Tag: ச. கண்மணி கணேசன்

  • தொகை இலக்கியங்களில் வானியல் குறிப்புகள் பெறும் இடம்

    தொகை இலக்கியங்களில் வானியல் குறிப்புகள் பெறும் இடம்

    ச. கண்மணி கணேசன் (ஓய்வு),
    முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி

    0.0   முன்னுரை

    0.1   செவ்விலக்கியங்களுள் காலத்தால் முற்பட்டனவாகிய தொகை நூல்களில் வானியல் குறிப்புகள் பெறும் இடம் பற்றிக் காண்பது இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

    0.2   வானியல் குறிப்புகளைப் பாடும் சூழல், கையாளும் முறை; அவற்றால் பெறும் பயன் ஆகியவற்றைத் தொகுத்து வகுத்து விளக்கும் போக்கில் இக்கட்டுரை அமைகிறது.

    1.0   இடம்பெறும்  சூழல்

    1.1   மழை பொழிவதற்கு வெள்ளிக்கோளின் நிலைமை காரணம் என்று பண்டைத் தமிழர் எண்ணினர் ஆதலால்; மழை பற்றிப் பேசத் தொடங்கும் போதே வானியல் குறிப்புகளைச் சேர்த்துப் பேசும் போக்கு காணப்படுகிறது.

    “வறிது வடக்கு இறைஞ்சிய சீர்சால் வெள்ளி
    பயங்கெழு பொழுதோடு ஆநியம் நிற்ப” (பதி.24)

    எனும் பாடலடிகள் வெள்ளிக்கோள் வடதிசையில் சிறிதே சாய்ந்து; பயன் பொருந்திய ஏனை மீன்களுடன் தனக்குரிய நாளிலே நின்றதால் மழை பொழிந்தது என்கிறது. பிற பல பாடல்களிலும் இதே கருத்து இடம் பெற்றுள்ளது (பதி.13, 69).

    வெள்ளிக்கோள் வடதிசையில் சாய்ந்து இராமல் தெற்கே சாய்ந்து காணப்பட்டால் மழை பொய்க்கும் என்ற கொள்கை நிலவியது (புறம்.35, 384, 385; மதுரைக்காஞ்சி- 108; பட்டி.1- 6). சனிக்கோள் சிம்மராசியிலிருந்து புகையினும்; தூமம் என்ற வால்நட்சத்திரம் தோன்றினும் மழை பொழியாது (புறம்.117).

    1.2   கற்பொழுக்கம் பற்றிப் பேசத் தொடங்கினால் வடமீன் என்னும் சாலியைக் குறிப்பிடுகின்றனர். பெண்மைக்குப் பெருமை சேர்ப்பது கற்பு என்றும்; அருந்ததி கற்பிற் சிறந்தவள் என்றும் அழுத்தமான கொள்கை நிலவியமை;

    “வடமீன்போல் தொழுதேத்த வயங்கிய கற்பினள்”

    (கலி.2) என்ற மேற்கோளால் புலனாகிறது. பெண்ணோடு அருந்ததியின் அம்சமாகிய விண்மீனைத் தொடர்புபடுத்திப் பேசும் போக்கு பல பாடல்களில் உள்ளது (புறம்.122; பரி.5; பெரும்பாணாற்றுப்படை-302; ஐங்குறுநூறு 442).

    1.3   கார்த்திகைப் பெண்கள் முருகனைப் பெற்றவர் என்ற கொள்கை காரணமாக முருகனையும் அவனுக்குரிய விழாவையும்  பற்றிப் பேசும்  போதெல்லாம்;

    “குறுமுயல் மறுநிறங் கிளர மதிநிறைந்து
    அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்” (அகம்.141)

    என கார்த்திகை குறித்துப்பேசும் போக்குளது (நற்.202; பரி.9).

    1.4   வானியல் நிகழ்வுகளும் நடப்பு அரசியலும் தொடர்பு

    உடையவை என்ற கொள்கை  நிலவியது. இதனால் அரசியல் நிகழ்வு பற்றிப் பேசும் போது வானியல் செய்தி இடம் பெறுகிறது. யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல்  இரும்பொறை இறந்தபோது; கூடலூர் கிழார் பாடிய பாடல் அரசுக்கு ஆபத்து நேரப்போகிறது எனத் தான் முன்னரே ஐயுற்று இருந்தமையைக் கூறுகிறது. ஐயத்தின் காரணம்;

    “ஆடியல் அழற்குட்டத்து
    ஆரிருள் அரையிரவில்
    முடப்பனையத்து வேர் முதலாக
    கடைக்குளத்துக் கயம் காயப்
    பங்குனி உயர் அழுவத்துத்
    தலை நாள்மீன் நிலை திரிய
    நிலை நாள்மீன் அதனெதிர் ஏர்தரத்
    தொன் நாள்மீன் துறை படியப்
    பாசிச் செல்லாது ஊசி முன்னாது
    அளக்கர்த் திணை விளக்காகக்
    கனையெரி பரப்பிக் காலெதிர்பு பொங்கி”

    (புறம்.229). என விரித்துப் பேசப்படுகிறது. ‘பங்குனி மாதத்து முதல் பாதியுள்; மேஷராசியிலிருந்த கார்த்திகையின் முதல் பாதத்தில் நள்ளிரவில் திருவாதிரை முதல் கேட்டை வரை பதின்மூன்று நாள்மீன்கள் வானில் தெரிந்தன. உச்சத்தில்  இருந்த தலைநாள்மீனாகிய உத்தரம் சாய்ந்தது. அதற்குப்பின் எட்டாவதாக இருந்த மிருகசீரிடம் மேற்கே அஸ்தமித்த போது வடகிழக்கில் ஒரு கொள்ளி வீழ்ந்தது. ஏழாம்  நாள் சேரன் இயற்கை எய்தினான்’ என்பதால் மன்னன் மறைவு வானியலோடு தொடர்புறுவது வெளிப்படை (பெனிட்டா- வானியல் குறித்த தெளிவான பார்வை- ப.42-43 a reservoir of Indian theses @ INFLIBNET).

    1.5   திருமண நிகழ்ச்சிக்குரிய நல்லநேரம் பற்றிய கொள்கை ஈராயிரம் ஆண்டுப்பழமை வாய்ந்தது.

    “அங்கண் இருவிசும்பு விளங்கத் திங்கள்
    சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக்
    கடிநகர் புனைந்து கடவுள் பேணி” (அகம்.- 136)

    முழவு முழங்க; முரசு ஒலிக்க ஏற்பாடு செய்தனர். திங்கள் ரோகிணியுடன் கூடிய நாள் திருமணத்திற்கு உகந்ததென்ற கொள்கை நிலவியது. கணவன் மனைவி கூடி நடத்தும் இன்பவாழ்விற்கு உரிய வானியல் நிலவரமாக அது கருதப்பட்டதால் மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது (நெடு.- அடி.- 161- 163& பட்டி.- அடி- 35)

    2.0   எடுத்தாளும் முறை

    2.1 “வெள்ளி தோன்றப் புள்ளுக்குரல் இயம்ப” (புறம்.- 385) என்பது போல் விண்மீனின் பெயர்க் குறிப்பு மட்டும் இடம்பெறுவது உண்டு.

    2.2   முழுமையான ராசிச் சக்கரத்தை விளக்குவதும் உண்டு. சைய மலையில் மழை பொழிந்த கோள்நிலை பற்றிய விளக்கத்தைக் கூறுகிறது பரி.11. அதற்கேற்ற வானியல் நிலை என்ன என்று விவரிக்கும் போது முழு ராசிச்சக்கரம் விளக்கமுறுகிறது. அத்தோடு வானியலின் அடிப்படைக் கொள்கைகளும் இடம்பெறுகின்றன.

    ராசிமண்டிலத்தில் மூன்று வீதிகள்; அவற்றுள் பன்னிரண்டு வீடுகள்; அவை நான்கு நான்காகப் பிரிந்து ஒன்பதொன்பது நாள்மீன்களைத் தம்முள் கொண்டவை; ஆக மொத்தம் இருபத்தேழு நாள்மீன்கள் என்ற விளக்கம்;

    “…கீழிருந்து
    தெருவிடைப் படுத்த மூன்று ஒன்பதிற்று
    இருக்கையுள்” (மேற்.)

    என்ற அடியில் ரத்தினச் சுருக்கமாக இடம் பெற்றுள்ளது.

    குறிப்பிட்ட பாடலில் இடம்பெறும் ராசிகளைச் சேர்ந்த கோள்கள் பற்றிய விபரம்:

    வெள்ளி                     இடபத்தில்
    செவ்வாய்                மேஷத்தில்
    புதன்                          மிதுனத்தில்
    சூரியன்                     சிம்மத்தில்
    குரு                              மீனத்தில்

    திங்களும், சனியும், ராகுவும்    மகரத்தில்

    கேது                          கடகத்தில்

    சூரியன் சிம்மத்தில் செல்வதை நேரடியாகக் கூறவில்லை. விடியலில் கார்த்திகை உச்சம் பெற்று இருந்தது என்பதால் அக்கருத்தைப் பெற்றோம். அதுபோல் ஆவணி மாதத்து மதி நிறைநாள் என்றதால் அவிட்டம் என்பது பெற்றோம். திங்கள் ராகுவுடன் மகத்தில் செல்வதால் அதற்கு ஏழாம்  இடமான கடகத்தில் கேது செல்கிறதென்பதும் கூறாமலே தெரிகிறது. ஆக ஆவணிமாதத்து அவிட்டநாளில் திங்களை ராகு தீண்டுகின்ற சந்திர கிரகணம்; பெருமழை பொழிந்து வையை வெள்ளம் பெருக்கெடுத்தது (பெனிட்டா- மேற்.ப.26).        .

    3.0   பெறும் பயன்

         வானியல் உவமைகள் கவிச்சுவை கூட்டுகின்றன.

    3.1 பெரும்பாணாற்றுப்படை சித்தரிக்கும் ஊரெல்லையில் ஒரு காட்சி; மகளிர் நீர்த்துறையில் விட்டுப்போன பொலங்  குழையைச் சிச்சிலிப் பறவை இரை என்று எடுத்து வேள்வித்  தூணில் தங்கியது. அக்குழை  வானத்தில் வைகறையில் தோன்றும் வெள்ளிமீன் போல ஒளி வீசியது.

    “புனலாடு மகளிர் இட்ட பொலங்குழை…
    வைகுறு மீனின் பைபயத் தோன்றும்” (அ.312-318)
    வைகுறு மீன் என்பது வெள்ளியைக் குறிக்கும். இதே போல்
    தோற்ற அடிப்படையிலமைந்த பல உள (நற். 128, கலி.15, 104)

    3.2 வையை ஆறு வற்றினாலும் எட்டாம் நாள் நிலவின் அளவு சுருங்குமே அன்றி; அமாவாசை நிலவு முற்றிலும் தோன்றாதது போல முழுதும் வற்றுவது இல்லை.

    “எண்மதி நிறை உவா இருண்மதி போல
    நாள் குறைபடுதல் காணுநர் யாரே” (பரி.11 அ.37-38)

    என்பது வினை அடிப்படையில் தோன்றிய உவமை ஆகும்.

    3.3 வானத்தில் கார்த்திகை மீன் தோன்றுவது போல வெண்மையாக மலர்ந்த முசுட்டை பற்றி அமையும் வண்ணப்புல உருக்காட்சியை;

    “அகலிரு விசும்பின் ஆஅல் போல
    வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை” (மலை. அ.100-101) என்ற பாடலடிகளில் காண்க.

    3.4 தலைவி ஒருத்தி தன் பின்னலில் ஈரிதழ் கொண்ட அரளிப்பூவைச் சூடியிருக்கிறாள்; கரும்பாம்போடு முரண்பட்டுத் தோன்றும் மணியை ஒத்த அப்பூக்கள் கார்த்திகை மீனின் அழகை ஒத்துக் காணப்பட்டன.

    “அரவுக்கண் அணியுறழ் ஆரல்மீன் தகைப்ப” (கலி.64)

    என்னும் உவமையில் இடம்பெறுவது வண்ண முரணழகு. இதுபோல் உருஅடிப்படையில்  அமைந்த உவமைகள் இன்னும் உள (நற்.231).

    3.5 “நாள்மீன் வாய்சூழ்ந்த மதிபோல்” (கலி.104)

    ஆயம் தலைவியைச் சூழ்ந்து இருந்தது என்பது பயன் அடிப்படையாக அமையும் உவமையாகும்.

    3.6 மன்னனின் அரண்மனையில் புதுமையாகச் செய்த  நிலையும் கைப்பிடியுடன் கூடிய கதவும் ‘உத்தரக் கற்கவி’ என்றழைக்கப்பட்டது. அதைப் புனைந்துரைக்கும் நக்கீரர்;

    “நாளொடு பெயரிய கோளமை விழுமரத்து”

    (நெடு.82) என்கிறார். உத்தரம் எனும் நாள்மீனின் பெயரைச் சொல்லாமல் சொல்லும் திறன் கவிதைக்கு அழகூட்டுகிறது.

    முடிவுரை

    வானியல் பற்றிய புனைந்துரைகளும் உவமைகளும் தொகைநூற் பாடல்களின் இனிமையைக்  கூட்டுகின்றன. பாடல்களில் விண்மீனின் பெயர்க்குறிப்பு மட்டும் இடம்பெறுவதும் உண்டு; முழுமையான ராசிச்சக்கரத்தை  விளக்குவதும் உண்டு. மழை பொழிய வெள்ளிக்கோளின் நிலைமை காரணம் என்று பண்டைத் தமிழர் எண்ணினர் ஆதலால்; மழை பற்றிப் பேசும் போதெல்லாம் வானியல் குறிப்புகளைச் சேர்த்துப் பேசியுள்ளனர். பெண்மைக்குப் பெருமை சேர்ப்பது கற்பு என்றும்; அருந்ததி கற்பிற் சிறந்தவள் என்றும் அழுத்தமான கொள்கை நிலவியதால் பெண்ணைப் பற்றிப் பேசத் தொடங்கும் போதெல்லாம்; அருந்ததியின் அம்சமாகிய வடமீனைத் தொடர்புபடுத்திப் பேசுகின்றனர். முருகனையும் அவனுக்குரிய விழாவையும் பேசும்போதெல்லாம்; கார்த்திகை மீனைக் குறித்துப்பேசும் போக்குளது. வானியலும் அரசியலும் தொடர்புடையவை என்ற கொள்கை நிலவியதால்; அரசியல் நிகழ்வு பற்றிப் பேசும்போதும் வானியல்செய்தி இடம்பெறுகிறது. மண வினைக்குரிய நல்லநேரம் பற்றிய கொள்கை ஈராயிரம் ஆண்டுப் பழமையானது. திங்கள் ரோகிணியுடன் கூடிய நாள் திருமணத்திற்கு உகந்ததென்ற கொள்கை நிலவியது.

    துணைநூற்பட்டியல்

    1. சங்க இலக்கியம்- 1&2ம் பகுதி- S.வையாபுரிப் பிள்ளை(ப.ஆ.)- 2ம் பதிப்பு- 1974
    2. பெனிட்டா- Ph.D.- Final.pdf a reservoir of Indian theses @ INFLIBNET

    சுருக்கக் குறியீட்டு விளக்கம்

    அகம். – அகநானூறு;            கலி. – கலித்தொகை
    நற். – நற்றிணை;                   நெடு. – நெடுநல்வாடை
    பட்டி.- பட்டினப்பாலை;     பதி. – பதிற்றுப்பத்து
    பரி. – பரிபாடல்;                     மலை. – மலைபடுகடாம்

    Share
  • (Peer Reviewed) அகஇலக்கியத்தில் முதுபெண்டும் முதுவாய்ப் பெண்டும்

    (Peer Reviewed) அகஇலக்கியத்தில் முதுபெண்டும் முதுவாய்ப் பெண்டும்

    ச.கண்மணி கணேசன்(ப. நி.),
    முன்னாள் முதல்வர்& தமிழ்த்துறைத் தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    அகஇலக்கியத்தில் இடம்பெறும் முதுபெண்டு, முதுவாய்ப் பெண்டு ஆகிய இரு பாத்திரங்களின் பெயர்க்  காரணத்தையும் தன்மைகளையும் எடுத்துக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். முதுபெண்டை முதுவாய்ப்  பெண்டு எனப் பிறழ உணரும்  இடத்தை எடுத்துக்காட்டித் தெளிவிக்க வேண்டிய தேவை உள்ளது. அகப்பாடல்கள் முதல்நிலைத் தரவாக அமைய; உரையாசிரியர் கூற்றுகளும் பிறவும் இரண்டாம்நிலைத் தரவாக அமைந்து; விளக்கமுறை ஆய்வாகக் கட்டுரை உருப்பெற்றுள்ளது.

    முதுபெண்டிர்க்குரிய தகுதியும் வயதும்   

    பெண்ணானவள் மணம்புரிந்து; கற்புநெறி வழுவாது இல்லறத்தில் நிலைத்திருந்து  கருவுயிர்த்தவுடன்  முதுபெண்டு ஆகிறாள். மகப்பேறால் ஏற்பட்ட திதலை (stretch marks) மங்கலத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது. திருமணம் என்ற   பந்தம்  அளிக்கும் பொறுப்பு அவளது  கடமை ஆகிறது. ‘முது-‘ என்னும் பெயரடை ‘வயதான’ எனும் பொருளைத் தராது; முழுமை எனும் பொருளைத் தருகிறது.

    சுற்றத்தார் சூழ ஓம்புகின்ற சூல் உடையளாய்ப் புதல்வனை ஈன்று; பாயலில்  படுத்திருந்தாள் காதல் மனைவி. ‘இதுகாறும் இளம்பருவத்தினளாய் இருந்தவள்; இனித் திதலை அல்குல் உடைய முதுபெண்டு ஆயினள்’ எனத் தலைவன் தன் கையிலிருந்த குவளை மலரால் அவளது வயிற்றைத் தடவிக் கிண்டல் செய்ய அவள் நாணத்தில் கண்களை மூடி மகிழ்ந்தாள்.

    “புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து அவ்வரித்
    திதலை அல்குல் முதுபெண்டாகித்
    துஞ்சுதியோ மெல் அஞ்சில் ஓதி எனப்” (நற்.-370)

    பாராட்டும் தலைவனின் மகிழ்ச்சி, பெருமிதம், கேலி அனைத்தும்; முதுபெண்டு ஆவதற்குரிய தகுதி இல்லறநெறி நின்று மகவைப்பெறுதல் என்று புலப்படுத்துகிறது. ‘முதுபெண்டு’ எனும் தொடரில் உள்ள ‘முது’ எனும் அடை ‘முழுமை’ என்ற பொருளில் வழங்குவது காண்க.

    தலைவன் புறத்தொழுகத் தன்  கடமைகளைச் செய்வதில் கவனத்தைத் திருப்பும் மகப்பேறுற்ற தலைவி தன்னை முதுபெண்டிருள்  ஒருத்தி எனக்  கூறுகிறாள்.

    “இருமருப்பு எருமை ஈன்றணிக் காரான்
    உழவன் யாத்த குழவியின் அகலாது
    பாஅல் பைம்பயிர் ஆரும்” (குறு.-181)

    என்ற வருணனை; இரண்டு மருப்போடு  ஈன்றணிமை உடைய எருமைக்  காரானைக்  காட்டுகிறது. அதன் கன்றை உழவன் கட்டிப்போட்டுச் சென்றுவிட்டான். எருமை மேயச் செல்ல வேண்டும்; ஆனால் கன்றைப் பிரிந்து தூரமாகச் செல்லாமல்  தான்  இருக்கும் இடத்திலுள்ள;  பால்பிடித்த கதிர்களை மேய்வது; பல நுட்பமான பொருட்களை உணர்த்தும் உள்ளுறை ஆகிறது.

    இரண்டு மருப்புள்ள எருமை என விதந்து சொல்வது உட்பொருள் கருதியே ஆகும். திருமணத்தால் ஒரு பெண் பிறந்தவீட்டில் இருந்து தன் வீட்டினுள் நுழைகிறாள். அவளது வாழ்க்கை இரண்டு குடும்பங்களின் பெருமையைப் பேசக்கூடியதாக அமைய வேண்டும் என்பதையே ‘இருமருப்பு எருமை’ என்ற தொடர் சுட்டுகிறது.

    அகன்று செல்லாமல் இருந்த இடத்திலேயே  எருமைக் காரான் பசியாற இயலும். பால் பிடித்த கதிர்களைக் கூட உணவாகக் கொள்ள முடியும். அதனால் ஏற்படும்  இழப்பு கருதிக் கடிந்து எருமையை யாரும் விரட்டவில்லை. அவ்வளவு வளமான நன்செய்; இல்லறக் கடமைகளுக்கேற்ற செல்வமிகுந்த மனைவாழ்க்கையைக்  குறிக்கிறது.

    எருமைக்குத் தாய்மைப் பிணைப்பே முதன்மை ஆவது போலத்; தலைவிக்குப் பெற்ற மகவைப் பேணுவதே முதற்கடமை ஆகிறது. உழவன் கன்றைப் பாதுகாப்பு கருதிக் கட்டிப் போட்டுள்ளான்; குடும்பக்  கட்டமைப்பு தலைவிக்கும் அவளது மகவுக்கும் பாதுகாப்பை அளிக்கிறது.

    தலைவனின் புறத்தொழுக்கம் பற்றிப் பிறருடன் பகிர்ந்து கொள்ளத் தலைவி விரும்பவில்லை. துன்பத்தின்  இடையில் தலைவன் ஒழுக்கம் பற்றிப் பேசுவது; மேலும் துன்பத்தை மட்டுமே கொடுக்கவல்லது எனத் தன்னைத் தேற்ற முயலும்  தோழிக்குத் தடை போடுகிறாள்.

