இந்த வார வல்லமையாளர்!
ஜூலை 21, 2014

இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு  திருமிகு. சீதா நடராஜன் அவர்கள்

seetha natarajan
இவ்வார வல்லமையாளர் விருதிற்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  திருமிகு. சீதா நடராஜன் அவர்கள் ஜித்து கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை நிறுவனத்தின், ரிஷி பள்ளத்தாக்கு பள்ளி (J.Krishnamurti Foundation – Rishi Valley School) யில் சமூகவியல் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.  தனது சமூகவியல் வகுப்பில்  செயல்முறைக் கல்விமுறையில்  மாணவர்களுக்கு பாடத்தை அறிமுகப்படுத்தும் முயற்சிக்காக  இவர் பாராட்டப்படுகிறார்.

வல்லமை ஆசிரியர் பவளசங்கரியின் பரிந்துரையில் சமூகவியல் பாடங்களை பெரும் முயற்சியுடன் செயல்முறை பாடங்களாக அறிமுகப்படுத்தும் திருமிகு. சீதா நடராஜன் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம். இவருடைய இணையதளம் :

வண்ணமயமான விளக்கங்கள் – நாகரீகத்தின் பாதையில் பிரயாணம் செய்யும் ஒரு வகுப்பு

கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ள சீதா நடராஜன் சமூகப் பாடங்களுடன்  ஆங்கிலம், சுற்றுச் சூழல் பாடங்களும் கற்பிக்கிறார். கற்றல் திறன் குறைந்த, சிறப்பு பயிற்சி தேவையான மாணவர்களுக்கு பாடம் நடத்தும் பயிற்சியையும் சீதா நடராஜன் பெற்றுள்ளார். நூல்கள், கவிதைகள், ஓவியங்கள் இவற்றிலும் ஆர்வம்  உள்ளவர் இவர்.

உலக மற்றும் வாழ்வியல் பார்வையை விரிவாக்கும் சமூகவியல் பாடங்கள் கல்விக்கூடங்களில் அதற்குரிய மதிப்பினைப் பெறுவதில்லை.  பலநாட்டு மக்களின் கலாச்சாரத்தை அறிவதன் மூலமும், நமது நாட்டின் பண்டைய  மக்களின் வரலாற்றையும் நாகரிகத்தையும்  அறிவதன் மூலமும், தொடரும் இந்தக் காலவெளியில், தொடர்ச்சியாக வாழ்ந்து வரும்  மனிதஇனத்தின் அருமையை நாம் உணர்ந்து பாராட்ட முடியும். மனித இனத்தின்  சிறப்பினை அறிவதன் மூலமாக  இக்காலகட்டத்தில் வாழும் நாமும் நம் பங்கை செம்மையாகச் செய்யவேண்டிய பொறுப்பும் நமக்கு விளங்கும்.   ஆனால் இப்பாடம் அதிக சிரத்தையின்றிதான் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.  மாணவர்களும்  ஆர்வமின்றிக் கடனே என்றுதான்  மதிப்பெண் பெறும் நோக்கத்தை மட்டுமே  முன்னிறுத்தி பயில்கிறார்கள். பிறகு  ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதது போல வாழ்க்கைக்கும் உதவாத கல்விப் பயிற்சியாக இது  பயனற்று முற்றுப் பெற்றுவிடுகிறது.

சிறந்த ஆசிரியர்களாக இருந்தாலும் பலர் மாணவர்களைக் கவரும் கோணத்தில் பாடங்களை வழங்க முயலுவதில்லை. இந்தப் போக்கினை மாற்றி, செயல்முறை அடிப்படையில் பாடத்தை அமைத்து, களப்பணிகள் பகுதியை உள்ளடக்கிய பாடங்களை கற்றுத் தரும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறார் சீதா நடராஜன்.

சைனா, எகிப்து, கிரேக்க நாடுகளையும், அவர்களது பண்டைய நாகரிகத்தின் வரலாற்றுடன், தற்கால வாழ்வியலையும் கற்கும் பாடமாக இருந்தால்,
1. அந்த நாட்டு நூல்களையும், படங்களையும், பொருட்களையும் சேகரித்து காட்சிக்கு வைத்து விளக்குதல்
2. அந்த நாடுகளின் இசை நாடகம் இலக்கியம் போன்றவற்றை அறிமுகப்படுத்துதல்
3. சிறு நாடகங்களை எழுதி நடித்தல், நாட்டியங்களை ஆடுதல் போன்ற கலைநிகழ்ச்சிகளையும்

உள்ளடக்கி பாடமுறையை வடிவமைக்கிறார்  சீதா நடராஜன்.

இவ்வாறு மாணவர்கள் பாடங்களை அறிவதன் மூலம் அவர்கள் ஆர்வம் தூண்டப்படுவதால், அதைத் தொடர்ந்த அடுத்த கட்டமாக பிறநாடுகளின் கலாச்சார நிகழ்வுகளுடன் நம் நாட்டு கலாசாரத்தை  ஒப்பிட மாணவர்களும் ஆர்வம் கொண்டு தானே முன்வருகிறார்கள்.

எடுத்துக்காட்டாக, சைனாவைப் பற்றிய பாடத்தில் அங்குள்ள மக்கள், இடங்கள், ஓவியங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றின் புகைப்படங்கள் மாணவர்களால் சேகரிக்கப்பட்டு, பள்ளியில்  ஒரு கண்காட்சியை நடத்தியிருக்கிறார் சீதா நடராஜன்.  மாமன்னர்  சின் ஹுயாங்க்டி பற்றிய அறிமுகத்தில், மன்னரின் கல்லறைக்கருகில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த உயிருள்ள மனிதர்களின் அளவில் வடிக்கப்பட்டிருந்த சுட்டகளிமண் பொம்மைகளான வீரர்கள் குதிரைகள் போன்ற பொம்மைகளை குயவர்களின் உதவியுடன் களிமண்ணில் உருவாகியிருக்கிறார். சைனாவின் புகழ்பெற்ற டிராகன் நடனம் மாணவர்களால் சைனா மக்களின் உடையலங்காரத்துடன் நடத்திக்காட்டப்பட்டிருக்கிறது. சீன மக்களின் மத நம்பிக்கைகைகள், இறப்பிற்கு பின்னர் ஆவி, வாழ்வு சடங்குகள் போன்ற நம்பிக்கைகள் விவாதிக்கப்பட்ட பொழுது , மாணவர்களே விவாதத்தை முன்னெடுத்து இந்திய மக்களின் கலாச்சாரத்துடன் அவற்றை ஒப்பிட்டு அறிய ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்.

அத்துடன் இந்த ஒப்புநோக்கும் ஆய்வு பிறமத சடங்குகள், நம்பிக்கைகள் எனவும் விரிவாக்கப்பட்டிருக்கிறது. பிறகு இவையாவும் இக்காலத்திற்கு பொருத்தமானவையா, இவற்றின் குறை நிறைகள் என்ன? என்ற கோணத்திலும் மாணவர்கள் தங்கள் கற்றலை விரிவுபடுத்தியிருக்கிறார்கள்.  மன்னராட்சி, அரசபரம்பரை அவர்களது  அரசாளும் உரிமையைப்  பெறும் நிலை, இக்கால அரசாங்க அமைப்புகள் என்றும் பாடம் தொடர்ந்திருக்கிறது. கன்பூஷியஸ் வழங்கிய வாழ்வியல் தத்துவங்கள் பள்ளியைத் தோற்றுவித்த   சிந்தனையாளர் ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரைகளுடன் ஒப்பிட்டு நோக்கப்பட்டிருக்கிறது.

சைனா  போன்றே மற்ற பிறநாடுகளும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.  எகிப்தின் புராதனம்,  கிராக்க நாட்டின் மக்களாட்சி முறையின் ஆரம்பம், புராணக்கதைகள், தத்துவ மேதைகள், போர் நிகழ்சிகள் என பாடங்கள் செயல்முறை வடிவெடுத்து மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. வெறுமே நூலில் தொடர்புகள் புரியாது பாடங்கள் படிப்பது, தேர்வுக்கு பிறகு படித்ததை மறப்பது என்ற வகையிலிருந்து இது மாறுபட்ட வகையில் நினைவில் நிறுத்தப்பட்டது என்பதை மாணவர்களின் நினைவுகூர்தல் மூலம்  அறியும் வாய்ப்பும் சீதா நடராஜனுக்கு கிடைத்திருக்கிறது.

இவரைப் பாராட்ட விரும்புவோருக்காக, இவரது மின்னஞ்சல் முகவரி: nats_k@yahoo.com

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

 

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

 1. வல்லமையாளர் விருது பெறும் திருமிகு.. சீதா நடராஜன் அவர்களுக்கு…

  இதயபூர்வமான வாழ்த்துகள்.
  ஆசிரியர் பணி என்பது தொழில் அல்ல. அது ஒரு சேவை.
  சமுதாய உருவாக்கத்தில் உங்களின் பங்களிப்பு முதன்மையானது. வளர்ச்சி.. முன்னேற்றம்.. என்பவையும் உங்களைச் சார்ந்த காரணிகளாகவே அமையும். ஒவ்வொரு மாணவனும் / மாணவியும் நல்ல ஆசிரியரால் அறிவுச் செல்வம் பெறுகிறார்கள்.

  வளர்ந்துவரும் தொழில்நுட்ப உலகில்.. மாணாக்கர்களின் கவனத்தை ஈர்த்து.. அவர்தம் திறம் மேம்பட நீங்கள் எடுத்து வரும் முயற்சிகளும் செயல்முறை வகுப்புகளும் பாராட்டுக்கு உரியன மட்டுமல்ல .. ஏனைய ஆசிரியப் பெருமக்களும் பின்பற்றக் கூடியதாகும்.

  எந்த ஒரு செயலிலும் முன்மாதிரியாகத் திகழ்வது என்பது .. அதுவும் சமுதாய நலன் சார்ந்து அமையும்போது..
  அவ்வாறு ஈடுபடுவோருக்கு ஆத்ம திருப்தியைத் தரும் என்பது நிச்சயம்.
  உங்கள் சேவை சிறக்க… பாராட்டுகள் குவிய பரிசு மழை பொழிய.. வல்லமை கண்டெடுத்த உங்களுக்கு வல்லமையாளர் விருது பொருந்தும்.
  வாழ்க.. வாழியவே!

  அன்புடன்..
  காவிரிமைந்தன்
  http://www.thamizhnadhi.com

 2. வல்லமைத் திறனாளியாக ஓர் உன்னதக் கல்வி பயிற்சியாளர் திருமதி. சீதா நடராஜன் அவர்களைத் தேர்ந்தெடுத்து, தமிழ்கூறும் வலை உலகுக்கு அறிமுகம் செய்த தேமொழிக்கும்,  திறனாளி சீதா நடராஜனுக்கும் என்னினிய பாராட்டுகள்.

  சி. ஜெயபாரதன்

 3. Good choice. I congratulate madam seetha. Spreading the light of wisdom is the best service that one could render. Let this award encourage seetha to continue her service with zeal and fervour.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.