2017 ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் எவை?
பவள சங்கரி
தலையங்கம்
2017இல் உலகளவிலும், இந்தியாவிலும் நடந்துள்ள பல்வேறு நிகழ்வுகள் இந்த ஆண்டை மறக்க முடியாத ஆண்டாக ஆக்கியுள்ளது. உலகளவில் பார்க்கும்போது ரொஹீங்கியா அகதிகள் பிரச்சனை நமது கிழக்காசியாவிலும், அரேபிய நாடுகளில் இன்றும் நடைபெற்று வரும் போர்களும், சிரியாவிலிருந்து உலகளவில் சென்ற அகதிகள் பிரச்சனையும், அமெரிக்காவில் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப் அவர்களின், ‘அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே’ என்ற கொள்கையும், ஆறு நாடுகளைச் சார்ந்த இசுலாமிய மக்கள் தங்கள் நாட்டிற்குள் வருவதைத் தடை செய்தும், அமெரிக்காவில் அளிக்கப்படும் எச்.1பி விசாவும், உடன் வரும் வாழ்க்கைத் துணைவர்கள் பணிக்குச் செல்லத் தடை விதித்தும் வெளியிட்ட அறிவிப்புகளால் சீனா மற்றும் இந்தியாவைச் சார்ந்த தொழில் வல்லுநர்களின் நிலையும் கேள்விக்குறியாகியுள்ளன. சிரியா நாட்டின் அகதிகள் ஜெர்மனி, பிரான்சு போன்ற நாடுகளுக்குக் குடிபெயர்ந்தும், சில நாடுகள் அவர்களை ஏற்க மறுத்தும் கடலில் பல ஆயிரம் பேர் இறந்ததும், உருசியாவில் வரவிருக்கும் அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவரை தேர்தலில் போட்டியிடாமல் தடை செய்யப்பட்டும் உலக அரங்கில் இதுபோன்று பல்வேறு நிகழ்வுகள் குறிப்பிடும்படியாக நிகழ்ந்துள்ளன.
இதே ரொஹீங்கியா அகதிகளை இந்தியாவும் ஏற்க மறுத்தது. பொருளாதாரத்தில் நம் இந்தியப் பிரதமரின் அதிரடியான அறிவிப்புகளால் ஏற்பட்ட பொருளாதார தேக்க நிலையும் தமிழகத்தைப் பொருத்தவரை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த இந்த ஓராண்டில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும், தமிழக அரசியலிலும் ஏற்பட்ட பல மாற்றங்களும் மிகுந்த விவாதங்களுக்குரியதாகும். பல ஆண்டுகளாக போக்குக் காட்டிவந்த நடிகர் திரு ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாகவும், தனிக்கட்சி தொடங்குவதாகவும், 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாகவும் அறிவித்து, காலங்கடந்த முடிவெடுத்துள்ளார் என்றே சொல்லத் தோன்றுகிறது. ஏறு தழுவுவதற்காகத் தமிழக மாணவர்கள் தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்திய போராட்டங்களும், தமிழ் இளைஞர்கள் கண்ணியமானவர்கள், கலாச்சாரத்திற்காகப் போராடுபவர்கள் என்று உலக அரங்கில் இந்த இளைஞர்களுக்கு மரியாதையை ஏற்படுத்திக்கொடுத்ததும் இந்த ஆண்டுதான். இதையொட்டி கர்நாடகாவில் எருது விழாவும் தொடங்கப்பட்டதும் இந்த ஆண்டுதான். புயலால் சென்னை பாதிக்கப்பட்டும், மீண்டும் குமரியில் புயல் வந்தபோதும் அரசு சரியான நடவடிக்கைகள் எடுக்காததால் பல ஆயிரம் மீனவத் தோழர்கள் மறைந்தும், பலர் காணாமல் போயிருப்பதால் இன்றும் தேடும் படலம் தொடர்ந்தவாறே உள்ள நிலையில் கேரள அரசின் மனிதாபிமான செயல்பாடுகளும் இந்த ஆண்டில் வரவேற்கத்தக்க வகையில் நடைபெற்றுள்ளன. வரும் புத்தாண்டில் அனைத்துத் தரப்பினருக்கும் மகிழ்வும், வளமான வாழ்வும் வழங்கக்கூடிய ஆண்டாக 2018 ஆம் ஆண்டு அமைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்ற அதே வேளையில் விளையாட்டுத் துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள இளைஞர்களைப் பாராட்டி வாழ்த்தி, உற்சாகப்படுத்துவோம்.