Tag: மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

  • நாவலர் பெருமானை நாமென்றும் போற்றுவமே!

    நாவலர் பெருமானை நாமென்றும் போற்றுவமே!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    சைவத்தைத் தமிழைத்  தம்முயிராய் எண்ணி
    வையத்தில் பலரும் வந்தார்கள் தந்தார்கள்
    திருமுறைச் செல்வர்கள் அளவிலாத் தந்தார்கள்
    அவர்வழியைத் தொடர்ந்து வந்தார்கள் சிலபேர்கள்

    நாயன்மார் வழியைத் தடம்பற்றி நின்று
    நல்லைநகர் நாவலரும் நற்றடத்தைப் பதித்தார்
    நற்றமிழை அணைத்தார் நம்சைவம் காத்தார்
    கற்றபடி நடந்தார் கடவுளையே நினைத்தார்

    நீறணியும் குடும்பம் நேர்மையுடை குடும்பம்
    நாவலரின் குடும்பம் நல்லதொரு குடும்பம்
    சைவமொடு தமிழை தாங்கிவிடும் குடும்பம்
    சன்மார்கம் நிறைந்த நாவலரின் குடும்பம்

    தமிழோடு சைவம் தானவர்கள் சொத்து
    சைவத்தை அவர்கள் உயிராக நினைத்தார்
    நாவலரின் மனத்தில் பதிந்தநல் விதையாய்
    நம்சைவ மூன்றி வேர்விட்டு நின்றதே

    சைவத்தைக் காத்திட தனையீந்தார் நாவலர்
    சைவத்தைப் பரப்பிடத் தலமையினை ஏற்றார்
    சைவத்தைத் தடுப்பாரை தூக்கியே எறிந்தார்
    சைவத்தின் காவலனாய் தலைநிமிர்ந்து நின்றார்

    மாற்றுமத போதனையை மறுத்துரைத்து நின்றார்
    மாற்றுமதத் தலைமைகளை மண்கெளவச் செய்தார்
    சைவத்தின் மேன்மைகளை சகலருக்கும் சொன்னார்
    சன்மார்க்க வழிநடந்து சாதித்தார் நாவலரும்

    கற்பவைகள் கற்றார் கசடறவே கற்றார்
    மற்றவர் விளங்க மறுதலியா உரைத்தார்
    சொற்கள் சுவையாக சுள்ளென்று உறைக்க
    கருத்தோடு சொற்கள் கணக்கின்றிப் பெருகின

    நீறணிந்த நெற்றியுடன் நிமிர்ந்தநற் பார்வையுடன்
    நாவலரும் வந்தார் நம்சைவம் காத்தார்
    பாவலரும் பண்டிதரும் நாவலரைப் பார்த்து
    தேவார முதலிகளே வந்ததாய் நினைத்தார்

    ஐந்தாங் குரவராய் ஆக்கினார் நாவலரை
    அரன்நாமம் சொல்லியே நாவலரும் வாழ்ந்தார்
    அறமேந்தி வாழ்ந்தார் ஆன்மீகம் அணைத்தார்
    அன்னைத் தமிழுக்கு அரும்பணிகள் ஆற்றினார்

    இலக்கியத்தை இலக்கணத்தை ஏந்தினார் நாவலர்
    எழுத்துப் பிழையினை எதிரியாய் பார்த்தார்
    சொற்பிழை தவிர்த்தார் நற்றமிழ் விதைத்தார்
    தமிழன்னை சிறக்கவே தமிழ்த்தொண்டு செய்தார்

    கல்வியைக் கண்ணாய்க் கருதென்று மொழிந்தார்
    கற்பதற்கு வசதியாய் நூல்களை எழுதினார்
    பள்ளிகளை நிறுவினார் பாடநூல்கள் ஈந்தார்
    தெள்ளுதமிழ் உள்ளமெலாம் நிறைந்திடவே செய்தார்

    நாவலரின் வசனநடை நற்றமிழின் வரமாகும்
    வசனநடை  கைவந்த வல்லாளர் நாவலரே
    அவர்நடையை தமிழறிஞர் அனைவருமே போற்றுகிறார்
    போற்றுகின்ற நாவலரை ஏற்றியே வாழ்த்திடுவோம்

    ஈழத்தில் சைவம் எழுந்தோங்கி நிற்பதற்கு
    காரணமாய் காவலனாய் நாவலரே நிற்கின்றார்
    நாவலர் வரவாலே நம்சைவம் பிழைத்தது
    நாவலர் பெருமானை நாமென்றும் போற்றுவமே !

    Share
  • பாரதி பாட்டை பக்குவப் படுத்துவோம்!

    பாரதி பாட்டை பக்குவப் படுத்துவோம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    புரட்சிக்கும் பாரதி புதுமைக்கும் பாரதி
    அயர்ச்சியை நாளும் அகற்றினான் பாரதி
    துணிவுக்கும் பாரதி துடிப்புக் பாரதி
    பணிவுக்கும் பாடினான் பக்திக்கும் பாடினான்

    தமிழன்னை ஈன்ற தவப்புதல்வன் பாரதி
    தமிழதனை அமுதமாய் கண்டவன் பாரதி
    தமிழொன்றே பெருமை எனவுரைத்தான் பாரதி
    தலைநிமிர வாழப் பலவுரைத்தான் பாரதி

    பன்மொழிகள் கற்றான் பற்றினான் தமிழை
    பக்தியை மனத்தில் இருத்தினான் பாரதி
    கடவுளை நம்பினான் கண்ணியம் காத்தான்
    கடமையைச் செய்யென கட்டளை இட்டான்

    வேதம் படித்தான் புராணம் படித்தான்
    வேண்டாக் கருத்தை விலக்கியே நின்றான்
    பாதகம் கடிந்தான் பக்குவம் உரைத்தான்
    பார்க்கும் அனைத்திலும் பரம்பொருள் கண்டான்

    நாத்திகம் பேசிடும் ஆத்தீகன் பாரதி
    வேண்டா அனைத்தையும் விலக்கிடச் சொன்னான்
    கடவுளை வெறுத்திடச் சொல்லவும் இல்லை
    கள்ளம் போக்கிடல் கட்டாயம் என்றான்

    கண்ணனைப் பாடினான் சக்தியைப் பாடினான்
    கீதையை மனத்தில் இருத்தியே வாழ்ந்தான்
    பாரத தேசத்தைப் பராசக்தி என்றான்
    மண்ணினைத் தெய்வமாய் மனமதில் கொண்டான்

    பாரதி சிந்தனை பரந்தது விரிந்தது
    பாப்பாவைப் பாடுவான் பரமனைப் பாடுவான்
    ஏய்த்திடு மாந்தரை இகழ்ந்துமே பாடுவான்
    எவருக்கும் அஞ்சா பாடினான் பாரதி

    வள்ளுவன் கம்பனை மனமதில் இருத்தினான்
    இளங்கோக் கவிஞனை ஏந்தியே நின்றான்
    தெள்ளிய திருமுறை உள்ளத்தி லிருத்தினான்
    திருமால் அடியார் பாடலும் விரும்பினான்

    வேதிய குலத்தில் பிறந்தவன் பாரதி
    வேதம் நன்றாய்க் கற்றவன் பாரதி
    சாதியை எதிர்த்து சன்னதம் கொண்டு
    சமத்துவம் பேசி நின்றவன் பாரதி

    பாட்டில் புரட்சி செய்தவன் பாரதி
    ஏட்டில் புரட்சியை காட்டியே நின்றவன்
    நாட்டில் புரட்சிக்கு வித்தினை விதைத்தவன்
    நற்றமிழ் கவிஞனாய் ஒளிர்கிறான் பாரதி

    அஞ்சா நெஞ்சனாய் பாரதி வாழ்ந்தான்
    அவனிடம் சரஸ்வதி ஐக்கிய மாகினாள்
    அன்னைத் தமிழில் கவிமழை பொழிந்தான்
    அனைத்தும் தமிழின் பொக்கிஷம் ஆனது

    பாஞ்சாலி சபதம் வியந்திட வைக்கும்
    கீதையின் சிந்தனை உயர்ந்திடு படைப்பே
    குயிலின் பாட்டு பாரதி தத்துவம்
    ஆத்தி சூடியோ அவனது வித்துவம்

    பாப்பாப் பாட்டு எத்தனை அறிவுரை
    கேட்கக் கேட்க கருத்துகள் விரிந்திடும்
    பாரதி வரமாய் தமிழுக்கு வாய்த்தான்
    பாரதி பாட்டை பக்குவப் படுத்துவோம்!

    Share
  • சிந்தித்து நாமும் தெளிவடைதல் எக்காலம்!

    சிந்தித்து நாமும் தெளிவடைதல் எக்காலம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    ஓடும் வரை ஓட வேண்டும்
    உழைக்கும் வரை உழைக்க வேண்டும்
    வாடி நிற்போர் நிலை கண்டால்
    மனம் உவந்து வழங்க வேண்டும்

    மண் வாழப் பொருள் வேண்டும்
    மகிழ்ச்சி பொங்கப் பொருள் வேண்டும்
    கண் துஞ்சா உழைத்த பொருள்
    கை இருக்க அறம் வேண்டும்

    மற்றவர் வதையாக வந்திட்ட  எப்பொருளும்
    எத்தனை இருந்தாலும் இன்பமாய் ஆகாது
    கண்ணீரும் ரத்தமும் கலந்திட்ட  பொருளாலே
    களிப்புற்று நின்றிட்டால் கருணையே அழித்துவிடும்

    மாடிமனை கோடிபணம் வாய்ப்பார்கள் மகிழ்வார்கள்
    தேடியோடி சேர்த்ததெலாம் திசைமாறாப் போகுமுன்னர்
    வீடுதோறும் வாசற்படி விட்டகன்று போவதில்லை
    கேடுகெட்ட செயலென்றும் கிட்டவிடா மனநிறைவை

    மனம் வருந்தா உழைத்த பொருள்
    மன நிறைவை உவந் தளிக்கும்
    மனம் வருந்த குவிந்த பொருள்
    வாழ் வெல்லாம் பெருந் துயரே

    ஏழைகள் அழுதால் எல்லாமே அழிந்திடுமே
    ஏழைகள் அழுதகண்ணீர் கூர்வாளை ஒக்குமே
    ஏழைகளை வதைக்காமல் இரக்கத்தை இழக்காமல்
    வருகின்ற அத்தனையும் வளமாகத் தானிருக்கும்

    அடித்துக் குவிக்கும் பொரு ளெல்லாம்
    எடுக்க எடுக்க பெருந் துயரே
    அடுத்தவ ரழுகையில் வந்த பொருள்
    கெடுக்கு மென்பதை மனம் எடுப்போம்

    உடம்பினை விட்டு உயிர் போனால்
    தேடிய அனைத்தும்  கூட  வருமா
    செல்வாக் கிழந்து செருக் கிழந்து
    செல்லாக் காசாய் சிதை செல்வாய்

    தேடிய பொருள்கள் உனைப் பார்க்கா
    திரண்ட உறவுகள் கூட வரார்
    உந்தன் இருப்பிடம் மயானம் ஆகி
    ஒன்றுமே இல்லா நீ செல்வாய்

    சிந்தித்து நாமும் தெளிவடைதல் எக்காலம்
    தொந்தி சரியுமுன்னே தூய்மையுறல் எக்காலம்
    பொருளாலே அருளிழக்கும் போக்கினை மாற்றாமல்
    பொழுதினைப் பொருள்தேட செலவிடுதல் முறையாமோ !

    Share
  • தெள்ளத் தெளிந்தால் தெரிவான் இறைவன் !

    தெள்ளத் தெளிந்தால் தெரிவான் இறைவன் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    மாரியும் தெய்வம் மேரியும் தெய்வம்
    அரியும் தெய்வம் அரனும் தெய்வம்
    அல்லாவும் தெய்வம் அனைத்தும் தெய்வம்
    என்று எண்ணினால் எங்கும் நிறைவே

    அன்பே உருவாய் ஆனதே தெய்வம்
    அன்பே சிவமென அறிந்தோர் அறிவார்
    அன்பை விட்டால் தெய்வம் இல்லை
    அன்பே தெய்வம் அன்பே அனைத்தும்

    சமயம் பேசி சன்னதம் கொள்ளும்
    மனித மனங்கள் மாறிட வேண்டும்
    உருவம் இல்லா இறையை மக்கள்
    உருவம் கொடுத்து உணர்வை இழக்கிறார்

    ஆதியும் அந்தமும் இல்லா இறைவன்
    சோதியாய் சுடராய் இருப்பவன் இறைவன்
    பேதமே இல்லா பெரியவன் இறைவன்
    பெரும் பொருளாகியே இருக்கிறான் இறைவன்

    நீதியே இறைவன் நேர்மையே இறைவன்
    சாதிக்குள் இறைவன் சங்கமம் ஆகான்
    பேதிக்கும் வேளை பேணிட வருவான்
    பின்னம் இலாதான் பேரின்ப பெட்டகம்

    அழுதால் வருவான் தொழுதால் வருவான்
    அழுக்குடன் இருந்தால் அகிற்றிட வருவான்
    தன்னலம் கருதா உள்ளம் தெரிந்து
    தானே அவர்க்கு வழித்துணை யாவான்

    மண்ணிலும் இருப்பான் விண்ணிலும் இருப்பான்
    மரஞ்செடி கொடி அனைத்தும் இருப்பான்
    தேனாய் இருப்பான் சுவையாய் இருப்பான்
    தெரிவார் கண்ணுக்குத் தரிசனம் ஆவான்

    உயிராய் இருப்பான் உணர்வாய் இருப்பான்
    உள்ளக் கமலம் அமர்வான் இறைவன்
    கள்ளம் அகன்றால் மெள்ள வருவான்
    தெள்ளத் தெளிந்தால் தெரிவான் இறைவன் !

    Share
  • உயர்வுடைக் கார்த்திகைத் தீபத் திருநாள்

    உயர்வுடைக் கார்த்திகைத் தீபத் திருநாள்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    கார்த்திகை தீபம் கதைகளைக் கொண்டது
    கதைகளைக் கதையாய் எடுத்திடல் வேண்டாம்
    கற்கண்டை மருந்தில் சேர்ப்பது போன்று
    தத்துவம் விளக்கிடக் கதைகளைப் பகிர்ந்தார்

    விளக்கு என்றால் விளக்கம் தருவது
    வெளிச்சம் வந்தால் விளங்கிடும் அனைத்தும்
    விளக்கை ஏற்றுதல் வெற்றியைக் கொடுக்கும்
    விளக்கை ஏற்றுவார் அனைத்தையும் காணுவார்

    கல்வியும் வேண்டும் செல்வமும் வேண்டும்
    இரண்டும் இணைந்தால் இன்பமே ஆகும்
    இணையும் வேளை இறுமாப்பு வந்தால்
    இரண்டின் பயனும் இல்லாமற் போகும்

    சரஸ்வதி நாயகன் பிரம்மா ஆவான்
    லக்குமி நாயகன் திருமால் ஆவான்
    கல்வியை செல்வத்தை வழங்கும் வல்லமை
    பெற்றவர் இருவர் மோதினார் முறுகினார்

    ஆணவம் கொண்ட  மாலும் அயனும்
    ஆண்டவன் தாமென நின்றிடு வேளை
    அவர்களின் நடுவே பேரொளி ஒன்று
    ஜோதிப் பிளம்பாய் ஜொலித்துமே நின்றது

    ஜோதியைக் கண்டவர் பீதியில் நின்றனர்
    அசரீரி ஒலித்தது அடிமுடி காணுங்கள்
    கண்டால் கடவுள் கண்டவர் வென்றார்
    இருவரும் தேடினார் எதையுமே காணா

    ஆணவம் அவர்களை அடிதொழ வைத்தது
    ஒளி வடிவாக இறைவன் தோன்றினார்
    ஒளி வடிவாக வந்த நன்நாள்தான்
    உயர்வுடைக்  கார்த்திகைத் தீபத் திருநாள்

    கந்தனின் தோற்றமும் ஒளியுடன் இணைந்தது
    கனற் பொறியாகியே கந்தனும் தோன்றினான்
    எந்தையாம் இறைவன் ஜோதியாய் எழுந்தார்
    எழிலுடன் குமரனும் ஒளியென ஜொலித்தார்

    கந்தனின் கோவிலில்  கார்த்திகை தீபம்
    விஷ்ணு கோவிலில் விஷ்ணுக்குத் தீபம்
    சிவனார் கோவில் ஏனைய கோவில்
    அனைத்தும் ஒளிர்வது சர்வாலய  தீபம்

    வீட்டிலும் தீபம் வெளியிலும் தீபம்
    பார்க்கும் இடமெலாம் பரந்திடும் ஒளியே
    ஒளியெனும் வெள்ளம் பரவியே நிற்கும்
    உள்ளம் இறையின் எண்ணமே பரவும்

    ஒளியாய் இறையைக் கண்டிடும் தத்துவம்
    உயவுடைத் தத்துவம் உண்மைத் தத்துவம்
    ஆதலால் அனைவரும் அனுதினம் தீபத்தை
    வீட்டிலே ஏற்றி போற்றியே நிற்பார்

    விளக்கை ஏற்றியே அனைத்தும் தொடங்குவோம்
    விளக்கு ஏற்றினால் மங்கலம் என்போம்
    மங்கலம் வழங்கிடும் வரமே விளக்கு
    விளக்கின் ஒளியில் தெரிவான் இறைவன்

    ஒளிவளர் விளக்கு இறைவனே ஆவார்
    உயர்வுடை தத்துவம் இறைவனே ஆவார்
    கார்த்திகை விளக்கு கசடினை அகற்றும்
    கடவுளை நினைந்து ஏற்றுவோம் விளக்கை !

    Share
  • நாவைக் காப்பது நம்பெரும் பொறுப்பே!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    நரம்பிலா நாக்கு நம்பெரு சொத்து
    விரும்பிய சுவையைச் சுவைத்திட உதவும்
    அருந்திடும் உணவை அதுவேற்க மறுத்தால்
    விரும்பிடும் உணவைத் தேர்ந்திட  நேரிடும்

    உணர்வு இருந்தால் சுவைகள் தெரியும்
    உணர்வு இழந்தால் சுவைகள் மறையும்
    உணர்வு இழந்திடும் நாக்கைப் பெற்றால்
    உறைப்பும் தெரியா இனிப்பும் தெரியா

    உறைப்பும் இனிப்பும் சேர்ந்ததே வாழ்க்கை
    கசப்பும் துவர்ப்பும் கலந்தே இருக்கும்
    உப்பும் வேண்டும் சுவையாய் இருக்க
    அளவோ டிருந்தால் அதுதான் வாழ்க்கை

    உள்ளே போகும் உணவை ருசிக்க
    உமிழ்நீர் சுரப்பது முக்கிய மாகும்
    உணர்ச்சி இருந்தால் உமிழ்நீர் சுரக்கும்
    உணர்ச்சி இழந்தால் உமிழ்நீர் சுரக்கா

    அனைத்துக்கு மடிப்படை நாவே ஆகும்
    நாவை நன்றாய் வைத்திடல் அவசியம்
    சுவைக்கும் வேண்டும் அவைக்கும் வேண்டும்
    நாவைக் காத்தால் நன்மையே விளையும்

    நாவைக் காப்பது நம்பெரும் பொறுப்பே
    காவா விட்டால் கலியிடம் சிக்குவோம்
    ஏனைய காப்பது முக்கியம் அல்ல
    நாவைக் காப்பதே வாழ்வுக்கும் முக்கியம்

    காயும் இருக்கு கனியும் இருக்கும்
    கனியினை யாவரும் விரும்பியே ஏற்பர்
    கனியாய் இருக்கும் சொற்களைத் தேர்ந்து
    உரைப்பதே நாவின் உன்னதம் ஆகும்

    கனிவுடைச் சொற்களை வழங்கிட வேண்டும்
    கசப்புடைச் சொற்களை ஒதுக்கிட வேண்டும்
    தீயினாற் சுட்டால் ஆறியே போய்விடும்
    நாவினால் சுட்டால் வாழ்வெலாம் இருந்திடும்

    பொய்யை உரைப்பதும் நாவே யாகும்
    பொங்கிடும் வகையில் உரைப்பதும் நாவே
    ஐயம் இடுவெனச் சொல்லும் நாவால்
    அநியாயம் செய்யெனச் சொல்வது தகுமா

    நமச் சிவாய சொல்வதும் நாவே
    நாராயணா எனச் சொல்வதும் நாவே
    யேசுவே நபியே என்றுமே சொல்லிடும்
    நாவே நஞ்சினை கக்கிடல் முறையா

    நாவைக் காப்போம் நல்லவை உரைப்போம்
    நாவைக் காத்து நல்வழிப் படுத்துவோம்
    நாவே நமக்கு வாய்த்த நல்வரமென
    நாளுமே எண்ணி நாவைக் காப்போம் !

    Share
  • சுமைதாங்கி

    சுமைதாங்கி

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    சுமை தாங்கியாக இருப்பார்கள் சிலபேர்
    சுகம் பாரதுழைத்து கொடுப்பார்கள் அவரும்
    எதிர் பாராதிருந்து எல்லாமே செய்வார்
    சுகம் பெற்றாரெல்லாம் திரும்பியே பாரார்

    உண்ணாம லிருப்பார் உறங்காம லிருப்பார்
    கண்ணயராது இருப்பார் கையணைத்து மிருப்பார்
    மண்மீது மற்றவர் படுந்துன்பம் தாளார்
    எண்ணியே எண்ணியே எல்லாமும் செய்வார்

    இல்லறத்தி லிருப்பார் நல்லறமே நினைப்பார்
    சொல்லாலும் செயலாலும் துயரகற்றி நிற்பார்
    இல்லறத்தி லிணையாமல் இருந்தாலும் இருப்பார்
    இடர்கண்ட போதவர்கள் இரங்கியே நிற்பார்

    சமயமும் பாரார் சாதிகளும் பாரார்
    சமுத்துவமா யனைவரையும் தாமமரும் நினைப்பார்
    நினைவதனில் உதவுவதை நிலையாக வைப்பார்
    நீள்நிலத்தி லவரென்றும் சுமைதாங்க வருவார்

    குடும்பத்தில் சுமைதாங்கி ஆகிறார் பலபேர்
    குவலயத்தில் சுமைதாங்கி ஆகிறார் பலபேர்
    உயிர்கெல்லாம் சுமைதாங்கி ஆகிறார் ஒருவர்
    உருவமாய் அருவமாய் ஒளிர்கிறார் உயர்வாய்

    நம்பிக்கை நமக்கென்றும் சுமைதாங்கி ஆகும்
    நம்பிக்கை ஊட்டுவார் சுமைதாங்கி ஆகிறார்
    பெற்றவரும் ஊட்டுகிறார் மற்றவரும் ஊட்டுகிறார்
    பேருலகில் இறையுணர்வே பெருமைமிகு நம்பிக்கை

    Share
  • அரவணைப்பே பேரின்பம் என்பதையே அகமிருத்து !

    அரவணைப்பே பேரின்பம் என்பதையே அகமிருத்து !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பட்டமும் வேண்டாம் பரிசும் வேண்டாம்
    பண்புடனே வார்த்தை பகர்ந்தாலே போதும்
    உள்ளொன்று வைத்து உரைக்கவும் வேண்டாம்
    உண்மையாய் நடப்பதே உத்தமம் ஆகும்

    ஏற்றுவது போல தூற்றவும் வேண்டாம்
    இரங்குவது போல நடிக்கவும் வேண்டாம்
    கூற்றுவன் போல கொல்லவும் வேண்டாம்
    குறையின்றி வாழ்வில் நடந்தாலே போதும்

    போற்றுவார் போன்று பொய்யராய் நின்று
    தூற்றவும் வேண்டாம் தூக்கவும் வேண்டாம்
    மாற்றுவே னென்று மயக்கவும் வேண்டாம்
    மனமதனைச் செம்மை ஆக்கினால் நன்று

    சேற்றினை வாரி கொட்டவும் வேண்டாம்
    சின்னத் தனமாகச் செயலாற்ற வேண்டாம்
    சோற்றிலே மண்ணை கொட்டவும் வேண்டாம்
    சுகமான எண்ணங்களை சுமந்திடவே எண்ணு

    நட்பென்று கூறி நட்டாற்றில் விடாதே
    அற்பத் தனங்களை அடுக்கியே வையாதே
    துன்புறத்து மெண்ணதை துணையாக கொள்ளாதே
    என்றைக்கும் மனத்தில் நல்லதையே இருத்திவிடு

    வீண்வார்த்தை வீண்தர்க்கம் விலக்கியே விட்டுவிடு
    வில்லங்கம் என்பதை விலக்கவே முயன்றுவிடு
    விளலுக் கிறைத்த நீராக இருக்காதே
    வேதனைகள் போக்கும் வைத்தியனாய் ஆகிவிடு

    ஆண்டவன் இருக்கிறான் என்பதை எண்ணிவிடு
    அடுத்தவர் துயர்துடைக்க ஆயுத்தம் ஆகிவிடு
    அன்பைவிடப் பெரிது இல்லையென எண்ணிவிடு
    அரவணைப்பே பேரின்பம் என்பதையே அகமிருத்து !

    Share
  • தீபாவளித் திருநாள்  சிறப்புடை நாளே!

    தீபாவளித் திருநாள் சிறப்புடை நாளே!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்த்திரேலியா

    தீயவை அகன்றால் நல்லவை மலரும்
    தீபா வளியின் தத்துவம் ஆகும்
    ஆணவ அரக்கன் அழிந்த நன்னாளே
    ஆனந்தத் தீபா வளியாய் ஆனது

    அதிகாலை அனைவரும் எழுந்துமே விடுவார்
    அக மகிழ்வுடனே நீராடி மகிழ்வார்
    புத்தாடை அணிந்து புத்துணர் வடைவார்
    அத்தனை மகிழ்ச்சியும் வந்ததாய் நினைப்பார்

    தீபா வளியில் தித்திப்பு நிறையும்
    திரும்பிய திசையெலாம் மத்தாப்புச் சிதறும்
    பட்டாசு சத்தம் பரவியே நிற்கும்
    குடும்பங்கள் எல்லாம் குதூகலம் கொள்ளும்

    தீபாவளித் திருநாள்  சிறப்புடை நாளே
    இருப்பாரும் மகிழ்வர் இல்லாரும் மகிழ்வர்
    அவரவர் ஆனந்தம் அவரவர்க்கு உரியதே
    அகமகிழ் வுறுவுதே அனைவர்க்கும் பொதுவே

    பட்டி மன்றம் பாங்காய் நடக்கும்
    பற்பல இடங்களில் இசையும் ஒலிக்கும்
    நாட்டியம் இருக்கும் நல்லுரை இருக்கும்
    முத்தமிழ் யாவும் முத்தாய் ஒளிரும்

    ஆலயம் அனைத்தும் தீபத்தில் ஒளிரும்
    அனைவரும் ஆலயம் நோக்கியே செல்வர்
    அகத்தினில் இருக்கும் அனைத்தையும் கேட்பார்
    அமைதியாய் ஆண்டவன் அடியினைப் பரவுவார்

    அம்மா அப்பா உறவுகள் சேர்ந்து
    ஆலயம் சென்றால் ஆனந்தம் பெருகும்
    அன்பும் அறமும் அகத்தில் அமர்ந்திட
    வேண்டியே நிற்பது நல் வரமாகும்

    தீபா வளியில் தீமைகள் அகன்றிட
    யாவரும் இறையை வேண்டியே நிற்போம்
    கோபங்கள் தவிர்ப்போம் குணைத்தை இருத்துவோம்
    குவலயம் நலமுற வேண்டுவோம் இறையை!

    Share
  • முள்ளை, கல்லை மலரச் செய்வோம்!

    முள்ளை, கல்லை மலரச் செய்வோம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    முள்ளும் மலரும் உள்ளம் விரிந்தால்
    கல்லும் கரையும் கருணை நிறைந்தால்
    கள்ளம் அகன்றால் கசடு களைந்தால்
    மெள்ள மெள்ள வெளிச்சம் தெரியும்

    சொல்லச் சொல்ல உள்ளம் பதியும்
    மெள்ள மெள்ள உள்ளே நுழையும்
    வாக்கும் போக்கும் மாற முனையும்
    வழியில் தடைகள் விலகி நிற்கும்

    அரக்க எண்ணம் அகல எண்ணும்
    இரக்கம் அங்கே எட்டிப் பார்க்கும்
    தருக்கம் உள்ளே சன்னதம் ஆடும்
    முள்ளும் மலர முயற்சி நடக்கும்

    கள்ளக் குணங்கள் கலங்கி நிற்கும்
    உள்ளம் ஓங்கி அடிக்க முனையும்
    நல்ல எண்ணம் உள்ளே நுழையும்
    முள்ளும் கூட மலர எண்ணும்

    தள்ளும் அனைத்தும் தள்ளி நின்றால்
    முள்ளும் கல்லும் மெல்ல மலரும்
    நல்ல வாழ்வை வாழ எண்ணில்
    முள்ளை, கல்லை மலரச் செய்வோம் !

    Share
  • எல்லாமே வெறுமையாய் எங்களுக்குத் தெரிகிறது!

    எல்லாமே வெறுமையாய் எங்களுக்குத் தெரிகிறது!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பிள்ளைகள் பிறந்தார்கள் பேரின்பம் கொண்டோம்
    அள்ளவள்ளக் குறையா ஆனந்தம் அடைந்தோம்
    எல்லாமே எங்களுக்கு வந்ததாய் நினைத்தோம்
    இன்பத்தில் மூழ்கி  கனவுகளில் மிதந்தோம்

    ஒவ்வொரு பருவத்தையும் உளமிருத்தி ரசித்தோம்
    ஓடுவதை பாடுவதை உவப்போடு பார்த்தோம்
    கள்ளமிலாச் சிரிப்பினிலே கட்டுண்டு போனோம்
    கனியமுதே கற்கண்டே எனக்கொஞ்சி மகிழ்ந்தோம்

    மார்பினிலும் தோளினிலும் மடிமீதும் தாங்கி
    மலரான முகத்தை வாஞ்சையுடன் பார்த்து
    காதலித்துக் காதலித்துக் கரைந்துருகி நின்று
    கண்ணுக்குள் மணியாக எண்ணியே வளர்த்தோம்

    விழுந்திட்டால் துடிப்போம் எழுந்திட்டால் தெளிவோம்
    அழுதிட்டால் அணைப்போம் அயர்ந்திட்டால் சோர்வோம்
    சிரித்தபடி இருக்க சேவிப்போம் இறையை
    சிறந்த செல்வமாக பிள்ளைகளை நினைப்போம்

    படிக்கவும் வைத்தோம் பட்டங்களும் பெற்றார்
    பக்குவமாய் திருமணமும் செய்துமே வைத்தோம்
    படிப்புக்கு ஏற்ற பதவிகளும் பெற்றார்
    பார்த்துமே நாங்களும் பரவசம் அடைந்தோம்

    வசதிகள் நிறைய வளமாக வாழ்ந்தார்
    வளமான நாங்கள் கிழடாகப் போனோம்
    பெற்றெடுத்த செல்வங்கள் பேணிடுவார் என்று
    எதிர்பார்த்த நாங்கள் ஏமாந்து போனோம்

    ஏணியாய் இருந்தோம் தோணியாய் இருந்தோம்
    ஏறினார் பயணித்தார் இயன்றவரை உதவினோம்
    ஏணியை மறந்தார் தோணியை மறந்தார்
    ஏக்கத்தில் இப்போது இருக்கிறோம் நாங்கள்

    கொஞ்சிய நினைவுகள் நெஞ்சிலே இருக்கிறது
    அஞ்சியே வாழுகிறோம் அழுதுமே நிற்கிறோம்
    எதிர்பார்ப்பு எங்களை ஏமாற்றி விட்டது
    எல்லாமே வெறுமையாய் எங்களுக்குத் தெரிகிறது!

    Share
  • வீரதுர்க்கை துதி – விஜய தசமி வெற்றியின் நாளே!

    வீரதுர்க்கை துதி – விஜய தசமி வெற்றியின் நாளே!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    வீரமும் விவேகமும் வித்தையும் இணையும்
    தாரக மந்திரம் சக்தியே ஆகும்
    வளமும் தருவாள் வாழ்வும் தருவாள்
    மண்ணும் விண்ணும் நிறைவாள் சக்தி

    ஒன்பது நாளும் ஒவ்வொரு படியாய்
    உயர்ந்திடும் ராத்திரி நவராத் திரியாகும்
    பத்தாம் நாளில் பக்குவம் பெறுவோம்
    அத்தினம் சக்தியின் ஆற்றலாய் எழுந்திடும்

    வெற்றி என்பது சக்தியே ஆகும்
    வீரமும் சக்தியே ஈரமும் சக்தியே
    செல்வம் கல்வி அனைத்தும் சக்தியே
    அனைத்தும் அமைந்தால் வெற்றியின் விஜயமே

    ஆணவம் இருந்தால் அனைத்தும் அழியும்
    ஆணவம் என்பதை அழிப்பவள் சக்தியே
    ஆணவ அரக்கனை அழித்திடு நாளாய்
    அமைவதே விஜய தசமியின் தத்துவம்

    செல்வமும் கல்வியும் வீரமும் நிறைந்தால்
    உள்ளே ஆணவம் உருவாகத் தொடங்கும்
    ஆணவம் எழுந்தால் அழிவே நிச்சயம்
    அதுவே விஜய தசமியின் தத்துவம்

    சக்தியால் கிடைக்கும் சக்திகள் யாவும்
    சரியான வழியில் பயன்பட வேண்டும்
    மற்றவர் அழிவை மனமதில் கொண்டால்
    சக்தியால் தண்டனை கிடைத்தே தீரும்

    ஒன்பது நாளும் உயர்வுடை நாளே
    உள்ளம் உருகி வழிபடல் வேண்டும்
    பக்தியின் மயமாய் சக்தியைப் போற்றினால்
    வெற்றிகள் நிச்சயம் சக்தியே கொடுப்பாள்

    உள்ளம் உருகினால் உவப்பாள் சக்தி
    கள்ளம் நிறைந்தால் கடிவாள் சக்தி
    அள்ளி அணைக்கும் சக்தியின் நாளே
    வெற்றியாம் விஜய தசமியே ஆகும்

    Share
  • கலைமகள் துதி: திருவடி சரணம் கலைகளின் தாயே!

    கலைமகள் துதி: திருவடி சரணம் கலைகளின் தாயே!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    கற்பன யாவும் கற்றிட வேண்டும்
    கசடுகள் அகலக் கற்றிட வேண்டும்
    கண்ணியம் நிறையக் கற்றிட வேண்டும்
    கையணைத் திடுவாய் கலைமகள்த் தாயே

    கற்றிடும் தலைமுறை பெருகிட வேண்டும்
    கற்றிடும் வகையில் நின்றிட வேண்டும்
    கற்றிடும் அனைவரும் கடவுளை எண்ணி
    கருமங்கள் ஆற்றிட வைத்திடு தாயே

    கல்வியைக் காசாய் ஆக்கிறார் தாயே
    கற்றுக் கொடுப்பார் கயவர்கள் ஆகிறார்
    கல்விக் கூடங்கள் கண்ணியம் காத்திட
    கலைமகள் தாயே கருணையைக் காட்டு

    வற்றிடாக் கல்வியை வழங்கிடு தாயே
    மனமதில் மாசினைப் போக்கிடு தாயே
    தினமுமே உன்னைத் தொழுகிறோம் தாயே
    திருவடி சரணம் கலைகள்த்  தாயே

    வெள்ளைக் கமலம் இருப்பிடம் கொண்டாய்
    விரும்பி ஏட்டினைக் கையினிற் பிடித்தாய்
    உள்ளம் விரும்பிட படைப்பவன் நாவில்
    வெள்ளை உடையுடன் அமர்ந்தாய் சரணம்

    கலைகளின் தாயே சரணம் சரணம்
    நிலை குலையாமல் காத்திடு அம்மா
    உலகிடை உயர்ந்தோர் போற்றிட அறிவை
    தந்திடு சரஸ்வதித் தாயே சரணம்

    Share
  • அலைமகள் துதி: அருள் புரிவாயே அம்மா இலக்குமி!

    அலைமகள் துதி: அருள் புரிவாயே அம்மா இலக்குமி!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    செல்வம் செல்வம் தேயாச் செல்வம்
    தேடித் திரிகிறோம் தெரியவே இல்லை
    அனைத்துச் செல்வமாய் ஆகியே இருக்கிறாய்
    அம்மா லக்சுமே அடியினைத் தொழுகிறோம்

    நிறைந்த செல்வம் நீயே அம்மா
    நினது அருளே அனைத்தும் அம்மா
    அலைந்து திரிகிறார் செல்வந் தேடி
    அவரின் மனத்தைத் திருத்திடு அம்மா

    ஓய்வே இல்லா உழைக்கிறார் அம்மா
    உழைத்து உழைத்துக் குவிக்கிறார் அம்மா
    அருளை அன்பை மறக்கும் அவரை
    திருத்திடு தாயே திருவடி சரணம்

    வாழும் வரைக்கும் செல்வம் வேண்டும்
    செல்வம் உன்னருள் பெற்றிட வேண்டும்
    திருவருள் நிறைவுடன் செல்வம் சேர்ந்திட
    அருள் புரிவாயே அம்மா இலக்குமி

    Share
  • நவராத்திரி துதி: கழலினைப் பணிகிறோம் காத்திடு தாயே!

    நவராத்திரி துதி: கழலினைப் பணிகிறோம் காத்திடு தாயே!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    உடலும் உளமும் உரமாய் இருக்க
    உனது திருவடி துணையே எமக்கு
    மனதில் அழுக்கை அகற்றிடு சக்தியே
    மலரடி அடைக்கலம் துர்க்கை அம்மா

    தினமும் நின்னை நினைக்கிறோம் அம்மா
    திசயெலாம் நீயே தெரிகிறாய் அம்மா
    அனைத்தும் நீயாய் ஆகிறாய் அம்மா
    அன்னை துர்க்கையே அருள்புரி தாயே

    துன்பம் இளைக்கும் துட்டர் திருந்த
    துயரப் படுவார் துன்பம் நீங்க
    பஞ்சம் பிணியும் பறந்தே ஓட
    பாதம் தொழுகிறோம் பார்த்திடு அம்மா

    அரக்கக் குணங்கள் அகன்றிட வேண்டும்
    அன்பும் அறனும் அமர்ந்திட வேண்டும்
    தர்மம் தானம் பெருகிட வேண்டும்
    தாயே துர்க்கையே நீதான் துணையே

    ஈரமும் ஈந்திடு வீரமும் ஈந்திடு
    இன்புடன் இருக்க நல்லருள் நல்கிடு
    காப்பவள் நீயே கருணையின் உருவே
    கழலினைப் பணிகிறோம் காத்திடு தாயே!

    Share