இந்த வார வல்லமையாளராக ஆய்வறிஞர் ஐராவதம் மகாதேவனை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. சங்க காலத்தில் பேச்சுமொழியில் இருந்து எழுத்து மொழியாக மாறுவதற்குப் பிராமி எழுத்து அடைந்த மாறுதல்களையும், அதற்கான படிநிலை வளர்ச்சிகளையும் கண்டு பெருநூலாகப் படைத்தவர். சிந்து சமவெளி ஆய்வு தொல்திராவிட மொழி பேசுபவர்களால் ஆளுமை செய்யப்பட்ட நாகரீகம் என்பதனைப் பற்றி பல ஆழமான கட்டுரைகளை அரை நூற்றாண்டு காலமாக வெளியிடும் திரு. ஐராவதம் மகாதேவம் அக்டோபர் 2-ம் தேதி அன்று 88 வயது பூர்த்தி ஆகி, 89-ஆம் ஆண்டில் புகுகிறார். அன்னார் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வல்லமை வாழ்த்தையும், வணக்கத்தையும் தெரிவிக்கிறது

.

அக்டோபர் 2, 1930-இல் மண்ணச்சநல்லூரில் பிறந்தார். இவர் திருச்சியில் உள்ள செயிண்ட் ஜோஸப் கல்லூரியிலும் பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார். 1954-இலிருந்து 1981-வரை இந்திய ஆட்சிப் பணியிலும், 1987 – 1991 வரை தினமணி இதழின் ஆசிரியராகவும் பணி புரிந்தார். இவரது முதல் புத்தகம் 1977-ல் வெளியானது. ‘தி இண்டஸ் ஸ்கிரிப்ட்: டெக்ஸ்ட்ஸ், கன்கார்டன்ஸ் அண்ட் டேபிள்ஸ்’ என்ற நூல் சிந்து சமவெளி எழுத்தாய்வுகளுக்கு முக்கியமான தூண்டுகோல் ஆயிற்று. பின்னர், தமிழ் பிராமி கல்வெட்டுகளை முழுமையாக ஆராயும் நூலை 2003-ல் எழுதினார். கல்வெட்டியலைப் போன்றே ‘தினமணி’ இதழின் ஆசிரியராக (1987-1991) பணியாற்றிய காலகட்டத்தில் இலக்கியம், அறிவியல் போன்ற துறைகளின் வளர்ச்சிக்கு உதவியுள்ளார்.

இந்திய பழைய வரலாற்றை அறிந்துகொள்ள, சென்ற இரண்டு நூற்றாண்டுகளில் மூன்று மிக முக்கியமான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன:
(1) இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம் – சர் வில்லியம் ஜோன்ஸ் – 1786.
(2) தமிழ் அதன் திராவிட மொழிக் குடும்பம் – பிரான்சிஸ் வைட் எல்லிஸ் – 1816.
(3) சிந்து சமவெளி நாகரீகம் கண்டுபிடிப்பு – சர் மார்ட்டைமர் வீலர் – 1924.

திராவிட மொழிக்குடும்பம் என்ற மொழியியல் கோட்பாட்டை உலகுக்கு அளித்தவர் F. W. எல்லிஸ். சென்னையில் கலெக்டராக இருந்தவர். அவர் எழுதிய திருக்குறள் மொழிபெயர்ப்பைச் சொல்லின் செல்வர் ரா, பி. சேதுப்பிள்ளை மறுபதிப்புச் செய்தார். எல்லிஸ் 300 நூல்களில் இருந்து (இப்போது அழிந்துபோன வளையாபதிக் காப்பியம் உட்பட!) மேற்கோள் காட்டியுள்ளார். அவர் 200 ஆண்டுகள் முன்னர் திருவள்ளுவர் சமணர் என்று ஆய்ந்து, சென்னை அரசாங்கத்தால் சமணர்கள் திருவள்ளுவரை வழிபட்ட உருவத்தைத் தங்க நாணயமாக வெளியிட்டார். அதனைக் கண்டறிந்து ஐராவதம் மகாதேவன் உலகறியச் செய்தார். திருவள்ளுவரின் திருமேனி தங்கிய தங்கக் காசு:
http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=524
http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=539

தமிழ் பிராமி எழுத்து வட இந்தியாவில் இருந்து கர்நாடகம் வழியாக சமணர்களால் தமிழகம் வந்த வரலாற்றையும், தமிழுக்கு ஏற்ப மாறும் படிநிலைகளையும் நன்கு ஆராய்ந்து சங்க காலக் கல்வெட்டுகளை யாரும் படித்து அறியும் துறையைச் செய்தவர் ஐராவதம். சம காலக் காசுகளில் உள்ள பிராமிக்கும், தமிழில் புள்ளி ஏற்படும் கல்வெட்டுக் காலத்தைக் கணித்து, பல நூற்றாண்டுகள் [பார்க்க: கமில் சுவெலெபில் கூறும் தொல்காப்பியக் காலக்கோடு [1] ] வளர்ந்த தொல்காப்பியத்தின் முக்கியக் காலகட்டம் என்பது கி.பி. 2-ஆம் நூற்றாண்டு என அறிவியல் ரீதியாகத் தெளிவித்தவர் ஐராவதம் ஆவார். புள்ளிக் கோட்பாடு தமிழ் பிராமியில் ஏற்பட்டதால் தான் தொல்காப்பியர் அதுபற்றிப் பேசுகிறார். புள்ளிக் கோட்பாட்டால் தான் ஏனைய இலிபிகள் போலன்றி, தமிழில் கூட்டெழுத்துகள் இல்லாமல் எளிதான எழுத்தாகத் தமிழ் விளங்குகிறது, அதனால்தான், முதலில், தமிழுக்கு மற்ற இந்திய மொழிகளுக்கு முன்னரே தட்டச்சு, கணினியில் எழுதுரு ஏற்பட்டன. தினமணி பத்திரிகையின் ஆசிரியராக இருந்தபோது, முக்கிய மாற்றங்களைக் கொணர்ந்தார். உ, ஊகார உயிர்மெய் எழுத்துகளும், மலையாளத்தார் செய்வது போல, பெரியார் பரிந்துரை ஏற்கப்பட்டு, பிரித்து எழுதப்படலாம் என்ற கொள்கையுடையவர் ஐராவதம்.

https://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/Tamils-were-never-lsquoAryanisedrsquo/article16885688.ece

(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 )

Notes:

[1]  K. Zvelebil wrote on the question of the date of Tolkappiyam in pp. 138-147, Smile of Murugan, 1973.

(a) “The earliest, original version of the Tolkappiyam belongs to the ‘pre-Cankam’ period; the oldest layer of the grammar is somewhat earlier in time than the majority of extant classical Tamil poems.”
(b) Approximately the 5th century AD is fixed by him “as the earliest possible date of Porulatikaram, and as the date of the final redaction of the Tolkappiyam.”
(c) “Thus, the nuclear portions of Tolkappiyam were probably born sometime in the 2nd or 1st century BC., but hardly before 150 BC… The final redaction probably take place before the 5th century AD., so that the ultimate shape of the suutras as we have them before us is probably not earlier than the middle of the first millennium of our era.”

 

It is sad news that Sri. Iravatham Mahadevan is no more. On the day he passed away, I wrote this note in googlegroups.

தொல்லியல் மேதையாக விளங்கிய ஐராவதம் மகாதேவன் இன்று காலமாகிவிட்டார். அவரது இடத்தை நிரப்ப எதிர்காலத்தில் தமிழர்கள் தோன்றவேண்டும். சங்க கால தமிழ் கல்லெழுத்துக்கு “தமிழ் பிராமி” எனப் பெயரிட்டு அழைத்தவர் அவரே. விஞ்ஞானப் பூர்வமான முறையில் தொல்காப்பியர் காலத்தைப் புறச்சான்றுகள் மூலம் நிறுவினார். அதற்கு அவர் தமிழ் பிராமியில் புள்ளி உருவாகும் கல்வெட்டுகள், நாணயங்களைப் பயன்படுத்திய முறை வெகு நேர்த்தியானது.

நான்கைந்து முறை ஐராவதத்தைச் சந்தித்து இருக்கிறேன். எப்பொழுதும் எங்கள் தாத்தா அவரது நண்பர் என்பார். ‘காலை எழுந்தவுடன் காப்பி’ … என்று பாரதியார் பாட்டை மாற்றி காப்பி குடிக்கக் கேட்பார். இரா. நாகசாமி, ஐராவதம் இருவரும் 1930-ல் பிறந்தவர்கள். ‘கடலோடி’ நரசையா ஐராவதத்தின் பிறந்தநாளை நினைவூட்டினார். அதனால் ஐராவதம் மகாதேவன் வாழ்ந்த காலத்தில் வல்லமை இ-இதழிகையில் வல்லமையாளராக அவரது கடைசி பிறந்தநாளின் போது அறிவிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. https://www.vallamai.com/?p=88261

தமிழ் பிராமி எழுத்துக்கு உயிர்கொடுத்த ஐராவதம் மகாதேவன் மறைவு
https://www.bbc.com/tamil/india-46344293

Iravatham Mahadevan, leading scholar on the Indus Valley and Tamil Brahmi scripts, passes away
https://www.thehindu.com/news/national/tamil-nadu/iravatham-mahadevan-leading-scholar-on-the-indus-valley-and-tamil-brahmi-scripts-passes-away/article25595085.ece

