திருச்சி புலவர் இராமமூர்த்தி

வந்த பின் தொண்டனாரும் எதிர் வழி பாடு செய்து
சிந்தை செய்து அருளில் எங்கள் செய்தவம் என்று நிற்ப
முந்தை நாள் உன்பால் வைத்த மெய்யொளி விளங்கும் ஓடு
தந்து நில் என்றான் எல்லாம் தான் வைத்து வாங்க வல்லான்

தில்லைமூதூரில் வாழ்ந்த  திருநீலகண்டர் மனைவி, ‘’தீண்டாதீர்!’’ என்று கூறிய  சூளுரை கேட்டு, எல்லாப் பெண்களையும் மனத்தாலும் தீண்டிடாமல் வாழ்ந்தார்!

இதனை  ஆறுமுக நாவலர்,

‘’அவர்கள் இருவரும் தங்கள் வீட்டினின்றும் புறப்படாதொழிந்து, அவ்வீட்டிலே தானே இருந்து, இல்லறத்திற்குரிய பிறசெய்கைகளெல்லாம் செய்து கொண்டு, புணர்ச்சியின்மையை பிறரறியாதபடி வாழ்ந்தார்கள். இளமைப் பருவத்தை யுடைய இருவரும் அவ்வாணையைப் பேணிக் கொண்டு, பலவருஷங்கள் செல்ல, யெளவனம் நீங்கி, வயோதிகர்களாகி, வருத்தமுற்றார்கள். உற்றும் சிவபத்தி சிறிதும் குறையாதவர்களாகி இருந்தார்கள்.

கருணையே உருவமான பெருமான் , அவ்வடியாருடைய சிறப்பை உலகினர் முழுமையாக அறிந்து கொள்ளும் பொருட்டு, ஒரு சிவயோகியாகி அடியார் இல்லத்துக்குச் சென்றார். அவரைக் கண்டவுடன் வணங்கி இல்லத்துக்குள் அழைத்துக் கொண்டுபோய் ஆசனத்தில் இருத்தி,  விதிப்படி கால்கழுவி, குடிக்க நீர்தந்து பூசைகள் செய்து வணங்கி எழுந்து, ‘’அடியேன், உங்களுக்குச் செய்யத்தக்க குற்றேவல் யாது?’’ எனக் கேட்டார். இறைவன் தம் திருக்கரத்தில் வைத்திருந்த திருவோட்டை அவருடன் தந்து,‘’ஒப்பற்ற இத்திருவோட்டை பத்திரமாக வைத்திருந்து மீண்டும் கேட்கும்போது தருக!’’ என்று கூறிக் கொடுத்தார் அதைக் கேட்ட அடியவர் அவரை வந்தனஞ் செய்து, அவ்வோட்டை வாங்கிக்கொண்டு, வீட்டிலே ஒரு பக்கத்தில் சேமித்து வைத்துவிட்டு, திரும்பி வந்து, போம்படி எழுந்த சிவயோகியாருக்குப் பின் சிறிது தூரஞ்சென்று, அவரிடத்தில் விடைபெற்றுக்கொண்டு, வீட்டுக்குத் திரும்பினார்.

நெடுநாட்கள் கழிந்தபின், ஒருநாள் பரமசிவன் தாம் வைக்கக் கொடுத்த திருவோட்டை வைக்கப்பட்ட இடத்தில் இல்லா தொழியும்படி செய்து, அவ்வடியாருடைய உண்மைநிலையைப் பிறர்க்குப் புலப்படுத்தும்பொருட்டு முன் போலச் சிவயோகி வடிவங்கொண்டு, அவர் வீட்டுக்கு எழுந்தருளினார். அவர் சிவயோகியாரை முன்போல வழிபட்டு, “சுவாமி! தேவரீர் இவ்வீட்டிற்கு எழுந்தருளிவந்தது அடியேங்கள் பூர்வசன்மத்திற் செய்த தவத்தினாற் போலும்” என்று விண்ணப்பஞ்செய்து நிற்க; சிவயோகியார் “நாம் முன்னாளிலே உன்னிடத்திலே தந்த திருவோட்டை இப்பொழுது தா” என்றார். அதனைச்  சேக்கிழார்,

‘’வந்த பின் தொண்டனாரும் எதிர் வழி பாடு செய்து
சிந்தை செய்து அருளில் எங்கள் செய்தவம் என்று நிற்ப
முந்தை நாள் உன்பால் வைத்த மெய்யொளி விளங்கும் ஓடு
தந்து நில் என்றான் எல்லாம் தான் வைத்து வாங்க வல்லான்!’’ என்று  பாடுகிறார்.

இப்பாடலில் தொண்டனார் எப்போதும் இறைச் சிந்தனையும், அடியார் வழிபாட்டுணர்வும் உடையவராய் விளங்கினார் என்பதைக் கூறுகிறார்! இதனால்  அவருடைய திருந்திய வாழ்வு நமக்குத் புலனாகின்றது. எதிரே சென்று இனிய உரைகள் கூறி, இல்லத்துக்கு அழைத்து வந்து  உரிய வழிபாட்டைச் செய்தலை சேக்கிழார் பின்னர் கூறியுள்ளார், இதனை இங்கே ‘’எதிர் வழிபாடு‘’ என்று கூறுகிறார்! இவ்வாறு அடியார் தம் இல்லம் நோக்கி வந்தது , முன் செய்த புண்ணியத்தின் பயன் என்றும்  தவத்தின் விளைவு என்றும் என்று சிந்தித்தார். ஆகவே இப்பிறப்பில் செய்த பாவங்கள் அகன்றதும், இப்பிறப்பில் தாம் செய்த தவம் பலித்தது    என்பதும் நமக்குப்  புலனாகின்றது!  இதனை இப்பாடலின்,

‘சிந்தை செய்து அருளில் எங்கள் செய்தவம் என்று நிற்ப’ என்ற தொடர் விளக்குகிறது.

இறைவன்நமக்கு தனு என்ற புறவுடலையும். கரணம் என்ற அகக்க ருவிகளையும், புவனம் என்ற அனுபவப்பொருளையும், போகம் என்ற அனுபவத்தையும் தந்து, இவற்றில்  நமக்குக்  கசப்பையும்  தருகின்றான். இவை முறையான நெறியில் அமைந்தால், நம் உடல் ஞானஒளி வீசித்  திகழும். இதனை ‘’மொய்யொளி விளங்கும் ஓடு‘’ என்கிறார் .  இவையனைத்தையும்,

‘முந்தை நாள் உன்பால் வைத்த மெய்யொளி விளங்கும் ஓடு’ என்ற  அடி  புலப்படுத்துகின்றது! அவ்வாறு இறைவன் தந்த அனைத்தையும் அவன் திருவடிகளில் சென்று சேரும்போது, ஒப்படைத்து விட  வேண்டும் என்பது, தத்துவம்! அதனைத் தந்து விட்டால், வீடுபேறு  என்னும்  நிரந்தர வாழ்வில் நிலைக்கலாம்! இதனையே ‘தந்து நில்‘ என்ற தொடர் விளக்குகிறது!

இறைவன்  நமக்குத் தருவன அனுபவப்  பொருளே யாகும். அனுபவம் ஆசையை நீக்கும்; அதனால் பற்று நீங்கும் . ‘’அற்றது பற்றெனில் உற்றது வீடு!’’  ஆகவே இறைவனே நமக்குத் தந்து, தந்தவற்றை நீக்கியருளுவான்!

‘’உலகம் யாவையும் தாம் உள வாக்காலும்
நிலை பெற்றுத்தலும் நீக்கலும் ‘’ இறைவன் திருவிளையாடல் என்கிறார் கம்பர்!

‘’விச்சு-அது இன்றியே விளைவு செய்குவாய் விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும் வைச்சு வாங்குவாய் ‘’ என்பது  திருவாசகம்!   இதனையே   சேக்கிழார்,

‘எல்லாம் தான் வைத்து வாங்க வல்லான்’ என்ற தொடரில் வைத்து விளக்குகிறார்! இனி முழுப்பாட்டையும் பயின்று பொருளுணர்ந்து மகிழவோம்,

‘’வந்த பின் தொண்டனாரும் எதிர் வழி பாடு செய்து
சிந்தை செய்து அருளில் எங்கள் செய்தவம் என்று நிற்ப
முந்தை நாள் உன்பால் வைத்த மெய்யொளி விளங்கும் ஓடு
தந்து நில் என்றான் எல்லாம் தான் வைத்து வாங்க வல்லான்!’’
சேக்கிழாரின்  பாடல் நயம் படிக்கப் படிக்க இனிக்கிறதல்லவா?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *