Category: பத்திகள்

பத்தி

  • அறுபது ரூபாய் படுத்திய பாடு!

     

    வெங்கட் சாமிநாதன்

    நினைவுகளின் சுவட்டில் பாகம் – II (பகுதி – 54)

    கொஞ்ச நாட்கள்  கழிந்தன. எந்த இடத்திலிருந்தாவது  ஏதும் ஆர்டர் வருமா என்று  காத்திருப்பு. இன்னும் wanted column-ல் ஏதும் எனக்கு ஏற்ற விளம்பரங்கள் வருமா என்ற காத்திருப்பு. ஒரு மாதம் இரண்டு மாதங்கள் கழிந்திருக்கும். முதலில் வந்தது Northern Railway-யிலிருந்து. எனக்கு வேலை கிடைத்துவிட்டது. சந்தோஷமாக இருந்தது. முதல் தடவையாக நானே முயன்று பெற்ற வேலை அல்லவா? இங்கு யாரும் ராஜாவோ, செல்ல ஸ்வாமியோ சொல்லி ஒரு முரளீதர் மல்ஹோத்ரா கருணை மனம் கொண்டு, ”boys service-ல் எடுத்துக்கொள்,” என்று தனிச் சலுகை காட்டிப் பெறவில்லையே. எத்தனையோ பேருடன் போட்டி போட்டல்லவா கிடைத்திருக்கிறது. அந்த சமயத்தில் அந்த சந்தோஷம் தகுதியில் பெற்றதாகத்தான் தோன்றியது.

    எல்லோரிடமும் சொல்லிச் சந்தோஷப்பட்டேன். அவர்களுக்கும்  சந்தோஷம் தான். ஆனால், ”இன்னம்  பொறு. மூன்று இடங்களுக்குப் போய் வந்திருக்கிறாயே, அவை என்ன ஆகிறது என்று பார்க்கலாம்,” என்று மிருணாலும், என் செக்‌ஷன் அதிகாரி தேஷ் ராஜ் பூரியும் சொல்லவே, அது சரியாகத்தான் பட்டது. இரண்டாவது நான் வேலைக்குச் சேர பிக்கானீர் போகவேண்டும். பாலைவனம். வெயில் வறுத்து எடுக்கும். இங்கேயே ஆறு வருடங்கள் அஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்ட கூரையில் காய்ந்து வரண்டாயிற்று. பிக்கானீர் போவதா என்ற தயக்கம் ஒரு மூலையில் எட்டிப் பார்த்தது. இங்காவது ஆறு வருடங்களோடு போயிற்று. பிக்கானீர் போனால் ஆயுள் முழுக்க அல்லவா கஷ்டப் படவேண்டும். இந்த நினைப்பு மற்ற இடங்களிலிருந்து என்ன வருகிறது என்று பார்க்கலாம் என்று ஆலோசனை சொன்னதால் வந்ததா இல்லை, பிக்கானீர் பாலைவன தகிப்பின் காரணமாக மற்றவர்கள் சொன்ன ஆலோசனைப்படி காத்திருக்கத் தீர்மானித்தேனா தெரியவில்லை. இரண்டுமே இருக்கலாம்.

    பிக்கானீர் ஆர்டர் வந்த பத்திருபது நாட்களுக்குள்ளேயே Eastern Railway  யிலிருந்தும் கடிதம் வந்தது. கல்கத்தாவில் வேலைக்குச் சேரவேண்டும். எங்கு நான் சொதப்பிவிட்டு வந்ததால் வேலை கிடைக்காது என்று நினைத்தேனோ அங்கிருந்தும் வேலைக்கு ஆர்டர் வந்தது. இரண்டு இடங்களிலிருந்தும், கல்கத்தாவுக்கும் பிக்கானீருக்கும் பயணம் செய்வதற்கான ரயில்வே பாஸும் உடன் வைக்கப்பட்டிருந்தன. எங்கு சேர்ந்தாலும் வாழ்நாள் பூராவும் இலவசமாக ரயிலில் பயணம் செய்யலாம். எனக்கு ஏதோ லாட்டரி விழுந்த மாதிரித்தான் சந்தோஷம். “ஔர் க்யா சாஹியே சாலே, குதா சப்பர் ஃபாட்கே தேதியா? மௌஜான் ஹி மௌஜான்” (இன்னம் என்ன வேணும் உனக்கு. கடவுளே கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கறார் உனக்கு, கொண்டாட்டம் தான்) என்று பஞ்சாபி நண்பர்கள் சந்தோஷத்தோடு கேலியும் செய்தார்கள். ஆக, பிக்கானீர் தான் போயாகணும்னு இல்லை. கல்கத்தா போகலாம். கிடைக்காது என்று நிச்சயமாக நினைத்த இடத்தி லிருந்தே வேலை கிடைக்கிறதே. அந்த இண்டர்வ்யூ போர்டுலே இருந்த மனுஷன் ரொம்ப நல்ல மனுஷனா இருக்கணும், அவர்களையெல்லாம் மரியாதையாக, “ஸார்” னு சொல்லாததுக்காக வேலை கொடுக்காமல் இல்லை. இந்த உலகத்திலும் சில நல்ல மனுஷங்களும் இருக்கத் தான் செய்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.

    இப்படி இந்த மயக்கத்தில் கொஞ்ச நாட்கள் கழிந்து கொண்டிருக்கும்போதே தில்லியிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. மத்திய உள்விவகாரத் துறையிலிருந்து. வேலை தில்லியில் மத்திய அரசாங்கத்தில். புது இடம் சம்பளமும் அதிகம். கல்கத்தா பிக்கானீர் வேலைகளைவிட கிட்டத்தட்ட அறுபது ரூபாய்கள் அதிகம். வேலையில் க்ரேடும் வேறு. உயர்ந்த அடுக்கில் உள்ளது. பின் என்ன வேண்டும்.? பிக்கானீர் பாலவன வெயிலில் சுட்டெறிய வேண்டாம். கல்கத்தா வேலையை விட சம்பளம் அதிகம்  அது தானே அன்று எனக்கு வேண்டியது! தில்லி தான் என்று மனதுக்குள் நிச்சயப்படுத்திக்கொண்டேன். ஒரே ஒரு குறை. தில்லியில் வேலைக்கு அழைப்போடு இலவச ரயில் பாஸ் இல்லை. சொந்த செலவில் தான் போகவேண்டும்.   இலவச பயணம் என்ற கனவிலிருந்து விழித்தெழ வேண்டும். சரி. இப்போது கிடைக்கும் அதிக சம்பளம் அறுபது ரூபாய் போகப்போக இன்னும் அதிகமாகாதா என்ன? பதவி உயருமே? அதுவும் எனக்கு அதிக சம்பளம் தருமே? இப்படியேவா இருக்கப் போகிறது எல்லாம் எப்போதும்?

    ஒரு மாதிரியான  தீர்மானம் மனதுக்குள் ஆனதும் முதலில் நான் இச்செய்தியைச்  சொன்னது மிருணாலிடம்தான். அவன் அப்போது மஞ்சு சென்னோடு உட்கார்ந்து வம்பளந்து  கொண்டிருந்தான். போய்ச் சொன்னேன் ஒரே ஆரவாரம். இருவருக்கும் ரொம்ப சந்தோஷம் “இது என்ன இது. தினம் தினம் வந்து உங்களுக்கு ஒரு புது ஆர்டர் வந்திருக்குன்னு சொல்கிறீர்கள்? இது எத்தனாவது ஆர்டர்?….” என்றாள் மஞ்சு முகத்தில் வியப்பும் பூரிப்பும் பொங்க. “oh hundreds” என்றான் மிருணால். “அவன் சும்மா கேலி பண்றான். மூணு இடத்துக்குப் போனேன். மூணு இடத்திலிருந்தும் வேலைக்கு அழைப்பு வந்துவிட்டது. இது எப்படி நூற்றுக் கணக்காகும், மிருணால் அப்படித்தான் சொல்வான்” என்றேன்.

    சரி எங்கே போகிறதுன்னு  தீர்மானிக்கமுடியாது, இப்படி தினம் இவ்வளவு இடத்திலேயிருந்து அழைப்பு வந்தால், இல்லையா?” என்றாள் மஞ்சு.

    தில்லி போகலாம்னு  நினைக்கிறேன். புதிய இடம். தலைநகரம். அதெல்லாம் போக, இந்த தில்லி மத்திய மந்திரி அலுவலகம். அறுபது ரூபாய் அதிகம் கிடைக்கும்.” என்றேன்.

    புர்லாவில் இருந்த அந்த கடைசி நாட்களில் எங்கே  போவது அடுத்து? என்று தீர்மானித்தது அந்த அதிகப்படியாக கிடைக்க விருந்த அறுபது ரூபாய் தான். அதை இன்று நினைத்துப் பார்க்கப் பார்க்க   நான் திகைத்துப் போகிறேன். அறுபது ரூபாய் ஆசை காட்டி இழுத்த தில்லி, என்னையும் என் வாழ்க்கையையும் என் சிந்தனைகளையும் முற்றிலும் மாற்றி அமைத்தது கால் பதித்த தினத்திலிருந்தே தொடங்கிய தில்லி வாழ்க்கை தான். பார்க்கக் கண்களை விழித்திருந்தால் காட்சி தர தில்லி தன்னுள் நிறைய கொண்டிருந்தது தில்லி. தேடத் தொடங்கினால அது என் முன் விரித்த உலகம் வித்தியாசமானதாக, புதியதாக என்னை முற்றிலும் புதிய மனிதனாக ஆக்க தன்னிடம் நிறைய கொண்டிருந்தது. சுற்றியிருந்த ஜன்னல்கள் எத்தனையோ அத்தனையையும்  திறந்தால் அது காட்டும் உலகம் தேடுபவர்களுக்கு மாதிரமே காட்சி தரும் ஒன்றாக இருந்தது. அந்த ஜன்னல்கள் எதையும் திறக்காது, ஜன்னல்களையோ மூடியிருக்கும் அதன் கதவுகளையோ காணாது, தன் இருந்த அறைக்குள் தனக்குப் பழக்கமான பாளையங்கோட்டையையோ, மன்னார்குடியையோ விருத்தாசலத்தையோ உருவாக்கி அதனுள் தம் ஆயுளைக் கழித்த பெருந்தகைகள அங்கு இருந்தனர். அது பற்றிய அவர்கள் பெருமையை, சமயம் வாய்க்கும் போதெல்லாம் சொல்லிச் சொல்லி தாம் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டிருப்பதைப் பற்றி கர்வம் கொண்டனர். “தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என்ற வரிக்கு தம் உணர்வில் புதிய அர்த்தங்களை உருவாக்கிக்கொண்டவர்கள் அனேகர்.

    புர்லா மண்ணிலிருந்து  என்னை அழைத்து  ஆசை காட்டியது அறுபது ரூபாய் அதிகம் தரும் வேலை தான். ஆனால் வெகு சீக்கிரம் அதை பின்னுக்குத் தள்ளி தில்லி என்னை வேறு மனிதனாக்கியது.

    ”அது மட்டுமில்லை, செல்லஸ்வாமி அங்கு தானே இருக்கிறார்?. எனக்கு உதவவும், புது இடத்தில் வழிகாட்டவும் தான் அவர் எனக்கும் முன்னால் போய் அங்கு எனக்காகக் காத்திருப்பது போல் இருக்கிறது” என்றேன்.

    “அப்போ எங்களையெல்லாம் விட்டுப் பிரிகிறதாத் தீர்மானம் ஆயாச்சு, இல்லையா?” என்றாள் மஞ்சு. இந்த உணர்வு மிருணாலிடம், மஞ்சுவிடம் என்னிடமும் எப்போதும் ஒரு மறைவிடத்தில் ஒளிந்து இருந்து கொண்டேதான் இருந்தது. கடைசியில் தான் அது மெல்ல தலை நீட்டும். இப்போது மறுபடியும் தலை நீட்டியது.

    உடன் யாரும் பேசமாட்டார்கள். ஒரு அசாதாரண மௌனம் நிலவும். எங்கோ மனமும் பார்வையும் திரும்பும்.

    “என்ன செய்ய? இன்னம் கொஞ்ச  நாளில் நாங்களும் எங்கேயாவது தான் போகவேண்டியிருக்கும். அதை எப்படித் தவிர்ப்பது? எல்லோரும் போய்க்கொண்டிருக்கிறார்கள். நாமும் ஒவ்வொருவராகப் போகத்  தான் வேண்டும்.” என்று மூவரும் ஆளுக்கொரு வார்த்தையாக, சொல்லி சமாதானம் கொண்டோம்.

    முதலில் சம்பல்பூர் Chief Medical Officer- இடம் போய் உடல் ஆரோக்கியத் தகுதிச் சான்று வாங்க வேண்டும். அங்கு நான் போன சமயம் கட்டக்கில் என்னோடு நேர்காணலுக்கு வந்திருந்த ஏ. ஸ்ரீனிவாசன் போற்றியும், டி.ஆர்.ஜி. பிள்ளையும் இருந்தனர். அவர்களும் இந்த அணைக்கட்டிலேயே வேலை பார்த்த போதிலும், கட்டக்கில் பார்த்துத்தான் ஒருவரை ஒருவர் ஹிராகுட் அணை சகாக்களாக அறிந்து கொண்டிருந்தோம். எங்கோ மூலையில் அவர்கள் வேலை பார்த்திருக்க வேண்டும். சிப்ளிமாவோ, பர்கரோ, இப்படி இன்னும் எத்தனை இடங்கள் இருக்கின்றனவோ. ஆனால், ஆறு வருஷங்கள் கழித்து புர்லாவைவிட்டுப் போகும் போதாவது. ஒருவரை ஒருவர் பரிச்சயம் செய்துகொண்டு இணைந்தோமே. இப்போது அவர்களுக்கும் தில்லி ஆர்டர் கிடைத்துவிட்டதால், தில்லி போகும் போதாவது ஒன்றிணைந்து போவது என்று தீர்மானித்துக் கொண்டோம். பயணத்திலும், பின் அங்கு புது இடம் தில்லியில் ஆரம்ப நாட்களில் தங்குவதற்கும் ஒன்றிணைந்து கொண்டால் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளலாமே. அன்றே சி.எம்.ஓ எங்களுக்குத் தகுதிச் சான்றிதழ் கொடுத்து விட்டார். எந்தக் கையூட்டு பற்றியும் அவருக்கும் சரி, எங்களுக்கும் சரி, அந்த மருத்துவமனையின் வேலையாட்களுக்கும் சரி, அந்த நினைப்பே தோன்றாத பொற்காலம். அது. ஒரிஸ்ஸாவில் சம்பல்பூரில் 1956- டிஸம்பரில் ஒரு தினம் அது.

    எல்லோரும் சேர்ந்தே தில்லிக்குப் பயணப்படுவது என்று தீர்மானித்துக்கொண்டோம். நாங்கள் எங்கு எந்த மூலையில் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட நாள் சாயந்திரம் சம்பல்பூரிலிருந்து ஜர்ஸகுடாவுக்குப் போகும் சாயந்திர ரயில் 5.00 5.30 மணிக்கு சேர்ந்துகொள்வது என்று முடிவாயிற்று.

    செக்‌ஷன் அதிகாரி தேஷ் ராஜ் பூரி முன்னாலேயே கொடுத்த  வாக்கு இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும்  தடை சொல்லாது பணியிலிருந்து விடுவிப்பதாக. வீட்டில் ஒரு சின்ன பையன் சில மாதங்களாக வந்து சேர்ந்திருக்கிறான். வேலை தேடிக்கொண்டு. அவ்வப்போது ஏதோ வேலை கிடைத்து வருகிறது. என் வீட்டை அதிகாரப்பூர்வமாக பங்குகொண்டிருக்கும் சிவராம கிருஷ்ணன் பார்த்துக்கொள்வான் அந்த புதிதாக வந்த பையனை. இன்னும் யாருக்காவது என் இடத்தில் அந்த வீடு ஒதுக்கப்பட்டாலும், ஒரு காலத்தில் 12 பேர் இருந்த இடம். அவனுக்குத் தெரியும். இப்போது அந்த 20 வயது பையனுக்கா இடம் இராது.? அதிக பந்தங்கள் இல்லை. தகர ட்ரங்க் ஒன்று. பின் படுக்கை. தில்லியில் அதிகம் குளிரும் என்றார்கள். அவர்கள் சொன்ன ஆலோசனையில், இரண்டு கம்பளி ஸ்வெட்டர் வாங்கிக் கொண்டேன். வேறு என்ன? மிகுந்தது புத்தகங்கள். அவற்றைத் தூக்கிக் கொண்டு போகமுடியாது. மூன்று பெரிய கள்ளிப்பெட்டி களில் அடுக்கி சுற்றி ஸ்டீல் டேப் போட்டு பத்திரப்படுத்தினேன். ‘இவை இங்கேயே இருக்கட்டும். பத்திரமாகப் பார்த்துக்கொள். பின் அங்கு இருக்கும் இடத்தின் சௌகரியத்தைப் பொருத்து நான் சொல்லும்போது இவற்றை ரயிலில் அனுப்பி வை. செய்வாயா?” என்று கேட்டேன். “இதென்ன பெரிய காரியம். நீங்கள் கவலைப் படாமல் சௌகரியமாகப் போய் வாருங்கள். இப்போது இதை யெல்லாம் எப்படி எங்கு தூக்கிக் கொண்டு போக முடியும்?. அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம், என்னிடம் விட்டு விடுங்கள்” என்றான். நான் பழகி ஒரு சில மாதங்களில் அவன் சாதுவாகவும் சொன்ன காரியத்தைச் செய்பவனாகவும் தெரிந்தான்.

    தேஷ் ராஜ் பூரி கொடுத்த  வாக்குப் படியே எனக்கு தடை ஏதும் செய்யவில்லை. அப்போது நிர்வாக அதிகாரியாக இருந்த கிர்தாரி லால் எனக்குக் கொடுத்த Relieving Order-ல் ஒரு விஷமம் செய்திருந்தான். அதாவது நான் என் இஷ்டத்துக்கு வேலையை விட்டுப் போவதால் ஹிராகுட் அணைக்கட்டுத் திட்டத்திலிருந்து வேலையை விட்டு நீங்க அனுமதிப்பதாக அந்த ஆர்டர் எழுதியிருந்தது. இந்த நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் செய்யும் சில விஷமங்கள் உடனே சட்டெனெ புரிவதில்லை. எனக்கும் அப்போது புரியவில்லை. நான் சந்தோஷமாக அந்த ஆர்டரை எடுத்துச் சென்றேன்.

    அருகில் இருந்த நண்பர்களுக்கும்  ஹிராகுட்டிலிருந்த எஸ்  என் ராஜாவுக்கும் நான் தில்லி போவதைப் பற்றிச் சொன்னேன். அவர் சந்தோஷப்பட்டார். ”முடிந்தால் எழுதிக்கொண்டிரு. அங்கு போய் விலாசம் தெரிவி,” என்றார். இது சம்பிரதாய வார்த்தை என்று தான் தோன்றும். ஆனால் இந்த சம்பிரதாயங்களில் எவ்வளவு அர்த்தங்கள், அவசியங்கள், காரியங்கள் இருந்தன என்பது எனக்கு வெகு சீக்கிரம் தெரிய வந்தது.

    கடைசியாக என்னுடன் சம்பல்பூர் வரை வந்து வழியனுப்ப புறப்பட்டது மிருணால் தான். ஏதும் வண்டி கிடைக்கவில்லை. ஒரு ரிக்‌ஷா தான் கிடைத்தது. அதில் நானும் மிருணாலும். ஒரு பெட்டி படுக்கை. இவ்வளவு தான். சைக்கிள் ரிக்‌ஷா நேரத்துக்கு என்னை சம்பல்பூரில் கொண்டு சேர்க்கும் என்று தோன்ற வில்லை. ஆனாலும் செய்வதற்கு ஏதும் இல்லை. மகாநதிப் பாலம் தாண்டியதும் பின்னாலிருந்து ஒரு லாரி வந்தது. ரிக்‌ஷாவிலிருந்து இறங்கி அந்த லாரியை நிறுத்தி, ”எனக்கு மிக அவசரமாக சம்பல்பூரி போய் தில்லிக்கு ரயில் ஏறவேண்டும். உதவ முடியுமா?” என்று கேட்டேன். ”சரி ஏறிக்கொள்,” என்றான். ரிக்‌ஷாவுக்கு பேசிய பணத்தைக் கொடுத்துவிட்டு நானும் மிருணாலும் லாரியில் ஏறிக்கொண்டோம். லாரி ஓட்டுபவர்கள் இந்த மாதிரி சமயங்களில் உதவுவார்கள். காசு கேட்க மாட்டார்கள். மிஞ்சி கடக்க வேண்டிய ஆறு மைல் தூரத்தை வெகு சீக்கிரம் கடந்து சம்பல்பூரில் ரயிலைப் பிடிக்க முடிந்தது.

