திருச்சி புலவர் இராமமூர்த்தி

வரலாறு:

மலைமேலிருந்த சிவக்கொழுந்தை நேரில் கண்ட திண்ணனார் மகிழ்ச்சி  வேகத்தால்  அருகில் சென்று  தழுவி முகம்சேர்த்தி நின்றார்; அவருக்கு மயிர்க்கூச்செறிந்தது; கண்ணீர் மல்க அப்பெருமான் மேல் பரிவு கொண்டவராய் ‘‘அடியேன் கண் முன் இவ்வாறு உள்ளாரே!’’ என்று நின்றார்;  வேடுவர் வாழும் மலைமேல் யானை, வேங்கை, கரடி ,சிங்கம் திரிகின்ற இடத்தில் துணை புரிவார் யாருமின்றி இப்படி இருக்கலாமா?  என்று மனம் வருந்தினார்; தம் கையிலிருந்த வில் கீழே விழ, ‘’இங்கே இவர்மேல் பச்சிலையும் பூவும் பறித்து இட்டுச் சிதைத்தவர் யார்?’’ என்று கேட்டார்; அருகிருந்த நாணன் ‘’இதை நான் அறிவேன்!  முன்னர் உன் தந்தையுடன் வேட்டையாடிய போது இங்கே வந்தோம்; அப்போது இவரை நீராட்டி இலை, பூ, ஆகியவற்றைச் சூட்டி ,  ஒரு பார்ப்பனர் ஏதோ சொன்னதைக் கண்டோம்; இன்றும் அப்பார்ப்பனரே செய்திருப்பார்!‘’என்றான். திண்ணனார் உள்ளத்தில் அன்பெழுந்தது! அன்புடன் அந்தப் பார்ப்பனர் செய்தவை, திருக்காளத்தி இறைவனுக்கு இனிய செய்கை போலும் என்று எண்ணினார்.தாமும் அதையே செய்ய வேண்டும் என்று அங்கேயே ஆதரவாய் நின்றார்; ‘’இவர் நான் காணத் தனியாய்  இருந்தார்! இவருக்கு உணவூட்ட இறைச்சியிட்டவர் இல்லை! இவரை என்னால் பிரிய இயலாது; என்செய்வேன் ‘’ என்று சிந்தித்து, ‘’இவருக்கு இறைச்சியை நானே கொண்டு வர வேண்டும்!’’ என்று கூறி, அங்கிருந்து செல்வார்; மீண்டும் வருவார்; அரவணைப்பார்; மீண்டும் போகாமல் அன்புடன் நோக்குவார்; கன்றைவிட்டு நீங்கிய பசுவைப்போல் நிற்பார்; ‘’நானே சென்று நல்ல இறைச்சியைக் கொண்டுவந்து கோதற அமைத்து ஊட்டுவேன்!’’ என்பார்; ‘’துணைவரின்றி நீர் இங்கே இருப்பதா? என்று நீங்க மனமில்லை; உங்கள் பசியை எண்ணி இங்கே நிற்கவும் மனமில்லை!’’ என்று கண்ணீருடன் இங்கிருந்து வில்லேந்திப் புறப்பட்டார்.

பொன்முகலி  ஆற்றை அடைந்த அவரிடம் நாணனுடன் சோலையில் நுழைந்தார். அங்கிருந்த காடன், ‘’தீ மூடிட்டி வைத்துள்ளேன்! வேட்டையாடிய பன்றியின் உறுப்புகளைப்   பாருங்கள்! என் இவ்வளவு தாமதம்?’’ என்றான். உடனே நாணன், ‘’இவர் மலைமேலிருந்த  சிவனை அணைத்துக்கொண்டு. பொந்தினைப் பிடித்துக்கொண்டு விலகாமல் நின்ற உடும்பு போல அங்கேயே நின்றார், அவர் உண்ண  இறைச்சி எடுத்துக் கொண்டு போகவே இங்கு வந்தார்! நம் வேடுவர் குலத்துத் தலைமையை விட்டு நீங்கினார்; அவருக்கே ஆட்பட்டார்!’’ காடன் ‘’என்செய்தாய்? ‘’என்று கேட்டதை உணராமல், பன்றியை  நெருப்பில் வாட்டித் தசையை அம்பில் கோத்து எடுத்துக்கொண்டு, அவற்றை வாயிலிட்டு அதுக்கி , நல்ல  பதத்தில் உள்ளவற்றை ஓர்  இலையை  மடக்கி தொன்னையாக்கி எடுத்து  வைத்துக்  கொண்டார். மற்றோர் ‘’;இவன் என்ன செய்கிறான்? தசையுணவை வாயிலிட்டு  மீண்டும் உமிழ்ந்து, பசியுடையவன் போல, எமக்கும் தராமல் வேண்டாதவற்றை வீசி எறிகின்றான்?,  இவனுக்கு இறைவன் மேல் மயக்கம் வந்து விட்டது! இதனைத் தீர்க்க நாம் வேட்டுவிச்சியுடன் நம் ஏவலரையும் அழைத்து வருவோம்!’’ என்றெண்ணி அகன்றார்.

வேடர்கள் அகன்றதை நினையாமல், அந்த இலை மடக்கில் ஊன் அமுதை ஏந்தி, இறைவனுக்கு நீராட்ட எண்ணி, நதிநீரை வாய்க்குள் அடக்கிக் கொண்டு, கொய்த பூக்களை சடைமேல் கட்டிக்  கொண்டு, கையில் வில்லேந்தி, மறுகையில் உணவை ஏந்தி எடுத்துக் கொண்டு, ‘’எம்பிரானுக்குப் பசிக்குமே!’’ என்று வருந்தி ஏங்கித் திண்ணனார்  விரைந்து மலைமேல் ஏறினார்.

‘’நம் தலைவர் பசியால் வாடினாரே!’’ என்று விரைந்து சென்று சிவலிங்கத் திருமேனி முடிமேல் இருந்த மலர்களைக் காற் செருப்பால் தள்ளி, வாயிலிருந்த அபிடேக நீரை அன்பையே உமிழ்வார் போல முடிமேல் உமிழ்ந்தார்! தலைமேல் சூடி வந்த பூமாலையைச்  சாத்தி, இலை  மடக்கில்  இருந்த ஊன் உணவை இறைவன் எதிரே வைத்தார். கொழுத்த தசைகளை அம்பில் கோத்து, அழலில் காய்ச்சிய ஊனைப்  பல்லிலிட்டு அதுக்கி , நாவால் அதன் சுவையைப்  பார்த்து, ‘’ இந்த இறைச்சி மிகவும் சுவையாய் இருக்கிறது! இறைவனே, அமுது செய்க!’’ என்றார்.

அப்போது இன்னும் இறைவருக்கு உணவிட வேண்டும் என்ற அவர்தம் ஆசையைக் கண்ட கதிரவன் வணங்கியபடியே மலையில் மறைந்தான்! இரவு நெருங்கவும், ‘’இங்கே கொடிய விலங்குகள் உள்ளன’’ என்றெண்ணி அன்புடன்  கையில் வில்லேந்தி மலைமேல்  இருந்த இறைவன் பக்கத்தில் சிலை போல் நின்றார்! இதனைச் சேக்கிழார் ,

‘’சார்வருந் தவங்கள் செய்து முனிவரும்  அமரர் தாமும்
கார்வரை யடவி சேர்ந்தும்  காணுதற்கு  அரியார் தம்மை
யார்வம்  முன்பெருக ஆரா அன்பினில்  கண்டு கொண்டே
நேர்பெற நோக்கி நின்றார் நீளிரு ணீங்கநின்றார்’’

என்று பாடினார்

பொருள் :   சார்தற்கரியனவாகிய தவங்களைச் செய்தும், மேகங்கள் தவழும் மலைகளையும் காடுகளையும் சேர்ந்தும், முனிவர்களும் தேவர்கள் தாமும் காணுதற்குஅரியவராகிய சிவபெருமானை ஆசைமுன்னே பெருக ஆராத அன்பினாலே கண்டுகொண்ட படியே நேர்பெற நோக்கி நின்றார்; நீண்ட இருள் நீங்கும்படி நின்றார் (திண்ணனார்).

விளக்கம்:

சார்வரும் தவங்கள் – விரதம், யோகம்முதலியன. தவம் – தபித்தல் – வாட்டுதல்  என்ற பொருளில் வந்தது.  இங்கு உடலைவாட்டிப் புலன்களை ஒறுக்கும் முயற்சியிற் செய்யப்படுவனவாகிய சாதனங்களைக் குறித்து நின்றொழிந்தது. அவை வெயிற்காலத்துத் தீயினிடை நிற்றல். குளிர்காலத்து நீரினிடை நிற்றல், இட்டிகளை இயற்றல் முதலியன.

“மலர்தலை உலகத்துப் பலபல மாக்கள், மக்களை மனைவியை
யொக்கலை ஓரீஇ,
மனையும் பிறவும்  துறந்து நினைவருங், காடும்  மலையும் புக்குக்
கோடையில் ,
கைம்மேல் நிமிர்த்துக் காலொன்று முடக்கி, ஐவகை நெருப்பின்
அழுவத்து நின்றும்,
மாரி நாளிலும் வார்பனி நாளிலும், நீரிடை மூழ்கி நெடிது
கிடந்தும்,
சடையைப் புனைந்தும்  தலையைப் பறித்தும் , உடையைத் துறந்தும்
உண்ணாது  உழன்றாங்கு
காயும்  கிழங்கும்  காற்றுதிர்சருகும், வாயுவும்  நீரும்
வந்தனஅருந்தியுங்,
களரிலும்  கல்லிலும்  கண்படை கொண்டுத், தளர்வுறும்
யாக்கையைத் தளர்வித்து
அம்மை முத்தி யடைவதற் காகத், தம்மைத் தாமே
சாலவு மொறுப்பர்…

              – திருவிடைமருதூர் மும்மணிக்கோவை (19)

என்று பட்டினத்தடிகள் இவற்றை விரித்துரைத்தது காண்க.

முனிவர் – மனனசீல முடையார். அமரர் – சாவா மருந்துண்ணல் முதலியவற்றால் மரணத்தைத் தடுத்து நிற்பவர்  வானோர்; இவர்கள் முதலியோரினும் உயர்ந்த நிலை யுடைமையால் முனிவர் முன் வைக்கப் பட்டனர்.

வரை அடவி – வரைகளையும் அடவிகளையும். அடவி மரங்கள் அடர்ந்த காடு, தவங்கள் செய்தும் அடவி சேர்ந்தும் என்க. செய்து சேர்த்தும், சேர்ந்து செய்தும், எனக் கூட்டியுரைப்பினுமாம்.

“புற்று மாய்மர மாய்ப்புனல் காலே யுண்டியாய் அண்ட வாணரும் பிறரும்,
மற்றி யாருநின் மலரடி காணா மன்ன!”

என்பது திருவாசகம்.

காணுதற்கு அரியார் – அருந்தவங்களாலும் காண்டற்கரியார். இவை ஆன்மபோத முனைப்பினாற் செய்யப்படுவன ஆதலின் அரியராயினார். அன்பு மிகுதியால் ஆன்மபோதம் சிவபோதத்துளடங்கி நின்றவழி இறைவர் எளியராய் வெளிப்பட்டருளுவர் என்பதை  எல்லா நூல்களும்  கூறும்.

“முத்திக் குழன்று முனிவர் குழா நனிவாட –
அத்திக் கருளிஅடியேனை யாண்டுகொண்டு –
பத்தி கடலுட் பதித்த பரஞ்சோதி”

என்பது  திருவாசகக் கருத்து.

ஆரா அன்பினிற் கண்டுகொண்டே – மேன்மேல் வளர்ந்து மீதூரும் அன்பதனுள் இறைவன் வெளிப்பட, அவனைக் கண்டவண்ணமாகவே.

“பாசங்கழித்த கண்களால்  அரனுருக் கண்டுகொண்டு”

என்பது திருவிளையாடற் புராணம்.

நேர் பெற நோக்குதல் – காண்பானும் காட்சிப் பொருளும் காட்சியும் வேறு தோன்றாமல் ஒன்றாம் வண்ணம் ஊன்றிப்பார்த்தல்.

நின்றார் – அச்செயலிலே நிலைத்து நின்றனர். மேற்பாட்டில் அகலா நின்றார் என்றதும் காண்க. மேற்பாட்டால் அவர் நின்ற புறச்செயலும், இப்பாட்டால் அவர் நின்ற அகச்செயலும் கூறப்பட்டன.

நீள் இருள் நீங்க நின்றார் – நீள் இருள் – நீண்டு சென்றதாகிய அவ்விரவு. தலைவனிடத்துப் பணிசெய்யும் அன்புமிகுதி யுடையார்க்கு அந்தப் பணிவிடைக்கும் தமக்கும் இடையில் இடையூறாய்த் தடுத்துநிற்கும் காலம் சிறிதேயாயினும், ஊழிபோல நீண்டுக் காட்டும் என்பது அகத்திணை யினியல்பாம்.

“மிகுபுலவிப் புனர்ச்சிக்கண் ஊழியாம்  ஒருகணந்தான்;
அவ்வூழி யொருகணமாம்”

என்று இதன்இயல்பை உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் வைத்து ஆசிரியர் சுவைபடக் காட்டுவது காண்க.

நீங்க நின்றார் – நீள் இருள் நீங்குதலை எதிர்பார்த்து நின்றார்.  “புலரும் படியன் றிரவும்” என்றபடி, இந்நீண்ட விரவு நீங்குவதனையும், பொழுது விடிவதனையும், இறைவனைப் பின்னரும் ஊட்டுவதனையும் எதிர்பார்த்து நின்றனர். இனி, நீள் இருள் நீங்க – அநாதியே பந்தித்து உயிருடன் தொடர்ந்த நீண்ட இருளாகிய ஆணவமலம் நீங்கியதனாலே – முன்னர் அங்கணரது அருட்டிரு நோக்கம்  எய்தத் தங்கிய பவத்தின் முன்னைச் சார்புவிட்டகல நீங்கியதனாலே; நின்றார் – சிவத்தோடொன்றாய் நிலைபெற்றனர் என்ற குறிப்பும் காண்க. ஆணவமலம் நீங்காதவழிக் கறங்கோலைபோல ஆன்மா ஒருவழியில் நில்லாது சுழற்சியுறும்.

“மலங்களைந் தாற்சுழல் வன்றயி ரிற்பொருமத்துறவே”,

“வன்மத்திட வுடைந்து, தாழியைப் பாவு தயிர்போற் றளர்ந்தேன்”

என்ற திருவாசகங்கள் காண்க. ஆதலின் ஆணவமலம் நீங்கியதனால் நின்றார்.

நீங்க நின்றார் – மேற் பாட்டில் அகலா நின்றார் என்றார்; எவ்வகை நின்றாரெனின்? நேர் பெற நோக்கி நின்றார்; எவ்வளவும் நின்றார் எனின்? நீளிருள் நீங்கு மளவும் நின்றார் என இவ்விரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து பொருள் பொருந்த உரைத்துக் கொள்ள நின்றன.

நோக்கி நின்றார் …. நீள் இருள் நீங்க நின்றார் – இருள்நீங்க – உயிர்கள் இருளை நீங்க என்று கொண்டு, அவர் நோக்கி நின்றதானால் உலகத்தில் உயிர்கள் அன்பின் நிலைகண்டு ஆணவ இருள் நீங்கி உய்யுமாறு நின்றார் என்றதொரு குறிப்பும் காண்க.

நீங்கநின்றார் – நின்றாராகிய திண்ணனார் என வினையாலணையும் பெயராக்கிப் பெரிய மலவிருள் அகத்தினின்று நீங்கும்படி நின்றவராகிய திண்ணனார் நேர் பெற நோக்கி நின்றார் என்று பொருள் கூட்டி உரைக்கலாம்.

இப்பாடலில் முனிவரும் சித்தரும் யோக்கியரும் களவிறந்த நெடுங்காலம் தம் செய்தும் காண வியலாத  பெருமானைத்  திண்ணனார் தவமேதும் செயாமலே  எளிதாக, ஆறாத அன்பினால் மட்டுமே நேரில் கண்டார் என்பதும்,  பெருமானும் இவரைக் கண்டார் என்பதும், இவர்  பக்திக்  குறிப்புக் கொண்டு   நோக்கியபடியே , தம்  மலவிருள் நீங்கும் வரை நின்றார். என்று விளக்கப் பெறுகிறது!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.