    “திருமனைப் பல கடம் பூண்ட
    பெருமுது பெண்டிரேம் ஆகிய எமக்கே” (மேலது)

    எனத் தன் தகுதியைத் தானே நிலைநாட்டுகிறாள். திருமணம் என்ற பந்தத்திற்குரிய கடமைகள்; குழந்தை வளர்ப்பு, மூத்தோர் பேணல், விருந்து புறந்தரல், மனை மேலாண்மை; உறவுதாங்கல், நட்பு ஓம்பல், சுற்றம் போற்றல்  எனப் பல. அவற்றை ஆற்றவேண்டிய முதுபெண்டு ஆகிவிட்டமை அவள் வாய்மொழியாக   வெளிப்படுகிறது.

    திருமணச் சடங்காற்றும் முதுபெண்டிர்

    தலைவன் தன் திருமணத்தன்று  முதுபெண்டிர் செய்தவற்றை  நினைவு கூர்கிறான்.

    “உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர்
    பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
    முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்
    புதல்வர்ப் பயந்த திதலை அவ்வயிற்று
    வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
    கற்பினின் வழாஅ நற்பல உதவிப்
    பெற்றோர்ப் பெட்கும் பிணையை ஆகென
    நீரொடு சொரிந்த…
    வதுவை நன்மணம்” (அகம்.-86)

    புரிந்த ஞான்று நிகழ்ந்த முக்கியச் சடங்காகிய மங்கல நீராட்டை வருணிக்கிறான். தலைக்கு மேல் தாங்கிய குடத்தை உடையவராய்;  சுடுமண்ணாலான வட்டமான புதிய கலத்தில் அச்சடங்கிற்குரிய சுண்ணம், பூ, நெல் முதலிய மங்கலப்  பொருட்கள்  ஏந்தியவராக முதுபெண்டிர் நின்றனர். முன்னர் நீருள் சொரிய வேண்டியவை இவை; பின்னர்  சொரிய வேண்டியவை இவை எனத் தம்முள் பேசியபடியே கொடுத்தனர். அவருள் புதல்வனைப் பெற்றுத்  திதலை பொருந்திய வயிற்றை உடைய நால்வர் அணிகலன்களுடன் தலைவியை நீராட்டினர். ‘கற்பு நெறியிலிருந்து வழுவாமல் இல்லறத்திற்கு நலன் விளைக்கும் செயல்களுக்கு உதவி; உன்னை மனைவியாகப் பெற்றவன் மனம் நிறையும்படி; என்றும் அவனைப் பிணைந்திருக்கக் கடவாய்’ என முதுபெண்டிர் வாழ்த்தினர்.

    நோய் நாடும் சடங்கில் முதுபெண்டிர்      

    நுதல் பசந்திருந்த மகளின் நோய் பற்றி அறியக் கட்டுவிச்சியை அழைத்துக் காரணம் கேட்கிறாள் அன்னை. அக்கம்பக்கத்தில் இருந்த முதுபெண்டிரை உடன் வைத்துக் கொண்டு; நெல்லைச் சுளகில் போட்டு; மகளை முன்னர் நிறுத்தி; ஏற்பாடுகளைச் செய்கிறாள். பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் ‘செம்முது பெண்டிர்’ கட்டுவிச்சியைக் குறிக்கிறது எனச் சொல்வதை  (நற்றிணை- ப.356-357) ஏற்றுக்  கொள்ள இயலவில்லை. ஏனெனில் கட்டுவிச்சியை அகப்பாடல்கள்   முதுவாய்ப் பெண்டு என்கின்றன.

    முதுவாய்ப்பெண்டின் தொழிலும் வாழ்வும்     

    ஏழ்மை உடைய முதுவாய்ப் பெண்டின் தொழில் தெய்வத்தை வணங்கிக் கட்டுப்பார்த்துக் குறி சொல்வதே.

    வேலன் வெறியாட்டு முடிந்த நாளின் நள்ளிரவில்; தலைவனைக் களவில்  கூடிமகிழ்ந்த  தலைவியின்  கூற்றில் முதுவாய்ப்பெண்டு குறி சொன்னமை  இடம் பெறுகிறது.

    “நெடுவேள் பேணத் தணிகுவள் இவள் என
    முதுவாய்ப் பெண்டிர் அதுவாய் கூற” (அகம்.-22).
    வேலன் வெறியாட்டு  நிகழ்ந்தது என்கிறாள். மகளின் வளை
    நெகிழ்ந்தவுடன் கட்டுவிச்சியிடம் குறி கேட்ட தாய்க்கு; முருகு
    அணங்கியதாக உரைத்த;
    “… முதுவாய்ப்
    பொய்வல் பெண்டிர் பிரப்பு உளர்பு இரீஇ”ச்

    (அகம்.-98) செய்த சடங்கு; தெய்வத்திற்குப் படையல் வைத்து நிகழ்ந்தமை  தெரிகிறது. முதுவாய்ப் பெண்டு ஆநிரை கவரும் மறவர் சீறூரில் குடியிருந்த ஏழ்மை மிகுந்தவள்.

    “கறவை தந்த கடுங்கால் மறவர்
    கல்லென் சீறூர் …
    முதுவாய்ப் பெண்டின் செதுகால் குரம்பை”

    (அகம்.-63) எனும் பாடலடிகள் வலியற்ற காலை உடைய குடிலே அவளுக்குரியது என்கிறது.

    ‘முதுவாய்’ என்ற அடைமொழியின் காரணம்

    கட்டுப்பார்த்துக் குறிசொல்வதை  வாய்விட்டு நெடுங்காலமாகச் செய்து  வந்தவர் ஆதலால்; ‘முதுவாய்’ என்னும் அடைமொழி கொடுக்கப்பட்டது.

    ‘பேசி முதிர்ந்த வாய்’ என ந.மு.வேங்கடசாமி நாட்டாரும் ரா.வேங்கடாசலம் பிள்ளையும் சேர்ந்து உரைப்பதும் (அகநானூறு களிற்றியானைநிரை- ப.254, பா.98). ‘முதிய வாய்மையை உடைய’ என்று ஒளவை சு.துரைசாமிப்  பிள்ளை கூறுவதும் இக்கருத்தை அரண் செய்கின்றன (பதிற்றுப்பத்து- ப.311, பா.66).

    ‘முதுமை வாய்த்தலை உடைய’; ‘முதுமை வாய்ந்த’  என்றும் (அகம்.- 63&98); ‘அறிவு வாய்த்தலை உடைய’ என்றும் (அகம்.-22; அகநானூறு மணிமிடை பவளம்- ப.178, பா.195& நற்.200& குறுந்தொகை- ப.151, பா.78) ஒரே தொடருக்கு வேறுவேறு பொருள்கள் சொல்வது தொடக்க காலத் தெளிவற்ற நிலையைக் காட்டுகிறது. ஆயினும் கட்டுவிச்சி முதுவாய்ப் பெண்டு என்றே குறிப்பிடப்பட்டாள் என்பதில் மட்டும் எந்த  ஐயமுமில்லை.

    ‘முதுவாய்’ எனும் அடைமொழி தொகையிலக்கியத்தில் ‘முதுவாய் வேல’ (அகம்.-195), ‘முதுவாய்க் குயவ’ (நற்.-200), ‘முதுவாய்க் கோடியர்’ (குறு.-78) ‘முதுவாய் இரவல’ (பதிற்.-66) எனப் பிற பெயர்களோடும் இணைந்து   வழங்குகிறது. அவற்றுக்குரிய விளக்கம் ‘முதுவாய்’ என்னும் அடைமொழியின் பொருளை விளக்க உதவும்.

    மட்கலம் வனையும் குயவனும்   வாய்விட்டு விழா அறைகிறான்  (நற்.-293). வழிவழியாக அறிவிக்கும் உரிமை பெற்று இருந்ததால் அவன் முதுவாய்க் குயவன் ஆனான்

    கோடியர் என்னும் கூத்தர் காலங் காலமாக வாய்ப்பாட்டு பாடிக்கொண்டே ஆடும் தொழிலில் ஈடுபட்டு இருந்ததால் அவர்களை முதுவாய்க் கோடியர் என்று அழைத்தனர் எனப் புரிகிறது. இரவலர் என்பது பாணர், கூத்தர், பொருநர் புலவர் ஆகிய அனைவர்க்கும் உரிய பொதுப்பெயராகும். நெடுங் காலமாகப் பரிசில் வேண்டிப் பாடி ஆடி இசைத்துப் பாடல் இயற்றி இரப்போர் அனைவரும் ‘முதுவாய்’ என்னும் அடைமொழிக்கு உரியவர் ஆயினர். தொன்றுதொட்டு முருகு  அணங்கிற்கு வெறியாடி வழிபட்டுப் பாடியவன் ஆதலால்; வேலன் முதுவாய் உடையவன் ஆகிறான்.

    ‘முதுவாய்’ என்னும் அடைமொழி பெரிதும்  திணைமாந்தர்க்கே உரியதாகிறது. கோடியர், இரவலர், வேலன் மூவரும் திணைமாந்தராவது போல; முதுவாய்ப்பெண்டும் திணைமாந்தராகிய மறவர் சீறூரைச் சேர்ந்தவள் எனக் கண்டோம்.

    வாய்விட்டுக் குறிசொல்லும் தொழிலை  நெடுங் காலமாகச் செய்து  வந்ததால்; கட்டுவிச்சி  ‘முதுவாய்’ என்னும் அடைமொழி பெறுகிறாள்.

    ‘செம்மை’ என்னும் அடைமொழியின் காரணம்

    முருகு அணங்கியதால் உண்டான நோய் என்று கட்டுவிச்சி கூறியதால்;  அன்னை வெறியாட்டிற்கு ஏற்பாடு செய்வாள் என்ற  எதிர்பார்ப்பினைச் சிறைப்புறத்து நிற்கும் தலைவன் காதுபடப் பேசுகிறாள் தோழி.

    “செம்முது பெண்டிரொடு நெல்முன் நிறீஇக்
    கட்டிற் கேட்கும்” (நற்.-288)

    எனும் பாடலடிகட்கு உரை கூறும் போது; பின்னத்தூர் நாராயணசாமி ஐயரின் கட்டுப்பார்க்கும் முறை பற்றிய விளக்கம் மிகச் சிறப்பாக அமைகிறது. ஆனால் ‘செம்முது பெண்டிர்’ அவர் கூறும் கட்டுவிச்சியாகிய முதுவாய்ப் பெண்டிரினின்றும் வேறானவர்.

    முதுபெண்டிர் செம்மை என்னும் அடைமொழி பெற்று ‘முதுசெம்பெண்டிர்’ என அழைக்கப்படுவதை முன்னர்க் கண்டோம் (பார்க்க: திருமணச் சடங்காற்றும் முதுபெண்டிர், அகம்.-86). அதுபோன்றே ‘செம்முது பெண்டிர்’ என்ற வழக்கும் அமைந்துள்ளது. கற்பின் அடையாளமாகிய அருந்ததியைச்  சுட்டும் விண்மீன் சிவந்தது ஆதலால்; செம்மீன் எனப் பெயர் பெறுவதை ஒட்டிக் (பதி.-31); கற்பொழுக்கம் தொடர்பாகப் பெண்களுக்கும் ‘செம்மை’ எனும் பெயரடை பயின்று வருகிறது. நல்லொழுக்கத்தின் அடையாளமாகிக்; ‘குறையற்ற’ என்றும் பொருள்படும். எனவே ‘செம்முது பெண்டிர்’ கற்புநெறி வழுவாது; மகப்பயந்து இல்லறம் நடத்துவோர் என உறுதிப்படுகிறது.

    முடிவுரை

    ‘முது-’ என்னும் பெயரடைக்கும் வயதிற்கும் தொடர்பு  இல்லை. இளம்பெண்ணாயினும் மணம்  புரிந்து; கற்புநெறி வழுவாது இல்லறத்தில் நிலைத்திருந்து  கருவுயிர்த்தவுடன்  முதுபெண்டு ஆகிறாள். மகப்பேறால் ஏற்பட்ட திதலை மங்கலத்தின் அடையாளம் ஆகும். திருமணம் என்ற   பந்தம்  அளிக்கும் பொறுப்பு அவளது  கடமை ஆகும். ‘முது-‘ என்னும் பெயரடை முழுமை எனும் பொருளைத் தருகிறது. திருமணச்சடங்கையும் நோய்நாடும் சடங்கையும் ஆற்றும் தகுதி முதுபெண்டிர்க்கு உண்டு. திணைமாந்தராகிய கட்டுவிச்சிகள் ஏழ்மை நிலையில் கட்டுப்பார்த்து வாய்விட்டுக் குறிசொல்லும் தொழிலை நெடுங்காலமாகச் செய்தவர் ஆதலால் ‘முதுவாய்ப் பெண்டிர்’ எனப்பட்டனர். முதுவாய்ப் பெண்டையும் அகவன் மகளையும் ஒருசேர வைத்துப் பார்ப்பது அடுத்தகட்ட ஆய்விற்கு உரியது.

    துணைநூற் பட்டியல்

    1. அகநானூறு களிற்றியானைநிரை- 2009- கழக வெளியீடு, சென்னை.
    2. அகநானூறு மணிமிடை பவளம்- 2007- கழகவெளியீடு, சென்னை.
    3. குறுந்தொகை- 2007- கழக வெளியீடு, சென்னை.
    4. நற்றிணை- 2007- கழக வெளியீடு, சென்னை.
    5. பதிற்றுப்பத்து- 2007- கழக வெளியீடு, சென்னை.

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    “அகஇலக்கியத்தில் முதுபெண்டும் முதுவாய்ப் பெண்டும்” என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு வழங்கும் மதிப்பீடு:

    1.  ஒருவருடைய கபடற்ற உள்ளத்தைப் பாராட்ட வேண்டிய நிலையில் ‘குழநதையுள்ளம்’ கொண்டவர்’ எனச் சொல்வதற்குப் பதிலாகச் ‘சிறுபிள்ளைத்தனமாக’ என்று சொன்னால் என்ன ஆகும்? இத்தகைய சொற்பிறழ்வுகள் பொருட் பிறழ்வுகளுக்குக் காரணமாகி இலக்கியச் சுவையுணர்திறன் பழுதுபட வாய்ப்புண்டு. ‘முதுபெண்டிர்’ என்னும் சொல்லும் ‘முதுவாய் பெண்டிர்’ என்னும் சொல்லும் அத்தகையன. அவற்றிடை நிலவும் அக்காலப் பொருள் வேறுபாட்டைத் தெளிவுபடுத்திக் காட்டுவதன் மூலம் இருவேறு பாத்திரங்களின் தனித்தன்மையைக் வலிமையான தரவுகளால் கட்டுரையாளர் காப்பாற்றியிருக்கிறார், காட்சிப்படுத்தியிருக்கிறார்.

    2.  மரபுவழி அமைந்த இலக்கியக் கூறுகளை ஆய்ந்து எளிய தமிழில் விளக்க முயலும் ஆய்வுக் கட்டுரையாளருக்கு வாழ்த்துகள்!

    3.  ‘முதுபெண்டிர்’ என்னும் சொல்லில் ‘முது’ என்பது முதுமை என்னும் மூலத்திலிருந்து வந்ததாகக் கொள்ளாமல் முதிர்ச்சியின் வடிவமாகக் கொண்டு ‘முழுமை’ என்னும் பொருள் காண்பது ஏற்புடைத்தே. பெண்மை தாய்மையில் நிறைவடைகிறது என்பது உண்மையே.

    4.  ‘முதுவாய்ப் பெண்டிர்’ என்பது ‘தெய்வத்தை வணங்கிக் குறிசொல்லும் கட்டுவிச்சியையே குறிக்கும்’ என்பது கட்டுரையாளரின் ஆய்வுத் தெளிவைக் காட்டுவதாக உள்ளது.

    5. கேலி, தூரம், வயது, கட்டிப்போட்டு, காதுபட’ முதலிய இக்காலச் சொற்கள். கட்டுரைப் பொருண்மை, வெளிப்பாட்டு உத்தி, ஆய்வு நெறி, சான்றுகள், கையாளப்பெற்றிருக்கும் மொழி நடை இவற்றோடு பொருந்துமாறு இருப்பதாகக் கருதவியலவில்லை. பாதாம்பருப்புப் பாயசத்தில் வேர்க்கடலை எதற்கு?

    Share
  • (Peer Reviewed) கரும்பனூர் கிழான் அளித்த  விருந்து

    (Peer Reviewed) கரும்பனூர் கிழான் அளித்த விருந்து

    ச. கண்மணி கணேசன் (ப.நி.)

    முன்னுரை

    தொகைநூல்களில்  பண்டைத் தமிழர் உண்ட உணவு, உண்ணுமுறை குறித்த பல தகவல்கள்  உள்ளன. கரும்பனூர் கிழான் பொருநர்க்கு என்னென்ன  விருந்தளித்தான் என விளக்குவது இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். விளக்க முறை ஆய்வாக அமையும் இக்கட்டுரையில் புறம்.381, 384 ஆகிய இருபாடல்கள் முதனிலைத் தரவுகளாகவும்; பிற தொகைநூற் பாடல்கள் இரண்டாம்நிலைத் தரவுகளாகவும்  அமைகின்றன.

    கரும்பனூர் கிழான்; ஓர் அறிமுகம்

    கரும்பனூர் கிழான் வேங்கடப் பகுதியில் இருந்த தன் பெயருக்குரிய ஊரில் புன்செய் வேளாண்மையும் நன்செய் வேளாண்மையும் செய்த முல்லைநிலத் தலைவன் ஆவான். அவனது ஊர் இருந்த பகுதி வேங்கடம் என்பது;

    “ஒலிவெள்ளருவி வேங்கட”ம் (புறநானூறு பகுதி ll, 2007, ப.390-394, பா.381) என்ற அடியால் விளக்கம் பெறுகிறது.

    “வன்பாலாற் கருங்கால் வரகின்
    அரிகால்” (புறம்.384)

    உடையதென்றும் வருணிக்கப்படுகிறது. ‘வன்பால்’ புன்செயைக் குறிக்கும். தொடர்ந்து அரிகாலின்கண் வாழும் எலியைப் பிடிக்க முயலும் குறும்பூழ்ப் பறவையின் ஆரவாரமும், அதன் காரணமாக அஞ்சி ஓடும் முயலும், அந்த ஓட்டத்தில் இருப்பை மரத்துப் பூக்கள் உதிர்வதும் இடம் பெறுகின்றன. இவை அவனது புன்செயாகிய காட்டு வளத்தை  உணர்த்துகின்றன.

    தம்மை  உழுவித்த நாடனுக்காக வயலில் இறங்கி நெல் வேளாண்மை செய்த உழவரின் தலைவனாகக்  கரும்பனூர் கிழான் விளங்கினான்.

    “மென்பாலான் உடன் அணைஇ
    வஞ்சிக் கோட்டு உறங்கு நாரை
    அறைக் கரும்பின் பூவருந்தும்” (மேற்.)

    காட்சியும் அவனது ஊரின் வருணனையே ஆகும். ‘மென்பால்’ நன்செய் ஆகும். நன்செயில் இரை தேரிய நாரை வஞ்சிக்கோட்டில் உறங்குமுன் கணுவுள்ள கரும்பின் பூவை உண்டமை; அவனது நன்செய் வேளாண்மையின்  செழிப்பைக் காட்டுகிறது. அவனது ஊரில் விழாக்காலம் அல்லாத போதும்; உழவரின் உண்கலத்தில் பெரிய கெளிற்றுமீனோடு இஞ்சிப்பூவுடன் கள் நிறைந்து  இருக்கும்.

    “விழவின் றாயினும் உழவர் மண்டை
    இருங்கெடிற்று மிசையோடு பூங்கள் வைகுந்து”

    (மேற்.) எனப் பகர்வது; அவனது மேலாண்மையின் கீழ் உழுவோரின் உணவுமுறை ஆகும்.

    விருந்து வகைகள்

    இரவலர்க்கு ஊன் கலந்த நெல்லரிசி உணவோடு; பாலிற் பெய்து, பாகிற் கொண்டு கலந்த உணவையும் விருந்தாக அளித்தான்.

    “நிணம் பெருத்த கொழுஞ்சோற்றிடை. …
    நீர்நாண நெய் பெய்து” (மேற்.)

    விருந்துண்டமை பற்றிப் புலவர் பாடியுள்ளார். நெய்யை நீர்போல ஊற்றி நிணம் கலந்த நெல்லரிசிச் சோற்றை உண்ணக் கொடுத்தான் என்பது பொருள்.  புறத்திணை நன்னாகனார் ஊன்கலந்த சோறுண்டு தெவிட்டிய போது; பாலிலும் பாகிலும் அளவோடு கலந்து கரைத்த உணவைப்  பருகியதாகக் கூறுகிறார். அதாவது அவனிடத்தில் நெல்லரிசிச் சோறு மட்டுமின்றிப் பிற உணவு  வகைகளும்  கிடைத்தன என்கிறார்.

    “ஊனும் ஊணும் முனையின் இனிதெனப்
    பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும்
    அளவுபு கலந்து மெல்லிது பருகி
    விருந்து உறுத்து ஆற்றி இருந்தனெம்” (புறம்.381)

    என்பது புலவரின் அறிக்கை ஆகும். பண்டைத் தமிழர் பாலிற் பெய்து உண்டவை எவை என்பதையும்; பாகொடு சேர்த்துண்டது எது என்பதையும்    தொகையிலக்கியம் காட்டுகிறது.

    பாலிற் பெய்த உணவு 

    பாலிற் பெய்த உணவாகக் கரும்பனூர் கிழான் அளித்த  விருந்தில் இடம் பெற்றவை;  பாலுடன் கூடிய வரகுக்கூழும் தினைக்கூழும் ஆகும். ஆலத்தூர் கிழார் புன்செயில் விளைந்த வரகைப் பாலோடு சேர்த்துக் குடிப்பதை;

    “…………………………..புன்புல வரகின்
    பாற்பெய்…………………………………..
    அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்”

    (புறநானூறு பகுதி l, 2007, ப.94-98, பா.34) என்று விரிவாகப் பாடியுள்ளார். மிகுதியாகப் பால் கலந்து  இருந்ததால் தான் ‘ஆர்ந்த’ என்கிறார்.  ‘மெல்லிது பருகி’ என்ற உண்ணுமுறைக்குப் பொருந்தி வரும் உணவு இதுவே. இதே போன்று தினைச்சோறும் பாலும் சேர்த்து உண்டதை;

    “பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்” (பத்துப் பாட்டு தொகுதி l, 2007, பெரும்பாணாற்றுப்படை, ப.92-94, அடி168) என முல்லைநிலக் கோவலர் குடியிருப்பில் கிடைக்கும் உணவைக் கூறிக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் ஆற்றுப்படுத்துவது காண்கிறோம்.   எனவே கரும்பனூர் கிழான் அளித்த விருந்தில் தினைப் பால்சோறும் வரகுப்பால்சோறும் இடம் பெற்றமை  உறுதி.

    கரும்பனூர் கிழானது புன்செய் வேளாண்மை வளம் பற்றி முன்னர்க் கண்ட செய்தியும் அவனளித்த விருந்தில் வரகுப்பால்சோறு இடம்பெற்றமைக்கு  ஆதாரமாகிறது.

    நெல்லரிசிச் சோற்றில் பாலூற்றி உண்பது இந்த உண்ணுமுறைக்குப் பொருந்தி வரவில்லை. ஏனெனில்;

    “… … …பால்விட்டு

    அயினியும் இன்று அயின்றனனே” (புறம்.77)

    என்று இடைக்குன்றூர் கிழார் பாண்டிய வேந்தனைப் பாடும் போது ‘கலந்து பருகு’வதாகச்  சொல்லவில்லை. ‘அயிலுதல்’ என்ற  வினை எடுத்து உண்பதையே குறிக்கும். எனவே கரும்பனூர் கிழான் அளித்த விருந்தில் நெல்லரிசிப் பால்சோறு இடம்பெறவில்லை என்பது உறுதி.

    பாகிற் கொண்ட உணவு

    ‘பாகிற் கொண்ட’ உணவாவது உழுந்தங்களி என்பது நல்லாவூர் கிழார் மூலம் தெளிவாகிறது. திருமண விருந்தைப் பற்றிப் பேசும் போது;

    “உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை” (அகநானூறு களிற்றியானை நிரை, 2009, ப.221, பா.86) என்கிறார். ‘உழுந்து தலைப்பெய்த’ என்னும் தொடர்; இவ்வுணவுப் பொருளில்  உழுந்தே முதன்மைப் பொருள் என உணர்த்தும். ‘கொழுங்களி’ என்னும் தொடர் அவ்வுணவுப் பண்டத்தின் பதம் பற்றியும், அதை வளமாக எண்ணெய் சேர்த்துச் சமைப்பதையும் குறிப்பாகப் புலப்படுத்துகிறது. மிதவை எனும் சொல் உணவுடன் சேர்க்கும் நீர்மப் பொருளைக் குறிக்கும். பாகு நீர்மப் பொருள் ஆகையால்; அதைச் சேர்த்து உண்பதைக்  ‘களிமிதவை’ என்று பாடியுள்ளார். ‘கொழுங்களி’ என்று அழைத்த காரணம்;

    “நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்றன்ன”

    (ஐங்குறுநூறு, 2009, ப.328-329, பா.221) என்னும் பாடல் தொடர் மூலம் தெளிவாகிறது. ‘நெய்யோடு மயக்கிய’ செய்முறை; மிதமிஞ்சிய நெய் சேர்த்தமையைச் சுட்டி நிற்கிறது. இங்கு நெய் எள்ளிலிருந்து எடுக்கப்படுவதாகும். உழுந்தங்களி கிண்டும் போது அளவிறந்த நல்லெண்ணெயைக் குடிக்கும் என்பது நடைமுறை உண்மை.

    பொ.வே.சோமசுந்தரனார் மேற்சுட்டிய பாடலுக்கு உரை எழுதுங்கால்; அதை உழுந்தங்களி என்று சுட்டவில்லை; மாறாக உழுந்தினின்று செய்யப்படும் வடகம் என்கிறார். இது ஏற்றுக்கொள்ளத் தக்கதன்று. ஏனெனில்; அப்பாடலில் ‘நூற்றுப் போவதைப் போல’ என்னும் உவமை இடம் பெறுகிறது. வடகம் என்னும் உணவு வகை வெய்யிலில் காயவைத்துச் செய்யப்படும். அது நூற்றுப் போக வழியில்லை. ஆனால் உழுந்தில் செய்த பிற உணவுப்பண்டங்கள் நூற்றுப்போகும் வாய்ப்பு மிகுதி. ‘ஊசிப் போதல்’ என்ற இக்கால வழக்கே பாடலில் நூற்றுப்போதல் எனச் சொல்லப்படுகிறது. ஊசிப்போன உழுந்துப் பலகாரத்தில் இருந்து கெட்ட வாடையுடன் நூல்போன்ற கசிவு ஏற்படும். இந்த அனுபவ அறிவுடன் கபிலர் பாடியிருக்கிறார். உழுந்தங்களி உண்ணக் காலம் தாழ்த்தினால் நூற்றுப் போய் உண்ணத் தகுதியற்றுப்   போய் விடும்; அதுபோல் தலைவன் தந்த தழையாடையை ஏற்றுக்கொண்டு உடுத்தாது இருப்பின்; வாடிப்போய் அணியும் தகுதியை இழந்துவிடும் என்பதே பாடலின் பொருளாகும்.

    இதனால் கரும்பனூர் கிழான் அளித்த விருந்தில் பாகுடன் சேர்த்து உண்ணக்கூடிய உழுந்தங்களி இடம் பெற்று இருந்தமை உறுதியாகிறது. இன்றும் கருப்பட்டிப்பாகு என அழைக்கப்படும் பனம்பாகை உழுந்தங்களிக்கு நடுவில் குழித்து; ஊற்றிச் சுவைக்கும் வழக்கம் உளது.

    விருந்தின் காலமும் காரணமும்

    எவ்வளவு தொலைவில் இருந்தாலும்; வறட்சிக்  காலத்தில்  என்னிடம் வந்து வயிறார உண்க என்கிறான்.

    “இருநிலம் கூலம் பாறக் கோடை
    வருமழை முழக்கிசைக்கு ஓடிய பின்றைச்
    சேயை யாயினும் இவணை யாயினும்
    இதற்கொண்டு அறிநை வாழியோ கிணைவ”

    (புறம்.381) எனக் கிணைப்பறை இசைக்கும் கலைஞனை அழைத்துக்; ‘கடுமையான கோடையில் கூலமே இன்றிப் பஞ்சம் ஏற்படினும்; ஒரு மழை பொழிந்தவுடன் புன்செய்ப் பயன்கள் தப்பாது ஆதலால்; இங்கு வாருங்கள்’ என்கிறான். நன்செயின் விளைச்சலுக்கு மிகுந்த நீர் தேவைப்படும்; ஆனால் புன்செயில் விளைச்சலுக்குச் சிறிதளவு நீரே போதும் என்ற காரணத்தைக் கூறி அழைக்கிறான்.

    சிறுகுடி கிழான் பண்ணனைக் கிள்ளி வளவன் ‘பசிப்பிணி மருத்துவன்’ (புறம்.173) என்று போற்றுகிறான். வறட்சி மிகுந்து நெல் விளையாத காலத்தில் பொதுமக்களுக்குப் புன்செயால் தானம் அளித்தான் என்பது

    “வெள்ளி தென்புலத் துறைய விளைவயற்
    பள்ளம் வாடிய பயனில் காலை…
    வெல்லும் வாய்மொழிப் புல்லுடை விளைநிலம்
    பெயர்க்கும் பண்ணன்” (புறம்.388)

    எனப் புகழப்படுகிறது. கரும்பனூர் கிழான் சொன்ன காரணமும் பண்ணன் பெருமையும் ஒரே அடிப்படையில் உருவான கருத்துகளாக உள்ளன. தொல்தமிழகத்துக் குடிகள் நான்கையும்; உணவு நான்கையும் வரிசைப்படுத்தும் மாங்குடி கிழார்;

    “கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
    சிறுகொடிக்கொள்ளே பொறிகிளர் அவரையோடு
    இந்நான்கு அல்லது உணாவும் இல்லை” (புறம்.335)

    எனத் தன் பட்டியலில் வரகு, தினை, அவரை என்ற மூன்றனுக்கும் இடம் கொடுத்து இருக்கிறார். இவற்றுள் அவரை பயறுவகைகளுக்கு உரிய பொதுப்பெயர் ஆகும். இம்மூன்று உணவு வகையும் பாரம்பரியமானவை என்ற கருத்து வலுப்படுகிறது. கரும்பனூர் கிழான் அளித்த விருந்தில் பாரம்பரியம் சிறப்பிடம் பெற்றுள்ளது.

    முடிவுரை

    கிழார் உழவர் தலைவராய் இருந்து புன்செயிலும் நன்செயிலும் வேளாண்மை செய்ததால் வறட்சிக்காலத்தில் அவர்கள் பாரம்பரியமான புன்செய்ப் பயன்களால் விருந்து அயர்ந்தனர். கரும்பனூர் கிழான் நெய்யும் ஊனும் கலந்த நெல்லரிசிச் சோறு மட்டுமின்றி; வரகு, தினை ஆகிய கூழொடு பால் கலந்து பருகக் கொடுத்தான். கருப்பட்டிப் பாகோடு உழுந்தங் களியை வழங்கினான்.

    துணைநூற் பட்டியல்
    1. அகநானூறு களிற்றியானை நிரை, (2009), கழக வெளியீடு, சென்னை.
    2. ஐங்குறுநூறு, (2009), கழக வெளியீடு, சென்னை.
    3. பத்துப்பாட்டு தொகுதி l, (2007), கழக வெளியீடு, சென்னை.
    4. புறநானூறு பகுதி l, 2007, கழக வெளியீடு, சென்னை.
    5. புறநானூறு பகுதி ll, 2007, கழக வெளியீடு, சென்னை.
    Brief note on author

    Dr.(Mrs)S.Kanmani Ganesanl published ‘chilappathikaaram kaattum naadum nakaramum’- her Ph.D thesis in 1992. She has also translated the traumatology section of the book; An Introduction to Orthopaedics and Traumatology authored by Dr.M.Natarajan as ‘kaaya aruvaiyiyal maruththuvam’ which was published by the Madurai Kamaraj University; sponsored by the Text Book Society of Tamilnadu, Chennai. The booklet makalir udalnalach chikkalkal was published by her as the proceedings of a symposium sponsored by the UGC, New Delhi. She retired as a principal and HOD in Tamil of an autonomous institution Srikaliswari College, Sivakasi.


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer review):
    

    ‘கரும்பனூர் கிழான் அளித்த விருந்து’ என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன்மதிப்பீடு

    • ‘வன்பால்’ புன்செய் எனவும் ‘மென்பால்’ நன்செய் எனவும் எளிமையாக விளக்கியிருப்பது பாராட்டுக்குரியது.
    • நீர் நாண நெய்பெய்து என்னுந் தொடரில் ‘நாண’ என்பதை உவம உருபாகக் கொண்டது கட்டுரையாசிரியர்தம் இலக்கிய முதிர்சசியைக் காட்டுகிறது.
    • ‘நெய்யொடு மயங்கிய உழுந்து நூற்றன்ன’ என்னும்  கபிலரின்  தொடருக்கு ‘உழுத்தங்களி’ என உரைகாண்பதும் அதற்குப் பெருமழைப் புலவரின் வடகம் என்னும் உரை பொருந்தாது என்பதற்குச்  சங்க இலக்கியப் பகுதிகளைச் சான்றாக்குவதும் கட்டுரையாசிரியர்தம் பரந்துபட்ட இலக்கியப் பார்வையை வெளிப்படுத்துகின்றன.
    • மாங்குடிகிழார் பாடடில் “சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு இந்நான்கல்லது உணாவும் இல்லை” என்ற வரிகளைத் தனிமைப்படுத்தி உரை காண்பது கட்டுரையாசிரியர் எடுத்துக்கொண்ட பொருளுக்கு வலிமை சேர்க்கலாம். ஆனால் பாட்டின் முழுமை சிதலமடைகிறது என்பதைக் நோக்குதல்  வேண்டும். ‘நான்கல்லது பூவுமில்லை’ ‘நான்கல்லது உணாவுமில்லை’ நான்கல்லது குடியுமில்லை’  என்னும் தொடர்களெல்லாம் பாட்டின்  இறுதி வரியான ‘கல்லே பரவின் ; அல்லது……கடவுளும் இலவே’ என்பதோடு முடிதல் வேண்டும். எனவே ‘நான்கு’ என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையைக் குறிக்காது ‘நாலு பேர் புகழ வாழ்! என்பதுபோல உலக வழக்காகி நின்றது. இல்லையெனின் பூ நான்கல்லது பிற பூக்கள் இலலையென்பதாகிவிடும்
    • இனி, ‘அயிலுதல்’’ என்ற  வினை, எடுத்து உண்பதையே குறிக்கும்’ என்னும் கட்டுரையாளர் கருத்து “வேறுவினைப் பொதுச்சொல் (தொல்.சொல் 46) என்னும் தொல்காப்பிய விதிக்கு முரணானது.
    • ‘தெவிட்டிய’  என்னும் வழக்கு இலக்கிய வழக்காகாது. ஆதலின் ‘உவட்டுதல்’ என்றிருந்தால் நன்று. ‘உவட்டாமல் இனிப்பதுவே’ என்பது திருவருட்பா!
    • ‘கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்” என்னும் ஆலத்தூரார் பாடல் வரியில் பயின்றுள்ள ஆர்ந்த பாணர் என்பது கொழுஞ்சோறு உண்டதால் வயிறு நிறைந்த பாணர் என்பதே சரியாக இருக்க முடியும்.’ ‘பெய் புன்கம்’ என்பது வினைத்தொகை. ‘பால் பெய் ஆர்ந்த’ எனத் தொடர் அமையாது. ஆர்தல் – நிறைதல். பிணித்தல் ‘நீராரும் கடல் உடுத்த’ ‘ஆர்த்த பிறவி துயர்கெட’ என்பன காண்க.
    • ‘நான்கு உணவு’ என வராது. ‘நான்கையும் உணவுப் பொருளாகக் கொண்டனர்’ என்பதே நேரிது.

    சுட்டப்பட்டிருக்கும் மதிப்பீட்டுப் பகுதிகள்  கட்டுரைப் பகுதிக்கான கூடுதல் விளக்கங்களே தவிர குறையெனக் கருதுதல் வேண்டா. கட்டுரைப் பொருள் தேர்விலும், தரவு மற்றும் சான்றுகளைத் தொகுத்தலிலும் மொழிநடையிலும் இக்கட்டுரை சிறந்திருக்கிறது. ஆய்வாளரைப் பாராட்டுகிறோம்.

    Share
  • கல்லூரிப் பொதுத்தமிழ்ப் பாடத்தைக் கற்கவும் கற்பிக்கவும் கணினிப் பயன்பாடு

    கல்லூரிப் பொதுத்தமிழ்ப் பாடத்தைக் கற்கவும் கற்பிக்கவும் கணினிப் பயன்பாடு

    Dr. ச. கண்மணி கணேசன் (ப.நி.)
    முன்னாள் முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர்
    ஸ்ரீகாளிஸ்வரி கல்லூரி, சிவகாசி. 626189, இந்தியா.
    kanmanitamilskc@gmail.com

    அறிமுகம் 

    பள்ளியிறுதித் தேர்வு முடித்துக் கல்லூரிக்கு வரும் மாணவர்  கற்றுக்  கொள்ள வேண்டிய பொதுத்தமிழைக் கணினி மூலம் எவ்வாறு கற்கலாம்; கற்பிக்கலாம் என்பதை அலசிப் பார்ப்பதே  இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். எழுதுவதற்கு மட்டுமே முதன்மை கொடுக்கும் போக்கு கல்லூரிக் கல்வியில் பல்லாண்டு காலமாக நிலைத்திருப்பதால்; தமிழ்க் கல்வியின் தரத்தைக் காப்பாற்ற வேண்டிய அவசரத்தேவை உள்ளது.

    கல்லூரியில் தமிழ் கற்பித்த அனுபவம் இக்கட்டுரையின் பரப்பும் எல்லையுமாக அமைய; தன்னாட்சியில் பாடத்திட்டம் தீட்டிய பயிற்சி சிக்கலுக்குத் தீர்வு  காண முனைகிறது. காரணகாரியத் தொடர்புடன் விளக்கும் மரபுவழிப்பட்ட ஆய்வாக அமைந்து; சிக்கலைக் கணினிப் பயன்பாட்டால்  தீர்க்கமுடியும் என்ற நம்பிக்கையை  அளிக்கிறது.

    கற்றல் கற்பித்தலுக்கு முன்னும் பின்னும்

    கற்பிக்கும் உத்திகள் பாடத்திட்டத்துடன் தொடர்புடையன. மாணவர் கற்ற பிறகு சோதனை செய்வது ஆசிரியப் பணியின் அடுத்த பொறுப்பு. கற்றல் கற்பித்தல் ஒருபுறம் பாடத்திட்டத்தில் காலூன்றி; மறுபுறம் தேர்வுமுறையை எட்டிப் பார்க்கும். அதனால் தான் பல்கலைக்கழக நதிநல்கைக் குழுவின் தேசீயத் தரநிர்ணய மதிப்பீட்டுக் குழுமம் (National Assessment and Accreditation Council) கல்வி நிறுவனங்களின் தகுதியை மதிப்பிடப் பாடத்தன்மைகளை (curricular aspects- 1st criterion) முதல் கூறாகவும்; கற்றல் கற்பித்தல் மதிப்பீடு செய்தலை (teaching learning and evaluation) அடுத்த கூறாகவும் வரையறுக்கிறது. எனவே இக்கட்டுரை பாடத் திட்டத்திலிருந்து தொடங்குகிறது.

    மொழியும் மொழிக்கல்வியும்

    மொழி என்னும் கருத்துப் பரிமாற்றத்திற்குரிய கருவி; பேசும் வரை மட்டுமே உயிர்த்திருக்கும். அன்றாட வாழ்வில் பேசாத மொழி காலப் போக்கில் அழிந்துவிடும். எனவே  மொழிக்கல்வி; எழுதக் கொடுக்கும் முக்கியத்துவத்தை வாய்த்திறனுக்கும் கொடுத்தல் நலம். மொழியின் அடிப்படை அலகு ஒலி. மொழிக் கல்வியிலும் இந்த அலகு சிறப்பிடம் பெறவேண்டும். பள்ளிக்கல்வியில் வாய்மொழிப்  பயிற்சியும் தேர்வும்  பாலர் பள்ளியில் மட்டுமே உள்ளன.

    இன்றைய சிக்கல்    

    பெரும்பாலான மாணவர் வாயாரத் தமிழ் வாசிக்கத் தடுமாறுகின்றனர். தட்டுத்தடுமாறி வாசிப்பவரின் தமிழில் /ல்,ள்,ழ்/,  /ர்,ற்/, /ன்,ண்/ ஆகியவற்றின் ஒலிப்பில் வேறுபாடு இல்லை. மேற்சுட்டிய ஒலிகள் பொருள் வேறுபாட்டிற்கு உரிய அடிப்படைக் காரணிகள். அவற்றை மாற்றி ஒலிப்பதும், எழுதுவதும் பெரும்பிழை ஆகும். ஒற்று மிகும் இடங்களை ஒலிக்கும்போது கொடுக்க வேண்டிய அழுத்தம் இன்றியமையாதது. நிறுத்தி வாசிக்க வேண்டிய இடம் எது? சேர்த்து வாசிக்க வேண்டிய இடம் எது? என்னும் வேறுபாடும், விளைவும் பற்றிய புரிதல் தேவை. இயந்திரத்தன்மையுடன் ஒரே சீராக ஏற்ற இறக்கங்களின்றி வாசிப்பதால்  பொருள் தெளிவுறாது. இந்நடைமுறைப்  பிரச்சினைகளைக்  கருத்தில் கொண்டு பாடத்திட்டம் அமைய வேண்டும்.

    பட்டப்படிப்பில் பொதுத்தமிழுக்குக்  கிடைக்கும் நேரம்

    ஒவ்வொரு பட்டப் படிப்பிற்கும்; முதல் நான்கு பருவங்களில்  (semesters) பொதுத்தமிழுக்கென ஒதுக்கப்படும்  (6×15=90)× 4= 360 மணி நேரத்தில் செய்யக்கூடியதை மட்டுமே நாம்  திட்டமிட இயலும். இந்தக் கால அளவில் மாற்றம் நிகழ வழியில்லை. ஏனெனில் இது பல்கலைக்கழக நதி நல்கைக் குழுவின் அங்கீகரிக்கப்பட்ட திட்டவரைவில் இடம்பெறும் பரிந்துரை ஆகும். ஒரு பருவத்திற்கு 90மணி நேரம் வீதம் நான்கு பருவங்களில் நடக்கும்   பொதுத்தமிழ் வகுப்புகள் இலக்கியம், இலக்கணம், இலக்கியவரலாறு ஆகிய பாடங்களை மட்டுமே இன்றுவரை கற்றுத்தருகின்றன. இவற்றுடன் வாய் விட்டுத் தமிழை வாசித்தலும் அதை மதிப்பீடு செய்வதும் சேர்த்துக் கொள்ள வேண்டியவை ஆகின்றன.

    தமிழைத் தாய்மொழியாகப் பெறாத மாணவர்களுக்கும், பள்ளியில் தமிழ் பயிலாத மாணவர்களுக்கும் அடிப்படைத் தமிழ் என்ற பெயரில் நடத்தும் பாடங்களுடனும் இதே பயிற்சியைச் சேர்ப்பதில் முட்டுப்பாடு ஏதுமில்லை. அவர்களுக்கு ஒரு வாரத்தில் இரண்டு மணி நேரம் என ஒரு பருவத்திற்கு 30மணி நேரம்; ஆக நான்கு பருவங்களில் (30×4=) 120மணி நேரம் தமிழ் வகுப்புகள் நடக்கும்.

    தமிழ்வகுப்பில் கணினிப் பயன்பாடு

    தொற்று நச்சில் காரணமாக உள்ளிருக்கும் இக்காலம் இதுநாள் வரை இருந்த பல நடைமுறைகளைக்  காலாவதி ஆக்கி விட்டது. பள்ளிக்   குழந்தைகளும்  தமது பாடங்களைக் கணினி மூலம் கற்கின்றனர். கல்வியாண்டின் ஒவ்வொரு பருவத் தொடக்கத்திலும் வகுப்பாசிரியர் தாம் எடுக்கவிருக்கும் பாடங்களைக்  காலஅட்டவணைக்கு  உட்படுத்தித் தலைமையிடத்தில் கணினி உபகரணங்களாகச் (notes of lesson) சமர்ப்பித்து விட வேண்டும். கல்லூரிப் பாடங்கள் தமிழ் உச்சரிப்புக்கு முதலிடம் கொடுத்து குறுந்தட்டுக்களாகவோ;  அது போன்ற வேறு பிற உபகரணங்களாகவோ ஒலிப்பதிவு செய்யப்பட்டு பருவத்தின் தொடக்கத்திலேயே மாணவர்க்கு வழங்கப்பட வேண்டும். மாணவர் அன்றாடம் அதைத் திரும்பத்திரும்ப வீட்டில் கேட்டு உடன்சேர்ந்து வாய் விட்டுப் பயில்வது அவசியம். அப்பதிவுகள் சரியான உச்சரிப்பில் அமைய வேண்டும் என்பதே இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாறு செய்வதன் மூலம் வகுப்பில் மாணவர் தமிழ் வாசிக்கத் தாராளமாக நேரம் கிடைக்கும். அவர்கள் வாசிப்பதும் சொல்வதும் கணினி உதவியுடன் மதிப்பிடப்பட வேண்டும். மொழியியல் சோதனைச் சாலைகளில் ஒலிகளைச் சரிவர அடையாளம் காணும் கருவிகள் உள்ளன. எனவே கணினித் துணையுடன் மாணவர் சொல்வதை மதிப்பிட இயலும். தமிழ்வகுப்புகளில் அதற்குரிய உபகரணங்கள் இருக்க வேண்டும்.

    வாசிப்புப் பயிற்சிக்குரிய பாடம்

    அந்தந்தப் பருவத்திற்குரிய பாடங்களே வாசிப்பதற்கு உரியனவாய் அமைவது தான் வசதியாகவும் பொருத்தமாகவும் இருக்கும். இதன் மூலம் பாடத்தை ஆழமாகவும் அகலமாகவும் பயின்று கொள்வதுடன்; மொழி உச்சரிப்பும் சீராகும்.

    முதல்பருவத்தில் அடிப்படை அலகாகிய ஒலிகளுக்கும் அவற்றைத் தவறின்றி  உச்சரிப்பதற்கும் முதலிடம் தந்து சொற்களை வாசிக்கும் பயிற்சி அளிக்கலாம். அவ்வாறு சொற்பயிற்சி அளிக்கப் பாடப்பகுதியில் காணும்  தொடர்புடைய சொற்களின் குறைஒலி இணைகளைத் (minimal pairs) தொகுத்துப் பாடமாக்கலாம். எடுத்துக்காட்டாக பாடப்பகுதியில் ‘முல்லை’ என்ற சொல் இருப்பின்;

    முல்லை  கொல்லை     கல்லை   வல்லை     புல்லை   சொல்லை
    முள்ளை  கொள்ளை கள்ளை  வள்ளை   புள்ளை     சொள்ளை

    என்ற போக்கில் 100சொல் தொகுதிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். மேலே காட்டியிருப்பது ஒரு சொல் தொகுதி மட்டுமே.

    இரண்டாம்பருவம்  சொற்றொடர்கள்  வாசிக்கும் பயிற்சியாக அமைய வேண்டும். /க், ச், த், ப்/ ஒற்று மிகும் இடங்களுக்குத் தகுந்த அழுத்தம் கொடுக்கப் பழக்க வேண்டும். சான்றாக;

    எடுத்துக்கொடுத்தான்          எடுத்துச்சொன்னான்
    எடுத்துத்தைத்தான்          எடுத்துப் பார்த்தான்

    இதுபோல் 100தொடர்த் தொகுதிகள் பாடப்பகுதியுடன் தொடர்புடையனவாய் அமைக்க வேண்டும்.

    மூன்றாவது பருவத்தில் முழுமையான தொடர்களை வாசிக்கும் பயிற்சி தரவேண்டும் நிறுத்தற்குறிகளுடன்; பாடத்தோடு தொடர்புடைய   100வாக்கியங்கள்  உருவாக்கப்பட வேண்டும். அவற்றைச் சரிவர நிறுத்தி வாசிக்கக் கற்றுத் தர வேண்டும்.

    நான்காவது பருவத்தில் ஒட்டுமொத்தத் திறனைப் பாடல் வாசிப்பின் மூலமும், உரைநடை வாசிப்பின் மூலமும் மதிப்பீடு செய்ய வேண்டும்.

    அடிப்படைத்தமிழ் மாணவர்க்கு விளம்பரப்பலகைகள், பேருந்துத்  தடஅறிவிப்பு, செய்தித்தாள், சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள், பத்திரிகை வாசித்தல் எனப் புதிய கோணங்களில் தமிழ் கற்றுக் கொடுப்பதே நல்லது. அடிப்படையாகத் தெரிந்து கொள்ள வேண்டிய திருக்குறள், நாலடியார், மூதுரை, கொன்றை வேந்தன் போன்ற பாடல்களை நான்காம் பருவத்தில் பாடமாக வைக்கலாம்.

    அகமதிப்பீடும் புறமதிப்பீடும் (internal and external assessments)      

    மதிப்பீடுகளைப் பங்கீடு செய்வதில் தன்னாட்சி நிறுவனங்களுக்குச்  சுதந்திரம் உள்ளது. 50% அகமதிப்பீடும் 50% புறமதிப்பீடும் முறையே பேசும் தமிழுக்கும் எழுதும் தமிழுக்கும் ஒதுக்கலாம். அகமதிப்பீட்டுக்கென நடைபெறும் மூன்று சுழல் தேர்வுகளில் (cycle tests) பாடத்தின் ஆழமான அறிவைத் துல்லியமாகச் சோதித்தறியும் வினாடிவினா, தானாக வடிவமைக்கக் கூடிய பயிற்சிக்கட்டுரைகள், தமிழ் வாசிப்பு என மூன்றும் இடம்பெற வேண்டும். எப்போது வாய்மொழித்தேர்வு மதிப்பிடும் முறைகளில் ஒன்றாக  ஆக்கப்படுகிறதோ; அப்போது தான் வாய்மொழிப் பயிற்சிக்கு உரிய சிறப்பிடம் கிடைக்கும். வாசிப்புப் பயிற்சியின் அகமதிப்பீட்டைக் கணினியே மதிப்பிடவேண்டும். புறமதிப்பீட்டில் எழுத்துத் தேர்வை (written exam) மட்டும்  வைத்துக் கொள்ளலாம்.

    பள்ளிப் பாடப் புத்தகங்களில் ஒவ்வொரு பாடத்திற்கும் பின்னர் வாய்மொழிப் பயிற்சிகள் உள்ளன எனினும்; பள்ளியில் வாய்மொழிப் பயிற்சி முக்கியத்துவம் பெறவில்லை என்பது பள்ளியிலிருந்து வெளிவரும் மாணவர் மூலம் தெரிகிறது.

    முடிபும் பயனும்      

    செந்தமிழும் நாப்பழக்கம்’என்ற முதுமொழியின் படி வாய்மொழிப்பயிற்சிக்கும் தேர்வுக்கும் இடம் கொடுப்பது சிறந்தது. கற்றல் கற்பித்தல் மதிப்பிடுவதில் கணினிப் பயன்பாடு இடம்பெறும் போது; தமிழுக்கே உரிய சிறப்பு ஒலிகளை இறவாமல் பாதுகாக்க இயலும்.

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 26 (வேலன்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 26 (வேலன்)

    ச. கண்மணி கணேசன் (ப.நி.),
    முன்னாள் முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    அகஇலக்கியச் சிறுபாத்திர வரிசையில் முத்தாய்ப்பாக இடம் பெறுபவன் வேலன். அவன் கூறியதாகத் தலைவியும் தோழியும் தம்முள்ளும்;  தாயிடமும்  தலைவனிடமும் பேசுகின்றனர். தலைவன் தேர்ப்பாகனிடம் பேசும் போது அமையும் பின்புலத்திலும் வேலன் இடம் பெறுகிறான்.

    தலைவியும் தோழியும் நல்கும் சிறுபாத்திரத் தகுதி

    “வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்” (நற்.- 34)

    என்று தோழி பேசுங்கால் வேலன் வெறியாட்டின் போது அணங்காகிய முருகனிடம் வேண்டியமை பற்றிக் கூறுகிறாள். அதுபோல் வேலன் பொதுவாகச் சொல்லும் காரணம் பற்றியும் தலைவனிடம் பேசுகிறாள் (நற்.- 273, 322; குறு.- 111; ஐங்.- 246).

    வெறியாட்டு நிகழ்ந்த நாளின் நள்ளிரவில் பிரிந்து சென்ற தலைவன் மீண்டு வந்து தலைவியுடன் கூட; நோய் நீங்கிய தலைவி;

    “ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே” (அகம்.- 22)

    சிரிக்கிறாள். அயலானாகிய வேலனின் பாட்டிற்கும் இசைக்கருவிகளின் தாளத்திற்கும் ஏற்பத் தன்னிலை இழந்து தான் ஆடியதை எண்ணி நகைதோன்றத் தோழியிடம் எடுத்துக் கூறுகிறாள். தலைவி கூறும் வேலனின் செயலும் பேச்சும் பிற பாடல்களிலும் உள்ளன (குறு.- 360).

    “அறியா வேலன் வெறி எனக் கூறும்” (ஐங்.- 243)

    என்று தோழி தாயிடம் கூறுவதாலும் வேலன் சிறுபாத்திரத்தகுதி பெறுகிறான். வேலன் வெறியாட்டை அடியொட்டி அமைந்துள்ள வெறிப்பத்துப்  பாடல்களில் தோழி வெறி விலக்கி அறத்தொடு நிற்கும் போதெல்லாம்    வேலன் இடம் பெறுகிறான்.  (ஐங்.- 241, 244, 249).

    தலைவன் தேர்ப்பாகனிடம்; தன் மனைவி தோழியோடு பேசக்கூடியது பற்றி உரையாடும் போது; வேலன் வெறிக்களத்தில் பூக்கள் சிதறிக் கிடப்பது போன்ற மணம் மிகுந்த மழைக்காலத்துக் காடு பின்புலமாக வருணிக்கப்படுகிறது (அகம்.- 114).

    வேலனின் சிறப்பு

    “முதுவாய் வேலன்” (நற்.- 282; அகம்.- 388);

    “ஊர்முது வேலன்” (ஐங்.- 245)

    என்றெல்லாம்; அடைமொழிகளுடன் அழைக்கப்படுவது வேலனின் பாத்திரப்படைப்பைத் தெளிவாக்குகிறது. காலங்காலமாக அவன் முருகனுக்கு வெறி அயரும் தகுதி உடையவன் மட்டுமல்லன்; கழங்கு உருட்டிக்; கட்டுவிச்சியின் குறியாகிய  ‘தலைவியின் நோய் முருகன் அணங்கியதால் நேர்ந்தது’ என்பதை முடிபாகக் கூறுபவன். அதனால்; ‘முது’, ‘முதுவாய்’ என்னும் அடைமொழிகளுக்கு உரியவன் ஆகிறான்.

    “மெய்ம்மலி கழங்கின் வேலன்” (நற்.- 268)

    என அவன் கழங்கு மூலம் நிறுவிய  முருகணங்கு பற்றிப் பிற பாடல்களும் கூறுகின்றன (நற்.- 282; ஐங்.- 245, 248).

    வெறியாட்டின் வருணனை

    மலைப்புறத்துச் சிறுகுடியின் மன்றத்து வேங்கைமரம் பொன் வண்ணப் பூக்களை உதிர்த்திருக்கும் முற்றத்தில் விழா அயரும் குறவர் குடியின் மூத்த பெண்டிர் சேர்ந்து குரவையாடிய இடம் போன்று; வெறியாட்டிற்குரிய களம் மிகுந்த பூப்பலியால் பொலிந்து தோன்றும்   எனத் தோழி தலைவியிடம் பேசுபவள் போலத் தலைவனிடம் பேசி; உடன் திருமண ஏற்பாடு செய்யத் தூண்டுகிறாள் (அகம்.- 232).

    வேலன் வெறிக்களத்தில் மிகுந்த பூக்கள் சிதறிக் கிடப்பது உவமையிலும் எடுத்துரைக்கப்படுகிறது (அகம்.- 182).

    இசைக்கருவிகள் அனைத்தும் சேர்ந்து ஒத்த இசையெழுப்ப; அவற்றுடன் இயையும்படி முருகப்பெருமானைப்  புகழும் பாடலைப் பாடும் வேலன் வெண்போழ்கடம்பைச் சூடிக்கொண்டு; கைகளைப் பொருத்தமாக வீசி ஆட அகன்ற பந்தல் இடப்பட்டு இருந்தது (அகம்.- 98). மறியறுத்த குருதியளைந்து செந்தினை படைக்கப்பட்டது (அகம்.- 22). அத்துடன் செந்நெல் வெண்பொரியும் படைத்தனர் (குறு.- 53). முருகனுக்குரிய படிமமும் செய்து வைத்து வெறி ஆடியமை;

    “கழங்கு மெய்ப்படுத்துக் கன்னம் தூக்கி” (ஐங்.- 245)

    என்ற தோழியின் வருணிப்பில் இடம் பெறுகிறது. உரையாசிரியர் கன்னம் என்பதைப் படிமம் என்கிறார்.

    உயிர்ப்பலித் தடுப்பும் வாதமும் 

    வேலனுக்கு உரிய வெறியாட்டுக் களத்தை அழகுபடுத்தி; முருகனைப் போற்றிப் பாடிப்; படையல்களும்  அறுப்பதற்குரிய ஆடும்  தயாராக இருக்க;

    “… … … பல்பிரப்பு இரீஇ
    அறியா வேலன் தரீஇ அன்னை
    வெறியயர் வியன்களம் பொலிய ஏத்தி
    மறி உயிர் வழங்கா அளவை” (அகம்.- 242)

    விரைந்து இவளை மணந்து கொள் என்று தலைவனிடம் தோழி கூறும் போது; ஆட்டைப் பலியிடுவதன்  முன்னர் செயல்படுவாயாக என்று  தூண்டுகிறாள்.

    அன்னை வெறியாட்டு நிகழ்த்த மிகுந்த பொருட்செலவு செய்தாள். சிறுமறியை முருகனுக்குப் பலியிடத்  தயாராக வைத்திருந்தாள்.

    “அன்னையும் பொருள் உகுத்து அலமரும் மென்முறிச்
    சிறுகுளகு அருந்து தாய்முலை பெறாஅ
    மறி கொலைப்படுத்தல் வேண்டி வெறிபுரி
    ஏதில் வேலன் கோதை துயல்வரத்
    தூங்கும் ஆயின் அதூஉம் நாணுவல்” (அகம்.- 292)

    என்று தலைவி பகுத்தறிவுவாதி போலப் பேசுகிறாள். வெட்டிய ஆட்டை எடுத்துச் செல்லப் போகிறவன் வேலனே என்பது அவளது பதைப்பில் தெரிகிறது. தன்னுடைய  களவொழுக்கம் பற்றி அறியாத அயலவனாகிய வேலன் ஒரு ஆட்டுக்குட்டிக்காக அதைத் தாயிடமிருந்து பிரித்துக் கொல்ல; தன் கழுத்தில் கோதை தொங்க ஆடிப் பாடி; ‘முருகு அணங்கினள்’ என்று சொல்லப்போவதை எண்ணி வெட்கப்படுவதாகக் கூறுவது நோக்கத்தக்கது.

    வெறியாட்டில் பங்கேற்கும் தலைவியின் நிலை

    மேற்சுட்டிய இசையும் தாளமும் பாடலும் ஒருங்கு ஒலிக்க; பூக்களும் பிற பலிகளும் படையலாக இருக்கத்; தனக்கே உரிய மாலையோடும் வேகத்தோடும் வேலன் ஆடத்; தன்வசமிழந்து; பொறி அமைந்த பொம்மை முடுக்கப்பட்டது போலத் தானும் ஆடி நிற்க வேண்டி வரும் என்று அச்சத்தோடு தலைவி வெறியாடலை எதிர்நோக்குவது பற்றித் தோழியிடம் கூறுகிறாள். தலைவி மட்டுமின்றிப் பிற பெண்களும் அந்த இசையால் தன்னிலை அழிந்தனர் என்பதை;

    “…………………………………………..மயங்கிய
    மையல் பெண்டிற்கு நொவ்வலாக
    ஆடிய” (அகம்.- 98)

    என்னும் அடிகள் உணர்த்துகின்றன.

    வேலன் வெறியாடுங்கால் தாமும் கட்டுப்படுத்த இயலாமல் ஆடியது பற்றிய தலைவி கூற்று இக்கட்டுரையின் முன்னரும் உள்ளது (அகம்.- 22).

    முடிவுரை

    வேலன் கூறியதாகத் தலைவியும் தோழியும் தம்முள்ளும்;  தாயிடமும்  தலைவனிடமும் பேசுகின்றனர்; தலைவன் தேர்ப்பாகனிடம் பேசுகிறான். காலங்காலமாக வேலன் முருகனுக்கு வெறி அயரும் தகுதி உடையவன். கழங்கு உருட்டுவதன் மூலம்; கட்டுவிச்சியின் குறியை முடிபாகக் கூறுபவன் அதனால்; ‘முது’, ‘முதுவாய்’ என்னும் அடைமொழிகளுக்கு உரியவன் ஆகிறான்.

    வெறியாட்டிற்குரிய களம் மிகுந்த பூப்பலியால் பொலிந்து தோன்றியது. இசைக்கருவிகள் எல்லாமாகச் சேர்ந்து ஒத்த இசையெழுப்ப; அவற்றுடன் இயையும்படி முருகப்பெருமானைப் புகழும் பாடலைப் பாடும் வேலன் கடம்பைச் சூடிக்கொண்டு; கைகளைப் பொருத்தமாக வீசி ஆட; அகன்ற பந்தல் இடப்பட்டு இருந்தது. மறியறுத்த குருதியுடன் அளைந்து செந்தினை படைக்கப்பட்டது. அத்துடன் செந்நெல் வெண்பொரியும் படைத்தனர்.  முருகனுக்குரிய படிமமும் செய்து வைத்து வெறி ஆடினர். உயிர்ப்பலித் தடுப்பில் ஈடுபடுபவளாகத் தோழி  திகழ்கிறாள். வேலன் ஒரு ஆட்டுக்குட்டிக்காக; அதைத் தாயிடமிருந்து பிரித்துத்; தன் கழுத்தில் கோதை தொங்க ஆடிப் பாடி; ‘முருகு அணங்கினள்’ என்று சொல்லப்போவதை எண்ணி வெட்கப்படுகிறாள் தலைவி. பொறி அமைந்த பொம்மை முடுக்கப்பட்டது போலத் தலைவியும் வேலனோடு ஆடினாள். களத்திலிருந்த பிற பெண்களும் ஆடினர்.


    பின்னுரை

    2.1.2010 முதல் 11.1.2010 வரை பத்து நாட்கள் சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் தமிழ்த்துறை; சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதி நல்கையோடு ‘பண்டை இலக்கியப் பாத்திரங்கள்’ என்ற தலைப்பில்  மாணவர்க்கு ஒரு பயிற்சிப் பட்டறை நடத்தியது. இந்தத் தலைப்பும் அதற்குரிய திட்ட வரைவும் நல்கிய கோணம் அப்போதைய நிறுவன ஆய்வாளர்களை மிகவும் ஈர்த்தது. அதில் என் பங்காக ‘அகஇலக்கியச் சிறுபாத்திரங்கள்’ என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்தினேன். ஒரு மணி நேரம் நான் ஆற்றிய உரைக்காகக் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள்; அதாவது கருத்தரங்கிற்கு அனுமதி கிடைத்த நாள் முதல் அது நடத்தப்பட்ட நாள் வரை; நேரம் கிடைக்கும் போதெல்லாம் அன்றாடம் அகஇலக்கியங்களைப் படித்துச் சேர்த்த பட்டியலில் பதின்மூன்று சிறுபாத்திரங்கள் இருந்தன. ஓய்வு பெற்ற பின்னர் அவ்வுரைச் செய்திகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பதிப்பிக்க  நான் எடுத்த மூன்று முயற்சிகள் தோற்றன.

