நாங்குநேரி வாசஸ்ரீ

122. கனவுநிலை உரைத்தல்

குறள் 1211

காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருந்து

சங்கடத்தோட ஒறங்கையில என்மேல நேசம் வச்சவரு அனுப்பிவச்ச தூதா எங்கிட்ட வந்த கனவுக்கு நான் என்னமாரி விருந்துவச்சி அனுப்புவேன்?

குறள் 1212

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சின் கலந்தார்க்
குயலுண்மை சாற்றுவேன் மன்

என்பேச்சக் கேட்டு என்கண்ணு ஒறங்கிச்சின்னா அப்பம் கனவுல வருத காதலர்கிட்ட நான் உசிரு தப்பிப் பொழைச்சு இருக்கதச் சொல்லுவேன்.

குறள் 1213

நனவினான் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்

நெசத்துல வந்து நேசத்தக் காட்டாதவுகள கனவுல காங்க (பார்க்க) முடியறதாலதான் இன்னும் என் உசிரு போவாம இருக்கு.

குறள் 1214

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு

நெசத்துல வந்து நேசம் காணிக்காதவுகள தேடிக் கண்டுபிடிச்சு காணிக்கதால கனவுல காதல் சந்தோசத்தக் குடுக்குது.

குறள் 1215

நனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது

நெசத்துல பாக்கையில கெடச்ச சந்தோசம் கணக்காவே இப்பம் கனவுல அவுகளப் பாக்கையிலயும் சந்தோசம் கெடைக்குது

குறள் 1216

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினாற்
காதலர் நீங்கலர் மன்

நெசம் னு ஒண்ணு இல்லாமப் போச்சுதுன்னா கனவுல வந்த காதலர் என்னயவுட்டு போவாம இருந்திருப்பாக.

குறள் 1217

நனவினான் நல்காக் கொடியார் கனவினான்
என்னெம்மைப் பீழிப் பது

நெசத்துல வந்து நேசம் காட்டாத அவுக கனவுல வந்து சங்கடத்தக் கொடுக்குது எதனாலயோ?

குறள் 1218

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தார் ஆவர் விரைந்து

நான் ஒறங்குதப்போ என் தோள்மேல கெடந்துபோட்டு கண்ணுமுழிப்பு வந்த பொறவு வெரசலா என் நெஞ்சுக்குள்ளார புகுந்துக்கிடுதாக.

குறள் 1219

நனவினான் நல்காரை நோவர் கனவினான்
காதலர்க் காணா தவர்

என் கனவுல வருத என் காதலரப் பாக்கமுடியாதவுக அவரு நேர்ல வரலையேன்னு ஏசுதாங்க.

குறள் 1220

நனவினான் நம்நீத்தார் என்பர் கனவினான்
காணார்கொல் இவ்வூ ரவர்

நெசத்துல என்னைய நேசிக்கவரு உட்டுப்போட்டு போயிட்டாகன்னு ஏசுதாங்களே இந்த ஊர்க்காரவுக, அவுகளுக்கு கனவுல நெதைக்கும் (தினமும்) அவரு வாரது தெரியாதோ?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *