இந்த வார வல்லமையாளர்!
அக்டோபர் 12, 2015
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு லட்சுமி அவர்கள்
வல்லமை மின்னிதழின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர், அக்டோபர் 8, 2015 அன்று, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தின், பெர்க்லி நகரில் நடைபெற்ற விழாவில், சீக்காலஜி என்ற கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் 2015 ஆம் ஆண்டிற்கான சர்வதேச அளவிலான சீக்காலஜி பரிசைப் பெற்ற மீனவர் திருமிகு லட்சுமி அவர்கள்.
இராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரைக் கிராமம் சின்னப்பாலத்தைச் சேர்ந்த 46 அகவை நிரம்பிய மீனவர் லட்சுமி அவர்கள், கடந்த நாற்பதாண்டுகளாகக் கடற்பாசி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருபவர். மீனவச் சிறுமிகள் சிறுவயதிலிருந்தே கடற்பாசி சேகரிப்பில் பெற்றோர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறார்கள். இராமேஸ்வரம், பாம்பன், சின்னப்பாலம் பகுதியைச் சேர்ந்த 25 கிராமங்களின், சுமார் 2,000 த்திற்கும் மேற்பட்ட மீனவமகளிரின் வாழ்வாதாரம் மன்னார் வளைகுடாப்பகுதியில் மருக்கொழுந்து, கட்டக் கோரை, கஞ்சிப் பாசி, பக்கடா பாசி வகைகளை, நீரில் மூழ்கி, இரண்டு நிமிடங்களுக்கு மேல் மூச்சை அடக்கிச் சேகரித்து விற்று வருவது.
மன்னார் வளைகுடா உயிர் கோளக் காப்பகத் தீவுகளான சிங்கில் தீவு, குருசடை தீவு, மணலி தீவு, மணலிபுட்டி தீவு ஆகியப் பகுதிகளில் பவளப்பாறைகளுடன், கடற்பாசிகளும் வளர்ந்து வருகின்றன. இவ்வாறு இவர்களால் சேகரிக்கப்படும் இவ்வகை கடற்பாசிகள் விண்வெளி வீரர்களுக்குத் தயாரிக்கப்படும் உணவு தயாரிப்பதில் அடிப்படைத் தேவையான உணவுப் பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.
பல மீனவமகளிருக்கு வாழ்வாதாரமாக இருக்கும் கடற்பாசி சேகரிப்பு, 2002 ஆண்டிலிருந்து இந்திய அரசால், கடல்வளம் பாதுகாக்கும் நோக்கத்தைக் காரணம் காட்டி தடை செய்யப்பட்டது. ஆழ்ந்த ஆய்வின்றி, மீனவ மகளிரின் வாழ்வாதாரத்திற்கும் ஒரு மாற்றுவழி காட்டாது எடுத்த அவசர முடிவினால் மீனவ மகளிர் பாதிக்கப்பட்டனர். கடற்பாசி சேகரிக்க செல்லும் மீனவ மகளிரின் படகுகள், கையூட்டு பெற நினைக்கும் ஊழல் அரசு அதிகாரிகளால் கைப்பிடிக்கப்பட்டும், ஆயிரக்கணக்கில் அபராதங்களும் விதிக்கப்பட்டதுடன், மீனவமகளிரும் சில அரசு அதிகாரிகளால் மரியாதைக் குறைவாகவும் நடத்தப்பட்டனர்.
லட்சுமி இவ்வாறு பாதிக்கப்பட்டோரை ஒருங்கிணைத்து, அவர்களது கோரிக்கையை அரசிடம் எடுத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவர்களது பாரம்பரிய கடற்பாசி சேகரிக்கும் முறை எவ்வாறு கடல்வளத்தைப் பாதிப்பதில்லை என்று கடல் ஆய்வாளர்களுக்கும், அரசுக்கும் எடுத்துக் கூறி, பாரம்பரிய முறையில் பாசி சேகரிக்கும் முறை குறித்து அவர்களுக்குக் கொடுத்த விளக்கங்களுக்குப் பிறகு, குறிப்பிட்ட காலங்களில் கடற்பாசி சேகரிக்கலாம் என்ற அனுமதியும், பணியை முறைப்படுத்தி பயோமெட்ரிக் அடையாள அட்டைகளும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. மீனவமகளிரின் வாழ்வாதாரத்தை மீட்க உதவியதுடன் இவர் ஏற்படுத்திய விழிப்புணர்வு முயற்சிகளால் மன்னார்வளைகுடா கடல்வளப் பாதுகாப்பும் மேம்பட்டுள்ளது. லட்சுமியின் தன்னார்வப்பணி பரிந்துரைமூலம் சீக்காலஜி அமைப்பின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
அரசு சாராத அறக்கட்டளை அமைப்பான சீக்காலஜி அமைப்பினால், 1992 ஆம் ஆண்டு முதல் கடல்சார்சுற்றுச்சூழல் மற்றும் கடல்வள பாதுகாப்பிற்காகவும், கலாச்சார பாதுகாப்பிற்காகவும் தனி நபருக்காக வழங்கப்படும் சீக்காலஜி விருதினைப் பெறும் முதல் இந்தியப்பெண்மணி லட்சுமி ஆவார். இவரது கடல்வள பாதுகாப்பு முயற்சிக்காகவும், மீனவ மகளிர் கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பேற்று, மீனவ மகளிருக்கு வாழ்வாதாரப் பணியை மீட்டுத் தர இவர் மேற்கொண்ட நடவடிக்கைக்காகவும் இவர் சீக்காலஜி விருதிற்காகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த விருதையும், சான்றிதழையும், ஆறரை லட்சம் ரூபாய் (பத்தாயிரம் டாலர்) மதிப்புள்ள பரிசுத் தொகையையும் சீக்காலஜி அமைப்பின் நிறுவனர் டாக்டர் பால் ஆலன் காக்ஸ் அவர்கள் லட்சுமிக்கு வழங்கி அவரைச் சிறப்பித்தார்.
விருது மூலம் கிடைக்கும் தொகையில் ஒரு பகுதியை மீனவ குழந்தைகளின் கல்விக்கும், மீனவ மகளிர் கூட்டமைப்பு செயல்பாட்டிற்கும் வழங்கவிருக்கிறார் லட்சுமி. மீனவ மகளிரின் உழைப்பிற்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்ததில் மகிழும் லட்சுமி, மீனவ மகளிர் சேகரிக்கும் பாசிகளுக்கு அரசே விலை நிர்ணயம் செய்தால் மீனவமகளிரின் வாழ்க்கை நிலை உயரும் எனக் கருதுகிறார்.
திருமிகு லட்சுமியின் கடல்வள பாதுகாப்பு முயற்சிக்காகவும், மீனவ மகளிர் கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பேற்று, மீனவ மகளிருக்கு வாழ்வாதாரப் பணியை மீட்டுத் தர இவர் மேற்கொண்ட நடவடிக்கைக்காகவும் இவரை வல்லமையாளர் எனப் பாராட்டுவதில் வல்லமை மின்னிதழ் குழுமத்தினர் மகிழ்ச்சி அடைகிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]
_____________________________________________________________________________________________
தகவல் பெற்ற தளங்கள்:
http://tamil.thehindu.com/todays-paper/tp-tamilnadu/ராமேசுவரம்-மீனவப்-பெண்ணுக்கு-அமெரிக்க-கடல்சார்-விருது/article7743942.ece
http://tamil.thehindu.com/society/women/முகம்-நூறு-கடல்பாசியால்-கிடைத்த-அமெரிக்க-விருது/article7620004.ece
http://www.thehindu.com/news/national/tamil-nadu/seaweed-collector-wins-environment-award/article7613833.ece
அமெரிக்காவில் ராமநாதபுரம் மாவட்ட மீனவ பெண்மனிக்கு சர்வதேச விருது
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=164786
http://www.viduthalai.in/home/viduthalai/women/108353-2015-09-08-11-35-57.html
http://news.webindia123.com/news/Articles/India/20151006/2695535.html
கடல் வளத்தை பாதுகாத்த ராமநாதபுர மாவட்ட மீனவ பெண்மணிக்கு சர்வதேச விருது !
http://newstodaynet.com/tamil-nadu/tn-woman-gets-us-prize-protecting-sea-life
படங்கள் பெற்ற தளங்கள்:
http://keelakaraitimes.com/award-ceremony-in-california/
_____________________________________________________________________________________________