ஜூலை 20, 2015

இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு சொற்பொழிவாளர் இசைக்கவி இரமணன் அவர்கள் 

 

 

best of isaikkavi -ramanan

இந்த வார வல்லமையாளராகப் பாராட்டப்படும் இசைக்கவி இரமணன் அவர்களைப் பற்றிய ஒரு அறிமுகம் முற்றிலும் தேவையற்றது. அவரது இலக்கிய பகிர்வுகளில் மூழ்கித் திளைத்திராத தமிழரும் இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் முன்னுரையாக ஓரிரு அறிமுக வரிகள் தரவேண்டும் என்ற மரபில் அடுத்து சில வரிகள் அவரைப் பற்றி இங்கு தரப்படுகிறது. நெல்லையில் பிறந்த இசைக்கவி இரமணன், கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், தொகுப்பாளர் எனப் பன்முகத் திறமை கொண்ட பல்கலை வித்தகர் என்று அறியப்படுகிறார். ‘தி இந்து’ பத்திரிகையில் 28 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.

இசைக்கவி இரமணன் பொதிகை தொலைக்காட்சியில் “கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்” என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியும், அகில இந்திய வானொலியிலும் பல சொற்பொழிவுகளையும் ஆற்றியுள்ளார். தற்பொழுது சங்கரா தொலைக்காட்சியில், மஹா பெரியவா என்று போற்றி வணங்கப்படும் காஞ்சி மகான் அவர்களைப் பற்றி தினமும் காலை 5.40 மணிக்கு ‘காஞ்சி மகான் பற்றிய சொற்பொழிவுகளை வழங்கி வருகிறார். இதுவரை ‘காஞ்சி மகான்’ பற்றி 139 சொற்பொழிவுகளை இந்நிகழ்ச்சியின் மூலம் வழங்கியுள்ளார் (https://www.youtube.com/watch?v=tzYeHk_Zoz8&list=TLp3FHEL4CnDUxNzA3MjAxNQ).

வல்லமை இதழின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர் இசைக்கவி ரமணன். வல்லமை இதழ் தொடங்கிய 2010 ஆம் ஆண்டு, ஒரு நூல் அறிமுகக் கட்டுரையை வல்லமையில் எழுதியது முதல், வல்லமை இதழின் வளர்ச்சியில் தனது படைப்புகளின் மூலம் தொடர்ந்து பங்களித்து வருகிறார். வல்லமை தனது ஐந்தாண்டு இலக்கியப் பயணத்தைக் கடந்து ஆறாம் ஆண்டில் காலடி வைத்ததைக் கண்டு மகிழ்ந்து, வாழ்த்துக் கவிதையொன்றையும் வழங்கி பாராட்டி மகிழ்ந்தார். கவிதையின் சிறு பகுதி கீழே, முழுக்கவிதையையும் இந்தச் சுட்டி வழி சென்று ஆண்டுவிழாக் காணும் வல்லமைக்கு வாழ்த்து! (- https://www.vallamai.com/?p=57588) படிக்கலாம்.

[…]
பல்லாண்டு வாழ்க! பலநூறு காண்க!
பைந்தமிழின் களஞ்சியமாய்ப் பலவிதமாய் விரிக!
சொல்லாண்டு வாழ்க! சுவைபலவும் காண்க!
சோகமே இல்லாத சொர்க்கமாக விரிக!
எல்லோர்க்கும் இடம்தந்தே மிகவிரிந்து வளர்க! இந்த
ஏழைக்கும் இடம்தந்தீர் என்நன்றி ஏற்க!
வல்லோரின் சங்கமத்தில் வளரட்டும் வல்லமை
வழிநெடுகத் துணையாக வாழ்த்தட்டும் சிவனுமை!

சென்ற ஆண்டின் மகளிர் தினத்தை (மே 2014) முன்னிட்டு வல்லமை இதழ் ‘அன்புள்ள மணிமொழிக்கு’ என்ற தலைப்பில் நடத்திய கடித இலக்கியப் பரிசுப் போட்டியின் (https://www.vallamai.com/?p=44563) நடுவராகப் பொறுப்பேற்று வெற்றியாளர்களைத் தேர்வு செய்து வழங்கியதுடன், படைப்புகளின் சிறப்புகள் கண்டு  மனம் மகிழ்ந்து, வழக்கமான, குறிப்பிட்ட முதல், இரண்டு, மூன்று, ஆறுதல் பரிசுகளையும் தேர்ந்தெடுத்த பின்னர்; தனது சார்பாக மேலும் அறுவரைத் தெரிவு செய்து சிறப்புப் பரிசு என, அவரே  தலா ரூ. 200 பரிசுத் தொகையை ஒவ்வொருவருக்கும் வழங்கி மகிழ்ந்தவர். வல்லமை இதழ், எழுத்தாளர்களின் எழுத்துகளின் மேன்மையைக் கருதி சிறப்புப் பிரிவு ஒதுக்கிய எழுத்தாளர்களுள் இசைக்கவி இரமணனும் ஒருவர். இசைக்கவியின் இதயம், கவிப்பேழை ஆகிய பிரிவுகளின் கீழ் இசைக்கவி இரமணனின் பல்வேறு படைப்புகள் தொடர்ந்து சென்றவாரம் வரை வல்லமையில் வந்துள்ளன.

சென்னைக் கம்பன் கழகமும், பாரதிய வித்யா பவனும், சென்னை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து, ‘ஔவையின் ஆத்திசூடி’ என்ற தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியை 2011 ஆண்டு சென்னையில் நடத்தின. அந்த நிகழ்ச்சியில் ‘ஆறுவது சினம்’ என்ற தலைப்பில் இசைக்கவி ரமணன் சொற்பொழிவு நடத்தினார். அதுமட்டுமன்று, இன்றுவரை சென்னை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் பல இலக்கிய சங்கங்களுடன் இணைந்து வழங்கும் இலக்கிய விழாக்களில் சொற்பொழிவாற்றி வருகிறார். சென்ற சனிக்கிழமையன்று ‘(ஜூலை, 18, 2015) , தத்வலோகா – ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து வழங்கும் தொடர் நிகழ்ச்சியின் குறள் விளக்கம் என்ற சொற்பொழிவொன்றையும் வழங்கியிருக்கிறார்.

திறமைமிகு புலவர்கள் அக்காலத்தில் அரசவைப் புலவர்கள் என்ற பெருமையுடன் மன்னர்களின் அரசவையை அலங்கரித்தது போல, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் அரசவை சொற்பொழிவாளர் போன்று தொடர்ந்து அவர்கள் நடத்தும் இலக்கியக் கூட்டங்களில் சொற்பொழிவுகள் நடத்தி வருகிறார் இவர். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நடத்தும் மாதாந்திரத் தொடர் சொற்பொழிவுகளில் ஒன்றான, தேவியும் மனிதனும் (தசமஹா வித்யா) என்ற தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாதமும் பராசக்தியின் ஒவ்வோர் அம்சம் பற்றிய விளக்கங்கள் வழங்கி வருகிறார். சென்ற வாரம் வியாழக்கிழமையன்று மாலை, சென்னை பாரதிய வித்யா பவனில், தசமஹா வித்யையில் ஏழாவதாய் வரும் தூமாவதி தேவியைப் பற்றி சொற்பொழிவாற்றினார். இந்த உரையின் கட்டுரை வடிவத்தை வல்லமையில், சென்ற வெள்ளிக்கிழமையன்று தசமஹா வித்யா – 7 ஆம் வித்யை – தூமாவதி என்று அவர் வழங்கிய கட்டுரையின் (https://www.vallamai.com/?p=59719) மூலம் அறியலாம்.

அழிவின் ஆயாசத்திற்கும் ஆக்கத்தின் ஊக்கத்திற்கும் இடையே உள்ள நிலை, அந்த நிலையின் உருவகம்தான் தூமாவதி! தூமாவதி பற்றியும், அவள் தோற்றம் செயல் பற்றியும் விளக்கும் இசைக்கவி இரமணனின் கட்டுரை இங்கு சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. கவிதைகளையும், மேலும் விளக்கங்களையும் காண “தசமஹா வித்யா – 7 ஆம் வித்யை – தூமாவதி” கட்டுரையைப் படிக்கவும்.

ஒளிக்கு விளக்கமுண்டு. இருட்டுக்கு விளக்கமேது, துலக்கமேது, திகழ்ச்சியேது?
இன்மையிலிருந்தே இருப்பு.

ஆனால், ஒளிக்கு இத்தனை சிறப்பிருப்பதற்குக் காரணம், இருள் என்று ஒன்று இருப்பதால். அதாவது இல்லாத ஒன்று இருப்பதால். அந்த இல்லாத ஒன்றாகிய இருட்டிலிருந்துதான், இருப்பு என்னும் ஒளி தோன்றுகின்றது.

அந்த இல்லாதது என்பது மூன்று வகைப்படும்:
1. ப்ராக் அபாவம் – இருப்பது எழுவதற்கு முந்தைய நிலை – விதையிலிருந்து மரம் எழும். அது எழுவதற்கு முன் அங்கே மரம் இல்லை

2. ப்ரம்வம்ச அபாவம் – இருப்பது அழிந்த நிலை – பானை உடைந்ததால் இல்லாமல் போன நிலை

3. அத்யந்த அபாவம் – எப்போதுமே இல்லாதது – முயற்கொம்பு, கானல் நீர்

ஆனால், இல்லாதது என்பது அறவே இல்லாத சூனிய நிலை இல்லை:

· விதையில் மரத்தின் கருத்து இருப்பதால்தான், அது உந்துவதால்தான் விதை விழிக்கிறது

· மண்ணிலிருந்து விளைந்த பானை மண்ணிலேயே சேர்வது, தோற்றத்தின் மாற்றமே

· நீரைக் கண்ட நினைப்புதான் கானலில் நீரைக் காண வைக்கிறது. கொம்பின் ஞாபகம்தான் அதை, அது இல்லாத முயலில் பொருத்திப் பார்க்கிறது

அறியாமைக்கும் அறிவுக்கும்
இருளுக்கும் ஒளிக்கும்
அழிவுக்கும் தோற்றத்திற்கும்
ப்ரளயத்திற்கும் படைப்புக்கும்
இடையில் இருக்கின்ற இருட்டும் வெளிச்சமுமான நிலை,
அழிவின் ஆயாசத்திற்கும் ஆக்கத்தின் ஊக்கத்திற்கும் இடையே உள்ள நிலை, அந்த நிலையின் உருவகம்தான் தூமாவதி!

ஆதிப் பரம்பொருளின் ஊக்கம், அவளை
அன்னையெனப்பணிதல் ஆக்கம் என்பான் பாரதி.

சந்திகளின் உருவகம்
இரவுக்கும் பகலுக்கும் இடையே ஒரு சந்தி, அது வைகறை
பகலுக்கும் இரவுக்கும் நடுவில் ஒரு சந்தி, அது அந்திப் பொழுது
முதல் சந்திக்கும், இரண்டாவது சந்திக்கும் மத்தியில் ஒரு சந்தி, அது உச்சிப் பொழுது

அது போல, படைப்புக்கும், பிரளயத்துக்கும் இடையே ஒரு சந்தி
பிரளயத்துக்கும், படைப்புக்கும் நடுவே ஒரு சந்தி
தூமாவதி, இந்த இரண்டு சந்திகளைக் குறிக்கிறாள்.

ஒன்று, படைப்புக்கு முந்தைய நிலை.
இரண்டு, அழிவுக்கு முந்தைய நிலை.

அழிவுக்குப் பின் நேரும் ஆயாசம் இளைப்பாறத் தோதான மடியாகவும் இருக்கிறாள்.
ஆக்கத்திற்கு முன்னிருக்கும் எண்ணமற்ற தன்னந்தனிமையாகவும் இருக்கிறாள்.
வீட்டைக் கூட்டும் விளக்குமாறாகவும் இருக்கிறாள். விளக்கு ஏற்றப்படும் முன் எண்ணெய்யும் திரியும் நிமிண்டும் நேரமாகவும் இருக்கிறாள்.

[…]

இவளே காலராத்ரி, மோஹராத்ரி, மஹாராத்ரி.
ஒவ்வொரு தேவிக்கும் தேவன் உண்டு. ஆனால் தூமாவதிக்குக் கணவன் கிடையாது. ஏன்?
பிரளயத்துக்கும், படைப்புக்கும் உள்ள இடைவெளியில், சக்தியைப் பிரிந்த சிவன் சவமாக இருக்கிறான்.
அந்த இடைவெளியின் உருவகம்தான் தூமாவதி.
அது, இருட்டு முழுவதும் அகலாத, ஒளி சரியாய்ப் புலர்ந்துவிடாத புகை நிலை. புகை, நெருப்புக்கு அறிகுறி. தூமாவதி, இனி தோன்றப் போகும் படைப்புக்கு அறிகுறி.

[…]

படைப்புக்கெல்லாம் மூத்தவளாயிற்றே, அதனால் மூத்த தேவி, மூதேவி, ஜ்யேஷ்டா, தவ்வை.
எல்லோருக்கும் முந்தியவள் என்பதால் கிழவி. உடைந்த பற்கள், குறைந்த பற்கள் கொண்டவள்.
உயிர்களைப் புடைத்து அகற்றுபவள் என்பதால் கையில் முறம் வைத்திருப்பவள்.
அவ்விதம், காலனின் தன்மை இருப்பதால் அவளுடைய வாகனமும், கொடியும் காக்கைதான்.
வெளுத்த முகம், நீண்ட கைகள், கால்கள், தொங்கும் முலைகள், பெரிய காதுகள், கொடூரமான பார்வை.
அழுக்கடைந்த உடைகள் கொண்டவள். மங்களங்களுக்கு விரோதமான குணங்களையும் தோற்றத்தையும் கொண்டிருப்பதால் இவள் துஷ்டா எனப்படுகிறாள்.

வாழ்ந்தே புரிவது வாழ்க்கை, அதில்
வருவதும் செல்வதும் இயற்கை
வழுக்கி விழுந்தபின் எழுவதில்தான்
வளரும் மானிட மேன்மை
சூழ்ந்தே புரிவது உறவு, அதில்
சுவாரசியம்தான் பிரிவு
சுடரை இருளும் இருளைச் சுடரும்
ஒருபோதும் விழுங்காது!

என்பது போன்ற அழகிய கவிதைகள் சொல்லும்…

வல்லமைமிகு கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், பல்கலை வித்தகர் என அயராது பலதுறைகளிலும் பங்களித்து, தமிழக மக்களை பல்வேறு ஊடகங்கள் வழியாகவும் மகிழ்விக்கும் இசைக்கவி இரமணன் அவர்களுக்கு வல்லமை  இதழின் பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகின்றன.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

தொடர்புக்கு:
ஃபேஸ்புக் வலைத்தளம்: https://www.facebook.com/venkateswaran.taruvai?fref=ts

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

  1. by conferring the VallamaiyALar viruthu to my dear friend Ramanan, Vallamai  minnithazh than viruthukkup Perumal sErththuk koNduLLathu.

    VAzhththukaL, NaNbA!

    Su.Ravi

  2. ramanan’s greatness is unquestionable. It transcends all our overt appreceation. He shares the same spark that we found in barathi. Best wishes to him.

  3. கம்பீரமான சொற்பெருக்கு, மிடுக்கான உரைவீச்சு, கரை புரளும் இசை வெள்ளம், எடுத்த பொருளைத் துலக்கமுறச் செய்யும் தெளிவு, கேட்டாரைப் பிணித்து, கேளாரையும் விரும்பச் செய்யும் சொல்லாட்சி, கொஞ்சும் தமிழ், குழந்தை உள்ளம் என வளரும் இவர் பெருமை, சொல்லவும் எளிதோ!

    இசைக்கவி, என்றென்றும் வாழ்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.