Tag: பழமைபேசி

  • சிலுவையேற்றம்

    இன்றைய விடியலுக்குப் பின், வானம் மட்டுமல்ல, சாராவும் ஒரேயடியாக மாறிப் போய்விட்டிருக்கிறாள். இராத்திரி முழுவதும் வளைத்து வளைத்து வீசிய புளூரிட்ஜ்மலைக் காற்று அவளது பழுப்பு இலைகளை பறித்துக் கொண்டு போயிருந்தது.

    வீட்டினின்று வெளிப்பட்டதும் நாலாபுறமும் பிரிந்து படபடத்த மயிர்க்கற்றைகளைத் தன் இருகைகளாலும் ஒன்று கூப்பி முடிந்து கொண்டே சாராவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே வந்தாள் டானா.

    சாராவும் டானாவுக்கும் பதினெட்டு ஆண்டுகால நட்பும் உறவும்!! சாரா டானாவைக் காட்டிலும் மூன்று வயது மூத்தவள். இவர்கள் இருவரையும் வளர்த்து ஆளாக்கியவர் ஒருவரே. சாராவுக்கு வளர்ப்புத்தாயும் டானாவுக்கு பெற்ற தாயுமான பெத்சிதான்.

    அல்பேமாலில் இருக்கும் நூற்பாலையொன்றில் வேலைபார்த்து வந்த பெத்சியும் எட்வர்டும், இந்த வீட்டுக்குக் குடியேறிய ஓரிரு மாதங்களில் நடப்பட்ட ஒயிட் டாக்வுட்களில் சாராவும் ஒருவள். சாராவுக்குத் தனது மூன்றாவது கூதிர்காலம் கடந்திருந்த போதுதான் டானா பிறந்தாள்.

    அடுத்து வந்த கோடையின் மாலைநேரப் பொழுதொன்றில், தன் நிழலை அள்ளிப் பூசிக் கொள்ள வந்த டானாவின் மழலையில் சொக்கிப் போய்த் தன்னையே ஈந்து அவளோடு கலந்து கொண்டாள் சாரா.

    காலம் காலண்டரில் சில பல மாதங்களை உதிர்த்திருந்த போது, டானா மெல்ல எழுந்து நடக்கத் துவங்கியிருந்தாள். அந்த காலகட்டத்தில்தான் ‘வா, என்னைத் தழுவிக்கோ’ என்பது போல தன்னிரு கைகளையும் இருபக்கக் கிளைகளாக விரித்துக் கொண்டாள் சாராவும். இலையுதிர்கால நிர்வாண கோலத்தில் பார்ப்பதற்கு சிலுவையைப் போன்றதொரு வடிவைச் சாரா கொள்வதற்கு வழிவகுத்தது அது.

    குறும்புகள் கூடும் வேளையில், டானாவைச் சாராவின் இருகைகளுக்கும் தலைக்குமிடையே உயரத்தில் இருத்தி டைம் அவுட் கொடுக்கத் தலைப்பட்டான் எட்வர்டு. சாராவின்மீது இருப்புக் கொள்வதற்கென்றே போலியாய்க் குறும்புகள் செய்யவும் தலைப்பட்டாள் டானா. இதனைச் சாராவும் வெகுவாய் இரசித்தாள்.

    துவக்கப்பள்ளி முடித்து, கிரேட் கிளிப்சு சிகைச்சிரைப்புக் கடையில் மயிர்  கூட்டிப்பெருக்கி வருவாய் ஈட்டி அம்மாவுக்கும்கூடக் குடிக்கக் கொடுத்து, அதேவூரில் இருக்கும் மூத்தோர் இல்லத்தில் தாதி வேலை பார்க்கும் நாட்களையும் கடந்து, முதன்முறையாக ஓட்டுப் போடும் நாள் கூட வந்து விட்டிருக்கிறது டானாவுக்கு.

    சாராவுக்கு அருகில் வந்த டானா, சாராவின் அடியின் மீது சாய்ந்து உட்காரப் போன வேளையில்தான், உவ்வேக்… வந்து தொலைத்தால் நன்றாக இருக்கும்… வந்தபாடில்லை… கண்கள் இருட்டிக் கொண்டிருந்தது. பழக்க நிதானத்துடன் எழுந்து போய் அங்கிருந்த குழாயைத் திறக்க, வந்த தண்ணீரில் ஒரு மிடக்கு குடித்தாள். சாராவிடமிருந்த இரு அணிற்பிள்ளைகள் குதித்தோடி வந்து டானாவின் அருகில் வாஞ்சையாய் நின்றன. ”டானாப் புள்ளைக்கு என்ன ஆச்சுதோ? போய்ப் பாருங்கடே” எனும் வாக்கில் சாரா சிலிர்க்க, அவளிடமிருந்து பிரிந்த இலைகள் நான்கும் இணுக்குகள் மூன்றும் டானாவிடம் வந்து ஊக்கம் கூட்டி நின்றன. ஊக்கம் பெற்றவள் திரும்பி வந்து ஆரத்தழுவிச் சாய்ந்தபடி சாராவுக்குத் தன்னையே கொடுத்து நின்று கொண்டிருந்தாள்.

    “ஏய், வெடிஞ்சதும் இங்க வந்திட்டியா? நானும் எட்வர்டும் ஓட்டுப் போடப் போறம். போய்ட்டு வர்றதுக்குள்ள நீயும் புறப்பட்டு தயாரா இரு. அவசியம் நீயும் ஓட்டுப் போடணும். அதான் உனக்கு இந்தவாட்டி ஓட்டிருக்கே?! இல்லன்னா, இறைவனோட பழிபாவங்களுக்கு ஆட்பட்டு நிர்மூலமாகிடுவே பாத்துக்க!!”, கறாராகச் சொல்லிக் காருக்குள் போய் ஏறிக் கொண்டாள் பெத்சி.

    ”யூ… ஃபக்கின் இடியட்… தற்குறி நாயே…” இரைந்து கத்திக் கொண்டே காரின் பின்னால் போனாள் டயானா. அருகே போனதும் ஓடி, பின் பறந்து போகும் தூக்குவால்க் குருவியைப் போலக் காணாமற் போயிருந்தது எட்வர்டின் கார்.

    மீண்டும் போய் சாராவின் வேரடிக்குச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். இளங்குளிரைத் துரத்தியபடி சூரியப்பயல் வெளிச்சத்தை அள்ளி, இவள் மேல் பூசிக் கொண்டிருந்தான்.

    சாராவின் அணுக்கமும் சூரியப்பயலின் வெளிச்சத் தகிப்பும்  சுகித்துக் கொடுக்க, மனமறுத்து வெறுமையாய்க் கிடந்தவளின் காதுகளில் பேச்சொலியை இட்டு நிரப்பி இம்சை செய்தாள் பார்பரா.

    “ஏய்… வா போலாம்… அப்படியே நடந்து பேசிட்டே போய், நாமும் நம் ஓட்டைப் போட்டுட்டு வரலாம்”

    ”என்னடா? யார்க்கு ஓட்டுப் போடச் சொல்ற? நம்மையெல்லாம் அராவயசில…??”

    கண்கள் மீண்டும் இருண்டு, தன்னையும் மீறி அடிவயிறு இறுகுவது போல இருந்தது. “உவ்வேக்…”

    “ஆர் யு ஓகே? ஆர் யு ஓகே??”

    தன் தலை கழன்று விழுவது போல உணர்ந்தாள். ஓய்வற்ற கடலலை போல மனம் பலவாறாகப் படபடத்தது. மனத்தின் பேரிரைச்சலை அடக்க பெரும்பாடுபட்டுப் போனாள் டானா. அதற்குள் பார்பராவும் ஓடோடி வந்து தாங்கிக் கொண்டாள்.

    “ஒன்னுமில்ல… எதொ சரியில்ல”

    “வா, உள்ள போயிடலாம்… நான் வெந்நீர் வெச்சித் தரட்டுமா?”, பரபரத்தாள் பார்பரா. பரபரத்த கையோடு டானாவை அவள் அறையில் கிடத்தியபின், மைக்ரோ ஓவனில் வெந்நீர் வைத்துக் கொண்டு வந்து கொடுத்தாள். அதற்குள் தன்னிலைக்கு மீண்டிருந்தாள் டானா.

    “சரி, இப்ப வேண்டாம். நாம, மத்தியானத்துக்கு அப்புறம் ஓட்டுப் போடப் போகலாம். நீ கொஞ்சம் ஓய்வெடு” சொல்லிச் சென்றாள் பார்பரா.

    கொள்கையில், இலட்சியத்தில், கோட்ப்பாட்டில், தொலைநோக்குப் பார்வையில், மாந்தநேயப் பார்வையில் நின்று மக்கள் எங்கே சிந்திக்கிறார்கள்? அரசியல் சக்திகளுக்கும் சமயசக்திகளுக்கும் அதிகாரசக்திகளுக்கும் வீண் போகும் இந்த மக்களுக்கு ஓட்டு ஒரு கேடா?? சிந்தனையினூடே மல்லாந்து படுத்தவாக்கில் சாளரத்தை நோக்கினாள் சாரா. சிலந்தியொன்று கூடு கட்டிக் கொண்டிருந்தது. தன்னால் முடிந்த மட்டும் காறி அதன் மீது உமிழ்ந்தாள். அது பலவாறாக நாலாபுறமும் பிரிந்து சிறு சிறு பிசிறுகளாய் வலுவற்றுச் சிதறிப் போனது.

    பாவம்! எல்லாமும் பாவம்!! மனிதப்பிறவியே பாவத்தால் விளைந்ததுதானே? பாவத்தின் பயன்தானே நாமெல்லாம்? விலக்கப்பட்ட பழத்தைத் தின்னாமல் இருந்திருந்தால், ஆதாம் ஏவாள் சந்ததியினர் ஏது?? அப்படியானால், பாபங்களை ஒழிக்கும் பிறப்பையல்லவா நாம் கொண்டிருக்க வேண்டும்?? இவர்கள் இப்படியானவற்றால்தானே எல்லாரையும் நெறியாண்டு கொண்டிருக்கிறார்கள்?? வேகமாக எண்ண அலைகளைப் பெருக்கிக் கொண்டிருந்தவளது மனம், திடுமென உறைந்து கற்சிலை போல நின்று விட்டிருந்தது.

    பார்பரா சரியாக சமையலறைக் குழாயை மூடாமல் விட்டிருக்கக் கூடும். சரியான இடைவெளியில் ‘டக், டக், டக்’ ஓசை இடைவிடாது வந்து கொண்டிருந்தது. அணுவைப் பிளக்கும் போது வெளிப்படும் ஓசையையொத்த வெடிச்சத்தம் அது. டக், அதிர்வுகள்.. அறையெங்கும் பரவி தன் காதுகளுக்கும் பாய்கிறது. செவிப்பறையின் சவ்வு உட்பக்கமாக் குழிந்து ‘டக்’கென்று தன்னுள் அதை இறக்குகிறது. அது தன்மேனியெங்கும் தாக்குதலை நடத்தி, கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கி பூரணசம நிலைக்குத் திரும்பிவிட்டது என்பதை உணர்கிறாள் டானா. அவ்வளவுதான், மீண்டும் ‘டக்’!! என்னவொரு பெருஞ்சத்தம்!! அதற்கு மேலும் அவளால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை.

    எழுந்து போய் சொட்டும் அந்த குழாயை அடைத்து விட்டு தன் அறைக்குள் வருகிறாள். அந்த மூலையில் தூசிபடந்து கிடக்கும் ‘ஆல்வேஸ் அல்ட்ரா தின் ஜம்போ பேடுகள்” பொட்டலத்தைப் பார்த்ததும் எட்டி ஒரு உதை விடுகிறாள். விசுக்… கட்டிலுக்கடியில் போய் ஒளிந்து கொண்டது அது.

    வெளியில் தணிந்திருந்த காற்றின் வேகம் கூடியிருந்தது. கிரமத்தின் நியதிதான் உருமாற்றமும் கொண்டகோலமறுத்தலும்! நிர்வாணம் தூய்மானம்!! இலைகளுக்கு பிரியாவிடை கொடுத்துக் கொண்டிருக்கிறாள். மரங்களுக்கும் செடிகொடிகளுக்கும் வாக்குரிமை இருக்கிறதாயென்ன கவலைப்பட?? கவலையின்றித் தன்பாட்டில் நிர்வாணம் தரித்துக் கொண்டிருக்கிறாள் சாரா.

    அமெரிக்காவின் தென்பகுதி முழுமைக்கும் கரியநிற மண்காணிகள். முப்போகமும் பருத்தி விளையும் சமச்சீர் நிலங்கள். பட்டிதொட்டியெங்கும் நூற்பாலைகள். நூற்பாலைகளுக்குப் போட்டியாய் சமயமண்டபங்கள்.

    மேம்பட்டவர் மேலாண் வேலை பார்க்கின்றனர். கீழ்ப்பட்டவர் உழைக்கின்றனர். மாந்தர்கள், விலங்குகளுக்குள் இருந்த இந்தப் போக்கு, எல்லைக்கோடுகள் வகுப்பட தனக்கும் இருக்கிறது பார் வடிவு எனச்சொல்லிக் கொள்ளும் நாடுகளையும் பீடித்துக் கொண்டது. இயற்கை வளம் சூழற்பொலிவினைக் குலைக்கும் வேலைகள் கீழான நாடுகளுக்குச் செல்ல, அல்பேமால் நூற்பாலைகளுக்குள் மனிதசஞ்சாரமற்ற இருட்டுப்பள்ளங்களும், கொலைவெறி பிடித்த பிட்புல்லுகளும் ரேட்டில்சிநேக்குகளும் வாசம்கொண்டு வாழ்ந்துகெட்ட குடும்பங்கள் சாட்சியாக சிதிலங்களும் புகுந்து கொண்டன. சிந்தனைக்காட்பட்டவர் நகரங்களை நோக்கிப் போய்விட்டிருக்கின்றனர். எஞ்சியவர்கள் சமயக்கூடங்களின் அருளாசியைப் புசித்துக் கொண்டே கிடைத்த வேலைகளைச் செய்து கொண்டு இங்கேயே தங்கிவிட்டனர்.

    படிப்பது நல்லதுதான். முடிந்தால் படிக்கலாம். வேலை கிடைத்தால் வேலைக்குப் போகலாம். இது நமது பூமி. நாம் வாழ, கிடைத்ததைச் செய்து கொள்ளலாம். நமக்கு நமது நம்பிக்கை முக்கியம். பெரியவர்கள் நமக்கு நல்லதே சொல்வார்கள். அவர்கள் சொல்வதை மீறினால், பாவத்தால் விளைந்த நமக்குப் பாவங்களே வந்து சேரும்.

    ஊரகப்பகுதியில் இருபத்து மூனுசதம் பேருக்கு எந்தவொரு வரிவடிவத்தாலான எழுத்தையும் இனங்காணத் தெரியாது. நாற்பத்து ஐந்துசதம் பேருக்கு துவக்கப்பள்ளிக்கான கல்வியறிவுதான். அதனாலென்ன? சமய நம்பிக்கையின்பாற்பட்டு நேர்மையாக வாழ்பவர்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு பிரியமாக இருந்து வருகிறார்கள். தேவைகளையும் உணர்வுகளையும் புரிந்து கொண்டு எதற்கும் வளைந்து கொடுக்கும் பெண்கள் இருக்கிறார்கள். அதற்குத்தானே அவர்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள்!!

    ”யேய்… பார்பரா, எப்ப வந்த நீ? நான் கவனிக்கவேயில்ல!!”

    “நான் இப்பதான் வந்தேன். எங்க, உன்னோட பேரண்ட்சு?”

    “ஓ, ஓட்டுப் போடப் போன அதுக அங்கெங்காவது குடிச்சிட்டுக் கிடக்கும்ங்க?”

    “உனக்கு இப்ப எப்டியிருக்கு? காலையில அவ்ளோ சுகமில்லாம இருந்தியே??”

    மின்னல்க்கீற்றுப் போல வந்துபோனது வாட்டம். சரிக்கட்டிக் கொண்டே சொல்கிறாள், “காலையில எதோ செரியில்ல… இப்ப சாப்ட்டதும் செரியாப் போச்சுடா பார்பரா!!”

    “சரி, கிளம்பு… வுட்புரூக்கு போயி ஓட்டு போட்டுட்டு அப்படியே பர்கர்கிங்ல சாப்டுட்டு வர்லாம்… நாலு மைல் நடந்து வருவியல்ல??”

    “நடந்து வர்லாம்… ஆனா என்கிட்ட காசில்லியே?”, குமைந்தாள் டானா.

    “இட்ஸ் ஓகே… காசு கிடைச்சதும் திருப்பிக் கொடுத்திடப் போறே? என்கிட்ட இருக்கு, வா போகலாம்”, துரிதப்படுத்தினாள் பார்பரா.

    “நான் வரணுமா? வந்தா நான் அம்மையாருக்குத்தான் ஓட்டுப் போடுவன். இருக்கிற பாவக்கணக்குல இன்னும் ஒன்னும் கூடுமே?”

    “கமான்.. போடாட்டிதான் சபிக்கப்படுவோம்… நிர்மூலத்திலிருந்து விடுதலை கிடைக்காது… அதுதான் ஃபேக்ட்”

    பணிந்து போகும் டானா மிரட்சியுடன் பார்பராவைப் பார்க்கிறாள். ‘நீயுமா அப்டி நினைக்கிறே? ஞாயித்துக்கெழம அவங்க பேசினதைக் கேட்டாய்தானே?? இலட்சக்கணக்கான கொலைகள் செய்தவள்ங்றாங்க. பாவத்தைச் சுமக்கும் வேசிங்றாங்க.. இந்த முப்பது ஆண்டு காலமும் கருவில் வைத்து அழித்தொழிக்கப்பட்ட குழந்தைகளின் உயிர்ப்பறிப்புக்கு அவங்களும் காரணம்ங்றாங்க… இதையெல்லாம் மீறி நான் அவங்களுக்கு ஓட்டுப் போட்டது தெரிஞ்சா நிம்மதியாவே இருக்க முடியாதுடா பார்பரா… ப்ளீஸ், புரிஞ்சுக்கோயேன்”

    “ஏய்… என்னாதிது? நீ ரொம்ப சீரியசாவெல்லாம் யோசிக்கிற?? மண்ணின் தவப்புதல்வர்கள்தான்… இல்லைன்னு சொல்லலை. அதெப்படி? நாம மட்டும்தான் பாவத்துக்கு நேர்ந்து விடப்பட்டவங்களா?? நாற்ப்பத்தி ஐந்து வயதுக்குட்பட்ட நம்மைச் சார்ந்த பெண்களோட சாவுரேட் மட்டும் நாற்பது நாற்பத்தஞ்சு பெர்சன்ட்டுக்கும் மேல ஏறியிருக்குங்றாங்க. அதே நேரத்துல கறுப்பு ஆட்களோட, இசுபானீஸ் ஆட்களோட சாவு பாதிக்குப் பாதியா குறைஞ்சிருக்காமே?? உங்க வீட்டுக்கு வந்த ஜென்சிதானே சொன்னாள். நாம அப்படியென்ன பாவத்தைச் சுமக்கிறோம்??”

    முன்வாசலைப் பாவிக்கும் பழக்கத்தை என்றோ கைவிட்டாயிற்று. எப்போதும் பின்வாசலைத்தான் பாவிக்கிறாள். வெளியே வந்ததும் நோக்கினாள். முற்றும் துறந்து அம்மணமாய் நின்று கொண்டிருக்கிறாள் சாரா. ஆனால் அவளின் மொட்டைத்தலையில் சில செம்பங்கிப் பூக்கள், கார்டினல் குருவிகளின் ரூபத்தில் பூத்திருந்தன. அப்பூக்கள் சாராவின் தலையில் இடம் மாறி இடம் மாறி அமர்கின்றன. அம்மணாண்டி தலையில கலர் கலராப் பூக்களாவென உள்ளூரச் சாராவைப் பார்த்துச் சிரிக்கிறாள் டானா.

    “யே… லுக் அட் தி கார்டினல்சு… அதுகளுக்கெல்லாம் பாவக்கணக்குகள் இல்லையோ என்னவோ? தெ ஆர் எஞ்சாயிங் யு சீ!!” பார்பரா முறுவல் பூண்டாள்.

    வாஞ்சையுடன் கைகோத்து நடப்பது அல்பேமாலில் இவர்கள் மட்டுமாகத்தானிருக்கும். கணவன் மனைவியரிடையேகூட அப்படி நடக்கும் பழக்கம் அங்கு எவரிடமும் இருந்திருக்கவில்லை. நடைபாதையின் இருமருங்கிலுமிருந்த மரங்கள் நகரும் மரங்களாயிருந்தன இந்த நான்கு கண்களுக்குள். அந்த மொட்டை வெயிலிலும் ஆங்காங்கே அடைக்கோழியைப் போல அடைந்து கிடந்தது இருட்டு. என்ன ஆச்சர்யம்?! அந்த இருட்டும் கூட பின்னோக்கி நகர்ந்து போய்க் கொண்டிருந்தது அக்கண்களில்.

    ”ஊரகத்திலிருக்கும் பெண் குழந்தைகளுக்கு கல்வி பெருகும் போது அவர்களது நடமாட்டம் பெருகும். ஆனால், பாவத்தின் நடுகற்களாக விதைக்கப்பட வேண்டியவர்கள் அவர்கள். ஏனென்றால், ஒரு ஆண் தவறிழைக்க நேரிடும் போது அதற்கான காரணியாக ஒரு பெண்ணே இருக்கிறாள். அவனின் முன்னால் அந்த நேரத்தில் ஏன் அவள் தென்பட வேண்டும்? ஒரு பெண்ணுக்கு அதிகாரம் கிடைக்கிற போது அது எல்லாப் பாபங்களுக்குமான விதைகளைத் தூவிக் கொண்டே போகிறது”, பிரசங்கம் கேட்டுத் திடமாகிப் போனவனொருவன் அவர்களைக் கடந்து போகும் போது கொடுத்த ஒலிப்பான் சத்தம், இவர்களின் காதுகளைத் தீண்டவேயில்லை. மாறாக, அந்த நான்கு கண்களில் நகர்ந்து கொண்டிருக்கும் மரங்களிலிருந்த டிப்பர்க்குருவிகளும் கிங்பேர்டுகளும் உயரே எழும்பிப் பின்னர் தாழப்பறந்து மரங்களுக்குள் மீண்டும் புதைந்து கொண்டன.

    தனக்கான பாவங்களைப் பங்கு போட்டுக் கொள்வதில்தான் ஏற்றத்தாழ்வேவொழிய, மற்றபடிக்கு எல்லாவற்றிலும் தாராளம்தான். இவர்களும் சுருட்டுப் பிடிக்கலாம். இவர்களும் தண்ணியடிக்கலாம். எல்லாரும் தழையை நசுக்கி உறிஞ்சலாம். அடித்துப் பிடித்துச் சமைத்துப் பரிமாறியதில் மிஞ்சியதைத் தாராளமாய் உண்ணலாம். அன்றாடம் உறங்கப் போகுமுன் அவ்வப்போதைய பாவங்களை இறைவனிடம் ஒப்புவிக்கப்படுகிறது. அவரும் அவற்றை நீக்கி தூய்மைப்படுத்தி விடுகிறார். தூய்மைப்படுத்தவியலா நேரங்களில், வாஞ்சையோடு முகம் நோக்கிக் கொடுக்கப்படுகிறது. இன்முகத்தோடு அவையாவும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

    பொதுப்புத்தி விதைக்கப்பட்டிருக்கிறது பருத்திக் காணிகளில்!! அவை காற்றில் கலந்து நாசிகளில் உட்புகுந்து நீக்கமற நிறைந்திருக்கின்றன. அவற்றுக்கான உயிர்ஜீவிதம் அவ்வப்போது ஞாயிற்றுக் கிழமைகளில் நாலுகால பூசை நடத்தி திருவமுதாய் அனைவருக்கும் வந்து சேரும்.

    “நமக்காக நம் தந்தை இறைவனிடம் வேண்டுகிறார். இறைவனின் கட்டளைக்கொப்ப செயற்படுகிறார். நமக்காகவே வாழ்கிறார்! நமக்கு நல்லதே செய்கிறார்!!”, அந்தக் கணத்தில் அக்கானகத்துக் கிழவியொருத்தி தன் மகளைப் பார்த்துச் சொல்லிக் கண்களால் சொரிகிறாள். மகளோ, தன் தாயின் கண்களைத் துடைத்து விடுகிறாள்.

    இதெல்லாம் ஒரு சடங்கு. எல்லாம் இந்த பார்பரா செய்த வேலை. பொழுதெல்லாம் சுமந்து முதுகெல்லாம் ஒடிந்து கால்கள் பின்னிக் கொண்டன. திரும்பி வந்தவள், தன் உயிர், உடைமை, ஊன், காமம், காதல் எல்லாவற்றையும் கண்களிலே தேக்கி வைத்துக் கொண்டு தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் அந்த எதிர் வீட்டுப் பையனையும் பார்க்கவில்லை; சாராவையும் பார்க்கவில்லை.  தன் அறைக்குள் வந்து விழுந்தாள்.

    எரிச்சலாக இருந்தது. தனக்கான அறை என்றால் எப்படி இருக்க வேண்டும்? அந்தரங்கம் பேணுவதாய், தனிமை போற்றுவதாய், நலம் காப்பதாய், குதூகலம் கொடுப்பதாய், மகிழ்வில் திளைப்பதாய், பட்டுக்கூடு போலல்லவா இருக்க வேண்டும்?? மாறாக இந்த அறை தன்னைக் காவுகொண்டு விட்டதாய் நினைத்து துக்கித்துப் போகிறாள் டானா. அடி வயிறு என்னவோ செய்தது. சோர்ந்து மயங்கிப் போனாள்.

    இருள் வீட்டுக்குள்ளே, தன் அறைக்குள்ளே எந்தவொரு அனுமதியுமின்றி வந்து ஆக்கிரமித்திருந்தது. குளத்தில் கூடியிருக்கும் கனடியகீசுகளும் நாரைகளும் ஒரேநேரத்தில், அப்படியானதொரு கரைபிடித்த கடுங்குரலில் கத்துவது போன்ற இரைச்சல், டிவியும் வீட்டு ஆட்களுமாக!! இவளால் எழ முடியவில்லை. எக்காளம் எனும் இசைக்கருவியை ஊதும் போது உப்பளத்து நரிகள் கூட அடங்கிப் போகுமாம். அந்த அளவுக்கு அதன் வீச்சு இருக்கும். இந்தக் காட்டுக் கூச்சலில் அந்த எக்காளம் கூடத் தோற்றுவிடும் போல இருந்தது.

    “பிட்ச் இஸ் கான்… பிட்ச் இஸ் கான்!!”, கத்தினான் எட்வர்டு. பியர்பாட்டிலை எட்வர்டு கையிற்திணித்துச் சியர்சு சொன்னபடியே சொல்லிக் கொண்டாள் பெத்சி, ““கோடானு கோடிக் குழந்தைகளைக் கொன்ற வேசிமகள் ஒழிந்தாள் இன்றோடு! கடவுள் எழுத்தருளி விட்டார், கடவுள் எழுந்தருளி விட்டார்!!”

    இடப்பக்கமாய் ஒருக்களித்திருந்தவளின் வலக்கை படுத்திருந்தவாக்கிலேயே துழாவியது. கிடைத்த செல்போனைக் கண்கள் பார்த்திருக்கவில்லை. ஆனால் எண்களைக் கட்டைவிரல் தட்டி எழுப்பியது.

    “என்ன பார்பரா, என்ன நடக்குது?!”

    பதிலைச் சரிவரக் கூடக் கேட்கவில்லை. செல்ஃபோனை படுக்கையின் எதொவொரு மூலையில் விட்டெறிந்தாள். அது மீண்டும் சிணுங்கியது. எதன் மீதும் நாட்டமற்றுப் போய் வெறுமையாய்க் கிடந்தாள். ஓரிரு நிமிடங்கள்தான். வெளியே வந்தாள்.

    சாரா மூலியாய் நின்று கொண்டிருந்தாள். அருகே சென்று கட்டிப்பிடித்துக் கொண்டாள். எதிர்த்து வீட்டு நாய் ஜேசனின் கைக்கயிறு அங்கே கிடந்தது. அதையெடுத்து சாராவின் அந்த விரிந்த கைகளுக்கும் மேலாக உயரே செல்லும் கழுத்துத் தண்டுவடத்தின் மீது வீசினாள். ஸ்ஸ்க்… இலாகவமாய் கழுத்தின் வலப்பக்கம் சென்று இடப்பக்கமாய் கயிறின் முனை கைக்கு வந்து சேர்ந்தது. சாராவைப் பார்த்தாள் டானா. ?மூலி, மூலி… அம்மணமா நிக்கிற மூலி… உனக்கு ஒரு டாலர் வெச்ச செயின் போடுறன் பாரு!!” சொல்லிக் கொண்டே வானத்தைப் பார்த்தாள். அந்த ஒரு கோடி நட்சத்திரங்களும் ஓடி ஒளிந்து கொண்டன. வெறுமையாய் இருந்தது.

    சரி, தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள் டானா.

    சாராவின் கால்முட்டிகளையொத்த திமில் போன்ற திட்டுகளின் மீது காலை வைத்து, கழுத்துமாலையாகத் தான் அணிவித்த கயிற்றைப் பிடித்தபடிக்கு மேலே போனாள். சாராவை கட்டிப்பிடித்து முத்தமிட்டுக் கொண்டாள். அம்மாவையும் தாயாக்கி, தன்னையும் தாயாக்கியவன் குரல் ஓங்கி ஒலித்தது, “லாக் தி பிட்ச்! லாக் ஹெர் அப்!! லாக் ஹெர் அப்!!”. அப்பெருவோசையில் இச்சிறுவோசையான “கிறுக்” கரைந்து போனது.

    சற்றுநேரத்திற்கெல்லாம் பெருமிதத்தோடு வெற்றியாளர் டிவியில் தோன்றிப் பேசியதுதான்மாயம், தெருக்கோடியிலிருந்து கிளம்பிய வானவெடியொன்று ககனமேறிக் கனவெடியாய் வெடித்ததில் எதிர்வீட்டுநாய் ஜேசன் குரைத்தலறினான். எட்வர்டு குதூகலக் கூப்பாடு போட்டான், “சாத்தான் ஒழிந்தது. லாக் தி குருகேட் பிட்ச்!! லாக் ஹெர் அப்!!!” பெருமரத்து ஆந்தைகளும் அலறின. அந்த நேரத்தில்தான், ஓருடல் ஈருயிரைத் தாங்கமாட்டாது தொத்தெனப் பிண்டங்களைப் பூமியில் கிடத்திக் கொண்டிருந்தது சாராவின் முறிந்த சிலுவைக்கழுத்து!!

    Share
  • பேச்சி

    IMG_5273பூங்கா வனங்கள், தாமரைத் தடாகங்கள், தெளிய நீர்வரவிகள், பூஞ்சோலைகள், நாடக சாலைகள், உல்லாச விடுதிகள், பந்தாடும் பவனங்கள், சிறந்த கல்விச் சாலைகள், கற்பகதரு, ஆல், வேம்பு மரங்களுமாய் வீதம்பட்டிக்கும், வாகத் தொழுவுக்குமாகக் காட்சிதரும் பேரூர் வா. வேலூர். அங்கேதான் பழமன் எனும் சிறுவன் வேளாண்மைக் குடியில் பிறந்து, மக்களொடு மக்களாய் கால தேவனின் சுழலில் அடித்து வரப்படுகிறான்.

    “எங்கடா போற?”

    “தெய்வாத்தா கடைக்கு சோறுங்கப் போறன்டா!”

    “ஏன் உங்கூட்ல யாரும் இல்லியாக்கூ?”

    “ஆமாடா, எங்கப்பனுமு, அம்மாளுமு செஞ்சேரிமலைச் சந்தையில சோளம் வித்த பணத்துக்கு ஆடு வாங்கப் போயிருக்காங்க!”

    ”ச்சேரி, ச்சேரி, நானுமு எங்கூட்டுக்குப் போறன், எனக்குமு பசிக்குது!”

    ”சரிடா பெருமாளு!”

    அந்த வில்வமரம் சூழ இருக்கும் வினாயகர் கோவிலடியின் ஊடாக, ‘வட்டப் வட்டப் பிள்ளையாரே, வாழைக்காயி பிள்ளையாரே, உண்ணுண்ணு பிள்ளையாரே, ஊமத்தங்காயிப் பிள்ளையாரே’ என்று பாடியவாறே தெய்வாத்தாவின் உண்டிச் சாலையை அடைகிறான் பழமன்.

    “பழமு, வா கண்ணூ! என்ன கண்ணூ, உன்றப்பன் வடைகிடை வாங்கியாறச் சொல்லுச்சாக்கூ?”

    “இல்லாத்தா, எங்கப்பனுமு அம்மாளுமு செஞ்சேரிமலைச் சந்தைக்கி போயிருக்காங்க. பொழுதுழுகத்தான் வருவாங்க!”

    “அப்பிடியா கண்ணூ. செரி, என்னுங்கற?”

    “என்னாத்தா இருக்குது?”

    “கட்டுச் சோறு, எடுப்புச் சோறு, ஏகாந்த போசனம், இதுல உனக்கு என்ன வேணும்?”

    “அப்பிடின்னா என்னாத்தா?”

    “கட்டுச்சோறுன்னா, இதா அந்த பாக்கு மட்டையில கட்டி வெச்சுருக்குறது. எடுப்புச் சோறுன்னா, கத்திரிக்கா கொளம்புமு, புடலைங்காக் கூட்டுமு, மோரும் உங்கலாம். ஏகாந்த போசனம்ன்னா, வடை பாயாசம் எல்லாமும், நம்ப கணேசன் கொண்டாந்து பரிமாறுவாங் கண்ணூ!”

    “எனக்கு அப்ப கட்டுச் சோறே போதுமாத்தா! எங்கம்மா வந்து பணந் தாறேன்னு சொல்லுச்சு!”

    “டேய் கணேசா, பாரு நம்ம சரோசினி ஊட்டுப் பொன்னான் வந்துருக்குறான். வந்து என்னன்னு பாத்துக் குடு சித்த!

    பசியாற கட்டுச் சோறு உண்டுவிட்டு, பெற்றோர் கூறிச் சென்றபடியே, ஊருக்குத் தென்புறமாய் இருக்கும் அவர்களது புலத்தை நோக்கிச் செல்கிறான். போகிற வழியில் கரும்பு ஆலை ஓடிக் கொண்டு இருக்கிறது. கருப்பங் கழிகளை ஆலையில் கொடுத்துப் பிழிந்து, சாற்றை உலையில் ஏற்றிக் காய்ச்சிக் கொண்டு இருந்தார்கள். பிறகு காய்ச்சின சாற்றை அச்சுப் பலகைகளில் ஊற்றினார்கள்.

    அது ஆறின உடனே வெல்ல அச்சுகள் ஆயின. இதை எல்லாவற்றையும் உற்று நோக்கிக் கொண்டு இருந்தான் பழமன். அதைக் கவனித்த வேலையாட்களில் ஒருவனான மாரி,

    “கண்ணூ பழமு! இந்தா ரெண்டு வெல்லம், வாங்கி வாயில போடு!!”

    ”இல்லீங்க, வேண்டாங்கண்ணா, எங்கம்மாக்குத் தெரிஞ்சா வையும்!”

    “அட, இந்தா வந்து வாங்கி வாயில போடு. நானு உங்கம்மாகிட்டச் சொல்லிகிறேன்!”

    அதை வாங்கி வாயில் போட்டுச் சுவைத்துக் கொண்டே பழமன் அவ்ர்களுடைய வயல் நோக்கிச் சென்றான். செல்லும் வழியில் பூத்திருந்த பூக்களைக் கண்டதும், ரெண்டொரு பூவையும் பறித்துக் கையிலேந்தியபடியே எதையோ நினைத்தவாறு சென்று கொண்டிருந்தான்.

    கவனம் அவன் செல்லும் வழியில் இல்லாதபடியால், கல்தடுக்கி அவன் தடுமாறியதில், அவனிடம் இருந்த அந்தப் பூக்கள் கை நழுவி அருகில் இருந்த ஓடையில் விழுந்து விடவே, சோகமாய்ப் பாடிச் செல்கிறான் பழமன்:

    சிந்தாம சிதறாமப் பொறித்தேன் பூவே,
    சித்தாத்துத் தண்ணியில போறயே பூவே,
    வாடாம வதங்காம வெச்சிருந்தேன் பூவே,
    வறட்டாத்து தண்ணியில போறயே பூவே!

    ஓடிக் கொண்டு இருந்த காட்டாற்றில், பூக்களை நழுவவிட்ட பழமன், அந்த ஆற்றின் கரையோரமாக வயல் நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அந்த ஆறினாலேயே அந்த ஊர்கள் மிகச் செழிப்பு பெறுகிறது.

    பள்ளம் படுகையில் தென்னந் தோப்பு இருப்பதற்கு அந்த ஆறே காரணம். அந்த ஊரில், வெயில் காலத்திலும் கூட இனிமையான தென்றல் வீசும். அதற்குக் காரணமும் அந்த காட்டாறுதான். அதில் பாயும் வெள்ளம் சத்து வாய்ந்த எருவை நாலாபுறமும் இருந்து எடுத்து வரும். இரு கரைகளிலும்,தென்னை, மா, வேம்பு, ஆல மரங்கள் எனப் பலவகையான மரங்களைக் கொண்டு, எழிலாய் செழிப்பாய் எண்ணற்ற கதைகளை தன்னகத்தே கொண்டது அந்த உப்பாறு என்ற காட்டாறு. அது, வேலூரில் இருந்து, சிந்திலுப்பு, பூளவாடி, பெரியபட்டி, பப்பாளியூர் என்ற ஊர்கள் வழியாக வளைந்து நெளிந்து சென்று, இறுதியில் அமராவதியில் கலக்கிறது.

    இந்த ஆற்றின் கரையோரம் சென்று கொண்டிருந்த பழமன், அவர்கள் வயலுக்குச் செல்லும் இட்டேரி வந்ததும், கரையில் இருந்து இடது புறமாகப் பிரிந்து, அந்த இட்டேரியில் நடந்து சென்று கொண்டிருந்தான். சென்று கொண்டிருக்கும் போது, அந்த இட்டேரியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த சின்னமுத்து பழமனைக் கண்டதும், உற்சாகம் உற்றவனாய் பேச ஆரம்பித்தான்.

    ”பழமா, என்னடா மத்தியான சோறுண்டுட்டுப் போறயாக்கூ?”

    “ஆமாங்ண்ணா, நீங்க உண்டாச்சுங்களா?”

    “இல்லை, எனக்கு எங்கக்கா சாந்தாமணி ஒரு மணி வண்டி கெழக்க போனதுங் கொண்டு வருவா!”

    “சரீங்ண்ணா, அப்ப நான் போய்ட்டு வாறனுங்!”

    “இர்றா, நான் ஒரு கதை சொல்லுறேன், கேட்டுட்டுப் போவியாமா?”

    “சராங்கமா சொல்லுங்ண்ணா, நான் போகோணும்!”

    “உன்ன மாதரத்தான், ஒரு பையன் அவிங்க தோட்டத்துக்கு போயிட்டு இருந்தானாமா. அப்போ, போற வழியில ஒரு மண்ணாங்கட்டி இருந்துச்சாமா. அதைப் பாத்து இந்த பையன் கேட்டான், மண்ணாங்கட்டி மண்ணாங்கட்டி மழை வந்தா, நீ என்ன பண்ணேவேன்னு. அது சொல்ச்சாம், மழை வந்தா கரைஞ்சு போவேன்னு.

    செரீன்னு கேட்டுட்டு மறுக்காவும் நடந்து போய்ட்டு இருந்தானாம். அப்ப, எச்செலை ஒன்னு போற வழில கெடந்துச்சாம். இவங் கேட்டானாம், எச்செலை, எச்செலை காத்தடிச்சா நீ என்ன பண்ணுவேன்னு. அது சொல்லுச்சாம், காத்தடிச்சா நான் பறந்ந்ந்து போயிடுவேன்னு.

    செரீன்னு இதையுங் கேட்டுட்டு அந்த பையன் மறுக்காவும் நடந்து போய்ட்டு இருந்தானாம். அப்ப, ஒரு நாய்க்குட்டி ஒன்னு வாலை வாலை ஆட்டிட்டு, குழைஞ்சுட்டே இவங்கிட்ட வந்துச்சாம். அந்த நாய்கிட்டயும் இவங் கேட்டானாம், நாய்க்குட்டி நாய்க்குட்டி நீ என்ன பண்ணுவேன்னு. அதுக்கு அந்த நாய் என்ன சொல்லுச்சு தெரியுமாடா பழமா?”

    “தெரிலீங்ளே, நீங்களே சொல்லுங்க!”

    ”அந்த நாயி, ஒன்னுக்கு வந்தா பழமன் வாயில ஊத்துவேன்னு சொல்லுச்சாம்! ”, இப்படி சொல்லிவிட்டு பலமாக அஃகஃகாவென்று சிரிக்க ஆரம்பித்தான் சின்னமுத்து.

    இதைக் கேட்ட பழமனுக்கு ஒரே ஏமாற்றம், முகம் எல்லாம் சிவந்து பரிதாபமாக செய்வதறியாது, கண்ணீர் சிந்தியவாறு நின்று கொண்டிருந்தான். இதைப் பார்த்த சின்ன முத்துவுக்கும் மனம் வருத்தத்தில் ஆழ்த்தியது. உடனே, சமயோசிதமாக, இட்டேரி வேலிக்குள் பொளேரெனப் பாய்ந்து, அங்கே செக்கச் செவேல் எனச் சிவந்து பழுத்திருந்த இரண்டு கள்ளிப் பழங்களையும், வேலியில் இருந்த சூரிப் பழங்களையும் பறித்து பழமனிடம் கொடுத்து, அவனை தேற்றினான்.

    “இந்தாடா பழமு, இந்த ரெண்டு பழங்களையுமு உனக்கோசரமே, இவ்வளவு நாளுமு உட்டு வெச்சிருந்தேன் தெரியுமா? வாங்கிக்கடா!”

    “ம்ம்ம்… ம்ம்ம்… செரீங்க…ம்ம்!”

    சின்ன முத்துவும் சடாரெனச் சென்று, அங்கு குழியொன்றில் தேங்கியிருந்த தண்ணீரில் இரண்டு பழங்களையும் கழுவி வந்தான். பிறகு, அந்த இரண்டில் ஒன்றை சின்ன முத்துவின் எதிரிலேயே சுவைத்துப் பார்த்து, அது இனிக்கவும், பழமன் மனம் மாறி மகிழ்ச்சியில் ஒரு பாடலை முணுமுணுத்தவாறே மீண்டும் அவர்கள் வயல் நோக்கி நடையைக் கட்டினான்!

    பழமுன்னாப் பழம், எங்கூரு கள்ளிப்பழம்!
    எனக்காகப் பழுத்த, உப்பாத்துப் பெரியபழம்!!
    வாளவாடி, பூளவாடி, காணாத கள்ளிப்பழம்!
    சின்னவனே, பெரியவனே, உனக்கில்லை இந்தப்பழம்!!

    சூரிப் பழங்களையும், கள்ளிப் பழங்களையும் சுவைத்தவாறு, வயல் நோக்கிச் சென்று கொண்டிருந்தான் பாலகன் பழமன். சென்று கொண்டிருந்த இட்டேரியில் இருந்து பிரிந்து, சிறுகால்த் தடம் வழியாக அவ்ர்களுடைய வயலுக்குச் செல்லும் இடம் நெருங்க, அவனுள் இனம் புரியாத ஒரு அச்சம் மேலிட்டது.

    அந்த அச்சம் மேலிடக் காரணம், அவன் ஆறாம்மேடுகடந்துதான் அந்த சிறுகால்த் தடத்தை அடைந்தாக வேண்டும். ஆறாம்மேடு என்றால் பாலகனுக்கு ஒரே அச்சம். அவன், ஒரு நாள் அவனுடைய அப்பாருடன் வயலுக்கு வந்து கொண்டிருந்த போது, ஆர்வமிகுதியால் அவனுடைய அப்பாருடன் வினவினான்,

    “அப்பாரு, ஏன் இந்த எடத்தை ஆறாம்மேடு, ஆறாம்மேடுன்னு சொல்லிச் சொல்றாங்க?”

    “அதா, அது வந்து நம்மூரு மேக்கால வளவுல இருக்குற பெருமா கோயல்ல ஆறான், ஆறான்னு, ஆறுமுகம்ங்ற அன்னக் காவடி இருந்தான். அவன் ஊருக்குள்ள அன்னக்காவடி எடுத்து சோறுண்டுட்டு, ஊர்க் கோயலுகளுக்கு எல்லாம் சேவகம் செஞ்சிட்டு இருந்தான்.”

    “அன்னக் காவடின்னா என்னுங்க அப்பாரு?”

    “அதா, காவடி நொகத்துக்கு ரெண்டு பக்கமும் ரெண்டு குண்டாவுக, சங்கிலியில தொங்கிட்டு இருக்கும். அந்த சங்கிலியில மணியோசை சத்தம் வாற மாதர சலங்கை மணியெல்லாம் இருக்கும். அப்ப, ஆறான் ஊருக்குள்ள வரும்போது அந்த சத்தங்கேட்டு, ஊட்டை உட்டு வெளியில வந்து அவனுக்கு சோறு கஞ்சி ஊத்துவாங்க. அவனும், அந்த அன்னக்காவடியில இருக்குற குண்டாவுல அதை வாங்கி உண்டுட்டு பொழப்பு நடத்திட்டு வந்தான்!”

    “செரீங்க அப்பாரு!”

    ”அப்பிடியிருக்க, அவன் ஒரு நாளு இந்த இட்டேரி வழியா பூரண்டா பாளையம் பரமசிவங் கோயலுக்கு போயிட்டு இருக்குறப்ப, திடீல்ன்னு இந்த எடத்துல நெஞ்சு வலி வந்து உசுரை உட்டுட்டான். அதுனால, இந்த எடத்துக்கு ஆறாம் மேடுன்னு பேரு வந்ததுடா இராசா!”

    “அப்ப, ஆறானோட பேய் இங்க இருக்குமா அப்பாரு?”

    “நீ தெகிரியமா இருடா…அப்பிடியெல்லாம் ஒன்னுமில்லடா கண்ணூ!”

    இப்படியாக ஆறாம்மேட்டைத் தெரிந்து கொண்டதிலிருந்து இந்த இடத்தைக் கடக்கும் போதெல்லாம், ஒரு வித அச்ச உணர்வுடனே செல்வான் பழமன். இன்றும் அவ்விதமாகவே, ஆறாம் மேட்டைக் கடந்து சிறுகால்த் தடம் வழியாக வயலுக்குள் நுழைந்தான். முதலில் வருவது, அவனுடைய பெரியப்பாவின் வயல்.

    வயலுக்குள், ஒரு பெரிய வேம்பு மரம் இருக்கும். அந்த வேம்பு மரத்தடியில் நாட்ராயன் சாமியும், அந்த சாமிக்கு நேர் எதிரே ஒரு வேலும் நடப்பட்டு இருக்கும். அந்த மரத்தடியில், பெரியப்பா பண்ணையில் வேலை செய்யும் தேவராசுவின் மனைவி முத்துலட்சுமி தன்னுடைய குழந்தையை, அந்த வேப்பமரத்தில் கட்டியிருந்த தொட்டிலில் கிடத்தி தாலாட்டுப் பாடிக் கொண்டிருந்தாள்.

    ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ
    சீராரும் பசுங்கிளியே தெவிட்டாத தெள்ளமுதே
    நேராக உறங்கிலையோ நிறையன்பு ஊக்கிலையோ
    ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ

    இந்த பாடலையும் கேட்டவாறே, பாலகன் பழமன் பெரியப்பாவின் வயலைக் கடந்து அவனது வயலுக்குள் செல்ல முற்பட்டான். அப்பொழுது, இவன் தலை தெரியக் கண்டதும், அவனுடைய தோட்டத்து நாய் பேச்சி ஒரே ஓட்டமும் பாய்ச்சலுமாய் இவனை நோக்கி வந்தது.

    இவனுக்கு தன்னுடைய வயலுக்குள் வந்ததும் ஒரே குதூகலமும், பேச்சி வந்து கொண்டிருந்ததைப் பார்த்து, பிள்ளைப் பிறப்பு கண்ட தாய் போன்றதொரு உணர்வும் மேலிட்டது. அவனையறிமாலே, கீழ்க்கண்டவாறு கத்திக் கூச்சலிட்டான்,

    ஆத்தைக் கடந்துவந்தேன், மேட்டைத் தாண்டிவந்தேன்
    கம்பங்காடு பார்த்துவந்தேன், முத்தக்கா பாட்டு கேட்டுவந்தேன்
    பெரியப்பங் களத்துமேட்டு, அலணு ரெண்டும் விரட்டிவந்தேன்
    பாத்து வாரமல்லோ ஆச்சி!! வந்து தாவிக்கோடா பேச்சி!!

    தனது வயலுக்குள் மகிழ்வாய் நுழைந்த பாலகனைக் கண்டு, கூரைச் சோறு கண்ட காகம் போன்றதொரு விரைவில், அவனது செல்ல நாய் பேச்சிஓடோடி வந்தது. தன் வயலுக்குள் காலடி வைத்த குதூகலத்துடனும், தன் செல்லத்தைக் காணுகிற மகிழ்வுடனும் பேச்சியை நோக்கி குதியாட்டம் இட்டவாறு ஓடுகிறான் பழமன்.

    எதிரில் ஓடி வந்த பேச்சி, வாலை வாலை ஆட்டியவாறு முகமலர்ச்சியாய் வந்த வேகம் குறையாமல் முன்னங் கால்களை முன்னீட்டி, பின்னங் கால்களில் சிறுவன் பழமனின் உயரத்திற்கு நின்று, தனது முன்னங் கால்கள் இரண்டையும் அவன் மேல் வாஞ்சையாய்ப் பதிக்க, இவன், “என்றா பேச்சி, என்னடா பண்ணிட்டு இருக்கே? அப்பாரோட ஒத்தைச் செருப்பை எங்கடா கொண்டு போயி ஒளிச்சு வெச்சே படுவா ராசுகோலு?” என்றான் சிரித்தபடியே.

    பேச்சியும், நாக்கை வெளித் தள்ளிக் கொண்டு, மூச்சிரைத்தவாறு தலையை மேலும் கீழும் சில முறை அசைத்து விட்டு, குடுகுடுவென அருகில் இருந்த கம்பங் காட்டிற்குள் சென்று, கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ஒத்தைச் செருப்பைக் கவ்வியவாறு வாலை ஆட்டிக் கொண்டு வந்து, குழைந்து நின்றது. இவனுக்கோ அது கண்டு, மட்டில்லாத மகிழ்ச்சி.

    “அப்பாரய்யா! அப்பாரய்யா!! காணாமப் போன உங்க செருப்பைக் கொண்டாந்து குடுத்துட்டான் பேச்சி, உங்க செருப்பு கெடச்சிருச்சீ!” என்று கத்தியபடியே, அவனது வயலில் இருக்கும் இரட்டைச் சாய்ப்பு சாளையை நோக்கி ஓடினான். பேச்சியும் அவனுடன் ஓடியது. ஆனால் அங்கு அப்பாரய்யனைக் காணாமல் ஏமாற்றமுற்றான் பாலகன். ”என்றா பேச்சி, அப்பாரய்யனைக் காணம்?” என வினவியபடியே, தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த வேலனிடம் சென்றான்.

    “ஏனுங்க எங்க அப்பாரய்யன்?”

    “கண்ணூ, அப்பாரய்யன் சிக்கல்நூத்து போன அப்பத்தாவைக் கூட்டியாறதுக்கு நம்ம சவாரி வண்டீல மயிலைகளைப் பூட்டீட்டி போயிருக்காங்க கண்ணூ. இருட்டு கட்டுறதுக்குள்ள வாறமின்னு சொல்லிட்டுப் போனாங்க!”

    “ம்ம்… நேத்தைக்கு ஊருக்குள்ள வந்த அப்பாரய்யன் ஒத்தைச் செருப்பை பேச்சி கொண்டு போய் எங்கயோ போட்டுட்டான்னு சொல்லுச்சு. நாங் கேட்டதுமே, பேச்சி போயிக் காட்டுக்குள்ள இருந்த செருப்பைக் கொண்டாந்து குடுத்துட்டானுங்ண்ணா!”

    “அவன் செரியான குறும்பு கண்ணூ, வாய்க்கா மேட்டுல வாறவிங்க போறவிங்களை எல்லாம் கடிச்சிப் போடுறான்!”

    “ஏண்டா பேச்சி அப்பிடியெல்லாம் பண்றே?”

    “ப்ளொள், ப்ளொள்” என்று செல்லங் கொஞ்சியது பேச்சி.

    “செரிச்செரி, வாடா சாளைக்கு போகுலாம்!”

    “ப்ளொள்!”

    “அண்ணா, நான் சாளைக்கு போயி பேச்சிக்கி சோறு போட்டுட்டு வாறன்!”

    “செரி கண்ணூ, பாத்துப் போ, எல்லாம் இப்பத்தான் தண்ணி பாஞ்சி ஈரமாக் கெடக்குது!”

    சிறுவன் பழமனும், செல்லப் பிராணியான பேச்சியும் வயக்காட்டில் இருந்த பொழிகளின் மீது ஓடுவதும், நடப்பதுமாக மீண்டும் சாளைக்கே திரும்பி வந்தார்கள். சாளை இரட்டைச் சாய்ப்பு கொண்டது, பக்கவாட்டில் கால்நடைகளுக்கு என ஒரு ஒத்தைச் சாய்ப்பும் இறக்கப்பட்டு இருக்கும். இவன் முன்வாசலுக்கு சென்று பார்க்கவே, முன்கதவு பூட்டப்பட்டு இருந்த்து. அது கண்டு திண்ணையின் மேல் ஏறி, மேலே உள்ள சட்ட்த்தில் வைக்கப்பட்டு இருந்த சாவியை எடுத்து, கதைவைத் திறந்து கொண்டு சாளைக்குள் சென்றான். ஆனால், பேச்சி மட்டும் வாயிற் படியிலேயே வாஞ்சையுடன் குழைந்து கொண்டு நின்றது.

    உள்ளே சென்றவன், பேச்சிக்கென்று வழமையாக வைக்கப்பட்டிருக்கும் தூக்குப் போசியில் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தான். அதில், சாமைச் சோறும், மோரும் கலந்த கூழ் இருந்தது கண்டு உற்சாகமடைந்து, தூக்குப் போசியை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தான். பேச்சியும் அது கண்டு துள்ளிக் குதித்தது. நேராக பக்கவாட்டில் இருந்த சாளைக்குள் சென்று, பேச்சிக்கென வைக்கப்பட்டு இருந்த தட்டில் சாமைக் கூழை ஊற்றி, “பேச்சி வாடா, வா!” என்றழைத்தான். பின், அவனுக்குப் பிடித்த அவனுடைய நுங்கு வண்டி அங்கு இருக்க்க் கண்டு, கவட்டிக் கோலால் அதை உருட்டி விளையாட ஆரம்பித்தான் பழமன்.

    பேச்சி, நாக்கால் நக்கி கூழைப் பருகுவதும், வாஞ்சையுடன் எசமானனின் அருகே வந்து வாலை ஆட்டிக் குழைவதும், மீண்டும் வந்து கூழைப் பருகுவதுமென இருந்தது. அதற்குப் பசியாறவும் வேண்டும், அதேவேளையில் வந்த எசமானனும் தோழனுமாய் ஆனவனுடனும் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம்.

    அது கண்டு, “டே பேச்சி, நான் உன்னிய உட்டுப் போட்டு எங்கியியும் போகுலடா, போ, பூராக் கூழும் இருந்து குடிச்சிட்டு வாடா!” என்றான் பழமன். ஆனாலும், அது இவனிடம் வந்து இரண்டு சுற்று சுற்றுவதும், பிறகு கூழ்க் குடிக்கப் போவதுமாகவே இருந்தது.

    இவன் சாளைக்கு முன்னால் இருந்த களத்து மேட்டில், நுங்கு வண்டியை உருட்டி விளையாடுவதில் மும்முரமானான். களத்துமேடும், அதற்கேற்றாற்ப் போல் சாணத்தால் மெழுகி, வெகுசுத்தமாக இருந்தது. மனம் முழுக்க குதூகலமே குடிகொள்ள, தென்னை மற்றும் இலவம்பஞ்சு மரங்கள் அசைந்தாட, தென்றல் தவழ்ந்து வர, இயற்கையின் வெண்சாமர வீசலில் மனம் விட்டு, பாட ஆரம்பித்தான் பழமன்.

    வண்டியின்னா வண்டி வேலூரு வண்டி
    வெரசக்கூடி வேகம் போற வண்டி

    மாமனுக்கு பீடிவாங்கப் போகும் வண்டி
    மேடுபள்ளம் கடந்துநல்லாப் போகும் வண்டி
    கல்லமுட்டா வாங்கநல்லாப் போகும் வண்டி
    கவிட்டியால தள்ளநல்லாப் போகும் வண்டி

    வண்டியின்னா வண்டி வேலூரு வண்டி
    வெரசக்கூடி வேகம் போற வண்டி

    ஆத்தா பலகாரம் சுமக்கும் வண்டி
    தோப்பு காயெல்லாம் சுமக்கும் வண்டி
    நோம்பிக்கு சிக்கநூத்து போற வண்டி
    மயிலைகூடப் போட்டி போடும் வண்டி

    வண்டியின்னா வண்டி வேலூரு வண்டி
    வெரசக்கூடி வேகம் போற வண்டி

    வண்டி ஓட்டியதில் சலித்துப் போன பழமன், தாகம் தணிக்க மீண்டும் சாளைக்குள் சென்றான். அவனது அப்பத்தா எப்போதும் வைத்திருக்கும் கம்பங்கூழ்ப் பானையைத் துழாவி, அதில் இருந்து கொஞ்சமாக கம்பந்தண்ணீரைச் சிறுதாழியில் ஊற்றி, அதில் சிறிதளவு உப்பும் கலந்து, பின்னர் திண்ணையில் அமர்ந்து மாந்தினான். பழமன் மாந்தும் அழகினை வாலை ஆட்டியபடியே, கண் பிறழாமல் ஒரு விதமான லயிப்பில் ஆழ்ந்து, நெகிழ்ந்து, இரசித்துக் கொண்டு இருந்தது பேச்சி!

    Share
  • 2013 ஜூன் மாதச் சிறுகதைப் போட்டி முடிவுகள்

    வெங்கட் சாமிநாதன்

    புதியவர்கள் அறிமுகமாகின்றனர். இருப்பினும் கதைகளும் குறைந்துவிட்டன. இருப்பினும் மகிழ்ச்சி தருவது தன்னையும் தன் துறையையும் நகைச் சுவையுடன் பார்க்கும் பாங்கு. அதிலும் ஒரு கேலிச் சித்திரமாகவே எழுதியுள்ளது. இம்மாதிரி கேலியைப் படிப்பது இது தான் முதல் தடவை.

    இம்முறை பழமைபேசி தன் அனுபவங்களிலிருந்து ஒரு புதிய உலகை நமக்குப் படிக்கத் தருகிறார். மிகவும் இருண்ட உலகம், படிக்கவே கஷ்டமாக இருக்கிறது. வாழ்பவர்களுக்கு எப்படி இருக்குமோ! இம்மாதமும் அவரது தான் சிறந்த கதை. அவருக்கு என் வாழ்த்துகள். அந்தியூரான் அங்கு உட்கார்ந்துகொண்டு எப்படி இவ்வளவு நெருக்கமாக அன்னிய உலகைப் பற்றி எழுத முடிகிறது? மணவாளன் தான் எனது தேர்வு.

    பழமைபேசி2013 ஜூன் மாதச் சிறுகதைப் போட்டியில் பங்கேற்ற சிறுகதைகள்:

     

    (பழமைபேசிக்குப் பாராட்டுகள்; பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். இன்னும் ஒரு மாதத்துடன் இந்தப் போட்டி நிறைவு பெறுகிறது; எனவே, விருப்பமுள்ளோர் விரைந்து பங்கேற்றிட அழைக்கிறோம். – ஆசிரியர்)

    Share
  • பிரசரெண்ட் ஊட்டு அக்கா!

    அவர் இருந்த வரையிலும்
    எப்பவும் வரவும் போகவுமா
    இருப்பாங்க ஆளுக!
    காலையில வந்து உக்காந்துட்டு
    இட்லி தோசை வேணாம்
    பசிக்குது சோறுதான் வேணும்பாங்க!
    மத்தியான நேரத்துல வந்துட்டு
    குடிக்கக் காப்பி குடுக்குறீங்களாம்பாங்க!
    கூட வந்தவனே சொல்வான்
    காப்பி வேண்டாங்க அண்ணி
    மோர் குடுங்கன்னு சொல்லுவான்!
    ரெண்டு பேருக்கு ரெண்டும் குடுப்பேன்!!
    ராத்திரி நேரத்துல இரவையையோ
    சேமியாவையோ கிளறிப் போட்டாக்க
    இரசமும் பழையசோறும்
    போடுங்கன்னு சொல்லிட்டு உக்காருவாங்க
    இதுக எல்லாமே
    அவர் இருந்த வரையிலுந்தான் தம்பி
    இப்பெல்லாம் யாருமே வர்றதில்லை
    எப்பவாச்சும் ஒருக்கா
    புது ஆளுங்க வர்றாங்க
    சாப்பாடெல்லாம் வேண்டாம்
    கைச்செலவுக்குப் பணம் குடுங்க
    அண்ணன் இருந்தா குடுப்பார்தானேன்னுவாங்க
    அம்பது குடுத்தா நூறு குடுன்னுவாங்க
    நூறு குடுத்தா இரநூறு குடுன்னுவாங்க
    நானும் எடுத்தாந்து குடுப்பேன்
    எல்லாம் தெரிஞ்சே குடுக்குறதுதாந் தம்பீ
    அவிங்களாவது வந்திட்டுப் போறாங்கல்ல?!
    நீங்க உங்கப்பாவைக் கவனிச்சிக்கோங்க தம்பீ!!

    Share
  • மணவாளன்

    என்ன செய்வதென்பது இன்னும் தீர்மானமாகவில்லை. இதுதான் பிரச்சினையென்பது கூட அவளுக்கு இன்னும் முடிவாகத் தெரிந்திருக்கவில்லை.

    தாம் தவறிழைத்து விட்டதாக எண்ணி அவள் அழுவது கூட இதுதான் முதல்முறை. யோசித்துப் பார்க்கக் கூட அவகாசம் வாய்த்திருக்கவில்லை. நமக்கு வேண்டிய நேரத்திலெல்லாம் காலத்தை நிறுத்தி வைக்கவா முடிகிறது? மொட்டைமலைக் குன்றின் மேல் பெய்யும் மழையைப் போல, சடாரென அதன் போக்கில் அது போய்க் கொண்டே இருக்கிறது. அதன் வேகத்திற்கேற்ப என்னவெல்லாம் செய்ய முடியுமோ செய்கிறோம். மற்றதெல்லாம் விடுபட்டுப் போய்விடுகின்றன. அப்படி விடுபட்டுப் போனதில் ஒன்றுதான் இதுவும்.

    எதுவொன்றுக்கும் ஆட்படாத வரையிலும் அதுகுறித்தான கவலையில்லை. மகன் குறித்தான கவலையில் இருக்கிறாள் லிண்ட்சி டொமினிக்! அது அவளை என்னவெல்லாமோ நினைக்க வைக்கிறது. அழுகை அழுகையாக வருகிறது. அவன் பேசினாலாவது என்னவென்று கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் தெளிவற்றுப் பேசுகிறானவன். அவன் வேறு யாருமல்ல, தன் மூத்தமகன் நேகன் கோல்டுசுமித்துதான். எதுவானாலும் அலைபேசியில்தான் பேச முடிகிறது அவனிடம். நேரில் சென்று பார்க்க இப்போதைக்கு வாய்ப்பில்லை.

    தாயுக்கும் மகனுக்குமான மரபுப் பெயர் ஏன் வேறு வேறாக இருக்கிறது எனும் கேள்வி உங்களுக்குள் எழுமாயின், அது நியாயமானதும் சரியானதுமேயாகும். முதன்மைப் பெயரை விட மரபுப் பெயருக்குத்தான் அமெரிக்காவில் முக்கியத்துவம். மரபுப் பெயர் என்பது பண்பாடு சார்ந்த ஒன்றாகும். ஆனால் தகப்பன் பெயரையே மரபுப் பெயராகக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். அதை ஃபேமிலி நேம், லாஸ்ட் நேம், சர் நேம், அப்பர் நேம் எனப் பலவாறாகச் சுட்டுவார்கள்.

    அமெரிக்காவுக்கு வந்த தமிழ் நாட்டுக்காரன் ஒருவன் சமூகநல அடையாள எண் வாங்கப் போனான். அங்கே கொடுத்த விண்ணப்பத்திலிருந்த ஃபேமிலி நேம் எனுமிடத்தில், ’நாட் அப்ளிகபிள்’ என எழுதி விட்டு வந்தான். பின்னர், மிஸ்டர் நாட் அப்ளிகபிள் என மற்றவர்கள் அவனை அழைக்கத் தலைப்பட்ட போது நாணிக் குறுகினான். கட்டிய மனைவி கூடக் காலமெல்லாம் சொல்லிச்சொல்லி கேலி செய்வதாய் அழுது புலம்பினான்.

    தாயுக்கும் மகனுக்குமான மரபுப் பெயர் வேறுவேறாய் இருப்பதை அமெரிக்காவில் எங்கும் பார்க்கலாம். நேகன் கோல்டுசுமித்து ஆப்பிரிக்க அமெரிக்கன். அதாவது அவனது தோலின் நிறம் கருப்பு. பண்புகருதி தோலின் நிறத்தைக் கொண்டு குறிப்பிடுவதில்லை. ஆங்கிலாய்டு அல்லது காகேசாய்டு, மங்கோலாய்டு, நீக்ராய்டு என மாந்தரை மூன்று பிரிவுக்குள் அடக்கினாலும், இடத்தின் பெயரால் சுட்டுவதே வழக்கு. மாந்தர் குலத்தின் வயது கூடக் கூட, நாகரிகமும் பண்பும் முதிரத்தானே வேண்டும்? இனியும் ஊனமுற்றோர் எனச் சொல்லலாகுமா?! மாற்றுத் திறனாளிகள் எனப் பண்பு பேணுகிறோம் அல்லவா?? அதைப் போலத்தான், நேகன் கோல்டுசுமித் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கன். அவன் அம்மா லிண்ட்சி டொமினிக் வெள்ளை நிறத் தோலுடைய காக்கேசியன்.

    செயிண்ட் லூயி நகரின் மருத்துவமனை ஒன்றில் தாதியாக வேலை பார்த்து வந்தாள் லிண்ட்சி. அதே மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளியாக இருந்த ஆப்பிரிக்க அமெரிக்கனான மார்க் கோல்டுசுமித்துக்கும் லிண்ட்சிக்கும் இடையே பூத்தது காதல். காதல் கண்களுக்கு நிறம் ஒரு பொருட்டாக இருந்திருக்கவில்லை. அதன் பயனாக, லிண்ட்சி ரோமா என்பவள் லிண்ட்சி கோல்டுசுமித் ஆனாள். லிண்ட்சி கோல்டுசுமித்தாக மாறின ஓரிரு ஆண்டுகளில் அவர்களுக்கு நேகன் கோல்டுசுமித்தும் பிறந்தான். சுருள் முடியும் கறுப்பழகும், அவளைத் தாய்மைக் கடலில் ஆழ்த்திப் பேரின்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த காலத்தின்  பிற்பகல் யாமப் பொழுதொன்றின் போழ்து அறிமுகமானான் காக்கேசிய ஆடவன் குவிண்ட் டொமினிக். அடுத்து வந்த குளிர்காலத்தின் போது, குவிண்ட் டொமினிக் வீட்டிற்குத் தன் கைக்குழந்தையோடு போய்ச் சேர்ந்தாள் லிண்ட்சி. வீடு தேடி வந்தவர்களை வரவேற்று குவிண்ட்டும் ஆதரவளிக்க, லிண்ட்சி டொமனிக்கன் ஆக பெயர் மாற்றம் கொண்டாள் அவள்.

    செயிண்ட் லூயி நகரில் இனியும் இருக்க வேண்டாமென நினைத்து, டொமினிக் தம்பதியர் தங்களது குழந்தை நேகன் கோல்டுசுமித்தோடு காலியர்வில்லில் வந்து குடியேறினார்கள்.

    நேகன் கோல்டுசுமித் என்பவன் தன்னுடைய மகனாயிற்றே? தன் மரபுப் பெயரைத் தாங்கி வளர்கிற குழந்தையை மறந்துவிட முடியுமா?? பார்க்காமல் இருக்க முடியவில்லை. வாரத்துக்கு ஒரு முறையாவது பார்த்து விட ஏங்கினான் அப்பன் மார்க் கோல்டுசுமித். டென்னசியில் இருக்கும் காலியர்வில் நகருக்கும், மிசெளரியில் இருக்கும் செயிண்ட்லூயி நகருக்கும் முந்நூறு மைல்கள். நெசவுதறியில் சிக்குண்ட ஊசுகோல் போல, தன் மகனைப் பார்ப்பதற்காக இங்குமங்குமாக வந்து போய்க்கொண்டிருந்தான் மார்க் .

    அடுத்த பிள்ளைப் பேறு நெருங்கி வர, தன் மகனுக்கான தாயின் கவனம் அருகி வந்தது. அதைக் கவனித்த அப்பன்காரனும் காலியர்வில் நகருக்கே குடி வந்து விட்டான்.  பின்னாளில் தன் மகனின் அம்மாவுக்குப் பிள்ளை பிறந்ததை அறிய நேர்ந்ததும், மகனைத் தன்னுடனேயே கூட்டி வந்து வைத்துக் கொண்டான் மார்க்.

    மார்க் தச்சு வேலை பார்த்தான். அருகிலிருக்கும் பண்ணைகளுக்கெல்லாம் கட்டுத்தறிகள் செய்வது, வீட்டுக்கூரைகள் செய்வது முதலானவற்றைச் செய்து வந்தான். தன் அப்பாவிடமே கைத்தொழில் கற்று வந்த நேகனும், தேர்ந்த தச்சன் ஆகிவிட்டிருந்தான். வரச் சொன்ன நாட்களில் மட்டும் போய் தன் அம்மாவைப் பார்த்து விட்டு வருவான். அங்கிருக்கும் தம்பியோடு விளையாடி மகிழ்வான். வீட்டு வேலைகள் இருந்தால் செய்து கொடுத்துவிட்டு வருவான். ஆனால் வெள்ளைக்காரத் தம்பி ஸ்டீபன் டொமினிக்குக்குத் தன் கருப்பு அண்ணனைக் கண்டாலே ஆகாது. நாளடைவில் அவன் வருவதையே நிறுத்தச் செய்துவிட்டான் ஸ்டீபன். இதற்கு நடுவில் வேறு யாருடனோ ஓடிப் போய்விட்டான் லிண்ட்சியின் நடப்புக் கணவனும் ஸ்டீபனின் அப்பனுமான குவிண்ட். சில வருடங்களில், மார்க்கும் உடல் நலம் குன்றி இறந்து போனான்.

    செத்தவன் ஒன்றும் சும்மா விட்டு விட்டுப் போகவில்லை. தன் மகனுக்கு காலியர்வில் ஒதுக்குப் புறத்தில் அழகானதொரு வீட்டைத் தச்சுப் பட்டறையுடன் கட்டிக் கொடுத்து விட்டுத்தான் போயிருக்கிறான். சின்ன வீடுதான். ஆனால் அடிப்படை வசதிகளோடும் மரங்கள் புடைத்த நல்லதொரு இயற்கைச் சூழலோடும் அமைந்திருந்தது அந்த வீடு.

    ஆர்லிங்டன் பண்ணையொன்றில் கூரை மேய்வதற்குப் போன இடத்தில், நேகனுக்கும் ஆப்பிரிக்க அமெரிக்க மங்கையான செர்ரி மூட்டிக்கும் காதல் மலர்ந்தது. அதனைத் தொடர்ந்து செர்ரி மூட்டியைத் தன் வீட்டுக்கே அழைத்து வந்து விட்டான் நேகன். மகிழ்ச்சியாக இருந்தார்கள். இடையில் தன் தோழி ஒருத்திக்கு திருமணம் என்று சொல்லி,  இல்லினாய் மாகாணத்தில் உள்ள கெய்ரோ நகருக்குப் போனாள் செர்ரி மூட்டி.

    பத்து நாட்கள் கெய்ரோவில் இருந்துவிட்டுத் திரும்பியவள் வேறு ஆளாக வந்திருந்தாள். படுக்கையில் இருந்த நேகன் வாந்தி எடுக்கப் போனான். இருவரும் சண்டை போட்டுக் கொண்டனர். முடிவில், வாரத்தில் ஒரு நாள் மட்டும் தன்னைக் கஞ்சாவுடன் மெஸ்கல் அல்லது டகீலா குடிக்க அனுமதிக்க வேண்டும் என உறுதி வாங்கிக் கொண்டாள். குடியில் தகப்பனைப் பறிகொடுத்த நேகன்,  இவளுக்கும் போதைப் பழக்கம் அண்டியிருப்பது கண்டு கலங்கி நின்றான்.

    வாரக் கடைசி வந்து விட்டால் போதும், மெம்ஃபிசு நகருக்குக் கிளம்பி விடுவாள் செர்ரி மூட்டி. ஓரிரு மாதங்கள் அப்படியாகக் கழிந்தன. மீண்டும் காலியர்வில் வீட்டிலேயே தன் ஆட்டத்தைத் துவங்கினாள் செர்ரி. இரவு நேரங்களில் கஞ்சா புகைத்து விட்டு சல்லாபத்துக்கு அழைப்பாள். கிட்ட நெருங்கினாலோ குடல் குமைந்து  வாந்தி வரும் அவனுக்கு. வராவிட்டால் தான் கத்தியால் குத்திக் கொள்ளப் போவதாகச் சொல்லி மிரட்டினாள். வீதியில் போவோரை அழைக்கத் தலைப்பட்டாள். துயர் தாளாது, அவளைக் கொண்டு போய் மெம்ஃபிசு நகரிலுள்ள அவளது நண்பர்கள் வீட்டில் விட்டுவிட்டு வந்து விட்டான். இது நடந்து பத்துப் பனிரெண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. போனவள் போனதுதான்.

    சோவென்று மழை பெய்து ஓய்ந்திருந்தது. மரங்கள் எல்லாம் அவ்வப்போது சிலிர்த்தன. ஒவ்வொரு சிலிர்ப்பின் போதும் பன்னீர்த் துளிகள் தன்மீது பட்டுத் தெறிப்பதை உள்வாங்கி மகிழ்ந்தான். வானத்தைப் பார்த்தான். முகில்கள் கலைவதும் புணர்வதும் விதவிதமாய் நகர்வதுமாக இருந்தன. தனக்குப் பிடித்தமான முகில் ஒன்றின் மேல் ஏறிப் படுத்துக் கொண்டான். அதன் மேல் உலாப் போவதன் இன்பம் மனத்துள் ஊற்றெடுத்தது. கிழக்குப் புறத்திலிருந்த ஆலிவ் மரம் அவனைப் பார்த்துச் சிரித்தது. “யூ, ஆலி பப்ளீ” என்று கத்திக் கொண்டே போய் கீழார்ந்த கிளையப் பிடித்துக் தொங்கினான். தொங்கியதில் அது சிலிர்க்க, நீர்த்துளிகள் அவனைப் பதம் பார்த்தது. “அஃகஃகா, யூ  டுக்  ரிவெஞ்ச் ஆன் மி, இஸ் இட்?” என்று வினவிக்கொண்டே வீட்டின் முன்புறமிருந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே ஆலிவ் மரத்தைப் பார்த்தான். ஆலிவ் மரமும் அவனும் கண்களால் பேசிக் கொண்டு அன்புற்றுப் கலப்பதை முகில்கள் பார்த்துக் கொண்டே கடந்தன.

    மீண்டும் இருட்டி வருவதைப் போல உணர்ந்தவன் தன் காரை எடுத்துக் கொண்டு போனான். பட்டறையில், உளி கதிர்கள் முதலான சாமான்கள்  போட்டது  போட்டபடி இருந்தன. வீடு கூட சாத்தப்படாமலேதான் இருக்கிறது. உண்மையாய் நேசிக்கும் ஆலிவ் மரமும், செர்ரி மரங்களும், மேப்பிள் மரங்களும் காவலுக்கு இருக்கும் போது வீட்டைப் பூட்டுவதற்கான அவசியம் அவனுக்கு இருந்திருக்கவில்லை.

    வாங்கி வந்த ரொட்டி ரெண்டு ராத்தலையும், பால் ஒரு கேலனையும் வண்டியின் பின்புறத்தில் வைத்து விட்டுக் கதவைச் சாத்தினான். யாரோ காருக்குள் முனகுவது போல இருந்தது. மீண்டும் பின்பக்கக் கதவைத் திறந்தான். மழை துளிக்கத் துவங்கியிருந்தது. யாரோ இருட்டைக் கொண்டுவந்து கார் முழுக்கத் திணித்திருந்தார்கள். காருக்குள் நெருக்கடி தாளாமல், இருட்டுதான் அழுது கொண்டிருக்கிறதா? அவற்றின் கண்கள் எங்கேயென்று துழாவினான். ஆனால், திடீரென மின்னிய மின்னல் ஒன்றில் செத்துச் சாம்பலாகிப் போனது இருட்டு. கதவை மூடிவிட்டு வந்து காரின் முன்பக்கக் கதவைத் திறக்க முற்பட்ட போதுதான் கவனித்தான்.

    ஹிக்கரி மரத்திற்குக் கீழே என்னவோ அசைவது போலவும், அசையும் அந்த எதுவோ அதுவிலிருந்துதான் சத்தம் வருகிறது என்பதையும் உணர்ந்தான். மேப்பிள் இலையின் மஞ்சள் பழுப்புக்கும் செம்பழுப்புக்கும் இடையிலான ஒரு நிறத்தில் மெலிதான துணியொன்று போர்த்தப்பட்டிருப்பது போலத் தெரிந்தது. அருகே செல்லச் செல்ல அதற்கு இரண்டு கால்கள் முளைக்கத் துவங்கின. அட, ஆச்சரியமில்லை. இரண்டு கைகளும் இருக்கின்றன. ஆனால் இரண்டையும் ஒன்றாக்கி மார்புக்கு மேல வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு தலையும் இருக்கிறது. ஒருக்களித்து இருப்பதால் சரியாகத் தெரியவில்லை. கூடவே முனகலும்.

    ”ஏய், என்னாச்சு உனக்கு?”

    “பசிக்குது”

    “சரி வா அப்ப”

    என்ன ஆச்சர்யம்? அது ஒரு பெண். அதுவும் புள்ளத்தாச்சி. அடிவயிறு பெருத்து இருப்பதைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. ”ஓ விழப் போகிறது, விழப் போகிறது!!”, யாரோ எட்ட இருந்து அலறினார்கள். ஒரே பாய்ச்சல், அலேக்காய்த் தூக்கினான் நேகன். கொண்டு போய்க் காரில் போட்டான்.

    “அம்மா, நான் இப்ப அங்க வரலாமா?”

    ”ஏய், நேகன்! என்ன ஆச்சர்யம்? அம்மா நினைப்புகூட உனக்கு இருக்காடா??”

    “அம்மா, அதெல்லாம் வேண்டாம். நான் இப்ப அங்க வரலாமா??”

    “ஓ, உன்னோட தம்பி கூட வெளியில போயிருக்கான். சீக்கிரமா வா, அவன் வர்றதுக்கு முன்னாடியேவும்!”

    ரொட்டியில் கொஞ்சத்தைப் பிய்த்துக் கொடுத்துவிட்டுக் கேட்டான், “உன்னோட வீடூ எங்க சொல்லு. நான் கொண்டு போயி விட்டுடுறேன்!”

    இசிக்கிய மாங்காயைப் போன்ற தலை மட்டும் ஆடியதிலிருந்து புரிந்தது அவள் ஒரு வீடில்லா ஏதிலியென்று.

    ஒரே அமுக்கு. வின்ச்செஸ்டர் சாலையிலிருந்து பல சாலைகளைக் கடந்து நியூவில்லோ சாலைக்குப் போய்ச் சேர்ந்தான். வீட்டு வாசலியே லிண்ட்சி நின்று கொண்டிருந்தாள். “ஹாய், நேகன்! என்னோட செல்லம், வாடா வாடா!!”, அரவணைத்துக் கொண்டாள். வீட்டுக்குள்ளிருந்த தன் தம்பியின் மனைவி பமீலா எட்டிப் பார்த்துக் கொண்டே ‘அகோ’ சொன்னாள்.

    “அம்மா, எனக்கு ஒரு ஃபேவர் வேணும். உள்ள இருக்கிற அந்தப் பொம்பளைக்கு எதாவது குடுத்து இன்னிக்கி இராத்திரி இங்கயே வெச்சுகுங்க!”

    லிண்ட்சியும், பமீலாவும் காருக்கு ஓடிப் போய்ப் பார்த்து மிரண்டு போனார்கள். “யார்றா இது? போட்டுக்கத் துணி கூட இல்லையாமா?”

    “அம்மா, நானே அவளை இப்பதான் அந்த வின்ச்செஸ்டர் டாலர் ஸ்டோர்கிட்டப் பார்த்தேன். குளிர்ல நடுங்கிட்டுக் கீழ கிடந்தா!”

    “போடா! இந்த நிலைமையில, உன் தம்பி வந்தான்னா அவ்ளோதான். துப்பாக்கி எடுத்துட்டு வந்து உன்னையும் போட்ருவான். என்னையும் போட்ருவான். போயிடு, நீ இங்க இருந்து போயிடு!”

    “என்னமா சொல்ற? நான் இந்தப் பொம்பளைய என்ன செய்வேன்? ப்ளீஸ்மா, புள்ளத்தாச்சியா வேற இருக்கா?!”

    ”அங்க எங்கனாவது சர்ச்ல கொண்டு போயி உட்ரு, போ!”, வீட்டுக்குள் ஓடியே போய்விட்டாள் பமீலா.

    ”அப்ப நீயே சொல்லு. எனக்கும் சர்ச்சுக்கும் ஏழுகாத தூரம். எனக்கென்னம்மா தெரியும்?”

    “போடா, நீயே போயி என்னமோ செய். நாளக்கி போன் பண்ணு!”, அம்மாவும் உள்ளே போய் விட்டாள்.

    காருக்கு வந்தான் நேகன். அது மீண்டும் காருக்குள் சரிந்து விட்டிருந்தது. பழுப்பு நிறத் துணி சரிந்து எல்லாமும் தெரிந்தது. தன் கைகள் கொண்டு அந்தத் துணியை எடுக்கப் போனவன், சரேலெனக் கைகைப் பின்வாங்கிக் கொண்டான்.

    காலியர்வில்லுக்கும் ஆர்லிங்ட்டனுக்கும் இடையிலிருக்கிற தன் ஒதுக்குப் புற வீட்டுக்குப் போனான். டெரிக் ஓடி வந்து பாய்ந்தான். “ஏய் டெரிக்! நம்ம வீட்டுக்கு ஒரு மிஸ் வந்திருக்காங்க. பாரு!!”

    காரின் பின்பக்கக் கதவைத் திறந்து விட்டான் நேகன். அம்மணமாய் எழுந்து வந்தாள் அவள். டெரிக் பதறிப் போய் தச்சுப் பட்டறைக்குள் ஓடி ஒளிந்து கொண்டான். அவசர அவசரமாய் அந்த மெல்லிய பழுப்புத் துணியை எடுத்து அவள் மேல் போட்டான். அதை எடுத்துத் தன் கையில் வைத்துக் கொண்டாள் அவள்.

    வீட்டுக்குள் சென்று படுக்கையின் மேலிருந்த போர்வையைக் கொண்டு வந்து போர்த்தினான். மெலிதாகச் சிரித்தாள் அவள். தன்னுடைய ஒரு இலையைக் கூட அசைய விடாது நின்று பார்த்துக் கொண்டிருந்தன ஆலிவ் மரமும், மேப்பிள் மரங்களும்.

    “தண்ணி கொஞ்சம் கிடைக்குமா?”, சன்னமான குரலில் பேசினாள். இறுக்கம் தளர்ந்து இலைகளை அதனதன் போக்கில் அசைய விட்டன சுற்றியிருந்த மரங்கள். வாலை ஆட்டிக் கொண்டே வெளியே வந்து நின்றான் டெரிக்.

    ”கமான் இன்!”, தண்ணி பாட்டிலைக் கையில் பிடித்தபடி பூத்துச் சில நொடிகளேயானதொரு புது முகத்துடன் வரவேற்றான் நேகன்.

    நேராக உள்ளறைக்கு அழைத்துப் போய் தன் படுக்கையைக் காண்பித்தான். அவளும் போய்ச் சாய்ந்து கொண்டு அரைக்கால்வாசிக் குரலில் சொன்னாள், “ஓக்கே ஓக்கே!”.

    அடுக்களைக்கு ஓடினான். ஒரு தட்டில் ப்ளேக் பீன்சையும் கொஞ்சம் கெட்ச்அப் கலவையையும் போட்டு நுண்ணலையடுப்பில் வைத்துச் சூடேற்றினான். தலையை இங்குமங்கும் திருப்பிக் கொண்டு அமைதியாய் நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான் டெரிக்.

    கொடுத்ததைச் சிறு கரண்டி கொண்டு தின்னத் துவங்கியிருந்தாள் அவள்.  தண்ணீர் பாட்டில்கள், வாழைப்பழம், மெலிந்த துணியாலான துண்டு முதலானவற்றைப் பவ்யமாய் அவளது தலைமாட்டில் வைத்தான்.

    “இங்கதான் கழிப்பறை இருக்கு. இங்க தண்ணி இருக்கு!”, சொல்லிய பின் பட்டும் படாமல் கதவைச் சாத்திவிட்டு வெளியே வந்தான்.

    “இங்கே என்ன நடக்கு?”, என்கிற தோரணையில் டெரிக் ’வவ்’வென்றான்.

    “என்னடா அப்படிப் பாக்குறே? ச்சீ, நாயே! அப்படியெல்லாம் ஒன்னுமில்ல! ஷி வாஸ் எபவுட் டு டை தெரியுமா? நாந்தான் காப்பாத்திக் கூட்டிட்டு வந்தேன். எங்கம்மா ஒரு பிட்ச். வெள்ளக்காரியாம் பெரிய வெள்ளக்காரி. ரெட் நெக் ஆளுகளே ஒரு கோழப்பசங்க. ஒரு வெள்ளக்காரி இன்னொரு வெள்ளக்காரிக்கு உதவி செய்யக்கூடாதா? எங்கப்பா சொன்னது சரிதாம் போலிருக்கு!”

    வெளியே வந்தான். தச்சுப் பட்டறைக்குப் போனான். குதூகலமாய் இருந்தது. சீவலுளியை எடுத்து வேலை பார்க்கத் துவங்கினான். பாட்டுப் பாடினான். இந்த உலகம் இனிமையானதென்றான். படகு இருந்தால் அதற்கான துடுப்பும் அமையும் எனச் சொல்லிக் கொண்டான்.

    மூலையில் கலைந்திருந்த கழிகளையெல்லாம் எடுத்து அடுக்கி வைத்தான். அடைபட்டிருந்த அரைவாசி அளவுக்கும் மேற்பட்ட இடம் ஒழுங்காகி, பட்டறையே பெரிதாகிப் போனது.

    “டே, டெரிக்! அப்படியெல்லாம் போயி அடுத்தவங்க என்ன செய்யறாங்கன்னு பாக்கக் கூடாது. அவங்களுக்குப் பிரைவசி வேணும்ல? நீ எங்கூடவே இரு!”

    சொல்லுக்குக் கட்டுப்பட்டவன் டெரிக். பேசாமல் பின்னால் வந்து நின்று கொண்டான்.

    சத்தத்தைத் தூக்கித் தூர எறிந்து விட்டு, இருவரும் அமைதியை வாங்கிக் கால்களில் போட்டுக் கொண்டனர். சமையலறையிலேயே உட்கார்ந்து வேண்டியதெல்லாம் எடுத்துச் சாப்பிட்டான் நேகன். பால் மட்டும் குடித்து விட்டு, வேறெதுவும் வேண்டாமென்கிற வாக்கில் வந்து சோபாவில் ஒய்யாரமிட்டுக் கொண்டான் டெரிக்.

    கதவுகளைச் சாத்தி விட்டு பட்டறைக்குப் போனார்கள். மீண்டும் இழுவுளியால் கழிகளைச் சீவிச்சீவி மிளிர்ப்பூட்டினான்.  நாளைக்குச் செய்ய வேண்டிய வேலை எல்லாவற்றையும் முன்னிரவிலேயே செய்து முடித்து விட்டான். சத்தத்தைப் பட்டறையிலேயே இறக்கி வைத்து விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தனர் இருவரும்.

    தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னாலிருக்கும் சோபாவில் நீட்டிப் படுத்து விட்டான் நேகன். அவனுக்கு மேலே ஏறி அந்த முடக்கில் முடங்கிக் கொண்டான் டெரிக்.

    வெளியே ஆலிவ் மரத்துக்குப் பொறுக்க முடியவில்லை. தன்னுடையவன் தன்னிலிருந்து போய் விடுவானோயென்கிற இட்டுமுட்டு அதற்கு. மேப்பிள் மரத்து இலைகள் ஒன்றுக்கொன்று பொரணி பேசிக் கொண்டிருந்தன. செர்ரி மரத்துக் கிளைகளில் இருந்த டிப்பர் குருவிகள், “கத்தரிக்காய் முற்றினால் சந்தைக்கு வரப் போகிறது; அதற்குள் எதற்கு இந்த அரசல்புரசல்?” என்று ஒருமனதாய்த் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு ஒன்றுக்கொன்று ஏககாலத்தில் ஆலிங்கனம் செய்து கொண்டன.

    எதோ கனவில் எழுகிற சத்தம் போல இருந்தது. “டே டெரிக், பேசாம இருடா. தூங்கிட்டு இருக்கன்ல?”.

    சத்தம் நன்றாகவே கேட்கிறது. திடுக்கிட்டு எழுந்தான்!

    “அகோ, மிஸ்!”

    “விடிஞ்சிடிச்சில்லயா? ஒட்டு உறவு, வீடு வாசல் இல்லாத ஒரு நாடோடி நான். போகத்தானே வேணும்?”

    உணர்வற்றுப் போய் இருளோவென்றிருந்தது. உள்ளோங்கிய குகையொன்றினூடாக இருக்கும் கைகளுக்கெதுவும் தட்டுப்படாத வெளியில் தள்ளிவிட்டது போலிருந்தது.

    முகத்தை மூடிக் கொண்டு அப்படியே தரையில் உட்கார்ந்திருந்தான் அவன்.

    திடுமென எழுந்து வெளியில் ஓடினான். அவன் ஏறிடவும் தெருமுனையில் ஒரு புள்ளியாய்த் தெரிந்து பின் மறையவும் சரியாய் இருந்தது.

    “ஹோல்ல்லி ஷிட்!”, பெருங்குரலெடுத்து இரைந்து கொண்டே எட்டி ஒரு உதை விட்டதில் ’க்க்கைன்ய்’ என்று கத்திக் கொண்டே போய் எட்ட விழுந்தான் டெரிக். அவன் வீட்டு மரங்களோடு அண்டைப்புறத்து மரங்களும் அதிர்ந்து நடுங்க, அதனதன் அடிப்பழுப்பு இலைகளெல்லாம் உதிரத் துவங்கின.

    பின்னங்கால்த் தொடைகளில் முழுப்பாரத்தையும் இறக்கி வைத்து முன்னங்கால்களால் முன்னூன்றிக் குந்திக் கொண்டு, வைத்த கண் வைத்தபடியே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் டெரிக்.

    கேவிக்கேவி அழுது கொண்டிருக்கும் தன் மணவாளனைத் தேற்றுவதற்குத் தன்னிடம் பேசும் சக்தி இல்லையேயென்று புழுங்கிக் கொண்டிருக்கிறது அந்த ஆலிவ் மரமும்!!

    Share
  • அடுக்களையும் அமைதியும்

    தவளைகளின்
    அட்டகாசத்தில்
    ஆர்ப்பரித்துக் கிடக்கும்
    குளத்திலும் அமைதி
    மணவாட்டி இல்லாத
    அடுக்களை போல!!

    வணக்கம். இவ்வார வல்லமையாளர் பத்தியில், அன்பு திவாகர் அய்யா அவர்கள் இச்சிறு கவிதையைக் குறிப்பிட்டு இருக்கிறார். மூலையில் எங்கோ புதையுண்டு கிடக்கும் அந்த நுண்ணுணர்வினைக் களைந்தெறிந்து விட்டு வாசித்தால் இனிப்பைத் துறந்து விட்டு மெல்லும் கரும்புச் சக்கை போலத்தான் இருக்கும் எப்பேர்ப்பட்ட கவிதையும். அதற்கு இதுவும் விதிவிலக்கல்ல. அன்பு அய்யா அவர்களுக்கும் இக்கவிதையில் புதைந்திருக்கும் அந்த நுண்ணுணர்வின் தாக்கம் இருக்கிறது. அனுபவமும் நெகிழ்வும் தரித்த படைப்பாளிக்கு அதன் தாக்கம் இருக்கப் பார்ப்பதில் வியப்பில்லைதான். ஆனால் எமக்கு எல்லா நேரமும் அது வாய்க்கப் பெறுவதில்லை. அவ்வுணர்வைச் சரியாக வெளிப்படுத்துகிற கவிதைகளின் வீரியமும் அளப்பரியது. எனவேதான் கவிஞர்கள் உலகை ஆளுகிறார்கள். கவிதைகளாலே புரட்சிகள் பல பிறக்கின்றன! மக்கள்சக்தியை பராசக்தியாக்கி நாட்டைத் தட்டி எழுப்பினான் மகாகவி.

    மனத்துள் விளைந்ததை எழுதிவிட்டு நிமிர்ந்து பார்த்தேன். வினாவொன்று நம்மை நிற்கவைத்து வினவியது. மணவாட்டி என்றால் அடுக்களைதானா? முற்போக்குவாதம் எனக் கையிலெடுத்துக் கொண்டு வந்தால் நீ பிற்போக்குவாதியாகி விடமாட்டாயா?? சிந்தையில் விழுந்தது சாட்டையடி. உள்ளதை உள்ளபடிச் சொல்லாமல் திரித்துச் சொல்வதுவும் நன்றன்றோ? எதிர்ச்சாட்டையின் வலு முன்னைய அடியைக் காட்டிலும் மிகுந்திருந்தது. வல்லான் வகுத்ததே வாய்க்காலெனக் கருதியும் உண்மை கருதியும் பின்னதன் சொல்படியே, எழுதியது எழுதியபடியே இருக்கட்டுமென இருந்து விட்டேன்.

    ”வெயிலின் அருமை நிழலில் தெரியும்; அண்மையின் அளவு அகல்தலில் தெரியும்!” என்பார்கள். விடுமுறைக்காலப் பயணமாகத் தாயகம் சென்றிருக்கும் மணவாட்டிக்கும் எனக்குமான அணுக்கம் அகம் குறித்தானது; எனவே எங்களுக்குள் பிரிவென்றேதும் கிடையாது. ஆனால் புறத்துக்கும் அகத்துக்குமான பிரிவு, அதாவது அடுக்களைக்கும் அவருக்குமான பிரிவின் தாக்கம் எமக்கு உண்டு. எனக்குச் சமைத்துக் கொடுக்க ஆளில்லாமல், நானே சமையலை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதல்ல அதன் பொருள். அமைதியாய்ச் சலனமெதுவுமின்றிக் காணப்படும் அடுக்களைதான் எம்மை என்னவோ செய்கிறது. அடிக்கடி சென்று பார்க்கிறேன். வெறுமையாய் இருக்கிறது. அந்த வெறுமையே எம்மிலும் புகுந்து பிரிவைச் சொல்லிக் காட்டி கெக்கலிக்கிறது.

    நகரில் பிறந்து வளர்ந்து ஆளானவர் மணவாட்டி. மணமாகும் வரையிலும் செல்லப் பிள்ளைக்கே உரிய பாங்கில் சமையல் வேலை எதுவும் செய்யாமல் படிப்பும் விளையாட்டுமாய் இருந்த ஒருவர். சமையல் கட்டுக்கும் அவருக்கும் யாதொரு பிணைப்பும் இருந்ததில்லை. ஆனால் இன்று? பட்டறையே கதியென்று கிடக்கும் பொற்கொல்லனைப் போல இருக்கிறார். அவருக்கு எல்லாமும் எப்போதும் அடுக்களைதான்.

    சிறப்புப் பட்டம் பெற்று, மருத்துவத்துறையின் உரிமம் பெற்ற ஒருவர் இப்படியானதொரு பாங்கில் இருக்கிறாரே என எண்ணி நான் வியந்தது எண்ணற்ற முறை. பொதுவாக ஒருவர் காலையில் எழுந்ததும் கழிவறைக்குச் செல்வது வழமை. ஆனால் இவரோ அடுக்களைக்குச் செல்வார். சும்மா அடுக்களைக்குச் சென்று அங்கொரு திருகு போட்டு விட்டுப் பின்னர் கழிப்பறைக்குச் செல்வார். சில நேரங்களில் சும்மாவேனும் எதோவொரு கதவினைத் திறந்து பார்த்து விட்டு, இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டியது இருக்கிறதாவென உறுதி செய்துவிட்டுச் செல்வார்.

    வெளியே எங்கு போய் விட்டு வந்தாலும் சரி, கதவைத் திறந்து கொண்டு நேரடியாக அடுக்களைக்குப் போய் கண்களைச் சுழலவிட்டு ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரைக்கும் மேய்ந்தானபின் அங்கிருக்கும் நீர்க்குவளையில் ஒரு வாய் தண்ணீர் குடித்து விட்டுத்தான் இயல்புக்கு வருவார். விமான ஓட்டியின் அந்த ஒற்றைப் பார்வைக்கு நூறு கண்கள் இருக்கும். தன் எதிரே இருக்கும் நூற்றுக்கணக்கான எண்ணிமகாட்டிகளில் எதுவொன்று இயல்பிலியாக இருந்தாலும் உடனுக்குடன் அறிந்து கொள்கிற ஆற்றல் ஒரு விமானிக்கு உண்டு. ஆனால் என் மணவாட்டியின் அடுக்களைப் பார்வைக்கோ ஆயிரம் கண்கள். அதனதன் வைப்பிடத்தில் ஏதேனும் மாறுதல் இருந்தாலோ, இருக்க வேண்டிய இடத்தில் ஏதேனும் இல்லாமற் போனாலோ, புதிதாய் ஏதேனும் இடம் பெற்றிருந்தாலோ சட்டெனக் கண்டுபிடித்து விடுவார்.

    அடுக்களையில் இருந்தபடியே குறுங்கணினியில் மின்னஞ்சல் பார்ப்பார். அடுக்களையில் இருந்து கொண்டே தொடுப்பிலித் தொலைபேசியினூடாக தாத்தா, பாட்டி, அதாவது என் அம்மா, அப்பாவை அழைத்து அவர்களுக்கு நடக்க வேண்டியது கிரமத்துடன் நடந்து கொண்டிருக்கிறதாவென அறிந்து கொள்வார். சில பல நேரங்களில் ஊரில் இருக்கும் அம்மா, அமெரிக்க அடுக்களையில் சமைத்துக் கொண்டிருப்பார். ’பொசுக், பொசுக்னு நாள் முச்சூடும் டாக்டர்கிட்டப் போய்ட்டு இருக்கப்படாது. கைக்குழந்தைகள்னா அப்படித்தான். இஞ்சியத் தட்டி இதுல போடு. சுக்கைத் தட்டி அதுல போடு. எண்ணைய சுட வெச்சி அதுல நாலு பல்லுப் பூண்டைப் போடு” என்று அடுக்களையில் அற்றைநாள்ப் போருக்கான முசுதீபுகள் பதினாறு இறக்கைகள் கொண்டு பறக்கும்.

    “அம்மா, சீனு என்னோட அதை எடுத்திட்டு தர மாட்டீங்றான்” என்று பெரிய புராணத்தோடு வந்து நிற்கும் இரட்டை வாண்டுகளில் ஒன்று. ஒட்டிப் பிறந்தது வாளாதிருக்குமா? கூடவே வந்து நாயனத்துக்கு ஒத்து ஊதும். இலாகவமாக அதுகளுக்குப் பஞ்சாயத்து நடப்பதும் அந்த அடுக்களையில் வைத்துத்தான்.

    சற்று நேரத்தில் அடுத்தவர் வருவார். “அம்மா, நேத்தே சொன்னனே? ஃபீல்டு ட்ரிப்புக்கு இருபது டாலர் கட்டணும்!”. அடுக்களையின் எதோவொரு இழுப்பறையை இழுக்க வந்து சேரும் வேண்டிய அந்த இருபது டாலர். எதற்காவது அடுக்களைக்குள் நாம் செல்ல நேரிட்டாலோ, வந்து பாயும் காண்டீபக் கணைகளும் பேட்ரியாட்களும். “இங்கென்ன செய்றீங்க? நீங்க போங்க. நான் எடுத்துத் தர்றேன்!”. நமக்கு ஒரு போதும் அனுமதி கிடையாது. அடுக்களைக்கு நாம் ஒரு அந்நியன். எத்தனையோ ஃபோபியோக்கள், கிலிகள் உண்டு. இது ”அடுக்களையோ கிலி”. எடுத்ததை எடுத்த இடத்தில் வைக்காமல் விட்டுவிடுவோமோ என்கிற கிலி.

    “சின்னவங்க ரெண்டு பேரும் வாங்க. உக்காருங்க பேசாம. சாப்டுட்டுப் போயி விளையாடுவீங்களாமா!! இருந்து, ஆற அமரச் சாப்பாடு உண்ண ஆயிரம் அறைகலன்கள் வீட்டில் இருந்தாலும் அடுக்களைதானே இருந்தாக வேண்டிய இடம்? அடுக்களையின் தரையிலேயே சின்னதுகளும் உட்கார, நடந்தேறும் காலைச் சிற்றுண்டி.

    இப்படி விடியல் பிறந்ததும் ஆர்ப்பரிக்கத் துவங்கிவிடுமந்த அடுக்களை. நாள் முழுமைக்கும் அடுக்களையில்தான் எல்லாமும். கதைப் புத்தகங்கள் வாசிப்பதும், அண்டை வீட்டாருடன் அளவளாவுவதும், எந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்கு எந்த நாளில் செல்ல வேண்டுமெனத் தீர்மானிப்பது உள்ளிட்ட ஏனைய பிற அலுவல்களும் அடுக்களை உருட்டலினூடேதான்.

    செய்ய எதுவுமே இல்லாவிட்டாலும் செய்வதற்கு உரிய வேலைகள் உண்டு அடுக்களையில். சென்றவாரம் இடப்பக்கத்தில் இருப்பதை எல்லாம் வெளியே இழுத்துப் போட்டு மீண்டும் உள்ளே அடுக்கி வைத்தோமா? அப்படியானால் வலப்பக்கத்திலிருப்பதை எல்லாம் இழுத்துப் போடுவோம் இப்போது. இப்படித்தான் அடுக்களைக்குச் சீர் நடக்கும் தவறாது. என்றாவது ஒருநாள் அடுக்களையும் ’தன் வரலாறு’ எழுதும்; அன்று தெரியவரும் அதற்கு ஈடேறுகிற சீர்களும் பேணுதல் வரிசைகளும் முற்றிலுமாய்.

    ”உன்னை எனக்குக் கட்டி வைத்தார்களா, அடுக்களைக்கா?”, கேட்ட மாத்திரத்தில் பதில் வந்து விழும். அது நீங்கள் கட்டியழும் கம்ப்யூட்டரிடம் போய்க் கேளுங்கள் என்று. ஒரு வீட்டில் திருமண பந்தம் வைத்துக் கொள்கிறோம் என்றால், அந்த ஆணையோ பெண்ணையோ பார்க்கத் தேவையில்லை. கழிப்பறை அல்லது அடுக்களையைப் பார்த்தால் விளங்கும் என்கிறவாக்கில், “அடுப்புஞ் சலதாரையும் சுத்தமின்னா பொண்ணுஞ் சுத்தந்தேன்” என்கிறது ஊர்ப்புறத்துச் சொலவடை. எங்கள் வீட்டு அடுக்களையைப் பார்த்தாலோ ஏழேழு பிறவிக்கும் இந்த ஒரே மணவாட்டிதான் போலிருக்கிறது. நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.

    வீட்டின் மறுகோடியில் இருக்கும் அலுவலக அறையிலிருந்து பார்க்கிறேன். ஆட்டுவிக்கப்படாத பொய்க்கால் குதிரை போலச் சலனமற்று ஒலிப்பசியுடன் கூடிய இருட்டுப் பட்டினியுடன் துவண்டு கிடக்கிறது. ஆமாம். கடந்த இரு வாரங்களாய்த் தரிசாய்க் கிடக்கிற அதன்மேல் மெலிதாய்ப் போர்த்தப்பட்டுமிருக்கிறது அமைதி.. அமைதி.. அமைதி!!!

    Share
  • சாகும் வரை….

     

    பழமைபேசி

     

    பணம் கொண்டு வாங்கிவிடுவேன் படுக்கை
    எதைக் கொண்டு வாங்குவேன் உறக்கம்?

    பணம் கொண்டு வாங்கிவிடுவேன் புல்லாங்குழல்
    எதைக் கொண்டு வாங்குவேன் இசை?

    பணம் கொண்டு வாங்கிவிடுவேன் நூலகம்
    எதைக் கொண்டு வாங்குவேன் அறிவு?

    பணம் கொண்டு வாங்கிவிடுவேன் எட்டுத்தொகை பத்துப்பாட்டு
    எதைக் கொண்டு வாங்குவேன் தமிழ்?

    பணம் கொண்டு வாங்கிவிடுவேன் திரவியம்
    எதைக் கொண்டு வாங்குவேன் நறுமணம்?

    பணம் கொண்டு வாங்கிவிடுவேன் என்சைக்ளோபீடியா
    எதைக் கொண்டு வாங்குவேன் நினைவாற்றல்?

    பணம் கொண்டு வாங்கிவிடுவேன் பேரழகி
    எதைக் கொண்டு வாங்குவேன் பேரன்பு?

    பணம் கொண்டு வாங்கிவிடுவேன் பட்டம்
    எதைக் கொண்டு வாங்குவேன் படிப்பினை?

    பணம் கொண்டு வாங்கிவிடுவேன் கூத்துப்பட்டறை
    எதைக் கொண்டு வாங்குவேன் களிப்பு?

    பணம் கொண்டு வாங்கிவிடுவேன் களிமாடம்
    எதைக் கொண்டு வாங்குவேன் சிற்றின்பம்?

    பணம் கொண்டு வாங்கிவிடுவேன் கடிகாரம்
    எதைக் கொண்டு வாங்குவேன் நேரம்?

    பணம் கொண்டு வாங்கிவிடுவேன் மனிதர்கள்
    எதைக் கொண்டு வாங்குவேன் நட்பு?

    பணம் கொண்டு வாங்கிவிடுவேன் ஆசிரமம்
    எதைக் கொண்டு வாங்குவேன் மனநலம்?

    பணம் கொண்டு வாங்கிவிடுவேன் குடிசை
    எதைக் கொண்டு வாங்குவேன் எளிமை?

    மனம், மனம், மனம்!
    மனம் பண்பட வாசிப்போம்!!
    சாகும் வரை வாசித்திருப்போம்  நூல்கள் பல!!!

    Share
  • நகைச்சுவைத் திருவிழா

     

    பழமைபேசி

     

    நான் பெரிய யோகியாகி விட்டேன். இதை வெளியில் சொன்னால் சிரிப்பார்கள். சிரித்துவிட்டுப் போகட்டும். சிரிப்பவர்களுள் எத்தனை பேருக்கு கண்ணை மூடியபடி பத்மாசனத்தில் தொடர்ந்து அரைமணி நேரம் இருக்கும் வல்லமை இருக்கப் போகிறது? அளவுக்கு மீறிய பொறுமையும் நிலைத்தன்மையும் அதற்குத் தேவை என்பது சிரிப்பவர்களுக்குத் தெரியாது. அதனால்தான் அவர்கள் சிரிக்கிறார்கள். சிரித்துவிட்டுப் போகட்டும்.

    வீட்டில் உள்ள சாளரங்கள், அறைக்கதவுகள், நிலைப்படித் திரைகள் என எல்லாவற்றையும் மூடிய கையோடு முன்னறைக்கு வந்து ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்குகள் அனைத்தையும் அணைத்தாயிற்று. பக்கவாட்டில் இருக்கும் சமையலறை நுண்ணலைப் பெட்டியின் எண்ணிம மணிகாட்டி மட்டும் அறையைக் கப்பியிருந்த இருளின் அடர்த்தியைத் தனது இளம்பச்சை நிறத்தால் சற்றே குறைத்துக் கொண்டிருக்கிறது.

    ஊரிலிருந்து தருவிக்கப்பட்ட ஈச்சம்பாயினை முன்னறையின் மையப்பகுதியில் விரித்து அதன் மேல் அமர்ந்து கொண்டேன். காற்கழல் ஒவ்வொன்றும் மறுதொடையின் மேல் இருக்கும்படியாகவும் முதுகுத்தண்டு செங்குத்திட்டும், நெஞ்சம் விரிந்து நிமிர்ந்துமிருக்க நேர்கொண்ட தலையோடு அமர்ந்திருந்தேன்.

    எல்லாமும் சரியான நிலையிலேயே இருக்கிறது என்று மனத்துக்கு மனமே சொல்லிக் கொள்ள ஓரிரு மணித்துளிகள் தேவைப்பட்டிருந்தன. மனம் சமிக்கை கொடுத்தானவுடன் கண்கள் தானாகவே மூடிக்கொண்டன. சமையலறையில் இருந்த குளிர்மி அடிக்கொருதரம் மூச்சுவிட்டுக் கொண்டிருந்தது. தலையின் பின்னால் இருக்கும் சுவர்க்கடிகாரமோ வினாடிக்கொருதரம் ’லொக்’கென்று இருமும். அந்த சத்தத்தின் அதிர்வில் உட்காதுச் சவ்வுகள் கிழிந்து விடும்போல இருந்தது.

    அனுமானத்தின் பேரில் சொல்கிறேன். கிட்டத்தட்ட பத்து மணித்துளிகளுக்கும் மேலாயிற்று. ஆனாலும் அந்த இருமல்ச் சத்தத்தின் இடையூறு தணிவதாக இல்லை. எழுந்து விடலாமா என்று யோசித்தேன். பத்மாசனக் கூறுகள் அதனதன்பாட்டுக்கு அதனதன் சீரைச் செம்மையாய்த் தரித்துக் கொண்டுதானிருந்தன.

    புண்பட்ட மனத்தை புக விட்டு ஆத்து என ஊரில் சொல்வது நினைவுக்கு வர, “ஓம்” சொல்வதில் மனத்தைப் புகட்டினேன். இருமல்சத்தம் துப்புரவாக நின்று போயிருந்தது. ஊருக்குச் சென்றிருக்கும் மகள்களைப் பற்றிய எண்ண அலையில் ’ஓம்’ சொல்வதும் தொடர்ந்தது. அதற்குப் பிறகு என்னை நானே எப்போது தொலைத்து விட்டிருந்தேன் என்பது எனக்குத் தெரியாது. இப்படியாக நேரிடும் என்பதை மனத்திற்கொண்டுதான், மாலை நான்கு மணிக்கு ஒலிக்கும்படியாக முன்கூட்டியே எனது ஐபோனில் அலறியைக் கட்டமைத்திருந்தேன்.

    ஐபோனின் ஒலி கேட்டுக் கண் விழித்தேன். அலறிக்கு மாறாக, யாரோ அழைப்பது போல உணர்ந்தேன். ஆமாம். நண்பர் கல்யாண் குமார்தான் அழைத்துக் கொண்டிருக்கிறார். அழைப்போசைதான் தொடர்ந்து ஒலிக்கிறது.

    ”சொல்லுங்க கல்யாண்!”

    “விஜய், என்ன செய்றீங்க? ரொம்ப நேரமாக் கதவு தட்டிட்டு இருக்கேன். வீட்டிலதான இருக்கீங்க?”

    “ஓ, அப்படீங்களா? இதா, வந்துட்னுங்க!”

    ஓடிப் போய் கதவைத் திறந்து விட்டேன். நண்பர் கல்யாண் குமார் தமிழ்ச்சங்க நிறுவனர்களுள் ஒருவர். சமூகத்தொண்டு புரிவதில் அவருக்கு நிகர் அவர்தான். அக்கம்பக்கத்தில் யாருக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும், அழைப்பது கல்யாண் அவர்களைத்தானாக இருக்கும்.

    “குளிச்சிட்டு ரெடியா இருங்கன்னு சொல்லி இருந்தனே? மறந்துட்டீங்களா??”

    “இதென்ன, இப்ப ஆச்சுங்க கல்யாண்!”, சொல்லிக் கொண்டே குளியலறைக்குள் ஓடிப் போய் துரிதகதியில் புறப்பட்டு வந்தேன்.

    இன்றைக்கு எங்கள் ஊர் தமிழ்ச்சங்கத்தினுடைய நகைச்சுவைத் திருவிழா. திருவிழாவில், உள்ளூர்க் கலைஞர்களின் ’காதலிக்க நேரமுண்டு’ நாடகமும், ஒய்.ஜி.மகேந்திரன் குழுவினருடைய ‘வெங்கட்டா3” நாடகமும் இடம் பெறுகிறது. முன்கூட்டியே விழா அரங்கிற்கு அழைத்துச் செல்லத்தான் கல்யாண் வந்திருக்கிறார்.

    அவர் அவரது சிற்றுந்தில் பயணிக்க, நான் எனது சிற்றுந்தில் அவரைப் பின்தொடர்ந்து கொண்டே காலியர்வில் காரல் அரங்கத்திற்குச் சென்று சேர்ந்தேன்.

    தமிழ்ச்சங்க விழாக்கள் என்றால் எனக்கு மிகவும் விருப்பம். நிறைய நண்பர்களைச் சந்திக்கலாம். ஆசை தீர மொக்கை போடலாம். பயனுள்ள தகவல்களை அறிந்து வரலாம். மிக முக்கியமாக, சுவையுள்ள சாப்பாடு உண்ணக் கொடுப்பார்கள். அதுவும் மனைவி மக்கள் ஊருக்குப் போயிருக்கும் இத்தருணத்தில் சோறு முக்கியமல்லவா? ஓடியாடி வேலை செய்தால், வீட்டிற்கு எடுத்துச் செல்ல ”டு-கோ” கூடக் கொடுப்பார்கள்.

    முதன்முதலில் அவன்தான் எதிர்ப்பட்டான். விழாவிற்கு ஏனடா வந்தோம் என்றிருந்தது. எல்லாம் இந்த கல்யாண் குமாரால் வந்தது வினை. உனக்கு எவ்வளவு சம்பளம்? எவ்வளவு மிச்சமாகுது? வகைதொகையில்லாமல் கேள்வியாய்க் கேட்டுத் தொலைப்பானே இந்த முருகவேல்??

    நான் அவனைப் பார்க்காதது போல மறுவாசலில் வைத்திருந்த எதோவொரு பெட்டியை எடுப்பதாகப் பாவனை செய்து கொண்டு போனேன்.

    “ஏனுங் விஜய்? எப்பிடி இருக்கீங்க? போன் பண்ணாக்கூட எடுக்க மாட்டீங்றீங்க?? எங்க ஊட்டுல நங்கையாளையும் பாப்பாக்களையுங் காணம்??”, அவ்வளவு எளிதில் விட்டுவிடுவானா இந்த இருகூர்க்காரன்.

    முருகவேலின் மனைவியினுடைய அண்ணன் கரையாம்பாளையம் சண்முக சுந்தரமும் நானும், கோயம்பத்தூர்க் கல்லூரியில் ஒரே வகுப்பு. அதன் நீட்சியாகத்தான் எங்கள் இருவருக்கும் இடையே கூடுதலான பழக்க வழக்கம். அதை வைத்துக் கொண்டுதான் என்னைப் படுத்துகிறான் என்று சொல்வதும் சரியாக இருக்கும். ஆனால் கள்ளங்கபடமில்லாதவன். கோயமுத்தூர் ஊரக நாகரிகம் அமெரிக்கா வந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறது அவனிடம்.

    ”வாங்க சித்த நேரம் இருந்து பேசீட்டுப் போகுலாம்!”, அருகிலேயே வந்துவிட்டான் முருகவேல்.

    “நான் நல்லா இருக்கணுங்க? நீங்க??”

    ”எதோ பொழப்பு ஓடுதுங்க? ஏனுங், ஊட்ல ஆரையுங் காணமுங்க??”

    “எல்லாரும் ஊருக்குப் போயிருக்குறாங்க முருகு!”

    “அப்படீங்களா? செல்வி சொல்லவே இல்லை. அவளுக்குத் தெரியாதாட்ட இருக்குது? ஆமா, நீங்க போகலைங்களா??”

    “போகணும். லீவு எசவாக் கெடைக்க மாட்டீங்குதுங்க முருகு, அதான்! உங்க வீட்டுல?”

    “எங்கீங்க, உங்களுக்குத்தான் தெரீமே எல்லாம்? இன்னும் அட்வான்சு பரோல்லதான் இருக்கறோம். இன்னும் கிரீன் கார்டுக்கு பிரியாரிட்டி வர்ல? ஆறு வருசம் ஆச்சுங்க அப்பன் அம்மாளைப் பார்த்து! படுத்தா நிம்மதியாத் தூக்கம் வரமாட்டீங்குதுங்க! எங்கம்மாவுக்கு வேற நாளுக்கு நாள் ஒடம்புக்கு ஆகாமப் போய்ட்டு இருக்குது!”

    “அதெல்லாம் கவலைப்படாதீங்க முருகு. இப்ப ஊர் முன்ன மாதர இல்ல பாருங்க. தடுக்கி உழுந்தா ஆசுபத்திரிங்க!”

    “ஆமா, நீங்க ஊருக்குப் போயிட்டி வந்து எத்தினி நாளாச்சுங்க?”

    “ஒன்ரை வருசம் ஆச்சுங்க முருகு!”

    “நீங்கதான் அமுச்சி செத்த எழவுக்கே போக முடியலைன்னு சொல்லிச் சொன்னீங்களே? ஞாவகத்துக்கு வருதுங்க. வெளிநாட்டுக்கு ஏண்டா வேலைக்கு வந்தம்னு இருக்குதுங்க இப்பெல்லாம். அப்பனாத்தாளைக,  கூடாமாடா இருந்து பாக்க முடியாட்டிப் போகுதுங்க. செத்ததுக்கும் பொறகு எழவுக்குக் கூட போக முடியாதாட்ட இருக்குது பொழப்பு? போன வாரம் நடந்த விசியந் தெரீந்தான உங்களுக்கு??”

    “ஏனுங்? என்னாச்சுங்க??”

    “நம்ம, பரஞ்சோதி இருக்காரல்லங்க? பெட்எக்ஸ் விசுவநாதம் பிரண்டு??”

    “ஆமா, தெரியுஞ்சொல்லுங்க!”

    “அவரோட தங்கச்சி ஊட்டுக்கார்ரு, எளவயசுதானாமா, நாப்பத்தஞ்சு நாப்பதாறு இருக்கும்னு சொல்லிச் சொன்னாங்க. திடீல்னு ஆர்ட் அட்டேக்ல போயிட்டாருங்லாமா. இங்கிருந்து இவிங்க பத்தாயரம் டாலர் செலவு வண்ணிப் போயிருக்குறாங்க. போய்ச்சேர்றதுக்குள்ளயே பாடி எடுத்துப் போட்டாங்களாமா. என்ன பொழப்புங்க இது? ஆமா, உங்கூட்டுல நீங்க எத்தினி பேருங்கொ?”

    “நாங்க மூனு பேரு. நாந்தான் கடைசிங்க முருகு”

    “அல்லாருமே வெளிநாடுதானுங்களா?”

    “அக்கா, அம்மா அப்பாகோட ஊர்ல இருக்காங்க!”

    ”உங்க மச்சானுக்கு என்ன வயசாச்சுங்க?“, கேட்டு முடிக்கவும் ஒய்.ஜி மகேந்திரன் அவர்கள் அந்தப் பக்கம் வரவும் சரியாக இருந்தது. இந்த அளவில் முருகவேலுவிடம் இருந்து தப்பித்தோம் என்கிற நினைப்பில் நழுவி வந்து விட்டேன்.

    சற்று நேரம் ஒய்.ஜி அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தோம். உள்ளூரில் இருக்கும் நாடக எழுத்தாளரும் இயக்குநருமான தஞ்சை நடராஜன் அவர்களும் வர, அவருடனும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பங்குச்சந்தையில் ஆப்பிளின் விலை, அமேசானின் விலை, கூகுளின் விலை எனச் சகல விலைகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்த போதுதான், ஆட்டோசோன் நிறுவனத்தில் வேலை பார்ப்பவரும் தமிழ்ச்சங்க செயலருமான திவாகர் வந்தார்.

    “என்னங் விஜய், போஸ்ட் பேச்சுலர் லைஃப் எஞ்சாய் பண்ணுறீங்க போலிருக்கு?”

    “ஆமாங்க திவாகர். நீங்க எப்படி இருக்கீங்க?”

    “ப்ச். நாளுக்கு நாள் ஒன்னும் செரியில்லைங்க. ஊருக்கே போயிடலாம்னா, வீட்டுல சங்கீதா ஒத்துக்க மாட்டீங்றா”

    ”இதென்னடா இழவுக்கு மேல இழவா இருக்கு? சொள்ளைக்குத் தப்பிச்சு வந்த கன்னுகுட்டி தினாசுகிட்ட மாட்டிகிட்ட மாதர ஆயிப் போச்சே நம்ம நிலைமை?!” என்று நினைத்துக் கொண்டே எசப்பாட்டு பாடினேன், “ஓ அப்படீங்களா?”

    “என்ன அப்படீங்களா, ஒன்னுந்தெரியாத மாதரி? ஊர்ல இருந்து போன் வந்தாலே போதுங்க, அம்மாவுக்கு என்னாச்சோ, தம்பிக்கு என்ன ஆச்சோன்னு செத்து செத்துப் பொழைக்க வேண்டியதா இருக்குங்க விஜய்!”

    “ஆமாங்க, இது சொன்னீங்களே, நெம்பச் சரி!”

    ”பொசுக்கு பொசுக்குன்னு ராத்திரி ரெண்டு மணி, மூனு மணிக்கெல்லாங்கூட போன் வருதுங்க. மொதல்ல எல்லாம் நாம கூப்ட்டாத்தான் உண்டு!”

    “ஆமாங்க திவா! போன் ரேட் நெம்பக் கம்மி போல இருக்கு?”

    “பெர் மினிட்டுக்கு ஐம்பது பைசாதானுங்களாம்!”

    “தயவு தாட்சண்யம் இல்லாம நிமிசத்துக்கு ஐம்பது ரூபாய் ஆக்கிவிடணும். அப்பதான் இந்தக் கொடுமை கொறையுமுங்க!”

    “ஆமாங்க விஜய். ஊர்ல அம்மா தனியா இருக்காங்க. தம்பிக்கு நொய்டால ப்ராஜக்டு. சிஸ்டர் சென்னையில இருக்கா. அதான் நானும் ஊருக்கே போயிடலாம்னு யோசிக்கிறேன். அப்பாவத்தான் கடைசில கூட இருந்து கூடப் பாக்க முடியல!”

    “புரியுதுங்க திவா!”

    “அம்மாவையாவது மிஸ் பண்ணிடக் கூடாதுன்னு யோசிக்கிறேன். நாமெல்லாம் பாவப்பட்ட ஜென்மங்க விஜய்! ஆமா, உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைச்சுதா? நீங்க என்ன ப்ளான்ல இருக்கீங்க??”

    “இப்போதைக்கு அதப்பத்தி பெருசா எதும் யோசிக்கலைங்க திவா!”

    பேச்சுக் கச்சேரிக்குள் அடுத்த ஆடொன்று அதன் போக்கில் வந்து புகுந்தது.

    “வாடா மச்சான். இவர் பேரு விஜய்; பார்ட்லட் பேங்க்ல வேலை பாக்குறாரு!””

    “விஜய் சார், எனக்கு நல்லாத் தெரீமே! நம்ம கல்யாண் குமார் கூட வருவாரே? பார்த்திருக்கேன்!! அலோ சார், நல்லா இருக்கீங்களா? உங்க பாட்டியோ யாரோ தவறிப் போனப்ப, நீங்க ஊருக்கே போய் செட்டில் ஆயிட்டதாச் சொன்னாங்களே? இன்னும் நீங்க இங்கதான் இருக்கீங்களா சார்??”

    எனக்கு இந்த நகைச்சுவைத் திருவிழா மிகவும் அவசியமா? உடுத்திருக்கும் உடைகளை அந்த இடத்திலேயே களைந்தெறிந்து போட்டுவிட்டு, அப்படியே ஓடிப் போய் எர்னாண்டோ டெ சோட்டோ மெம்ஃபிசு பாலத்தின் மீதேறி மிசிசிப்பி ஆற்றில் குதித்து விடலாம் போல இருந்தது.

    Share
  • கொழுகொம்பு

    நித்திரை கலைந்து நினைவுக்கண் விழித்துக் கொண்டதிலிருந்து நாட்டம் எம்மை படுத்தி எடுத்திக் கொண்டிருந்தது. வீட்டில் மனைவி மக்கள் என்ன செய்கிறார்கள் எனச் சிரம் உயர்த்திப் பார்த்தேன். ஆழ்ந்த உறக்கத்தில் மெய்ப்புலங்கள் யாவும் நான்கு உருவங்களுக்குள் கட்டுண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. நான் மெதுவாய் எனும் கூட்டுக்குள் புகுந்து சன்னல் ஓரத்துக்குப் போய், சிறிதே சிறிதாய் திரை விலக்கிப் பார்த்தேன். ஒட்டு மொத்த நீலவண்ணத்தையும் வானக்கூரைக்கு அடித்திருந்தான் இயற்கை தேவன்.

    தூரத்தில் நிற்கும் பெரி மரம் ஒன்று முழுக்க முழுக்க கத்தரிப்பூ வண்ணத்திலான பூக்களால் தன்னைத் தன் நிர்வாணத்திலிருந்து காப்பாற்றிக் கொண்டு நின்றிருந்தது. ஓடிப் போய் அந்த ஆடையின் ஒரு கங்கினைப் பிடித்து இழுத்தாலென்ன என்கிற குறும்பு நினைப்பில் நானிருக்க, அதனுள்ளிருந்து பொத்துக் கொண்டு வெளியேறியது எதையோ ஒன்றை இழுத்துப் பிடிப்பதற்கான வெறிபிடித்த அமெரிக்கன் டிப்பர் குருவியொன்று.  ஆடை கிழிபட்டதில் சிறிதுக்கும் பெரிதுக்குமான இடைப்பட்ட நடுக்கத்தோடு நடுங்கி நின்றது பெரி மரம்.

    இனியும் பொறுத்துக் கொண்டிருந்தால் மனசாட்சி நம்மை, ”நீ ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறாய்? செத்துத் தொலையேண்டா!!” என நாக்கைப் பிடுங்கிக் கொள்ளுமளவுக்கு கேட்டுத் தொலைக்கும் அபாயம் இருக்கிறபடியால், துரிதகதியில் காலைக்கடன்கள் முடிக்கப்பட்டு ஓடுகளப் பாதைக்கு ஏதுவான உடுப்புகளில் உடம்பைப் புகுத்திக் கொண்டேன். உறக்கத்தில் இருக்கும் மனிதங்கள் நான்கும் உறக்கத்திலேயே இருக்கட்டுமென விழைந்து அரவமேதும் இல்லாதிருக்கும்படியாகக் கதவைச் சாத்தி வெளியே வந்தாயிற்று.

    இளங்காலை வெயில் நம்மீது போர்த்தப்பட்டிருக்கும் தோலாடையையும் ஊடுருவி உள்ளே வந்து தசைநார்களை குதூகலத்தால் தோய்த்தது. ஊடுருவப்பட்ட தோலாடையை மேவிவிட்டது மிசிசிப்பி ஆற்றைத் தழுவி வந்த சாரக்காற்று. செவிப்புலத்தில் இசைஞானியின் இசையில் ஜானகியின் மெல்லிசை மதுரம் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது. மனம் சொக்கி போதையில் ஆர்ப்பரித்துக் கொண்டே உடலுக்குள் இருந்து வெளிக்கிளம்பி குளத்திலிருக்கும் நீர்ப்பரப்புக்கும் மேலாக இறக்கை கட்டிப் பறக்கின்றன. சுகித்துக் கொண்டன ஏனைய மெய்ப்புலங்கள் யாவும்.

    இன்னபிற புலங்கள் யாவும் தன்னிலை மறந்து உவப்புக் கொண்டிருந்ததைப் பயன்படுத்திக் கொண்ட கால்கள் இரண்டும் ஓட்டம் பிடித்தன குளத்தின் மருங்கிலிருந்த ஓட்டப்பாதையினூடக! ஐந்தரை மைல் தொலைவு ஓடியதை விழிகளிரண்டு தவிர மற்ற புலங்கள் எதுவும் கவனித்திருக்கவில்லை. வாழ்க்கைச் சுழலில் குளக்கரையில் ஓடுவதென்பதும் வழமையான நிகழ்வாகிவிட்டது.

    காலவெள்ளத்தில் அகப்பட்ட நாம் அவரவர்க்கு விருப்பமான ஏதோவொன்றைப் பிடித்துக் கொண்டபடியே வெள்ளத்தின் போக்கில் பயணிக்கிறோம். இதைச் சொன்ன மாத்திரத்தில் சண்டைக்கு வருபவர்கள் உண்டு. யார் வருகிறார்களோ இல்லையோ, தாய் நாட்டு மக்கள் மீது பாசம் கொண்டவளும் பெண்ணிய மனப்பான்மை கொண்டவளுமான மச்சினிச்சி ஒப்புக்கொள்ள மாட்டாள். எனவே மிகுந்த கவனத்தோடு அமெரிக்காவில் என்பதை இடைச்செருகலாகப் பாவித்து திருத்திச் சொல்ல வேண்டிய கடமையும் பொறுப்பும் இருக்கின்றன.

    ஒருவர் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதெல்லாம் கூட மற்றவர்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது உலகின் ஏனைய பகுதிகளில். அத்தகைய தீர்மானங்கள் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. தனி மனிதர்களால் தன் அகத்தின் விருப்புக்கொப்ப வாழ இயலவில்லை. இதன் காரணமாய் எனக்கும் என் மச்சினிக்குமிடையே முரண்பாடு எழுகிறது. எனவே ஏற்கனவே சொன்னது சற்று மாற்றிச் சொல்லப்படுகிறது.

    காலவெள்ளத்தில் அகப்பட்ட அமெரிக்காவாழ் மக்கள் அவரவர்க்கு விருப்பமான ஏதோவொன்றைப் பிடித்துக் கொண்டபடியே வெள்ளத்தின் போக்கில் பயணிக்கிறார்கள். தகுந்த காரணங்கள் இருப்பின், காலத்தின் போக்கையும் தேவைக்கொப்ப மாற்றிக் கொள்கிறார்கள்

    வாய்ப்புக் கிடைக்கிற போதெல்லாம் குளக்கரையில் ஓட வேண்டும். இது எமக்குக் கிடைத்த மிதவுகோல். இதைப் பற்றி மிதந்து பயணிக்கிறேன் காலவெள்ளத்தினூடாக. என்னுடைய அலுவலக நண்பன் மனோஜ் வதேரா என்பவனுக்குக் கிடைத்திருப்பது மற்றொன்று. கால அவகாசம் கிடைக்கும் போதெல்லாம் ஆற்றுப்படுகைக்குச் சென்று விடுகிறான்.

    மெம்ஃபிசு நகரத்தில் இதற்கென்றே ஒரு தனிப்பட்ட குழுமம். குழும உறுப்பினர்கள் யாவரும் தன்னார்வலர்கள். யாருடைய அறிவுறுத்தலுக்கோ நிபந்தனைக்கோ ஆட்படாதவர்கள் இவர்கள். எனக்கும் கூட ஆசையுண்டு. இருக்கிற ஆசையெல்லாம் நிறைவேறிவிட்டால் வேறென்ன இருக்கும்? இக்குழுமத்தில் இருப்பவர்களை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து சேர்க்கும் அந்த நாட்டச்சுவை எதில் கிடைக்கிறது? கைப்படகுகளில் ஏறி ஆற்றுக்குள் பயணித்துத் தூய்மைப்படுத்துவதில் கிடைக்கிறது மனத்துக்கு இனிமையூட்டும் காயகல்பம்.

    வார ஈற்று நாட்களில் வீட்டில் இருக்க மாட்டான் மனோஜ். கைப்படகும் நீர்நிலைத் தூய்மையாளர்களுமென எங்காவது துடுப்படித்துக் கொண்டிருப்பான்.  அவனோடு அவனது குழுமத்தைச் சார்ந்த மற்றவர்களும் அவரவர் கைப்படகுகளோடு ஆற்றங்கரைக்கு வந்து விடுகிறார்கள். கூட்டத்தோடு கூட்டமாகச் சேர்ந்து நாட்டு நடப்பு, உலக நடப்பு, ஊர்க்கதை, வீட்டுக்கதை, பகடி, எள்ளல், கேலி, சிரிப்பு எனப் பலதையும் மென்று தின்று கொண்டே ஆற்றுக்குள் படகைச் செலுத்துகிறார்கள். உடலுக்கு நல்ல பயிற்சி. மனத்துக்கு நல்ல களிப்பு. ஆற்றின் அழகுக்கும் செயலுக்கும் ஊறு விளைவிக்கிற எதைக் கண்டாலும் களைந்து அப்புறப்படுத்தி மகிழ்கிறார்கள். ஆற்றின் கரைகளைத் தன்னுடல் போலக் காதலித்து அவற்றோடு வாழ்வுப் புணர்ச்சி கொள்கிறார்கள்.

    மனோஜ் வதேராவின் மனைவி பாருல் வதேரா. பழகுவதற்கு மிகவும் இனிமையானவள். மருத்துவராக வேலை பார்க்கிறாள். தான் பார்க்கும் மருத்துவர் வேலையைக் காட்டிலும் அவளுக்குப் பிடித்தது குப்பை பொறுக்குவது. பொறுக்கி என்பதில் அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவளுக்குக் கிடைத்த கொழுகொம்பு அது. பள்ளி ஆசிரியர்கள், மருத்துவர்கள், கணக்கர்கள் எனப் பலதுறைகளைச் சார்ந்த தன் நண்பர்களோடு குப்பை பொறுக்குவதில் புணர்ச்சியுச்சம் கொள்வது அவளது வாடிக்கை. விடுப்பு நாட்கள், மாலை நேரங்கள் என்கிற போதெல்லாம் பூங்காங்கள், பெருந்தெருக்கள் முதலான இடங்களுக்குச் சென்று குப்பை பொறுக்கிப் போடுகிறாள். இதற்கென ட்ரேஷ் பிக்கப் கிளப்புகள் இருக்கின்றன. இவற்றின் வாயிலாக நிறையத் தொடர்புகள் கிட்டுகிறது, கும்பலாய்ச் சென்று வெளியில் திரிந்து வருவதில் சுவாரசியம் என்கிறாள் பாருல்.

    தெருவின் கடைக்கோடி வீட்டிலிருக்கும் ஸ்டெஃபனி தனித்து வாழும் தாய். ஒரே மகன் ஜேசன். பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களின் போதான சந்திப்பில் நாங்கள் அறிமுகம் ஆகிக் கொண்டோம். அவளுக்கு காப்பீட்டு நிறுவனமொன்றில் நுகர்வோர் தொடர்பாளர் வேலை. வீட்டைச் சுற்றிலும் சர்க்கரைப்பாகுத் தூக்கிகளை அங்கங்கே வைத்திருக்கிறாள். ஓசனிச் சிட்டுகளுக்கு ஊணூட்டி உயிரூட்டுவது அவளுக்கான பற்றுதல். மரங்களை வளர்த்து, செடிகளுக்கு மராமத்துச் செய்து சூழல்பாதுகாப்புக்கு நல்கும் உழைப்பே அவளுக்கான துணை.

    இடைக்கிடையே ‘ஹம்மிங்பேர்டு’ பட்டறைகளை நடத்தி விழிப்புணர்வு வேலைகளைச் செய்கிறாள். காடுகளுக்குப் போகிறாள். இவளுக்கு தனிப்பட்ட உதவிகள் தேவைப்படும் போதெல்லாம் ஹம்மிங்பேர்டு குமுகத்தினர் வந்து உதவுகிறார்கள். இப்படியானவை மனிதனுக்கும் மனிதனுக்குமான பிணைப்பைக் கொண்டு வந்து விடுகின்றன. உயிர்த்தோம்;இருந்தோம்;மரித்தோம் என்பதை மாற்றி, வாழ்ந்தோம் என்பதற்கான இலக்கணத்தை ஊட்டி விடுகின்றன.

    மென்மையாகப் பேசுவாள் ஸ்டெஃபனி. ஓசனிச்சிட்டுவைப் போலவே இருப்பாள் அவளும். அவள் வீட்டைக் கடந்து வரும் போதெல்லாம் நின்று பார்த்து வருவது தவிர்க்க இயலாதது. நான் எதுவும் செய்வதில்லை. ஓசனியோடு ஓசனியாய் அவளும் இருந்திட மாட்டாளா எனக் கண்கள் தேடுகின்றன. ஓசனியின் சிறகடிப்பு, சிலுசிலுப்பு ஒலிகள், இணுக்குகள் ஒடிந்து விடாதபடிக்கு உட்கார்ந்து தாவிச்செல்லும் பாங்கு முதலானவற்றைத்தான் நான் பார்க்கிறேன். அவ்வளவுதான்!

    குளக்கரைக்கு வரும் போது கூட அவளைப் பார்த்தேன். மண் அள்ளிப் போட்டுச் செடிகளை நட்டுக் கொண்டிருக்கிறாள்.  பெட்டூனியா பூச்செடிகளிருக்கும் பூந்தொட்டியிலிருந்து தவழ்ந்து வரும் ஓசனியின் இளமஞ்சள் இறகொன்று, குனிந்திருக்கும் அவளது பின்னங்கழுத்தினை வருடிக் கொஞ்சியது. தலை நிமிர்ந்து பார்க்கையில் அவள் கண்ணெல்லையில் நான் நிற்கிறேன். ஓசனிச் சிறகடிப்பின் அதிர்வை ஒத்திருந்த அவளது கண்ணிமைகளின் அதிர்வில் அவளையண்டி இருந்த மொனார்டா மலர்கள் நாண, மலரின் கருநீல வண்ணம் வெண்மையேகி நீலமாய் ஒளிர்ந்தது. “ஹாய் மணி” சொன்னவளின் வெண்மணிப் பற்களில் நீலம் பட்டுத் தெறிப்பதைக் கண்டு இளமுறுவல் பூக்கிறேன் நான். இனிமேலும் நான் இங்கு நின்றால் ஓசனிகள் படையெடுத்து வந்து என்னை விரட்டக் கூடும். என் வேலையை நான் பார்க்க வேண்டுமென்கிறபாட்டில் இங்கு வந்து விட்டேன் நான்.

    காலியர்வில் நகராட்சியின் நூலகத்தை ஒட்டினாற்போல இருக்கும் ’ஹால்’ பூங்காவிலிருக்கும் குளக்கரையில்தான் ஓடிக் கொண்டிருக்கிறேன். நாளொரு முறையாவது வந்து குளத்தடியில் ஓட வேண்டும். அப்படிச் செய்யும் போது எனக்கான அந்த நாள் சிறப்புக் கொள்கிறது. மொத்தத்தில் மனமும் வளம் பெறுகிறது. யார் யாருக்கோ என்னவெல்லாமோ இருக்கையில், குளக்கரையே எனக்கான தொடுப்பு.

    அதோ குளத்தின் அந்த மூலையிலிருக்கும் வங்குக்கு நேர் மேலே குத்திட்டிருக்கும் பெரியவருக்கு மீன்பிடிப்பது குதூகலம். சனி, ஞாயிறுகளில் தன் பேரனையும் கூடக் கூட்டி வந்து இன்னோர் இடத்தில் உட்கார வைத்து விடுகிறார். மீனுக்காக மீன் பிடிப்பதில்லை இங்கு யாரும். தூண்டிலில் அகப்பட்ட மீனைக்கூட மீண்டும் குளத்திலேயே விட்டு விடுகிறார்கள்.

    குளக்கரையில் மணிக்கணக்கில் உட்கார்ந்திருக்கிறார்கள். பொறுமையாக உட்கார்ந்திருக்கிறார்கள். மெளனத்தைச் சுவாசித்து சிலையாய் வீற்றிருந்து காலத்தைப் புசிக்கிறார்கள். ’தூண்டிலாளர்கள்’ என்ற பெயரில் நீர்நிலையெங்கும் உலாப் போகிறார்கள். தூண்டில் போட்டு மீன் பிடிக்க தனி உரிமங்கள் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். அலுவலகத்தில் இருக்கும் ’கிடாயன்’ ரோபர்ட் ஜான்சன் ஒரு தூண்டிலான். எப்போது பார்த்தாலும் ஃபிஷ்ஷிங் பற்றியே பினாத்திக் கொண்டிருப்பான். அதற்கென்ற வார, மாத இதழ்களோடு மீன்பிடிப் பெட்டியையும் வெத்தலை பாக்குப் பெட்டி போல கொண்டு திரிவான். அலுவலக அரட்டைகளின் போது, தூண்டிலாளர் குமுகாய அனுபவங்களைத் தின்று ஏப்பம் விடுவான். இரத்த அழுத்தம், மனநோய் போன்றவர்களுக்கு மீன்பிடிப்பு ஒரு நிவாரணம் என்கிறான். தன்னம்பிக்கையை வளர்த்து இணக்கத்தைப் பெருக்கும் என்கிறான். இந்தக் குளத்திலும் எப்போதும் யாராவது மீன்பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மன அமைதியும், வெளியின் இலக்கணமற்ற இசையும், நீர்நிலையின் மணமும் முகில்களின் காற்றுக்கொத்த ஓடுபராக்கும் விலையில்லாப் பண்டமாய்க் கிடைக்கின்றன. அனுபவிப்பவன் பேறு கொண்டவனாகிறான்.

    குளத்தையொட்டி இருக்கும் மரங்களுக்கும் எனக்குமிடையில் நேசம் உண்டு. சென்ற கோடையில் இட்டுச் சென்ற கனடியக் கீசுகளின் முட்டைகள் எல்லாமும் வசந்தகாலக் குஞ்சுகளாய் பூத்திருக்கிறது குளத்தின் கீழ்க்கரையில். வசந்தகால இலை துளிர்ப்புக்கான காத்திருத்தலுடன் குச்சி மரங்களாய் இருக்கும் செரி மரங்களின் நுனிக் கிளைகளில் அமர்ந்து  உச்சி மாநாடு நடத்திக் கொண்டிருக்கின்றன கருந்தாரிச் சிட்டுகள்.

    அந்த வெள்ளைக்காரப் பெண்மணியின் பெயர் எனக்குத் தெரியாது. ஆனால் அவளுடையதன் பெயர் சோமா. அவள் அவனை அப்படித்தான் விளித்து அழைக்கிறாள். வாட்டசாட்டமாய் இருக்கிறான் சோமா. கருமைநிற வெல்வெட்டுத் துணியைப் போர்த்தினாற்போல அவனது மயிர்க்கற்றைகள். அருகிலிருக்கும் வளவு ஒன்றில்தான் வசிக்கிறாள். அவ்வப்போது சோமாவை அழைத்துக் கொண்டு அவளும் வந்து விடுகிறாள் குளக்கரைக்கு.

    ஐந்தாவது மைல் ஓட்டத்தின் துவக்கத்தில்தான்  காட்சியொன்று அங்கே ஈடேறியது. குளத்தின் மடுவிறக்கத்திலிருந்த அந்தப் பெண் மஞ்சள் வண்ணப் பந்தொன்றை ககனமார்க்கத்தினூடாக குளத்துக்குள் விட்டெறிந்தாள். கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த நாயொன்று தரைமார்க்கத்தினூடாக பந்தின் வேகத்துக்கொப்ப இணையாக ஓடி, ஓடி, குளத்தின் நீருக்குள் பாய்ந்து, வேகத்துக்கிணையாகவே நீச்சலடித்து வீரியமிழந்து வீழ்ந்த பந்தினை லபக்கென்று தன் வாயால் கவ்வி எடுத்துக் கொண்டு வந்தது. மீண்டும் பந்தை வீசாமல் கையை மட்டும் தம் திறம் கொண்ட மட்டும் பின்னால் இழுத்து வேகமாய் வீசினாள். பந்து அவளது கையிலேயே இருப்பதைக் கூர்ந்த நாய் ஒரு இம்மி கூட நகரவில்லை. வாலை ஆட்டிக் குழைந்தது.

    பந்தினை வேகமற்ற வேகத்தோடு செங்குத்தாய் வீசி இலாகவாமாய்ப் பிடித்துக் கொண்ட பின்னர், மீண்டும் திறம் கொண்ட மட்டும் கையை வீசி எறிந்தாள். நாய் வாளாமல் அதே இடத்தில் நின்று கொண்டே வாஞ்சையாய் அவளைப் பார்த்தது. பந்தினை இரு உள்ளங்கைகளுக்குள் பிடித்தபடி அதை உருட்டிப் படுத்தினாள் அவள். இவளுக்கென்ன விசர் பிடித்திருக்கிறதா எனும் பாங்கில் அவளை வேடிக்கையாய்ப் பார்த்துக் கொண்டு நின்றது அந்த நாய்.

    பிணையல் முடிந்ததும் இடத்தை விட்டு விறுக்கென்று ஓடி மறையும் பாம்பினது வேகத்தில், பந்தினை விட்டு வீசுவதைப் போலத் தன் வலக்கையை குளத்தை நோக்கி வீசினாள் அவள். நாயும் வானைப் பார்த்துக் கொண்டே குளத்தை நோக்கி ஓடி ‘தபோர்’ என குளத்து நீருக்குள் பாய்ந்து வீழ்ந்தது. பந்து மட்டும் இன்னமும் அவள் கைகளிலேயே இருந்தது. வெற்றிப் பெருமிதத்தில் திளைப்பும் செருக்கும் அவளுக்கு.

    கடைசி வட்ட ஓட்டத்தினை ஓடி நிறைக்கும் நோக்கில் நம் கால்கள் வேகமெடுத்தன. அலைகளின் ஒத்திசைவுக்கொப்ப மதகில் நீர் துள்ளிக் குதித்து கடை போனதைக் கவனித்த விழிகள் வியப்பில் நகைத்துக் கொண்டன. நம்மைப் பார்த்த டென்னசி நீல பூபிப் பறவைகள் விருட்டென மேலெழும்பிப் பறந்து போயின. இனி வீடு நோக்க வேண்டும். அல்லாவிடில் மனைவியென்னும் அதிரூபத்துக்கு முன்னால் வீழ வேண்டி இருக்குமெனக் கருதி கால்கள் ஓட்டத்தினின்று தாழ்ந்தன. மெய்ப்புலங்கள் யாவும் சொக்கு நிலையிலிருந்து திரும்பிக் கொண்டன. அப்போதுதான் கவனித்தேன். இன்னமும் அந்த நாய் குளத்துக்குள்ளேயேதான் இருக்கிறது. பல நேரங்களில் நாய்களும் பாடங்கள் பல கற்பிக்கும்.

    “சோமா, ஐ அம் சாரி. ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மி திஸ் டைம். ஐ வில் நெவர் டு திஸ் டு யூ. இனிமேல் இப்படி செய்யவே மாட்டேன் சோமா. மன்னிச்சிடு. குளத்துக்குள்ள பந்து வீசுற மாதிரி நடிச்சி உன்னை ஏமாத்த மாட்டேன். வெளியில வா. ப்ளீஸ் சோமா!!”, இனி அது எப்போது மனம் இளகி மன்னிப்பு வழங்குமோ தெரியாது.  கீரியைக் கீறுவானேன்? பிராண்டலுக்கு பச்சிலை தேடுவானேன்??

    அறிவியல் கோட்பாடொன்றைக் கண்டு கொண்ட ஆர்க்கிமிடிசு அம்மணமாய்த் தெருவில் ஓடியதைப் போல, எதையோ கண்டு கொண்ட பாவனையில் தாவித் தாவி தப்படி போட்டு ஓடிக் கொண்டிருக்கிறது அது. ஆமாம்!  பூங்காவின் ஓரத்திலிருக்கும் ப்ளாக்பெரிச் செடிகள் அடர்த்தியாய் வளர்ந்து நிற்கும் அந்தப் புதரிலிருந்து ‘விருட்’டென வெளிக்கிட்டு ஓடிக் கொண்டிருக்கிறது பெருமுயலொன்று!!

    Share
  • மனிதன்

    வீட்டு
    மூலையில்
    நூலாம்படையொன்று
    ஒய்யாரமாய்
    ஆடியாடி
    பசப்பிக் கொண்டிருந்தது
    புகலிடம் தருகிறேன்
    வாருங்கள் பூச்சிகளே!
    அருகிற்சென்று
    நோக்குகையில்
    அது சொல்கிறது
    உமக்கு
    இங்கு இடமில்லை
    எம்மிலும் கொடிய
    களங்கிய இனத்தைச்
    சார்ந்தவர் நீர்!!
    சடுதியில்
    காலை விட்டெறிந்து
    இல்லாதொழித்துத்
    திரும்பும்போதுதான்
    வந்து அறைகிறது
    சொன்னது சரியோ?

    Share
  • புவிக் குழந்தைகள்

    குளக்கரையில்
    மஞ்சக்குளித்து
    அந்தி தொலைத்து
    இருள் பூசிக்கொள்ளும்
    குருவிகள் பூத்த
    புவிக் குழந்தைகள்!

     

    Live from Halle Park Lake, Collierville, TN, U.S.A!!
    Share
  • தளிர் உலகில்!

    பழமைபேசி

    யோகா கிளாசுக்கு
    பாரதி நகர் போயிருக்கும்
    அம்மாவுக்குத் தெரியாமல்
    தாத்தாவுக்கு காப்பி
    போட்டுக் கொடுக்கிறாள்
    தாயம்மா பாட்டி!
    அந்த மாமாவிடம்
    இனிமேல் இங்கு
    வர வேண்டாமென்று
    சொல்லி அழும்
    சின்னமணி அக்காவுக்கு
    கன்னத்தில் நல்ல அறை!!
    சாக்கடையில்
    தவறி விழுந்த
    பிரவீணாவுக்கு
    கைகால் கழுவிவிட்ட
    பிச்சைக்காரத் தாத்தாவை
    பிடித்துக் கொண்டு
    போகிறது போலீசு!
    சதர்ன் மில்
    முரளி அண்ணனுக்கு
    ஷிப்ட் மாறினது தெரியாமல்
    மொட்டை மாடிக்குப் போகும்
    மெளலி மாஸ்டர் வீட்டு
    சந்திரகலா அக்கா!
    மேரி மிஸ்ஸுடைய
    செல்போனில் ரீடையல்
    போட்டுப் பார்த்ததில்
    அது எங்க ஸ்கூல் பஸ்
    டிரைவர் அண்ணன்தானாம்
    பிடீ பிரியடில் சொன்னான்
    த்ரீ ஏ தினேஷ் குமார்!
    அம்மாவிடம் சொல்லி
    பெர்மிசன் வாங்க வேண்டும்
    என்னுடைய ஸ்கூல் டே
    பெர்பாமன்சுக்கு ட்ரீட்
    ஓசன் ரெஸ்டாரண்ட்டில்!
    ஆமாம் நான் இன்றைக்கு
    கலைமகள் வித்யாலயா
    பிரைமரி ஸ்கூலில்
    ஒன் சீ படிக்கும் வித்யா!!

    Share
  • ககனமார்க்கம்

    பழமைபேசி

    நீங்கள் நினைப்பது போல அதற்கும் எனக்கும் எந்த வாய்க்காவரப்பும் கிடையாது. அதனோடு தகராறு செய்வதால் எனக்கு என்ன கிடைத்து விடப்போகிறது? ஒன்றும் கிடைக்கப் போவதில்லை.

    ஞாயிற்றுக் கிழமை மாலை ஆகி விட்டால் போதும். நான் எதைச் செய்தாலும் இதைத்தான் காரணம் சொல்வார் என் மனைவி. விடிந்தால் திங்கட்கிழமை என்பதால் நீங்கள் எங்கள் மீது எரிச்சலைக் கொட்டுகிறீர்கள் என்று. உண்மையிலேயே அந்தத் திங்கட்கிழமையோடு எனக்கு எந்தத் தகராறும் இல்லை. வீட்டில் இருப்பவர்கள் மீதும் எந்தவிதமான எரிச்சலும் எனக்கு இல்லை.

    ஆனால் என்ன? அந்தப் பாடாவதி திங்கட்கிழமையன்று, நான்தான் வைகறையையே எழுப்ப வேண்டி இருக்கிறது. ஐந்து மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பி முதல் விமானத்தைப் பிடித்து ககனமேற வேண்டும். மேலாண்மைக் கலந்துரையாடலில் இருக்கிற முக்காலே மூணு வீச மணி நேரமும், தான் மட்டுமே பேசிச் சாவடிக்க வேண்டுமென்பதில் குறியாய் இருப்பான் டேவிட் பங்கி. இதுவும் அந்தக் கடூரமான திங்கட்கிழமையில்தான் நடக்கிறது. அதைத் தொடர்ந்துதான் செவ்வாய், புதன், வியாழன் போன்ற நாட்களும் வந்து தொலைக்கிறது. இந்தத் திங்கட்கிழமைக்கு என் போன்றவர்கள் மீது ஏன் இத்தனை வன்மம்? இதை உங்களிடம் சொல்லாமல் நான் வேறு யாரிடம் சொல்ல முடியும்??

    திங்கட்கிழமைத் திருட்டு யாமத்தில் எழுவதால் என்னைத் திருடன் என்று நானிருக்கும் காலியர்வில்லில் எத்தனை பேர் சொல்லிக் கொண்டு திரிகிறார்களோ தெரியவில்லை. காலை நான்கு மணிக்கு நாய்கள் மட்டுமல்ல, எந்நேரமும் கூகுள் கூட்டலில் இருக்கும் எங்களுடைய பாலா அண்ணன் கூட உறக்கம் கொள்ளும் நேரம். அப்படிப்பட்ட உறக்கத்தையே என்னிடமிருந்து திருடிவிடும் திங்கட்கிழமை திருட்டுத் திங்கட்கிழமைதான். மற்றபடி எனக்கும் திங்கட்கிழமைக்கும் வாய்க்காவரப்பெல்லாம் ஒன்றும் இல்லை.

    காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து கூகுள் பிளஸ்ஸில் யார் மண்டை உருளுகிறது, ஃபேசுபுக்கில் எந்தப் பெண்ணின் படத்துக்கு எத்தனை லைக் விழுந்திருக்கிறது, டுவிட்டரில் எவன் எவனை வம்புக்கு இழுத்திருக்கிறான் போன்றவற்றைப் பார்த்த கையோடு மின்னஞ்சல் மேய்ச்சல் செய்தானது. இழுத்துப் பிடித்துச் சமாளிக்க முடியவில்லை. குளிர்காலம் என்பதால் கூடுதலான அவசரம்.

    வண்டிக்கு அச்சு முறிந்து விட்டால் என்ன செய்வதென்று சேமஅச்சு ஒன்றினைக் கூடவே எடுத்துச் செல்வார்களாம் பண்டைக் காலத்தில். இப்போதும் ஸ்டெப்னி டயர்கள் எடுத்துச் சொல்வது வழக்கத்தில்தான் உள்ளது. அதைப் போல கூடுதலாக ஒரு சேமச்சிறுநீர் வைப்பறை ஒன்றை மனிதனுக்குள்ளும் வைத்திருக்கலாம். முட்டுகிற நேரத்தில் பாவிப்பதற்காய். அவசரத்தில் கதவை மூட மறந்து விட்டேன். குழந்தைகள் யாரும் எழுந்து அலறிவிடக் கூடாது. என்ன எழவு இது? எங்கள் அமுச்சி வீட்டுப் பெரியெருமை பெய்வதெல்லாம் நினைவுக்கு வருகிறது. இனிமேல் ஞாயிற்றுக்கிழமை இரவில் பீர் குடிக்கவே கூடாது.

    விமானம் சரியான நேரத்துக்குக் கிளம்புமா என்பதைச் சரி பார்த்தாகிவிட்டது. குழந்தைகளைப் பார்த்தால் பிரிவின் ஏக்கத்தில் அழுது விட்டால் என்ன செய்வது? பல் துலக்கி, தும்பிக் குளியல் முடித்து, உடுப்புக்கு மேல் உடுப்பு போட்டு வந்தாயிற்று. என்னாவொரு இன்பமடா? அமெரிக்காவின் காற்று நூற்றுக்கு நூறு வாங்கிவிடும். வசந்தத்தின் குழந்தைகள் செரிமரங்கள். செம்பூக்கள் பூத்து மணப்பெண் போலக் குலுங்கி நிற்கின்றன.

    மனையாளின் அணுக்கச் சூட்டினை வீட்டிலேயே வைத்து விட்டு பெருந்தெருவில் இந்நேரத்துக்கு ஏன் இத்தனை பேர் கார்களில் போய்க் கொண்டிருக்கிறார்கள்? என்னைப் போல அவர்களும் திங்கட்கிழமையால் சபிக்கப்பட்டவர்களோ? திருடர்கள் வேறு ஆங்காங்கே கன்னக்கோல் வைக்கிறார்களாம். இதைப் படுவாப் பயல் டேவிட் பங்கியிடம் சொன்னால், முந்தின நாள் இரவே வந்துவிடு என்று சொல்லி, ஞாயிற்றுக் கிழமைக்கும் எனக்குமிடையில் சதி செய்கிறான்.

    மெம்ஃபிசு விமான நிலையப் பணிப் பெண்கள் எறும்புகளின் தாவளத்தில் இருந்து வருகிறார்களா எனக் கேட்டறிய வேண்டும். இந்தக் குளிர்காலத்திலும் விடியலுக்கு முந்தைய யாமத்தில் என்ன சுறுசுறுப்புக் காண்பிக்கிறார்கள். முகமலர்ச்சிக்கென்றே தனிச்சம்பளம் தருவார்களாய் இருக்கும். முசுடுகளைப் பார்த்து விட்டுப் போய் விமானம் ஏறினால் நன்றாக இராது என்பது அவர்களுக்கும் தெரிந்திருக்கிறது.

    பரிசோதக ஆண்களுக்கு மட்டும் காண்டாமிருக வயிறு. பார்க்கப் பாவமாக இருக்கிறது. உள்ளே காற்றை அடைத்து வைத்திருக்கிறார்கள் போலும். அதனால்தான் நாள் முழுதும் அதைச் சுமந்தபடியே நின்று கொண்டிருக்க முடிகிறது அவர்களால். உள்ளே இருக்கும் காற்றைப் பிடுங்கி விட்டால் என்ன? கைவசம் குண்டூசி எதுவும் இல்லை. வேட்டியும் போச்சு. அதையிழுத்துப் புடிக்கிற அரைஞாண் கயிறும் போச்சு. அரைஞாண் கயிறு கட்டி இருந்தாலாவது அதிலொரு காப்பூசி தொங்கும். ஆனால் வீட்டில் நிறையக் காப்பூசி இருக்கின்றன. எதற்கு இவ்வளவு காப்பூசிகள் வைத்திருக்கிறாயெனக் கேட்டால், காப்பூசியென்றால் என்ன என்ற கேள்வி நம்மை அறைகிறது. பின்னூசி என்றதும், ஓ அதுவா? தமிழ்ல சொல்ல வேண்டியதுதானே எனும் ஏகடியம் வேறு. பின்னும் ஊசியும் கலந்து நடுசென்ட்டர் போல ஆகிவிட்டது.

    பரிசோதனையெல்லாம் முடிந்தது. இன்னுமந்த பேய்ப்பறவையின் வயிற்றுக்குள் போவதற்கு அரை மணி நேரம் இருக்கிறது. பெரிதாக எது இருந்தாலும் முன்னொட்டாக பேய் வரும். வலுவான காற்றுக்கு பேய்க் காற்று. பெரும்புடலைக்கு பேய்ப்புடலை. அதென்றா அமெரிக்காக்காரிகளுக்கு மட்டும் பேய்மொலைகளா இருக்குதூ என்பான் திர்றான் என்கிற திருமூர்த்தி. விகாரமாக விரிந்திருக்கும் பெரிய அளவிலான கிணறுக்கு பேய்க்கிணறு. அது வெள்ளந்தி மக்களின் மொழி.

    ஸ்டார்பாக்சு காப்பி குடிக்காமல் நாளைத் துவக்கினால் திருடிக் கொண்டு வந்த ஆட்டை புளியமரத்தடியில் எவனோ அடித்துப் புடிங்கிக் கொண்டு போய்விட்டதைப் போல மனசு சூம்பிக்கிடக்கும். அமெரிக்காவில் பலவிதமான அடிமைகள் உண்டு. அதில் வெகுமுக்கியமானது ஸ்டார்பாக்சு அடிமைகள். எனக்கு முன்னால் ஏற்கனவே ஆறேழு அடிமைகள் வந்து நின்று கொண்டிருக்கிறார்கள்.

    கடலைபொரி தின்று கொண்டு கூரைக்கொட்டாயில் சிலுக்கு டான்ஸும், ஈசல்பொரி தின்று கொண்டு அடைமழையை வேடிக்கை பார்ப்பதும் போலத்தான் ஸ்டார்பாக்சு காப்பியோடு அலைபேசியில் வலைமேய்வதும். இதுக்கு இது என்று எப்படியோ அமைந்துவிடுகின்றன. அவற்றால் வாழ்க்கையும் சுபீட்சமடைகின்றது.

    ககனமேறி விட்டால் வண்ணதாசனின் கவிதைகளையும், நாஞ்சில நாடனின் சிறுகதைகளையும் புசித்துக் கொண்டே போகலாம். வண்ணதாசனின் கவிதைகள் பதநீர், நாஞ்சில் நாடன் சிறுகதைகள் பனங்கற்கண்டு. இரண்டையும் மாறி மாறி உட்கொண்டால் விமான நெடியின் வீச்சில் இருந்து விமோசனம் கிட்டும்.

    ஒவ்வொருவராக உள்ளே நுழைந்து, தட்டுமுட்டு சாமான்களை கிடைத்த பொந்துகளில் திணித்து அமர்ந்தாயிற்று. கச்சைகளும் கட்டியாயிற்று. முதல் வகுப்பு இருக்கையில் அமர்வதில் எப்போதும் இது கைகூடும் நமக்கு. அடுத்து உள்ளே வரும் ககனமேறிகளைப் பார்த்து மனிதமொழி பேசிக் கொள்ளலாம்.

    என்ன ஒரு அழகு? நான்குமாதங்கள்தான் ஆயிற்றாம். கண்களைச் சிமிட்டிச் சிமிட்டிச் சிரிக்கிறான். என்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறதென்றே கவனித்திருக்கவில்லை நான். பார்வைகளால் ஒருவரையொரு நனைத்துக் கொண்டிருந்தோம். விமானம் முப்பத்து ஏழாயிரம் அடிகளைத் தொட்டுவிட்டதாம். நம்மைச் சுமந்து சொல்லும் விமானம் இன்னும் ஒரு மணி பத்து மணித்துளிகளில் சார்லட் நகர மண்ணை முத்தமிடும்  என்கிறாள் விமானப் பணியாளச் சீமாட்டி.

    முன்பக்க திசை நோக்கித் திருப்பி வைத்தாலும் அவன் என்னையே பார்க்கிறான். நான் அவனைப் பற்றி எழுதுவேனென்று அவனுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்குமோ? அல்லையில் நோக்கின் முகில்கள் பல்வேறு உருவங்களில் நடமாடிக் கொண்டிருக்கின்றன. அந்த உருக்களுக்கு இன்ன உருவம் பொருந்துமெனப் பார்த்துப் பொருத்துவது எனக்கு வாடிக்கை.

    ”ஐயா தாங்கள் என்ன குடிக்கிறீர்கள்?”, கேட்கிறாள் சீமாட்டி. ”கிரேன் பெரி ஜூஸ்!” என்றேன். உங்களுக்கு பணிவிடை செய்வதில் மகிழ்ச்சி என்கிறாள். இவள் நல்லவள். இனிமையாய்ப் பேசுகிறாள். நாளின் துவக்கம் என்பதால் புத்துணர்வோடு இருக்கிறாள். திடுமென வந்தது அறிவிப்பு.

    பொன்னமராவதி நடுகற்கள் வானப்பரணில் அணிவகுத்து அமர்ந்திருக்கின்றன. பணியாளச் சீமாட்டிகள் அங்குமிங்கும் ஓடி வந்து கொண்டிருக்கின்றனர். சொக்கறைப் பையன் கன்னத்தில் குழிவிழ என்னையே பார்க்கிறான். சிரிக்கிறான். அம்மாவின் தலை கவிழ்ந்திருந்தது. இறைவனை இறைஞ்சிக் கொண்டிருக்கிறாள்.

    மூன்றாவது வரிசையில் இருக்கும் நான் ஐந்தாவது வரிசையைத் திரும்பிப் பார்க்கிறேன். நான்கைந்து பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். அனைவருமே மருத்துவர்கள். ஒரு மலரை நோக்கி ஐந்தாறு வண்டுகள் வந்தன. சிறு இறகுகள் செல்லமாய்ப் படபடக்கக் கண்களாலேயே பேசிக் கொண்டன அவையாவும். மலரின் கட்டுப்பாட்டினை ஒன்று தனக்குள் கொண்டுவர, மற்றன எல்லாமும் தத்தம் திசையில் பறந்து மறைந்தன சுவடு தெரியாதபடிக்கு.

    பணியாளச் சீமாட்டியவள் ஓரடிப் பீர்க்கங்காய் போன்ற ஆக்சிஜன் கலத்தைக் கொணர்ந்து கொடுத்தாள். மற்றவள் ஓடிச்சென்று முதலுதவிப் பையினைத் தூக்கி வந்தாள். எஞ்சிய பயணியர் அனைவரும் தத்தம் தலை கவிழ்ந்திருக்க, ஆழ்ந்த தவத்தில் சயனித்திருந்தனர். கண்களால் கூடப் பேசிக் கொள்ளவில்லை யாரும். என்னையும் என்னைத் தொடர்ந்து கவனித்துச் சிரிக்கும் ஐந்து வயதுப் பையனையும் தவிர.

    நனைந்த துணியைக் கேட்டார் மருத்துவர். நெஞ்சினைத் தடவிக் கொடுத்துக் கொண்டே நெஞ்சுத்துடிப்பு, இரத்தழுத்தம் முதலானவற்றைக் கவனித்து குறித்துக் கொண்டிருந்தார். விமானம் மீண்டும் மெம்ஃபிசுக்கே திருப்பி விடப்பட்டிருப்பதாக விமானச்சாரதி அறிவிப்புச் செய்தார்.

    விமானத்தில் இருந்த நடுகற்கள் நடுகற்களாகவே இருந்தன. கிஞ்சித்தும் அசையவில்லை எதுவும். ஒவ்வொரு மனத்துள்ளும் ஒரே ஒரு வேண்டுதல்தான் ஓதப்பட்டுக் கொண்டிருந்தது. எல்லோரது முகமும் சிவந்து கொண்டிருந்தது தொடுவானத்துக் கதிரவன் போல.

    கீழே பார்க்கிறேன். தரை மார்க்கம் கண்களின் எல்லைக்குள் வந்து விட்டது. இது வரையிலும் எந்தவொரு சலனமுமின்றிச் சுற்றுமுற்றும் கவனித்துக் கொண்டிருந்த எனக்கு, இப்போது நெஞ்சு கனத்துப் படபடப்புக் கூடி வருகிறது. மீண்டும் ஐந்தாம் எண் வரிசையில் வலது புற இருக்கைகளைக் கவனிக்கிறேன். மருத்துவரின் கைகளுக்குள் மாந்தனா? மாந்தக் கூடா?? ஒன்றும் தெரியவில்லை.

    அந்தக் குழந்தைகூட அழாமல் ஆழ்ந்ததொரு அமைதியைத் தன்மேலும் பூசிக் கொண்டிருக்கிறது. கண்களை மூடி அமர்ந்திருக்கிறேன். விமானம் தரையைத் தொடுவதை உணர்கிறேன். கண்கள் விழித்து வெளியில் பார்க்கிறது என் உத்தரவுவெதும் இல்லாமலேயே.

    மூன்று தீயணைப்பு வண்டிகள்; நான்கைந்து மருத்துவ விரைவூர்திகள். சிவப்பு, மஞ்சள் ஒளிக்கீற்றுகளைப் பெருவாரியாக உமிழ்ந்து கொண்டிருக்கிறது. விமானம் படிப்படியான வேகக் குறைப்புடன் தரிப்பிடம் வந்து சேர்ந்து விட்டது. நடுகற்களாய் அமர்ந்திருக்கும் பயணியர் யாவரும், நடுகற்களாகவே தொடர்ந்து தம்மை இருத்திக் கொண்டிருக்கிறார்கள். நான் மட்டும் இங்குமங்கும் சிரமாடி விழிகளசைத்துக் கண்டு கொண்டிருக்கிறேன். கதவு திறக்கப்பட்டதுதான் தெரியும். திரும்பிப் பார்க்கிறேன் ஐந்தாம் எண் வரிசையில் யாருமே இல்லை. நடுகற்கள் உயிர் பெற்றுக் கொண்டிருந்தன. பணியாளச் சீமாட்டி முதன் முறையாகப் பேசினார். “கழிப்பறைக்குச் செல்வோர்; எழுந்து நிற்க விருப்பப்படுவோர் அவ்வண்ணமே செய்யலாம். நீங்கள் அனைவரும் மிகவும் உன்னதமானவர்கள். நன்றி!”, என்றார். நான்குமாதச் சிறுவன் என்னைப் பார்த்துச் சிரிக்கிறான்.

    பேணிய மருத்துவரும் மற்ற மருத்துவர்களும் அளவளாவுகிறார்கள். உயிர்பெற்ற நடுகற்கள் ஒன்றோடொன்று பேசிக்கொண்டன.

    ஒருவரை ஏற்றிச் செல்ல, எதற்காக மூன்று தீயணைப்பு வண்டிகள்? எதற்காக நான்கு மருத்துவ விரைவூர்திகள் வர வேண்டும்? ஆபத்துக்கான சமிக்கை ஒன்றுக்கு மேற்பட்ட முனையங்களுக்கு உடனே தெரிவிக்கப்படும். அந்த இடத்துக்கு அருகில் இருக்கிற இரண்டு அல்லது மூன்று இடங்களிலிருந்து இவ்வண்டிகள் உடனே அனுப்பப்படுவது வழக்கப்பாடு. ஏதாவது ஒரு வழியில் வந்து சேர வேண்டியது வரவில்லையென்றாலும் மற்றது வந்து சேர்ந்துவிடும் என்பதற்காக.

    நெஞ்சுத் துடிப்பை வைத்துப் பார்க்கும் போது தான் எந்த முடிவுக்கும் வர இயலாது எனச் சொல்லிவிட்டார் மருத்துவர். பணியாளச் சீமாட்டிக்கும் நம்பிக்கையானது முகக்குறிப்பில் இடம் பெறவில்லை.

    தத்தமது அடுத்த விமானங்களை யாரும் பிடித்துச் சென்று சேர்வதென்பது முடியாத காரியம். ஏற்கனவே இரண்டு மணி நேரம் காலத்தாழ்ச்சியாகி விட்டிருந்தது. எனினும் யாரும் ஏமாற்றத்தையோ, விரக்தியையோ காண்பித்துக் கொண்டிருக்கவில்லை. சோகம் அனைவரையும் உலுக்கி விட்டிருந்தது.

    மீண்டும் விமானம் புறப்பட்டு வானேறியது. எல்லோரது மனத்திலும் அந்த மனிதனுக்கு என்னாயிற்றோ எனும் கவலைதான். வழக்கமாக விமானத்துக்குள் இருக்கும் சூழலை, அந்த விமானம் அன்றைக்குத் துப்புரவாக இழந்திருந்தது. பதநீரும் கற்கண்டும் பதம் பார்க்கப்படாமல் வெறுமன கிடந்தது. ஐந்தாவது வரிசையில் இருக்கும்  5F இருக்கையை அண்டியிருப்பவர்கள் எல்லோரும் சபித்துச் சபித்துப் பார்த்ததில் ஆடை இழந்து அம்மணமாய்த் தெரிகிறது. ”நீயும் ஏன் என்னை அடிக்கடி திரும்பிப் பார்க்கிறாய்?” என்று கேட்டு அழுகிறது  சக பயணியின் வெற்றிடமான அந்த அம்மண இருக்கை.

    நூற்று ஐந்து பேருடைய பயணத்தில் காலதாமதம். அன்றைய அலுவல் பாதிப்பு. விமானத்தின் அடுத்தடுத்த வழித்தடங்கல்களிலும் இதனால் பாதிப்பு. கனெக்ட்டிங் பிளைட்டுகளையும் பாதிக்கும். எப்படிப் பார்த்தாலும் பாதிப்பின் மதிப்பு நூறாயிரம் டாலர்களுக்கும் அதிகமாகலாம். யாரும் அதைப் பற்றிச் சிந்திப்பதாகத் தெரியவில்லை.

    நான் உடனே இன்றைய எனது அலுவல் பாதிப்புக்குள்ளாகுமென எனது நிறுவனத்திற்கு அறிவுறுத்தினேன். “நீயும், உன்னை அண்டி இருப்பவர்களது பாதுகாப்புத்தான் முக்கியம். அதற்குத்தான் முன்னுரிமை!” எனும் மறுமொழி உடனே வந்து சேர்ந்தது.

    விமானம் சார்லட்டையும் வந்தடைந்து மண்ணைத் தொடப் போகிறது. விமானப் பணியாளச் சீமாட்டிகள், இழவு வீட்டுப் பணியாளர்கள் போல இருந்தார்கள்.  நாம் சார்லட் நகரை வந்தடையப் போகிறோம் என்று தொய்ந்த குரலில் அறிவிப்புச் செய்கிறாள் அவள்.

    விமானச் சக்கரங்களின் ’டடக்ச்’ ஒலி கேட்கிறது. யாரோ விசும்பி அழும் ஒலியினால் பின்னிருக்கைகளிலிருந்து சன்னமான சத்தம் வருகிறது. விமான ஓட்டி அறிவிப்புச் செய்கிறார், “ஐ காட் எ மெசேஜ் ஃபிரம் யு.எஸ் ஏர்வேஸ்; எதிர்பாராத விதமாக நமது பயணத்திலிருந்து பிரிந்து சென்று போனவரது உடல்நிலை கட்டுப்பாட்டுக்குள் வந்து, சீரான நிலையில் இருக்கிறார்!:.

    நடுகற்கள் யாவும் புத்துயிர் பெற்று ஒத்த குரலில் கூவின, “ஹே… யு காய்ஸ் ஆவ்சம்யா! சீயர்ஸ்!!”. முன்பக்கம் இருந்த பணியாளச்சீமாட்டி கூவுகிறாள், “யு மேட் மை டே. காட் ப்ளஸ் அமெரிக்கா!”. ஒருவருக்கொருவர் வாழ்த்துச் சொல்லிக் கொள்கிறார்கள். மருத்துவருக்குப் புளகாங்கிதம்.

    வெளியே வந்து விமான முனையத்தில் பார்த்தால் எங்கும் மக்கள் வெள்ளம். அங்குமிங்குமாக ஓடிச் சென்று தத்தமது அடுத்த விமானங்களுக்கு ஏகியபடி இருந்தனர். நாங்கள் வந்த விமானத்திலிருந்து வெளியேறியவர்களும் ஒவ்வொருவராகக் கூட்டத்தில் கரைந்து கொண்டிருக்கிறார்கள். “ஏதாகிலும் துயர் நேரிடின், இந்த தேசத்து மக்களின் உள்ளார்ந்த பேணுகை எனக்கும் உண்டல்லோ?”, வானுயர்ந்த நம்பிக்கைப் பேரொளியில் கரைந்து போகிறேன் நான்!!

     

    Share
  • முத்தம்

    பழமைபேசி

    இது என்றாவது நிகழ்கிற சந்திர கிரகணமோ சூரிய கிரகணமோ அன்று. நியூயார்க் பங்குச்சந்தை திறவுபடுகிற நாட்கள், திறவுபடாத நாட்கள், அமெரிக்க டாலருக்கும் தங்கத்துக்கும் ஒட்டு உறவு இருக்கிறதாக நினைத்துக் கொள்கிற நாட்கள், நினைக்காத நாட்கள் என அனைத்து நாட்களிலும் நடைபெறுகிற உவப்புகால பூசையிது. உடனடியாக குளத்திற்குப் போக வேண்டும் போல இருக்கிறது எனக்கு.

    சிந்தைக்கெட்டிய முதல் முத்தமாரி அதுதான். இரு கன்னங்களிலும் அடுத்தடுத்து மாற்றி மாற்றித் தொடர்ந்து முத்தங்கள் கொடுத்துக் கொஞ்சி நனைத்தவள் என் சின்னம்மா. அந்த நாள் தொட்டு, என்னை இடைவிடாமல் துரத்திக் கொண்டே இருக்கிறது முத்தம்.

    காத்து கறுப்பு அண்டிவிட்டதென்று சின்னம்மாவுக்குக் கல்யாணம் செய்து வைக்காமலே விட்டு விட்டார்கள். வீட்டில், ஊரில், எல்லாருக்கும் அவளைக் கண்டால் வேடிக்கை. அம்மா சாயலை ஒத்திருக்கும் சின்னம்மாவுக்கும் அம்மாவுக்குமான வித்தியாசம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. சின்னம்மாவுக்கும் அது வசதியாய்ப் போயிற்று. இடுப்பில் வைத்துக் கொண்டு எங்கும் கிளம்பி விடுவாள். அடிக்கடி கொஞ்சி முத்தமிட்டு அணைத்துக் கொள்வாள். அள்ளியள்ளிக் கொடுத்தவள் தனக்கொரு போதும் கேட்டு வாங்கிப் பெற்றதாக எனக்கு நினைவில்லை. அந்நினைவுகள் அறிவுப்புலத்தில் வாசம் கொள்ளத் துவங்கிய நாளிலிருந்து என்னை ஆண்டு வருகிறது முத்தமாரி.

    அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு எதுவும் நிகழாத இனிய இந்நாளில், முத்தக் கச்சேரி இடம்பெறுகிறது எங்கள் அலுவலக நண்பர்களிடத்திலும். அதற்குக் காரணம் குதிரைவால் டீனா. முகபாவங்களுக்கொப்ப நர்த்தனம் மேற்கொள்ளும் அந்த குதிரைவால் சடை. எங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் தரக்கட்டுப்பாட்டு மேலாளர் அவள். வாய்த்துடுக்கும் விம்மித்திமில்கிற குயமிரண்டும் உடையவள். சிரித்து மாளும் அவளுக்கு ஒரே ஒரு கணவன், மைக் ஜெஃப்பர்சன்.  ஃபெட்எக்ஸ் கூரியர் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அவனுக்கு வேலை. அன்றாடம் அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் டீனாவை எங்கள் அலுவலக வாயிலில் இறக்கி விட்டுப் போவான். போகிறவன் சும்மா போக மாட்டான். மனங்குழையும் காட்சியொன்றை எங்களுக்கு ஊட்டிவிட்டுப் போவானவன். இன்றைக்கு அது நிகழாமற்போனதுதான் முத்தம் குறித்தான எங்களது அரட்டைக் கச்சேரிக்கான வித்தாகும்.

    நண்பகல் பசியாற்றுகைக்கு மெக்சிகன் உணவகமொன்றுக்குப் போவதெனத் தெரிவானது. அதன்படியே குதிரைவால் டீனாவும் நாங்களும் குடோபா துரித உணவகத்துக்குப் போய்ச் சேர்கிறோம். மோவாய் உச்சிநோக்க, கண்ணிமைகள் சரிந்திருக்க அவள் சிரித்துக் கொண்டிருக்கிற தருணமொன்றில், அவளது பெருமானங்களைக் களவாய்க் கண்டு இரசிக்கிறான் தொப்பை தீபக். அப்படியே நேக்காய்ச் சந்தில் சிந்துவும் பாடுகிறான்.

    “”என்ன டீனா? காட்சி எதுவும் எங்க கண்களுக்கு சிக்கலையே இன்னைக்கு??”, வாகாய் வீசியெறிகிறான் தூண்டிலை.

    “ஏய், காய்ஸ்? அதெல்லாமா பார்த்திட்டு இருக்கீங்க?? மைக்கேலுக்கும் எனக்கும் சும்மா ஒரு சின்ன ஊடல். அவன் ஃபேசுபுக்ல என்னோட தங்கச்சிகூட எதோ வறுத்துகிட்டு இருந்தான். அதான் சும்மா தொங்கல்ல விட்டிருக்கேன்!!”, மீண்டும் மோவாயை உயர்த்திச் சிரித்தாளவள். இம்முறை தொப்பை தீபக்கோடு சேர்ந்து நாங்களும் கண்ட பேறு கொண்டோம். அது படைக்கப்பட்ட படைப்பினுடைய வெற்றியேயன்றி காமனின் சிருங்காரக் குறும்பல்ல.

    அமெரிக்காவில் அப்படித்தான். அவ்வப்போது முத்தப்பரிமாற்றம் நிகழ்ந்தாக வேண்டும். அல்லாவிடில் அவனுக்கு வேறொருவளுடன் தொடுப்போவென மனம் கிலேசங்கொள்ளும் அவளுக்கு. முத்தம் கொடுத்து அண்டியிருக்காவிடில் தொடுப்பு தூர்ந்து அந்தோவெனப் போய்விடுவாளோ என்கிற அச்சம் ஆடவனுக்கு. இப்படியாகத்தான் அடிக்கடி ஐலவ்யூ சொல்லிக் கொள்வதும் இச்சு கொடுத்துக் கொள்வதும் ஆங்காங்கே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. நாம் சொல்லிக்கொள்கிற இந்த மணித்துளியிலே கூட ஆயிரமாயிரம் இச்சுகள் பிறந்திருக்கும். சம்பிரதாயச் சடங்குகளாய் சிலபல ஆயிரங்களும், உள்ளபடியே மனத்தின் ஆழத்தில் இருந்து சிலபல ஆயிரங்களுமாக ஐலவ்யூக்கள் உதிர்ந்திருக்கும். ஹனி தடவப்பட்ட அம்புகளுக்குக் கூடுதல் வீரியம் உண்டு.

    போட்டு வாங்கி நூதனம் கறப்பதில் யோகாசன கார்ப்பரேட் குருக்களை எல்லாம் மிஞ்சக்கூடியவன் தொப்பை தீபக். அதனாலேயே அவன் எங்கள் நிறுவனத்தினுடைய விற்பனைப் பிரிவின் இயக்குநராய் கோலோச்சுகிறான். முத்தக்கச்சேரியில் முதல் கறவையை நடத்திக் கொண்டிருப்பவனும் அவனே. நாகரிகமாயும் படிப்படியாயும் அடி மேல் அடி வைத்துக் கொண்டிருக்கிறான். அதை இரசித்தபடியே கச்சேரியில் முனைப்பாய் தன்னையும் இணைத்துக் கொள்கிறாள் டீனா.

    காலையில் எழும்பும் போதே முத்தம் கொடுத்துவிட்டுத்தான் எழுவான் மைக்கேல். கண் விழித்த கணம் முதல் அலுவலகம் வந்து சேரும் வரையிலுமாக நான்கைந்து இச்சுகள். காரை விட்டு இறங்கும் போது ஒரு இச்சும் ஐலவ்யூக் கொஞ்சகமும். பிற்பாடு மாலையில் திரும்ப வந்து ஏற்றிச் செல்வதற்குமான இடைப்பட்ட நாழிகைகளில் அலைபேசியினூடாக நான்கைந்து. மஞ்சத்தில் நடப்பனவற்றை இக்கணக்கில் சேர்த்த விரும்பவில்லை எனச் சொல்லிவிட்டாள் மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்டு. அத்தோடு அவர்கள் வீட்டுச் செல்ல நாய்க்கு மைக்கேல் கொடுக்கும் முத்தங்களும் வர்ணிக்கப்பட்டன. தூய்மைச் சிநேகத்தின் தூதுவர்கள் நாய்கள்.

    இளம்பிராயத்தின் போழ்து வகுப்புத் தோழன் ஒருவனிடத்தில் எல்லாமும் ஈந்திருக்கிறாள். அக்காலகட்டத்தில் இடம் பெற்ற இச்சுகள்தான் துவக்ககால இச்சுகள். மழலைப்பருவத்தில் அம்மாவோ அப்பாவோ அவ்வளவாய் அணுக்கம் காட்டியிருக்கவில்லை. பாட்டிதான் எல்லாமும். ஆனாலும் பாட்டியின் முத்தங்கள் அரிதினும் அரிதாய் பிறந்த நாள் அன்று மட்டுமே. அவளுடைய  முத்தகளத்தின் வளம் என்பது மைக்கேல் ஒருவனின் துணை கொண்டு மட்டுமே கட்டியெழுப்பப்பட்ட ஒன்று.

    முத்தக்கச்சேரியில் அடுத்த ஆலாபனை நிகழ்த்தியவன் பிரையன் வோஷ்னி. ஏற்கனவே இரண்டு துணைகளோடு காதல்வீணையை மீட்டி மணமுறிவு பெற்று, தற்போது மணமெதுவும் முடிக்காமல் தாம்பத்தியப் பேரரசுக்கு ஈடு கொடுத்து வருகிறான். பஞ்சணை இச்சுகளைக் கொண்டு மட்டுமே இணையாளை ஆண்டு வருகிறான். வசியப்படுத்துவதில் கில்லாடி. காமவனக் கதைகள் எவ்வளவும் எழுதலாம். கிடைகொள்ளாமல் நெளியும் குதிரைவால் டீனாவைப் பார்த்து மனம் இளகி, ஆலாபனையைச் சுருக்கமாகவே முடித்துக் கொண்டான் சிநேக முத்தமலடு கொண்டவன்.

    ஒடிசலாய்த் தலையை வைத்துக்கொண்டு என்னைப் பார்த்தான் தொப்பை தீபக். அவனை டீனா இடைமறித்துச் கேட்கிறாள், “ஏய், நீர் சொல்லுமய்யா! சும்மா எங்களை மட்டும் துவையல் கல்லுல துடைச்சி எடுக்குற மாதிரி வளிச்சு வளிச்சு எடுத்தியே?”.

    நன்றாகப் பேசுவான் தொப்பை. அடிக்கிற காற்றில் இருந்தே வெண்ணெய் எடுக்கக் கூடியவன். மிசிசிப்பி ஆற்றில் ஓடுவதெல்லாம் மின்னசோட்டாக் கால்நடைகளின் உச்சாதான் என மெய்ப்பிக்கும்படியான தந்திரச்செப்புகை கூட கைகூடி வரும் அவனுக்கு.

    பாலகனாய் இருந்த நாட்களில் அம்மா அப்பாவின் வழமையான முத்தங்கள் அவனுக்கும் கிடைத்திருக்கிறது. சிறுவயதிலேயே வணிகச்சிந்தனை ஆட்கொண்டுவிட்டதால் மெல்லுணர்வுகளுக்கு அவ்வளவாக ஆட்பட்டிருக்கவில்லையவன். காதல் உணர்வு என்பதே கூட அரிதாய்த்தான் மேலெழுந்திருக்கிறது. கல்யாணமும் பெற்றோர் பார்த்து வைத்த உறவுக்காரப் பெண்ணோடுதான்.

    தொப்பை தீபக்கின் மனைவி ஜெயஸ்ரீ. அலுவலக நிகழ்ச்சிகளின் வாயிலாக ஜெயஸ்ரீயை எங்களுக்கும் தெரியும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிந்துணர்வு உண்டு. ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அக்கறையின்பால் நிகழும் இச்சுகள்தான் பெரும்பாலும். அதுவும் என்றாவது ஒருமுறைதான். துயரம், சோகம், துக்கம் முதலானவற்றின் போது அவள் அழுகையைக் கட்டுப்படுத்த இவன் பாவிப்பது முத்தங்களைத்தான். இவனும் இச்சைப் பொழுதில் எழுவனவற்றை முத்தக்கணக்கில் சேர்த்த விரும்பவில்லை.

    கிரங்கிய கண்களோடு என்னைப் பார்க்கிறாள் டீனா. எந்த ஹார்மோன் சுரந்து என்ன விளையாட்டு விளையாடுகிறதோ அவளுக்குள்? தொப்பை தீபக்கும், பிரையன் வோஷ்னியும் என்னைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்.   சாலையோரத்தில் நின்று போலீசுகாரரிடம் தண்டச்சீட்டு பெற்றுக் கொண்டிருக்கும் அகப்பட்ட வாகன ஓட்டியைப் பார்ப்பதைப் போலப் பார்த்தார்கள் என்னை.

    கச்சேரியில் என்னுடைய ஆலாபனைக்கான நேரம். எழில் சிந்தும் அழகுப் பெட்டகமாய் என் முன்னால் அமர்ந்திருக்கும் டீனாதான் எனக்கிருக்கும் ஒரே இடைஞ்சல்.

    நெளிகிறாள். சிரிக்கிறாள். சாய்த்த செவிகளில் உள்வாங்கி கண்களால் கொப்புளிக்கிறாள் தான் சுவையோடு நுகர்வதாய்ச் சொல்லும் உளக்குறிப்பை. குதிரைவால் சிலுப்பிச் சிலுப்பி ஆடுகிறது. ஒருசோட்டு பப்பாளிகளிரண்டும் அவ்வப்போது என் கண்களைச் சுண்டுகிறது. ஆனாலும், முத்தம் என்பதன் மீதான தாக்கம் எனது கச்சேரியைச் செவ்வனே செலுத்திக் கொண்டுதான் இருக்கிறது.

    உதடுகளால் செய்கிற செய்கையெல்லாமே முத்தம் ஆகிவிடுமா? மாந்த நேயம் அற்ற பதர்கள் இதிலும் கலப்படம் செய்து தொலைத்து விட்டார்கள். அவர்களுள் முதலாவதாகக் காமனைத்தான் நான் சுட்டுவேன்.

    நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது நான்தான் வகுப்புக்கு சட்டாம்பிள்ளை. சட்டாம்பிள்ளைக்கென்று சில சிறப்புகள் உண்டு. ஆசிரியர்களின் செல்லப் பிள்ளையாக இருப்பதும் அதில் ஒன்று. சத்துணவு டீச்சர் என்னைத்தான் எதற்கும் நாடுவார்கள். டீச்சர் என்பதில் ஒரு முரண் உண்டு. ஆனால் கிராமத்தான்கள் நாங்கள் சொல்வதுதான் வெல்லும். வெல்ல வேண்டும்.

    பள்ளியில் ஆண் ஆசிரியர்களை வாத்தியார் என்போம். பெண் ஆசிரியர்களை டீச்சர் என்போம். நகரத்து ஆங்கிலப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நிர்மல் எங்களைப் பார்த்து கேலி செய்தான். ”டீச்சரும், வாத்தியாரும் ஒன்னுதானடா?”, கெக்கலித்தான். “டீச்சருக்கும் வாத்தியாருக்கும் வித்தியாசமே தெரீல இவனுக்கு? டவுன் பள்ளிக்கூடத்துல படிக்கறானாமா இவன்??”, ஒட்டுமொத்தமாய் நாங்கள் சொல்லிச் சிரித்ததில் அழுது கொண்டே போனவன் வெகுநாட்களுக்கு எங்களுடன் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளவில்லை.

    சத்துணவு ஆயா என்பார்கள். ஆனால் எங்களுக்கு சத்துணவு டீச்சர்தான் அந்த சிவகாமி அக்கா. பக்கத்திலிருந்து அடுப்புக் கூட்டுவதற்கு என்னைத்தான் கூப்பிடுவார்கள். பெரிய காவுமொடாவில்தான் சோறுக்கு உலை வைத்து அரிசி போடும் சிவகாமி அக்கா. நான் பக்கத்திலிருந்து விறகுகளை உள்ளே தள்ளி, ஊதி விட்டு சமேதரம் பார்ப்பேன். முதலில் தொளக்புளக் சத்தம் வரும். பிற்பாடு சத்தம் மங்கி, மொடாவில் முக்கால் அளவில் தண்ணி அடங்கி நிற்கும். தண்ணியைத் தன்னுள் வாங்கி அரிசிப் பருக்கைகள் மகிழத் துவங்கும். ஒவ்வொரு பருக்கையும் மகிழ மகிழ அளவில் அது பெரிதாகிக் கொண்டே வரும். சரியாக நெகமம் பஸ் மேற்கே போகும் போது காவுமொடாப் பொங்கி, மூடியிருக்கும் தட்டினைப் புறந்தள்ளியபடி சோறு வெளித்தள்ளிக் கொண்டு இருக்கும்.

    சிநேக பாவங்களுக்காய் மாந்தன் மனம் மகிழ்ந்து வரும். உள்ளம் கனிந்து, பின் உணர்வு மகிழ்ந்து மேலெழும்பிக் கொண்டே வந்து செவ்வாம்பல் இதழ்களில் முத்துகள் தெறிக்கும். அத்தகு முத்தங்களைக் கொடுக்கவும் பெறவும் ஆசைப்பட்டுப் பித்தனானேன் நான்.

    உளம் கனிந்து மனம் மகிழாமல் கொடுக்கிற, கொடுக்கப்படுகிற எதுவும் வெறும் இச்சு மட்டுமே. நீர்க்குமிழி போல வெறுமனே பெரிதாகி வெடித்துச் சிதறும் ஒலிக்கூளமது.

    இச்சைக்காகவும் கிளர்ச்சிக்காகவும் இடம் பெறுவன முத்தங்களா? அவை சும்பனங்கள். ”சும்பனத்துக்கடங்காத கொம்பன் எவன்டா நாட்டுல?” என்று எக்காளமிடுவார்கள் நாட்டுப்புறத்தில். கொங்கையை வெடிக்கப் பிடிக்கக் கொடுத்திதழ் கொடுப்பர். கூடவே சும்பனமும் உகப்பர் பரத்தையர் என்று கூட எழுதி வைத்திருக்கிறார்கள்.

    டீனாவுக்கு இவையெல்லாமே புதிதாய் இருந்தன. முத்தமலட்டிலிருந்து விடுபட்டுக் கொண்டிருந்தான் பிரையன் வோஷ்னி. எங்க ஊர் நாட்டாமை சோமலிங்கத்தின் கைத்தடி நாகசாமியைப் போலவே, சொன்னதற்கெல்லாம் தலையைத் தலையை ஆட்டிக் கொண்டிருந்தான் தொப்பை தீபக். “வாட் மேன், வாட் டு யு திங்க்?”, தொப்பையின் தொடையைத் தட்டினாள் டீனா தனக்கேயுரிய ஏகடியச் சிரிப்போடு. தொப்பை நெளிந்து நாணுகிறான்.

    கலப்படமேதுமின்றி சிப்பிக்குள்ளிருந்து கிடைப்பது முத்து. முத்தமற்ற இதழ்கள் வெறும் கிளிஞ்சல்கள்.

    சின்னம்மாவின் அன்பு முத்தங்கள் அகாலத்தில் நின்று போனது எனக்கு. என் அப்பாவுக்கும் தாய்மாமான் ஒருவருக்கும் நேர்ந்த பிணக்கில், என் பாட்டி வீட்டிலிருந்து எங்கள் ஊருக்கே கொண்டு வரப்பட்டேன். ஆனால் எனக்கான முத்தங்கள் நின்று விடவில்லை.

    வீட்டில் கடைப்பிள்ளை என்பதால் நான் அப்பா செல்லம். வீட்டில் இருக்கும் போதெல்லாம் என்னைக் கொஞ்சிக் கொண்டேயிருப்பார் அப்பா. “முலுவா, முலுவா” என்று விளித்துக் கொஞ்சுவார்.

    “முலுவா, எனக்கொரு முத்தங்குடு பாக்கலாம். டேய், ஒன்னு குடுறா!”, கெஞ்ச விட்டுக் கொடுப்பேன் நானும். அவர் கொடுக்க எத்தனிக்கும் போதெல்லாம், “பீடி நாத்தம், பீடி நாத்தம்” எனச் சொல்லி போக்குக் காட்டி மகிழ்வேன்.

    ஏழாம் வகுப்பு படிக்கத் துவங்கிய நாட்களில் படிப்படியாக அவருடைய நின்று போனது. ஆனால், கடவுள் மறுபக்கக் கதவுகள் பலவற்றைத் திறந்து வைத்தார் எனக்காக. என் அம்மாவின் மற்றொரு தங்கையின் வழியாக தம்பி தங்கைகள் அடுத்தடுத்து எனக்குக் கிடைத்தார்கள். முத்தமிட்டுக் கொஞ்சி மகிழ்வேன். அவர்களும் எனக்கு வேண்டிய முட்டும் கொடுப்பார்கள்.

    சின்னம்மாவின் குழந்தைகளில் சின்னவனுக்குக் கன்னத்தில் குழி விழும். அதைப் பார்க்கும் போதெல்லாம் மனம் உவந்து வரும். அப்போதிருந்து கன்னத்தில் குழிவிழச் சிரிக்கும்படியாக யாரைப் பார்த்தாலும் எனக்கு சிநேகம் சுரக்கும். முத்தங்கள் கொடுக்கத் தோன்றும். அதனால்தானோ என்னவோ, கன்னக்குழிக்கு சொக்கறை என்ற மற்றொரு பெயரும் உண்டு. எப்பேர்ப்பட்ட சிநேக மலட்டுக்காரரையும் சொக்க வைக்கும் அது.

    கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் போது பக்கத்து வீட்டில் ஒரு சின்ன வாண்டு இருந்தது. சொக்கறை கொண்ட வாண்டு அது. எந்நேரமும் என்னுடன்தான் விளையாடித் திரியும். அதுக்கு நான் கொடுப்பேன் முத்தங்கள். அதுவும் எனக்கு வஞ்சனையில்லாமல் கொடுத்துச் சிரிக்கும். எங்களுக்குள்ளான அணியம் அந்த ஊரிலிருந்தே என்னை அந்நியனாக்கியது.

    இந்நேரமும் நொட்டை நாகசாமியாய் தலையாட்டிக் கொண்டிருந்த தொப்பை தீபக் தன்னுடைய வேலையைத் துவங்கியிருக்கிறான் இப்போது.

    “நம்ம ஆபிசுல யாருக்காவது டிம்பிள் இருக்கா? இவன்கிட்ட இருந்து எட்ட வைக்கணும். நல்லவேளை டீனாவுக்கு டிம்பிள் இல்லை!”, என்றான் நக்கல் சிரிப்போடு. “என்னோட கேர்ள் பிரண்டை இவன் கண்ணுலயே காண்பிக்க மாட்டேன்பா. ஏன்னா அவளுக்கு இருக்கு!”, என்றான் முத்தமலட்டு வோஷ்னி. சிரிப்பினை அடக்க வேண்டி தண்ணீர் குடித்துச் சிரிப்பினைத் திசை திருப்ப முயன்றாள் டீனா.

    சிங்கப்பூரில் இருந்து விடை பெறும் நாளில், நிறுவன மேலாளர் ஷியாவ் லீ தன் மனைவியோடு விமானநிலையத்திற்கு வந்திருந்தான். கைகுலுக்கி முதுகு தட்டிக் கொடுத்துப் பிரியாவிடை கொடுத்தான் ஷியாவ்.  டொங் லீயும் எங்கள் அலுவலகத்தில்தான் சம்பளப்பிரிவில் கணக்காளராக வேலை பார்க்கிறாள். ஆனால் அவ்வளவாகப் பழக்கம் கிடையாது. கைகுலுக்கப் போனேன். இரு தோள்ப் பட்டைகளையும் சாதுவாய்ப் பிடித்துக் கொண்டு வலது கண்ணத்தில் இதழ் பதித்து, “விஷ் யூ ஆல் தி பெஸ்ட்”, என்றாள்.

    சிநேகம் சிவந்து வராத முத்தங்கள் நீர்க்குமிழி போலச் சற்று நேரத்திலேயே மரித்துப் போகின்றன. மனம் நெகிழ்ந்து எதிர்நீச்சல் போட்டு வந்து இதழ்களில் வெடிக்கும் முத்தங்களுக்குச் சாவே இல்லை. ஷியாவ் இணையரோடு தொடர்பு இல்லாவிடினும், டொங் லீ கொடுத்த முத்து மனச்சிப்பிக்குள் காத்திரமாகவே இருக்கிறது இன்னமும்.

    அமெரிக்க விமான நிலையங்களை எல்லாம்  செயலிழக்கச் செய்தது உயிரோட்டம் கொண்ட முத்தமொன்று. பாதுகாப்புச் சோதனை வளையத்துக்குள்ளிருந்த ஒருவர் வெளியிலிருந்த துணைவருக்குப் பரிசுத்தமான முத்தமொன்று கொடுக்க, இழுத்து மூடப்பட்டது நியூஜெர்சி விமான நிலையம். அந்நேரத்தில் நானும் விமான நிலையத்தில்தான் இருந்தேன்.

    சிலகாலம் முத்தங்களை இன்னபிற தளங்களிலும் தேடித்திரிந்தேன். எங்கள் வீட்டுக் குழாயடிக்கு அண்மையில் எப்போதும் சேறும் சகதியுமாகவே இருக்கும். அங்கே போய் உட்கார்ந்து கொள்வேன். அரிதினும் அரிதாய்ப் பறந்து கொண்டே கொசுக்கள் முத்தமிட்டுக் கொள்ளும் காட்சிக்காகக் காத்திருப்பேன். அவை முகர்ந்து கொண்ட காட்சியைப் பார்க்கப் பார்க்க எனக்கும் மனம் மகிழ்ந்து வரும். ஓடிச் சென்று என் அண்ணன் மகனைக் கொஞ்சுவேன்.

    முத்தம் என்பது பண்பாடு சார்ந்த ஒன்றாகவும் இருக்கிறது. கோத்தகிரியில் இருக்கும் நண்பன் மோகனுடைய அம்மா என் நெற்றியில் சிலுவையிட்டு முத்தம் கொடுப்பார்.

    டொரொண்டோவில் இருக்கும் வகுப்புத் தோழன் பிரான்சிஸ் பிரெஞ்ச் நாட்டுக்காரன். அவர்கள் வீட்டிற்குப் போகும் போதெல்லாம் அவனுடைய அம்மாவும், அக்காவும் வரவேற்புக்காகவும் பிரியா விடைக்காகவும் முத்தமிடுவார்கள். வலது கன்னத்தோடு வலது கன்னமும், இடது கன்னத்தோடு இடது கன்னமுமாக மாற்றி மாற்றி ஒத்தி எடுப்பார்கள். ஒத்திக் கொள்ளும் போது அதரங்கள் உச்சுக் கொட்டும்.

    பல்கேரியா நாட்டு சோஃபியாவைச் சார்ந்தவன் நண்பன் மேத்யூஸ். நானும் அவனும் டொரொண்டோவில் அலுவலக நண்பர்கள். அவனுடைய மனைவியும் பிள்ளைகளும் வரவேற்புக்காய் வலது கையைப் பற்றிப் புறங்கையில் முத்தமிட்டு நலம் விசாரிப்பார்கள்.

    அமெரிக்காவில் பண்பாட்டுத் தளத்தில் இன்னமும் வடக்கும் தெற்கும் பிரிந்தே இருக்கின்றன. வடக்கில் இருப்பவர்களுக்கு கைகுலுக்குவதே வழமை. தெற்கில் இருப்பவர்கள் அரவணைத்து நெற்றியில் உச்சி முகர்ந்து கொள்கிறார்கள். புளோரிடாவில் இருக்கும் நண்பன் ரிக்பெரியின் மனைவி, மருமகள்கள் எல்லாரும் என்னை அரவணைத்து நெற்றியில் முத்தமிட்டு வழியனுப்புகிறார்கள்.

    கனடிய நகரான பிக்கரிங்கில் இருக்கும் பஞ்சாப் நண்பன் லலித்தும் நானும் பதினேழு ஆண்டுகால நண்பர்கள். பங்காளிகள் எல்லாரும் கூட்டுக் குடும்பம். எப்போது போனாலும் பத்துப் பதினைந்து பேராவது வீட்டில் இருப்பார்கள். அவனுடைய குடும்ப வழக்கத்துக்கொப்ப இருக்கும் பெரியவர்கள் எல்லாருடைய காலிலும் விழுந்து ஆசி வாங்குவேன். அவர்களும் தோள்பிடித்து எழுப்பி தலையில் முத்தமிட்டுக் கைவத்தபடி ஆசி கொடுப்பார்கள்.  கிராமத்து மனிதரான லலித் அப்பாவுக்கு பஞ்சாபிமட்டும்தான் தெரியும். பஞ்சாபி தெரியாத நானும் அவரும் வணங்கிக் கொள்வதோடு சரி. நாவொலியால் பேசிக்கொண்டதில்லை. ஆனாலும் ஆசைதீரப் பேசிக் கொள்வோம். ஆசி வழங்கிய கையோடு என் வலக்கையைப் பறித்துத் தனது கைகளுக்கிடையில் வைத்துப் பொத்திக் கொள்ளும் அந்த வெள்ளந்தி. எங்களது கைகள் தொடர்ந்து மாந்தம் பரிமாறிக் கொண்டிருக்கும். அதையெல்லாம் வெளியில் சொல்லிக் கொள்ள விரும்புவதில்லை அந்த வாஞ்சனைகள். “அவனைக் கொஞ்சம் வுடுறியா? வந்த எதனா சாப்பிடட்டும்!” என்று லலித் இரையும் வரை,  சமவெளியில் அமைதியுற்றுப் பாயும் முதுநதி போல நேயசுகம் எங்கள் உடம்புக்குள் அசும்பிக் கொண்டிருக்கும்.

    ராலேவில் இருக்கும் பாகிசுதான் நண்பன் இர்ஃபான் வீட்டுக்குப் போனால் இடது புறமும் வலது புறமும் மாறி மாறி அரவணைத்துக் கடைசியில் உச்சியில் முத்தமிட்டு வாழ்த்துவார்கள். மிசிசாகாவில் இருக்கும் பங்களாதேசு நண்பன் ஷகாரியர் இமாம் வீட்டுக்குப் போகும் போது, நம் இரு கைகளையும் ஒரு சேரப்பிடித்துக் குலுக்கி நான்கு கைகளும் இணைந்திருக்கும் இடத்தில் முத்தமிட்டு வரவேற்பான் அவன். இப்படி முத்து முத்தாய் முத்தங்கள் சூழ சுவாசித்து வாழும் வாழ்க்கையானது பரவசத்தில் ஆழ்த்தித் திளைக்கச் செய்கிறது.

    மனைவி, மக்கள் என ஆன பிறகு முத்தங்களே வாழ்க்கையாகிப் போனது. முத்தங்களற்ற வாழ்க்கை ஒரு சூனிய வாழ்க்கை. பிள்ளைகள் செய்யும் சில விநோத செயல்களைப் பார்த்ததுமே மனம் வாஞ்சையுற்று மகிழத் துவங்கும். அடிக்கடி பிள்ளைகளுக்கு முத்தம் கொடுக்கிறீர்கள் என மனையாள் கடிந்து கொள்வாள். எல்லாமும் தனக்கே வந்து சேர வேண்டியது எனும் ஆற்றாமையாகக் கூட இருக்கலாம் அது. யாருக்குத் தெரியும்?

    வயதான கிழவன் கிழவிகள் ஒருவருக்கொருவர் அணுசரணையாக இருந்து, சார்ந்தொழுகிக் கொள்வதைப் பார்த்தாலும் எனக்கு மனம் வாஞ்சையுற்றுப் பொங்கி வரும். இதற்காகவே மாலை நேரங்களில் குளக்கரைக்குப் போவதும் உண்டு. அங்கிருக்கும் அமர்விடங்களில் பெரியவர்கள் ஆற அமர இருக்கும் பாசமுறு காட்சியை எப்போதும் காணலாம். அக்கணங்களில் மனைவியோ, பிள்ளைகளோ இருந்தால் அவர்களுக்கு முத்தமிட்டு இன்புற்றுக் கொள்வேன். அவர்கள் இல்லாத நேரங்களில், வலது கை விரல்களை உள்மடக்கி உள்ளங்கையினைக் குவித்து அதன் மீது முத்தமிட்டுக் கொள்வேன். வலது கைக்குமிட்டியில் கொட்டிக் கிடக்கின்றன ஜீவனுள்ள முத்தங்கள் மாமாங்கமாய்.

    முதல்முறையாக இடைமறித்தாள் குதிரைவால் டீனா. “காலையில் வேலைக்குக் கிளம்பி வரும் போது உங்களுடைய முத்தப்பரிமாற்றம் எப்படி இருக்கும்?”, ஏக்கமுசுமுசுப்போடு கேட்கிறாள் அவள்.

    அப்படியொரு பழக்கமே எங்களுக்கில்லை என்றதும் அவள் முகம் சூம்பிப் போனதே பார்க்கலாம். இப்படி ஒரு பதிலை அவள் எதிர்பார்த்திருக்க மாட்டாள்.

    பிற்பகல் மணி மூன்று இருக்கும். இராலே நகரத்தின் ஊர்ப்புறமொன்றில் இருக்கும் அலுவலக வளாகம். ஆந்திர நண்பன் பெஞ்சல் ரெட்டிதான் வந்து முதலாவதாகக் காதைக் கடித்தான். அடுக்ககத்தில் பழக்கமான ஜெகன் சவுத்ரி நெஞ்சு வலியால் போய்ச் சேர்ந்து விட்டானாம். உடனே போயாக வேண்டுமென்கிறான்.

    சேப்பல்ஹில் மருத்துவமனைக்குப் போகும் வழியில் அவன் மனைவிக்குத் தெரியப்படுத்தி விட்டு வரச் சொல்கிறான் பரத் ரெட்டி. கணவனை இழந்திருக்கும் மனைவியிடம் போய் என்னவென்று எப்படிச் சொல்வது? நெஞ்சு பிசைகிறது எனக்கு. கூடவே வாந்தி பேதியும் வருவது போல இருக்கிறது. பொழையாப் போன பெஞ்சல் ரெட்டி என்னை விட்டானில்லை. என் மனைவியையும் கூட அழைத்து வரச் சொல்லி அக்கப்போர் செய்கிறான். “ஒதனம்மத்தோ நேனே செப்பானு!”, இந்தக் குழைச்சலுக்கு ஒன்றும் கொறைச்சல் இல்லை.

    என் மனைவி, நான், அவன் என மூன்று பேருமாகச் சென்றோம். ஏற்கனவே செய்தி அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரே அழுகைச் சத்தம். தரையில் விழுந்து புரண்டு கொண்டிருக்கிறாள் ஜெகனின் மனைவி சாரதா. “எப்பவும் இல்லாதபடிக்குக் கிளம்பும் போது முத்தமெல்லாங் குடுத்திட்டுப் போனயே, நாவாடு இங்க்க ராடா? கொண்டமார உண்டுத்துடே?!”, ஓலமானது கடைக்கோடி வீட்டு வரைக்கும் உள்ள எல்லா மேப்பில் மரங்களையும் அதிரச் செய்து, எல்லாரும் வெளியில் வந்து பார்த்த வண்ணம் இருந்தார்கள்.

    அன்று தீர்மானமானது; வீட்டை விட்டுக் கிளம்பும் போது ஒருநாளும் முத்தம் கொடுக்கவே கூடாதாம். தீர்மானமாய்ச் சொல்லி விட்டாள்.

    இந்த அமெரிக்கப் பெண்மணிகளுக்குத்தான் அடுத்தவர் மேல் எவ்வளவு கரிசனம்?  நாகரிகம், மாந்தநேயம், பண்பாடு, இங்கிதம் முதலானவற்றைக் கருவில் வைத்தே ஏதாவது ஊசிமூலம் செலுத்தி விடுவார்களோ? அப்படியிருந்தால் எவ்வளவு வசதியாய் இருக்கும்?? “சாரி! ஐ ஃபீல் சாரி!!”, மனமுருகிச் சொல்வது தெரிகிறது அவள் கண்களில்.

    பேசிக் கொண்டே உணவகத்திலிருந்து வெளியே வருகிறோம். வானம் பூராவும் நீலம் பாய்ச்சிக் கிடக்கிறது. உயரெழும்பி அலை பாய்ந்து சேட்டை செய்து கொண்டிருக்கக்கூடிய நான்கு மனங்களும், வாளாது தாழ்ந்து பணிந்தே இருக்கின்றன.

    அந்த ஓக் மரத்தில் அமர்ந்திருக்கும் காக்கை ஏன் கரைகிறதென்று அதற்கே தெரியாது. தன் கால்களால் அமர்ந்திருக்கிறதா, அல்லது நின்று கொண்டிருக்கிறதா அந்தக் காகம்? காகங்கள் கூடத் தன் அலகுகளால் ஒன்றையொன்று உரசி முத்தமிட்டுக் கொள்கின்றன. மனம் கசிந்து முத்தமிட்டது போக, எதையாவது கொண்டு வந்து பங்கித் தருகிறது மற்றவர்களுக்கும். காகம் ஒரு பகுத்துண்ணி. மனப்பாடம் செய்தால் மட்டும் போதுமா?

    இனி நாங்கள் மூவரும் தொப்பை தீபக்கின் காரில் அலுவலகம் போய்ச் சேர வேண்டும். டீனா அவளது காரில் தனியாக வந்திருக்கிறாள். போகிற வழியில் வங்கி வேலை எதோ இருக்கிறதாம் அவளுக்கு.

    எதுவும் சொல்லிக் கொண்டா நடக்கிறது? அதற்கான தருணங்கள் வாய்க்கும் போது அதனதன் வீச்சில் யாவும் நடக்கத்தான் செய்கின்றன. நினைத்த மாத்திரத்தில் கனடியன் கீசுகள் மேலெழும்பிப் பறக்கின்றன. காரணகாரியம் எதுவுமேயில்லாமல் வெறுமனே துள்ளிக் குதிக்கிறது குளத்து மீன். எனக்கும் இன்று மாலையில் மனைவி மக்களோடு குளத்திற்குப் போக வேண்டும் போல இருக்கிறது.

    நாங்கள் நால்வரும் பங்கேற்ற முத்தக் கச்சேரியின் கடைசிக் கட்டமான மங்களம் பாடும் நேரம் வந்து விட்டது.

    மணவாளனுக்குக் காலையில் தராமல் விட்டுப் போனதற்குப் பிராயச்சித்தமாய், இப்போது காகமாகவே மாறிப் போயிருக்கிறாள்.

    உறவு கலப்பதிலும் முத்தம். பிரிவதிலும் முத்தம். சிநேகச்சாறு வழிந்தோடி முத்தப் பெருநதிகளாய் உருக்கொண்டு பிரபஞ்சத்தின் பிறவிப்பயனை நீட்டித்துக் கொண்டே இருக்கிறது. முத்தப்பெருநதிகள் வற்றும் போது பிரபஞ்சமும் இல்லாது போகும்.

    தேனுண்ட வண்டுப் போல முயங்கிவந்து ஆளாளுக்கும் கனிந்த மெலிந்த முத்தமொன்றை நெற்றிப் பொட்டில் கொடுத்துப் போகிறாள் குதிரைவாலி! கணிசமாக நீட்சி கொள்கிறது பிரபஞ்சத்தின் ஆயுளும்!!  இந்த நாள் நமக்கு நல்ல நாள் என்கிற களிப்பில் தத்தம் வலக்கைகளை உயர்த்தி ஒன்றோடொன்று மோதிச் சப்பாணி கொட்டிக் கொண்டன சிநேகமும் முத்தமும்!!!

     

    Share
  • வாருங்கள் அடை தின்ன!!

    பழமைபேசி

    சமைத்திட விரும்பி
    தாய்த்தமிழின் எண்ணிலடங்கா
    ஈடுகளில் கொஞ்சத்தையள்ளி
    இட்டரைத்தேன் மெல்லென
    சிந்தையம்மியில் நான்!
    சரியாய்த் துலங்கின
    சிறுகதை ஒன்றும்
    சொல்லடை இரண்டும்!
    உருசியாய் இருக்கிறதாம்
    எதிரில் நின்று பகர்ந்தாள்
    சிறுகதையைத் தின்ற
    என்வீட்டுக் கண்ணாட்டி!
    சுவையாய் இருக்கிறதாம்
    சொல்வது யாரெனில்
    அடையில் ஒன்றைத் தின்ற
    தமிழ்ச்சங்கத் தலைவன்
    செவலை மாடன்!
    அந்த எஞ்சிய அடையும்
    எப்படியிருக்கிறது
    சொல்லிவிடலாமே
    அதைத் தின்னும் நீங்கள்?!

    Share