சேக்கிழார் பாடல் நயம் – 145 (அப்பதியில்)
திருச்சி புலவர் இராமமூர்த்தி
13. மானக்கஞ்சாற நாயனார் புராணம்
வரலாறு
கஞ்சாறூர் என்ற ஊர், தலைச்சடைமேல் கங்கையணிந்த பெருமான் விரும்பிய ஊராகும். நூல்கல் காட்டும் அறவழியை உணர்ந்த புலவர் போற்றும் சிறப்புடையது. கொம்புகளில் கட்டிய கூடுகளிலிருந்து தேன் பொழியப் பழுத்த கனிகளின் சாறு ஒழுகும் வயல்களின் கரும்புகளின் சாறு மணக்கும் ஊராகக் கஞ்சாறூர் விளங்கியது.
நீலநயனங்கள் உடைய உழத்தியர்கள் களைபிடுங்கியபோது தப்பித்த கழுநீர்ப்பூக்கள் சிவந்து மலர்ந்தன. அதனைக் கண்டு நெற்கதிர்கள் தலை வணங்கின! இவ்வாறு மண்வளம் சிறந்த ஊர் கஞ்சாறூர். அங்கே மேகம்போன்ற கூந்தலின் இயல்பைக் கண்ட மயில்கள் தம் தோகையை விலக்கி ஒதுங்கின. வான்மதியைத் தோற்பிக்கும் முகத்தியராகிய உழத்தியர் கால்களைக் காட்டும் வயல்கள் கதிர் காட்டின.
அவ்வயலில் விளைந்த செந்நெல்லின் கதிர்கள் மேலும் வளர்ந்து அருகிலுள்ள வேலியில் வளர்ந்த பாக்கு மரங்களை உரசிய காட்சி, அம்மரங்களை அறுப்பது போல விளங்கின. அருகில் வீட்டு மாடங்களில் வெயிலின் ஒளி வீசியது. அங்கு தோரணங்களாகிய துணிக்கொடிகளுடன், பூரண கும்பம் ஏந்திய பெண்கொடிகளும், வீதிகளில் சேர்வோரை மயக்கும்!
வீடுகளில், அறவழியில் பொருளீட்டும் உழவுத்தொழில் சிறந்தது. அங்கே மயிலனைய பெண்டிர் நடனமாட, முழவதிர்ந்து விழாக்கோலம் புனைந்து வீதி விளங்கியது.
இந்த வருணனை மானக்கஞ்சாறர் இல்லத்தில் நிகழும் திருமண விழாவை நமக்கு உணர்த்துகிறது.
பாடல்
அப் பதியில் குலப் பதியாய் அரசர் சேனா பதியாம்
செப்ப வரும் குடி விளங்கத் திரு அவதாரம் செய்தார்;
மெய்ப் பொருளை அறிந்து உணர்ந்தார்; விழுமிய வேளாண் குடிமை
வைப்பு அனைய மேன்மையினார்; மானக்கஞ் சாறனார்.
பொருள்
உண்மைப் பொருளை அறிந்து அதனை எப்போதும் சிந்தித்து உணர்வினிற் கொண்டவரும், தூய வேளாள மரபின்சேமவைப்புப்போன்ற மேன்மையுடையவருமாகிய மானக்கஞ்சாறனார், அந்தத் தலத்தில் வழிவழி வாழ்கின்ற மேம்பாடுடையவராய் அரசரது சேனாபதியாகிய சுட்டிக் கூறத்தக்க குடிவிளங்கும்படி திருவவதாரஞ் செய்தனர்.
இப்பாட்டினால் நாயனாரது மரபும், மரபின் உட்குடியும், உள்ள நிறைவும், வழிவழி வாழ்க்கையும் முதலிய சிறப்புக்கள் பலவும் ஒருங்கு பேசப்பட்டன.
அறிந்து உணர்ந்தார் என்ற தொடர் அறிதல் – உணர்தல் ஆகிய வெவ்வேறு உணர்ச்சி நிலை குறித்தன. அறிந்து என்றதனாற் கேட்டலும் சிந்தித்தலும், உணர்ந்து என்றதனாற் தெளிதலும் நிட்டை கூடலும் உணர்த்தப்பட்டன. மெய்ப்பொருளானது ஞானேந்திரிய அறிவு அந்தக்கரண அறிவு என்னும் பாசவறிவினாலும், உயிரறிவு எனப்படும் பசு அறிவினாலும் அறியப் படாதாயும், சிவஞானமாகிய மெய்யுணர்ச்சியால் மட்டும் அறியப் படுவதாயும் உள்ள பொருளென்பது இங்குக் குறிக்கப்பட்டது.
அவ்வூரில் வழிவழி நிலைத்த குடிகளுள் முதன்மையுடையவர். இக்காரணம்பற்றியே முதன்மையார், முதலியார் என்ற குடிப்பெயர்கள் போந்தன என்ப. இவர்களுக்கு ஊராண்மை நாட்டாண்மை முதலிய ஊர் முதன்மைப் பட்டப் பெயர்களும் வழங்கும். இவர்களின் குடிச்சிறப்புக்களை ஆசிரியர் பல இடத்தும் விதந்து பேசுகிறார். அரசர் சேனாபதியும் செப்பவருங் குடி – அரசரிடத்துச் சேனாபதியாகும் தொழிலும் வேளாளர்க்கு உரியது. இது இவர்களுட் சில குடிகளில் வழிவழியாய் வருவதொன்றாதலின் இவ்வாறு கூறினார். இந்நாயனாரது மகளாரை மணம் புரியவந்த ஏயர்கோனாரும் இதுபோலவே சேனாபதிக்குடியினில் வந்தவர் என்பது “ஓங்குகுல மரபினராய்” , “எந்தமது மரபினுக்குத் தகும்பரிசா லேயுமென” என்றவற்றாலும், ஏயர்கோனார் புராணத்தினுள் “ஏயர்கோக்குடிதான்”, “மன்னிநீடிய வளவர் சேனாபதிக்குடியாம்” என்று கூறுவதனாலும் விளங்கும்.
திலகவதியம்மையாருக்கு மணம்பேசிய கலிப்பகையாரும் அரசர் சேனாபதியாராகப் போர்புரிந்து உயிர் கொடுத்துப் புகழ் கொண்ட சரிதத்தையும் இங்கு நினைவு கூர்க. இதனை “வேந்து விடுதொழிலிற் படையுங் கண்ணியும், வாய்ந்தன ரென்ப வவர்பெறும் பொருளே” என்ற தொல்காப்பியத்துள்ளும் காண்க.
குடிவிளங்க – இவர் அவதரித்த குடி இவரால் விளக்கமடைய, குலவிளக்கு, குலதனம் முதலிய வழக்குக்கள் காண்க. ஒரு குலத்தில் வந்த பெரியார் ஒருவரைச் சுட்டி அக்குலம் பெருமையடைதல் வழக்கிற் காண்க. ஆசிரியர் சேக்கிழாரைக் குடிப்பெயராலே வழங்குவது இதனை விளக்கும்; “இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி” என்ற திருமுருகாற்றுப்படையும் சிந்திக்க. “கானவர்குலம் விளங்கத் தத்தைபாற் கருப்ப நீட” என்றதும் காண்க.
விழுமிய வேளாண் குடிமை வைப்பு – வேளாண் குடியின் விழுப்பமாவது வாய்மை திறம்பாமையும், நினைப்பினாலும் தீமையில்லாமையும், தொழிலால் தூய்மையும், கரவா வள்ளண்மையும் ஆம். “தீயவென்பன கனவிலு நினைவிலாச் சிந்தைத் தூய மாந்தர்” “தம்முரையும் வணிகனுக்கொருகால், சொன்ன மெய்ம்மையும் தூக்கியச் சொல்லையே காக்கப், பெற்ற மேன்மை” , “நம்பு வாய்மையினீடு”,”அனைத்துவித நலத்தின்கண் வழுவாத நடைமரபிற் குடி” என்பன முதலாக ஆசிரியர் ஆங்காங்கும் காட்டிப் போந்தவை காண்க. “வேளாளரென்றவர்கள் வள்ளன்மையால் மிக்கிருக்குந், தாளாளர்”, “இன்மையாற் சென்றிரந்தார்க் கில்லையெனா தீந்துவக்குந் தன்மையார்”, என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரமுங் காண்க.
விழுமம் – நன்மை (விழுமியார் – நல்லோர்). குடிமை வைப்பு அனைய – குடிக்குச் சேம நிதிபோல. முயற்சியின்றி யாவரும் பயன்பெறக் கூடியதும் எடுக்கக் குறையாததும் சேம நிதியாம். இவரது கரவாத வள்ளன்மை குறித்தது.
மேன்மையினார் மானக்கஞ்சாறனார். இந்நாயனாரது இயற்பெயர் விளங்கவில்லை. மேன்மையினாராதலின் இப்பேர் பெற்றார் என்று பேர்ப்பொருள் விளக்கம் செய்தவாறு.
இப்பாடலில் மானக்கஞ்சாறனார் பண்பும், ஒழுக்கமும் அவரில்லத்திலும் வீதியிலும் அனைவரும் ஆடிப்பாடி விழாக்கோலம் கொண்டதும், இதே வரலாற்றின் முன்னோட்டமாக விளங்கின!