Tag: வே.ம.அருச்சுணன் – மலேசியா

  • வெளிநாட்டார் நாடாளுமன்றம்

    வே.ம.அருச்சுணன்

     

    இன்றைய நடப்புகள்
    நாளைய வரலாறு அல்லவா
    மனத்துள் பல்வேறு பிம்பங்கள்
    வியப்பில் நிழலாடுகின்றன சில
    செவிகளுக்குத் தேனாகவும் பல
    குளவிகளாய் காதில் புதுமனை புகுவிழாவை
    விமரிசையாகவும் நடத்துகின்றன……….!

    அருவியாய்த் தவழ்ந்த பூமி
    அன்னியரின் படையெடுப்பால்
    தடம்மாறிப் போனதேனோ……?

    மூவினமும் சேர்ந்து பெற்ற
    சுதந்திரத்தை நடுவீதியில்
    தாரைவார்த்தல் முறையா……?

    மலாய் மக்களுக்குச் சிறப்புவழி
    வானுர்ந்த சொகுசு வாழ்வு
    சீனருக்குத் தனிவழி
    எதிலும் போதாதென்ற சுயநலப்போக்கு
    தமிழருக்கு மட்டும் வாழ்வே மாயம்தானா ?

    என்ன கொடுமை இது
    பிரமனும் நம்மை சபித்துவிட்டானா
    ஆள்பார்த்து ஒதுக்கிவிட்டானா……?

    ஆதியிலே வந்தகுடி
    காட்டையும் மேட்டையும் அழித்து
    தன்னையும் இலட்சம் இலட்சமாய்
    அழித்துக் கொண்ட தமிழனுக்குத் திருவோடு
    நிரந்திரமாய் வாழ்வதோ தெருவோடு……..!

    கள்ளக்குடியினர் இங்கே தொழில் மேதை
    அனுமதிச் சீட்டில் அரசின் கம்பீரமுத்திரை
    துணிக்கடை,பழக்கடை,மளிகைக்கடை,மதுக்கடை இன்னும்
    கணக்கில்லாக் கடைகளெல்லாம் அன்னியர் மயமாகி
    வியாபாரம் தூள்பறக்கிறது
    வெற்றிக் களிப்பு ஓங்காரமிடுகிறது
    தட்டிக்கேட்க ஆளில்லை
    தமிழனுக்கோ நாதியில்லை………!

    வயிற்றுப்பாட்டுக்குத் தெருவோரமாய்
    வெற்றிலைக் கடைவிரிப்புக்கு
    பண்டராயா அதிரடி அனுமதி மறுப்பு
    கேள்வி கேட்ட குமாருக்குப் பல்லுடைப்பு
    ஜாமினில் எடுக்க
    கர்பாலுக்கு அவசர அழைப்பு
    நாடாளுமன்றத்தில் தீர்மானம்
    குலசேகரன் தலைமையில்
    பலம் பொருந்தியக் குழுவமைப்பு…..!

    வெளிநாட்டார் தர்பார்
    விரைவில் முடியட்டும்! நாட்டில்
    மூவினத்தின் மாண்பு நாடெல்லாம்
    மீண்டும் ஜொலிக்கட்டும்! ஒன்றுபட்ட
    மலேசியர்கள் நாமென்றே கைகோர்த்திடுவோம்!
    அயல்நாட்டார் நம்மை வாழ்த்தி விடை பெறட்டும்!
    தன்மானச் சிங்கங்களாய்த் தமிழர்வாழ்வு
    மறுபடியும் ஓங்கி வளரட்டும்………..!

    வெளிநாட்டார் நாட்டாமைக்கு எதிராக
    ‘நம்பிக்கை வை’ பிரதமரின் முதல்
    ஓட்டு தவறாமல் விழட்டும் நாட்டில்
    தமிழர் வாழ்வு சிறக்கட்டும்……!

     

    Share
  • வாலியின் புகழ் வாழியவே…..!

     

    வே.ம.அருச்சுணன்– மலேசியா

    stars-with-vaali-1000-in-vasanth-tv-stills_4_165414123
    தமிழைக் கற்றவருக்கு
    ஆயுள் நீளம் என்பார்
    உன் நாவில் விளையாடியது
    தேன் சிந்தும் தமிழ் அல்லவா…..!

    மனம் குளிர்ந்த தமிழன்னை
    உமக்கு நீண்ட ஆயுளைத்தந்தார்
    82 அகவையிலும் இளசுகளின்
    உள்ளங்களைத் துள்ளல் நடை போடவைத்த
    வாலிபக் கவிஞன் நீ………..!

    அற்புதக் கவிகளால்
    கவியரசு கண்ணதாசன் மனம்
    கவர்ந்த கவிஞனே
    கலைஞர் காவியம் பாடிய
    காவியக் கவிஞனே
    உனைத்தவிர வேறு யாரும் அப்படியொரு
    காவியத்தைச் செதுக்கி இருக்க முடியாது…………..!

    பெற்ற அன்னை இட்டபெயர் இரங்கராஜன்
    தமிழ் அன்னை சூட்டிய பெயர் வாலி
    பாடல்களின் பிரம்மனே
    வாலியின் பெயரே உனை
    சிகரத்தில் நிறுத்தியது
    மக்களின் மனங்களில் குதி போட்டு நின்றது………!

    நீ வடித்த பாடல்கள் சாகா வரம் பெற்றவை
    பத்தாயிரம் பாடல்கள் தந்து
    தமிழுள்ளங்களைக் குளிர வைத்தாய்
    கேட்போர் வாழ்வை நிமிரவைத்தாய்…………!

    இரவும் பகலும் உன்
    கடும் உழைப்பைக் கண்டு
    இயற்கை உன்னிடம் தலை வணங்கியது
    உழைப்பே மனிதனை உயர்த்தும்
    என்பதற்கு ஓர் உதாரணம் நீ
    தன்னம்பிக்கையின் சக்கரவர்த்தி நீ………!

    சோதனைகளைச் சாதனையாக்கிய
    கவிஞனே பல்லாண்டுகள் இன்னும்
    வாழ்வாய் என்ற கணக்கில்
    மண் விழுந்து விட்டதே
    தரைமேல் பிறக்க வைத்த இறைவன்
    எங்களைக் கண்ணீரில் மிதக்க வைத்தான்………!

    நீ மறைந்தாலும்
    உன் வைர வரிகள் பல்லாண்டுகள்
    எங்களை வாழவைக்கும்
    வாழியவே உன் புகழ்………….!

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    வெ.திவாகர்

    மனிதனும் இயற்கையும் ஒன்று. நம் உடல் பஞ்ச பூதத்தினால் ஆனது. மண், ஆகாயம், நீர், காற்று, அனல் இவற்றுடன் சம்பந்தப்படுத்தியே மனிதன் படைக்கப்பட்டான். அதனால் மனிதன் இயற்கையோடு ஒன்றிச் செயல்பட வேண்டும் என்பதற்காகப் படைக்கப்பட்டவன்.. ஆனால் மனிதனே மனிதனை அதாவது இயற்கையை அழிக்கலாமா.. ஆண்டாண்டுக் காலமாக இந்த விழிப்புணர்ச்சி இல்லாமல் இயற்கையை அழிப்பது இந்த மனித குலம்தான்.

    மனிதர்களின் சின்னச் சின்ன சுகங்களுக்காக இயற்கையை அதிகம் சீண்டி விளையாடியதால்தான் சமீபத்திய கேதார்நாத், பத்ரிநாத் இழப்புகள் என்கிறார்கள் சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள். இயற்கைச் சீற்றங்களினால் மனித அழிவு ஏற்படும்போதும் அந்த அழிவில் நமக்கு நெருங்கியவர்களில் சிலர் மறையும்போதும் ஆற்றாத் துயருணர்ச்சி உண்டாகிறதுதான். ஆனாலும் ஒவ்வொரு முறையும் மனித வசதி மேம்பாடு என்கிற பெயரில் நாம் இயற்கைக்கு செய்யும் கொடுமைகளை மட்டும் மிக வசதியாக மறந்துவிடுகின்றோம்.

    இயந்திரமயமான நிகழ்கால வாழ்க்கையில் நமக்காக நாம் முதல் பலி கொடுப்பது இயற்கையை அழிக்கும்போதுதான். அதே சமயத்தில் இயற்கையும் நமக்குப் போட்டியாக எத்தனையோ பேரழிவுகளை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. ஆனால் அவைகளிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்வதில்லை. மேலும் தவறு செய்கிறோம். பாதுகாப்புக்காகவும், நீர்வசதிக்காகவும் இயற்கை கொடுத்திருந்த மலைகள் கிரானைட் கல் ஏற்றுமதியில் இருந்த இடம் தெரியாமல் கரைக்கப்பட்டு வருகின்றன. சுத்தமான குடிநீரை அள்ளித் தரும் நதி நீரில் ரசாயனக் கழிவுகள் தெரிந்தே கலக்கப்பட்டு, மாசுபடுத்தப்பட்டு வருகின்றன. இன்று சுற்றுச் சூழல் காற்று கெடுக்கப்பட்டு வருவதை உலகம் முழுவதும் பார்த்துக்கொண்டு வருகிறோம். இதனைத் தடுக்க எத்தனையோ கூப்பாடுகள் போட்டாலும் சுற்றுச் சுழல் மாசுபடுத்தப்படுவது நிறுத்தப்படுவதில்லைதான். வான்வெளியையும் விட்டு விடுவதில்லை நாம். இயற்கையைக் கெடுத்து அதனால் நாமும் நம்மைக் கெடுத்துக்கொண்டு வாழும் இந்த வாழ்க்கையும் ஒரு வாழ்வா என்று மனிதன் எப்போதுதான் நினைக்கத்தொடங்குவானோ..

     வே.ம.அருச்சுணன்இயற்கைதனை அழிப்போர்
    இறைவனின் எதிரியென்போம்
    படைத்தவன் நமக்களித்த
    வாழ்வுதனைத் தட்டிப் பறிக்கும்
    அரக்கனை அழிப்போம்
    பணத்துக்குச் சோரம் போகும்
    கொடியோரின் கருவறுப்போம்
    தலைமுறையும் துளிர்க்காமல்
    காவல் காப்போம்!
    செயற்கைப் பேரிடர்
    நந்தவனப் பயிர்களும் உயிர்களும்
    அற்ப ஆயுளை முத்தமிடல்
    கொடுமையின் உச்சம்!

    இறைவனின் அருட்கொடை
    மனிதன் இயற்கையை
    நேசிப்பதும் சுவாசிப்பதும்
    காப்பதும் வாழ்த்துவதும்
    உரிமையும் பெற்றவன்!

    இயற்கையைக் காக்க
    உள்ளத்தையும் உயிரையும்
    அள்ளித் தருவோம் மடமையில்
    எதிர்ப்போரைக் கிள்ளி எறிவோம்
    அடுத்த தலைமுறைக்கு இயற்கையை
    விட்டுவைப்போம் செழிப்பாய்
    அதுவரையில் உயிராய்க்
    காத்து நிற்போம்!

    மலேசியாவைச் சேர்ந்த வே. ம. அருச்சுணனின் கவிதை இது. இன்னும் இது போல எத்தனை ஆயிரம் கவிதைகள் விழிப்புணர்வு தந்தால் மனிதன் விழித்துக் கொள்வானோ.. இந்த வாரத்தில் வல்லமை இதழில் இக்கவிதையை இயற்றிய திரு அருச்சுனன் அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்து வாழ்த்துகின்றோம்.

    கடைசி பாரா: திரு செண்பக ஜகதீசனின் கவிதை

    எல்லாம்
    ஒன்றாய்ச் செய்யும் மனிதன்,
    நன்றாய் இல்லையே குணத்தில்
    ஒன்றியே உள்ளானே பணத்தில்…!

    Share
  • இந்திய ஆய்வியல் துறையைக் காப்பாற்ற அணிதிரள்வோம்!

    வே.ம.அருச்சுணன் – மலேசியா

    நாட்டின் பதின்மூன்றாவது தேர்தலுக்குப் பின் இந்திய சமுதாயம் எதிர்நோக்கிய பல்வேறு பிரச்சினைகள் பற்றி பல்வேறு கோணத்தில் ‘சுடும் உண்மைகள்’ பகுதியில் மனதைத் தைக்கும் விஷயங்களை ஆதாரத்துடன் ஆசிரியர் திரு.பி.ஆர்.இராஜன் எழுதிவருதைக் கண்டு வருந்தாத தமிழ்ப் பற்றாளர்கள் இருக்க முடியுமா?

    சிறிய சமூகத்திற்கு இத்தனை பிரச்சனைகளா என்று வியக்காதவர்கள் யார்? காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் லாக்கப்பில் இந்திய இளைஞர்களின் தொடர் மரணங்கள் சமுதாயத்தினரிடையே அமைதியற்ற நிலையையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.

    திட்டமிட்டே,கல்விமான்களும், நீதிபதி அந்தஸ்திலுள்ளவர்களும் அரசாங்கம் தங்களுக்குச் சாதகமாக இருக்கிறது என்ற தெனாவெட்டில் பொறுப்பற்ற நிலையில் தமிழ்ப்பள்ளிகளை மூடச் சொல்வதும், தமிழ்மொழியின் அழிவிற்குப் பாதகமான கருத்துகளைக் கூறும் நிலை தொடர்வதைக் காணும் போது, இந்தியர்கள் இந்த நாட்டில் மாற்றான் தாய் பிள்ளைகளாக ஆக்கப்பட்டுவிட்டார்களோ என்ற ஐயமும் பீதியும் எழுகின்றன. மேலும்,சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகளை எடுக்காமல் இந்திய சமுதாயம் எக்கேடாவதுக் கெட்டுப்போகட்டும் என்று மெத்தனப் போக்கினைக் கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது. இந்தியச் சமுதாயம் கேட்பாரற்ற சமுதாயமாக இருக்கும் சூழல் தொடர்ந்து இருக்க வேண்டுமா?

    தடுமாறிக் கொண்டிருக்கும் இந்தியச் சமுதாயத்திற்கு அரசு கருணை காட்டக்கூடாதா? இந்திய அரசியல்வாதிகளும், சமுதாயத்தலைவர்களும் சொந்தச் சகோதரர்களின் மேம்பாட்டுக்காகத் தங்களுக்கிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளையும் சுயநலப்போக்கையும் சற்று தள்ளி வைத்துவிட்டு நேசக்கரம் நீட்டக் கூடாதா?

    கடந்த சில தினங்களாக மற்றுமொரு தலையாய பிரச்சனை ஒன்றைப் பற்றி ‘புதிய வெளிச்சம்’ என்ற பகுதியில் உண்மை விளம்பி மலாயாப் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் இந்திய ஆய்வியல் துறையின் எதிர்காலம் குறித்தும் அத்துறை தொடர்ந்து பெருமை வாய்ந்த மலாயாப் பல்கலைக் கழகத்திலேயே தக்க வைக்கும் முயற்சியில் அரசாங்கமோ, எந்த அரசியல் கட்சிகளோ, பொது அமைப்புகளோ எந்தவொரு நடவடிக்கையிலும் இறங்காமல் ஏனோதானோ என்ற நிலையில் இருக்கும் பட்சத்தில் 1956 ஆம் ஆண்டில் பல சிரமங்களுக்குக்கிடையில் கோ.சாரங்கபாணி அவர்களின் பெரும் முயற்சியால் தொடங்கப்பட்ட இத்துறையை இழந்துவிடாமல் இருக்க சமுதாயம் செய்யத் தயங்கும் நிலையில் எதிர்காலச் சந்ததியினரின் தேவை அறிந்து அதனைக் காக்கும் பொருட்டு கடுமையான போராட்டத்தில் தினக்குரல் இறங்கியுள்ளது. சக பத்திரிக்கைகளின் உதவியோடு பிரதமரை அணுகி பிச்சனைக்குத் தீர்வு காண்பது வரவேற்கத் தக்கது. எனினும், சமுதாயத்தின் தமிழ்மொழியைக் காக்கும் பணியில் ஒட்டுமொத்த இந்தியச் சமுதாயத்தின் கடப்பாடுதான் என்ன?

    இந்திய ஆய்வியல் துறைக்கு அலைவர்களாகப் பொறுப்பேற்றவர்கள் முனைவர் திலகவதி, கந்தசாமி, சபாவதி, குமரன், முகமது ராடுவான், கிருஷ்ணன் மீண்டும் குமரன் ஆகியோர் பொறுப்பில் இருந்துள்ளனர். 2004/2005 ஆம் கல்வி ஆண்டில் 98 மாணவர்கள் கல்வி பயின்ற வேளையில் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து 2013/2014 ஆம் கல்வி ஆண்டில் 7 மாணவர்களே கல்வி பயிலும் நிலையில் இந்திய ஆய்வியல் துறை மூடும் நிலைக்கு வரும் வரையில் துறைத்தலைவர் முனைவர் குமரன் அவர்கள் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நடவடிக்கையில் இறங்காமல் போனது ஏன்?
    அப்படி ஏதும் பிரச்சனைகளை எதிர்நோக்கி இருந்தால் சமுதாயத்திடம் சொல்லியிருக்கலாமே? சொல்லாமல் விட்டது ஏன்? உங்களை மலைபோல் நம்பியிருந்த சமுதாயத்திற்கு ஏமாற்றத்தைத் தந்துவிட்டீர்களே! உங்களுக்கு இந்த துறையில் வேலை இல்லையென்றாலும், அரசாங்கத்திற்கு தாங்கள் காட்டிய விசுவாசத்திற்குக் கைமாறாக வேறு துறைக்குத் தலைவராக்கி விடுவார்கள். தங்களின் கல்வித் தகுதி உங்களுக்கு அத்தகைய வாய்ப்பைத் தந்துவிடும். ஆனால், தங்களின் மெத்தனப் போக்கால் எதிர்காலத்தில் பல இந்திய ஏழை மாணவர்கள் தமிழைப் பயிலும் வாய்ப்பு பறி போய்விடும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுவிட்டதே! அதற்கு தாங்கள் கொடுக்கும் விலைதான் என்ன?

    மொழிப்பிரச்சனை என்று வரும் போது, இந்திய சமுதாயத்திற்குக் காவலனாகத் திகழவேண்டிய, அமைச்சரவையில் இரு அமைச்சர்களைக் கொண்டிருக்கும் ம.இ.கா.அதன் கல்விக்குழு மற்றும் துணைக்கல்வி அமைச்சர் சி.கமலநாதன் தமிழ்மொழியின் சீரழிவைக் கைக்கட்டிப் பார்த்துக் கொண்டிருப்பது முறையா? இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காணக்கூடாதா?
    தமிழ்மொழியின் வாழ்வுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய மலேசிய தேசிய தமிழ்ப்பள்ளி ஆசிரியர் சங்கம், மலாயா தமிழ்ப்பள்ளி மன்றப் பொறுப்பாளர்கள்,மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்,மலேசிய தமிழ் இளைஞர் மணிமன்றம், மலேசிய இந்து சங்கம், மலேசியத் திராவிடர் கழகம், தமிழ்த் தொடர்புடைய பிற சங்கங்களின் இந்தியல் ஆய்வுத்துறையைக் காக்க விரைந்து உதவிக்கரம் நீட்ட வேண்டும்.
    கையில் இருப்பதை இழந்துவிட்டு பின்னர் நமக்குள் குறைப்பட்டுக்கொள்வது அறிவுடைமையாகாது. நாடு சுதந்திரமடைந்த பின்னர் இந்திய சமுதாயம் பல வாய்ப்புகளை இழந்துள்ளது. இப்போது, தமிழ் மொழியையும் இழப்பதன் மூலம் நமது உரிமையை விட்டுக்கொடுப்பது போலாகும். ஆட்சியாளர்கள் மிகவும் நுட்பமான முறையில் நமது அடிச்சுவடுகளை அழித்துவருகிறார்கள்.அவற்றில் தமிழ்மொழியின் அழிப்பும் ஒன்று என்பதை உணரவேண்டும்.

    நம்மிடையே இருக்கும் பலர் தாங்கள் தமிழர்கள் இல்லை என்று வியாக்கியானம் செய்து கொண்டு இருக்கும் நபர்களிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும். தாய்த்தமிழைத் தூக்கிலிடும் தமிழ்த் துரோகிகளைத் தூக்கி எரிவோம். தமிழை வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஏழைத்தமிழர்களைக் கைக்கூப்பி வணங்குவோம்.அவர்களால்தான் மலேசியாவில் தமிழர்கள் என்ற அடைமொழியோடு அன்றும் இன்றும் பெருமையோடு வாழ்ந்து வருகிறோம்!

    தாய்மொழித் தமிழை இழந்து, இன்று வருந்தும் இந்தோனேசியா, பீஜி, மொரிசியஸ் போன்று இன்னும் பல நாடுகளில் வாழ்ந்த தமிழர்களின் அவலநிலை நமக்கு வேண்டுமா? இங்கே சட்டம் நமக்குச் சாதகமாக இருந்து வருகிறது. இதுவரையில் தமிழ்மொழி வாழ்ந்து கொண்டிருக்கிறது. மெத்தப் படித்த தமிழ்மக்களின் தமிழை ஏளனத்தோடு பார்ப்பதும், தமிழ்மொழி மீது பற்று கொண்டு அதனை வளர்க்கும் தமிழர்களை அலட்சியப்படுத்தும் போக்கினை இனியும் தொடருமானால், தமிழை அழித்த அவப்பெயரை இந்தப் பிறப்பு அழியுமட்டும் சம்பத்தப் பட்டோர் சுமக்கவேண்டும்.

    தமிழுக்காக நாம் ஒன்றுபடுவோம். நமதுரிமையைக் காக்கும் வகையில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்தியல் ஆய்வியல் துறையை நிலை நிறுத்த அனைவரும் இன்றே செயலில் இறங்குவோம்!

     

    Share
  • பணமூட்டை புகை மூட்டமானது

     

    வே.ம.அருச்சுணன் – மலேசியா

     

    சோற்றில் மண்ணைப் போடுதல்
    தர்மமாகுமா?
    காற்றில் விசத்தைக் கலத்தல்
    நீதியாகுமா?
    தூய்மைக்காற்றை மாசுபடுத்தல்
    நல்லதாகுமா?
    மக்கள் தினம் அவதிபடுதல்
    மனிதநேயமா?
    நோய்கள் தாக்க வழிசெய்தல்
    இதயம் தாங்குமா?

    உலகெங்கும் உன் சொத்து
    மதிப்பே பல கோடி
    நாளெல்லாம் அதன் பேச்சு
    நிம்மதியோ ஓடிப்போச்சு!

    ஏழை சிறுகுப்பை எரித்தல்
    பெரும் குற்றம் நொடியில்
    நீதிதேவன் வாசலில் நிற்பான்
    கனமுள்ளவன் காட்டை எரிப்பான்
    காப்பதற்கும் அரசும் துணைநிற்கும்
    தீ அணைப்பதற்கும் வானில்
    பணமழை பெய்யும் நீதிகேட்டால்
    முக்கியப் புள்ளிகளாம்
    மௌனமே பதிலாகும் என்றும்
    ஏழையின் குரல் அம்பலத்துக்கு வராது!

    மக்கள் அரசு நீதி காக்கும்
    பேதமின்றி கண்ணீர் துடைக்கும்
    பணமூட்டைகளின் கொட்டம் அடக்கும்
    புகைமூட்டக் கண்ணாமூச்சுகள்
    காற்றாய்ப் பறந்து போகும்!

    இயற்கைதனை அழிப்போர்
    இறைவனின் எதிரியென்போம்
    படைத்தவன் நமக்களித்த
    வாழ்வுதனைத் தட்டிப்பறிக்கும்
    அரக்கனை அழிப்போம்
    பணத்துக்குச் சோரம் போகும்
    கொடியோரின் கருவறுப்போம்
    தலைமுறையும் துளிர்க்காமல்
    காவல் காப்போம்!
    செயற்கைப் பேரிடர்
    நந்தவனப் பயிர்களும் உயிர்களும்
    அற்ப ஆயுளை முத்தமிடல்
    கொடுமையின் உச்சம்!

    இறைவனின் அருட்கொடை
    மனிதன் இயற்கையை
    நேசிப்பதும் சுவாசிப்பதும்
    காப்பதும் வாழ்த்துவதும்
    உரிமையும் பெற்றவன்!

    இயற்கையைக் காக்க
    உள்ளத்தையும் உயிரையும்
    அள்ளித்தருவோம் மடமையில்
    எதிர்போரைக் கிள்ளி எறிவோம்
    அடுத்த தலைமுறைக்கு இயற்கையை
    விட்டுவைப்போம் செழிப்பாய்
    அதுவரையில் உயிராய்க்
    காத்து நிற்போம்!

    Share
  • மாற்றிக் காட்டுவோம்

    வே.ம.அருச்சுணன் – மலேசியா

    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
    என்றோ சொன்ன வார்த்தை இன்றும்
    நன்றே பயன் படுகிறது……!

    நூற்றாண்டுகள்  எப்படியோ
    வாழ்ந்து விட்டோம் இனி யாரும்
    சிவப்புக் கம்பளம் விரித்து
    வண்ண மலர்கள் தூவி
    மஞ்சள் சிம்மாசனத்தில் அமர்த்த
    அணுசரணையாய்க்  கொடி பிடித்து நம்மை
    வரவேற்கப் போவதில்லை……!

    நாட்டின் நடப்புகள் நாளும்
    நடுக்கத்தைத் தருகின்றன
    கனவுகள் நிறைவேறும் சூழல்
    மங்கலாகத் தெரிகிறது நாட்டின்
    சுதந்திரத்துக்குக் கைகொடுத்தும்
    வாழ்க்கைப் போராட்டம்
    தாளம் தப்பாமல் குதிபோட்டு நிற்கிறது………!

    கவன ஈர்ப்புத் தீர்மானத்தை
    சமூகம் உச்சத்தில் கொள்ள வேண்டும்
    கரணம் தப்பினால் மரணம்
    பிளவுகளை வீசிவிட்டு
    தினம் செத்து பிழைக்கும் அவலத்தை
    துணிவாய்த் துறந்து
    அடிமை விலங்கை உடைத்து
    அறியாமையைத் துடைத்து
    தலைநிமிர்ந்து
    போராட்டத்தைத் தொடங்குவோம்………!

    மொழியைக் காப்பதற்குத்
    தமிழ்ப்பள்ளிகளின் ஆயுளை நீட்டிவைப்போம்
    பெற்ற பிள்ளைகள் தவறாமல் தாய்ப்பால்
    அருந்த வழிகாண்போம்
    கலாச்சாரம் அழிவதற்கு சூது
    செய்வோரைத் தரைமட்டம் ஆக்கிடுவீர்……!

    ஆணவத்தால் அடக்கிவைக்கும்
    அவமானச்சின்னங்களை வேரறுப்பீர்
    நேற்று முளைத்த காளான்கள்
    நம்மை மிரட்டுவதோ?
    கிழடுகள் சில வரிந்து நின்றே
    சிண்டுமுடிக்கும் வேலைகளைக்
    கச்சிதமாய்  முறியடிப்பீர்……..!

    நம்மைக் கிள்ளுக்கீரையாய்
    எண்ணித்திரிவோர் கொட்டம்
    அடங்கும் காலம் தொலைவில் இல்லை
    நன்றியைக் கொன்று
    சதா வம்புக்கு நிற்கும்
    ஒற்றுமைக்கு ஊறு செய்யும்
    முந்திரிக் கொட்டைகள்
    முகத்தில் கரியைப்பூசுவோம்
    உலகத்தார் காறி துப்பட்டும்………!

    அறிஞர்கள், கல்விமான்கள்
    தொழிலதிபர்கள்,நிபுணர்கள்,
    கொடைநெஞ்சர்கள்,இலக்கியவாதிகள்,
    கலைஞர்கள்,தொண்டர்கள்,
    தியாகிகள்,அரசியல்வாதிகள்
    வழக்கறிஞர்கள்,இளைஞர்கள்
    இனமானம் காக்க இன்றே
    ஒன்றாய்  எழுவோம்
    நாட்டின் தலையெழுத்தை
    மாற்றிக் காட்டுவோம் வாரீர்……!

    படத்துக்கு நன்றி

    http://www.dreamstime.com/stock-images-united-hands-image2370904

    Share
  • கண்ணா மூச்சு வேலைகள் வேண்டாம்

    வே.ம.அருச்சுணன் – மலேசியா

    இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள். நமது இளைய தலைமுறையினரான ஆண்,பெண் இருபாலரும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வு காண்பது அரசாங்கத்தின் கடமை என்றாலும், இந்திய இளைஞர்கள் மிகவும் ஆபத்தான நடவடிக்கைகளில் இறங்கியதன் பயனாய் அவப்பெயரைத் தாங்கியிருக்கும் இவ்வேளையில் அவர்களைக் காப்பதும்,அவர்களுக்கு நல்வழி காட்டுவதும் அவசியம் என்பதால் ஒட்டுமொத்த இந்திய சமூகம் உடனடித் தீர்வுகளில் இன்றே இறங்குவது நலம் பயக்கும் நடவடிக்கையாகும்.

    நாட்டின் பதின்மூன்றாவது,தேர்தல் ஒருவழியாக நடந்து முடிந்திருக்கும் இவ்வேளையில் இந்திய சமூகம் எதிர்பார்த்தது போல் நடை பெறாமல் போன வருத்தம் இருந்தாலும், இனி யார் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தாலும் இந்திய சமூகத்துக்குப் பட்டை நாமம் என்பது மட்டுமே உறுதியாகிவிட்டது.

    மேலும் அண்மைய காலமாக சிறிய சமூகமாக இந்திய சமூகம் பெயர் குறிக்கப்பட்டு, அதனை மேலும் ஒரம்கட்டும் நடவடிக்கைகள் இன்றோ நேற்றோ எதிர்பாராமல் நடந்த ஒன்றல்ல. மாறாக நெடுங்காலமாக எல்லாம் திட்டமிட்டே நடைபெற்று வந்த இந்த உண்மையை இனியாகிலும் நாம் ஏற்கத்தான் வேண்டும். இன்றைய அவல நிலைக்கு சமூகமும் பொறுப்பேற்க வேண்டும்.

    இனி, நம் கையைக்கொண்டுதான் கரணம் எனும் நிலையில் நாம் அனைவரும் ஒற்றுமையாகச் செயலாற்றி சமூகத்தின் அடுத்த வெற்றிக்கோட்டைத் தொடவிருக்கும் இந்திய இளைஞர்களுக்கு வழிகாட்ட நமது புதிய யுத்திகளைச் சொல்லித்தருவோம்.

    தேர்தலுக்குப்பிறகு,அமைக்கப்பட்ட அமைச்சரவை இந்திய சமூகத்துக்கு குறிப்பாக இந்திய இளைஞர்களுக்குச் சாதகமாக அமைந்தது. இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சாகும். இதன் அமைச்சர் கைரி ஜமாலுதின். அம்னோ இளைஞரணித் தலைவரான இவர் முதல் முறையாக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். துணையமைச்சர் டத்தோ மு.சரவணன் முதன் முறையாக ஒரு தமிழருக்கு துணையமைச்சர் பதவிவழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் சில ஆண்டுகள் முன்னாள் ம.இ.கா.இளைஞரணித் தலைவர் எஸ். விக்னேஸ்வரன் இந்த அமைச்சுக்கு நாடாளுமன்ற செயலாளராகப் பொறுப்பு வகித்துள்ளார்.

    இன்றைய பிரதமர் நஜீப், இளைஞர்,விளையாட்டுத்துறை அமைச்சராக 1986 ஆம் ஆண்டும், தொடர்ந்து 1987 ஆம் ஆண்டு முதல் அம்னோ இளைஞரணித் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர் என்பது கவனிக்கத்தக்கதாகும். நஜீப் அவர் காலத்தில் இந்தியர்களுக்குச் செய்யத் தவறியதை, தற்போது பதவி ஏற்றுள்ள அமைச்சர் கைரி ஜமாலுதின் தவறாமல் செய்வார் என்று நம்புகிறோம். சத்து மலேசியா கொள்கைப்படி பாகுபாடின்றி இந்திய இளைஞர்களுக்கு உதவ வேண்டும். இதில் துணையமைச்சர் டத்தோ மு.சரவணன் கூடுதல் கவனம் செலுத்திக் கிடைத்த வாய்ப்பைக் கோட்டைவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    1960 ஆம் ஆண்டுகளில் நமது இந்திய இளைஞர்கள் விளையாட்டுத்துறையில் கொடிகட்டிப் பறந்த ஒரு காலம் இருந்தது மிக உண்மை. நமது இந்திய விளையாட்டாளர்கள் மட்டுமின்றி 1950 ஆம் ஆண்டுகளில் சீனர்கள் பூப்பந்துவிளையாட்டை தங்களின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டதுடன் தாமஸ் கிண்ணத்தைப் பல ஆண்டுகள் வெற்றி கொண்டு நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர்கள்.

    1969 மே இனக்கலவரத்துக்குப் பின் அரசாங்கம் தன் மூப்பாக எடுத்த பல முடிவுகளால் தமிழர்களும்,சீனர்களும் பல துறைகளில் ஓரம் கட்டப்பட்டது போல், விளையாட்டுத் துறையிலும் இரு இனங்களையும் முற்றாக ஓரங்கட்டியது. பூப்பந்து, நீச்சல், பௌலிங், குவாஷ், கூடைப்பந்து, மேசைப்பந்து, ஜூடோ, போன்ற விளையாட்டுகள் இன்றும் சீனர்களின் கட்டுப்பாட்டுக்களில் இருந்து வருகின்றன. சீனர்களின் பொருளாதார பலம் அவர்களை இத்துறையில் காலூன்றச் செய்துள்ளது.

    இந்தியர்கள் பெருமளவில் ஆர்வமுடன் பங்கு பெற்ற காற்பந்து, ஓட்டப்பந்தயம், ஹாக்கி, பெருநடைப்போட்டி, டெனிஸ் ஆகிய போட்டிகளில் இந்தியர்கள் இன்று காணாமல் போய்விட்டார்கள். பொருளாதாரப் பிரச்சனையினால் இவர்கள் இத்துறையில் நிலைக்க முடியாமல் போனது ஒரு புறமிருக்க, அரசாங்கம் திட்டமிட்டே இவர்களை ஒதுக்கியதுதான் உண்மை.

    விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு முறையானப் பயிற்சிகள் மூலம் உருவாக்க வேண்டிய இடம், ஆரம்பப்பள்ளிகளும், இடைநிலைப் பள்ளிகளும்தான். ஆனால், இனப்பாகுபாட்டை காட்டக் கூடாத பள்ளித் தலைமையாசிரியர்களும்,பள்ளி முதல்வர்களும் மலாய்க்காரர்களாக இருந்ததால், சீன, இந்திய மாணவர்களை முளையிலேயே கிள்ளி எறிகிறார்கள்.

    மலேசிய விளையாட்டு மன்றம் நடத்தும் போட்டிகளில் மலாய் மாணவர்களே அதிகமாகப் பங்கு பெறுவதைக் கண்கூடாகக் காணலாம்.இதன் தாக்கம் தேசிய நிலையிலும் பிரதிபலிக்கின்றன. தேசிய காற்பந்து போட்டிகளில் ஒருகாலத்தில் அதிகமான இந்திய விளையாட்டாளர்கள் விளையாடிய இடத்தில் ஒருவருக்கு மட்டும் வாய்ப்புக் கொடுப்பது எந்தவிதத்தில் ஞாயம்? சீனர்களை அடியோடு இந்த விளையாட்டில் இல்லாமல் செய்துவிட்டு தேசிய ஒற்றுமை பற்றிப் பேசுவது அர்த்தமற்றது.

    தேசிய விளையாட்டு வாரியத்திற்கு இந்திய இயக்குநர் ஒருவரை நியமனம் செய்யவிருக்கும் தகவலைச் சொல்லியிருக்கிறார் டத்தோ மு.சரவணன். பல மலாய்க்கார அதிகாரிகள் மத்தியில் தமிழர் ஒருவரை மட்டுமே நியமிப்பது நல்ல பலனைத் தராது என்பது தெளிவு. அங்கேயும் கோட்டா முறையில் மலாய்க்காரர்கள் பேசுவார்கள், முடிவு செய்வார்கள். நமக்காகப் போராடும் நபர்களை மட்டுமே நியமியுங்கள். தலையாட்டிப் பொம்மைகளும் ஜால்ராக்களும் இனி நமக்கு வேண்டாம்.

    அமைச்சரவையில் ஓர் அமைச்சர் மட்டுமே இருந்த வேளையில் இந்தியச்முதாயம் இழந்தது அதிகம். அந்த கண்ணாமூச்சு வேலைகள் எல்லாம் இனியும் வேண்டாம். நமது இந்திய இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் மீண்டும் சிறந்து விளங்க உதவுங்கள். நமது இளைஞர்களின் மீது படிந்துள்ள கறைகளைப் போக்குங்கள்.

    இளைஞர்களாக இருக்கும் அமைச்சரும், துணையமைச்சரும் சாதனைப்படைக்க வேண்டும். இந்திய இளைஞர்கள் உலகளவில் சாதனைப் படைக்க உதவுங்கள்!

    Share
  • அரசியல் கொக்குகள்

     

    -வே.ம.அருச்சுணன் – மலேசியா

    அழகிய நாடு
    அற்புத வளங்கள்
    கல்வி குறைவென்றாலும்
    அறிவான மக்கள்
    பேதம் அறியா
    அன்பு தெய்வங்கள்
    மாறா குணங்கள்
    அமைதியான வாழ்க்கை
    பொது நலம்
    கடந்து நூற்றாண்டில்……!

    புதிய மனிதர்கள்
    விநோத சிந்தனைகள்
    சுய கௌரவம்
    பொது வாழ்வில்
    சுரங்கம் அமைத்து
    நாட்டை மறந்து
    வீட்டை வளர்க்க
    சித்து விளையாட்டு
    சுயநலம்
    இந்த நூற்றாண்டில்……!
    மகாத்மாக்கள்
    சென்ற நூற்றாண்டு முதலே
    பயணித்துவிட்டார்கள்……!

    இன்று,
    அரசியல் வானில்
    அநீதிகளுக்கு மகுடம்
    அறப்போர்
    ஓரமாய் ஒதுங்கிக் கொண்டது
    அடாவடிகள்
    தலையெடுப்பால்
    நதிகள் நாசமாயின
    நீர்வாழ் அழிந்தன…….!

    பொய்யான
    அரசியல் சுனாமியால்
    மக்கள் சிரச்சேதம்
    கூடி வாழ்ந்த மூவினம்
    மண்ணாகியது
    வம்பும் வழக்கும்
    தொடராகின…..!

    நாட்டின் அமைதி
    அவர்கள் விரும்பாதது
    கலங்கி குட்டையில்
    மீன் பிடிக்கும்
    அரசியல் கொக்குகள்……!
    மக்களை
    மாக்களாக்கும்
    அரசியலாரிடம் எச்சரிக்கை
    துஸ்டனைக் கண்டால் தூரவிலகு
    பெரியோர் சொன்னது தப்பாகா……!

    நாட்டு நலம்
    முன்னெடுத்து
    சபதம் எடுத்திடு
    மக்கள்
    அரசியலாரிடமிருந்து
    நாட்டைக் காக்திடு……!

    நாடு
    இடுகாடாய் மாறு முன்னே
    சுதந்திரத்தைக் காத்திடு
    சிம்மாசனத்தில் அமர்ந்து
    எக்காளமிடும் அரசியலார்
    திமிரினை அடியோடு
    வீழ்த்திடுவீர்……!

    நாட்டைக் காக்கும்
    வீரத்திருமகனே
    நாளைய பொழுது
    நலமாய் இருக்கட்டும்
    வெற்றிமுரசு வேகமாய் ஒலிக்கட்டும்………!

    Share
  • எதிர்காலம் மண்ணாகலாமா?

    -வே.ம. அருச்சுணன் – மலேசியா

     

    நடந்து முடிந்த
    பதின்மூன்றாவது தேர்தலில்
    மூவினத்தின்
    அடையாளம் தெரிந்தது…..!

    மூன்று வந்தேறிகளுக்கும்
    நிலைமை தெரியவில்லை
    ஆட்டத்தை நிறுத்தவில்லை
    வயிற்றுக்காக வாடிய மக்கள்
    வந்த இடத்தில்
    வகை தெரியாமல் வாழ்கின்றன…..!

    இங்கே
    ஏற்றம் தராது மந்திரத்தை
    துணிவாய் முழங்குவதும்
    ஒருவரைவொருவர்
    தின்று ஏப்பமிட எண்ணுவதும்
    வீண் வம்பு
    சொன்னால் நம்பு…..!

    எடுப்பது பிச்சை
    பேசுவதோ கொச்சை
    பேச்சில் ஒற்றுமை
    நடப்பில் வேற்றுமை
    அகம்பாவம்
    தனக்கே எல்லாமென்ற
    குறுகிய உள்ளம்
    சிறக்குமா இந்த பெருநிலம்….?

    கேடு கெட்ட உள்ளமே
    துன்மார்க்கனே
    சுனாமி
    எந்த உருவில்
    வருமென்று தெரியுமா….?

    முதுகொடிந்த
    தமிழனுக்கு இன்னுமா
    சோதனைகளும்….வேதனைகளும்……?

    ஒரு சொல் கேளீர்
    சீன சமூகம்
    அவர்களோடு கூடிப்பழகு
    ஒற்றுமையின் உச்சம் தெரியும்
    போராடும் வல்லமை புரியும்
    அவர்கள்
    மொழி….பண்பாடு
    கணமும் மறந்ததில்லை
    எழுச்சியைக் கிஞ்சிற்றும்
    துறந்ததில்லை…….!

    யதேச்சயாய் எதையும் நம்புவதில்லை
    யாரையும் ஏற்பதும் இல்லை
    சுயமாய் சிந்திப்பதும்
    செயல்படுவதும்
    அவர்களின் வெற்றிக் கவசங்கள்……!

    உண்மை உணர்வீர்
    இனிய வாழ்வு
    மாலையுடன் காத்திருக்கிறது ஏற்பீர்…..!

    இளையோரே முன்வருவீர்
    தமிழர் வாழ்வுக்கு வழிகாண்பீர்
    அடிமை வாழ்வைத் துறந்தே
    சுயமாய் வாழ்வு சிறக்க
    சொந்தத் தொழில் புரிவோம்
    அடிமைத்தொழிலை மறந்து
    செல்வச் சீமானாகத் திகழ்வோம்……!

    கையேந்தும் சமூகம் நாமில்லை என்றே
    உரக்கக்கூறுவோம்

    ஒரே குரலில்……!

    Share
  • எழுச்சி

    வே.ம.அருச்சுணன் – மலேசியா

    “வெள்ளம் ஏறிடுச்சாம்…..! வெள்ளம் ஏறிடுச்சாம்……!”

    “வெள்ளம்…….எங்க  ஏறிடுச்சு?  விவரமா……..சொல்லு மணியம்….!”

    “வேற எங்க ஜீவா ….! நம்ம…… தமிழ்ப்பள்ளியிலதான்…..வெள்ளம் ஏறிடுச்சாம்….!”

    “ நேத்துப் பேஞ்ச செம மழைல…….வெள்ளம் ஏறாம இருக்குமா…..?”

    தாழ்வு பகுதியிலே அமைந்திருந்த அப்பள்ளி மழைக்காலங்களில் வகுப்பறைகளில் தண்ணீர் ஏறிவிடுவது வழக்கமான ஒன்றுதான்.கடந்த இருபது வருடங்களாக அப்பள்ளி வெள்ளப் பிரச்னையால் நொந்து நூலாகிப் போனது!

    பள்ளியின் முன்னாள்  மாணவர் சங்கத்தலைவர் மணியமும் செயலாளர் ஜீவாவும் பள்ளிக்கு விரைகின்றனர்.

    இவர்களுக்கு முன்னதாகவே தலைமையாசிரியர் இராமநாதன்,தன் அலுவலகத்தில் ஏறிப்போயிருந்த வெள்ள நீரை ‘பிளாஸ்டிக்’  வாளியில்  அள்ளி  வெளியில் ஊற்றிக்கொண்டு இருந்தார். பள்ளி  ஆசிரியர்கள் சிலரும் அவருக்கு உதவுகின்றனர்.

    பள்ளிப் பணியாளர்கள்  மற்ற வகுப்புகளில்  ஏறிப்போயிருந்த நீரைச்  சிரமப்பட்டு இறைத்துக் கொண்டிருந்தனர்! பல மணி நேர போராட்டத்தின் எதிரொலியை களைத்துப்போன  அவர்களின் முகங்கள் தெளிவுபடுத்திக்கொண்டிருந்தன!

    எதிலும் முந்திக் கொள்ளும் மணியத்திற்கு தான் வருவதற்கு முன்பே தோட்ட மக்கள் பலர் அங்கு கூடிப்போயிருந்தது மனதில் வெட்கத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவு மணியத்தின் முகம்  சுருங்கிவிட்டது! கூட்டத்தில் ஒருவனாக நெருங்கிய நண்பன்  சுந்தரம் இருந்தது மணியத்திற்கு  கோபமாக இருந்தது! அவன் விசியத்தைச் சொல்லியிருந்தால் முன்னாடியே வந்து உதவியிருக்கலாமே என்று மனம் வருந்துகிறார்!

    “சார்…! சார்….! நீங்கே வெளியே வாங்க. நாங்க  தண்ணீர இறைக்கிறோம் …….!”மணியும், தலைமையாசிரியரிடமிருந்த வாளியை வாங்கி, ஓரடித் தண்ணீருக்குள் மூழ்கிப்போயிருந்த அவரது அலுவலகத்திலுள்ள தண்ணீரை ‘மடமட’ வென்று இறைக்கிறார். ஜீவாவும் அவருடன் சேர்ந்து கொள்கிறான்.

    அங்கு வந்த பலரும் வேலையில் மும்முரம் காட்டுகின்றனர்.சிறிது நேரத்தில் தண்ணீர் வேகமாக அலுவலகத்திலிருந்து வெளியேறத் தொடங்குகிறது. அரை மணி நேரத்தில் அலுவலகத்திலிருந்த  தண்ணீரை முற்றாக வெளியேற்றிய போது, தலைமையாசிரியரின் முகத்தில்  புன்னகை மலர் பூக்கிறது.

    “தலைவரே……அவசரத்திலே ஓடிவந்ததால உங்ககிட்ட சொல்லாம வந்துட்டேன்,மன்னிச்சிடுங்க…..!” சுந்தரம் பயத்தால் தயங்கி நின்றான்.“சரி…சரி….அதான் வந்துட்டோமில்ல….கவலைய விடு….! ஜீவா,சுந்தரம்…. நாம படிச்ச முதலாம் வகுப்பைப் போய்ப் பாப்போம்…..தண்ணீர் ஒரு அடிக்கு மேலே ஏறி நிக்குதாம்…..!” வெள்ளத்தில் சுவரில் மாட்டப்பட்டிருந்த போதனைக்குரிய வாசிப்பு  அட்டைகள் பல தண்ணீரில் மிதந்தன. அவை மீண்டும் பயன் படுத்துவதற்கு  முற்றாய்த் தகுதியிழந்திருந்தன! ஆசிரியர்களின் உழைப்பு பாழாய்ப் போனது மணியத்திற்கு தாங்கொணா வருத்தத்தைத் தருகிறது!

    நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தான் முதலாம் ஆண்டில் படிக்கும் போது தரையில் அமர்ந்து, மணல் பரப்பிய நீண்ட பலகையிலான பெட்டியில் எழுதிப் பழகிக் கொடுத்த அழகம்மா….. வாத்தியாரம்மா நினைவுக்கு வருகிறார். ஐம்பதாம் ஆண்டுகளில்,தரையில் அமர்ந்து பலரோடு தானும் கல்வி பயின்ற அந்த நினைவு மின்னல் கீற்று பளிச்சென நினைக்கு வருக்கிறது வந்திருந்த,  முன்னாள் மாணவர்கள்  எல்லா  வகுப்புகுகளிலும்  ஏறியிருந்தத் தண்ணீரை இறைக்கின்றனர். தண்ணீரில் மிதந்த கொண்டிருந்த நோட்டுப் புத்தகங்கள்,பயிற்சிப் புத்தகங்கள் இன்னும் சில பாட நூல்களை எடுத்து வெயிலில் காய வைத்துக் கொண்டிருந்தனர் சிலர்.

    மூன்று மணி நேரம் போராட்டத்திற்குப் பின் அலுவலகம்,வகுப்பறைகள் என்று பத்து அறைகளில் ஏறிய தண்ணீர் முற்றிலுமாக இறைக்கப்படுகிறது.எல்லா வகுப்பறைகளும் சேரும் சகதியுமாகக் காணப்படுகின்றன. வெள்ளத்தால் செத்து மடிந்த எலிகளும், பூச்சிகளும், துர்நாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

    எத்தனையும் பொருட்படுத்தாமல்,சேற்றையும் சகதியையும் வாளிகளிலும் மற்ற பாத்திரங்களிலும்,அள்ளி  வெளியில்  கொட்டிக் கொண்டிருந்தனர். அங்கிருருந்த முன்னாள் மாணவர்கள். நாளை மாணவர்கள் கல்வி கற்க வேண்டுமே என்ற அக்கறையினால், உடல் உழைப்பை  முழுமையாகக்  கொடுத்து உழைத்துக் கொண்டிருத்தனர். பொது அமைப்பைச் சேர்ந்த பலரின் உழைப்பும் அக்கறையும் அங்கு மிகுந்து காணப்படுகின்றன!

    கடும் உழைப்பை வழங்கிக் கொண்டிருக்கும் முன்னாள் மாணவர்களுக்கு, மதிய உணவு வழங்க தலைமையாசிரியர் ஏற்பாடு   செய்திருந்தார். அவர்,பணியில் ஈடுபட்டிருந்த அனைவருடனும் ஒன்றாய் அமர்ந்து மதிய உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

    “டத்தோ…..வந்துட்டாரு, டத்தோ வந்துட்டாரு…..!” மணியத்தின் அருகில் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்த ஜீவாதான் எல்லாரது கவனமும் ஈர்க்கும் வகையில் உரத்தக் குரலில் கூறுகிறான். டத்தோவை நோக்கி எல்லாரது கவனமும் திரும்புகிறது.

    உணவை உண்டு  முடித்தவர்கள் தலைமையாசிரியருடன் அவசர அவசரமாக  டத்தோ  மனோகரனை எதிர் கொண்டு வரவேற்கின்றனர். மணியம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்; இன்னும் அவர் உணவை உண்டு முடிக்கவில்லை!

    டத்தோ மனோகரனும் மணியமும் ஒரே வகுப்பில் பயின்றவர்கள். அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள்.தங்கள் பள்ளியில் பயின்ற தம் நெருங்கிய நண்பர்  சட்டமன்ற உறுப்பினராக வருவதற்கு மிகக் கடுமையாக உழைத்தவர் மணியம். கடந்த இருபது வருடங்களாகச் சட்டமன்ற உறுப்பினராகவும் மாநில ‘ஆட்சிக்குழு’ உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

    முதல் முறையாக, அவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்ற போது இப்போது கொண்டிருக்கும் ‘டத்தோ’ பட்டத்தையோ, பிற பதவிகளையோ கொண்டிருக்கவில்லை. பதவிக்கு வந்த ஐந்தாண்டுகளில் ‘மளமள’ வென்று டத்தோ பட்டமின்றி பல பதவிகளையும் பட்டங்களையும் பெற்று அரசியல் வானில் மின்னும் நட்சத்திரமாக ஜொலிக்கத் தொடங்கிறார்.

    ‘முன்னாள் மாணவர் சங்கம்’, அவரைச் சிறப்புடன்   பள்ளிக்கு  அழைத்து      தலைவர் என்ற முறையிலும் நெருங்கி நண்பர் என்ற முறையிலும், மணியம் சில கோரிக்கைகளை அவர் முன்  வைக்கிறார்.  மிக முக்கியமான கோரிக்கையாக,எண்பது ஆண்டுகாலமாக இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ்ப்பள்ளிப் பிரச்னை! இதுவரை பல்வேறு காரணங்களுக்காக நான்கு முறை  பள்ளிக் கட்டிடம் இடம் பெயர்ந்துள்ளது. தாழ்வு நிலங்களில் பள்ளி அமைக்கப் பட்டதன் விளைவே அடிக்கடி வெள்ளப் பிரச்னையில் பள்ளி சிக்கிப் பல சிரமங்களை எதிர்நோக்கி வந்துள்ளது. இதற்கு நிரந்திரத் தீர்வாகப், புதியப் பள்ளியை மேட்டு நிலத்தில்   அமைத்து தருமாறு கோரிக்கை விடுக்கிறார் மணியம். மறுமொழி பகன்ற, ஓய்பீ மனோகரன், அடுத்த ஐந்தாண்டுகளுக்குள், பள்ளியை மேட்டு நிலத்தில், கட்டி வெள்ளப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதாக உறுதி கூறியபோது நிகழ்வு நடந்த மண்டபத்தின் கூரையே இடிந்துவிடும் அளவிற்கு கையொலி ஓங்கி ஒலித்தது! மாலையும் மரியாதையும் பெற்றுக் கொண்டு போகிறார்.

    அன்று,கூட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்களுக்குப் புதிய நம்பிக்கை பிறந்தது. இதற்கு முன் பல அரசியல்வாதிகளைப் பார்த்தவர்களுக்கு,ஓய்பியின் சாதுர்யமானப் பேச்சு அனைவரையும் தலைகீழாய்ப் பிரட்டிப் போட்டிருந்தது! ‘எங்க வீட்டுப் பிள்ளை’ நிச்சயம் புதிய பள்ளியைக் கட்டிக் கொடுத்துவிடுவார் என்று பந்தயம் கட்டினர்!

    மறுநாள்!

    “ஹல்லோ…..யாரு பேசுறது…?”

    “ஓய்பீ.மனோகரன் போசுறேன்….!”

    “என்ன….! ஓய்பீயா பேசுறது……?” ஆச்சரியப் படுகிறார் மணியம்.

    “பள்ளி விசியமா ஏதும் பேசனுமா ஓய்பீ…..? சொல்லுங்க செயலவை உறுப்பினர்களை அழைச்சிக்கிட்டு நேரில் வர்றேன்….!”

    “அதெல்லாம்….. ஒன்னும் வேணாம்….! நாளை புதன் கிழமை காலை மணி பத்துக்கு என்னோட ஆபீசுக்கு வந்துடு….. சில முக்கியமான விசியங்களை உன்னோடு பேசனும்…!”

    மறுநாள், காலை ஒன்பது மணிக்கே ஓய்பியின் அலுவலகம் அமைந்த பதினான்காவது மாடிக்குச் செல்கிறார் மணியம். அலுவலகத்தில் திருவிழாக் கோலம் போல் மக்கள் வெள்ளம் காணப்படுகிறது! மணியத்திற்கு அங்கே முன்னே பின்னே சென்றது கிடையாது! அரசியல்வாதியாக இல்லாததே இது போன்ற இடங்களுக்குச் செல்லாததே காரணமாகும்!  அங்கு குழுமியிருந்தவர்கள் பெரும்பாலும் அரசியல் தொடர்பு கொண்டவர்களாக இருந்தனர்!

    குறித்த நேரத்தில், செயலாளர் வந்து மணியத்தை ஓய்பீ அறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். பால்ய நண்பர் என்ற தகுதியை மட்டுமே கொண்டிருந்த மணியத்திற்கு  ஓய்பியின் உடனடித் தரிசனம் வியப்பையும்,நண்பர் என்ற நட்புக்கு வழங்கிய  மதிப்பையும், மரியாதையும் மணியத்தின் உள்ளத்தில் ஓய்பியின் மதிப்பு இமயத்தை தாண்டிக் கொண்டிருந்தது!

    “மணியம்…..எப்படி இருக்கே….?”

    “நலமா  இருக்கேன்…..! எனக்கு என்ன குறைச்ச ஓய்பீ….?”

    “இருக்கிறது சொந்த வீடா….?”

    “ஆமாம்…. சொந்தவீடுதான் ஓய்பீ…..!”

    “எத்தனை வீடு வெச்சிருக்கே…..?”

    “ஒரு வீடுதான்….!”

    “எத்தனைப் புள்ளைங்க இருக்காங்க…?”

    “நான்குப் பிள்ளைங்க இருக்காங்க….!”

    “பிளைகள்……எல்லாம் வேலை செய்யுறாங்களா…?”

    “மூன்று பேர் வேலை செய்றாங்க…..கடைசிப் பையன் எம்யூல கடைசி ஆண்டு இஞ்ஜியரிங் செய்யிறாரு….!”

    “உனக்கு….வருமானம்…..போதுமானதா இருக்கா…?”

    “இருபது ஆண்டுகளாக நானும் மனைவியும் செய்யிற பூவிற்பனை மூலம் போதுமான வருமானம் கிடைக்குது. திட்டமிட்டு வாழ்றதால ஆண்டவன் புண்ணியத்தில நிம்மதியா வாழ்ந்துகிட்டு இருக்கோம். அது போதும்…..ஓய்பீ….!”

    “மணியம்…..என்னப்பா நீ  பிழைக்கத் தெரியாத ஆளா இருக்கிறீயே…..!”

    “ஓய்பீ…..நீங்க என்ன சொல்றீங்கனு எனக்கு விளங்கல….!”

    “நான்….ஒரு அரசியல்வாதி, காற்று இருக்கும் போது தூற்றிக் கொள்ளனு முனு பழமொழி சொல்லுது….! உனக்கு நிலம் போட்டுத்தர்ரேன். பட்டம் போடுரேன்.வீடு போட்டுத் தர்ரேன். பணம் தர்ரேன்…..! எது வேணும் சொல்லு….? உடனே தர்ரேன். நாம ஒரே வகுப்பில படிச்சோம் என்ற உறவினால உனக்காக எதுவும் செய்யிறதுக்குத் தயாராஇருக்கேன்! கொடுக்கிறத வாங்கிகிட்டு சும்மா இருப்பியா……!இதவுட்டுட்டு….. பள்ளியப் புதுசாக் கட்டனுமுனு….பப்ளிக்கா கூட்டத்தில பேசிக்கிட்டுத் திரியாதே…..!”

    “என்ன……ஓய்பீ……இப்படிப் பேசுறீங்க…….?”

    “மணியம்……நீ ஒன்ன நல்லா புரிஞ்சிக்கனும். என் அரசியல் வாழ்வுக்கு குறுக்கே வர்ர யாரையும் நான் விட்டு வைக்கிறதில்லை…..! என் வழியிலக் குறுக்கிட்ட நண்பன் என்றுகூடப் பார்க்க மாட்டேன்!”

    ஓய்பியின் பேச்சைக் கேட்டு மணியம் அதர்ச்சியடைகிறார் ஒரு கணம்.

    “ஐஞ்சி வருசத்தில……நாம படிச்சப் பள்ளியக் கட்டித்தர்ரதா…..பெற்றோர் முன்னிலையில் வாக்கு கொடுத்திங்களே……ஓய்பீ!”

    “மணியம்…..என்னைப் போன்ற அரசியல்வாதிங்க…..சூழ்நிலைக்குத் தகுந்தாப் போல பேசுவோம்…..! நாங்கப் பேசுறதயெல்லாம் உண்மையினு பொதுமக்கள் நினைச்சிக்கிட்டா அதுக்கு நாங்கப் பொறுப்பில்லையே….?” மணியத்தைப் பார்த்து ஏளனமுடன் கடகடவென….சிரிக்கிறார். அகம்பாவம் அவரது குரலில் தலைவிரித்து ஆடுகிறது….!

    அவமானத்தால், மணியம் தலைகுனிகிறார்! ஏன் வந்தோமுனு ஆயிடுச்சு! இனியும் அங்கிருக்கத் தன்மானம் அவருக்கு இடம் தராததால்,உடனே அங்கிருந்து வெளியேறுகிறார்!

    பொதுவாழ்வில்  சோரம் போகாத ஒரு சொக்கத் தங்கம் வெளியில் செல்வதை முதல் முறையாக வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்றார் ஓய்பீ!  மணியம்,  தன் பால்ய நண்பன் என்று கூறுவதில் மனதளவில் பெருமைப் பட்டுக் கொள்கிறார்!

    கபடம் நிறைந்த மற்ற அரசியல்வாதிகள் போல் அல்லவா,தன் ஆருயிர் நண்பனும் நடந்து கொண்டான்! ச்சே…..என்ன உலகமடா இது….! தன்னுடன் படித்தவனே…..ஏங்கித்தவிக்கும் இந்த ஏழைச் சமுதாயத்தைத்…… தன் சுயநலப் போக்கால்  கைதூக்கிவிட முன்வரவிலையே….?

    நாடு சுதந்திரம் பெற்று அரை நூற்றாண்டு கடந்துவிட்டது.நாடு துரித வளர்ச்சியைப் பெற்றுவிட்டது. எல்லா இனமும் வாழ்வில் உயர்ந்துவிட்டன!  நமது வாழ்வில் மட்டும் எந்தவிதப் பெரியமாற்றமும் ஏற்படாமல் போய்விட்டதே? நல்ல சூழலில் கல்வி கற்க ஒரு பள்ளியைக் கட்டமுடியவில்லையே? இனி….யார்தான் நமக்கு உதவப் போகிறார்கள்?  மிகுந்த மனக் கவலையுடன் வீடு திரும்புகிறார் மணியம்.

    விசியத்தை ஜீவா அறிந்த போது வெகுண்டெழுந்தான், “தலைவரே……நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க….மிக விரைவில ஏதோ… ‘சுனாமி’ வரப்போர்ரதா பேப்பர்ல போட்டுருக்காங்க! ம்…..வீசிக்கிட்டிருக்கிற காற்று எப்போதும் ஒரே திசையில வீசப்போறதில்லா…..!”

    மலேசியாவில் மட்டுமல்லாது வெளிநாட்டில் வசிக்கும் முன்னாள் மாணவர்களையெல்லாம் தொடர்பு கொண்டு புதிய பள்ளியைக் கட்டும் திட்டத்தை 2007 ஆம் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் அறிவிக்கின்றார். சற்றும் எதிர்பார்க்காத அமோக ஆதரவு கிடைக்கிறது! ஒவ்வொரு உறுப்பினரும் தங்களின் உரிமைக்காகப் போராட உறுதி கொள்கின்றனர். இதுவரையில் ஏமாந்தது போதுமென்ற முடிவு எடுக்கின்றனர்.மக்கள் விழித்துக் கொள்கின்றனர்! ஐந்து ஆண்டுகளாக மிகக்கடுமையாக உழைக்கிறார் மணியம்.

    தான்   இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது  என்ற இறுமாப்புடன் உலாவந்த டத்தோ,அவரது நடவடிக்கையில் அதிருப்தி அடைந்த அவரைக் கட்சியிலிருந்து நீக்கிவிடுகிறது! நாட்டில் அதிநவீன முறையில் கட்டப்பட்ட முதல் தமிழ்ப்பள்ளியின் திறப்புவிழாக் காட்சியைப் பதவி இழந்த டத்தோ மனோகரன்  தொலைக்காட்சியில் கண்டு வெட்கித் தலைகுனிகிறார்!

    Share
  • மலேசிய நாட்டில் தமிழ் இலக்கிய வளர்ச்சியும் எதிர்காலமும்!

    வே.ம.அருச்சுணன் – மலேசியா

    முன்னுரை

    மலேசியத் தமிழ் இலக்கியம் ஏறக்குறைய 126ஆண்டுகளுக்கும் மேலான   பழமை வாய்ந்ததாகும். மலேசியத் தமிழ் இலக்கியத்தின் செவிலித்தாய்களாக  விளங்கியவை பத்திரிக்கைகளாகும். மலாயாவில் தோன்றிய முதல்  பத்திரிக்கையாகக் கருதப்படுவது சி.கு.மகுதும் சாயபு அவர்களால் 1875-இல் வெளியிடப் பட்ட “சிங்கை வர்த்தமானி” என்னும் இதழே.( மா.இராமையா,1996) அதனை- யடுத்து மலேசியாவில், பினாங்கில் 1876 இல் “ தங்கை நேசன்” என்னும் பத்திரிக்கை வெளிவந்துள்ளது . “உலக நேசன்”,  “சிங்கை நேசன்”,  “இந்து நேசன்”  ஆகிய பத்திரிக்கைகள் 1887-இல் வெளிவந்துள்ளன.(இரா.தண்டாயுதம்,1986).

    சிங்கப்பூரில் 1887-இல் சி.ந. சதாசிவப் பண்டிதரின் “வண்ணையந்தாதி”என்ற நூல் தொடக்கமாக அமைந்தது. (ஏ.ஆர்.எ.சிவகுமாரன்: “சிங்கப்பூர் மரபுக்கவிதைகள்)  மலேசியாவின் முதல் தமிழ் இலக்கியப் படைப்பாகக் கருதப்படுவது  நாகப்பட்டினம் மரு.வெங்கடாசலம் பிள்ளை அவர்களால் இயற்றப் பெற்ற “ ஆறு முகப் புதிகம்” என்ற கவிதை நூலாகும்.( இராஜம் இராஜேந்திரன்,1988) மலேசியத் தமிழ்ப் படைப்பிலக்கிய வகைகளுள் கவிதை இலக்கியமே முதலில் தோன்றியது. அதற்கடுத்த நிலையில் நாவலைக் குறிப்பிடலாம். மலேசியாவின் முதல் நாவல் க.வெங்கடரத்தினம் அவர்களால் 1917-இல் எழுதப்பட்ட “கருணாசாகரன் அல்லது காதலின் மாட்சி(வே.சபாபதி,2004) முதல் மலேசியத் தமிழ்ச் சிறுகதை வே.சின்னையா 1930 இல் வெளியிடப்பட்ட “ நவரச கதா மஞ்சரி” எனும் தொகுப்பில் அடங்கியுள்ள ஐந்து சிறுகதைகளாகும்.( ந.பாஸ்கரன்,1995).

    மலேசியாவில் வெளிவந்த ஆரம்ப கால எழுத்துக்கள் தமிழ்நாடு மற்றும் இலங்கையிலிருந்து தருவிக்கப்பட்டவை.அவை மலேசியாவின் சூழலை மையமாகக் கொண்டு எழுதப்படவில்லை.மேலும் எழுதிய எழுத்தாளர்கள் தமிழ்நாடு மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்களாவர். ( முரசு நெடுமாறன்& கிருஷ்ணன் மணியம்,2005). உண்மையான மலேசியத் தமிழ் இலக்கியம் 1946-ஆம் ஆண்டுக்குப் பின்னரே தோன்றியது என்ற கருத்தை மா.இராமையா(1978) முன் வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

    இந்தத் தொடக்கங்களிலிருந்து இலக்கிய வரலாறு எழுச்சியும் தளர்ச்சியும் கண்டு தொடர்ந்து வளர்ந்திருக்கிறது. அச்சு வசதியும் ஊடக வளச்சியும்,அவற்றைப் பெறவும் பெருக்கவும் நிதி வசதியும் உள்ள இந்த நவீன காலகட்டத்தில் வாழும் நாம்,இவையெல்லாம் மிக அரிதாக இருந்த ஒரு மங்கிய தொடக்க காலத்தில் உண்மையான தமிழ்மொழி பண்பாட்டு அர்ப்பணிப்பு உணர்வுடன், இந்த இலக்கிய வளர்ச்சிக்கு வித்திட்ட வித்தகர்களான நம் முன்னோடிகளை மானசீகமாகப் போற்றி வணங்குதல் வேண்டும்

    2. மலேசியத் தமிழ் இலக்கியத்தை வளர்ப்பதில் கல்வி சார்ந்த மையங்களின் பங்களிப்பு

    பொருளீட்டுவதற்கும் நாட்டை மேம்படுத்தவும் மலாயாவுக்கு வந்த உடல் உழைப்புத் தொழிலாளார்களான தமிழர்கள் தங்களின் தாய்மொழியை மறக்காமல் இருந்ததோடு அம் மொழியை வளர்ப்பதிலும் கவனம் செலுத்தினர். ஆங்கில அரசு 1912-இல் கொண்டுவந்த தொழிலாளர் சட்டம் (Labour Ordinance) தோட்டங்களில் சிறு சிறு தமிழ்ப்பள்ளிகள் உருவாக வழி வகுத்தன. ஏழு வயதிற்கும் பதினான்கு வயதிற்கும் இடைப்பட்ட பத்து பிள்ளைகள் இருப்பார்களேயானால் அவர்களுக்குத் தோட்ட நிருவாகம் கட்டாயமாகக் கல்வி வழங்க வேண்டும் என்பதை இச்சட்டம் வலியுறுத்தியது. இந்தச்சட்டம் அமுலுக்கு வந்த பதினாறு ஆண்டுகளுக்குள்(1938) இந்நாட்டில் 535 தமிழ்ப்பள்ளிகள் இருந்ததோடு 28,098 மாணவர்கள் பயின்றனர்.(சோ.சுப்பிரமணி,2005)அன்று முதல் இந்நாட்டிலே பிறந்து வளர்ந்த தமிழர்களின்பிள்ளைகளுக்குத் தமிழ் கற்பிக்கப்பட்டதால் இந்நாட்டில் இன்றும் தமிழும் தமிழ் இலக்கியமும் தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றன; வளர்கின்றன என அழுத்தமாகக் கூறலாம். நாடு சுதந்திரம் அடைந்த நேரத்தில் (1957-இல்) 888 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன.அந்த எண்ணிக்கை தற்போது (2011-இல்) 523 ஆக குறைந்துள்ளதாக சமூகவியூக அறவாரியம் அறிவித்துள்ளது.

    (Social Strategic Foundation,2003).

    இராசக் கல்வி அறிக்கை(Razak Repot,1956) தொடக்கத் தமிழ்ப் பள்ளி- களில் ஆறு ஆண்டுகளுக்குத் தாய்மொழி வழி கற்றல் கற்பித்தலுக்கு வழிவகுத்தது. இரஹ்மான் தாலிப் அறிக்கையின் (1960) வழி இடைநிலைப்பள்ளிகளில் பயிலும் தமிழ் மாணவர்களும் தங்கள் தாய்மொழியைக் கற்க வழி பிறந்தது. பெற்றோர் விருப்பத்தின் பேரில்,குறைந்தது பதினைந்து மாணவர்கள் இருப்பின்,தாய்மொழிக் கல்வி ( Pupils Own Language) வழங்கப்படுவதற்கு இக்கல்விச் சட்டம் வகை செய்கிறது .

    மூன்றாம் படிவதில் நடத்தப்படும் கீழ்நிலை மதிப்பீட்டுத் தேர்விலும் (Lower Secondary Evaluation) ஐந்தாம் படிவத்தில் நடத்தப்படும் மலேசியக் கல்விச் சான்றிதழ் (Malaysian Certificate of Education) தேர்விலும் தமிழ்மொழி ஒரு பாடமாக வைக்கப்பட்டுள்ளது
    இத்தேர்வில் தமிழ் இலக்கியத்தைத் தனியொரு விருப்பப் பாடமாக எடுத்துத் தேர்வெழுத விரும்பும் மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது (சுப்பிரமணி,2005). மேலே குறிப்பிடப்படுள்ள இம்மூன்று தேர்வுகளையும் மலேசிய த் தேர்வு வாரியம் ( Malaysian Examination Syndicate) நடத்துகிறது . பல்கலைக்கழக நுழைவுத்தேர்வாக விளங்கும் மலேசிய உயர்கல்விச் சான்றிதழ்த் தேர்விலும் ( Malaysian Higher School Certificate) தமிழ்மொழியும் தமிழ் இலக்கியமும் ஒரு பாடமாக வைக்கப் பட்டுள்ளது. இத்தேர்வினை மலேசியத் தேர்வுப் பேரவை ( Malaysian Examination Council) நடத்துகிறது.

    3. மலேசிய தேர்வு வாரியத்தின் அரிய பணியும் ‘ இலக்கியகம் ‘ தோற்றமும்

    மலேசியத் தேர்வு வாரியம் ( Malaysiyan Examination Syndicate) தொடக்கப்பள்ளி முதல் இடைநிலைப்பள்ளி வரையிலான எல்லா அரசாங்கத் தேர்வுகளையும் நடத்துகிறது . இதில் தமிழ்மொழியும் அடங்கும். தேர்வு வாரி- யத்தில் பணியாற்றும் தமிழ் அதிகாரிகள் தொடக்கப் பள்ளிகள் நடைபெறும் ஆறாம் ஆண்டு மதிப்பீட்டுத் தேர்வுக்கான ( Ujian Penilaiyan Sekolah Rendah) தமிழ்த்தாளில் சிறுகதை,நாவல் முதலிய நவீன இலக்கியப் பனுவல்களைக் கருத் துணர்க் கேள்விகளுக்குப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும். இது கட்டாயமான கேள்வியாகவும் விளங்குவதைக் காண முடிகிறது. அதுமட்டுமின்றி கட்டுரைக் கேள்வியாக சிறுகதை எழுதப்பனிக்கும் கேள்விகள் வழ்ங்கப்படுவதையும் காண முடிகிறது. மூன்றாம் படிவத்தில் நடத்தப்படும்கீழ்நிலை மதிப்பீட்டுத் தேர்வுக்கான (Lower Secondary Evaluvation) தமிழ்த் தாள்களிலும் நவீன இலக்கியப் பனுவல்கள் கருத்துணர்க் கேள்விகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. அதுமட்டுமன்றி ஒரு கதையின் தொடக்கத்தையோ முடிவையோ வழங்கி கதையெழுதப் பணிக்கும் கேள்விகளும் தேர்வுக்கு வழங்கப்பட்டுள்ளதைக் காணலாம். ஐந்தாம் படிவத்தில் நடத்தப்படும் மலேசியக் கல்விச் சான்றிதழ் ( Malaysian Certificate of Education) தேர்வுக்கான தமிழ்த் தாள்களில் மாணவர்களின் உள்ள உணர்வை வெளிப்படுத்தக் கோரும் கருத்துணர்க் கேள்விகள்
    (Affective Questions) பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய அணுகுமுறைகள் யாவும் இள வய- திலேயே மாணவர்களின் மனதில் இலக்கியச் சிந்தனைகளை விதைக்கும் பாராட்டுக்குரிய செயல்களாக் விளங்குகின்றன.

    மலேசியத் தேர்வு  வாரிய அதிகாரி திரு. ப.மூர்த்தி அவர்கள் இடைநிலைப் பள்ளி ஆசிரியர்களோடு இணைந்து பெரும் அதிரடி முயர்சிகளை மேற்கொண்டு இலக்கியம் எடுக்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழிகாட்டி நூல்களை வழங்கியதுடன் இடைநிலைப்பள்ளி இலக்கிய ஆசிரியர்களுக்கு பாடத்திட்டம்,பாடத்திட்ட விளக்கவுரை, வழிகாட்டி நூல்கள்,பயிற்சிகள்(modules) முதலியவற்றைத் தயாரித்து வழங்கினார். தேர்வுக்கான நூல்களான“பொன் விலங்கு” நாவல், காவிய நாயகி” நாடகம் ஆகிய நூல்களை முன்பணம் கட்டி தமிழகத்திலிருந்து 15,000 நூல்களைத் தருவிக்க  உமா பதிப்பகத்தார் பெரிதும் உதவியதுடன், “கவிதைப்பூங்கொத்து” எனும் தொகுப்பு நூலையும் இங்கேயே அச்சிட்டு வழங்கினர். அதுமட்டுமின்றி இலக்கியக் கலஞ்சியம் எனும் வழிகாட்டி நூலையும் வெளியிட்டு உதவினர். பொருள்ஈட்டுவதைக் கிறிக்கோளாகக் கொள்ளாமல், ஈக உணர்வோடு இந்நாட்டில் இலக்கியக் கல்வி சிறக்க.அந்நூல்களை அடக்கச் செலவுக்கும் குறைவாக வழங்கி அளப்பரிய சேவையை வழங்கியுள்ள உமா பதிப்பகத்தாரின் தொண்டு வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இரவல் நூல் திட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் 2005-ஆண்டில் தேர்வெழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 4000 ஆக உயர்வு கண்டது.

    இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் இலக்கியத்தை மேலும் வளர்க்க மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர்க் கழகம் (இலக்கியகம்) 22.4.2008 இல்அமைக்கப்பட்டுப் பதிவுப்பெற்றுள்ளது. இக்கழகத்தில் இடைநிலைப் பள்ளியில் இலக்கியம் கற்பிக்கும் ஆசிரியர்கள் உறுப்பியம் பெற்றுள்ளனர். இதன்வழி நமது எதிர்கால சந்ததியினர் இலக்கியப் பயிர் வளர்க்க அரசு வழி திறந்து விட்டிருக்- கிறது.மேலும், மலேசிய எழுத்தாளர் சங்கம் பிற இலக்கிய அமைப்புகளின் தொடர் முயற்சிகளின் பயனாக எதிர்வரும் 2012-ஆம் தொடக்கம் மலேசிய எழுத்தாளர், பாவலர் ஐ.இளவழகு அவர்கள் எழுதிய “இலட்சிய பயணம்” எனும் நாவல் எஸ்.பி.எம். தேர்வுக்காக முதல் முதலாகத் தேர்வு செய்யப் பட்டுள்ள செய்தி மலேசிய எழுத்தாளர்களின் வயிற்றில் பாலை வார்த்த ஒரு செய்தியாகும். எதிர்காலத்தில் தொடர்ந்து மலேசிய எழுத்தாளர்களின் படைப்புகள் இடம் பெறும் எனும் திடமான நம்பிக்கை எழுத்தாளர்களின் உள்ளத்தில் ஏற்படுத்தி விட்டது எனலாம். இந்நாட்டின் இலக்கியப் பயிர் மேலும் வளர்வதற்கு அமைந்த மற்றுமொரு சிறப்பான வழியாகும். தேர்வுகளில் இலக்கியம் எடுக்கும் எஸ்.பி.எம் மற்றும் எஸ்.டி.பி.எம். மாணவர்களின் எண்ணிக்கை பெருக வேண்டும்.

    4. மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறையின் பங்களிப்பு

    மலாயாப் பல்கலைக்கழ்க இந்திய ஆய்வியல் துறை தொடங்கப்பட்ட 1957- ஆண்டு முதல் மலேசியாவில் தமிழ்மொழி,தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ்ப் பண்பாடு வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகிறது. இத்துறையின் முதலாவது தலைவராக விளங்கிய பேராசிரியர் முனைவர் சேவியர் தனிநாயகம்அவர்களைத் தலைவராகவும் பேராசிரியர் முனைவர் ச.சிங்காரவேலு அவர்களைச் செயலாளர்- களாகவும் கொண்டு 1996-ஆம் ஆண்டில் உலகத் தமிழ் ஆரய்ச்சி நிறுவனத்தோடு (International Association for Tamil Reserch) இணைந்து முதலாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை இத்துறை நடத்தி வரலாறு படைத்துள்ளது ( மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்,1999). அது மட்டுமின்றி மலேசிய இந்தியர் காங்கிரசுடன் இணைந்து ஆறாவது உலகத் தமிழ் ஆரய்ச்சி மாநாட்டினையும் இந்திய ஆய்வியல் துறை வெற்றிகரமாக நடத்தியது. இவற்றோடு,1978-ஆம் ஆண்டில் மலேசியத் தமிழ்ச் சிறுகதைக் கருத்தரங்- கினையும்  1988-ஆம் ஆண்டில் தமிழ்க் கவிதைக் கருத்தரங்கினையும் 1996-ஆம் ஆண்டில் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து மலேசிய புதுக்- கவிதைக் கருத்தரங்கினையும் நடத்தியுள்ளது. பொது அமைப்புகளுடன்- இணைந்து வேறு சில மாநாடுகளையும் நடத்தியுள்ளது. அவற்றுள் குறிப்பிடத் தக்கவையாக விளங்குபவை 2005=ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது திருக்குறள் மாநாடு மற்றும் 2007-ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது உலகச் சித்தர் மாநாடு ஆகியவையாகும். மேலும் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை அண்டு தோறும் ஆய்விதழ் ஒன்றையும் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்மொழி,இலக்கியம்,பண்பாடு,சமுதாயவியல்,  வாழ்வியல், சமயம் போன்ற துறைகளைச் சார்ந்த தரமான கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. இத்துறையின் செயல்படுகள் இந்நாட்டின் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு அடித்தலம் அமைக்கிறது என்றால்  அது மிகையாகாது.

    5.மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் செயல்கள்

    மலாயாப் பல்கலைக் கழகத்தின்இலக்கியப் பணியை நினைவுகூறத்தக்கதாகும். மலேசிய இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் வகையில் மலாயாப் பல்கலை மாணவர்களால் 1986-ஆம் ஆண்டு தொடக்கம் கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளாக ஆண்டு தோறும் தேசிய அளவிலான சிறுகதைப் போட்டியை நடத்தி இன்று முதற்பரிசு இரண்டாயிரம் ரிங்கிட், இரண்டாம் பரிசு,  ஆயிரத்து ஐநூறு ரிங்கிட், மூன்றாம் பரிசு ஆயிரம் ரிங்கிட் மற்றும் ஒன்பது ஆறுதல் பரிசுகள் தலா இருநூறு ரிங்கிட் வழங்கப் படுகின்றன. பழைய புதிய எழுத்தாளர்கள் ஆர்வமுடன் எழுத உத்வேகத்தைக் கொடுக்கிறது. மாணவர்களுக்கும் தனியாகப் பரிசுகள் வழங்கி புதிய எழுத்தாளர்களை உருவாக்கின்றது. தொடர்ந்து இருபது ஆண்டுகளாக இப்போட்டி நடத்தப்படுவதுடன் வெற்றி பெற்ற சிறுகதைகளைத் தொகுத்து சிறப்புடன் தொய்வின்றி வெளியீடு செய்வது தமிழ் இலக்கிய வரலாற்றில் பெரும் சாதனையாகும். இப்பணியினை மேற்கொண்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களும் அவர்களுக்கு வழிகாட்டிகளாகத் திகழும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் பாராட்டுக்குரியவர்களாவர்.

    6. மலேசியத் தேசிய பல்கலைக்கழக இந்து பிரதிநிதித்துவ சபையின் சாதனைகள்

    மலேசிய தமிழ் இலக்கியத்திற்கு தன்னால் இயன்ற பணிகளை மலேசியத் தேசிய பல்கலைக்கழக இந்து பிரதிநிதித்துவ சபையின் மாணவர்கள் 1998-ஆம் ஆண்டு தொடங்கி பதின்மூன்று ஆண்டுகளாக “இலக்கியப் பயணம்” எனும் அரிய பணியை மிகவும் நேர்த்தியுடன் செய்து வருகின்றனர். ஆண்டு தோறும் சிறுகதை மற்றும் புதுக்கவிதைப் போட்டிகளை நடத்தி வெற்றி பெற்ற முதல் சிறுகதைக்கு ஆயிரத்து ஐந்நூறு ரிங்கிட்டும் இரண்டாம் பரிசாக எழுநூறு ரிங்கிட்டும் மூன்றாம் பரிசு ஐந்நூறு ரிங்கிட்டும் வழங்கப்படுகிறது. புதுக்கவிதைக்கு  முதல் பரிசு ஆயிரம் ரிங்கிட்டும் இரண்டாம் பரிசாக ஐந்நூறு ரிங்கிட்டும் வழங்கிச் சிறப்பிக்கின்றர்.இந்த மாணவர்களின் தொடர் நடவடிக்கைகள் இந்நாட்டு இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் நம்பிக்கையை ஊட்டுகிறது.

    7. பொது அமைப்புகளின் இலக்கிய பணிகள்

    1946-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்நாட்டு தமிழ்ப் புத்திலக்கியத் துறையில் இடம்பெற்ற மிக முக்கியமான நிகழ்வு அக்காலத்து முன்னோடி எழுத்தாளர் களாகவும் விமசர்களாகவும் இருந்த சுப. நாராயணனும் பைரோஜி நாராயணனும் “தமிழ் நேசன்” நாளேட்டில் 1950-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி 1951-ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் வரையில் “கதை வகுப்புகள் நடை பெற்றுள்ளன. இக்கதை வகுப்பு மூலம் கதை எழுதுவோர் மட்டுமின்றி கவிதை, உரை நடை ,நாடகம் ஆகியனஎழுதுவோர்ருக்கும் தக்கவழிகாட்டியாக அமைந்தது.இந்த வகுப்பின் மூலமாக பல சிறந்த எழுத்தாளர்கள் உருவானார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் அ.இராமநாதன்(சுங்கை சிப்புட்); பி.ஏ.கிருஷ்ணதாசன் (தைப்பிங்); சி.மாரியப்பன்(காஜாங்):பெ.மு.இளம் வழுதி (குவாலசிலாங்கூர்); கா.பெருமாள் (ரிங்லட்); சி.வடிவேல்(லாபு); சி.வேலு- சாமி(ரந்தாவ்):எஸ்.எஸ்.சர்மா(சிங்கப்பூர்);மா.இராமையா (மூவார்);  கு.நா.மீனாட்சி (குவால சிலாங்கூர்) போன்றவர்களைக் குறிப்பிடலாம்.

    மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சிங்கையிலிருந்து 1935-ஆம் ஆண்டுதொடங்கி  தமிழ்வேள் கோ.சாரங்கபாணி அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த “தமிழ்முரசு” ஆற்றிய அரும் பணிகள் குறிப்பிடத் தக்க தாகும் (மா.இராமையா,1996).மாணவர் மணிமன்றத்தின் வழியாகப் பல இளம் எழுத்தாளர்களை பெருமை இவரைச்சேரும்.

    தமிழர்களிடையே இனமான உணர்வையும் மொழிப்பற்றையும் ஏற்படுத்திய “தமிழர்த் திருநாள்” கொண் டாட்டத்திற்கும் மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை அமைவதற்கும் வழிவகுத்தார். மாணவர் மணிமன்றத்தின் விரிவாக்கமே 1956-ஆண்டில்   தோற்றம் பெற்றதே தமிழ் இளைஞர் மணி மன்றமாகும். இம்மன்றம் மலேசியத்  தமிழ் இலக்கியப் பணிகளுக்குப் பெரும் பங்காற்றியுள்ளது. பல்வேறு கவியரங்கங்களையும், சிறுகதை,கவிதை,கட்டுரைப் போட்டிகளையும் பட்டி மன்றங் களையும், இலக்கியப் பயிலரங்குகளையும் நடத்தி மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்துள்ளது.

    பத்து பகாட்டிலிலிருந்து செயல்பட்ட கவிதா மணடலம் கவிதை வளர்ச்சியில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க பணியினை ஆற்றிய அமைப்புகளாகச் சிலவற்றைக் குறிப்பிடலாம்.அவற்றுள் 1943-ஆம் ஆண்டில் பத்து பாகாட்டில் தோற்றுவிக்கப்பட்ட “கவிதா மண்டலம்.” முரசு.நெடுமாறன்(2005) இந்த அமைப்பே இந்நாட்டில் தமிழ் இலக்கிய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு  தொடங்கப்பட்ட முதல் அமைப்பு என குறிப்பிடுகிறார். இந்த அமைப்பு கவிதைகள்மட்டுமன்றி கதை,கட்டுரை,நாடகம் இலக்கிய வடிவங்களின் வளர்ச்சிக்கும் இட மளித்துள்ளது.(முரசு நெடுமாறன்,2005)

    8.சுவாமி இராமதாசரின் செந்தமிழ்க் கலா நிலையம்

    பினாங்கு மாநிலத்தில் 1939-ஆண்டு முதல்  செந்தமிழ்ப்பாடசாலையத் தொடங்கி, இலக்கண இலக்கிய வகுப்புகளைப் பெரும்புலவர் சுவாமி இராமதாசர் நடத்தி வந்தார். கலா நிலையத்தை தொடங்கி, இலக்கண இலக்கிய வகுப்பு களைப் பெரும்புலவர் சுவாமி இராமதாசர் நடத்தி வந்துள்ளார். 1943-ஆம் ஆண்டில் இளந்தமிழ்ப்பாடசாலை என்றும் கலா நிலையமென்றும் இரண்டு பிரிவுகளாக நடத்தியுள்ளார். செந்தமிழ்க் கலா நிலையத்தில் நளவெண்பா, இனி யவை நாற்பது, திணைமொழி ஐம்பது, நன்னூல் முதலிய   நூல்களை  மாணவர்களுக்குக் கற்பித்துள்ளார்.(முரசு நெடுமாறன்,2005). மலேசியாவில் தமிழ் எழுத் துத் துறை வளர்ச்சிக்கு குறிப்பாக கவிதைத்துறை வளர்ச்சிக்குச் செந்தமிழ் கலா நிலையம் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ளது. மரவுவழி நின்று புலமை மிக்கவர்களை உருவாக்கியதில், செந்தமிழ் கலாநிலையத்திற்கு இணையாக வேறு எந்த இயக்கமும் செயல்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.(முரசு நெடுமாறன்,2005: 159)

    9.கிள்ளான் மாணவர் பண்பாட்டு இயக்கம்

    கவிஞர் முரசு நெடுமாறன் அவர்கள் 1978-ஆன் ஆண்டு கிள்ளானில் தோற்றுவிக்கப்பட்ட  “மாணவர் பண்பாட்டுஇயக்கம்” தொடர்ந்து பதினெட்டு ஆண்டுகள் கிள்ளான் வட்டாரத்திலுள்ள 35 இடைநிலைப் பள்ளி மாணவர் களிடையே  தேர்வு வழிக்காட்டிக் கருத்தரங்குகளை நடத்தியதுடன் கலை,இலக்கியப் பண்பாட்டு போட்டிகளை நடத்தினர்.இதன் வழி மாணவர்கள் சிறந்தமொழி,இலக்கிய அறிவினைப் பெற்ரு விளங்கியதோடு பண்பாட்டிலும் நல்லொழுக் கத்திலும் சீலர்களாகத் திகழ்ந்தனர்.

    10.கவிதைக் களமும் தமிழ்ச் சங்கமும்

    கோலாலம்பூரில் 1989-ஆம் ஆண்டு கவிஞர்களான பாதாசன் மற்றும் காரைக்கிழார்,வீரமான்,மைதி சுல்தான்,சமூகக் கலைமணி சா.ஆ.அன்பானந்தன் ஆகியோரின் தொலை நோக்குப் பார்வையில் உதயமானது.மாதம் ஒருமுறை கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் இக்களம் கூடும்.படைத்தவை,சுவைத்தவைஅங்கத்தில் கவிஞர்களாலும் கவிதைப்பிரியர்களாலும் சுவைத்த கவிதைகள்படைக்கப்பட்டு அவற்றைப் பற்றிய குறை நிறைகள்அலசப்பட்டன.

    இந்நிகழ்வில்திடீர்கவிதைப் போட்டியும் நடத்தப்பட்டது. தேர்வு பெறும் கவிதைக்குப் பரிசும் வழங்கப்பட்டது.தேர்வு பெற்ற கவிதைகள் தமிழ் ஓசையில் பிரசுரிக்கப்பட்டன.மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கவிதைப் போட்டி நடத்தினர். முதல் கட்டமாக “கோம்பாக் ஆறு” எனும் தலைப்பில் குறுங்காவியப் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் கவிஞர் கரு.வேலுசாமியும் முதல் பரிசையும் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி இரண்டாம் பரிசையும் பெற்றனர். இரண்டாவது நடத்தப்பட்டபோட்டிக்கான பரிசுகளை டான்ஸ்ரீ உபைதுல்லா அவர்கள் வழங்கினார்.1984-ஆம் ஆண்டில் கவிதைக் களத்தின் செயலாளராக இருந்த கவிஞர் பாதாசன் விபத்துக்குள்ளானதும்.1994-ஆம் ஆண்டில் தமிழ் ஓசை நாளிதழ் நிறுத்தப் பட்டதும் கவிதைக்களம் நிறுத்தப்பட்டது. எனினும் கவிதைக்களத்தின் தொடர்பணிகளுள் ஒன்றாக விளங்கியதுதான் 2000-ஜூலை திங்கள் 1,2, ஆம் நாள் களில் நடைபெற்ற மலேசியத் தமிழ்க்கவிதை மாநாடு. மொழியை ஆரோக்கிய வழியில் வளர்க்க பதிவுபெற்ற ஓர் அமைப்பு தேவைக்கருதி பாதாசன்,காரைக்கிழார், வீரமான்,மைதி சுல்தான் ஆகியோர் 2001-ஆம் ஆண்டில் முச்சங்கம் எனும் அமைப்பை உருவாக்கினர். தமிழ் உணர்வை மீண்டும் தமிழர்களிடையேஏற்படுத்தும் வகையில் தலைநகரில் தைமாதத்தில்“தமிழர்த்திருநாள்” நிகழ்ச்சியை மிகச்சிறப்புடன் நடத்திவருகிறது. இவ்வமைப்பு 2002-ஆம் ஆண்டு முதல்“தமிழ்ச்சங்கம்”எனப்பெயர் மாற்றம் பெற்று சிறப்புடன் செயல்பட்டு வருகிறது .

    11.மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்

    மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 1962-ஆம் ஆண்டு பதிவு பெற்றது. இந்நாட்டில் படைப்பிலக்கியம் சிறந்து விளங்குவதற்கு பல்வேறு வகையிலும் அரும்பணி ஆற்றிவருகிறது. இதன் முதல் தலைவர் முத்தமிழ் வித்தகர் முருகுசுப்பிரமணியன், திரு.எம்.துரைராஜ், திரு.ஆதிகுமணன்,இப்போது தலைவராக பொறுபேற்றிருக்கும் திரு.பெ.இராஜேந்திரன் வரைக்கும் இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கினால் மலேசிய இலக்கியம் உலக தரத்திற்கு உயர்ந்துள்ளதை மகிழ்சியுடன் காணலாம்.அண்மைய காலமாக இலக்கியப்போட்டிகள் குறிப்பாக சிறுகதை, கவிதை, புதுக்கவிதை  மற்றும்  நாவல்  போட்டிகளைநடத்தி பெருந் தொகைகளைப்  பரிசாக  வழங்கி  எழுத்தாளர்களை நாளும்  ஊக்குவித்து வருகிறது. மலேசிய  எழுத்தாளர்களில் பலர், குறிப்பாக தமிழ்நாட்டு இலக்கிய இதழ்களில் இன்று தங்களின் தரமான படைப்புகள் மூலமாக திறனை வெளிப் படுத்தியுள்ளனர்.தமிழக ஏடுகளில் மிக அதிகமாக  எழுதிப்பெயர் பெற்றவர் முத்தமிழ்ச் செல்வர் நா.ஆ.செங்குட்டுவன் கலைமகளில் மிக அதிகமாக இவரு டைய படைப்புகள் வெளிவந்திருக்கின்றன.தவிர, குமுதத்திலும் எழுதியிருக்கின்றார். இப்படைபுகளையெல்லாம் தொகுத்துத்‘தமிழகத்தில் தவழ்ந்தவை’(சிறுகதை,குறுநாவல்,நாவல்) எனும் தலைப்பில் தொகுப்பு ஒன்றும் 2005-இல் வெளியிட்டிருக்கிறார். தமிழகத்தில் மட்டுமல்லாது உலகலாவிய நிலையிலும்அறிமுகமாகியுள்ள எழுத்தாளர்களுள்  மிக  முக்கியமானவர் பேராசிரியர்  ரெ.கார்திகேசு.தமிழ்நாட்டு ஏடுகள் மட்டுமின்றி இணைய ஏடுகளிலும் எழுதி யுள்ளார்.கல்கி இதழின் வைரவிழாச் சிறுகதைப் போட்டியில் தம்முடைய ‘ஊசி இலை மரம்’ என்னும் சிறுகதைக்கு 10,000 ரூபாய் பரிசைப் பெற்றார்.குமுதம் இதழ் நடத்திய சிறுகதப்போட்டியில் சீ.முத்துசாமி ‘இரைகள்’எனும் சிறுகதை கதையும் ஆனந்தவிகடன் நடத்திய போட்டியில் சங்கு சண்முகம் எழுதிய ‘இரை தேடும் பறவைகள்’   எனும்   சிறுகதையும்   முதல்  பரிசுகள்  பெற்று   மலேசிய எழுத்துகளுக்குப் பெருமையும் அங்கீகாரமும் தேடித்தந்தன. மா.இராமையா, நா.மகேசுவரி,மு.அன்புச்செல்வன்,. கோ.புண்ணியவான் போன்று பலரும் எழுதி மலேசிய  இலக்கியத்தை  மேலோங்கச்  செய்துள்ளனர். தமிழ்நாடு, இலங்கை மற்றும் சிங்கப்பூர் நாட்டுடான அணுக்கமான உறவின் பயனாக இந்நாட்டு இலக்கியங்கள் அங்கிகாரம் பெறுவதுடன்,”பாரதிதாசன்” மற்றும் “கரிகாலச்சோழன்”விருதுகளை நமது படைப்பாளர்கள் பெறுவதற்கு சங்கதின்  தற்போதைய
    தலைவரின்  அரிய பணிகளால் விளைந்த பயன் என்றால் மிகையில்லை.

    13. தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம்

    இந்நாட்டில்,தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் ஊக்கமூட்டி வரும்மற்றுமொரு அமைப்பு தேசிய நில நிதிக்கூட்டுறவுச் சங்கமாகும். துன் வீ.தி.சம்பந்தனால்அவர்களால் 1960ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இச்சங்கம் நாட்டில் தலைச்சிறந்த  சங்கமாக இருப்பதுடன், இலக்கியத்திற்கும்  ஆண்டு தோறும் 19-ஆம் ஆண்டாகசிறுகதை,கவிதை புதுக்கவிதைமற்றும் கட்டுரைப் போட்டிகளை மாணவர் மற்றும் பொதுப்பிரிவு என்று இரு பிரிவுகளாகப் போட்டிகள் நடத்தப்பட்டுமுதல்பரிசு  ரிங்.2000,   இரண்டாம் பரிசு ரிங். 1250,   மூன்றாம் பரிசு ரிங்.750 வழங்கப்  படுவதுடன் வெற்றியாளர்களின்  படைப்புகள்  நூலுல்  வடிவம் பெற்று அதனை இலவசமாக பொதுமக்களுக்கு அளித்து வருகிறது. இச்சங்கம் இந்நாட்டில் தமிழ்மொழி,தமிழ் இலக்கியம்,தமிழர்கலை முதலியவை மேலும்தொடர்ந்து நிலைக்கச் செய்ய அறவாரியம் அமைத்து அவ்வறவாரியத்திற்கு 120இலட்சியம் ரிங்கிட்டை  தேசிய  நிலநிதி  கூட்டுறவுச்  சங்கம்  ஒதுக்கீடு  செய்துள்ளது. மொழி இலக்கியப்  பிரிவுக்கு  டான்ஸ்ரீ  குமரன்  அவர்களும்  கவிஞர்   காரைக்கிழாரும் பொறுப்பு   வகிக்கின்றனர்.  கலைப்பிரிவுக்கு   திருமதி   இந்திரா   மாணிக்கமும், பழனிச்சாமி  அவர்களும்  பொறுப்பு  வகிக்கின்றனர். இலக்கிய வளர்ச்சி இந்நாட் டில் தொடர்ந்து வளரும் என்பதற்கு இச்சங்கம் பெரும் நம்பிக்கையைக் தருகிறது.

    14.  அரசியல் கட்சியின் செயல்கள்

    இந்நாட்டு இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் பெரிய அரசியல் கட்சி 1946-ஆம்ஆண்டில் ஜான்திவி அவர்களால் தொடங்கப்பட மலேசிய இந்தியர் காங்கிரஸ்(ம.இ.கா) விளங்குகிறது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் (ம.இ.கா) தமிழ்க் கல்வி,தமிழ் இலக்கியம்,தமிழர் பண்பாடு சமயம் ஆகியவற்றைக் காத்துவருகிறது. 1980-ஆம் ஆண்டு முதல் அதிகமான மலேசிய எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டு தலைவர்கள் கணிசமான தொகைகளைக் கொடுத்து உற்சாகப் படுத்தி வந்தனர்.இன்று அவர்களின் பணி தொடர்வது பாராட்டுக்குரியதும் நம்பிக்கைத்தருவதாகவும் அமைகிறது.

    15.தினசரிகளும்,வார,மாத சஞ்சிகைகளும்

    தமிழ்நேசன் 1924-ஆம் ஆண்டு முதல் இன்று வரைநாட்டில் வெளிவந்து கொண்டிருக்கும் வெற்றிப் பத்திரிக்கையாகும்.அன்று முதல்இன்று வரை தொய்வின்றி இலக்கியப் பணியாற்றிக் கொண்டிருக்கிறது.தரமான இலக்கிய வாதிகள் ஆயிரக்கணக்கிலும், இலட்சக்கணக்கில் வாசகர்களையும் தனகத்தே கொண்டு பீடுநடைபோடுகிறது. மக்கள்ஓசை மலேசிய நண்பன் பத்திரிக்கைகள் இந்நாட்டு இலக்கியப் பயிர்கள் தழைத்தோங்க அரிய பணிகளைச் செவ்வனே செய்து வருகின்றன.  தமிழ் இலக்கியம் இந்நாட்டில் மிகச்சிறப்பாக அமையும் என்பதற்கு இப்போது வெளிவந்து கொண்டிருக்கும் வார,மாத சஞ்சிகளைக் குறிப்பிடலாம். வாசகர்களின் பெருக்கமும் நம்பிக்கை   தருவதாக இருக்கிறது. மிக நீண்ட காலமாக வெளிவரும் வானம்பாடி பெரிய எண்ணிக்கையிலான வாசகர்களைக் கொண்டிருக்கிறது. நயனம் வார இதழும்  நிரந்திரமான வாசகர் களைத் தன்னகத்தே ஈர்த்துள்ளது. நாயகன் இதழும் அவ்வப்போது அரசியல் கருத்துக்களால் வாசகர்களைக் கவர்ந்துள்ளது. தேசம்,ஆலமரம் போன்ற இதழ்களோடு தென்றல்,நிலா,சங்கமணி வார இதழ்கள் மற்றும் மவுனம்,அநங்கம் போன்ற சிற்றிலக்கிய இதழ்களும் வாசகர்களின் இலக்கியத் தாகத்தைத் தீர்க்கும் களமாகத்திகழ்கின்றன. மயில்,உங்கள்குரல்,வல்லினம் போன்ற இதழ்களும் வாசகர்களிடையே இலக்கிய அறிவைப் பரப்புவதில் சளைக்க வில்லை.மேலும் சுட்டிமயில்,குயில்,இளந்தளிர் போன்ற மாணவர்இதழ்கள்எதிர்கால சந்ததியினரை அறிவுமிக்க சமுதாயமாக வளர்த்துக் கொண்டிருக்கின்றன்.

    16 எதிர்கால இலக்கிய வளர்ச்சிக்கு நாம் செய்யவேண்டிய பணிகள்

    அன்மையில் மலேசிய்த் துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான டான்ஸ்ரீ முகைதின் யாசின் அவர்கள் மலேசியக் கல்விச்சான்றிதழ் ( Malaysian Certificate pf Education) தேர்வில் மாணவர்கள் பத்துப் பாடங்கள் மட்டுமே எடுக்க அனுமதி வழங்கப்படும் என்ற முடிவு மலேசியாவில் தமிழ்க்கல்விக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு முடிவாகவே உள்ளது.மாணவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டாலும் அதன் முடிவுகள் தனிச் சான்றிதழில் வழங்கப்படுவதால்மாணவர்கள் பெறுகின்ற மொத்த மதிப்பெண்களைக் கணக்கிடுவதில் அப்புள்ளிகள் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது. இதனால் மாணவர்கள் தமிழ் இலக்கியத்தை தேர்ந்தெடுத்துப் படிப்பதைத் தவிர்த்துவிடுவர் என்பது திண்ணம்.பல பள்ளிகளில் அதன் நிர்வாகம் மாணவர்களைத் தமிழ் இலக்கியப் பாடத்தை எடுப்பதற்கும் அனுமதிப்பதில்லை.இதனால்,மலேசிய உயர்கல்விச் சான்றிதழ்த் தேர்விலும்( Malaysian Higher School Certificate) மாணவர்கள் தமிழ்மொழி பாடத்தைத் தவிர்க்கக்கூடும்.காலவோட்டத்தில் பல்கலைக் கழகங்களுக்கும் இந்நிலை பரவலாம். இறுதியில் தமிழ்ப்பள்ளிகள் எதற்கு? என்ற நிலையும் வரக்கூடும்.மலேசியாவில் தமிழர்கள் தங்கள் அடையாளத்தை ( Etnic Identity ) தொலைப்பதற்கான முதல் படியாக இது அமையும் என்றால் மிகையாகாது. இந்நாட்டு ஒட்டுமொத்தஇந்தியர்கள் அனைவரும் இதனைச் சிந்தித்து, திட்டமிட்டே ஒரு சிறுபான்மை இனத்தின் மொழியை அழிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளத் தடுப்பது  அவசியமாகும். ‘மொழி இனத்தின் உயிர்’ கண் கெட்ட பின் சூரிய வணக்கம் பயன் தராது. எதிர்காலத்தில் தமிழர்கள் தங்களின் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிகளுக்குக் கண்டிப்பாக அனுப்ப வேண்டும். நமது சமயம்,கலை,கலாசாரம் வழுவாமல் பேணிகாக்க வேண்டும்.தமிழ்ப்பத்திரிக்கைகளைத் தினம் வாங்கி வாசிக்க வேண்டும். தமிழிலேயே பேசவேண்டும். அரசாங்கத் தேர்வுகளில் நமது பிள்ளைகள் தமிழைக் கட்டாயமாக எடுப்பதை ஊக்குவைக்க வேண்டும். தமிழ்மொழி இலக்கியங்களைத் தேடிப்படித்து வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். இலக்கிய அறிவை பெற்றோர்தங்களின் பிள்ளைகளுக்கு இளமையிலேயே ஊட்ட வேண்டும். இது அவர்களின் வாழ்வைச் செம்மைப்படுத்துவதோடு எதிர்காலத்தில் ஒழுக்கச் சீலர்களாகத் திகழ்வதற்கு வழிவகுக்கும

    முடிவுரை

    இணையத்தளம் இந்நாட்டு இலக்கியங்கள் உலகளவில் பரந்து விரிந்து வளர்வதற்கு வாய்ப்புகள் சிறப்பாகவே இருக்கின்றன. இளையவயதினர் இந்த வாய்ப்புகளை நன்கு பயன் படுத்திக் கொள்ள வேண்டும். இலக்கியம் வளர்ப்பதில் நாம் அனைவரும் பொறுப்புள்ள வர்களாக மாறவேண்டும். இளைய சமுதாயத் தினருக்கு நாட்டிலுள்ள ஊடகங்கள் அவசியம்   வழிகாட்டிகளாகத் திகழவேண்டும். படிக்கும் சமுதாயமே மதிக்கப்படும் சமுதாயமாகமாகும். இளைஞர் இயக்கங்கள் வாசிக்கும் செயல்களில் மும்முரமாமும் ஈடுபாடும் காட்ட வேண்டும். கத்தியைத் தூக்கும் கலாசாரத்தை வீசியெறிந்துவிட்டு கற்கும் வழியினைத் தேட வேண்டும். நாட்டிலுள்ள இளைஞர் இயக்கங்கள் நூலகத்திற்குச் சென்று வாசிக்கும் தீவிர பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இந்நாட்டில் இயங்கும் பொது நூலகங்களில் செம்மொழி அந்தஸ்து பெற்றுள்ள தமிழ் நூல்களை மக்களின் தேவை உணர்ந்து வாசிப்புக்கு வைக்குமானால்   பண்பட்ட இளைஞர்களை உருவாக்கிய பெருமை இன்றைய அரசைச்சாரும். ‘டேவான் பஹசா டான் புஸ்தகா’ (DBP) மொழி நிறுவனம் உள்நாட்டு தமிழ் இலக்கியங்களை  மலாய் மொழியில் மொழி மாற்றம் செய்தால் இந்நாட்டின் இலக்கிய வளர்ச்சி மேலும் உயரும்.

    முற்றியது

    Share