திருச்சி புலவர் இராமமூர்த்தி

பாடல்

ஊர் தொறும் பலி கொண்டு உய்க்கும் ஒருவனது அருளினாலே,
பாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடிச்
சீர் உடை அடிசில், நல்ல செழுங்கறி, தயிர், நெய், பாலால்
ஆர் தரு காதல் கூர, அடியவர்க்கு உதவும் நாளில்.

வரலாறு

தாலிக்குக் பெற்ற  கலயனார், மிகவும் விரைந்து வீரட்டானக் கோயில் சார்ந்து, எனையாளும் ஈசனின் திருக்கோயில் சேம வைப்பில் தாம் கொண்டுவந்த  குங்கிலிய மூட்டைகளை முழுவதும் நிறைத்தார். மற்ற செயல்களை  மறந்து சடையுடைய ஈசனார் தம்  மலர்த்தாளைப் போற்றி அங்கேயே தம் திருப்பணிகளை செய்து கொண்டு இருந்தார்.அப்படி அங்கே  கலயனார் இருந்த போதில். இறைவன் திருவருளால் அளகையில் வாழும் குபேரன் தம் பெருநிதியத்தை எடுத்து பொற்குவை, நெற்பொதி மற்றும் எல்லாப் பொருள்களும் நிறைந்த பெருஞ்செல்வமாக்கிக்  கலயனார் இல்லத்தில் நீடித்து வளம் சேர்க்க வைத்தார்.

அடியார் மனைவியாரும் மக்களும் பசியால் வாடி உறங்கும்போது, தவம் மிக்க கொடி போன்ற மனைவியரின் கனவில், இறைவன் செல்வம் பற்றி அறிவித்தார். உடனே விழித்தெழுந்த அவர் தம் இல்லத்தில்  நிறைந்த செல்வத்தைக் கண்டு மகிழ்ந்தார்! இவ்வாறு இல்லத்தில், குறைவின்றி  நிறைந்த  பொன்னும். நெல்லும் அரிசி முதலான பண்டங்களும் நிறைந்தது  இறைவனின் திருவருளால் என்று கரங்குவித்து வணங்கினார்.

காலனையே கொன்ற சிவபிரான்,  கலயனார் அறிந்து கொள்ளும் வண்ணம் அவரிடம் ‘’நீ மிகவும் பசியால் வாடுகிறாய்; உன் இல்லம் சென்று பால் முதலிய இனிய  உணவுகளை உண்டு வருத்தம் நீக்குக!’’ என்றார்.அதைக்  கேட்ட கலயனார், இறைவனை வணங்கி அவர்  கூற்றை மறுத்துக்  கோயிலில் இருக்க அஞ்சி, உடனே திருக்கோயில் மாடவீதியில் உள்ள தம் இல்லத்தை அடைந்தார்!

அங்கே பெருஞ் செல்வம் குவிந்திருந்ததைக் கண்டு, தம் மனைவியாரிடம், ‘’இங்கே மிகுந்த செல்வம் எவ்வாறு வந்தது?‘’ எனக் கேட்டார். ‘’நீலகண்ட னாகிய இறைவன் திருவருளால் வந்தது!’’ என்று தாம்  கண்ட கனவு பற்றிக் கூறினார்.  அதனைக் கேட்ட அடியார்,’’ என்னையும் ஆண்டுகொண்டு அருளிய எம்பிரான் கருணை இருந்தவாறு என்னே!’’ என்று தலை மேல் கரம் வைத்து வணங்கினார். திருமகள் போன்ற மனைவியார், உணவுக்குரிய கலங்களை எடுத்து,  இறைவனுக்கு  தீபம் ஏற்றி இனிய  உணவைச் சமைத்துப்  படைத்தார்! கலயனார் அதனை உண்டு பசியாறி மகிழ்ந்தார். அப்போது நிகழ்ந்ததைச்  சேக்கிழார் பெருமான் எழுதுகிறார்;

பாடல்

ஊர் தொறும் பலி கொண்டு உய்க்கும் ஒருவனது அருளினாலே,
பாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடிச்
சீர் உடை அடிசில், நல்ல செழுங்கறி, தயிர், நெய், பாலால்
ஆர் தரு காதல் கூர, அடியவர்க்கு உதவும் நாளில்.

பொருள்

ஊர்கள் தோறும் பலிகொள்ளும் சிவபெருமானது திருவருளினாலே இவ்வுலகில் நிறைந்த செல்வமுடையவராகிய தன்மையில் சிறந்து  மிக்க அமுதினை, நல்ல  வளமான கறி, தயிர், நெய், பால் இவற்றுடன் நிறைத்து,  மிக்க அன்புடன் சிவனடியார்களுக்கு உதவுகின்ற நாளிலே,

விளக்கவுரை 

ஊர்தொறும்  என்ற தொடர்  எவ்வூரிலுமுள்ள எவ்வுயிர்களிடத்தும் என்ற பொருள் காட்டும் .

பலிகொண்டு உய்க்கும்  என்ற தொடர்,  பலி – பிச்சை. கொண்டுய்க்கும் என்பது ஒரு சொன்னீர்மைத்தாய்க் கொள்ளும் என்ற பொருளில் வந்தது. பலியைத்தான் கொண்டு, பலி இட்டோரைத் தனது பதத்திற் செலுத்துகின்ற என்றலுமாம். இப்பொருட்கு உய்த்தல் – செலுத்துதல் – வைத்தல் என்க.

“பத்திசெய் யடியரைப் பரம்பரத் துய்ப்பவன்”

என்பது திருவாசகம்.

உய்த்தலாவது – “நிரந்தரமாக நினையு மடியார், இரந்துண்டு தன்னடி யெட்டச் செய்”தல் என்று கொள்ளுதலுமொன்று. இறைவன் பிட்சாடனராக எழுந்தருளிப் பிச்சை ஏற்கும் வரலாறு கந்தபுராணத்துட் காண்க. இதனைப் பற்பலவாறும் பாராட்டுவது அன்பர் வழக்கு.

“துள்ளுமறி யாமனது பலிகொடுத் தேன்” என்று தாயுமானார் கூறியபடி இவர்கொள்ளும் பலியாவது ஆன்மாக்களின் பசுபோதமும் அதற்கு விடயமாகிய வினைப்பயன்களுமாம். ஊர்தொறும் – என்ற கருத்தைப்பற்றி

“இங்குநம் மில்லங்கள்  தோறும்  எழுந்தருளிச்,
செங்கமலப் பொற்பாதந் தந்தருளும் சேவகனை”

என்ற திருவாசகத்தினை உன்னுக.

ஒருவன் – ஒப்பற்றவன். “நின்னாவார் பிறரின்றி நீயே யானாய்” என்றபடி சிவபெருமான் ஒருவனே பதி – தலைவன் என்பதாம். ஒருவனது அருளினாலே ….. செல்வமுடையராம் பண்பின் நீடி – அவர் பிச்சை கொள்வாராயினும் தம்மை யடைந்தார்க்கு எல்லாச் செல்வமும் அருளவல்லார் என்றதனாற் பிச்சை கொள்வது தம்பொருட் டன்று என்பதாம்,

“படங்கொண்டு பாயும் பூவணையும் தருவா யெனினும் படுதலைகொண்டு, இடங்கள்   தோறும்  இரப்பாய்  என்று  ஏசுவார்க்கென் பேசுவனே”

என்ற திருவிளையாடற் புராணத்தினுள் இது சுவைபட விளக்கப்படுதல் காண்க.

பாரினில் ஆர்ந்த செல்வம் – உலகின் உண்மை அனுபவங்களுக்கு எவ்வெச் செல்வங்கள் வேண்டுமோ அவை முழுதும் நிறைந்த என்றபடி,

உடையராம் பண்பில் நீடி – பாரில் பலர் ஆர்ந்த செல்வமுடையராயிருந்தும் அவ்வுடைமையின் பண்பு இல்லாதாராய்க் கழிகின்றார்கள். அவ்வாறல்லாது அருளாற் பெற்றசெல்வமாதலின் அதனை உடையாராதலோடு உடைய பண்பினாலும் நீடினார் என்றுகுறிக்க உடையராய் நீடி என்னாது உடையராம் பண்பின் நீடி என்றார். அப்பண்பாவது செல்வம் பெற்றதால் ஆகிய நீடுபயன்பெறுதல். அப்பயனாவன அரன்பூசையும் அடியார்க்கமுது  அளித்தலுமேயாம்.

நல்ல செழும் கறி தயிர் நெய் பாலாற் சீருடை அடிசில் உதவும் என்று கூட்டி உரைத்துக்கொள்க. நல்ல – குணத்தால் நன்மைதரும். இவற்றைப் பதார்த்தகுண சிந்தாமணி முதலிய மருத்துவ நூல்களுட் கண்டுகொள்க. தூய இடத்தில்  தூயனவாகப் பயிரிடப்பட்ட என்பதும் உடன்கொள்க. செழுமை – இளையவை – முதியவை என்று  அவ்வவற்றுக்கேற்ற நிலை, அழுகல் – வாடல் புழுக்கடி முதலிய கேடு இல்லாத நிலை முதலாகிய தன்மைகள். ஆல் – என்ற விகுதியை தயிர் நெய் என்பவற்றுடனும் தனித்தனியே  கூட்டுக. உணவுப்பொருள்களில் இவையேதலைமை பெற்றனவும் இன்றியமை யாதனவும் சத்துவமுடையனவும் ஆம். ஆதலின் கறி தயிர் நெய் பால் அடிசில் என்ற இவற்றைக் கூறினார். கூறினாரேனும் உடனுண்ணும் இனம்பற்றிப் பருப்பு முதலியவையும், சுவைதரும் தகுதிபற்றி உப்பு முதலியவையும் உடன் கொள்க.

சீருடை அரிசி – என்று பாடங் கொள்ளின் செந்நெல்லரிசி என்றுரைத்துக் கொள்க. அதுவே அடிசிற்குச் சீருடையதாம்.

ஆர்தரு காதல் கூர – நிறைந்த ஆசை மேலும் மிக. கூர்தல் – உள்ளது சிறத்தல்.

அடியவர்க்குதவும் –  “உருத்திர பல்கணத்தார்க் கட்டிட்டல்” என்ற ஆளுடைய பிள்ளையாரது திருமயிலைத் தேவாரங் காண்க.

இப்பாடலில் கலயனார் இறைவனுக்குக் குங்கிலியத்   திருப்பணி செய்த சிறப்புடன், அடியாருக்கு உரிய, மாகேசுர பூசை  என்ற  வகையில்  தகுதி மிக்க அடியாருக்கு  உணவூட்டும்  சிவப்பணியும்  செய்தமை புலனாகின்றது! இதனாலேயே இவருக்குச் சிவபிரான் கருணை நோக்கம் உண்டானதை இவர் வரலாற்றிலேயே அறிந்து கொள்கிறோம்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *