Tag: கவிஞர்.காவிரிமைந்தன்

  • பருவம் எனது பாடல் …..

    — கவிஞர் காவிரிமைந்தன்

     

    பருவம் எனது பாடல் … – ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்காக – கவிஞர் வாலியின் வரிகள்!!

     

    பருவம் எனது பாடல்.. இப்படத்தில் முதல் பாடல்! முத்தான பாடல்! குழுவினர் நடனத்தோடு அந்தக் குதூகலம் அரங்கேறுகிறது! மாடமாளிகையின் மைய மண்டபம்.. சித்திரம்போல் எழுதிவைத்த சிங்காரியின் வருகையை கலைநுணுக்கங்களோடு கண்ணுக்கு விருந்தாக்கிப் படைக்கிறது! இயக்குனர் பி.ஆர்.பந்துலுவின் கற்பனை காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

    ஆம்.. அதோ வருகிறாள் கதையின் நாயகி.. அறிமுகக் கட்டத்தை இப்படி ஆராதிக்க ஒரு கவிஞனால் மட்டுமே முடியும் என்று கருதிதான் பாடல்காட்சியாக அமைக்கப்பட்டிருக்கிறது. வரிகளை வரிந்து கட்டிக்கொண்டு எழுதியிருக்கிறார் கவிஞர் வாலி வண்ணத்தமிழில் வசந்தவிழா எடுக்க.. எண்ணங்களில் கோலம்வரைந்த இயக்குனர் கைவண்ணம் நம் கண்களில் விரிகிறது! அழகு மயிலொன்று ஆடிவருகிறது!

    பருவம் எனது பாடல்..
    பார்வை எனது ஆடல்..
    கருணை எனது கோயில்..
    கலைகள் எனது காதல்!

    முதல் நான்கு வரிகளுக்கு முத்திரை பதிக்கும் காட்சிப்படிமங்கள்!

    கன்னித்தீவின் இளவரசி.. கட்டழகுப் பெட்டகமாய்.. கலைகளையெல்லாம் கற்றுக் காத்திருக்கிறாளோ.. கதையின் நாயகன் வருகைக்காக!

    50 வருடங்களுக்குப் பிறகும் அன்று பூத்தமலர்போல வாடாமல் இருக்கிற பவளமல்லிகை.. தமிழ்த்திரையிசைப் பாட்டுச்சுரங்கத்துள் கொட்டிக்கிடக்கும் முத்துமாலை! காதுகளை மட்டுமல்ல! இதயங்களையும் கவனமாக வைத்துக் கேளுங்கள்! எப்படியும் களவாடப்பட்டிருக்கக்கூடும் உங்கள் இதயம்!

    பருவம் எனது பாடல்…

    பருவம் எனது பாடல்
    பார்வை எனது ஆடல்
    கருணை எனது கோயில்
    கலைகள் எனது காதல்
    கருணை உனது கோயில்
    கலைகள் உனது காதல்

    இதயம் எனது ஊராகும்
    இளமை எனது தேராகும்
    மான்கள் எனது உறவாகும்
    மானம் எனது உயிராகும்
    மான்கள் உனது உறவாகும்
    மானம் உனது உயிராகும்
    தென்றல் என்னைத் தொடலாம் –
    குளிர்த்திங்கள் என்னைத் தொடலாம்
    மலர்கள் முத்தம் தரலாம் –
    அதில்மயக்கம் கூட வரலாம்
    (பருவம்)

    சின்னஞ்சிறிய கிளி பேசும்
    கன்னங்கரிய குயில் கூவும்
    பறவையினங்கள் துதி பாடும்
    பாவை எனக்குத் துணையாகும்
    பறவையினங்கள் துதி பாடும்
    பாவை உனக்குத் துணையாகும்
    பழகும் விதம் புரியும் –
    அன்பின்பாதை அங்கு தெரியும்
    பயணம் அதில் தொடரும் –
    புதுவாழ்க்கை அங்கு மலரும்

     

     

     

     

     

    Share
  • மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாடவேண்டும்!

    -கவிஞர் காவிரிமைந்தன்

     

    திரு. பி.பி. ஸ்ரீனிவாஸ் குரலில் மெளனத்தின் ஆலாபனை

    எண்ணிலடங்கா ஏடுகளில் எத்தனையோ கவிதைகள்

    எழுதிக் குவித்த கவிஞர்களின் எண்ணிக்கையும் இங்கு அதிகம்!

    அன்றுமின்றும் பெண்ணைப் பற்றிப் பாடாத கவிஞன் யாரிங்கே?

    சொல்லும் பொருளும் துள்ளி வருவது பெண்ணைப்பற்றி எழுதும்போதுதானே!

    கண்களில் தோன்றுமிந்த காந்த மின்னல்..சில..பல..

    எண்ணப் பரிமாறல்களால் காதல் ஆகிவிடும் விந்தை!

    தன்னுள் ஏற்பட்ட தாக்கத்தை மொழிபெயர்த்தால்

    தானாக மலர்ந்திடுமே கவிதை!  பூங்கவிதை!!

    தொன்று தொட்ட தமிழ்க்குடியில் பிறந்தமகள்!

    தாய்வீட்டுச் சீதனமாய் நான்குவகை குணங்கள்!

    எழில்சிந்தும் இளமையின் ஏற்றமிகு வதனம்!

    இருந்தாலும் ஓர் குறைதான் உண்டு அந்த ஊமைப்பெண்ணில்!!

    இவள் கண்ட மணவாழ்க்கை இனித்திடுமா எனும்கேள்வி

    மனதினிலே தாங்கியபடி புகுகின்றாள் முதலிரவு!

    கரம்பற்றும் நாயகனைத் தினம் அழைக்க வழிகளில்லை!

    சரம்சரமாய் நீர்விழுமே!  இருகண்ணில் இருந்தபடி!!

    இதுதான் காட்சியென..பாடலொன்று வேண்டுமெனக் கவிஞர் பணிக்கப்படுகிறார். கதாநாயகன் பாடும் பாடல் நாயகிக்கு இதமாக இருக்க வேண்டும்.  இன்னும் சொல்லப்போனால் அவள் மனம் காயப்பட்டுவிடக் கூடாதென..எத்தனை லாவகமாய்..கவனமாய்..வார்த்தைகளைச் சித்திரம் போல் செதுக்கியிருக்கிறார்!

    மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்

    நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்

    மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்

    நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்

    அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும் தேன்

    ஆறு போலப் பொங்கி வரவேண்டும் வரவேண்டும்

    அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும் தேன்

    ஆறு போலப் பொங்கி வரவேண்டும்

    அங்கம் தழுவும் வண்ணத் தங்க நகைபோல் – என்னை

    அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும் – என்னை

    அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும் ம்ம்..

    இதுவரை எழுதிய வரிகளிலும் மென்மை நிறைந்திருக்கிறது.  எனினும் இனிவரும் வரிகளைப் பாருங்கள்..இப்படி எழுதக் கண்ணதாசன் மட்டுமே வர வேண்டும்!!

    முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்

    வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும் மொழி வேண்டும்

    முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்

    வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்

    முன்னம் இருக்கும் இந்தச் சின்ன முகத்தில் பல

    மொழிகள் பாடம் பெற வரவேண்டும் பல

    மொழிகள் பாடம் பெற வரவேண்டும் ம்ம்..

    இவளது முகத்தில் தவழும் மெளன மொழியை அறிந்துகொள்ளப் பல மொழிகளும் அவளிடம் வரவேண்டுமாம்!  பெண்மையின் மென்மையை – கண்ணதாசனே எத்தனை அழகாய் ஆராதித்திருக்கிறாய்? கவிதையா.. உணர்ச்சியா..?! உன்னால்தான்  இப்படி மொழிபெயர்ப்பு நடத்த முடிகிறது!  உன்னால்தான் திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்கள் முழுநிலவாய் ஜொலிக்கின்றன! உள்ளத்தின் கதவுகள் எல்லாம் உன் கவிதை பெறவே திறந்து கொண்டன!

    திரைப்படம்: கொடிமலர்                                                                                          

    பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்                                              

    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

    இசை:  விஸ்வநாதன்  ராமமூர்த்தி     

    http://www.youtube.com/watch?v=PFO5EbeDm5I

    mouname-1

    மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்

    நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்

    மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்

    நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்

     

    அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும் தேன்

    ஆறு போலப் பொங்கி வரவேண்டும் வரவேண்டும்

    அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும் தேன்

    ஆறு போலப் பொங்கி வரவேண்டும்

    அங்கம் தழுவும் வண்ணத் தங்க நகைபோல் – என்னை

    அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும் – என்னை

    அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும் ம்ம்..

     

    மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்

    நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்

     

    முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்

    வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும் மொழி வேண்டும்

    முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்

    வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்

    முன்னம் இருக்கும் இந்தச் சின்ன முகத்தில் பல

    மொழிகள் பாடம் பெற வரவேண்டும் பல

    மொழிகள் பாடம் பெற வரவேண்டும் ம்ம்..

     

    மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்

    நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்

    எனக்காக இப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் பாடி என்னை மகிழ்வித்த ராகப்பிரவாகம் சுந்தருக்கு என் உள்ளத்து நன்றிகள்!

    http://www.youtube.com/watch?v=PFO5EbeDm5I

    Share
  • இறைவா உன் மாளிகையில்!…

     

    கவிஞர் காவிரிமைந்தன்

     

    kavingar vaali

     

     

     

     

     

     

     

    இறைவா உன் மாளிகையில்…

     

    வியத்தகு நிகழ்வொன்று தமிழகத்தில் நிகழ்ந்தது.  அதுவும் திரைப்பாடல் ஒன்றில் எழுதிய வரிகள் மக்களின் பிரார்த்தனை கீதமாக முழங்க ஒரு தலைவனின் உயிருக்காக ஜாதி, மதங்கள் கடந்து மக்கள் ஒருமித்த வகையில் கடவுளிடம் கருணை மனு போட்டனர்.  இதுவெல்லாம் சாத்தியமா என்று எண்ணிப்பார்த்தால் வாய்ப்பில்லை என்பதுவே அனைவரின் பதிலாகும்.  ஆனால்,  நடந்தது தமிழ் நாட்டில்.. ஏழைகளின் பங்காளன், தாய்மார்களின் தலைமகன், எங்கவீட்டுப் பிள்ளை, வாத்தியார்.. மக்கள் திலகம்., பொன்மனச்செம்மல், புரட்சி நடிகர் என்றெல்லாம் புகழினை எட்டியதோடு.. மட்டுமின்றி மக்கள் நெஞ்சிலும் நிலைத்து வாழ்கின்ற பேறு பெற்ற எம்.ஜி.ஆர். அவர்கள் – திரைத் துறையில் தனக்கென்று தனியிடம் பெற்று திகழ்ந்ததோடு.. அரசியலிலும் ஈடுபட்டு தமிழகத்தின் தனிப்பெரும் தலைவனாக உயர்ந்து – முதல் அமைச்சராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் பதவி வகித்தமை உலக வரலாற்றில் ஒரு சகாப்தம்.

     

    எம்.ஜி.ஆர். அவர்களின் 100வது திரைப்படம் ஒளிவிளக்கு..  பாத்திரப்படி கள்வனாக இருந்தாலும் – ஏழைகளுக்கு உதவுகின்றவராக – ஊரில் பரவிய கடும் நோயின் காரணமாய்.. அனைத்து மக்களும் ஊரைவிட்டு ஓடிடும்போது.. உடல்நிலை குன்றிய நிலையில் உள்ள ஒரு விதவையை மட்டும் வெறுத்து ஒதுக்கி.. அவ்வீட்டிலேயே விட்டுச்செல்லும் காட்சியில் கள்வனாக அவ்வீட்டில் திருடவந்த கதாநாயகன் அவளைக் காப்பாற்றி புகலிடம் கொடுக்கிறான்.

     

    பின்னர் ஒரு கட்டத்தில் ஏழைக்குடிசைகள் தீக்கிரையாகையில் – ஒரு குழந்தையைக் காப்பாற்றிடும்போது தன் உடல் முழுவதும் தீயால் பாதிக்கப்பட்டு  உயிருக்குப் போராடும் உணர்வுமிகுந்த கட்டத்தில் .. அவனால் பயன்பெற்ற அனைத்து மக்களும் ஒருமித்த குரலில் அவனது உயிருக்காக கடவுளிடம் வேண்டுவதை காட்சியமைப்பு..  தனக்கு பாதுகாப்பு தந்து காத்த அந்த நாயகனை எமனின் பிடியிலிருந்து காப்பதற்காக அந்த நாயகி பாடுகின்ற பாடல்.  வாலி அவர்களின் இந்த வரிகள் தமிழகத்தின் ஒரு வரலாற்றுப் பதிவன்றி வேறென்ன?

     

    வார்த்தைகளை கவிஞர் வாலி அவர்கள் வரைந்தெடுத்தபோது ஒவ்வொரு வரியும்.. ஒவ்வொரு வார்த்தையும் என்னை எடுத்துக் கொள்.. என்னை எடுத்துக் கொள் என்று சொல்லியதோ..  உள்ளம் உருக.. மெல்லிசை மன்னர் அமைத்த இசையில்  இது வெறும் பாடல் அல்ல..  பி. சுசீலாவின் குரலில் இழையோடும் சோகம்.. நம் இதயங்களை நனைக்கிறதே!

     

    பிற்கால வரலாற்றின் முன்பதிவு என்பதை சூசகமாய் சொல்லி வைத்தாரோ?

     

    இறைவா உன் மாளிகையில்

    எத்தனையோ மணிவிளக்கு

    தலைவா உன் காலடியில்

    என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு

    நம்பிக்கையின் ஒளிவிளக்கு

    ஆண்டவனே உன் பாதங்களை நான்

    கண்ணீரில் நீராட்டினேன் இந்த

    ஓருயிரை நீ வாழவைக்க இன்று

    உன்னிடம் கையேந்தினேன் முருகையா

    ஆண்டவனே உன் பாதங்களை நான்

    கண்ணீரில் நீராட்டினேன் இந்த

    ஓருயிரை நீ வாழவைக்க இன்று

    உன்னிடம் கையேந்தினேன்

    பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்

    என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்

    உள்ளமதில் உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை

    விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்?

    ஆண்டவனே உன் பாதங்களை நான்

    கண்ணீரில் நீராட்டினேன் இந்த

    ஓருயிரை நீ வாழவைக்க இன்று

    உன்னிடம் கையேந்தினேன் முருகையா

    மேகங்கள் கண் கலங்கும் மின்னல் வந்து துடிதுடிக்கும்

    வானகமே உருகாதோ வள்ளல் முகம் பாராமல்

    உன்னுடனே வருகின்றேன் என்னுயிரைத் தருகின்றேன்

    மன்னனுயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு

    இறைவா நீ ஆணையிடு ஆணையிடு

     

    http://www.youtube.com/watch?v=iwh71IiRVLQ

     

    பாடல்: இறைவா உன் மாளிகையில்

    திரைப்படம்: ஒளிவிளக்கு

    பாடியவர்: பி. சுசீலா

    இயற்றியவர்: கவிஞர் வாலி

    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

    ஆண்டு: 1968

     

    Share
  • எளியோரைத் தாழ்த்தி!…

    கவிஞர் காவிரிமைந்தன்

     

    எளியோரைத் தாழ்த்தி.. வலியோரை வாழ்த்தும்….

    (கவிஞர். கு.ச.கிருஷ்ணமூர்த்தி)

    ஏழைச் சொல் அம்பலத்தில் ஏறாது என்பது பழமொழி.  இந்த உலகத்தில் குறிப்பாக மனித குலத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் – ஏழை – பணக்காரன் – ஜாதிப் பிரிவுகள் மேலோர் கீழோர் என்கிற வர்க்கபேதங்கள் வகுத்த வைத்த பாவிகள் சுயநலம்தேடி சமுதாயத்தில் உலவும் பேய்கள் – இவர்களால் ஏழை வர்க்கம் இன்னுமின்னும் இன்னல்களுக்கு ஆளாவதும் வசதியுள்ளவர்கள் மட்டுமே வாழத்தக்கதாய் இந்த உலகம் மாறிவருவதும் கொடுமையென கொதித்தெழும் கவிஞரின் நெஞ்சம் வடித்த பல்லவியைப் பாருங்கள்!

    வஞ்சம், சூது, களவு இவைகளால் ஆட்படும் இதயத்தல் பொங்கிவரும் உணர்வுகளை கவி வடிவம் தந்திருக்கிறார் கவிஞர். கு.ச.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.

    தடைகள்மீறி நடைபோட எண்ணும் எழுவததைக்கூட வரிகளில் பதிய வைத்துள்ள பாங்கு இதோ..

    டி.எம்.செளந்திரராஜன் அவர்களுடன் பாலசரஸ்வதி இணைந்து பாடிய பாடல்!  கே.வி.மகாதேவன் இசையமைப்பில் கவிஞர் கு.ச.கிருஷ்ணமூர்த்தியின் பொன்னெழுத்துக்கள் மின்னும் பல்லவியும் தொடரும் சரணங்களும் பாத்திரப்படைப்பாய் கவிஞன் கூடுவிட்டு கூடு பாய்ந்து எழுதியதை பறைசாற்றுகிறது!

    அர்த்தமுள்ள பாடல்கள் அன்றைக்கு எழுதப்பட்டவையாக இருந்தாலும் காலங்களைக் கடந்தும் ஏதோ கல்வெட்டுக்களாய் பொறிக்கத்தக்கதாய் முத்தான வரிகளைத் தாங்கியிருப்பதால்.. இப்பாடல்களின் ஆயுசு அதிகமென்பதில் ஆச்சரியமில்லை!

    மானுட தர்மம் என்ன சொல்கிறது என்று பார்க்கும்போது நிச்சயமாக ஏழையை அது கைவிடுவதில்லை.. மாறாக நீதியின் குரலாய் எழும்பி இந்த நித்திலம் முமுவதும் ஒலிக்கிறது!

    எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்

    உலகே உன் செயல்தான் மாறாதா

    !

    எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்

    உலகே உன் செயல்தான் மாறாதா

    எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்

    உலகே உன் செயல்தான் மாறாதா

    பரிதாபம் நெஞ்சில் சிறிதேனும் இல்லா

    படுபாவியால் வாழ்வுபறி போவதோ

    பரிதாபம் நெஞ்சில் சிறிதேனும் இல்லா

    படுபாவியால் வாழ்வு பறி போவதோ

    அறியாத நங்கை எனதாசை தங்கை

    கதிஏதும் காணாமல் மனம் நோவதோ

    அறியாத நங்கை எனதாசை தங்கை

    கதிஏதும் காணாமல் மனம் நோவதோ

    எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்

    உலகே உன் செயல்தான் மாறாதா

    சிறகே இல்லாத கிளிபோல ஏங்கி

    உனைக் காணவே என் உளம் நாடுதே

    சிறகே இல்லாத கிளி போல ஏங்கி

    உனைக் காணவே என் உளம் நாடுதே

    பறந்தோடி வந்துன் குறைதீர்க்க என்னை

    சிறைக்காவல் இங்கே தடை போடுதே

    பறந்தோடி வந்துன் குறைதீர்க்க என்னை

    சிறைக்காவல் இங்கே தடைபோடுதே

    எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்

    உலகே உன் செயல்தான் மாறாதா

    எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்

    உலகே உன் செயல்தான் மாறாதா

     

     

    Share
  • முத்தான முத்தல்லவோ!…

    கவிஞர் காவிரிமைந்தன்

    முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்தமுத்தல்லவோ

    அன்று மலர்ந்த பாடல்கள் அத்தனையும் மனித வாழ்க்கையோடு ஒன்றிக்கிடந்தவை.  அதனால்தான் மனம் இன்னும் அப்பாடல்களை அசைபோட்டுக் கொண்டுள்ளது.  பிறப்பு முதல் நடப்புகள் அத்தனையையும் தன்னுள் கொண்டு தளிர்நடை போடும் பாடல்கள் இன்பரசம் ஊட்டும் வகையில் இன்றும் இதயம் தொடுகின்றன.  காற்றிலே மிதந்துவரும் அந்த கானங்களைக் கேட்க பிரியப்படுகிறோமே ஏன்?

    ஓரு திரைப்படம் எடுக்கப்படுகின்ற தருணத்தில் பாடல்கள் அமைவது பல்வேறு சூழல்களை உள்ளடக்கிய விஷயம்.  கவிஞரின் கைவண்ணம் அந்தப் பாடல் காட்சிக்கேற்றவாறு.. கதைக்கருவை பிரதிபலிக்க வெளிப்படுவது சிறப்பு!  இதோ.. இந்தப் பாடல்..  இன்று மதியம் வேண்டும் இரண்டு மணிக்கு என்று முன்பகல் 12மணியளவில் தெரிவிக்கப்பட்டது.  மெல்லிசை மன்னர் கவிஞரை அழைத்து அவசரத்தை வலியுறுத்த.. அம்..என்னும் முன்னும் உம் என்னும் முன்னும் வார்த்தைகள் வந்து விழும் என்று சொல்லப்படும் இரட்டையர்கள்.. கண்ணதாசன் விஸ்வநாதன் கூட்டணியில் வந்துதிர்த்த முத்தான பாடலிது!

    தன் வாழ்க்கையின் கடைசி நாட்களை கணக்கிட்டுக் கொண்டிருக்கும் சிறுவயது பெண்ணுக்கு .. பிறந்தநாள்!  எல்லோரும் இணைந்து கொண்டாடும் அந்த மருத்துவமனையில்..  திரைப்படம் பார்ப்போர் மனதில் இழைந்தோடும் சோகத்திற்கு இடையே வருடும் தென்றலாய் வருகிறது இப்பாடல்!

    வார்த்தைகள் கைமுளைத்து வண்ணம் காட்டுகின்றன!  எழில்கொஞ்சும் மழலைமுகம் பால்சிந்துதோ.. பவளமல்லிகை நான் என்றே பவனிவந்ததோ!  தாலாட்டுப் பாடல்களின் தாயானவன் .. கவிஞன்.. இதோ இந்த வசந்த ரோஜாவை வர்ணிக்கும் அழகில் கொஞ்சம் மயங்குங்கள்!  விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்தளித்த இன்னொரு பொக்கிஷம்  – நெஞ்சில் ஓர் ஆலயம் – அதில் மலர்ந்த பாடல் ..

    முத்தான முத்தல்லவோ மிதந்து வந்த முத்தல்லவோ

    கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ

    (முத்தான)

    சின்னஞ்சிறு சிறகுகொண்ட சிங்காரச் சிட்டல்லவோ

    செம்மாதுளை பிளந்து சிரித்து வரும் சிரிப்பல்லவோ

    மாவடுக் கண்ணல்லவோ மைனாவின் மொழியல்லவோ

    பூவின் மனமல்லவோ பொன் போன்ற குணமல்லவோ

    (முத்தான)

    வாழாத மனிதரையும் வாழவைக்கும் சேயல்லவோ

    பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ

    தாழம் குடை அல்லவோ தள்ளாடும் நடையல்லவோ

    மாலைப் பொழுதல்லவோ வந்தாடும் செண்டல்லவோ

    (முத்தான)

    பாடல் : முத்தான முத்தல்லவோ

    குரல் : P.சுசீலா

    வரிகள் : கண்ணதாசன்

    இசை : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

    http://www.youtube.com/watch?v=7MOdsFe6_6c

    Share
  • வார்த்தைச் சித்தர்!…

    கவிஞர் காவிரிமைந்தன்

    வார்த்தைச் சித்தர்  – ஞான பாரதி

    வலம்புரி ஜான் அவர்கள் வழங்கிய

    சிறப்பு வானொலி நிகழ்ச்சிப்பதிவின் எழுத்தாக்கம்

    நிகழ்ச்சி தயாரிப்பு – திரு.என்.சி. ஞானப்பிரகாசம்

    அமைப்பில் உதவி – திரு.ஜெ.சுரேஷ்குமார்

    நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் எழுத்தாக்கம் –

    கவிஞர் காவிரிமைந்தன்

    (நாள் – 13.10.2001) சனிக்கிழமை காலை  8.00 மணி முதல் 9.00 மணிவரை

     

    (தொடக்கம்)

    p67aநூறாண்டு காலம் வாழ்க.. நோய் நொடியில்லாமல் வாழ்க

           ஊராண்ட மன்னர் புகழ்போல.. உலகாண்ட புலவர்தமிழ்போல …

    பாடல் ஒலிக்கிறது..

    வார்த்தைச் சித்தர் வானொலி நிலையத்தின் பதிவு அறையில் நுழைகிறார்.

    என்.சி.ஞானப்பிரகாசம் : வணக்கம் நேயர்களே..

     வாழ்க்கையில் சிலர் சித்து வேலை செய்வார்கள்.  ஆனால் வார்த்தையில் சித்துவேலை செய்பவர்தான் இன்றைய சிறப்பு விருந்தினர்!  பாரெங்கும் பாரதியின் பெருமைகளை பயமின்றி சொல்லிவரும் படைப்பாளி இவர்!  இன்றைய சினிமா நேரத்தின் விருந்தாளி!  சிறப்பு விருந்தினரான வலம்புரி ஜான் அவர்களை வருக வருகவென வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

     என்.சி.ஞானப்பிரகாசம் – வணக்கம் சார்!  செளக்கியமா இருக்கீங்களா?

    வலம்புரியார் –  நல்லா இருக்கேன்.

     என்.சி.ஞானப்பிரகாசம் – பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போதே உங்களுக்குத் தமிழ்மீது ஆர்வம் அதிகமா?

     வலம்புரியார் –  படிக்கின்றபோதே தமிழின்மீது இயல்பான ஒரு நாட்டம் ஏற்பட்டது.  மே தினத்தில் முதன்முறையாக மேடையில் பேசினேன்.  மேதினியில் மக்களுக்கு மேன்மை தரும் தினம் மே தினம் என்பதே என்னுடைய முதல் வரி!  பேசுவதற்காக படிக்க வேண்டும் என்கிற கட்டாயத்தை இயற்கை எனக்குள் வரவழைத்ததால் அதற்கப்பாலே படிக்காமல் இருக்க இயலவில்லை.  பேசுவதற்காகப் படித்தேன்.  அதற்கப்பாலே படிப்பதில் அமிழ்ந்து தொடர்ந்து தொய்வில்லாமல் இவையெல்லாம் படிக்கிறபோது தமிழினுடைய மேன்மை, மொழியினுடைய சிறப்பு நெஞ்சுக்குள்ளே குடிகொண்டன.

     என்.சி.ஞானப்பிரகாசம் – நீங்கள் விரும்பியிருக்கின்ற திரைப்பாடல் – இன்று போய் நாளை வாராய் என..

     வலம்புரியார் – காரணம் வந்து, அது இசைச் சித்தருடைய பாடல் என்பதற்காக மாத்திரமல்ல..  பிறிதோர் இப்போது அப்படிப் பாட முயற்சித்தாலும் அவர் மாதிரிப் பாடலாமே தவிர அது போல பாட இயலுமா என்பது கேள்வி.  அது மாத்திரமில்லாமல், இந்த மண்ணில் எப்போதும் மக்கள் போற்றி வணங்குகிற, வாசிக்கப்படுகிற இராமயணத்திலே ஒரு சிறந்த கட்டத்தை மையமாக எடுத்துச் சொல்கிறது.  இராவணன் என்றால் அவன் வந்து ஒரு அவல வீரன்! ஏதோ ஒரு மோசமானவன் என்றெல்லாம் சித்தரித்துக் காட்டுகின்ற நிலைமை மாறி அவனுக்குள்ளும் ஒரு உள்ளமிருக்கிறது! அந்த உள்ளம் கள்ளமில்லாமல் இருந்தது என்பதற்கு கனிந்த அடையாளம் இப்பாடல் இருப்பதால் இப்பாடலை நான் எப்போதும் விரும்புவேன்..

     பாடல் – இன்று போய் நாளை வாராய்.. என

                         எனை ஒரு மனிதனும் புகலுவதோ..

    என்.சி.ஞானப்பிரகாசம் – நீங்கள் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது.. சுவராஜ்ஜியா என்றொரு பத்திரிக்கை வெளிவந்து கொண்டிருந்தது.  அதில் ஒரு அரசியல் கட்டுரை.. அந்தக் கட்டுரையில் தவறு ஒன்று உள்ளது என்று நீங்கள் சுட்டிக் காட்டி எழுதியிருந்தீர்கள்.  அந்த அரசியல் வித்தகர் – அரசியல் ஞானி – உங்களுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதியிருந்தார்! அதைப் பற்றிப் பேசலாமே!

    வலம்புரியார் – அது என்னுடைய புதுமுகவகுப்பில் நான் இருந்தபோது அந்த பாளையங்கோட்டையில் வருகிற ஒரே பத்திரிக்கை சுவராஜ்ஜியாதான்.  வேறு ஆங்கிலப் பத்திரிக்கைகள் வராது.  பிளிட்ஸ் மற்றும் சுவராஜ்ஜியா வரும்.  சுவராஜ்ஜியா வாங்கிக் கொண்டு ஒரு நாள் வாசித்தேன்.  வாசிக்கிற போது குடும்பக் கட்டுப்பாட்டிற்கு எதிராக சக்கரவர்த்தி ராஜாஜி ஆச்சாரியார் அவர்களுடைய கட்டுரை வந்திருந்தது.  அது அவருடைய கருத்து.. ஆனால், அப்படி அந்தக் கட்டுரை வெளிவந்த அதே பக்கத்தில் ‘நிரோத்’ பற்றிய விளம்பரம் வந்திருந்தது. ஆகவே இவருடைய பத்திரிக்கை .. அந்தப் பத்திரிக்கையில் இப்படிப்பட்ட விளம்பரம் வரலாமா என்று தைத்தது.  ஆகவே உடனே நான் அவருக்கு எழுதினேன்.  என் வயதைப் பார்க்காமல், நான் இந்த நாடு அறிந்தவனா அறியாதவனா என்பதையெல்லாம் கருதாமல் நான் சுட்டிக் காட்டிய கருத்து உண்மையா இல்லையா என்பதை மாத்திரமே பார்த்து அவர் உடனே எனக்குப் பாராட்டுத் தெரிவித்தார்கள்.  அந்தக் கடிதத்தைக்கூட என்னுடைய புத்தகம் ஒன்றில் அப்படியே பதிப்பித்திருக்கிறேன்.  இரண்டாம் அலைவரிசை என்கிற புத்தகத்தில் அது காணக் கிடைக்கிறது.

    என்.சி.ஞானப்பிரகாசம் – அவர் என்ன எழுதியிருந்தார் என்பதை நேயர்களுக்குச் சொல்லலாமே..

    வலம்புரியார் – வேறொன்றுமில்லை.. அவர் எழுதியதெல்லாம் இந்த மாதிரி.. நீங்கள் சுட்டிக்காட்டியது சரி.. ஆனால் சுயராஜ்ஜியா என்னுடைய பத்திரிக்கையல்ல! அதில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  நீங்கள் சுட்டிக் காட்டியது சரி என்றால் நான் இதை வந்து பதிப்பாளருக்கு உடனே தெரிவிப்பேன்.. ஆசிர்வாதங்கள்.. (அவருடைய தமிழில்..) என்று எழுதியிருந்தார்.

    என்.சி.ஞானப்பிரகாசம் – அடுத்து நீங்கள் விரும்பிய பாடல்..

    வலம்புரியார் – அது ‘உன்னழகைக் கண்டு கொண்டால் பெண்களுக்கே ஆசைவரும்!’ என்று சொல்கிற போது அது ஒரு உச்சமான கற்பனை! ஒரு பெண்ணைப் பார்த்து பெண் மயங்குகிறாள் என்றால் அது உண்மையாகவே அதிலே வஞ்சமிருக்க வேண்டிய இடத்திலே நெஞ்சமிருக்கிறது!  அந்த அழகு அப்படிப்பட்டது என்று சொல்வதற்கு உவமிக்கிற இடம் சிறப்பாக இருக்கிறது.  அது மாத்திரமல்லாமல் இன்றைக்கு இசை என்பது ஒரு கூத்தடிப்பு போல ஆகிப்போன காலததில் மென்மையான ஒரு தென்றலைப்போல் ஒரு மகரந்த வரிகளை வீசுவதைப் போல ஒரு மத்தளம் மெலிதாய் அதிர்வதைப் போல – வருகிற அந்த இசை எனக்குள் சின்ன வயதில் ஏற்படுத்தியிருக்கிறது.  நமது ரத்த அணுக்களில் சின்ன வயதில் கேட்ட ஒரு பாடல் இடம்பிடித்துக் கொள்கிறது. அது எத்தனை வயதானாலும் அப்பாடல் நம்மோடே பயணிக்கிறது.  அப்படித்தான் இப்பாடல் இன்னமும் என் கூடவே வந்து கொண்டிருக்கிறது.

    உன்னழகைக் கன்னியர்கள்… (உத்தமப் புத்திரன் திரைப்படத்தில்)

    என்.சி.ஞானப்பிரகாசம் – அபரீதமான புகழ் தேவையெனில் சிலர் அரசியலை விரும்புகிறார்கள்.. சிலர் சினிமாவை விரும்புகிறார்கள். சிலர் ஆன்மீகத்தை விரும்புகிறார்கள்.  வார்த்தைச் சித்தருக்கு நல்வாய்ப்பாக அமைந்தது எது?

    வலம்புரியார் – புகழ் பெறுவதற்காக நான் இவைகளைத் தேடவில்லை.  காரணம் புகழைத் தேடுபவர்களுக்கு புகழ் ஒருபோதும் வராது தேடாமல் இருந்தால் வரும்.  அப்ப.. தேடாமலிருந்தால்தான் வரும் என்பதற்காகவா என்றால் அதுவுமில்லை! இயல்பாக நமக்கு வாழ்க்கையில் எழுத்து பேச்சு இவைகளெல்லாம் எளிதாக அமைந்தன.  ஆன்மீகத்திலே ஒரு நாட்டமிருக்கிறது.  ஆன்மீக நாட்டம் என்பது பிறவிதோறும் தேடுகிற தேடலால் வருவது.  இந்தப்பிறவியிலே தொடங்கி ஒருவர் வந்து சமயச் சின்னங்களை  அணிந்துகொண்டு தன்னை வந்து ஒரு ஆன்மீக ஞானியாக ஆக்கிக்கொள்ள இயலாது.  பிறவிதோறும் தேடுகிற தேடல்.  அந்தப் பிறவிதோறும் தேடுகிற தேடலுக்கு இந்தப் பிறவியில் பதில் கிடைத்திருக்கிறதா என்றால் கிடைத்திருக்கிறது.  அந்த கிடைப்பு என்பது அரிதானது.  அது கொடுத்து வைத்திருக்க வேண்டும்.  எடுத்துச் சொன்னாலும் அதை எடுத்துக் கொள்பவர்கள் ஒன்றிரண்டு பேர்தானிருப்பார்கள்.  புத்தனிடம் வந்து ஆனந்தன் கேட்டான்.. புத்தா.. நீ ஞானம் பெற்றவன்.  ஞானம் பெறுவது எப்படி என்று எனக்குச் சொல்லித்தருவாயா என்று கேட்டான்.  அதற்கு கெளதம புத்தர் – நான் சொல்லித்தர இயலாது.. ஆனால் நீ கற்றுக் கொள்ளலாம் என்றார்.  சொல்லித் தராததை நான் எப்படிக் கற்றுக் கொள்வது என்று அவர் 20 ஆண்டுகளாக கேட்டுக் கொண்டேயிருந்தார்.  ஞானம் என்பது ஒரு வாய்ப்பாடல்ல.. வெளிப்படுத்துவதற்கு!  புத்தனுக்கு எவனும் சொல்லவில்லை.  புத்தன் தானே கண்டெடுத்தான்.  கண்டெடுப்பதே ஞானம். பிறர் உணர்த்துவதல்ல.. நாமே கண்டுபிடிப்பது!  ஆக அந்த மாதிரி முயற்சியில் இறங்கி ஓரளவு நான் வெற்றி பெற்றிருக்கிறேன்.  ஆக எதிலுமில்லாத மனநிறைவு ஆன்மீகத்திலிருக்கிறது.  அதிலொன்றும் மறுப்பதற்கில்லை.  இன்னுமும் சொல்லப்போனால், அதில் சுயநலம் கலந்திருக்கிறது.  காரணம் அது பேரின்பம் என்பதை அறிந்தவன்தான் அறிவான்.

    என்.சி.ஞானப்பிரகாசம் – அடுத்து.. கர்ணன் படத்திலிருந்து ஒரு பாடல்..  என்ன கொடுப்பான் எவை கொடுப்பான்..

    வலம்புரியார் – இது இந்த வரலாற்றுப் படங்கள் பொதுவாக எனக்குப் பிடிக்கும். ஆங்கிலத்திலுமே கூட வரலாற்றுப்படம் வந்தால் அதை சென்று நான் பார்ப்பேன்.  திரையரங்குகளுக்கே பல ஆண்டுகளாக போகாமலிருக்கிற நான் தப்பித்தவறி எங்கேயாவது வரலாற்றுப்படம் ஆங்கிலம் என்றால் அதை சென்று பார்ப்பது வழக்கம்.  வரலாறு என்பது வாழ்க்கைக்கு வழிகாட்டுவது! நேற்றைக்கு வந்து நடந்த ஒரு சம்பவத்திற்கு என்ன விடையோ அதுதான் இன்றைய சம்பவத்திற்கும்! விடை ஒன்றுதான்! காலங்களால் அது மாறலாம்!  தேசங்களால் அது மாறலாம்! ஆனால் வாழ்க்கை அளிக்கிற விடை ஒன்றுதான்! ஆக அந்த அடித்தளத்தில் வரலாற்று மாணவன் நான்.  வரலாறு வழி காட்டுகிற காரணத்தால் இது ஒரு வகையான வரலாறு. கர்ணனுடைய வரலாறு!  அவனுடைய சிறப்பியல்புகளைச் சொல்வது.  அவனுடைய சிறந்த அந்த நோக்கங்கள்.. வாழ்க்கை நெறிகளைச் சொல்வது.  அதை மிகச் சரியாக அவர்கள் சிறப்பாகப் பாடியிருக்கிறார்கள்.  அந்தப் பாடலிலே ஒரே இசையில் இல்லாமல் பல இசைகளைக் கலந்து அது நம்மை வந்து நோகடிக்காமல்,  நொந்துதலில் ஆழ்த்தாமல், அப்படியே நுங்கு நுரையாக பொங்கிவரும் பாடல் என்பதால் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    மழை கொடுக்கும் கொடையுமொரு இரண்டு மாதம்

    வயல் கொடுக்கும் கொடையுமொரு மூன்று மாதம்

    பசு வழங்கும் கொடையுமொரு நான்கு மாதம்

    பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம்

    என்.சி.ஞானப்பிரகாசம் – .இலக்கியம் சமுதாய மாற்றத்தை உருவாக்குமா?

    வலம்புரியார் – சமூக மாற்றத்தை உருவாக்குகிற ஒன்றுக்குப் பெயர்தான் இலக்கியம்.  ஒரு காலத்தில் இலக்கியம் கற்பனையாக இருந்தது.  குற்றாலக் குறவஞ்சியில்.. திரிகூட ராசப்பக் கவிராயர் பாடுகின்றபோது..

    மந்துசிந்துகனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்

    கவனசித்தர் வந்துவந்து காயசைத்து விளப்பர்

    செழுங்குரங்கு தேமாவில் பழங்களைப் பந்தடிக்கும்

    தேன்மலர்செண்பகவாசம் வானுலகில் வெடிக்கும்

    என்று பாடினார்.. ஆக.. வெடிக்கும்  நடிக்கும்  துடிக்கும் என்றெழுதுவதும்.. இவர் பாடுகிற பாட்டிலே குற்றாலமே குளிர்ந்து கீழே இறங்கிவருகிற அழகைப் பார்க்கிறோம் என்று பேசுவதும் சமுதாயத்திற்கு உதவுமா?  கற்பனையிலே மிதக்கிறவனுக்கு அது கருவியாகுமே தவிர, சமுதாய மாற்றத்திற்கு உதவாது.  ஆனால், உலகம் முழுவதிலும் ஹோஷோவிலிருந்து, மாசேதுங்கிலிருந்து அது மாதிரி வரலாற்றை உருவாக்குகிற மனிதர்கள் கவிதைகளால் சமுதாயம் மாற வேண்டும் என்று எழுதியிருக்கிறார்கள்.  ஆக.. சமுதாயத்தை மாற்றுகின்ற கருவிதான் இலக்கியம். வாழ்க்கையிலிருந்து வருவது இல்கியம்.  வாழ்க்கைக்கு வழிகாட்டுவது  இலக்கியம்.

    என்.சி.ஞானப்பிரகாசம் – ஒண்ணுமே புரியலே இப்படி ஒரு பாடல்..

    வலம்புரியார் – உலகத்திலே எனக்கு ஒரு வேறு பாடு உண்டு.  மற்றவர்களுக்கும் எனக்கும் ஒரு வேறுபாடு என்று நான் கருதுகிறேன் என்றால்.. எனக்கொன்றும் தெரியாது என்பது தெரியும். பலருக்கு ஒன்றும் தெரியாது என்பது தெரியாது.  தெரியாது என்பதை தெரிந்து கொள்வது ஞானத்தினுடைய துவக்கம்.  ஆக எனக்கு ஒன்றும் தெரியாதது மாத்திரமல்ல.. என்னதான் முயற்சித்தாலும் இறுதிவரை தெரிந்து கொள்ள இயலாது என்பதுகூட எனக்குத் தெரிந்திருக்கிறது.  ஆனால், தெரிந்து கொள்ள முடியாத ஒன்றுக்காக ஏன் முயற்சிக்கிறீர்கள் என்றால்.. முடிவிலே இன்பம் இல்லை.. தேடலிலேதான் இன்பம்.. வானத்தைப் பாருங்கள்.. நீலவண்ணமாக.. அந்த வானமிருக்கிறதே.. அதை எங்காவது தொட இயலுமா? காரணம் வானம் என்று ஒன்று இல்லவே இல்லை.  தோற்றம்தான்.. ஆக, தேடலில் உள்ள சுகம் அடைவதில் இல்லை.  ஆக இது குழப்பமல்ல.. இது வளர்ச்சி!

    வளர்ச்சியைச் சுட்டிக் காட்டுகிற பாட்டு இது.. ஆகவே எனக்குப் பிடிக்கும்!

    ஒண்ணுமே புரியலே உலகத்திலே

    என்.சி.ஞானப்பிரகாசம் – ஒரு பக்கம் கவிதை.. மறு பக்கம் ஆன்மீகம்.. இன்னொரு பக்கம் – பட்டிமன்றம்; பிறிதொரு பக்கம் தொலைக்காட்சி.. கிடைக்கின்ற 24 மணி நேரத்தை எப்படி பெருக்குகிறீர்கள்? வகுக்கிறீர்கள்? எப்படி கூட்டுகிறீர்கள்?

    வலம்புரியார் – நான் அதை ஒரு எந்திரத்தைப் போல செய்வதில்லை. ஒரு நாளில் இதிலிருந்து அதைச் செய்ய.. அதிலிருந்து இதைச் செய்ய என்றால் மனிதன் எந்திரமயமாகிப் போகிறான்.  எந்திர வாழ்க்கையில் ஒருவனுக்கு ஆதாயம் உண்டா என்றால் இல்லை.. இன்பம் உண்டா என்றால் இல்லை.. அப்படி வகுத்துக் கொள்ளாமல் காலையில் எழுந்ததும் கடன்களை முடித்துவிட்டு.. பத்திரிக்கைகள் பார்ப்பது, அதற்கப்பாலே செய்திகளைக் கேட்பது, அதற்கப்பாலே பார்த்தால் புத்தகத்திற்குள் நுழைந்துவிடுவது.. இந்தப் புத்தகத்தில் நுழைகிற ஒன்றுக்கு மாத்திரம் .. எப்போது நுழைய வேண்டும் .. எப்போது திரும்ப வேண்டும் என்றெல்லாம் தெரியாது.  இரவிலே வெகுநேரம்வரை விழித்திருப்பேன். உதாரணத்திற்கு இரவு 12 மணிக்கு படுக்கப்போனால் 3 மணிக்கு நான் எழும்பிவிடுவேன். 3 மணிக்கு ஏன் எழும்புகிறேன் நான் என்று வெகுநாட்களாக சிந்தித்தேன்.  அந்த 3 மணியை பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இயற்கை என்னைத் தட்டி எழுப்பியது. திருவள்ளுவர் நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன் என்று பேசுகிறார்.  ஆகவே 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்று எவர் சொன்னாலும் அவர்கள் சமுதாயத்தினுடைய முதல் தரமான எதிரிகள் என்று நான் கருதுகிறேன்.  3 மணிக்கு விழித்து 2 மணி நேரம் படித்துவிட்ட அதற்கப்பாலே பார்த்தால் 1 மணி நேரம் தூங்கினால் எனக்குப் போதும்.  மதியத்தில் தூங்குவதற்கு முயற்சி பண்ணுவேன் உடல் நலம் கருதி.  ஆனால் பல வேளைகளில் தூங்க இயலாது.  தூங்காமல் தூங்கி சோம்புறு காலம் என்று வள்ளலார் பேசினாரே அப்படி நமக்கு வாய்த்ததோ என்று மகிழ்வேன்.  ஆக இந்த நேரத்தில் இதைச் செய்வது என்றல்ல.. ஆக வருகிற படி செய்வேன்.  கூட்டங்களுக்குப் போவோம்.  இறுதியாகப் பேசவிடுவார்கள்.  அப்ப ஏறத்தாழ ஒரு 5 மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்கும்.  5 மணி நேரத்தில் நம்முடைய நேரம் மாத்திரமல்ல.. 5 பெருக்கல் 1000 என்று பார்த்தால் 5000 மணி நேரத்தை செலவிடுகிறோம் என்பதை தமிழர்கள் ஒரு போதும் உணர மாட்டார்கள்.  ஆகவே அந்த இடங்களில் கேட்கத்தகுந்த பேச்சாக இருந்தால் கேட்பேன். கேட்கத்தகுந்த பேச்சாக இல்லாவிட்டால் நான் வந்து ஒரு புத்தகத்தை எடுத்து வாசித்துக் கொண்டிருப்பேன் அல்லது ஏதேனும் கிறுக்கிக் கொண்டிருப்பேன்.. எப்படியாவது அந்த நேரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிற உணர்வு எப்போதும் இருக்கும்.

    என்.சி.ஞானப்பிரகாசம் – யாருக்கும் வெட்கமில்லை  – இப்படி ஒரு பாட்டு!

    வலம்புரியார் – கவியரசர் கண்ணதாசன் முதன் முதலாக என் கன்னத்தில் பொட்டு வைத்தவர்.  சின்ன வயதிலே நான் இந்த ஊருக்கு வந்தபோது முதன் முதலாக என் கவிதையை அவருடைய கடிதம் இதழிலே பதித்து நான் எழுதுவதுகூட வரும் என்கிற நம்பிக்கையை எனக்குள்ளே விதைத்தவர்.  அதற்கப்பாலே என்னுடைய புத்தகங்கள் – தாகங்கள், அம்மா அழைப்பு, வரலாற்றில் கலைஞர் போன்ற புத்தகங்களுக்கெல்லாம் அணிந்துரை தந்தார்.  என் வயதில் சத்தியமாகச் சொல்லப்போனால் வேறு ஒருவரை அவ்வளவு பாராட்டியதில்லை; புகழ்ந்ததில்லை.. அந்த அளவுக்கு உச்சிமேல் வைத்து மெச்சிப்புகழ்ந்ததால் அவருடைய நினைவுகளோடு நான் எப்போதும் சஞ்சரிக்கிறேன்.  இதிலே பிடித்த வரி இந்த உலகம் எப்படியிருக்கிறது என்று இவ்வளவு எளிமையாய் எப்படிச் சொல்ல இயலும்?  பைபிள் மாதிரி எளிமையானது!  என்ன சொல்கிறார்.. மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம்! நீ சொன்னால் காவியம்!  காவியத்தைத்தான் சொல்லணும்னு அவசியமில்லை.. நீ சொல்லிட்ட இல்ல.. நீ சொன்னா காவியம் என்று சொல்கிறார் என்றால் அவர் வந்து அடிக்கிற அடி சமுதாயத்தின் பீடைகளுக்கெல்லாம் சேர்த்து அடிக்கிற அடி.. ஒரு மென்மையான மனிதன்.. ஒரு தென்றலைப் போல் வந்து ஆலமரத்தை வேரோடு சாய்க்கிற ஆற்றலுடைய மனிதன்.. ஆகவே அந்த கவிஞனுக்கு எப்போதும் நான் தலை வணங்குவேன்.  இந்தப் பாடல் எனக்குப் பொதுவாகப் பிடிக்கும்..

    மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம்
    நீ சொன்னால் காவியம்

    மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து
    முதுகைப் பாருங்கள்
    முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு
    அதனைக் கழுவுங்கள்
    சுட்டும் விரலால் எதிரியைக் காட்டி
    குற்றம் கூறுகையில்
    மற்றும் மூன்று விரல்கள் உங்கள்
    மார்பினைக் காட்டுதடா
    என்.சி.ஞானப்பிரகாசம் – வளர்ந்துவரும் வானம்பாடிகளுக்கு வலம்புரியார் ஒரு சரணாலயம் – சரிதானே?

    வலம்புரியார் – நான் நிரம்ப இளைஞர்களை தோள்கொண்ட மட்டும் தூக்கியிருக்கிறேன்.  என்னுடைய கருத்து – நான் தூக்கியிருக்காவிட்டால் மற்றவர்கள் தூக்குவார்கள்.  காரணம் அவனுக்கு ஒரு கை கருவியே தவிர நாமே அவனை வளர்ப்பதில்லை! அவர் எந்த சரணாலயத்திலேயாவது புகுந்து எப்படியாவது தப்பித்துக் கொண்டு வருவான்.  நிரம்ப இளைஞர்கள் என்னிடம் கேட்பார்கள் – நாங்கள் நிரம்ப எழுதுகிறோம்.  எழுதியதெல்லாம் திரும்ப வந்துவிடுகிறதே என்று சோர்ந்துவிடுவார்கள்.  நான் அவர்களுக்குச் சொல்வதெல்லாம் ஒரு பொருள் வந்து புறப்பட்ட இடத்திற்கு திரும்பிவரும் என்பது பூகோள விதி.  அப்படி நீங்கள் எழுதியது உங்களுக்கே திருப்பப்படுகிறதென்றால் பூகோள விதியை நீங்கள் நிறைவேற்றுவதற்கு காரணமாய் இருந்தீர்கள் என்று கற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, வேறு அல்ல என்று சொல்வேன்.  மீண்டும் மீண்டும் எழுத வேண்டும்.  காரணம் நான் எழுதத் தொடங்கிய காலத்தில் பத்திரிக்கையில் போடுகிறேன் என்று சொல்லி எதிர்பார்க்க வைத்து குப்பைக்கூடையில் போட்டவர்களெல்லாம் ஒரீரண்டு வருட காலத்தில் என்னிடத்தில் அணிந்துரை தேடி வந்தார்கள்.  ஆக.. எந்த இளைஞனையும் அலட்சியப்படுத்தக்கூடாது.  அவனுக்குள்ளே இருக்கிற ஆற்றலை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதில் ஒரு சமுதாயப் பணி இருக்கிறது.  ஆகவேதான் எனக்கு அதில் விருப்பம் அதிகம்!

    என்.சி.ஞானப்பிரகாசம் – அடுத்து உங்களுக்குப் பிடித்த பாடல்! அபூர்வ ராகங்கள் – அதிசய ராகம்!

    வலம்புரியார் – அதிசய ராகம் எப்போதும் பிடித்ததற்கு என்ன காரணம் என்றால் இந்த அபூர்வ ராகங்கள் வெளிவந்த போது 100வது நாள் விழா நடந்தது.  இயக்குனர் பாலச்சந்தர் அவர்கள் கற்பகம்பாள் திருமண மண்டபத்தில் அந்த ஆண்டில் நடைபெற்ற கூட்டத்தில் மூவரை அழைத்திருந்தார்.  அப்போது தமிழகத்தில் முதன் முறையாக முதலமைச்சராகியிருந்த கலைஞர், ஏ.எல்.சீனிவாசன், நான் – மூன்று பேரும் மேடையிலிருந்தோம்.  கமலஹாசன் இருந்தார். ரஜினிகாந்த்துக்கு அதுதான் அவர் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட இடம்.  அப்போது நான் பேசுகிறபோது ஸ்ரீவித்யா இருந்தார்.  அப்போது நான் சொன்னேன்.. இவர் ஒரு சந்தனக் கட்டை.. ஒரு சிறந்த கலைஞனிடம் சிக்கியிருப்பதால் இதிலிருந்து ஒரு கலைச்சிற்பம் உருவாகும் என்று சொன்னேன்.  என்னை அறியாமல் சொன்னது.  அவர் இன்றைக்கும் அதை நினைத்து மகிழ்ச்சியடைகிறார்.  அதிலே பேசிக்கொண்டிருந்தபோது கவியரசர் வந்தார்கள்.  மேடைக்கு வரவில்லை.  கொஞ்சம் உடல்நலம் குறைவாக இருந்தது.  மேடைக்கு எதிரே வந்தமர்ந்தார்கள்.  அவரைச் சொல்ல வேண்டும் என்பதற்காக.. இந்த ஒரு புறம்பார்த்தால் மிதிலையின் மைதிலி.. மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி – என்று சொன்னாரே தவிர எந்தப்புறம் என்று சொல்லாமல் அதை நமது சிந்தனையுடைய அந்தப்புரத்திற்கே விட்டார் என்று சொன்னேன்.

    என்.சி.ஞானப்பிரகாசம் – நமது இன்றைய இளைஞர்கள் எதன்மீது பற்று வைத்திருக்கிறார்கள்?  அவர்கள் பார்க்கும் பார்வையும் பயணம் செய்யும் பாதையும் சரிதானா?

    வலம்புரியார் –  எல்லா இளைஞர்களும் தவறு செய்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை.  சிறந்த இளைஞர்கள் எப்போதும் இருக்கிறார்கள்.  இவர்களை எப்படிக் கண்க்கிடுவது என்றால்.. பிரெஞ்சுப் புரட்சி நடந்தது.  அது உலகத்தினுடைய வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெற்றிருக்கிறதே தவிர, பாஸ்டில் சிறையை வீழ்த்தியவர்கள் 23 பேர்தான்.  ஆக வால்டே ரூசோவின் சிந்தனையை உள்வாங்கிக் கொண்டவர்களே 23 பேர்கள்தான்.  பிரெஞ்சுப் புரட்சி என்று பேசுகிறோம்.  ஏசு பெருமானுடைய சீடர்களே 12 பேர்தான்.  இவர்கள் குறைவான எண்ணிக்கையில்தான் இருப்பார்கள்.  ஏனென்றால் இவர்கள்தான் செயல்படுகிற சிறுபான்மை.  மற்றவர்கள் எல்லாம் செயல்படாத பெரும்பான்மை.  இது செயல்படுகிற சிறுபான்மை குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  இந்த சமுதாயத்தில் செயல்படுகிற சிறுபான்மை என்று நான் அழைக்கிற இளைஞர்கள் எப்போதும் குறைந்துவிடுவதில்லை.  எங்கோ இருப்பார்கள்.  பொதுவாக இருக்கிற இளைஞர்கள் வந்து அவர்கள் கால்கள் போன போக்கிலே போகிறார்கள்.  அவர்களுக்கு எதிலே பற்று இருக்கிறது?  முதலிலே அவர்கள்மீது அவர்களுக்கு பற்று இருக்க வேண்டும்!  அது அவர்களுடைய நம்பிக்கையை உருவாக்கும். மொழி, சமுதாயம், தன்னைப் பெற்றவர்கள், ஆசிரியர்கள் என்று அப்படி தங்களை வளர்த்துக் கொள்ளவில்லை என்கிற வருத்தம் எனக்கு உண்டு.  இன்னமும் சொல்லப்போனால், என்னுடைய ஒரே குற்றச்சாட்டு – எல்லா இளைஞர்களுமல்ல.. அனேக இளைஞர்கள் என்ன கருதுகிறார்கள் என்றால் கனிகளைப் பெற வேண்டுமென்று கருதுகிறார்களே தவிர அதற்கான வியர்வை நதியைச் சிந்த வேண்டுமென்று கருதுவதில்லை.  காரணம் சுற்றிலும் பார்க்கிறார்கள் – சும்மா இருப்பவர்கள் எல்லாம் உலகத்திலே வளர்ந்து பெரிதாகிவிடுகிற சூழலைப் பார்க்கும்போது நாமேன் உடலை வளைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.  நான் இளைஞர்களுக்கு சொல்வதெல்லாம் நீ வாழ்க்கையில் வெற்றிபெறாவிட்டால்கூட பாதகமில்லை.. உழைப்பை மட்டும் விட்டுவிடாதே!  அதாவது உலகத்தில் நாம் சொல்வதை சொல்லிக் கொண்டிருப்போம்!  செய்வதை செய்துகொண்டிருப்போம்!  இருட்டு விலகட்டும்!  விலகாமல் போகட்டும்!  வெளிச்சம் ஏற்றுவதை மாத்திரம் நம் விரல்கள் விட்டுவிடக் கூடாது!

    என்.சி.ஞானப்பிரகாசம் – பாதை தெரியுது பார் என்கிற படத்திலிருந்து ஒரு பாடல்.. தென்னங்கீற்று …

    வலம்புரியார் – தென்னங்கீற்று  கூந்தலிலே.. அந்தப் பாடல் ஒரு இயற்கையை வர்ணிக்கிறபோது எவ்வளவு அருமையான காட்சியை மனதுக்குள்ளே உருவாக்குகிறது என்று நான் எண்ணி எண்ணிப் பார்த்து வியந்திருக்கிறேன்.  அந்த சிட்டுக்குருவி என்று சொல்கிறபோது.. பாரதி பேசிய சிட்டுக்குருவியை நினைப்பேன்.  சிட்டுக்குருவியினுடைய வாழ்க்கையை நான் பக்கம் பக்கமாக படித்திருக்கிறேன்.  நாம் நினைப்பது போல் அதன் வாழ்க்கை நேற்று தோன்றி இன்று முடிவதல்ல.. மனிதன் பிறக்காத காலத்தில் மண்ணிலிருந்த பறவைகளில் சிட்டுக்குருவிகள் ஒன்று.  அவை மணலிலே விளையாடுவது மணலிலே குளிப்பது இவைகளையெல்லாம் பார்க்கிறபோது இளம்வயதிலே எனக்குள்ளே உண்டான அந்த வியப்பான பிரமிடுகள் இன்னமும் கலைந்து போகவில்லை.  எனவே இந்தப் பாடல் என் நினைவுப் புத்தகத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது!

    என்.சி.ஞானப்பிரகாசம் – தாய் பத்திரிக்கையைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது .. அதைப்பற்றிச் சொல்லுங்களேன்..

    வலம்புரியார் – தாய் பத்திரிக்கையின் ஆசிரியராக பன்னிரண்டரை ஆண்டுகள் இருந்தேன். தொடக்கத்திலிருந்து நான்தான் ஆசிரியராக இருந்தேன்.  ஒரு வேலையைச் செய்கிறபோது அதிலே முழுக்க தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக எனக்கு வந்த வாய்ப்புகளையெல்லாம் நான் இழக்க வேண்டி வந்தது.  ஆனாலும் அந்தப் பத்திரிக்கையைச் சிறப்பாகக் கொண்டுவரவேண்டுமென்று உழைத்து: இறைவனின் பேரருளாலும் நம்முடைய உழைப்பாலே 23000 பிரதிகளிலே தொடங்கி 220000 பிரதிகள் வரை விற்கிற ஒரு மாயத்தை அந்நாளில் அது செய்தது.  நிரம்ப இளைஞர்களுக்கு அது வாய்ப்பு தந்தது.  சில இளைஞர்கள் வருவார்கள்.  பார்க்க வேண்டும் என்பார்கள்.  எழுதிக்கொண்டிருக்கிறார்.. பிறகு வாருங்கள் என்றால் கோபித்துக் கொண்டு செல்வார்கள்.  அவ்வாறு கோபித்துக் கொள்ளும் இளைஞர்களை நான் உடனே  கூப்பிடுவேன்.  ஏனென்றால் அந்தக் கோபம்தான் தமிழ்நாட்டில் இல்லாத ஒன்று.  கோபம் என்றால் சாதாரண கோபமல்ல.. சமுதாயத்தை மாற்றுகிற கண்ணிய சீற்றம்.. அப்படித்தான் ஒருத்தர் ஒரு நாள் வந்தார்.  வந்தவனுடைய பெயர் அருமையான பெயர்.. ஒரு கவிஞர் அவர்.  கனகதாசன் என்பது அவர் பெயர். வருகிறபோதே அந்தக் கவிஞர் என்னிடத்தில் சொன்னார்.. காத்திருக்கும் வரை நான் காற்று.. புறப்பட்டுவிட்டால் புயல்.. இது உம்முடைய வரி இல்லையே என்றேன்.  என் வரி இல்ல சார்.. என்றான்.  அவ்வளவுதான் தமிழ்ல வசனம் பேசியது.  நான் கேட்டேன் ஊர் எது என்று.. அவர் சொன்னார்..

                  மூக்குள்ள பேருக்கெல்லாம் முந்திரிப்பூ வாசம்வரும்

                  பாக்கு வண்டி மிகுந்திருக்கும்.. பலாக்கள் தொங்கும்.

    பண்ருட்டி எந்தன் ஊரே..

    ஊரைத்தானே கேட்டேன்.. உற்பத்தியாயிற்று பாட்டு.. பேரைக் கேட்டிருந்தால் ஒரு பிரளயமே பிறந்திருக்கும் என்றார்.  என்னான்னு கேட்டா.. அவருக்கு திக்குவாயாம்.. வசனமாக பேசச்சொன்னால் வாய் திக்குகிறது.  அவர் தீந்தமிழிலே கவிதையாகச் சொல்லச்சொன்னால் திக்குகிற வாயைக்கூட அது திருத்துகிறது என்று போதித்த அவர் எனக்கு ஒரு ஆசிரியர்.

    அவரைப்பற்றி ஆசிரியத்தொகுதியில் எழுதினேன்.  அவரது பெற்றோர்கள் மகிழ்ந்தார்கள்.  இன்றைக்கு அவர் வருவாய்த் துறையில் ஒரு அதிகாரியாக பணிபுரிகிறார்.  அவர் ஒழிந்த நேரங்களில் கவிதை பண்ணி தமிழ் அன்னைக்குச் சூடி வருகிறார்.

    என்.சி.ஞானப்பிரகாசம் – பெர்னாட்ஷா என்றொரு நாடக மேதை மற்றவர்களுக்குத் தந்த முன்னுரைகளை வைத்து ஒரு புத்தகம் வந்திருக்கிறது.  அதுபோல் நீங்கள் மற்றவர்களுக்குத் தந்த அணிந்துரைகளை வைத்து ஒரு நூல் வந்திருக்கிறது.. அதைப்பற்றிப் பேசலாமே..

    வலம்புரியார் – அது வந்து எதிரொலி விஸ்வநாதன் என்கிற ஒரு நண்பர் அந்த நூலைச் செய்திருக்கிறார்.  அதில் என்னைப் பற்றி எழுதியிருக்கிறார்.  அது சிறந்த புத்தகமாய் நான் கருதுவதில்லை.  காரணம் அவர் என்னுடைய சிறந்த நண்பர்.  ஏனென்றால் அதில் என்னுடைய குறைகள் அலசப்படவில்லை.  என்னுடைய நிறைகளை மாத்திரமே சேர்த்து கோர்த்து மற்றவர்கள் எனக்கு மொழிந்தப் பாராட்டுக்களையெல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாக்கியிருக்கிறார்.  பெரும்பாலும் நான் அதைப் பார்ப்பதுமில்லை.  படிப்பதுமில்லை.  பல பேர் கேட்பார்கள்.. ஏன் அவைகளை எல்லாம் சேர்த்து வைத்துக் கொள்ளவில்லை என்று.. என்னுடைய ஒரே பதில்.. பறவைகளின் பணி பறப்பதுதானே தவிர, சிறகுகளை சேர்ப்பது அல்ல.. பறவை அதன் போக்கிலே போக வேண்டும்.  சிறகுகளைச் சேர்ப்பது கீழே உள்ளவர்களின் வேலையே தவிர பறவைக்கு அந்த வேலை இல்லை.. அதுபோல் நான் ஒரு பறவை.

    என்.சி.ஞானப்பிரகாசம் – இரத்தத்திலகத்திலிருந்து ஒரு பாடல்.  ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு..

    வலம்புரியார் – அதுவும் கவியரசர் கண்ணதாசனுடைய அருமையான பாடல்.  இதில் உமர்கயாமுடைய தத்துவமிருக்கிறது.  பல பேர் தவறாகப் புரிந்து கொண்டிருப்பதைப் போல உமர்கயாம் ஒரு குடிகாரர் அல்ல.. அவர் மது என்று சொல்வது, ஆன்மீக வெள்ளத்தைச் சொல்கிறார்.  அரபி மொழி அறிந்தவர்கள், பார்சி மொழி அறிந்தவர்கள் எவராவது இப்படிப் பேசினால் அவர்களை அடித்தே விடுவார்கள்.. ஏனென்றால் அப்படிப்பட்ட மகத்தான மனிதரை தவறான கண்ணோட்டத்திலே பார்த்து நாட்டிலே பழக்கி விட்டார்கள்.  அதிலும் ஒரு கவிஞனின் ஆளுமை தெரிகிறது..

    ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு

    ஒரு கோலமயில் என் துணையிருப்பு

    இசைப்பாடலிலே என் உயிர்த்துடிப்பு

    நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு

    அப்படிச் சொல்கிற போது ஓரு கவிஞன் தலைநிமிர்ந்து நிற்கிறான்.  மனிதன் வேறு கவிஞன் வேறு.. கவிஞர்கள் மனிதர்களாக இல்லாவிட்டால் அவர்கள் கவிஞர்களே அல்ல.. ஆனால் இங்கே.. ஒரு மனிதனாக இருந்து கவிஞராக இருக்கிற.. கவிதையாக இருக்கிற .. வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாமல் வாழ்ந்திட்ட மாபெரும் மனிதனுடைய  சுயப் பிரகடனம்.  ஆகவே நமக்குத் தொழில் கவிதை.. நாட்டுக்கு உழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்று பாட்டுக்கொரு புலவன் பாரதி பேசியவண்ணமே.. தன்னைத்தானே அறிமுகப்படுத்துகிற அந்தத் துணிச்சல்மிக்க வரிகள் எனக்கு எப்போதும் பிடிக்கும்.

    என்.சி.ஞானப்பிரகாசம் – பாரதி காண விரும்பிய புதுமைப் பெண்கள் நாங்கள் பார்த்திருக்கிறோம்.  பாரதி கண்ட புரட்சிப் பெண்கள் யார்? யார்?

    வலம்புரியார் – புரட்சிப் பெண்கள் என்றால் முற்போக்கானவர்கள் என்பது மாத்திரமல்ல.. சமுதாய அக்கறை படைத்தவர்கள்.  அப்படிப் பார்க்கிறபோது.. இந்திய மண்ணில்.. அன்னை தெரசா வந்து ஒரு புதுமைப்பெண். புதுமைப் பெண் என்றால் வயதைப் பார்ப்பார்கள்.  பெண்தானே.. வயதைப் பற்றியதல்ல.. கல்கத்தாவில் காலிகன் என்கிற இடத்தில் ஏழை பாழைகளுக்காக ஒரு ஆசிரமம் கட்டி வந்தார்.  அதற்காக கையேந்தி வந்தார்.  ஒரு பணக்காரர் பார்த்துக் கொண்டேயிருந்து காறி உமிழ்ந்தார்.  அந்த எச்சிலைத் தன் கரங்களிலே வாங்கிக் கொண்டு.. இந்த எச்சில் எனக்குப் போதும்.  என் ஏழைகளுக்கு என்ன தரப் போகிறீர்கள் என்று கேட்டார்.  ஆக.. அவளைவிட புரட்சிப் பெண்ணை இந்த மண்ணில் நான் சந்தித்ததில்லை.  புரட்சிப் பெண்கள் என்று சொல்கிறபோது பாரதி கண்ட புதுமைப் பெண் என்றெல்லாம் பேசுவார்கள்.  எனக்குப் பார்க்கிறபோது அந்த அம்மா ஒருத்திதான்.  அதுபோல சீனநாட்டிலே ஹேன்சுயின் என்றொரு எழுத்தாளர்.  அந்த எழுத்தாளர் புரட்சிப் பெண்.. ஏனென்றால் நான் அவர்களை அறிவேன்.  அவர்கள்தான மாசேதுங்கின் வரலாற்றை எழுதியவர்கள்.. Morning Dilige காலை வெள்ளம் என்று பெயர்.  வாழ்க்கை முழுவதுமே ஒரு நோபில் பரிசு பெறுகின்ற அளவிற்கு அவர்கள் தன்னை வளர்த்துக் கொண்டிருந்தார்கள்.  அப்படி உலக அளவில் எனக்கு சிலரை நன்றாக எனக்கு விளங்கிக் கொண்டிருக்கிறது.  மற்றவர்கள் அப்படி இப்படி இருக்கிறார்கள்.  ஆக ஒரு புரட்சிப் பெண் என்று சொன்னால் அவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற இலக்கணத்துக்கு உட்பட்டவர்களாக இந்த இரண்டு பேரையும் நான் எப்போதும் கருதுவேன்.

    என்.சி.ஞானப்பிரகாசம் – அடுத்து நாடோடி மன்னன் படத்தில் ஒரு பாடல்.. காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம்..

    வலம்புரியார் – இது வந்து பட்டுக்கோட்டை ஒரு பாட்டுக் கோட்டை.. இந்தப் பட்டுக்கோட்டை ஒரு பலாப்பழச் சொற்களுக்குள்ளே பருவைரக் கருத்துக்களை வைத்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.  ஏனென்றால் பொதுவுடைமை அறிக்கையில் காரல் மார்க்ஸ் அவர்களும் ஃபெடரிக் கேங்கில்ஸ் அவர்களும் உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்.. நீங்கள் இழுக்க வேண்டியது சங்கிலிகளைத் தவிர வேறொன்றுமில்லை என்று சொன்னார்கள்.  இந்த அரிய கருத்தை திரைப்பாடலிலே கொண்டு வர இயலுமா என்றால் .. கொண்டு வர இயலும் என்று காட்டி.. காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம் .. என்று பாடி வைத்தார் பட்டுக்கோட்டையார்.  அவருடைய பாடல்கள் அதிகமில்லை என்றாலும் கூட ஒரு ஆயிரம் பாடல்கள் எழுதித்தான் நிற்கவேண்டும் என்பதல்ல என்பதற்கு பட்டுக்கோட்டை ஒரு சிறந்த உதாரணம்.  ஆக ஒரு இலட்சியத்தை ஒரு கவிஞன் சாதாரண மக்களுக்கு ஊட்டுவதிலே எவ்வளவு நாட்டம் காட்டுகிறான் எனபதற்கு அடையாளமாய் இருப்பதால் இது எனக்குப் பிடிக்கும்.

           சும்மாக் கிடந்த நிலத்தைக் கொத்தி..

           சோம்பலில்லாம ஏர்நடத்தி..

           கம்மாக் கரையை உசத்திக் கட்டி

           நெல்லு விளைஞ்சிருக்கு ..

    என்.சி.ஞானப்பிரகாசம் – அக்கறைச் சீமையிலே நடந்த ஒரு சம்பவத்திற்கு அக்கறையாக இங்கிருந்து ஒரு கடிதம் எழுதினீர்கள்.. நினைவிருக்கிறதா?

    வலம்புரியார் – நினைவிருக்கிறது.  BERTROM Russels உடைய இல்லத்தை இடிக்கப் போகிறார்கள் என்று ஆங்கில நாளேட்டிலே செய்தி வந்தது. வந்து House of Commonsல ஒரு தீர்மானம் வந்தது.  பத்திரிக்கையிலே அது வந்தபோது.. இங்கே இருந்து ஒரு கடிதம் எழுதி நான் அந்த நாட்டின் அரசியாருக்கு அனுப்பி வைத்தேன்.  BERTROM Russels உங்களுக்கு மட்டும் சொந்தமல்ல.. பரந்த இந்த உலகமெல்லாமே அவருக்குச் சொந்தம் என்று கடிதம் எழுதினேன்.  தூதுவர் வந்து ஆனால் அந்த  முயற்சி கைவிடப்பட்டதாக என்று சொன்னார்.  நான் எழுதியதற்காக அல்ல.. உலகம் முழுவதுமிருந்து அப்படி எழுதியிருக்கிறார்கள்.  இதற்கெல்லாம் என்ன காரணம் என்று கேட்டால் சின்ன வயதில் BERTROM Russels Best என்கிற புத்தகம் எனக்குக் கிடைத்தது.  அந்தப் புத்தகத்தைப் படித்தபோதுதான் முதன் முதலாக உலகத்தில் இப்படிப்பட்ட எண்ணங்களும் இருக்கின்றன என்கிற அந்த சிந்தனையே வந்தது.  அவரை எனக்கு வெகுவாகப் பிடிக்கும்.

    என்.சி.ஞானப்பிரகாசம் – அரசு கொடுத்தது கலைமாமணி பட்டம். வார்த்தைச் சித்தர்..  ஞான பாரதி எப்போது கிடைத்தது?

    வலம்புரியார் – வார்த்தைச் சித்தர் என்கிற பட்டத்தை வழங்கியவர் திருமுருக கிருபானந்தவாரியார் அவர்கள்.  ஞான பாரதி என்கிற பட்டத்தை வழங்கியவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள்.

    காலங்காலமாக வார்த்தைச் சித்தர் என்றால் வார்த்தைச் சித்தர். வானாவுக்கு வானா.. வருகிறதல்லவா.. வேறொன்றும் நாம் அருள் பெற்றுக்கொண்டு வரவில்லை.  அன்பொழுக மக்கள் அப்படி அழைக்கிறார்கள்.  இராதகிருஷ்ணன் அறிஞர்.. அவரை தத்துவஞானி என்று சொல்கிறார்கள்.  தத்துவ ஞானி என்கிறீர்களே.. என்ன தத்துவம் சொன்னார் என்று எவரையேனும் கேட்டுப்பாருங்கள்.. ஏதாவது ஒன்றைச் சொன்னால் நான் அவர்களுக்குத் தலை வணங்குவேன்.  மற்றவர்களுடைய தத்துவங்களை எடுத்துச் சொன்னாலே நம் நாட்டில் அவர்களை தத்துவஞானி என்று சொல்கிறார்கள்.  அந்த வார்த்தைகளில் கொஞ்சம் வசிய மையைப் பூசினால் வார்த்தைச் சித்தர் என்று சொல்வார்கள்.

    ஞான பாரதி என்கிற பெயர் எனக்குப் பிடித்ததற்கு காரணம் என்னவென்றால் அது பாரதியோடு ஒட்டிவருகிறது.  பாரதியினுடைய ஒரு நிழலாக அவருடைய கால் தடத்தில் ஒருபிடி மண்ணாக இருப்பதுகூட எனக்குப் பெருமை என்று நினைக்கிறவன். ஆகவேதான் அந்தப் பட்டங்களை மற்றவர்கள் போடும்போது நான் தடுப்பதில்லை..

     என்.சி.ஞானப்பிரகாசம் – வானொலி நிலையத்திற்கு வந்து சிறப்பான நல்ல பல தகவல்களைச் சொன்னீர்கள்.

    வலம்புரியார் – நன்றி வணக்கம்!!

    என்றும் அன்புடன்,
    காவிரிமைந்தன்
    (மு.இரவிச்சந்திரன்)
    கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்)
    சென்னை 600 075
    தற்போது – அபுதாபி..
    00971 50 2519693

     

    Share
  • ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்.. – கவிஞர் வாலி

    கவிஞர் காவிரி மைந்தன்

    கவிஞருடனும் நெருங்கிய தொடர்பும் நட்பும் கொண்டிருந்த கே.ஆர்.பாலன் எங்களில் ஒருவரானார்.  அனுபவரீதியாக பழுத்த பழம்போல் காட்சியளித்த அவர். திரையில் பல படங்களைத் தயாரித்த பெருமைக்குரியவர்.  எளிமையானவர். இனிமையாகப் பழகக்கூடியவர். இவரிடமிருந்து திரைத்துறைபற்றிய பல்வேறு செய்திகளை அறிந்துகொள்ள முடிந்தது.   அப்படி பெறப்பட்ட செய்திதான் கவிஞர் வாலி அவர்களின் பாடலான ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என்கிற  பாடலின் உருவாக்கம் பற்றி நான் எழுதிய வாழும் தமிழே வாலி என்கிற நூலில் இடம்பெற்ற பகுதியாகும். 

     

    ஏ.வி.எம். நிறுவனத்தார் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த ஒரே படம்.. எம்.ஜி.ஆர். நடிப்பில் சண்டைக்காட்சிகளே இல்லாத படம் என்று பல தனித்துவங்களை உள்ளடக்கிய படம் அன்பே வா..  கவிஞர் வாலி அவர்கள் எழுதிய பாடல்கள் முழுவதுமாக இடம்பெற்ற இப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் காட்சி பதிவான பின்னணி சுவையானது.  

     

    ஏ.சி.திருலோகச்சந்தர் அவர்களது இயக்கத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் கைவண்ணத்தில் அனைத்துப் பாடல்களும் மிகப்பெரிய வெற்றி!!

     

    முழுக்க முழுக்க காதலர்கள் இடையே உருவாகும் போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்! கண்ணுக்கு குளிர்ச்சியாக சிம்லாவில் அன்றைய நாளில் படப்பிடிப்பு!  நாகேஷ் – மனோரமா நகைச்சுவை காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்ற படம்!  இத்திரைப்படத்தின் பாட்டுப்புத்தகம் கூட ஆர்.பி.எம். ரெக்கார்டு போன்று வட்டவடிவில் வந்தது இன்றும் நினைவில் உண்டு.  

     

    எம்.ஜி.ஆர். ரசிகர்களால் எண்ணிக்கை பாராமல் பார்க்கப்பட்ட பட வரிசையில் அன்பே வாவிற்கு தனி இடம் உண்டு!  புதிய வானம் புதிய பூமிலவ் பேர்ட்ஸ்நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன்.. ஏ.. நாடோடி.. போக வேண்டும் ஓடோடி.. அன்பே வா.. அன்பே வா.. என்னும் பாடல்களுடன்.. ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்!!

     

    இந்தத் திரைப்பாடலுக்கு கவிஞர் வாலி எடுத்துக்கொண்ட நேரம்  சற்றே வித்தியாசமானது.  இசையமைப்பு (Tune)கொடுக்கப்பட்டு எழுத முயன்றும் ஏனோ வார்த்தைகள் சரியாக பிடிபடாமல்நேரம் கடந்து கொண்டே சென்றது. பாடல் கிடைத்துவிட்டால்,பதிவு செய்யப்பட்டு பாடல்காட்சியை படம்பிடித்துவிடாலாம் என்று படக்குழுவினர் காத்திருக்க.. அமைக்கப்பட்ட இசையோ.. அருமை என அனைவராலும் ஏற்கப்பட்.. அந்த முழுநாளும் பாடல் பிறக்காமல் முடிந்துவிடுகிறது.  வீட்டிற்குச்சென்ற கவிஞர் சற்றே வருத்தமுடன் காணப்பட்டார்.  இரவு உணவு கூட வேண்டாம்.  பால் மட்டும் போதும் என்று கூற அவரின் மனைவி.. அவ்வாறே பால் எடுத்துச்செல்கிறார் அந்த அறைக்குள்.. கவிஞரின் கற்பனையில் வரி ஒன்று  தோன்றுகிறது..

     

    பாவலன் மறந்த பாடலில் ஒன்று

    பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று..

    தலைவனை அழைத்தேன்.. தழுவிட துடித்தேன்..

    பாடலின் பல்லவி பின் வருகிறது.. தான் எழுத மறந்த பாடலிது என்பதையே வரியாக்கி அந்த இசைக்கட்டுக்குள் கெட்டிக்காரத்தனமாக வைத்த வாலியைப் பாராட்டலாமே!

    ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்.. கண்மூடுதே சொர்க்கம்.. கை மூடுதே வெட்கம்.. 

    எம்.ஜி,ஆர். சரோஜாதேவி.. இணைந்து குதிரை சாளர வண்டியிலே அந்தக் குளம்படிச்சத்தமே பின்னணி இசையாய் தொடரசெந்தூர வண்ணங்கள் வானம் முழுவதும் சிதறிவிழ.. மனக்கண்களில் இன்றும் தெரியும் இனிய பாடலாய்..

     

    http://www.youtube.com/watch?v=UMgp2hO5l_8

     

     

    ராஜாவின் பார்வை ராணியின் – Rajavin paarvai
    Share
  • நான் மலரோடு தனியாக

    காதல் கீதங்களின் உச்சத்தை எட்டிப்பார்க்க எண்ணுபவர்கள் கண்ணதாசன் பாடல்களை நுகரலாம். இலக்கிய ரசனையைத் திரைப்பாடல்கள் வாயிலாகவும் தரமுடியும் என்று நிருபித்தவர் கவிஞராவார். 1998ல் துபாயில் முதன் முறையாக அயலகப் பணி மேற்கொண்டிருந்தபோது காலையும் மாலையும் வாகனப் பயணங்களின்போது தமிழ்த்திரையிசைப் பாடல்களோடு சங்கமித்து சென்ற நாட்கள் வசந்தகாலங்கள் என்பது மிகையில்லை.. அப்படியொரு நாள் மலையாள மொழிபேசும் ஒரு அதிகாரி என்னிடம் விவாதித்த பாடலிது. அவர் தமிழ் மொழியை முழுமையாக அறிந்தவரில்லை.. எனினும் இந்தப் பாடலின் வரிகள் தம்மை வெகுவாகக் கவர்ந்தவை என்றார்.

    என் கருங்கூந்தல் மேகங்கள் கலைந்தோடியாட..

    நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற..

    அடடா.. பாடல் வரிகளில் உள்ள சுகம்.. இசை நயம்.. குரல் வளம் என்று பாராட்டி மகிழ்ந்தார்.. திரு.ஜார்ஜ் என்னும் அந்த இனிய நண்பர்.

    பிறகு இலக்கிய வட்டத்தில் எனது தோழர்களோடு இதைப்பற்றிக் கூறியபோது.. இன்னும் சில செய்திகள் இப்பாடல் பற்றி கிடைத்தன. அதையும் கேளுங்களேன்..

    பொதுவாக.. இந்திப் படங்களில் வெற்றி பெறும் பாடல் மெட்டுக்களைத் தமிழில் அப்படியே தன் பாணியில் தருவதில் வல்லவர் இசையமைப்பாளர் திரு.வேதா அவர்கள்.. அப்படியொரு பாடல் பிறந்த விதம் பாருங்கள்.. இசையின் வடிவம் இந்திப்பாடலில்.. கேட்டுக் கொண்டார் கண்ணதாசன்!

    பொதுவாக திருமணமானபின்னரே.. கணவன் மனைவியிடம் உரிமையோடு அங்கே பார்க்காதே.. அங்கே செல்லாதே.. என்றெல்லாம் கூறுவதுண்டு. ஆனால்.. இப்பாடலில்.. காதலி.. காலம் கடந்து வந்தமைக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று தானே கேட்கும் காதலனுக்கு காதலி தருகின்ற பதில் என்கிற வகையில் பாடல் பிறக்கிறது.. நிறைகிறது..

    நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
    உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
    உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
    உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
    உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
    உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
    பெண் தரும் பதிலில்..

    பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
    நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
    பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
    நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
    என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
    நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
    என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
    நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

    எத்தனை நயங்கள்? எத்தனை இலக்கிய அழகு? எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத காதல் பாடல் அல்லவா? இசையின் கோர்வையும் கவிதையோடு கைகோர்த்தல்லவா பவனி வருகிறது? இரவின் மடியில் இளமை மழையில் நனைகின்ற போதெல்லாம்.. இதமான தென்றலாய்.. இப்பாடல் ஒலிக்கட்டுமே! கவியரசரின் கற்பனைத் திறனை, இலக்கிய நயத்தை எண்ணியெண்ணி என்றென்றும் மகிழலாமே!!

    பாடல்: நான் மலரோடு தனியாக
    திரைப்படம்: இரு வல்லவர்கள்
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: வேதா ஆண்டு: 1966
    நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – என்
    மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
    நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – என்
    மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
    நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
    உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
    நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – என்
    மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
    நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
    உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
    உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
    உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
    உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
    உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
    நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
    உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
    நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – என்
    மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
    பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
    நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
    பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
    நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
    என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
    நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
    என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
    நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
    நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
    உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
    நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – என்
    மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

    http://www.youtube.com/watch?v=Jd2y-eHo7B8

    http://www.youtube.com/watch?v=Jd2y-eHo7B8

    Share
  • சிறுகூடற்பட்டி முதல் சிகாகோ வரை.. – கவியரசு

    கவிஞர். காவிரிமைந்தன்

    தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா

    காலம் எத்தனையோ கவிஞர்களை பிரசவித்திருக்கிறது! அவர்களும் தங்கள் திறமையால்.. தமிழ் மொழியில் அற்புதங்களைப் படைத்துச் சென்றிருக்கிறார்கள். கண்ணதாசன் அவர்களும் இந்தவழியில்தான் வந்து சென்றார்! ஆனால் சாதாரண ஜீவமரண கணக்குக்குள் அடங்கிவிடாத ஜீவநதியாய் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறார் தன் படைப்புகளால்! அவரின் கவித்துவம் எளிமையில் பிறக்கிறது! நீங்களும் நானும் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளைத்தான் அவரும் கைப்பிடிக்கிறார். ஆனால் கவிஞரின் வசப்பட்டதும்.. அந்த வார்த்தைகள் பெருமையுறுகின்றன. நம்மை உடனே வியப்பில் தள்ளிவிடுகின்றன!

    இயற்கையாக நடக்கும் எதுவும்கூட கவிஞனின் கைவண்ணத்தால் இன்னும் மெருகேறுகிறது! இறைவனை .. இந்த உலகில் கண்ணதாசன் இழுத்துவந்ததைப் போல் இன்னொருவர் செய்ததுண்டா என்றால் சந்தேகமே!

    கடவுளை வணங்கிப் போற்றி வந்தனை செய்தவர்தான் என்றாலும் பாடல் வரிகளில் நியாயம் கேட்கத் தயங்காத எதார்த்தவாதியாக பரிணமிக்கிறார்! பாடலின் பல்லவி தவிர மூன்று சரணங்கள்.. திரைக்கதைக்காக எழுதப்பட்ட பாடல்தான் என்றாலும்.. இதில் உள்ள நியாயங்கள் திரைப்படத்தைத் தாண்டியும் உணரப்படுகிறதே!

    தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று
    நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா
    ஏனிந்த வாழ்க்கை என்று அறியேனம்மா
    ஏனிந்த வாழ்க்கை என்று அறியேனம்மா
    இது இறைவனுக்கு ஓய்வு நேர விளையாட்டம்மா

    பெற்றவள் உடல் சலித்தாள் பேதை நான் கால் சலித்தேன்
    படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா
    அம்மா அம்மா அம்மம்மா
    பெற்றவள் உடல் சலித்தாள் பேதை நான் கால் சலித்தேன்
    படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா – மீண்டும்
    பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா – மீண்டும்
    பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா

    பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறந்திடும்
    இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா
    அம்மா அம்மம்மா
    பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறந்திடும்
    இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா – என்றும்
    இது தான் நீதி என்றால் இறைவன் வேண்டுமா – என்றும்
    இது தான் நீதி என்றால் இறைவன் வேண்டுமா

    திரைப்படக்காட்சியில் புன்னகை அரசி கே.ஆர்.விஜயாவின் பண்பட்ட நடிப்பில் பார்ப்பவர்கள் கண்ணில் நீர்வரும்! இசையின் வடிவமோ திரையிசைத்திலகத்தின் கைவண்ணத்தில் உணர்வுகளை மீட்ட வருகிறது! ஏ.பி.நாகராஜன் அவர்களின் இயக்கத்தில் சரஸ்வதி சபதம் திரையோவியம். இப்பாடலைக் கேட்கும் போது இதயத்தின் துடிப்பு ஏனோ இருமடங்காகிறது!!

    http://youtu.be/xjiRbHe-VG4

    தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று
    நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா
    தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று
    நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா
    ஏனிந்த வாழ்க்கை என்று அறியேனம்மா
    ஏனிந்த வாழ்க்கை என்று அறியேனம்மா
    இது இறைவனுக்கு ஓய்வு நேர விளையாட்டம்மா

    தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று
    நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா

    பெற்றவள் உடல் சலித்தாள் பேதை நான் கால் சலித்தேன்
    படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா
    அம்மா அம்மா அம்மம்மா
    பெற்றவள் உடல் சலித்தாள் பேதை நான் கால் சலித்தேன்
    படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா – மீண்டும்
    பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா – மீண்டும்
    பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா

    தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று
    நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா

    பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறந்திடும்
    இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா
    அம்மா அம்மம்மா
    பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறந்திடும்
    இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா – என்றும்
    இது தான் நீதி என்றால் இறைவன் வேண்டுமா – என்றும்
    இது தான் நீதி என்றால் இறைவன் வேண்டுமா

    தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா இன்று
    நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா

     

    Song: தாய் தந்த பிச்சையிலே – thai thantha pichchaiyile
    Movie – திரைப்படம்: சரஸ்வதி சபதம்
    Singers: P. Suseela பாடியவர்: P. சுசீலா
    Lyrics: Poet Kanndasan இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    Music: K.V. Mahadevan, இசை: K.V. மஹாதேவன்

    கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் எளிமைக்கு சான்று.  அது பற்றிய செய்திகள்.. விவரங்கள்.. இனிமை..  சொல்லாட்சி.. இவை பற்றிய வாசகர்களின் பின்னூட்டங்களுக்காக காத்திருக்கிறேன்.
     
     
    அன்புடன் 
    காவிரிமைந்தன் 

     

    Share
  • சிறுகூடற்பட்டி முதல் சிகாகோ வரை.. – கவியரசு

    கவிஞர் காவிரிமைந்தன்

    நாளை முதல் குடிக்க மாட்டேன்…

    கவிஞரின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். 2002ஆம் ஆண்டுவிழாவின் அழைப்பிதழைக் கொடுப்பதற்காக ராகப்ராவகம் சுந்தர் அவர்களது இல்லத்திற்கு சென்றபோது.. அங்கே இருந்த விருந்தினர் இருவர் எமக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிவசு எனப்படும் சிவசுப்பிரமணியன் அவர். சன் தொலைக்காட்சியில் வணக்கம் தமிழகம் பகுதி நிகழ்ச்சி தயாரிப்பாளர் என்பது கிடைத்த தகவல்.

    சந்தித்த சில நிமிடங்களிலேயே ஒரு பெரிய பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்தார். ஆம். கவிஞரின் பிறந்தநாளில் இடம் பெற வேண்டிய வணக்கம் தமிழகம் பகுதியில் கவிஞரின் உதவியாளர் திரு. இராம கண்ணப்பன் அவர்களை பங்கேற்கச் செய்ய வேண்டும் என்பதே அப்பநியாகும். கொட்டும் மழையிலும் என்னுடன் இணைந்து வந்த நண்பர்.. கண்ணதாசனின் பக்தர் வேலுமணி அவர்களின் மூலம். எதோ ஒரு சில காரணங்களால் இது போன்ற பேட்டிகளைத் தவிர்த்து வந்த திரு இராம கண்ணப்பன் அவர்களை பங்கேற்கச் செய்தது இனிய செய்தியாகும்.

    மேலும் சிவசு அவர்களிடம் நாங்கள் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், அழைப்பிதழின் மேலுறையில் இடபெற்றிருந்த கவியரசின் உருவப்படத்தைப் பார்த்து கவிஞரைப் பற்றி அவர் கூறிய சில வார்த்தைகள்.. இமயமென உயர்ந்து எங்கள் மனதில் என்றும் நிலைக்கத் தக்கவை. ஆம். இந்த உலகில் நான் இவரைத்தான் மிகவும் நேசிக்கிறேன். ஒருவர் அன்னை தெரசா .. அடுத்து கவிஞர் கண்ணதாசன். ஏன் என்பதற்கும் அவரே தந்த விளக்கம் அசர வைத்தது. அன்னை தெரசா பற்றி அகிலம் அறியும். ஆனால் கண்ணதாசனைப் பற்றி அவர் என்ன சொன்னார் தெரியுமா?

    உலகம்போற்றும் உத்தமர் காந்தியடிகள் தனது சத்தியசோதனையில் தன்னைப்பற்றிய செய்திகளைப் பகிர்ந்துகொள்ளும்போது தான் செய்த சில தவறுகளையும் பதிவு செய்து மக்கள் மனதில் உயர்ந்தார். அதைவிட பல மடங்கு.. ஏன் தன் வாழ்க்கை முழுவதையுமே தான் செய்த தவறுகளையெல்லாம் முழுக்க முழுக்க பேச்சிலும் ஏட்டிலும் ஒளிவு மறைவின்றி திறந்த புத்தகமாய் வாழ்ந்து மறைந்தவர் கண்ணதாசன் மட்டுமே. ஒரு தனி மனிதர் தன்னைப்பற்றிய நல்ல குணாதிசயங்களை மட்டுமே இவ்வுலகம் அறியச் செய்வது இயல்பு. எந்த வேளையிலும் எந்த ஒரு தனி மனிதனும் இதற்கு விதிவிலக்கல்ல! வாழும் இந்த உலகில் சிவசு அவர்களின் கணிப்பு எங்களைச் சிந்திக்க வைத்தது! இவற்றையும் தாண்டி கவிஞரின் புகழ் நிரந்தரமாக்க எப்படி முடிந்தது? தமிழ் அல்லவா கவிஞரை இன்றும் நம்மோடு இணைத்து வைத்துள்ளது?

    என்னைப்போல் வாழாதீர்கள்.. நான் எழுதியது போல் வாழுங்கள் என்பது தானே கண்ணதாசன் செப்பு மொழி!

    ‘நீதி’ என்கிற திரைப்படத்தில் மது அருந்தும் பழக்கம் கொண்ட கதாநாயகன் பாடுன்கின்ற பாடல் ஒன்று இடம் பெற வேண்டிய நிலையில் மெல்லிசை மன்னர் மெட்டமைத்து கவிஞருக்காக காத்திருந்தபோது.. தனக்கு தோன்றிய பல்லவியை வைத்து இசை அமைப்பில் இணைத்திருந்தார். கவிஞர் அங்கே வந்தவுடன்.. தான் வைத்திருந்த பல்லவியையும் இணைத்து கவிஞரிடம் காட்ட.. கதாநாயகன் .. இனி நான் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்வதாக காட்சி..

    இன்று முதல் குடிக்க மாட்டேன் – சத்தியமடி தங்கம் என்கிற பல்லவியை பார்த்து கண்ணதாசன் மெல்லிசை மன்னரிடம் தன் பாக்கெட்டிலிருந்த பத்து ரூபாயை எடுத்துக் கொடுத்து உன் பல்லவிக்கான சந்மனமிது. ஆனால் எந்த குடிகாரனும் இன்று முதல் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய மாட்டான். எனவே, நாளை முதல் குடிக்க மாட்டேன் என்று மாற்றி படலை எழுதித் தந்த வரலாறு இப்பாடலுக்கு உண்டு
    .
    ஏழைகள் வாழ்வில் விளையாடும் இறைவா நீ கூட குடிகாரன் .. என்கிற வைர வரிக்காக கண்ணதாசனை உளமாரப் பாராட்டத் தோன்றுகிறது
    .
    கவியரசே உன்னால் மட்டுமே படைத்தவன் மேல் இப்படி பகிரங்க குற்றம் சாட்ட முடிந்திருக்கிறது. இதிலிருந்து தப்ப.. முடியாமல் பரமனும்.. பிரம்மனும் அல்லவா சங்கடப் படுவது போல் தோன்றுகிறது..

    http://www.youtube.com/watch?v=XYWxPuf7BIk

     

    http://www.youtube.com/watch?v=XYWxPuf7BIk

    கருத்துக்களை வரவேற்கிறேன்.. கவிஞரைப் பற்றிய தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் பற்றிய புளித்துப்போன .. உதவாத கேள்விகளைத் தவிர்த்து அவர்தம் பாடல்களில் உள்ள சுவைதனை, தமிழினை.. இன்னுமின்னும் இன்பம் வாசகர்கள் பெறுவார்கள் என்கிற நம்பிக்கையுடன்..

    காவிரிமைந்தன்

    Share