வெ. சுப்ரமணியன்

எழுதிக் கொண்டிருக்கும் எல்லோருக்கும் நன்கு அறிமுகமான இராசி விண்மீன் தொகுப்புகளை நட்ட நடுவில்  மேஷம், இரிஷபத்துடன் நிறுத்தி  விட்டுத் திடீரென்று, “எல்லாம் கிடக்க கிழவனைத் தூக்கி மனையில் வை” என்பது   மாதிரி சென்டாரஸ் உடுத் தொகுப்பை நான் ஏன் இப்போது எடுக்க வேண்டும் என்ற வினா உங்கள் மனதுக்குள் கண்டிப்பாக இருக்கும்.

தற்போது இரவு சுமார் 8.00 மணி முதல்  தென்கிழக்கு அல்லது தெற்குத் திசையில் கிழக்கு மேற்காக அருகருகில் அமைந்த இரு பொலிவான உடுக்களை வெறும் கண்களால் தொலைநோக்கி அல்லது இருகண் நோக்கி போன்ற கருவிகளின் உதவியின்றி  நம்மால் எளிதில் காண இயலும். அந்த இரு உடுக்கள் ஆல்பா சென்டூரியும் (α-Centauri) பீட்டா சென்டூரியும் (β-Centauri) ஆகும் .

சென்டாரஸ் உடுத் தொகுப்பு தெற்கு வான் அரைகோளத்தில் இருப்பது. ஆகவே நிலநடுக்கோட்டுக்கு வடக்கில் அதிக அட்சங்களில் இருப்பவர்களுக்கு இதனைக் காணும் வாய்ப்பு இல்லை. ஆனால்  நம் சென்னை 12° 59′ முதல் 13° 9′ வரையான வடக்கு அட்சத்தில்) நில நடுக்கோட்டுக்கு அருகில் இருப்பதால் குறிப்பிட்ட சில காலங்களில் நமக்குக் கட்புலனாகும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

தற்போது சென்னை வானில் இரவு நேரத்தில் இவ்விரு உடுக்களையும் காண இயலும் என்பதால் இப்போது இவை இடம் பெற்றுள்ள  சென்டாரஸ் உடுத் தொகுப்பு (Centaurus constellation) குறித்த தகவல்கள் முடிந்தவரையில் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தரப்பட்டுள்ளன. பிராக்சிமா சென்டூரி (Proxima Centauri) விண்மீன் அல்லது உடுதான் நம் பூமிக்கு மிக அருகில் அமைந்த உடு. பூமிக்கு அருகில் அமைந்த உடு என்றால் நம் நில விற்பனை விளம்பரங்களில்

“சென்னைக்கு மிக அருகே” என்று சொல்வது போன்ற அருகில் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். காரணம் புவியிலிருந்து பிராக்சிமா சென்டூரி சுமார் 4.2 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இப்போது நமக்கு இரண்டு ஐயங்கள் வர வேண்டும். முதலாவது ஆல்ஃபா சென்டூரி உடுவுக்கும் இப்போது சொல்லிக் கொண்டிருக்கும் பிராக்சிமா சென்டூரிக்கும் என்ன தொடர்பு? அடுத்தது தூரத்தை  ஒளி ஆண்டு என்றால் என்ன என்பது.

முதல் ஐயத்திற்குப் பதில் ஆல்பா சென்டூரி (α – Centauri) உடுவானது  மூன்று உடு அமைப்பு. அதில் மொத்தம் மூன்று உறுப்பினர்கள். ஆல்பா சென்டூரி A , ஆல்பா சென்டூரி B மற்றும் பிராக்சிமா சென்டூரி.

அடுத்தது ஒளி ஒரு வினாடியில் கிட்டத்தட்ட மூன்று இலட்சம் கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கும். அத்தகைய வேகத்தில் சுமார் 4.2 ஆண்டுகள் விடாமல் பயணித்தால்தான் பிராக்சிமா சென்டூரியை அடைய முடியும்.

தவிரவும் பிராக்சிமா சென்டூரிக்கு  அருகில் பூமியைப் போன்று ஒரு கோள் இருப்பது கடந்த 2016 ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 09.06.2020 அன்று கூடுதலாக இன்னுமொரு கோள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பான செய்தியாகக் கடந்த சில நாட்களுக்கு முன்வெளியானதும் பிறிதொரு காரணமாக அமைந்துள்ளது.

இரவு வானின் பொலிவான முதல் இருபத்தைந்து (25) உடுக்களை எடுத்துக் கொண்டால் அதில் மூன்றாம் (3) இடத்தில் ஆல்பா சென்டூரியும் (α – Centauri), பதினோராவது (11) இடத்தில் பீட்டா சென்டூரியும் (β – Centauri) உள்ளன.

ஆல்பா சென்டூரி (α Centauri) பாரம்பரியப் பெயர்களான ரிகில் கென்டாரஸ் (Rigil Kentaurus), ரிகில் கென்ட் (Rigil Kent) மற்றும் டோலிமான் (Toliman) என்றெல்லாம்   அழைக்கப்படுகிறது. இதில் ரிஜில் கென்டாரஸ் என்பது அரபு சொற்றொடரான ரிஜ்ல் குவான்டாரிஸிலிருந்து (Rijl Qantūris) பெறப்பட்டது. சென்டூரின் பாதம் (foot of the centaur) என்ற பொருள் கொண்டது. டோலிமான் என்ற பெயர் அரபு அல் – ஜூல்மான் (al-Zulmān) என்பதிலிருந்து வந்ததாக நம்பப்படுகிறது. இதன் பொருள் தீக்கோழிகள் (ostriches).

பீட்டா சென்டூரி (β Centauri) உடுவின் பாரம்பரியமான பெயர்  ஹதர் (Hadar) அல்லது ஏஜெனா (Agena). ஹதர் (Hadar) அரபு வார்த்தையான தரை என்பதிலிருந்து உருவானது, அதே நேரத்தில் ஏஜெனா (Agena) லத்தீன் வார்த்தையான முழங்கால் (knee) என்பதிலிருந்து வந்தது.

இன்று (24.06.2020) இரவு 07.54.29 மணியளவில் சென்னை வானில் காணப்பட்ட உடுத் தொகுப்புகளின் படத்தைக் கீழே காணலாம். படம் Sky Wiki என்னும் கைபேசிச் செயலி மூலம் பெறப்பட்டது. வானம் சற்று மேகம் பூசியது போலிருந்தாலும் சிவப்புக் கட்டமிட்டுச் சுட்டிக் காட்டப்பட்ட உடுக்கள் ஓரளவு தெளிவாகவே தெரிந்தன.

