Tag: எம். ஜெயராம சர்மா

  • ஏக்கமுற்று நாமிருப்போம்

    -மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா

    இளமையெனும் பூங்காற்று 

    இதயமதில் எழும்போது 

    உலகமெலாம் காலடியில்

    விழுகுதென நினைத்திடுவோம் 

    தலைநிமிர்ந்து ஆணவமாய்

    தான்சாமி ஆடிடுவோம் 

    நிலைதளர்ந்து போகுமென

    நினைவினுக்கு வருவதில்லை 

    ஆடாத ஆட்டமெலாம்

    ஆடிநாம் பார்த்திடுவோம் 

    கூடாத கூட்டமெலாம்

    கூடியே குலவிடுவோம் 

    தேடாத பெயரயெல்லாம்

    தேடியே பெற்றிடுவோம்

    தெருமுழுக்க எம்பெயரை

    செதுக்கும்படி ஆக்கிடுவோம் 

    இளமையெனும் முறுக்காலே

    முழுவாழ்வை தொலைத்திடுவோம்

    நிலைமையது தெரிகையிலே

    நெடுந்தூரம் வந்திருப்போம்

    எவ்வளவு முயன்றாலும்

    எம்மிளமை போனதுதான்

    ஏக்கமுற்று நாமிருப்போம்

    இதுபோன்ற  நிலைமையிலே 

    Share
  • நல்லதை நாளும் செய்வோம்!

    -மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா …. மெல்பேண் ….. அவுஸ்திரேலியா

    மண்ணிலே நல்ல வண்ணம்
    வாழவே வேண்டு மாயின்
    கண்ணிலே கருணை கொண்டு
    கடவுளை நினைக்க வேண்டும்

    எண்ணிடும் எண்ண மெல்லாம்
    இனியதாய் இருந்தே விட்டால்
    மண்ணிலே எங்கள் வாழ்வு
    மங்கலம் தந்தே நிற்கும்

    புண்ணியம் பாவம் என்று
    எண்ணியே இருந்தே விட்டால்
    கண்ணிலே தெரியும் யாவும்
    கலக்கமாய் தெரியு மன்றோ

    பெரியவர் சென்ற பாதை
    விரிவென நிற்கும் போது
    குறுகிய பாதை சென்று
    குழம்பி நாம் நிற்கலாமா

    வறுமையில் வாழும் போதும்
    வாய்மையை மனதில் கொண்டு
    நெறியொடு வாழ்வோ மாயின்
    நிம்மதி வந்தே சேரும்

    அறிவொடு நடந்து கொள்வோம்
    அனைவர்க்கும் உதவி நிற்போம்
    பெருமைகள் வந்தே சேரும்
    பிறந்ததில் மகிழ்ச்சி கொள்வோம்

    நல்லதை நாளும் செய்வோம்
    நாளெலாம் உழைத்தே நிற்போம்
    வெல்லுவோம் என்று எண்ணி
    வெற்றியை நோக்கிச் செல்வோம் !

    Share
  • வல்லதொரு ஆண்டாக மலர்ந்துவிடு புத்தாண்டே!

    -மகாதேவஐயர் ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா

    புத்தாண்டே நீ வருக
    புத்துணர்வை நீ தருக
    நித்தமும் நாம் மகிழ்ந்திருக்க
    நிம்மதியை நீ தருக
    சொந்தம் எலாம் சேர்ந்திருக்க
    சுப ஆண்டாய் நீவருக
    எம்தமிழர் வாழ்வில் என்றும்
    இன்பம் பொங்க நீவருக

    வாருங்கள் என அழைத்து
    வரும் மக்கள் வரவேற்கும்
    சீர் நிறைந்த நாட்டிலிப்போ
    சீர் அழிந்து நிற்கிறது
    யார் வருவார் சீர்திருத்த
    எனும் நிலையே இருக்கிறது
    நீ வந்து புத்தாண்டே
    நிலை திருத்தி வைத்துவிடு

    ஆட்சி பீடம் ஏறுகின்றார்
    அறம் வெறுத்து ஒதுக்குகிறார்
    ஆட்சி பீடம் அமரச்செய்தார்
    அல்லல் பட்டே உழலுகிறார்
    அறம் வெறுத்து நிற்பவர்கள்
    அறம் பற்றி உணர்வதற்கு
    திறல் உடைய மருந்துடனே
    நீ வருவாய் புத்தாண்டே

    மதம் என்னும் பெயராலும்
    இனம் என்னும் பெயராலும்
    மனித உயிர் மாய்க்கின்ற
    மாண்பற்ற செயல் ஆற்றும்
    ஈனத் தனம் மிக்கோர்க்கு
    இரக்கம் பற்றி உணர்த்துதற்கு
    இரண்டு ஆயிரத்து பத்தொன்பதே
    எழுந்து வா எழுச்சியுடன்

    நல்ல வல்ல தலைவர்கள்
    நமை விட்டுச் சென்றுவிட்டார்
    நல்ல பல செய்திவந்தும்
    நம்மில் பலர் திருந்தவில்லை
    சொல்ல வல்ல வாழ்க்கையினை
    எல்லோரும் வாழ்ந்து நிற்க
    வல்லதொரு ஆண்டாக
    மலர்ந்து விடு புத்தாண்டே

    Share
  • பெரும் பேறாய் போற்றுகின்றோம் !

    மகாதேவஐயர் ஜெயராமசர்மா … மெல்பேண்… அவுஸ்திரேலியா

    முண்டாசுக்   கவிஞனே   நீ
    மூச்சுவிட்டால் கவிதை வரும்
    தமிழ் வண்டாக நீயிருந்து
    தமிழ் பரப்பி நின்றாயே
    அமிழ் துண்டாலே வருகின்ற
    அத்தனையும் வரும் என்று
    தமிழ் உண்டுமே பார்க்கும்படி
    தரணிக்கே உரைத்து நின்றாய்

    ஏழ்மையிலே நீ   இருந்தும்
    இன் தமிழை முதலாக்கி
    தோள் வலிமை காட்டிநின்று
    துணிவுடனே உலவி வந்தாய்
    வாய்மை கொண்டு  நீயுரைத்த
    வரமான வார்த்தை எல்லாம்
    மக்களது  மனம் உறையின்
    வாழ்வு வளம் ஆகிடுமே

    அடிமை  எனும்  மனப்பாங்கை
    அழித்துவிட  வேண்டும் என்றாய்
    அல்லல்  தரும்  சாதியினை
    தொல்லையென  நீ  மொழிந்தாய்
    பெண்மைதனை  சக்தி  என்று
    பெருங்குரலில் நீ  மொழிந்தாய்
    பெரும் புலவா உனையென்றும்
    பெரும்  பேறாய் போற்றுகின்றோம்

     

    Share
  • வளங்கொடுக்கும் வாழ்விலென்றும்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா

    பார்வையினை இழந்தவர்கள் பலபேர்கள் இருக்கின்றார்
         வாய்பேச இயலாமல் வகைவகையாய் இருக்கின்றார்
    கையிழந்து காலிழந்து பலரிப்போ இருக்கின்றார்
         கருத்தளவில் அவர்களெல்லாம் கனதியுடன் வாழுகிறார்

    குறைபாடு இல்லாமல் பிறந்தவர்கள் யாவருமே
         குறைபாடு உடையாரை குறையுடனே நோக்குகிறார்
    குறையுடனே பிறந்துவிட்டோம் எனவெண்ணும் குறையுடையார்
        குறைபற்றி நினையாமல் நிறைவுநோக்கி நகர்கின்றார்

    வலது குறைந்தவர்கள் எனும்வர்க்கம் இப்போது
       மாற்றுத் திறனாளிகளாய் மலர்ந்துமே நிற்கிறது
    நிலம்மீது வந்து பிறந்துவிட்ட அனைவருமே
       நலம்பற்றி எண்ணிவிட்டால் நல்வாழ்வு அமையுமன்றோ

    புலனிழந்து விட்டுவிட்டோம் எனவெண்ணி இருக்காமல்
       புலனுடையார் ஆற்றுகின்ற அத்தனையும் ஆற்றுகிறார்
    நலந்திகழும் எண்ணமதை நாளுமவர் மனமிருத்தி

        புலனுடையார் வியந்தேற்ற பொறுப்புடனே வாழுகிறார்

    குறைவந்து விட்டதென மறைந்துமவர் நிற்காமல்
        குறையுடனே துணிந்திறங்கி குவலயத்தில் வாழுகிறார்
    குறையில்லா வகையினிலே பிறந்துவிட்ட  நிலையினிலும்
         கறையுடைய மனத்தினராய் வாழுதலே குறையன்றோ

    மாற்றுத் திறனாளிகளாய் மலர்ந்துநிற்கும் மாந்தர்தமை
         மாறாத மனமுடைய மாந்தரெலாம் மனமிருத்தி
    மாசுநிறை மனமதனில் மாசுதனை அகற்றிநின்றால்
        மாற்றமது வந்துநின்று வளங்கொடுக்கும் வாழ்விலென்றும்

    Share
  • பாடம் தரும் நிலவு

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா…. மெல்பேண் .. அவுஸ்திரேலியா 

    வானமீதில் நீந்தியோடும் வண்ணநிலாவே – உன்
    வடிவழகைப் பாடாத கவிஞரில்லையே
    நானுமுன்னைப் பாடவெண்ணும் ஆசையினாலே  – இங்கு
    பாடுகிறேன் பால்நிலவே நின்றுகேட்டிடு !

    உண்ணமறுக்கும் குழந்தைக் கெல்லாம் உன்னைக்காட்டியே – இங்கு
    உணவையூட்டி உளம்மகிழ்வார் உலகில்பலருமே
    விண்ணில்நீயும் ஓடியோடி விந்தை காட்டுவாய் – அதை
    வியந்துவியந்து பிள்ளைபார்த்து விரும்பி மகிழ்ந்திடும் !

    பூரணையாய் வந்துநீயும் பொலிந்து விளங்குவாய் – அதை
    பூரிப்போடு பலரும்பார்த்து உளம் மகிழுவார்
    காதலர்க்குக் களிப்பையூட்ட களத்தில் இறங்குவாய் – அதை
    கவிதையிலே பலகவிஞர் கண்டு வாழ்த்துவார் !

    உன்வரவை ஆவலோடு உலகம் நோக்கிடும் – இங்கு
    உன்வரவால் பலரும்வாழ்வில் உளம் மகிழுவார்
    மின்மினிகள் வானில்சூழ விரைந்து ஓடுவாய் – நாளும்
    உன்னொளியால் உலகைநாளும் உவகை யூட்டுவாய் !

    இறைவனது தலையின் மீது இருக்கிறாயென – இங்கு
    இந்துமதம் சொல்லியுன்னை உயர்த்தி நிற்குது
    குறையுடைய நிலவேயுன்னை நிறைவு படுத்தவே – நாளும்
    இறைவன் உன்னை தன்னிடத்து ஏற்றுக்கொண்டனன் !

    மதியைப்பற்றி பலகதைகள் மதங்கள் சொல்லிடும் – ஆனால்
    மதியைப்பற்றி யோசித்தால் நம்மதி தெளிந்திடும்
    பாதிநாளில் மதியின்வாழ்வு இருண்டு போயிடும் – ஆனால்
    மீதிநாளை வெளிச்சமாக்கி மதி கொணர்ந்திடும் !

    உயர்வுதாழ்வு உலகவாழ்வில் இயற்கை என்பதை – இங்கு
    உணர்த்திநிற்கும் செயலைநிலவே தெளிவாய் காட்டுது
    வெளிச்சம் கொடுக்கநாளும் நிலவு விண்ணில்வருகுது – ஆனால்
    வெளியில் குறையைக் காட்டிக்கொள்ள நிலவும்விரும்புது !

    கூடுகின்ற காதலர்க்கு குளிர்ச்சி  கொடுக்குது    – இங்கு
    வாடுகின்ற காதலர்க்கு வரட்சி காட்டுது
    நிலவுஅது வானமீது தவழ்ந்து போகுது – ஆனால்
    மனிதமனம் விதம்விதமாய் மாய்ந்து போகுது !

    மனதில்மகிழ்ச்சி மலரும்போது நிலைவை வாழ்த்துவோம்  – இங்கு
    மனமகிழ்ச்சி தொலையும்போது நிலைவைத் தூற்றுவோம்
    நிலவுஎன்றும் வான்வழியாய் தவழ்ந்து போகுமே – அது
    கவலைகொண்டு போவதைநாம் காணமுடியுமா !

    துன்பமின்ப மெல்லாமே சுழலும் சக்கரம் – அதை
    இன்பமுடன் ஏற்றுக்கொண்டால் எமக்கு இன்பமே
    தேய்ந்து வளர்கின்றபாதை நிலவின் பாதையே – அதை
    ஆய்ந்து பார்த்தால் மனிதவாழ்வில் அமைதிதோன்றுமே !

    இருட்டும்வரும்  வெளிச்சம்வரும் எனவுணர்த்திட – இங்கு
    எல்லோர்க்கு பாடமதை நிலவு நடத்துது
    மனிதரெலாம்  நிலவைப்பார்த்து மதியைத்தீட்டுவோம் – இங்கு
    நிலவின் பாடம் நிதமெமக்கு வழியைக்காட்டிடும் !

     

    Share
  • அர்த்தமே இல்லையே !

     

    மகாதேவஐயர் ஜெயராமசர்மா … மெல்பேண்… அவுஸ்திரேலியா

    கோடி கோடியாய் பணம் இருந்தாலும்
    மாடி மாடியாய் மனை குவிந்தாலும்
    வாடி நிற்பவர் மனம் அறியாதவர்
    வாழும் வாழ்விலே அர்த்தமே இல்லையே

    கோவில் கோவிலாய் சென்றுமே வணங்கினும்
    குடம் குடமாய் பாலினைக் கொடுக்கினும்
    வாய் இல்லாத சீவனை வதைப்பவர்
    வாழும் வாழ்வினை மனதுதான் ஏற்குமா

    வாதம் வாதமாய் மன்றிலே நிகழ்த்தியே
    வழக்கை பணத்துக்காய் நீட்டியே நிற்பவர்
    நீதி தேவனின் நெஞ்சிலே மிதிப்பவர்
    நிம்மதி என்பது வாழ்வினில் நிலைக்குமா

    பட்டம் பட்டமாய் பெற்றுமே நிற்பவர்
    பதவி பெற்றுமே உயர்நிலை வகிப்பவர்
    பெற்ற தாய்தந்தை பேணிடா நின்றிடின்
    கற்ற கல்வியும் காறி உமுழுமே

    Share
  • காண அருள் தாமுருகா !

     

    மகாதேவஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண் .. அவுஸ்திரேலியா

    தேவரை வதைத்த சூரர்
    திருந்திடச் செய்த வேலா
    பூவுலகு எங்கும் அசுரர்
    புரிகின்ற கொடுமை தன்னால்
    மேவிய துயரம் கொண்டு
    விக்கித்து நிற்கும் மக்கள்
    ஓலங்கள் போக நீயும்
    ஓடியே வருவாய் ஐயா !

    உபதேசம் அளித்த குருவே
    உலகுளோர் துயரம் பார்நீ
    நிலையான அறத்தை மறந்து
    நிற்கின்றார் மனதை மாற்று
    விலைபேசும் நிலையில் உள்ளார்
    வெற்றிவேல் என்றிட செய்வாய்
    குலையாத ஞானம் தன்னை
    குமராநீ கொடுக்க வேண்டும் !

    காமம் நிறை மக்களெலாம்
    காமம் அற்ற கந்தனுக்கு
    கல்யாணம் செய்து வைத்து
    களிப் பெய்தி நின்றிடுவர்
    சேமம் உற வாழ்வதற்கு
    சேவல் கொடி வேலவனார்
    பாதமதை பற்றி நின்று
    பாடி நிற்போம் கவசந்தனை

    வள்ளி தெய்வ யானையுடன்
    காட்சி தரும் திருமுருகா
    உள்ள மெலாம் உன்நினைவை
    இருத்தி விடு திருமுருகா
    கள்ளம் நிறை எண்ணமெலாம்
    கழன்றோடச் செய் முருகா
    கால மெலாம் திருமுகத்தை
    காண அருள் தாமுருகா !

    Share
  • உனதடியைப் போற்றுகிறோம் !

     

    மகாதேவஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண் .. அவுஸ்திரேலியா

     

     

    வீரம்தனைக் கொடுத்து விடு
    வித்தைகளும் கொடுத்து விடு
    ஈரமுள்ள நெஞ்சம் தனை
    எல்லோர்க்கும் ஈய்ந்து விடு
    சூரன் உள்ளம் திருந்துவிட
    ஈரம் தனை காட்டியவா
    தொழு தழுது நிற்கின்றோம்
    சுடர் கொழுந்தே துணைநீயே !

    அருண கிரி கடைத்தேற
    அருள் கொடுத்த வேல்முருகா
    கச்சியப்பர் கவி புனைய
    கருணை தனைக் காட்டியவா
    இச்சை உடன் மயிலமர்ந்து
    எங்கள் துயர் போக்கிடவா
    என்னாளும் கதிர் வேலா
    எங்கள் மனம் உன்வசமே !

    பொருள் எமக்கு கொடுத்தாலும்
    அருள் அதனுள் சேர்த்துவிடு
    மருளென்னும் பேய் தன்னை
    மாண்டு விடச் செய்துவிடு
    செரு அதனை ஏற்றுநின்ற
    செருக்கு மிக்க அசுரரயே
    உரு காட்டி உய்வித்த
    உன தடியைப் போற்றுகிறோம் !

    Share
  • திருவடியை தினம் தொழுவோம் !

     

    மகாதேவஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண் … அவுஸ்திரேலியா

     

     

    ஈராறு முகம் உடையான்
    எண்ணியதை எமக் கருள்வான்
    பார்மீது நாம் வாழ
    பல எமக்குத் தந்திடுவான்
    கோல மயில் அமர்ந்திருந்து
    கொடுத்து நிற்பான் வரமெல்லாம்
    சீலமுடை சிவன் மைந்தன்
    திருவடியை தினம் தொழுவோம் !

    சஷ்டியை பிடித்து நின்றால்
    தரித்திரங்கள் அகன்று விடும்
    சந்ததியும் தளைத்து நின்று
    சரித்திரமும் படைத்து விடும்
    உத்தமராய் வாழும் எண்ணம்
    உள்ளம் அதில் எழுந்துவிடும்
    உமை மைந்தன் திருவடியை
    உவப்புடனே பணிந்து நிற்போம் !

    ஆலகால விஷம் உண்ட
    அரன் மைந்தன் கந்தனது
    கால் அடியைப் பற்றுதற்கு
    கந்த சஷ்டி துணையாகும்
    சீலமுடன் நாம் இருந்து
    தினமும் அவன் திருநாமம்
    காதலுடன் ஓதி நின்று
    கந்தன் கோவில் சென்றிடுவோம் !

    Share
  • திருப்பம் பல தந்திடட்டும்!

    [மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா]

    தீபாவளித் தினத்தில்  தித்திப்பு  உண்ண வேண்டும்
    கோபமெனும்  குணமகற்றி  கொண்டாடி  மகிழவேண்டும்
    பாவமென நினைக்கின்ற செயலனைத்தும் துரத்தவேண்டும்
    பக்குவமாய் ஒன்றுகூடி பாங்காக மகிழவேண்டும்

    உள்ளமதில் உண்மைதனை  ஊற்றெடுக்கச்  செய்யவேண்டும்
    கள்ளமுடை  எண்ணமதை களைந்தெறியச் செய்யவேண்டும்
    நல்லவர்கள் ஆசிபெற்று நம்வாழ்வு சிறக்கவேண்டும்
    நமக்குவாய்க்கும் தீபாவளி நல்வெளிச்சம் காட்டிடட்டும்

    ஆணவத்தைப் போக்குவென ஆண்டவனை வேண்டிநிற்போம்
    அறஞ்செய்யும் எண்ணமதை அகம்நிறைய  வேண்டிடுவோம்
    அன்னைதந்தை மனம்வருந்தா அனைவருமே நடந்திடுவோம்
    அனைவருக்கும் தீபாவளி அமைந்திடுமே அற்புதமாய்

    ஆதரவு  அற்றோரை  அரவணைத்து  உதவிடுவோம்
    அனாதையெனும் கருத்ததனை அழித்துவிட எண்ணிடுவோம்
    போதையுடன் உலவுவதை பொறுக்காமல் பொங்கிடுவோம்
    நல்பாதையிலே செல்வதற்கு நம்மனதைத் திருப்பிடுவோம்

    புத்தாடை  உடுத்திடுவோம்  புதுவெடிகள்  வெடித்திடுவோம்
    எத்திக்கு  இருந்தாலும்  எல்லோரும்  மகிழ்ந்திடுவோம்
    தித்திக்கும்  தீபாவளி  திருப்பம்பல  தந்திடட்டும்
    அர்த்தமுள்ள  நல்லவற்றை ஆற்றிநின்று  அகமகிழ்வோம

    Share
  • முழு  அருளைத்   தாநீ  !

    (மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா)

    கல்வியொடு செல்வம் தரவேண்டும் தாயே
    கசடில்லா வீரம் தந்திடுவாய் தாயே
    உள்ளமெலாம் உண்மை உறையச் செய்வாய்தாயே
    உன்னையென்றும் மறவா வரமருள்வாய் தாயே

    மாசுடையார் தொடர்பை மடியச்  செய்வாய்தாயே
    மனமதிலே கருணை  வளரச்  செய்வாய்தாயே
    தானதர்மம் செய்ய  தயைபுரிவாய்  தாயே
    தர்மவழி  செல்ல  தக்கதுணை  நீயே

    ஈனநிலை  போக  எனக்கருள்வாய்  தாயே
    என்றும் உயர்வாக எண்ணமெனக் கருள்வாய்
    ஊனமுடை   எண்ணம்  உதிக்காவண்ணம் எனக்கு
    உனது கடைக்கண்ணால் எனைநோக்கு தாயே

    இப்புவியில்  நானும்  ஏழ்மையுற்றை போதும்
    தப்பிதங்கள்   செய்யா  தடுத்துவிடு  தாயே
    எப்பவுமே வாழ்வில் என்றுமுன்னை  மறவா
    முப்பொழுதும் நினைக்க முழுவருளைத் தாநீ

     

    Share
  • அரவணைப்பாய் தாயே நீயும்!

     

    மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

    நவராத்திரி நன்னாளில் நலந்தரும் நாயகியிடம் வேண்டி நிற்போம்

    நலமுடன் நாங்கள்வாழ நாயகியைச் சரணடைவோம்
    நிலமெலாம் அமைதிகாண நெஞ்சார வேண்டிநிற்போம்
    அளவில்லா ஆசைதன்னை அகற்றிடு  தாயேயென்று
    அன்னையின் நாமம்தன்னை அனைவரும் துதித்தேநிற்போம்

    மதமதை  அடக்கிநிற்கும்  மகத்தான  மாதாநீயே
    மனமதில்  உறைந்துநிற்கும் மலமதைப்  போக்குதாயே
    உளமதில்  உன்னைவைத்து  உருகியே   பாடுகின்றோம்
    ஒருகணம் எம்மைப்பார்த்து உத்தமராக்கு  தாயே

    கல்வியைத் தரும்போதம்மா  கசடினை  நீக்கித்தாநீ
    நல்லதைச் செய்யுமெண்ணம்  நன்குநீ  படியச்செய்வாய்
    சொல்லெலாம் தூய்மையாக  சொல்லிட  வைப்பாயம்மா
    நல்மனத்  தோடுநாளும் வாழ்ந்திடச் செய்வாய்தாயே

    கோலமிட்டு  கும்பம்வைத்து  குத்துவிளக்  கேற்றுகிறோம்
    குடும்பமெலாம் ஒன்றுசேர்ந்து குறைசொல்லல் தவிர்க்கின்றோம்
    வாழுதற்கு நல்லவற்றை தேடித்தேடி எடுக்கின்றோம்
    வல்லமையின்  நாயகியே  வந்திடுவாய்  மனமெல்லாம்

    ஈரமுள்ள  வீரமதை  எங்களுக்  கருள்வாய்தாயே
    கோரமுள்ள குணமதனை கொன்றொழிக்க வேண்டுமம்மா
    பாரமுள்ள வினையனைத்தும் பறந்தோடச்  செய்வாயென்று
    ஆர்வமுடன்  வேண்டுகின்றோம் அம்மாநீ அரவணைப்பாய்!

    Share
  • முருகன் ஆலயங்களும் முருகன் அடியார்களும்

    -மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா- மெல்பேண், அவுஸ்திரேலியா

    ” கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேனே” ,” கந்தன் திருநீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்” என்று முருகன் அடியார்கள் தினமும் எண்ணி எண்ணியே முருகனை மனதார வழிபட்டு வருகிறார்கள். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமென்று அடியார்கள் கொண்டாடிப்போற்றுகின்றார்கள்.” வேலை வணங்குவதே வேலை என்பதுதான் முருகன் அடியார்களின்மனக்கிடக்கையாக இருக்கிறது எனலாம். கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக முருகனே விளங்குகிறார் என்று முருகன் அடியார்கள் பலரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ” வைதாரையும் வாழவைப்பான் முருகன் ” என்பது அவர்களது உறுதியான எண்ணமாகவும் இருக்கிறது.

    இந்தியாவில் பல இடங்களிலும் முருகனுக்கு அடியார்கள் ஆலயங்களை அமைத்திருக்கிறார்கள். வடக்கிலும் தெற்கிலும் பல ஆலயங்கள் முருகனுக்கு என்றே இருக்கின்றன. அறுபடைவீடு என்னும் வகையில் – திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை, மிகவும் சிறப்பான ஆலயங்களாக யாவராலும் போற்றப்பட்டு வருகின்றன. இவற்றைவிடச் சென்னையில் பல இடங்களில் முருகன் கோவில்கள்அடியார்களினால் அமைக்கப்பட்டும் இருக்கிறது. சென்னையிலும் அறுபடை வீடும், வடபழனி முருகன் கோவிலும் பிரசித்தமாக இருக்கின்றன.

    வேலூர்பகுதியில் இரத்தினகிரியில் தனிப்பட்ட ஒரு அடியவரின்
    தளராத முயற்சியினால் குன்றினிலே இரத்தினகிரி முருகன் ஆலயம் கம்பீரமாக அருளாட்சியினை வழங்கிக் கொண்டிருக்கிறது. முருகனது அடியார்கள் மொழியினைக் கடந்து நாடுகளைக் கடந்து உலகெங்கும் பரந்து காணப்படுகிறார்கள். சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ், தென்னாபிரிக்கா, அமெரிக்கா, கனடா,பிரான்ஸ், ஜேர்மனி, சுவிச்சர்லாந்து, லண்டன், அவுஸ்திரேலியா, ஆகிய நாடுகளிலும், ஈழத்திருநாட்டினிலும், காணப்படுகிறார்கள். மொழி வேறுபட்டாலும் கலாசாரம் வேறுபட்டாலும், கொள்கைகள் வேறுபட்டாலும், அரசியலால் வேறுபட்டாலும்,அவர்கள் யாவரும் முருகனது அடியார்கள் என்ற வகையில் ஒத்த மனத்தினராய் முருகன்மீது அபார பக்தி உடையவர்களாகவே காணப்படுகிறார்கள் என்பதுதான் முக்கியமாகும்.

    முருக ஆலயங்கள் முருக அடியார்கள் பற்றிச் சிந்திக்கும்பொழுது முருகனைப் பற்றியும் முருகனது சமயவரலாறு பற்றியும் அறிவதும் அவசியமாகும். முருகனது நிலைபற்றி உரைப்பது கெளமாரமாகும். இந்துசமயத்துள் இது அடங்கினாலும் இது முருகன் பற்றியே சொல்லுகிறது என்பதே முக்கியமாகும். கெளமாரம் என்பது ஒரு சமயமாகும். இச்சமயத்துக்கு உரிய தெய்வமாக முருகனே விளங்குகின்றார். முருகனைக் குமாரன் என்றும் அழைப்பர். குமாரன் என்றால் அஞ்ஞானத்தை ஒழிப்பவர் என்பது கருத்தாகும். குமாரன் அறுவகைச் சமயங்களையும் இணைத்தே நிற்கிறார். அவரின் திருமுகங்கள் ஆறாகும். அவரே முழுமுதற் பொருள் என்கிறது கெளமாரம்.

    ” அறுசமய சாத்திரப்பொருளே” என்று அருணகிரிசுவாமிகள் திருப்புகழில் காட்டுவது நோக்கத்தக்கது.

    ” அருவமும் உருவுமாகி அநாதியாய் பலவா யொன்றாய்
    பிரமமாய் நின்ற சோதிப் பிளம்பதோர் மேனியாகிக்
    கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன் உலகமுய்ய “ என்று முருகனது தோற்றம் காட்டப்படுகிறது கந்தபுராணத்தில். உலகைப் படைக்கும் பிரமாவாய், உலகைக் காக்கும் விஷ்ணுவாய், உலகினை அழிக்கும் உருத்திரனாய், கோலமாய், காலமாய், குணமாய், ஞாலமாய்,அனாதியாய் அமைந்த சோதிப்பிழம்புதான் முருகன் என்பது அவரது அடியார்களின் அசையாத நம்பிக்கை எனலாம்.

    முருகனைப் பற்றி வடமொழிநூல்களும் சொல்லுகின்றன. தமிழ் மொழி நூல்களும் சொல்லுகின்றன. வேதங்களிலுல் சுப்ரமண்யோம் என்று வருகிறது.வேதகாலத்தில் முனிவர்கள் தங்களின் யாகங்களை நிறைவு செய்யும்வேளை சுப்ரமண்யோம், சுப்ரமண்யோம், சுப்ரமண்யோம்என்று மூன்றுமுறை கூறியதாக ‘தைத்திரீயாரண்யகம்’ சுட்டுகிறது.

    காளிதாசரின் குமாரசம்பவம் முருகனைப் பற்றிக் கூறும் காவியமாகும். இது வடமொழியிலே அமைந்திருக்கிறது. பாணினியும் முருகனைக் காங்கேயன், குகன், சண்முகன், விசாகன், கார்த்திகேயன் என்றெல்லாம் குறிப்பிடுகிறார்.

    சிவ ஆகமங்களான காமிகம், காரணம், சுப்பிரபேதம் யாவும் முருகனது வரலாறு பற்றிக் குறிப்புகளைக் கூறி நிற்கின்றன.

    குமாரதந்திரம் என்பது முருகப்பெருமானது வரலாற்றையும் முருகனது விழாக்கள், பூஜைகள், விரதம், பிரதிஷ்டை செய்யும் விதம் இவற்றையெல்லாம் விரிவாய் எடுத்து விளக்கி நிற்கிறது எனலாம்.

    இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் இவையும் முருகனைப் பற்றிச் சொல்லிநிற்கின்றன. தமிழ் இலக்கியக்கியங்களும் முருகனைப் பற்றி சொல்லுகின்றன என்பதும் முக்கியமாகும். தொல்காப்பியத்தில் சொல்லப்படுவது மிகவும் முக்கியம் எனக் கருதலாம்,”சேயோன் மேய மைவரை உலகம்” இவ்வாறு தொல்காப்பியம் செப்புகிறது.

    புறநானூறு, அகநானூறு, நற்றிணை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை மூலமாகவும் முருகனைப் பற்றிய செய்திகளை அறிய முடிவதனால் முருக வணக்கமும் முருகனது அடியார்களும் பன்னெடுங்காலமாக இருந்து வருகிறார்கள் என்பதை அறிகிறோம் அல்லவா!

    திருமுருகாற்றுப்படை என்பது முருகன் அடியார்களை முருகன் அருள்பெற ஆற்றுப்படுத்தும் நூலாகவே அமைகிறது. முருகனது அறுபடை வீடுகள் அதாவது முருகன் அருளாட்சி புரிய எழுந்தருளியிருக்கும் இடங்களின் பெருமைகளைப் விவரிப்பதாகவும் இருக்கிறது. அப்படிஎன்றால் இதனைப் பாடிய நக்கீரர் என்னும் அடியார்  அப்பொழுதே முருகன் ஆலயங்கள் பற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டாரோ என்றேதான் எண்ணத் தோன்றுகிறதல்லவா?

    ஆதிக்க நல்லூர் என்னும் இடத்தில் நடந்த தொல்பொருள் ஆய்வின்படி கி.மு ஆயிரத்து இருநூறு ஆண்டளவில் முருகவழிபாடு முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பதை அறியக்கூடியதாக இருக்கிறது. பல்லவ மன்னர் காலமும், சோழப்பெருமன்னர் காலமும் முருக வழிபாட்டைப் பொறுத்தவரைத் தமிழ்நட்டிலே  இருண்டகாலமாய்த்தான் கொள்ளமுடிகிறது. பக்திப்பாடல்கள் பல பெருக்கெடுத்த பல்லவர்காலத்திலே முருகனுக்குச் சிவன் தந்தை என்னும் குறிப்பு மிகச் சில தேவாரங்களில்மட்டுமே காணப்படுகிறது.

    திருச்செந்தூர் கல்வெட்டு மூலமாகவேதான் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் இரண்டாம் வரகுணபாண்டியன் திருச்செந்தூர் முருகன் பூஜைக்குப் பெருந்தொகை பணம் உதவினான் என அறியமுடிகிறது. முருகவழிபாட்டில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டதென்றால் அதனை கி. பி. பதினைந்தாம் நூற்றாண்டென்றே எடுத்துக் கொள்ளலாம்.

    பதினான்காம் நூற்றாண்டின் இறுதி அல்லது பதினைந்தாம் நூற்றாண்டின்தொடக்கமே அருணகிரிநாதர் காலமாகும். மூவேந்தர்களும் தமிழ்நாட்டைஆண்டவேளை முருகவழிபாடு ஓங்கவில்லை. அவர்களின் பின்னர்தான் ஓங்கியது ஏன் என்பதை வரலாற்று சமய ஆய்வாளர்கள்தான் ஆராய்தல் வேண்டும்!

    அருணகிரியாரால் முருகவழிபாடு செழித்தோங்கியது என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. ஏனைய கடவுளர்களையும் அவர் போற்றிப் பாடிய பொழுதும் – முருகன்மீது அவரது தனிவிருப்பம் பல்லாயிரம் திருப்புகழாக எமக்குக் கிடைத்திருக்கிறது. முருகன்மீது பல பிரபந்தங்களையும் பாடி அளித்துள்ளார். கந்தரலங்காராம், கந்தரனுபூதி அருணகிரியாரின் தத்துவமுத்துக்களாய் திகழ்கின்றன. ஈழத்து முருகன் தலங்களையும் அருணகிரியார் பாடியுள்ளார். முருகனது அடியவராயிருந்து முருகவழிபாடி சிறக்கபெருந்தொண்டாற்றினார் அருணகிரியார் என்பது முருகனது அடியவர்க்கெல்லாம் சிறந்ததொரு முன்மாதிரி எனலாம்.

    முருகனது மிகச்சிறந்த அடியார் அகத்தியராவார். தமிழ் மூதாட்டி ஒளவை முருகனால் ஆட்கொள்ளப்பட்ட அடியவராகிறார். ஆதிசங்கரர் தனக்கேற்பட்ட காசநோய் தீர முருகனைத் துதித்து சுப்ரமண்யப் புஜங்கம் பாடினார். வள்ளலாருக்கு அவரின் வீட்டுக் கண்ணாடியில் தோன்றி முருகன் ஆட்கொண்டார். சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துச்சுவாமி தீட்சிதரின் வாயில் கற்கண்டைப் போட்டு ” ஸ்ரீநாதாதி குருகுஹே ” என்னும் கீர்த்தனையைப் பாடவைத்தார். ஊமையாய் பிறந்த குமரகுருபரருக்கு திருச்செந்தூர் முருகன் உலகமே புகழும்வண்ணம் கவிபாடவைத்தார்.

    சிதம்பர சுவாமிகள் பனைமரத்தில் முருகனை சுயம்புவாகப் பிரதிஷ்டைசெய்து அருள் பெற்றார். வள்ளிமலைச் சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பாம்பன் சுவாமிகள், பன்றிமலைச் சுவாமிகள், இவர்களெல்லாம் முருகனது காதலால் கட்டுண்ட அடியவர்களாவர். முருகன் பற்றிய சகலவற்றையும் உணர்த்திடும் கந்தபுராணம் தந்தவர் கச்சியப்பர். அவருக்கு அடியெடுத்துக் கொடுத்து அருள் புரிந்தார் முருகன். அதனால் அற்புதமாய் தெய்வீகமாய் ஒளிர்ந்தது கந்தபுராணம்.

    வீடுதோறும் முருகன் அடியவர்களால் ஓதிநிற்கும் பேறுபெற்ற கந்த சஷ்டி கவசத்தை முருகன் அடியவர் பாலதேவராயன் எமக்களித்துச் சென்றுள்ளார். எமக்கு முன்னால் இருந்து தனது பாட்டாலும் பேச்சாலும் எழுத்தாலும் முருகன் பெருமையினை உலகம் முழுவது கொண்டுசேர்த்த முருகன் அடியவர்தான் திருமுருகக் கிருபானந்த வாரியார் சுவாமிகள். ஊர்கள்தோறும் ,நாடுகள் தோறும் சென்று முருகன்புகழைக் கதாப் பிரசங்கம் மூலம் எடுத்துச் சொல்லி அதில் கிடைத்த பொருளையெல்லாம் வயலூரில் முருகனுக்காகப் பேராலயம் அமைத்து பெரும்பேறு பெற்றார்.

    இந்தியாவில் முருகன் அடியார்கள் ஆலயங்களுடன் எப்படித் தம்மை பிணைத்துக் கொண்டார்களோ அதேபோல் ஈழத்திலும் அடியார்கள் முருகனுடனும் அவரது ஆலயத்துடனும் தங்களை இணைத்துக் கொண்டனர். ஈழத்திலே பல பிரசித்தியும் அருளும் கொண்ட முருகன் ஆலயங்கள் இருக்கின்றன. பாடல்பெற்ற முருகனது ஆலயமாக கதிர்காமம் திருகோணமலை ஆகியன விளங்குகின்றன.

    ஈழத்தில் தமிழ் அடியார்களும் சிங்களபெளத்த அடியார்களும் முருகனின்பக்தர்களாக விளங்குகிறார்கள். அவர்கள் முருகனை ” கதரகம தெய்யோ “என்று அழைக்கின்றனர். அவர்களது. கதிர்காமம் ஈழத்தில் முருகனின்பொக்கிஷமாய் இருக்கிறது என்பது முருகன் அடியார்களுக்கே பெருமைஎனலாம். தமிழர்கள் செறிந்துவாழும் வட மாகாணம், கிழக்கு மாகாணம் பகுதிகளில் நிறைந்த முருகன் அடியார்கள் இருக்கிறார்கள். இவர்களின் ஆதரவினால் பல முருகன் ஆலயங்கள் அங்கு எழுந்துநின்று அருளாட்சியினை வழங்கி நிற்கின்றன எனலாம். யாழ்ப்பாணத்தில் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் மாருதப்புரவீகவல்லி என்னும் சோழ இளவரசியின் வரலாற்றுடன் தொடர்புபட்ட மிகவும் புராதன ஆலயமாக விளங்குகிறது. யாழ்நகர் மத்தியிலே விளங்கும் நல்லூர் கந்தசுவாமிகோவில் உலகம் அறிந்த முருகனது கோவிலாக இருக்கிறது. அருள் உள்ளம் கொண்ட மாப்பாண முதலியார் என்னும் முருகன் அடியவரால் அமைக்கப்பட்ட இந்த ஆலயம் பலரது வாழ்வுக்கும் வெளிச்சமாய் இர்க்கிறது என்பதை யாவரும் ஏற்றுக் கோள்ளுவார்கள்.

    கதிகாமம் போன்று பூஜைகள் நடைபெறும் ஆலயமாக இருப்பது செல்வச்சன்னதி முருகன் ஆலயமாகும். கிழக்கு மாகாணத்தில் வெருகலில் முருகன் ஆலயம் தொடங்கி திருக்கோவில் முருகனது ஆலயம்வரை அடியவர்களின் உந்தலினால் உருவாக்கப்பட்டனவே என்பது மனங்கொள்ளத்தக்கதாகும்.

    ஈழத்தின் ஏனைய பகுதிகளிலும் முருகன் அடியார்களின் சிந்தனையினால் முருகனது ஆலயங்கள் அருளாட்சி புரிந்து வருகின்றன. மலேசிய மண் என்றதும் யாவருக்கும் முன்னே வந்து நிற்பது பத்துமலை முருகன் ஆலயமே ஆகும். மலேசியாவையே அடையாளப்படுத்தும் வகையில் இம்முருகன் ஆலயம் விளங்குகிறது என்பது உலகில்இருக்கும் முருகன் அடியவர்களுக்கெல்லாம் பெருமை என்றே சொல்லலாம். இம்முருகன் ஆலயம் இங்குள்ள அடியவரின் இருதயமாகவேதான் இருக்கிறது என்பது வெள்ளிடைமலையாகும். இங்குள்ள முருகன்அடியார்கள் தங்களின் ஒவ்வொரு நடவடிக்கையினையும் பத்துமலை முருகன் பார்த்துக்கொள்ளுவான் என்றே எண்ணி வாழ்கிறார்கள் எனலாம். சிங்கபூரிலும் முருகன் அடியார்கள் முருகன் ஆலயத்துடன் தம்மை இணைத்து பக்திசிரத்தையுடன் தமது நடவிடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் எனலாம்.

    நான் தற்பொழுது வாழுகின்ற அவுஸ்திரேலியாவிலே முருகன் வணக்கமும் முருகன் ஆலயங்களும் செறிந்து காணப்படுகின்றன. விக்டோரியா மாநிலத்தில் சண்சைன் என்னுமிடத்திலும்,றொக்பேங் என்னும் இடத்திலும் முருகனுக்கு ஆலயம் அமைந்திருக்கிறது. சிட்னியில் மிகவும் பெரிய முருகன் ஆலயம் இருக்கிறது. பேர்த்தில் ஒரு முருகன் ஆலயம் இருக்கிறது..அவுஸ்திரேலிய தலைநகரான கன்பராவில் அறுபடைகுருகன் ஆல்யம் அமைந்திருக்கிறது. இங்கு அமைக்கப்பட்ட முருகன் ஆலயங்கள் யாவும் புலம்பெயர்ந்து வந்த அடியவர்களின் ஆதரவினால் அமைக்கப்பட்டன.

    முருகன் என்றாலே கலியுகத் தெய்வம் என்னும் எண்ணமே அனைத்து அடியவர்கள் மனத்திலும் ஊன்றியிருக்கிறது எனலாம். கூப்பிட்ட குரலுக்குஓடிவரும் தெய்வமாகவே முருகனை அடியவர்கள் கருதுகிறார்கள். ஆலயம் அமைக்கவேண்டும் என்னும் எண்ணம் வந்தவுடன் முருகனுக்கே ஆலயம் அமைப்போம் என்பதே அனைத்து அடியார்களின் மனக்கருத்தாய் வெளிவருகிறது. பொதுவாக நோக்கும்பொழுது உலகெங்கணும் முருகன் ஆலயங்கள் இன்று ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் வகையிலேதான் அமையப்பெற்றிருக்கின்றன. யாவருடைய மனத்திலும் ” முருகா ” என்னும் நாமம் வல்லமைபொருந்திய மந்திரமாக உறைந்துவிட்டது என்றே சொல்லலாம்.

    முருகன் ஆலயங்களை அடியார்கள் அமைக்குப்பொழுது முருகனது கையிலுள்ள வேலினையும் வழிபடுமுகமாகவும் ஆலயங்களை அமைத்திருக்கிறார்கள். அஞ்ஞான இருளைப் போக்கி மெய்ஞ்ஞான ஒளியை முருகனது வேல் நல்குவதாக அடியார் நம்புவதால் வேலினுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டில் பிரசித்திபெற்ற முருகன் ஆலயங்களில் வேல் வழிபாடும் முக்கியமாகிறது. ஈழத்தில் கதிர்காமம் செல்வச்சன்னிதி ஆலயங்களில் வேல்தான் அடியவர்களால் வணங்கிப்போற்றப்படுகிறது. கணனி யுகத்தில் கந்தப்பெருமான் துணையே எமக்குப் பெருந்துணையாகும். முருகனை அல்லும் பகலும் அனைவரதமும் துதிக்கும் அடியவர்களும் அவர்களின் அன்பினால் விளைந்த ஆலயங்களும் அகிலத்துக்கும் ஆன்மீக நெறியினை உணர்த்துவதற்கு உறுதுணையாகவே இருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

    ” விழிக்குத்துணை நின்திரு மென்மலர்ப்பாதங்கள் மெய்மை குன்றாமொழிக்குத்துணை முருகாவெனும் நாமங்கள் முன்பு செய்த பழிக்குத்துணை அவன் பன்னிருதோளும் பயந்ததனி
    வழிக்குத்துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே “

    ”  மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் “

     

     

    Share
  • பார்சிறக்க வாழ்ந்திடுவோம் !

    (எம். ஜெயராமசர்மா ….. மெல்பேண் … அவுஸ்திரேலியா)

    கடவுள்   பக்தி    தனையின்று
    காசைக்  கொண்டு  பார்க்கின்றார்
    கடவுள்   பக்தி   என்றுசொல்லி
    கழுத்தை  அறுத்துக்  கொல்லுகின்றார்
    கடவுள்  பக்தி எனும்பெயரால்
    கற்பை  விலை  பேசுகிறார்
    கடவுள்  பக்தி  எனுமுணர்வை
    கருத்தில் கொள்ளா  இருக்கின்றார்  !

    குரு  பக்தி   நாட்டிலிப்போ
    குன்றிப்  போய்  இருக்கிறது
    குரு   கூட   இப்போது
    குறை  கொண்டே  உலவுகிறார்
    நல்ல   குரு   வாய்த்துவிடின்
    நம்  எண்ணம்  உயர்ந்துவிடும்
    நல்ல  குரு  ஆசிபெற்று
    நாம்  வாழ்வோம்  சிறப்புடனே  !

    அன்னை  தந்தை பக்தியின்று
    அருகி   வரப்   பார்க்கிறது
    அன்னை  தந்தை  வார்த்தைக்கே
    அர்த்தம்  இன்றிப்  போகிறது
    அன்னை தந்தை எமக்கெல்லாம்
    அதிக  சுமை  என்கின்றார்
    அக்கருத்தை துடைத்து  விட்டு
    அன்னை தந்தை தாழ்பணிவோம் !

    நாட்டுப்   பக்தி   இப்போது
    ஏட்டில்  மட்டும்  இருக்கிறது
    நாட்டு  நலம்  எனுமெண்ணம்
    நாவில் மட்டும்  இருக்கிறது
    நாட்டைப்  பற்றி  நினையாதார்
    வீட்டைப்  பற்றி  நினைக்காரே
    நாட்டை  என்றும் தாயெனவே
    நாம் பக்தி  செலித்திடுவோம் !

    பக்தி  எனும்   போதினிலே
    பக்குவம்தான்  முதன்மை பெறும்
    பக்தி   என்று   எண்ணுகையில்
    பரந்த  மனம்  எழவேண்டும்
    பக்தி  எனும்  பாதையிலே
    பண்பு  வந்து  நிற்கவேணும்
    பக்தி  செய்து  நாமென்றும்
    பார் சிறக்க  வாழ்ந்திடுவோம்  !

     

     

    Share