Tag: மீனாட்சி பாலகணேஷ்

  • இலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ்-2

    செங்கீரையாடும் குழந்தை முருகன்

    Baby-muruga

    மீனாட்சி பாலகணேஷ்

    கடவுளைக் குழந்தையாக்கிப் பிள்ளைத்தமிழ் பாடுவதில் உள்ள மகிழ்ச்சி என்ன என்றால், அக்கடவுள் அடியார்களுக்கு அருள் செய்ததையும், அவர்களை ஆட்கொள்ளச் செய்த திருவிளையாடல்களையும், அவர்களைத் தம் மீது அன்பு கொள்ளுமாறு கருணை கூர்ந்ததையும், மேலும் இவை போன்ற அனைத்தையும் சிறு பிள்ளையின் விளையாடல்களாகவே கண்டு பாடிப் பரவி, ஆனந்தம் அடைவது தான்.

    முருகப்பிரானைக் குழந்தையாகவும் குமரனாகவுமே (இளைஞனாக) நாம் கொண்டாடி மகிழ்ந்து வருகிறோம். குழந்தை முருகன் செங்கீரை ஆடி மகிழும் பருவத்தில் அவன் செங்கீரை ஆடிய அழகினைத் திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழில் பாடி மகிழ்கின்றார் கவியரசு நடேச கவுண்டர்.

    முதலில் செங்கீரை ஆடுவது என்னவெனக் காணலாமா? ஒருகாலை நீட்டி ஒருகாலை மடக்கி, முகத்தை நிமிர்த்திப் பார்த்து தவழ முனையும் அருமையான அழகுப் பருவம் தான் செங்கீரைப் பருவம். குழந்தையின் ஐந்தாம் திங்களிலிருந்து இது நிகழும். அவ்வாறு தவழ முனையும் குழந்தை முன்னும் பின்னும் சாய்ந்தாடும். இது பசிய இளந்தளிர்கள் தென்றல் காற்றில் அசைந்தாடுவது போலக் காண்பதனாலோ என்னவோ, செங்கீரைப் பருவம் எனப்படுகின்றது.

    கீர் என்றால் சொல் எனவும் தமிழ் மொழியில் ஒரு பொருள் உண்டு. சின்னஞ்சிறு குழந்தைகள் மிழற்றும் பொருளற்ற மழலை மொழியையும் செங்கீரை ஆடுதல் (பொருளற்ற சொல் கூறுதல்- மழலை பேசுதல்) என்பர் புலவர்.

    ‘குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
    மழலைச் சொல்கே ளாதவர்’ என்பது தெய்வப்புலவர் வாக்கு.

    இத்தகைய மழலைச் சொல்லுக்குப் பொருள் கற்பித்துப் பெற்றோர் கொள்ளும் பேரானந்தம் இனிய இசையினைக் கேட்டு மகிழ்வதனை விட உயர்வாகும்.
    *****

    இங்கு திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழிலிருந்து இரு பாடல்களைக் கண்டு அவை காட்டும் வண்ணச் சித்திரங்களின் அழகில் தோய்ந்து மகிழலாமா?
    *****

    ‘ஆடவல்லானாகிய சிவபிரான் அருளிய திருக்குமரா, நீ செங்கீரையாடி எம்மை மகிழ்விப்பாயாக,’ எனும்போதில் அவ்வாடல் வல்லான் ஆடிய நடனக் காட்சியைச் சொற்சித்திரமாகச் சிந்தையில் தீட்டுகிறார் புலவர்.

    ஆடுவது என்பது சிவபிரானின் குடும்பத்திற்கே உரிய ஒரு கலை! தகப்பனான சிவபெருமான் அழகுற மன்றினுள் நடனமாடுகின்றான். அனைத்தையும் ஆட்டுவிக்கிறான்! அவனுடன் கங்கைநதிப் புனல் எழுந்தாடுகின்றது; அவன் சடாமுடியிலணிந்த கலைமதியும் அசைந்தாடுகின்றது; கழுத்திலணிந்த கொன்றை மாலையும் தானாடுகின்றதாம்; சடை கலைந்து ஆகாயவெளியுடன் கலந்தாடுகின்றதாம். ஆதவன் (சூரியன்), சோமன் (சந்திரன்), அங்கி (நெருப்பு) எனும் ஐயனுடைய மூன்று விழிகளிலும் கருணை வெள்ளம் பொழிந்து ஆடுகின்றதாம்; ஐயன் ஆடினால் அனைத்துமே ஆடுமன்றோ? அவன் கொவ்வைச் செவ்வாய்ப் புன்முறுவல் எனும் நிலவாடிட, எட்டுத் திசைகளும் அசைவுறும் வண்ணம் எட்டுப்புயங்கள் அசைந்தாடுகின்றன; திருக்கையில் ஏந்திய மழு, தீயினுடன் மான், அவன் புனையும் அணிகளான பாம்புகள் (வரி அரவம்) ஆகியனவும் ஆடுகின்றன. மறைந்த பொருளான வேதங்களின் உறைவிடமானதும், அதனை மிழற்றுவதுமான அவனது சிலம்பணிந்த திருவடிகளின் கீழ் கிடக்கும் முயலகன், ஐயனின் ஆட்டத்தினால் தானும் நெளிந்தாடுகின்றானாம். இவ்வாறு மன்றுள் (சிற்சபை) நின்று சிவபிரான் ஆடுகின்றான்.

    ஐயனின் திருநடனத்தை எப்படி வர்ணித்தாலும், திரும்பத் திரும்பப் பாடிக் களித்தாலும், நடனமிடும் அத்திருக்கோலம் நம் மனக்கண்ணில் ஒளிப்பிழம்பான ஒரு சித்திரமாக இந்தப் பிரபஞ்சச் சுழற்சியொடு கூட்டி நம்மையும் ஆட வைக்கும்; அந்த ஆட்ட அழகினைக் கண்ணால் கண்டுணருதல் கடினம்; உய்த்துணருதலே உயர்வாம். கவியரசு நடேச கவுண்டர் இந்தப் பாடலின் மூலம் அவ்வாறு உய்த்துணரும் நிலைக்கு நம்மை உயர்த்தி விடுகிறார்.

    ‘இத்தகைய ஆடல் அரசனான சிவபிரான் தந்தருளிய குமரனே, (ஐயன் ஆடும் அழகிற்கொப்பக் குழந்தாய்) நீயும் செங்கீரை ஆடி அருளுகவே! குருமலை எனப்படும் சுவாமிமலையில் அமர்ந்த நாதனே செங்கீரை ஆடியருளுக!’ எனத் தாயாக மாறி விண்ணப்பிக்கிறார்.

    கங்கா நதிப்புன லெழுந்தாட அங்கணொரு
    கலைமதி அலைந்தாடவே
    கமழ்நறுங் கொன்றையந் தொங்கலா டச்சடை
    கலைந்துவான் கலவியாடப்
    பொங்கா தவன்சோம னங்கியெனும் விழிகளிற்
    பொழிகருணை வெள்ளமாடப்
    புன்முறுவ னிலவாட எண்டிசையு மசைவுறப்
    புயமாட அங்கைமேவு
    மங்காத எரியினோ டரிணமா டப்புனையும்
    வரியரவ மாடநன்கு
    மறைமிழற் றுஞ்சிலம் படியடியி லுறும்பசு
    மாரனு நெளிந்தாடவே
    செங்கோ லெடுத்துமன் றாடியவ ரருள்குமர
    செங்கீரை யாடியருளே
    திருமருவு குருமலையி லமர்சாமி நாதனே
    செங்கீரை யாடியருளே.

    இன்னொரு பாடலில் உன் மழலை மொழியால்- செங்கீரையால்- எமக்கு ஒருசொல்லேனும் உபதேசம் செய்வாயாக எனவும் வேண்டுகிறார்.

    தமிழின் தனிப்பெருங்கடவுள் முருகன். அவனை, ‘தமிழ் முருக!’ என விளித்து, தீந்தமிழால் இனிமையான ஒரு மழலைச் சொல் கூறி செங்கீரை ஆடி அருள வேண்டி, அவர் தீட்டும் சொற்சித்திரம் இதுவாகும்.

    மிகுந்த நீர்வேட்கை கொண்டொருவன் நீருக்காக அலைகின்றான். பரந்து விரிந்து கிடக்கும் கடல்நீர் அவனுக்குத் தெரிகின்றது. (வேறு ஒரு நீரும் கிட்டாமையால்) அவன் அதனை மிகுதியாகப் பருகுகிறான், தாகம் தீர்ந்த பாடில்லை. அவனும் அதை உணரவில்லை. இந்நிலையில் குடுவையில் நல்ல தண்சுவை நீரினை அவனுக்கு அளித்துப் பருகக் கூறினால் அவன் தாகம் தணிந்து மகிழ்வானல்லவா? இதனை உவமை காட்டிக் குமரனாம் குழவியின் மழலையின் பெருமையைப் பாடுகிறார்.

    நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் ஐம்பூதங்களையும் இறைவன் படைத்தான்; அவற்றில் நிலைத்திணை, இயங்குதிணை என வேறுபட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் உடன் படைத்தான்; உயிர்கள் கற்றறிந்து உய்வதற்காகவே நால்வகை வேதம் முதலான நூல்களையும் தந்தருளினான். மனிதனும் காலகாலங்களாக அமர்ந்து இவற்றை மிகவும் முயற்சி எடுத்துக் கற்றான். ஏட்டுச் சுரைக்காய் போல அவை அனைத்தையும் கற்றாலும் அவற்றின் உட்பொருளை உணர்ந்து உய்யும் கலைத்திறன் அவனுக்கில்லை! என்ன செய்வது?

    அவ்வமயம் இந்த அறியாமையை அகற்ற வருகிறான் முருகன் எனும் இளம் குமரன். அவன் நம் போன்ற மானிடர்கள் ஒருகாலும் நாமாகக் கற்றுணர முடியாத ஞானத்தை, ஒரே ஒரு சொல் கூறி உணர்த்தியருளினால், உடனே நாமும் ஒரே நொடியில் உயர்கதி பெற்று உய்வோம் அல்லவா? ‘அதனை, அந்த இனிய சொல்லை, உன் இனிய மழலையால் செங்கீரை ஆடி உணர்த்துவாயாக முருகனே!’ எனக் கேட்டுக் கொள்கிறார்(ள்) புலவராகிய தாய்!

    ஐவகை எனும்பூதம் ஆதியை வகுத்ததனுள்
    அசரசர பேதமான
    யாவையும் வகுத்து மறை யாதியும் வகுத்தனைஎம்
    ஐயமற் றவைஓதவோ
    கைவரு கலைத்திறன் எமக்கிலை வருந்தியே
    கற்பினும் கடல்நீரினைக்
    காதலில் பருகிநீர் வேட்கைதணி யாதவர்
    கணக்காகி நின்றதன்றோ
    உய்வகை எமக்கருள ஒருமொழி உரைப்பையேல்
    ஓதியுண ராதஞானம்
    ஒருநொடியி லெய்தியுயர் கதிபெறுவ மாதலால்
    உள்ளுருகி வேண்டுகின்றோம்
    தெய்வமறை முடிவான அநுபூதி உறஇனிதோர்
    செங்கீரை யாடியருளே
    திருமருவு குருமலையி லமரினிய தமிழ்முருக
    செங்கீரை யாடியருளே

    தெய்வத்தைக் குழந்தையாகக் கண்டு பாடினால் அந்தத் தெய்வம் செய்த அருட்செயல்களை அந்தத் தெய்வக் குழந்தையின் விளையாடல்களாகக் கருதிப் போற்றி மகிழ வாய்ப்பு மிகுகின்றது. பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் இத்தகைய வாய்ப்புக்களைப் பெருமளவில் புலவர்களுக்கு நல்கியுள்ளன என்பது ஒவ்வொரு பிள்ளைத்தமிழ் நூலிலும் கண்கூடு.

    *****

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    படத்திற்கு நன்றி

    Share
  • இலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் – 1

    மீனாட்சி பாலகணேஷ்.

    பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசும் கொண்டல்!

    ravivarma

    பிள்ளைத்தமிழ்ச் சிற்றிலக்கிய நூல்கள் கடவுளரைக் குழந்தையாகக் கண்டு அவர்களின் உடல், உள்ள வளர்ச்சியை அழகுற விவரித்துப் போற்றுகின்றன. குழந்தைகளின் வளர்ச்சியை பத்துப் பருவங்களாகப் பிரித்து ஒவ்வொரு பருவத்துக்கும் உண்டான செயல்களை விவரிக்கும் போது, அப்பாடல்கள் தமிழ் மொழியின் இனிமை, இலக்கிய நயம், சந்த நயம், வண்ணம், பலவகையான அணிகள், உவமங்கள், தொன்மக் கருத்துக்கள் முதலியனவும் இணைந்து இயைந்து மிளிரும் அழகையும் ரசிக்கும் விதத்தில் அமைந்துள்ளன என்பது ஒவ்வொரு தமிழனும் எண்ணியெண்ணிப் பெருமிதம் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

    நல்லிசைப் புலமைச் சான்றோர் பலர் இலக்கியச்சுவை ததும்பும் பிள்ளைத்தமிழ் இலக்கியங்களைப் பாடி வைத்துள்ளனர். கிட்டத்தட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் இயற்றப்பட்டுள்ளன. பல பாடல்களில் இப்புலவர் பெருமக்கள் விவரிக்கும் காட்சிகள், அருமையான சலனச் சித்திரங்கள் போன்று உள்ளத்தைக் கொள்ளை கொள்வன. ஒவ்வொன்றும் பலவிதமான இலக்கிய நயங்கள் கொண்டு பொலிகின்றன. இவற்றிலிருந்து சில பாடல்களை ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்து அவற்றின் நயங்களை ரசித்து மகிழலாமே!

    முதலில் நாம் காணப்போவது, குமரகுருபரர் இயற்றியதும் பிள்ளைத்தமிழ் இலக்கியங்களுக்கே சிகரமாகத் திகழ்வதுமான மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழிலிருந்து ஒரு பாடல் தீட்டும் இலக்கியச் சித்திரம். காப்புப் பருவத்திற்கான முதற்பாடல். காக்கும் கடவுளான திருமாலை குழந்தையைக் காக்கும்படி முதலில் வேண்டுவது பிள்ளைத்தமிழ் மரபாகும்.

    அதற்கேற்ப குமரகுருபரர் திருமாலிடம், “பழைய மறைகளாகிய வேதங்கள் நீ எம்மை மறந்து விட்டாயே எனப் புலம்பும் வண்ணம் இனிய தமிழ்ப்பாடலின் மீது விருப்புற்று அதனைப் பாடும் புலவரைத் தொடர்ந்து சென்ற பசுமை நிறம் வாய்ந்த மேக வண்ணனான திருமாலே!” என அவனை விளிக்கின்றார்.

    இதில் அடைபட்டது சுவாரசியம் மிகுந்த ஒரு கதை! திருமால் தமிழின் பின் சென்ற விதம் இயற்கை நயத்தையும் தமிழின் பெருமையையும் உயர்த்தி வியந்து போற்றும் அழகான வளமிகுந்த கற்பனை. அன்னையின் அருள் பெற்ற புலவர் பெருமான் கவிதையால் வரைந்த எழில் மிகும் சித்திரம்! மனக்கண்ணில் காட்சிகளைக் கண்டு, செய்யுளைப் படித்து இன்புறலாமே!

    ***

    மேக வண்ணனான திருமால்; வேர்க்க, விறுவிறுக்கக் கழனிப் பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கிறான். கண்ணிகளாகக் கட்டப்பட்ட வாசமிகுந்த திருத்துழாய் மாலை (துளசிமாலை) அவனுடைய பரந்த திருமார்பில் புரளுகின்றது; அதிலிருந்து தேன் வழிந்து வெள்ளம் போலப் பெருக்கெடுத்து ஓடுகின்றது. ஆகவே அது அவன் (திருமால்) நடந்து செல்லும் கழனியாகிய நடைபாதையில் சேறு போலப் பரவியிருக்கின்றது. வயலில் பூத்து நிற்கின்ற தாமரை மலரில் தங்குபவள் அவன் காதல் மனையாளாகிய திருமகள்; திருமால் எங்கு செல்கிறானோ அங்கு தானும் அவனைப் பின்தொடர்ந்து செல்ல விழைகிறாள் அவள். கணவன் செல்வதைக் கண்ணுற்றதும், தானும் அவனுடன் செல்ல வேண்டும் எனும் ஆவலால் எழுந்து தானும் உடன் செல்ல முயல்கிறாள். செல்ல வேண்டும் எனும் ஆவலும் எண்ணமும் உள்ளத்தே இருப்பினும், செல்லவொண்ணாமல் ஏதோ ஒன்று தடுக்கின்றதாம்! அவ்வாறு தடுப்பது என்ன? சேறாகி விட்ட வயல் தான்; மிகவும் வழுக்குகின்றது; ஆகவே அவளால் நடக்க இயலவில்லை. பார்த்தான் பெருமாள். அவனுக்கோ யாரையோ தொடர்ந்து போகும் அவசரம்! உடனே தனது கையணையைக் கொண்டு, அவளுடைய கையை, முகந்தெடுத்தது போலக் கோர்த்துக் கொண்டு உடனழைத்துச் செல்கின்றான். (திருமால் பள்ளி கொள்ளும் போது தனது கையையே தலையணை போல வைத்துக் கொள்பவன். பள்ளிகொண்ட பெருமாளின் கோலத்தினை ஒரு கணம் மனதில் எண்ணிப் பார்த்துக் கொள்ளலாமே?) ஆகவே இந்தக் கையணையைக் கொடுத்து அவளை அணைத்தவாறு நடத்திச் செல்கின்றான். பார்க்கவே அழகாக இல்லை? இளம் காதலர் இருவர் கழனிச் சேற்றில் தம்மை மறந்து விரைகின்றனர். அவளுக்கு அவனுடன் செல்வது இன்பம். அவனுக்கும் இன்பம் தான்; ஆயினும் இப்போது தான் மிகவும் விரும்பும் ஒரு பொருளுக்காக ஒருவர் பின்னால் அவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு விரைந்து கொண்டிருக்கிறான் அவன். தான் படுத்துக் கொண்டிருந்த பைந்நாகப் பாய்ப் படுக்கையைச் சுருட்டி எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டிருக்கிறான். அது சரியாக விறைப்பாக இராமல், நெகிழ்ந்து குழைந்து அவன் முதுகில் தனது வாலால் ‘பட், பட்’டென அடித்தபடி அவனைத் துன்புறுத்துகின்றது. இருந்தும் கொண்ட காரியமே கருத்தாக திருமகளின் கையைப் பிடித்தணைத்தபடி ஓட்டமும் நடையுமாக விரைகின்றான் திருமால்.

    அவன் விரும்பிப் பின் செல்லும் பொருள் என்ன தெரியுமா? இனிய தமிழினாலாகிய பைந்தமிழ்ப்பாடல்கள் தாம். இந்தப் பாடல்களைப் பாடி அவனை ஏற்றிப் போற்றிப் பரவும் ஒரு அடியார்- திருமழிசை ஆழ்வார்- ஊரைவிட்டே செல்கின்றார். அவர் அவ்வாறு போய்விட்டால் எங்ஙனம் அவர் பாடும் இனிய தமிழ்ப் பாடல்களைக் கேட்டு இன்புறுவது? திருமாலுக்கு அவருடைய தமிழ்ப் பாடல்கள் என்றால் கொள்ளை விருப்பம். அவர் பாடுவதைக் கேட்காமல் ஒருநாள் கூடக் கழியாது அவனுக்கு. அவரோ ‘நான் ஊரை விட்டுச் செல்கிறேன்; நீயும் உன் பாம்பணையைச் சுருட்டி எடுத்துக் கொண்டு எம்முடன் வந்து விடு,’ என அன்புக்கட்டளை இடுகிறார். ஆகவே தானும் அவர் பின்னால் போய்விடலாம் என்று திருமாலும் கிளம்பி விட்டானாம்! திருமழிசை ஆழ்வார் ஊரை விட்டே செல்ல ஒரு காரணம் உண்டு. அதை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? இக்கதையின் சாராம்சமே அது தானே!

    ***

    திருமழிசை ஆழ்வார் திருப்பணி செய்து வந்த காஞ்சிபுரம் திருவெஃகா பெருமாள் கோவிலில் ஒரு முதிய கிழவி – கூன் விழுந்த முதுகு. பெருமாள் சந்நிதியைக் கூட்டுவது, துடைப்பது, கோலம் போட்டு அலங்கரிப்பது ஆகிய செயல்களைப் பெரும் சிரத்தையோடு செய்து வந்தாள். ஆழ்வார் ஒருநாள் அவளிடம், “அம்மா, நீ எம்பெருமானுக்குச் செய்யும் இந்தக் கைங்கர்யங்கள் என்னைப் புல்லரிக்கச் செய்கின்றன,” என மனமுவந்து பாராட்டினார். “சுவாமி, இப்போது எனக்கு வயதாகி விட்டது, இன்னும் சிறு வயதிலேயே இங்கு வந்திருந்தால் இந்தக் கைங்கர்யத்தினை நீண்ட நாட்கள் தொடர்ந்து செய்யும் பேறு கிடைத்திருக்குமே!” என வருத்தப் பட்டுக் கொண்டாள். “தாயே! வருந்தாதே!” என்று திருமழிசை ஆழ்வார் தனது திவ்விய கடாட்சத்தை அவள் மேல் செலுத்த, அம்முதியவள் உடனே முதுமை நீங்கி அழகிய ஒரு இளம் பெண்ணாக அங்கு நின்றாள்.

    நகர்வலம் வந்தபோது மன்னன் இந்த அழகிய இளம் பெண்ணைக் கண்டு விரும்பி மணம் புரிந்து கொண்டான். நாட்கள் நகர்ந்தன. அரசன் தான் மட்டும் முதுமை அடைவதனையும் தனது அரசி (ஆழ்வார் இளமையடையச் செய்த பெண்) இளமை அழகு குன்றாது இருப்பதனையும் கண்டு ஆச்சரியமடைந்தான். ஆழ்வாருடைய திருக்கடாட்சத்தின் மகிமை இது என அறிந்து கொண்டவன், அவருடைய சீடனான கணிகண்ணனை அரசவைக்கு அழைத்தான். தனக்கும் இது போன்றே என்றும் மாறா இளமையைத் தருமாறு ஆழ்வாரிடம் கூறும்படி கணிகண்ணனை வற்புறுத்தினான் அரசன். கணிகண்ணன் மறுத்தான். அரசன் மிக்க சினம் கொண்டு கணிகண்ணனை நாட்டை விட்டு வெளியேறுமாறு கட்டளையிட்டான்.

    கணிகண்ணனும் தனது குருவான ஆழ்வாரிடம் இதனைத் தெரிவித்து நாட்டை விட்டுச் செல்லக் கிளம்பினான். தனது மாணாக்கனுடன் தானும் செல்ல முடிவெடுத்து திருமழிசையாழ்வார், கோவிலில் பள்ளி கொண்ட திருமாலிடம் வந்து,

    “கணிகண்ணன் போகிறான் காமரு பூங்கச்சி
    மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா- துணிவுடைய
    செந்நாப் புலவன் யான் செல்கின்றேன் நீயும் உன்றன்
    பைந்நாகப்பாய் சுருட்டிக் கொள்”– என அன்புடன் வேண்டிக் கொண்டார்.

    உடனே திருமால் தனது பாம்புப் பாயைச் சுருட்டித் தோள் மேல் போட்டுக் கொண்டு புலவர்- ஆழ்வார்- பின்னால், அவர் தமிழ்ப்பாடல்களை இடையறாது கேட்கும் ஆவலில் செல்லலானான். அதனைத்தான் குமரகுருபரர் ‘பைந்தமிழ்ப்பின் சென்ற பச்சைப் பசும் கொண்டலே’ எனத் திருமாலை ஏத்துகிறார்.

    ஆழ்வாரின் கதையை முற்றும் பார்க்கலாம். அடுத்த நாள் காலை கோவில் சென்ற மன்னன், திருமாலை அங்கு காணாமல் திடுக்குற்றுப் பின் நடந்ததை எல்லாம் அறிந்து கொண்டு விரைந்து சென்று, காஞ்சியை விட்டுச் சென்று கொண்டிருக்கும் கணிகண்ணன், ஆழ்வார் ஆகியோரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி மன்னிப்புக் கேட்டு, அவர்களைத் திருவெஃகாவிற்குத் திரும்ப வர வேண்டினான். திருமழிசை ஆழ்வாரும் திருமாலிடம்,

    “கணிகண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி
    மணிவண்ணா! நீ கிடக்க வேண்டும்- துணிவுடைய
    செந்நாப் புலவன் யான் போக்கொழிந்தேன் நீயும் உன்றன்
    பைந்நாகப்பாய் படுத்துக் கொள்” என வேண்டத் திருமாலும், திரும்ப வந்ததாக ஒரு அழகான புராணக் கதை.

    ***

    ஆகவே திருமால் தமிழ்க்கவிதை மேல் கொண்ட காதலால், ஆழ்வார் வேண்டுகோளுக்கிணங்கி, பாம்புப் பாயைச் சுருட்டித் தோளில் வீசிப் போட்டுக்கொண்டு, சேறு வழுக்கும் கழனியில் திருமகளின் கையை முகந்தணைத்தபடி விரையும் சலனச் சித்திரம் கண்முன் அப்படியே விரியவில்லையா? அவ்வாறு விரைபவனின் பின்னால், பழைய மறைகளான வடமொழி வேதங்கள், “அந்தகோ! எம்மை மறந்து விட்டுத் தமிழின் பின் செல்கின்றீரே,” என முறையிட்டுப் புலம்பிய வண்ணம் தொடர்ந்தன என ஒரு அதிகப்படியான காட்சியையும் காண்கிறோம். பச்சை பசுமையான மேகங்களின் நிறங்கொண்ட திருமாலைக் கண்டு களிக்கிறோம்.

    சரி. திருமாலை இவ்வாறு சித்தரித்து என்ன வேண்டுகிறார் குமர குருபரனார்? ‘எம் அன்னையாகிய இந்தச் சிறு குழந்தை மீனாட்சியைக் காப்பாயாக,’ என வேண்டுகிறார். திருமாலின் பெருமையை அழகுறக் கூறியவர் அவன் தங்கையின் பெருமையினையும் அழகு குன்றாது அருமையாக விளக்குகிறார்.

    பலவகையான மணிகளைத் தன்னுட் கொண்ட பெரும் கடலால் சூழப்பட்டது இப்பூமண்டலம். அதனை ஆதிசேடன் எனும் பாம்பு தாங்கி நிற்கின்றது. அதன் தலையின் உச்சிமேல் அங்கயற்கண்ணியும், எம் இறைவனாகிய சிவபிரானும் வீற்றிருக்குமாறு இந்திரன் எட்டு யானைகள் தங்கள் தோள்களில் தாங்கும் விமானத்தை விண்ணுலகிலிருந்து அனுப்பித் தந்தான். அதில் வெள்ளிய பிடரி மயிரினை உடைய சிங்கங்கள் தாங்கும் அழகமைந்த பீடத்தில், பொன்முடி தரித்து இறைவனுடன் அரசு வீற்றிருப்பவள் கயற்கண் கொண்ட அமுதமனைய எம் அன்னை மீனாட்சி. ‘அவளை நீ காக்க வேண்டும் திருமாலே!’ என வேண்டும் போது, திருமால் தமிழின் பால் கொண்ட காதலைக் கூறி, அதற்காக அவன் செய்த ஒரு செயலை நயம்பட உரைக்கின்றார் குமரகுருபரனார்.

    அவ்வழகிய பாடல் இதோ:

    மணிகொண்டநெடுநேமி வலயஞ் சுமந்தாற்று
    மாசுணச் சூட்டுமோட்டு
    மால்களிறு பிடர்வைத்த வளரொளிவிமானத்து
    வாலுளை மடங்கல்தாங்கும்
    அணிகொண்டபீடிகையின் அம்பொன்முடி முடிவைத்தெம்
    ஐயனொடு வீற்றிருந்த
    அங்கயற் கண்ணமுதை மங்கையர்க்கரசியையெம்
    அம்மனையை இனிதுகாக்க
    கணிகொண்ட தண்துழாய்க்காடலைத் தோடுதேம்
    கலுழிபாய்ந் தளறுசெய்யக்
    கழனிபடு நடவையில் கமலத்தணங்கரசொர்
    கையணை முகந்துசெல்லப்
    பணிகொண்ட முடவுப் படப்பாய்ச்சுருட்டுப்
    பணைத்தோள் எருத்தலைப்பப்
    பழமறைகள் முறையிடப்பைந்தமிழ்ப் பின்சென்ற
    பச்சைப் பசுங்கொண்டலே.

     
     
     
     
     

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.

    Share
  • காதலின் பொன்வீதியில் – 12

    –மீனாட்சி பாலகணேஷ்.

    தப்பி விட்ட காதல் கணக்கு!

    அவன் அற்புதமான கவிதைகள் இயற்றும் கவிஞன்; இளைஞன்; கட்டழகன். கவிதையும் கலாரசனையும் அவன் குருதியில் ஊறிப்போனவை. அவன் தந்தை கம்பர் ஒரு மாபெரும் புலவர். இவனும் தந்தைக்கேற்ற தனயன். பெயர் அம்பிகாபதி. கண்ணால் காணும் அனைத்தையும் காதல் நோக்கில் கண்டு பாடும் வாலிபப் பருவம்.

    இன்று அரச மாளிகையில் கம்பருக்கு ஒரு விருந்து ஏற்பாடாகியிருக்கிறது. அவர் இயற்றி, சமீபத்தில் அரங்கேற்றிய இராமாவதாரம் எனும் ஒரு ஒப்பற்ற நூலுக்காகப் பரிசுகள் அளித்து மரியாதை செய்த மன்னன், புலவரை விருந்துக்கும் அழைத்திருந்தான். புலவருடன் புலவர் மகனும் வந்திருந்தான்! நியாயம் தானே?

    தலைவாழை இலைகள் போடப்பட்டு, ஆசனங்களில் அனைவரும் அமர்ந்திருந்தனர். சம்பிரதாயப்படி, உப்பு, ஊறுகாய், பச்சடி, பொரியல் என முதலில் பணிப்பெண்கள் பரிமாறிவிட்டுப் போக, விருந்தின் முக்கியமான இனிப்பான பாயசத்தினைப் பரிமாற அதனைப் பொற்கிண்ணத்தில் ஏந்தி வந்தாள் அரசகுமாரி அமராவதி! அவளே ஒரு கவிதை! அரசன் குலோத்துங்கன் மாளிகையில் வளரும் அழகு தேவதை!

    அமராவதிபதினாறு வயதுப் பருவ மங்கை- அவள் நடந்தால் பாதங்கள் நோகுமே எனப் பாதசரங்கள் புலம்ப, அன்னநடை நடந்து, பாயச வட்டிலை ஏந்தியதால், அதன் கனத்தில் கொடியிடை அசைந்தாட ஒரு மின்னல் போல வந்தாள் அவள் – அமராவதி. அழகான இளைஞன் ஒருவனை எதிர்பாராத விதத்தில் அரசவைப் புலவரருகே கண்டதால் அமராவதிக்கு நாணத்தில் நடை தடுமாறிக் கால்கள் பின்னின.

    ஆச்சரியத்தில், கண்கள் தாமரை இதழ்களென விரிய, அம்பிகாபதி மலைத்தான். கணப்பொழுதில் பார்வைகள் சந்தித்து மீண்டன. இதயங்கள் இடம் மாறின!

    இளங்கவிஞன் இளவரசியைக் கண்டதும் கொண்ட காதலும் கற்பனையும் – அல்ல அல்ல, கண்ணெதிரே காணும் காட்சியின் அழகும் இனிமையும்- உள்ளத்திலிருந்து கவிதையை ஊற்றாகப் பெருக்கி நின்றன.
    பாடல் பிறக்கின்றது:
    ‘இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க
    வட்டில் சுமந்து மருங்கசைய………’
    ஆஹா…. திடுக்குற்று அனைவரும் உண்பதை நிறுத்தி விட்டு அம்பிகாபதியை நோக்குகின்றனரே! கம்பருக்குப் புரிந்தது. பஞ்சும் நெருப்பும் அருகருகே அன்றோ நெருங்குகின்றன? காதல்தீ பற்றிக் கொள்ளாது என் செய்யும்? ஆனால், மன்னன் மகளிடம், கவிஞன் மகன் காதல் கொள்ளலாகுமா? உலகம் இதனை ஒப்புக் கொள்ளுமா? மன்னனின் விழிகளில் சினம் பொங்குவதைக் காண்கிறார்.

    சமயோசிதமாக, “அம்பிகாபதி! என்னப்பா இத்தருணத்தில் கிழங்கு விற்கும் பெண்ணைப் பற்றிய பாடல்?” என்கிறார் கம்பர்.

    “கம்பரே! நீரும் உம் மகனும் விளையாடுகின்றீர்களோ? அமராவதியைக் கண்டு காதல் கவிதை புனைய ஆரம்பித்தான் உம் மகன். நீர் அதனை இல்லை என்கிறீரோ?” என்ற குலோத்துங்கன், “கவிதையின் அடுத்த அடிகள் என்னவோ?” என்றான் ஏளனமாக.

    ‘-கொட்டிக்
    கிழங்கோ கிழங்கென்று கூறுவாள் எந்தை
    வழங்கோசை வையம் பெறும்.’
    என்று பாடி முடித்து வைத்தார் கம்பர். அப்போதைக்கு ஒன்றும் கூறவில்லையாயினும் அரசன் புரிந்து கொண்டான்.

    இளம் இதயங்கள் காதலில் சங்கமித்து விட்டதைக் கம்பரும் உணர்ந்து செய்வதறியாது திகைத்தார்.

    ◆◆◆

    அம்பிகாபதி – அமராவதி காதல் கதைக்குச் சரித்திர ஆதாரங்கள் ஏதுமில்லை. கம்பரின் வாழ்வில் ஒரு சிறு சம்பவமாகப் புனையப்பட்ட கட்டுக்கதை என்றே பல தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர். 50-களிலும் அதற்கு முன்பும் வெளிவந்த திரைப்படங்கள் தான் இந்தக் காதல் கதை மிகவும் பிரபலமாக வழி வகுத்தது எனலாம். அழகான பாடல்களுடன் அற்புதமான நடிப்பும் சேர்ந்து அம்பிகாபதி – அமராவதி காதலை அமரத்துவமாக்கின. சரித்திர ஆதாரமின்றிப் புகழ் பெற்று விட்ட ‘சரித்திர’க் காதல் கதை இது எனலாம். சரி, கதையையும் காதலையும் அதன் விளைவுகளையும் நோக்கலாமே!

    ◆◆◆

    நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்கின்றது அம்பிகாபதி – அமராவதி காதல். குலோத்துங்கனுக்கு இதில் விருப்பமேயில்லை. அம்பிகாபதியிடம் கூறினான்:
    “மன்னன் மகளை மாலையிட வேண்டுமென்றால், அதற்குச் சில தகுதிகள் வேண்டும். நீ உன் தகப்பனைப் போன்று பெரும் புலமை படைத்தவனாயின், அகப்பொருள் கலவாமல், நூறு பாடல்களைத் தொடர்ச்சியாகப் பாட வேண்டும். அவ்வாறு செய்ய இயன்றால், அமராவதியை மாலையிடலாம். இல்லாவிடின், உன் தலை துண்டிக்கப்படும்,” எனும் கடும் நிபந்தனையைச் சோழன் விதித்தான்.

    கவிச்சக்கரவர்த்தி கம்பரின் மகனாயிற்றே! தன் கல்வி மீது செருக்கு இல்லாது இருக்குமா? “நூறென்ன! ஆயிரமாயிரம் கவிகளும் பாடுவேன் மன்னா,” என்றான் அம்பிகாபதி.

    நிபந்தனை ஒப்புக் கொள்ளப் படுகின்றது. அமராவதியும் காதலனிடம் கூறுகிறாள்: “அன்பரே! நான் நூறு மலர்களுடன் திரைக்குப் பின் காத்திருப்பேன். நூறாவது பாடல் முடிந்ததும் தங்கள் முன்பு வந்து நிற்பேன்.” காதலில் எழுந்த கற்பனைகள்…… கவிதையினைக் கணக்கிடும் உறுதி!

    இரு காதலரும் கணிக்கத் தவறியது ஒரு சிறு கணக்கு.

    கடவுள் வாழ்த்துடன் துவங்கிய போது, அதனை முதல் பாடலாகக் கணக்கிட்டுக் கொள்கிறாள் அமராவதி. ஆர்வத்தில் விளைந்த அவசரக் கோளாறு அது. அம்பிகாபதி, காதலி கணக்கு வைத்துக் கொள்கிறாள் எனத் தான் எண்ணிக்கை வைத்துக் கொள்ளவில்லை. அம்பிகாபதியின் வாயிலிருந்து பாடல்கள், அகப்பொருளே கலவாது*, மடை திறந்த வெள்ளம் போன்று பெருகி ஓடுகின்றன.

    அமராவதி மலர்களை எண்ணி எண்ணிச் சேர்க்கிறாள். காதலனின் கவிதா விலாசத்தின் மேதைமையில் உள்ளம் பூரிக்கிறாள். இவ்வாறு தொண்ணூற்றொன்பது பாடல்கள் முடிவடைகின்றன- அல்ல அல்ல… அமராவதியின் கணக்குப்படி நூறு பாடல்கள் அவை.

    மேகத் திரளின் பின்னிருந்து அதனைக் கிழித்துக் கொண்டு வெளிவரும் முழுமதி போலத் தனது முகத்தைக் காட்டியபடி காதலன் அம்பிகாபதி முன்பு வெளிப்படுகிறாள் அமராவதி எனும் அப்பெண்ணரசி.

    அம்பிகாபதி அவளைக் கண்ணுற்றதும் நூறு பாடல்கள் ஆகி விட்டன எனக்கருதி, அவளழகை வருணித்து அகப்பொருள் அமைந்த அடுத்த பாடலை இசைக்கிறான்.

    ‘சற்றே சரிந்த குழலே துவளத் தரளவடம்
    துற்றே அசையக் குழை ஊசலாடத் துவர்கொள் செவ்வாய்
    நற்றேன் ஒழுக நடன சிங்கார நடையழகின்
    பொற்றேர் இருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே.’

    அந்தகோ! அரசவையில் ஒரே பரிதாப ஆரவாரம்.
    “இன்னும் நூறு பாடல்கள் ஆகவில்லையே!”
    “ஐயோ இளவரசி! உங்கள் கணக்கு தப்புக் கணக்கு!”
    “கடவுள் வாழ்த்து கணக்கில் சேராதெனத் தமிழ் பயின்ற உனக்குமா தெரியாது போய் விட்டது?” என அரசவைப் புலவர் ஒட்டக்கூத்தர் சுட்டிக் காட்ட, அடியற்ற மரம் போல வீழ்ந்து மூர்ச்சையானாள் அமராவதி.

    கம்பரின் கெஞ்சலும், மற்றோரின் அனுதாப வேண்டுகோள்களும் மன்னன் குலோத்துங்கன் மனதைத் தொடவே இல்லை.
    நிபந்தனைப்படி, அம்பிகாபதியின் தலை துண்டிக்கப்பட்டு அவன் உயிர் துறக்கிறான். மனமுடைந்து அமராவதியும் உயிர் துறக்கிறாள். மணவாழ்வில் இணைய இயலாத காதலர் மறு உலகில் இணைகின்றனர்.
    சோகம் ததும்பும் காதல் கதை இது!

    ◆◆◆

    சிறிது விலகி நின்று நோக்கினோமாயின் காதலர்க்குரிய ஓரிரு இன்றியமையாத நியதிகளை இவர்கள் கவனமாகக் கையாளவில்லை எனக் காணலாம்.
    எவருக்கும் தன் திறமை மீது நம்பிக்கை இருக்கும்; இருக்க வேண்டும். ஆனால் அது செருக்காக மாறும் காலத்து, அழிவுப்பாதையில் தான் அழைத்துச் செல்லும். அதுவும் இக்கட்டான இந்தச் சூழ்நிலையில் அம்பிகாபதி சிறிது தாழ்மையுடன் இருந்திருக்கலாம் எனத்தான் எண்ணத் தோன்றுகின்றது.

    ஆர்வத்தில் அமராவதியின் எண்ணிக்கைக் கணக்குத் தப்பிப் போயிற்றே! அவள் ஒன்றிற்கு இரண்டாக, இன்னும் ஒரு தோழியையோ, வேறு யாராவது ஒருவரையோ பாடல்களின் எண்ணிக்கையைக் குறித்துக் கொள்ளக் கூறியிருக்கலாம். அவளையே நம்பி அம்பிகாபதி தான் எண்ணிக்கை வைத்துக் கொள்ளத் தவறி விட்டான்; ‘சந்தேகத்திற்கு இருக்கட்டுமே’ என இன்னும் ஓரிரு பாடல்கள் பாடியிருக்கக் கூடாதா? காதலியைக் கண்டதும் எல்லாமே மறந்து தன்னிலையும் மறக்குமானால் அவனால் என்ன தான் சாதிக்க இயலும்? ‘காற்றிலேறி அவ்விண்ணையும் சாடுவோம் காதற்பெண்கள் கடைக்கண் பணியிலே,’ என்றான் இன்னொரு கவிஞன். காதலுக்கு அத்தகைய சக்தி உண்டு அல்லவோ?

    இங்கு தான் விதி விளையாடி விட்டது எனத் தெரிகிறது………………
    காதலின் பொன்வீதி இவர்களை மேலுலகிற்குத் தான் அழைத்துச் சென்று விட்டது..

    ◆◆◆
    *அம்பிகாபதிக் கோவை எனச் சிற்றிலக்கிய வடிவில் ஒரு நூல் உள்ளது. இது அகப்பொருள் இல்லாமல் பாடப்பட்டுள்ள கோவை நூல். இதன் ஆசிரியர் பெயர் அம்பிகாபதி எனவும் இதில் 200-க்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளன எனவும் அறிகிறோம். (ஆதாரம்: தமிழ் விக்கிப்பீடியா- கட்டற்ற கலைக் களஞ்சியம்)

    படம் உதவி:
    www.dollsofindia.com [http://www.dollsofindia.com/images/products/contemporary-paintings/rajput-princess-QD45_l.jpg]

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஆகஸ்ட் 10, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு  மீனாட்சி பாலகணேஷ் அவர்கள் 

    MBG- 28-4-17

    வல்லமை இதழின் எழுத்தாளர்களில் ஒருவராகத் தனது இலக்கியப்படைப்புகள் மூலம் வல்லமை வாசகர்களைத் தொடர்ந்து மகிழ்வித்துவரும் திருமதி மீனாட்சி பாலகணேஷ் அவர்களை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம். இந்திய இலக்கியங்களையும் அதில் வரும் காதலர்களையும் அறிமுகப்படுத்தி, இலக்கிய நயம் பாராட்டுதலையும், அக்காதலர்களின் காதலின் மேன்மையையும் ஒருங்கே வழங்கிவரும் “காதலின் பொன்வீதியில்” (http://tinyurl.com/kadhalin-ponveethiyil) என்ற கட்டுரைத்தொடருக்காக அவர் பாராட்டப் படுகிறார்.

    அறிவியல் ஆய்வாளராகப் பணியாற்றிய மீனாட்சி பாலகணேஷ் அவர்கள், பணி ஓய்விற்குப் பிறகு தனது நெடுநாளையக் கனவான தமிழ் கற்பதில் ஆர்வம் கொண்டு தமிழில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொள்ளத் துவங்கியுள்ளார். தற்பொழுது தமிழ் இலக்கியக் கட்டுரைகளைப் பல இணையதளங்களிலும் எழுதி வருகிறார். இவரது பாடுதும் காண் அம்மானை, குழல்வாய் மொழியாள் கொண்ட ஊடல், திருநடனம் ஆடினது எப்படியோ, கோபுலுவின் ஏகலைவி, காதலின் பொன்வீதியில் ஆகிய கட்டுரைகள் வல்லமை இதழில் வெளிவந்துள்ளன. சென்ற வாரத்தின் ‘காதலின் பொன்வீதியில்’ தொடரில் வாசவதத்தையும் உதயணனும் கொண்ட காதலை விவரித்து, “உதயணகுமார காவியம்”  நூல் வழங்கும் பாடல்களின் இலக்கியநயத்தோடு இணைத்து வழங்கியவிதம் சிறப்பானது.

    காதலின் பொன்வீதியில் என்ற தொடரை கீழ்வரும் அறிமுகத்துடன் தொடங்கினார் மீனாட்சி பாலகணேஷ் …

    காதல், காதல், காதல் இன்றேல்
    சாதல் சாதல் சாதல் – ( குயில் பாட்டு)

    என்றான் பாரதி, இதனை ஏன் இவ்வாறு கூறினான் என நான் பலமுறை யோசித்ததுண்டு. காதல் எனில் அன்பு, பக்தி, விருப்பம், ஆவல், வேட்கை, காமம் எனவெல்லாம் பொருள் கொள்ளலாம். இங்கு நாம் பார்க்கப் போவது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான அன்பு அல்லது காதல் என்பதனைப் பற்றித் தான். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல் உணர்வை இயற்கை படைத்ததற்குக் காரணம் ஒரு இனம் அழிந்து விடாமல் தொடர்ந்து வளர ஏதுவாக இருப்பதற்கும், அதற்கான முதல் படியாக இருபாலரிடையும் அன்பு செழித்து வளர்வதற்காகவும்தான் எனலாம். ஆகவேதான் காதல் போயின் எல்லாம் போயிற்று, சாதல் ஒன்றே எஞ்சி நிற்பது என்றானோ பாரதி!

    இத்தகைய காதல் உணர்வு நூதனமானது. சிறிது சிந்தித்துப் பார்த்தால் இத்தனைப் புலவர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் காதலைப் பற்றியே விதம் விதமாக ஏன் எழுதிக் குவித்துள்ளனர் என ஆராயலாம்! காதல் சம்பந்தமான உணர்வுகள் மனித குலத்துக்கு மட்டுமே உரிமையானதா என அறுதியிட்டுக் கூற இயலவில்லை. இக்கட்டுரையின் நோக்கமும் அதுவல்ல. காதல் சம்பந்தப்பட்ட அழகிய மென்மையான உணர்வுகள் பற்றி கற்ப கோடி காலங்களாக இருந்து வரும் இனிய நயங்களைப் பகிர்ந்து கொள்வதுதான் இதன் நோக்கம்.

    இந்தியத் தொன்மமாகிய இராமாயணக்கதையில் வரும் காதலர்களான இராமன் சீதையின் காதலைக் குறித்துக் கூறி, கம்பராமாயணத்தில் கம்பரின் வரிகளிலும் அக்காதலின் தன்மையை விவரிக்கிறார். ‘அண்ணலும் நோக்கி அவளும் நோக்கிய’ பிறகு, இராமனின் வடிவழகை, ஆண்மையின் கம்பீரத்தை, காதலின் கருணை நோக்கினை மீண்டும் கண்டு களிக்கச் சீதையின் உள்ளம் விழைகின்றது. இயலாமையினால் கடலெனக் குமுறிக் கொந்தளிக்கின்றது.

    விண்ணுளே எழுந்த மேகம் மார்பின் நூலின் மின்னொடு இம்
    மண்ணுளே இழிந்தது என்ன வந்து போன மைந்தனார்
    எண்ணுளே இருந்த போதும் யாவரென்று தேர்கிலேன்
    கண்ணுளே இருந்த போதும் என்கொல் காண்கி லாதவே.

    “மண்ணுள் இழிந்த விண்மேகம்” என வந்த இராமனின் வடிவழகை காண ஏங்கும் சீதையின் கனிந்துருகும் காதல் உள்ளத்தை மீனாட்சி உணர்த்தும் பாணி இலக்கிய வாசகர்களை மகிழ்விக்கக்கூடியது.

    மீனாட்சி பாலகணேஷ்

    இத்தொடரில் தொடர்ந்து …

    புலவர் புகழேந்தியார் யாத்த ‘நளவெண்பா’ வரிகளின் மூலம் நளன் – தமயந்தி காதலையும்,

    கவியரசர் தாகூர் படைப்பில் ஒரு புதிய கோணத்தில் அவர் அறிமுகப்படுத்திய சித்ராங்கதா – அர்ஜுனன் காதலையும்,

    அரசிளங்குமரி ருக்மிணி கிருஷ்ணனுக்கு காதல்கடிதமாக எழுதிய ஏழு ஸ்லோகங்களின் வழி ருக்மிணி – கிருஷ்ணன் காதலையும்,

    பெரியபுராண ஆசிரியரான சேக்கிழார் பெருமான் பாடல்களின்வழி சுந்தரர் – பரவை நாச்சியார் காதலையும்,

    ரூப்மதி இயற்றிய காதல் ரசம் சொட்டும் ஒரு தோஹாவின் மொழிபெயர்ப்பு மூலம் இளம் காதலர்கள் ரூப்மதி – பாஜ்பஹதூர் காதலையும்,

    காளிதாசரின் குமாரசம்பவம் மற்றும் கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய கந்தபுராணத்தின் பாடல்களின் துணைகொண்டு பார்வதி – பரமசிவன்  காதலையும்,

    கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணத்தின் வரிகளின் வழி வள்ளி – முருகன்  காதலையும்,

    உதயணகுமார காவியம் பாடல்கள் மூலம் வாசவதத்தை – உதயணன்  காதலையும்,

    காதலின் பொன்வீதியில் உலாவரும் பொழுது நாமும் படித்துப் பரவசமடைந்தோம்.

    இலக்கியவிருந்து வழங்கும் இந்த அறிவியல் பின்புலம் கொண்ட மீனாட்சி பாலகணேஷ் அவர்கள் ஒரு பன்முகம் கொண்ட கலைஞர்.

    சௌந்தர்யலஹரி ஸ்லோகம் (66) ஒன்றிற்கு ஓவியர் கோபுலு வரைந்த அழகிய படம் ஒன்றை அவர் போலவே வரைந்து கோபுலுவிடம் காட்டி, “எனது அருமை ஏகலைவி மீனாட்சிக்கு ஆசிகள்” என்று கோபுலுவிடம் கையொப்பமும், பாராட்டும், ஆசீர்வாதமும் பெற்றிருக்கிறார்.

    விபஞ்ச்யா காயந்தீ விவிதமபதானம் பசுபதேஸ்-
    த்வயாரப்தே வக்தும் சலித சிரஸா ஸாது வசனே
    ததீயைர் மாதுர்யை ரபலபித தந்த்ரீ கலரவாம்
    நிஜாம் வீணாம் வாணீம் நிசுளயதி சோளேன நிப்ருதம்
    — சௌந்தர்யலஹரி ஸ்லோகம் (66)

    அந்த சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தை தமிழ்ப் பாடலாகவும் மொழிபெயர்த்துள்ளார் மீனாட்சி பாலகணேஷ்.

    பல்லவி
    நாதன் பெருமைதனை நாத வீணையினில்
    வேதன் தலைவியவள் கீதம் இசைத்திடவே (நாதன்)

    அனுபல்லவி
    யாதும் இனிமையென யாழின் இனிமைகெட
    ஓதும் திருவாய்மொழி சாது என்றனையே (நாதன்)

    சரணம்
    இனிதென்று சிரமசைத்து இசைதன்னை நீ ரசிக்க
    இனிதன்று வீணையென இசைவாணி பரிதவிக்க
    இனியொன்றும் தோணாமல் உறையிட்டு மூடிவைக்க
    கனிவான நகைகாட்டி கருணைவெள்ளம் நீ பெருக்க (நாதன்)

    அத்துடன் நவராத்திரி கொலு பொம்மைகளைச் செய்வதில் திறமைசாலியான அவரது கைவண்ணத்தில் உருவான பொம்மைகளின் படங்களையும் வல்லமை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் மீனாட்சி பாலகணேஷ்.

    மீனாட்சி பாலகணேஷ்2

    பலகலைகளிலும் சிறந்து விளங்கும் மீனாட்சி பாலகணேஷ் அவர்களின் நெடுநாள் கனவான தமிழில் முனைவர்பட்ட ஆராய்ச்சியை அவர் வெற்றியுடன் முடிக்கவும், தொடர்ந்து இலக்கியப்பணியாற்றவும் வல்லமைக் குழுவினரின் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • காதலின் பொன்வீதியில் – 11

    – மீனாட்சி பாலகணேஷ்.

     

    நின்னைப்போல் பாவை தெரியுதடீ!

     

    வீணையின் சுநாதம் எழுந்து அந்தப் பெரிய அறையை நிறைக்கின்றது. ‘விறு விறு’வென்ற ஒரு ராகத்தின் ஸ்வரக் கோர்வையைப் பின் தொடரும் ஒரு வாசிப்பு அருமையான கமகங்கள் நிறைந்து மனத்தை மயக்கும் வகையில் அநாயாசமாக வீணை வித்தகனான ஆசானின் வீணையிலிருந்து எழுகின்றது. அதனைத் திரைக்குப் பின் அமர்ந்துள்ள அவரது மாணவி அப்படியே திரும்ப வாசித்துக் காட்ட வேண்டும்… அவளும் முயற்சிக்கிறாள். குருவுக்கேற்ற மாணவி தான்… ஆயினும் சோதனையாக, ஒன்று, இரண்டு, மூன்று, இன்னும் நான்காவது முறையாகவும் ஸ்வரம் தப்புகின்றது. ஆசானுக்குச் சினம் பொங்கியெழுகின்றது. ஊனம் அவளது உடலில் தானே! அவளுடைய இசை ஊனம் கொண்டதாக இதுநாள் வரை அவர் கேட்டதில்லை! இது என்ன அநியாயம்? ஏன் இவ்வாறு தவறு செய்கிறாள் இந்த உடல் ஊனமுற்ற பெண்?

    “ஏய் கூனிப் பெண்ணே! உனக்கும் சங்கீதத்திற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது போல இருக்கிறதே! என்ன அபஸ்வரம்! முட்டாள்!” என ஆத்திரத்தில் இரைகிறார் அந்த ஆசான்!

    “அட மூட ஆசானே! குஷ்ட ரோகியான உமக்கு என்னைக் கூனியென்று கூப்பிட எவ்வளவு நெஞ்சழுத்தம் வேண்டும்? யார் நீர்?,” என இரைந்த அந்தப் பெண், தோழிகளிடம், “அடி பெண்களே! அந்தத் திரையை விலக்குங்கள். இத்தனை நாள் எனக்கு வீணை வாசிக்கக் கற்றுக் கொடுத்த அந்தப் போலி குரு யார் எனப் பார்க்கலாம்,” எனக் கூறுகிறாள்.

    திரை விலக்கப்படுகிறது. கூனியென்று கூறப்பட்ட இளவரசி அழகும் நளினமும் ஓருருக் கொண்டு அமைந்த எழிலரசியாக நின்றாள். வயது முதிர்ந்த குஷ்டரோகியென அறிவிக்கப் பட்டிருந்த ஆசானோ ஆண்மையும் கம்பீரமும் பொங்கும் திருமகனாகக் காட்சியளித்தான். ஒருவரையொருவர் சினம் பொங்க நோக்கிய கண்கள், கணப்பொழுதில் குணம் மாறி, முதலில், வியப்பு, திகைப்பு இவைகளை வெளிப்படுத்திப் பின் மகிழ்ச்சி, மெல்லக் கனிந்த நாணம், உடன் தொடர்ந்த காதல் என மாறி நோக்கியதால், ஆர்வமும் ஆசையும் பொங்க ஒருவரையொருவர் மானசீகமாகத் தழுவி நின்றனர்: தாபத்தில் துடித்தனர்! யாரிவர்கள்?

    Vasavadathaவாசவதத்தை என்ற பேரழகி, உஜ்ஜயினி நகர மன்னன் பிரச்சோதனனின் அருமை மகள். ஆணழகனான வத்ஸ தேசத்து இளம் அரசன் உதயணன் வீணையை அற்புதமாக இசைத்து யானைகளை மயக்கி அடக்கியாள வல்லவன் எனக் கேள்விப்பட்டு, பிரச்சோதனன் அவனைத் தந்திரமாக ஒரு சூழ்ச்சி செய்து சிறைப் படுத்துகிறான். பின் தனக்கு அந்த இசையைக் கற்றுத் தருமாறு கேட்கிறான். ஆனால் உதயணன் ஒரு குருவிற்குரிய மரியாதையைப் பிரச்சோதனன் தனக்களிக்க வேண்டுமென நிபந்தனை விதிப்பதை அவனால் ஒப்புக் கொள்ள இயலவில்லை.

    ஆகவே தனது மகளான வாசவதத்தையை வீணை பயில உதயணனிடம் அனுப்புகிறான். இருவருக்கும் இடையே ஒரு திரை தொங்குகின்றது. ஏனெனில் உதயணனிடம் அவனுடைய மாணவி ஒரு அவலட்சணமான கூனி என்றும், வாசவதத்தையிடம் அவளது குரு ஒரு தொழுநோயாளி, பார்க்கக் கூடாதவன் என்றும் கூறப்படுகின்றது.

    இன்னார்க்கு இன்னார் என்று தேவன் எழுதி வைத்தால் அது நிறைவேறித் தானே தீரும்? இன்று அது நிகழ வேண்டியதாயிருந்தது. நிகழ்ந்தது! வாசவதத்தையும் உதயணனும் காதல் வயப்பட்டனர். உதயணனின் மதியூக மந்திரி யூகியின் தந்திரத்தாலும், வாசவதத்தையின் தோழியரின் உதவியாலும் இருவரும் யானை மீதேறித் தப்பி உதயணனின் நாட்டை அடைந்து மணம் புரிந்து கொண்டு மகிழ்ந்து வாழ்கின்றனர். எல்லாக் காதல் கதைகளும் போலத்தானே இது என எண்ணினால் நாம் தான் அறியாதவர்களாவோம்!

    வாசவதத்தையிடம் கொண்ட தீராக்காதலால், உதயணன் பொழுதினை அவளுடனேயே இன்பமாகக் கழித்து நாட்டின் நலனைப் புறக்கணிக்க லானான். எதிரிகள் காத்திருப்பது இத்தகைய சந்தர்ப்பங்களுக்காகத்தானே?

    *****

    காதல் பெண்ணையும் ஆணையும் வெவ்வேறு விதங்களில் செயல்பட வைக்கிறது. காதல் வயப்பட்ட ஆண்மகன் அந்தப் பொழுதில் அதனைத் தவிர வேறு சிந்தனை அற்றவனாகிறான். ஆனால் பெண்ணோ நான்கினையும் சிந்திக்கிறாள். (இதற்கு விதிவிலக்குகளும் உண்டு!)

    உதயணன் – வாசவதத்தை காதலும் இத்தகைய சோதனைகளுக்கு உள்ளாகின்றது. இதில் வாசவதத்தை எதிர்கொண்ட சோதனை தான் மிகப்பெரிது. காதற்கணவனோடு உறவாடி மகிழ்ந்தபோது அப்பேதை தன்னை எதிர் நோக்கி இருந்த சோதனைகளை அறியாள்.

    பகைவர்கள் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டனர். உதயணனும் வாசவதத்தையும் பாதுகாப்பான ஓரிடத்தில் சேர்ந்தனர். அப்போதும் மன்னன் நாட்டைப் பற்றிக் கவலை கொள்ளாது, வாசவதத்தையுடன் காதலின்பத்தில் மகிழ்ந்திருந்தான்……

    ஒருநாள்,…….
    உதயணன் வேட்டைக்குச் சென்றிருந்த சமயம் மந்திரி யூகி அவளிடம் வந்து கூறுவான்: “என் தாய் அன்னவளே! தாங்கள் எனக்கு ஒரு வரம் தர வேண்டும். தாங்கள் சில நாட்கள் நமது மன்னனைப் பிரிந்திருக்க வேண்டும். நாமிழந்த நிலமடந்தை நம்மைத் திரும்ப அடைய நீ இந்த செயலைச் செய்ய வேண்டும்,” எனக் கேட்டு, அவள் இசைந்ததும் அவளுடன் மறைந்தேகினான்.

    என்னுடைய நற்றாயேநீ எனக்கொரு வரம்கொடு
    நின்னரசன் நின்னைவிட்டு நீங்கும்சில நாளன்றி
    நன்னில மடந்தைநமக்கு ஆகுவதும் இல்லையே
    என்ன உடன்பட்டனள் இயல்புடன் கரந்தனன்
    (உதயணகுமார காவியம்)

    இங்கு நாம் ஒன்றை உணர வேண்டும். காதல் என்பது இருவர் சம்பந்தப்பட்டதாயினும், அவ்விருவரும் கடமையால் பல கட்டுப்பாடுகளுக்கு உட்படுகின்றனர். அதுவும் அரசனாயின், நாட்டின் நலனே முதன்மையானதாகும். காதலும் இரண்டாம் பட்சமாகி விடவேண்டும் என்பது நியதி! காதலுக்காக முடி துறந்த அரசர்களும் உண்டு! அது வேறு கதை! இங்கு மன்னன் காதலால் மதியிழந்தான்; மந்திரி சுட்டிட மன்னனின் காதல் மனையாள் நாட்டினைத் திரும்பப் பெற அவனைச் சில நாள் பிரிய ஒப்புக் கொண்டாள். அதன் விளைவுகளைப் பற்றிச் சிறிதும் சிந்தித்தாளில்லை! விதி இங்கும் காதலர் வாழ்வில் விளையாடுகின்றது. தன் காதல் கணவன், நாட்டையிழந்து இகழ்ச்சியடைவதனை அவள் விரும்பவில்லை. அதற்காக ஒரு சிறு பிரிவை அவளால் பொறுத்துக் கொள்ள இயலும் அல்லவா?

    அவளை வேறிடம் அனுப்பிய யூகி, அவளிருந்த இடத்திற்கு, யாருமறியாமல் தீயிட்டு, வாசவதத்தை, தீயில் சிக்கி இறந்ததாகக் கதை புனைகின்றான். வேட்டையிலிருந்து திரும்பிய உதயணன், அழுது, புலம்பி அரற்றுகிறான். வாசவதத்தையிடம் அவன் கொண்டிருந்த எல்லையற்ற காதல் இதனால் நமக்கு விளங்குகிறது.

    பகைவர் மார்பில் புண்செய்து விளங்கும் வேற்படையை உடைய அழகிய ஆண்மகன் மன்னன் உதயணன். (இங்கு காதலின்பத்தில் ஈடுபட்டு நாட்டை இழந்ததனால் உதயணன் வீரத்தில் குறைவு பட்டு விடவில்லை என எடுத்துக் காட்டுகின்றார் புலவர்! அவன் காதலின் உயர்வே விளங்குகிறது) அவன் வாசவதத்தையை, “பிரச்சோதனன் செய்த தவத்தால் பிறந்தவளே! உலகிற்குப் பெருவிளக்கே! பெண்குலத்தின் பெருவிளக்கே!” எனவெல்லாம் கூறி, தனது கண்களைத் தன் பேரெழிலால் விளக்கும் அந்தப் பெண்ணரசியை எண்ணி எண்ணிப் புலம்பினான் உதயணன்.

    மண்விளக்கம் ஆகிநீ வரத்தின் எய்தி வந்தனை
    பெண்விளக்கம் ஆகிநீ பெறற்குஅரியை என்றுதன்
    கண்விளக்கு காரிகையைக் காதலித்து இரங்குவான்
    புண்விளக்கில் அங்குவேல் பொற்புடைய மன்னவன்
    (உதயணகுமார காவியம்)

    இதனால் வாசவதத்தையின் அழகு வடிவு தொடர்பானது மட்டுமல்ல எனத் தெளிவாகின்றது! கணவனின் கடமைக்கு உதவுவதால் அவள் உலகிற்கும் பெண்குலத்திற்கும் பெருவிளக்கு! வடிவினால் மட்டுமின்றி உள்ளத்துப் பெருந்தன்மையாலும், கனிவினாலும், பேரெழில் நிரம்பப் பெற்றுக் கணவன் கண்களை (உள்ளத்தையும்) தன் பேரெழிலால் நிரப்புபவள் என்கிறார்! அத்தகையவளிடம் உதயணன் கொண்ட காதல் எவ்வளவு ஆழமானதாக இருக்க வேண்டும் என உணர முடிகின்றதல்லவா?

    மதிமந்திரி யூகியின் தந்திரம் என்னவென்றால், மகத நாட்டு மன்னனின் தங்கை பத்மாவதியை உதயணனுக்கு மணமுடிப்பது என்பது. அதனால், மகத நாட்டுப் பெரும் படையின் துணையுடன் உதயணன் தனது வத்ஸ நாட்டைப் பெறலாம் எனக் கணக்குப் போட்டான். அவந்திகா எனும் பெயருடன் ஒரு சாதாரணப் பெண்ணைப் போல் ஆடையணி பூண்ட அரசி வாசவதத்தை பத்மாவதியின் பொறுப்பில் விடப்படுகிறாள். அவளுக்குப் பணிப்பெண்/ தோழி போலச் செயல்படுகிறாள்.

    காதலில் தன் வயமிழந்த ஆண்மகன் கூற்றாக, ‘பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி,’ எனப் பாடி வைத்தார் பாரதியார். காமன் கோவிலுக்கு வரும் பத்மாவதியைக் கண்ட உதயணன், ‘வாசவதத்தை திரும்ப வந்தனள்,’ என எண்ணி மயங்குகிறான். அவளை மணக்கவும் இசைகிறான்.

    திருமணமும் நடக்கின்றது. மகத மன்னன் உதவியுடன் தான் இழந்த நாட்டைப் போரிட்டு வெல்கிறான் உதயணன்.

    ஸ்வப்ன வாசவதத்தம் என்ற பாஸனின் சமஸ்கிருத நூல் இது தொடர்பான நிகழ்ச்சிகளை அழகுற ஒரு நாடகமாகப் புனைந்து வாசவதத்தையின் குணநலன்களை மிக உயர்வாகச் சித்தரிக்கின்றது. 3-ம் நூற்றாண்டில் புனையப்பட்ட நாடக நூல் இது ஆகும். உதயண குமார காவியமும் பெருங்கதையும் இதனைத் தழுவி, சிறிது வித்தியாசமாகப் புனையப்பட்டனவாகும்.

    பத்மாவதியின் தோழிப்பெண்ணான அவந்திகா எனும் வாசவதத்தை, தன் துயரங்களை எண்ணித் தனிமையில் வாடுகிறாள். பத்மாவதி மணக்க விழைவது வத்ஸ நாட்டு மன்னனான தன் காதல் கணவன் உதயணனைத் தான் என அறிந்த போதில் பேதை உள்ளம் என்ன பாடு பட்டிருக்கும்?

    வாசவதத்தை- உதயணன் காதல் மணத்தைப் பற்றி அறிந்திருந்த பத்மாவதி, “என்னை விட யாரும் உதயணன் மேல் அதிகக் காதல் கொண்டிருக்க இயலாது,” எனும்போது, தன்னையும் அறியாமல், “இல்லை, இல்லை, வாசவதத்தையின் காதல் இன்னும் உயர்வானது,” எனக் கூறத் துடிக்கிறாள். (ஆம் என நாம் உய்த்துணருகிறோம்; கணவனின் நாட்டின் நலனுக்காக அவள் செய்யும் தியாகம் தான் எத்துணை உயர்வானது? காதலுக்காகவன்றோ அந்தத் தியாகம் செய்யப்படுகின்றது?)

    மேலும் வாசவதத்தை எந்தச் சூழலிலும் மந்திரி யூகிக்குக் கொடுத்த வாக்கின்படி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் பொறுமை காக்கிறாள். ஒரு கட்டத்தில் பத்மாவதிக்குத் தலைவலி வரும்போது, “எனது தலைவனுக்கு பத்மாவதியாவது ஆறுதல் தரும் ஒரு துணையாக இருப்பாள் என எண்ணினேன்; அவளுமா தலைவலியில் துடிக்கிறாள்,” என எண்ணிக் கலங்குகிறாள் வாசவதத்தை. அவள் தலைவலிக்குத் தைலம் பூசி சரிப்படுத்த அவளுடைய அறையை நோக்கி விரைகிறாள். முன்பே பத்மாவதியைக் காண அங்கு வந்திருக்கும் உதயணன், அவள் அங்கு இல்லாமையால், நன்றாகப் போர்த்துக் கொண்டு அந்த அழகான குளிர்ச்சியான அறையில் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறான். அதனை வாசவதத்தை அறிந்தாளில்லை.

    பத்மாவதி என எண்ணிக் கொண்டு அவளருகே அமர முயலும்போது உறக்கத்தில் கனவு கண்ட உதயணன், “வாசவதத்தா, என் உயிரே!” எனக் கூறக் கேட்டுத் திடுக்கிடுகிறாள். இன்னும் அவனுக்குத் தன்பால் உள்ள அன்பு இம்மியும் மாறாது இருப்பது உணர்ந்து மகிழ்ந்தாலும், தன் தலைமறைவு வெளியானால் காரியம் கெட்டு விடுமே என் விரைவாக அங்கிருந்து அகல முயற்சிக்கிறாள். ஆயினும், உறக்கத்திலிருந்து எழுந்து விட்ட உதயணன் அவள் உயிரோடு இருப்பதைக் கண்டு அறிந்து கொள்கிறான். இதுவே அவன் புத்துணர்வு கொள்ளவும் வழிவகுக்கின்றது.

    இதே சமயம் அவனது படைகளும் வந்து சேருகின்றன; அவை மகத நாட்டு மன்னன் படைகளுடன் சேர்ந்து எதிரியுடன் போரிட உதயணன் இழந்த நாட்டைத் திரும்பப் பெறுகிறான். தலைமறைவாயிருந்த யூகி திரும்ப வர, அவந்திகா தான் வாசவதத்தை என்பது வெளியாகின்றது. பின் என்ன? ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தம் தான்……

    *****

    இதில் நாம் புரிந்து கொண்டு மகிழ வேண்டிய அம்சம் வாசவதத்தையின் உயரிய பண்புகள் தாம்- உதயணன் பால் கொண்ட காதல் ஒன்றே அவள் வாழ்வில் எதிர்ப்பட்ட இடையூறுகளை எதிர்கொண்டு சமாளிக்கத் துணை போந்தது. பத்மாவதியை உதயணன் மணந்து அரசியாக்கிக் கொண்ட போதும், பத்மாவதி தான் அவன் மீது கொண்ட காதலைப் பற்றி வாய் ஓயாது பேசும்போதும், ‘இனி என்ன?’, ‘அடுத்து என் நிலை என்ன?’ என்ற கொடிய வினாக்கள் வாசவதத்தையை நோக்கி எழுப்பப் படுகின்றன. விடை காண இயலாது தடுமாறுகிறாள். இருப்பினும் கணவனின் நலனும், அமைதியான இதயமும், வெற்றி நிறைந்த வாழ்வும் தான் அவளுக்கு முக்கியமானவைகளாக இருக்கின்றன.

    கணவனிடம் உண்மையான காதல் கொண்ட ஒரு அன்பு மனைவியின் கடமைகள் என இதனை எடை போட்டு விடக் கூடாது. உதயணனின் உள்ளத்தை விட்டு அவள் நீங்காமல் இருப்பதும், அவள் (பொய்யான) இறப்பினால் அவன் புலம்புவதும், பின் பத்மாவதியின் உருவிலே அவளைக் கண்டு மணம் புரிந்து கொண்டதுமே இந்தக் காதல் எவ்விதமான நியதிகளுக்கும் அப்பாற்பட்ட ஒன்றாகும் எனக் கருத வழி வகுக்கின்றது. காதலின் பொன்வீதியில் நடைபயிலும் இளம் உள்ளங்கள் இவர்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டியவை நிரம்பவே உள்ளன!

    *****

    Picture Courtesy:

    Thanks to …
    Artist: Rajasekharan Parameswaran
    Title: Vasavadatha
    Copyright: Rajasekharan
    http://www.artslant.com/ny/works/show/107303
    http://artistrajasekharan.blogspot.in/
    https://www.facebook.com/rajasekharanp

    Share
  • காதலின் பொன்வீதியில் – 10

    – மீனாட்சி பாலகணேஷ்.

    மனதில் தைத்த முள்!

    மானின் மருண்ட பார்வை; இயற்கையாகவே எழில் பொங்கும் பால்வதனம்; அழகுக்கு யாராவது அழகு செய்வார்களோ? இருப்பினும், நந்தவன மலர்கள் அவ்விளம் மங்கையைப் போட்டி போட்டுக் கொண்டு அலங்கரித்தன. எளிய ஆசிரம உடையிலும் அவளது பேரெழில் பொங்கி வழிந்தது. அவளும் தோழியரும் நீர் கொண்டு செல்கின்றனர். ஆசிரமத்திலுள்ள எல்லாச் செடி கொடிகளுக்கும் அன்பாக நீர் வார்க்கிறாள் அம்மங்கை. ஒரு முல்லைப் பூங்கொடி அழகான மலர்களைக் கொத்துக் கொத்தாகத் தாங்கி நின்று அந்த மங்கை சகுந்தலையுடன் போட்டியிட முயலுகின்றது. தோழி ப்ரியம்வதை கூறுகிறாள்: “அனசூயா, பாரடி, இந்த இரு கொடிகளில் எது அழகு என்று உன்னால் கூற முடியுமா?”

    “அனசூயா, பாரேன், இந்த முல்லைக் கொடி எத்தனை அழகாக, ஆவலாகத் தன் காதலனான மாமரத்தைத் தழுவியபடி நிற்கிறது,” என்ற சகுந்தலை அதனைக் கண்கொட்டாமல் நோக்க, கலீரெனச் சிரித்த இரு தோழிகளும், “உன் ஏக்கம் எங்களுக்குப் புரிகின்றதடி! உனக்கும் இது போல ஒரு அருமையான துணைவன் சீக்கிரமே வாய்க்கக் கடவது,” என்கின்றனர்.

    Ravi_Varma-Shakuntala_columbia“ஓ! ப்ரியம்வதா, பாரேன், இந்த வண்டு அந்த முல்லை மலர்களை விட்டு விட்டு வந்து என்னைச் சுற்றித் தொல்லை கொடுக்கிறதடி,” எனச் சகுந்தலை பதறுகிறாள். தோழிகளின் நகைப்பு மாறவே இல்லை; “இந்த நாட்டு அரசன் தான் இந்த வண்டை விரட்டி உன்னைக் காக்க வேண்டும். இந்தத் தவச்சாலையில் உள்ளோரைக் காப்பாற்றுவது அவன் கடமையல்லவோ?” எனப் பரிகசித்தனர்.

    சொன்னது தான் தாமதம். புதர் மறைவிலிருந்து இத்தனை நேரம் ஒளிந்திருந்து இந்தக் காட்சிகளையும், இளம் பெண்களின் உரையாடலையும், சகுந்தலையின் பேரழகையும் கண்டு ரசித்து நின்ற மன்னன் துஷ்யந்தன் வெளிப்பட்டான்! “யாரது? என் குடிமக்களைத் தொல்லைப் படுத்துவது?” என்றான்.

    வேட்டையாட வந்த இடத்தில், ஆசிரமத்தைக் கண்டவன், முனிவர்களிடம் ஆசி வாங்க வந்தான். இளம் பெண்களின் உரையாடலையும் விளையாட்டையும் கணடு களித்தவன் சகுந்தலையின் இனிய தோற்றத்தினால் கவரப்பட்டு அவள் பால் காதல் வயப்பட்டான். கண்வ மகரிஷியின் அருமை வளர்ப்பு மகளான சகுந்தலையும் அவனிடம் தன்னை அறியாமலேயே தனது இளம் உள்ளத்தினைப் பறி கொடுத்தாள்.

    விரும்பிய மங்கை கிடைப்பாளா என ஏங்கிய மன்னன் துஷ்யந்தனும், கொழுகொம்பினைத் தேடி நின்ற பூங்கொடி மங்கை சகுந்தலையும் காதலின் ராஜபாட்டையில் ஒருவரை ஒருவர் எதிர் கொண்டனர். தோழிகளின் துணையால் சந்தித்தனர். ஒவ்வொரு நாளின் இறுதியிலும் தற்காலிகப் பிரிவு அவர்களைத் தொல்லைப் படுத்தியது.

    “நில்லடி, அனசூயா, இந்த முள் என் காலில் குத்தி விட்டது பார், ” என்ற சகுந்தலை, ஒரு பொய்யான முள்ளை எடுக்கும் சாக்கில் பின்னால் திரும்பித் தன்னைப் பிரிய மனமின்றி நின்றிருந்த துஷ்யந்தனின் கண்களோடு காதல் மொழி பேசி விட்டுத் தான் போகிறாள்.

    இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்திக் கொள்ள நீண்ட நாட்கள் தேவையே இருக்கவில்லை. மனங்கள் சங்கமித்து விட்டால், பின் வேறென்ன வேண்டும்?

    “சகுந்தலா, நான் உன்னை காந்தர்வ முறைப்படி மணந்து கொள்கிறேன்,” என்றான் துஷ்யந்தன். மலர் மாலைகளை மாற்றிக் கொண்டு இயற்கை சாட்சியாக மணம் புரிந்து கொண்டனர் காதலர். இன்பமாக நாட்கள் பறந்து சென்றதே தெரியவில்லை.

    மன்னன் துஷ்யந்தன் தனது தலைநகரான அஸ்தினாபுரிக்குப் போக வேண்டிய அவசர வேலை வந்துற்றது. உறவு வந்தால் பிரிவும் வருவது இயற்கை அல்லவா? கலங்கி நின்ற காதலிக்கு, “இந்த எனது மோதிரத்தை எப்போதும் உன் விரலில் அணிந்திரு சகுந்தலா. விரைவில் என் அமைச்சரை அனுப்பி உன்னைத் தலைநகருக்கு வரவழைத்துக் கொள்வேன்,” எனக் கூறி விடைபெறுகிறான் துஷ்யந்தன்.

    விதியின் விளையாட்டை யாரறிவார்?

    நாட்கள் உருண்டோடின. துஷ்யந்தனின் நினைவாகவே, கனவுலகிலும் நனவுலகிலும் மாறி மாறி சஞ்சரித்த வண்ணம் இருக்கிறாள் சகுந்தலை.

    ***
    “பெண்ணே! யார் நீ? நான் உன்னை முன்பின் அறிந்திலனே! உனக்கு என்ன வேண்டும்?” அவளிடம் இந்த வினா கேட்கப்படுகிறது. கேட்டவன் அரசன் துஷ்யந்தன்; இடம்- அவனது அரசவை. சகுந்தலை அவளை அழைத்து வந்த ஆசிரமவாசிகளுடன் நிற்கிறாள்.

    ஒரே கணம்- சிந்தித்துப் பார்த்தால், அவள் இதயம் எவ்வாறு துடித்திருக்கும் என நாம் அறிவோமா? கண்ணெதிரே நிற்கின்றான் காதல் கதைகள் பல பேசி, காந்தர்வ மணம் புரிந்து, அவள் கருவிலும் சுமந்திருக்கும் மகவின் தந்தையானவன். சபையோர் முன்பு என்ன அவமானம் இது! மறுமொழி கூற நாவெழவில்லை அவளுக்கு! உடன் வந்திருந்த கண்வரின் சீடர் கூறுகிறார்: “அரசே! இவள் கண்வரின் வளர்ப்பு மகள். தங்கள் மனைவி, விரைவில் தாயாகப் போகிறாள். தங்கள் அன்பு மனைவியைத் தங்களிடம் சேர்ப்பிக்க வந்துள்ளோம் மன்னா!”

    துஷ்யந்தனுக்கு வியப்பும் சினமும் ஒருங்கே எழுகின்றன. யாரிவர்கள்? என்ன கதை இது? யாரோ ஒரு பெண்ணைக் கூட்டி வந்து என் மனைவி எனக் கூறி நிற்கின்றனர்?.

    ஆயினும் அரசனல்லவா? மதி நுட்பமாக அன்றோ இதனைக் கையாள வேண்டும்?

    “எனக்கு இவளை அடையாளம் தெரியவில்லை. இருப்பினும், உங்களிடம் ஏதேனும் சாட்சியங்கள் உள்ளனவா?”

    ஐயகோ! காதல் உறவையும் காந்தர்வ மணத்தையும் மெய்ப்பிக்க அடையாளச் சின்னம் வேண்டுமோ?

    ஆசையும், அன்பும் காதலும் ததும்பிய மனதில் இப்போது அவலமும், ஆற்றாமையும், அழுகையும் பொங்கி வர, “அரசே! இதோ, நீங்கள் எனக்களித்த மோதிரம்……..” எனக் கூறத் தொடங்கிய சகுந்தலை விக்கித்து நின்றாள். சொற்கள் வெளிவரவில்லை. கடவுளும் அவளைக் கைவிட்டு விட்டாரா என்ன? எங்கே அவன் தந்த அந்த அன்பின் பரிசான மோதிரம்? அவள் அதனை விரலை விட்டுக் கழற்றுவதே இல்லையே!

    வரும் வழியில், ஆற்றில் தாகத்திற்கு நீர் பருகிய போது, மோதிரம் விரலை விட்டு நழுவி விழுந்ததா? எண்ணங்கள் அனைத்தும் துஷ்யந்தனைப் பற்றியே சுழன்று கொண்டிருந்ததால்அதை அவள் கவனிக்கவே இல்லையே!

    இனி எதனைக் காட்டித் தன் காதலை, உரிமையை அவள் நிரூபிப்பது? மொழி தடுமாற, உடல் தளர, உள்ளம் உடைந்து நின்றாள் சகுந்தலை. அன்று காலில் குத்திய முள் இன்று மனதில் அல்லவா தைத்து விட்டது? யார் அதனை எடுத்துப் புண்ணை ஆற்றுவார்கள்? இது ஏன், எதனால் இவ்வாறு நடந்தது?

    ***
    சகுந்தலை அறியாத அவளுடைய கதையின் ஒரு பகுதி …………………

    விருந்தாளியின் வடிவில் அவள் காதல் கனவுகளுக்கு முடிவும், துயரத்தின் துவக்கமும் வந்தது.

    வளர்ப்புத் தந்தை கண்வரின் நண்பரும், கோபத்திற்கு பிரசித்தி பெற்றவருமான துர்வாச மகரிஷி ஆசிரமத்திற்கு வருகை புரிகிறார். காதல் துணைவனைப் பிரிந்திருக்கும் சகுந்தலை, அவனைப் பற்றிய எண்ணங்களில் தன்னை மறந்து, முனிவரை வரவேற்று உபசரிக்கவும் மறந்து இருக்கிறாள். முனிவருக்கு வந்ததே கோபம்! “எதனால், யாருடைய நினைவினால் இவள் தன்னை மறந்து, அதிதிகளை உபசரிப்பதையும் மறந்து இருக்கிறாளோ அவன் இவளை மறக்கக் கடவது!” எனச் சாபமளிக்கிறார். கேட்ட தோழிகள் முனிவரைக் கெஞ்சி சமாதானப்படுத்த முயல்கின்றனர்.

    “என் சாபத்தைத் திரும்பப் பெற முடியாது. அவன் சகுந்தலைக்குக் கொடுத்த ஒரு பொருளைக் கண்ணுற்றதும் அவளைத் திரும்ப நினைவு கூர்வான்,” என்கிறார் முனிவர்.

    விதி எவ்வாறெல்லாம் விளையாடுகிறது! காதலின் பொன்வீதி சில சமயங்களில் கல்லும் முள்ளும் நிறைந்து கரடுமுரடாகி விடுவது ஏன்? காதலர்களின் மென்மையான உள்ளங்கள் புயலில் சிக்கிய பூங்கொடியாகத் துடிப்பதும் ஏன்?

    உலகில் விடை இல்லாத ஒரே வினா இதுவாகத்தான் இருக்கும்.

    ***
    விதியின் விளையாட்டு திசை திரும்பி, துஷ்யந்தனிடம் வருகின்றது.

    அவனுடைய அரசவை: “அரசே! இந்த மீனவனிடம் உங்கள் பெயர் பொறித்த முத்திரை மோதிரம். எப்படியோ திருடி விட்டு, தான் பிடித்த மீனின் வயிற்றில் இருந்ததெனப் பொய் சொல்கிறான்.”

    துஷ்யந்த மகாராஜா மோதிரத்தைப் பார்த்ததும் அயர்ந்து போகிறான்: “ஹா! இது நான் சகுந்தலைக்கு அளித்த காதல் பரிசல்லவோ? என்னைத் தேடி வந்தவளைப் பழித்து, அவமானப்படுத்தி அனுப்பினேனே! எங்கே சென்றாள் அவள்?” மனமுடைந்து துயரில் ஆழ்கிறான் மன்னன். அவளுடன் இன்பமாகக் கழித்த நாட்களின் நினைவுகள் அவனைச் சுட்டெரிக்கின்றன.

    ***
    எல்லாத் துயரங்களுக்கும் என்றாவது ஒரு முடிவு தெரியுமல்லவா? காதல் வயப்பட்டவர்கள் அனைவரும் துயரங்களைத் தான் அடைவர் என்றால் காதலுக்கே மதிப்புக் குன்றி விடுமல்லவோ? சகுந்தலை- துஷ்யந்தன் காதலுக்கும் பொற்காலம் பிறந்தது.

    ***
    தேவலோகம் சென்று திரும்பிய துஷ்யந்த மகாராஜாவை இந்திரனின் ரதம், ஓரிடத்தில் இறக்கி விட்டு விட்டுச் சென்றது. அவ்விடத்தின் அழகினை வியந்த வண்ணம் சென்று கொண்டிருந்த அரசன் கண்களில் அந்த அற்புதக் காட்சி……

    சின்னஞ்சிறு ஆண் குழந்தை ஒன்று- ஐந்தாண்டுகள் நிரம்பியிருக்குமா?- ஒரு சிங்கக் குட்டியினைக் கட்டிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தது. முதலில் அதிர்ச்சியடைந்த மன்னன், பின் ஆச்சரியத்திலாழ்ந்தான். அழகான அந்தத் துறு துறு சிறுமகனைத் தேடித் தாயிடம் அழைத்துச் செல்லத் தாதியர் வந்தனர். குழந்தையின் கையிலிருந்த தாயத்து கழன்று கீழே விழுந்திருந்தது. துஷ்யந்தன் அதனை எடுத்துத் திரும்ப அணிவிக்கப் போனான்.

    “தொடாதீர்கள் அதனை! அவனுடைய தந்தையைத் தவிர யாராவது அதனைத் தொட்டால் அது பாம்பாக மாறி உம்மைத் தீண்டி விடும்,” கூவினாள் ஒரு தாதி. ஆனால் துஷ்யந்தன் அதனைக் குழந்தையின் கையில் அணிவித்தபோது ஒன்றுமே நிகழவில்லை.

    மீன் வயிற்றிலிருந்து கிடைத்த மோதிரம் தான் அவனுக்கு சகுந்தலையின் நினைவைத் திரும்பக் கொண்டு வந்தது எனில், குழந்தையின் தாயத்து ஒன்றே அவனுக்கும் இவ்வுலகுக்கும் தந்தை- மகன் உறவை அறிவித்தது. எதிர்பாராத ஒற்றுமை.

    தாதியின் கூவலைக் கேட்டு அங்கே வந்த சகுந்தலை, ஆச்சரியத்தில் சிலையாகி நின்றாள். பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ? ஆனால் பேச ஒருவன் இருந்தானே அங்கு- அது தான் அவர்களின் சிறு மகன்- பரதன்.

    அவர்கள் கண்ணெதிரே விரிந்த காதல்பாதையில் நறுமண மலர்கள் தூவப்பட்டிருந்தன.

    அன்றொரு நாள் விதி வசத்தால் தன்னை யாரென அறியாது ஒதுக்கிய துஷ்யந்தன் மீது சகுந்தலை சினம் கொள்ளவில்லை. ‘என் குழந்தையைத் தொடாதே, நான் உன்னுடன் இனி வரவில்லை’ எனவெல்லாம் அவள் புலம்பவில்லை.

    காலத்தையும், தன் கண்ணீரையும் அதன் போக்கில் கண்டு அனுபவித்தவள், குழந்தை பரதனுக்காக மட்டுமல்ல, தனது உள்ளம் போற்றும் காதலுக்காகவும், தனக்காகவும், துஷ்யந்தனுக்காகவும் துஷ்யந்தனுடன் செல்லத் தயாராகி விட்டாள்.

    காதலின் பொன்வீதியில் இருவரின் கைகளும் இணையும்போது இடையில் ஒரு பிஞ்சுக்கரமும் இணைந்து கொண்டு அக்காதல் பயணத்தை மிகவும் இனிமையும் வலிமையும் பொருந்தியதாக்குகின்றது.

    ***

    Share
  • காதலின் பொன்வீதியில் – 9

    -மீனாட்சி பாலகணேஷ்

    தலைவி நீராடிய சுனை!

    கட்டு வரிவில் கரும் குறவர் கைத்தொழிலால் இட்ட பரண் மீதமர்ந்து அந்தக் குறமகள் கிளி முதலாகிய பறவைகளை தினைப்புனத்தின் அருகே வராவண்ணம் ஓட்டுகிறாள். ஆலோலம் பாடிப் பறவைகளை விரட்டித் தினைப்புனத்தைக் காக்க வேண்டுவது அவள் தந்தை அவளுக்கிட்ட பணி.

    valli-guhai-stucco

    ‘பூவைகாள் செம் கண் புறவங்காள் ஆலோலம்
    தூவிமா மஞ்சைகாள் சொல் கிளிகாள் ஆலோலம்
    கூவல் சேர் உற்ற குயில் இனங்காள் ஆலோலம்
    சேவல்காள் ஆலோலம்’ என்றாள் திருந்து இழையாள்.

    இவ்வாறு அந்த அழகு மயில், குயில் குரலில் ஆலோலம் பாட அதனைக் கேட்டு அங்கு வருகிறான் ஒரு இளம் வேடுவன். அவன்…..

    காலில் கட்டிய கழலன் கச்சினன்
    மாலைத் தோளினன் வரிவில் வாளியன்
    நீலக் குஞ்சியன் நெடியன் ……………… 

    காலில் கழல்களணிந்து, இடையில் கச்சினை இறுகக்கட்டி, திண்ணிய தோள்களில் காட்டு மலர்களால் ஆன வண்ண மலர் மாலைகளை அணிந்து கொண்டு வில்லையும் அம்பினையும் ஏந்தியபடி, முடிந்த குடுமித் தலையோடு, கம்பீரமாக நின்றான் அந்தக் கட்டிளம் காளை…..

    சொல்லினைத் தேனில் குழைத்துரைக்கும் இளம் பெண்ணைக் கண்டு சொக்கி நின்றான் அவன். ஆச்சரியத்தில் கண்கள் விரிய, அவளை விழித்து நோக்குகிறான். அவள் மேல் மையல் பொங்குகின்றது அவனுக்கு! யார் இந்த அற்புத நங்கை? யாரந்தக் கட்டிளங்காளை?

    அவள் வேட்டுவ மன்னன் நம்பிராஜனின் அருமை மகள் வள்ளி!

    “அழகு மங்கையே! நீ யார்? உன் பெயரென்ன? சொல்ல மாட்டாயோ! ஊரென்ன? அதையும் சொல்ல மாட்டாயா? சரி. உன் ஊருக்குச் செல்லும் வழியென்னவோ?” எனக் கேட்டான்.

    வள்ளி பதில் கூறாமல் நிற்கிறாள். வழியில் போகிறவன் வருகிறவன் எல்லாம் வந்து ஊரையும் பேரையும் கேட்டால், அவள் ஏன் கூற வேண்டும்? ஆகவே பாராமுகமாய் நின்றாள் வள்ளி. கட்டிளம் காளைக்கு இருப்புக் கொள்ளவில்லை. அவள் வனப்போ உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகு. கொஞ்சுமொழி அஞ்சுகம். கண்டதும் கொண்ட காதலில் உருகி அவனுடைய ஊனும் உயிரும் தவிக்கின்றதே!

    மேலும் சொல்வான்,

    மொழி ஒன்று புகலாய் ஆயின் முறுவலும் புரியாய் ஆயின்
    விழி ஒன்று நோக்காய் ஆயின் விரகம் மிக்கு உழல்வேன் உய்யும்
    வழி ஒன்று காட்டாய் ஆயின் மனமும் சற்று உருகாய் ஆயின்
    பழி ஒன்று நின்பால் சூழும் பராமுகம் தவிர்தி ….”

    “ஒரு மொழி கூறமாட்டேன் என்கிறாய். புன்னகையும் நீ புரியவில்லை! என்னை நோக்க மாட்டயோ? விரகம் மிகுகின்றதே; எனக்கு ஒரு மறுமொழி தாராயோ? உன் மனம் உருகாவிட்டால் பழி ஒன்று உன்பால் சூழும்,” என அச்சுறுத்துகிறான்.

    இப்படித்தான் காதலின் ஆரம்ப நிகழ்வுகள் பெரும்பாலும் துவங்குகின்றன!
    ____________________________________

    இது தலைவன் தலைமகள் ஒருத்தியைக் கண்டதும் கொள்ளும் காதல். ஆயினும் ஒருதலைக் காதல். எவ்வாறு இவள் மனதைக் கவர்ந்து தன்வசப் படுத்திக் கொள்வது? அன்புமொழி புகன்றான் காளை. அவள் அதனை லட்சியமே செய்யவில்லை. இந்தக் கட்டிளம் காளை வேறு எவரோ அல்லவே! செந்தமிழ்க் குமரன் அல்லவோ? அவளுக்கு அதைத் தெரிவிக்க வேண்டாமோ? என்ன செய்யலாம்?
    (இந்தக் காதல் நாடகம், குமரன் அரங்கேற்றியதைத்தான் காலகாலங்களாகக் கட்டிளம் இளைஞர்கள் காதலின் பாடங்களாகப் படித்து வருகின்றனர்!)

    ஓ! இதென்ன, தனது ஜனங்கள் புடைசூழ நம்பிராஜ மன்னன் வந்து கொண்டிருக்கிறான். தினைப்புனம் காக்கும் அருமை மகளுக்குப் பசியெடுக்குமே! தேனும், தினைமாவும் தர வந்தான். இப்போது இந்தக் காளை அவர்கள் கண்ணில் படாமல் ஒளிந்து கொள்ள வேண்டும்! திடீரெனக் காளை நின்ற இடத்தில் ஒரு வேங்கை மரம் எழுந்து நின்றது.

    கச்சியப்பச் சிவாச்சாரியார் தாம் இயற்றிய கந்தபுராணத்தில் ‘தானோர் வேங்கையின் உருவமாகி வேற்படை வீரன் நின்றான்,’ என்கிறார். இவன் மாயாஜாலம் செய்வதிலும் வல்லவன் போலும். வள்ளி இதனை உணரவில்லை. புதிய மரத்தைக் கண்ணுற்ற நம்பிராஜன், “அம்மா! குழந்தாய்! இது உனக்கு நிழல் தந்து உதவும்,” எனக் கூறிப் போகிறான். தானே அறியாமல் குமரனின் காதலுக்கு அவனும் தன் பங்கிற்கு உதவுகிறான்!

    நம்பிராஜன் அங்கிருந்து அகன்றதும் வேங்கைமரம் மறுபடி உருமாறிக் கட்டிளங் காளையாயினான். “உன்னிடம் மையல் கொண்டேன். இனி உன்னைப் பிரிந்து வாழ இயலாது; என்னை மணந்து கொள்,” என வள்ளியிடம் இறைஞ்சி நின்றான்! அவள் உள்ளமும் மெல்லக் காதலில் கனிந்தது.

    காதலனின் கருத்தறிந்த பேதைப்பெண் நாணமும் அச்சமும் ஒருசேரக் கொண்டாள். “உயர்குடிப்பிறந்த உமக்கும் வேடர் குலத்துப் பிறந்த எனக்கும் எவ்வாறு பொருத்தம்?” என்று கேட்டாள்.

    திரும்பத் தன் தந்தையும் அவன் கூட்டத்தாரும் வர, என்ன ஆகுமோ என அஞ்சினாள். தன்மீது காதல் கொண்டு நிற்பவனை, அவர்கள் சினத்திற்கு ஆளாகாமல் மறைந்து நிற்கக் கூறினாள்.

    இங்கு தான் அவளுடைய காதல் உள்ளம், தன்னையறியாமலே குமரன் எனும் காளை பால் சென்று விட்ட உள்ளம், அவனுடைய நன்மையை எண்ணிப் பதைக்கும் உள்ளம், அதன் மென்மை, கனிவு எல்லாம் அவ்விளைஞனுக்கும், நமக்கும் புலனாகின்றது! அவளைத் தவிக்க விடாமல் மாயவித்தைக் காரன் போல் நமது காளை, கிழவேடம் கொண்டான்!

    (பேதைப்பெண் வள்ளி இதனை உணர்ந்திலள்!)

    என்ன துணிவு! வந்த நம்பிராஜனை வாழ்த்தவும் செய்கிறான்(ர்) அந்த விருத்தன் (முதியவன்): “உனக்கு வெற்றி உண்டாகுக! உன் குலம் தழைக்க!” எனத் திருநீறு தந்தார்!

    “என் முதுமை நீங்கி இளமை எய்த இந்தக் குமரித் தீர்த்தத்தில் ஆட வந்தேன்,” என இருபொருள் படுமாறு தந்தையிடமே சொல்கிறான் முதியவன்!

    ‘நீண்டதனி மூப்பகல நெஞ்சமருள் நீங்க
    ஈண்டுநும் வரைக்குமரி எய்தி இனிதாட
    வேண்டிவரு கின்றனன் மெலிந்துகடி தென்றான்’

    ‘உமது மலையிலுள்ள குமரித் தீர்த்தத்திலாட (அ) உமது மகளான இந்தக் குமரி வள்ளியைக் கூடி மகிழ’ என இருவிதமாகப் பொருள் கொள்ளலாம்!

    அப்பனுக்குப் பாடம் சொன்ன முருகன் இங்கு அப்பனிடமிருந்து கற்ற பாடத்தைத் தானும் திரும்பப் படித்து, நடித்துப் பார்க்கிறான்! (தவ முனிவர் வேடம் கொண்டு வந்து தன் தலைவியைச் சீண்டி விளையாடுகிறான்!)

    “அங்ஙனமே செய்வீராக! என் அருமை மகளுக்கும் துணையாக இருப்பீராக,” என்று வெகுளியாகக் கூறுகிறான் நம்பிராஜன்! இப்படியும் ஒரு தகப்பன்.

    அவன் சென்றதும், “பெண்ணே! பசிக்கின்றது,” என்று பெரியவர், தேனையும், தினைமாவையும் உண்டு பின் தாகத்திற்கு நீர் கேட்டார்! அவள் சுட்டிய சுனைக்கு வழி தெரியாதது போல் நடித்து, தன்னைக் கைப்பிடித்து அழைத்துச் செல்லுமாறு செய்தார். நீரையும் பருகித் தாகமும் தீர்ந்தது. உடலில் தெம்பு வந்ததும் மனம் வேறெல்லாமோ எண்ணியது. வள்ளி மேல் கொண்ட மோகம் பெருகியது. “அதையும் தீர்ப்பாயா?” எனக் குறும்புடன் கேட்டார்.

    “நரைத்த தலைக் கிழவனாரே! தவவேடம் கொண்ட உமக்கு இது தகுமோ? எனது குலத்தார் இதனை அறிந்தால் உமக்குக் கேடு தான் விளையும். பித்தர் போலும் பிதற்றி உமது குலத் துக்கும் எனது வேடர் குலத்துக்கும் பெரும் பழியைச் செய்து விட்டீர்,” எனச் சீற்றத்துடன் மொழிகிறாள் வள்ளிக் குமரி!
    விடு விடென்று அங்கிருந்து புனங்காக்கப் புறப்பட்டுச் செல்லலானாள்.

    இப்போது காளை தவிக்கிறான். கன்னிக் கனியமுது கைநழுவிப் போயிற்றே! குறும்புக்காரக் கிழவனாக வந்தவன் குமரனல்லவோ? தன் அண்ணன் தந்திமுகத்து விநாயகனைத் துதித்தான். அவரும் தம்பிக்கு உதவ வேண்டி, மதயானை வடிவெடுத்து, அண்டமெல்லாம் நடுங்க ஒடோடி வந்தார்.

    இப்போது வள்ளி என்ன செய்வாள் பாவம். சிந்திக்கப் பொழுதில்லை! ஆபத்துக்குப் பாவமில்லை! ஆகவே மிகுந்த அச்சம் கொண்டவள், பொய்வேடம் கொண்டு நின்ற புங்கவனான கிழவ னாரை அணுகி, “இவ்வேழத்தினிடமிருந்து என்னைக் காத்தருளுக,” என அவரை இறுகத் தழுவிக் கொண்டனள்.

    அவ்வேளை யில்வள்ளி அச்சமொடு மீண்டுதவப்
    பொய்வேடங் கொண்டுநின்ற புங்கவன்தன் பாலணுகி
    இவ்வேழங் காத்தருள்க எந்தைநீர் சொற்றபடி
    செய்வேன் எனவொருபால் சேர்ந்துதழீஇக் கொண்டனளே.

    artஇப்போது குமரனின் உள்ளமும் உடலும் குளிர்ந்தது! தான் காதல் கொண்ட மங்கைக்குத் தன் உண்மை வடிவைக் காட்டி நின்றான் அந்தக் குறும்புக்காரன். வேழமும் தான் வந்த செயல் நிறைவேறியதால் விரைந்தோடி மறைந்தது! காதல் மங்கை நாணினாள்; வியர்த்தாள்; அயர்ந்தாள்; அச்சம் கொண்டாள். காதலில் அவனுக்கிணையாகக் கசிந்துருகினாள்.

    நம்மை அணையும்வகை நற்றவஞ்செய் தாய்அதனால்
    இம்மை தனிலுன்னை எய்தினோ மென்றெங்கள்
    அம்மை தனைத்தழுவி ஐயன் அருள்புரிந்தான்.

    வள்ளியுடன் கூடி இன்புற்றிருந்தபின், “நீ தினைப்புனம் செல்; நான் அங்கே வருவேன்,” எனக் கூறினான். திரும்பச் சென்ற வள்ளியிடம் தோழி வருகின்றாள்.

    “என்னம்மா இது? பறவைகளெல்லாம் வந்து பயிர்களைப் பாழ்படுத்த விட்டு விட்டு நீ எங்கு சென்றாய்?” எனக் கேட்டாள். அவளை மேலும் கீழுமாகப் பார்வையால் துளைத்தெடுக்கிறாள்.

    வள்ளியின் உடலிலொரு புது வாசனை (நாற்றம்); உருவம் சிறிது மாறுபட்டுத் தெரிகின்றது! நடந்து கொள்ளும் விதமும் புதுமையாக உள்ளது. எங்கோ பார்த்தபடி விட்டேற்றியாக அல்லவோ மறுமொழி பகருகிறாள். சொல்லும் செயலும் (மாற்றமும் செய்கையும்) உள்ளமும் இவை எல்லாமே வேறுபட்டுத் தெரிகின்றன தோழிக்கு! இவையெல்லாம் காதலனுடன் கூடிக் களித்தமையால் வந்த மாற்றங்கள் என ஊகித்து அறிந்த தோழி (இகுளை), “எங்கேயடி சென்றாய்?” என உரிமையுடன் கேட்கிறாள்.

    நாற்றமுந் தோற்றமும் நவிலொ ழுக்கமும்
    மாற்றமுஞ் செய்கையும் மனமும் மற்றதும்
    வேற்றுமை யாதலும் விளைவு நோக்கியே
    தேற்றமொடு இகுளையங்கு இனைய செப்புவாள்.

    “போடி, நான் மலை மீதுள்ள சுனை நீரில் ஆடச் சென்றேன்,’ என வள்ளி நாணத்துடன் எங்கோ பார்த்தபடி கூற, தோழிக்கு எழுந்த ஐயம் நிச்சயமாகின்றது.

    “விழிகள் சிவந்து வாய் வெளுத்து, உடலில் வியர்வையும் விம்மிய நெஞ்சகமுமாக, கைவளை நெகிழவும், ஆடியவர்க்கு இவற்றை எல்லாம் செய்விக்கும் தண்மையான சுனை எங்கே உள்ளதடி, காட்டுவாய்!” என வள்ளியிடம் தோழி கூறுகிறாள்.

    மைவிழி சிவப்பவும் வாய்வெ ளுப்பவும்
    மெய்வியர் வடையவும் நகிலம் விம்மவுங்
    கைவளை நெகிழவுங் காட்டுந் தண்சுனை
    எவ்விடை இருந்துளது இயம்பு வாயென்றாள்.

    தோழி புரிந்து கொண்டதை, வள்ளியும் அறிந்து கொண்டாள். “அடி, நீயல்லவோ எனக்கு உற்ற தோழி, என்னைத் தவறாக எண்ணலாமோ?” என்று வேண்டினாள்.

    காதல் நிறைவேறத் தோழியின் உதவி தாராளமாக வேண்டும் அல்லவோ?
    அச்சமயம் குமரன் எனும் காதல் தலைவன் (வள்ளியின் தலைவன்) தனது அம்பினால் புண்பட்ட வேழம் ஒன்றினைத் தேடியவாறு வருபவன் போல் வந்து நின்றான்.

    கொம்பினைக் கையிலேந்தி, குறி தவறாத அம்புகளை உடையவனாய், தீட்டப்பட்ட குறுவாளினையும் கொண்டு, கச்சினை இறுகக்கட்டி, வேட்டையால் இளைத்துக் காணப்பட்டவனாயும், தாள்கள் சிவக்குமாறு அவன் அங்கு தோன்றினான் என்பார் கச்சியப்பர்.

    கோட்டிய நிலையினன் குறிக்கொள் வாளியன்
    தீட்டிய குறியவாள் செறித்த கச்சினன்
    வேட்டம தழுங்கிய வினைவ லோனெனத்
    தாட்டுணை சிவந்திடத் தமியன் ஏகினான்.

    இருவரும் ( வள்ளியும் முருகன் எனும் குமரனும்) கொண்ட மையல் தன்னை அவர்கள் இருவரின் கண்களும் உரையாடுவதிலிருந்து புரிந்து கொண்டாள் தோழி. அவள் உதவியின்றி, இக்காதல் நிறைவேறாது என்றுணர்ந்த குமரவேள் அவள் உதவியை வேண்டுகிறான். பல நாட்கள் ரகசியமாக இவர்கள் சந்தித்து மகிழத் தோழி உதவுகின்றாள்.

    தோழியின் குறுக்கீட்டினால் தான் காதலர் ஒன்று சேர்கின்றனர். தந்தை அறிந்து கொண்டதும், அவனறியாமல் குமரன் எனும் காதலனுடன் வள்ளியை உடன்போக்காக அனுப்பி வைப்பதும் தோழி தான்! அவள் மதியூகத்தினால் தான் இக்காதல் கடிமணத்திலும் நிறைவு பெறுகின்றது!
    காதலின் பொன்வீதியில் காதலர் வெற்றி நடை பயில எல்லாம் அறிந்த தோழியின் துணை மிகவும் அவசியம் என நாம் காண்கிறோம்.

    தலைவன் கடிமண நாளை நீட்டும் போதுக் கடிந்துரைப்பதும் தோழியே!
    அவனுடன் தலைவியை யாரும் அறியாது அனுப்பி வைப்பதும் தோழியே!
    ‘மணம் புரிந்து செல்லும் எம் தலைவியைக் காதலுடன் வாழ்நாள் முழுமையும் போற்றுவாயாக,’ எனக் கண்ணீர் மல்கத் தலைமகனிடம் வேண்டுவதும் அந்த உற்ற தோழியே!

    *************************************************************

    Share
  • காதலின் பொன்வீதியில் – 8

    மீனாட்சி பாலகணேஷ்.

    பள்ளத்தை நோக்கி ஓடும் வெள்ளம் …

     

    ‘பெண்களுக்கு அழகின் பயன் ஒன்றுதான்; காதலன் மனதைத் தன் வசப்படுத்தி, அவனது அன்பை நிரந்தரமாகப் பெற வேண்டும். அவ்வாறு பெற இயலாத தன் அழகைப் பார்வதி நொந்து கொண்டாள்’- என்கின்றது குமாரசம்பவம் எனும் சமஸ்கிருத நூல்.

    ‘ஆகவே மனதை ஒருமைப்படுத்தித் தவம் செய்து சிவனை அடைவதன் மூலம் தனது அழகினைப் பயனுடையதாக்க அவள் விரும்பினாள்,’ என்கிறார் இதனை இயற்றிய காளிதாசர்.

    யத் துஷ்கரம் யத் துராபம் யத் துர்கம் யச்ச துஸ்தரம்
    தத் ஸர்வம் தபஸா ப்ராப்யம் தபோஹி துரதிக்ரமம் II

    ‘வேறு எந்த உபாயத்தினாலும் அடைய இயலாததையும் தவத்தினால் அடைய இயலும்’ என்பது ஸ்லோகம்.

    இதை நன்றாக அறிந்தவள் பார்வதி. ஆகவேதான் கடினமான தவம் இயற்றத் துணிந்தாள் அவள். யாராலும் அவள் உறுதியைக் குலைக்க முடியவில்லை. தான் விரும்பிய பொருளில் உறுதியான மனத்தை உடையவரையும், பள்ளத்தை நோக்கி ஓடுகின்ற வெள்ளத்தினையும் யாரால் திசை திருப்ப இயலும்?

    தவம் செய்வதற்கு ஏற்ற கோலம் பூண்டு மரவுரி அணிந்து கூந்தலை சடைகளாகச் செய்து கொண்டாள். கையில் ஜபமாலையை ஏந்தினாள். இமவானின் அருமை மகளாக சுகவாழ்வு வாழ்ந்த அவள் கடினமான தரையில் அமர்ந்து தவம் இயற்றினாள்; கையைத் தலையணையாகக் கொண்டு உறங்கினாள். தினம் மூன்று முறை நீராடி உடலைத் தூய்மை செய்து கொண்டாள்.

    ஆனால், இவ்வாறு அவள் செய்த தவத்தினால் விரும்பிய பயன் கிட்டவில்லை! சற்றும் மனம் தளராத பார்வதி, தன் சரீரத்தின் மென்மையைப் பொருட்படுத்தாமல் மேலும் கடினமான தவத்தை இயற்றலானாள். ‘பஞ்சாக்னி தபஸ்’ எனும் கொடிய தவத்தை மேற்கொண்டாள். அது என்ன? நாற்புறமும் தீயை வளர்த்து, அதன் நடுவே நின்று கொண்டு, சூரியனையே பார்த்தபடி தவம் செய்யலானாள்.

    பனிக்காலத்தில் தாமரை இல்லாத தடாகத்தில் கழுத்தளவு நீரில் நின்று கொண்டு தவம் செய்தாள். மென்மையான தாமரை போன்ற தனது தேகத்தை இவ்வாறு வருத்திக் கொண்டு அவள் கடுந்தவம் செய்தது, மகரிஷிகளின் தவத்தினையும் தாழ்ந்ததாகச் செய்தது.

    ஏன்? என்ன ஆயிற்று? அவளுடைய காதல் ஏன் நிறைவேறவில்லை? பார்வதி ஏன் கடுந்தவம் இயற்ற விரும்புகிறாள்? காரணம் என்ன?

    ***************************************************************

    பண்டொரு நாள்…………………..
    சிவபிரான் மோனத் தவத்தில் ஆழ்ந்திருந்தார். மற்ற தினங்களைப் போல அன்றும் அவருக்குப் பணிவிடை செய்யப் பார்வதி அவருடைய ஆசிரமத்து வாயிலை அடைந்தாள்.

    அவள் அழகே உருவானவள். வசந்த காலத்தின் ஒளி மிகு மலர்களான அசோக மலர்கள் இரத்தினங்கள் போலவும், கர்ணிகார மலர்கள் தங்க நகைகள் போன்றும், சிந்து வார மலர்கள் முத்துமாலைகளாகவும் அவளை அலங்கரித்தன. இளம் சூரியன் போல் மென்சிவப்பு நிறம் கொண்ட உடையுடுத்தி, பூங்கொத்தினால் வளைந்து ஒசிந்து ஒல்கும் சிவந்த தளிர்களையுடைய மெல்லிய பூங்கொடி போன்ற உடலமைப்புக் கொண்டவள்.

    இமவான் மகள் பார்வதி வந்திருப்பதாக நந்திதேவன் அறிவிக்கிறான். சிவனும் தலையை அசைத்து ஆமோதிக்கிறார்.

    பலவித மலர்களை அணிந்திருந்த பார்வதி சிரத்தை மிகத் தாழ்த்தி அவரை நமஸ்கரித்தாள். அப்போது அவளுடைய காதுகளின் மேல் வைத்திருந்த மலர்கள் நழுவிக் கீழே விழுந்தன.

    “பார்வதி! உன்னைத் தவிர வேறு ஒரு பெண்ணை மனைவியாக ஏற்காத கணவனை நீ அடைவாயாக!” எனச் சிவபிரான் அவளை ஆசிர்வதித்தார் (அவர் வாக்கு முற்றிலும் உண்மையானது. பெரியோர்களின் வாக்கு என்றுமே பொய்ப்பதில்லை!).

    இச்சமயம் தேவர்களின் வேண்டுகோளுக்கும் தூண்டுதலுக்கும் இணங்க இவர்கள் இருவரையும் காதல் வயப்படச் செய்வதற்காகத் தனது மலரம்பை எய்யச் சரியான தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டு மன்மதனும் ரதியுடன் மறைந்திருந்தான்.

    parvathi1

    தவம் செய்பவர்கள் அணிந்து கொள்ளத்தக்கதும், ஆகாச கங்கையில் மலர்ந்த தாமரை மலர்களின் விதைகளாலானதும் ஆன ஒரு மணிமாலையைப் பார்வதி தனது அழகிய சிவந்த கரங்களால் எடுத்துச் சிவனுக்கு அளிக்கிறாள். தலையைச் சிறிது தாழ்த்தி அம்மாலையை ஏற்றுக் கொள்ள சிவன் தயாராகிறார்.

    மன்மதன் தனது குறிதவறாத பாணமான ‘சம்மோஹன’த்தை வில்லில் நாணேற்றுகிறான்!

    parvathi2

    கோவைப்பழம் போலச் சிவந்த உதடுகளை உடைய பார்வதியின் முகத்தைச் சிவபிரான் ஆவலுடன் நோக்குகிறார். பார்வதியும் நாணத்தினால், மெய்ப்புளகமுற்றவளாகித் தனது காதலை வெளிப்படுத்துபவளாக, சிறிதே தன் தலையைச் சாய்த்துக் கடைக்கண்களால் சிவனை நோக்கி நிற்கிறாள்.

    கண்கள் கலந்து, காதல் கதை பேசி, உள்ளங்கள் உறவாடி மகிழ வேண்டிய போதில், அடடா! என்ன கொடுமை! சிவபிரான் தன் நிலை உணர்ந்து, புலன்களை அடக்கியவராகி, தன் மனதை இவ்வாறு தடுமாற வைத்தது யார் என நாலாபுறமும் நோக்குகிறார். மன்மதனைக் கண்டதும், சினத்துடன் நெற்றிக் கண்ணைத் திறந்து, அவனை எரித்துச் சாம்பலாக்குகிறார். பின் அவ்விடத்தை விட்டுத் தவம் செய்யச் சென்று விட்டார்.

    இப்போது பார்வதியின் நிலைமையை நாம் பார்க்க வேண்டும்.

    விரும்பிய காதலன், ‘காதல் வயப்பட்டோம்’ எனக் கண்களால் நொடிப்பொழுது கட்டுரைத்தவன், அந்த இன்பத்தினை அதே நொடியில் சிதைத்துத் துவைத்து விட்டு, அவளுடைய நிலை பற்றி ஒரு சிறிதும் கவலைப் படாமல் அங்கிருந்து விரைந்து சென்று விட்டால், ஒரு பெண்ணின் மனம் என்ன பாடு படும்? எவ்வளவு துயர் கொள்ளும்?

    அதுவும் அவளுடைய தோழிகளும் ரதி-மன்மதனும் காணும் வண்ணம் இது நிகழ்ந்ததால் அவள் இன்னுமே அவமானமடைந்து வெட்கிக் குறுகி நின்றாள்.

    உலகிற்கே தலையாய அழகி அவள். அவள் உயர்வான அழகும், மென்மை நிறைந்த பெண்மையும் நளினமும் அவள் மனம் வரித்துக் கொண்ட சிவபிரான் முன்பு பயனற்றதாயிற்று. மூர்ச்சையடைந்து துவண்டு கொடியெனத் தரையில் வீழ்ந்தாள் அவள்.

    ***************************************************************

    நினைவு வந்ததும் அவள் செய்யத் துணிந்த செயல் ஒன்றே தான்- அது தவம் செய்து தனது காதலனை, கணவனாகப் பெறுவது என்பது. அதனால் தான் தவம் இயற்றப் புகுந்தாள்.

    ***************************************************************

    செய்தற்கரிய உயர்ந்த தவத்தைச் செய்ததால், தவப்பயன் தானே வரவேண்டும் அல்லவோ? இப்போது பார்வதியின் தவச்சாலைக்குச் சென்று என்னவாயிற்று எனப் பார்க்கலாமா? செய்த தவத்தின் பலன் நெருங்கி வரும் வேளை- ஆஹா! சிவபூஜையில் கரடி போல , யார் இது?

    பார்வதியின் ஆசிரமத்தில், மிகுந்த ஒளி பொருந்திய உடலும், மான்தோல் அணிந்து கையில் ஏந்திய தண்டத்துடன், சடாமுடி தரித்த ஒரு பிரம்மசாரி* நுழைந்தார். பார்வதி அவரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்று உபசரித்தாள்.

    மரியாதையை ஏற்றுக் கொண்டவர், களைப்பு நீங்கியதும் சொன்ன சொற்கள்…..

    இவர் யார்? தவசீலரா அல்லது கலா ரசிகரா? காமுகரா?

    “இக்கொடிகளின் தளிர்கள், சாயம் பூசாவிடினும் இயற்கையிலேயே சிவந்த உனது உதடுகள் போல உள்ளன!”

    “ஆசிரமத்திலுள்ள இந்த மான்கள் உனது கண்களுக்கு உவமையாக இருக்குமாறு தமது கண்களைச் செய்து கொள்ள முயலுகின்றன!”

    “நீ கங்கையினும் உயர்வானவள்! உனது நட்பு எனக்குக் கிடைத்தது. அந்த நட்பின் உரிமையால் நான் உன்னை ஒன்று கேட்கிறேன். நீ எதனை விரும்பித் தவம் செய்கிறாய்? உனக்கு செல்வமும், சுகங்களும், அழகும், இளமையும் பருவமும் உள்ளனவே. இன்னும் வேறென்ன வேண்டும்?” என்றார் அந்த பிரம்மசாரி.

    இப்போது, கச்சியப்பச் சிவாச்சாரியார் இயற்றிய கந்தபுராணத்தில் இந்தக் கதை தொடர்வதைக் காணலாமா?

    “உனது இந்த அழகெல்லாம் அழியுமாறு எதற்காக இந்தத் தவம் செய்கிறாய்?” எனக் கேட்டார் வயதில் முதிர்ந்த அந்த பிரம்மசாரி.

    “அப்பொழுது உமை தன்னை ஆதரவொடு பாராச்
    செப்புதல் அரிதாம் உன் திரு நலன் அழிவு எய்த
    மெய்ப்படு தசை ஒல்க மிகுதவம் முயல்கின்றாய்
    எப்பொருள் விழைவுற்றாய் எண்ணியது உரை” என்றான்.

    “சுவாமி! பரமேசுவரனாகிய சிவபிரானை அடைய வேண்டியே எம் தலைவியார் தவம் செய்கின்றார்கள், ” என்றாள் தோழியான விசையை.

    ‘கட கட’வெனச் சிரித்தவர், “அயனும் மாலும், தேவரும் மூவரும் காணவொண்ணா ஒருவனை அடையவா தவம் செய்கிறாய்? அது நடக்கக் கூடிய செயலல்லவே?” என எள்ளி நகையாடுகிறார்.

    பார்வதிக்குச் சினம் மிகுகிறது. “முடிவற்ற அந்த இறைவன் என் விருப்பத்தினை முடித்து வைக்காவிடினும் இன்னும் கடுமையாய்த் தவம் செய்து அன்பினால் அவரை அடைவேன். அறிவு முதிர்ந்தவர் போல் காணப்படும் நீர் ஏன் பித்தன் போன்று பேசுகின்றீர்?” என்கின்றாள்.

    “முடிவிலாது உறை பகவன் என் வேட்கையை முடியாது
    விடுவன் என்னினும் தவத்தினை விடுவனோ மிக இன்னம்
    கடிய நோன்பினை அளப்பு இல செய்து உயிர் கழிப்பேன் நான்
    நெடிது மூத்தலின் மயங்கினை பித்தனோ நீ” என்றாள்.

    இவ்விளம் பெண்ணின் திட உள்ளம் அந்தணருக்கு வியப்பை மூட்டியதோ என்னவோ, இன்னும் சிறிது பார்வதியிடம் விளையாடத் துணிந்தார் அவர். “ஆமாம்! அவர் என்ன அவ்வளவு உயர்வானவரோ? அவர் அணிவது யானை, புலி இவைகளின் தோலாலான ஆடை; ஏறுவது ஒரு கிழமாடு! பாம்பு தான் அணிகலன்கள். எலும்பு மாலை; மண்டையோட்டு உண்கலம்; கொடிய நஞ்சே உணவாகும்,” எனப் பழித்துப் பட்டியலிட்டு அவளது சினத்தைக் கூட்டுகிறார்.

    “ஆடை தோல் விடை ஏறுவது அணிகலம் அர என்பு
    கேடு இல் வெண் தலை மாலிகை கேழலின் மருப்பு இன்ன
    ஓடு கொள்கலம் ஊண் பலி வெய்ய நஞ்சு உலப்பு உற்றோர்
    காடு அதே நடம் புரி இடம் கண்ணுதல் கடவுட்கே.”

    “நீர் இவ்வாறு இறைவனைப் பழிக்கிறீர். உம்மெதிரே நிற்பதும் பாவம்; மறை ஓதியவர், பெரியவர் என மதித்தேன். இவ்வாறெல்லாம் பேசுவதாயின், இப்போதே இங்கிருந்து சென்று விடுங்கள்,” என்றாள் பார்வதி.

    அவர் விடாக்கண்டன்! “பெண்ணே! என்னை இவ்வாறு நீ விரட்டலாகுமோ? நான் இங்கு வந்த காரணமே உன்மீது மையல் கொண்டு உன்னை முறைப்படி மணந்து கொள்ள ஆசை கொண்டதனால் தானே,” என்று கூறிப் புன்னகை புரிந்து நின்றார் முதிய அந்தணர்!

    அறத்தினைப் புரிவாள் இவ்வாறு அறைதலும் “அணங்கே ஈங்கு உன்
    திறத்தினில் ஆர்வம் செய்து சென்ற என் செயல் கேளாது
    புறத்திடைப் போதி என்று புரைவதோ புகுந்த பான்மை
    மறைச் சடங்கு இயற்றி நின்னை வரைந்திடற்கு ஆகும்” என்றான் அந்த அந்தணப் பிரம்மசாரி*!

    தவத்தால் வருத்திய உடலைக் கொண்ட இமவான் மகள் திடுக்குற்று நின்றாள்.

    உள்ளம் பதைக்க விம்மி விம்மி அழுதவாறு, “நீர் தகாத சொற்களைக் கூறினீர். நீர் செல்லாவிடின் நான் இங்கிருந்து செல்கிறேன்,” எனத் திரும்பிப் போக எத்தனித்தாள் பார்வதி.

    (இங்கு குமாரசம்பவத்தில் காளிதாஸர் கூறுவதைப் பார்க்கலாமா?)

    திரும்பிச் செல்ல முயன்றவளின் கரத்தினை வலிந்து பற்றி இழுத்தார் பிரம்மசாரி- எல்லையற்ற சினத்துடன் அவரை எதிரெடுத்து நோக்கியவள் பிரமிப்பிலும், வியப்பிலும், நாணத்திலும் மூழ்கினாள். அங்கு அவள் கண்டது யாரை? முதிய அந்தணர் வடிவை விடுத்து தமது உண்மை உருக்கொண்டு காதலில் கனிந்த புன்னகை பூத்த வண்ணம் சிவபிரானே அங்கு நின்றார்.

    திகைத்து நின்றாள் பெண்ணணங்கு! தனது தவத்தின் பயன் நேரில் எதிர்பாராது வந்ததாலும், அவரைப் பற்றி வாய்விட்டுப் புகழ்ந்து பேசித் தன் காதலையும் வெளியிட்டதாலும், நெகிழ்ந்து நாணி நின்றாள்.

    காதலனான சிவன் அவளை நோக்கிக் கூறுவார்: “உனது கடும் தவத்தினை விலையாகக் கொடுத்து நீ என்னை அடிமைப் படுத்திக் கொண்டு விட்டாய். இனி என்றென்றும் நான் உந்தன் அடிமை.”

    பார்வதி தனது தவத்தின் பயனைக் கண்ணுற்றாள்; அவர் இனிய சொற்களைக் காதால் கேட்டாள்; உவகைப் பெருக்கு மிக்கிட ஆனந்த வெள்ளத்தில் நீந்தலானாள்.

    ***************************************************************

    ( *காளிதாசரின் குமாரசம்பவம் சிறிது வயது முதிர்ந்த பிரம்மசாரி என்கிறது; கச்சியப்பரின் கந்தபுராணம் கிழ அந்தணர் என்கிறது. நாம் எப்படி வேண்டுமானாலும் கொள்ளலாம்)

    ***************************************************************

    தவப்பயனைத் தருபவர், நேரில் வந்து காதலியைக் கைப்பிடிக்க வேண்டியது தானே! இவ்வாறெல்லாம் வம்பு செய்து, அவளை இன்னும் தொடர்ந்து வருத்தி மகிழ வேண்டுமோ என நாம் எண்ணலாம். இதுவும் ஒரு காரணத்திற்காகத்தான்- தன்னிடம் அவள் கொண்ட காதலை அவள் வாயினாலேயே கேட்டு அறிந்து கொள்வதற்காகத்தான் இந்த விளையாட்டு. சிவபிரானாகிய தலைவனுக்குத் தான் திருவிளையாடல்கள் மிகவும் விருப்பமானவை ஆயிற்றே!

    தன் காதலியாகிய பார்வதியிடம், சிவபிரான் அவளழகை வருணிப்பதாக வேறொரு நூலிலும் நாம் காணவில்லை; காளிதாசர் அந்தக் குறையை தமது குமாரசம்பவம் எனும் இந்நூலில் பூர்த்தி செய்கின்றார்! மேலும், பார்வதியின் திருவாயிலிருந்தே தமது மேன்மைகளை அவள் கூறக் கேட்டு மகிழவும் இது ஒரு உபாயம், ஈசன் செய்தது!

    தனதழகின் பயன் வீணாயிற்றே என வருந்தியல்லவா அவள் தவம் செய்யப் புகுந்தாள்? காதலியைத் தவிக்க விடலாமா? காதலின் இனிய தருணங்கள், காதலியைக் காதலன், “பொன்னே, முத்தே, என் உயிரே,” எனவெல்லாம் வருணித்து அவள் அழகையும் குணங்களையும் போற்றுவது தான். அதைத்தான் அண்ணலும் செய்து மகிழ்கிறான்.

    பார்வதியின் அன்பின் மேன்மையை அறிந்ததால் அன்றோ அண்ணல் சிவபிரான் தன் சக்தியான அவளுக்குத் தன் உடலிலேயே பாதியை அளித்தான் ?

    முழுமையான நிபந்தனையற்ற அன்பும், ஒருமைப்பட்ட செம்மையான மனமும் தான் காதலுக்கு இன்றியமையாத தேவைகள் என்பது காதலின் பொன்வீதியில் நடை பயிலும் இளம் காதலர்கள் உணர வேண்டியனவாகும்.

    குமார சம்பவத்தில் வரும் பார்வதியின் தவம் இதனைத் தெளிவாக விளக்கி உள்ளது!

    ***************************************************************

    படம் உதவி:
    நன்றி; © அம்புலிமாமா
    நவராத்திரி கொலு பொம்மைகளைச் செய்தவரும், படம் எடுத்தவரும் – மீனாட்சி பாலகணேஷ்.

     

     

    Share
  • காதலின் பொன்வீதியில் – 7

    மீனாட்சி பாலகணேஷ்.

    இசையால் இணைந்த இதயங்கள்

    கானகத்தின் நடுவிலிருந்த அழகான அந்தப் புனலில் இளமங்கையர் சிலர் நீராடி மகிழ்ந்தனர். ஒருவரையொருவர் கேலி செய்தபடியும், நீரைத் துளாவி வாரி இறைத்தும் மகிழ்ந்தவர்கள் நீராடி முடித்துக் கரையேறி உடைகளை உடுத்துக் கொண்டு அலங்காரம் செய்து கொண்டனர்.

    “ரூப்மதி, இப்போது நீ கொஞ்சம் உனது ‘பீனை’ இசைத்துப் பாடேன். இந்த இயற்கைச் சூழலில் எவ்வளவு நன்றாக இருக்கும்,” என்றாள் ஒருத்தி. ரூப்மதி என்ற அந்த மங்கை பேரழகி மட்டுமல்ல. இசையிலும் தேர்ந்தவள்; இனிய குரல் படைத்தவள்; ‘பீன்’ எனும் இசைக்கருவியை இசைத்தபடி பாடுவதில் வல்லவள்.

    மரத்தடியில் அமர்ந்து கொண்ட அப்பெண்கள் குழாம் ரூப்மதியின் இனிமையான பாடல்களை ரசிக்கலாயிற்று.யார் இந்த ரூப்மதி? மால்வாபிரதேசத்தின் ஒரு நாடான தரம்புரியின் அரசரான தன்சிங் எனும் ராஜ புத்திர வம்சத்து மன்னரின் அருமை மகள். தோஹா (Doha) எனப்படும் அழகான இரண்டு வரிக் கவிதைகள் இயற்றுவதிலும் அவற்றை இசையமைத்துப் பாடுவதிலும் திறமை படைத்தவள்.

    அந்தக் கானகத்தின் மறுகோடியில், மாண்டுவின் சுல்தானான பாஜ் பஹதூர் வேட்டையாட வந்திருந்தான். அவன் ஒரு மானைத் துரத்த, அது ஓட , மன்னனும் மானும் கானகத்தின் இக்கோடிக்கு வந்து விட்டனர். இசைப்பிரியனான பாஜ்பஹதூரின் செவிகளில் ரூப்மதியின் இன்னிசை தேனாகப் பாய்ந்தது. இசையால் ஈர்க்கப்பட்டு அவளுடைய குரல் வந்த திசையில் தேடிச் சென்று ஒளிந்து நின்று பார்த்தான்.

    இசையால் மட்டுமல்ல, அவளுடைய காந்தம் போன்ற ஈர்க்கும் எழில் மிகுந்த வடிவ அழகாலும் தன் வயமிழந்து, கொடிகளையும் செடிகளையும் விலக்கிக் கொண்டு அவள்முன் வந்தான் பாஜ் பஹதூர். “பெண்ணே, நீ யார்? உனது இசையால் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டாய்,” என்றான்.

    அச்சத்தால் தோழியர் சிதறி ஓடினர்!சிறிதும் அச்சம் கொள்ளாது அந்த ராஜபுத்திர மங்கை ரூப்மதி, “நான் மால்வா பிரதேசத்து தரம்புரியின் அரசர் தன்சிங்கின் மகள்,” என்றாள்.

    முதலில் தனது இனிய இசையைப் பொழிந்து அவனது உள்ளத்தை வசப்படுத்திக் கொண்டவள், இப்போது கண்ணையும் கருத்தையும் தன் அழகினால் கவர்ந்து கொண்டு விட்டாள்.

    இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கியபடியே……… கணங்கள் பெருகி மணிகளாகி, அவையும் திரண்டு யுகங்களாகி விட்டனவோ?

    கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல … என்னும் குறளுக்கொப்ப, தன்னுடைய இனிய இசையால் அவன் தன்பால் காதல் வயப்பட்டு விட்டான் என்று குறிப்பால், அவன் நோக்கினாலும், பேச்சினாலும் உணர்ந்து கொண்டு விட்டாள் ரூப்மதி. தன் இசையை, தான் போற்றும் இசையை அவனும் மிகவும் ரசிப்பவன், அழகன், இளைஞன் என்ற காரணத்தால் வேற்று மதத்தவனாயினும் அவள் உள்ளமும் அவனிடம் சென்று ஒன்றி விட்டது.

    இருவருக்குமே உள்ளுணர்வு கூறியது- ‘காலம் தாழ்த்தினால் காரியம் கைகூடாது’ என்று!

    பாஜ் பஹதூர் தான் முதலில் கேட்டான்: “எனது நாடான மாண்டு உன்னை அரசியாக அடையும் பாக்கியம் பெறுமா?”

    ரூப்மதியின் இதயம் வேகமாகத் துடித்தது. அவள் கேட்க விழைந்த சொற்களைக் கூறுகிறான் அவன்! ஆயினும் சிந்தித்தாள். வாய்ப்பை நழுவ விடக் கூடாது. ராஜபுதன மங்கையான அவளுக்கும் சில விருப்பங்கள் உண்டு. அவற்றை நிறைவேற்றுபவனே அவள் இதயத்திற்கும் உரிமையாளன் ஆக இயலும். ‘நர்மதை நதி எனக்குத் தாய் போன்றவள்; அவள் மடியில், பிறந்து, விளையாடி, வளர்ந்து செழித்தவள் நான்; அவளைப் பிரிந்து, அவளைக் காணாமல், என்னால் ஒரு நாள் கூட வாழ இயலாது. என்ன செய்யலாம்?’ சிந்தித்தாள்.

    நெடு நேர அமைதியின் பின், இசைக் குயிலின் இதழ்கள் பிரிந்து மன உறுதியுடன் சொற்கள் வந்து விழுகின்றன. “என் தெய்வமான அன்னை நர்மதையை நான் தினந்தோறும் கண்டு மகிழும் வண்ணம் ஒரு அரண்மனையை உங்களால் மாண்டுவில் நிர்மாணிக்க முடியுமா? அப்போது தான் நான் மாண்டுவின் அரசியாகவும் உங்கள் இதய ராணியாகவும் ஆக இயலும்.”

    காதலின் திண்ணம்- கனவுகளின் வண்ணம்- மனதில் கொண்ட எண்ணம்- எல்லாம் சேர்ந்திழைந்த சொற்கள் அவை!

    “அது விரைவிலேயே நடக்கும்,” எனும் உறுதியானசொற்களைக் கூறியபடி கம்பீரமாக பாஜ் பஹதூர் திரும்பிச் சென்றான்.

    ரூப்மதியின் உள்ளம் அலைகடலில் படகு போலத் தத்தளித்தது. ‘நான் அவரால் நிறைவேற்ற முடியாத ஒரு செயலைக் கேட்டு விட்டேனோ? அவரைத் திரும்பக் காண்பேனா? அன்னை நர்மதை தான் வழி காட்ட வேண்டும்….’ பற்பல எண்ணங்கள். ஏக்கத்தில் நாட்கள் யுகங்களாக நகர்ந்தன.

    இப்போது அவள் இயற்றிய பாடல்கள், பாடிய இசை அனைத்துமே பிரிவின் துயரைத் தாங்க இயலாத காதல் கவிதைகளாகவே இருந்தன. அதிகம் பாடுவதும் இல்லை! பாடினாலும் அதில் துயரம் பெரிதும் கொப்பளித்தது!

    சுல்தான் பாஜ் பஹதூரும் தனது அரசியல் கடமைகளைப் புறக்கணித்தும் தனக்கு மிகவும் விருப்பமான இன்னிசை நிகழ்ச்சிகளில் பங்கெடுக்காமலும் நாட்டியங்களை ரசிக்காமலும் தனிமையை விரும்பி, ரூப்மதி பற்றிய எண்ணங்களில் ஆழ்ந்து, அவள் வேண்டுகோளை எவ்வாறு நிறைவேற்றி அவளைக் கைப்பிடிப்பது என்ற துயரில் வாடலானான்.

    மகளின் வாட்டத்தை அறிந்த அரசி, ரூப்மதியின் தோழியர்களிடம் துருவிக் கேட்டு, ரூப்மதியை பாஜ்பஹதூர் சந்தித்ததையும், அவளை மாண்டுவின் அரசியாக்கிக் கொள்ள விரும்பி வேண்டியதையும் அறிந்து கொண்டாள். கேள்விப்பட்ட தந்தை தன்சிங் மிகுந்த சினத்தினால் இதனை ஒப்புக்கொள்ள மறுத்தார். “நமது குடிக்கும் குலத்துக்கும் அவப்பெயர் வந்து சேரும், அவளுக்கு விஷம் கொடுப்பது தான் இதற்கான தண்டனை,” என்றார். தாய் மன்றாடிக் கேட்டுக் கொண்டதன் பேரில், மகளை அரண்மனையிலேயே சிறையிட்டுக் காவலில் வைத்தார்.

    தனிமையிலும் தாபத்திலும் தவித்த ரூப்மதியின் கனவில் அவள் நாளும் வழிபடும் நர்மதை அன்னை வந்தாள். “மகளே, மாண்டு நகரில் ஒரு குறிப்பிட்ட மரத்தினடியில் ஊற்று ஒன்று உற்பத்தியாகி எழுந்து ஓடி வந்து என்னுடன் (நர்மதையுடன்) சேரும். அங்கு நீ உன் காதலனைச் சேர்வாய்,” என ஆசி கூறினாள். ரூப்மதியின் நெஞ்சம் ஆனந்த வெள்ளத்தில் நீந்தியது.

    Baz_Bahadur_and_Rani_Rupmatiரூப்மதி அவளுடைய தந்தையால் சிறை வைக்கப்பட்டதைக் கேள்வியுற்ற பாஜ்பஹதூர் தரம்புரி மேல் போர் தொடுத்து, ரூப்மதியைச் சிறைமீட்டுச் செல்கின்றான். அவளை இந்து, இஸ்லாம் ஆகிய இரு முறைப்படியும் திருமணம் புரிந்து கொண்டு தன்னுடைய பட்டத்தரசியாக்கிக் கொள்கின்றான். இப்போது இருவரும் நாடு முழுவதும் சுற்றி, அன்னை நர்மதை கனவில் வந்து கூறிய நீரூற்றைத் தேடுகின்றனர். ஒரு மரத்தினடியே ‘குபு குபு’வெனப் பெருகி வரும் வெள்ளியிழைகள் போன்ற ஊற்றைக் கண்டு பிடித்ததும் ரூப்மதியின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

    Rewa_Kund,_Manduஇனிய இசையால் தன் இதயத்துள் குடிபுகுந்து தன் வாழ்வையும் இன்ப மயமாக்கிய இசைக்குயிலுக்கு பாஜ்பஹதூர் ஒரு அழகான அரண்மனையை அங்கேயே நிர்மாணிக்கின்றான். இந்தப் புனிதமான நீரூற்று ரேவா குண்ட் எனப் பெயரிடப்பட்டு, ஒரு நீர்த்தேக்கமாக அமைக்கப் பட்டது. இதிலிருந்து வாய்க்கால்கள் மூலம் நர்மதையின் நீரானது ரூப்மதியின் அரண்மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. (புகைப்படங்களில் பார்த்தால் எத்தனை விதவிதமான கலையம்சம் நிறைந்த வாய்க்கால்கள்! இவை அனைத்தும் ரூப்மதிக்கான பாஜ் பஹதூரின் காதல் பரிசுகள்)16-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்ட இந்த அரண்மனை விசாலமான முற்றங்களையும், பெரிய அறைகளையும், சுற்றுப்புறங்களைக் கண்டு களிக்க உகந்த மிக உயரமான உப்பரிகைகளையும் கொண்டு விளங்குவதாகும். இந்த உயரத்திலிருந்து ரூப்மதி கீழ்மட்டத்தில் ஓடும் நர்மதை நதியையும், தொலை தூரத்து விந்திய மலையின் செழித்த பச்சை நிறக் காடுகளையும், இன்னும் தொலைவில் இருக்கும் தனது தாய்வீடான தரம்புரியையும்கண்டு மகிழ ஏதுவாக அந்த உப்பரிகை அமைந்திருந்தது.

    Rupmati_Pavilion_01தாய்வீட்டைப் பிரிந்தவளின் உள்ளத் தவிப்பைத் தனிமையான நேரங்களில் இந்த உப்பரிகை மீது அவள் அமர்ந்து இயற்றிப் பாடிய இந்த தோஹா அழகுறத் தாபத்துடன் விவரிக்கின்றது.

    ‘நீயும் என்னுடன் இருந்த நாட்கள் இறந்து பட்டன;
    நான் உன்னுடன் இருந்தவை போலவே:
    இன்று திரும்பவும் நான் நானாக, நீ நீயாக
    ஒன்றாக அல்ல, இரண்டாக:
    இந்தக் கொடுமைக்கு என்ன செய்தோம் நாம்,
    ஓ, விதியே?

    (இங்கு நீ என்பது தாய்நாட்டைக் குறிக்கின்றது)

    Rupmati_Pavilion_02இளம் காதலர்கள் ரூப்மதியும் பாஜ்பஹதூரும் இந்த உப்பரிகையில் அமர்ந்து மாலை வேளைகளிலும் இரவுகளிலும் தங்கள் பொழுதினை இன்பமாகக் கழித்தனர். அவள் கவிதை இயற்றிப் பாட, அவன் ரசித்து மகிழ்ந்தான். அவனும் சில வேளைகளில் அவளுடன் சேர்ந்து பாடல்களை இசைத்தான். இசை, இன்னிசை, என்றும் பொழியும்அழியாத இசை இருவர் உள்ளங்களிலும் தாம் ஒருவர் பால் மற்றவர் கொண்டிருந்த காதலை மேன்மேலும் ஆவலுடனும் சிறப்புடனும் வளரச் செய்தது.

    ரூப்மதி இயற்றிய காதல் ரசம் சொட்டும் ஒரு தோஹாவின் மொழிபெயர்ப்பு:

    ‘இன்றிரவு நான் நிலவை வரவேற்பேன்
    அவளது புதுமையான ஒளிரும் முகத்திற்கு முகமன் கூறுவேன்
    ஆ! எத்தனை ஆனந்தம்! உமது கண்களும் எனதும்
    ஒரே இடத்தில் பதிந்து நோக்குவது!’

    ரூப்மதியின் அழகும் இசையும் பாஜ் பஹதூரைக் கட்டிப் போட்டு வைத்திருந்தன. அவளை விட்டுப் பிரியாது மகிழ்ந்திருந்த அவன், அரச அலுவல்களைப் புறக்கணித்தான்.அவர்களுடைய ஆனந்த வாழ்வு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.அப்போது தான் அரியணை ஏறியிருந்த அரசரான அக்பர் கண்களில் படைப் பாதுகாப்பற்றிருந்த மால்வா- மாண்டு பகுதி உறுத்தலாகப் பட்டது.

    அதனைக் கைப்பற்ற தனது படைத் தலைவர்களுள் ஒருவனான ஆதம்கானைப் படையோடு அனுப்பி வைத்தார். இசையிலும் காதலிலும் மூழ்கி அரச அலுவல்களை மறந்து விட்ட பாஜ் பஹதூரால் முகலாயப் படைகளைத் தாக்குப் பிடிக்க இயலவில்லை. விரைவில் தோற்கடிக்கப் பட்டான். ஆதம்கானின் படைகளால் கொல்லப்பட்டான் எனவும் கூறப்படுகின்றது.

    ரூப்மதியின் அழகினைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த ஆதம்கான் அவளைத் தன் உடமையாக்கிக் கொள்ள முயல்கிறான். தான் அவனிடமிருந்து தப்ப வேறு வழியில்லை என அறிந்த ரூப்மதி, தனது துயரத்திலிருந்து விடுபட மூன்று நாள் அவகாசம் கேட்கிறாள். ‘ஒரு ராதோர் ராஜ்புத்திர மங்கை ஒருமுறை தான் காதல் வயப்படுவாள். பாஜ் பஹதூர் ஒருவனே எனது உயிரும் ஆன்மாவுமாவார். நான் என்ன செய்து இந்த இக்கட்டிலிருந்து தப்புவது?’ என யோசித்து வருந்தியவளுக்கு ஒரு நல்ல வழி புலப்படுகின்றது.

    இக்கருத்தைப் பிரதிபலிக்கும் ஒரு தோஹா- ரூப்மதி இயற்றியதன் மொழிபெயர்ப்பு:

    ‘ஒரு சிங்கத்திற்கு ஒரு சிங்கக்குட்டி;
    உண்மையாளனுக்கு ஒரு சொல்;
    வாழைக்கு ஒருமுறை குலை தள்ளல்;
    என் இதயத்திற்கும் ஒரே தலைவன்!’

    மூன்று நாட்கள் அன்ன ஆகாரமின்றிக் கழிகின்றன. மூன்றாம் நாள் இரவில் பாஜ் பஹதூருடனான தனது திருமணத்தின் போது தான் அணிந்தபட்டாடைகளையும் ஆபரணங்களையும் அணிந்து கொண்டு அலங்கரித்துக் கொண்டாள். ‘பீன்’ இசைக்கருவியை மீட்டியபடி துயரம் நிறைந்த பாடல்களை இசைக்கலானாள்.

    ரூப்மதி இயற்றிய அவலம் நிறைந்த ஒரு பாடலின் (தோஹா) மொழிபெயர்ப்பு:

    ‘எனது மென்மையான உள்ளம் இந்தக் கொடூரத்தைத் தாங்காது
    நம்மைப் பிரிக்கும் இந்த நெருப்பின் ஜ்வாலைகள்!
    ஓ! தன்னைக் குளிர்விப்பதென இந்த சதி உன்னுவாள்
    தனது தலைவனின் சிதை தன்னை!’

    (சதி- உடன்கட்டை ஏறும் மனைவி)

    வெகு நேரத்தின் பின், தாதியைக் கூப்பிட்டாள்: “நான் எனது அறைக்குச் செல்கிறேன். ஆதம்கானை அங்கு வரச் சொல்.”

    தனது அறைக்குள் சென்றவள் ஏற்கெனவே தயாராக வைத்திருந்த விஷத்தை அருந்துகின்றாள். அமைதியாகப் பஞ்சணையில் சாய்ந்து கண்களை மூடிக் கொள்கின்றாள்.

    உற்சாகமாக உள்ளே நுழைந்த ஆதம்கான் அந்த அழகியின் உறங்கும் கோலத்தில் அவள் பேரழகைக் கண்டு பிரமிக்கிறான். உள்ளம் படபடக்க அவளருகே அமர்ந்து கையைப் பற்றுகிறான். உயிரற்ற அவள் உடலைக் கண்டு திகைக்கிறான். அவள் எண்ணம் இப்போது அவனுக்குப் புரிகின்றது.

    “ஓ! காவலாளிகளே! ஓடி வாருங்கள். இவள் இறந்து விட்டாள்,” எனப் பதறுகிறான்.

    எல்லாரும் ஓடி வர, “ரூப்மதி தன் காதலனுக்காகவே தன்னைக் காப்பாற்றிக் கொண்டு இறந்து விட்டாள். பாஜ் பஹதூர் பக்கத்திலேயே இவளையும் அடக்கம் செய்ய வேண்டும்,” எனக் கட்டளை இடுகின்றான் ஆதம்கான். அவ்வாறே செய்யப் படுகின்றது.

    நீண்ட நாட்கள் வரை இந்தச் சமாதிகளின் அருகே சென்று, ‘ரூப்மதி,’ எனக் கூவி அழைத்தால் அது, ‘பாஜ் பஹதூர்’ என்று எதிரொலிக்குமாம். (தற்சமயம் இந்த சமாதி பாழடைந்த நிலையில் உள்ளது என்பது மிகுந்த வருத்தம் தரும் செய்தி ஆகும்.)

    காதலின் பொன்வீதி காதலர்களுக்கு வாழ்வில்மட்டுமே அல்ல; இறப்பிலும் இணை பிரியாது பயணிக்கும் காதலர்களுக்கும் உரித்தான பொன்வீதி தான் அல்லவா?

    இசையால் இணைந்த ரூப்மதி- பாஜ் பஹதூர் இதயங்கள் காதலின் ஜீவகீதங்களை என்றென்றும் இசைத்திருக்கும் அன்றோ?

    ___________________________________________________________________________

    பின் குறிப்பு: ரூப்மதி- பாஜ் பஹதூர் காதல் கதை ராணி ரூப்மதி எனும் பெயரில் ஒரு அற்புதமான ஹிந்தி திரைப்படமாக நீண்ட நாட்களுக்கு முன் வந்துள்ளது.வேண்டுவோர் இதனை You Tube- ல் காணலாம். மிக அழகான பாடல்கள் கொண்டது. கட்டாயம் பார்த்து மகிழுங்கள்.

    ___________________________________________________________________________

    படங்கள் உதவி: விக்கிபீடியா

    Baz Bahadur and Rupmati: http://upload.wikimedia.org/wikipedia/commons/6/68/Bazrupmati.jpg
    Baz Bahadur and Rupmati: http://upload.wikimedia.org/wikipedia/commons/1/1c/Baz_Bahadur_and_Rani_Rupmati_-_Google_Art_Project.jpg
    Rewa Kund: http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/ba/Rewa_Kund%2C_Mandu.jpg/800px-Rewa_Kund%2C_Mandu.jpg
    Rupmati Pavilion: http://upload.wikimedia.org/wikipedia/commons/a/a6/Rupmati_Pavilion_at_Mandu.JPG
    Rupmati Pavilion: http://upload.wikimedia.org/wikipedia/commons/2/28/Rupmati_Pavilion_03.jpg

     

    Share
  • காதலின் பொன்வீதியில் – 6

    மீனாட்சி பாலகணேஷ்.

    நிழலாய் நடந்தாள் அவனோடு!

     

    “ஓ! சாவித்ரி, நில்! திரும்பிச் செல். என்னைத் தொடராதே! திரும்பிச் சென்று உனது அன்புக் கணவன் சத்யவானின் ஈமக்கடன்களைச் செய்!” என்றான் யமதர்ம ராஜன்.

    சாவித்ரி சொன்னாள்: “என் கணவரை என்றென்றும் நிழலாகப் பின் தொடர்வது எனது கடமைகளில் ஒன்றாகும். என் கணவர் மீது நான் கொண்ட அன்பினால், அவர் நன்மைக்காக நான் செய்த நோன்புகளால், யாராலும், ஏன் உன்னாலுமே நான் அவரை, அவர் உயிரைத் தொடர்வதைத் தடுக்க முடியாது யமராஜனே! ஆகவே இப்போதும் கூட, நீர் எங்கு அவர் உயிரைக் கொண்டு செல்கிறீரோ அங்கும் நான் நிழலாய்த் தொடர்ந்து வருவேன்.”

    அப்பப்பா! என்ன உறுதியுடன் வெளிப்படும் திருத்தமான வார்த்தைகள். “நான் அவருடைய நிழல். அவரைத்தானே பின் தொடர வேண்டும்? அது என் கடமையல்லவோ?” கேட்ட யமன் திகைத்து நின்றான் சில கணங்களுக்கு!

    சிறிது பின்னால் நோக்கலாமா?

    *******************************************

    சாவித்ரி: மத்ர நாட்டு மன்னன் அசுவபதியின் ஒரே அருமை மகள். அழகின் சிகரமாகவும், அறிவின் சுடராகவும் விளங்கிய அவளை மணம் புரிந்து கொள்ள இளவரசர்கள் (தாழ்வு மனப்பான்மையால்) தயங்கியமையால், மனம் வருந்திய அவள் தந்தை அசுவபதி, “சாவித்ரி! நீயே சென்று உன் மனதுக்கு உகந்த மணாளனைத் தேர்ந்தெடுத்து வருவாயாக,” என்றார். பல புனிதமான ஆசிரமங்களுக்கும் பல தேசங்களுக்கும் படைகளுடன் செல்கிறாள் அவள். ஆச்சரியம்! தன் மனதைக் கவரக்கூடிய விதத்தில் ஒருவரையுமே சந்திக்கவில்லை. ஒரு வனத்தில், ஆசிரமத்தில் தன் மனத்துக்கிசைந்தவனைக் காண்கிறாள். அவன்…..

    சத்யவான்: சத்யசீலனான உயர்ந்த குணங்கள் படைத்த ஒரு இளவரசன்; அறிவில் உயர்ந்தவன்; உண்மையாளன், உதாரகுணம் படைத்தவன்; எளிமையானவன். மூத்தோர்களிடம் பெரும் மரியாதை கொண்டவன். அழகன்; வீரன்; கொடையாளன். நாட்டை இழந்து கண்களையும் இழந்து விட்ட தந்தை தியுமத்சேனனுடனும் தாயுடனும் கானகத்தில் ஆசிரமத்தில் வசித்து வந்தான். கண்ணிழந்த தந்தையைப் பரிவோடு, கைபிடித்து அழைத்து வந்து, ஆசிரமத்துள் கொண்டு அமர்த்தி, அவருக்கு உணவாகப் பழங்களையும், குடிக்க நீரும் கொடுத்து ஆதரவாக இருப்பதைப் பார்க்கிறாள் சாவித்ரி.

    சாவித்ரியின் மனம் அவனுடைய உயர் குணங்களால் கவரப்பட்டு அவன்பால் காதலில் ஆழ்ந்து விடுகிறது.

    தந்தை அசுவபதியிடம் சென்று தனது முடிவைத் தெரிவிக்கிறாள்.

    ஆனால் அவனிடம் சாவித்ரியே- ஏன் அவனே அறியாத ஒரே ஒரு பெருங்குறை உண்டு- அவனுக்கு நீண்ட ஆயுள் கிடையாது. இன்னும் ஒரு ஆண்டின் முடிவில் இறப்பான்.

    அவனது குறை ஆயுளைப் பற்றி நாரதர் மூலமாக அசுவபதி அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகிறான். “மகளே! இத்தனை நாள் உனக்குப் பொருத்தமானவனைத் தேடியலைந்தது இதற்குத் தானா? நீண் ட ஆயுள் கொண்ட வேறு ஒருவனைத் தேர்ந்தெடுத்துக் கொள் அம்மா! அதில் ஒன்றும் தப்பில்லை!” என்கிறான்.

    சாவித்ரி திட சிந்தையுடன் கூறுகிறாள்: “மரணம் நேர்வது ஒரு முறையே! ஒரு பெண்ணை அவளுடைய தகப்பனார் கன்யாதானம் செய்து கொடுப்பதும் ஒரு முறை தான். என் மனதில் நான் ஒருவரைக் கணவராக வரித்ததும் ஒரு முறையே! ஆகவே வேறு ஒருவரை எண்ணிப் பார்க்க இயலாது,” என்கிறாள்.

    கனத்த இதயத்துடன் அசுவபதி கோலாகலமாகத் தன் மகளை சத்யவானுக்குத் திருமணம் செய்வித்துப் பின் கானகத்திற்கு அவனுடன் வாழ அனுப்பி வைக்கிறான்.

    திருமணத்தின் பின்: கானகத்து ஆசிரமத்தில் சத்யவானுடன் அவன் தாய் தந்தையருக்குப் பணி செய்து வாழ்கிறாள். தனது உடலை வருத்திப் பல நோன்புகளை அவனுடைய நீண்ட ஆயுளுக்காகக் கடைப்பிடிக்கிறாள். நாட்கள் விரைகின்றன.

    ஒரு வருடம் முடியப் போகிறது. கடைசி நாள்! அன்றைய தினம் தானும் சத்யவானுடன் அவனை நிழலாகத் தொடர்ந்து காட்டுக்குச் செல்கிறாள். உலர்ந்த மரக்கிளைகளை வெட்டி விறகு சேகரிக்கும் கணவனைப் பார்த்தபடி எப்போது என்ன நேரும், அதனை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என்ற தவிப்புடன் அமர்ந்திருக்கிறாள் சாவித்ரி.

    “சாவித்ரி! எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. தலையை வலிக்கிறது. சிறிது நேரம் இளைப்பாறுகிறேன்,” எனக் கோடாலியைக் கீழே போட்டுவிட்டுத் தன்னருகே வந்த சத்யவானைத் தன் மடிமீடி தலைவைத்து ஓய்வெடுக்கச் செய்கிறாள்.

    savithiriதிடீரென எங்கும் இருள் படர்கிறது. அந்த இருளினூடே சாவித்ரி, புகை போன்ற ஒரு வடிவைக் காண்கிறாள். அவள் முன்பு நிற்பது யம தர்மராஜன்; மரணத்தின் கடவுள்! “உன் கணவனின் உயிரைக் கொண்டு செல்ல வந்துள்ளேன்,” என அறிவிக்கிறான். சாவித்ரியின் மடியில் கிடந்த சத்யவானின் உடல் தொய்கின்றது; பாசக் கயிற்றில் சத்யவானின் உயிரைப் பிணைத்து எடுத்துச் செல்கிறான் யமதர்மராஜன். கணவனின் உடலை மிருகங்களும் பறவைகளும் தீண்டி சேதப்படுத்தாத வகையில், இலை, தழை, மரக்கிளைகளால் மூடி வைத்து பத்திரப்படுத்தி விட்டு யமன் பின்னால் ஓடோடிச் சென்று சாவித்ரி அவனைப் பின் தொடர்கிறாள்.

    “சாவித்ரி! நில்! உனக்கு இன்னும் காலம் வரவில்லை. என்னைத் தொடராதே! திரும்பிச் செல்,” என்கிறான் யமதர்ம ராஜன்.

    இவை தான் நாம் மேலே கண்ட நிகழ்ச்சியும் உரையாடலும்!

    பலவாறு மறுத்துக் கூறிய அவளுடைய சொற்களைக் கேட்ட யமன், “உன் உறுதியைக் கண்டு நான் வியக்கிறேன். உன் கணவனின் உயிரைத் தவிர வேறு எந்த வரத்தையாவது கேள்!” என, சாவித்ரி தன் மாமனாரான அரசன் தியுமத்சேனன் இழந்த கண்பார்வையைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்கிறாள். வரத்தை அருளினான் யம தர்ம ராஜன்.

    திரும்பவும் தன்னைப் பின் தொடர்ந்த சாவித்ரியை திரும்பிப் போகுமாறு யமன் கூற, அவளோ, “என் கணவர் இருக்குமிடமே எனது இடமும் ஆகும். எனக்குக் களைப்பில்லை,” என்கிறாள். மனமிரங்கிய யமன், “உன் கணவனின் உயிரைத் தவிர வேறு எதையாவது வரமாகக் கேள்,” எனக் கூறவே, இம்முறை மாமனாராகிய தியுமத்சேனன் இழந்த நாட்டைத் திரும்ப அடையட்டும் எனக் கேட்கிறாள் அவள்.

    மறுபடியும் தன்னைத் தொடரும் இளம் பெண்ணான அவள் கூறும் ஆன்ம சிந்தனை நிறைந்த சொற்களைக் கேட்டு மகிழ்ந்த எமனிடம், மூன்றாவது வரமாகத் தன் தந்தை அசுவபதியின் குலம் தழைக்க நூறு மகன்களையும், நான்காவது வரமாகத் தனக்கும் நூறு புத்திரர்கள் பிறக்கும்படியும் வரங்களைக் கேட்டு வாங்கிக் கொள்கிறாள் சாவித்ரி.

    அவ்வரங்களைக் கொடுத்துவிட்டு விரைகின்றான் யமதர்மன். சத்யவானின் உயிரைப் பாசக்கயிற்றால் பற்றிக் கொண்டு செல்லும் தன்னை இன்னும் விடாது பின் தொடரும் சாவித்ரியைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தவன் சிறு பெண்ணான அவளிடம் பரிதாபம் கொள்கிறான்.

    அவளைத் திரும்பிச் செல்லக் கூறுகிறான்; அதை மறுத்து அவள் பேசும் அறநெறி செறிந்த சொற்களைக் கேட்ட யமன், “காதல் கணவனிடம் அளவற்ற ஈடுபாடு கொண்டுள்ளவளே, உன் கணவன் உயிரைத் தவிர ஏதேனும் ஒப்பற்ற ஒரு வரத்தைக் கடைசியாகக் கேள்,” என, அவள், “நீர் ஏற்கெனவே கொடுத்த வரம்- எனக்கு நூறு மகன்கள் பிறப்பர் எனும் வரம்- உண்மையாக வேண்டுமெனில், எனக்குக் கணவனான சத்யவானின்றி அது சாத்தியப்படாது!

    “தர்ம ராஜனான உமது சொற்கள் பொய்க்கக் கூடாது! எனது கணவரில்லாமல் உலகில் நான் எந்த மகிழ்ச்சியையும் அனுபவிக்க விரும்பவில்லை. சுவர்க்கமும் எனக்கு வேண்டாம். கணவரில்லாவிடின் நான் இறந்தவள் போல்பவளே! எனக்கும் சத்யவானுக்கும் உமது வாக்குப்படி புத்திரர்கள் பிறக்க அவர் உயிரை நீர் திருப்பித் தர வேண்டும்!” என்றாள்!

    பிரமித்து நின்றான் யமதர்ம ராஜன். ஆஹா! இந்த புத்திசாலிப்பெண் அவனைத் தன் வாக்கு வன்மையால் மடக்கிக் காரியத்தைச் சாதித்துக் கொண்டு விட்டாளே! யமனுக்குக் கோபம் வரவில்லை! மாறாக அளவு கடந்த மரியாதையும், பாசமும் இந்த அற்புதமான பெண் சாவித்ரி பால் ஏற்பட்டது. இப்படியும் ஒருத்தியா? கணவன் மேல் அவள் கொண்ட மாறாத பெருங்காதல் ஒன்றே, அவளுக்கு மிக அதிகமான சக்தியை, யமதர்ம ராஜனுடன் வாதிட்டு வெல்லும் பெரும் பலத்தை, வாக்கு சாதுரியத்தை அளித்திருக்கிறது.

    “சாவித்ரி! நீ என்னை வென்று விட்டாய். கணவன் மீது நீ கொண்டுள்ள உறுதியான அன்பும் காதலும் தான் இதனை நடத்தி வைத்தது,” என்றான் யமன்.

    பாசக்கயிற்றிலிருந்து விடுவிக்கப்பட்ட சத்யவானின் உயிர் உடலைச் சென்றடைகின்றது. கணவனின் உடலை ஒளித்து வைத்த இடத்திற்கு ஓடோடிச் செல்கிறாள் சாவித்ரி. உறக்கத்திலிருந்து எழுந்தவன் போல் எழுகிறான் சத்யவான். நடந்தது ஒன்றினையும் அவன் அறிந்தானில்லை.

    “சாவித்ரி! நான் மிகவும் களைப்படைந்திருக்கிறேன்,” என்பவனைக் காதலும் கருணையும் பொங்க நோக்குகிறாள் அவள். உள்ளம் உவகையில் விம்முகின்றது.

    அவன் கரத்தினை ஆதுரத்துடன் பற்றியபடி, பெண்மையின் மென்மையும், திண்மையும் விகசிக்க, ஆசிரமத்தை நோக்கிக் காதலின் பொன்வீதியில், அந்தப் புனிதப் பெரும் பாட்டையில் வெற்றிநடை பயிலுகிறாள் சாவித்ரி என்னும் பெண்கள் குலத் திலகம்!

    ***********************************************

    முதல் வரத்திலேயே சாதுரியமாக புத்திரர்களைக் கேட்டுக் கணவனின் உயிரை அவள் ஏன் பெறவில்லை?

    எதற்காக மற்ற எல்லா வரங்களையும் கேட்டாள்?

    இவை நம் உள்ளத்தில் எழும் வினாக்கள்.

    தன் விருப்பப்படித் தானே தேர்ந்தெடுத்த காதல் கணவனுடன் இன்ப வாழ்வு வாழ வேண்டுமாயின், அவனுடைய தாயும் தந்தையும் பழையபடி இன்புற்றிருக்க வேண்டும். அதற்கு அரசனான தியுமத்சேனன் அவர் இழந்த கண்பார்வையை மீண்டும் பெற வேண்டும்; நாட்டையும் திரும்பப் பெற வேண்டும். சுற்றமும் சொந்தங்களும் வாழ்த்த வாழும் இன்பமான காதல் வாழ்வு எத்தனை இனிமையானது என உணர்ந்தவள் சாவித்ரி.

    அடுத்து, மனதிற்குகந்த மணாளனைத் தேடித் தேர்ந்தெடுக்க அனுமதி தந்தவர் தந்தை அசுவபதி. அவள் தேர்ந்தெடுத்த கணவனோ ஓராண்டில் இறந்து விடுவான் என அறிந்தும் அவள் விருப்பப்படி சத்யவானுக்கே அவளை மணம் செய்து கொடுத்தவர். அவருக்கோ தமது குலம் தழைக்க மகன் இல்லாத நிலை. ஆகவே தனது அருமைத் தந்தைக்காக பிள்ளை வரம் கேட்க சாவித்ரி யமனின் அடுத்த வரத்தைப் பயன் படுத்துகிறாள்.

    இப்போது புகுந்த வீடும் பிறந்த வீடும் நல்வாழ்வு பெற வழி செய்தாகி விட்டது. இனி இந்தச் சூழ்நிலையில் காதல் தலைவனுடன் வாழ்வது தான் காதலின் வெற்றி என்பது அவளுடைய எண்ணம். ஆகவே யமராஜன் தன் கணவன் உயிரைத் தந்தே ஆகுமாறு செய்யும் ஒரு வரத்தினை – சாதுரியமான பிள்ளை வரமாக- அடுத்துக் கேட்கிறாள். அதுவும் கிடைத்து விடுகிறது. பின்பு தான் அந்த வரத்தினுள் சாமர்த்தியமாகப் புகுத்திய தன் தலைவனின் உயிரின் இன்றியமையாத தேவையை யமராஜனுக்கு விளக்குகிறாள். அதைக் கொடுத்துத் தன் வாக்கைக் காப்பதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை என்ற நிலைமையை உருவாக்கி விடுகிறாள் சாவித்ரி எனும் திட மதி படைத்த பெண்.

    காதலின் வலிமை எத்தனை மன உறுதியையும் துணிவையும் ஒருவருக்கு அளித்து விடுகின்றது என்பதை எண்ணியெண்ணி வியக்காமல் இருக்க இயலவில்லை அல்லவா?

    ***********************************************

    Share
  • காதலின் பொன்வீதியில் – 5

    மீனாட்சி பாலகணேஷ்.

    நடுநின்ற படைமதனார்!

    இறையருள் தான் ஒரு ஆணையும் பெண்ணையும் காதலில் கருத்தொருமித்துக் கூட்டி அதில் வரும் இடையூறுகளையும் நீக்கி, அவர்கள் இருவரையும் வாழ்வில் ஒன்றுபட்டு இன்புற அருளுகின்றது என்பது எழுதப்படாத ஒரு நியதி! மானிடக் காதலர் காதலில் இடையூறு வரும் போது தான் கடவுளைத் துணைக்கழைப்பர் ! தெய்வீகக் காதலரோ ஒருவரை ஒருவர் கண்ட தருணத்திலிருந்தே தெய்வ அருளே தம்மை ஒருவருக்கொருவர் காண்பித்தது எனக் கருதி, அவ்வருளே வரும் இடையூறுகளையும் களைந்து தம் இருவரையும் வாழ்க்கையில் கூட்டி வைக்கும் எனவும் உறுதியாக நம்புவர்.

    தம்பிரான் தோழரான சுந்தரருக்கும் பரவை நாச்சியாருக்கும் உண்டான காதல் இத்தகைமைத்தே! ஆயினும் அது நிறைவேற ஒவ்வொரு கட்டத்திலும் சிவபிரானின் அருளும் உதவியும் தேவைப்பட்டது என்பது வெளிப்படையாக நாம் கண்பது.

    இறைவனால் மீளா அடிமையாக்கிக் கொள்ளப்பட்ட சுந்தரர் அவன் ஆணைப்படி திருவாரூர் செல்கின்றார். ஆரூர்க் கோவிலை வந்தடைந்த சுந்தரரை அவ்வூர்ப் பெரியார்கள் வரவேற்று உபசரிக்கின்றனர்.

    அவ்வூரிலேயே பிறந்து வளர்ந்து வரும் பரவை நாச்சியாரும் தம் தோழிமார் புடைசூழப் புற்றிடம் கொண்ட பெருமானான தியாகேசரின் தரிசனத்திற்காகக் கோவிலுக்குள் வருகின்றார்.

    ‘இருவரும் சந்திக்க வேண்டும் என்னும் ஊழ்வினையின் வலிமையால், சுந்தரர் பரவையாரைக் காண்கிறார்,’ என்கின்றார் பெரியபுராண ஆசிரியரான சேக்கிழார் பெருமான்.

    புற்றிடம் விரும்பினாரைப் போற்றினர் தொழுது செல்வார்
    சுற்றிய பரிசனங்கள் சூழ ஆளுடைய நம்பி
    நற்பெரும்பான்மை கூட்ட நகை பொதிந்திலங்கு செவ்வாய்
    விற்புரை நுதலின் வேல்கண் விளங்கிழை அவரைக் கண்டார்.

    மகிழ்ச்சியால் புன்முறுவலுடன் விளங்கும் சிவந்த வாயையும் வில் போன்ற நெற்றியின் கீழ் வேல் போன்ற கண்களையும் உடையவரான பரவையாரைச் சுந்தரர் காண்கின்றார். காதல் வெள்ளம் உடனே கரைபுரண்டு ஓடியது! இவர் யார் என அதிசயித்தார்.

    கற்பகத்தின் பூங்கொம்போ காமன்தன் பெருவாழ்வோ
    பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து
    விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ
    அற்புதமோ சிவனருளோ அறியேன் என்றதிசயித்தார்.

    கற்பக மரத்தின் மலர்க்கொம்புகளுடன் கூடிய கொம்போ! காமன் தனது பெருவாழ்வாகக் கொண்ட பொருளோ! அழகு எனும் பொருள் செய்த புண்ணியத்தின் பயனாக விளைந்த புண்ணியமோ? அற்புதமோ எனவெல்லாம் அதிசயித்து ஒன்றும் விளங்காமையால், இது எதற்கும் இணையாகாத சிவபிரான் திருவருள் தானோ, அறியேனே என எண்ணினார் சுந்தரர். சிவனருளோ என்றதன் காரணம், இவர் சிவனுக்கே ஆளானவர்; ‘மீளா அடிமை,’ என்ற சாசனம் எழுதிக் கொடுத்தவர்; அவன் அருள் வழியிலே சென்று வாழ்கின்றவர்; ஆகவே இவ்வாறு பரவையாரைக் கண்ட அற்புதம் நிகழ்ந்தது அச்சிவனருளால் தான் என உறுதியாக நம்பினார்.

    இங்கு ஒன்றை நாம் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். சிலகாலம் முன்பே சுந்தரரை இறைவனார் அவருடைய திருமண நிகழ்வின் போது முதிய அந்தணராக வந்து அடிமைப் படுத்தித் தடுத்தாட் கொண்டார். பின்பு, அவரைத் திருவாரூருக்கு வரச் செய்து, அழகில் சிறந்து விளங்கும் பரவையாரை அவர்முன் தோன்றச் செய்து, காதல் வயப்படவும் வைத்தார். ஆகவே நாவலூர் வன்தொண்டருக்கு இவையெல்லாம் இறைவன் திருவருள் செயல்களாகவே தோன்றியதில் ஒரு வியப்புமில்லையே!

    மேலும் காதல் வயப்பட்டுச் சிந்திக்கிறார் சுந்தரர். “நான்முகன் இத்தகைய அழகு மிகுந்த ஓவியம் ஒன்றினைத் தான் எழுத இயலாமையினால் உண்டான தனது வருத்தம் நிறைவு பெறும்படி தனது உள்ளத்தில் படைத்த மணிவிளக்கோ இவர்?” அழகான சொல்லாட்சி நிறைந்த பாடல்.

    ஓவியநான் முகனெழுத ஒண்ணாமை உள்ளத்தால்
    மேவியதன் வருத்தமுற விதித்ததொரு மணிவிளக்கோ
    மூவுலகின் பயனாகி முன்நின்றது எனநினைந்து
    நாவலர்கா வலர்நின்றார் நடுநின்றார் படைமதனார்.

    புற்றிடங் கொண்டாரை வணங்கிச் செல்பவரான சுந்தரர், ‘மூவுலகிலும் பெறக்கூடிய பயனே என்முன் இங்கு நின்றது எனத் தெளிந்து மேலே செல்லாது நின்றார். இங்ஙனம் நின்ற அவருக்கும் அவரால் காணப்பெற்ற எழில்மாது பரவையாருக்கும் இடையில் இன்னொருவரும் யாரும் காணாமல் நின்றாராம்!

    அட! யாரவர்?வேறொருவரும் இல்லை!

    யாராலும் காணவியலாத அனங்கனான மதனன் தான் தனது படைகளுடன்- மலரம்புகளுடனும், கரும்பு வில்லுடனும்- இருவருக்கும் இடையே நடுவில் புகுந்து அவரது தொழிலைச் செய்ய ஆயத்தமாக நின்றார் !! அவர் வைத்த குறி தப்புமா? அந்தச் சிவபிரானையும் தனது மலரம்பினால் வீழ்த்தியவர் தானே! தம்பிரான் தோழர் மட்டும் எம்மாத்திரம்?

    பரவையாரின் கெண்டைமீன் கண்கள் நாவலூரரை, சுந்தரரைக் கண்ணுற்றன. இதுவும் பண்டு இறைவன் விதித்த விதி கூட்டியதால் நிகழ்ந்தது. பெண்மைக்கே உரிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நான்கு குணங்களையும் விஞ்சி, அவற்றை அழித்து சுந்தரர் மாட்டு ஒரு பெரு விருப்பம் மனதில் எழுந்தது!

    முன்னேவந் தெதிர்தோன்றும் முருகனோ பெருகொளியால்
    தன்னேரில் மாரனோ தார்மார்பின் விஞ்சையனோ
    மின்னேர்செஞ் சடைஅண்ணல் மெய்யருள்பெற் றுடையவனோ
    என்னேஎன் மனந்திரித்த இவன்யாரோ எனநினைந்தார்.

    “என் மனத்தை இதுகாறும் யாரும் கவரவில்லை! என் முன் பெரொளிப் பிழம்பெனத் தோன்றும் இவர் முருகப் பெருமானோ? தனக்கு ஒப்பில்லாத மன்மதனோ? மின்னல் போலும் செஞ்சடை கொண்ட அண்ணலான சிவபெருமானின் மெய்யருள் பெற்று விளங்குபவனோ? இவ்வாறு எனது மனத்தைத் திரியச் செய்த இவன் யார்?” எனப் பரவையார் எண்ணுவார். எண்ணிய வண்ணமே பரமனைச் சேவிக்கக் கோவிலுட் புகுந்தார்.

    அவரைக் கண்டு சுந்தரர், “இவர் யார்?” என் அருகிலிருந்தோரிடம் வினவ, “தேவர்களும் அணுகுதற்கு அரியவரான பரவை எனும் பெயர் கொண்ட மங்கை நல்லாள் இவர்,” எனும் மொழி கேட்டார்; பரவையாரிட ம் கண்டதும் கொண்ட காதலினால் வருந்திய சுந்தரர், “பரமனார் பரவையைத் தருவார்,” என்றபடி அரவின் ஆரம் புனைந்த சிவபிரானின் அடிபணிந்து இருந்தார். இறைவன் தன் காதலியைக் கூட்டி வைப்பார் என்ற ஆழ்ந்த நம்பிக்கை தான் அவரை வழிநடத்திச் சென்றது.

    இறைவன் திருவருளே இம்மங்கையைக் காண்பித்தது ஆகையால் அத்திருவருள் எங்கே சென்றது எனக் கொஞ்ச நேரம் பரவை என்ற ஈசன் திருவருளினைத் தேடிக் களைத்தார் சுந்தரர். பின்பு தேவாசிரிய மண்டபத்தை அடைந்து அங்கிருந்தார்.

    இங்கு நாம் ‘இறையருள் இருவரையும் சுலபமாகக் கூட்டி வைத்து விடும் அல்லவோ’ என்று எண்ணலாம்; ஆயினும் மானிடராய்ப் பிறந்தோர், தேவரே ஆனாலும், மானிட வாழ்வின் நியதிகளுக்குக் கட்டுப் பட்டவர் ஆகின்றனர் அல்லவா? ஆகவே, இங்கு சுந்தரரும், பரவையாரும் ஒருவரை ஒருவர் கண்டு காதல் கொண்ட போதும், நாம் இதுவரை பார்த்த மற்றக் காதலரைப் போலவே, ஒருவரையொருவர் யாரென்று அறியாத நிலை; எங்ஙனம் சந்திப்பது என்ற குழப்பம். இவர்களுடைய துயரை நீட்டிப்பதற்கெனவே, மாலைப்பொழுது வந்து இரவென நீண்டு வளர்கின்றதாம்.

    வாவி புள்ளொலி மாறிய மாலையில்
    நாவ லூரரும் நங்கை பரவையாம்
    பாவை தந்த படர்பெருங் காதலும்
    ஆவி சூழ்ந்த தனிமையும் ஆயினார்.

    இதனை வெகு அருமையாகச் சுட்டுகிறார் சேக்கிழார் பெருமான். சுந்தரர் பரவையாரின் காதல் நயத்தை ரசிக்கப் புகுந்த நாம் அக்காதலைப் பெருமைப்படுத்தும் புலவர் பெருமானின் கவிதை நயத்தினையும் அதன் உட்கருத்தையும் தான் சிறிது ரசிப்போமே!

    நீர் நிலைகளில் பகற்பொழுதினைக் கழித்த பறவைகள் மாலையில் தம் இருப்பிடங்களை அடைந்தன. நாவலூரர் ஆகிய சுந்தரர் பரவை எனும் பாவை தனக்குத் தந்த காதலினால் எழும் துன்பமும் அதன் பொருட்டுத் தன் உயிரைப் பற்றிச் சூழ்ந்து கொண்ட தனிமையையும் உடையவரானார் என்கிறார்.

    ஆவி சூழ்ந்த தனிமை என்பது மிக அருமையான ஒரு சொற் பிரயோகம். ‘என் ஆவி நல்குவர் ஆரூரை ஆள்பவர்’ என்று திடங்கொண்டுள்ளார் சுந்தரர். அதாவது ‘திருவாரூர் இறைவர் எனக்கு எனது உயிர் (ஆவி) போன்றவராகிய பரவையாரைத் தந்தருள்வார்,’ என்கிறார். இங்கு அவருக்கு உயிர் போன்ற பரவையார் அருகில் இல்லை; ஆனால் அப்பரவையார் தந்த காதலும் அதனால் வரும் துன்பம் நிறைந்த தனிமையும் மட்டுமே இருந்ததாம். ஆவியின்றி அது சூழ்ந்த தனிமை மட்டுமே இருந்ததால் இதனை ‘ஆவி சூழ்ந்த தனிமை’ எனக் குறிப்பிட்டார்.

    பிரிந்து இருக்கும் காதலர் படும் துயரங்களை சுந்தரரும் அனுபவிக்கிறார்.

    “எம் இறைவனின் நெற்றிக் கண்ணால் எரியுண்ட காமன் வெளிப்பட்டு என்முன் வந்து என்மேல் அம்பெய்வதும் அவ்விறைவனின் திருவுள்ளம் தானோ?” எனக் கூறி வருந்துவார்.

    தண்மதியிடம் கேட்கிறார்: “என் துயரைக் கண்டாய்; உன் இயல்பிலேயே நின்று தண்மையான கதிர்களைப் பொழியாமல் அதற்கு மாறாக வெம்மை மிகுந்த கதிர்களை வீசுகிறாயே! உன்னையா எம்மிறைவர் அருளுடன் எடுத்துத் தம் சடைமுடி மேல் அணிந்து கொண்டார்? நீ அவன் போன்றில்லையே?” என்பார்.

    “அலைகளை எடுத்தெறியும் திரைகடலே! எல்லாத் தேவர்களையும் அச்சுறுத்திய கொடிய நஞ்சினை நீ எம் தலைவனான இறைவனையே உண்ணுமாறு செய்து உன் அலைக்கரங்களால் அவரிடம் கொடுத்தாய்! உனது அக்கொடுமைக்கு முன் நான் எம்மாத்திரம்?” என்றும் புலம்புவார்.

    “இனிய பொதியமலைத் தென்றலே! நீ எங்கள் பிரானுடைய மலையில் அல்லவோ தோன்றினாய்? நீ வந்த வழியோ நீர் நிலைகள் நிறைந்த சோழ நாடு அன்றோ? பின்பு ஏன் என்மீது தீக்காற்றாக வீசுகிறாய்?” எனவும் தவிப்பார்.

    இவர் இவ்வாறு தவிக்க, பரவையாரும் இறைவனை வணங்கி அவ்வணக்கத்தின் பயனாக நல்ல கணவனைப் பெறும் குலமகள் போன்று, தம்மிடம் புதியதாகக் குடிகொண்ட காதலுடன் சென்று தனது மாளிகையினை அடைந்தார். சுந்தரரைப் பற்றியே எண்ணியிருந்தவர், தோழியரிடம், “இறைவனின் ஆலயத்தில் நம் எதிரே வந்தவர் யார்?” என வினவினார். அவர்கள் அவர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட தம்பிரான் தோழரான ஆளுடை நம்பி எனக்கூறக் கேட்டார். காதலினால் தமது நிறையும் நாணும் ஒருசேர நீங்கிட, உயிரை மட்டும் தாங்கியவராகி, ஆற்றாமையால் துடித்தார்.

    என்றவுரை கேட்டலுமே எம்பிரான் தமரேயோ என்னா முன்னம்
    வன்றொண்டர் பால்வைத்த மனக்காதல் அளவின்றி வளர்ந்து பொங்க
    நின்றநிறை நாண்முதலாங் குணங்களுடன் நீங்கஉயிர் ஒன்றுந் தாங்கி..’

    மெல்லிய பூம்படுக்கையில் வீழ்ந்து காதல் வருத்தத்தால் தவித்தார். பலவாறு புலம்பியும் வருந்தினார்.

    “திருவாரூரில் உறையும் ஈசரே! உம்மையன்றி என் துயரை யாரறிவார்? கங்கையும், நிலவும், புள்ளிகளையுடைய பாம்பும் ஊர்வதற்கு இடமாகிய சடையை உடையவரே! காளை மீது எழுந்தருள்பவரே! உம்மீது அன்பில்லாதவர் (பக்தி இல்லாதவர்) போல் நான் இத்துன்பத்தை அடையலாகுமோ?” எனவும் கேட்டார்.

    இவர்களுடைய பழைய கதையை நாம் சிறிது அறிந்து கொள்ள வேண்டும்.

    கயிலயங்கிரியில் தனக்கும் உமையம்மைக்கும் தொண்டு செய்த ஆலால சுந்தரரையும், கமலினியையும் அந்த இறைவனே திருவுள்ளம் கொண்டு மண்ணுலகில் மானிடராய்ப் பிறக்கச் செய்தார். அவர்கள் கயிலையில் ஒரேயொரு கணம் ஒருவரையொருவர் விருப்புடன் நோக்கியதால், புவியில் பிறந்து, காதலின்பத்தை உணர்ந்து, நல் வாழ்வும் வாழ்ந்து வருவீர்கள் என அருளினார்.

    ஒருவரை ஒருவர் கண்டு விரும்பியதும் கடிமணம் புரிந்து கொள்வதல்ல காதல். காதலின் சுவைகளான, பிரிவாற்றாமை, உடல் மெலிதல், இரங்குதல், ஊடல், கூடல் முதலிய எல்லாவற்றையும் அனுபவித்தும், இடையூறுகள் வரும்போது, அவற்றை எதிர் கொண்டு, தமது புத்தி சாதுரியத்தினாலும், இறையருளினாலும், கொண்ட காதலில் உறுதியாக நின்று, விரும்பிய துணையை அடையும் போதும் தான் காதலின் அருமை பெருமைகளும் உயர்வும் சிறப்பாக வெளிப்படுகின்றது. இத்தகைய காதலின்பத்தினைத் தம்பிரான் தோழரும் அனுபவித்திடத் திருவுள்ளம் பற்றினார் இறைவன். அதனால் தானோ என்னவோ, முதலில் மானுடரால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிறுத்தி, சுந்தரரை அடிமை கொண்டு தம் தோழராக்கிக் கொண்டார்.

    பின்பு, பரவையாராகப் பிறந்திருந்த கமலினியாரைக் கண்டு காதல் கொள்ளவும் செய்தார். இவற்றை எல்லாம் நடத்தி விளையாடல் புரிந்தவர், பின்பு இவர்கள் இருவரும் திருமணம் என்ற பந்தத்தில் இணையவும் திருவுளம் கொண்டார். சுந்தரர் கனவில் தோன்றி, “பரவையை உனக்குத் தலைவியாய்த் தந்தோம்,” எனவும், பரவையார் கனவில்தோன்றி, “நம்பி ஆரூரனுக்கும் உனக்கும் விரைவில் திருமணம் நிகழ்விப்போம்,” என்றும் உறுதி கூறி, அவ்வண்ணமே, அடியார்கள் மூலம் திருமணத்தை நடத்தியும் வைத்தார்.

    திருவாரூர் ஈசன் தனது தோழராய் வந்து இவ்வாறெல்லாம் அருள் செய்த திறத்தை வியந்து பாடி மகிழ்ந்துள்ளார் சுந்தரர்.

    ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
    தோழனுமாய் யான்செய்யும் துரிசுகளுக்கு உடனாகி
    மாழைஒண்கண் பரவையைத்தந்து ஆண்டானை மதியில்லா
    ஏழையேன் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே.. என வாழ்த்துகின்றார்.

    இறையருள் ஒன்றே துணை செய்து காதலின் பொன்வீதியில் இருவரை இணைத்து வைக்கும் என்பது மெய்யே அன்றோ?

    ************
    படம் உதவி: www.vivekabharathi.in

    Share
  • காதலின் பொன்வீதியில் – 4

    மீனாட்சி பாலகணேஷ்.

     

    உலகத்தின் முதல் காதல் கடிதம்!

    “உயர்ந்த குணங்களின் இருப்பிடமானவனே! பேரழகனே! உனது புகழ் செவிகளின் வழியாக எனது மனதை அடைந்து வாழ்க்கையின் துயரங்களைக் களைந்து விடுகின்றது; உனது அழகிய திருவுருவைக் காணப்பெறுவது கண்கள் செய்த பாக்கியம். எனது உள்ளம் தனது நாணத்தை விட்டொழித்து உன்னைக் கணவனாக வரித்துக் கொண்டு விட்டது!” எனும் ஸ்லோகத்துடன் துவங்குகின்றது ருக்மிணி கிருஷ்ணனுக்கு எழுதிய காதல் கடிதம்!

    அரசிளங்குமரி ருக்மிணி: அழகிலும் அறிவிலும் சிறந்து விளங்கியவள்; விதர்ப்ப நாட்டு மன்னனான பீஷ்மகனின் அருமை மகள். சிறுவயது முதற்கொண்டே துவாரகையின் நாயகனான கிருஷ்ணனைப் பற்றிக் கேள்விப் பட்டும், அவனுடைய வடிவழகைப் பற்றிச் சிந்தித்தும், கம்சனைக் கொன்று தன் தாய் தந்தையரைச் சிறைமீட்ட வீரப் பிரதாபங்களைக் கேட்டும், அவள் உள்ளம் அவன்பால், அந்த நினைக்கவொண்ணா ‘ஸ்ருத்வா குணான் புவன சுந்தரன்’ (உலகத்தில் பேரழகு வாய்ந்தவனும் உயர்ந்த குணங்களின் இருப்பிடமானவனும்) பால் காதல் வயப்படுகின்றது. மணந்தால் அவனையே மணப்பது என உறுதி கொள்கிறாள்.

    அவளுடைய அண்ணன் ருக்மிக்கு கிருஷ்ணனைக் கண்டால் பிடிக்காது. தன் தங்கையை செடி நாட்டரசன் சிசுபாலனுக்கு மணமுடிப்பதாக வாக்குக் கொடுத்து விடுகிறான். மகளின் மன நிலையை- அவள் மனம் கிருஷ்ணனின் பால் ஈடுபட்டு விட்டதை- அறிந்த அரசன் பீஷ்மகனும் அரசியும் செய்வதறியாது திகைக்கின்றனர்.

    திருமண நாள் நெருங்க நெருங்க ருக்மிணியின் உள்ளம் கவலை கொள்கின்றது; என்ன செய்வதென அறியாமல் திகைக்கிறாள். இங்கு காதலரின் நிலை எவ்வாறு உள்ளது தெரியுமா? கிருஷ்ணனைக் கணவனாக வரித்துக் கொண்டு விட்டாள் ருக்மிணி. அவன் தன்பால் காதல் கொண்டுள்ளானா என்பது பற்றி அவளுக்குத் தெரியாது! அவனுக்கும் அவள் உள்ளம் பற்றித் தெளிவாகத் தெரியாத நிலை! அதாவது ஒரு பேதைப் பெண் தன்னிடம் காதல் கொண்டு உருகி நிற்கிறாள் எனத் தெரியாது! (அவ்வாறென நாம் கதைப் போக்குக்காக எண்ணிக் கொள்ள வேண்டும்! எல்லாம் அறிந்த கிருஷ்ணன் அந்த இளம் பெண்ணின் உள்ளத்தைத் தான் அறிந்திரானா?)

    காதலின் பொன்வீதியில் கிருஷ்ணனுடன் கைகோர்த்து உலா வர வேண்டுமானால் அரசிளங்குமரியான ருக்மிணி தனது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி அவனுடன் இணைவதற்கு ஒரு உபாயம் அல்லது வழியைக் கண்டுணர வேண்டும்! காதல் கொண்டால் மட்டுமே போதாது! அதில் வெற்றியடையும் வழிமுறைகளையும் கண்டறிய வேண்டும். வரும் சிக்கல்களை எதிர் கொள்ளும் துணிவும் உபாயங்களும் தேவை. இதில் இருவர் பங்கும் வேண்டும். அவள் அவனை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால் அவன் அவள் பக்கமாக இரண்டடி எடுத்து வைக்க வேண்டும். தமயந்தி போல இங்கும் காதல் வயப்பட்ட பெண்மையே இதற்கான வழிமுறைகளைச் சிந்தித்துப் பார்க்கின்றது. அவளுடைய அனுமதி இன்றி அவள் உள்ளத்தை ஒருவராலும் அடிமை கொள்ள முடியாது!

    ஏழு ஸ்லோகங்களைக் கொண்ட ருக்மிணியின் இக்கடிதம் மிகவும் அழகானது. தெளிவானது. ஆம்! அவளுடைய மன உறுதியும், உள்ளத் தூய்மையும், தான் எடுத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டும் எனும் துடிப்பும் பளிச்சிடும் சிறு காவியம் அது! முதல் இரு ஸ்லோகங்களில் எதனால் தான் கிருஷ்ணன் பால் காதல் வயப்பட்டேன் எனத் தெரிவிக்கிறாள்.

    “மானிடருள் சிங்கம் போன்ற உன்னை, உயர்குடியில் பிறந்து, குணத்திலும், அழகிலும், கல்வியிலும் சிறந்த எந்தப் பெண் தான் தன் கணவனாக வரித்துக் கொள்ள மாட்டாள்?”

    “நானும் அங்ஙனம் ஒரு பெண். உன்னை என் கணவனாக உளமாரத் தேர்ந்து கொண்டு விட்டேன். என் உடலையும் உள்ளத்தையும் உன் திருவடிகளில் அர்ப்பணித்தேன். சிசுபாலன் என்னைச் சொந்தம் கொண்டாட அனுமதிக்காதே! அது சிங்கத்திற்கே உரிய அரச காணிக்கையை நரி திருடிக் கவர்ந்து கொண்டு போவது போலாகும்!” என மூன்றாவது ஸ்லோகத்தில் கூறுகிறாள்.

    இது எத்தனை அழகான உவமை! தன் உள்ளங்கவர்ந்தவனைச் சிங்கத்திற்கும், மற்றவனை நரிக்கும் ஒப்பிடுகின்ற காதல் மனம் கொண்ட பெண்மையின் உறுதிப்பாடு!

    “நான் தான தர்மங்கள், ஏழை எளியவருக்கான உதவிகள் முதலிய புண்ணியம் மிகுந்த செயல்களை என் வாழ்நாளில் செய்திருப்பேன் ஆயின், அதன் பயனாக நீ இங்கு உடனே வந்து எனது கரம் பற்ற வேண்டும். எனது கரங்களைக் கொடியவனான சிசுபாலனின் கரங்கள் தொட்டு அசுத்தப் படுத்தலாகாது.”

    தன் காதலனான கிருஷ்ணனிடம் அவனுடைய வீரத்திலும் காதலிலும் மிகுந்த நம்பிக்கை கொண்டவள் ருக்மிணி. ஆகவே மேலும் அவனை, அவனது ஆண்மையை, வீரத்தினைத் தட்டியெழுப்பும் சொற்களைப் பொதிந்து கடிதத்தை வரைகிறாள்:

    “எவராலும் வெல்ல முடியாத கிருஷ்ணா! நீ நாளையே விதர்ப்ப தேசத்திற்கு யாரும் காணாமல் விரைந்து வந்து, சிசுபாலனையும் அவன் படைகளையும் வென்று, என்னை ராட்சச முறையில் கவர்ந்து உந்தன் வெற்றிக்குப் பரிசாக திருமணம் புரிந்து கொள்வாய்!” என்கிறாள்.

    பின் சிறிது யோசிக்கிறாள். ‘விதர்ப்ப நாட்டிற்கு வா என்று விட்டேன். நான் எவ்வாறு அந்தப்புரம், தோழியர் குழாம் இவற்றைக் கடந்து அவனைச் சென்றடைவேன்?’ எனச் சிந்திக்கிறாள்.

    தனது மகிழ்ச்சிக்காகத் தன் சுற்றத்தார், உறவினர் யாரும் துன்பப் படலாகாது என எண்ணும் உயர்ந்த உள்ளம் கொண்டவள் அவள். சிந்தித்த போதில் ஒரு சிறந்த வழி புலப்படுகின்றது.

    “எவ்வாறு அரச மாளிகைக்குள் நுழைந்து என்னைச் சார்ந்த மற்றவர்களின் உயிர்களுக்கு ஆபத்து வராமல் என்னைக் கவர்ந்து செல்லலாம் என்றால், நான் கூறுகிறேன் கேள்! எங்கள்அரசகுல வழக்கப்படி, திருமணத்திற்கு முன்பு மணப்பெண் எங்களது குலதெய்வமாகிய கிரிஜா எனப்படும் துர்க்கையின் ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது சம்பிரதாயம். அப்போது அங்கு நீ ரதத்துடன் வந்தால் உன்னுடன் நான் ஓடி வந்து சேர்ந்து கொள்வேன்.”

    இத்தனை துணிவுடன் வழிமுறைகளை எல்லாம் கூறிக் கடிதம் எழுதி விட்டாள் அரசமகள் ருக்மிணி. கடைசியாகத் திரும்பவும் அவநம்பிக்கை மெல்ல எட்டிப் பார்க்கிறது! இவ்வளவு எல்லாம் கூறியும் அந்த மாயக் கிருஷ்ணன் வராவிடின் என்செய்வது? ‘நான் தான் அவனிடம் உள்ளத்தைப் பறிகொடுத்து விட்டேன். அவனுக்கு என்னிடம் ஈடுபாடு இருக்கிறதோ என அறியேனே! ஆனால் எப்பேர்ப்பட்ட நிலையிலும், கிருஷ்ணன் வராவிட்டாலும் கூட, சிசுபாலனை மணந்து கொள்வதென்பது மனதாலும் எண்ணிப் பார்க்க இயலாத ஒன்று,’ எனவெல்லாம் தனக்குத் தானே கூறிக் கொள்கிறாள்.

    இதுவரை துணிவுடன் திட்டங்கள் தீட்டிய அவள் உள்ளம் கசிந்து உடைந்து போகின்றாள். காதல் கொண்ட மாயவனின் மீது தனது கடைசி ஆயுதத்தினையும் பிரயோகித்து எழுதுகிறாள். ‘இத்தனை உயரியவனான உன்னிடம் நான் பூரண சரணாகதி அடைந்து விட்டேன். என் வாழ்வும் தாழ்வும் உன் கையில் தான். நீ வராவிட்டால், என்ன செய்வதென்பதையும் நான் தீர்மானித்துக் கொண்டு விட்டேன்,’ என எண்ணிக் கொண்டு மேலும் முடிவாக ஏழாவது ஸ்லோகத்தை எழுதுகிறாள்:

    “கிருஷ்ணா! உமையவளின் கணவரான சம்புவும் தமது குறைகளை நீக்கிக் கொள்வதற்காக உனது பாததூளியைத் தன்மீது தரித்துக் கொள்ள ஆவலுடன் உள்ளார். விதிவசத்தால் அத்தகைய பெரும் புகழ் வாய்ந்த கிருஷ்ணனாகிய நீ என்னைக் காப்பாற்ற வராவிட்டால், நான் என்ன தான் செய்வது? கடுமையான விரதங்களாலும் தவத்தாலும் எனது உயிரைப் போக்கிக் கொள்வேன். உன்னை அடையும் வரை திரும்பத் திரும்பப் பிறவிகளெடுத்துக் கடுந்தவம் இயற்றிக் கொண்டேயிருப்பேன்……….” என முடிகிறது ருக்மிணியின் கடிதம்.

    காதலின் வலிமையை உணர்ந்த உள்ளங்களைக் கண்ணீரில் மிதக்கச் செய்யும் இக்கடிதம் இப்போது கிருஷ்ணனைச் சென்றடைய வேண்டுமே!

    தனக்கு மிகவும் நம்பிக்கையான ஒரு முதிர்ந்த அந்தணரைக் கூப்பிட்டு, ருக்மிணி அவரிடம் தனது கடிதத்தைக் கொடுத்து விரைந்து சென்று கிருஷ்ணனிடம் சேர்க்குமாறு வேண்டுகிறாள்.

    தன்னிடம் சேர்ப்பிக்கப்பட்ட இக்கடிதத்தைக் கண்ட பின்னரும் கிருஷ்ணன் வாளாவிருப்பானா?

    குதிரைகளை ரதத்தில் பூட்டி, விதர்ப்ப நாட்டின் தலைநகரான குண்டினபுரத்தை நோக்கி விரைகிறான். தம்பியின் கருத்தறிந்த அண்ணன் பலராமன் உதவிக்காகப் படைகளுடன் தானும்அவனைப் பின் தொடர்கின்றான். நகரின் ஒதுக்குப் புறமான ஓரிடத்தில் தனக்கு உள்ளத்தைத் தந்தவளுக்காகக் காத்து நிற்கிறான் காதல் மன்னன்.

    krishna rukminiபின்பு என்ன?

    கடிதத்தில் குறிப்பிட்டபடி ருக்மிணி பூஜை செய்ய கிரிஜா கோவிலைத் தோழியர் புடைசூழ வந்தடைகிறாள். திருமகளின் அவதாரமான அவளைக் கண்ணாலாவது கண்டு மகிழ, அத்தனை அரசர்களும் வழியெங்கும் கூடி நிற்கின்றனர். அவளுடைய கண்கள் ரகசியமாகக் கிருஷ்ணனைத் தேடுகின்றன. காணாமல் உள்ளம் இன்னும் தளர்கின்றது. இனித் தனக்கு அந்த அன்னையே கதி என, “நந்தகோபன் மைந்தனை எனக்குக் கணவனாக அருளுவாய்,” என மனமுருகி வேண்டிக் கொண்டு கோவிலை விட்டு வெளியே வருகிறாள் ருக்மிணி.

    அவள் உள்ளம் எப்படியெல்லாம் தத்தளித்திருக்கும்? ‘முதிய அந்தணர் துவாரகையிலிருந்து திரும்பி வந்து கடிதத்தைக் கிருஷ்ணனிடம் சேர்ப்பித்ததைக் கூறினாரே?’ எனத் தவிக்கின்றது அவள் உள்ளம். தன்னை வந்து கவர்ந்து சென்று விடுவான் எனக் காத்திருந்தவன் காணவில்லை; சிசுபாலனுடனான திருமணத்திற்கு முகூர்த்த நேரம் நெருங்கி விட்டது. நாட்டின் மொத்தப் பார்வையும் அழகின் திருவுருவான அவள் மீது தான். இனி என்ன செய்யலாம்?

    நடை தளரக் கால்கள் பின்ன, உற்சாகம் குன்றிய உள்ளத்துடனும் குனிந்த தலையுடனும் நடந்தவள் செவிகளில் ‘ஜல்,ஜல்’ எனும் குதிரைக் குளம்பொலி கேட்கிறது. தோழியர் சிலர் எழுப்பிய, “ஹா,” எனும் ஆச்சரிய ஒலிகளைக் கேட்டுத் தலை நிமிர்ந்தவள் முன்பு….. காண்பது கனவில்லையே?

    இதனை எவ்வாறு வருணிப்பது?

    காதலில் கனிந்து பொலியும் புன்னகை பூத்த கதிர்மதியத் திருமுகம். கௌஸ்துபமும் துளசிமாலையும் தவழும் பரந்த மார்பும் திண்தோள்களுமாக, கரிய சுருண்ட குழல் கற்றைகள் நெற்றியிலும் தோள்களிலும் புரண்டு விளையாட, மயில்பீலி அணிந்த கிரீடமும் மஞ்சள் பட்டுப் பீதாம்பரமுமாக கருமுகில் வண்ணன். தான் இருந்த ரதத்தின் குதிரைகளின் கடிவாளங்களை ஒரு கரத்தால் உறுதியாகப் பற்றியபடி, அடுத்த கரத்தினை அவளை நோக்கி நீட்டியபடி அவளுக்காகவே காத்திருந்த கிருஷ்ணன். வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல ஓடோடிச் செல்கிறாள் ருக்மிணி. அவளை பூப்பந்தை அள்ளுவது போலத் தூக்கியெடுத்து தன்னருகே ரதத்தில் இருத்திக் கொள்கிறான்.

    கிருஷ்ணனையும் தன் காதலின் உறுதியாலும் விவேகத்தாலும் அவனை அடைந்து விட்ட ருக்மிணியையும் ஏற்றிக் கொண்டு காதலின் பொன்வீதியில் அந்தத் தேர் துவாரகையை நோக்கி விரைகின்றது! காற்றென விரையும் குதிரைகளுடன் அவர்களின் காதலைப் போற்றும் நமது உள்ளங்களும் விரைகின்றன அல்லவா?

    ***********************************************************

    ருக்மிணியின் இக்கடிதம் உலகில் எழுதப்பெற்ற முதல் காதல் கடிதமாக எழுத்தாளர்களால், காவிய வல்லுனர்களால் கூறப்படுகின்றது. இது சாமானியமான ஒரு காதல் கடிதம் அல்ல; மன உறுதியுடன் தான் விரும்பும் ஆடவனையே மணாளனாக அடைய, ஒரு மெல்லியலாள் (ருக்மிணி), எத்தனையோ எதிர்ப்புகளுக்கும் தடைகளுக்கும் இடையே தன்னந்தனியளாகச் சிந்தித்து ஒரு வழியைத் தேடிக் கண்டுபிடித்து அதனைத் தான் காதல் கொண்ட மன்னனுக்குத் தெரிவித்து அவனையே மணந்த காதலின் உறுதியை, உயர்வைச் சிறப்புற பெருமையுடன் விளக்குகின்ற ஒரு இலக்கியப் பதிவேடு எனலாம்.

    ************************************************************

     

    Share
  • காதலின் பொன்வீதியில் – 3

    மீனாட்சி பாலகணேஷ்.

     இனிய காதலின் நிறைவான வடிவம்!

     

    ஆணழகனான வில்வீரன் அர்ஜுனன் வைத்த குறி தப்பாது அந்த அம்பு அவனுடைய வில்லிலிருந்து புறப்பட்டு வெகு தூரத்திலிருந்த அந்தக் கொடிய காட்டு மிருகத்தை வீழ்த்தியது. இதை அந்த அழகிய இளைஞன் பார்த்தான். பரவசம் கொண்டான்.

    ‘ஆகா! இத்தனை அற்புதமாக வேட்டையாடும் இவர் யார்? ஆண்மையும் கம்பீரமும் பொங்கும் இந்தத் திருவுருவுக்கு சொந்தமான இவர் யார்?’

    வினாக்கள் இளைஞனைக் குடைகின்றன. பார்த்த கண்கள் பார்த்தபடியே தான். உள்ளம் தன் வயமிழந்து அவர்பால் ஈடுபட்டு விட்டது. ஒரு வீரனுக்கல்லவோ இன்னொரு வீரனின் வீரத்தின் உயர்வு பற்றித் தெரியும்? ஆனால் … ஆனால்… அர்ஜுனனின் முன்பு நின்ற போதில் இந்த இளைஞனின் உள்ளம் குழைந்து தத்தளிக்கின்றதே! ஏன்?

    மதனன் எனும் காமதேவனிடம் இதனை விவரிக்கிறான் பால்வடியும் முகத்தினனான அந்த இளைஞன். “என் மெல்லிய உருவத்தைக் கண்டு அவருடைய இதழ்க்கடையில் ஒரு விசித்திரமான இகழ்ச்சிப் புன்னகை தோன்றியது. என் வாழ்வில் முதல்முறையாக நான் ஒரு பெண் எனவும், கம்பீரமான ஒரு வீரனின், ஆடவனின் முன் நிற்பதையும் உணர்ந்தேன்,” உள்ளத்தை இழந்து தவிக்கும் காதற்பெருக்கில் கண்ணீர் வழிந்தோடுகின்றது.

    என்ன குழப்பம் இது?யார் இந்த இளைஞன்?

    மணிபுரத்தின் அரசன் சித்ரவாகனனின் மகளான இளவரசி சித்ராங்கதா தான் ஆண்வேடம் பூண்ட அந்த இளைஞன்.

    சித்ராங்கதா மகாபாரதக் கதையில் வரும் ஒரு துணைப் பாத்திரம். அர்ஜுனன் தலைமறைவாக ஒரு நாடோடி போல் சுற்றித் திரிந்த காலங்களில் மணிபுரத்தை வந்தடைகிறான். இந்தக் கதையைக் கவியரசர் தாகூர் சிறிதே மாற்றியமைத்து சித்ராங்கதா- அர்ஜுனன் காதலை ஒரு புதிய கோணத்தில் நமக்குக் காண்பிக்கிறார்.

    காதற்கடவுளான மதனன் தனது உதவியாளன் வசந்தனுடன் இளவரசி சித்ராங்கதாவைச் சந்திக்கிறான். சித்ரா மதனனிடம் சொல்கிறாள்: “சிவபெருமான் என் தந்தையின் வம்சத்தினருக்கு ஆண்வாரிசுகளையே தருவதாக அருளியிருந்தார். ஆனாலும் என் விஷயத்தில் அது பொய்த்துப் போயிற்று. நான் என் தந்தைக்கு மகள் தான் பிறந்தேன். ஆகவே தான் பெண்ணான என்னை ஆண்மகனைப் போலவே வளர்த்து, வில் வாள் வித்தை பயிற்றுவித்தார். ஆண்மக்களின் உடைகளையே நானும் அணிந்து வந்தேன். அந்தப்புரத்தில் தங்குவதை விட்டொழித்தேன். பெண்மையின் நளினங்களும், குழைவுகளும், கண்களால் கணை தொடுப்பதும் எப்படியென நான் அறிந்திலேன்.”

    மதனன் ,”சரியான சமயத்தில் நான் ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களை உணரும் பாடத்தினைக் கற்பிப்பேன்,” என்றான்.

    “மதனா, அவர் அர்ஜுனன் என அறிந்ததும் என் மனம் என்ன பாடு பட்டது தெரியுமா? அவரை வணங்கவும் மறந்து சிலையாக நின்றேன். எனது கனவுகளின் நாயகன் அல்லவோ அவர்? அவரை வாள் வித்தையில் எதிர்கொண்டு எனது வாள் முறிவதை எதிர்பார்த்தேன்; நான் கற்ற போர்க்கலையை அவர் முன்பு காட்டி பெருமைப்பட எண்ணினேன். நான் இக்கனவுகளில் ஆழந்து சிலையென நின்றிருக்க, அவர் என் கண் முன்பே சென்று வனத்துள் மறைந்து விட்டார்.

    “அடுத்த தினம் நான் எனது ஆண் உடைகளை விடுத்து, கைவளைகள், பாதசரங்கள், இடையில் மேகலை, சிவந்த வர்ணப் பட்டாடை இவற்றைப் புனைந்து கொண்டு அவரைத் தேடிச் சென்றேன். சிவன் கோவிலில் அவரைக் கண்டேன்.

    ulupi

    “நான் பேசியதும் அவர் பதில் கூறியதும் என் நினைவில் இல்லை மதனா! ஆனால் என் மீது இடியிறங்கியது போன்ற சொற்கள்….. அவர் கூறியவை….. காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போன்ற மொழிகள்…. அர்ஜுனன் கூறினார்: ‘நான் பிரம்மசரிய விரதம் பூண்டுள்ளேன். என்னால் உனக்குக் கணவனாக இருக்க இயலாது!’ ஆ! மதனா, இவை எத்தனை கொடூரமான சொற்கள்! எத்தனை எத்தனை ரிஷிகளும் முனிவர்களும் தங்கள் தவவலிமையை, ஆயுட்காலத் தவத்தின் பயனை ஒரு பெண்ணின் காலடியில் இழந்துள்ளார்கள்! நான் ஏன் நிராகரிக்கப்பட்டேன்? அர்ஜுனனின் காதலை வெல்லும் பெண்மையின் சுந்தர வடிவு எனக்கு இல்லாததால் தானே!

    “மதனா, காதலின் கடவுளே! எனது ஆண்மை போலும் வலிமையையும், பெருமையையும் நீ புழுதியில் கிடத்தி விட்டாயே!”

    காதலில், மையலில் ஆழ்ந்து விட்ட சித்ராங்கதா புழுவாகத் துடித்துப் புலம்புகிறாள்.

    இந்த நிலையின் உட்பொருளைத் தாகூர் உணர்த்தும் விதத்தினை நாம் உற்று நோக்க வேண்டும்.

    தான் பல காலங்களாகக் கனவு கண்டு மனதில் உருவகப் படுத்தி வைத்திருந்த பேராண்மை மிக்க ஆண்மகன், அர்ஜுனன்; அவனை நேரில் கண்டதும், சித்ராவின் பெண்மை உணர்வுகள் விழித்துக் கொண்டு அவன்மீது மீளாக் காதலில் ஆழந்து விடுகிறாள் பாவம்! ஆண்மகனை வெற்றி கொள்ளும் பெண்மையின் நளினங்களும், மென்மைச் செய்கைகளும் குணங்களும் அவற்றைப் பயின்றேயிராத அவளுக்கு இயற்கையாக அமையவில்லை; அவள் வளர்ந்த விதம் அவ்வாறு!

    மதனனும் வசந்தனும் அவள் துயரம் கண்டு அவளுக்கு ஒராண்டுக் காலத்திற்குப் பெண்மையின் மென்மை, இனிமை, ஒப்பற்ற அழகு இவற்றை வழங்குகின்றனர்.

    அடுத்த வந்த நாட்களில் சித்ராவின் இத்தகைய எழிலுருவைக் கண்ட அர்ஜுனன் அவள்பால் காதல் வயப்படுகிறான். காதலர்கள் இணைந்து இன்புறுகின்றனர்.

    *****************************************************

    கதையில் ஒரு எதிர்பாராத திருப்பம் இப்போது! மணிப்புர நாட்டைப் பகைவர்கள் தாக்குகின்றனர். நாட்டு மக்கள் தங்கள் நாட்டை இதுகாறும் காத்து வந்த தங்களது வீர இளவரசி சித்ராவைக் காணாததால் குழப்பத்திற்குள்ளாகுகின்றனர். அவள் எங்கோ எதற்கோ தவம் இயற்றச் சென்று விட்டதாக மக்கள் பேசிக் கொள்வதன் மூலம் அறிந்து கொள்கிறான் அர்ஜுனன்.

    “அவள், சித்ரா, வீரத்தில் தனக்கு நிகரில்லாத ஆண்மகன் ஆனவள்; மென்மையில் தனக்கு நிகரற்ற பெண்மணியானவள் என மக்கள் கூறுகின்றனர், அவள் எங்கே தான் சென்று விட்டாள்? அவளுக்கு வாழ்வில் என்ன குறை இருக்க முடியும்?” எனத் தான் யாரென்று இன்னும் அறிந்து கொண்டிராத சித்ராவினிடம் கூறுகிறான். தான் போய் மக்களுக்கு உதவ வேண்டும் எனப் பரபரக்கிறான். இளவரசி சித்ராங்கதாவைப் பற்றிய எண்ணங்களே அவன் மனதை ஆக்கிரமிக்கின்றன.

    அவளைப் பற்றியே பேசிவரும் அர்ஜுனனிடம் உண்மையான சித்ரா பொய்க்கோபம் கொள்கிறாள்.”என்ன குறை என்றோ கேட்டீர்கள்? அந்த துரதிருஷ்டசாலியிடம் என்ன இருந்தது? அவளுடைய பெருமைக்குரிய வீர தீரப் பிரதாபங்களும் குணங்களும் அவள் தனது பெண்மை உள்ளத்தை வெளிப்படுத்த ஒரு தடையாக நின்றனவே. நிறைவேறாத கனவுகள் கொண்டது அல்லவோ அவள் வாழ்க்கை,” எனத் துயரத்துடன் மொழிகிறாள் சித்ராங்கதா.

    அர்ஜுனன்: “பெண்ணே! இன்னும் அவளைப் பற்றி நீ அறிந்ததை எல்லாம் எனக்குக் கூறுவாய்.

    “என் மனக்கண்ணில் ஒரு வெண்புரவி மீதமர்ந்து, கடிவாளத்தை இடது கையிலும், வில்லினை வலது கையிலும் ஏந்தி வரும் அவளை நம்பிக்கையைத் தன்னைச் சுற்றிப் பரப்பி நிற்கும் ஒரு வெற்றி தேவதையாக நான் காண்கிறேன். ஒரு மூர்க்காவேசமான அன்புடன் தனது குட்டிகளைக் காக்கும் பெண்சிங்கமென அவளை நான் உருவகிக்கிறேன்; தடுக்க முடியாத உறுதியுடன் காணப்படும் பெண்மையின் கரங்கள், அழகுபடுத்தப்படாததும் மென்மையற்றதும் ஆயினும் மிகுந்த அழகு வாய்ந்தவை தெரியுமா?” எனவெல்லாம் இளவரசி சித்ராவைப் பற்றி உணர்ச்சிகரமாக அர்ஜுனன் வருணித்துக் கூறக் கேட்கிறாள் அவள்.

    அர்ஜுனனின் காதலின் பரிபூரணத்துவத்தை உணர்ந்து சிலிர்க்கிறாள் சித்ரா. பெண்மையின் அழகாலும், மென்மையாலும், நளினத்தாலும் மட்டும் தான் வெல்ல முடியும் எனத் தான் எண்ணியிருந்த அவனுடைய உள்ளத்தை, ஆண்மை முகிழ்க்கும் தனது முரட்டுப் பெண்மையாலும், அதில் உதித்த தன் கடமை உணர்வினாலும், அதன் தொடர்பான வீரத் திறத்தினாலுமே வெல்ல இயலும் என அறிந்து பேரானந்தம் அடைகிறாள். தனக்கு உவக்காத அந்தப் பொய்ம்மையான வேடத்தைக் கலைத்து விடுகிறாள்.

    “என் கனவுகளின் நாயகனே, உம்மைக் காதலில் வழிபட ஒப்பற்ற உருவ அழகினை நான் வேண்டிக் கேட்டு வாங்கி வந்தேன். என் வழிபாடு முடிந்து விட்டது. என் தெய்வத்தை நான் அறிந்து கொண்டேன். பூசனை செய்த காய்ந்த மலர்களை வெளியே வீசி விடுகிறேன்,” என்றபடி, அந்தக் கணத்தில் தான் அணிந்திருந்த போர்வை போன்ற மேல் அங்கியை விலக்கி விட்டு ஆண் உடையில் அவன் முன் நின்றாள் இளவரசி சித்ராங்கதா.

    “நான் தான் மணிபுரத்து இளவரசி சித்ரா. பெருமையுடன் எனது பெண்ணுள்ளத்தை உமக்கு அர்ப்பணிக்கிறேன். உருவில், வடிவில் நான் பெண்ணழகி அல்ல. என்னை என் உருவக் குறைபாடுகளுடன் ஏற்றுக் கொள்வீராக! உமது வீரம் மிகுந்த, கடினமான வாழ்வில் என்னை இணைத்துக் கொள்வீராக! உமது கடமைகளில் நான் பங்கெடுக்க அனுமதிப்பீராக! அப்போது உண்மையான என்னை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். நமக்குப் பிறக்கும் மகனை இன்னொரு அர்ஜுனனாக வளர்ப்பேன். எனது தந்தைக்கும் இந்த நாட்டுக்கும் அவன் அடுத்த வாரிசாவான். இதுவே மணிபுரத்து அரசமகளான சித்ராங்கதா தங்களுக்கு அளிக்கும் உறுதிமொழி,” என்கிறாள்.

    “அன்பே! என் வாழ்வு உன் அன்பினால் முழுமை பெற்றது,” என்று மகிழ்வோடு உரைக்கிறான் காண்டீபன்.

    *****************************************************

    காதல் மனதில் அரும்பியதும், அதனால் எழும் பயங்களும் சந்தேகங்களும் நிவர்த்தியாகி, அக்காதலின் சக்தியினாலேயே அதன் முழுமையை உணர்ந்த மனமொத்த காதலர் இருவரைத் தம் ஈடிணையற்ற கற்பனைத் திறத்தினால் ஒப்பற்ற இலட்சியக் காதலர்களாக உருவாக்கிக் காட்டியுள்ளார் கவியரசர் தாகூர்.

    ஒரு உயரிய ஆண்மகனின் காதலில் தன் பெண்மையின் முழுமையையும் பெருமையையும் உணர்ந்தவளாகச் சித்ராங்கதாவையும், அவளுடைய தன்னலமற்ற, தன்னை அறிந்து கொண்ட அன்பில் அர்ஜுனன் கண்டெடுத்த அவளுடைய உறுதி வாய்ந்த உள்ளப் பண்பையும் அவ்வுள்ளத்துக் காதலையும் நமக்குக் காண்பித்த தாகூரின் படைப்பின் சிறப்பை வியக்காமல் இருக்க முடியவில்லை அல்லவா?

    ______________________________________________________

    பி.கு. அர்ஜுனன்- சித்ராங்கதாவின் மகன் தான் மகாபாரதத்தில் நாம் காணும் ஒரு வீரனான பப்ருவாகனன்.

    படம் உதவி: http://ritsin.com/mahabharata-curses-of-arjuna-indian-mythology.html/

    Share
  • காதலின் பொன்வீதியில் – 2

    மீனாட்சி பாலகணேஷ்.

     

    காதலனை அறிந்தாள்!

    கண்ணொடு கண்ணிணை நோக்கி, உளம் மாறிப் புகுந்து காதலில் ஒன்றுபடுவது ஒருவகை. ஒரு மங்கை நல்லாளைப் பற்றியோ அல்லது ஆடவருள் உயர்வானவன் பற்றியோ மற்றொருவர் வாயிலாகக் கேள்வியுற்று ஒருவரை ஒருவர் காணாமலேயே காதல் வயப்படுவது இன்னொரு வகை. நிடத நாட்டு மன்னனான நளனுக்கும் விதர்ப்ப நாட்டரசன் மகள் தமயந்திக்குமுண்டான காதல் இவ்வகைப்பட்டதாம்!

    நீணிலத்தால் சோலை நிறம்பெயர நீடியதன்
    தாணிறத்தால் பொய்கைத் தலம்சிவப்ப- மாணி றத்தான்

    முன்’ தோன்றிய அன்னப்பறவை ஒன்றே நளன் தமயந்தி இருவரிடையும் காதல் பிறக்கக் காரண கர்த்தாவாயிற்று! அக்காதல் முளைவிட்ட சிறிது நேரத்திலேயே பெரும் மரமாகச் செழித்து வளர்ந்ததற்கும் அன்னத்தின் பங்கு மகத்தானதாகும்.

    “உன் இசைமுகந்த தோளுக்கு இசைவாள், வசையில் தமையந்தி என்றோதும் தையலாள்,” என்று நளன் உள்ளத்தில் பெருத்த ஆவலையும் ஆர்வத்தையும் காதலையும் ஏக்கத்தையும் தமயந்தி பால் எழுப்பி விட்டு விடுகின்றது அந்த மடவன்னம்! (உனது புகழ் வாய்ந்த தோளுக்கு இசைந்தவள் குற்றமற்றவளான தமயந்தி எனப்பொருள்).

    themozhi (1)
    அன்னம் மொழிந்த சொற்கள் செவிவழியாகப் புகுந்து அவனுடைய மனத்தை அடைவதற்கு முன்பாகவே, தமயந்தி என்னும் மடந்தை நளனுடைய மனக்கோயிலினுள் புகுந்து அவனைத் தன் வசமாக்கிக் கொண்டு விட்டாள் என அழகுற விவரிக்கிறார் நளவெண்பா எனும் இந்நூலினை யாத்த புலவர் புகழேந்தியார்.

    அன்னம் மொழிந்த மொழிபுகா முன்புக்குக்
    கன்னி மனக்கோயில் கைக்கொள்ளச்- சொன்னமயில்
    ஆர்மடந்தை என்றான் அனங்கன் சிலைவளைப்பப்
    பார்மடந்தை கோமான் பதைத்து.

    மன்மதன் அம்புகளுக்கு இலக்காகி விட்ட நளமன்னன் துடிதுடித்து, “யாரவள் அம்மடந்தை?” எனக் கேட்கத் தலைப்பட்டான்.

    இங்கு அவனுக்கு தமயந்தியைப் பற்றிக் கூறுகின்றது அன்னம். அவள் விதர்ப்ப நாட்டரசன் மகள், என அவளழகையும் குணங்களையும் கவினுற விவரித்து, மன்னன் ஆவலையும் காதலையும் பெருகச் செய்கின்றது. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனும் நான்கு பெண்மைக் குணங்களும் நான்கு வகைச் சேனைகளாகவும், ஐம்புலன்களும் ஐந்து நல்ல அமைச்சர்களாகவும், காற்சிலம்பொலியே முரசமாகவும், தன் கண்களே வேற்படையும் வாளுமாகக் கொண்டு முகமெனும் நிலாவட்டக் குடையின் கீழ் பெண்மை அரசு வீற்றுள்ள தன்மையுடையவள் தமயந்தி எனக் கூறுகின்றது அன்னப்பறவை.

    நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சா
    ஆர்க்கும் சிலம்பேஅணிமுரசா- வேற்படையும்
    வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்
    ஆளுமே பெண்மை அரசு.

    இப்படிப்பட்ட பெருமையுடைய மங்கையைக் கண்களால் காணாமலே அவளிடம் காதல் கொள்கிறான் நளன். இதில் ஆச்சரியமும் உண்டோ? அன்னத்தையே தன் காதலைச் சொல்ல அவளிடம் அனுப்புகிறான்.

    மன்னன் மனத்தெழுந்த மையல்நோய் அத்தனையும் அன்னம் கூறியது கேட்ட பெண்மயிலாள் உள்ளமும் மன்னன் பால் எழுந்த காதலால் துடித்தது! ” அன்னமே! என் நிலையை அவரிடம் சென்று சொல்வாயாக!” எனப் பதைத்தாள். அன்னமும் அவ்வாறே சென்று அவன்பால் அவள் காதலை உரைத்தது.

    காதலர் இருவரும் ஒருவரை ஒருவர் காணாமலே வளரும் காதலுக்கு ஒரு பெருத்த இடையூறு வருகின்றது. சுயம்வரம் என்பதன் வடிவில்!

    விதர்ப்ப நாட்டரசன் வீமன் தன் மகளுக்கு சுயம்வரம் நடத்தத் தீர்மானித்து எல்லா மன்னர்களுக்கும் செய்தி அனுப்புகிறான். நளனும் விதர்ப்ப தேசத்தை நோக்கி விரைகின்றான். தமயந்தியின் குணநலன்களைக் கேள்வியுற்ற தேவேந்திரனும் மற்ற தேவர்களும் அந்த சுயம்வரத்திற்கு வருகின்றனர். அது மட்டுமின்றி, நளனையே தங்கள் தூதுவனாக தமயந்தி பால் அனுப்பி, “எங்களில் ஒருவருக்கு மணமாலை சூட்டக் கூறுவாயாக,” என்கின்றனர்.

    காதல் திரைப்படங்களில் வருவது போல இது என்னவொரு கொடுமை! கடமையின் பால் கட்டுண்டு காதலை மறக்க வேண்டிய நிலைக்கு உந்தப்படுகிறான் நளன். அவன் செய்யக் கூடியது இங்கு ஒன்றுமே இல்லை.

    நளன் – தமயந்தி கதை சற்றும் விறுவிறுப்புக் குறையாத அழகான காதல் கதை!

    தன் மனத்துக் காதலைக் கட்டுப்படுத்திக் கொண்டு தமயந்தி பால் தேவர்கோனுக்காகத் தூது செல்கிறான் நளன். கன்னிமாடத்தில் அவள் முன்பு போய் நிற்கிறான். இங்கு தான் ஆச்சரியம்.

    முன்பின் ஒருவரை ஒருவர் கண்டறியாத இரு காதலரும் ஒருவரை ஒருவர் தம் நோக்கினாலேயே இனம் கண்டு கொள்கின்றனர். இது தான் காதலின் வலிமை! குவளை மலர்களும் தாமரை மலர்களும் ஒன்றினிடத்தே ஒன்று பூத்தது போல, இருவர் கண்களும் காதல் நோக்கினாலேயே ஒன்றில் ஒன்று சென்று கலந்தனவாம். கடமைக்கும் காதலுக்கும் இடையே தடுமாற்றம் கொள்கிறான் நிடத நாட்டரசன்.

    தேங்குவளை தன்னிலே செந்தா மரைமலரப்
    பூங்குவளை தாமரைக்கே பூத்ததே- ஆங்கு
    மதுநோக்கும் தாரானும் வாள்நுதலும் தம்மில்
    பொதுநோக்கு எதிர்நோக்கும் போது.

    இவ்வாறு சிந்தையில் குடிகொண்ட காதலனைக் கண்டு அறிந்தவளான தமயந்தியின் மன நிறை அழிந்து படுகின்றது. காதலுணர்வு பெருகி வர அவனை நோக்கிய வண்ணம் இருக்கிறாள்; அவனுடைய அழகுக் கடலானது அவளைக் கரையேற விடவில்லை என்கிறார் புலவர். அவன் தன்னிடம் வந்த காரணத்தை அவள் அறிந்திலள். முன்பின் கண்டறியாத அவன் தான் நளன் என எவ்வாறு அவள் தெரிந்து கொண்டாள்? இது தான் காதலின் உள்ளுணர்வோ?

    அதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, “காவல் கடந்தெங்கள் கன்னிமாடம் புகுந்த நீ யார்?”என்றவளிடம், தான் யாரெனக் கூறி, “என் சொல்லை இகழாது தேவர்கோமானுக்கு நீ மாலை சூட்டுக,” என்கிறான்.

    கேட்டவள் ஒரு கணம் சிந்திக்கிறாள். அவன் கடமையின் பொருட்டு தூதுவனாகத் தன்னிடம் செய்தி கூற வந்துள்ளான் என அறிந்தாள். இனி அவனால் செய்யக் கூடியது ஒன்றுமில்லை. தங்கள் காதல் வெற்றிபெறத் தானே அவனுக்கு சுயம்வரத்தில் மணமாலை சூட்டி விடுவது என உறுதி கொள்கிறாள்.

    தன் மனதின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் சில சொற்களைக் கூறுகிறாள். பின்னால் இன்னொரு சந்தர்ப்பம் வாய்க்காது என அவளுக்குத் தெரியும். “இந்த சுயம்வரந்தான் நின் பொருட்டால் என்பதனை நீ நினைவில் கொள்க. அந்தத் தேவர்களுடன் நீயும் சுயம்வர மண்டபத்துக்கு நாளை எழுந்தருள்க,” என வேண்டுகிறாள்.

    அவள் துயரம் இனிமேல் தான் ஆரம்பமாகின்றது. “இவன்பால் நான் காதலுற்றேன். இவனோ மற்றவர்க்கு மாலையிடு எனக்கூறி என்னிடம் தூது வந்தான். இவன் எவ்வாறு என்னை மணந்து கொள்வான்,” என எண்ணி எண்ணித் துயருற்றாள். பெருமூச்செறிந்தாள்; வியர்த்தாள்; சோர்ந்து வீழ்ந்தாள்.

    ‘உள்ளம்போய் நாண்போய் உரைபோய் வரிநெடுங்கண்
    வெள்ளம்போய் வேகின்ற மென்தளிர்போல்’ உயிர் சோர்ந்து நின்றாள்.

    ஞாயிறு மறைந்து அந்திப்பொழுது தோன்றுகிறது. நிலவு அவளைச் சுடுவதற்கென்றே எழுகின்றது; கண்ணீர் பெருக, “மன்னவனே! யான் இந்த இரவிற்கு இரை தானோ? இந்த இரவுப் பொழுது விரைந்து போகாதோ?” எனப் பலவாறு புலம்புகிறாள் தமயந்தி. இவளுடைய ஆழ்ந்த துயரத்துடன் கூடியதாகப் பொழுதும் புலர்கின்றது. கதிரவனும் தோன்றுகிறான்.

    சுயம்வர தினம். மண்டபத்தில் மன்னர் பலரும் வந்துள்ளனர். மன்னர்கள் பலரின் நடுவினில் நளனும் அமர்ந்திருக்கிறான். அத்தனை மன்னர்களும் தமயந்தியின் வருகையை எதிர் நோக்கி உள்ளனர். மிகுந்த தாமரை மலர்கள் பூத்துள்ள ஒரு தடாகத்தில் அன்னப்பறவை புகுவது போல தமயந்தி சென்று புகுகின்றாள். தோழிகள் ஒவ்வொரு மன்னனாக, இவன் சேரன், சோழன், பாண்டியன், அவந்தி மன்னன், பாஞ்சால தேச மன்னன், கோசல நாட்டு மன்னன், என அவர்கள் பெயரையும் புகழையும் விளக்கிக் கூறுகின்றனர். தமயந்தியின் கண்கள் தனக்குடையவனான நளனையே தேடுகின்றன; பார்த்துக் கொண்டே செல்கின்றாள்.

    ஓரிடத்தில் நான்கு தேவர்களும் நளன் உருவை எடுத்துக் கொண்டு உருமாறி வந்து அவன் அருகிலேயே அமர்ந்திருந்தனர். தமயந்தி அவர்களைக் காண்கிறாள். இல்லை, இல்லை- ஐந்து நளர்களைக் கண்டாள். இவர்களில் உண்மையான நளன் எவன் என மயங்கி அவளுடைய உள்ளம் ஊசலாடுகின்றது. என்ன செய்வாள் பேதை? கையிலுள்ள சுயம்வர மாலை நளனுக்கானது என அவள் உள்ளம் மட்டுமே அறியும்.

    தமயந்தியின் அழகும் குணநலன்களும் குடிப்பிறப்பும் மிக்க உயர்வானது ஆகையால், நளன் எனும் ஒருவன் பால் அவள் உள்ளம் ஈடுபட்டு விட்டது என அறிந்தும், அவளைப் பெற தேவர்கள் முயல்கின்றனர். அவள் மனம் மாறுபடாது என அறிந்ததால், அவள் உள்ளம் கவர்ந்தவனின் உருவையே தாமும் எடுத்துக் கொண்டு அவளைத் தம்மில் ஒருவருக்கு மாலை சூட்டச் செய்ய முயல்கின்றனர். இது என்ன சூழ்ச்சி? அவலம்?

    ஆனால் காதலின் வல்லமை மிகப் பெரிது அல்லவோ! சில கணங்கள் தான். தான் உள்ளத்தில் வரித்தவனையே எண்ணிக் கொண்டு அவனுக்கே மாலையிட அருளும்படி தெய்வத்தை வேண்டுகிறாள்: “இந்த வீமராஜனின் உண்மையான குலத்தில் உதித்த கற்பு முதலான குணங்கள் நிறைந்த கன்னி நான் ஆகில், அன்னம் எனக்குக் கூறியவனையே நான் இன்று மணமாலை சூட்ட அருளுக,” என வேண்டுகிறாள் தமயந்தி.

    மின்னுந்தார் வீமன்றன் மெய்ம்மரபில் செம்மைசேர்
    கன்னியான் ஆகில் கடிமாலை- அன்னந்தான்
    சொன்னவனைச் சூட்ட அருள்என்றாள் சூழ்விதியின்
    மன்னவனை தன்மனத்தே கொண்டு.

    ஆகா! இப்போது அந்த இறையருள் அவளுக்கு வழிகாட்டி விட்டது. அந்த ஐவருள் உண்மை நளன் யார் என அறியும் வகை கண்டு கொண்டு விட்டாள் தமயந்தி. தான் நின்ற இடத்திலிருந்து ஐவரையும் நன்றாக நோக்குகிறாள். ஐவருள் நளன் ஒருவனே மானிடன். அவனுடைய கண்கள் மட்டுமே இமைக்கின்றன; கால்கள் தரையில் படிந்து தோய்கின்றன. அவன் அணிந்துள்ள வண்ண மலர்மாலை சிறிதே வாடிக் காணப் படுகின்றது. மற்ற நால்வரும் நளன் உருவில் இருப்பினும் அவர்கள் தேவர்கள். தேவர்கள் கண்கள் இமையாது. கால்கள் தரையில் தோயாது. அவர்களுடைய மலர் மாலைகள் வாடாது. வழி காட்டிய இறைவனை உள்ளத்தில் வழுத்தியபடி உண்மை நளனை அறிந்தாள் இலக்குமியை ஒத்த நன்னுதல் அணங்கு தமயந்தி.

    கண்ணிமைத்த லால்அடிகள் காசினியில் தோய்தலால்
    வண்ண மலர்மாலை வாடுதலால்- எண்ணி
    நறுந்தா மரைவிரும்பும் நன்னுதலே அன்னாள்
    அறிந்தாள் நளன்தன்னை ஆங்கு.

    தன் கையிலிருந்த மணமாலையை நளனுக்குச் சூட்டினாள்.

    எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
    திண்ணிய ராகப் பெறின்– எனும் குறள் காதலின் பொன்வீதியில் நளனுடன் நடை பயிலும் இவளுக்குமே பொருந்துமல்லவோ?

    Share
  • திரு. கோபுலுவின் ஏகலைவி

    மீனாட்சி பாலகணேஷ்.

     

    gopuluஅழகழகான சித்திரங்களை வரைந்து என்னைப் போன்ற பல்லாயிரம் ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஓவியர் திரு. கோபுலு காலமாகி விட்டதை அறிந்து மிகவும் வருந்துகிறேன். 7 அல்லது 8 ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய உறவினரான எங்கள் குடும்ப நண்பர் ஒருவருடன் சென்று அன்னாரைச் சந்தித்து உரையாடியதை இங்கு பகிர்ந்து கொண்டு எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

    மிகச் சிறு வயதிலிருந்தே திரு. கோபுலுவின் ஓவியங்கள் மீது எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. ஆனந்த விகடன் தீபாவளி மலர் அட்டைகள், விகடனில் வெளிவந்த சரித்திர, சமூக நாவல்கள், அனைத்தையும், அவருடைய படங்களுக்காகவே சேகரித்து வந்தேன். தில்லானா மோகனாம்பாள், ஆலவாய் அழகன், திருச்சிற்றம்பலம், துப்பறியும் சாம்பு- ஆஹா! அது ஒரு பொற்காலம். நினைத்தாலே இனிக்கிறது,

    சௌந்தர்யலஹரி ஸ்லோகம் (66) ஒன்றிற்கு அவர் வரைந்த அழகிய படம் சட்டமிடப்பட்டு எங்கள் பூஜை அறையை அலங்கரித்தது. அந்த ஸ்லோகத்தை தினமும் ஒருமுறையாவது நான் சொல்லாமல் இருந்ததில்லை. படிப்பு, பாடும் திறன், வாக்கு வன்மை எல்லாம் தரும் ஸ்லோகம் அது.

    விபஞ்ச்யா காயந்தீ விவிதமபதானம் பசுபதேஸ்-
    த்வயாரப்தே வக்தும் சலித சிரஸா ஸாது வசனே
    ததீயைர் மாதுர்யை ரபலபித தந்த்ரீ கலரவாம்
    நிஜாம் வீணாம் வாணீம் நிசுளயதி சோளேன நிப்ருதம் (66)

    எத்தனையோ ஆண்டுகளின் பின்பு, எங்கள் சொந்த வீட்டில் குடியேறியதும், கூடத்தின் பெரிய சுவரில் இந்தச் சித்திரத்தைப் பெரிதாக வரைய ஆசைப்பட்டுப் பின்பு, அதனைப் பெரிய சைஸில் ஒரு பலகையில் வரைந்தேன். இதற்கு முன்னும் பின்னும் எனக்குத் துளிக்கூட ஓவியப் பயிற்சி கிடையாது. ஆர்வம் மட்டுமே உண்டு.

    கோபுலு அவர்களின் ஓவியங்கள், அதிலும் பெண்களின் ஓவியங்கள் அவற்றின் கண்ணழகுக்குப் பிரசித்தி பெற்றவை. ஆதலால் நான் ‘காப்பி’ செய்யும் இந்தச் சித்திரத்திற்கு முதலில் முகம், கண்கள் இவற்றை வரைந்து, அவை அழகாக வந்த பின்னரே மற்றவற்றை வரைந்து முடித்தேன். கிட்டத்தட்ட 4-5 மாதங்கள் ஆயின. என் தந்தையாரும் கணவரும், மகனும் இந்த முயற்சிக்குப் பெருத்த ஆதரவு தந்தனர் என்பதைக் குறிப்பிட வேண்டும். நிறைவு செய்த சித்திரத்தைக் கூடத்தில் மாட்டியும் ஆயிற்று. பார்த்தவர்கள் அனைவரும் வியந்தனர்.

    எங்கள் நண்பரான பேராசிரியர் மகாதேவன் (Indian Institute of Science) ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தபோது அந்தச் சித்திரத்தைக் கண்ணுற்றவர், திரு. கோபுலு தனது உறவினர் என்றும் அவரைக் காணத் தான் சென்னை சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். என்ன ஆச்சரியம்! நானும் வேறு வேலையாகச் சென்னை சென்று கொண்டிருந்தேன். ஆகவே, திரு. மகாதேவன் திரு. கோபுலுவைச் சந்திக்கச் செல்லும் சமயம் நானும் அவரைக் காணச் செல்வதாக முடிவு செய்து கொண்டோம்.

    செல்லும் போது திரு. கோபுலுவிற்குக் காண்பித்து அவருடைய ஆசியைப் பெற, நான் வரைந்த அவருடைய சித்திரத்தைப் புகைப்படம் எடுத்து, பெரிதாக இரு பிரதிகள் செய்து கொண்டேன்.

    agopu

    திரு. கோபுலுவைச் சந்தித்தது மனதிற்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்தது. “எனக்கு ஒரு குறையும் இல்லை அம்மா! நான் உள்ளம் நிறைவாக இருக்கிறேன்,” என்று புன்னகைத்தார். தயங்கியபடியே நான் வரைந்த சித்திரத்தின் புகைப்படத்தை அவரிடம் காட்டி அதைப்பற்றி விளக்கினேன். அவரை எனது மானசீக குருவாகக் கொண்டு நான் வரைந்த (காப்பியடித்த) ஒரே ஒரு சித்திரம் என்றேன். சிரித்தபடி மகிழ்ச்சியாக என்னை ஆசிர்வதித்தவர், எனது பிரதியில், “எனது அருமை ஏகலைவி மீனாட்சிக்கு ஆசிகள்,” என எழுதிக் கையொப்பமிட்டுக் கொடுத்தார்.

    எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதை இப்போதும் பொக்கிஷமாகக் காப்பாற்றி வருகிறேன். நாட்பட்டதால், அவர் எழுதியது சிறிது மங்கி விட்டது.

    இந்த சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தைத் தமிழிலொரு பாடலாக்கி, நவராத்திரியில் பாடியும் வருகின்றேன். அதனையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

    பல்லவி
    நாதன் பெருமைதனை நாத வீணையினில்
    வேதன் தலைவியவள் கீதம் இசைத்திடவே (நாதன்)

    அனுபல்லவி
    யாதும் இனிமையென யாழின் இனிமைகெட
    ஓதும் திருவாய்மொழி சாது என்றனையே (நாதன்)

    சரணம்
    இனிதென்று சிரமசைத்து இசைதன்னை நீ ரசிக்க
    இனிதன்று வீணையென இசைவாணி பரிதவிக்க
    இனியொன்றும் தோணாமல் உறையிட்டு மூடிவைக்க
    கனிவான நகைகாட்டி கருணைவெள்ளம் நீ பெருக்க (நாதன்)

    அத்தனை பெரிய உள்ளம் கொண்ட ஒரு அற்புத மனிதரைச் சந்திக்க இயன்றதை என் வாழ்வின் பாக்கியங்களில் ஒன்றாகக் கருதுகிறேன்.

    Share