சென்டாரசும்  கிரேக்க வானியலாளர் தாலமியால் (Ptolemy) அட்டவணைப் படுத்தப்பட்ட நாற்பத்தெட்டு (48) உடுத் தொகுப்புகளில் ஒன்றே. இருப்பினும் அதற்கு முன்பாகவே வானியலாளர் யூடோக்ஸஸ் (Eudoxus) மற்றும் கவிஞர் அராடஸ் (Aratus) ஆகியோரின் கிரேக்க நூல்களிலும் சென்டரஸ் குறித்து சொல்லப்படுள்ளது.

சென்டாரஸ் உடுத் தொகுப்பு தெற்கு வான் அரைக்கோளத்தில் (Southern hemisphere) அமைந்துள்ளது. 1060 சதுர டிகிரி பரப்பளவைக் கொண்ட சென்டாரஸ் வானத்தில் ஒன்பதாவது (9) பெரிய விண்மீன் தொகுப்பாகும் . இது தெற்கு அரைக்கோளத்தின் (SQ3) மூன்றாவது காற்பகுதியில் அமைந்துள்ளது மற்றும் + 25 ° மற்றும் – 90 ° இடையிலான அட்சரேகைகளில் காணலாம். கோகுலத்தில் கண்ணனைச் சுற்றிலும் கோபியர்கள் இருந்தது போல இந்த உடுத் தொகுப்பைச் சுற்றிலும் அன்ட்லியா(Antlia), கரினா(Carina), சர்க்கினஸ் (Circinus), க்ரக்ஸ் (Crux), ஹைட்ரா (Hydra), துலாம் (Libra), லூபஸ் (Lupus), மஸ்கா (Musca), மற்றும் வேலா (Vela)  என்று ஏகப்பட்ட பிற உடுத் தொகுப்புகள் கூடிக் கும்மியடிகின்றன. இது கிரேக்க கிரேக்க உடுத் தொகுப்புகளில் ஒன்றாக வகைப் படுத்தப்பட்டுள்ளது. “ஆளவந்தான்” என்ற திரைப்படத்தில் “ கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்” என்று ஒரு பாடல் வரி வரும். ஆதுபோல் இங்கு சென்ட்டூர் (Centaur) என்பது “மனிதன் பாதி குதிரை பாதி கலந்து செய்த கலவையான உயிரினம்”. அதாவது மேல் பாதி மனித வடிவத்தையும் கீழ்ப்பாதி குதிரை வடிவமும் கொண்டகிரேக்க மற்றும் இந்தியத் தொன்மங்களில் சொல்லப்படும் விசித்திரமானதோர் உயிரினம்.

பண்டைய கிரேக்க – ரோமானிய தொன்மங்கள், சென்டாரஸை பெரும்பாலும் சிரோனுடன் (Chiron) சென்ட்டூருடன் தொடர்பு படுத்துகின்றன. டைட்டன் (Titan) மன்னர் குரோனஸின் (Cronus) மகனான சிரோன் மேற்பாதி மனித வடிவமும் கீழ்ப் பாதி குதிரை குதிரை வடிவமும் கொண்ட விசித்திரமான படைப்பாக இருந்தார். இவர் மிகுத்த அறிவாற்றல் கொண்டவர் என்பதால் ஹெர்குலஸ் (Hercules) மற்றும் ஜேசன் (Jason) ஆகிய இருவருக்கும் ஆசிரியராக இருந்தார்.

இந்த சென்ட்டூர் (Centaur) உயிரினங்கள் காட்டுமிராண்டித்தனத்தையும் கட்டுக்கடங்காத குழப்பத்தையும் சித்தரிப்பவையாகவே இருக்கின்றன.  அவை கிரேக்க கட்டடக்கலை, சிற்பம் மற்றும் மட்பாண்ட அலங்காரங்களில் அடிக்கடி குறிப்பிடப்படுகின்றன. பொதுவாகச் சென்ட்டூர்கள்  மிருகத்தனத்திற்கும், காம இச்சைக்கும் பெயர் பெற்றிருந்த இருந்தபோதிலும், சில சென்ட்டூர்கள் தொன்மக் கதைகளில் மதுப்போதையின் பிடியில் இருந்தாலொழிய கொடியவையாகச் சித்தரிக்கப்படவில்லை. ஒருகால் நாமும் நம்முடைய நாகரிகத்தை மறப்பதால் இந்திரியங்களும் மனமும் கடிவாளம் இல்லாத குதிரையாக நமது கட்டுப்பாட்டை இழக்குமானால்  நாம் அனைவரும் எதிர்கொள்ளும் ஆபத்துக்களுக்கு அவை ஒரு எச்சரிக்கை உருவகமாகக் (metaphor) கூட இருக்கலாம்.

தெசலியின் (Thessaly) பண்டைய பழங்குடியினரான லாபித்ஸ்களின் (Lapiths) அரசன் இக்ஸியன் (Ixion).  இவன் ஃபிளெகியாஸின் (Phlegyas) மகன். ஈயோனியஸின் (Eioneus) மகள் தியாவைத் (Dia) திருமணம் செய்து கொள்வதாக அவன் உறுதியளித்திருந்தான். ஆனால் அவன் தியாவின் தந்தைக்குத் தருவதாக வாக்குறுதியளித்திருந்த அழகான விலையுயர்ந்த திருமணப் பரிசுகளை எப்படியாவது தவிர்க்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டிருந்தான். அதனால் ஈயோனியஸை வஞ்சகமாகக் கொல்ல முடிவு செய்தான். தன் சதிவலையில் ஈயோனியஸைச் சிக்க வைக்க லாபித் அரண்மனையில் பெரும் விருந்துக்கு ஒன்றை ஏற்பாடு செய்து  அதில் கலந்து கொள்ள அவரை அழைத்தான்.  அவரை அமர வைக்கப் போகும் இடத்திற்குக் கீழே ஆழமான குழியைத் தோண்டி அதில் கரியைப் பயன்படுத்தி நெருப்பு வளர்த்துத் தணலை மூடி மறைத்து வைத்திருந்தான் இக்ஸியன். முறையாக விருந்தழைப்பு நடந்தேற, ஈயோனியஸ் அவனைச் சந்தேகப்படவில்லை. இக்ஸியனின் திட்டப்படி குழிக்குள் ஈயோனியஸ் தவறி விழுந்து முற்றிலுமாக எரிந்து போனார்.  இந்தக் கொடூரமான செயலால் கடவுளர்கள் கோபமடைந்தனர். ஆனால் ஜீயஸ் (Zeus), என்ன  காரணத்தாலோ, இக்ஸியான் மீது பரிதாபப்பட்டு,  குற்றத்திலிருந்து அவனை விடுவிக்க முன்வந்தது மட்டுமல்லாமல் கூடவே ஒலிம்பஸ் மலைக்கு விருந்துக்கும் அழைப்பு விடுத்தார்.

ஜீயஸின் விருந்தினராகச் ஒலிம்பஸுக்குச் செல்வதில் இக்ஸியன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான், ஆனால் இயல்பிலேயே முற்றிலும் மிக மோசமான எண்ணம் கொண்டவனாக இருந்ததால், ஒருமுறை தவறு செய்து மன்னைப்பு வழங்கப்பட்ட பின்னரும் அவன் நடத்தையில் சிறிது கூட மாற்றமில்லை. தமிழில் உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்தல் என்று சொல்வார்கள் அதுபோலத் தெய்வங்களின் அரசியும் ஜீயஸின் மனைவியுமான ஹேராவை (Hera) எப்படியாவது கவர்ந்து கொள்ளும் திட்டத்தில் அவன் இருந்தான்.

ஜீயஸ், அனைத்தையும் அறிந்தவர் என்பதால் ஹேராவைப் போலவே தோற்றமளிக்கும் ஒரு மேகத்தை உருவாக்குவதன் மூலம் இக்ஸியனின் மோகத்தை முன்கூட்டியே தூண்டினார். அவரது தந்திரச் செயலுக்கு  வீழ்ந்த இக்ஸியன்   மேகத்தை  முரட்டுத்தனமாக இச்சித்துக் கூடினான். அந்தக் கூடலில் முதல் சென்டார் பிறந்தது. பின்னர் அவரால் சென்டார்களின் இனம் உருவானது.

மனிதர்களின் சட்டங்களுக்கு அப்பாற்பட்டு, தெசலியின் காடுகளில் இந்த சென்டார்கள் வாழ்கின்றன என்று நம்பப்பட்டது. தெசலியில் குதிரையின் மீது ஆரோகணித்தவாறு காளைகளை வேட்டையாடும்  ஒரு பாரம்பரியம் இருந்ததால் இந்தத் தொன்ம உயிரினங்கள் உண்மையில் ஒரு அடிப்படையைக் கொண்டிருந்திருக்கலாம்.  மேலும் சென்டார் என்ற வார்த்தை “காளையைக் கொல்பவன்’ (bull-killer)  என்ற பொருள்படும். ஒருவேளை தெசலியின் மிகவும் திறமையான குதிரை வீரர்கள் குதிரையைத் தங்களது ஒரு அங்கமாகவே எண்ணிப் பார்த்திருக்கலாம். அதிலிருந்து சென்டார் உயிரினத்தின் கட்டுக்கதை பிறந்திருக்கவும் கூடும்.

தொன்மத்தின்படி டைட்டன்களின் மன்னரான குரோனஸ் கடல் தேவதையான பிலிராவை (sea nymph Philyra) மயக்கி அவளுடன் தகாத உறவு கொள்ளும் போது எதிர்பாராத விதமாக  குரோனசின் மனைவியான ரியா (Rhea) இடையில் வந்து விட,  ரியாவிடம் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்கும் பொருட்டு குரோனஸ் குதிரையாகத் தன் வடிவத்தை மாற்றிக் கொண்டார்.  இதன் விளைவாகப் பிலிரா ஒரு கலப்பின மகனைப் பெற்றெடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பிலிரா பிறந்த மகனை அநாதையாக விட்டுச் சென்றாள்.

சென்டார் சிரோன் அல்லது சீரோன், அவரது சிறந்த ஞானத்துக்காகவும், மருத்துவக் கடவுளான அஸ்கெல்பியோஸ் மற்றும் பராக்கிரமிக்க வீரர்களான ஹெர்குலஸ், அகில்லெஸ், ஜேசன் மற்றும் அவரது மகன் மீடியஸ் ஆகியோரின் ஆசிரியராகவும் அறியப்பட்டதால் மிகவும் பிரபலமானவர் . மருத்துவம், வேட்டையாடுதல், இசை ஆகியயவற்றில் ஞானமுடைய ஆசானாக நன்கறியப்பட்டிருந்ததாகத் தொன்மக் குறிப்புகள் உள்ளன. இருந்த போதிலும் தொன்மங்களில் சிரோன் ஒரு சிறிய பாத்திரம் மட்டுமே என்பதால் அவர் குறித்த விவரங்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. தொன்மங்களில் ஒரு நிழல் உருவம் கொண்டவர் மற்றும் அவர் பிலிராவின் மகன் (டைட்டன் ஓசியனஸின் மகள்) என்றும் அவர் சாரிக்லோ(Chariklo) என்ற தேவதையை  மணந்தார் என்பதும் கிமு 700 ஆம் ஆண்டில் வாழ்ந்த கவிஞர் ஹெசியோட்டின் (Hesiod) படைப்புகளிலிருந்து நமக்குத் தெரிய வருகிறது.  பெலியன் (Pelion) மலைக் குகையில் சிரோன் வாழ்ந்ததாகவும் நம்பப்படுகிறது.

சிரோன் பொதுவாக உடற்பகுதியிலும் பின்னிரு கால்களிலும் மற்ற சென்டார்களைப் போலிருந்தாலும் அவரது முன் கால்கள் மனிதர்களின் கால்களைப் போலக் குறைவான உரோமங்களுடன் காணப்படுகின்றன. இதனை அவர் நாகரீகமான சென்டார் என்பதைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம். சிரோன் பீலியஸின் (Peleus) ஆலோசகராகவும், தீடிஸுடனான (Thetis ) மன்னர்  பிலியஸின்  திருமணத்தில் தொடர்புடையவராகவும் இருந்தார்.  இந்த  அரசத் தம்பதிகளின் மகன் அகில்லெஸ் (Achilles) தனது இளம் பருவத்தில் குருகுலக் கல்வி கற்ற புத்திசாலியான சிரோன் வசம் ஒப்படைக்கப்பட்டார்.

பெரும் பராக்கிரமசாலியான அகில்லெஸிக்கு, சிரோன் பெலியஸுக்கு கொடுத்த பெலியனின் சாம்பலிலிருந்து (Pelian ash) தயாரிக்கப்பட்ட ஒரு வல்லமைமிக்க ஈட்டியும் மரபு வழியில் கிடைத்தது. இந்த ஈட்டி மிகவும் பெரியதாகவும், கனமாகவும் இருந்தது. அதைக் கொண்டு போரிட அகில்லெஸ் மட்டுமே போதுமான வலிமையும் திறமையும் கொண்டவராக இருந்தார், ஹோமரின் (Homer) இலியாட்டில் (Iliad)  ட்ரோஜன் போரைப் (Trojan war) பற்றிய  விளக்கத்தில் அகில்லெஸின் தீரம் குறித்துச் சொல்லப்படும் இடத்தில்  சிரோனின் பரிசான ஈட்டி பற்றி இரண்டு முறை குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதியில் ஹெராக்கிசின் (Heracles) விஷம் தோய்ந்த அம்பு ஒன்றால் தற்செயலாக தாக்கப்பட்டதில் காயமடைந்த அவர் அழியாத பிறவியான குரோனஸின் மகனாக இருந்ததால் அவருமே அழியாத பிறவி எடுத்தவராக இருந்தார். ஆகவே இறக்க வழியின்றிப் பயங்கரமான நரக வேதனையை அனுபவித்தார். ஜீயஸ் இறுதியில் சென்டார் சிரோனின் மீது பரிதாபப்பட்டு அவரை இறவாவரம் மற்றும் உடல் வாதைலிருந்து விடுவித்து, அவரை இறக்க அனுமதித்து, அவரை வானில் நட்சத்திரங்களுக்கிடையில் வைத்தார்.

கி.மு. 2600-1900 வரை தேதியிட்ட கலிபங்கன் உருளை முத்திரைகள் (Kalibangan cylinder seal) சிந்துச் சமவெளி நாகரிகம் குறித்த அகழாய்வுத்தலத்தில் கிடைத்தன. செண்டார் போன்ற உயிரினங்களின் முன்னிலையில் பெண்ணின் பொருட்டு இரு ஆண்களுக்கு இடையிலான வாட்போரைக் காட்டுகிறது. பிற ஆதாரங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த உயிரினங்கள் உண்மையில்  அரை மனித மற்றும் அரைப் புலிகள் என்று கூறுகின்றன, பின்னர் அவை இந்துப் போர் தெய்வமாக உருவாகின்றன.  இந்த முத்திரைகள் கிமு 3 நூற்றாண்டில் சிந்துச் சமவெளி – மெசொபடோமியா உறவுகளுக்கு சான்றாக விளங்குகிறது.

படம்; நன்றி https://www.harappa.com/blog/indus-cylinder-seals

திருவனந்தபுரத்தில் உள்ள பழைய ஸ்ரீகாந்தேஸ்வரம் கோயிலுடன் தொடர்புடைய  பிரபலமான ஒரு தொன்மக்கதையில், அழகான யாதவ இளவரசனுக்குத் துறவியொத்த ஒரு பிராமணரால் இடப்பட்ட சாபம், குதிரையின் உடலையும், குதிரையின் தலை மற்றும் கழுத்துக்குப் பதிலாக இளவரசனின் தலை, கைகள் மற்றும் உடற்பகுதியையும் கொண்ட ஒரு உயிரினமாக மாற்றியது என்று சொல்லப்படுகிறது.

இந்தியப் புராணங்களிலும், ​​இந்தியா முழுவதிலுமிருந்து பல்வேறு பண்டைய நூல்கள், கலைகள் மற்றும் சிற்பங்களிலும் இன்னொரு அரை மனிதன், அரைக் குதிரை புராண உயிரினமான கின்னரர்கள் (Kinnaras) காணப்படுகிறது. இது குதிரையின் தலை இருக்கும் ஒரு மனிதனின் உடற்பகுதியுடன் கூடிய குதிரையாகக் காட்டப்படுகிறது, இது கிரேக்க சென்டார்களை ஒத்ததாகும்.

பட :நன்றி https://www.pinterest.co.uk/pin/255368241341065845/

சென்டாரஸின் தோற்றம்  காட்டெருமை மனிதன் (Bison-man – MUL.GUD.ALIM) என்று அறியப்பட்ட பாபிலோனியர்களால் உடுக் கூட்டத்திற்கு இட்டுச் செல்கிறது. பாபிலோனியர்கள்  சென்டாரஸ் உடுக் கூட்டத்தை (Centaurus constellation)  மனிதனின் தலையுடன் கூடிய  நான்கு கால் காட்டெருமை அல்லது  மனித தலையும் உடலும்  காட்டெருமை அல்லது காளையின் பின்புற கால்களுடன் இணைக்கப்பட்ட ஒரு உயிரினமாகச் சித்தரித்தனர். பாபிலோனியர்கள் இந்த உயிரினத்தைச் சூரியக் கடவுளான உட்டு – ஷமாஷ்  (Utu – Shamash )  உடன் தொடர்புபடுத்தினர்.

காட்டெருமை மனிதன்

படம்: நன்றி https://www.pinterest.at/pin/734649757937219075/

சென்டாரஸ் உடுக் கூட்டத்தின் (Centaurus Constellation), அருகிலுள்ள லூபஸ் (Lupus) உடுக் கூட்டமான முயலைச் (Hare) சென்டார் (Centaur) தன் கூரான் ஈட்டியால் ஆரா (Ara) உடுக் கூட்டத்தின் பலிபீடத்தில் (Altar) தெய்வங்களுக்குப் பலியிடுவதாக அரேபியர்களால் சித்தரிக்கப்படுகிறது. சென்டாரின் முன் கால்கள் வானத்தில் பிரகாசமான இரண்டு நட்சத்திரங்களால் குறிக்கப்படுகின்றன, ஆல்பா மற்றும் பீட்டா சென்டூரி, இவை முறையே ரிகில் கென்டாரஸ் (Rigil Kentaurus), ஹதர்  (Hadar) என்று அழைக்கப்படுகின்றன. இரண்டு நட்சத்திரங்களும் திரிசங்கு அல்லது சதர்ன் கிராஸ் (Southren Cross) உடுத் தொகுப்பின் சுட்டிகளாக செயல்படுகின்றன, இது திரிசங்கு உடுத் தொகுப்பு சென்டாரஸின் பின்புற கால்களுக்குக் கீழ் உள்ளது.

இனி மீண்டும் வானியலுக்கு வருவோம்.

சென்டாரஸ் பதினோரு (14) முக்கிய ஊடுக்கள்கள், ஒன்பது (9) பொலிவான உடுக்கள் மற்றும் பேயர்/ஃபிளாம்ஸ்டீட் பெயர்களைக் (Bayer/Flamsteed designations) கொண்ட அறுபத்தொன்பது (69) உடுக்களைக் கொண்டுள்ளது.

(1) ஆல்பா சென்டாரி  என்ற ரிகல் கென்டாரஸ் (Alpha Centauri – Rigel Kentaurus) அதன் முதல் மிகப் பொலிவான உடு.  ஆல்பா சென்டூரி சூரிய மண்டலத்திற்கு மிக நெருக்கமான நட்சத்திர அமைப்பு. ஆல்பா சென்டூரி அமைப்பில்ஒரு வேளை யாராவது பார்வையாளர்கள் இருப்பார்களேயானால், நாம் பார்க்கும் வானத்தின் அதே உருவத்தை ஆனால் சென்டரஸின் பொலிவான உடுவான ஆல்பா சென்டூரியைத் தவிர்த்து அவர்களும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களின் பார்வையில் காசியோபியா (Cassiopeia constellation) உடுத் தொகுப்பில் நம்முடைய சூரியன் + 0.5 தோற்றப் பொலிவெண் மதிப்புடைய உடுவாகத் தெரியும்.

இது ஒரு மூன்று உடு அமைப்பு (Tri star system).  சூரிய குடும்பத்திற்கு மிக அருகில் உள்ளது.  பூமியிலிருந்து வெறும் 4.365 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள இந்தப் பல்லுறுப்பு உடு அமைப்பில் (multiple star system ),  ஆல்பா சென்டூரி – A (Alpha Centauri A) நிறமாலை வகையில் G 2 V மஞ்சள் வெள்ளை பிரதான வரிசை உடுவாகவும்  ஆல்பா செண்டூரி B  (Alpha Centauri B) நிறமாலை வகை K1V உடுவாகவும் உள்ளன. இந்த நட்சத்திர அமைப்பின் மூன்றாவது உறுப்பினராகக் கருதப்படுவது நிறமாலை M5Ve வகைச் சிவப்பு குள்ள அமைப்பான (Red dwarf system) ஆல்பா சென்டூரி – C  (Alpha Centauri C) என்னும் ப்ராக்ஸிமா சென்டூரி (Proxima Centauri) உடு. இந்த உடுவானது ஆல்பா சென்டூரி A மற்றும் ஆல்பா செண்டூரிசோடியிலிருந்து  சுமார் 0.24 ஒளி ஆண்டுகள்  தொலைவில் அமைந்துள்ளது.  ப்ராக்ஸிமா சென்டூரி உடு அமைப்பு  பூமியிலிருந்து 4.2 ஒளி ஆண்டுகள்  தொலைவில் உள்ளது.  ஆகவே இதுதான் நம் பூமிக்கு மிக அருகில் உள்ள உடு.

இந்த அமைப்பின் பொலிவான அங்கத்தினரான ஆல்பா சென்டூரி  A, இரவு வானத்தில் சுவாதி என்ற ஆர்க்டரஸுக்கு (Arcturus) அடுத்து தனிப்பட்ட வகையில் நான்காவது பொலிவான  உடு. ஆல்பா சென்டூரி B  வானத்தில் 21 வது தனிப்பட்ட வகையில் பொலிவான உடுவாகும். இருப்பினும் இரண்டு உடுக்களையும் ஒரு சேரக் கணக்கில் எடுத்துக் கொண்டால், அவை ஆர்க்டரஸை விடப் பொலிவானவையாக உள்ளன. ஆகவே பொலிவான  உடுக்களின் அமைப்பில் சிரியஸ் (Sirius) மற்றும் அகஸ்தி என்ற கனோபஸுக்கு (Canopus) அடுத்ததாக மூன்றாவது (3) இடத்தில் உள்ளன. இரண்டு உடுக்களுக்கும் ஏறக்குறைய சமவயது. அவை  சுமார் 4.85 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று நம்பப்படுகிறது,  அவை நமது சூரியனுக்கு மிக அருகில் உள்ளன.

24 ஆகஸ்ட் 2016  அன்று  ஆல்பா சென்டூரி பல்லுறுப்பு உடு அமைப்புக்கு (multiple star system) ப்ராக்ஸிமா சென்டூரி b (Proxima Centauri  b) என்ற ஒரு கோள் மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டது.   பூமிக்கு மிக நெருக்கமான புவியொத்த கோளான ப்ராக்ஸிமா சென்டூரி b (Proxima Centauri  bஆல்பா சென்டூரி C உடுவைச் சுற்றி வருவது உறுதி செய்யப்பட்டது. இது பூமியை விட சற்றே பெரியது, மேலும் அதன் வாழக்கூடிய மண்டலத்தில் ப்ராக்ஸிமா சென்டூரியைச் சுற்றி வருகிறது. ப்ராக்ஸிமா செண்டூரி b  வேறுவகையில் ஆல்பா சென்டூரி Cb என்றும் அழைக்கப்படுகிறது. இக் கோளின் மதிப்பிடப்பட்ட நிறை பூமியைப் போல 1.3 மடங்காக உள்ளது. இக் கோள் ஆல்பா சென்டூரி C உடுவைச்  சுமார் 11.2 புவி நாட்கள்  கொண்ட சுற்றுக் காலத்துடன் சுமார் 0.05 வானியல் தொலைவில் (AU) அதாவது 7.5 மில்லியன் கிமீ தூரத்தில் சுற்றி வருகிறது.

மீண்டும் தற்போது கடந்த  2 ஜூன் 2020 அன்று மெக்டொனால்டு வானியல் ஆய்வகத்தில் (McDonald Observatory) உள்ள வானியலாளர்கள் இரண்டாவது கோளை உறுதிப்படுத்தியுள்ளனர். இது பூமியை விட ஏழு (7) மடங்கு பெரியது.  இதற்கு ப்ராக்ஸிமா சென்டூரி c (Proxima Centauri  cஅல்லது ஆல்பா சென்டூரி Cc என்று பெயரிடப்பட்டுள்ளது.

ப்ராக்ஸிமா செண்டூரிக்கான இந்த இரண்டாவது கோள் பூமியை விட மிகப் பெரியது மற்றும்  1,907 நாட்களில் அதனுடைய தாய் உடுவான ப்ராக்ஸிமா சென்டூரியைச் சுற்றி வருகிறது. இது பூமி சூரியனைச் சுற்றி வரும் தொலைவை போல் அதனுடைய உடுவைச் சுமார் 1.5 மடங்கு தூரத்தில் சுற்றுகிறது.  இதனை ஒரு முக்கியமான வேறுபாடு என்று கருத இயலாது என்றாலும் ப்ராக்ஸிமா செண்டூரி ஒரு சிவப்புக் குள்ள உடு ((Red dwarf star). நமது சூரியனை விடச் சிறியது மற்றும் குளிரானது, எனவே அந்த தூரத்தில், கோளானது பூமியை விடக் கணிசமாக அளவுக்குக் குளிராக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். புதிய இந்தக் கோள் குறித்த கட்டுரையை விரிவாகப் பின்னர் எழுதுகிறேன்.

(2) பீட்டா சென்டூரி (β Centauri) என்ற ஹதர் (Hadar) அல்லது ஏஜெனா (Agena) 

பீட்டா சென்டூரி (β Centauri) ஒரு நீல – வெள்ளை ராட்சத உடு (giant star), 348.83 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இதன்  தோற்றப் பொலிவு எண் + 0.6 மதிப்புடையது. இது இரவு வானத்தில் பதினோராவது (11) பொலிவான உடுவாகும். இது நிறமாலை வகுப்பு B1III ச் சேர்ந்தது.

பீட்டா சென்டூரி ஒரு இருமை உடு, பொலிவான கூறிலிருந்து துணை உடுவானது 1.3 வில் விநாடிகளால் (Arc seconds) பிரிக்கப்பட்டுள்ளது. பொவிவான உடு ஹதர் A (Hadar – A) அல்லது பீட்டா சென்டூரி A ஒரு நிறமாலை இருமை உடு (Binary Star). ஹதர் A யானது, 357 நாட்கள் சுற்றுக் காலத்தைக் கொண்ட ஒரு ஜோடி ஒத்த நட்சத்திரங்களைக் கொண்டது. இந்த இரு உடுக்களில் குறைந்தது ஒன்று பீட்டா செஃபி வகை (Beta Cephei type variable) மாறியாக இருக்க வேண்டும். அதன் மேற்பரப்பின் துடிப்புகளின் விளைவாக அதன் பொலிவு  மாறுபடும். ஹதர் B (Hadar – B) முதன்மைச் சோடியை 250 நாட்கள் காலத்தில் சுற்றி வருகிறது.

அடுத்துவரும் உடுக்கள் நமக்கு அத்தனை முக்கியமானவை இல்லை என்றாலும் கட்டுரையின் முழுமைக்காகக் குறிப்பிட்ட சில உடுக்கள் குறித்துக் குறைவான  விவரங்களே தரப்பட்டுள்ளன.

(3) மென்கென்ட் (Menkent) அல்லது ஹரடன் (Haratan) என்னும் தீட்டா சென்டூரி (θ Centauri)

மென்கென்ட் அதாவது சென்டூரின் தோள்  என்று பொருள் தரும் பாரம்பரிய அரபிப் பெயரைக் கொண்ட தீட்டா சென்டாரி சில நேரங்களில் ஹரடன் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு ஆரஞ்சு K – வகை ராட்சத (Giant) உடுவாகும். சுமார் 60.9 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இதனுடைய நிறமாலைப் பிரிவு  K0IIIb. இந்த உடுவின் தோற்றப் பொலிவெண் +2.06.

(4) முஹ்லிஃபைன் (Muhlifain) என்ற காமா சென்டூரி (γ Centauri)

காமா சென்டூரி என்பது ஈருமை உடுவாகும், இது நிறமாலை வகை A0 ஐச் சேர்ந்த இரண்டு உடுக்களைக் கொண்டது, ஒவ்வொன்றின் தோற்றப் பொலிவெண் மதிப்பு +2.9. இந்த அமைப்பு பூமியிலிருந்து 130 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது, மேலும் இது 2.2 அளவைக் கொண்டுள்ளது. இரண்டு உடுக்களின் இணைந்த தோற்றப் பொலிவெண்ணின் மதிப்பு +2.2.  ஒன்றையொன்று 83 வருடங்களுக்கு ஒரு முறை   சுற்றி வருகின்றன.

(5) எப்சிலன் சென்டூரி (ε Centauri) 

எப்சிலன் சென்டூரி சுமார் 380 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது  நிறமாலைப் பிரிவு  B1III ஐச் சேர்ந்த ஒரு நீல – வெள்ளை ராட்சத உடுவாகும்.. இது ஒரு பீட்டா செஃபி (Beta Cephei type variable)  வகை மாறி நட்சத்திரம். அதன் மேற்பரப்பின் துடிப்புகளின் விளைவாக பொலிவில் மாறுபாடுகளை வெளிப்படுத்துகிறது. பொலிவு மதிப்பு 2.29 முதல் 2.31 வரை மாறுபடும். இதன் சராசரி தோற்றப் பொலிவின் மதிப்பு 2.29    .

(6) ஈட்டா சென்டூரி (η Centauri)

ஈட்டா சென்டாரி 30 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள தோற்றப் பொலிவெண் மதிப்பு + 2.33  கொண்டதோர் உடுவாகும். ஈட்டா சென்டூரி மிகவும் சூடான  B வகைக் குள்ளன் (Dwarf), 20 மில்லியன் ஆண்டுகளுக்கு குறைவான வயதுடையது. இது ஒரு B (e) வகையான நட்சத்திரம், அதாவது  மாறக் கூடிய நிறமாலை வரிக் கோட்டு உமிழ்வை அதன் ஹைட்ரஜன் நிறமாலைக் கோடுகளில் வெளிப்படுத்துகிறது. இது காமா காசியோபியா (Gamma Cassiopeiae type variable) வகை மாறி அல்லது கூடுவகைஉடு என்றும் வகைப்படுத்தப்படுகிறது. இது தனது நடுக்கோட்டில் (equator) அதைச் சுற்றியுள்ள வாயு வட்டுடன் வேகமாகச் சுழலும் உடு என்று சொல்லலாம். இந்த உடு நடுக்கோட்டில்  வினாடிக்கு 310 கிலோமீட்டர் வேகத்துடன் சுழலும்.  அதன் சுழற்சிக் காலம் ஒரு நாளுக்கும் குறைவாகவே இருக்கும்.

(7) அல்னைர் (Alnair) என்னும் ஜீட்டா சென்டூரி (ζ Centauri) 

தோற்றப் பொலிவெண் மதிப்பு +2.55 கொண்டஜீட்டா சென்டூரி ஒரு நிறமாலை இருமை உடுவாகும். இது சுமார் 385 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. உடுவின் பாரம்பரிய பெயர், அல்னைர் (Alnair), அரபு சொற்றொடரான ​​நயீர் பதான் குவாண்ட்ரிஸிலிருந்து (Nayyir Badan Qanṭūris) பெறப்பட்டது, இதன் பொருள் “சென்டாரின் உடலின் பொலிவானஉடு” (bright star of the body of the Centaur) என்பதாகும். அல்னெய்ரின்  நிறமாலைப் பிரிவு B 2.5 IV . இது எட்டு நாட்களுக்கு சற்று அதிகமான சுற்றுக் காலத்தைக் கொண்டுள்ளது.

(8) மா வீ  (Ma Wei)  என்ற டெல்டா சென்டூரி (δ Centauri) 

டெல்டா சென்டூரி சுமார் 395 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது காமா காசியோபியா வகை மாறி (Gamma Cassiopeiae type variable) என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பொலிவு 2.51 மற்றும் 2.65 க்கு இடையில் மாறுபடுகிறது. ஒரு B(e) வகையான உடு. B – வகையைச் சேர்ந்த நட்சத்திரமான இது B 2 IV வகுப்பைச் சேர்ந்தது, மா வீ என்ற பெயர் சீனப் பெயரான மா வீ சான் (Ma Wei san) என்பதிலிருந்து வந்தது. இதன் பொருள் “குதிரையின் வாலின் மூன்றாம் நட்சத்திரம் (Third Star of Horse’s Tail). இது டெல்டா செண்டூரி G மற்றும் ரோ (Rho) சென்டூரியுடன் சேர்ந்து ஒரு வானியல் தோற்றக் (asterism) குறிப்பைத் தருகிறது.

(9) நு சென்டூரி (ν Centauri) 

நு சென்டூரி பூமியிலிருந்து சுமார் 475 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. நட்சத்திரம் பீட்டா செஃபி வகை மாறி என வகைப்படுத்தப்பட்டுள்ளது, அதன் மேற்பரப்பின் துடிப்புகளுக்கு ஒளிர்வு ஏற்ற இறக்கங்கள் உள்ளன. என்பது நீல – வெள்ளைத் துணைக் குள்ளன் (sub giant) நிறமாலை வகை B 2 IV ஆகும்.

இது ஒரு சுழலும் நீள்வட்ட மாறி நட்சத்திரம் (rotating ellipsoidal variable star) என்றும் வகைப்படுத்தப்படுகிறது. இதன் சராசரி தோற்றப் பொலிவெண் 3.41 ஆகும். இதன்பொலிவு 3.38 முதல் 3.41 வரை 2.62 நாட்கள் மாறுபடும். இது ஒரு நெருக்கமான இருமை உடு. இதன் கூறுகள் நீள்வட்டமாக உள்ளன, பார்வையாளருக்கு தெரியும் ஒளி உமிழும் பகுதியின் அளவின் மாற்றங்களின் விளைவாகப் பொலிவில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன. கன்னி ராசியில் பிரகாசமான நட்சத்திரமான சித்திரையும் (Spica) வானத்தில் பிரகாசிக்கும் சுழலும் நீள்வட்ட நட்சத்திரமாகும்.

(10) கே குவான் (Ke Kwan) என்னும் கப்பா சென்டூரி (κ Centauri)   

கப்பா சென்டூரி சுமார் 540 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு இருமை உடு.  இது நிறமாலை வகை B 2 IV க்கு உரியது. பொலிவான கூறு ஒரு நீல-வெள்ளை  B – வகை துணை இராட்சத (sub giant) உடு ஆகும். இது தோற்றப் பொலிவெண் + 3.13 ஆகும். இதன் ஒரு நிறமாலைத் துணை 0.12 வில் விநாடிகள் (arc seconds) தொலைவில் அமைந்துள்ளது.

கப்பா சென்டாரி சில சமயங்களில் அதன் சீனப் பெயரான கே குவான் (Ke Kwan) என்பவரால் அறியப்படுகிறது, இது கு குன் சான் (Qí Guān sān) என்ற சொற்றொடரிலிருந்து பெறப்பட்டது, இதன் பொருள் மேன்மை பொருந்திய காவலர்களின் மூன்றாவது உடு (Third Star of Imperial Guards) என்பதாகும்.

இது தவிர 225 ஆழ் வான் பொருட்கள் (Deep Sky Objects) சென்டரஸ் உடுத் தொகுப்பில் காணப்படுகின்றனஆழமான வானப் பொருள்கள்  அல்லது ஆழ் வான் பொருட்கள் என்பவை நமது சூரிய மண்டலத்திற்கு வெளியே இருக்கும் வானப் பொருள்கள். ஆழமான வான பொருட்களின் மூன்று முக்கிய வகைகள் உள்ளன. அவை நெபுலாக்கள் (Nebulae),  திறந்த மற்றும் கோளக உடுக் கொத்துகள் (Open and Globular star clusters ) மற்றும் விண்மீன் திரள்கள் (Galaxies) ஆகும்அவற்றில் 20 ஆழ் வான் பொருட்கள் பொலிவானவை. அவற்றின் பட்டியல் கடைசியில் தரப்பட்டுள்ளது.

நெபுலா என்பது விண்வெளியில் தூசி மற்றும் வாயுவால் ஆன பெரிய மேகம். சில நெபுலாக்கள் (ஒன்றுக்கு மேற்பட்ட நெபுலாக்கள்) ஒரு சூப்பர்நோவா போன்ற இறக்கும் நட்சத்திரத்தின் வெடிப்பால் வெளியேற்றப்படும் வாயு மற்றும் தூசியிலிருந்து வருகின்றன.

திறந்த மற்றும் கோளக உடுக் கொத்துகள் (Open and Globular star clusters ) 

திறந்த உடுக் கொத்துகள்  (Open star clusters ) கோளக கொத்துக்களை (Globular star clusters ) விட மிகவும் வயதிலும், எண்ணிக்கையிலும் குறைந்தவை. அவை தூசி மற்றும் வாயு மேகங்களிலிருந்து உருவாகும் புதிய உடுக்களின் சமீபத்திய பிறப்பிடங்களாகும். மேலும் அவை நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான உடுக்களை மட்டுமே கொண்டிருக்கின்றன. ஒரு திறந்த உடுக் கொத்தில் உள்ள உடுக்கள்  அனைத்தும் ஒரே பொருளிலிருந்து ஒன்றாக உருவாகியிருப்பினும் அவை காலப்போக்கில் ஈர்ப்பு விசையுடன் பிணைக்கப்பட்டு பரவுவதில்லை. ஆகவே அவற்றின் உடுக்கள் வெகுதூரம் சிதறிக் கிடக்கின்றன. அவை ஈர்ப்பு விசையில் பிணைக்கப்படாததால், திறந்த உடுக் கொத்துகள் சீரற்ற மற்றும் ஒழுங்கற்ற வடிவங்களைக் கொண்டிருக்கலாம். அவை நமது  பால்வீதி உடுத் திரளின் தளத்தில், உள்ள வாயு மற்றும் தூசி இருக்கும் சுழல் கரங்களில் காணப்படுகின்றன. திறந்த உடுக் கொத்துகள் இளமையானவையாகவும், குறைந்த ஆயுட்காலம் கொண்டவையாக இருப்பதால், வானியலாளர்கள் நமது விண்மீன் மண்டலத்தில் பொருட்கள் எவ்வாறு பரவுகிறது என்பதற்கான இயக்கவியலை அறியவும் மற்றும் இளம் உடுக்களையும், உடு உருவாக்கத்தின் செயல்முறைகளையும் ஆய்வு செய்யவும் இவற்றைப் பயன்படுத்துகின்றனர்.

கோள உடுக் கொத்துகள் என்பவை வயதான உடுக்களின்  கொத்துக்கள். இவை ஈர்ப்பு விசையால் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. இந்தக் கொத்துகள் பொதுவாகத் தோராயமாக கோள வடிவமாக இருக்கும், இவற்றின் எண்ணிகை சில ஆயிரம் முதல் ஒரு மில்லியன் நட்சத்திரங்கள் வரை எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆகவே அவை மேலே, கீழே, மற்றும்  தட்டையான, வட்டு வடிவ பால்வீதியின் தளத்தில் பரவியுள்ளன. கோளக உடுக் கொத்துகளின் வயது பொதுவாகச் சுமார் 13 பில்லியன் ஆண்டுகள் என்ற அளவில் உள்ள பழம் பெருச்சாளிகள். அதாவது கோளக உடுக் கொத்துகள் நமது பால்வழி உடுத் திரளின்  மிகப் பழமையான சில உடுக்களைக் கொண்டுள்ளன. கோளக உடுக் கொத்துகள் உருவாகும்போது பால்வழி உடுத் திரள் எப்படி இருந்தது என்ற நமது  உடுத் திரளின் ஆரம்பகால வரலாற்றை அறிந்து கொள்ள. வானியலாளர்கள் கோளக உடுக் கொத்துகளைப் பெரிதும் பயன்படுத்துகிறார்கள்.

எளிய வார்த்தைகளில் சுருக்கமாகச் சொல்லப் போனால் திறந்த கொத்துகள் என்பவை இளைஞர் விடுதிகள் (Youth Hostels). கோளகக் கொத்துகள் முதியோர் இல்லங்கள் (Old age homes). வயதானவர்களைக் கூட்டமாக அதிக எண்ணிகையில் நாம் பொதுவாக கோவில் போன்ற வழிபாட்டுத் தலங்களில், ஆன்மீகக் கூட்டங்கள் நடக்கும் இடங்களில் காண முடியும். அவர்களைக் கஃபே காஃபி டே Cafe coffee Day) அல்லது பப்களில் (Pub) காண இயலாது. அதே போல் இளைஞர்களைக் கூட்டமாகச் சத்ஸங்கங்களிலோ அல்லது ஆலயங்களிலோ காண்பது அரிது. ஆனால்அவர்களைச் சிறு சிறு குழுக்களாகக் கஃபே காஃபி டே Cafe coffee Day) அல்லது பப்களில் (Pub) காண  முடியும். அது போலக் கோளக உடுக் கொத்துகள் நமது உடுத் திரளின் உப்பலான (Bulged) ஒளிவட்ட(Halo) நடுப்பகுதியில் காணப்படுகின்றன. பால்வீதி உடுத் திரளின் தளத்தில், உள்ள வாயு மற்றும் தூசி இருக்கும் சுழல் கரங்களில் திறந்த உடுக் கொத்துகள் காணப்படுகின்றன.

உடுத் திரள்கள்  என்பவை உடுக்கள், தூசி மற்றும் வாயுக்களின் மிகப்பெரிய தொகுப்பாகும். உடுத் திரள்கள் பொதுவாகப் பல மில்லியனிலிருந்து ஒரு டிரில்லியனுக்கும் அதிகமான உடுக்களைக் கொண்டிருக்கின்றன. இவற்றின் அளவு சில ஆயிரம் முதல் பல லட்சம் ஒளி ஆண்டுகள் வரை இருக்கும். அண்டத்தில் நூற்றுக்கணக்கான பில்லியன் உடுத் திரள்கள் உள்ளன. உடுத்திரள்கள் பல அளவுகளில், வடிவங்கள் மற்றும் பொலிவுகளில் காணப்படுகின்றன. உடுக்களைப் போலவே இவையும் தனியாகவும், சோடிகளாகவும் அல்லது கொத்துகள் எனப்படும் பெரிய குழுக்களாகவும் காணப்படுகின்றன. சுருள் வடிவ, நீள்வட்ட மற்றும் ஒழுங்கற்ற உடுத் திரள்கள் என்று அடிப்படையாக மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

(1) IC 2944 லாம்டா சென்டூரி நெபுலா (Lambda Centauri Nebula)

(2) NGC 3766 பேர்ல் கொத்து – திறந்த உடுக் கொத்து (Pearl Cluster – Open Cluster)

(3) NGC 5139 ஒமேகா சென்டூரி – கோளக உடுக் கொத்து (Omega Centauri – Globular Cluster)

(4) NGC 5138 – திறந்த உடுக் கொத்து (Open Cluster)

(5) NGC 5662 – திறந்த உடுக் கொத்து (Open Cluster)

(6) NGC 5460 – திறந்த உடுக் கொத்து (Open Cluster)

(7) NGC 5281 – திறந்த உடுக் கொத்து (Open Cluster)

(8) NGC 5316 – திறந்த உடுக் கொத்து (Open Cluster)

(9) NGC 5617 – திறந்த உடுக் கொத்து (Open Cluster)

(10) NGC 5128 சென்டரஸ் -A (Centaurus A) – இருகுவி வில்லை வடிவ உடுத் திரள் ( Lenticular Galaxy)

(11) NGC 3680 – திறந்த உடுக் கொத்து (Open Cluster)

(12) NGC 5606 – திறந்த உடுக் கொத்து (Open Cluster)

(13) NGC 3918 –  கோள் நெபுலா (Planetary Nebula)

(14) NGC 3960 – திறந்த உடுக் கொத்து (Open Cluster)

(15) NGC 5286 – கோளக உடுக் கொத்து (Globular Cluster)

(16) NGC 4852 – திறந்த உடுக் கொத்து (Open Cluster)

(17) NGC 5168 – திறந்த உடுக் கொத்து (Open Cluster)

(18) NGC 4230 – திறந்த உடுக் கொத்து (Open Cluster)

(19) NGC 5102 – நீள்வட்ட/ சுருள் உடுத்திரள் (Elliptical/Spiral Galaxy)

(20) IC 4291 – திறந்த உடுக் கொத்து (Open Cluster)

மீண்டும் சந்திப்போம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.