வங்கி முறைகேடுகள்!
பவள சங்கரி
தலையங்கம்
பஞ்சாப் தேசிய வங்கியில் ஒரே கிளையில் இத்தனை பெரிய முறைகேடு நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கக் கூடியது. முற்றிலும் நிர்வாகச் சீர்கேடுகளையே வெளிப்படுத்தும் நிகழ்வு இது. பாராளுமன்றத்தின் கேள்வி பதில் பகுதியில் எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்ட பதில் மூலமாக அனைத்துப் பெரிய வங்கிகளிலும் பல்வேறு காலகட்டங்களில் தொடர்ச்சியாக பல ஆயிரம் கோடிகளுக்கு முறைகேடுகள் நடந்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது. பொருளாதார வல்லுனர்களால் 25,000 கோடி வரையில் முறைகேடுகள் ஏற்படலாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதும் அது உதாசீனப்படுத்தப்பட்டுள்ளதால் பஞ்சாப் தேசிய வங்கியில் இந்த முறைகேடு நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட நீரா மோடி இங்கிருந்து தப்பி அமெரிக்காவில் சொகுசு விடுதியில் தங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க அரசு ஆவண செய்யவேண்டும். சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்த கணக்கின்படி 4 மணி நேரங்களுக்கு ஒரு முறை ஏதோ ஒரு வங்கியில் ஒரு முறைகேடு நடந்துகொண்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வழக்கம்போல இந்த முறையும் இந்தியன் வங்கி அதிக அளவில் பஞ்சாப் தேசிய வங்கி மூலமாக நீரா மோடிக்கு பணம் அளித்துள்ளது. திரு கோபாலகிருட்டிணன் மூலமாக ஏற்பட்ட சரிவிற்குப் பிறகு இந்தியன் வங்கியின் மற்றுமொரு பின்னடைவு இது. பஞ்சாப் தேசிய வங்கியின் அத்தாட்சிக் கடிதத்தின் பேரில் பணம் கொடுக்கப்பட்டிருந்தாலும் அந்த வங்கிகளுக்கு அந்தப் பணம் எப்போது திரும்பக் கிடைக்கும் என்பது தெரியாது. நீரா மோடியின் மோசடி விவகாரம் அதிகபட்சமாக 2017 இல்தான் நடைபெற்றுள்ளது. வங்கிகளின் தணிக்கைக் குழுவினர் 2013 இலிருந்து இந்த மோசடிகளை வெளிக்கொண்டுவராமல் விட்டதற்கு என்ன காரணம். மத்திய அரசின் தலைமை கணக்காய்வாளர் இதைப்பற்றி இதுவரை எந்தக் கருத்தும் சொல்லாமல் இருப்பது ஏன் அல்லது அவருடைய கருத்துகள் நிராகரிக்கப்பட்டனவா என்றும் தெரியவில்லை. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 13,000 கோடி உரூபாய் வாராக்கடனாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை நிவர்த்தி செய்வதற்கான வழி முறைகள் மத்திய அரசால் இதுவரை ஏதும் அறிவிக்கப்படாத நிலையில் மக்களின் வரிப்பணத்திலிருந்து 2.25 இலட்சம் கோடி பங்கு மூலதனமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது வேதனைக்குரியதாக உள்ளது. இதில் ஆச்சரியப்படத்தக்க ஒரு விசயம் தனியார் வங்கியில் ஒன்றுகூட இந்த முறைகேடுகளில் சிக்கி பணத்தை இழக்கவில்லை என்பது ஆறுதலான செய்தி. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் மக்கள் நலனுக்காகவே தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தற்போது பெரும் சரிவுகளைச் சந்திக்கின்றன. பஞ்சாப் தேசிய வங்கி உட்பட அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் ஏன் தனியார்மயமாக்கப்படக்கூடாது. அப்படி தனியார்மயமாக்கப்பட்டால் அதனால் வரக்கூடிய தொகை அரசுக்குக் கிடைக்கும் என்பதோடு பங்கு மூலதனமாக ஒரு பெருந்தொகையும் அளிக்க வேண்டியதில்லை. குறைந்தபட்சம் பஞ்சாப் தேசிய வங்கியும், இந்தியன் வங்கியும் உடனடியாக தனியார் மயமாக்கப்படவேண்டியது அவசியமாகிறது.