ஐராவதத்துடன் போனிலும், மின்னஞ்சலின் வாயிலாகவும் 22 ஆண்டுக் காலம் தொடர்பில் இருந்தேன். இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்திலும், திராவிட மொழிகளிலும் நதிகளின் பெயர்கள் பெண்ணாக அமைவதைப் பற்றி விரிவாகப் பேசியுள்ளோம். அப்போது, சி-டமில் குழுவிலே, ஏற்றை என்பது ஆண் பனை, பெண்ணை என்பது பெண்பனை. பயன் கருதி, மாடு (cf. மடி) என்னும் பெண் பசுவுக்கான சொல், வேளாண்மை தொழிலர்களால் காளை(அ) எருதுக்கும் சில சமயங்களில் வருவதுபோல் என்ற கருத்தை மிகப் பாராட்டினார். பின்னர் எழுந்ததே விரிவான விளக்கங்களுடன் எழுதிய பதிவு:
ஏற்றை (ஆண்பனை), பெண்ணை (பெண்பனை) – பனை மரங்களில் பால் பாகுபாடு. ழான் செவ்வியார் மறுமொழி காண்க.
http://nganesan.blogspot.com/2011/06/pennai-female-palmyrah-tree.html

கரிய பெண்ணை என்னும் நதிப்பெயர் கிருஷ்ணா (கிருஷ்ணவேணீ) என சம்ஸ்கிருதமயப்படுத்தப் பெற்ற பெயர். பழைய தமிழ்ப் பெயரைக் கம்பன் பாடியுள்ளான். ஹெச். லூடர்ஸ், மிகப் பழைய பிராகிருத சிலாலிகிதங்களின் நூலை வெளியிட்டார். அதில் “நோடகிரீசுவரசுவாமி” என கிருஷ்ணா (பெண்ணை ) நதி தோன்றுமிடத்தில் உள்ள சிவன் பெயர் நாளகிரி/நாடகிரி தானா என வினவியபோது, “இருக்கலாம். நோ நா இரண்டுக்கும் வித்தியாசம் மிகக் குறைவு பிராமியில். எஸ்டாம்ப்பேஜ் பார்க்கணும்” என்றார்.

பொள்ளாச்சியில் ஸப்-கலெக்டர் பணி தான் அவரது முதல் வேலை. 1967-ல் தேர்தல் ஒரு சவாலாக அமைந்தது என்று கூறியுள்ளார். சிந்து கன்கார்டன்ஸ் நூல் எழுத, வா. செ. குழந்தைசாமியையும், ஐராவதத்தையும் அழைத்து கணினி கிண்டி பொறியியல் கல்லூரி உதவிக்கு பரிந்துரை செய்வதும், குகைகளில் பிராமி எழுத்துக்களைப் படிக்க சாரங்களை ஏபிடி கம்பெனியார் கட்டித் தந்து உதவியதும் மறக்க முடியாது என்பார்.

பாங்காக்கில் 2016-ல் “மழுவாள் நெடியோன்” என்னும் Anthropomorpic Axe வடநாட்டில் வருணனுக்கு உண்டான வடிவம் தென்னகம் இரும்புக் காலத்தில் வருவதும், மிகப்பெரிய சிற்பமாக வடிவெடுப்பதும் பற்றி எழுதிய கட்டுரையைக் கூர்ந்து படித்து, “very deep obsevation” என்று குறிப்பிட்டு எழுதினார். ஐராவதத்தின் மின்னஞ்சல்களை முழுதும் படித்து ஒரு கட்டுரை எழுதவேண்டும்.

2 மாதம் முன்பு தான் நண்பர் ஆர். பாலகிருஷ்ணன் சொற்பொழிவுக் காணொளியில் ஐராவதத்தைக் கண்டேன். உடல் மிக ஃப்ராஜைல் ஆக உள்ளது என எழுதியிருந்தேன். அதைக் குறிப்பிட்டு திரு. நரசையா அவர்களுக்கு கைப்படக் கடிதம் எழுதியிருந்தார். அதை இணைத்துள்ளேன். அவரது வாழ்நாள் பணியைக் குறிப்பிடும் இக் கடிதம் தட்டச்சாக்கணும்.

தமிழின் தொன்மையை சிந்து சமவெளி ஆய்வுகளாலும், வடக்கே இருந்து வந்த ப்ராமி எழுத்து தமிழுக்காக மாறிய வரலாற்றையும் ஆராய்ந்த பெருமகன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களுடன். ~NG


பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “இந்த வார வல்லமையாளர் (282)

  1. வல்லமையாளர், அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். அவரது பணிகள் சிறக்கவும் நீடு வாழவும் நிறைவாழ்வு காணவும் வாழ்த்தி மகிழ்கிறோம்.

  2. ஐயா அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். நீடுதோறும் உடல்நலத்துடன், மனநலத்துடன் வாழ வாழ்த்துகள். வணக்கம்.

  3. கல்வெட்டு, தமிழ் சாா்ந்த ஆய்வு போன்றவற்றிலும், தமிழின் தொன்மையை அறிவதில் காத்திரமான பங்களிப்பை செய்த ஐயா அவா்கள் இதற்கு பொறுத்தமானவா். வல்லமைக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.