கிரேசி மோகன்
————————————-

நெறியா புருவம் நகரா இமைகள்
புரியாதோர் அஞ்சிடும் பார்வை -சரிவாக
தேசொளி மூவிழியால் நாசி நுனியினை
ஈசனார் நோக்கு இருப்பு….(170)

மின்னலிடி இல்லாத மேகமாய், பொங்கலை
இன்னதென்(று) அறியாத தண்ணீராய் -விண்ணென
காற்றற்று நிற்கும் குத்து விளக்காயுள்
காற்றடக்கி காட்சி கொடுப்பு….(171)

முண்டக நூலினை மிஞ்சிடும் மென்மையும்
கண்டுமதி மங்கும் கிளரொளியும் -மண்டையின்
உச்சிக்கண் தோன்றும் ஒளிக்குவமை தந்தமர்ந்தான்
சச்சிதா னந்த சிவன்….(172)

ஒன்பது வாயிற்கண் ஓடாது யோகத்தால்
தன்பதுமை நெஞ்சை தன்னகத்துக் -கண்புதைத்து
ஆன்றோர் உணர்ந்த அழிவற்ற ஆன்மனில்
தான்தோன்றி தன்னுள் திளைப்பு….(173)

எண்ணத்தால் கூட எதிர்க்க இயலாமுக்
கண்ணத்தன் கோலத்தால் காமனஞ்சி -என்னத்தை
செய்வதென்று சோர்வுற, சொல்லாமல் வில்லம்பு
மெய்வசத்தை நீங்கி மணல்….(174)

உற்சாகம் குன்றி உருக்குலைந்த காமனுக்கு
நற்சேதி கூறலாய் நேர்ந்தது -தற்செயலாய்
பொற்சிலை பார்வதி பாங்கியிரு பெண்தொடர
சிற்சபையில் வைத்தாள் சிலம்பு….(175)….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *