இந்த வார வல்லமையாளர்!

ஏப்ரல் 28 , 2014

வல்லமையாளர்கள் பலர் நிறைந்த இவ்வுலகில், சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்ட…..

**************************************************************************************

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு திரு. பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள்

**************************************************************************************

pichinikkadu elango

வல்லமை இதழால் இவ்வார வல்லமையாளராகத் தேர்வு செய்யப் பெறுபவர் திரு. பிச்சினிக்காடு இளங்கோ (https://www.facebook.com/pichinikkadu.elango.9) அவர்கள். சிங்கப்பூரைச் சேர்ந்த இந்தத் தமிழகக் கவிஞர் வல்லமை இதழ் வாசகர்களுக்கு மிகவும் பழக்கமானவர், இன்றுடன் இரண்டு ஆண்டுகளாக (April 27, 2012 இல் இவரது முதல் வல்லமை பதிவு) வல்லமையின் வாசகர்களை தனது கவிதைகள் மூலம் மகிழ்வித்து வரும் திரு. பிச்சினிக்காடு இளங்கோ ஒரு வேளாண்மைப்பட்டதாரி. இவர் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அத்திவெட்டி கிராமத்தில் குக்கிராமமான பிச்சினிக்காட்டில் பிறந்தவர். திருச்சி அனைத்திந்திய வானொலி நிலையம், சிங்கப்பூர் ஒலிபரப்புக்கழம், சிங்கப்பூர் MDIS (Management development Institute of Singapore) என்கிற கல்வி நிறுவனம் எனப்பல நிறுவனங்களும் இவர்  பணியால் சிறப்புற்றிருக்கிறது. சிங்கைச்சுடரின் முன்னாள் ஆசிரியரான இவரது கவிதைகள் தமிழகத்தின் குமுதம், விகடன் போன்ற முன்னணி பத்திரிக்கைகளிலும் வெளிவந்துள்ளன.

கவிஞனாகிறேன்  என்ற கவிதையில் தான் எப்படிப்பட்ட கவிஞன் என்று தன்னைப்பற்றிக் கூறியுள்ளார்.

இதை இதை
எழுதவேண்டுமென்று
எண்ணியதில்லை
எண்ணுவதுமில்லை

அது அது
வந்து நச்சரிப்பதால்தான்
எனது எழுதுகோல்
உச்சரிக்கிறது …..

இதுவரை இவரது பத்து கவிதை நூல்கள் வெளி வந்துள்ளன. இவர் நெடுங் கவிதைகளையும் எழுதுவதுண்டு. இவரது முதல் தொகுதியான “வியர்வைத்தாவரங்கள்” படித்து விட்டு மறைந்த டாக்டர் பாலா நெடுங்கவிதைகள் எழுதுங்கள் என்று கேட்டுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.  இரண்டாவது பதிப்பை அறிமுகப்படுத்திய கவிப்பேரரசு திரு. வைரமுத்து அவர்கள் “உங்களுடைய நெடுங்கவிதை நாவல்போல் உள்ளது” என்றும் பாராட்டியுள்ளார். இவாரத்தில் வல்லமை இதழில் வெளிவந்த இவரது கர்ணனல்லன் விகர்ணனே ஆயிரத்தில் ஒருவன் என்ற கவிதையும் ஒருவகையில் நெடுங்கவிதையே.

இவருக்கு ஒரு நூலைப் படிப்பது, பேருந்துப் பயணத்தில் ஒரு நிகழ்வைப் பார்ப்பது என அனைத்துமே கவிதைகளை எழுதத் தூண்டுகோலாக அமைந்து விட்டிருக்கிறது. அக்குறிப்புகளையும் இணைத்து கவிதைகளுடன் வழங்கியுள்ளார்.

இம்முறை இராஜாஜியின் மகாபாரதம் படித்த பிறகு கர்ணன் மேல் கொண்டிருந்த இவரது எண்ணம் மாறிவிட்டிருக்கிறது. நாம் அனைவரும் நட்பிற்கு இலக்கணமாகக்  கர்ணனைப் புகழ்வோம். செஞ்சோற்றுக் கடன் தீர்க்க தனது தம்பிகளையும் எதிர்த்தவன் எனப் பாராட்டுவோம். ஆனால் இவரோ கர்ணன் பெரிய வள்ளலாகத்தான் இருக்கட்டுமே அதனால் என்ன? அவன் நியாயவான் அல்ல … என்று தனது வாதத்தை முன் வைக்கிறார்.

துவைத வனத்தில் சித்திரசேனனிடம் துரியோதனன் சிக்கிய பொழுது கர்ணன் உதவாமல் தப்பி ஓடினான். தனக்கு நாடு தந்து அவமானம் துடைத்து அழகு பார்த்த துரியோதனனை தவிக்க விட்டவன் கர்ணன். அவன் நியாயத்தின் பக்கம் நின்றதே இல்லை. கௌரவர் சபையில் பாஞ்சாலிக்கு நடந்த கொடுமையில் பாஞ்சாலிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவன் விகர்ணன்தான். கர்ணன் துச்சாதனனுக்கு துகிலுரிக்கச் சொல்லி தூபம் போட்டவன். பாஞ்சாலிக்கு ஆதரவாகப் பேசிய விகர்ணனைக் கண்டித்தவன் கர்ணன்.  இந்தக் காரணத்தால் இக்கவிஞர் கர்ணனை மன்னிக்கத் தயாராக இல்லை.

கௌரவர்களில் நூற்றில் ஒருவனாக இருந்தாலும் பாஞ்சாலிக்கு நடந்த அநியாயத்திற்கு உடன்படாத விகர்ணனே ஆயிரத்தில் ஒருவன் என்று தனது எண்ணத்தைக்  கவிதை மூலம் வடித்துள்ளார். இது போன்ற வேறு விதக் கோணம் கொண்ட விவாதம் இவரது கவிதையை சிறப்புறச் செய்கிறது.

அக்கவிதையின் சுருக்கமான சாரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கர்ணனல்லன் விகர்ணனே ஆயிரத்தில் ஒருவன்
[முழுக் கவிதையின் சுட்டி: https://www.vallamai.com/?p=44441]

எல்லாரும்
எல்லா இடத்திலும்
கர்ணனையே வியக்கிறார்கள்
நான் வேறுபடுகிறேன்

உலகத்தோடு
நான்
ஒத்துப்போக விரும்பவில்லை
எல்லாரையும்போல
ஓபோட
விரும்பவில்லை

கொடை
கொடுக்கும் இடத்திலும்
குலம்கேட்ட இடத்திலும்
நான்
கர்ணன்பக்கம்தான்

திறன்காட்டவிடாமல்
குலம்கேட்டது கொடுமைதான்
அதற்குமேல்
அவன்மேல்
மரியாதையில்லை
நான்
அவன்பக்கமில்லை

செஞ்சோற்றுக்கடன்
தீர்த்ததிலும் பெருமையில்லை

பாண்டவர் கெளரவர்
மற்றும் வேடிக்கை
பார்ப்பவர்
நிறைந்த அவையில்
பாஞ்சாலிக்காக
யார்பேசினார்கள் நேர்மையாய்?

பெண்ணெனப்
பார்த்தவர் அதிகம்
பெண்ணென்று
பரிவுகாட்டியவர் யார்?

சுதந்தரம் இழந்தவன்
என்னை இழக்க
என் சுதந்தரத்தை இழக்க
என்ன உரிமையுண்டு?

பாஞ்சாலி கேள்விக்கு
அவை ஆண்மையற்று
அன்று ஆமைபோல் இருந்தது

பாஞ்சாலி பேசுவது
சரியென்று குரல்கொடுத்த
விகர்ணனைக்
கண்டித்த கர்ணனைக்
கண்ணைமூடிக்கொண்டு ஏற்பது
ஏற்புடையதல்ல எனக்கு

விகர்ணன்
அவையில் சின்னவன்
பெண்ணுக்காய்ப்பேசிய
பெரியவன் அவன்தான்

துச்சாதனனைத்
துகிலுரியத் தூண்டியதே
கர்வக்காரன் கர்ணன்தான்

இனி எப்போதும்
நான் விகர்ணன் பக்கம்

இராமயணம் என்றால்
நான்
கும்பகர்ணன் பக்கம்

காரணம்
விகர்ணன்
நியாத்தின் பக்கம்

அவன்
கெளரவர்களுக்கு
கெளரவம் தந்தவன்

அவன்
நூற்றில் ஒருவனல்ல
ஆயிரத்தில் ஒருவன்

சிறப்பு மிக்க கவிதை ஒன்றை வல்லமை வாசகர்கள் படித்து மகிழ வழங்கிய திரு. பிச்சினிக்காடு இளங்கோ அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

**************************************************************************************

வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!

தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட

வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இந்த வார வல்லமையாளர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *