திலிருந்துதான் எல்லாவற்றின் தோற்றத்தையும் எடுத்தார்கள் சித்தர்கள். அவர்கள் கண்டெடுத்த மெய்ப்பொருளுக்கு அகரம் என்று தான் பெயர். ஆகையால் அந்த அகரத்தை முன்னிருத்தி அகரச் சித்தராக வைத்ததின் சுருக்கம் தான் “அசித்தர்”. எல்லா இடங்களிலேலேயும் என்னை அசித்தர் என்று சொல்லிக்கொண்டு வருகிறேன். ஆனால் எல்லோரும் என்னைச் சித்தர் என்று சொல்லிக்கொண்டு வருகிறார்கள். தன்னைச் சித்தர் என்று கூறிக்கொண்டவர்கள் எல்லோரும் எத்து வேலைகளால் இன்று சிறைக்குள் இருக்கிறார்கள்.

* சித்தர்கள் மக்களுக்குச் சொன்ன செய்திகள் என்ன?

மூடப் பழக்கங்கள், மூட மத நம்பிக்கைக்கு எதிராகக் குரல் கொடுத்தவர் ஈ.வெ.ரா. பெரியார் என்பது நமது காலக் கட்டத்தின் செய்தி. காலமறியா காலத்திலேயே இந்த மூடப் பழக்கங்களுக்குத் தவறான கொள்கைகளுக்கு, திரிபு கருத்துகளுக்கு எதிராகக் கலகக் குரல் எழுப்பியவர்கள் சித்தர்கள் தான். சரியான அறிவாளர்களாக, புரட்சியாளர்களாக இருந்தவர்கள் அவர்கள். நலத்தோடு வாழ்வது, இயற்கையோடு இயைந்து வாழ்வது, நல்ல சிந்தனையுடன் வாழ்வது, ஒருவர் மேல் கீழ் என்று பார்க்காமல் வாழ்வது, மூடக் கருத்துகளை வைத்துக்கொள்ளாமல் வாழ்கிறது, இவைதான் சித்தர்களின் செய்திகள்; பணிகள். சாதிய எதிர்ப்பு, மத எதிர்ப்பு, மூடச் சடங்கு எதிர்ப்பு, பெண்ணடிமைத்தன எதிர்ப்பு, போலித் துறவிகள் / முனிவர்கள் எதிர்ப்பு, போலி மெய்யியல் எதிர்ப்பு, வந்தேறிகள் எதிர்ப்பு, மாயை எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, தமிழ் மொழிப் பற்று, இவை சித்தர்கள் செய்த பணிகள்.

அவர்கள் சொன்னதில் வாழ்க்கைக்கு உதவாத ஒன்றுமேயில்லை. அவர்கள் சொல்வதெல்லாம் மருந்தாக இருக்கும். பயிற்சியாக இருக்கும். உணவாக இருக்கும். நடைமுறையாக இருக்கும். ஒழுக்கங்களாக இருக்கும்.

உடலை ஒம்புவதன் மூலமாக உள்ளத்தையும், உயிரையும் ஆற்றல் பெறச் செய்வது, நீண்டு வாழ்வது,  நலமாக வாழ்வது, இவைதான் சித்தர்களின் “இயற்கை வாழ்வியம்”. சித்தர்களுடைய இயக்கம் என்பது, மக்களுடைய நலவாழ்வு மட்டுமே.

______________________________________________________________________

நன்றி:

2007 – சவுந்தர சுகன் இதழில் வெளியானது.
2009 – ‘காலத்தின் உரையாடல்’, நேர்காணல்கள் தொகுப்பு,
தமிழ்க்கூடம் வெளியீடு.
—————————————————————————————————————-

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *