— கவிஞர் காவிரிமைந்தன்.

பாவாடை தாவணியில் …

நினைவுகளின் நீரோடையில் தெளிவான இளம்பருவம்!
வாலிபம் வந்து தலைநீட்டும் அது ஒரு வசந்தகாலம்!!
தலைவன் தலைவி துணைதேடும் மானுட விளையாட்டு!
இறைவன் படைப்பில் இதயங்கள் இணையும் திருமணம் எனும்கூட்டு!!

காதல் என்னும் பரவசத்தால் ஆயிரம் பரபரப்பு!
காலை மாலை வேளைகள் எல்லாம் நெஞ்சில் துடிதுடிப்பு!!
எண்ணிப் பார்க்கும் இதயத்தில் எத்தனை அலையடிக்கும்!
எண்ணத்தானே முடிவதில்லை இதுவரை ஒருவருக்கும்!!

கனவுகளிலே மிதப்பதுவே பருவம் செய்யும் ஜாலமாகும்!
கண்களிலே சுமப்பதுவே பருவம் செய்யும் தேவலோகம்!!
மன்மதனை அழைத்திடவே மனதிற்குள் சுகம் தோன்றும்!
மலர்க்கணை பாய்ந்திடவே மணநாள் பெறும் சொர்க்கமாகும்!!

பாவாடை தாவணியில் 1தமிழகத்துப் பண்பாட்டில் உறவுக்குள் பெண் எடுப்பதும், கொடுப்பதும் தாரளமான ஒன்றே! இதனாலேயே இளம் வயது முதல், இவன் – இவளுக்கு, இவள் – இவனுக்கு என்று பெரியவர்கள் முடிவு செய்வதுமுண்டு. தமக்கை மகளைத் தாரமாக ஏற்றிருக்கும் ஆண் மகன்கள் அதிகமுள்ள நாடு நம் தமிழ்நாடு. இந்தப் பாரம்பரியம் பட்டுவிடக்கூடாதென கெட்டிக்காரத்தனத்துடன் இன்றும் கடைப்பிடிக்கும் குடும்பங்களும் அதிகம் உண்டு. இவ்வரிசையில் இளம் பருவத்தில் தான் கண்ட பாவாடை தாவணியை மறக்க முடியாமல், பருவத்தைச் சுமந்துவரும் ஆடவர்கள் கோடியுண்டு!

அன்று பார்த்த அந்த உருவமா.. இப்படிச் செழித்து, கொழித்து வளர்ந்து வதனம் காட்டுகிறது? எண்ணத்திரையில் சின்னவளாய் கண்ணுக்குள் நின்றிருந்த அவளைச் சிங்காரமாய்.. ஒய்யாரமாய்.. சேலை கட்டிய பூங்கொடியாய் பார்த்துப் பூரிக்கின்றவர்களில் ஒருவனாய்..

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா

இந்தப் பாடலின் பல்லவியில்தான் பண்பாட்டின் பின்னணி உள்ளது. சரணங்களில் வரும் வரிகளும் வார்த்தை ரதங்களாய் அழகு சேர்க்கின்றன. அங்கேயும் கண்ணதாசன் முத்திரை பளிச்சிடுகிறது பாருங்கள்!

பொதுவாக பெண்டிர்தான் ஏழேழு ஜென்மங்களுக்கும் நீங்களே எனக்கு கணவராக வரவேண்டும் என்று சொல்வது வழக்கம்! அடடா.. ஒரு ஆண்கூட அப்படிச் சொன்ன சுவடுகள் இல்லையே…

எங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும்
ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும்
மங்கை உன்னை தொட்ட உடன் மறைந்து விட்டாலும்
நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன்

என்று புதிய பிரகடன உத்தியைத் திரைப்படப்பாடலில் வடித்துச் சென்ற கவியுள்ளமே!
நிச்சய தாம்பூலத்தில் நடிகர் திலகத்தின் அதியற்புத நடிப்பில் வெள்ளித்திரை வழங்கிய விருந்தல்லவா?

திரைப்பாடல் என்னும் வகையில்கூட இத்தனை அர்த்தபுஷ்பங்களை மாலையாக்கி வைத்த நின் திறனை எண்ணி வியக்கிறோம்! கேட்டு ரசிக்கிறோம்!!
……………………………………………………………………………………………………………………
காணொளி: https://youtu.be/UTPvMuptaUg

https://youtu.be/UTPvMuptaUg

……………………………………………………………………………………………………………………

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
பாலாடை போன்ற முகம் மாறியதேனோ
பனி போல நாணம் அதை மூடியதேனோ
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா

வாவென்று கூறாமல் வருவதில்லையா
காதல் தாவென்று கேளாமல் தருவதில்லையா
வாவென்று கூறாமல் வருவதில்லையா
காதல் தாவென்று கேளாமல் தருவதில்லையா
சொல்லென்று சொல்லாமல் சொல்வதில்லையா
இன்பம் சுவையாக சுவையாக வளர்வதில்லையா
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா

தத்தி தத்தி நடப்பதற்கே சொல்ல வேண்டுமா
நீ முத்து முத்தாய் சிரிப்பதற்கே பாடம் வேண்டுமா
தத்தி தத்தி நடப்பதற்கே சொல்ல வேண்டுமா
நீ முத்து முத்தாய் சிரிப்பதற்கே பாடம் வேண்டுமா
முத்தமிழே முக்கனியே மோகவண்ணமே
முப்பொழுதும் எப்பொழுதும் சொந்தமே
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா

எங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும்
ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும்
மங்கை உன்னை தொட்ட உடன் மறைந்து விட்டாலும்
நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன்
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
……………………………………………………………………………………………………………………
திரைப்படம் – நிச்சய தாம்பூலம்
பாடல் – பாவாடை தாவணியில்
கவிஞர் – கண்ணதாசன்
இசை – திரு.எம்.எஸ்.விஸ்வநாதன், திரு.டி.கே.இராமமூர்த்தி
……………………………………………………………………………………………………………………

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பாவாடை தாவணியில் பார்த்த உருவமா?

  1. கவிஞரின் ஈடிணையற்ற சொற்கோலமா? விஸ்வனாதன்- ராமமூர்த்தி இசையமைப்பா அல்லது நடிகர் திலகத்தின் அற்புதமான நடிப்பாற்றலா? எதைப் புகழ? மொத்தத்தில் காலத்தால் அழியாத இசை ஓவியம் இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *