இந்த வார வல்லமையாளர்!

மே 26, 2014

சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர் …

இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு

திரு. பூவை. பி. தயாபரன் அவர்கள்

dhayaparan

சென்றவாரம் திரு. தயாபரன் அவர்களின் தொண்டைப் பற்றி இந்து நாளிதழின் “மனதுக்கு இல்லை வயது” பகுதியில் வெளியான செய்திக் குறிப்பைப் படித்து, மனம் நெகிழ்ந்து, “இதோ வல்லமையாளருக்காக ஒரு சிபாரிசு … திரு தயாபரனின் தயாள குணத்தைப் பாராட்டுவதா அல்லது திருவள்ளுவச் செல்வம் எப்படியெல்லாம் பரப்பப்படுகின்றது என்பதை நினைத்து மகிழ்வதா…” என்று அவரை இவ்வார வல்லமையாளராகப் பரிந்துரைத்தவர் நண்பர் திரு. திவாகர் அவர்கள்.
தயாபரன்2

திருக்குறள், எல்லா மொழிகளுக்கும், எல்லா இனங்களுக்குமான ஒரு பொது மறை, இதை வழங்கியிருப்பது நம் தமிழ் மொழி மட்டுமே என்பதில் நம் அனைவருக்குமே பெருமை உண்டு. இந்தப் பெருமித எண்ணத்தினால் ஓர் அறக்கட்டளையும் அமைத்து, திருக்குறளின் பெருமையை அடுத்த தலைமுறையினரும் போற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் தன்னார்வத் தொண்டு செய்பவர் பூவை. பி. தயாபரன் அவர்கள்.

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு. தயாபரன் அவர்கள். இவர் தனது தமிழ்ப் பற்றுக் காரணமாக இன்றும் மாலை வேளையில் மாணவர்களுக்கு திருக்குறள், மூதுரை, ஆத்திச்சூடி, நல்வழி, கொன்றை வேந்தன் ஆகியவற்றை இலவசமாக கற்பித்து வருகிறார். அத்துடனின்றி, திருக்குறளுடன் அவரது மகன் திருமூலநாதன் பெயரையும் இணைத்து “திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை” என்ற அமைப்பை 1997-ம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறார். இவரது மகன் திருமூலநாதனும் தனது நான்கு வயதிலேயே திருக்குறள் முழுமையையும் ஒப்பித்து 1996 இல் லிம்கா சாதனையாளர் நூலில் இடம் பெற்றவர்.

தனது ஓய்வூதியத்தை அந்த அறக்கட்டளைக்கு நிதியாக்கி, அந்த நிதியில் கடந்த 17 ஆண்டுகளாக திருக்குறள் திருவிழா நடத்தி வருகிறார். அந்த விழாவில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் 1,330 குறள்களையும் ஒப்பிக்கும் மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில் பரிசு வழங்கி இளைய தலைமுறையினரை திருக்குறள் கற்க ஊக்குவிக்கிறார்.

1330 திருக்குறள்களையும் சீர்களைச் சிதைக்காமல், தடுமாற்றமின்றி, சரியான உச்சரிப்புடன் ஒப்பிப்பவர்களுக்கு தலா ரூ.1,500ம் அத்துடன் விருதும் வழங்கப்படுகிறது. வயதில் சிறியோர்களின் சிரமத்தைக் குறைக்க தவணைமுறையிலும், அதாவது முதல் தவணையாக 500 குறள்களை ஒப்பித்துவிட்டு ரூ.500 பரிசும் , பிறகு அடுத்த ஆண்டு மீதமுள்ள 830 குறள்களை ஒப்பித்துவிட்டு ரூ.830 பரிசு வாங்கிக்கொள்ளலாம் என்ற வாய்ப்பும் கொடுக்கப்படுகிறது. கடந்த 17 ஆண்டுகளில் இதுவரை 161 மாணவர்கள் ரொக்கப் பரிசுகளும், விருதுகளும் பெற்றுள்ளனர்.

பரிசு பெறுவோருக்கு “திருக்குறள் செல்வன் அல்லது “திருக்குறள் செல்வி” என்ற விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் வாரம் இப்போட்டி நடத்தப்பெறும். இந்தப் போட்டியில் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் 17 வயதுக்குட்பட்ட பள்ளியில் படித்து இடைநின்றோரும் பங்கேற்கலாம். திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள், தமது பெயர் மற்றும் தன்விவரக் குறிப்பை “பூவை பி.தயாபரன், 25, திருக்குறள் தெரு, புள்ளம்பாடி, 621 711′ என்ற முகவரிக்கு ஒவ்வொரு ஆண்டிலும் ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் அஞ்சலில் அனுப்பி பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் தகவலுக்காக தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 97865 86992. இணையத்தள முகவரி: https://sites.google.com/site/thirumoolanathand/thirukkural-thirumoolanathan-arakkattalai

தான் ஓர் எளிய வாழ்கை முறையினைப் பின்பற்றி வாழ்ந்தாலும், பிறரிடம் இருந்து எந்த நிதி உதவியும் பெறாது, திருக்குறளையும் தமிழையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் பூவை. பி. தயாபரன் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

  1. மிக்க நன்றி தேமொழி!
    வல்லமையாளர் திரு பூவை தயாபரன் அவர்களுக்கும், அவரைப் பற்றிய விவரங்களை எடுத்துச் சொன்ன திருப்பூர் திரு நாகேஸ்வரன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

  2. We thank the Vallamai Magazine for selecting us to be this week’s “VallamaiyaaLar”. We feel honored and encouraged by such words from Vallamai. We also want to wish all success for Vallamai’s endeavor of encouraging people who commit themselves for improving the society. Thanks once again.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.