நெல்லைத் தமிழில் திருக்குறள்- 105

நாங்குநேரி வாசஸ்ரீ
105. நல்குரவு
குறள் 1041
இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது
வறுமை ங்கதக் காட்டிலும் கொடும எது னு கேட்டா, வறும கணக்கா சங்கடம் வறும ஒண்ணுதான்.
குறள் 1042
இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்
வறுமை னு சொல்லப்படுத பாவி ஒருத்தன அண்டிச்சின்னா அவனுக்கு இப்பமும் வருங்காலத்திலும் சந்தோசமும் நிம்மதியும் இல்லாமப் போவும்.
குறள் 1043
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குர வென்னும் நசை
வறுமைனு சொல்லப்படுத பேராசை ஒருத்தனுக்கு ஏற்பட்டிச்சின்னா அது அவன் பரம்பரப் பெருமையையும் புகழையும் சேந்தாப்ல அழிச்சிப்போடும்.
குறள் 1044
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்
இல்லாமை ங்குத கொடும நல்ல குடியில பொறந்தவுக கிட்டேந்தும் கெட்டவார்த்த வெளிப்படுத அளவு தளர்ச்சிய உண்டாக்கிப் போடும்.
குறள் 1045
நல்குர வென்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்
வறுமைங்குத சங்கடத்துக்குள்ளாரேந்து வெவ்வேற பல சங்கடங்கள் வெளஞ்சி வெளிவரும்.
குறள் 1046
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்
நல்ல பல நூல்கள் சொல்லுதத அறிஞ்சிக்கிட்டு சொன்னாலும், அவன் ஏழையா இருந்தாம்னா சொல்லு எடுபடாது.
குறள் 1047
அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்
வறுமை அண்டிச்சின்னு காரணங்காட்டி நியாயங்கெட்டு நடக்கவன அவனப் பெத்த ஆத்தா கூட அசல் மனுசன் கணக்கா தான் பார்ப்பா.
குறள் 1048
இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு
நேத்தைக்கு கொன்னு போடுதது கணக்கா வந்த வறும இன்னிக்கும் எங்கிட்ட வருமோ? (அப்டின்னு நெனைச்சி இல்லாதவன் தெனைக்கும் வருத்தப்படுவான்).
குறள் 1049
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பா டரிது
நெருப்புக்குள்ளார கூட படுத்து ஒறங்க முடியும். ஆனா வறுமையில கண்ணு பொதைச்சி ஒறங்குதது ஏலாத ஒண்ணு.
குறள் 1050
துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று
ஒழுக்கங்கெட்டதால வறுமையானவுக மொத்தத்தையும் துறக்காம உயிர் வாழுதது உப்புக்கும் கஞ்சிக்கும் தான் கேடு.