    தில்லிப் பயணம் அந்த நாட்களில் அவ்வளவு சுலபம் இல்லை. முன் பதிவு இல்லாத நாட்கள் அவை. எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். எந்த வண்டியிலும் எங்கும் பயணம் செய்யலாம். டிக்கட் கிடைக்க இல்லை என்ற பேச்சு இல்லை. ஆனால் கூட்ட நெரிசலில் இடிபட  வேண்டியிருக்கும். நீண்ட தூரப் பயணங்கள் சிரமம் தருபவை. தூங்கவும் சாப்பிடவும். அத்தோடு நாலைந்து இடங்களில் இறங்கி வண்டி மாறவும் வேண்டும். 1956-ல் நான் தில்லி சென்ற மார்க்கம் இதோ. சம்பல்பூர் ரயில் நிலையத்திலிருந்து ஜார்ஸகுடா. ஜார்ஸ குடாவில் வண்டி மாறி பிலாஸ்பூர். பிலாஸ்பூரிலிருந்து பினா. பின் மறுபடியும் வண்டி மாறி கட்னி. கட்னியில் இறங்கி பின் தில்லிக்கு வண்டி மாற வேண்டும். எத்தனை ஆயிற்று? அவ்வப்போது மாறும் வண்டிகளில் இருக்க இடம் பொருட்களை வைக்க இடம், சாப்பிட கிடைக்கும் வசதி இரவுகளில் தூங்கக் கிடைக்கும் வாய்ப்புகள் இவை என்ன கிடைக்கின்றனவோ அனுபவித்து வதை படத்தான் வேண்டுமே ஒழிய அவற்றை நீட்டி முழக்கி எழுதுவது இன்றைய தலைமுறையினருக்கு வெறுப்பேற்றும்.

    ஜார்ஸகுடாவில் ஏ. ஸ்ரீனிவாசன் போற்றியும், டி.ஆர்.ஜி பிள்ளையும் சேர்ந்து கொண்டார்கள். அது பயணத்தின் கடுமையை அவ்வப்போது மறக்க உதவியது.

        புது தில்லி ரயில் நிலையத்தை இரண்டு நாள் பயணத்துக்குப் பின் டிசம்பர் 30-ம் தேதி இரவு ஏழு மணிக்கோ எட்டு மணிக்கோ போய்ச் சேர்ந்தோம். ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து பார்த்தேன். ஸ்டேஷனும் புதிதாகக் கட்டப்பட்ட ஒன்று. வெளியே அகன்று பரந்திருந்த சாலை மரங்கள் அடர்ந்து அழகாக இருந்தது. விளக்குகள் சிறிய எட்டடி ஸ்தம்பங்களில் குளிர்ச்சியாக ஒளி வீசியதும் அழகாக இருந்தது. வெளியே கேட்டை விட்டு வந்ததும் சாலையில் கண்ட காட்சி ஆச்சரியப்பட வைத்தது. சாலையின் இரு மருங்கிலும் குதிரை பூட்டிய டாங்கா வண்டிகள். இடையிடையே சில பாரம் எடுத்துச் செல்லும் வண்டிகளை ஒட்டகங்கள் இழுத்துச் சென்றன. எத்தனை நூற்றாண்டுகளை ஒரே சமயத்தில் தில்லி வாழ்ந்து காட்டுகிறது என்ற திகைப்பு. வெளியே வலது பக்கம் ஒரு நீண்ட சாலையின் எதிர்ச்சாரியில் ஒரு கட்டிடத்தின் இரண்டாவது மாடியின் மேலே Star Hotel என்று விளம்பரம் செய்யும் நியோன் விளக்குகள் மின்னின. பக்கத்திலேயே ஹோட்டல் இருக்கிறதே. இன்று இரவோ அல்லது இன்னும் வசதியான இடம் கிடைக்கும் வரையோ இந்த ஹோட்டலிலேயே தங்கலாமே என்று சொன்னதும் அவர்களும் உடன் சம்மதித்தார்கள். அன்று இரவு ஸ்டார் ஹோட்டலில் ஒரு அறை எடுத்து தங்கினோம். ஆளுக்கு ஒரு நாள் வாடகை ரூபாய் ஆறு. என்றார்கள். அந்த சாலைக்கு குதப் ரோட் என்று தெரிந்தது. தில்லியில் கால் பதித்த முதல் நாள் இரவே நாங்கள் தங்கியது குதப் ரோடில் என்பதில் ஒரு விசேஷம் இருந்தது மறு நாள் காலையில் அலுவலத்தில் பணிக்கு சேர்ந்ததும், அங்குள்ளவர்களின் அட்டஹாச கேலிச் சிரிப்பில் எங்களுக்குத் தெரிய வந்தது.

    பி.கு. இத்துடன் ஹிராகுட் வாழ்க்கை முடிகிறது. அடுத்து தில்லி வாழ்க்கையின் தொடக்கம்.

     

    Share
  • வேதியியல் வரலாற்றில் இன்றியமையாத ஒரு முக்கியக் கண்டுபிடிப்பு

     

    தேமொழி

    இதுவரை உலகில் 120  தனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், இத்தனிமங்கள் அனைத்தையும் தனித்தனியாக அவற்றின் பண்புகளை அறிந்து நினைவில் கொள்வது கடினம்.

    இதற்கு உதவுவது தனிம வரிசை அட்டவணை. தனிம வரிசை அட்டவணையில்,  தனிமங்களை  அதன் பண்புகளின் அடிப்படையில் தொகுதிகளாகப் பிரித்து அட்டவணையாக வரிசைப்படுத்திய விதம் தனிமத்தின் வேதியியல் பண்புகளை நினைவில் நிறுத்திக் கொள்ள உதவுகிறது. தனிம வரிசை அட்டவணையானது மனிதகுலம் உருவாக்கிய, மனித குலத்தின் அறிவாற்றலைக் காட்டும் ஒரு ஈடு இணையற்ற படைப்பாகும்.

     

     

    டோபரின்னர், ஜான் நியூலேண்ட், லோதர் மேயர் போன்ற அறிவியியல் அறிஞர்கள் தனிமங்களின் பண்புகளை அடிப்படையாகக்கொண்டு அவற்றை வரிசைப்படுத்த முயன்றுள்ளனர்.  ஆனால், ரஷ்ய வேதியியல் அறிஞர் ‘டிமிட்ரீ மெண்டலீயா’ (Dmitri Mendeleev) என்பவர் 1871ஆம் ஆண்டில் உருவாக்கிய தனிம வரிசை அட்டவணை அனைத்தையும் விட மிகச் சிறப்பானது.

    மெண்டலீயா தனிமங்களை அவைகளின் அணுநிறைகளின் அடிப்படையில், குறைந்த அணுநிறையிலிருந்து அதிக அணுநிறை உள்ள தனிமங்களை இடமிருந்து வலமாக (நாம் எழுதுவதுபோல) அட்டவணைப்படுதினார். அவர் அவ்வாறு வரிசைப்படுத்தி ஆராய்ந்த பொழுது, வரிசையில் ஒத்த தன்மை இல்லாத தனிமங்களுக்கு இடையில் வெற்றிடம் விட்டு  அங்கு  இடம்பெற வேண்டிய பண்புகளையுடைய  தனிமங்கள் இனிமேல்தான் கண்டறியப்பட வேண்டும் என நிர்ணயித்தார். இதுதான் மிகவும் ஆச்சரியகரமான அறிவியியல் கண்டுபிடிப்பு. 

     

    Mendelejevs_periodiska_system_1871

     

    இவ்வாறு வெற்றிடங்களில் இடம் பெற வேண்டிய தனிமங்கள் என அவர் குறிப்பிட்டவை  அவர் அட்டவணையைத்  தயாரித்த காலத்தில் கண்டறியப் பட்டிருக்கவில்லை. எனினும்,  இன்னமும் கண்டறியப்படாத அந்த தனிமங்களின் பண்புகளை அட்டவணையில் அவை இடம் பெற்ற இடத்தினையும், அருகே சூழ்ந்திருக்கும் மற்ற தனிமங்களின் பண்புகளையும் அடிப்படையாகக் கொண்டு யூகிக்க முடியும்.  இதுவே இவரது தனிம அட்டவணையின் சிறப்பிற்குக்  காரணம்.

    அவ்வாறு தனிம அட்டவணையில் இடம் பெற வேண்டிய தனிமங்களின்  இடத்தினை  கருத்தில் கொண்டு, அவற்றின் பண்புகளை யூகித்து  சில தனிமங்களை  ‘எகா  அலுமினியம்’ (அலுமினியத்தின் பண்பினை ஒத்தது), ‘எகா சிலிக்கான்’ (சிலிக்கானின் பண்பினை ஒத்தது)  என்று குறிப்பிட்டார்.  ஆனால் அது போன்ற பண்புகளைக் கொண்ட தனிமங்கள் அப்பொழுது கண்டறியப் பட்டிருக்காவிட்டாலும், பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பொழுது மெண்டலீயா யூகித்தது போன்றே அவற்றின் பண்புகளும் இருந்தன.

    மெண்டலீயா 1871 ஆம் ஆண்டு எகா  அலுமினியத்தின் பண்புகளைக் குறிப்பிட்டார். அதன் பிறகு 1875 ஆம் ஆண்டு ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘பால் எமிலி லெகாக் டி பாய்ஸ்பவுட்ரன்’ (Paul Emile Lecoq de Boisbaudran) ‘காலியம்’ (gallium) என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தார். ஃபிரான்ஸ் நாட்டினைக் குறிக்கும் ‘கால்’ (Gaul) என்ற சொல் இந்தப் பெயரினையிட அடிப்படைக் காரணமானது. இந்த தனிமத்தின் பண்புகள் அலுமினியத்தைப் போன்றே இருக்கிறது.  காலியத்தைத் தவிர ஸ்கேண்டியம், ஜெர்மானியம், ரேனியம் ஆகிய தனிமங்களின் பண்புகளையும் அவைகளைக் கண்டுபிடிக்கப்படும் முன்பே மெண்டலீயா குறிப்பிட்டு விட்டார். 

    மெண்டலீயா ‘எகா மாங்கனீஸ்’ எனக் குறிப்பிட தனிமம் பிறகு கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு ‘டெக்னீடியம்’ என்று பெயரிடப்பட்டது. டெக்னீடியம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1937, அதாவது மெண்டலீயா அத்தனிமத்தின்  பண்புகளை குறிப்பிட்ட பின்பு ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்குப் பிறகே, அவர் இறந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகே கண்டு பிடிக்கப்பட்டது.

    நோபெல் பரிசுகள் கொடுக்க ஆரம்பித்த ஆரம்ப ஆண்டுகளில், 1907 ஆம் ஆண்டு மெண்டலீயா இறந்துவிட்டதால் அவரது கண்டுபிடிப்புக்கு நோபெல் பரிசு கிடைக்காமல் போனது. ஆனால், 1955 ஆம் ஆண்டு கலிஃபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகம் (University of California, Berkeley) உருவாக்கிய, அணுஎண்  101 ஐக் கொண்ட தனிமத்திற்கு மெண்டலீயாவினைப் போற்றும் விதமாக மெண்டலீயம் (mendelevium) எனப் பெயரிடப்பட்டது. இந்த கெளரவம் நோபெல் பரிசை விட உயர்ந்தது. இதுவரை நோபெல் பரிசை 800 க்கும் அதிகமானவர் பெற்றிருக்கிறார்கள். ஆனால், தனிம வரிசை அட்டவணையில் இடம் பிடித்த அறிவியியல் அறிஞர்கள் 15  பேர்கள் மட்டுமே, அவர்களில் மெண்டலீயாவும்  ஒருவர்.

     

    Periodic_table

     

    mendaleviyam

     

    இவர் பிறந்த ரஷ்யாவில் இவரைப் போற்றும் வண்ணம் பல பல்கலைக் கழகங்களின்  ஆராய்ச்சிக் கூடங்களுக்கு மெண்டலீயாவின் பெயர் சூட்டப் பட்டுள்ளது.  ‘மெண்டலீயா தங்கப் பதக்கம்’ என்ற பரிசும் 1962 ஆம் முதல் சிறந்த அறிவியியல் அறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    ___________________________________________________

    ஆதாரம்: TED Ed – The genius of Mendeleev’s periodic table

    படம் உதவி:
    http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c8/DIMendeleevCab.jpg/427px-DIMendeleevCab.jpg
    http://upload.wikimedia.org/wikipedia/commons/5/55/Mendelejevs_periodiska_system_1871.png
    http://upload.wikimedia.org/wikipedia/commons/8/84/Periodic_table.svg

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 47 (26.11.12)

     

    மலர் சபா

     

    புகார்க்காண்டம் – 06. கடல் ஆடு காதை

     
    வைகறையில் கடற்கரைக் காட்சி
     
     

    வண்ணக் கலவைகள், சாந்து வகைகள்,
    மலர்கள் சுண்ணப் பொடிகள்
    பணியாரம் முதலான தீனிவகைகள்
    இவை விற்போர் வைத்திருந்த விளக்குகள்;
     
     
    செய்யும் தொழிலில் வல்லவரான
    கம்மியர்(தட்டார்)
    அணிகலன் செய்யுமிடங்களில்
    வைத்திருந்த விளக்குகள்;
     
     
    பிட்டு வாணிகர்கள்
    வரிசை வரிசையாய்
    ஏற்றி வைத்திருந்த விளக்குகள்;
     
     
    அப்பம் விற்கும் வாணிகர்
    குடத்தண்டில் ஏற்றி வைத்திருந்த
    கரிய அகல்விளக்குகள்;
     

    பண்டங்கள் பலவும் விற்கும் பெண்கள்தம்
    கடையில் வைத்த விளக்குகள்
     

    ஆங்காங்கு இடையிடையே
    மீன் விற்பவர்கள் வைத்த விளக்குகள்
     

    கடலின் இடத்து துறை எதுவென்று அறியாது
    ஓடுகின்ற மரக்கலங்களை
    அடையாளம் காட்டி அழைக்கவென்று
    வைத்த்திட்ட விளக்குகள்
     

    மீன்களைக் குறுக்கிட்டுத் தடுத்து
    வலையில் அகப்படுத்தும்
    பரதவர் வைத்திட்ட
    மீன் திமில் விளக்குகள்
     
    வேற்றுமொழி பேசும் தேசத்தவர்
    வைத்திட்ட விடிவிளக்குகள்
     
     
    பெரிய பெரிய பண்டங்களையுடைய
    பண்டகசாலைக் காப்பாளர்கள்
    வைத்திட்ட விளக்குகள்
     
     
    எண்ணுவதற்கு அரிய அளைவினதாய் விளக்குகள்
    எங்கு காணினும் பொருந்தி இருந்தன.

     

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 134 – 145

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram16.html

    படத்துக்கு நன்றி:

    http://aammaappa.mywebdunia.com/2008/11/20/1227199500000.html

    Share
  • வலி நிவாரணி வேலை செய்யும் விதம்

     

    தேமொழி

    நம் காலில் ஒரு முள் குத்தினால் நமக்கு எவ்வாறு  தெரிகிறது?

    நாம்  முள்குத்தியதை அறியும் விதம் வலி என்ற உணர்வு தோன்றும் காரணத்தினால்தான். 

     

     

    வலி ஏன் ஏற்படுகிறது?

    வலி என்ற உணர்வு நம்மை ஆபத்தில் இருந்து காப்பதற்கு உதவுகிறது.  இது உயிர் காக்கும் ஒரு நட்பைப் போன்றது. வலியை நாம் உணராவிட்டால் நம் விரலைத் தவறுதலாக காய் வெட்டும்பொழுது வெட்டிக்கொண்டாலும் நமக்குத் தெரியப்போவதில்லை. நமக்கு நாமே தீங்கு செய்து கொண்டு இழப்பு ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் உருவாகும். அல்லது சுற்றுச் சூழலில் உருவாகும் ஆபத்தை உணராமல் நமக்கு தீங்கு நேரும், உயிருக்கும் ஆபத்து நேரும். வலி நமக்கு ஆபத்தைத் தவிர்க்க உடல் ஏற்படுத்தித் தந்த ஒரு முன்னெச்சரிக்கை  ஒலி.

    நாம் வளரும்பொழுது வலியை உணர்த்தும் நரம்பு செல்கள் நம் உடலில் ஆங்காங்கே பல பகுதிகளில் நிறுவப்படுகிறது. வலியை உணரும் நரம்பு செல்கள் சாதாரண நரம்பு செல்களில் இருந்து வேறுபட்டவை, மேம்பட்டவை. இவைகளை “நோசிசெப்டர்ஸ்”(nociceptors) எனக் குறிப்பிடுகிறோம்.

    இந்த நரம்பு செல்கள் தண்டுவடத்தில் இருந்து கிளம்பி தோல், தசை, எலும்பு, மூட்டுகள், உடலின் உள்ளுறுப்புகள் என பலப்  பாகங்களையும் மூளையுடன் இணைக்கிறது. மற்ற நரம்பு செல்களைப்போலவே வேலை செய்து  மின்சமிக்கைகள் மூலம் செய்திகளை மூளைக்கும் உடலுறுப்புகளுக்கும் பரிமாற்றம் செய்கிறது. ஆனால் உடலுக்கு சேதம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே இவை இயங்கத் தூண்டப்படும்.

    உதாரணமாக, ஒரு ஊசியின் முனையை மெதுவாகத் தொட்டவுடன் நமக்கு வலி தெரியாது, வழக்கமான உணர்வு அதைத் தொடுகிறோம் என மட்டுமே நமக்கு அறிவுறுத்தும்.  ஆனால் முனையை மேலும் அழுத்தினால் நோசிசெப்டர்ஸ் நரம்பு செல்களின் இயக்கம் தூண்டப்படும். உடலுக்கு சேதம் ஏற்படும் நிலை ஏற்படும் பொழுது அப்பகுதியில் உள்ள செல்கள் அராக்கிடானிக் அமிலம் (arachidonic acid) எனப்படும் வேதிப்பொருட்களை வெளியிட்டு நோசிசெப்டர்ஸ் நரம்பு செல்களை இயங்கத் தூண்டும். அந்த நரம்பு செல்கள் வலியின் தீவிரத்தை நமக்கு தெரியப்படுத்தும்.

    வலியின் தீவிரம் என்பதும்  நிலையான ஒன்றல்ல.  வேதிப்பொருட்களால் அதன் தீவிரத்தை மாறுபடுத்த முடியும்.  வேதிப் பொருட்களிலான மருந்துகளை நாம் வலிநிவாரணிகளாக  உபயோகப்படுத்துவதும்  அதனால்தான். இதனால் வலியின் தீவிரத்தை நாம் குறைக்கிறோம். “ஆஸ்ப்ரின்” மற்றும் “ஐபிப்ரோஃ பின்” மருந்துகள் வலியின் தீவிரத்தைக் குறைக்க உதவுகிறது. 

     

    வலியை உணர்வது எப்படி? 

    உடலுக்கு சேதம் ஏற்படும் நிலை தோன்றினால் அப்பகுதியில் உள்ள செல்கள் அராக்கிடானிக் அமிலத்தினை உற்பத்தி செய்யும். திசுக்களில் உள்ள “காக்ஸ்-1 மற்றும் காக்ஸ் – 2 என்ற நொதிப்பொருட்கள்” (COX-1 and COX-2 enzymes) இவ்வாறு வெளிக்கிளம்பும் அராக்கிடானிக் அமிலத்தினை “ப்ரோஸ்ட்டாகிலாண்டின்ஸ்” (prostaglandins-H2) எனப்படும் வேதிப்பொருளாக மாற்றும்.  தொடர்ந்து ப்ரோஸ்ட்டாகிலாண்டின்ஸ் வேறு பற்பல வேதிபோருட்களாக தொடர்ந்து மாறுதல்களை  அடைந்து உடலில் சுரம், அழற்சி, வீக்கம் ஏற்படுத்துவது எனப் பல வகையில் செயல் படத் தொடங்கும்.  

    ஒவ்வொரு நொதிப் பொருளுக்கும் வினையூக்கி பகுதி (active site) என்ற ஒரு பகுதி ஒன்று உண்டு. இந்தப் பகுதியில்தான் வேதியியல் வினைமாற்றங்கள் நிகழும்.  காக்ஸ்-1 மற்றும் காக்ஸ் – 2 என்ற நொதிப்பொருட்களின்  வினைப்பகுதியில், பாதிக்கப்பட்ட செல்கள் வெளியேற்றிய அராக்கிடானிக் அமிலம் கச்சிதமாக வந்து பொருந்தும். இதன் விளைவு, நோசிசெப்டர்ஸ் நரம்பு செல்கள்  இயங்கத் தூண்டப்பட்டு வலியை நாம் உணர்வது.

     

    Pain

    நியூரோபத்திக் வலி (Neuropathic pain) என்பது நரம்பு செல்களே சேதம் அடைந்தால் உண்டாவது. இந்த வலி உண்டாக உடலுக்கு வெளியில் இருந்து தூண்டப்படும் பாதிப்பு தேவையில்லை. 

     

    வலிநிவாரணிகள் எவ்வாறு வேலை செய்கிறது?

    ஆஸ்ப்ரின் மற்றும் ஐபிப்ரோஃ பின் மருந்துகள் உட்கொள்ளப்பட்டபின் அவை இரத்தத்தில் கலந்து உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்லும், அதுபோல பாதிக்கப்பட்ட உடலுறுப்பினையும் அடையும்.  அங்கு அது காக்ஸ்-1 மற்றும் காக்ஸ் – 2 என்ற நொதிப்பொருட்களின் வினைப்பகுதியினை அடைந்து அங்கு அராக்கிடானிக் அமிலம் பொருந்த விடாமல் அப்பகுதியை செயலிழக்கச் செய்யும்.

    இவ்வாறு செயலிழக்க செய்வதை ஆஸ்ப்ரின் மற்றும் ஐபிப்ரோஃ பின் மருந்துகள் வேறு வேறு விதமாக நிகழ்த்தும்.  ஆஸ்ப்ரின் வினைப்பகுதியின் இடத்தில் சிதைவடைந்து அந்த வினைப்பகுதியின் இடத்தையும் அடைத்துவிடும், அந்த நொதிகளை நிரந்தராமாக செயலிழக்கச் செய்யும்.

    ஐபிப்ரோஃ பின் அவ்வாறு சிதைவடையாவிட்டலும், காக்ஸ்-1 மற்றும் காக்ஸ் – 2 என்ற நொதிப்பொருட்களின் வினைப்பகுதியினை அடைந்து அந்த இடத்தில் அது இருக்கும் வரை அராக்கிடானிக் அமிலத்தினைப் பொருந்த விடாது தடை செய்யும். இந்த வினையில் காக்ஸ்-1 மற்றும் காக்ஸ் – 2 என்ற நொதிப்பொருட்களின் தன்மை மாறுபடாது ஆனால் தற்காலிகமாக செயலிழக்கும்.

    இவ்வாறு வலிநிவாரணிகள் வெவ்வேறு வகையில் செயல் பட்டு  நொதிப்பொருட்களை  வெவ்வேறு வகையில் செயலிழக்க செய்து,  நொதிப்பொருட்களை அராக்கிடானிக் அமிலத்துடன் வினை செய்வதை தடுப்பதன் மூலம் வலியின் தீவிரத்தைக் குறைத்து வலியில்  இருந்து நமக்கு நிவாரணத்தைத் தருகின்றன.

    வலியை உணர்வதிலும் அதைக் கட்டுப்படுத்துவதிலும் நமது மூளையும்  பெரும்பான்மையான பங்கு வகிக்கிறது. உதாரணத்திற்கு  வலியைப்பற்றியே அதே கவனத்தில் இருந்தாலோ அல்லது நாம் மிகவும் சிரமமான சூழ்நிலையில் இருந்தாலோ நாம் வலியின் தீவிரம் அதிகம் இருப்பது போல உணர்வோம் 

    ________________________________________

    நன்றி: TED Ed – How Do Pain Relievers Work?

    படம் உதவி: http://static3.businessinsider.com/image/4f3552766bb3f79b6c000050/headache.jpg

     

     

    Share
  • நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’:: தொடர்-21

     

    பெருவை பார்த்தசாரதி

    வருடக்கணக்கில், இரவு, பகல் பாராமல், அதிகாலை முதல்  அந்தி சாயும் வரை, அரசியல் கலந்த அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு என்றைக்குமே மகிழ்ச்சியும், மனஅமைதியும் என்பது மற்றவர்களைவிட சற்று குறைவாகவே இருக்கும்.  ஏனென்றால் நகரங்களில் பெருகிவரும் மக்கள் கூட்டம், எந்திர வாழ்க்கை, எதையோ தேடிக்கொண்டு வாகன நெறிசலோடு ஓடிக்கொண்டேயிருக்கும் சாமானியர்கள், சம்பளத்திற்காக உழைத்தது போக, கிடைக்கும் சிறிது ஓய்வு நேரத்தையும் மறுபடி அலுவலகத்திலேயே செலவிட்டு (Overtime) மேன்மேலும் பொருள் ஈட்டுவது… ஒரு பக்கம். முழுநேரமும் அலுவலகத்தில் செலவிட்டு களைப்புடன் வீட்டுக்கு வரும்போது, தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்பு மணிக்கணக்கில் மேன்மேலும் உடலுக்கு உபாதைகள் வரும் அளவில், குரோதம், சண்டை, வக்கிரங்கள் நிறைந்த மெகா சீரியல் பார்ப்பது… இன்னொரு பக்கம்.

     

    இப்படி நமக்கு அபூர்வமாகக் கிடைக்கும் மிகக் குறைந்த நேரத்தையும் பயனற்ற ஏதாவதொன்று சாப்பிட்டு விடுகிறது. ஆக ஒரு வகையில் நற்பொழுதுபோக்கு என்பது நம் வாழ்வில் அறவே இல்லாமல் போய்விடுகிறது. மனதுக்கு இதமளிக்கும் ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்வதற்கோ, நல்ல விஷயங்களைப் படித்துப் பயன்பெறவோ, இன்றய அவசர உலகத்தில் நல்ல நேரம் பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு நாம் தள்ளப் பட்டிருக்கிறோம் என்பதே உண்மை. மனதுக்கும் நாம் பின்பற்றுகின்ற ஒழுக்கத்துக்கும் நிறையவே சம்பந்தம் உண்டு, மனதைப் பின் தொடர்ந்துதான் நல்லொழுக்கமும், பண்பும் அமைகின்றன.

     

    தமிழ் இலக்கணத்தில் திணை என்பது ஒழுக்கத்தைக் குறிக்கும் என்பதை நம் பள்ளிப்  பருவத்தில் படித்திருக்கிறோம். உயரிணை, அஃறிணை என்ற பாகுபாடு நல்லொழுக்கத்தைத் அடிப்படையாகக் கொண்டு பிரிவு செய்யப்பட்டது. நல்லொழுக்கமுடைய மனித உயிருக்கு மட்டுமே உயரிணை, மற்ற உயிர்களெல்லாம் அஃறிணை. மனிதனுக்கு நல்லொழுக்கமே அடிப்படை. மனிதனிடத்தில் மறைந்து கிடக்கும் ஆக்க சக்திகளை பூரணமாக உபயோகப் படுத்திக் கொள்ள மனிதனுக்கு இன்றியமையாத துணை ஒழுக்கம். ஒழுக்கம் என்பது மனதோடு உறவாடுவது. மனதைக் கட்டுப்படுத்தி ஒழுக்கத்தில் சிறந்து விளங்குபர்வர்கள்தான் உத்தம சீலர்களாக உலகத்தால் போற்றப்படுகிறார்கள். விஞ்ஞானத்திலே வியத்தகு முன்னேற்றத்தைக் கொண்டுவந்த அறிஞர்கள், மனதை ஒரு சீரான நோக்கில் செலுத்தினால் மட்டுமே சாதனை புரிவதோடு மட்டுமல்லாமல் பிறருக்கும் வழிகாட்ட முடிகிறது. மண்ணில் தோன்றிய எந்த ஒரு உயிரினத்துக்கும் இயற்கையாகவே ஒரு ஆற்றல் பிறவியிலேயே அமைந்துள்ளது. சிந்தனை என்கிற ஒப்பிடமுடியாத ஆற்றலை மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபடுத்தி, மனிதனுக்கு அமைந்திருப்பதும் இயற்கையின் அற்புதமான படைப்புகளில் ஒன்று என்று கூறலாம். சாதாரண மனிதர்கள், அதை நெறிமுறைப்படுத்தும் போதுதான் “மாமனிதர்கள்” என்ற பட்டத்தோடு மற்றவரிடமிருந்து வேறுபடுகிறார்கள். இத்தகய வியத்தகு ஆற்றலைப் பெற முயற்ச்சிக்கும் போது, கடவுளின் அருளும் துணை நின்றால் எவ்வளவு பொருத்தமாக இருக்கும் என்பதை மஹாகவியின் சிந்தனையின் மூலமாக அறிந்து கொள்ளமுடியும்.

     

    மஹாகவி பாரதியின்  வாழ்க்கை வரலாற்றை அலசிப் பார்த்தோமானால், அவர் தன் மனது ஒரு நிலையில் இல்லாதபோது, அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து சற்று நேரம் தியானித்த பின்பு சிந்தனையில் உதித்ததை உடனே ஒரு பேப்பரில் எழுதி விடுவாராம். அப்போது அவர் மனக்கண் முன்னே மாயக்கண்ணனே வந்துதிப்பானாம். மற்ற தோழர்களோடு, மாயக்கண்ணனையும் தன் நெருங்கிய தோழனாகக் கொண்டு, மனதால் நலிவுற்ற நண்பர்களுக்கு தமது பாடல்கள் மூலம், வலிமை சேர்க்கிறார். “கண்ணன் என் தோழன்” என்ற பாடலில்…. ஊனை வருந்திடு நோய் வரும் போதினில், உற்ற மருந்து சொல்வான், நெஞ்சம் ஈனக்கவலைகளைய்திடும் போதில் இதஞ்சொல்லி மாற்றிடுவான் பிழக்கும் வழி சொல்ல வேண்டுமென்றாலொரு, பேச்சினிலே சொல்வான், உழைக்கும் வழி வினையாளும் வழிபயன் உண்ணும்வழியுரைப்பான்……..என்று நமது மனம் எப்போதெல்லாம் சஞ்சலப்படுகிறதோ, அப்போதெல்லாம் மனதுக்கு இதமளிக்கின்ற செவிக்கும் சிந்தனைக்கும் விருந்தாக அமைந்த ஒரு பாடல் இது. மனம் ஒரு நிலையில் இல்லாதபோது, எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும், திண்ணிய நெஞ்சம் வேண்டும், தெளிந்த நல்லறிவு வேண்டும், பண்ணிய பாவம் எல்லாம் பரிதி முன் பனியே போல, நண்ணிய நின்முன் இங்கு நசித்திடல் வேண்டும் அன்னையே! என்றவாறு மனதில் நல்லெண்ணம் தோன்றிட மகாசக்தியை தியானிப்பது நமக்கும் நலம் பயக்கும் அல்லவா!…

     

    ஒரு நூற்றாண்டு கால கனவுக்குப் பின் தற்போதுதான்  ‘நாசா’ (NASA) விஞ்ஞானிகளுக்கு தங்கள் கனவு நனவாகியிருக்கிறது. சமீபத்தில் செவ்வாய்க் கிரகத்துக்கு ‘கியூரியாசிட்டி’ (CURIOUSITY) என்கிற செயற்கைக்கோள் விண்கலம் சென்றிறங்கியது விஞ்ஞான முன்னேற்றத்துக்கு மேலும் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. பலகோடி மைல்களுக்கு அப்பால் பயணிக்கின்ற விண்கலத்தைக் தனது கட்டுக்குள் வைப்பது மனிதன். விண்கலத்தின் அத்துணை செயல்களையும் தனது கட்டளைகளாலும் சமிஞ்கைகளாலும் கட்டுப்படுத்தும் மனிதனுக்கு தன்னுடைய மனதைக் கட்டுப்படுத்துவது பெறும் சவாலகவே உள்ளது என்பதை வியந்து தெரிவித்திருந்தார்கள். மனத்த்தையும், மனநலத்தையும் பேணிக்காப்பதின் மூலம், தன்னம்பிக்கையோடு சுய ஆற்றலை வெளிக்கொணர முடியும் இவர்கள் கூற்று. முனிவர்களாலும், ரிஷிகளாலும் மட்டும்தான் மனதைக் கட்டுப்படுத்த முடியும், இதெல்லாம் நம்மைப் போன்ற சாமான்ய மனிதர்களால் முடியாது என்று ஒதுக்கி விடாமல் முயற்சித்தால் தெளிவான சிந்தனையை உறுதியாக அடையமுடியும் என்பதை நமது முன்னோர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நம்மை உணரச்செய்திருக்கிறார்கள்.

     

    மாமுனிகளும், சித்தர்களும், ஞானிகளும் தம்மை நாடி வருபவர்களுக்கு ஆசிர்வாதம் செய்வதைப் பார்க்கிறோம். சிரசைத் தொட்டு தங்களது பிராண சக்தியை பாதிக்கப்பட்டவர்கள் உடலில் செலுத்தும்போது ஆச்சர்யப்படும் வகையில் சில நோய்கள் பறந்தோடிவிடுவதாகப் படித்திருக்கிறோம். இது எவ்வாறு சாத்தியமாகிறது என்று சிந்தித்தோமானால், அவர்கள் தங்கள் மனதைத் தூய்மையாக வைத்திருந்து, ஒருநிலைப்படுத்தி, உயரிய சிந்தனையாலும், திண்மையான எண்ணத்தாலும் சேகரித்து வைத்துள்ள இத்தகய சக்தியை தக்க சமயங்களில் வேண்டுமென்னும்போது பயன் படுத்துவதால் வியத்தகு சாதனைகளைப் புரிய முடிந்ததை இதிகாசங்களில் படித்தாலும் பலர் இதை நம்ப மறுப்பதைக் காண்கிறோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இதே செய்முறையை சற்று வித்தியாசமாக “பிரானிக் ஹீலிங்” (Pranic Healing) என்று ஆங்கிலத்திலே பெயரிட்டு அற்புதங்களை நிகழ்த்துவதை நாம் அனுபவித்து உணரும்போது அதை எளிதாக நம்பி விடுகிறோம். இது எல்லாமே மனதோடு சம்பந்தப் பட்டது. இவை எல்லாவற்றிற்கும் மனது தான் மூலக்காரணம். மனம் தூய்மையாயிருந்தால் மட்டுமே இத்தகய சக்திகளைப் பெற்று பிறருக்கு உதவ முடியும். மனதில் எழுகின்ற அளவுக்கு மீறிய கோபம், காழ்ப்புணர்ச்சி, பந்த பாசம் இணக்கம் போன்றவை கூட நமது உடல் நலத்தைப் பாதிக்கிறது என்பதுதான் மனநல மருத்துவ மேதைகளால் சொல்லக்கூடிய முக்கிய காரணங்களாகும். மனதைப் பக்குவப்படுத்தி விட்டால் சவால் மிகுந்த உலகத்தில் வெற்றிபெற முடியும் என்பதை இன்று செயல்படும் யோக மையங்கள் தனது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால் எல்லாவற்றுக்கும் ஆதாரமான மனோசக்தியைப் பெறுவது எளிதல்ல என்பது யாவரும் அறிந்ததே.

     

    தற்போது மனநல மேம்பாட்டிற்காக பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பாரத நாட்டின் பண்பாட்டிற்கு ஏற்றபடி யோகா, தியானம், ஆழ்நிலை தியானம் போன்றவை இன்றும் உலகெங்கிலும் நமது சிறப்பை எடுத்துக்காட்டுகின்றன. எண்ணற்ற ஒழுக்க சீலர்கள் இன்றும் நம்நாட்டிற்கு மட்டுமல்லாமல் உலகிற்கே வழிகாட்டியாக அமைந்திருப்பதை இன்று நடைமுறையில் நாம் கண்கூடாகப் பார்த்துவருகிறோம். மனதை உயர்ந்ததாக வைத்துக்கொண்டால் இலட்சியம் உயர்ந்ததாக அமையும். ஒருவரது வாழ்க்கை எவ்வாறு அமையுமென்றால் அவரது மனதைப் பொருத்தே அமையும். மனம் மகிழ்ச்சியோடு இருக்கும் போதுதான் வாழ்த்துகளும் பாராட்டுகின்ற மனமும் வரும். பண்டிகைக் காலத்தில், சிலரிடம் வாழ்த்து வாங்க எத்தனிக்கிறோம். சிலரிடம் ‘இவர் நல்ல உள்ளம் கொண்டவரல்ல’ என்று சொல்லி விலகிவிடுகிறோம். ஒருவரது மனதைப் பொருத்தே ‘நல்லவர்’, ‘கெட்டவர்’ என்ற பாகுபாடு ஏற்படுகிறது. எல்லாவற்றிற்கும் அடிப்படையாக அமைவது உளப்பாங்குதான் என்பதை இராமாயணத்தில் இராவணனின் மனநிலையும், விபீஷணனின் மனநிலையும், தருமரின் மனநிலை, துரியோதனன் மற்றும் திருதராட்டினனின் மனநிலையைக் கருத்தில் கொண்டு எளிதாக யூகிக்க முடியும்.

     

    மஹாகவியைப் போலவே  கண்ணன்மீது பேரன்புகொண்ட இன்னொருவர், 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆச்சார்யர்களில் ஒருவரான ஸ்ரீகிருஷ்ணபாதர். இவருக்கு இன்னொரு பெயர் பெரியவாச்சான் பிள்ளை. ஆழ்வார் பாசுரங்களுக்குள் நுழைந்து ஆழமாக சிந்தித்து உரை எழுதியவர். வியாக்கியானத்தில் வல்லவர். இவருடைய வியாக்கியானத்தில் மனிதப் பிறவியின் சிறப்பை விளக்கியிருக்கிறார். மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்றால், தூய்மையான மனம், தெளிவான சிந்தனை, நேர்மறை எண்ணங்கள் இவை மூன்றும் ஒன்று சேரவேண்டும், அது மனிதனை உன்னதமான உயர்நிலைக்கு எடுத்துச் செல்லும் என்பதை பின்வரும் பாடல் மூலம் அர்த்தம் கொள்ளலாம். ஐந்தறிவு ஜீவிகளிலிருந்து மேம்பட்டு மனிதராக வேண்டுமெனில், சேவை மனப்பான்மையோடு எப்படி நமது மனதைப் பக்குவப்படுத்த வேண்டுமென்பதை மூன்று நிலைகளில் எடுத்துச் சொல்லுகிறார்.

     

    பிறரை இம்சித்துத் தன் வயிற்றை

    வளர்க்க வேணும் என்றிருக்குமவன்  அதமன்,

    பிறரும் ஜீவிக்க வேனும், நாமும் ஜீவிக்க

    வேணும்  என்றிருக்குமவன் மத்தியமன்

    தன்னை அழிய மாறியாகிலும் பிறர்  ஜீவிக்க

    வேனும்  என்னுமவர் உத்தமன்.

     
    சிறிய மற்றும் பெரிய பல்சக்கரங்களை ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்தி கடிகாரத்தை இயங்கச்செய்யும் மின்சக்தியைப் போல, எந்தப் பொருளையும் கண்ணால் பார்த்து களிப்படைவதும், வாயால் தின்பண்டங்களைச் சுவைத்து மகிழ்வதும், மூக்கால் வாசனை நுகர்ந்து முகம் மலர்வதும், மெய்யால் உற்றறிதலும், காதால் நன்னெறிகளைக் கேட்டலும் சரிவர நடைபெற வேண்டுமானால் “நமது உள்ளம்” அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே நாம் அனைவரும் கண்டுணரும் உண்மை.

    தொடரும்

    படத்திற்கு நன்றி :

    http://www.successories.com/categories/Motivational-Posters/14/1

     

    Share
  • தொல்லை காட்சி- லிட்டில் மாஸ்டர்ஸ்- சூப்பர் சிங்கர்- பள்ளிக்கூடம்

     

    மோகன் குமார்
     
    சூப்பர் சிங்கர் அடுத்த சீசன்

    ஒரு நிகழ்ச்சியை எப்படி பிரபலப்படுத்துவது என்று  விஜய் டிவியிடம் தான் கத்துக்கணும். சூப்பர் சிங்கர் ஜூனியர்  முடிந்து சிறு இடைவெளிக்கு  பின் சூப்பர் சிங்கர் சீனியர் துவங்க உள்ளது. இதற்கான ப்ரோமோ மிகவும் கவரும் வண்ணம் செய்துள்ளனர். சென்ற முறை பைனல் வரை சென்ற சந்தோஷ் சாய்சரண் உள்ளிட்டோர் இன்று திரை துறையில் பிரபலமாகி விட்டனர் என்பதை காட்டும் வண்ணம் அவர்கள் நால்வரும் பாடிய திரை பாடலை காட்டி, அது என்ன படம் என்று டைட்டிலும் போட்டு காட்டும் போது இசையில் ஈடுபாடு கொண்டோருக்கு நாமும் பைனல் வந்தால், பின்னணி பாடகராகி விடலாம் என்று ஈர்ப்பு வருவது இயற்கை தானே ! இந்த விளம்பரத்தை சாய் சரண் பாடிய பாடலின் வரியான ” நண்பா வா நண்பா ” என்று பாடி அடுத்த் சீசனுக்கு அப்ளிகேஷன் அனுப்புங்கள் என்று முடிப்பது ரசிக்கும் படி இருக்கு.

    முக நூல் கைது பற்றிய விவாதம்

    சன் செய்திகளில் முகநூலில்  பால் தாக்கரே பற்றி எழுதி  சிறைக்கு சென்ற இரு பெண்கள்  பற்றிய விவாதம் நடந்தது. அதில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ” லைக் பட்டனை அமுக்கியவர்களை கூட சிறையில் போடுவது சரியா? நூறு பேர் லைக் போட்டால், அந்த நூறு பேரையும் சிறையில் வைக்க முடியுமா?” என்று கேட்டார். அதற்கு பதில் சொன்ன வழக்கறிஞர், ” நூறு பேர் சட்ட மீறலான ஒரு முக நூல் செய்தியை லைக் செய்தால், அதனை சைபர் terrorism என கருதி அந்த நூறு பேரையும் கைது செய்ய முடியும் என்றார்.

    எப்படியெல்லாம் மிரட்டுறாங்கப்பா !

    அவசர சிகிச்சை  
     
    ஜெயா டிவியில் சனி காலை ஒன்பது மணி அளவில் அறுவை சிகிச்சையை நேரடியே காட்டுகிறார்கள். சதை பிய்த்து ரத்தம் தெரிகிற நிகழ்ச்சி பார்க்க சற்று பயமாய் தான் இருக்கிறது. ஆனால் எனக்கு தெரிந்த சிலர் இந்த நிகழ்ச்சி விடாமல் பார்க்கிறார்கள். “எந்தெந்த ஆப்பரேஷன் எப்படி செய்கிறார்கள்; என்ன காம்ப்ளிகேஷன் வரலாம்; எப்படி தவிர்க்கணும்” என்ற விஷயங்கள் தெரியும் என்கிறார்கள் அவர்கள். உங்களுக்கு தைரியமான மனது இருந்தால் இந்த நிகழ்ச்சி பாருங்கள். நிச்சயம் மருத்துவ துறையில் பல விஷயம் அறியலாம் !

    பிளாஷ்பேக்: பெண் – சீரியல்

    டிவிகளில் முதலில் சீரியல்  வர ஆரம்பித்த போது வாரம்  ஒன்று என்கிற அளவில் தான் வர ஆரம்பித்தது. ஒவ்வொரு  வாரமும் அரை மணிக்கு  ஒரு சீரியல் இருக்கும். அதே நாள் அடுத்த வாரம்  அதன் கதை தொடரும்.

     

    பல்வேறு நடிகைகள் இயக்கிய சீரியல் பெண். ஒவ்வொரு எபிசோடும் ஒவ்வொரு  ஹீரோயின் இயக்கினார். அந்த வகையில் சுகாசினி, ரேவதி, ரோகினி போன்றோருக்கு இது தான் இயக்கத்தின் முதல் படி என்று சொல்லணும். இதில் வந்த சில சிறுகதைகள் மிக அருமையாய் இருந்தது. சுஜாதா கதைகளும் இரண்டோ மூன்றோ வந்த நினைவு..

    டிவியில் பார்த்த  படம்: பள்ளிக்கூடம்

    சற்று மெலோ டிராமாவான  படங்கள் தான் அதிகம் எடுக்கிறார்  என்ற குற்றச்சாட்டு உண்மையாக இருந்தாலும், தங்கர் பச்சான் இயக்கிய படங்களில் அழகி, சொல்ல மறந்த கதை மற்றும் பள்ளிக்கூடம் ஆகிய மூன்றுமே எனக்கு பிடித்த படங்கள். சமீபத்தில் சன் டிவியில் பள்ளிக்கூடம் படம் மீண்டும் பார்த்தேன்.

    நாம் படித்த பள்ளிக்கு  ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்கிற கான்செப்ட் உண்மையில்  மிக அருமையான ஒன்று. படம் பார்த்து முடிக்கும் போது நமக்கும் நம் பள்ளியை பார்க்கவும், அந்த பள்ளிக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்றும் தோன்றுகிறது. ஆனால் எத்தனை பேர் அதனை அடுத்த கட்டத்துக்கு எடுத்து போகிறோம் என்பது கேள்விக்குறியே.

    தங்கர் படங்களில் நடிப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டு, பிற நடிகர்களை வைத்து இந்த மண்ணின் கதைகளை தொடர்ந்து இயக்க வேண்டும் என்பதே நம் விருப்பம்.

     
    லிட்டில் மாஸ்டர்ஸ்  
     
    ஜெயா டிவியில் நடக்கும் டான்ஸ் ஷோ- லிட்டில் மாஸ்டர்ஸ். நடன இயக்குனர் ரகுராம் மற்றும் நடிகை மும்தாஜ் தான் ஜட்ஜ்கள். இவர்களோடு பிரிதிவிராஜ் வேறு. நாங்கள் பார்த்த எபிசோடில் அவர் devil மாதிரி வேஷத்தில் வந்து மிரட்டினார். பிரிதிவிராஜை சாதரணமா பார்த்தாலே சற்று பயமாய் தான் இருக்கும் இதில் devil வேஷத்தில் கேட்கவே வேணாம் !
     
    இந்த நிகழ்ச்சியில் நிஜமா ஏழு அல்லது எட்டு வயது குட்டி பசங்க தான் ஆடுறாங்க (விஜய்யில் -பதிமூணு பதினாலு வரை ஜூனியர் என்பார்கள் ). ஜட்ஜ்கள் மார்க் போடாமல் சூப்பர், சுப்ரீம், சுமார் என்று கிரேட் சொல்றாங்க  
     
    பசங்க என்னவோ நல்லா தான் ஆடுறாங்க. ஆனா ஏனோ நிகழ்ச்சி தான் விஜய் டிவி ப்ரோகிராம்கள் அளவு பாப்புலர் ஆகலை.

     

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் … (33)

     

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    காலவேகத்தின் பரிணாம மாற்றம் நாகரீகம் எனும் போர்வையில் உச்சத்தை எட்டிப்பிடிக்கின்ற ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    நாகரீகம் எனும் சொல்லின் அர்த்தத்தை ஒவ்வொரு சமுதாயமும் தனக்குப் பிடித்த  வகையில் மாற்றியமைத்து தமது கண்மூடித்தனமான நடத்தைகளை நாகரீக வளர்ச்சி என்று நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு காலம் இது.

    ஒரு காலத்தின் நடைமுறை மற்றொரு காலத்திற்கு ஒவ்வாத நிலமை ஏற்படுவது சகஜம். காலத்திற்கேற்ப சில சில விடயங்களில் மனிதர்கள் தமது வாழ்க்கைமுறையை மாற்றியமைத்துக் கொள்ள‌ வேண்டிய தேவை இல்லாமல் இல்லை.

    ஆனால் கால மாற்றத்தினால் மாற்ற‌ப்படமுடியாத, மாற்ற‌ப்படக் கூடாத விடயங்கள் பலவுண்டு. குடும்ப உறவுமுறைகள், கலாச்சார விழுமியத்தின் அடையாளங்கள், திருமணம் போன்ற பந்தங்களின் முக்கியத்துவம், குடும்ப அமைப்புமுறை என்பன இவற்றுள் அடங்குவது யதார்த்தமானது.

    ஆனால் இந்த நூற்றாண்டிலே தனிமனித சுதந்திரம் எனும் போர்வையில் பல மனித வாழ்வின் அடிப்படைக் கலாச்சாரங்கள் கேள்விக்குறியாக்கப்படுகின்றன. குறிப்பாக திருமண வாழ்வின் முறிவுகள் மிகவும் சகஜமாகிப் போய்விட்டனவோ என்றொரு ஆதங்கம் மனதில் எழாமல் இல்லை.

    திருமணம் எனும் பந்தத்தில் புகுந்து விட்டோம் எனும் காரணத்தினால் தம்மீது கண்மூடித்தனமாக இழைக்கப்படும் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டிருக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பு தவறானதே. இப்பந்தத்தை முறிப்பது சுலபமல்ல எனும் காரணத்தினால் தமது உறவு கொடுக்கும் அதிகாரத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு கொடுமைகள் புரியும் ஆணிடமிருந்தோ அன்றிப் பெண்ணிடமிருந்தோ பிரிந்து செல்வதைத் தவறென்று வாதிடுவது என் நோக்கமல்ல.

    ஆனால் தனிமனித சுதந்திரத்தின் அர்தத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் விட்டுக் கொடுக்கும் மன்ப்பான்மையை அறவே மறந்து சட்டத்தின் துணை கொண்டு மணவாழ்வை அவசரமாக முறித்துக் கொள்ளும் பலரை அனுபவரீதியாகப் பார்த்துள்ளேன்.

    என்ன எங்கே செல்கிறது இந்த கருத்தாடல் ? என்று எண்ணுகிறீர்களா?

    இந்த வாரம் இங்கிலாந்து மகாராணியார் இரண்டாவது எலிசபேத் அவர்கள் தமது 65வது திருமணநாளை மிகவும் அமைதியாகக் கொண்டாடியுள்ளதை நினைத்துப் பார்க்கையில் அவரது அந்த வாழ்க்கையின் வெற்றி மனதில் ஏற்படுத்திய தாக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே மேலே அலசியவை.

    திருமண வாழ்வு என்பது ஒரு ஆணுக்கும் , பெண்ணுக்கும் இடையில் நிகழும் ஒரு ஆயிரங்காலத்து பந்தம் என்பதே எமது ஆன்றோர்கள் எமக்கு போதித்த அனுபவக் கல்வி ( ஓ இப்போது ஆணுக்கும், ஆணுக்கும் அன்றி பெண்ணுக்கும், பெண்ணுக்கும் இடையில் கூட இப்பந்தம் ஏற்படுத்தப்படுகிறதே ! ஓ இதுதான் நாகரீக முன்னேற்றமோ ?)

    இம்மணவாழ்க்கை வெற்றியடையவதற்கு பல காரண்ங்கள் கைகொடுக்கின்றன. ஆனால் அவற்றில் முக்கியமானது  பரஸ்பரம் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மன்ப்பான்மையேயாகும்.

    இந்த 65 வருட கால மண்வாழ்க்கையில் எலிசபேத் மகாராணியாரும் அவரது கணவரான பிரின்ஸ் பிலிப் அவர்களும் ஒருவருக்கொருவர் எத்தகைய விட்டுக் கொடுப்புகளை செய்திருப்பார்கள் என்று எண்ணும் போது மெய்சிலிர்க்கிறது.

    எனது தந்தை இவ்வுலக வாழ்க்கையை நிறைவு செய்த போது எனது பெற்றோர் மண்வாழ்க்கையில் 54 வருடங்களைப் பூர்த்தி செய்திருந்தார்கள். தந்தை மறைந்து சரியாக ஆறு வாரங்களில் எனது அன்னையும் அவருடன் இணைந்து கொண்டார்.

    அவர்களது மணவாழ்வின் 54 வருடங்களும் அமைதியாக நடந்தது என்று சொன்னால் அது உண்மையாகாது. அவர்களுடைய மண்வாழ்வினிலே பல சமயங்களில் புயல் வீசத்தான் செய்தது ஆனால் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த நம்பிக்கையும், திருமண்ம் எனும் பந்தத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையுமே அவர்களுக்கு கைகொடுத்தது என்பதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

    எனது பெற்றோர்கள் சாதாரணமானவர்களே ! அவர்கள் மீது சமூகம் கொடுத்த எதிர்பார்ப்புகளினால் ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்கள் என்று பெரிய அள்வில் எதுவும் இருக்கவில்லை.

    ஆனால் இங்கிலாந்து மகாராணியாரும், அவரது கணவரும் ஒரு நாட்டின் மதிப்பிற்கும், மரியாதைக்குமுரிய கெள்ரவ பிரஜைகள் ஆவார்கள். அவர்களது நாட்டு மக்களின் பார்வையில்  உதாரணப் புருஷர்களாக வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாக்கப்பட்ட்ட ஒரு நிலையில் அவர்கள் வாழ்கிறார்கள்.

    அவர்களது அந்த வாழ்க்கையில் அவர்கள் 65 வருட காலம் மணவாழ்வில் நிலைத்திருப்பது என்பது ஒரு சாதனையான விடயம் என்றே சொல்ல வேண்டும்.

    இங்கிலாந்து மகாராணியார் இளவரசியாக இருந்த போது தனது கணவர் பிலிப் அவர்களை முதன் முதலில் 1934ம் ஆண்டும் பின்னர் 1937ம் ஆண்டும் சந்தித்தார். தனக்கு 13 வயதாக இருக்கும் போதே பிலிப் மீது தனக்குக் காதல் ஏற்பட்டதெனச் சொல்கிறார்.

    அபோதைய இங்கிலாந்து மன்னரான ஜார்ஜ் அவர்களுக்கு பிலிப் தனது மருமகனாக வருவதில் மகிழ்ச்சி இல்லாதிருந்ததாம். காரணம் அவர் பெயரளவில் இளவச‌ராக இருந்து அவருக்கென ஒரு அரசோ அன்றி நாட்டின் தலைமைப்பதவியோ கிடையாது என்பதுவேயாகுமாம்.

    பிபில் அவர்களின் தந்தை கிரேக்க நாட்டு இளவரசர்களில் ஒருவரான அன்ட்ரூவிற்கும், விக்டோரியா  மகாராணியாரின் மகள் வழி வந்த பேரப்பிள்ளையான இளவரசி லூயி அவர்களுக்கும் பிறந்த மகனாவார்.

    இளவயதினிலே பாரிசில் கல்வி பயின்ற பிலிப் அவர்கள் மிகவும் திறமையாக பிரெஞ்சு, ஆங்கிலம், ஜேர்மனி ஆகிய மொழிக்ளைப் பேசும் திறமை பெற்றவராவார்.

    இங்கிலாந்து பட்டத்து இளவரசியான இரண்டாவது எலிசபெத் அவர்கள் பிரின்ஸ் பிலிப் அவர்களை 1947ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி லண்ட்னில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபே தேவாலயத்தில் மணமுடித்தார்,. திருமணத்திற்கு முன்னதாக பிலிப் அவர்கள் தனது கிரேக்க மதத் தழுவலை நிராகரித்து ஆங்கில கிறித்துவ மதத்தைத் தழுவிக் கொண்டார். இவருக்கு இங்கிலாந்தின் இளவரசர் எனும் பட்டத்தையும், டியூக் ஆப் எடின்பரோ எனும் பட்டத்தையும் அப்போதைய இங்கிலாந்து மன்னரான 5ம் ஜார்ஜ் மன்னர் அளித்துக் கெளரவித்தார்.

    நோயினால் பாதிக்கப்பட்ட ஜார்ஜ் மன்னர் 1952ம் ஆண்டு பெப்ரவரி மாதம் மரணமடைய இங்கிலாந்தின் இரண்டாவது எல்சபேத் மகாராணியாராக இங்கிலாந்தின் இளவரசி முடிசூடினார்.

    தனது பட்டத்து அரசியான வாழ்விலே பல மாற்றங்களைச் சந்தித்தும் அவையனைத்தும் தனது மண்வாழ்வில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படாத வகையில் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.

    அவருக்குத் துணையாகத் தானும் எந்தவித சர்ச்சைகளுக்குள்ளும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் பிரின்ஸ் பிலிப் அவர்களும் மகாராணியாருக்கு ஏற்ற கணவராக தனது வாழ்வை மேற்கொண்டார்.

    இவர்களின் மூத்த மக்னான இளவரசர் சார்லசின் மணவாழ்க்கை முறிவடைந்து அவர் இளவரசி டயானவை விவாகரத்துச் செய்தார், இரண்டாவது மக்னான இளவரசர் அன்ட்ரூ தனது மனைவியை விவாகரத்துச் செய்தார்.

    இளவரசி டயானா மரணமானார். இளவரசர் சார்ல்ஸ் அவர்கள் தனது பதின்ம வயதுக் காதலியை மறுமணம் செய்தார்.

    இப்படியான பல பாதிக்கக்கூடிய விடயங்கள் அனைத்துக்கும் முகம் கொடுத்து இங்கிலாந்து ராணி எனும் தனது பதவிக்கு எவ்வித களங்கமும் ஏற்படாத வகையில் தனது பிரத்தியேக வாழ்க்கையை செப்பனிட்டு அனைவருக்கும் முன்னுதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கும் இத்தம்பதியரின் மணவாழ்க்கை நிச்சயமாக ஒரு சாதனையே.

    ஒரு வியாபாரம் செழிக்க வேண்டுமானால் அவ்வியாபாரத்தின் விஸ்தரிப்புக்காக எமது உழைப்பை அர்ப்பணிப்பதைப் போல திருமண வாழ்க்கையின் வெற்றிக்காக எமது பண்புகளை மேம்படுத்தி வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்பதை இவர்களது வாழ்க்கையில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

    “ஒரு மனிதன் விழாமலே வாழ்வது பெருமையல்ல‌
      ஒவ்வொருமுறை விழுந்த போதும் எழுந்தான் என்பதுவே பெருமை “

    அடுத்த மடலில் சந்திக்கும் வரை

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்
     

     

     

    Share
  • அணுமின் சக்தி இயக்கச் சாதனங்களின் அனுதினக் கண்காணிப்பும், அபாயப் பாதுகாப்பும்

     

     

                                                                                                                      கட்டுரை –3

                                                                         சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


     

    பரிதியின் ஒளிக்கதிர் மின்சக்தியாய்ப்
    பயன்படும் பகலில்
    பல்லாண்டு !
    ஓயாத கடல் அலைகளின்
    அசுர அடிப்பில்
    அளவற்ற மின்சக்தி உள்ளது !
    காற்றுள்ள போது விசிறிகள் சுழன்று
    மேட்டில் கிடைக்கும் மின்சக்தி !
    மாட்டுச் சாணி வாயு
    வீட்டு மின்சக்தி ஆக்கும் !
    நிலக்கரி மூலம்
    நிரம்ப மின்சக்தி பெறலாம்,
    கரியமில வாயு வோடு !
    அந்த முறைகள் யாவும் ஓர்
    அளவுக் குட்பட்டவை !
    சிக்கன மானவை சில !
    செலவு மிக்கவை சில !
    சிறியவை சில !
    பேரளவு மின்சக்தி படைக்க
    நுணுக்கமான
    அணுப் பிளவுச் சக்தி தேவை.
    கதிரியக்கம் இல்லா
    அணுப் பிணைவுச் சக்தி தேவை.
    அந்த சக்திக்கு
    எல்லை இல்லை !
    வரையறை ஏதுவு மில்லை !
    மின்சக்தி
    பற்றாக் குறையைத்
    தீர்க்க
    எரிசக்தி அனைத்தும் தேவை
    தரணிக்கு !

     ++++++++++++

     

     

    “அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடல் மட்ட அலைகளின் ஏற்ற இறக்கத்தில் உண்டாக்கும் சக்தியைக் கையாண்டு, பரிதிக் கதிரொளி வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி ஆக்குவோம்.”

    ஆக்கமேதை தாமஸ் ஆல்வா எடிஸன் (ஆகஸ்டு 22, 1921)

    “மின்சக்தி உற்பத்தி இல்லாமை போன்று செலவு மிக்க மின்சக்தி எதுவுமில்லை.”

    [No Power is so costly as no Power]

    டாக்டர் ஹோமி பாபா (1955 ஐக்கிய நாடுகளின் ஆக்கப்பயன்களின் அணுசக்திப் பேரவை ஜெனிவா)

    “அடுத்து வரும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக்குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன! இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக் கனலைப் பயன்படுத்தியும், அணுசக்தி வெப்பத்தை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும். இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும்.”

    முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம். (2003)


     

    Fig. 1

    Pressurized Water Reactor Systems

    முன்னுரை:   இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலே தமிழ்மக்கள் உள்பட உலக மாந்தர் அனைவருக்கும் நாகரீகமாக அனுதினமும் உயிர்வாழக் குடிநீரும், மின்சக்தியும் மிக மிகத் தேவை. 1950 ஆம் ஆண்டு முதல் 30 உலக நாடுகளில் 435 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள் நிலையம் ஆகிய இரண்டைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன. மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் ஆய்வுகள் நடத்திக் கொண்டு வருகின்றன. அதற்கு அடுத்தபடி அணுசக்தி இயக்கும் 220 கப்பல்களும், கடலடிக் கப்பல்களும் (Submarines) கடல் மீதும், கீழும் உலாவி வருகின்றன. ஈழத்தீவில் பாதிக்கும் குறைவாக அரை மாங்காய் போலிருக்கும் தென் கொரியாவில் 20 அணுமின் நிலையங்கள் 39% ஆற்றலைத் தயாரித்து மின்சாரம் அனுப்பி வருகின்றன. இந்தியாவின் அணு மின்சக்திப் பரிமாற்றப் பங்கு 2.6%;  இயங்கி வருபவை 20  அணுமின் நிலையங்கள் (2011).  இந்தியாவில் அனைத்து அணுசக்தி நிலையங்களைப் பாதுகாப்பாக இயக்கத் திறமையுள்ள, துணிவுள்ள நிபுணர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள்.

     

    இந்திய அணுசக்தி நிலையங்களின் மின்சார உற்பத்தித் திறனையும், இயக்க விபரங்களையும், புதிய நிலையங்களின் கட்டுமான வேலைகளையும், இந்திய அணுசக்திக் கார்ப்பொரேஷன் வலைத் தளத்தில் << www.npcil.nic.in >> விளக்கமாகக் காணலாம். 1957 ஆம் ஆண்டு முதல் கடந்த 50 வருடங்களாக ஆண்டுக்கு 250 விஞ்ஞானப் பொறியியற் துறைப் பட்டதாரிகள் வீதம் சுமார் 12,000 பேருக்கு மிகையாகப் பயிற்சிக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள். தற்போது அணுசக்தி நிலையங்களை டிசைன் செய்யவும், கட்டி முடிக்கவும், இயக்கி வரவும், அவற்றில் ஆராய்ச்சி செய்யவும் பட்டதாரிகள் பலர் இருக்கிறார்கள், இந்தியாவிலே விஞ்ஞானப் பொறியியற் பட்டதாரிகள் ஆயிரக் கணக்கில் பணிசெய்யும் ஓர் உயர்ந்த தொழில் நுட்பத் துறையாக அணுசக்தி நிர்வாகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பாரத நாட்டுப் பாதுகாப்புக்காக அணு ஆயுத உற்பத்தி, அணு ஆயுதச் சோதனை, அணு ஆயுத எரி உலோகச் சேமிப்பு [Nuclear Weapon Grade Materials] ஆகியவற்றை ரகசியமாக இந்திய அரசாங்கம் தன் நேரடிப் பார்வையில் கையாண்டு வருகிறது. ஆனால் மின்சாரம் பரிமாறி இயங்கி வரும் 20 அணுமின்சக்தி நிலையங்களின் அமைப்பிலோ, நிர்வாகத்திலோ இயக்கத்திலோ, மின்சாரப் பரிமாற்றத்திலோ எதிலும் அரசாங்க அதிகாரிகளின் குறுக்கீடு கிடையாது.

    இந்தக் கட்டுரையில் அணுமின்சக்தி நிலைய இயக்குநர்கள் எப்படி அனுதினமும் அணுமின் உலைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு, கண்காணிப்பு முறைகளைப் பின்பற்றி வருகிறார் என்பது விளக்கப் படுகிறது..

     

    Fig 1A

    Reactor Vessel Parts


    அணு மின்சக்தி உலை இயக்கத்துக்குத் தேவையான ஏற்பாடுகள்

    அணுமின்சக்தி நிலையத்தில் எத்தனை இயக்க ஏற்பாடுகள் உள்ளன ?  500 மெகா வாட் ஆற்றல் உற்பத்தி செய்வதற்கு நிலையத்தில் குறைந்தது 50 முதல் 80 வரையான அமைப்புகள் கொண்டதாக இருக்கும். அவற்றின் விபரங்களைக் காண்போம்: கீழ்க்காணும் ஏற்பாடுகள் யாவும் 500 மெகா வாட் அழுத்த நீர் அணுமின் நிலையம் [Pressurized Water Reactor (PWR)]  ஒன்றின் உதாரண அமைப்புகள் ஆகும்.

    1. அணு உலை, அழுத்த அணு உலைக் கலம் (Atomic Reactor & Reactor Pressure Vessel)

    அணு உலைக் கலன் நேராகவோ அல்லது மட்டத்திலோ (Vertical or Horizontal Vessel)  அமைக்கப் படலாம். நம் விளக்கத்துக்கு செங்குத்து உலைக்கலனை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அணு உலையில் உள்ள 300 மேற்பட்ட துளைகளில் யுரேனியம் டையாக்ஸைடு வில்லைகள் அடங்கிய எரிக்கோல்கள் [Fuel Rods with Uranium Dioxide Pellets] புகுத்தப் பட்டுள்ளன. உலைக்கலனில் எப்போதும் மிதவாக்கி நீர் மட்டம் (Moderator Water Level) எரிக்கோல்களை மூழ்க்கி யிருக்கும். யுரேனியத்தில் (U-235) நேரும் சுயப் பிளவுகளால் எழும் நியூட்ரான்கள், மேலும், மேலும் யுரேனியம் அணுக்கருவைப் பிளந்து, பிளவு ஒன்றுக்கு 200 மில்லியன் எலெக்டிரான்-வோல்ட் வெப்பசக்தி நீரில் தொடர்ந்து எழுகிறது. [200 Mev Energy per Fission]. அணு உலை இயங்கினாலும், இயங்கா விட்டாலும் எப்போதும் பிளவுத் துணுக்குகள் தேய்வதாலும் [Fission Product Decay Heat], சுயப்பிளவுக் கனலாலும் தொடர்ந்து வெப்பம் உண்டாகிய வண்ணமிருக்கும். உலைக்கலனில் அந்த வெப்பம் தணிக்கப்பட்டு நீரின் உஷ்ணம் ஒரே அளவில் சுயமாகக் கட்டுப்படுத்த வேண்டும்.

     

    Fig. 1B

    Nuclear Safety Analysis

    1. “நிறுத்த அணு உலை வெப்பத் தணிப்பு ஏற்பாடு” [Shutdow Cooling Water System] : அணு உலை நிறுத்தமான தருணத்தில் எழும் நீரின் வெப்பத்தை நீக்கிச் சீரான கனப்பில் வைத்திருக்கும் ஏற்பாடு இது, இந்த நீரோட்டச் சுற்றில் பம்புகளும், வெப்பக் கடத்தியும் [Pumps & Heat Exchangers] முக்கியமாக உள்ளன. இந்தச் சுற்றில் நீரோட்டத்தின் வேகமும், அழுத்தமும் மிதமானவை. [Low Flow & Low Pressure System]. இது தானாக இயங்குவது. இந்தச் சுற்று நீரோட்டத்தை முற்றிலும் இயக்குநர் நிறுத்த முடியாது.

    2.. அணு உலைக்குள்ளே உலைக்கலன் வெல்டிங் இணைப்புகளை உளவு செய்யும் போது “பராமரிப்பு தணிப்பு நீரோட்டச் சுற்று” [Maintenance Cooling Water System] இயக்கத்தில் கொண்டு வரப்படும்.

     

    இந்த நீரோட்டம் நிறுத்தமான அணு உலை பலநாட்கள் குளிர்ந்த பின்பு இயக்கப்படும். பராமரிப்பு வேலைகள் முடிந்த பிறகு, இந்த நீரோட்டம் நிறுத்தப்பட்டு மேலே கூறப்பட்டுள்ள முதல் தணிப்பு நீரோட்டம் இயங்கி விளையும் வெப்பத்தைச் சீராக வைக்கும்.

    3. அணு உலைப் பணிகள் யாவும் முடிந்து மின்சக்தி உற்பத்திக்குத் தயாராக உள்ள போது “பிரதம வெப்பத் தணிப்பு நீரோட்டம்” [Main or Primary Coolant System] அழுத்தமாக்கப் பட்டு மிக்க வேகமாக நீரை எரிக்கோல்கள் ஊடே செலுத்தும். அணு உலையில் கீழே இறக்கப்  பட்டுள்ள நியூட்ரான் விழுங்கிகளை மெதுவாக மேலே தூக்கும் போது மிதவேக நியூட்ரான் களின் எண்ணிக்கை பில்லியன் கணக்கில் பெருகி வெப்பசக்தி பன்மடங்கு ஏறுகிறது. பிரதம நீரோட்டத்தில் நான்கு அல்லது எட்டு பிரதம வெப்பக் கடத்திகளும் [Primary Heat Exchangers], நான்கு அல்லது எட்டு பூதப் பம்புகளும் [Primary Heat Transport Pumps], நீராவி உண்டாக்க இரண்டு கொதிகலன்களும் [Steam Boilers] இணைக்கப் பட்டுள்ளன.

     

     

    Fig 1C

    Steam Generator

    4. நிலையம் முழு ஆற்றலில் இயங்கி வரும் சமயத்தில் திடீரென அணு உலைச் சாதனங்களுக்கும், வெப்பத் தணிப்புப் பம்புகளுக்கும் மின்சாரப் பரிமாற்றம் நின்று போனால் நிலைய ஏற்பாடுகளில் கொந்தளிப்பு ஏற்பட்டு, ஆட்சி அரங்கில் [Control Room] சிவப்பு விளக்குகள் பல மின்னி எச்சரிக்கை மணிகள் அடிக்கும். அவ்விதம் ஏற்பாடுகள் தடுமாறும் போது, முதலில் மேலே காத்திருக்கும் நியூட்ரான் விழுங்கிகள் தானாக் கீழே இறங்கி அணு உலைச் சுயமாக நிறுத்தம் அடையும். பிரதம வெப்பத் தணிப்பு நீரோட்டத்தின் அழுத்தம் குறைந்து வேகமும் விரைவாகக் குன்றுகிறது. அப்போது அணுப்பிளவுகள் ஏற்பட்டு சூடான அணுப்பிளவுத் துணுக்குகளின் வெப்பம் தணிக்கப் படாவிட்டால் யுரேனியக் கோல்கள் கனல் எழுச்சியால் உருகிவிடும் ! இதுவே “நீரிழப்பு விபத்து” [Loss of Coolant Accident (LOCA)] என்று அஞ்சப்படுவது. 1979 இல் அமெரிக்காவின் திரிமைல் அணுமின் நிலையத்தில் அந்த “நீரிழப்பு விபத்து” நேர்ந்துதான் அணு உலையில் எரிக்கோல்கள் பெரும்பான்மையாக உருகி [Fuel Core Melting], மாபெரும் சுத்தீகரிப்பு, மீட்சி வேலைகள் மேற்கொள்ளப் பட்டன !

    அவ்வித “நீரிழப்பு விபத்தைத்” தவிர்க்க, நிறுத்தமடையும் அணு உலை எரிகோல்களின் வெப்பத்தைத் தணிக்க, “அபாய தணிப்பு நீர் பாய்ச்சல் ஏற்பாடு” [Emergency Coolant Injection System] அமைக்கப் பட்டிருக்கிறது.

     

     

    Fig. 1D

    Reactor Systems

    5. அணு உலையில் நியூட்ரான் பெருக்கம் விழுங்கிகளால் தடைபெற்று மீறும் தொடரியம் நிகழாதவாறு பாதுகாப்பு உண்டாக “அபாய நஞ்சுப் பாய்ச்சல் ஏற்பாடு” [Emergency Poison Injection System] இணைக்கப் படுகிறது. நியூட்ரான்களை விரைவாக விழுங்கும் கடோலினியம் அந்த திரவ நீரில் கலக்கப்பட்டிருக்கிறது. கனநீர் அணுமின் உலைகளில் [Indian Heavy Water Reactors] அது தேவையாகும் போது மிதவாக்கி நீரில் பாய்ச்சப் படுகிறது.

    அணு உலையை முற்றிலும் நிறுத்த “இரட்டைப் பாதுகாப்பு ஏற்பாடுகள்” இருக்கின்றன.

    a) நியூட்ரான்களை விழுங்கும் தடைக்கோல்கள் சட்டென அணு உலைக்குள் இறங்கும் ஏற்பாடு

    b) நியூட்ரான்களை விரைவாக விழுங்கும் “அபாய நஞ்சுப் பாய்ச்சல் ஏற்பாடு”

    6. தனித்தனியாக ஆட்சிக் கோல்களும், நிறுத்தக் கோல்களும் சுயமாக இயங்கும் மின்சாரக் கட்டுப்பாட்டு ஏற்பாடுகள் [Control Rods & Shut-off Rods Drive Systems]. உதாரணமாக ஆட்சிக் கோல்கள் அணு உலையில் 12 அல்லது 18 இருக்கலாம். நிறுத்தக் கோல்கள் 20 அல்லது 30 இருக்கலாம். நிறுத்தமான அணு உலையில் ஆட்சிக் கோல்களும், நிறுத்தக் கோல்களும் முழுவதும் கீழே இறக்கப்பட்டிருக்கும். அணு உலை இயங்க ஆரம்பிக்க முதலில் அனைத்து நிறுத்தக் கோல்களும் அணு உலைக்கு மேலே தூக்கப் படவேண்டும். ஆனால் மின்சக்தி ஆற்றலை மிகைப்படுத்த ஆட்சிக் கோல்கள் சீராக, முறையாக, மெதுவாக ஒவ்வொன்றாக மேலே தூக்கப் படவேண்டும்.

     

     

    Fig. 1E

    Primary Giant Pump Motor

    7. அணு உலைக்குள்ளே பல வெப்பக் கடத்திகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. வெப்பத்தை நீக்க முக்கியப் பிரதம வெப்பக் கடத்திகளில் “தனிமங்கள் அகற்றப்பட்ட தூய நீர்” அல்லது கடல் நீர் சில நிலையங்களில் பயன்படுகிறது. [Demineralised Water System or Sea Water Cooling System for Heat Exchangers]

    8. துவித நீரோட்ட ஏற்பாடு [Secondary Coolant Water System] என்பது கொதிகலனில் வெந்நீர் நீராவியாக மாறி டர்பைன் சுழலிகளைச் சுழற்றி, மின்சார ஜனனியில் மின்சாரம் உற்பத்தி செய்ய வசதி உண்டாக்குகிறது.

    9. டர்பைன் குளிர்ப்புக் கலனைத் தணிப்பு செய்யும் நீரோட்டம் [Condenser Cooling water System or Sea Water Cooling System for the Steam Condenser].

    10. அணு உலையில் எதிர்பாராது மனிதத் தவறோ அல்லது யந்திர சாதனப் பிசகோ நேர்ந்து எல்லா வித நீரோட்டமும் எரிக்கோல் வெப்பத் தணிப்புக்குத் தடைப்பட்டால், இறுதியாகத் “தீயணைப்பு நீரோட்ட ஏற்பாடு” [Emergency Fire Water System] அணு உலை எரிக்கோல்களை உருக விடாமல் செய்ய கடைசி முயற்சியாகக் கையாளப்படுகிறது.

     

    Fig. 2

    Reactor Internal Parts

    பொது அபாய மின்சாரத் தயாரிப்பு ஏற்பாடுகள்

    பொது நிலையத்துக்குப் பயன்படும் மின்சாரம் தடைப்படுமானால், அபாய நிலைத் தேவைக்குப் பயன்பட டீசன் எஞ்சின் இயக்கும் இரட்டை மின்சார ஜனனிகள் [Emergency Diesel Power System] அமைக்கப் பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று எப்போதும் மிதப்பு நிலையில் ஓடிக் கொண்டி ருக்கும். முதல் யூனிட் நின்றால் மற்றொன்று ஓடத் தயாராய் இருக்கும். மின்னல் இடி மழைச் சமயங்களில்

    நிலைய மின்சார ஆற்றல் தடைப்பட்டுப் போனால், ஓடிக்கொண்டிருக்கும் டீசல் ஜெனரேட்டர் மின்சாரம் நிறுத்தமான அணு உலைச் சாதனங்களுக்கும், கட்டுப்பாடு புரியும் சுற்றுக்களுக்கும் பரிமாறப்படும்.

     

    Fig. 3

    Primary & Secondary Coolant Systems

    (தொடரும்)

    ***********************

    தகவல்:

    1. http://www.npcil.nic.in/index.asp [Nuclear Power Corporation of India Ltd Website for Nuclear Power Updates]

    2. http://pib.nic.in/release/release.asp?relid=20878 [President Dr. Abdul Kalam Speech on Kudungulam (Sep 22, 2006)]

    3. http://www.stratmag.com/issue2Nov-15/page03.htm

    [Russia Breaches Nuclear Blockade against India By: C. Raja Mohan (Nov 16, 2001)]

    4. World Nuclear Association – WNA

    Radiological Protection Working Group – RPWG (Official List – July 20, 2006)

    http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm

    5. World Nuclear Association – WNA

    Waste Management and Decommissioning Working Group – WM&DWG (Official List – July 25, 2006)

    http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm

    6. http://www.candu.org/npcil.html [Indian Heavywater Nuclear Power Plants]

    7. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)

    8. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)

    9. http://www.thinnai.com/?module=displaystory&story_id=80708091&format=html Letter By R. Bala (August 9, 2007)

    10. http://www.wano.org.uk/WANO_Documents/What_is_Wano.asp [World Association of Nuclear Operation Website]

    11 IAEA Incident Reporting System Using Operational Experience to Improve Safety (IAEA Instruction)

     

    ******************

    S. Jayabarathan [jayabarat@tnt21.com] December 1, 2011  (Revised -1)

    ******************

    S. Jayabarathan [jayabarat@tnt21.com]  November 21, 2012 (R-1)

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 46 (19.11.12)

     

     மலர் சபா

    புகார்க்காண்டம் – 06. கடல் ஆடு காதை

     
     கடற்கரைப் பயணம்
     
     
    பகைவரை அச்சப்படவைக்கும்
    புகார் நகரதனில்
    முழுமதி நாள் அன்று
    வைகறையில் கடலாடிக் களிக்கவென
    இடம்பிடிக்க வேண்டுமென்று
    திரள்திரளாகச் சென்றது மக்கள்கூட்டம்.
     
     
    அவர்களைப் போலவே,
    தாழை புன்னை
    மடல் அவிழ்க்கும் சோலைகளில்
    தானும் கடல் விளையாட்டைக்
    காண வேண்டுமென்று
    கோவலனிடம் வேண்டினள் மாதவி.
     
     
    தாமரைப் பொய்கைகளில்
    துயிலாழ்ந்திருந்த பறவைகள் விழித்து
    வாய் விட்டுக் கூவ,
    பொழுது புலர்ந்தது என்று
    கோழிச்சேவல்கள் கூவி அறிவிக்க,
    சங்குகள் முழங்கிட
    விழித்தெழுந்த விடிவெள்ளி
    பூமி பரவிய இருளை நீக்கியது.
     
     
    அவ்வைகறைப் பொழுதினில்
    மாலையணிந்த மார்பன் கோவலனோடு
    பேரணிகலன்கள் அணிந்தவளாய்ப்
    புறப்பட்டனள் மாதவி கடலாடுதற்கென்று.
     
     
    மேகம் போன்ற
    வன்கையாளன் கோவலன்
    அத்திரி வாகனம் அதனிலும்,
    மான்விழி மாதவி
    மூடுவண்டி அதனிலும்
    ஏறிச் சென்றனர்
    கடற்கரைப் பயணமாய்.
     
    (அத்திரி – கோவேறுக்கழுதை)
     
     
    கோடி மதிப்புப்பெறும்
    விற்பனைக் குவியல்களாய்ப் பண்டங்கள்
    காணப்பெற்ற வணிகர் வீதியையும்,
    மாடங்கள் நிறைந்த
    பெரிய கடை வீதிகளையும்,
     
    மலர்கள் அணிசெய்த
    மாணிக்க விளக்குகளை ஏற்றி,
    மலர்களையும் அருகம்புல்லையும்
    விளக்குகள் மீது தூவி வழிபட்டிருந்து,
    வீதிகளின் இரு புறங்களிலும்
    தமது அணிகலன்கள் ஒலித்திட,
    திரிந்து சென்ற மங்கலத் தாசியர்
    கூட்டத்தைக் கடந்தே சென்றனர்
    கோவலனும் மாதவியும்.
     
     
    திருமகள் குடிகொண்டிருக்கும்
    பட்டினப்பாக்கம் கடந்து,
    கடல் வளப் பெருமையால்
    சிறந்து விளங்கும்
    மருவூர்ப்பாக்கம் கடந்து சென்றனர்
    தம் பயணத்தடங்களில்.
     
     
    பொருள் ஈட்டவென
    மரக்கலங்கள் செலுத்திக்
    கடல்கடந்து புலம்பெயர்ந்து வந்த
    வணிகர் கூட்டம் தங்கியிருக்கும்
    கூல வீதிதனில்,
    ‘இது இன்ன பொருள்’ என்று
    எழுதி அறிவிக்கப்பட்டிருந்த
    மாலைச்சேரிப் பகுதிகளையும்
    கடந்தே சென்று
    நெய்தல் நிலக் கடற்கரைச் சோலையை
    அடைந்திட்டனர்.
     
    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 111 – 133
     
    படத்துக்கு நன்றி:
    Share
  • தமிழார்வம் திரிகடுகம்: ராஜ தந்திரம்

     

    இன்னம்பூரான்

    தமிழார்வம்

    ராஜ தந்திரம்

     

    7. ராஜ தந்திரம்

    பகை முன்னர் வாழ்க்கை செயலும், தொகை நின்ற

    பெற்றத்துள் கோல் இன்றிச் சேறலும், முன் தன்னைக்

    காய்வானைக் கை வாங்கிக் கோடலும்,-இம் மூன்றும்

    சாவ உறுவான் தொழில். [4]

     

    7.1. தன் பகைவர் முன்னே செல்வத்துடன் வாழ்தலைச் செய்தலும்,  தொகுதியாக நின்ற, மாடுகளின் நடுவே,  கோல் இல்லாமல் செல்லுதலும்,  முன்னே (நின்று), தன்னை வருத்துபவனை, முன் விட்டு நீக்கி, பின் அவனை நட்புக் கொள்ளுதலும், ஆகிய இம் மூன்று செயல்களும் சாகவேண்டியவனுடைய, செய்கைகளாம்.

    7.2. அதாவது: பகைவர்களுக்கு எதிரில் செல்வங் காட்டினால் அவர்கள் அதற்குக் கேடு செய்ய முற்படுவார்கள். கோலில்லாது மாட்டு மந்தையிற் போனால் ஏதாவது ஒரு மாடு முட்டும். பகைவரோடு நட்புப் பாராட்டினால் கெடுதி உண்டாகும்.

    73. இந்த வெண்பா சாணக்யரின் அர்த்த சாஸ்திரம் போல பேசுகிறது, ராஜ தந்திர சூத்திரங்களை பகர்ந்து. பொறாமை, காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு போன்ற தீய குணங்களுக்கு, பகை தூபம் போடும். தன்னுடைய செல்வத்தை பகைவனுக்கு முன்னால் விரித்துக்காட்டுவது, அந்த தீய குணங்களுக்கு வித்திடுவது. இத்தாலிய சாணக்யராக கருதப்படும் மாக்கியவல்லி ராஜகுமாரனுக்கு அளிக்கும் அறிவுரை; உன் பகைவனின் தந்தையை கொன்றாலும், அவன் மனைவியையும், சொத்தையும் பறிக்காதே. அவன் மன்னிக்க மாட்டான். பழி தீர்க்க வழி தேடுவான்.  அந்த ராஜ தந்திரத்தின் அலை வரிசை வேறு. அதனுடைய நுட்பம் இந்த வெண்பாவின் துவக்கத்தில் உரைக்கப்படுகிறது.

    7.4. மந்தையும், மாடும், கோலும் என்ற உவமையும் ஒரு போர் யுக்தியே. அடக்கியாளும் தந்திரம். மாட்டு மந்தைக்குள் கோல் இல்லாமல் புகுவது, அபிமன்யு பத்மவியூகத்தில் புகுந்தது போல. பகை, புகையை போல் மண்டிக்கிடக்கும். உள்ளே கனல். அந்த மாதிரி தான் நேற்றைய விரோதியை இன்றைய நண்பனாக, ஆராயாமல் ஏற்றுக்கொள்வது. நல்லாதனார் ‘…சாவ உறுவான்…’ என்ற கொடுஞ்சொல்லை பயன் படுத்தியதற்குக் காரணம், இந்த மூன்று செயல்களும் நல்வழிக்கு ஒவ்வாதவை என்பதே.

    7.5.  மேலே கூறப்பட்டது,உரையையும், விருத்தியுரையும் தழுவி என்னால் எழுதப்பட்டது. அவற்றிலிருந்து சொற்கள் இரவல் வாங்கப்பட்டுள்ளுன. அந்த நூல்களை படிக்க உசாத்துணைக்கு செல்லவும். 

    (தொடரும்)

    இன்னம்பூரான்

    18 11 2012

     

    உசாத்துணை:

    திரிகடுகம்: மூலமும், உரையும்: http://noolaham.net/project/35/3423/3423.pdf

    தமிழ் இணையக் கல்விக்கழகம்

    திரிகடுகம்:மூலமும்,விருத்தியுரையும்: http://www.tamilvu.org/library/libindex.htm

    சித்திரத்துக்குநன்றி:http://1.bp.blogspot.com/-QCNpfDqoeHs/Thxav7Ol5sI/AAAAAAAAAEI/BqaOiy6TX5M/s1600/Sathish0312.jpg

    Share
  • தொல்லைகாட்சி- நீர்ப்பறவை- ஏ ஆர். ரகுமான் -விஜய் விளம்பரம்

    மோகன்குமார் –

     

    நீர்ப்பறவை சிறப்பு நிகழ்ச்சி :-

     

    பலரும் மிக எதிர்பார்ப்போடு இருக்கும் படம் : நீர்ப்பறவை. சமீபத்து பாடல்களில் மனதை பெரிதும் கவர்வது இப்பட பாடல்கள் தான் !  

    கலைஞரில் இப்படத்து பாடல்களை நிஜத்தில் பாடியவர்களே வந்து பாடிக்காட்ட,  பட காட்சிகளையும் சற்று காண்பித்தனர். கடலோர கவிதைகள் போல கடலை ஒட்டி நடக்கும் ஒரு காதல் கதையாகவே தோன்றுகிறது. கூடவே தந்தைக்கும் மகனுக்கும் உள்ள பாசமும், மீனவர் பிரச்னையும் கதையில் தொட்டு செல்ல கூடும். ஹீரோயின் சுனைனா செம அழகு. மீனுக்கு சிறு மீனுக்கு  பாடல் திரையாக்கம் லட்சக்கணக்கான சுனைனா ரசிகர்களுக்காக டெடிகேட் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது 🙂   

    ரகுநந்தன் இசையில், “பரபர பறவை” என்கிற அட்டாசமான பாட்டு பாடிய  இசை அமைப்பாளர் ஜி. வி.பிரகாஷ் குமார்    ” எல்லா மெட்டையும் கேட்டு விட்டு, இது தான் நிச்சயம் பெரிய ஹிட் ஆகும் என இந்த பாட்டை செலக்ட் செய்து பாடினேன் ” என்றார் சிரித்தவாறே.  

    விஜய் நடிக்கும் விளம்பரம்:-

    ஒரு நகைக்கடை விளம்பரத்தில் விஜய் நடிக்கிறார். முதல்முறை பார்த்த போது ரசித்தாலும், அடுத்தடுத்து பார்க்கையில் பல லாஜிக் மிஸ்டேக்ஸ் தான் கண்ணுக்கு தெரிகிறது. 

    விஜய் பெயர் வைக்கும் குழந்தை ஏற்கனவே காது குத்தப்பட்டு நன்கு வளர்ந்த பெண்ணாக இருக்கிறாள். காது குத்திய குழந்தைக்கு  இவ்ளோ நாள் பெயர் வைக்காமலா இருப்பார்கள் ? 

    பொது இடத்துக்கு என்னிக்கு விஜய் இப்படி கோட் போட்டுக்கிட்டு வந்தார் ? 

    இரண்டு பக்கமும் மக்கள் கூடி நின்று வாழ்த்த விஜய் ..எம் ஜி ஆரா என்ன ! 

     ரைட்டு விடுங்க ! 

    A.R. ரகுமான் சிறப்பு நிகழ்ச்சி :- 

    தீபாவளியன்று ஜெயா டிவி A.R. ரகுமான் பேட்டியை ஒளிபரப்பியது. பேட்டி எடுத்தது சின்மயி என்றாலும் பல முக்கிய கேள்விகளை நித்யஸ்ரீ உள்ளிட்டோர் ஏற்கனவே கேட்டு அதை வீடியோவில் ரகுமானுக்கு போட்டு காட்டினர். நித்யஸ்ரீ  “முன்பெல்லாம் கர்நாடக சங்கீத பாடல்கள் அடிப்படையில் பாட்டு வைப்பீர்களே இப்போது செய்வதே இல்லையே; பத்து படத்துக்கு ஒரு  முறையாவது அத்தகைய பாடல்கள் வைக்க கூடாதா”  என்றார். ரகுமான் பதில் சொல்லும்போது, கடந்த பத்து வருடத்தில் மக்கள் என்ன மாதிரி பாடல் எதிர்பார்க்கிறார்கள் என்பது மிக மாறி விட்டதாகவும், இத்தகைய பாடல்களை இயக்குனர்கள் அதிகம் ஆதரிப்பதில்லை என்றும் சொன்னார். பேட்டி முழுதும் ரகுமானின் humility  மிளிர்ந்தது. 

     

    நல்ல நிகழ்ச்சி – திருக்குறள் கதைகள் :-

     

    சித்திரம் டிவியில் வருகிறது திருக்குறள் கதைகள் . ஒரு திருக்குறள் அடிப்படையில் கார்ட்டூன் பாத்திரங்களை வைத்து  ஒவ்வொரு கதையும்  செய்துள்ளனர். ரொம்ப நல்ல கான்செப்ட். சிறுவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் கூட விரும்புகிற விதத்தில் உள்ளது நிகழ்ச்சி. வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள் ! 

    சிவகுமாரின் நேருக்கு நேர் :-

     

    தீபாவளி காலையிலேயே விஜய் டிவியில் சிவகுமாரின் நேருக்கு நேர் நிகழ்ச்சி – வெடி சத்ததிற்கிடையே அவ்வப்போது பார்த்தோம்.     பல்வேறு  தமிழக தலைவர்கள் பற்றி நெகிழ்ச்சியோடு பேசினார். கடவுள் நம்பிக்கை பற்றி சொல்லும்போது ” நீங்கள் பயணம் செய்யும் ரயிலில் தீப்பற்றி விடுகிறது. பிழைப்போமா இல்லையா எனும் நிலையில் கூட கடவுள் நினைவு வராமல் போகுமா? உங்கள் குழந்தைக்கு மிக பெரிய வியாதி எனில் பிரார்த்தனை செய்யாமல் இருப்பீர்களா? அத்தகைய மனிதன் இருந்தால் காட்டுங்கள்; அவன் காலில் விழுந்து நான் வணங்குகிறேன் ” என்றார் சிவகுமார் (நிச்சயம் அத்தகைய நாத்திகர்களும் இருப்பர் என்றே  தோன்றியது)  

    தீபாவளி சிறப்பு படங்கள் 

     

    சன்  டிவி  போக்கிரி மற்றும் காளை என போட்ட படங்களே தீபாவளிக்கு மீண்டும் போட்டு வெறுக்கடித்தது. அதிலும் காளை படத்தை  ஒரு நிமிஷம் கூட பார்க்க முடியாது எப்படி தான் இன்று போட தீர்மானித்தனரோ? இரவு சன்னில் போட்ட மங்காத்தா மற்றும் விஜய்யில் போட்ட நண்பனுக்கு தான் நேரடி போட்டி. நண்பன் விளம்பரம் போட்டு நாலு மணி நேரத்துக்கும் மேல் படத்தை ஓட்டினர். விஜய் டிவி என்பதால் இனி அடிக்கடி நண்பன் படம் டிவியில் ஓடுவதை பார்க்கலாம்  

    உண்மையில் இந்த நாளில் பொதிகை தொலைக்காட்சி அதிக விளம்பரங்கள் இன்றி சில நல்ல நிகழ்சிகள் ஒளிபரப்பியது. ஆனால் எத்தனை பேர் அந்த டிவி பக்கம் சென்றோம் என்பது கேள்விக்குறியே !

     

    Share
  • வரிவடிவங்கள்-பல்லில்லி்!

     

    சேட்டைக்காரன் (எ) வேணுகோபாலன்

    அவன் பெயர் ஒன்றும் எல்லாரும் அழைப்பதுபோல ‘பல்லில்லி’ இல்லை; பாலகிருஷ்ணன் என்று அழகான பெயர். இந்த ‘பல்லில்லி’ என்ற பெயரை யார், எந்தக் காரணத்திற்காக வைத்தார்கள் என்பதையெல்லாம் சரியாக நினைவுபடுத்திச் சொல்ல முடியவில்லையென்றாலும், அப்படித்தான்  எல்லாராலும் அழைக்கப்பட்டான். இல்லாவிட்டாலும் அவனை யார் எந்தப் பெயரைச் சொல்லி அழைத்தாலும், அவன் திரும்பிப் பார்த்திருப்பான். ஒரு விசில்; ஒரு கைதட்டல் அல்லது ஒரு ‘டேய்’ அவனைத் திரும்பிப் பார்க்க வைக்கப் போதுமானதாக இருந்தது. அனேகமாக அவனுக்கே தனது இயற்பெயர் பாலகிருஷ்ணன் என்பது மறந்திருக்கலாம். ஒருவேளை, அவனுக்குப் பெயரே வைக்கப்பட்டிருக்கவில்லை என்று சொன்னாலும் அவன் கவலைப்பட்டிருக்க மாட்டான் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. அவன் போன்றவர்களுக்கு எப்படி உயிரும் உணர்ச்சியும் இருக்கிறது என்பதை பலரால் உதாசீனப்படுத்த முடிகிறதோ, அதே மூர்க்கத்தனத்துடன் அவனது பெயரையும் அலட்சியப்படுத்த முடிந்திருந்தது. பெரும்பாலானோர் அதைத்தான் செய்தார்கள்

          அவனுக்கும் ஒரு இயல்பான கடந்தகாலம் இருந்தது. பாலகிருஷ்ணன் ஐந்தாம் வகுப்புவரை படித்திருக்கிறான். வயதுக்கு மீறிய உயரம்; மாநிறம்; சுருள்முடியில் அழகாக வகிடெடுத்துக் கொண்டு வருவான். பெரிய படிப்புக்காரனெல்லாம் கிடையாது என்றாலும், தினசரி முதல் மணியடிப்பதற்குள் வகுப்புக்குள் உட்கார்கிற மாணவர்களுள் அவனும் ஒருவனாய்த் தானிருந்தான். பள்ளிக்கூடத்தின் வாசலில் ஈ மொய்க்கிற சவ்வு மிட்டாய், வெள்ளெரிப்பிஞ்சு, மாங்காய் ஆகியவற்றின் மீது ஈர்ப்பில்லாமல், பள்ளி முடிந்ததும் அமைதியாக வீடுதிரும்புவான். கிரிக்கெட், கபடி, கோகோ எதிலும் கலந்து கொள்ள மாட்டான். இயல்பாகவே, அவனுக்கு சினேகிதர்களே இல்லாமல் போனதில் வியப்பொன்றுமில்லை

          ஆனால், அது கடந்தகாலம்!

          இப்போது அவன் முன்னைக் காட்டிலும் உயரம்; உடம்பு கொஞ்சம் மெலிந்து விட்டிருந்தது. பள்ளிக்கூடத்துக்குப் போன காலங்களில் அவனது தோற்றத்தில் தென்பட்ட பொலிவு இப்போது கிடையாது. சில சமயங்களில் ஒரே சட்டை, கால்சராயைப் போட்டுக்கொண்டு அவன் நாட்கணக்கில் சுற்றிக் கொண்டிருப்பான். அவனைப் பார்த்தால் பெண்களும் குழந்தைகளும் ஒதுங்கிச் செல்வார்கள் என்றாலும் அவன் எவருக்கும் எந்த இடையூறும் செய்ததில்லை. சொல்லப்போனால், அவன் தான் பற்பல இடையூறுகளுக்கு இலக்காகி விட்டிருந்தான்.

          இப்போது பல்லில்லியை எந்தத் திண்ணையில் வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் உட்கார வைத்து அவனைப் பேசவைத்து வேடிக்கைப் பார்க்கலாம். மீசை அரும்பத் தொடங்கியவர்கள் முதல் அவனைக் காட்டிலும் இளையவர்கள் வரையில் நிறைய பேர், பேதமில்லாமல் அவனை அழைத்து அருகில் உட்காரவைத்து, அவனைத் தங்களது கேளிக்கைக்குப் பயன்படுத்திக்கொள்வர்.

          ”டேய் பல்லில்லி! கண்ணன் சித்தப்பா பாட்டுப் பாடுறா…”

          இந்த நேயர் விருப்பம் அடிக்கடி நிகழ்ந்தேறும். அழைத்ததும் ஓடிச்சென்று, கேட்டவுடன் தயக்கமின்றிப் பாடுவான் பல்லில்லி!

          ”கண்ணன் சித்தப்பா!

         கருப்பட்டி தின்னாரு

         எப்படித்தின்னாரு…..

         ட்ச்..ட்ச்..ட்ச்…ட்ச்…..” என்று கண்ணன் சித்தப்பா கருப்பட்டி தின்னதை அபிநயித்துக் காட்டுவான்.  நேயர் விருப்பம்  கேட்டவர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். ‘இன்னொரு வாட்டிப் பாடிக்காட்டுறா…’ என்று ஒன்ஸ் மோர் கேட்பவர்களும் உண்டு. எத்தனை பேர், எத்தனை முறை கேட்டாலும் சங்கோஜப்படாமல், சந்தோஷமாகப் பாடுவான் பல்லில்லி.

          ”டேய், வாசு சித்தப்பா பாட்டு பாடுறா…!” என்று யாராவது கேட்பார்கள். உடனே சுற்றியமர்ந்திருக்கும் பட்டாளமே விசிலடிக்கும்; உற்சாகக்கூச்சலிடும்.

          ”மாட்டேன்!” என்று நாணுவான் பல்லில்லி. எல்லாரும் அவனை வற்புறுத்துவார்கள்; ஆசை வார்த்தை சொல்லுவார்கள்.

          ”பாடுறா டேய்! கதலிப்பழம் வாங்கித்தர்றேண்டா!”

          ”கடலை மிட்டாய்…?”

          ”சரி, கடலை மிட்டாய் வாங்கித்தர்றேண்டா…..!”

          ”ஒரே ஒரு வாட்டிதான் பாடுவேன்…!” பல்லில்லி நிபந்தனை விதிப்பான்.

          ”சரி, பாடு!”

          ”வாசு சித்தப்பா…

          $@!#*&$%^@!#!@#$&@!

          $@!#*&$%^@!#!@#$&@ “

          சுற்றியிருக்கும் கூட்டம் குபீரென்று சிரிக்கும். அந்தச் சிரிப்பொலியைக் கேட்டு, அந்தந்தத் திண்ணைக்குரிய வீட்டிலிருந்து எவராவது வெளிப்படுவார்கள்.

          ”டேய், என்னடா சத்தம் இங்கே? டேய் பல்லில்லி, கிறுக்கா, எந்திரிச்சிப் போடா…போடா அறிவுகெட்டவனே….!”

          பல்லில்லி போகாமல், சிரித்துக் கொண்டிருப்பவர்களுடன் சேர்ந்து தானும் விழுந்து விழுந்து சிரிப்பான். அவனுக்கு சற்றுமுன் தான் பாடிய பாட்டின் விபரீதமான பொருள்பற்றிக் கிஞ்சித்தும் தெரியாது. பொழுதுபோகாமல் ஊர்சுற்றித்திரிகிற கும்பல்களுக்கு, தான் ஒரு இலவசமான கேளிக்கையாக இருப்பதும், அவர்களில் சிலர் தனக்குக் கற்றுத்தருகிற சில சங்கதிகளில் வக்கிரம் தோய்ந்து கிடப்பதும், அதையே மீண்டும் மீண்டும் கேட்டுக் கேட்டு, அந்த அருவருப்புகளையே தனது அடையாளங்களாக்குவதும் – எதுவும் தெரியாது. சொல்லிப் புரிய வைக்கவும் முடியாது. காரணம் எதுவென்றால், மருத்துவ விபரங்களுக்குள் போகாமல் ஒற்றை வார்த்தையில், அவனுக்கு ‘கிறுக்கு’ பிடித்திருந்தது; அவ்வளவுதான்!

          மாசி மாதத் திருவிழா பத்து நாட்கள் நடக்கும். ஏழாவது நாளன்று ’சப்பரம்’ என்று சொல்லப்படுகிற அலங்கரிக்கப்பட்ட மேடையில், நடராஜரின் திருவுருவத்தை வைத்துக் கொண்டு ‘தில்லையம்பலம்… திருச்சிற்றம்பலம்… ஆடினாரே… ஆடினாரே..’  என்று சுமந்து வருகிறவர்களும் ஆடியவாறே தேரோடும் வீதிகளில் ஓடோடி வருவார்கள். ஒரு வருடம் தெருமுனை வரைக்கும் வந்த ஊர்வலம் உள்ளே வராமல் மாற்றுப்பாதையில் சென்றபோதுதான், பாலகிருஷ்ணனின் அம்மா இறந்த தகவல் பலருக்குத் தெரிய வந்தது.

          அன்று அதிகாலை எழுந்து, கோவில் குளத்தில் குளித்துவிட்டு, அரசமரத்தை வழக்கம்போல் சுற்றிவந்துவிட்டு, முத்தாரம்மன் கோவிலில் எண்ணை விளக்கேற்றிவிட்டு, வீட்டுக்கு வந்தவர் அடுத்த சில நிமிடங்களில் தன் மேல் மண்ணெண்ணையை ஊற்றிப் பற்றவைத்துக் கொண்டு இறந்துபோனார் என்ற செய்தி ஊரெங்கும் பரவியது. ‘ஏன்?’ – இந்த ஒற்றைக் கேள்விக்கு அவரவர் தங்களது அனுமானங்களுக்கேற்ப பல பதில்களைப் பரப்புரை செய்து கொண்டிருந்தனர் என்றாலும், அந்தத் துயரசம்பவத்தின் உண்மையான காரணம் எதுவென்று யாராலும் சரிவர ஊகிக்க முடியவில்லை. அன்றுமுதல் பாலகிருஷ்ணன் பள்ளிக்கூடம் போவதை நிறுத்திவிட்டான் என்பது மட்டும் சகமாணவர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், அவன் வீட்டை விட்டு வெளியே வராமலிருந்ததுதான் அவன் தாயாரின் மரணத்தைக் காட்டிலும் பெரிய மர்மமானது.

          அவனது வயதுக்காரர்கள் அவனை ஏறக்குறைய மறந்துவிட்ட நிலையில், திடீரென்று பாலகிருஷ்ணன் வெளியே மீண்டும் நடமாட ஆரம்பித்தான். அந்தக் காலகட்டத்தில் தான், முதலில் அதிர்ச்சியூட்டினாலும் நாட்பட நாட்பட பலரின் அனுதாபத்துக்கும் சிலரின் எள்ளலுக்கும் ஆளான அவனது நடவடிக்கைகள், அவனை பாலகிருஷ்ணனிலிருந்து பல்லில்லி ஆக்கின என்று சொல்லலாம். உண்மையில், அந்தப் பெயருக்கு எந்தப் பொருளும் கிடையாது. அவனுக்குச் சூட்டப்பட்ட பட்டப்பெயரும் அவனைப்போலவே குறிக்கோளற்றதாக அமைந்தது.

          திருமணமோ, திருவிழாவோ, ஊர்வலமோ எதுவாயிருந்தாலும் சரி, மேளக்காரர்களுக்குப் பின்னால் சிரித்தபடி ஆடிக்கொண்டே போவான். தெருவில் சுற்றித்திரியும் மாடுகள் வாலைத்தூக்கி அசுத்தம் செய்யும்போது குலுங்கிக் குலுங்கி உரக்கச் சிரிப்பான். காய்கறி விற்பவர்கள் பின்னாலேயே சென்று அவர்களைப் போலவே குரலெழுப்பியபடி தொடர்வான். தபால்காரருடன் தெருவின் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று ‘சார் போஸ்ட்’ என்று குரல் கொடுப்பான். இப்படி, இன்னும் அவனது வினோதமான நடவடிக்கைகளின் பட்டியலின் நீளம் மிகவும் அதிகம். ஆரம்பத்தில் அனுதாபம் காட்டியவர்களும் பின்னாளில் ஏனோ அவனை அயர்ச்சியுடன் பார்த்தனர் என்பதை மறுப்பதற்கில்லை.

          அன்று தெருவில் விறகுவண்டிகள் வந்து போயிருந்தன. பல வீடுகளின் வாசலில் விறகுத்தடிகள் இறக்கப்பட்டிருக்க, கோடாரியால் பெரிய பெரிய தடிகள் வெட்டப்பட்டுக் கொண்டிருந்தன. எங்கள் வீட்டு வாசலிலும் விறகு வந்து இறங்கியிருந்தது. விறகுவெட்டி வியர்க்க விறுவிறுக்க வேலை செய்து கொண்டிருப்பதை பல்லில்லி வேடிக்கை பார்த்தபடி திண்ணையில் உட்கார்ந்திருந்தான்.

          விறகுவெட்டி ஒவ்வொரு முறையும் கோடாரியை உயர்த்தும்போது தலையைத் தூக்கி, அது வேகமாக விறகின் மீது விழும்போது தலையை அதே வேகத்தில் இறக்கி, வாய்விட்டுச் சிரித்து, கைதட்டி மகிழ்ந்து கொண்டிருந்தான். அவனது நடவடிக்கைகள் புரியாமல் முதலில் சிரித்தபோது ‘ஐயோ பாவம், சிரிக்காதேடா’ என்று என் பாட்டி கண்டித்திருந்தார் என்பதால் குழப்பத்துடன் அவனையே ஜன்னலிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

          ”லேய், தள்ளி உட்காருலே! “ விறகுவெட்டி எச்சரித்துக் கொண்டிருந்தார். “கண்ணுலே சிலாம்பு ஏறுனா பெறகு கதை கந்தலாயிரும்…தள்ளி உட்காருலே!”

          பல்லில்லி தள்ளி உட்காராமல் சிரித்துக் கொண்டிருக்கவே, அந்த விறகுவெட்டி பொறுமையிழந்து அவனை வசைபாட ஆரம்பித்தார்.

          ”ஐயோ பாவம்!” என்றாள் பாட்டி. “தாயில்லாப் புள்ளே எப்படிச் சீரழியுது பாரு!”

           நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் விறகு வெட்டப்படுவதையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று, விறகுவெட்டியின் கோடாரியின் அதிரடியில் ஒரு பெரிய விறகுத்துண்டு ஜிவ்வென்று காற்றில் பறந்து பின்னால் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்த பல்லில்லியின்  நெற்றியை ஒரு ஏவுகணை போலத் தாக்கியது.

          ”அம்மா!”

          புத்தி சுவாதீனமில்லாதவன், வலியில் அலறியதைக் கேட்டதும், ‘அம்மா’ என்ற அந்த ஒரு ஒற்றை வார்த்தையின் பொருள் எனக்கு முன்னெப்போதுமில்லாத அளவுக்கு மிக அழுத்தமாய்ப் புரிந்தது போலிருந்தது.

                   ***********

    படங்களுக்கு நன்றி:

    http://natarajar.blogspot.in/2008_06_01_archive.html

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் …(32)

     

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !
     
    ஒரு நாட்டின் ஊடகம் என்பது அந்நாட்டின் முதுகெலும்பைப் போன்றது. ஊடகங்கள் சர்வாதிகார அரசாங்கங்களினால் நடைமுறைப்படுத்தப்படும் நாடுகளில் அந்நாட்டுப் பிரஜைகளின் குரல்வளை நெரிக்கப்படுவது போன்ற ஒரு நிலையே தோன்றுகிறது.
     
    ஊடகங்களின் சுதந்திரம் ஒரு நாட்டின் ஜனநாயகத்திற்கு அடிப்படையானது. ஊடகங்களின் சுதந்திரத்திலேயே நாடுகளின் சுபீட்சமும், தன்மானமும் காக்கப்படுகிறது.
     
    ஊடகங்களுக்கே பதவியிலிருப்போர் அப்பதவியின் அதிகாரத்தைத் துஷ்பிரயோகிக்கும்போது அதைத் தட்டிக் கேட்கும் உரிமை இருக்கிறது. நாட்டின் முன்னனிப் பிரஜைகள் தவறான பாதையில் போகும் போது அதைச் சுட்டிக் காக்கும் கடமை சுதந்திரமான ஊடகங்களின் கைகளில் தங்கியுள்ளது.
     
    ஆனால் அச்சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், மக்களுக்கு அவ்வூடகங்கள் தரும் செய்திகளில் உள்ள உண்மையின் மீது நம்பிக்கை வலுவடைய வேண்டுமானால் அதைப் பாதுகாக்கும் கடமை கூட அவ்வூடகங்களின் கைகளிலேதான் தங்கியுள்ளது. சுதந்திரத்திர்கும், தாந்தோன்றித்தனத்திற்கும் இருக்கும் எல்லையைக் கடந்து விடாமல் இருக்க வேண்டியது ஊடகங்களின் தார்மீகக் கடமையாகிறது.
     
    என்ன சக்தியின் இம்மடலின் பீடிகை நீண்டு கொண்டே போகிறது ? என்ன விடயமாக இருக்கும் என்னும் ஆவல் உங்களுக்கு ஏற்படுவது எனக்குப் புரிகிறது.
     
    பி.பி.ஸி உலக ஊடகத்துறையினருக்கே ஒரு முன்னுதாரணமாக, பல நாடுகளின் நன்மதிப்பைப் பெற்றிருந்த பிரித்தானிய நாட்டின் தேசிய ஊடகத்தின் மீது படிந்த கறைகளைப் பற்றிய ஒரு அலசலுக்கான பீடிகையே நீங்கள் மேலே கண்டது.

    பிரத்தியேகமாக ஆரம்பிக்கப்பட்ட பிரித்தானிய ஒலிபரப்புக் கம்பெனி (British Broadcasting Company) 1922ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ம் திகதி ஆறு பிரத்தியேக கம்பெனிகளினால் பரீட்சார்த்த வானொலி ஒலிபரப்பிற்காக ஆரம்பிக்கப்பட்டது.

    அதே ஆண்டு நவம்பர் மாதம் 14ம் திகதி இதன் முதலாவது ஒலிபரப்பு 2LO எனும் ஸ்டேசனுக்காக லண்டனில் உள்ள மார்க்கோனி ஹவுஸ் எனும் இடத்தில் இடம்பெற்றது.

    இதனுடைய விரிவாக்கம் தம்முடைய பத்திரிக்கைகளின் விற்பனையைத் தாக்கிவிடும் எனும் பீதியால் பிரித்தானிய பத்திரிக்கைத்துறையினர் அன்றைய அரசாங்கத்தினூடாக இவ்வானொலிச் சேவைச் செய்திகளை மாலை 7 மணிக்குப் பின்னரே ஒலிபரப்பலாம் எனும் நிபந்தனையைக் கொண்டுவந்தார்கள்.
     
    இப்ப‌டியாக‌ ஆர‌ம்பித்த‌ இவ்வூட‌க‌த்தின் முக்கிய‌ ஸ்தாப‌ன‌ங்க‌ளில் ஒன்று பிரித்தானிய‌ தேசிய‌ தாபாற் சேவை இலாகாவாகும். தேசிய‌ச் சேவையான‌ தாபாற்சேவை இலாகா ஒரு த‌னியாருட‌ன் இணைந்த‌ கூட்டுத்தாப‌ன‌த்திற்காக‌ ம‌க்க‌ளிட‌ம் இருந்து வ‌ரி வ‌சூலிக்கத் த‌ய‌ங்கிய‌தால் இக்கூட்டுத்தாப‌ன‌த்தில் அங்க‌ம் வ‌கித்த‌ த‌னியார் நிறுவ‌னங்க‌ள் வில‌கின‌. 1926ம் ஆண்டு ந‌ட‌ந்த‌ பிரித்தானிய‌ பொது வேலை நிறுத்த‌ம் ப‌த்திரிக்கைக‌ளின் வெளியீட்டில் இடையூறு ஏற்ப‌டுத்த‌ இக்கூட்டுத்தாப‌ன‌த்தின் மீது விதிக்க‌ப்ப‌ட்டிருந்த‌ நேர‌த்த‌டை அக‌ற்ற‌ப்ப‌ட்ட‌து. இப்பொது வேலை நிறுத்த‌த்தின் போது இவ்வொலிப‌ர‌ப்பு ஊட‌க‌ம் எடுத்த‌ ந‌டுநிலையான‌ த‌க‌வ‌ல் ப‌ரிமாற்ற‌ம் ம‌க்க‌ளின் ம‌ன‌தில் இக்கூட்டுத்தாப‌ன‌த்திற்கு ஒரு உய‌ரிய‌ இட‌த்தை அளித்த‌து.
     
    விளைவாக பிரித்தானிய அரச முத்திரையுடன் 1926ம் ஆண்டு இன்றைய பி.பிஸியின் அமைப்பு முறை தோற்றுவிக்கப்பட்டது. இதன் முதல் செயற்பாட்டு நிறுவனராக சார் ஜான் ரீத் நியமிக்கப்பட்டார்.
     
    இத்தகைய ஒரு சூழலில் ஆரம்பிக்கப்பட்ட பி.பி.ஸியே உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் முத‌லாவதாக ஆரம்பிக்கப்பட்ட தேசிய ஊடக சேவையாகும்.
     
    இதன் முதலாவது தொலைக்காட்சிச் சேவை 1936ம் ஆண்டு லண்டனில் அலெக்ஸாண்ரா மாளிகையில் இருந்து ஒலிபரப்பப்பட்டது.
     
    இச்சேவையில் நடுநிலைமையான ஊடகச் சேவையின் மதிப்பு பலநாடுகளிலும் ஊடுருவியிருக்கிறது. குறிப்பாக தற்போது உலகெங்கும் ஒலிபரப்பாகும் பி.பி.ஸி உலக தொலைக்காட்சி, வானொலி சேவை உலகநாடுகளின் பல செய்திகளை உடனுக்குடன் எம்மை வந்தடையச் செய்கிறது.
     
    இத்தகைய ஒரு முன்னணி ஊடகத்துறை இன்று ஒரு அவதூறுக்குள் தன்னைப் புகுத்திக் கொண்டு தத்தளிக்கிறது. இதுவரை இதன் தலைவரான ஜார்ஜ் என்ட்விசில் (George Entwistle ) அவர்களது பதவியைக் களைந்துள்ளது. அவரைத் தொடர்ந்து இன்னும் பல முக்கிய பதவியிலிருப்பவர்களின் நிலை கேள்விக்குறியாகி விட்டது.

    இந்நிலை தோன்றக் காரணமென்ன ?
     
    நான் ஒருவாரங்களுக்கு முன்னால் தீட்டியிருந்த மடலில் குறிப்பிட்டிருந்த ஜிம்மி சவைல் (Jimmy Saville) அவர்களின் மீதான சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தைப் பற்றியதோர் நிகழ்ச்சி ஒலிபரப்பாவதை கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் நேரம் தடை செய்தமை தொடர்பாக மிகவும் கடுமையான விமர்சனத்துக்கு பி.பி.ஸி உள்ளாகியிருந்தது.
     
    அதனால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் தீவிரமாக விசாரிக்காமல் தம்மீது கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த ஒரு முன்னனனி அரசியல்வாதி பலவருடங்களுக்கு முன்னால் பாலியல் துஷ்பிரயோகத்தை மேற்கொண்டார் என்று குற்றம் சாட்டிய ஒருவரது வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து தமது நியூஸ் நைட் (News night) என்னும் நிகழ்ச்சியில் ஒரு பரபரப்பான செய்தியை ஒலிபரப்பிவிட்டார்கள்.
     
    விளைவு ஒரு முன்னணி கன்சர்வேடிவ் அரசியல்வாதியான லார்ட் மக் அல்ப்பைன் (Lord McAlpine) என்பவர் மீது வீண்பழி சுமத்தப்பட்டது.
     
    பி.பி.சி நிகழ்ச்சியில் அவர் பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும் அவர்மீது தேவையற்ற அவதூரு சுமத்தப்படுவதற்கு தீர ஆராயப்படாமல் ஒலிபரப்பப்பட்ட அந்நிகழ்ச்சியே காரணம் என்று பலராலும் விமர்சிக்கப்பட்ட்டது. பி.பி.சியின் நடுநிலைமையான ஊடகத்தன்மைக்கு ஏற்பட்ட இழுக்கு என்பதே பெரும்பான்மையோரின் ஏகோபித்த அபிப்பிராயம்.
     
    பிரித்தானிய பத்திரிக்கை ஊடகத்துறையினர் கையாண்ட சில கபடத்தனமாகச் செய்தி சேகரிக்கும் முறையினால் பத்திரிக்கைகளின் மீது தணிக்கை அவசியமா என்பதற்கு ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்து அதன் முடிவுகள் வெளியாகப்போகும் தருணத்தில் தம்மீது விழப்போகும் பழியைத் திசைதிருப்ப, பத்திரிக்கைத் துறையினருக்கு இது பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலான சந்தர்ப்பம் ஆகி விட்டது எனச் சில அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள்.
     
    அது மட்டுமின்றி இத்தகைய ஒரு அனர்த்தத்தினால் முன்னணி நிறுவனமான பி.பி.சி உட்ப்பட ஊடகத்துறையினரின் சுதந்திரத்திர்கு வேட்டு விழுந்து விடுமோ என்றும் பழுத்த‌ அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள்.
     
    தொடர்ந்து எடுக்கப்படப்போகும் நடவடிக்கைகள் தான் பிரித்தானிய ஊடகத்துறையினரை இந்நிகழ்வு எந்த அளவிற்குப் பாதிக்கப் போகிறது என்று உணர்த்தப் போகிறது.
     
    ஒரு நாட்டின் ஜனநாயகம் தழைக்க வேண்டுமானல் அது அந்நாட்டின் ஊடகத்துறையினருக்குக் கிடைக்கும் சுதந்திரத்தைப் பொறுத்தே உள்ளது. ஆனால் அதைப்பாதுகாக்கும் கடமையின் முக்கியத்துவத்தை உணர வேண்டியது அவ்வூடகத் துறையையும் அதை சார்ந்தவர்களையுமே சேர்ந்துள்ளது.
     
    இதை உணர்ந்துதான் எமது தமிழ்ப்பாட்டன் பாரதி ” தம்பி உன் உள்ளத்தில் உண்மை இருந்தால் எழுதுகோலை எடு எழுது ” என்றானோ ?
     
    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்
    லண்டன்
     

     

    Share
  • “பொருள் என்று ஒரு திடப் பொருள் உலகத்தில் இல்லை”

     

    வெங்கட் சாமிநாதன்

    நினைவுகளின் சுவட்டில் பாகம் – II (பகுதி – 53)

    புர்லா திரும்பியதும்  மறுபடியும் பழைய அன்றாட பாட்டை நடைதான். அலுவலகம், தினசரி பத்திரிக்கையில் wanted column-ல் எனக்கு என்ன இருக்கு என்ற தேடல். இருந்தால் ஒரு மனு போட  வேண்டியது. இதில் ஏதும்  சுவாரஸ்யம் இல்லை என்றாலும், இவ்வளவு நெருக்கமாக பழகியவர்களை விட்டுப் பிரிய வேண்டியிருக்கிறதே என்ற ஒரு வருத்தம் ஒரு மூலையில் அவ்வப்போது எட்டிப் பார்க்கும். ஒவ்வொரு சமயம் இந்த நினைப்பு வந்ததும் சக்கரவர்த்தியைப் பார்க்கப் போய் விடுவேன். மஞ்சு சென்குப்தாவுக்கும் வேறு செக்‌ஷனுக்கு மாற்றலாகி விட்டது. அங்கு கொஞ்ச நேரம் கழிப்பேன். சில சமயங்களில் மிருணாலும் சேர்ந்து கொள்வான். அவன் இருக்கும் போது மஞ்சு சொல்வாள்: “எங்களை விட்டுப் போய் விடுவீர்கள் இல்லையா?” என்பாள் இது கட்டாயம் இண்டர்வ்யூவுக்குப் போகும் போதும் அங்கிருந்து திரும்பும் போதும் கேட்கப் படும் கேள்வி. மூன்று பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வோம். சாதாரணமாகக் கேட்பது போலும் இருக்கும். குற்றம் சாட்டுவது போலும் இருக்கும். வருத்தத்துடன் தனக்குள் பேசிக்கொள்வது என் காதில் விழுந்தது போலும் இருக்கும். என்ன என்று பதில் சொல்வது? எங்கோ பார்வை செல்லும். ஒரு வெறுமை முகத்தில் படரும். எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் இந்த வருத்தம் சொல்லப்படும். பகிர்ந்து கொள்ளப்படும். எல்லோருமே வாய்ப்புக்காகத் தான் காத்திருந்தார்கள். வாய்ப்புக் கிடைத்ததும் சென்று கொண்டிருந்தார்கள். இங்கு தான் அணைக்கட்டு வேலை முடிந்து கொண்டிருக்கிறதே. உள்ளூர்வாசிகள், ஒடியாக்கள் தவிர மற்ற எல்லோருக்கும் இதே கவலை தான். வேலை நீக்க உத்தரவு தரப்படுவதற்கு முன் கிளம்பிவிடவேண்டும். FA & CAO அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு கவலை இல்லை. அப்படியே கூண்டோடு அவர்கள் பிலாய்க்குப் போகக் காத்திருந்தார்கள்.

    இப்படி எல்லோரும் போய்க்கொண்டிருந்தால் இங்கு மிகுந்த நாட்களுக்கு வேலை நடக்க வேண்டாமா? வேறு வேலைக்கு உத்தரவு வந்த போதிலும் இருக்கும் வேலையைச்  செய்ய ஆட்கள் இல்லையென்று நிர்வாக மேல் அதிகாரிகள் வேலை கிடைத்தவர்களை விடுவிக்க மறுத்தார்கள். அந்த ஆபத்து வேறு ஒன்று தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக பயமுறுத்திக் கொண்டிருந்தது, என் செக்‌ஷனுக்கு பொறுப்பாக இருந்த தேஷ் ராஜ் பூரி எனக்கு ஆசுவாசம் அளித்திருந்தார். “உனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்ததும் சொல். பதிலுக்கு ஆள் வேண்டும் என்று நான் உனக்குத் தடை சொல்ல மாட்டேன். உடனே உன்னை விடுவித்து விடுகிறேன். கவலைப் படாதே” என்று எப்போதாவது தோணும் போதெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். ஆறு வருஷங்களுக்கு முன் வேலைக்குச் சேர்ந்த சமயம் என்னிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டிருந்தவர் பின்னர் ஒரு சில மாதங்களில் மிகவும் கனிந்த மனிதராக மாறியவர். அந்த ஆரம்ப மாதங்களுக்குப் பிறகு, கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேல் அவரிடம் நான் வேலை பார்க்கவில்லை. ஆனால், அன்று விட்டுப்போன அந்தக் கனிவை இன்று இப்போது திரும்பப் பார்க்க முடிந்தது. உறவுகள் எப்படியெல்லாம் தான் மாறுகின்றன!

    Wanted columns பார்த்து வேலைக்கு  மனு எழுதிப் போடுவதும் எங்கிருந்து என்ன வரும் என்று எதிர்பார்ப்பும் தொடர்ந்தது. ஊர் சுற்றும் ஆசையும் அந்த எதிர்பார்ப்போடு சேர்ந்து கொள்ளும். வந்தது ஒரு அழைப்பு. Eastern Railway யிலிருந்து. கல்கத்தாவுக்குப் போகவேண்டும் நேர்காணலுக்கும் பரிட்சைக்கும். மிருணாலுக்கு சந்தோஷம் தான். ஆனால் கல்கத்தாவில் அவன் குடும்பத்தார் யாரும்  இல்லை. அப்பா இன்னமும் டாக்காவில் தான் வேலை பார்க்கிறார். ஆனால் முன்னொரு தடவை எல்லோரும் கல்கத்தா போயிருந்த போது எங்களுக்கு இடவசதிகள் செய்து கொடுத்தவர் இம்முறையும் தனக்குத் தெரிந்தவருக்கு ஒரு கடிதம் கொடுத்தார் பாலிகஞ்சில் வெகு காலமாக வாழ்ந்து வருகிறவர்கள். அங்கு நான் தங்கிக்கொள்ளலாம். இரண்டு நாட்கள் தான் தங்க வேண்டியிருக்கும். ஒரு நாள் பரிட்சை. மறுநாள் நேர்காணல். நேர்காணல் 12 மணிக்குள் முடிந்துவிடும். பின்  மதியம் எங்கும் போகலாம். அல்லது இன்னும் ஒரு நாள் தங்கவும் செய்யலாம். இரவு தான் பம்பாய் மெயில். காலை ஐந்து மணிக்கு ஜார்சகுடா போய்ச் சேர்ந்து விடும். அலுவலகத்துக்கு 10 மணிக்குள் போய்ச் சேர்ந்து விடலாம்.

    இம்முறை குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவும் இருக்கவில்லை. நேர் காணலில் தான் நான் என் இயல்பில் இருந்ததாக நினைத்தேன். ஆனால் கடைசியில் என்னை அறியாது தவறிழைத்தது தெரிய வந்தது. மூன்று அதிகாரிகள் நேர்காணலில் இருந்தனர். எல்லாக் கேள்விகளுக்கும் சரியாகவே பதில் சொன்னதாகத் தான் நான் நினைத்தேன். கடைசியில் அந்த மூவரில் மூத்தவராகத் தோன்றியவர் ஒரு கேள்வி கேட்டார்.

    ”பதினைந்து நிமிஷங்களாகப் பார்த்து வருகிறேன். நாங்கள் உன்னை இங்கு வேலைக்குச் சேர்த்துக் கொள்வதற்கான உன் தகுதியை நிச்சயிக்கிறவர்கள். நாங்கள் உயர் அதிகாரிகள். எங்களைப் போன்ற ஒருவரிடம் நீ வேலை செய்ய வேண்டும். எங்கள் கேள்விகளுக்குப் பதில் தந்தாயே தவிர ஒரு தடவை கூட எங்களுடன் பேசும் போது “Sir” என்று நீ சொல்ல வில்லை. உயர் அதிகாரிகளிடம் எப்படிப் பேசுவது என்று கூடத் தெரியவில்லையே உனக்கு?” என்றார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இப்படி ஒரு கேள்வி வரும், என்று நான் எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் அதிர்ந்து “yes I should have, I am sorry” என்று பதில் அளித்தேன். மூவரும் கொஞ்ச நேரம் அமைதியாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர். பின் சட்டென்று, “ இப்பவும், “Sir” என்று வரவில்லையே உன்னிடமிருந்து” என்று சொல்லி, “சரி, நீ போகலாம்.” என்று முடித்து விட்டார். நான் எழுந்து வந்து விட்டேன். சரி இனி பயனில்லை. வேலை கிடைக்குமா என்பது நிச்சயமில்லாது இருந்தது. இனி நிச்சயமாகக் கிடைக்கப் போவதில்லை என்று நினைத்துக்கொண்டேன். ஏன் இப்படி நடந்தது? என்று தெரியவில்லை. சொல்லக் கூடாது என்ற கர்வம் இல்லை. பின்? ஒரு வேளை ஹிராகுட் அலுவலகத்தில் முழுதும் ஹிந்தியிலேயே பேசி வந்த பழக்கத்தால்தான் “Sir” சொல்ல வரவில்லையா? வேலை கிடைக்கப் போவதில்லை என்று வெளியே வரும்போதே மனதுக்குள் நிச்சயமாகி விட்டதால் அதைப் போட்டு நான் குழப்பிக்கொள்ளவில்லை. இன்னும் எத்தனையோ வாய்ப்புக்கள் விளம்பரங்கள் வரும் என்று மனம் சமாதானம் கொண்டது.

    மறுபடியும் பேலூர் மடம் தக்ஷிணேஸ்வரம் போகவேண்டும்  என்று ஒரு ஆசை. மிக அழகான  கோயில். மடம். ஆற்றங்கரை. எல்லாமே நமக்குப் பழக்கமில்லாத புதிய முறையில் கட்டப்பட்ட கோயில்கள். அன்று மாலை காலேஜ் ஸ்ட்ரீட் போனேன். அங்கு தான் அந்த தெரு முழுதுமே நம்மூர் மூர் மார்க்கெட் போல நடைபாதையிலும் கடைகளிலும் பழைய புத்தகங்கள் கொட்டிக் கிடக்கும். ஒரு நடை பாதைக் கடையில் Bertrand Russel-ன்  A History of Western Philosophy கிடைத்தது. பெரிய புத்தகம் பத்து ரூபாய்க்குக் கிடைத்தது. எனக்கு ஏதோ புதையல் கிடைத்தது போல சந்தோஷம். ரஸ்ஸல் எனக்கு பிடித்தமானவராகியிருந்தார். பாதியும் ஸ்ரீனிவாசனும் எனக்கு ரஸ்ஸலைப் பழக்கி விட்டிருந்தார்கள். மிகுந்த நகையுணர்வும் மிகக் கஷ்டமான தத்துவ கருத்துக்களையும்  மிக எளிய ஆங்கிலத்தில் மிக எளிய நடையில் சொல்வதில் அவர் திறமைசாலி. அவரைப் போலவே C.E.M Joad-ம் மிக எளிய நடையில் விளக்கி எழுதிய தத்துவ தரிசனப் புத்தகங்களைப் படித்திருந்தாலும் அவற்றை ரஸ்ஸல் சொல்லப் படிக்க வேண்டும் என்ற விருப்பமும் எனக்கு இருந்தது.

    ரஸ்ஸல் மாதிரி வெகு சிக்கலான தத்துவார்த்த தரிசனங்களையும் வேடிக்கையாகவும்  அதே சமயம் அவை சிதைபடாமலும் சொல்வது ஒரு கொடை என்று தான் சொல்ல வேண்டும்

    புனிதர் அகஸ்டினின் Confessions பற்றி பேசும்போது ரஸ்ஸலுக்கு மகாத்மா காந்தி தன் பால்ய பருவத்து பாலியல்  உணர்வுகளைக் குற்ற உணர்வுடனேயே தன் சுய சரிதத்தில் (My Experiments with Truth) நினைவு கொள்வதைக் குறிப்பிட்டு இரண்டு பேரும் ஒரே ரக ஜீவன்கள் என்பார். அந்தக் குற்ற உணர்வு ரஸ்ஸலுக்கு வேடிக்கையாக இருக்கும். இன்னொரு இடத்தில் அவர் காலத்து மனோவியல் அறிஞர்கள் மனம் பற்றிய ஆராய்ச்சியில் ஆழந்து மனம் என்றே ஏதும் கிடையாது என்ற முடிவுக்கு வந்துள்ளது போல பௌதீக அறிஞர்களும் பொருளைப் பற்றி விளக்கப்போக கடைசியில் பொருள் என்று ஒரு திடப் பொருள் உலகத்தில் இல்லை. எல்லாம் ஆராயப் போகப் போக ஒரு சக்தியின் வெளி தான் கிடைப்பது என்றும் சொல்வதெல்லாம். தையல்காரர்கள் உலகத்தில் எல்லோரும் நிர்வாணமாகத்தான் செல்கிறார்கள், ஆடை என்று ஒன்று உலகத்தில் இல்லை என்று சொல்வது போலும், , செருப்பு தைப்பவர்கள் உலகத்தில் எல்லோரும் வெறுங்காலுடன் தான் நடக்கிறார்கள், என்றும் சொல்வது போல் இருக்கிறது என்பார். தன்னுடைய சகா ஆல்ஃப்ரெட் நார்த் வொய்ட் ஹெட் என்ன சொல்கிறார் என்றே ஒருவருக்கும் புரியாது அவர் விளக்கங்கள அவ்வளவு கடினம். ஆனால் அவர் பிரசங்கங்களுக்கு பெருங்கூட்டம் கூடும். வொயிட் ஹெட் பேச்சைக் கேட்டு வந்தேன் என்று சொல்லிக்கொள்வதில் அவர்களுக்குப் பெருமை என்றும் காரணம் சொல்வார்.  இப்படி ரஸ்ஸல் பெரிய விளக்கங்கள் சொல்லிச் செல்லும்போது நகைச் சுவையான கமெண்ட் அடித்துக்கொண்டே செல்வார்.

    ஆனால் ஐம்பதுகளிலும்  அறுபதுகளிலும் ரஸ்ஸலும் பெர்னாட் ஷாவும் பேசப்பட்டது  போல் இப்போது அவர்களை யாரும் நினைவு கொள்வதில்லை. இதுவும் ஒரு இழப்பாகத்தான் தோன்றுகிறது. இந்த சோக உணர்வு ஒரு வேளை வயது முதிர்ந்த காலத்தில் பழைய நினைவுகளைக் கிளறும்போது தோன்றுவது இயல்பு என்று இளைஞர்கள் சொல்லக் கூடும்.

    அப்படித்தான் அன்று  எனக்கு இருந்தது. இந்த இடத்தை விட்டுப் போகவேண்டும் என்று  முனைப்போடு முயன்று கொண்டிருக்கும் போதே இவர்களை எல்லாம் விட்டுப் பிரிகிறோமே என்ற நினைப்பும் உடன் தோன்றிக்கொண்டே இருந்தது.

    புர்லா திரும்பியதும் நண்பர்களிடம் நடந்ததைச் சொன்னேன். இந்த கல்கத்தா பயணம் வீண் தான் வேலை கிடைக்காது என்றால் அவர்கள் காரணம் கேட்டுச் சிரித்தார்கள். ”உனக்குத் தெரியாது. உனக்குள் ஒரு திமிர் இருக்கத் தான் செய்கிறது. இருந்தாலும் கவலைப் படாதே. இன்னும் நிறைய வாய்ப்புக்கள் கிடைக்கும்” என்றும் சமாதானம் சொன்னார்கள். கிடைத்தது. இப்போது எனக்கு அழைப்பு வந்தது கட்டக்கிலிருந்து. ஒரிஸ்ஸாவின் தலைநகர். அப்போது புபனேஸ்வர் கட்டப்படவில்லை. இந்திய அரசாங்கத்தின் உள்துறை யிலிருந்து அழைப்பு. போனேன். எப்படிப் போனேன் என்று நினைவில்லை. பஸ்ஸில் தான் போகவேண்டும். ஆனால் பஸ்ஸில் போய்ப் பார்க்க வேண்டும் என்று அந்நாளைய வாலிப வீம்பில் ஒரு முறை போனேனே தவிர நிர்ப்பந்தத்திற்கு கட்டக் பஸ்ஸில் போன நினைவு இல்லை. ஏதோ கொஞ்ச தூரம் பஸ்ஸிலும் பின் எங்கே ரயில் ஏறினேன் என்று நினைவில்லை.

    இந்தப் பயணத்தில்  என்னுடன் கட்டக்கில் பரிட்சைக்கும் நேர்காணலுக்கும் வந்திருந்தவர்கள் இன்னம் நான்கு பேரை எனக்கு நல்ல நினைவு இருக்கிறது. மற்ற எந்த பயணத்திலும் யாரும் நினைவில் இல்லை. டி.எம். ராகவாச்சாரி நாக்பூரிலிருந்து வந்தவன். பி.எஸ் ராஜூ, எங்கிருந்து என்று நினைவில் இல்லை. ஆனால் ஆந்திராவிலிருந்து வந்தவர். எங்கள் எல்லோரையும் விட மூத்தவர். நல்ல உயரமான மனிதர். டி.ஆர்.ஜி பிள்ளை என்று எனக்கு இளையவனான ஒருவன். பின் ஏ. சீனிவாசன் போற்றி. இருவரும் மலையாளிகள். நினைவிலிருக்கக் காரணம் இவர்கள் எல்லோருடனும் வெகு காலம் பழக விதிக்கப் பட்டிருந்தார்கள் என்பது அன்று எங்கள் எவருக்கும் தெரியாது. எப்படியோ நாங்கள் ஐவரும் கட்டக்கில் சந்தித்த கணத்திலிருந்தே வெகு நெருக்கமாக பேசிப் பழகினோம் அதுவும் ஏதோ விதிவசத்தில் நடந்தது போல் தான்.

    கட்டக்கில் தங்கியது,  சுற்றி உலவியது எதுவும்  எனக்கு நினைவில் இல்லை. சுற்றி எங்கும் குடிசைகள், ஓரு பெரிய விஸ்தாரமான கிராமம் போலத் தான் இருந்தது கட்டக். ஒரு பெரிய அழகான கட்டிடம் என்று பார்த்தது ராவென்ஷா காலேஜ் கட்டிடம் ஒன்று தான். நேதாஜி வாழ்ந்த ஊர் அது. அவர் படித்த காலேஜ் அது. அவர் வாழ்ந்த, படித்த காலத்தில் அந்நகரம் எப்படி இருந்திருக்குமோ, கற்பனை செய்துக்கொள்ளத் தான் வேண்டும்.

     தொடரும்

    Share
  • தமிழார்வம் ‘திரிகடுகம்: நச்சு மூன்று

     

    இன்னம்பூரான்

    5. நச்சு மூன்று

     

    கல்லார்க்கு இனனா ஒழுகலும், காழ்க் கொண்ட

    இல்லாளைக் கோலால் புடைத்தலும், இல்லம்

    சிறியாரைக் கொண்டு புகலும்,-இம் மூன்றும்

    அறியாமையான் வரும் கேடு. [3]

     

    5.1. கற்றறியாதவர்க்கு உறவினனாகி நடத்தலும், மனவுறுதிகொண்ட இல்லாளை   கோலினால் அடித்தலும், தம் வீட்டுள் சிற்றறிவினரை  உடன் கொண்டு, புகுதலும், இம் மூன்று செயல்களும் தன் அறியாமையினாலே விளைகின்ற கேடுகளாம்.

    5.2. அதாவது, மூடரோடு சேர்ந்திருப்பதும், கற்புடை மனைவியை அடித்தலும், புல்லிய அறிவீனரை வீட்டுள் அழைத்துச் செல்லுதலும் தீமைகள் விளைவிப்பன.

    5.3. நல்லறம் தீயதை விலக்கவும் வேண்டும். நச்சுப்பொருள்களை புறக்கணிக்கச்சொல்வதும் மருத்துவ நெறியே. கல்வி அறிவை வளர்க்கும். கற்று அதன் பயனாக அறிவை பெறாதவர்களுடன் நட்பும், உறவும் கொண்டாடுவதைத் தவிர்ப்பது நலம்.

    கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
    அவையல்ல நல்ல மரங்கள் – அவைநடுவே
    நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
    மாட்டாதவன் நன்மரம்.  (மூதுரை 4: ஒளவையார்)

    5.4. இல்லாளை அடிப்பது என்பது அவளை எந்த வகையில் துன்புறுத்துவதையும், கொடுமைக்கு ஆளாக்குவதையும், அவளுக்கு மன உளைச்சலை கொடுப்பதையும் குறிக்கும். இல் வாழ்க்கையில் விலக்க வேண்டிய நச்சு, அத்தகைய நடவடிக்கை. அன்றாட வாழ்க்கையில் இல்லத்தரசியின் மனதை புண்படுத்தாமல் இருப்பது பண்பு. பிரியமாக இருப்பது இருவருக்கும் சுகம். இவ்வாறு நல்லாதன் அறிவுரைத்து இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னும், பெண்கள் பலதுறைகளில் திகழ்ந்தாலும், பேச்சளவில் பெண்ணியம் ஆண்களால் போற்றப்பட்டாலும், இல்வாழ்க்கையில் ஆணாதிக்கத்தின் ஆளுமை இந்தியாவில் அதிகமாக காணப்படுவது துர்பாக்கியமே. அநேக இல்லங்களில் நல்லாதனின் அறிவுரை இயல்பாகவே பின்பற்றப்படுவதை காண்கிறோம். இருந்தபோதிலும், ‘இல்லாளை கோலால் புடைத்தல்’ பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆங்கிலத்தில் chattel என்ற சொல் உண்டு. அதன் பொருள்: ஜங்கம சொத்து/ அடிமை. ஆண்கள் இயற்றிய சட்டம் இல்லாளை chattel என்றது! சில வருடங்கள் முன்னால், அடையார் பிரதான சாலை ஒன்றில் ஒருவன் ஒரு பெண்பாலரை தெருவில் போட்டு அடித்துக்கொண்டிருந்தான், ஒரு உருட்டுக்கட்டையால். தடுக்கப்போன எனக்கு பலமான அடி. தெரிந்த கடைக்காரர் ஒருவர் ஓடோடி வந்து என்னை காப்பாற்றினார். ஆனால், ‘அவன் தன் பொண்டாட்டியை அடிக்கிறான். நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள்?’ என்று தான் என்னை கேட்டார். போலீசுக்குப் போனேன். அந்த ‘இல்லாளை கோலால் புடைத்தவனை’ தருவித்தார்கள். அவனுடைய கூற்று,’ என் மனைவியை அடிப்பேன். இவர் யார் கேட்பதற்கு?’ . போலீசும் தலையாட்டியது. சமூகம் பெண்பாலாரை சமமாக நடத்தும் வரை, நம் நாடு உருப்படாது.

    5.5. நமது இல்லம் நமது உறைவிடம். அங்கு அறிவீனரை உபசரிப்பது தீங்கு விளைக்கும். அறியாமையினால் இந்த தீமைகள் விளைவதால், அறியாமையை ஒழிக்கவேண்டும் என்பது தான் அடிப்படை கருத்து. சமூகமே ஒன்று கூடி கல்வியை பரப்ப முயன்றால் தான் அறியாமையை குறைக்க முடியும். ஆரம்ப கல்வி அனைவரைக்கும் இலவசமாக கிடைக்கவேண்டும் என்று கூறும் இந்திய அரசியல் சாஸனம், அதை அடிப்படை மனித உரிமையாக பிரகடனம் செய்ய மறந்ததால், கோடிக்கணக்கான இந்தியர்கள் கல்வியைன் பயனை பெறாமலே இறந்து போனார்கள். இன்றைக்கும் சர்வ சிக்ஷா அப்யான் என்ற அரசு கல்வி இயக்கம் இழுபறியில் சிக்கித் தவிக்கிறது. இந்தியா நமது இல்லம் என்று எடுத்துக்கொண்டால், நாம் நல்லாதனர் அறிவுரையை மதிக்கவில்லை என்று தான் தோன்றுகிறது.

    (தொடரும்)

    இன்னம்பூரான்

    11 11 2012

    உசாத்துணை:

    திரிகடுகம்: மூலமும், உரையும்: http://noolaham.net/project/35/3423/3423.pdf

    தமிழ் இணையக் கல்விக்கழகம்

    திரிகடுகம்:மூலமும்,விருத்தியுரையும்: http://www.tamilvu.org/library/libindex.htm

    சித்திரத்துக்கு நன்றி: http://img.dinamalar.com/data/images_news/tblfpnnews_63019526005.jpg

    Share