மீனாட்சி பாலகணேஷ்       

கூந்தல் அலங்காரங்கள்

(பெண்பால் பிள்ளைத்தமிழ்)

கூந்தல் என்பது ஒரு பெண்ணின் எல்லாவயதிலும் அவளுடைய பெண்மைக்குச் சான்றுகூறி, அழகிற்கு அழகு சேர்ப்பதாகும். பெண்களின் கூந்தலைப் பற்றிப் பாடாத கவிஞர்கள் உண்டோ? அன்றுமுதல் இன்றுவரை அவளுடைய கருங்கூந்தலைப்பற்றி எத்தனை கவிதைகள்! என்னென்ன வருணனைகள்!

சௌந்தர்யலஹரி அன்னை தெய்வத்தின் கேசாதி பாத வருணனையில் ஆதிசங்கரர் கூறுவதனை வீரை கவிராஜ பண்டிதர் அழகுற மொழிபெயர்த்து வழங்கியுள்ளதனைக் காணலாமா?

அன்னையின் கருங்கூந்தல் எவ்வாறுள்ளதென விவரிக்கிறார்:

 

‘மலர்ந்த நறுநெய்தல் காடுபோல பிரகாசிக்கின்றது அக்கூந்தல். அடர்த்தியாக, வழுவழுப்பாக, மென்மையாக உள்ளது. இந்திரனுடைய நந்தவனத்தில் பூத்துள்ள நறுமலர்கள் அக்கூந்தலின் இயற்கை நறுமணத்தைத் தாமும் அடைய விரும்பி அக்கூந்தலில் வாசம் செய்கின்றன; அக்கருங்கூந்தல் என் மனத்து இருளை நீக்கவேண்டும்,’ என வேண்டுகிறார்.

அலர்ந்தகரு நெய்தலங் காடெனக் கடைகுழன்
றறநெய்த்து  இருண்டு செறிவோடு  
இலங்குறும் இயற்கை மணம் எண்டிசையளப்ப அதில்
இதழ் மூழ்கு நறை விழைவினால்
பொலன்கொள் முடியாகண்டலேசர் பொற்றுணர்விரி
பொதும்பர் மதுமலர்ப் படிவதோர்
சிலம்பளி பரந்தவுனது ஓதியென் மனத்திருள்
செறிவுதெற வருள் கமலையே!1

பெண்டிரின் கூந்தலுக்கு இயற்கை நறுமணம் உண்டா என எழுந்த ஐயத்தால் உண்டான கதை, ‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பீ,2‘ எனும் குறுந்தொகைப் பாடல், அதன் தொடர்பான திருவிளையாடலைப் பற்றி தமிழ் அறிந்தோர் அனைவரும் அறிந்திருப்போம்.

இளங்கோவடிகளும் சிலப்பதிகாரத்தில் மாதவி தனது கூந்தலை எவ்வாறு அலங்கரித்துக்கொண்டாள் என விளக்கமாகப் பாடியுள்ளார்.

பத்துவகைத் துவரினாலும்(நாவல், கடுக்காய், நெல்லி, தான்றிக்காய், ஆல், அரசு, அத்தி, இத்தி, முத்தக்காசு, மாந்தளிர்), ஐந்துவகை விரையினாலும் (நறுமணப்பொருள், கஸ்தூரி, மயிர்ச்சாந்து, அகில்,  சந்தனம்), முப்பத்திரண்டுவகை நறுமணப் பொருள்களாலும் (ஓமாலிகையாலும்) ஊறவைத்த நன்னீரினால் நறுமண நெய்பூசிய தன் கூந்தலை நீராட்டினாள். பின் அகிற்புகை செலுத்தி அதனை உலர வைத்தாள். அதனை ஐந்துவகையாகப் பகுத்து (ஐம்பால்) ஒவ்வொரு வகைக்கும் கத்தூரிக் குழம்பினை ஊட்டினாள்.

         ‘பத்துத் துவரினும் ஐந்து விரையினும்
         முப்பத் திருவகை ஓமா லிகையினும்
         ஊறின நன்னீர் உரைத்தநெய் வாசம்
         நாறிருங் கூந்தல் நலம்பெற ஆட்டிப்
         புகையிற் புலர்த்திய பூமென் கூந்தலை
         வகைதொறு மான்மதக் கொழுஞ்சே றூட்டி.3.’

பரிபாடலிலும், மற்ற சங்க இலக்கியங்களிலும் கூந்தல் பராமரிப்பு, அலங்காரங்கள் பற்றிய குறிப்புகளைக் காணலாம்.

பட்டுப்பூச்சி போன்ற துறுதுறுப்பான சிறுமி! அவளுடைய கருமுகில் கூட்டங்கள் போன்ற அழகான அலையலையான நீண்ட கருங்கூந்தல். வண்டுகள் இன்னிசை மிழற்றியவாறு அதில் சூட்டப்பட்ட மலர்களில் தேனருந்தி மகிழ்கின்றன. அதற்குப் போட்டியிட்டுக்கொண்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கூந்தல் அலங்காரத்தைச் செய்து அழகு பார்க்கும் தாயும் சேடியரும். யாரிந்தப் பெண்? அழகான கூந்தலுக்கு உரிமையாளர்? எட்டு அல்லது ஒன்பதாண்டுகளே நிரம்பிய நமதருமைச் சிறுமி மீனாட்சியேதான்!!

கூந்தல் அலங்காரம் என்பது சிறுமியர்க்கு / பொதுவாகவே பெண்களுக்கு அவர்களது மிகச்சிறு வயது முதலே மிகவும் பிடித்தமான ஒன்றாகும். வளரும் பெண்மகவின் உளவியல்படி காணப்புக்கின், அழகியல் பலவிதங்களில் அவளிடம் இயல்பாகவே இருந்து வெளிப்படுவதனைக் காணலாம். அதனால் இதனையும், பெண்மகவின் கூந்தல் அலங்காரங்களையும் பெண்பால் பிள்ளைத்தமிழின் ஒரு நிகழ்வாகவோ / பருவமாகவோ சேர்த்துக் கொள்ளலாமே!

பெண்குழந்தைகளானால் பிறந்து சிலமாதங்களிலேயே தாய்மார்கள் அக்குழந்தையின் தலைமயிரை விதம்விதமாக அலங்கரிக்க முற்படுவார்கள். தலைமயிர் சிறிது வளர்ந்ததும் அதனைச் சூழியம் எனப்படும் உச்சிக் கொண்டையாக்கி முடித்து, மலர்களை அதில் செருகி அழகு பார்ப்பார்கள்.

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் இதற்கான கருத்துக்களைக் காணலாம்.

தவழ்ந்தாடி வரும் சின்னஞ்சிறு மகவுக்குத் தாய் அதன் தலைமயிரை உயர்த்திக் கொண்டையாகக் கட்டியிருக்கிறாள்; அதனைச் ‘சூழியக் கொண்டை’ என்பார்கள். புன்னகையாடக் குழந்தை மீனாட்சி தவழ்ந்தாடி வருகிறாள் என்பார் புலவர்.

           ‘முகமதியூடெழு நகைநிலவாட, முடிச்சூழியமாட……..4.’

எனத் தவழும் பருவமான ஆறாம் மாதத்திலிருந்து துவங்கி இத்தகைய உச்சிக்கொண்டை அவ்வப்போது தாய்மாரால் பெண்மகவு வளருந்தோறும் முடிக்கப்படும்!

எட்டு, ஒன்பது, பத்தாம் ஆண்டுகள் பெண்குழந்தை ஊசலாடி மகிழும் பருவம். விதம்விதமாகக் கூந்தல் அலங்காரங்களைச் செய்து அழகு பார்ப்பார்கள் தாய்மார்கள். தன் மகளைச் சிங்காரித்துப் பார்ப்பதில் எந்தத் தாய்க்குத்தான் விருப்பமிருக்காது? வீசியாடும் ஊசலில், பம்பு போன்ற நீண்ட கருத்த பின்னலும் உடனடினால் எந்தத்தாய் தான் பெருமையில் உள்ளம் பூரிக்க மாட்டாள்?

கீழ்க்காணும் பாடலில் குமரகுருபரர் மீனாட்சியின் நகரமான மதுரையின் பெருமையைக் கூறும் பாடலில் இது பற்றிய நயமான கருத்தைக் காணலாம்.

பனி துளிக்கும் (பில்கும்- எத்துணை அழகிய சொல்!) குறும்பனிக்காலமான கூதிர்க்காலத்தில் நீராடிய சிறுமிகளின் கூந்தல் ஈரம் புலராது உள்ளது என்று தாய்மார்கள் அச்சிறுமிகள் தம் கூந்தலை ஆற்றுவதற்கு ஏதுவாக, அகில், சாம்பிராணி, ஆகிய புகையை ஊட்டச் செய்வர். ஒரு தூபக்காலில் கனியும் கரிக்கட்டைமீது அகில், சாம்பிராணியைத் தூவிப் புகையெழச் செய்து, அதன்மீது பெரியதொரு கூடையை வைத்து மூடுவர். பின் சிறுமியரைக் கூந்தலை விரித்து அதன்மீது கிடத்துமாறு செய்வர். புகை நன்கு கூந்தலின் உள்ளே ஊடுருவி அதனை உலர்த்தும். இக்கூந்தலில் அவர்கள் எப்போதும் மலர்களைச் சூடுவதால் அதற்காக வண்டுகளும் கூந்தலை மொய்த்தபடி இருக்கும்.

மேலும் இக்கூந்தலை அவர்கள் முடி, கொண்டை, சுருள், குழல், பனிச்சை எனும் ஐந்து வகையான பகுப்புகளாக, விருப்பத்திற்கேற்ப முடிப்பதனால், கூந்தலே ‘ஐம்பால்’ எனப் பெயரையும் பெற்றது.

         முடி என்பது உச்சியில் முடிக்கப்படும்; இது சூழியம் எனவும் கூறப்படும்.
         கொண்டை பக்கவாட்டில் முடிக்கப்படும்;
         சுருள் என்பது கூந்தல் சுருட்டிச் செருகப்படுவதனைக் குறிக்கும்.
         குழலானது சுருட்டி முடிக்கப்படுதலைக் குறிக்கும்.
         பனிச்சை என்பது பின்னி விடப்படும்.

இக்காலத்திலும் இவை அனைத்தும் பல மாற்றங்களுடன் வழக்கத்தில் உள்ளன.

            பில்குங்குறும்பனிக்கூதிர்க் குடைந்தெனப்
                   பிரசநாறைம்பாற்கினம்
          பேதையர்கள்ஊட்டும் கொழும்புகை மடுத்துமென்
                   பெடையொடுவரிச்சுரும்பர்
         புல்குந்தடம்பணை உடுத்துமது ரைத்தலைவி
                   பொன்னூசல்ஆடியருளே 5      

எனும் பொன்னூசற் பருவப்பாடலில் பலவிதமான கூந்தல் அலங்காரங்களும் பேசப்பட்டுள்ளன.

இவ்வைம்பால் பற்றிய மேலும் பலவகையான குறிப்புகள் திவாகர, பிங்கல நிகண்டுகளிலும், அக, புறநானூற்றிலும், சீவகசிந்தாமணி, நாலாயிர திவ்வியப்பிரபந்தம், திருவாசகம் முதலியவற்றிலும் பரந்து காணப்படுகின்றன.

இக்கூந்தல் அலங்காரங்கள் பலவிதங்களில் கூந்தலை முடிப்பதுடன் மட்டுமே முழுமை பெறாது. அவற்றில் வாசமிகு வண்ணமலர்களையும் பலவிதமாகத் தொடுத்தும் கட்டியும் அலங்கரிப்பர் பெண்கள். முல்லை, பித்திகம், தாழம்பூ, மருதோன்றிப்பூ, செண்பகப்பூ, ஆகிய வாசமிகு மலர்களாலும், மருக்கொழுந்து, தவனம் ஆகிய நறுமணப் பச்சிலைகள், மேலும் முத்து, மணிகள், பொன்னணிகள் முதலியனவற்றால் முடித்த கூந்தலை அலங்கரிப்பர். அழகான கூந்தலை அழகிய வாசமிகு, பலநிற மலர்கள் அலங்கரிக்க வேண்டாமோ?

                                               *****

இனி நாம் மதுரையரசி மீனாட்சியின் அரண்மனைக்குள் சிறிதே சென்று பார்ப்போமா?

வைகைப்புது நீரிலாடிவிட்டு ஈரக்கூந்தலுடன் மீனாட்சி வந்துள்ளாள். தாதியர் ஓடிச்சென்று பூத்துவாலையால் முடிந்த அவளுடைய கூந்தலை விரித்துத் துவட்டுகின்றனர். கையிலடங்காத கருங்கூந்தல். அதற்குள் தோழியர் அகில், சாம்பிராணி ஆகியவற்றைக் கனலிலிட்டு அதன்மீது ஒரு கூடையைக் கவிழ்த்துவைத்து, மீனாட்சியை அதனருகே அமரவைத்து, அவளுடைய அடர்ந்த கூந்தலை விரித்து அதன்மீது பரப்பி உலர்த்துகின்றனர். அரைநாழிகை கழிந்ததும் ஏறக்குறைய உலர்ந்த கூந்தலை, கூந்தல் அலங்காரம் செய்வதில் வல்லவளான பெண் ஒருத்தி, அழகாகப் ‘பை’ போன்று பின்னி விடுகிறாள். ‘பைப்பின்னல்’ எனும் இவ்வமைப்பில் கூந்தல் உலர வாய்ப்பு அதிகம் உண்டு. இதுவுமன்றி ‘அகத்திக்கட்டு’ என்ற கூந்தல் பின்னலையும் பெண்கள் எண்ணெய் நீராடிய அன்று ஈரம் உலருவதற்காக, பின்னிக்கொள்வார்கள்.

(மனக்கண்ணில் இக்காட்சியைக் காணும் நாம் மீனாட்சியின் கூந்தலை இவ்வாறெல்லாம் அலங்கரிக்க இவர்கள் பெற்றபேறு என்னே என எண்ணுகிறோம். அம்மை நம்மையும் காத்தருளுக என வேண்டுகிறோம்.)

                                                           –000–

வைகைப்புதுநீ ராடிவந்த வன்னமயிலுந்தன்
வளர்தோகை யன்னகருங் கூந்தலினை
விரித்துப்பு கைகூட்டு மன்னையரும்வரி
வண்டுகள் மிழற்றுமக் கூந்தற்காட்டினை

‘பை’கைகொண் டேகும்வகை முறையால்
பற்றியெ டுத்தேபுது வகையாமொரு
பனிச்சைப் பின்னலி டும்தாயரும்
பவித்திர மானதம்கை யதனாற்செயுஞ்

செய்கையிது வொன்றினா லன்றோ
செயற்கரிய பேறுபெற்றுய்ந் தாரம்மே
செய்வதினியா மொன்றறியோம் சிறியேம்புன்
செயல்கள் ஏற்றருளிச் சிந்தைகுடியேறி

பொய்மையற் றபெருவாழ்வும் புண்ணியஞ்சேர்
பெருந்தனமு முதவியுந்தன் பூவிணைப்
பங்கயத் திருத்தாளில் பொருந்திவாழக்
கயற்கண்ணால் கனிந்துநீயு மருளுகவே! (1)6

                                              *****

நீராடிய கூந்தலை ஈரம்போக ஆற்றும்பொருட்டுப் பைப்பின்னலிட்டுக் கொண்ட பெண்மகள், சிறிது இளைப்பாறியதும் தோழியருடன் நந்தவனத்திற்குச் சென்று ஊசலாடிக் களிக்கிறாள். வேகமாக வீசியாடும் ஊசற்காற்றில் கூந்தலின் ஈரம் முற்றும் உலர்ந்து விடுகின்றது!

இப்போது அவளுடைய கூந்தலை அழகாக ஐம்பால் பகுப்புகளும் செய்ய ‘நீ, நான்’ எனப் போட்டியிடும் தோழியரும் செவிலியரும்! ஒருத்தி சிறிது தலைமயிரைக் கையிலெடுத்து நறுநெய் பூசி அதனை அழகாக வளைத்து பக்கவாட்டில் ஒரு சிறுகொண்டையாகப் போடுகிறாள். பளபளக்கும் முத்துக்களாலான சரம் ஒன்றினையும் அதில் சுற்றிவிட்டு அழகு செய்கிறாள்.

“செங்கமலம், நகரடி! நம்ப மீனம்மாவுக்கு, நாகப்பின்னல் பின்னிவிட என் முறையடி இப்போது,” என்றபடி, இரண்டாகப் பகிர்ந்துகொண்ட கருங்கூந்தலின் ஒரு பகுதியைப் பிடிக்க இயலாமல் பிடித்து, வாச நெய் பூசி, தந்தச் சீப்பால் இழைய வாரி, நான்கு கால்கள் எடுத்து நாகப்பின்னல் பின்னலானாள். அழகான குஞ்சலம் (சடைக்குச்சு, குஞ்சலம் என்றெல்லாம் இதற்குப் பெயர்கள் உண்டு) ஒன்றை கையில் ஏந்தியபடி அவளருகே நின்றிருந்தாள் பொன்னம்மா. என்ன வேலைப்பாடு அதில்! மூன்று கருநிறப் பந்துகள் ஒன்றாக இணைக்கப்பட்டு, தங்க முகப்புகள் கொண்ட அவற்றில் ரத்தினங்களும் மரகதங்களும் இழைக்கப்பட்டிருந்தன. பின்னலின் கடைசியில் அதனை வைத்து முடிந்துவிட்டு, முல்லைச்சரத்தைத் தொடுத்துக் கொண்டிருந்த கலைச்செல்வியை அவசரப்படுத்தினாள் பொன்னம்மாள்!

அதற்குள் செவிலித்தாயான தாயம்மாள், இவர்களைச் சைகையாலேயே நகரச் செய்துவிட்டு, மீதமிருந்த கூந்தலைச் சில சுருள்களாகச் சுருட்டி அழகு படுத்தினாள். வாகாக ஒரு சிறிய கொண்டையையும் சரசரவென்று பின்னலின் உச்சியில் அமைத்தும் விட்டாள். கண்கொள்ளாக் காட்சி!

தாழம்பூ மடல்களை அழகாக நறுக்கியெடுத்து அப்பின்னலில் வைத்துப் பொருத்தி, இடையிடையே தங்கத்தாலான சம்பக மலர்களையும் நறுமணம் வீசும் உண்மை சம்பக மலர்களையும் பொருத்துகின்றனர். பிறைச்சந்திரன், சூரியன் வடிவங்களிலுள்ள சூரிய, சந்திரப் பிரபைகள் சிறு மயிர்க்கால்களில் பிணைக்கப்பட்டு தலையில் பொருத்தப்பட்டுள்ளன. பின், கொண்டையின் நடுவில், நடனமாடும் ஈசனின் உருவம் நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட அழகானதொரு சடைவில்லை அழகுறப் பொலிகிறது.

மலயத்துவசனின் பாண்டிய குலக்கொழுந்தைக் காண ஆயிரம் கண்கள் போதாது அன்றோ?

முத்துச்சரங் கொண்டுச்சிக் கொண்டைதனில் முடிவார்
முன்னைப்பழம் பொருளின் நாயகியாம் உனக்கு!
முல்லைச்சரங் கொண்டுநாகப் பின்னலில் அணிவார்
முல்லைச் சிரிப்புடைய மீனாட்சி தனக்கு!            

கொத்துமலர்க் குழல்சுருட்டி கோதைக்குக் கொண்டையிட
கொஞ்சிடும் வண்டினமு மருதப்பண் ணிசைக்க
குச்சிசைத்துப் புனைந்தசடை கெஞ்சுமிடை யிற்றவழ
கோமளமாய் வனைந்தசம் பகமலரு மணம்பரப்ப
    
தத்தைக்கிளி யுனக்குத்தா ழம்பூதைத்தி டுவார்பின்
தலைக்கணி யாய்ச்சந்திர சூரியரையு மணிவிப்பார்
சடைவில்லை யெனவேயந்தத் தாண்டவமா டிடும்பொற்
கழலணிவேந் தனினவரத் தினப்பதக்கஞ் சூடிடுவார்

முத்தைவிளைக் குங்கொற்கைச் சிலாபத்திற் கரசியே
மாடங்கள் சூழ்மதுரைக் கூடலின் தலைவியே
மலயத்துவசன் குலக்கொழுந் தேமங்கையருள் ளருமருந்தே
மாதேவிபர மேசிமகா மேருதனில் உறைதாயே! (2)7

                                               *****

கூந்தலை அழகாகப் பின்னி, கொண்டையிட்டுப் பூமுடித்தால் மட்டும் போதுமா? அந்த அழகுக்கு ஈடாக மற்ற அணிகலன்களையும் பூட்டி அழகுபார்க்க வேண்டாமா?

ஆபரணங்கள் நிறைந்த பெட்டியை எடுத்துவருகிறாள் காஞ்சனமாலை. மகளருகே அமர்ந்து கொண்டு ஒவ்வொன்றாக எடுத்து தாயம்மாளிடல் கொடுக்க, அவள் மீனாட்சியின் பஞ்சினும் மென்மையான பாதங்களில் சிறிய மணிகள் குலுங்கும் பாதசரங்களை அணிவிக்கிறாள். காஞ்சனமாலையே தன் செல்லமகளுக்கு நெற்றியில் மணம்நிறைந்த சிவந்த குங்குமத்தையும் பூசி, திருநீற்றுப் பொடியைப் பூசுகிறாள்; அதற்குள் மறந்துபோய்விட்ட சிறு திருகுப்பூக்களைக் கொண்டையில் பொருத்துகிறாள் மேகலை!

அன்புமகளைப் பார்க்கும் அரசியின் கண்களில் பரவசம் பொங்குகிறது; மனக்கண்ணில் காணும் நமக்கும் களிபொங்குகிறது. நெற்றிச்சுட்டி, காதணிகள் மாட்டி, மீன்களைப் பொரும் கயல்விழிகளுக்கு மைதீட்டி மகிழ்கின்றாள்.

இத்தகைய அழகுப்பெட்டகமாய்த்திகழும் இச்சிறுபெண் தேவர்களும் வந்து வணங்குபவள்; வேதங்களின் உட்பொருளாய்த் திகழ்பவள்; இவளை என்னசொல்லி வாழ்த்துவது? திருவடியில் வீழ்ந்து வணங்கவே இயலும் அல்லவோ?

            பஞ்சினுமெல் லடிகளுக்கு பாதசர மிழைத்து
                   பசியநெற்றிக் குப்பொடியுங் குங்குமமு மிழைத்து
             பசுந்தோகை யொக்குங்கருங் கூந்தற்கு நெய்பூசி
                   பாவையுந்தன் பின்னலிலே பதக்கங்கள் தான்வைத்து

          நெஞ்சமெல்லா முனதுதுதி நெகிழ்ந்தோடி யுள்ளிறங்க
                   நேரமெல்லா முனதுவெழில் கண்டுகண் கள்களிக்க
              நீலநிறக்கல் லிழைத்தநல் நெற்றிச்சுட்டி பூட்டியும்
                   நேரிழையா ளுனக்கான நல்லணிகள் மாட்டியும்
        
         அஞ்சனந்தீட் டியுங்கயல் பொருங்கயல் விழிக்கற்புதமாய்
                   அதிசயமாங் கொண்டை முடிந்ததனில் அணிந்திடவே
             அரியநவரத் தினதிருகுப்பூ விழைத்துத் தாழைமலர்
                   அமைத்துப்பின் னலில்முல் லைப்பூதைத் துவப்பார்

          விஞ்சையரு வந்துபணி யஞ்சொல்மொழி கிஞ்சுகமே
                   வேதவிழுப் பொருளேயெந் தவப்பயனாய் நிற்பவளே!
          வாழ்வின் ஒளிவிளக்கே! வான்மழையே! வள்ளலே!
                   வாழ்த்தவ கையுண்டோ வணங்கிடுமுன் பொன்னடியை! (3)8

                                               ****

பார்வை நூல்கள்:

1. வீரை கவிராஜ பண்டிதர்- சவுந்தரிய லகரி- பாடல் 42.

2. இறையனார் குறுந்தொகை 2 -ஆம் பாடல்.

3. இளங்கோவடிகள்- சிலப்பதிகாரம்.

4, 5. குமரகுருபரர்- மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

6, 7, 8. மீனாட்சி பாலகணேஷ்- மீனாட்சியம்மையின் கூந்தல் அலங்காரம் பற்றிய பாடல்கள்.

   (புதிய பருவங்கள் தொடரும்)

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க