முக்தி காண்டம்
——————

திருச்சுழி தோன்றி திருக்கூடல் காய்த்து
திருவருணை நின்ற தருவாம் -குருச்சுவை
ஞானப் பழத்தை நுகர நினைப்பது
வானத்தை வில்லாய் வளைப்பு….(351)

அருந்தி, உறங்கி, அளவளாவும் அன்பு
நெருங்கி இருப்போர்க்கே ஞானம் -பெருந்தீ
அருணை ரமணர் அணைப்பில் குளிர
அருகதை அன்பே அரன்….(352)

மேடிட்ட நெற்றியில் மேதமை இட்டவர்
தோடுற்ற காதோன் திருவுரு -சாடுவிக்கின்
‘’கைகளால் பேசுவார் செய்கையால் சிந்திப்பார்’’
பொய்கையாம் வர்ணிப்பைப் பார்….(353)

சாது சிரிப்பிற்கிங்(கு) ஏது உவமானம்
பாதுகாப் பேயதன் பாவமாம் -வேத
மறைபொருளாய் வார்த்தை மனயிருளைப் போக்கும்
கரைபுரளும் ஞானக் கடல்….(354)

காந்த விழியிரண்டும் காணும் அடியார்க்கே
காந்தம் பொழிந்தவரின் காமத்தால் -காந்தும்
மனக்கருமை நீங்க குணச்சலவை செய்து
வினைக்கதவை மூடும் விரல்….(355)

நரேனை பரமஹம்ஸர் நிர்விகல்பம் தன்னில்
சரேலென சேர்த்தாற்போல் சேர்ப்பீர் -பிரானென
‘’இந்த வினாவுக்(கு) இளைஞனே நீவிவேகா
நந்தனாசொல் என்றார் நகைத்து….(356)

தொட்டால் துலங்கிட, சுட்டால் பொரிந்திட
பட்டால் பலித்திட பக்குவம் -கட்டாயம்
வேண்டும் அதனோடு யாண்டும் குருவடியைத்
தீண்டும் சரணா கதி….(357)

ஒரா யிரமாசை தேறா மனதுக்குள்
பாரா முகமேன் பகவானே -சீராக
சாதகம் செய்ய சமர்த்தில்லை தேவராஜன்
தீதாம் தன்னைத் திருத்து….(358)

எல்லாம் எனதென்றே என்னிடம் விட்டுவிட்டு
செல்லாத காசாய் சரணடை -கொள்ளலிது
சக்திக்(கு) உகந்த சகாயமான சாதகம்
முக்திக்கு முன்னுதிர்த்த முத்து….(359)

நாணுர்வு நிஷ்டையில் நிற்க சவிகல்பம்
நானொடுங்க நீடித்தால் நிர்விகல்பம் -வானுயர்ந்து
வாயு பலூன் வெடித்துள்ளே வான்புக
சாயும் நிலைசகஜம் சேர்….(360)

இயல்பாக தன்னில் இருத்தலிங்கு முக்தி
கயல்போல நீரில் கலந்து -செயலும்
உடலில் உறுத்தும் உபாதிகள் எல்லாம்
கடலில் அலையாகக் காண்….(361)

புற்றில் தவமாய் புராணத்தோன் வான்மீகி
புற்றே தவமாய் பகவானைப் -பற்றியது
சார்கோமா தன்னை சுயம்புலிங்கம் என்பாராம்
யார்கைக்கோ வந்தாற்போல் பார்த்து….(362)

ரமணனே சத்குரு ராயனென்று பாடும்
அமளியில் சேர்ந்தநம் அய்யன் -சுமுகமாய்
‘’ஏனென்னை இச்சிறிய மேனிக்குள் பார்க்கின்றீர்
நானும்தான் நம்மெல்லோர் நான்….(363)

அண்ணலை விட்டு அமெரிக்கா செல்கின்ற
எண்ணத்தால்பெண் பக்தை எலினார் -கன்னத்தில்
தங்கும்கண் ணீரை துடைத்துத் தகப்பன்நான்
எங்குநீ சென்றாலும் அங்கு….(364)

அன்பெனும் கட்டில் அகப்படும் பர்வதம்
நண்பனாய் அன்பனாய் ஞானியாய் -வன்பகையால்
கூடார் தமக்கும் குளிரடி வாரத்தில்
கூடார மாகும் குரு….(365)

ஆசுபர்ன் ஆர்தரின் பாசமிகு பெண்கிட்டி
தேசம் திரும்பிடத் தேம்பினாள் -பாசமாய்
என்னை மறவாதே என்றும் நினைவில்கொள்
உன்னைநான் கொள்வேன் உளம்….(366)-

எண்ணா(து) இருந்திடல் எவ்வளவு கஷ்டமோ
எண்ணலவர்(கு) அவ்வளவு ஏதமாம் -அண்ணளுலம்
தாம்புக் கயிறென்ற தோற்றப் பிழையாமே
சாம்பல் அதற்கில்லை சத்து….(or)
சாம்பலதால் ஆகாது சுற்று….(367)

பற்றிலாத பற்றும் பழகப் பெருநெருப்பாய்
பற்றிடும் ஆகவே முற்றுவை -வெற்றிலை
சாப்பிட்டுப் போடுவதை சாக்கிட்டு விட்டாராம்
கூப்பிட்ட ஆள்வராக் கண்டு….(368)

பேஷ்கூறி பண்டிதர் சாஷ்டாங் கமாய்க்கேட்டார்
காஷ்மீரி யாரிடம் கற்றதென்று -ஹாஸ்யமாய்
‘’ஆசையாய் கேட்டவும் ஆசாமி கேள்விக்கு
பேசாமல் சொன்னேன் பதில்’’….(369)

சன்யாஸி ஆகலாம் சம்சாரி வீட்டுக்குள்
தன்யோ சனையால் தடம்புரண்டு -சன்யாஸி
காட்டில் க்ரகஸ்த்தனாய் மாட்டித் தவிக்கலாம்
ஆட்டுக்கு வாலிங்(கு) அளந்து….(370)

மெய்யாம் துறவு மனதைத் துலக்குதல்
பொய்யாம் துறவென்ற பாத்திரம் -உய்யாய்
குடும்பஸ்த்தன் சன்யாசி கொள்கை அளவில்
கடும்பித்தம் நானைக் களை….(371)

தன்னைப் பராமரிக்கும் தாகம் துறந்திட
உன்னைப் பராமரிக்கும் உன்னான்மா -கண்ணை
மறைக்கின்ற மோகங்கள் மாயப் பிசாசு
குறைக்கின்ற நாய்கடிக் காது….(372)

உக்ராண உள்ளிலே ஒன்றுமில் லாதலால்
அக்ரா சனர்சொன்னார் ஆட்குறைப்பு -அக்குரவர்
வற்றாக் கருணையால் வந்ததாம் பண்டங்கள்
பற்றாக் குறைதீர்க்கும் பற்று….(373)

இதயம் வலது இடத்தில் விளங்கும்
புதிய விளக்கம் புகன்றார் -உதயம்
உலகெனும் கோலம் ஒடுங்கிடும் புள்ளி
கலகநான் காரியின் கை….(374)

சக்தி சிவனிடப் பக்கம் இருந்தாலும்
முக்திவலம் செய்தல் வலப்புறமே -பக்தி
இறையுணர்வு போதும் இடவல மையம்
திரையவிழும் நாள்வரை தான்….(375)

நெருப்புக்கு பஞ்சாக நிஷ்டைக்கு நெஞ்சு
விருப்பிருந்தால் பற்றும் விரைவாய் -கிறுக்குத்
தனமாய் இதயமிடம் தேடி அலைந்தால்
மனமாய் மயக்கிடு மது….(376)

என்ணெய்க் குளியல் எடுத்தாமைப் பாறைக்கு
அண்ணல் வரமீண்டும் அந்திமத்தை -முன்னம்
மதுரையில் பார்த்த புதிராகப் பார்த்தார்
அதையவர் வாக்கில் அடுத்து….(377)

வெள்ளம் புகுந்தாற்போல் வெள்ளைப் பிழம்பொன்று
மெள்ளப் படர்ந்தியற்கை மேய்ந்தது -தெள்ளத்
தெளிவாய் வளியாய் ஒளியாய் வெளியாய்
களியாய் மரணக் கலப்பு….(378)
கலப்புத் திருமரணம் கொண்டமுகூர்த் தத்தில்
களைப்பாக சாய்ந்தேனோர் கல்லில் -வலப்பக்க
மார்பி னிலிருந்தோர் மின்னல் புறப்பட்டு
சார்ந்த திடப்பக்கம் சேர்ந்து….(379)

சேர்ந்தென் னுடன்வந்த சாஸ்திரியார் ஓலமிட்டார்
நேர்ந்தயென் சாவால் நடுநடுங்கி -தேர்ந்தேன்
அதிதியாம் கூற்றை அழையா விருந்தை
கதிகலங்க வைக்கும் கலை….(380)

கலையாத அல்லி மலரதன் மொக்காய்
வலமார் பிலிருவிரல் விட்டு -இலகும்
இதயத் துளையில் இருளும் ஒளியும்
உதயமாம் உண்மை உணர்….(381)

உணரும் ஒளியை உலகியல் நாட்டம்
புணர இருளாம் பிறப்பு -திணரும்
திருட்டுமனக் கையில் திணித்திடு ‘’நானார்’’
திறக்குமது ஆன்மாவின் தாழ்….(382)

தாழுடைத்த கள்ளன் திரைகடல் ஆன்மாவில்
மூழ்கடித்துப் போதல் மனோநாசம் -பாழுடல்
பற்றின்றி வெற்றியாய் பேரின்ப சாம்ராஜ்ய
கொற்றவனாய் இவ்வுலகில் சுற்று….(383)

பெருநகர தம்பதியர் பேரார்வம் கொண்டு
பெருமகன் ஏசு பிரானின் -மறுபிறப்பாய்
எண்ணி வணங்கிட அண்ணலும் அற்புதமாய்
சொன்னது கேட்டு சிலிர்ப்பு….(384)

உங்கள் பெருநகர உப்புநீர் முற்புறத்தில்
திங்கல் சலவைத் திடலுண்டு -அங்கங்கு
தென்னை மரங்களும் திண்ணைகளும் உண்டைந்தாம்
எண்ணில் அமர்வீர் என்று….(385)

காலதேச வர்த்தமானக் கோலங்கள் தாண்டிய
மூலமாம் ஆன்ம முனைப்புடையோன் -ஞாலத்தை
கண்டிடுவான் கையளவில், எண்டிசையும் அண்டமும்
உண்டில்லை ஆவதவன் உள்….(386)

கொண்டுசென்ற வாழையில் விண்டு வினாயகர்க்கு
துண்டுகூட வைக்காது தந்தவரை -கண்டித்தார்
செம்மலை நீங்காது சுற்றுப் புறமறியும்
செம்மலை யாரறிவார் சொல்….(387)

சந்யாசம் வேண்டி சலித்துவந்த அன்பர்க்கு
உன்ந்யாயம் உத்தமமா உன்னிப்பார் -அந்யாயம்
தைக்க அரும்பாடு தையலிலை போல்வாழ்வு
துய்க்கும்முன் தள்ளல் திமிர்….(388)

எம்பிரான் கேட்டார் எழுதிட நோட்புக்கை
நம்பியார் சொப்பனத்தில் நைச்சியமாய் -அன்பரதை
மாதவம் முன்வைக்க ‘’ மாதவா நீமறந்த
போதிலும் வந்ததுபார் புக்….(389)

ராஜகோபால் பேரனை நாகராஜன் தீண்டிட
மேஜைமேல் வைத்திறைஞ்சி வேண்டினார் -ராஜ
சிகிச்சையாய் சேயைத்தன் சொர்ணக்கை யால்வருட
மகிழ்ச்சியாய் பாலன் முழிப்பு….(390)

அற்புதம் கண்டோர் அதிசியக்க அண்ணலோ
அற்பமாய் சொல்வாராம் ‘’அப்படியா !’’ -நற்கதி
நானாக செய்ததில்லை தானாக நேர்ந்திடும்
சோணேசன் கையில்நாம் சொப்பு….(391)

தொண்டர் மயக்கத்தால் உண்டு களைத்தவர்
விண்டார் இனிவுப வாசமென்று -அண்டும்
அடியார்கள் அன்புப் பிடிவாதம் தப்ப
வடிவான வெற்பை வலம்….(392)

வலம்வரும் வேளை வனிதையர் ஏழ்வர்
பலமாய் படையல் படைக்க -சிலையாய்
சமைந்தவர் அன்பாய் சமைத்ததை உண்டு
சுமந்தார் உபவாசச் சோறு….(393)

சோறன்று போட்டது யாரென்று கேட்டதற்கு
ஊரொன்றி வாழ்ந்திடும் சப்தகன்னி -மாரென்று
சோதித்தவர் சொன்னார் சமையலுக்கு வேண்டிய
ஏதுமின்றி வந்தனரவ் வேழு….(394)

இந்து கிருத்துவம் இஸ்லாம் இவைமூன்றும்
அந்த பரத்திற்(கு) அணுகுமுறை -சொந்த
முயற்சியே மெய்யுணர்வில் மொய்த்திட சாதனம்
பயிற்சியாய்த் தேடல் பழகு….(395)

எந்தவழி போனாலும் ஏகம்தான் மிஞ்சிடும்
உந்துகின்ற உத்தமரை உன்மார்க -பந்துவாய்
ஏற்கத் தடையில்லை, என்பதனால் இங்குபல
தீர்க தரிசிகள் பார்….(396)

அந்தணப் பண்டிதர் அக்பர் சபையிருந்து
தந்தநூல் அல்லா உபநிஷத் -இந்தநற்
சேதியை அண்ணலும் சையது டாக்டரும்
ஓதிக் களித்தனரோர் நாள்….(397)

ஏதுமே பேசாத சாதுவின் மேனிக்குள்
வாதம் புகுந்தெதிர் வாதமிட -பாதமாயூர்
வேதம் புகன்றிடும் வேப்பெண்ணை சாறுண்டால்
சேதம் குறையுமாம் சற்று….(398)

சற்றெண்ணை பூசிடும் சாக்கில் பதத்தினைப்
பற்றிடப் போட்டியாம் பக்தர்க்குள் -முற்றும்
துறந்தவர் கேட்பார் துளிக்கால் அளிப்பீர்
கறந்துகொள்வேன் புண்ணியம்கால் பங்கு….(399)

காலன் புறமுதுகு கண்டமுக் காலர்க்கு
தோளின் எலும்புகள் தேய்ந்திட -மேலும்
அணிலுக்காய் நாயை அடிக்கப்போய் தோளில்
பிணியுற்றார் பட்டை பிளந்து….(400)

வாம முழங்கை வழியாய் புகுந்தன்று
ஆமையாம் கான்ஸர்நோய் அண்ணலிடம் -சாமியே
காலடியின் கூட்டத்தால் கையடியில் வந்தநானும்
போலடியார் தானென்றான் புற்று….(401)

ஆடா(து) அசங்கா(து) அமர்ந்திருந்த உங்களை
மேடையென் றெண்ணிமேல் ஏறிவிட்டேன் -ஆடிடுவோன்
வாய்க்கெட்டும் ஆலம்நான் கைக்கேட்டும் மூலமும்
நோய்க்கட்டி ஆனதென்நன் நாள்….(402)

மாதுமையாள் கண்டத்தில் மாலையாய் சாய்கின்ற
போதெம்மை பூஜைக் கரடியென்றாள் -ஆதலால்
உய்ய வழியின்றி உம்மில் புகுந்தேன்நான்
அய்ய அடைக்கலமுன் கை….(403)

சிற்றின்பம் ஓடியது பேரின்பம் நாடியது
உற்றன்பு கொண்டூ டுறுவுமிப் -புற்றின்பம்
ஏற்றுப் பொறுத்து எமக்களிப்பீர் முக்தியை
தூற்றுமூர் மூக்கை உடைத்து….(404)

கொல்லும் கணைக்கூட்டம் காகுத்தன் தோளிருப்பு
சொல்லும் வசவும் சரஸ்வதிதான் -அல்லும்
பகலுமிங்கு சேர்ந்திருக்க புண்ணியத்துள் இப்புண்
புகுதலென்ன பாவம் புகல்….(405)

கர்கடக ராசிநான் கைராசி ஆனேனே
சற்குரு உந்தன்கை சேர்ந்ததனால் -தற்பரமே
கையடித்து சொன்னாலுன் கைவலிக்கும் வாக்களித்தேன்
மெய்யடியார் மெய்யுண்ணேன் மெய்….(406)

கொப்பளநோய் தன்னை குணமாக்க நீர்மனம்
ஒப்பிடத் தூளாகும் அப்பளமாய் -சுப்பரா
மய்யாவாள் வேண்ட மகானுரைத்தார் மெய்யாமை
பொய்யாம் மனமுயல் போக்கு….(407)

நேரிசை வெண்பாவில் சீரசைவு போனதற்கு
நேரிசை வானநோய் மேனியின் -வாரிசே
நானசம் பாவிதத்தை நன்குணர்ந்த ஞானிக்கு
மானச சஞ்சார மேது….(408)

அஸ்திரத்தை நோவானேன் அர்ஜுனன் எய்ததற்கு
சஸ்திர வைத்தியம் செய்வதேன் -வஸ்திர
மேனிக்கு வந்ததே ஹானி எனக்கல்ல
ஞானிக்(கு) ஏதுடல் நெஞ்சு….(409)

நோய்சிரமம் ஏற்று நொடிந்த ரமணரிடம்
ஆசிரமம் அண்டி அறுவைக்காய் -பேச
மயக்க மருந்தின்றி மாசை அகற்ற
தயக்கமில்லை என்றார் தவர்….(410)

தொண்டையில் ஹம்ஸரும் தோளில் கிருத்துவும்
கொண்டனர் தொண்டர்தம் கர்மத்தை -பண்டை
வினைப்பயன் ஏது விதிவசம்தான் ஏது
தனிப்பெரும் வாஞ்சை தனக்கு….(or)
கணித்திடும் தெய்வங் களுக்கு….(411)

பாவியென்று வந்தவரின் பூர்வஜென்ம கர்மமேற்று
கோவிலாய் மாற்றினார் கோட்டானை -தாவிய
அப்பாவம் புற்றாக அண்ணலிடம் சேர்ந்திட
அப்பிரா ரப்தம் அழிவு….(412)

வண்டி அமர்ந்தவன் கொண்டுவந்த மூட்டையை
மண்டை சுமத்தல் மதியீனம் -அண்டியோர்
தேசிகன் தாளிடை தஞ்சம் புகுந்துவிடு
நீசுக துக்க நினைப்பு….(413)

வாமனனாய் வந்தகட்டி விக்கிரம னாய்வளர்ந்து
கோமணத்தர் கையில்கை கூப்பியது -சாவினை
போவென சொன்னவர்மேல் போயின்று நாளைவந்த
ராவணனாய் நின்றான் ரணம்….(414)
கள்ளுண்டோன் ஆடைமேல் கொண்ட உணர்வேயாம்
உள்ளுண்ட சித்தன் உடலுணர்வு -புல்லுண்டு
மண்ணுண்டு பூச்சி புழுவுண்டு போகுமிதை
புண்ணுண்ட போதேன் பதைப்பு….(415)

பலியுண்ட ஆட்டுக்கு பீடம் நெருங்கியும்
கிலியின்றி போகும் கதையாய் -வலியுண்டு
கூறுவார் வாய்தவறிக் கூட வலிக்கிறது
கூறாராம் ஊராருக் காய்….(416)

வேள்வியாய் மூலிகை வைத்தியர் பார்த்தது
தோல்வியாய்ப் போக துவண்டாராம் -கேள்வியாய்
கூனியவர்(கு) ஆறுதலாய் கூறினார் ‘’அன்பரே
நானிருப்பேன் உம்மால் நிலைத்து’’….(417)

ஜனவரியில் அண்ணல் ஜனித்த தினத்தில்
ஜனவரிசை கூட்டத்தில் சேர்ந்து -அனைவரையும்
போல்யானை நட்புடன் தாள்வணங்கிச் சென்றதாம்
பால்யத்து தோழனைப் பார்த்து….(418)

தேவை நமக்கு தயவு அனைத்திற்கும்
சாவை நமக்காக சுமப்பாரோ -பாவை
உடலிதை நால்வர் திடல்வரை சேர்ப்பர்
இடைவெளியில் நானேன் இதற்கு….(419)

பண்டங்கள் நூறு பறிமாறி நாலுமிலை
உண்டபின் ஓரம் ஒதுக்கத்தான் -பிண்டமாம்
வாழுமிலை மேனியிது வாழ்விலை ஆனபின்
வாழையிலை போலெறியும் வீடு….(420)

இல்லாத துன்பம் இருப்பதாய்த் தோன்றவைக்கும்
பொல்லாத மாயையை போக்கிவிட்டு -எல்லாமும்
சாட்சியாய்ப் பார்க்கின்ற சாஸ்வத மெய்யுணர்வே
மோட்சமாம் நீயதில் மூழ்கு….(421)

மணியென்ன கேட்ட மகானுடனே சொன்னார்
இனியென்ன காலக் கணக்கு( இழுப்பு) -பணியாக
அன்பர்க்(கு) அளித்தார் அமைதியாய் த்யானத்தை
நண்பகல் வேளைஅந் நாள்….(422)

ஆதவன் சாய்கின்ற அந்திப் பொழுதினில்
மாதவம் சாய்ந்தது மஞ்சத்தில் -ஓதும்
அருணா சலசிவத்தை அண்மையில் காண
மரணாவஸ் தைக்கு முடிவு….(423)

எட்டுநாப் பத்தேழு ஏப்ரல் பதினாலில்
விட்டுடல் ஜோதி விரைவாக -முட்டக்
கறுத்தவிரி வானை எரித்துவிண் மீனாய்
பரத்திடம் முக்தி பறப்பு….(424)

சுபம்(சத்யம்)
முடிவு(சிவம்)
மங்களம்(சங்கரம்)
——————————————————-

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *