இந்த வார வல்லமையாளர்!

செப்டெம்பர் 22, 2014

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு  பேராசிரியர் செ. இரா. செல்வக்குமார் அவர்கள்

 

selvakumar2

 

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பாடங்களை விரைவில் தமிழ் விக்கிபீடியா வழியாக தமிழர்கள் யாவரும் பெற்று பயன்பெறும் வகையில் இடம்பெற முயன்று வருகிறார்  கனடாவைச் சேர்ந்த பேராசிரியர் செ. இரா. செல்வக்குமார் (C.R.Selvakumar) அவர்கள். சென்ற புதனன்று (செப்டெம்பர் 17, 2014) சென்னையில் நடந்த, பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சார்ந்த அறிஞர்கள் பலர் பங்கு பெற்ற பயிலரங்கில்  சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, விக்கிபீடியா என்பது கலைக்களஞ்சியம் மட்டுமல்ல, தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கான தொழில்நுட்பம்.  அதனை முழுமையாகப் பயன்படுத்த வேண்டியுள்ளது என்று கூறி இத்திட்டத்தின் இன்றியமையாமையை வலியுறுத்தியுள்ளார்.  கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகிகளுள் ஒருவராக அயராது செயலாற்றித்  தமிழை இணைய உலகத்திற்கு கொண்டுவரும் நோக்கத்தில் இப்பணியைச் செய்து வரும் பேராசிரியர் செல்வக்குமார் அவர்கள் இவ்வாரத்தின் வல்லமையாளராக வல்லமை இதழ் குழுவினரால் பாராட்டப்படுகிறார்.

வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து கொண்டே அலுவலகப் பணிகளைச் செய்யலாம்,  இருந்த இடத்தில் இருந்து கொண்டே அயல்நாட்டிலும் வேலை பார்க்கலாம் என்ற வசதி சென்ற நூற்றாண்டின் முற்பகுதிகளில் அறிவியல் கதைகளில் மட்டும்தான் கற்பனையில் எழுத முடிந்திருக்கும். தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக மிகவும் குறுகிவிட்ட இன்றைய உலக அரங்கு, இந்த நூற்றாண்டில் மொழிகளின் வளர்ச்சிக்கு மற்றொரு சவாலை வைத்திருக்கிறது.   உலகப் பொதுமொழியாகப் பல்கிப் பரவிவிட்ட ஆங்கிலம் இணையத்தில் செயலாற்றுவதற்கு இன்றியமையாத மொழியாக மாறிய நிலையினால் இக்கால இளைஞர்கள்,  நடப்புலகின் நிலையை அனுசரித்து ஆங்கிலவழியில் செல்லும் நிர்பந்தத்தில் உள்ளனர்.

தேவையானால் ஆங்கிலம் பயன்படுத்திவந்த சென்ற தலைமுறையினர் போல அல்லாது, சமூகவலைத்தளம் மூலம் உலக நட்புகளுடன் உறவாடுவதில்  குறுக்கிடும் மொழி என்ற தடையைக் களைய  வேண்டிய இன்றியமையாத்  தேவையினால் இளைய சமுதாயத்தினரின் வாழ்வில் ஆங்கிலம் பின்னிப்பிணைந்துள்ள காலமிது.   இத்தகையப் போட்டியில் பல உலக மொழிகளும்  வளரும் களம் இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் மாறிவிட்டிருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில், உலக  மொழிகள் யாவும் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு   ஈடுகொடுத்து தகவல்களை மொழியாக்கம் செய்து வழங்கவும்; இதுவரைப் பயன்பாட்டில் இருந்து வந்த மொழித் தரவுகளை எண்ணிம வடிவில் மாற்றி உடனே தேடி அடையும் வண்ணம் சேமித்து வைத்து வழங்க வேண்டிய நெருக்கடியான நிலையை… அதையும் குறுகிய காலத்தில் தங்கள் மொழி மக்களுக்கு வழங்க வேண்டியக் கட்டாயத்தில் உள்ளனர்.  முன்னேற்றத்தை நோக்கி மாறிக்கொண்டே வரும் தொழில் நுட்பக்கருவிகளைக்   கையாளும் தொழில் வல்லுனர்கள்  தமிழுக்குக் கிடைத்திருப்பதும், அவர்கள் இப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு  தமிழ் வளர்ச்சிக்குப்  பணி செய்வதும் பாராட்டப்பட வேண்டிய செயல்கள்.  கடந்த 20 ஆண்டுகளில் தமிழ் மொழியைக் கணிம உலகின் எண்ணிம வடிவங்களில் முன்னெடுத்துச் செல்ல முயலும் நிறுவனங்களும், அரசு சாரா அமைப்புகளின் ஆக்கப்பூர்வமான செயல்களும், தனிமனிதர்களின் தன்னார்வ முயற்சிகளும்  அளவிலடங்காது.  அத்தகையப் பணியில்  தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்  பேராசிரியர் செல்வக்குமார் அவர்கள்.

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து படித்து,  இப்பொழுது கனடா நாட்டின் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பேராசிரியராகப் பணிபுரியும்  செல்வக்குமார்  மின் மற்றும் கணினி இயல் துறையில் வல்லுநர்.  குறைகடத்திகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.  அத்துடன் நிறுத்திவிடாமல் தமிழ் விக்கிப்பீடியாவில் இதுவரை 800க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியும், இருபதாயிரம் தொகுப்புளும் செய்திருக்கிறார். தமிழகராதியான  தமிழ் விக்சனரியிலும் பல்லாயிரக்கணக்கான சொற்கள் சேர பல வழிகளிலும் உதவி உள்ளார். தமிழ் விக்கிப்பீடியாவில் அதிகம் பங்களித்த முதல் ஐவர் வரிசையிலும் இடம் பிடித்து இருக்கிறார். தமிழில் கலைச்சொற்கள் ஆக்குவதிலும் அறிவியல் பயன்முக அறிவியல் படைப்புகள் செய்வதிலும் ஆர்வம் மிகக் கொண்டவர் இவர்.

 

selvakumar3“தமிழ் விக்கிப்பீடியா என்பது உலகளாவிய தமிழர்கள் சேர்ந்து அவரவர்களுக்கு கிடைக்கும் நேரத்தைப் பொறுத்து தமிழில் எல்லா வகையான செய்திகளையும் கருத்துகளையும் மிகவும் சுருக்கமாகவோ, விரிவாகவோ எழுதி வளர்க்கக்கூடிய ஓர் அருமையான தொழில்நுட்பத்திட்டம், அறிவுத்தொகுப்பாக்கம். விக்கி என்பது முதலில் ஒரு தொழில்நுட்பம் என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். கூட்டாகப் பலரும் ஒருங்கிணைந்து கூட்டாக்கம் செய்யச் சிறந்த ஒரு நுட்பம். “

….

“அனைவரும் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தினாலும், பலர் தாங்களும் பங்கேற்று தரவுகள் வழங்கலாம் என்பதை உணர்வதில்லை.  உணர்ந்தவர்களும் அவ்வாறு பங்களிப்பதால் தங்களுக்கு என்ன பயன் என்று எண்ணுகிறார்கள்.  குழுவாகப் பணிபுரிவதும், ஒருவருக்கொருவர் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு உறவாடுவதும், புதிய தொழில் நுட்பத்தைத் தெரிந்து கொள்வதும், மேலும் பல அறிந்துகொள்வதும் பலனாகக் கிடைக்கிறதே, அது சிறந்த பயனல்லவா?” என்று கேள்வி எழுப்புகிறார் செல்வக்குமார்.

தமிழ்க் கணிமை வரலாற்றில் திசுக்கி (TSCII) உருவாக்கத்தில் பங்கு கொண்டதுடன், தொடர்ந்து ஒருங்குறி நிறுவனத்தில் உறுப்பினராக இருந்து கணித்தமிழுக்கு அரிய பணிகள் ஆற்றிவருகின்றார். பல புகழ்பெற்ற பேராசிரியர்களும் தமிழ் ஆர்வலர்களும் பங்கு கொள்ளும் “தமிழ்மன்றம்” என்னும் கூகுள் குழுமம் ஒன்றை நடத்தி வருகின்றார். மின்னூலாக்கம் வகையிலும் முன்னோடியாக, மதுரைத்திட்டத்திற்கும் முன்னரே நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தை முதன்முதலாக மின்வடிவில் வெளியிடும் பணியில் அக்குழுவில் ஒருவராகப் பங்களித்துள்ளார். ஃபேஸ்புக் சமூக வலைதளத்தை தமிழில் வெளியிடும் வகையிலும் பெரும்பங்கு அளித்துள்ளார்.

மலேசியா வாழ் தமிழர்,  திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன் அவர்கள் “தமிழ்க்கணிமைத் துறையில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவர்களில்  ஒருவர் மதிப்புமிகு பேராசிரியர் செ.இரா.செல்வக்குமார். தமிழ் விக்கிப்பீடியாவைச் செழிக்கச் செய்த – செழுமை செய்துகொண்டிருக்கும் முன்னோடிகளில் இவருக்கு என்றுமே சிறப்பிடம் உண்டு. தமிழ்க்கூறு நல்லுலகம் காலத்திற்கும் நன்றியோடு நினைத்துப்பார்க்க வேண்டிய அளவுக்கு மிகப்பெரும் பங்களிப்பைத் தமிழுக்கு வழங்கியிருக்கும் கொடையாளர் இவர் எனில் மிகையன்று,” என்று இவரது தமிழ்க்கணிமைத் துறை பங்களிப்பைப் பாராட்டுகிறார்.

தன்னார்வப் பணியாக தமிழ்க்கணிமைத் துறையில் பங்களிப்பைச்  செய்து வரும் இவருடைய முயற்சிக்காக பேராசிரியர் செ.இரா.செல்வக்குமார் அவர்களை இவ்வாரத்தின் வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

 

 

 

 

தொடர்புத் தகவல்:
C.R. Selva (Selvakumar)
Faculty of Engineering, E&CE Department
University of Waterloo
200 University Avenue West
Waterloo, Ontario, Canada N2L 3G1

Email:- selvakumar@uwaterloo.ca
Phone:- (519) 888-4567 ext.3978
Linkedin :- http://ca.linkedin.com/pub/c-r-selvakumar/1b/a54/15
Google + :- https://plus.google.com/111751091024415944844/
தமிழ் விக்கிப்பீடியாவில் செல்வா: http://ta.wikipedia.org/s/1lo

வலைப்பக்கங்கள்:
https://ece.uwaterloo.ca/~selvakum/
https://ece.uwaterloo.ca/~selvakum/biop.html
https://uwaterloo.ca/electrical-computer-engineering/people-profiles/chettypalayam-selva-selvakumar

வலைபதிவுகள்:
தமிழ் விக்கிப்பீடியா குறித்த வலைப்பதிவு: http://tamilwikipedia.blogspot.com/
தமிழ்வெளி: http://tamilveli.blogspot.com/

 

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

 1. எழுகின்ற ஞாயிறு இங்கே இடையறா பணியை ஆற்ற..
  நிலைபெறும்  உலக வாழ்க்கை தொடர்கதை ஆவதுபோல 
  ஒருசிலர் தானே உலகில் முன்னணி நின்று வளர்ச்சிக்கு வழிகாட்ட 
  பயன்பெறும் தலைமுறைகள் சார்பாய் சமர்பிப்போம் நன்றி.. நன்றி..
  இணையத்தில் தமிழின் ஆட்சி இன்னும் மேம்பட  
  இவரின் சேவைகளுக்காக  வல்லமையாளர் விருதுபெறும் 
  பேராசிரியர் செ. இரா. செல்வக்குமார் அவர்களை 
  நெஞ்சாரப் பாராட்டி மகிழ்கின்றோம்!
  அன்புடன்..
  என்றென்றும் கண்ணதாசன் புகழ் பாடும் 
  காவிரிமைந்தன் 

 2. என் நெஞ்சார்ந்த நன்றியை வல்லமை ஆசிரியர் குழுவுக்கும் திருவாட்டி பவள சங்கரிக்கும் தெரிவித்துக்கொள்கின்றேன். நான் சற்றும் எதிர்பாராதா பாராத ஊக்க விருது. விக்கிப்பீடியாவிலும், பிற தமிழ்ப்பணிகளிலும் உடன் பங்காற்றிய 
  அன்புடையவர்களின்  சார்பாக இதனைப் பெறுவதாகக் கொள்கின்றேன்.
  விக்கிப்பீடியாவைப் பொருத்த அளவில், திரு மயூரநாதன், சுந்தர், இரவி, நற்கீரன், சிறீதரன் கனகு, மணியன்,சோடாபாட்டில் என்றழைக்கப்படும் பால செயராமன், திருவாட்டி பூங்கோதை, அன்.டன், திருவாட்டி கலையரசி, செங்கை பொதுவன் ஐயா, செகதீசன், திருவாட்டி பார்வதி, கோபி, முனைவர் பவுல் ஐயா, தகவலுழவன், மருத்துவர் பேராசிரியர் நந்தகுமார், செயரத்தினா, செல்வகுருநாதன், தெரன்சு, சிவக்குமார், பேராசிரியர் கிருட்டிணமூர்த்தி, மதன், ஆதவன், பாஃகிம், சண்முகம், மரு. செந்தி  இன்னும் குறிப்பிடாத பற்பல அன்பர்கள்  நட்புடனும், அக்கறையுடனும் ஆக்கியதின் விளைவே தமிழ்விக்கிப்பீடியா. வல்லமைக்கு மீண்டும் என் நன்றி. 

Leave a Reply

Your email address will not be published.