Category: கவிதைகள்

கவிதைகள்

  • சைவத்தின் விளக்காகத் திகழுகிறார் அம்மையார் !

    சைவத்தின் விளக்காகத் திகழுகிறார் அம்மையார் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    மேன்மைகொள் சைவநீதி விளங்கிட வைப்பதற்கு
    மாதராய் வந்தமைந்தார் மங்கையர் கரசியாரும்
    அரசியாய் ஆனபோதும் அரனது அடியைப்பற்றி
    தினமுமே தொழுதுநின்றார் தீயவை அகன்றுபோக

    தீயதாம் சமணந்தன்னை சிந்தையில் கொண்டதாலே
    பாண்டிய நாட்டுமன்னன் பரமனை மறந்துபோனான்
    பரமனைப் பற்றிநின்ற அவனது மனைவியான
    மங்கையர் கரசியாரோ பரமனைப் பணிந்துநின்றார்

    சைவத்தின் போக்குவேறு சமணத்தின் போக்குவேறு
    அனைவரும் இணைந்துநிற்கும் அன்பதே சைவமாகும்
    ஒறுப்பது சமணமாகும் வெறுப்பது சமணமாகும்
    மக்களை விட்டுவிட்டு தத்துவம் சொல்லிநிற்கும்

    பெண்களைச் சைவமென்றும் பெருதுமே போற்றிநிற்க
    பெண்களை சமணமென்றும் வெறுத்துமே நின்றதாலே
    பொங்கியே எழுந்துநின்ற மங்கையற் கரசியாரும்
    சைவத்தை மீட்டெடுக்கத் தலைமையைத் தாங்கினார்கள்

    ஆடலும் வேண்டாம் பாடலும் வேண்டாம்
    அழகும் வேண்டாம் அலங்காரம் வேண்டாம்
    எல்லாம் மாயை எதுவும் வேண்டாம்
    என்று சொன்னதே இப்புவி சமணம்

    சமணம் வெறுத்ததைச் சைவம் உயர்த்தி
    இறைவனை வழிபட ஏற்றது என்றது
    ஆலயம் அனைத்தும் ஆடலும் பாடலும்
    ஆண்டவன் பிரார்த்தனை ஆகியே நின்றது

    பாண்டிய மக்கள் மனங்கள் மாறின
    மன்னனின் மனமே சமணத்தில் இருந்தது
    மன்னனை மாற்றிட மங்கையற் கரசியார்
    தென் னாடுடைய சிவனையே வேண்டினார்

    சிவனது அருளாலே தவமுதல் வந்தார்
    கால்பதித்த உடனே கடுங்கோபம் கொண்டார்
    எதிர்த்தார் எரித்தார் எத்தனையோ செய்தார்
    அத்தனையும் அரசர்க்கு வெப்புநோயாய் ஆகியதே

    சமணத் தலைமைகள் மந்திரமோ தந்திரமே
    எதுவுமே அரசர்க்கு ஏற்றசுகம் அளிக்கவில்லை
    மனைவியின் கருத்தை மன்னனப்போ கேட்டான்
    மந்திராமாம் திருநீற்றை சம்பந்தர் கொடுத்தார்

    திருநீறு மன்னனின் நோயினையும் போக்கியது
    திருநீறு மன்னனின் மனதினையும் மாற்றியது
    தீமையென சமணத்தை உணரவும் வைத்தது
    மங்கையற் கரசியார் மனநிறைவை எய்தினார்

    வளவர்கோன் பாவை வழிகாட்டி ஆகினார்
    சம்பந்தர் தலைமையிலே சைவத்தை நிலைநாட்டினார்
    சேக்கிழார் போற்றினார் சிவனாரின் அடியாரை
    சைவத்தின் விளக்காகத் திகழுகிறார் அம்மையார் !

    Share
  • சித்திரைத் திருமகளை வரவேற்போம் வாருங்கள்!

    சித்திரைத் திருமகளை வரவேற்போம் வாருங்கள்!

    மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    வசந்தம் வீசிட மனமெலாம் மகிழ
    சித்திரைத் திருமகள் சிறப்பாக வந்திடுவாள்
    அவளை வரவேற்க ஆனவற்றைச் செய்திடுவோம்
    அனைவருமே வாருங்கள் அகமகிழ வரவேற்போம்

    தையினை அடுத்துச் சித்திரை வருகிறது
    தைபிறந்தால் வழிபிறக்கும் தமிழரது நம்பிக்கை
    உழவரை உயர்த்திடும் உன்னதத் திருநாளாய்
    உயர்வாக மலருவதே தைப்பொங்கல் திருநாளே

    உழவினை உயர்த்தும் உன்னதத் திருநாள்
    தையோடு மட்டும் தடைபட்டு நிற்கவில்லை
    சித்திரையும் இணைகிறது சிறப்பான உழவோடு
    அத்தனையும் பண்பாட்டின் அடித்தளமாய் அமைகிறது

    தையிலும் பொங்கல் சித்திரையிலும் பொங்கல்
    பொங்கலைப் பொங்கினால் பூரிப்பே கிடைக்கும்
    மாவிலை தோரணம் வாசலை அலங்கரிக்கும்
    மனமகிழச் சித்திரையை வரவேற்று மகிழுவோம்

    பங்குனி தன்பின்னே சித்திரையைக் கூட்டிவரும்
    சித்திரை பிறந்தாலே கெட்டிமேளம் ஒலித்துவிடும்
    திருமணங்கள் தொடங்கும் திருவிழாத் தொடங்கும்
    சிறப்பாக வசந்தம் ஊஞ்சலாய் ஆடிநிற்கும்

    புத்தாடை  உடுத்துவார் புத்துணர்வு பெறுவார்
    மத்தாப்பு பட்டாசு மனமகிழச் செய்யும்
    இல்லங்கள் தோறும் இனிப்பான பலகாரம்
    எல்லோரும் சித்திரையை ஏந்தியே மகிழுவார்

    ஆலயம் செல்லுவார் ஆண்டவனைப் பணிவார்
    அறிவோடு தெளிவும் அமைந்திடவே வேண்டுவார்
    உறவுகளை அழைப்பார் உபசாரம் செய்குவார்
    மூத்தோரை வணங்கி முழுவாசி பெற்றிடுவார்

    ஈழத்தில் இருவினத்தார் கொண்டாடி மகிழ்வார்
    சிங்களமும் செந்தமிழும் சித்திரையைச் சிறப்பிக்கும்
    தமிழகமும் கொண்டாடும் வடநாடும் கொண்டாடும்
    தனிச்சிறப்பாய் சித்திரையும் சிறப்பாக மலர்ந்துவிடும்

    அறிவியலும் கலந்திருக்கு ஆன்மீகம் நிறைந்திருக்கு
    சமயமொடு சன்மார்க்கம் சமத்துவம் அமைந்திருக்கு
    இல்லார்க்கும் இன்பந்தரும் இருப்பார்க்கும் இன்பந்தரும்
    எல்லோர்க்கும் நல்லதையே நல்கவரும் சித்திரையே

    பட்டிமன்றம் பாட்டரங்கம் பாங்காக நடக்கும்
    பலவறிஞர் பாடகர்கள் விருந்தளித்து நிற்பார்
    ஆண்டவனின் கோவில்களில் உற்சவங்கள் நடக்கும்
    ஆனந்தம் பொங்கிடவே சித்திரையும் மலரும்!

    Share
  • கீதையது தத்துவம் பூவுலகின் பொக்கிஷம்!

    கீதையது தத்துவம் பூவுலகின் பொக்கிஷம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    கீதை சொல்லக் கண்ணன் தேரேறி வந்தான்
    பார்த்தனுக்குப் பாதை காட்டியவன் நின்றான்
    பார்த்தனவன் தெளிந்தான் பக்குவத்தை அடைந்தான்
    பாரிலுள்ளார் விழிக்கப் படித்திடுவோம் கீதை

    கீதையைப் படித்தால் பாதை தெளிவாகும்
    பாதை தெளிவானால் பயணம் சிறப்பாகும்
    பயணம் சிறப்பானால் மனது மகிழ்வடையும்
    மனது மகிழ்வடைந்தால் நிறைவுவங்கே பொலியும்

    எண்ணுகின்ற எண்ணம் இழுக்ககற்ற வேண்டும்
    இழுக்ககன்று நிற்க இறைநினைப்பு வேண்டும்
    இறைநினைப்பை ஊட்ட கீதை வழிகாட்டும்
    வழிகாட்டும் கீதை வாழ்க்கைத் துணையாகும்

    கீதையது தத்துவம் பூவுலகின் பொக்கிஷம்
    வாழும் நெறியாக்கினால் வாழ்வு வளமாகிடும்
    வாழ்வு வளமாகிட  மனிதமனம் நினைக்குது
    மனிதமனம் துலங்கிட கீதை வழிக்காட்டிடும்

    கீதைசொல்லக் கண்ணன் நாளும் வருகின்றான்
    பார்த்தனாய் இருப்பார் பக்கம் வருகின்றான்
    உயர்வான கீதையை உபதேசம் செய்து
    மகிழ்வாகக் கண்ணனும் வருகின்றான் தினமும்

    பார்த்தனாய் நாமும் பக்குவமாய் இருந்தால்
    கண்ணனது கீதை கருத்தினிலே பதியும்
    கருத்தினிலே பதிந்தால் கண்ணனுமே தெரிவான்
    கண்ணனது கீதை கண்ணனையே காட்டும்!

    Share
  • முகமும் முதுகும்

    முகமும் முதுகும்

    முனைவர் கு. வளர்மதி,
    உதவிப்பேராசிரியர்,
    இளங்கலைத் தமிழ்த்துறை,
    தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,
    சிவகாசி.

    “அணுக்கமான அன்புகள்
    அந்நியமாக்கிய அலைபேசிகள்!
    அன்றாடம் அலுவலகத்தில்,
    முகம்பார்க்க அகம்இல்லை.
    வணக்கமும் சிரிப்பும்
    நற்பண்பின் அடையாளம்!
    கரம்குவித்து வாய்திறந்து
    சொல்லவேண்டிய வணக்கம்,
    புலனக்குழுவில் மட்டுமே!
    அலைபேசியில் அலைந்தமனம்,
    முகம்பார்த்து சிரிக்கமறந்தது.
    நேரேபார்த்து வணங்கமறுத்தது!
    பண்பற்ற மனிதவாழ்வில்
    பண்பாடு சீர்குலைந்தது.
    அலைபேசியில் மணிக்கணக்கில்
    உரையாடி மகிழ்கின்றோம்.
    அருகிலிருப்போரிடம் அரைமணிநேரம்கூட
    உறவாடத் தயங்குகின்றோம்!
    தயக்கத்தின் காரணமென்ன?
    பேசநேரம் இல்லையோ?
    அப்படியொன்றும் வேலையில்லை.
    உள்ளுர அன்பிருந்தும்,
    வார்த்தைகள் இல்லையே…
    முகம்பார்த்துப் பேசவிடாமல்,
    தடுப்பதுஎது? ஏன்இப்படி?
    உள்ளிருக்கும் ஆணவமே,
    அனைத்திற்கும் காரணம்!

    நிஜத்தைவிட்டு நிழலைத்தேடி…
    பாதைதெரியாமல் செல்லும்பயணத்தில்…
    நீபெரிதா? நான்பெரிதா?
    ஏன்இந்தப் போராட்டம்?
    ஆணவத்தை அகற்றுவோம்.
    முகம் பார்ப்போம்,
    நித்தம் பேசுவோம்,
    நிஜமாகச் சிரிப்போம்!

    கவலைகள் மறப்போம்,
    நிலையில்லா வாழ்வில்…
    உறவுகளுக்கே முதலிடம்!
    முதுகுபார்க்கும் அலைபேசிபேச்சுக்கு,
    வைப்போம் முற்றுப்புள்ளி.
    முகம்பார்த்து நேரில்பேசி,
    தொடர்வோம்… வாழ்க்கைப்படகு!”

    Share
  • அனைவரும் அகத்தில் அமர்த்துதல் அவசியம்!

    அனைவரும் அகத்தில் அமர்த்துதல் அவசியம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    அனுபவம் என்பது அனைவர்க்கு மவசியம்
    அனுபவம் அனைத்துக்கும் அடிப் படையாகும்
    அனுபவ மற்றார் ஆற்றும் அனைத்தும்
    ஆக்கமாய் அமைவது அரிதே யாகும்

    மூத்தோர் யாவரும் அனுபவம் மிக்கவர்
    வீழ்ந்து எழுந்து நிமிர்ந்து நின்றவர்
    துன்பமும் தெரிந்தவர் இன்பமும் தெரிந்தவர்
    சுகமும் துக்கமும் தாங்கியே நின்றவர்

    விரைவாய் எதனையும் செய்யும் வேளை
    அனுபவ மற்றார் அவசரப் படுவார்
    அனுபவ மிக்கவர் விரைவாய் செயினும்
    அவசரப் படாமல் சிறப்புடன் செய்வார்

    இளமை என்பது துடிப்பான பருவம்
    அனுபவம் தொடங்கும் ஆரம்பப் பருவம்
    இளமை முதுமையை எய்திடும் காலம்
    பற்பல அனுபவம் பாங்காய் இணையும்

    அனுபவம் முதுமையின் ஆளுமை யாகும்
    ஆளுமை வழியில் நடப்பது அவசியம்
    இளமையில் ஆளுமை மிக்கவ ராயினும்
    முதுமையின் அனுபவம் இளமையை உயர்த்தும்

    இளமையில் இமயம் தொட்டவர் இருக்கிறார்
    இமயம் தொட்டிட பயிற்சிகள் அவசியம்
    பயிற்சிகள் என்பதே அனுபவ மாகும்
    பயிற்சியை வழங்குவோர் முதிர்ச்சியில் இருப்பார்

    போட்டிகள் நடுவர் அனுபவம் மிக்கார்
    அனுபவம் மிக்கார் இளமையில் நிற்கார்
    அறிவுரை வழங்க அனுபவம் அவசியம்
    அறிவுரை வழங்குவார் முதியோர் ஆகிறார்

    மூத்தோர் வார்த்தை அமுதம் என்பது
    காலம் காலமாய் காதிலே ஒலிக்குது
    அதனுடை அர்த்தம் அனுபவம் என்பதை
    அனைவரும் அகத்தில் அமர்த்துதல் அவசியம் !

    Share
  • அன்பைப் பெருக்கினால் அகிலம் சிறக்கும்!

    அன்பைப் பெருக்கினால் அகிலம் சிறக்கும்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    ஆதியில் ஆண்டவன் பூமியைப்  படைத்தான்
    அங்கே பற்பல உயிர்களைப் படைத்தான்
    மனிதனும் அதற்குள் வந்துமே அமைந்தான்
    மண்ணினை ஆண்டிடும் வளர்ச்சியும் பெற்றான்

    பற்பல உயிர்களைப் படைத்திட்ட ஆண்டவன்
    சிந்திக்கும் திறனை மனிதற்கே கொடுத்தான்
    சிந்திக்கும் திறனால் முந்தினான் மனிதன்
    முந்திய மனிதன் ஏந்தினான் அறிவை

    ஐந்தறி  வுடையவை அஃறிணை என்று
    ஆறறி    வுடையன உயர்திணை என்று
    சொன்னவன் மனிதன் சொல்லிய படியே
    தனக்குக் கீழே அனைத்தையும் வைத்தான்

    வைத்தவன் அறிவைத் தனக்குரித் தாக்கினான்
    விண்ணைத் தொட்டான் விதம்விதம் செய்தான்
    அறிவால் அனைத்தையும் ஆள்கிறான் அவனியில்
    அறிவுடன் அன்பை அணத்திடல் அவசியம்

    அன்பும் அவசியம் அறிவும் அவசியம்
    அன்பொரு கண்ணாய் அறிவொரு கண்ணாய்
    இப்புவி பெற்றவர் மனிதரே ஆவார்
    இரண்டும் இணைந்தால் எல்லாம் சிறக்கும்

    அறிவுளார் அனைவரும் அன்பினைப் பேணார்
    அறிவினால் அனைத்தும் பெருகிடும் என்குவார்
    பிறரது துன்பினை அறியா அறிவினால்
    பயனது உண்டா நினைத்துமே பாருங்கள்

    அன்புடன் இணையும் அறிவே சிறந்தது
    அன்பின் உருவமாய் ஆண்டவ  னிருக்கிறான்
    அன்பே சிவமென ஆன்றோர் மொழிந்தார்
    அறிவு தெளிந்திட அன்புதான் அவசியம்

    அறிவைக் கொண்டு அனைத்தும் பெறலாம்
    அறிவுக்குள் ஆண்டவன் அகப்பட மாட்டான்
    அன்பைப் பெருக்கினால் அகிலம் சிறக்கும்
    அன்புக்குள் ஆண்டவன் அகப்பட்டு  நிற்பான் !

    Share
  • போர் கொடுக்கும் பரிசு !

    போர் கொடுக்கும் பரிசு !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    யாரோடும் பகைகொள்ளல் இல்லென்றால்
    போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது
    போரினால் வரும் பொருந்தா நிலையென்ன
    ஊரழியும் உயிரழியும் உண்மையும் அழியும்

    எங்கும் பிணமும் இரத்த வாடையும்
    இடிபாடும் ஓலமும் ஒப்பாரியும் நிறையும்
    தங்கு தடையின்றி பஞ்சமும் பெருகும்
    தானமும் தர்மமும் தானழுது நிற்கும்

    போரிலே மடிகின்ற வீரர்களும் உயிர்தானே
    எதிரியாய் எண்ணி எறிகணைகள் வீசி
    மடிகின்ற மக்களும் மனித உயிர்தானே
    எண்ணியே பார்க்கா இந்தப்போர் ஏனோ

    புராணக் கதைகள் போர்பற்றிச் சொன்னது
    போர்நடந்த வேளை நாமங்கு இல்லை
    கதையிலே போர்பார்த்தோம் கற்பனையி லேற்றினோம்
    நிஜமான போரிப்போ கண்முன்னே காண்கிறோம்

    வெற்றிக் கொடியில் வீரம் இருக்காது
    அற்பத்தனும் அநியாயமும் நிறைந் திருக்கும்
    உயிர்களின் ஓலமும் ஊரெரியும் காட்சியும்
    வெற்றிக் கொடியாய் கம்பத்தில் பறக்கும்

    மனிதம் மடியும் மாண்புகள் அழியும்
    மாநிலமே மயனமாய் ஆகியே இருக்கும்
    பேயாட்சி நடக்கும் பிணமெங்கும் நிறையும்
    போர் கொடுக்கும் பரிசு இப்படித்தானிருக்கும் !

    Share
  • சமநிலை போக்கினால் அனைத்துமே குலையும் !

    சமநிலை போக்கினால் அனைத்துமே குலையும் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமைழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    நீரும் வேண்டும் நெருப்பும் வேண்டும்
    மழையும் வேண்டும் பனியும் வேண்டும்
    இருளும் வேண்டும் ஒளியும் வேண்டும்
    எல்லாம் இணைவதே இயற்கையின் ஒழுங்கு

    ஒழுங்காய் அமைந்தால் உலகம் செழிக்கும்
    ஒழுங்கு குலைந்தால் வளங்கள் மறையும்
    இயற்கை என்றுமே இன்னல் விளைக்கா
    இன்னல் விளைக்கவே மனிதன் வந்தான்

    காட்டில் வாழ்ந்தான் கடும் உழைப்பாலே
    வீட்டைக் கட்டினான் வீதிகள் அமைத்தான்
    நுண்மாண் அறிவால் விண்ணைத் தொட்டான்
    மண்ணை விண்ணை தன்வச மாக்கினான்

    மாநிலம் எங்கணும் மனிதனின் சாதனை
    பல்கிப் பெருகி பேருரு வானது
    இயற்கையின் போக்கை வளைத்திட  முனைந்தான்
    ஒழுங்குகள் தவறி விபரீதம் விளைந்தது

    எல்லை என்பது தொல்லை அல்ல
    தாண்டா திருந்தால் தவறுகள் நிகழா
    தவறெனத் தெரிந்தும் தாண்டியே நின்றால்
    தாங்காத் தண்டனை வந்துதான் சேரும்

    இயற்கை அமைப்பு ஒழுங்காய் அமைந்தது
    சமநிலை என்பதே இயற்கையின் ஒழுங்கு
    நுண்மாண் அறிவினால் உயர்ந்தோ மென்று
    சமநிலை போக்கினால் அனைத்துமே குலையும் !

    Share
  • அமைதியெனும் தென்றல் வீசி விடவேண்டும் !

    அமைதியெனும் தென்றல் வீசி விடவேண்டும் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    நீல வானத்தில் நெருப்புக் கோளம்
    வெடித்துச் சிதறி வெந்தணலாய் வீழ்கிறது
    நிலமெங்கும் நெருப்பாறு நீண்டோடி நிற்கிறது
    சிதறிய உடல்கள் பரவியே கிடக்கிறது

    ஓலமிடும் குரல்கள் உலுக்கியே நிற்கிறது
    வானிருந்து குண்டுமழை பொழிந்தபடி இருக்கிறது
    வட்டமிடும் கழுகாக வந்துவிழும் எறிகணைகள்
    மனிதவுயிர் பாராமல் பலியெடுத்து நிற்கிறது

    நீள்கடலும் வானும் நீண்டநிலப் பரப்பும்
    போர்முழக்கம் கேளா செய்துவிடல் வேண்டும்
    போரரக்கன்  ஓட  பேரெழிச்சி  கொண்டு
    சமாதானச் சங்கெடுத்து ஊதிவிட வேண்டும்

    மண்ணாசை பொன்னாசை மாறாத ஆசை
    வாய்பேசாக் குழந்தைகளை வதைக்க வருகிறதே
    பள்ளிகள் மீதெல்லாம் அள்ளியே வீசி
    பாலகர்கள் மடிவதனை  வேடிக்கை பார்க்கிறதே

    ஊரெல்லாம் பற்றியே எரிகின்ற வேளை
    உப்பரிகை உல்லாசம் ஒருகாலும் நிலைக்கா
    பிணந்தின்னும் பேய்களாய் மாறுகின்ற மனங்கள்
    பிணமாகப் போவதை அறியாத தேனோ ?

    ஓலமிடும் குரல்கள் ஓய்ந்துவிட வேண்டும்
    நீள்நிலத்தில் அமைதி  நிறைந்து விடவேண்டும்
    ஆரழுதும் நிற்கா ஆறுதலே வேண்டும்
    அமைதியெனும் தென்றல் வீசி விடவேண்டும் !

    Share
  • மண்ணிலே நீண்டநாள் வாழ வழிவகுப்பாய் !

    மண்ணிலே நீண்டநாள் வாழ வழிவகுப்பாய் !

    மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    நீண்டநாள் வாழ நெஞ்சம் நினைக்கிறது
    வேண்டாத வினைகள் வில்லங்கம் தொடர்கிறது
    தூண்டா மணிவிளக்காய் துலங்கிடும் தூமணியே
    நீண்டநாள் நிலைக்கவே நீயருள் புரிந்திடுவாய்

    கொடியவர் கொன்றிடுவார் கொள்ளையும் அடிப்பார்
    கடுகளவும் கருணை காருண்யம் காட்டார்
    நினைவெல்லாம் நிட்டூரம் நிறைத்துமே வைப்பார்
    நீண்டநாள் வாழுவது நியாயமா சொல்நிமலா

    அறமற்றார் அரசியலை ஆட்டிப் படைக்கின்றார்
    அறங்கூறும் இடமெல்லாம் அரக்கரே நிறைகின்றார்
    உயிர்காக்கும் மருத்துவர்கள் உணர்விழந்து நிற்கின்றார்
    உயர்பொரு ளாயிருப்பவனே உனக்கொன்றும் தெரியாதா

    சன்மார்க்கம் மறக்கின்றார் சமத்துவம் தகர்க்கின்றார்
    எஞ்ஞான்றும் பொய்யுரைத்து ஏற்றமிலா செய்கின்றார்
    வஞ்சனையை நெஞ்சிருத்தி வாழ்வாரை வதைக்கின்றார்
    இவரெல்லாம் இவ்வுலகில் எப்படிநீ இருக்கவிட்டாய்

    துட்டரைத் துரத்தவேணும் கெட்டாரைத் திருத்தவேணும்
    மட்டில்லா மதுகுடிப்பார் மனம்மாற வைக்கவேணும்
    அட்டகாசம் செய்வாரை அடக்கியே வைப்பதற்கு
    ஆயுளை நீடித்து அளித்திடுவாய் ஆண்டவனே

    அன்னதானம் செய்யவேணும் அறப்பணிக ளாற்றவேணும்
    ஆதரவற்றோரை அரவணைத்துப் பார்க்க வேணும்
    மெலியாரை வருத்தும் வலியராரை திருத்தவேணும்
    நிலமீது எனக்கிறைவா நீண்டநாள் தந்திடுவாய்

    தளராத மனம்வேணும் அன்பகலா நிலைவேணும்
    உளமுழுதும் பழுதில்லா உயர்குணமே வேணும்
    வழுவில்லா நாளெல்லாம் வாழவே வேணும்
    மண்ணிலே நீண்டநாள் வாழ வழிவகுப்பாய் !

    Share
  • மாசி மகத்தை மனதில் நினைப்போம் !

    மாசி மகத்தை மனதில் நினைப்போம் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    நதி நீராடுதல் நலனே நல்கும்
    அதனை முன்னோர் அவசிய மாக்கினார்
    ஒவ்வொரு தினமும் உன்னத மென்று
    உள்ள மெண்ணி இணைத்தார் வாழ்வில்

    உள்ளத் தூய்மை உடலில் தூய்மை
    தெள்ளத் தெளிவுடன் தேர்ந்தார் முன்னோர்
    நீரால் உடலில் தூய்மை நிறையும்
    நேர்மையால் உளத்தில் தூய்மை நிலைக்கும்

    உடலில் தூய்மை உளத்தில் தூய்மை
    தருவதே சமயத்தின் நோக்கே ஆகும்
    இரண்டும் தூய்மை எய்திடும் நிலையில்
    இறையின் நினைப்பு இதயத்தில் அமரும்

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதமும்
    ஒவ்வொரு பொழுதும் உன்னதம் ஆகும்
    உன்னதக் கருவை உட்கரு வாக்கி
    உயர்பரம் பொருளை உணர்ந்திடச் செய்தார்

    இறையினைத் தேடி ஓடவே வேண்டாம்
    இயற்கையை இறையாய் இருப்பதே தத்துவம்
    நீரும் இயற்கை நெருப்பும் இயற்கை
    இரண்டு மாகி இருக்கிறான் இறைவன்

    இருளிலும் இருப்பான் ஒளியிலும் இருப்பான்
    இறுதியும் தொடக்கமும் இல்லான் இறைவன்
    இறைவனைக் கண்டிட ஏங்கியே நிற்கிறோம்
    ஏக்கத்தைப் போக்கிட வழிகளைத் தேர்கிறோம்

    திருநாள் பெருநாள் தேடிடும் மார்க்கமாய்
    பக்குவம் பேணிக் கைக்கொண்டு வருகிறோம்
    மாசியில் மகமாய் வருகின்ற திருநாள்
    மாண்புடை மகத்துவம் கொண்ட நன்னாளே

    சைவம் வைணவம் இணையும் வகையில்
    மாசி மகமும் ஆகியே இருக்கு
    சிவனும் இருப்பார் முருகனும் இருப்பார்
    திருமால் இருப்பார் சிவசக்தியும் இருப்பார்

    இட்ட  பெயர்கள் பற்பல வாகினும்
    எல்லாம் இறையே எல்லாம் உயர்வே
    உயர்வாம் இறையை மனமதில் எண்ணி
    நதிநீராடல் மாசி மகத்தின் மகத்துவமாகும்

    மகத்துடன் இணையும் மாசிப் பெளர்ணமி
    மகத்துவம் மிக்கது என்பது தத்துவம்
    புனித நீராடுதல் மகத்துவம் என்பதால்
    மாசி மகத்துடன் இணைத்ததை வியப்போம் !

    Share
  • பதவி மோகம்

    முனைவர் கு. வளர்மதி,
    உதவிப்பேராசிரியர்,
    இளங்கலைத் தமிழ்த்துறை,
    தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,
    சிவகாசி.

    “மனிதனை ஆட்டிப் படைக்கும்
    அமைதியான ஆயுதம் ‘பதவி’
    நிரந்தரமில்லா மனித வாழ்வில்
    நாற்காலி மட்டும் நிரந்தரமா?
    பதவிமோகத்தில் பேசும் மனிதன்,
    பகைக்கு மட்டுமே சொந்தக்காரன்!
    எத்தனையோ தலைவர்கள் உலகிலே;
    வந்தார்கள், சென்றார்கள், பெயர்பெற்றார்கள்!
    ஆணவத்தில் அதிகாரத்தில் தத்தளித்த
    மனிதர்கள் போனார்கள், பெயர்தொியாமல்…!
    சகமனிதனை மனிதனாகப் பார்!
    பதவிவெறியில் மாக்களாக நடத்தாதே;
    காலமாற்றத்தில் எதுவும் நிரந்தரமில்லை!”

    Share
  • பெண்மை போற்றுக

    முனைவர் கு. வளர்மதி,
    உதவிப்பேராசிரியர்,
    இளங்கலைத் தமிழ்த்துறை,
    தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,
    சிவகாசி.

    “அந்நியருக்கு அடிமைப்பட்ட தேசத்துக்கு விடுதலை
    ஆணுக்கு அடிமைப்பட்ட பெண்ணுக்கும் விடுதலை!
    மாதவம் புரிந்து மங்கையராகப் பிறப்பு
    ஆணுக்குப்பெண் சரிநிகர் சமமென வாழ்வு
    கணவனுடன் உடன்கட்டை ஏறிடாத இறப்பு!

    தந்தையை கணவரை மகனையென – ஆணினத்தைச்
    சார்ந்தே வாழும் சார்புவாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.
    வெளிநாட்டில் படிப்பு வேலையென தனித்தியங்கும்
    சொந்தக்காலில் நிற்கும் வாழ்க்கைக்குத் தொடக்கப்புள்ளி…
    எட்டாக்கனியான பட்டங்களும் பதவிகளும் எட்டின
    பேச்சுரிமைமுதல் சொத்துரிமைவரை அனைத்தும் வசப்பட்டன.

    வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்பது அக்காலம்
    நாட்டுக்குள்ளே பெண்ணை ஏற்றிவைப்பது இக்காலம்!
    அரியணையில் வீற்றிருக்கும் அதியன்போன்ற மன்னனுக்கு
    அறிவுரைநல்கும் ஔவையெனும் அமைச்சராக ஒருகாலம்,
    அறிவார்ந்த கருத்துக்களுடன் அரியணையில் வீற்றிருந்து,
    சிங்கப்பெண்ணாக வலம்வரும் பெண்ணினமே தற்காலம்!
    மண்ணில் மட்டுமல்ல, விண்ணிலும் பெண்ணென…
    மகத்தான சாதனைகளின் கொள்கலனான சக்தியை
    மாபெரும் பெண்மையை வணங்கிப் போற்றுவோம்!”

    Share
  • உவேசா உயிர் மூச்சு தமிழே !

    உவேசா உயிர் மூச்சு தமிழே !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    உத்தம தானபுரம் ஈன்றிட்ட முத்து
    உவேசா என்றுமே தமிழுக்குச் சொத்து
    தமிழ் அன்னை தவமைந்தன் அவரே
    தமிழ் உலகில் வாழுகிறார் தமிழாய்

    ஆங்கிலத்தை வட  மொழியைப்  பாரா
    அன்னைத் தமிழ் அகமேந்தி நின்றார்
    தூங்காமல் தமிழ் படித்துச் சுவைத்தார்
    சுவைத் தனைத்தும் சொர்க்கமாய் கண்டார்

    நல்ல தமிழ் ஆசானைக் கண்டார்
    எல்லை இல்லா இன்பத்தை அடைந்தார்
    கற்பவைகள் தேர்ந் தெடுத்துக் கற்றார்
    கற்றபடி நடந்து அவரும் உயர்ந்தார்

    நாம் படிக்கும் அத்தனையும் ஏடாய்
    வீடெல்லாம் இருந்ததை நாம் அறியோம்
    ஏடு தேடி ஊரெல்லாம் ஓடி
    வீடிருக்கும் ஏடு கண்டு வியந்தார்

    எங்கள் தமிழ் அத்தனையும் ஏட்டில்
    தங்கியே இருந்ததை நாம் உணர்ந்தால்
    உவேசா செய்த பணி உணர்வோம்
    உயிர் கொடுத்து மீட்டார் தமிழனைத்தும்

    கட்டை வண்டி கைகொடுக்க அவரும்
    காடு மேடு சென்றலைந்து திரிந்தார்
    எத்தனையே தமிழ் ஏட்டைக் கண்டார்
    எடுத் தெடுத்து கையெடுத்து அணைத்தார்

    ஏடு தேடி சென்றபோது எரித்தார்
    ஓடு கின்ற ஆற்றினிலே விட்டார்
    பாடு பட்டு அத்தனையும் தடுத்தார்
    நாம் படிப்பதற்கு நூலாக்கித் தந்தார்

    சங்கத் தமிழ் தமிழனது சொத்து
    எங்கள் சுவாமிநாதன் மீட்டாரே நினைப்போம்
    உவேசா என்று சொன்னால் உழைப்போ
    உவேசா உயிர் மூச்சு தமிழே !

    Share
  • விவசாயி

    விவசாயி

    முனைவர் கு. வளர்மதி,
    உதவிப்பேராசிரியர்,
    இளங்கலைத் தமிழ்த்துறை,
    தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,
    சிவகாசி.

    “விடியுமுன் குளியல்
    குளக்கரை குளிர்நீரில்;
    மானம் மரியாதைக்கு
    வேட்டியும் துண்டுமே!
    நெற்றிநிறை திருநீறு
    அதிகாலை சூரியவழிபாடு!
    தேவாமிர்தமாக வயிறுகுளிர
    பழையசோற்றுத் தண்ணீர்!

    உச்சிவெயிலையும் பொருட்படுத்தாத
    உன்னதமான உழைப்பு!
    கால்வயிற்றுக் கஞ்சிக்காக
    அயராது உழைத்தும்
    வயிற்றிலே சுருக்கங்கள்,
    கண்ணிலே ஏக்கங்கள்!
    பண்டிகை நாட்களிலும்
    பட்டாடை உடுத்தியதில்லை,
    விடுமுறை நாட்களிலும்
    ஏர்பிடிக்க மறந்ததில்லை!

    பெற்றபிள்ளையின் கல்விக்காக
    காய்த்துப்போன கரங்கள்!
    கண்ணாடி பார்க்காத அழகு,
    கள்ளங்கபடமற்ற புன்னகை!
    நெற்றிவியர்வை நிலத்தில்சிந்தி,
    விதைவிதைத்து, பயிர்காத்து,
    அறுவடைசெய்யும் விவசாயிக்கு
    அரிசிச்சோறு கிடைப்பதில்லை!
    உழைப்பிற்கேற்ற ஊதியமில்லை,
    உழும்நிலம் சொந்தமில்லை!
    தனக்கென வாழ்ந்ததில்லை,
    பஞ்சுமெத்தையில் உறங்கியதில்லை!

    வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி
    வளர்த்தபிள்ளைக்குத் தெரிவதில்லை
    விவசாயத்தின் அருமை!
    விதவிதமான பலகாரங்கள்
    பேரன்பேத்தியின் வாய்ருசிக்கு
    கடன்வாங்கியும் செய்ததுண்டு!

    ஊரார்உண்ண நெல்விளைவித்த
    விவசாயியின் விவசாயக்கடனை
    அடைத்திடயாரும் முன்வரவில்லை,
    அரசாங்கமும் தள்ளுபடிசெய்யவில்லை!
    மனம்உடைந்த கடைசிவிவசாயியின்
    பரிதாபநிலையோ தற்கொலை!”

    Share