செல்வன்

இந்த வார வல்லமையாளர் – திரு. என். சொக்கன்

இவ்வார வல்லமையாளராக எழுத்தாளர், கவிஞர் திரு என்.சொக்கன் அவர்களை தேர்ந்தெடுப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

திரு என். சொக்கனை பத்தாண்டுகளுக்கும் மேலாக அறிவேன். இவ்வாரம் இவரது “பக்தித்தமிழ்” எனும் நூல் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்றது. இதை பற்றி குறிப்பிடும் என்.சொக்கன் அவர்கள்

“தமிழைப் பொறுத்தவரை பக்தியும் இலக்கியமும் ஒன்றுக்கொன்று தொடர்புகொண்டிருக்கின்றன. வைணவத்தை ஆழ்வார்களும், ஆசார்யன்களும் தமிழால் வளப்படுத்தி, பாரெங்கும் பரப்பினார்கள் என்றால், அதற்குச் சற்றும் குறைவில்லாமல் சைவமும் அடியார்களால், நாயன்மார்களால் தமிழை ஆதாரமாகக்கொண்டு செழித்து வளர்ந்தது. இங்கே தமிழ், ஒட்டுமொத்தமான பக்தி வளர்ச்சிக்குதான் பயன்பட்டதே தவிர பிரிவினை எதற்கும் வித்திடவே இல்லை என்பதை உணர்ந்து பார்க்கவேண்டும்.அதைவிட பக்தியோடு தானும் வளர்ந்தது, பாமரராலும் எளிதாகஉணரப்பட்டது.

எளிமை, நயம், அரிதான கற்பனை, சந்தம், இலக்கணம் என்று எல்லா வகையிலும் பக்தியின் மேன்மைக்குத் தன்னை வளைத்துக் கொடுத்தது தமிழ். பக்தி எனும் அமிர்தத்திற்கு, அதன் கொள்கலனாகத் தமிழ் விளங்கியது, விளங்கிவருகிறது என்றால் அது மிகையில்லை. அப்படிப் பக்தியும், தமிழ் நயமும் இயைந்த கட்டுரைகளை திரு என். சொக்கன் தினகரன் ஆன்மிகம் பலன் இதழில் தொடர்ந்து நூறு அத்தியாயங்கள் எழுதினார். அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம். சுமார் எண்ணூறு பாடல்களுக்கான எளிய விளக்கங்களோடு பலப்பல கதைகள், சுவையான நிகழ்வுகளோடு தொகுக்கப்பட்டிருக்கின்றன.
இந்நூல் தற்போது மின்னூலாகக் கிடைக்கிறது. அச்சு நூலின் முதல் பாகம் வெளியாகிவிட்டது, அடுத்த பாகங்கள் விரைவில் வெளியாகும்” என்கிறார்.

1

Screen Shot 2017-07-31 at 10.30.19 PM

குழந்தைகளுக்கு தமிழை அழகான எழுத்துநடை மூலம் கொண்டுசேர்க்கும் தமிழாசிரியர் என்.சொக்கன். குழந்தைகளுக்கான திருக்குறள் எனும் ஆடியோ, விடியோ தொகுப்பையும் வலையேற்றி வருகிறார். இவ்வாரம் அதில் 158வது விடியோ/ஆடியோ பதிப்பு வெளியானது. கம்பராமாயண வகுப்புகள், குழந்தைகளுக்கான தமிழ் வகுப்புகளை எடுப்பதும் இவரது சாதனைகளில் சேர்ந்தது.

தமிழின் மீது மிகுந்த ஆர்வம் உடையவர். நா. சொக்கன் என்கிற நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் “என். சொக்கன்” என்று அறியப்படும் தமிழக எழுத்தாளர் ஆவார். சேலம், ஆத்தூரில் பிறந்து, வளர்ந்து, பெங்களூரில் வசிக்கும் இவர் மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். 1990 முதல் எழுதத் தொடங்கிய இவர் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் எழுதுகிறார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் சில புதினங்களும் எழுதியுள்ளார். வாழ்க்கை வரலாறுகள், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பல நூல்களும் பல்வேறு பத்திரிகைகளில் தொடர்கள், கட்டுரைகளும் எழுதிவருகிறார், சிறுவர்களுக்கும் அதிகம் எழுதிவருகிறார், இவரது நூல்கள் சில ஒலிப்புத்தகமாகவும், ஆங்கிலம், இந்தி, மலையாளம், குஜராத்தி, மராத்தி, ஒடியா மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியாகியுள்ளன.

அம்பானி, ஏ.ஆர்.ரஹ்மான், பில்கேட்ஸ், நாராயணமூர்த்தி , சல்மான் ரஷ்டி, குஷ்வந் சிங், வால்ட் டிஸ்னி போன்ற பலரது வாழ்க்கை வரலாற்றை தமிழில் எழுதியுள்ளார். குழந்தைகளுக்காக பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தினமணி போன்ற பல நாளிதழ்களில் இவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

இவரைப் போல தமிழ் மேல் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் ஊக்கம் கிடைக்கும் வகையில் இவரை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179  ]

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இந்தவார வல்லமையாளர்! (233)

  1. திரு. செல்வன் அவர்களின் பாராட்டுகளுக்கும், தேர்ந்தெடுத்த குழுவினரின் அன்புக்கும், பிற நண்பர்களின் வாழ்த்துகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கங்களும்.

  2. வல்லமையாளர் என்.சொக்கன் அவர்களுக்கு வாழ்த்துகள். சொந்த ஆர்வத்தின் பேரில் தமிழைக் கற்று, அதைக் கல்வி, மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம், பக்தி, தொழில், வாழ்க்கை வரலாறு… என அ புனைவு வகைத் துறைகளில் திறமாக வெளிப்படுத்தி வருகிறார். பெங்களுரு வாசிப்புக் குழுவில் வாராந்தரக் கூட்டம், தமிழாசிரியர்களுக்குப் பயிற்சி, மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்தல் எனச் சொற்பொழிவிலும் வளர்ந்து வருகிறார். அலுவல் பணிகளுக்கு இடையில் சமூக ஊடகங்களிலும் துடிப்புடன் செயல்படுகிறார். சொக்கனின் சீரிய பணிகள் மேன்மேலும் சிறக்க, வல்லமை வாழ்த்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *