Tag: பவள சங்கரி திருநாவுக்கரசு

  • வரலாறு படைக்கும் உச்சம்!

    பவள சங்கரி

    தலையங்கம்

     

    உரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியடைந்துள்ளது. தினம் தினம் உச்சத்தைத் தொடும் உரூபாயின் மதிப்பிழப்பால் உயர்மட்ட வருவாய் பெறக்கூடியவர்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏதுமிருக்காது. காரணம் அவர்கள் தங்கள் வர்த்தகத்தை பெரும்பாலும் டாலரிலேயே செய்துகொண்டு போய்விடுவார்கள். கீழ் மட்டத்தில் உள்ளவர்களுக்கு இதைப்பற்றி அதிகம் தெரியாது அல்லது பாதிப்பு அதிகம் இருக்காது. அரசுத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு பஞ்சப்படியாக வாரி வழங்கப்படுவதால் அவர்கள் சமாளிக்கலாம். ஆனால் நமது மக்கள் தொகையில் 60 சதவிகிதத்திற்கும் மேல் இருக்கக்கூடிய மத்தியதர வகுப்பினரையே இது பெரிதும் பாதிக்கும். சமீப நாட்கள் வரை 100 உரூபாய்க்கு 1.35 லிட்டர் பெட்ரோல் வாங்கிக்கொண்டிருந்த நம்மால் இன்று அதே விலைக்கு 1.1 லிட்டர்தான் வாங்க முடிகிறது. இன்னும் சில நாட்களில் அது 1 லிட்டராகக் குறைந்துவிடக்கூடும். ஆனால் இப்பொழுதுதான் நமது வர்த்தகத் துறை அமைச்சருக்கு இது பற்றிய தெளிவு ஏற்பட்டு இதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சகத் துறைகளுக்கான அழைப்பை விடுத்திருக்கிறார். ஆனால் மேலும் வீழ்ச்சியின் உச்சம் அதிகரித்தவாறே உள்ளன.

    இந்திய உரூபாய் மதிப்பின் வீழ்ச்சியால் நேற்று மட்டும் அந்நிய முதலீட்டாளர்கள் 1550 கோடிகளைத் திரும்பப் பெற்றதால் நமது மும்பை வர்த்தகம் 550 புள்ளிகள் சரிவைக்கண்டது. இதனால் நமது இந்திய முதலீட்டாளர்கள் 1.17 இலட்சம் கோடி உரூபாய்கள் இழப்பைச் சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இழப்பு தொடர்ந்து கொண்டே இருப்பதுதான் வேதனை. டாலருக்கு நிகரான மதிப்பை நமது உரூபாய் மென்மேலும் இழந்து வருவதும் மற்ற நாடுகளில் இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாததும் நம்மை சிந்திக்க வைக்கிறது. முக்கியமான பத்து நாடுகளின், எட்டு நாடுகளுக்கான டாலரின் நிகரான அந்த நாட்டின் உரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது. இரண்டு நாடுகளில் மட்டும் மிகக்குறைவாக குறைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதில் சில நாடுகளின் வளர்ச்சிகளும் கூட உயர்ந்து கொண்டிருப்பதும் கண்கூடு. சீனா ஏற்றுமதியாளர்களுக்காக தமது நாணயத்தின் மதிப்பைக் குறைப்பதாக இருந்தவர்கள் கூட தற்போது அதைக் குறைக்கமாட்டோம் என்று அறிவித்துவிட்டனர். ஆனால் நமது உரூபாயின் மதிப்பானது எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாமல் வீழ்ச்சியடைந்த வண்ணமே உள்ளது பெரும் வேதனையளிக்கிறது. நமது மத்திய அரசும் இதைச் சீர் செய்யாமல் அமைதி காத்து வருகின்றனர். பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதியிலும், அதன் பயன்பாட்டிலும் ஏன் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அரசின் வருமானத்தை மட்டும் கணக்கில்கொண்டு திட்டங்கள் தீட்டப்படுவது மக்களுக்கு மென்மேலும் சுமையைக் கூட்டுகிறது. நமது நாட்டில் கிடைக்கக்கூடிய இயற்கை எரிவாயுவை கட்டாயப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதையாவது நடைமுறைப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

    இதில் நமது நாடு பொருளாதார வல்லரசாகும் என்ற கனவு என்று நினைவாகப் போகிறதோ?

    Share
  • The ravens caw -அண்டங்காக்கையின் கரைவு

    பவள சங்கரி

     

    கொரிய தமிழ் கலாச்சார உறவு!

     

    நம் இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்ற கொரிய கவிஞர் கிம் யாங் – ஷிக் கொரிய மொழியில் பல இலக்கியப் படைப்புகளை வெளியிட்டுள்ள மிகச் சிறந்த கொரியக் கவிஞரும், தற்போதைய, கொரியாவின் தாகூர் சங்கத் தலைவரும், இந்தியக் கலை அருங்காட்சியக இயக்குநர், சியோல், சர்வதேச கொரிய எழுத்து மையம் (The International Pen-Korean Centre) உறுப்பினர், ஈஹா இலக்கிய எழுத்தாளர்கள் கூட்டமைப்பு ஆலோசகர், கொரிய பெண் எழுத்தாளர்கள் கூட்டமைப்பின் ஆலோசகர் போன்ற பல சமூக, இலக்கிய அமைப்புகளில் உற்சாகமான பங்கேற்பாளர். வல்லமையாளரான [http://www.vallamai.com/?p=78004] அவர்தம் கவிதையும் என் மொழிபெயர்ப்பும்… [http://www.vallamai.com/?p=84392 – நூல் வெளியீட்டு விழா]

    The ravens caw

    In swooping, metallic cacophony
    the ravens caw.
    With primary colors
    flowers bloom on the thick branches.
    Yet they appear as countless
    hungry eyeballs.

    From the beginning,
    holding firm to the inevitable cycle of life,
    millions of souls shall come into being
    as already have been in the world.

    In my worldly forties
    I stepped on the land of karma.
    Only by stepping out of this parched land
    will I extinguish my burning sentiment of wrath.

     

    அண்டங்காக்கையின் கரைவு

     

    திடீர்த் தாக்குதலால் அண்டங்காக்கைகள்
    அசூயையான உலோகக் குரலில் கரைகின்றன.
    ஆரம்பக்கால வண்ணங்களுடன்
    அடர்ந்த கிளைகளில் அழகாக மலரும் மலர்கள்.
    இருப்பினும் அவை எண்ணற்ற
    பசித்த கருவிழிகளாகவே காட்சியளிக்கின்றன.

    ஆரம்பக் காலத்திலிருந்தே,
    வாழ்வின் தவிர்க்க இயலாத சுழற்சியிலும் உறுதியைக் கடைப்பிடிப்பது,
    ஏற்கனவே உலகில் இருந்து கொண்டிருப்பதைப்போன்று
    மில்லியன் கணக்கான ஆன்மாக்கள் வரக்கூடும்.

    என் உலகின் நாற்பது வயதில்
    கர்மாவின் களத்தில் நுழைந்தேன் நான்.
    இந்த வறண்ட நிலத்திலிருந்து வெளியேறுவதன் மூலமே
    கொழுந்து விட்டெரியும் என் கோபத்தை அணைப்பேனோ நான்.

     

    பி.கு. கவிஞர் முக்கியத்துவம் கொடுத்துக் குறிப்பிட்டுள்ள அண்டங்காக்கை எனும் பறவை நம் புராணக் காலந்தொட்டு இன்றுவரை மக்களிடையே பல்வேறு நம்பிக்கைகளைப் பரவவிடுவதாகவே உள்ளது. மனிதருக்குக் கோபம் என்ற குணம் எத்தகைய மோசமானது என்பதன் குறியீடாகவே இக்கவிதையைக் காண முடிகின்றது.

    காகங்கள், புத்திக் கூர்மையுடைய பறவைகள். தமது இரையை, உணவைப் பெறுவதற்காகக் கருவிகளைப் பயன்படுத்தும் திறன் வாய்ந்தவை. நாம் தெருவில் வீசியெறியும் மாமிசக் கழிவுகள், இறந்து போன உயிரினங்களை உட்கொண்டு நமது சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன. இதனாலேயே இவை இயற்கைத் துப்புரவாளர்களாகக் கருதப்படுகின்றன. நம் வாழ்வோடும், பண்பாட்டோடும் பின்னிப் பிணைந்த ஒரு பறவையினம் இது. நம் வீட்டு வாசலில் காகம் கரைந்தால் விருந்தினர்கள் வருவார்கள் என்பது நமது நம்பிக்கை. “விருந்து வரக் கரைந்த காக்கை” எனும் குறுந்தொகைப் பாடலின் மூலம் இதை அறியலாம். இப்பாடலை இயற்றிவர், சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்களில் ஒருவரான காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் என்பவர். காகத்தைப் பற்றிப் பாடியதாலேயே அவர் இப்பெயரைப் பெற்றார். இதுபோன்றே அண்டங்காக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கவிஞர் வரைந்துள்ள கவியும் சுவை ஊட்டுகின்றது. அன்றாடம் காகங்களை அழைத்து உணவிட்டு, பின் உணவருந்தும் பழக்கம் நம்மூரில் பலருக்கு உண்டு.

    புனைவுகள் மற்றும் இலக்கியங்களில் அண்டங்காக்கைக்கு பல குறிப்புகள் உள்ளன. இதன் கருப்பு நிறம், பற்கள், கரகரவெனும் குரல், உணவுப் பழக்கம் ஆகியவற்றின் காரணமாக, காகம் தொன்மங்கள் மற்றும் புனைவுகளின் படைப்பாளர்களுக்குத் தீய சக்தியின் குறியீடாகக் கருதப்பட்டு வருகிறது.

    அண்டங்காக்கை மரணம் மற்றும் இறப்புக்கு இடையே ஒரு இடைத்தரகராக இருந்தது என்று பிரெஞ்சு மனிதவியல் அறிஞர் கிளாட் லெவி-ஸ்ட்ராஸ் ஒரு கட்டமைப்புவாத கோட்பாட்டை முன்வைத்தார். காகம் இறந்தவர்களுடனும் இழந்த ஆத்மாக்களுடனும் தொடர்புடையதாக ஆனது என்று சுவீடன் நாட்டுப்புறத்திலும் நம்பப்படுகின்றது.

    இந்து மதத்தில் காக்கைகள் உருவில் மூதாதையர்கள் அமாவாசை, திதி சமயங்களில் அவர்களுக்காகப் படைக்கும் உணவு அல்லது தின்பண்டங்களை எடுக்க வருகின்றன என்ற நம்பிக்கை இன்றளவிலும் நடைமுறையில் உள்ளது. தென் கொரிய நாட்டிலும் மூதாதையர்களுக்கு படையல் இட்டு நீர் விளவி வழிபாடு செய்யும் வழமை உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    மிகுந்த சக்தி வாய்ந்த இந்து தெய்வமான சனி பகவானின் வாகனம் காகம் என்றும் குறிப்பிடப்படுகிறது. மாபெரும் கலைகள் என்ற பத்து தாந்தரீகக் கடவுள்களின் குழுவில் ஒன்றான தூமாவதி, இந்து தாய் தெய்வத்தின் அச்சமூட்டும் அம்சத்தைப் பிரதிபலிக்கின்றது. அவலட்சணமான விதவையாகச் சித்திரிக்கப்படும் இத்தெய்வம், பொதுவாகக் கல்லறைகள் நிறைந்த, பிணங்களைத் தகனம் செய்யும் பூமியில் காகத்தின் மீது சவாரி செய்வதாகக் குறிப்பிடப்படுகின்றது.

    Share
  • வழமைகளுக்கும் வாழ்த்து தேவையா?

    பவள சங்கரி

     

    தலையங்கம்

    சர்ஜிகல் ஸ்டிரைக் என்ற நமது இந்திய இராணுவத்தின் அற்புதமான செயல்பாட்டின் ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு செப்டம்பர் 29 ந்தேதி கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் அதை நினைவூட்டும் நிகழ்சிகளை நடத்துவதற்கு பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைப்பதும், அதற்கு மத்திய அமைச்சர் ஒப்புதல் அளிப்பதும் எந்த விதத்தில் சரி? இது ஒரு இராணுவ நடவடிக்கைதானே? ஒவ்வொரு இராணுவ நடவடிக்கையும் இவ்வாறு தனித்தனியாகப் பாராட்டப்படுவது, அந்த இராணுவத்தின் இதுபோன்ற வழமையான நிகழ்வுகளைக்கூட விழா எடுப்பது சரியான அணுகுமுறையா? இது போன்ற செயல்கள் நம் இராணுவத்தின் உயரிய மாண்பைக் குறைத்து அவர்களின் செயல்பாடுகளை கொச்சைப்படுத்துவதாகாதா? இராணுவம் என்பது தனிப்பட்ட அரசியல் நிகழ்வுகளுக்கும், விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டது! உலகின் மொத்த இராணுவங்களின் வரிசையில், தரம் மற்றும் அளவின் அடிப்படையில் 5வது இடத்தில் உள்ள மிகச்சிறப்பான செயல்பாடுகளையுடைய நம் இராணுவத்தை இதுபோன்ற சிறுமைச் செயல்களால் கொச்சைப்படுத்தத் தேவையில்லை! 2 வாரங்களில்  வங்காள தேசத்திற்கு விடுதலை வாங்கிக் கொடுத்து பாகிசுத்தான் இராணுவத்தைச் சரணடையச் செய்த நம் இராணுவத்திற்கு எந்த வகையில் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தது பல்கலைக்கழக மானியக் குழு? இவையெல்லாம் நமது இராணுவத்தின் தொடர் செயல்பாடுகள் மட்டுமே என்பதுதான் உண்மை!

     

     

    Share
  • மெய்யியல் ஞானம்!

    பவள சங்கரி

    சைவத் திருமுறை நூல்கள் மொத்தம் 12. அதில் பத்தாம் திருமுறையாக வருவது திருமூலர் எழுதிய திருமந்திரம். 3000 பாடல்களைக் கொண்டது திருமந்திரம். அத்துணையும் நம் வாழ்வியலுக்குத் தேவையான முத்து முத்தான பாடல்கள்! பக்திப்பனுவல் என்ற வகையில் சேர்க்க இயலாத மெய்யியல் ஞானம் அருளும் பதிகங்கள் அனைத்தும். உண்மை நெறியைக் கண்டறியும் தவம் என்றே கூறலாம்!

    இதோ ஒரு பானை சோற்றின் ஒரு பருக்கை ……

    நெறியைப் படைத்தான்; நெருஞ்சில் படைத்தான்!
    நெறியில் வழுவின் நெருஞ்சில் முள்பாயும்!
    நெறியில் வழுவாது இயங்கவல் லார்க்கு
    நெறியில் நெருஞ்சில்முள் பாயகி லாவே! (திருமந்திரம், 1617)

     

    இதுதான் பாதை, இதுதான் பயணம் என்று கொள்கை வகுத்துக்கொண்ட பின்னால் அதில் தொய்வில்லாமல் பயணம் நடத்திவிடு அப்போதுதான் உன் வெற்றி உன்னைச் சேரும் என்ற அறிவியல் தத்துவம் பொருத்தமான ஒன்றுதானே?

    ஆனால் செல்லும் பாதையில் தடை இல்லாமல், சிரமம் ஏற்படுத்தாமல் பாதையோரங்களில் மட்டும் விரவிக்கிடந்த அந்த நெருஞ்சில் முட்கள் உன் பாதையிலேயே படரத் தொடங்கி உன் பயணத்திற்குத் தடை விதித்தால் நீ என்ன செய்ய முடியும்? ஒன்று உன் வழியில் விரவிக்கிடக்கும் அந்த முட்புதர்களை நீக்கிவிட்டுக் கொண்டே பண்படுத்தப்பட்ட அந்த பாதையில் உன் பயணத்தைத் தொடர வேண்டும் அல்லது ஒருவேளை பண்படுத்தவே இயலாத பாதை என்று உன் அறிவு உன்னை இடித்துக்கூறினால் இனி பயன்படாத அந்தப் பாதையில் கால விரயம் செய்வதைவிட நெருஞ்சி முட்களால் ஏற்படும் தடைகள் களைய அப்பாதையை விட்டு விலகுவதுதானே அறிவார்ந்த செயல்? இப்படித்தான் நம் முன்னோர்கள், ஆன்றோர்கள், சித்தர் பெருமக்கள் ஆன்மீக அறிவியலை அதீதமாக புகட்டிச் சென்றுள்ளார்கள்! இந்த விதைகளை சரியாக நமக்குள் ஊன்ற முடிந்தால் நம் வாழ்வு பட்டொளி வீசும் என்பதில் ஐயமேது?

    Share
  • நல்ல நெறி!

    பவள சங்கரி

    கொம்புஉளதற்கு ஐந்து ; குதிரைக்குப் பத்துமுழம் ;
    வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே ; வம்புசெறி
    தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
    நீங்குவதே நல்ல நெறி

    (நீதிவெண்பா)

    (வெம்புகரி = மதயானை
    வம்புநெறி = தொல்லைமிக்க)

    கொம்பு உள்ள விலங்குகளை விட்டு ஐந்துமுழம் தூரமும், குதிரையை விட்டுப் பத்து முழம் தூரமும், மதம் மிகுந்த யானையை விட்டு ஆயிரம் முழம் தூரமும் விலகியிருக்க வேண்டும். ஆனால் தீயவர்களின் கண்ணுக்குத் தெரியாத தூரத்தில் நீங்கி நிற்பதே நல்லதாகும் என்பது இதன் பொருள்.

    Share
  • மழைத்துளியின் சங்கமம்

    பவள சங்கரி

    மழைத்துளி மழைத்துளி மலரில் சங்கமம்
    தேன்துளி தேன்துளி உயிரினில் சனனம்
    விழித்துளி விழித்துளி கலையினில் மனனம்
    கனித்துளியும் கவித்துளியாய் மலருது!

    Share
  • பேரூர் சுவாமிகளின் ஆன்மா இறையடி நிழலில் …

    சைவமும் தமிழும் இரு கண்களென போற்றி தொண்டாற்றிய பெருந்தகை தவத்திரு பேரூர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் ஐயா அவர்களுக்கு நம் இதய அஞ்சலியை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஆகச்சிறந்த சொற்பொழிவாளரும், ஆன்மீகவாதியும், பெரிய புராணத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட அடியாரின் ஆன்மா இறையடி நிழலில் சாந்தி பெற உளமாரப் பிரார்த்திக்கிறோம்.

    Share
  • பாதுகாப்பற்ற காப்பகங்கள்?

    பவள சங்கரி

    தலையங்கம்

    இந்தியாவிலுள்ள மொத்த 2874 குழந்தைகள் காப்பகங்களில் 54 காப்பகங்கள் மட்டும் சரியான முறையில் நிர்வகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் காப்பகம், அனாதை இல்லம் போன்றவைகள் ஒற்றை இலக்கத்தில் உள்ளவைகளே குழந்தைகள் முழுமையான பாதுகாப்புடன் வாழ்வதற்குரிய அனைத்து ஆவணங்கள் வைத்துள்ளனர் என்று உச்சநீதி மன்றத்தில் குழந்தைகள் பாதுகாப்பு உரிமை தேசிய ஆணையம் (NCPCR) அறிவித்துள்ளது வேதனைக்குரியது. ஒழுங்கான கணக்கு, வழக்குகள் வைத்திருந்தாலே பீகாரில் பெண் குழந்தைகளுக்கு ஏற்பட்ட துயமரான நிகழ்வுகள் ஏற்படாது என்றும் காப்பகங்கள் பற்றி யாருக்கும் எந்த விதமான அக்கறையும் இல்லை என்றும், இது குறித்து நீதி மன்றமே கையறு நிலையில் உள்ளது என்றும் உச்சநீதி மன்ற நீதிபதி லோகூர் அவர்கள் வாய் மொழியாகத் தெரிவித்துள்ளார் .. 🙁

    Share
  • சர்வதேச நட்பின் சின்னம்! சுதந்திர தேவி சிலை!

    பவள சங்கரி

    எல்லீஸ் தீவு அருங்காட்சியகம்  நியூயார்க், அமெரிக்கா

    சர்வதேச அளவில் நட்பு, விடுதலை, மக்களாட்சியினை வெளிப்படுத்தும் சின்னமாக விளங்கும் சுதந்திர தேவி சிலை, உலகின் எட்டாவது அதிசயமாகக் கருதப்படுகிறது. அமெரிக்க நாட்டின் நுழைவாயிலாக உள்ள சுதந்திர தேவி சிலை 1880 ஆம் ஆண்டில் பாரீசியர்களால் கட்டமைக்க ஆரம்பிக்கப்பட்டு, 1886 இல் நியூயார்க் நகரின் உன்னத படைப்பாகவும், உலகின் மிக உயரமான சிலை வடிவமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் மீது பிரான்சு நாடு கொண்ட நட்பின் அடையாளமாக, அமெரிக்கா சுதந்திரம் பெற்ற நூற்றாண்டு விழா பரிசாக அளிக்கப்பட்ட அதிசயம்! ‘Libertas’ என்ற உரோமாபுரி கடவுளின் உருவில் வடிவமைக்கப்பட்ட சிலை என்றும் கூறப்படுகிறது.

    Liberty Enlightening The World என்று அழைக்கப்படும் இந்த பிரம்மாண்டமான சுதந்திர தேவி சிலை அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஹட்சன் ஆற்றின் துறைமுகத்தில் உள்ள லிபர்ட்டி தீவில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் சுதந்திர தேவி சிலையைக் காணவேண்டும் என்ற ஆவலில் 30 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் அமெரிக்காவிற்கு செல்கிறார்கள்.


    1865இல் எடுவர்ட் டி லெபோலயி என்பவரின் தலைமையில் ஒரு அறிஞர் குழு, தங்கள் சொந்த நாட்டின் அரசியல் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க நாட்டிற்கு, சுதந்திரம் மற்றும் விடுதலையின் குறியீடாக ஒரு நினைவுப் பரிசை வழங்கி கௌரவிக்க முடிவு செய்தனர். அதற்கான சரியான நேரமாக அது அமைந்தது. ஆம், உள் நாட்டுப் போர் நிறைவடைந்து, அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டு, நாடு தமது நூற்றாண்டு விழாவை எதிர்நோக்கியிருந்தது. ஈபில் டவர் கோபுரத்தை வடிவமைத்த குஸ்ட்டேவ் ஈபிள் எனும் நபர் தான் அமெரிக்க தேவி சிலையையும் வடிவமைத்தவர்.


    தேசியவாதம், செழிப்பு மற்றும் நவீன தொழில்நுட்பம் ஆகியவைகள் இந்த நினைவுச் சின்னத்தின் ஒரு சகாப்தத்தை தோற்றுவித்தது. லெபோலேயியின் இளம் சிற்பி நண்பன் அகஸ்டி பர்தோல்டிக்கு, பிரம்மாண்ட நவீன சிற்பம் உருவாக்கும் இந்த அரிய வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. இருபத்தியொரு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சமுத்திரத்தைத் தாண்டி நியூயார்க் துறைமுகத்தில் உலகிற்கு சுதந்திர விளக்கேந்தி நெடிதுயர்ந்து இன்றும் நிலையாக நின்று கொண்டிருக்கின்றது. 1886 இல் அமெரிக்காவிற்கு அர்ப்பணம் செய்த பின்பு பிரான்சு நாட்டுப் பிரதமர், இந்த சுதந்திரதேவி கடல்களுக்கு அப்பாலும் வெகு தொலைவிற்குச் சென்று நம் பிரான்சு நாட்டை மேலும் பிரமாண்டமாக்கப்போகிறாள் என்பதில் ஐயமில்லை என்று அறிவித்தார்.

    ஆனால் சுதந்திர தேவியின் உருவம் ஏற்கனவே எண்ணற்றோரின் உள்ளத்திலும் வடிவமைக்கப்பட்டிருந்தது. பிற்கால 1800களின் பெருவாரியான குடியேற்றங்களுக்கு இடையில், வளர்ந்துவரும் கடுமையான குடியேற்றத் தடைச் சட்டத்தையும் மீறி, சுதந்திர தேவியின் திருவுருவம், ‘புலம் பெயர்ந்தோரின் தாய்’ என்ற ஆழமான உணர்வுகளால் ஆன கருத்தாக்கமாக, அவர்தம் இதயங்களில் ஊடுறுவிக் கொண்டிருந்தது.


    சனவரி 1, 1892 ஆம் ஆண்டில் அமெரிக்க எல்லீஸ் தீவு குடிவரவு நிலையம் மூலமாக, அயர்லாந்திலிருந்து குடிபெயர்ந்த அமெரிக்காவின் முதல் குடிபெயர்வாளராக உள் நுழைந்தவர் 15 வயது அன்னி மூர் என்பவர். இவருக்கு அப்போதைய அமெரிக்க குடியேற்ற கண்காணிப்பாளர் ஜான் வேபர் மூலமாக பத்து டாலர் தங்க காசுடன் வரவேற்பளிக்கப்பட்டதாம்! அதன் பிறகு 1895இல் இவர் ஜோசப் ஆகஸ்டஸ் என்பவரை மணம் புரிந்து, நியூ யார்க் நகரில் குழந்தைகளுடன், 47 வயது வரை வாழ்ந்து மறைந்திருக்கிறார்.


    முதலாம் உலகப் போரின் சமயத்தில் குடியேற்ற எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டதால் சுதந்திர தேவியின் பங்கு பரிணாமம் பெற்றது. போர் பத்திரங்கள் வாங்க வேண்டியும், இராணுவத்தில் பங்கு பெறவும் குடிகளை கேட்டுக்கொள்ளும் பளபளக்கும் சுவரொட்டிகள் அனைத்திலும் சுதந்திர தேவியின் திருவுருவமே மொத்த அமெரிக்கா என்பதாக உருவகப்படுத்தப்பட்டது. பிற்காலங்களில் சுதந்திர தேவி சிலையின் பிம்பமே அனைத்து அரசியல் செயல்பாடுகளுக்கும் தலைமை வகித்தது. அன்றிலிருந்து இன்றுவரை உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் மக்களை ஈர்த்துக் கொண்டும் இருக்கிறது.

    வலது கரத்தில் தீப்பந்தமும், இடது கரத்தில், “சூலை 4, 1776” என்று எழுதப்பட்ட, அமெரிக்க விடுதலைப் போர் சரித்திரத்தைக் குறிக்கும் புத்தகமும் உள்ளன. சுதந்திர தேவியின் சிலையின் தலையில் உள்ள 7 முனைகள் கொண்ட கிரீடம் 7 கண்டங்களையும், 7 கடல்களையும் குறிக்கின்றன. பீடத்திலிருந்து சிலையின் உயரம் 93 மீட்டர் என்பதோடு சிலையின் உயரம் மட்டும் 34 மீட்டர். இந்த புகழ்மிக்க சிலை தாமிரத்தில் செய்யப்பட்டுள்ளது. இச்சிலையில் பயன்படுத்தப்பட்ட மொத்தத் தாமிரத்தின் எடை 27.2 டன். இரும்பின் எடை 113.4 டன். சிலையின் மொத்த எடை 204.1 டன்.

    சுதந்திர தேவியின் சிலை குறித்து அதன் படைப்பாளர் பர்தோல்டியின் கருத்து:

    அந்த பிரம்மாண்டமான சிலை வெறுமனே ஒரு சரணாலயமாக மட்டுமல்லாமல் பார்வையாளர்களின் மனதில் ஒரு ஆழமான உணர்வை உருவாக்க வேண்டும். அதுவும் அது அதன் அளவின் காரணமாக அல்ல, ஆனால் அதன் அளவைப் புரிந்துகொள்வது, அது ஆக்கிரமித்துள்ள இடத்தின் அளவிற்கு அதன் உன்னதமான தத்துவத்தை உள்வாங்கி, தாங்கிக்கொண்டு நிமிர்ந்து நிற்கும் அற்புதமாக இருக்க வேண்டும்.


    இந்த கருத்தாக்கமே, இச்சிலையைக் கண்டுகளிக்க வரும் உலக மக்கள் அனைவரின் மனத்திலும் சுதந்திரம் தன் உயிர் மூச்சு என்ற ஒருமித்த கருத்தை உருவாக்கத் தவறுவதில்லை என்பதை முழுமையாக உணர முடிகின்றது! இதன் காரணமாகவே இச்சிலை உலக அதிசயங்களுள் ஒன்றாகத் திகழ்வதாகக் கொள்ள முடிகின்றது என்பதும் நிதர்சனம்!

    Share
  • நீங்களே பறித்துக் கொள்ளுங்கள்!

    பவள சங்கரி

    அமெரிக்கா, அயோவா நகரத்தின் வடக்கே அமைந்துள்ள ஒரு யூ-பிக் – நீங்களே பறித்துக் கொள்ளுங்கள் – ஆப்பிள் பழத்தோட்டம் வில்சன் தான். பழைய ஓக் காடுகளால் சூழப்பட்ட இந்த பண்ணை, பள்ளத்தாக்கின் இரு பக்கங்களிலும், ராபீட் கிரீக் நிலத்தை சூழ்ந்துள்ளது.


    வில்சன் ஆர்ச்சர்ட் ஐயோவா நகரில் ஒரு பெரிய பழத்தோட்டம். மிகப்பெரிய பரப்பளவில் பெரியவை, சிறியவை, பச்சை நிறங்கள், மஞ்சள் நிறங்கள் என பல வகையான ஆப்பிள்கள் விளைகின்றன. அதனோடு ஊடு பயிராக மஞ்சள் பூசணியும் விளைவிக்கிறார்கள். இந்த விவசாயத்தை இவர்கள் குடும்பத் தொழிலாக செய்கின்றனர். இங்கு அமெரிக்காவில் ஆப்பிள் தோட்டம் வைத்திருப்பவர்கள் ஆப்பிள் பிக்கிங், அதேபோல் ஸ்டிராபேர்ரி, செர்ரி பிக்கிங் என்றும் விவசாயிகளும் பொது மக்களும் சந்திக்கக்கூடிய நிலையை ஏற்படுத்துகின்றனர். தேன் சேமிப்பும், விற்பனையும் கூட உண்டு. இங்கு ஆப்பிள் பறிக்க வருபவர்களைக் கவரும் விதமாக ஆப்பிள் மூலம் தயாரிக்கக்கூடிய இரசாயணக் கலவை கலப்படமற்ற சுத்தமான ஆப்பிள் பழக்கூழ் மட்டுமல்லாமல் மற்றும் பல வகையான இனிப்புப் பண்டங்களையும் செய்து விற்கின்றனர். குறிப்பாக ஆப்பிள் ஜாம், டோ நட், பழ ரசம், ஆப்பிள் டர்ன் ஓவர், ஆப்பிள் – பை போன்றவைகள். அந்த பழத்தோட்டத்தை சுற்றிப்பார்க்க டிராக்டர் கூட உண்டு .. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, அனைத்துப் பணிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பிரித்துக்கொண்டு திறம்பட நிர்வாகம் செய்வது சிறப்பு. அமெரிக்க விவசாயிகள் இப்படி பொது மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்டு வர்த்தகம் செய்து சிறப்பாக வளர்ச்சியடைவது மகிழ்ச்சிக்குரியது ..

    நமது விவசாயிகள் நம் அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் பொது மக்களோடு நேரடித் தொடர்பு ஏற்படும் வகையில் நம்ம ஊர் விளை பொருட்களாகிய கத்தரி, முருங்கை, தக்காளி, மற்ற பழங்கள் போன்றவைகளை இது போன்று பொது மக்கள் நேரடி கொள்முதல் செய்யும் வகையிலும் அதோடு இது போன்று சார்புடைய பொருட்களை தயார் செய்யும் தொழிலகமும் கூட்டுறவு முறையில் உற்பத்தியும், பொருளாக்கமும் செய்தால் நம் விவசாயிகளின் வாழ்க்கையும் எங்கோ உயர்ந்து நிற்க வழி வகையாக அமையுமே! தர்மபுரி, கிருட்டிணகிரி பகுதிகளில் வாழக்கூடிய நமது விவசாயிகள் மாம்பழத் தருணத்தில் இது போன்று பல வகைப் பொருட்களை தயார் செய்தும் விற்பனை செய்தால் எத்தனை இலாபம் சம்பாதிக்கலாம் .. விவசாயிகளின் பார்வையே மாறுபட்டு தொழிலதிபர்களாகவும் திகழலாம்! பொன் விளையும் பூமி என்று இதற்குத்தான் நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றார்களோ !

    ஆப்பிள் தோட்டத்தில் வேண்டும் அளவு சாப்பிட்டுவிட்டு வரலாம். அதற்கு விலை இல்லை. கையில் எடுத்து வரும் பழங்களுக்கு மட்டும் விலையுண்டு. சீசனாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே விலைதான்.. அதனால்தானோ என்னவோ இங்கு விவசாயிகளின் வாழ்க்கை ஒரே சீராக நல்ல நிலையிலேயே இருக்கிறது. நம் ஊரில் தக்காளி ஒரு தருணத்தில் கிலோ 50 காசுகளுக்கும், விளைச்சல் குறையும் காலங்களில் 60 உரூபாய் கூட விற்கிறார்கள். இந்த முறை மாற்றம் அடைய வேண்டும். சந்தைப்படுத்தும் முறையில் பல தொழில்நுட்பங்களைப் புகுத்தி சிறப்படைய முயற்சி மேற்கொள்ள வேண்டும். அரசு அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்!

    Share
  • ஆகச்சிறந்த ஆன்மாவிற்கு புகழஞ்சலி!

    முன்னாள் பிரதமர், உயர்திரு அதல் பிகாரி வாஜ்பாயி, தமது 93ஆம் அகவையில், இன்று (16/8/2018) மாலை 5 மணிக்கு இயற்கை எய்தினார். தேசிய சனநாயகக் கூட்டணி அரசின் பிரதமராக, 1999 முதல் 2004 வரை கடமையாற்றிய காலத்தில், இந்தியா சந்தித்த பல சோதனைகளை மிகத் திறம்பட நிர்வகித்த பெருமைக்குரிய ஒப்பற்ற அரசியல்வாதி. இவற்றுள் பொக்ரான்-2 அணு பரிசோதனை, பாக்கித்தானுடனான கார்கில் யுத்த வெற்றி, போன்றவை குறிப்பிடத் தக்கவை !

    ஆகச்சிறந்த கவிஞரான திரு வாஜ்பாய் , ஆங்கிலத்திலும், இந்தியிலும் அற்புதமாகக் கட்டுரை வடிக்கவும், சொற்பொழிவாற்றும் திறனும் படைத்தவர். 2014 ஆம் ஆண்டில் பாரத ரத்னா பட்டம் பெற்றவர். 40 ஆண்டுகள் நடுவண் அரசின் அரசியலில் பங்கு பெற்று, 10 முறைகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 2 முறைகள் மேலவை உறுப்பினராகவும் 3 முறைகள் பிரதமராகவும் சேவை புரிந்தவர். நாடாளுமன்றத்தில் இவருடைய நேர்மறையான, ஆணித்தரமான விவாதங்கள் பலராலும் வரவேற்கப்பட்டன. வாஜ்பாய் கொண்டுவந்த தங்க நாற்கரம் சாலைத் திட்டம் போற்றத்தக்கது!

    எதிர்கட்சித் தலைவர்களையும் பேதமின்றி அவர்தம் நற்செயல்களை உளமார பாராட்டக்கூடிய பண்பாடு மிகுந்தவர். அதேபோன்று வன்மையான பேச்சிலும், எழுத்திலும் எதிராளிகளை நிலை குலையச் செய்யும் வித்தகர். மிகச்சிறந்த நகைச்சுவையாளரும் கூட ! ஐ.நா.விலும், நமது நாடாளுமன்றத்திலும் திருக்குறளையும், பாரதியாரின் பாடல்களையும் தமிழில் அழகாக எடுத்துரைத்தவர். அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும், அவர்தம் குடும்பத்தினரும், நண்பர்களும், கட்சியினரும் மனம் அமைதி பெறவும் எல்லாம் வல்ல எம் இறையை பிரார்த்திக்க்கிறோம். இந்திய வரலாற்றில் நிலையான இடம் பிடித்த அவர்தம் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்!

    Share
  • வல்லமையின் சுதந்திர தின வாழ்த்துகள்!

    பவள சங்கரி

    பவள சங்கரி

    நான் எனது சுதந்திரத்தை விரும்பும்பொழுது எப்படி என்னால் உங்களுடைய சுதந்திரத்தை எதிர்க்க முடியும்? – மகாத்மா காந்தியடிகள்

    இன்று 72 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம். உண்மையில் நாம் எந்ததெந்தத் துறையில் சுதந்திரம் அடைந்திருக்கிறோம். பொருளாதாரத் தன்னிறைவும், பொருளாதார சுதந்திரமும் அடைந்து விட்டோமா என்றால் இல்லை என்றுதான்இன்றும் வேதனையுடன் கூற முடிகின்றது. ஏனைய மற்ற நாடுகளின் கட்டுப்பாட்டிற்குள் வாழும் நிலைமையால் பொருளாதாரச் சுதந்திரத்தை இழந்து நிற்க வேண்டியுள்ளது. நாட்டின் முதுகெலும்பான கல்வித்துறையை எடுத்துக்கொண்டால் மிகப்பெரும் மோசடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். 200 க்கும் மேற்பட்ட கல்லூரிகளும், பத்திற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களும் மோசடியாய் இயங்கிக் கொண்டு, இத்தனை ஆண்டுக் காலங்களாக பல ஆயிரம் மாணவச் செல்வங்களின், நம் நாட்டின் வருங்காலத் தூண்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடியிருக்கின்றனர். வானளாவிய கட்டிடங்கள் மட்டுமே வெற்றியின் சின்னம் என்று கருதிக்கொண்டு, உலகத்தரம் பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் நாட்டின் வளர்ச்சியையே பாதிக்கச் செய்துள்ளனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நாலந்தா போன்ற உலகத் தரம் வாய்ந்த பல பல்கலைக்கழகங்கள் நம் இந்தியாவில் இருந்துள்ளன என்பதை எவரும் மறுக்கவியலாது. வழிகாட்ட வேண்டியவர்களே வழி தவறி நடந்துகொண்டால் நாட்டின் எதிர்காலம் குறித்து கவலைகொள்ளாமல் இருக்க முடியவில்லை. 71 ஆண்டுகள் கடந்த பின்பும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக தெருவில் இறங்கிப் போராடும் நிலையிலேயே இருந்து கொண்டிருக்கிறோம். சற்றும் வளர்ச்சியடையாத, அடிப்படைத் தேவைகள்கூட பூர்த்தியாகாத பல மாநிலங்கள் இன்றும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. பெண்களும், பெண் குழந்தைகளும் விற்கப்படும் நிலையும், பாதுகாப்பற்ற சூழலில் உழலும் பெண் குழந்தைகளுக்கு விடிவு காலம் எப்போது என்று விசும்பி குரல் கொடுக்கும் நிலையிலேயே இருக்கிறோம் என்ற எண்ணத்தை மறைக்க முடியவில்லை. கல்விச் சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா என்று கேள்விப்பட்ட நாம்தான் இன்று இளம் பெண்களின் வன் புணர்ச்சி சுற்றுலாக்களும் இயங்கி வருவது பற்றி கேள்விப்படுவது வேதனையின் உச்சம்.

    இந்தியர்கள் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும், ஒவ்வொரு துறையில் மிகச்சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றனர். இன்று நமது இந்தியப் பொருளாதாரமே ஒவ்வொரு தனி மனிதனின் வளர்ச்சியின் மீதுதான் கட்டமைக்கப்படுவதைக் காண்கிறோம். எத்தனையோ, விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், பிறந்து வளர்ந்து தாம் பிறந்த நாட்டிற்கும், தமக்கும் பெருமையை சேர்த்துக் கொண்டு சரித்திரத்தில் இடம் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மேலைக்கடல் முழுவதும் கப்பல் விடுவோம் என்று பள்ளு பாடவும், விண்ணிலே ஆட்சி செய்வோம் என்று கற்பனை கதையும் வேண்டியதில்லை. நிலவில் பாட்டி வடை சுட்ட கதையும் இனி நமக்குத் தேவையில்லை. சூரியனுக்கே விண்கலம் அனுப்பிவிட்ட இந்த காலத்தில் சந்திராயன் 2 விண்கலத்தை செலுத்தாமல் ஏன் நிறுத்தி வைத்திருக்கிறோம். அந்தப்பணியில் ஈடுபட்டிருந்த நமது தலைசிறந்த விஞ்ஞானி திரு. மயில்சாமி அண்ணாத்துரை அவர்களுக்கு பணி நீட்டிப்பும் வழங்கப்படவில்லை. உண்மையான வளர்ச்சி அடைய ஒரே வழி கட்சிப் பாகுபாடு, அரசியல், சமுதாய பாகுபாடு இன்றி அனைவருக்கும் பணியாற்றும் முழுமையான வாய்ப்பு அளிப்பதும், வளரத் துடிக்கும் இளைஞர்களுக்கு முழுமையாக வாய்ப்புகளை வழங்குவதும்தான் உண்மையான சுதந்திரம். பொருளாதாரத்தில் தன்னிறைவும், கல்வியில் உயரிய வளர்ச்சியும், பெண்கள் பாதுகாப்பும், தாழ்த்தப்ப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சியிலும் அக்கறை காட்டுவதே உண்மையான சுதந்திரம் ஆகும். சட்டையில் கொடியும், வாயில் இனிப்பும் மட்டும் நமது வளர்ச்சியன்று. வாழ்விலே இனிமையும், வளர்ச்சியில் சுதந்திரமும் காண்பதே உண்மையான சுதந்திரம்! அனைவரும் ஒன்று கூடி இந்தக் குறிக்கோள்களை அடைய பாடுபடுவோம்! அந்த எண்ணம் உருவாவதே உண்மையான சுதந்திரத்தின் கொண்டாட்டம்!

     

    வாழ்க, வளர்க இந்தியா!

    Share
  • ராஜஸ்தானின் கலைநுட்பம் அமெரிக்காவில்!

    பவள சங்கரி

     

    இந்திய கலைநுட்பம் அமெரிக்காவில் மிகச்சிறப்பாக பாராட்டைப் பெறும் வகையில் இத்தாலிய மற்றும் ராஜஸ்தான் பளிங்குக் கற்கள் மூலம், அதி அற்புத கலை வேலைப்பாடுகளுடன், நியூஜெர்சி, ராபின்ஸ்வில்லில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ சுவாமி நாராயண ஆலயம், இந்திய அமெரிக்க நட்புறவிற்கு ஒரு சிறந்த பாலமாக அமைந்திருக்கிறது. பல நாட்டவர்களும், குறிப்பாக அமெரிக்கர்களும் மிக ஆர்வமாக வந்து இந்த கலைக்கோவிலை இரசிப்பதுடன் அமைதியாக தியானம் செய்வதும் வரவேற்புக்குரியது!

    Share
  • அழகில் தியானம்!

    பவள சங்கரி

     

    கீச்சிடும் புள்ளின் தேனோசையின் அதிர்வு
    துயில் கலைத்ததும் கனவின் சொச்சமும்
    விழியில் காட்சியாகி விரியும் கணமும்
    பனியில் பூத்த சிறுமொட்டின் அழகியலும்

    துள்ளித் திரியும் சிறுமுயலின் பரவசமும்
    வஞ்சமும் காழ்ப்பும் வசவுமில்லா நேசமும்
    தஞ்சமென சிறுவங்கும் மாடமாளிகை போகமும்
    அன்றையப் பொழுதை இதமாய் தன்வசமாக்கி

    என்றனையும் ஆட்கொண்டு ஆழ்மன தியானமாக்கி
    அல்லல் யாவையும் அசட்டையாய் நீக்கி
    தொல்லைகள் இல்லா புவியை உருவாக்கி
    அழகில் தியானம் அறிவில் தெளிவு மனதில் உறுதி!

    மங்கும் மாலையிலும் மயக்கமில்லை மனதுக்கு
    என்றுமில்லை நிரந்தரத் துயில் சூரியனுக்கு
    இன்றுபோய் உதயமாகி வருவாய் நாளை
    பணிந்திருந்து பக்குவமாய் இயங்குவாய் ஆக்கப்பூர்வமாய்!

    —————————————–

    Share