இந்த வார வல்லமையாளர் (278)
இந்த வார வல்லமையாளராக பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. சைவமும் தமிழும் தழைக்க வாழ்நாள் முழுதும் அர்ப்பணித்த சாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1925 – 2018) வித்துவான் பட்டம் பெற்றவர். பேரூர் தமிழ்க்கல்லூரியைத் திறம்பட நடத்தியவர். கொங்குநாட்டில் மூன்று பழைய ஆதீனங்கள் உள்ளன: பேரூர் வீரசைவ ஆதீனம், சிரவணம்பட்டி கௌமார ஆதீனம், பழனி சாது சுவாமிகள் திருமடம்.
தமிழிசை அறிஞர் வீ.ப.கா. சுந்தரம். எங்கள் இல்லத்தில் தங்கியிருந்தபோது, தமிழ், தமிழர் வரலாறுகளைப் பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் அவர் மறையும்வரை தொலைபேசியில் தமிழிசை பற்றிக் கேட்பேன். தக்கை இராமாயணம் பற்றியும் சொன்னேன். அதனால், தக்கை என்னும் தாளக்கருவி பற்றித் தாம் தொகுத்த களஞ்சியத்தில் குறிப்பெழுதினார். வீ. ப. கா. சுந்தரம் சொன்ன செய்தி: சி. வை. தாமோதரம்பிள்ளை தன் மகனிடம் தமிழ்நாடு சென்றால் சங்கத்தமிழர் வாழ்வை அறியக் கொங்குநாடு செல் என்று ஆணையிட்டாராம். அங்கே தமிழ்ப் பெரும்புலவர் வே. ரா. தெய்வசிகாமணிக்கவுண்டர் வாழ்கிறார். சங்கத் தமிழர் வாழ்க்கை அறிய அவரிடம் பழகு என்று சி.வை.தாமோதரம்பிள்ளை கூறியுள்ளார் என்றார். இதனை. பிலிப் கிங்க்ஸ்பரி எழுதிய ‘நான் ஏன் கிறித்துவன் ஆனேன்’ என்ற அவரது நூலில் காணாலாம் என்றார் வீ.ப.கா. அவரிடம் கொங்குநாட்டில் இன்னும் வழங்கும் சங்க மரபுகளை, பெயர்களைச் சொல்லியுள்ளேன். வஞ்சிக்கொடி என்றும், கற்பினி என்றும், மயிலம்மை, குயிலம்மை, பச்சைநாயகி என்றெல்லாம் பெயர்கள் இருந்தன. இப்பொழுது யாழினி, தமிழினி, நல்லினி, கவினி … என்றெல்லாம் அழகுத் தமிழ்ப்பெயர்கள். அதேபோல, கற்பினி என்ற பழந்தமிழ்ப் பெயரும் பரவினால் நன்று. மறைந்த பேரூர் ஆதீனகர்த்தர் ராமசாமி அடிகளாரின் தாயார் பெயரும் அஃதே. கற்புடைய மாதர் மங்கலகரமாக விளங்க, சங்க காலப் போர் வண்ணமான வெண்மையை கைம்பெண்கள் கொங்குநாட்டில் அணிவது மூவாயிரம் ஆண்டு வழக்கம். இது பிற்காலத்தில் சுவேதாம்பர ஜைனத்தின் தாக்கம் ஆகலாம். தென்கர்நாடகாவிலும், கொங்குநாட்டிலும் துறவுக்கு அடையாளமாக, வெள்ளைச் சீலையை விதவையர் அணிவது நெடுங்கால வழக்கம். பேரூர் அடிகள் விளக்கம் இது. வெள்ளைச்சீலை = சுவேதாம்பரம். இப் பழைய மரபு மாறி மறுமணங்கள், கலர்ச்சீலை என மாறிவருகிறது. புலவர் செ. இராசு தமிழ்க் கல்லூரியில் பயின்றவர். ’கொங்குநாட்டில் சமணம்’ அவர் எழுதிய முக்கியமான நூல். அண்மையில் சங்கச் சேரர் தலைநகர் வஞ்சி (கரூர்) அருகே பெண்கல்விக்கான சிற்பம் கிடைத்துள்ளது. முக்கியத்துவம் கருதி, வாலைப்பருவப் பேதைச்சிறுமிகள் என்ணும் எழுத்தும் அறிவித்த வாலறிவு பெற்ற முக்குடைக்கீழே நிறும் ஆதிபகவன் ஆகிய தீர்த்தங்கரசாமியிடம் நிற்பதாக மிகப்பழைய சிற்பம். பெண்களுக்கே உரிய தோடு அணிந்து, தாமரை நாளம் தாங்கும் பெண்கள் ஜைந இலக்கியங்கள் ஆதி பிரும்மா என அழைக்கும் ரிஷபநாதரிடம் நிற்கின்றனர். பெண்கள் அருகிருப்பதால் அரைக்கச்சும், அதில் இலிங்கத்தை மூடிய வெள்ளை உள்ளாடையும் கொண்ட நிலை. ஊர்ப் பொதுமக்கள் மொட்டையாண்டவர் என பழனி முருகனாகக் கொள்வர். அருகே உள்ள பெண்கள் வள்ளி தெய்வானை எனக் கும்பிடுகின்றனர் [Ref. 1, 2].
உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். செங்கோட்டுவேலனுடன் பலமுறை பேரூர் ராமசாமி அடிகளைப் பார்த்துள்ளேன். எப்பொழுதும் இன்முகம். கம்ப்யூட்டரைப் பற்றிப் புலவர் மாணவர்களுக்குச் சொல்லுங்கள் என்பார். அந்த வாரம் அணிவித்த சந்தனமாலை, பொற்சால்வை எனக்குப் போர்த்தி ஆசியளிப்பார்கள். பேரூர் ஆதீனத்தில் தான் புலவர் கம்பராமன் (எஸ். கே. இராமராஜன்) மூலமாக, கவிச்சக்கிரவர்த்தி செயங்கொண்டாரின் காராணை விழுப்பரையன் வளமடலின் ஏடு கிடைத்தது. மகாவித்துவான் வே. ரா. தெய்வசிகாமணிக்கவுண்டர் அவர்களின் அரிய சுவடிகளும், நூல்களும் பேரூர் ஆதினத்தில் பேணப்படுகின்றன. தமிழின் ஒரே லோகாயத நூலான காராணை விழுப்பரையன் வளமடலை இங்கே வாசிக்கலாம்: http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0060.pdf . விழுப்புரம் என்ற ஊரின் பெயர் விழுப்பரையர் குடியால் அமைந்ததே. மு. இராகவையங்காரும், உ. வே. சாமிநாதையரும் கவிச்சக்கரவர்த்தி செயங்கொண்டாரின் வளமடலைப் பற்றிக் குறிப்பிட்டாலும் அதன் நல்ல முழுமையான ஏடு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. பஞ்சமரபு (தமிழின் பழைய இசையிலக்கண நூல்), தந்திவனப் புராணம், கம்பனின் பூர்த்தியான சுவடிகள் பல, திருமுருகாற்றுப்படையின் பரிமேலழகர் உரை, … எனப் பல அரிய சுவடிகளைக் கண்டுபிடித்த மகாவித்துவான் வே. ரா. தெ. காப்பாற்றிய சுவடி பேரூர் அடிகளார் வழியாக எமக்குக் கிடைத்தது. பார்த்தோமேயஸ் ஃசீகன்பால்கு (https://en.wikipedia.org/wiki/Bartholom%C3%A4us_Ziegenbalg ) என்னும் ஜெர்மானிய பாதிரியார் தரங்கம்பாடியில் தமிழ் நூல்களை அச்சிட்டார். அவரது தொகுப்பில் இந்த வளமடல் இருந்ததாம். இன்னும் சில அரிய தமிழ் பிரபந்தங்கள் ஐரோப்பாவின் மூலை முடுக்குகளில் உள்ள பழைய நூலகங்களில், சர்ச்சுகளில் கிடைக்கக்கூடும்.
கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள முதலிபாளையம் பகுதியில் சிவ. ராமசாமி அடிகளார் – கற்பினி அம்மையார் தம்பதிக்கு மகனாக கடந்த 1925-ம் ஆண்டு பிறந்தவர் பேரூர் ஆதீன மடாதிபதி சாந்தலிங்க இராமசாமி. தன்னுடைய 15-வது வயதில் திருமடப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட, சாந்தலிங்க இராமசாமி திருப்பணிகளோடு நின்றுவிடவில்லை. இளைய பட்டமாக இருந்தபோது பேரூர் பகுதி மக்களின் முன்னேற்றத்துக்காக தமிழ் பள்ளியைத் தொடங்கினார். கொங்குநாட்டுக்கு தமிழ்க் கல்லூரி வேண்டுமென்பதற்காக தமிழ்கல்லூரியையும் பேரூருக்குக் கொண்டுவந்தார்.
மயிலம் கல்லூரியில் தனித்தமிழ் கல்வி பயின்றுள்ள ராமசாமி அடிகளார், 1952-ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டமும் பெற்றிருக்கிறார். 1967-ம் ஆண்டு முதல் பேரூர் ஆதீன மடாதிபதியாக உள்ள இவர், தமிழ் மீது அதிகம் பற்றுடையவர். ஆகையால் பிள்ளையார் வேள்வி, திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு முதலிய அருளியல் நிகழ்வுகள், புதுமனை புகுவிழா, திருமணம் மற்றும் மணிவிழா உள்ளிட்ட வாழ்வியல் நிகழ்வுகளை தமிழ் வழியில் நடத்துவதற்கு தன்னை முழுமையாக ஈடுபடுத்திப் போராடினார்.
தமிழகத்தின் வயது முதிர்ந்த மடாதிபதியான ராமசாமி அடிகளார் பேரூர் தமிழ் கல்லூரி, தாய் தமிழ் பள்ளியை நிர்வகித்து வந்தார். காட்டம்பட்டியில், சாந்தலிங்க அடிகளார் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு அப்போதைய தமிழக முதலமைச்சர் காமராஜர் அடிக்கல் நாட்டினார்.
இங்கு படித்த மாணவர்களில் ஏராளமானோர், பெரிய வேலைகளில் இன்று உள்ளனர், அவர்கள் தொழிலதிபர்களாகவும், அரசு, தனியார் நிறுவன உயர் அதிகாரிகளாவும் பணியாற்றி வருகின்றனர். இதேபோல, பேரூரில் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் அறக்கட்டளையின் மருத்துவமனையும் இயங்கி வருகிறது. கடந்த சில காலங்களாகவே உடல்நலக்குறைவால் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் பாதிக்கப்பட்டிருந்தார்.
சாந்தலிங்கர் திருமடத்தின் ஆதீனகருத்தர் பட்டம் ஏற்றிருக்கும் தவத்திரு. மருதாசல அடிகளார் தலைமையில் தமிழும் சைவமும் தழைக்குமாக.
நா. கணேசன்
(1) அரவக்குறிச்சியில் ஸ்ரீபுராணம் கூறும் தீர்த்தங்கரர் சிற்பம்: https://www.vallamai.com/?p=87447
(2) வெறும் சாமரதாரிகளா ஆதிநாத தீர்த்தங்கரர் அருகே? Eclectic Sculpture of Adinatha near Vanji City
http://nganesan.blogspot.com/2018/09/eclectic-sculpture-of-adinatha-near.html
(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 )