திருச்சி புலவர் இராமமூர்த்தி

வரலாறு 

பெருமான் மேலும் கூறினார்,’’ மலைமேல் வந்து திண்ணன் செய்யும் பூசைக்கு முன் என்மேல் அந்தணர் தூவ  விழுந்து அரும்பும் மெல்லிய மலர்களை நீக்குவதற்காக, விருப்பமாகிய வெள்ளம் வாய்க்கால் ஆனது போல் என்மேல் அவன் வைத்த  செருப்புடைய சிற்றடி, அவனது குழந்தைப்  பருவத்தின் சிவந்த அடியைவிடச்  சிறப்புற இருந்தது! அன்பே உருவான அவன் சிறுவாயாகிய அமுத கலசத்தில் பொங்கிய எச்சில் நீராகிய அபிடேக நீர்,  சிறந்த ஜானு என்ற முனிவரின் வாயில் புகுந்து காது வழியாக வழிந்த ஜானவி என்ற நதியாகி, என் ஜடாமுடியில் தங்கியகங்கையை விடவும், எனக்குப் புனிதமானது! அவ்வேடனது பக்தியே மலராகி விரிந்ததுபோல் அவன் தூவிய செம்மையான மலர்கள் தேவர்களின் பூமாலையை விட உயர்ந்தவை! அவன் எனக்கிடும் ஊன் உணவு  வெந்து, பக்குவம் ஆகிவிட்டதா என உண்டு பார்த்து இட்ட படையல் எனக்கு மிக இனியவை! அவன் என் முன்னே நின்று கூறும் என்னைமட்டுமறிந்த,  அறியாமை மிக்க  மொழிகள்,வேதியரும் முனிவர்களும் துதிக்கும் ஞானம் மிக்க வேத தோத்திரங்களை விட  நல்லவை!

வேதியரே, உமக்கு  அவன் செயல்களை நான் காட்டுகிறேன்; அப்போது அவனுடைய பக்தியின் சிறப்பை நேரில் கண்டறிவாய்! உன் மனக்கவலை தீரும்! ‘’ என்று வேதியரின் கனவில் கூறி மறைந்தார்!

இரவெல்லாம் துயிலாமல் இருந்த வேதியர் வியப்பும் அச்சமும் கொண்டு,காலையில் கதிரவன் உதிக்கும்போதே, எழுந்து குளித்து, பூசைப் பொருள்களுடன்  மலைமேல் ஏறி, மரபுப்படி பூசை செய்தபின் சிவன் பின்னே மறைந்து நின்றார்!

அன்று திண்ணனார் ஆறாம் நாளில்  வேட்டையாடி ஊன் அமுதும் , மஞ்சுநாத் புனித நீரும் , மலர்களும் கொண்டு  பூசைக்கு வந்தார். அப்போது அவர்முன் பறவைகள் சிந்திய இரத்த அடையாளம்  தீய சகுனம் உண்டாக்கிற்று‘’ ஐயோ, என் அப்பனுக்கு  என்ன ஆயிற்றோ? என்றெண்ணி ஓடோடி வந்தார்!  அப்போது, சிவபிரான் , திண்ணனாரின் அன்பினை வேதியருக்குக் காட்டத் திருவுளங்கொண்டார்! அவர் தம் வலக்கண்ணில் கண்டோர் துணுக்கம் அடையும் வண்ணம் இரத்தம் பெருகிப் பாய்ந்தது! அதைக் கண்ட வேடுவர் விரைந்தோடி வந்தார்!

இறைவன் கண்ணில் இரத்தத்தைக் கண்ட வேடர் மயங்கினார்; வாயிலிருந்த பொன்முகலி நீர் சிந்தியது; கையிலிருந்த ஊனுணவு வில்லுடன் வீழ்ந்தது; தம் தலைமேல் சூடியிருந்த மலர்கள் எங்கும் வீழ, அவர் பதறி வீழ்ந்தார்!

எழுந்து சென்று இரத்தத்தைத் துடைத்தார், ஆனாலும்அது  பொங்கியது! என்ன  செய்வதென்று அறியாமல் திகைத்தார்; இதனை யார் செய்திருப்பார்? என்று எழுந்து  திக்கிலும் தேடினார்; கையில் வில்லை எடுத்தார்; ஓரம்பைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு ‘’இந்தமலையில் எனக்கு எதிரியாக வெல்லும் மறவர் உளரோ? விலங்குகளில் சிங்கம்  போன்ற கொடியவை இப்படிச் செய்தனவோ? அறியேன்.’’ என்று நீண்ட மலைச் சாரலெங்கும் தேடினார். எங்கும் புதிய வேடரைக் காணவில்லை. எங்கும் தீய விலங்குகளைக்  காணவில்லை. எங்கு தேடியும் காணாமல் மீண்டும் இறைவரிடம் வந்து, பெருத்த வருத்தத்துடன் அவர் திருவடி பற்றிக் கண்ணீர் பெருக்கிக் கதறினார்.

‘’இப்படிப் பாவிநான்  பார்க்கும் படி பரமனுக்கு வந்த தீங்கு யாதோ? உயிரினும் இனிய எங்கள் அத்தனுக்கு வந்த தீங்கு எதுவோ? அடைந்தவர் பிரியவியலாத குற்றமற்ற இறைவனுக்கு என்ன வந்ததோ? என்ன செய்வதென்று அறிந்து கொள்ள இயலவில்லை.

எம் இறைவனுக்குத் தீங்கு செய்தவரை எங்கும் காணேன்; வேடர் குலத்தினர் புண்ணுக்கு மருந்து செய்யும் முறைகளை இப்போதே பொய் அறிந்து செய்து கொண்டு வருவேன்’’  என்று ஓடினார் .  தம் கூட்டத்திலிருந்து பிரிந்த காளை  போன்று அருகேயிருந்த காடுகளில் அச்சத்துடன் திரிந்தார்; ஆங்காங்கே இருந்த மூலிகைகளை எடுத்துக் கொண்டோடி வந்து கசக்கி  இறைவன் கண்ணில் பிழிந்தார்; அந்த மருந்தாலும் கடவுளின் கண்ணின் இரத்தம் குறையாதது கண்டு இனி என்ன செய்வது? என்று சிந்தித்தார்; ‘’ஓ! ஊனுக்கு ஊனை  வைத்தால்  உற்ற நோய் தீர்க்கும்! ‘’ என்பார்களே! அதற்கேற்ப இனி உடனே புண்ணான இறைவன்  கண்ணுக்கு மாற்றாக என் கண்ணைத் தோண்டி அப்பினால் இரத்தம் குறைந்து நோய் தீரும்! என்றெண்ணி, விரைந்து எழுந்து தம் ஒருகண்ணை அம்பினால் தோண்டி எடுத்து இறைவன் திருக்கண்ணில்  அப்பினார்! இங்கு சேக்கிழார் பாடுகிறார்;

பாடல்

நின்ற செங் குருதி கண்டார்; நிலத்தின் நின்று ஏறப் பாய்ந்தார்;
குன்று என வளர்ந்த தோள்கள் கொட்டினார் கூத்தும் ஆடி
‘நன்று நான் செய்த இந்த மதி’ என நகையும் தோன்ற,
ஒன்றிய களிப்பினாலே உன் மத்தர் போல மிக்கார்.

பொருள்

குருதிநின்றதைக் கண்டார்; அந்தப்பெரு மகிழ்ச்சியினாலே நிலத்தினின்று உயரப்பாய்ந்து குதித்தார்; மலை போல வளர்ந்த தமது தோள்களைக் கொட்டினார்; கூத்தும் ஆடி “நான் செய்த இந்த மதி – யோசனை – மிக நன்று” என்று சிரிப்புத் தோன்றப் பொருந்தியகளிப்பினாலே உன்மத்தர் போன்ற நிலையில் மிக்கவராயினர்.

விளக்கம்

குருதி வெளிவராத நிலைமையைக் கண்டாராதலின் செங்குருதி நின்றது கண்டார்; மகிழ்ச்சியில் துள்ளினார்.

நிலத்தினின்று ஏறப்பாய்ந்தார் – இங்குக் கூறிய ஏறப்பாய்தல், தோள்கொட்டுதல், கூத்தாடுதல், நகை தோன்றுதல், உன்மத்தர் போலாதல் எனுமிவை பெருமகிழ்ச்சியால் வெளிப்படக்காணும் உடற்செயல்கள். முன் குருதி கண்டபோது மனமும் மெய்யும் மொழியும் முடங்கி மயங்கிச் சோர்ந்து

நிலத்திடைப் பதைத்து வீழ்ந்தார் . குருதி நிற்கக்கண்ட இப்போது அவை தழைக்கத் தாமும் நின்று ஏறப்பாய்ந்தார். ஏறப்பாய்தல் – நின்ற இடத்தினின்றும் உயரக் கிளம்பிக் குதித்தல்.

குன்றென வளர்ந்த தோள்கள் கொட்டினார் – வளர்ந்த – குருதி கண்டபோது கையிற் சிலையுடன் ஊனும் சிதறிவீழ்த்தித் தோள்கள் மெலிந்தன; குருதி நிற்கக் காணலும் அம்மகிழ்ச்சி மிகவே அவை குன்று போல வளர்ச்சிபெற்றன!. நாயகனைப் பிரிந்த சோகத்தால் நாயகிக்கு உடல் மெலிந்து கைவளை கழலுதலும் அவனைக் கூடியவழி உடல் பூரித்துக் கைவளை உடைதலும் முதலியனவாக அகப்பொருள்  நூ ல்களிற் பேசப்படும் நிலைகளி னியல்பை இங்கு பொருத்திப் பார்க்க.

கூத்தும் ஆடி  என்ற தொடர்  தம்மை மறந்து கூத்தாடுதல்,  மிக்க மகிழ்ச்சியின் விளைவு என்பதைக் குறித்ததது.

“கும்பிடுதலும், தட்டமிடுதலும், கூத்தாடுதலும்
உவகை மிகுதியில் நிகழும் மெய்ப்பாடு”

என்ற சிவஞான சித்தியார் பாடலின்  பொழிப்புரையும் காண்க.

“ஆசையொடு மரனடியா ரடியாரை

யடைந்திட் டவர்கரும முன்கரும மாகச் செய்து” என்ற ஞான சாத்திரத் திருவாக்கிற் கண்டவாறு இங்குத் திண்ணனார் அரனையே யணைந்தனர்; அரனை ஆசையொடும் அடைந்தார்; அவர் கருமந் தன் கருமமாகச் செய்தார்; அவர் பிரேரணையாகிய அருண்ஞானக் குறியின்நின்று தம்மை மறந்து அவரையே கும்பிட்டு அருச்சித்தார்; இங்கு அவரது நோய்தீரக் கண்டபோது உவகையினாற் கூத்தும் ஆடினர்; சீவன் முத்த நிலையாகிய பரம உபசாந்தம்  இது,  என்பது க. சதாசிவ செட்டியார் உரைக் குறிப்பு. என் அறிவு நன்று என்று தம்மையே மெச்சிக்கொண்டார்

ஒன்றியகளிப்பினாலே உன்மத்தர் போல – பொருந்திய முன்னிருந்த சோகமும் கவலையும் நீங்க இப்போது வந்து சேர்ந்த. களிப்பினாலே உன்மத்தர் போலாகுதல், மதமிகுந்தபோது உளதாம் உட்கரண புறக்கரணநிலை. மத்தம் – மதத்தாலாகும் நிலை.  இந்நிலையின் மெய்ப்பாடுகளின் மிகுதியுடையராயினார்.

தாம் செய்த அபூர்வமான செயலால் விளைந்த நன்மையைக்  கண்ட திண்ணனாரின் மகிழ்ச்சிக் கூத்தினை இப்பாடல் குறித்து நம்மையும் மகிழ்விக்கிறது!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.