    எட்டு மாத காலம்  அகஇலக்கியத்தைப் பார்வையிட்டு உழவனும் குயவனும்  ஒரே ஒரு பாடலில் தான் சிறுபாத்திரத் தகுதி பெறுகின்றனர் என்றும்; கூற்று நிகழ்த்தும் தகுதி உடைய பார்ப்பான் அகத்தொகை நூல்களில் பேசவே இல்லை என்றும்; கூற்று நிகழ்த்தும் தகுதி பெறாத பாகன்  ஒரு பாடலில் நேரடியாகக் கூற்று நிகழ்த்துகிறான் என்றும்; நான் சொல்ல வந்ததை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் முன்னிலையாரும்  சில மாதங்களாவது அகஇலக்கியமே குறியாகப் பயில வேண்டும் அல்லவா?! அதற்கு வழியில்லாமல் போனதால் தான் இதைத் தொடர் கட்டுரைகளாக எழுத முடிவு செய்தேன்.

    வலை உலகில் நுழைந்த பிறகு http://tamilconcordance.in/TABLE-sang.html  தளம் பற்றிய அறிமுகம் கிடைத்ததால் நான் சேகரித்திருந்த தரவுகளைச் சரிபார்க்க முடிந்ததுடன் மட்டுமன்றி; அப்பட்டியல் பதின்மூன்றிலிருந்து இருபத்தாறாக நீண்டது. இதுவே முடிபு; இதற்கு மேல் இல்லை என்று சொல்ல மாட்டேன். அதுகாறும் தெரிந்து கொள்ளாத புதுச்செய்திகள் பலவற்றைத் தெரிந்து கொள்ள முடிந்தது. அத்தளத்திற்கு நன்றி.

    விடுபட்ட முரண்பட்ட கருத்துகளும் உள்ளன. பாகனுக்குப் பேசும் வாய்ப்பைத் தொல்காப்பியம் கொடுக்கவில்லை. ஆனால் பாகன் கூற்றில் அமைந்த பாடல் ஒன்று நற்றிணையில் உள்ளது (பா.- 121). தொல்காப்பியம் ஒரு சாராரின் கொள்கையே அன்றி அது ஒருமித்த விதிகளைச் சொல்லவில்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

    உரையாசிரியர் பொ.வே.சோமசுந்தரனார் அகவன்மகளைக் கட்டுவிச்சி என்று குறிப்பிடுவது தவறு. முதுவாய்ப் பெண்டு மட்டுமே கட்டுவிச்சி ஆவாள். சில ஆண்டுகள் கழித்து மீண்டும் அகஇலக்கியத்தைப் படித்துப் பார்த்தால் வேறு சில புதுக்கருத்துகள் தோன்றலாம். பதிப்பித்து உதவிய வல்லமை ஆசிரியர்க்கும் நிர்வாகக்  குழுவினர்க்கும் நன்றி.

    முற்றும்

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 25 (ஊர்ப் பெண்டிர்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 25 (ஊர்ப் பெண்டிர்)

    ச. கண்மணி கணேசன் (ப.நி.),
    முன்னாள் முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    பலதரப்பட்ட பெண்களைப் பற்றியதாக அமையும் இக்கட்டுரையுள்  நல்கூர்பெண்டிர், ஆளில் பெண்டிர், அரியல் பெண்டிர்,  சீறூர்ப்பெண்டிர், பேஎய் பெண்டிர், அயலில் பெண்டிர் ஆகிய அனைவரும் ஊர்ப்பெண்டிர் என்னும் தொகைப் பாத்திரத்துள் அடங்கி விடுகின்றனர்.

    ஊர்ப்பெண்டிர் பண்புகள் 

    தோழி, தாய், தலைவி ஆகியோரின் பேச்சில் ஊர்ப்பெண்டிர் வசைபாடப் பெறுகின்றனர்.

    “கொடிது அறிபெண்டிர்” (அகம்.- 20);

    “வெவ்வாய்ப் பெண்டிர்” (அகம்.- 50, 250; குறுந்.- 373; நற்.- 133);

    “அலர்வாய் அயலில் பெண்டிர்” (நற்.- 378);

    “நிரைய பெண்டிர்” (அகம்.- 95) எனவும்;

    “தீவாய் … … …  பெண்டிர்” (அகம்.- 203);

    என்ற சுட்டு முறைகளில் ஊர்ப்பெண்டிரின் பண்புகள் ஒரே தன்மையுடன்  பேசப்படுகின்றன. கொடுமையான செய்தியைப் பேசுபவர் என்றும்; துன்புறுத்தும் சொற்களையே பேசத் தெரிந்தவர் என்றும்; அலர் தூற்றுபவர் என்றும்; தீமை பயக்கும் பழியினைச் சுமத்துபவர் என்றும்; இழிந்த முறையில் புறம்பேசக்  கூடியவர் என்றும் ஒருசேரக் குறைகூறப் பெறுகின்றனர்.

    ஊர்ப்பெண்டிரின் சிறுபாத்திரத் தகுதி  

    ஊர்ப்பெண்டிர் பழி சுமத்துதல், கமுக்கமாக ஜாடை பேசுதல், ஆரவாரமாக அலர் தூற்றுதல் ஆகிய செயல்கள் உடையவராய்க் காட்சிப் படுத்தப்படுகின்றனர்.

    “அலர்வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றிப்
    புரையில் தீமொழி பயிற்றிய உரையெடுத்து
    ஆனாக் கௌவைத்தாகத்
    தான் என் இழந்தது இவ் அழுங்கல் ஊரே” (நற்.- 36)

    என்பது தலைவியின் கேள்வி.  ‘தாழ்ச்சி உடைய தீய சொற்களை எப்போதும் பேசிப் பழி சுமத்தும் ஊர்ப்பெண்கள் கமுக்கமாக ஜாடை பேசுவதுடன்; ஆரவாரமாக வாய்விட்டுத் தூற்றும் அளவிற்கு இந்த ஊர் எதை இழந்து விட்டது?!’ என்ற தலைவியின் வியப்புக் கலந்த வினாவில் ஊர்ப்பெண்டிர் என்ன பேசினார்கள்; எப்படிப் பேசினார்கள் என அனைத்தும் இடம்பெற்று அவர்க்குச் சிறுபாத்திரத் தகுதியைக்  கொடுக்கிறது. பெண்டிர் தூற்றும் அலர் பற்றிப் பேசும் பிற பாடல்களும் உள (அகம்.- 70; நற்.- 143)

    தலைவி கூற்றில் ஊர்ப்பெண்டிர்

    குறிஞ்சித்தலைவி ஊர்ப்பெண்டிரின் அலர்தூற்றும்  வாயை அடைக்க இயலாது என்பதைக்;

    “குறிஞ்சி நல் ஊர்ப்பெண்டிர்
    இன்னும் ஓவார் என்திறத்து அலரே” (நற்.- 116)

    எனத் தோழியிடம் குறைப்பட்டுக் கொள்கிறாள்.

    தாய் கூற்றில் ஊர்ப்பெண்டிர்

    தன் மகள் தலைவடன் போன பின்னர் நடந்ததை எல்லாம் எண்ணிப் பார்த்துப் பேசும் தாய்;

    “அலர்வினை மேவல் அம்பல் பெண்டிர்” (அகம்.- 203)

    பேச்சையும் சேர்த்தே நினைத்துப் பேசுகிறாள்.

    தோழி கூற்றில் ஊர்ப்பெண்டிர்

    பகற்குறி வந்த தலைவனிடம் ஏதம் கூறி; இரவுக்குறியும் வசதிப்படாது என உணர்த்தும் தோழி;

    “…………………… ……… துஞ்சாக் கண்ணர்
    பெண்டிரும் உடைத்து இவ்அம்பல் ஊரே” (நற்.- 223)

    என்கிறாள்.

    தலைவன் கூற்றில் ஊர்ப்பெண்டிர்  

    தான் மையல் கொண்ட ஆயர் குலப்பெண் மோர் விற்றுக் கொண்டு வரும் போது; அவளிடம் மோர் வாங்கும் ஊர்ப்பெண்டிர் செயலையும் பேச்சையும்  விரிவாக எடுத்து உரைக்கிறான் தலைவன். அவளது அழகு யார்க்கும் அணங்காகித் துன்புறுத்தக் கூடியது என்று எண்ணியதால் வீட்டின் வாயிலை அடைத்துக் கொண்டு நின்று; தம் கணவர் காணாவண்ணம் அவளை விரைந்து அனுப்புவதே குறியாக ‘மாங்காய் நறுங்காடி கூட்டி உண்பேம்; நீ  உன் கிளையோடு சென்று சேர்வாயாக’ எனச் சொல்லி விலக்கியமையை நகை தோன்றக் கூறுகிறான் (கலி.- 109).

    பேய்ப் பெண்டிர்

    தொகையிலக்கியக் காலத்தில் ‘பேய்’ என்ற சொல்லின் பொருட்பரிமாணம்; இன்று வழங்கும் பொருளில் இருந்து மாறுபட்டது. பேஎய் என்று சுட்டப்பெறும் பெண்; தலைவி தனக்குத் தானே கூறிக் கொள்ளும் உவமையில் இடம் பெறுகிறாள். மகப்பேற்றின் போது  தலைவன் தன்னை விட்டு ஒதுங்கிப் புறத்தொழுக புனிறு நாறும் தன்னை விடுத்து; மணம் பொருந்திய பிற பெண்டிரை நாடிச் சென்ற அவனிடம்;

    “பேஎய் அனையம் யாம் சேய் பயந்தனமே” (ஐங்.- 70)

    என்கிறாள். இத்தலைவி பாசுபதநெறி சார்ந்தவள் எனலாம். இப்பாடலடியில் இடம் பெறும் ‘பேஎய்’ என்னும் சொல் எப்படிப்பட்ட பெண்ணைக் குறிக்கிறது என்பது நோக்கத்தக்கது.

    ‘பேஎய்ப் பெண்டிர்’ என்று பெயர் பெறுவோர் கணவனை இழந்த  பாசுபத சமயம் சார்ந்த பெண்டிர் ஆவர். இல்லற சுகம் நீத்து நீற்றுப்பூச்சுடன் எஞ்சிய வாழ்வைக் கழிக்கும் தன்மையால் தெய்வத்தன்மை பொருந்தியோர் என்னும் கருத்தில் பேய்ப்பெண்டிர் என்று பெயர் பெற்றமை தெரிகிறது.

    “பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும்
    காடு முன்னினனே கட்காமுறுநன்
    தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப்
    பாடுநர் கடும்பும் பையென்றனவே”  (புறம்.- 238).

    என்று வெளிமான் இறந்த போது அவனது மகளிர் தொடி கழித்தமையும் பேஎய் ஆயம் என்று பெயர் பெற்றமையும் ஒருங்கே பாடப்பட்டுள்ளது.

    சுடலைத் தீயே விளக்காகக் கணவனை இழந்து அழுத கண்ணீரால் தாம் பூசிய வெண்ணீறு அவிந்து விட அங்கிருந்த பெண்டிர் பேஎய்மகளிர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளனர் (புறம்.- 356).

    சுடுகாட்டுக்  காட்சியைப் பாடுங்கால்;  இறந்துபட்ட கணவனைத் தழுவி அழுத பெண்கள் விளரூன் தின்று கால்பெயர்த்து ஆடும் பாசுபதத்தாரைக் கண்டு வெருவி நீங்கியமை;

    “பேஎய் மகளிர் பிணந்தழூஉப் பற்றி……
    ஈமவிளக்கின் வெருவரப் பேரும் காடு” (புறம்.- 359)

    எனக் குறிப்பிடப் படுவதைக் காண்கிறோம்.

    புண்பட்டுக் குருதி சோர இறந்த தம் கணவரின் உடலைத் தீண்டிச் சிவந்த கைகளால் கூந்தலை அலைத்து அழுத பெண்களைப் பேஎய்ப் பெண்டிர் என்றே சுட்டுவது நோக்கத்தக்கது (புறம்.- 62)

    பாசுபதப் பெண்டிர் கணவனை இழந்த நிலையோடு; தன் நிலையை ஒப்பிட்டுப் பேசுகிறாள் தலைவி. ஏனெனில் இன்றும் கருவுயிர்த்த பெண்ணைப் பிறர் முன்னர் நடமாடவோ; உண்ணவோ;  பூச்சூடவோ அனுமதிக்க மாட்டார்கள். மீறினால் கண்பட்டு அப்பெண் நோயுறுவாள் என்று நம்புகின்றனர். அது போன்றே கருவுயிர்த்த பெண் கணவனுடன் தனித்திருப்பின் குழந்தைக்கு சீர் தைக்கும்; வயிற்றுப்போக்கு ஏற்படும் என்றும் நம்பிக்கை உள்ளது.

    தான் தனித்திருக்க; புறத்தொழுகும் கணவனின் நடவடிக்கையைத் தாங்க மாட்டாதவளாய்ப்; ‘பாசுபத நெறியில் கணவனை இழந்த பேஎய்ப் பெண் போல நானிருக்கிறேன்’ என்று அங்கலாய்க்கிறாள் தலைவி.

    பெண்டிரும் தொழிலும் 

    கணவனை இழந்த பெண்டிர் தாமே தொழில் செய்து வாழ்ந்தமை அகப்பாடல்களிலும் புறப்பாடல்களிலும் இடம்பெறுகிறது  (புறம்.- 125&326).

    “ஆளில் பெண்டிர் தாளின் செய்த
    நுணங்கு நுண் பனுவல் போலக்” (நற்.- 353)

    கணங்கொள் மாமழை காட்சி அளித்தமை உவமையில் விளக்கம் பெறுகிறது.

    தமது வறுமை காரணமாக சேவல்கள் கொத்திப் பிளந்து போட்ட பருத்திக்கொட்டைகளை உணவிற்காகச் சேர்த்து வைத்தமை; காட்டுவழியை வருணிக்கும் பின்புலத்தில் ‘நல்கூர் பெண்டிர்’ செய்கையாகப் புனையப்பட்டுள்ளது (அகம்.-129). பருத்தி விதையில் இருந்து எடுக்கப்படும் பாலுடன் இனிப்பு சேர்த்துக்கஞ்சி காய்ச்சும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது. அது மிகுந்த மருத்துவ குணம் கொண்டதென்ற கொள்கையும் உள்ளது.

    ஆனால் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் நற்றிணைக்கு எழுதிய உரையில்; நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரும் கரந்தைக் கவியரசு ரா.வேங்கடாசலம் பிள்ளையும் சேர்ந்து எழுதிய அகநானூற்று  உரையிலிருந்து மாறுபட்டு; நல்கூர் பெண்டிர் என்போர் ‘பெண் தன்மையில் குறையுடையோர்’ என்று பொருளுரைப்பது (நற்.- 90) ஏற்றுக் கொள்ளுமாப் போல இல்லை.

    சில சேரிகள் சேர்ந்தமையும் வாழ்விடமாகிய சீறூர்ப் பெண்டிரின் வாழ்க்கைநிலை பின்தங்கியதாகக் காணப்படுகின்றது. காட்டுவழி பற்றிய வருணனையில் சீறூர்ப்பெண்டிர் இடம்பெறுகின்றனர். அவர்கள் விருந்தயர்வது;

    “பல்கவர் மருப்பின் முதுமான் போக்கிச்
    சில் உணா தந்த சீறூர் பெண்டிர்” (அகம்.- 283)

    என்ற பாடலடிகளில் காட்டப்படுகிறது.  அவ்வுணவின் தன்மை பற்றிய அடைமொழி அவர்களது எளிய வாழ்வு முறையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. மான்களை விரட்டி விட்டுக் கொண்டுவந்த சிறிதளவு உணவு என்பது; மானுண்டு எஞ்சிய உணவு என்று விளக்கம் அளிக்கிறார் உரையாசிரியர்.

    கள்விற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த பெண்டிர் ‘அரியல் பெண்டிர்’ (அகம்.- 157) என்று சுட்டப்படுகின்றனர். அவர்கள் இடையில் சுமந்து வரும் விரிந்த பானையின் குவிந்த முனை சொரிந்த வடிகட்டிய கள்ளை அருந்தும்  பாலைநிலத்து மறவர் பற்றித் தலைவி பேசுகிறாள்.

    விலைநலப் பெண்டிர் பொருள் உடைய செல்வந்தர்பால் சேர்ந்து வளம் பெற்ற செய்தி உவமையாகச் சொல்லப்படுகிறது (புறம்.- 365).

    பெண்டிர் தகுதி

    புறப்பாடல்கள் பெண்டிர் தகுதி பற்றிய ஆவணங்களாக உள்ளன.

    கணவன் வினைநிமித்தம் அகன்று சென்றிருந்தாலும் மனைவி இரவலர்க்குப் பரிசில் வழங்கும் தகுதி பெற்று இருந்ததை கண்டீரக்கோன் நள்ளியின் மனையாள் செயல் மூலம் அறிகிறோம். நள்ளி தொலைதூரம் பிரிந்து போயிருந்தக்கால் பாணர்க்குப் பிடி யானைகளை அவள் பரிசளித்ததாகப் போற்றப்படுகிறாள்.

    “கிழவன் சேட்புலம் படரின் இழை அணிந்து
    புன்தலை மடப்பிடி பரிசிலாகப்
    பெண்டிரும் தம் பதம் கொடுக்கும் வண்புகழ்க்
    கண்டீரக்கோன்” (புறம்.- 151)

    என்று புகழும் புலவரின் நோக்கம் அந்த வேளாளனின் புகழ் பாடுவதே என்றாலும்; அவனது மனைவியின் தகுதிப்பாடு கூறி  இங்கே பெருமைப் படுத்தப்படுகிறான்.

    முதுகுடிப் பெண்டிர் தாம் வாழ்ந்த சமுதாயத்திற்குத் தேவையான வீரத்தைத் தம் மக்களுக்கு ஊட்டித் தியாகம் செய்யத் தயாராக இருந்தமை;

    “இன்ன விறலும் உள கொல் நமக்கு என
    மூதிற் பெண்டிர் கசிந்து அழ நாணிக்
    கூற்று” (புறம்.- 19)

    கண்ணோடியது என்னும் புனைந்துரை மூலம் தெரிகிறது. கணவன், சகோதரன், மகன் என உறவுகள் அனைவரையும் போரில் பறிகொடுத்தும்; தம் வாழ்வாதாரம் காக்க வீரமரணம் அடைந்ததையே பெருமையெனக் கருதிக் கண்ணீர் விட்ட காட்சிக்கு மூதில் பெண்டிர் ஆதாரமாக அமைந்துள்ளனர்.

    தலைவனின் தாயாகிய சீறூர் நல்கூர் பெண்டு

    கற்புக்கடம் பூண்டு; தன் பிறந்த வீட்டிலிருந்து காதலனுடன் செல்லும் தலைவிக்குத் தம் மனையில் சிலம்புகழி நோன்பு நிகழ்த்தும் பண்பாடு பெண்டிரிடம் இருந்தது. வறுமை வாய்ப்பட்டு இருப்பினும் தலைவனையும் தலைவியையும் இல்லறத்தில் இணைக்கும் செயலைப் பெண்டிர் தயக்கமின்றிச் செய்தனர். ஓர் பசுவை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டு; ஒரே ஒரு தூண் மட்டுமே நிற்கும் முற்றத்தை உடைய; நல்கூர் பெண்டிரின் ‘புல்வேய் குரம்பையில்’; தலைவனுடன் போன தன் மகளுக்குச் சிலம்புகழி நோன்பு நடக்குமே என நொந்து புலம்புகிறாள் செல்வக்குடியைச் சேர்ந்த தாய் (அகம்.- 369).

    முடிவுரை

    ஊர்ப்பெண்டிர் பழி சுமத்துதல், கமுக்கமாக ஜாடை பேசுதல், ஆரவாரமாக அலர் தூற்றுதல் ஆகிய செயல்கள் உடையவராய்ப்  பேசப்படுகின்றனர்; ஒருசேர வசைபாடப் பெறுகின்றனர்.

    கணவனை இழந்த  பாசுபத சமயம் சார்ந்த பெண்டிர் பேஎய்மகளிர் என்றே குறிப்பிடப்பட்டனர். ஆளில் பெண்டிர் நூற்புத் தொழில் செய்து வாழ்ந்தனர். நல்கூர் பெண்டிர் பருத்திக்கொட்டைகளை அன்றாட உணவிற்காகச் சேகரித்தனர். சீறூர்ப் பெண்டிரின் வாழ்க்கைநிலை பின்தங்கி இருந்தது. கள்விற்கும் தொழிலிலும் பெண்கள் ஈடுபட்டனர். விலைநலப் பெண்டிர் பொருளுடைய  செல்வந்தரிடம் சேர்ந்து வளம் பெற்றனர்.

    கணவன் வினைநிமித்தம் அகன்று சென்றிருந்தாலும் மனைவி இரவலர்க்குப் பரிசில் வழங்கும் தகுதி பெற்று இருந்தாள். முதுகுடிப் பெண்டிர் தாம் வாழ்ந்த சமுதாயத்திற்குத் தேவையான வீரத்தைத் தம் மக்களுக்கு ஊட்டித் தியாகம் செய்யத் தயாராக இருந்தனர்.

    வறுமை வாய்ப்பட்டு இருப்பினும் பண்பாடு காத்துத் தலைவனையும் தலைவியையும் இல்லறத்தில் இணைக்கும் செயலைப் பெண்டிர் தயக்கமின்றிச் செய்தனர்.

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 24 (முதுவாய்ப் பெண்டிர்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 24 (முதுவாய்ப் பெண்டிர்)

    ச. கண்மணி கணேசன் (ப.நி.),
    முன்னாள் முதல்வர்& தமிழ்த்துறைத் தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    ‘முதுவாய்’ என்னும் அடைத்தொடர்  தொகையிலக்கியத்தில் பல பெயர்களுக்கு முன்னர் பயின்று வருவதைக் காண்கிறோம். ‘முதுவாய் வேலன்’, ‘முதுவாய்க் குயவன்’, ‘முதுவாய்ப் பெண்டிர்’ என்றெல்லாம் வழங்கியுள்ளது. இக்கட்டுரை முதுவாய்ப் பெண்டிர் பற்றியதாக மட்டும் அமைகிறது.

    கட்டுவிச்சியின் வாழ்க்கை நிலை  

    முதுவாய்ப் பெண்டிர் என அழைக்கப்  படுபவர் கட்டுவிச்சிகள் ஆவர். இவர்களது தொழில் கட்டுப் பார்த்துக் குறி சொல்வதாகும்.  வாய்விட்டுக் கூறும் அத்தொழிலைப் பன்னெடுங் காலமாகச் செய்து  வந்தவர் ஆதலால்; அவர்கட்கு ‘முதுவாய்’ என்னும் அடைமொழி கொடுக்கப்பட்டது எனலாம். இத்தொழிலைப் பாரம்பரியமாகப் பெண்களே பார்த்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் கட்டுப் பார்க்கும் ஆண்களைத் தொகை இலக்கியத்துள் காண இயலவில்லை. அத்துடன் இவர்கட்குக் கொடுக்கப் பட்டிருக்கும் ‘முதுவாய்’ என்னும் அடைமொழியின் காரணம் இவர்கள் திணைமாந்தர் என்று சொல்லாமல் சொல்கிறதோ எனும் ஐயமும் எழுகிறது. ஏனெனில் இவ்அடைமொழி திணைமாந்தனாகிய வேலனுக்கும்   உரியதாகிறது. ஆநிரை கவரும் மறவர் சீறூரில் அவளது குடில் இருந்தது  எனப் பாடியிருப்பதால் அவள் திணைமாந்தருள் அடங்குகிறாள் (அகம்.- 63).

    ‘முதுமை வாய்த்தலை உடைய  பெண்டு’  என ந.மு.வேங்கடசாமி நாட்டாரும் கரந்தைக் கவியரசு ரா.வேங்கடாசலம் பிள்ளையும் உரை கூறியிருப்பது முற்றிலும் பொருத்தமற்றது (அகம்.- 63). அதே உரையாசிரியர்கள் அதே தொடர்க்கு ‘அறிவு வாய்த்தலை உடைய பெண்டிர்’ எனவும் கூறி உள்ளனர் (அகம்.- 22). ‘முதுமை வாய்ந்த கட்டுவிச்சி’ என்ற அவர்களது  உரையும் (அகம்.- 98) வயதான கட்டுவிச்சி என்று  பொருள்படுவதால் முழுமையாக ஏற்க இயலாதது ஆகிறது. ‘பேசி முதிர்ந்த வாய்’ என்ற விளக்கமும் தொடர்கிறது. மூன்று பாடல்களில் இடம்பெறும் ஒரே தொடருக்கு நான்கு பொருள்கள் சொல்லி இருப்பது தொடக்க காலத்துத் தெளிவற்ற நிலையைக் காட்டுகிறதே அன்றி வேறில்லை.

    முதுவாய்ப் பெண்டிரின் வாழ்வு நிலையைப் பற்றிய குறிப்பு அவர்களது  ஏழ்மை நிலையைக் காட்டுகிறது.

    “முதுவாய்ப் பெண்டின் செதுகால் குரம்பை” (அகம்.- 63)

    எனும் அடி வலியற்ற காலை உடைய குடிலே அவளுக்கு உரியதென்கிறது. அதனால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தனர் என்பதில் ஐயமில்லை.

    கட்டுப்பார்த்தல்

    கட்டுப் பார்க்கும் நிகழ்வைத் தொகையிலக்கியம்  காட்சிப்படுத்தி உள்ளது. சுளகில் நெல்லை எடுத்து வைத்து; யாருக்காகக் கட்டுப் பார்க்கிறார்களோ; அவரை முன்னர் நிறுத்தித்; தெய்வத்திற்குப் பலிப் பொருட்களைப் படைத்து வழிபட்டுப்; பின்னர் நான்கு நான்காக நெல்லை எண்ணி எடுத்து இறுதியில் எஞ்சிய நெல்மணிகள் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்றாக இருப்பின் முருகு அணங்கியதால் நேர்ந்த நோய் எனவும்; நான்காக இருப்பின் வேறு நோய் எனவும் குறித்துச்  சொல்வதே கட்டுப்பார்த்தல் என்கிறார் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (நற்.- 288).

    சிறுபாத்திரத் தகுதி

    கட்டுவிச்சி பாடல் காட்சியில் நேரடியாக இடம் பெறாத போதும் அவள் கட்டுப்பார்த்துக் கூறிய குறி பற்றித் தலைவியும்  தோழியும் பேசுகின்றனர் (நற்.- 288). முருகு அணங்கியதால் உண்டான நோய் என்று கட்டுவிச்சி கூறியதால்; அன்னை வெறியாட்டிற்கு ஏற்பாடு செய்வாள் என்ற எதிர்பார்ப்பினைச் சிறைப்புறத்து நிற்கும் தலைவன் காதுபடப் பேசுகிறாள் தோழி.

    வேலன் வெறியாட்டு முடிந்த நாளின் நள்ளிரவில் தலைவனைக் களவில் கூடி மகிழ்ந்த தலைவியின்  கூற்றில்; முதுவாய்ப் பெண்டிர்  குறி சொன்ன செய்தி இடம் பெற்றுள்ளது.

    “நெடுவேள் பேணத் தணிகுவள் இவள் என
    முதுவாய்ப் பெண்டிர் அதுவாய் கூற…
    முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்… …” (அகம்.- 22)

    என வேலன் வெறியாட்டிற்கு மூலமாக அமைந்து வழி வகுத்தது கட்டுவிச்சியின் குறி என்கிறாள் தலைவி.

    தலைவியின் வளை நெகிழ்ந்தவுடன் கட்டுவிச்சியிடம் குறி கேட்ட தாய்க்கு; முருகணங்கியதாக உரைத்த முதுவாய்ப் பெண்டு பற்றிய பாடலும் உள்ளது (அகம்.- 98).

    நையாண்டியும் நாடகமுரணும் 

    மேற்சுட்டிய பாடல்கள் எல்லாம் பண்டைத் தமிழகத்தில் நிலவிய நம்பிக்கையை அங்கதத்துடன் எடுத்துச்சொல்கின்றன. முதுவாய்ப் பெண்டு தலைவியின் பேச்சில் குறிப்பான கிண்டலுக்கு உரியவள் ஆகிறாள். அவள் சொல்லும் குறியின் மேல் நம்பிக்கை வைக்கும் தாயும் வேலன் வெறியாட்டிற்கு ஏற்பாடு செய்வதால்; வேலனுடன் சேர்த்தே குறிப்பாகக் கேலிக்குரியவள் ஆகிறாள். ஏனெனில் தலைவி தனது களவு  வெளிப்படா வண்ணம் மறைக்கும் திறம் பெற்றவளாக உள்ளாள். தாயின் நம்பிக்கை தலைவியின் நகைப்பொருள் ஆகிறது.

    கட்டுப் பார்த்து; முருகு அணங்கியது என்று நம்பி; வேலனை அழைத்து வெறியாடச் செய்து; வழிபாடு நிகழ்த்திய நாளின்  இரவில்  பிரிந்து சென்றிருந்த தலைவன் தலைவியைச் சந்திக்கின்றான். அவனோடு கூடி இன்புற்ற தலைவி நோய் நீங்கி மகிழ்கிறாள். நடந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்துச் சிரிக்கிறாள்.

    “இன்னுயிர் குழைய முயங்குதொறும் மெய்ம்மலிந்து
    நக்கனன் அல்லனோ யானே எய்த்த
    நோய்தணி காதலர் வர ஈண்டு
    ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே“ (அகம்.- 22)

    என்கிறாள். யாரோ ஒருவனாகிய வேலன் வெறியாட; அந்த ஆட்டத்திற்கு ஆட்பட்ட  தலைவி; தன் உயிர் குழையக் காதலனைத் தழுவி; உடல் பூரித்தமை பற்றிச் சொல்லும் போது; உண்மை தெரியாது கட்டுவிச்சி கூறிய குறி, வேலன் ஆடிய வெறி,  நம்பிய தாய் அனைவரும் அறியாமையின் உச்சத்தில் இருப்பது ஒரு நாடக முரண் போல அமைந்து இலக்கியச்சுவை பயக்கிறது. இது கவிதையே ஆயினும்; நாடகச்சுவை பொதுளிய பாடலாக அமைந்துள்ளது.

    அகவன்மகளும் முதுவாய்ப் பெண்டும்

    இத்தொடரில் முன்னர் அகவன்மகள் குறி சொல்வது பற்றிப் பார்த்தோம். முதுவாய்ப் பெண்டும் அகவன்மகளும் குறி சொல்லும் ஒரே தொழில் தான் செய்கின்றனர். ஆயினும் இருவரும் வெவ்வேறு திறத்தவர் என்பது கண்கூடு. ஏனெனில் அகவன்மகள் கையில் கோலுடன் காட்சியளிக்கிறாள். தலைவியின் முகம் பார்த்துப் பாடிக் கொண்டே குறி உரைக்கிறாள். ஆனால் முதுவாய்ப் பெண்டின் கையில் கோல் கிடையாது. அவள் பாடுவதாகவும் குறிப்பில்லை. தெய்வத்திற்குப் பலிப்பொருள் வைத்து வழிபட்டு; சுளகின் நெல்லை எண்ணிக் கணக்கிட்டுக் குறி உரைக்கிறாள். எனவே இருவரும் வெவ்வேறானவர்; தொழிலையும் மிஞ்சிய வேறுபாடு ஒன்று உள்ளது என்பதில் ஐயமில்லை. கட்டுவிச்சி என்ற பெயருக்கு உரியவள் முதுவாய்ப் பெண்டு மட்டுமே ஆவாள்.

    முடிவுரை

    கட்டுவிச்சி பாடல் காட்சியில் நேரடியாக இடம் பெறாத போதும் அவள் கட்டுப்பார்த்துக் கூறிய குறி பற்றித் தலைவியும் தோழியும் பேசுகின்றனர். முதுவாய்ப் பெண்டிரது குடில் மறவர் குடியிருப்பில்  இருந்தது. அவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த திணைமாந்தர் ஆவர். முதுவாய்ப் பெண்டு இடம் பெறும் பாடல்கள் பண்டைத் தமிழகத்தில் நிலவிய நம்பிக்கையை அங்கதத்துடன் எடுத்துச் சொல்கின்றன. முதுவாய்ப் பெண்டும் அகவன்மகளும் குறி சொல்லும் ஒரே தொழில் செய்யினும் இருவரின் நடைமுறையும் வெவ்வேறு ஆகக் காணப்படுகிறது. தொழிலையும் மிஞ்சிய வேறுபாடு ஒன்று இருந்தது எனத் தெரிகிறது. அதுவே அழுத்தமான சாதி வேறுபாட்டிற்கு  ஆதாரமாகி இருக்கலாம்.

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 23 (முது பெண்டிர்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 23 (முது பெண்டிர்)

    ச. கண்மணி கணேசன் (ப. நி.),
    முன்னாள் முதல்வர்& தமிழ்த்துறைத் தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    அகப்பாடல்களில் முதுசெம் பெண்டிர், முதுவாய்ப் பெண்டிர் என இருதிறத்துப் பெண்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களுள் முதுபெண்டிர் பற்றியதாக மட்டுமே இக்கட்டுரை அமைகிறது.

    இல்லறப் பெண்டிர்

    முதுபெண்டிர் செம்மை என்னும் அடைமொழி பெற்றுச் ‘செம்முது பெண்டிர்’ (நற்.- 288) எனவும்; ‘முதுசெம் பெண்டிர்’ (அகம்.- 86) எனவும் அழைக்கப்படுன்றனர். இது கற்பு நெறியில் வழுவாமல் நிற்பவர் என்னும் பொருள்படுகிறது. கற்பின் அடையாளம்  ஆகிய அருந்ததியைச் செம்மீன் என அழைப்பது போன்று; இங்கும் கற்பொழுக்கம் தொடர்பாகவே செம்மை எனும் அடைமொழி பயின்று வருகிறது.

    முதுபெண்டு ஆன தலைவி

    அகப்பாடல்களில் தலைவி தலைமைப் பாத்திரமாக அமைகிறாள். ஆனால் அவள் இல்லற ஒழுக்கத்தில் நிலைத்திருந்து கருவுயிர்த்த பிறகு முதுபெண்டு என்று பெயர் பெறுவதைத் தலைவன் கூற்றாகப் ‘புதல்வன்’ பற்றிய  கட்டுரையில் கண்டோம்.

    “புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து அவ்வரித்
    திதலை அல்குல் முதுபெண்டாகித்
    துஞ்சுதியோ மெல் அஞ்சில் ஓதி எனப்” (நற்.- 370)

    பாராட்டும் தலைவன் பேச்சில் மகிழ்ச்சி, பெருமிதம், கேலி போன்றவற்றை மட்டுமே உணர முடிகிறது. முதுபெண்டு ஆவதற்கு உரிய தகுதி இல்லற நெறி நின்று புதல்வனைப் பெறுதல் என்றும் புரிகிறது.

    பண்டைத் தமிழகத்தில் மங்கைப் பருவத்துப் பெண் மணம் புரிந்து மகவைப் பெற்று விட்டாலே முதுபெண்டு ஆகிவிடுகிறாள் என்று புரிகிறது.

    தான் முதுபெண்டாகி விட்டதால் தலைவன் தன்னை விடுத்துப் பிற பெண்களை நாடுவதாகத் தெரிந்தும் பிற இல்லறக் கடமைகளைச் செய்வதில் தன் கவனத்தைத் திருப்பும் தலைவி ஒருத்தியைக் காண்கிறோம். கணவனின் புறத்தொழுக்கம் மனச்சோர்வு அளிப்பினும் அச்சோர்விற்குள் ஆழ்ந்துவிடவோ; யார் வாயிலாகவும் ஆறுதல் கேட்கவோ அவள் விரும்பவில்லை. ஒரு எருமைக் காரானின் செயல் மூலம் தன் மனதைப் புரிய வைக்கிறாள்.

    “இருமருப்பு எருமை ஈன்றணிக் காரான்
    உழவன் யாத்த குழவியின் அகலாது
    பாஅல் பைம்பயிர் ஆரும்” (குறு.-325)

    எனும் வருணனையில்; ஈன்று அணிமை உடைய எருமைக்காரான் இடம் பெறுகிறது. அதன் கன்றை உழவன் கட்டிப் போட்டுச் சென்று விட்டான். எருமை மேயச் செல்ல வேண்டும்; ஆனால் கன்றைப் பிரிந்து தூரமாகச் செல்ல விரும்பாமல் தான்  இருக்கும் இடத்தில் உள்ள;  பால்பிடித்த பருவத்துக் கதிர்கள் உள்ள பயிரையே மேய்கிறது. பல நுட்பமான பொருட்களை உள்ளடக்கிய உவமை இது.

    அகன்று செல்லாமல் இருந்த இடத்திலேயே  எருமைக்  காரான் பசியாற இயலும். பால் பிடித்த கதிர்களைக் கூட உணவாகக் கொள்ள இயலும். அதனால் ஏற்படும்  இழப்பிற்கு யாரும் கவலைப்படவில்லை. எருமைக்காரானை யாரும் விரட்டவில்லை. அந்த அளவிற்கு வளமான நன்செய் உள்ள நாடு என்பது; இங்கு  செல்வம் மிகுந்த மனைவாழ்க்கையைக்  குறிக்கிறது. இல்லறக் கடமைகளுக்கு இச்சூழல் மிகவும் ஏற்றது.

    கன்றின் அருகிருக்கும் காரானுக்கு தன் தாய்மைப் பிணைப்பே முதற்கடமை ஆகிறது; தலைவிக்கும் பெற்ற மகவைப் பேணுவதே முதற்கடமை ஆகிறது.

    உழவன் கன்றைப் பாதுகாப்பு கருதிக் கட்டிப் போட்டுள்ளான்; குடும்பம் என்ற அமைப்பு தலைவிக்கும் அவளது மகவுக்கும் உரிய பாதுகாப்பை அளிக்கிறது.

    தலைவனின் புறத்தொழுக்கம் பற்றிய கவலை மனதை அரித்தாலும்; அதை முதன்மைப்படுத்தத் தலைவி விரும்பவில்லை. தன்னை ஆற்றுவதாக எண்ணிப் பேச்செடுத்த தோழியை;

    “துனியிடை இன்னர் என்னும் இன்னாக் கிளவி” (மேலது)

    எனத் தடை போடுகிறாள். துன்பத்திற்கு இடையில் தலைவன் ஒழுக்கம் பற்றிப் பேசுவது மேலும் துன்பத்தை மட்டுமே கொடுக்க வல்லது என்பது அவள் கருத்து. அதுமட்டுமல்ல;

    “திருமனைப் பல கடம் பூண்ட
    பெருமுது பெண்டிரேம் ஆகிய எமக்கே” (மேலது)

    எனத் தனது தகுதிப்பாட்டையும் நிலைநிறுத்துகிறாள். திருமணம் என்ற பந்தத்திற்கு உரிய கடமைகள் பல. குழந்தை வளர்ப்பு, மூத்தோர் பேணல், விருந்து புறந்தரல், மனை பேணல், அன்றாடக் கடமைகள், கிளை தாங்கல் என எத்தனையோ பொறுப்புகள் உள்ளன. அவற்றை எல்லாம் ஆற்ற வேண்டிய தான் ஒரு பெருமுது பெண்டாகி விட்டமையைத் தன் வாயாலேயே கூறுகிறாள்.

    சிறுபாத்திரத் தகுதி பெறும் முதுபெண்டிர்

    தலைவன் வாயில் வேண்டித் தோழியிடம்  பேசும் போது; அவனது திருமண நாள் நிகழ்வுகளும் அப்போது முதுசெம் பெண்டிர் வாழ்த்தியதும் நினைவூட்டப் படுகின்றன. முன்னர் நிகழ்ந்ததை நினைத்துப் பார்க்கும் இவ்வுத்திக்கு மேலைநாட்டு இலக்கியக் கொள்கை பின்னோக்கு உத்தி (flashback) என்று பெயர் கொடுக்கிறது. இருபதாம் நூற்றாண்டு இலக்கியக் கொள்கையாகக் கருதப்படும் இவ்வுத்தி நம் தொகைநூலில் இடம் பெறுவதைப் பெருமைக்கு உரியதாகக் கொள்ளலாம்.

    “உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர்
    பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
    முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்
    புதல்வர்ப் பயந்த திதலை அவ்வயிற்று
    வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
    கற்பினின் வழாஅ நற்பல உதவிப்
    பெற்றோர்ப் பெட்கும் பிணையை ஆகென
    நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி
    பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
    வதுவை நன்மணம்” (அகம்.- 86)

    நடந்த முறையைத் தோழியிடம் கூறுகிறான்.

    தனக்கும் தலைவிக்கும் நடந்த திருமணம்; அதில் மங்கல நீராட்டு ஒரு முக்கியச் சடங்கு. தலைக்கு மேல் தாங்கிய குடத்தை உடையவராகவும்; புதிய மண்டையில்; அதாவது  சுடுமண்ணாலான வட்டமான கலத்தில் அச்சடங்கிற்குரிய சுண்ணம், பூ, நெல் முதலிய பிற பல மங்கலப் பொருட்களை ஏந்தியவராகவும் முதுபெண்டிர் நின்று இருந்தனர். முன்னர் நீருள் சொரிய வேண்டியவை இவை; பின்னர்  சொரிய வேண்டியவை இவை என்று தம்முள் பேசிக் கொண்டே வரிசையாகக் கொடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களுள் மக்களைப் பெற்ற வாழ்வரசிகள் நால்வர் திதலை அவ்வயிற்றை உடையவராய்; அணிகலன்கள் அணிந்தவராய்த்  தலைவியை நீராட்டி வாழ்த்தினராம்.

    இன்றும் நல்ல காரியம் நடக்குமிடத்தில் காலமாற்றத்தைக் காரணம் காட்டி ‘ஸ்டைல்’ என்ற பெயரில் காதணி, கழுத்தணி இல்லாமல் பெண்கள் முன்னின்றால் ‘காது மூளி கழுத்து மூளியாக நிற்கக் கூடாதென முந்தைய தலைமுறையைச் சேர்ந்தோர் விலக்குவது வழக்கமே.

    மகப்பேறால் ஏற்பட்ட திதலை (stretch marks) மங்கலத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது. அம்மகளிர் மட்டுமே தலைவியை நீராட்டும் தகுதி உடையவர் எனக் கருதப்பட்டனர்.  ‘புதல்வர்ப் பயந்த’ சிறப்பினை உடைய நால்வர் என்று விதந்தோதி இருப்பினும்; அவர்கள்  கற்புநெறி வழுவா முதுசெம் பெண்டிருடன் இருக்கும் சூழல் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

    ‘பொதுசெய் கம்பலை’ என்ற தொடருக்கு உரையாசிரியரிடம் விளக்கம் இல்லை. மங்கல நிகழ்ச்சியின் போது இன்று போடப்படும் குலவை என்று பொருள்  கொள்ளலாமோ?!

    ‘கற்பு நெறியிலிருந்து வழுவாமல் இல்லறத்திற்கு நலன் விளைக்கும் செயல்களுக்கு உதவி; உன்னை மனைவியாகப் பெற்றவன் மனம் நிறையும் படியாக; என்றும் அவனைப் பிணைந்திருக்கக் கடவாய்’ என்று முதுசெம் பெண்டிர் வாழ்த்தி மங்கல நீராட்டியதால்; அந்நீரில் கலந்திருந்த அலரியும் நெல்லும் தலைவியின் கூந்தலில் ஆங்காங்கு சிக்கிச் சேர்ந்து தோன்றினவாம். தொடர்ந்து முதலிரவு வரை தலைவன் பின்னோக்கி நினைக்கிறான்; பேசுகிறான்.

    அன்னைக்குத் துணை ஆகும் முதுபெண்டிர்

    நுதல் பசந்திருந்த மகளின் நோய் பற்றி அறியக் கட்டுவிச்சியை அழைத்துக் காரணம் கேட்கிறாள் அன்னை. அவளைப் பொறுத்தவரை மகள் இன்னும் அறியாப் பருவத்தினள். தனித்துக் கேட்டறிய ஒருப்படாத மனத்தினளாய்; அக்கம்பக்கத்தில் இருந்த செம்முது பெண்டிரை உடன் வைத்துக் கொண்டு; நெல்லைச் சுளகில் போட்டு; மகளை அதன் முன்னர் நிறுத்தி; அவள் செய்யும் முன்னேற்பாட்டில் முதுபெண்டிர் இடம் பெற்றுள்ளனர். இங்கே அவர்கள் பேசவில்லை.

    “நன்னுதல் பரந்த பசலை கண்டு அன்னை
    செம்முது பெண்டிரொடு நென்முன் நிறீஇக்
    கட்டிற் கேட்கும் ஆயின்” (நற்.- 288)

    எனத் தோழியும் தலைவியும் தம்முள் பேசிக் கொள்கின்றனர்.

    உரையாசிரியர் ‘செம்முது பெண்டிர்’ கட்டுவிச்சியைக் குறிக்கிறது என்கிறார். ஆனால் அப்பொருள் பொருந்தவில்லை. கட்டுவிச்சி தொகை இலக்கியத்தில்  ‘முதுவாய்ப் பெண்டெ’னக் குறிக்கப் படுகிறாள். அத்துடன் ‘செம்-‘ என்னும் அடைமொழிக்குரிய விளக்கத்தைக் கட்டுரையின் முற்பகுதியில் கண்டோம். எனவே ‘செம்முது பெண்டிர்’ கற்பு நெறி வழுவாது; புதல்வர்ப் பயந்து இல்லறம் நடத்தும் மங்கலப் பெண்டிராகிய வாழ்வரசிகள் ஆவர்.

    முடிவுரை

    முதுபெண்டிர் செம்மை என்னும் அடைமொழி பெற்றுச் ‘செம்முது பெண்டிர்’ எனவும்; ‘முதுசெம் பெண்டிர்’ எனவும் அழைக்கப்படுவது கற்பு நெறியில் வழுவாமல் நிற்கும் புதல்வர்ப்  பயந்த  பெண்டிர் என்பதைக் குறிக்கிறது.  மங்கைப் பருவத்துப் பெண் மணம் புரிந்து மகவைப் பெற்று விட்டாலே முதுபெண்டு ஆகிவிடுகிறாள்.  தலைவன் வாயில் வேண்டித் தோழியிடம்  பேசும் போது; முதுபெண்டிர் சிறுபாத்திரத் தகுதி பெறுகின்றனர். உரையாசிரியர் ‘செம்முது பெண்டிர்’ கட்டுவிச்சியைக் குறிக்கிறது என்று  சொல்லும்  பொருள் பொருந்தவில்லை.

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 22 (மறுகிற் பெண்டிர்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 22 (மறுகிற் பெண்டிர்)

    ச. கண்மணி கணேசன் (ப.நி.),
    முன்னாள் முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    அகஇலக்கியத்தில் ஊர்ப்பெண்டிர், சீறூர்ப் பெண்டிர், அயலில் பெண்டிர், சேரிப்பெண்டிர், முதுபெண்டிர், முதுவாய்ப் பெண்டிர், நல்கூர் பெண்டிர்,  அரியல் பெண்டிர், கெடுமகப் பெண்டிர், ஆளில் பெண்டிர், மறுகிற் பெண்டிர் என பலதரப்பட்ட பெண்டிர் இடம் பெற்றுள்ளனர். சேரிப் பெண்டிர் சிறுபாத்திரத் தகுதி பெற்றமை பற்றி முன்னர்க் கண்டோம். இக்கட்டுரையில் மறுகிற் பெண்டிர் பற்றிக் காண்போம்.

    தெருப்பெண்டிர்

    மறுகு என்பது தெருவைக் குறிக்கிறது. தலைவி வசிக்கும் தெருவில் தாமும் வசிக்கும் பெண்கள் மட்டுமே ‘மறுகிற் பெண்டிர்’ என்ற தொடரால் சுட்டப்படுகின்றனர். ஒரே ஒரு பாடலில் மட்டும் இடம்பெறும் இத்தொகைப் பாத்திரம் பேசியமை பற்றித் தோழி உரைப்பதால்; சிறுபாத்திரத் தகுதி உடையதாகிறது.

    அம்பல் என்னும் அகஇலக்கியக் கலைச்சொல்லுக்கு விளக்கம் தரும் பாத்திரமாக அமைவதே இதன் சிறப்பாகும்.

    “சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
    மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி
    மறுகிற் பெண்டிர் அம்பல் தூற்றச்
    சிறுகோல் வலந்தனள் அன்னை” (நற்.- 149)

    தெருவில் பெண்கள் சிலரும் பலருமாகக்  கூடிக்கூடிப் பேசுகின்றனர். ஒருவருக்கு ஒருவர் கடைக்கண்ணால் ஜாடை காட்டுகின்றனர். இன்னார்… இப்படி… என்று எல்லோர்க்கும் கேட்கும்படி வாய்விட்டுப் பேசாமல் கிசுகிசுக்கின்றனர். அப்படிப் பேசும் போது இயல்பாக அமையும்  அவரது உடல்மொழி பற்றிய புனைவு  தொகைஇலக்கியத்தின் நடப்பியல் பாங்கைத் தெளிவுறுத்துகிறது. மூக்கின் உச்சியைச் சுட்டுவிரல் சேர்வது கட்புல உருக்காட்சியாக அமைந்து அழகூட்டுகிறது.

    அம்பலுக்கும் அலருக்கும் இடையிலுள்ள  நுட்பமான வேறுபாடும் இதே பாடலில் விளக்கம் பெறுகிறது. அன்னை மகளைக் கோலால் அடிக்கும் கொடுமையைச் சகிக்க முடியாத தோழி; தலைவனோடு  உடன்போக்கை  வற்புறுத்தி;

    “நடுநாள் வருஉம் இயல்தேர்க் கொண்கனொடு
    செலவயர்ந் திசினால் யானே
    அலர் சுமந்து ஒழிக இவ் அழுங்கல் ஊரே” (மேலது).

    எனத் தூண்டுகிறாள். ‘அவனுடன் சென்றுவிட்டால் அதன் பிறகு இவ்ஊர்மக்கள் எல்லோரும் வாய்விட்டு வெளிப்படையாகப் பேசுவர். அந்த ஆரவாரம் மிக்க அலரோடு  அவர்கள் ஒழியட்டும்’ என்கிறாள் தோழி.

    முடிவுரை

    ஒரு பெண்ணின் களவுக்காதல் பற்றிக் கௌவை(பழி) தோன்றினும்; அதை அம்பலாக மட்டுமே பரிமாறிக் கொள்கின்றனர் மறுகிற்பெண்டிர்.  அக்காதலில் மெய்யுறு புணர்ச்சி நிகழ்ந்ததாகத் தெரியும் போதும்; உடன்போக்கு மூலம் கற்புவாழ்வாக மாறும் போதும் அலர் தூற்றுகின்றனர்.

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 20 (பார்ப்பான்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 20 (பார்ப்பான்)

    ச. கண்மணி கணேசன் (ப.நி.),
    முன்னாள் முதல்வர்& தமிழ்த்துறைத் தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    தொல்காப்பியம் பார்ப்பான் என்னும் பாத்திரம் கூற்று நிகழ்த்தக்  கூடிய இடங்களை வரையறுத்துக் கொடுத்துள்ளது. ஆனால் தொகை இலக்கியங்களில் பார்ப்பான் கூற்று நிகழ்த்தவில்லை. அகஇலக்கணம் துணைப்பாத்திரம் என்று வரையறுக்கும் பார்ப்பான்;  சிறுபாத்திரமாகவே நமக்குக் கிடைத்திருக்கும் தொகை இலக்கியத்தில் காணப்படுகிறான்.

    தொடர்புடைய பின்புலப்பாத்திரங்கள்

    தொகைநூல்களில் பார்ப்பனக் குறுமகன்,  வேளாப்பார்ப்பான், ஓதும் பார்ப்பார், தூதுசெல்லும் பார்ப்பான், பார்ப்பனமகளிர் எனப் பலர்  காட்சிப்  படுத்தப்படுகின்றனர். அனைவரும் பின்புலத்தில் இடம்பெறுகின்றனர்.  சிறுபாத்திரத்தகுதி பெறுபவர்  பார்ப்பனமகனும் முடமுது பார்ப்பானும்  மட்டுமே ஆவர்.

    வழிச்செல்வோன் ஆகிய பார்ப்பனமகன்

    தலைவனின் காதல் மிகுதியைப் புலப்படுத்த வழிப்போக்கனாகிய பார்ப்பனமகன் பாத்திரம் உதவுகிறது. அத்துடன் அந்தணர் மந்திரத்தைப் பற்றிக் கேள்வி கேட்கும் தொல்தமிழரின் மனப்போக்கும் தெரிகிறது.

    செம்பூ முருக்கின் நல்நார் களைந்து
    தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
    படிவ உண்டிப் பார்ப்பன மகனே
    எழுதாக் கற்பின் நின்சொல் உள்ளும்
    பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
    மருந்தும் உண்டோ மயலோ இதுவே“ (குறு.- 156)

    என்கிறான் தலைவன். பார்ப்பனமகனே என மும்முறை அழைத்து ‘நீ  போற்றும் எழுதப்படாத வேதத்தில் பிரிந்தவரைச் சேர்க்கும் மருந்தாகிய சொல்; அதாவது மந்திரம் ஏதாவது உள்ளதா? இது தான் மையலின் தன்மையா?’ எனக் கேட்பதாக அமைகிறது பாடல். உலகியலில் பார்ப்பனன் பதிலுரைக்கக் கூடியவன் எனினும்; நாடகவழக்கில் அவன் பேசவில்லை.

    குறுந்தொகையைத் தொகுத்தோரும் உரை எழுதியோரும் இவனைப் பாங்கன் என்கின்றனர்.  செம்பூ பூக்கும் முருக்கின் தண்டில் நாரைக் களைந்து எடுத்துக் கமண்டலத்தைத் தொங்க விட்டுக்; கையில் தண்டேந்தி  வரும் பார்ப்பனனைத் தலைவனின் தோழனாக; அதாவது அவனது வாழிடம் சார்ந்தவனாகக் கருத இடமில்லை. கொளுவும் உரையும் அவனைப் பாங்கன் எனக் கூறினும்; நீர்க்கமண்டலமும் தியானம் செய்யப் பயன்படும் தண்டும் கைக்கொண்டு செல்பவன் உள்ளூர்க்காரனாக இருக்க இயலாது; வழிப்போக்கனாகத் தான் இருக்க இயலும். அத்துடன் வேதமந்திரம் பற்றிய மென்மையான  நையாண்டியும் இப்பாடலில் இடம் பெற்றுள்ளது.

    குஷ்டரோகியான முடமுது பார்ப்பான்

    தலைவி தலைவனை இரவில் சந்திக்கக் காத்திருப்பதில் ஆபத்து மிகுதி என்று எடுத்துக் கூற முனையும் தோழி; அவன் சிறைப்புறமாக நின்றுகொண்டு இருந்தபோது; தலைவியிடம் பேசுகிறாள். நாடகக் காட்சியை வருணிப்பவள் போல முன்னர் நடந்ததை எடுத்துச் சொல்லும் நிகழ்ச்சி; ஒரு கிழட்டு நொண்டிப் பார்ப்பான் பற்றியது. அந்தக் காலத்துப் பாலியல் சீண்டல்.

    ஊர் உலகமெல்லாம் தூங்கிக் கொண்டிருந்த நள்ளிரவு. அழகிய துகிலைப் போர்வையாகப் போர்த்துக் கொண்டு தலைவன் குறிப்பிட்ட இடத்தில் காத்திருந்தாள் தோழி. அப்போது அங்கு வந்து சேர்ந்தான் மழித்த தலையுடன் குஷ்ட நோயால் காலும் கையும் குறைப்பட்ட வயோதிகப் பார்ப்பான். அவனை இன்னும் தெளிவாக அடையாளம் காட்ட முனைந்த தோழி ‘நீ கூடப் பலகாலும்  நம் சேரியை விட்டு எங்கும் போகாமல் ஒளித்துத் திரியும் அவனைப் பேணிப் புரக்கச் சொன்னாய் அல்லவா? அவனே தான்’ என்கிறாள். ‘இது மகளிர் வெளிப்போதரும் காலம் அல்லவே! நீர் யார்?’ என்று ஐயத்துடன் குனிந்து பார்த்துக் கேட்டவன் ‘இளம்பெண்ணே நீ தம்பலம் தின்கிறாயா?’ என்று வைக்கோலைக் கண்ட கிழட்டு எருது போலப் பக்கலில் இருந்து அகலாமல் நின்று; பாக்குப்பையைக் குலைத்து ‘எடுத்துக் கொள்’ என்றான். தோழியோ வாய்திறவாமல் நிற்க; ‘சிறுமியே உன்னை அகப்படுத்திக் கொண்டேன். மற்றும் பிசாசுகளுக்குள் ஒருவனாகிய என்னை நீ வருத்தினால்; இவ்வூரில் நீ பெறும் பலிப்பொருளைப் பெறாதபடி நானே எடுத்துக் கொள்வேன்’ என்று பலபடப் பேசி நின்றான். பார்ப்பான் மனதில்; தான் பிசாசோ என்ற ஐயம் எழுவதைப் புரிந்து கொண்ட தோழி ஒரு கைப்பிடி மண்ணை அள்ளி வீசினாள். பார்ப்பான் கதறிக் கொண்டு ஊரெல்லாம் கேட்கக் கூப்பாடு போட்டான். புலிக்கு விரித்த வலையில் நரி அகப்பட்டதைப் போலத் தலைவனுக்காகக் காத்திருந்த வேளையில் இப்படி வருத்தம் நேர்ந்தது என்று விலாவாரியாகக் கூறுவதன் மூலம் இரவுக்குறி வேண்டாம் என்கிறாள் தோழி. இங்கு பார்ப்பான் நேரில் இடம் பெறவில்லை. தோழி பேச்சில் இடம் பெறுகிறான்; அவ்வளவே.

    தூது செல்லும் பார்ப்பான்

    எத்தகைய பாதுகாப்பற்ற சூழலில் பார்ப்பார் தூது சென்றனர் என்பதை விளக்கிச் சொல்லும் பாடல் ஒன்று; பொருள்வேட்கை கொண்ட நெஞ்சை மறுத்து ஆற்றும் தலைவன் முன்பொரு முறை காட்டுவழியில் கண்ட அவலக்காட்சியை நினைவு கூர்வதாக அமைந்துள்ளது.

    உப்பு வணிகரது கழுதைக்கூட்டம் போல் காட்சி அளிக்கும் பாறைகள் மிகுந்து; வெண்மையான பரற்கற்கள் கண்கூச ஒளிவீசும் வெய்யில். கவர்த்த பாதை மயக்கத்தைக் கொடுக்கும் காடு. அவ்வழியே ஒரு ஏழைப்பார்ப்பான் வெள்ளிய  தூது ஓலையை மடித்து எடுத்துக்கொண்டு செல்கிறான். உண்ணாமையால் அவனது விலாவில் இருக்கும் எலும்புகள் எல்லாம் எண்ணும்படி உள்ளன. ஆனாலும் அவன் கையில் உள்ள பொருளில் பொன் இருந்தாலும் இருக்கும்; என்ற எண்ணத்தில் தம் கைப்படையால் உடன் கொன்று வீழ்த்திக்; குருதி படிந்த அம்பினை ஏந்தியவராய் ஆராய்கின்றனர் கொலைத்தொழில் வல்ல மழவர். அதன் பின்னர் உடுக்கவியலாக் கந்தையை உடுத்திருக்கும் அவனது வறுமையைப் பார்த்துத் தம் கையை நொடித்துக் கொண்டு சென்றனர்.

    “….. ……. ….. ……. ……. ……உமணர்
    கணநிரை அன்ன பல்காற் குறும்பொறைத்
    தூது ஒய்பார்ப்பான் மடிவெள்ஓலை
    படைஉடைக் கையர் வருதிற நோக்கி
    உண்ணா மருங்குல் இன்னோன் கையது
    பொன் ஆகுதலும் உண்டு எனக் கொன்னே
    தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்
    திறனில் சிதாஅர் வறுமை நோக்கிச்
    செங்கோல் அம்பினர் கைநொடியாப் பெயர” (அகம்.- 337)

    அத்தோடு அந்த அவலம் முடியவில்லை. உயிரைவிட்ட பார்ப்பானின் சடலத்திற்கு நேர்ந்த கதி வாசகர் நெஞ்சை உலுக்கும் மருட்கையைத் தோற்றுவிக்கிறது. நீள ஒழுகிய குருதியுடன் தொங்கிக் கிடந்த குடலைக் கடித்துக் கொண்டு ஆண் நரி ஒன்று கள்ளி நிழலில் கூக்குரலிட்ட்டது. இப்பாடல் காட்டுவழியின் ஏதத்தை விளக்க எழுதப்பட்டதெனினும்; அக்காலச் சமூகஅவலத்தைப் புனைந்துள்ளது. வாழ்வாதாரத்திற்காக வந்தேறிய பார்ப்பனரின் வறுமை நிலையை எடுத்தோதுகிறது. தூதைத் தொழிலாகக் கொண்ட பார்ப்பனர் எதிர்நோக்கிய கொடுமைகளின் எல்லை என்ன என்று புரிகிறது.

    பார்ப்பனக் குறுமகன்

    பெண் கேட்டு வருகிறான் தலைவன்; தோழிக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. செய்தியைத் தலைவிக்கு உரைக்கிறாள். அவளது பேச்சு நுட்பமான பல செய்திகளைத் தாங்கி அமைகிறது.

    “அன்னாய் வாழி வேண்டு அன்னை நம்மூர்ப்
    பார்ப்பனக் குறுமகப் போலத் தாமும்
    குடுமித் தலைய மன்ற
    நெடுமலை நாடன் ஊர்ந்த மாவே” (ஐங்.- 202)

    முதலில் தலைவன் வந்த மகிழ்ச்சியைப் புலப்படுத்துகிறாள். அது குறிப்பிட்ட பொருளை நேரடியாகச் சொல்லாது; பொதுவான வாழ்த்தாக அமைகிறது. ஏனெனில் எதிர்பார்த்துக் காத்திருக்கும் தலைவிக்குத் தோழி வாழ்த்துக் கூறினாலே; அது தலைவன் வரவைப் புரிய வைத்து விடும். அடுத்த செய்தி; தலைவன் தன் செல்வச் செழிப்பு வெளிப்படையாகத் தெரியும்படி வந்திருக்கிறான்; அதாவது அலங்கரித்த குதிரை பூட்டிய தேரில் வந்துள்ளான். தேரும் குதிரையும் அவர்கட்குப் புதிதில்லை எனினும்; குதிரையின் தலை அலங்காரம் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கதாய் இருந்தது. இதுநாள் வரை சோர்ந்திருந்த மனம் புத்துணர்ச்சி பெற்றதால் அக்குதிரையின் தலையில் சூட்டியிருந்த தலையாட்டம் அவளுக்கு அவ்வூர்ப் பார்ப்பனச் சிறுவரின் குடுமியை நினைவூட்டியது. இரண்டையும் ஒப்புமைப்படுத்தி உவமிக்கிறாள். பண்டு தமிழகத்தில் பார்ப்பனச்சிறுவரின் குடுமிக்கட்டு தனித்தன்மை பெற்று இருந்தமை இதனால்  புலப்படுகிறது.

    பார்ப்பன மகளிர்

    தன் பணிமுடிந்து மீண்டுவரும் தலைவன் வழியில் தேர்ப்பாகனோடு பேசிக்கொண்டு வருகிறான். செம்புலப் பின்னணியில் முல்லை பூத்த கார்காலத்து மாலை. ஊரை நெருங்கி ஆயிற்று. கதிரவன் மறைய; மேய்ச்சல் முடிந்து ஆடுகள்  கழுத்து மணிகள் ஒலிக்கத் திரும்பும் பொழுது. ‘மாலை வழிபாட்டிற்கெனத் தீமுறை செய்து ஓதும் கணவரைப் பிரியாதிருத்தலால்; பார்ப்பன மகளிர் விரிந்த முல்லைப்பூக்களைச் சூடி மகிழ்ந்து இருப்பர். தலைவியோ என்னைப் பிரிந்து இருப்பதால்; வருத்தத்தோடு  நானில்லாத மனையை நோக்கி இருப்பாள். விரைந்து தேரைச் செலுத்துவாயாக’ என்கிறான்.

    “கானமுல்லைக் கயவாய் அலரி
    பார்ப்பன மகளிர் சாரற் புறத்து அயர”த் (நற்.- 321)

    தனித்திருக்கும் துன்பத்தைத் தாங்கித் தலைவி தவித்து இருப்பாள் எனக் காலப்பின்புலத்தையும் இடப்பின்புலத்தையும் சிறக்க எடுத்துக் காட்டப் பார்ப்பன மகளிர் பயன்பட்டுள்ளனர். கவிச்சுவை   கூட்டப் பார்ப்பன மகளிர் நிலையோடு தலைவியின் நிலை முரண்படுத்திக் காட்டப்படுகிறது.

    ஓதும் பார்ப்பார்

    புறத்தொழுகிய தலைவன் திரும்பியபோது  தலைவி எப்படி ஆற்றி இருந்தாள் எனக் கூறும் தோழி;

    “பகைவர் புல்லார்க; பார்ப்பார்  ஓதுக
    என வேட்டோளே யாயே” (ஐங்.- 4)

    என்கிறாள். தலைவியின் சமூகமுன்னேற்றச் சிந்தனை அக்கால அரசியல் நிலையைத் தாங்கி நிற்கிறது. திணைமாந்தர் பிரிவைச் சேர்ந்த ஊரனின் மனைவியாகிய அவள் ‘பகைவர் புன்செய்ப் பயனை உண்ணட்டும்’ என்று விரும்புவது; நெல்வேளாண்மை செய்த வேளிரைச் சார்ந்த அவளது வாழ்வைப் புலப்படுத்துகிறது. ஊரோடு சேர்த்து அழைக்கப்படும் கிழார்கள் வேளிருக்காக நெல்வேளாண்மை செய்தனர் என்றும் தெளிவாகிறது. எனவே தான் பகைவர்கள் புன்செய்ப் பயனை உண்ணட்டும் என்கிறாள். புன்செய் உணவைக் காட்டிலும் நெல் உயர்ந்ததாகக் கருதப்பட்ட நாகரிக மாற்றமும் இந்தப் பாடலடியில் பொதிந்துள்ளது.  ‘பார்ப்பார் ஓதுக’ என்ற  அவளது விருப்பம் வைதீகம் அக்காலத் தமிழ்ச் சமுதாயத்தில் மேன்மையானது என ஏற்றுக்கொள்ளப்  பட்டமைக்கு உரிய சான்றாகிறது.

    வேளாப் பார்ப்பான்

    வேள்வி தவிர்ந்த பிற தொழில் செய்யும் பார்ப்பாரே வேளாப் பார்ப்பார் ஆவர்.

    “வேளாப் பார்ப்பார் வாளரம் துமித்த
    வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன
    தளைபிணி அவிழாச் சுரிமுகப் பகன்றை” (அகம்.- 24)

    என்ற பாடலடிகளில் பகன்றைப் பூக்களின் தோற்றத்திற்கு வளைகள் அறுத்து மீந்த சங்கின் தலைப்பகுதி உவமையாக அமைகிறது. அச்சங்கை அறுத்தவர் வேளாப் பார்ப்பார் ஆவர். சங்கினை அறுத்து மங்கல வளை செய்யும் தொழிலில் பார்ப்பார் ஈடுபட்டு இருந்தமை இப்பாடலடி மூலம் வெளிப்படுகிறது.

    “இலங்கு வளை  இருஞ்சேரி” (மது.- 136)

    பற்றிப் பிற இலக்கியங்களும் பேசுவதை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. பார்ப்பார் கூடி வாழ்ந்த சேரி இருந்ததா என்பது தனி  ஆய்விற்கு உரியதாகிறது.

    முடிவுரை

    அகஇலக்கணம் துணைப்பாத்திரம் என்று வரையறுக்கும் பார்ப்பான்;  சிறுபாத்திரமாகவே நமக்குக் கிடைத்திருக்கும் தொகை இலக்கியத்தில் காணப்படுகிறான். தொகைநூல்களில் பார்ப்பனக் குறுமகன், வேளாப்பார்ப்பான், ஓதும் பார்ப்பார், தூதுசெல்லும் பார்ப்பான், பார்ப்பனமகளிர் எனப் பலர்  காட்சிப்  படுத்தப்படுகின்றனர். தோழி பேச்சில் இடம்பெறும் முதுபார்ப்பானும் தலைவன் பேச்சில் இடம்பெறும் பார்ப்பன இளைஞனும் சிறுபாத்திரம் ஆகின்றனர்.

    காலப்பின்புலத்தையும் இடப்பின்புலத்தையும் சிறக்க எடுத்துக் காட்டப் பார்ப்பன மகளிர் பயன்பட்டுள்ளனர். கவிச்சுவை கூட்டப் பார்ப்பன மகளிர் நிலையோடு தலைவியின் நிலை முரண்படுத்திக் காட்டப்படுகிறது.

    வைதீகம் தொகைநூற்காலத் தமிழ்ச்சமுதாயத்தில் மேன்மையானது என ஏற்றுக்கொள்ளப்பட்டு இருந்தது. வாழ்வாதாரத்திற்காக வந்தேறிய பார்ப்பனரின் வறுமை நிலை; தூதைத் தொழிலாகக் கொண்ட பார்ப்பனர் எதிர்நோக்கிய கொடுமைகளின் சித்தரிப்பில் புரிகிறது. பண்டு தமிழகத்தில் பார்ப்பனச்சிறுவரின் குடுமிக்கட்டு தனித்தன்மை பெற்று இருந்தது. சங்கினை அறுத்து மங்கல வளை செய்யும் தொழிலில் வேளாப்பார்ப்பார் ஈடுபட்டு இருந்தனர். பார்ப்பார் கூடி வாழ்ந்த சேரி இருந்ததா என்பது தனி  ஆய்விற்கு உரியதாகிறது.

    ஊரோடு சேர்த்து அழைக்கப்படும் கிழார்கள் வேளிருக்காக நெல்வேளாண்மை செய்தனர். புன்செய் உணவைக் காட்டிலும் நெல் உயர்ந்ததாகக் கருதப்பட்ட நாகரிக மாற்றம் தொகைநூற் காலத்தில் ஏற்பட்டு இருந்தது.

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 19 (பாகன்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 19 (பாகன்)

    ச. கண்மணி கணேசன் (ப.நி.),
    முன்னாள் முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை 

    தலைவன் வேண்டும் இடமெங்கும் அவனை அழைத்துச் செல்லும் தேர்ப்பாகன்  அகப்பாடல்களில் நேரில் இடம்  பெறும் பாத்திரம் ஆவான்.  பாகனுக்குக் கூற்று நிகழ்த்தும் தகுதியை அகஇலக்கணம் வழங்கவில்லை ஆயினும்;  அவனிடம் பேசும் பாத்திரங்கள் பலர். பாகன் பேசியதாகப் பிற பாத்திரம் கூறும் ஒரே ஒரு பாடல் உள்ளது.

    பாகனே வலவன்

    பாகன் வலவன் என்றும் அழைக்கப்படுகிறான். வேகமாகக் குதிரையைச் செலுத்துவாயாக என்னும் பொருள்பட;

    “கடுமா கடவுமதி பாக” (குறுந்.- 250)

    எனத் தலைவியை விரைந்து காணவேண்டும் என்ற அவாவினால் தலைவன் உரைக்கிறான். அதே அவாவினால்;

    “ஏமதி வலவ தேரே” (நற்.- 21; ஐங்.- 485)

    என்றும் ஏவுகிறான்.

    பாகனைச் சுட்டிப் பேசுவோர்

    தலைவன், தோழி, தலைவி, காமக்கிழத்தி ஆகியோர் கூற்றில்  பாகன் இடம் பெறுகிறான்.

    தோழி கூற்று

    கணவன் பிரிந்து சென்றுள்ளானே என்று மனமழிந்த தலைவியைத் தேற்றும் தோழி ‘காட்டில் இன்துணை இரலை மடப்பிணை கண்டவுடன் உன்னை நினைத்துத் தேரைத் திருப்பச் சொல்லிப் பாகனை ஏவி வந்து விடுவான்’ என்கிறாள் (அகம்.- 74). மான் இணை தலைவனுக்குத் தலைவியின் நினைப்பைக் கொடுக்க ஏதுவாக அமையுமென்கிறாள்.

    இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர் பிரிந்து செல்லும் தலைவனிடம் ‘நீ மீண்டு வருவதற்குள் இவள் இறந்து விடுவாள்; ஆதலால் உடன் மணம் புரிந்து கொள்ள ஏற்பாடு செய்’ எனச் சூழ்நிலையை அறிவுறுத்தும் போது;

    “இனமணி நெடுந்தேர் பாகன் இயக்கச் செலீஇய” (நற்.- 19)

    என்று பாகனை வைத்து ஓட்டும் பெரிய தேரோடு செல்வம் மிகுந்தவனாக இருப்பதைக் குறிப்பாகத் தலைவனிடம் வலியுறுத்துகிறாள்.

    களவுக்காலத்தில் தலைவன் தலைவியைச் சந்திக்க வரும்போது  தோழி; ‘உன் பாகனோடு சேர்ந்து எம் ஊரில் இரவுப் பொழுதில் தங்கி விருந்தயர்க’ என்கிறாள் (அகம்.- 340) இரவுக்குறியில் யாருமறியா வண்ணம் ஓசையின்றித் தேரில் வந்த தலைவன் இப்போது மணிக்குரல் கேட்கப் பாகன் ஓட்டும் தேரில் வருவதால் அவன் மணந்து கொள்ள வருகிறான் என்பது திண்ணம் என்கிறாள் தோழி (நற்.- 78). செவிலியிடம் அறத்தொடு நிற்கும் போதும் (அகம்.- 190); அன்னை காவல் கொண்ட காரணத்தைக் கூறும் போதும் (அகம்.- 20); ஊரலர் எழுவது திண்ணம் என்று உரைக்கும் போதும் (குறுந்.- 311) பாகன் ஓட்டிய தேர் தோழியால்  காரணமாகக் கூறப்படுகிறது.

    தலைவன் கூற்று

    கற்பு வாழ்க்கையில் கால உணர்வோடு தன் மனைவியைச் சேர வேண்டும் என நினைக்கும் தலைவன் தேரோட்டியை விரையச் சொல்கிறான் (ஐங்.- 482, 483, 484; அகம்.- 204, 224, 244).

    “செல்க பாகநின் செய்வினை நெடுந்தேர்” (நற்.- 221)

    என்று துரிதப்படுத்துகிறான். தூங்கிக் கொண்டிருக்கும் புதல்வன் அருகில் இருந்து கொண்டு; தன்னைப் பார்த்தவுடன் மகன் அழைப்பதைப் போல ‘வந்தீக எந்தை’ என்று குரல் கொடுக்கும் மனைவியின் அழகை ரசிக்க விரும்புவதாகக் காரணமும் கூறுகிறான். பாகன் விரைந்து தேரைச்  செலுத்தினால் தலைவியின் நெற்றிப் பசப்பு நீங்கிவிடும் என்கிறான் (அகம்.- 354). போகும் வழியில் தேரின் வேகம் கண்டு இரிந்தோடிய மான்கூட்டத்தில் தன் குட்டியோடு களரின்கண் சென்ற பிணைமானைத் தேடும் கலைமானைப் பாகனுக்குக் காட்டித் தன் தவிப்பைக்  குறிப்பாகப் புலப்படுத்துகிறான் (நற்.- 242).

    தலைவி கூற்று

    புறத்தொழுகும் தலைவனைப் பிற மகளிரின் இருப்பிடத்திற்குத் தேரில் ஏற்றிச் செல்வதால் கோபம் கொள்ளும் தலைவி;

    “வேட்டோர் திறத்து விரும்பிய நின் பாகனும்
    நீட்டித்தாய் என்று கடாஅம் கடுந்திண்டேர்” (கலி.- 66)

    எனத் தலைவனோடு பாகனையும் சேர்த்துச் சாடுகிறாள். ‘உன் விருப்பத்திற்கு உரிய பெண்களிடம் நீ செல்வதைப் பாகனும் விரும்பியதால்;  தேரை இங்கே நீண்ட நேரம் நிறுத்தாமல் செலுத்துவதற்கே  ஆயத்தமாகிறான்’ என்று குறைப்பட்டுக் கொள்ளும் தலைவியின் மேல் இரக்கம் தான் பிறக்கிறது.

    பரத்தையின் இல்லம் நாடிச் சென்று கொண்டிருந்த தன் கணவனின் தேரை  வழிமறித்த தளர்நடைப் புதல்வனைக் கண்டவுடன்; ‘நிறுத்து பாகனே’ என்று சொல்லி இறங்கி மகனைத் தழுவிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்  கணவன் என மகிழ்ந்துரைக்கிறாள் தலைவி (அகம்.- 66).

    காமக்கிழத்தி கூற்று

    புறத்தொழுகும் தலைவன் பிற மகளிரோடு  இன்புறத் துணை செய்பவன் என்னும் பழி பாகன் மேலும் விழுகிறது. பாணனை வசைபாடும் போது பாகனும் வசை பெறுகிறான். தலைவன் எந்தப் பெண்ணைத் தேடிச் சென்று இருக்கிறான் என்று அறிய; சேரிதோறும் சென்று வினவித் துன்புறும் காமக்கிழத்தி;

    “தேரோடு திரிதரும் பாகனைப் பழிப்பேமோ”  (கலி.- 68)

    என்று தன் இயலாமையை வெளிப்படுத்துகிறாள்.

    பாகன் பேசியமை 

    ஒரே ஒரு பாடலில் பாகன் பேசியதாகக் காமக்கிழத்தி கூறுகிறாள். தலைவன்  மணம் செய்யும் மனை என்று கருதிக் காமக்கிழத்தி மனையில் புகுந்து ‘பொலிக’ என்று ஆரவாரித்தான் பாகன். புலைத்தொழிலை உடைய பாணனைக் குறை கூறுவோமா; அன்றி பாகனைக் குறை கூறுவோமா என்று அங்கலாய்க்கிறாள் அவள். தேரைத் தொட்டுச் சூளுற்றுப் பாகன் பரத்தையரைக் கொண்டுவந்து விட்டதாகவும் கூறுகிறாள்.

    “தேரொடும் தேற்றிய பாகன் வந்து ஈயான்கொல்” (கலி.- 71)

    என்ற காமக்கிழத்தியின் நக்கலான பேச்சு ‘அப்பெண்டிர்க்கு நின்னை ஒழியப் பிறர் இல்லை என்பதை நினைத்துப் பார்’ எனப் பாகன் உரைத்தமையைக் கூறித் தொடர்கிறது.

    பாகனின் சிறப்புகள்

    பாகனைச் சுட்டிப் பேசும் தலைவன் அவனை நூலறிவு மிக்கவன் என்றும்; மதிநுட்பம் உடையவன் என்றும்; வினை வல்லவன் என்றும் சிறப்பிக்கிறான். பாகனின் திறமை அவனது கைவன்மையில் இருக்கிறது என்னும் பொருள்பட;

    “கைவல் பாகன் பையென இயக்க” (அகம்.- 230)

    எனத் தன் நெஞ்சோடு பேசுகிறான் தலைவன். திறமைமிக்க பாகன் ஆகையால் அவன் மெல்லெனச் செலுத்தியும் விரைந்து தலைவியைச் சேர முடிந்தது என்கிறான். பாகனின் அறிவுமிகுதி;

    “மதியுடை வலவ” (ஐங்.- 487)

    என்று அழைக்கப்படுவதால் தெரிகிறது. தேர்ப்பாகனுக்கு அக்காலத்தில் நூலறிவும் தேவைப்பட்டு இருந்தது.

    “நூலறி வலவ கடவுமதி” (அகம்.- 114)

    என்னும் அடிக்கு உரையாசிரியர் பொருள் கூறும் போது பரிநூல் அறிந்தவன் என்று பொருள் கூறுகிறார். தேர்ப்பாகன் குதிரைகளைப் பற்றி நன்கு பயின்று இருந்தான் என்பது பொருளாகும்.

    பாகனுக்குரிய புகழ்மொழி

    பாகனைப் பாராட்டும் தலைவன் தனக்கு மனைவியைத் தந்தவனே அவன் தான் என்கிறான். தலைவி பிரிவுத்துன்பத்தில் உயிரை விடுமுன் வீட்டிற்கு அழைத்து வந்தமையை மனதார நன்றியுடன் நினைத்துப் பேசுகிறான். நீண்டவழிப் பாதையில் சென்றால் காலதாமதம் ஆகுமென்று பருக்கைகளை உடைய மேட்டுநிலமாகிய கரம்பையில் புதுவழி உண்டாக்கி ஓட்டி விரைவில் தன்னை மனைசேர்த்த பாகனை;

    “முரம்புகண் உடைய ஏகிக் கரம்பைப்
    புதுவழிப் படுத்த மதியுடை வலவோய்
    இன்று தந்தனை தேரோ
    நோயுழந்து உறைவியை நல்கலானே” (குறுந்.- 400)

    என்று புகழ்ந்து அமைகிறான் தலைவன்.

    பாகன் தலைவன் நெருக்கம் 

    பாகனுக்கும் தலைவனுக்கும் இடையில் இருந்த உறவு அவனை விருந்தினனாக ஏற்று உபசரிக்கும் அளவிற்கு நெருக்கமாக இருந்தது. ‘காற்றைப் பூட்டி ஓட்டினாயா? அல்லது குதிரைக்குப் பதிலாக உன் மனதைப் பூட்டி ஓட்டினாயா?’ என்ற கேள்விகளுடன் தேரை விட்டு இறங்கிய தலைவன் அவனை மார்புறத் தழுவி வீட்டிற்குள் விருந்தினனாக ஏற்றுச் சென்றமையை;

    “உரைமதி வாழியோ வலவ எனத்தன்
    வரைமருள் மார்பின் நளிப்பனன் முயங்கி
    மனைக்கொண்டு புக்கனன் நெடுந்தகை
    விருந்தேர் பெற்றனள் திருந்திழையோளே” (அகம்.- 384)

    எனும் பாடல் காட்சிப்படுத்துகிறது.

    தன் அந்தரங்கத்தைக் கூடப் பாகனிடம் பகிர்ந்து கொள்கிறான் தலைவன். காட்டைத் தாண்டி வரும்போது பேச்சுத் துணையாக அமைபவன் பாகன் மட்டுமே ஆவான் ஆதலால்; அவனிடம் முன்னர் நிகழ்ந்தவற்றை நினைவு கூர்கிறான். மழை பெய்ததும் ‘தவளைகளின்  ஒலியால் தேரின் மணியொலியைத் தலைவி அறியவியலாது; ஆதலால் நீவிர் போய்த் தெரிவிப்பீர்’ என்று இளையரை விடுத்ததையும்; அவர்கள் சென்று அறிவித்ததையும்; உடனே அவள் நீராடிப் புனைந்து கொண்டதையும்; அந்நேரத்தில் தான் சென்று சேர்ந்ததையும்; அணைத்து மகிழ்ந்ததையும் பாகனிடம் பகிர்ந்து கொள்வது இருவருக்கும் இடையில் இருந்த நெருக்கத்தைக் காட்டுகிறது (நற்.- 42).

    பிரிவுணர்த்திய போது தனக்கு விடைகூற இயலாது பூங்கொத்தைத் தளிரோடு சேர்த்துப் பிதிர்த்த அறிவு மயக்கம் உற்ற தன் மனைவி பற்றியும்  (நற்.- 106); அவள் மேல் தான் கொண்ட காதல் வேட்கை பற்றியும்  தேர்ப்பாகனிடம் வெளிப்படுத்தத் தயங்கவில்லை (அகம்.- 154).

    பாகன் தொழில் செய்யும் முறை

    திணைமாந்தருள் கிணைப்பொருநர் ‘வார்’ என்று பொருள்படும் ‘வள்பு’ எனும் சொல்லோடு சேர்த்துச் சொல்லப்படுவது போல்; பாகனும் பலவிடங்களில் குதிரையை இழுத்துப் பிடிக்கும் வள்பு எனும் வாருடன் தொடர்புறுத்தப்படுகிறான் (ஐங்.- 486).

    போர் முடிந்து தேரில் எறிய தலைவன் சிறிது நேரத்தில் சற்றும்   எதிர்பாராத வகையில் ‘இறங்குக’ என்ற சொல் கேட்டு மருண்டான். அவ்வளவு வேகமாகத் தன்னை இல்லம் கொண்டுவந்து சேர்த்த அவனை;

    “… ………… ………… வள்பு ஆய்ந்து
    இயக்குமதி வாழியோ கையுடை வலவ” (அகம்.- 344)

    என்று தோலாலான கடிவாளத்தை இழுத்துச் செலுத்திய அவனது கைவன்மையை வாயாரப் புகழ்கிறான்.

    பாகன் குதிரையைச் செலுத்தும் முறையுடன் வள்பு மட்டுமின்றி தாற்றுக்கோல், அதன் நுனியில் இருக்கும் முள் முதலியவை தொடர்புறுத்திப் பேசப்படுகின்றன.

    “முள்ளிட்டு ஊர்மதி வலவ” (ஐங்.- 481)

    என்று குதிரையின் வேகத்தைக் கூட்ட ‘தாற்றுக்கோலின் நுனிமுள்ளால் தூண்டு’ என்று கட்டளை இடுவதையும் காண்கிறோம்.

    நான்கு குதிரைகள் பூட்டிய தேரைப் பாகன் ஓட்டியமை;

    “நன்னால்கு பூண்ட கடும்பரி நெடுந்தேர்” (அகம்.- 104)

    என்னும் அடியால் புலனாகிறது.

    தேரினை அதன் உறுதிவாய்ந்த உருளை நிலத்தில் பதிந்து உருண்டு வரச் செலுத்துவாயாக என்பதை;

    “வள்வாய் ஆழி உள்ளுறுபுருளக்
    கடவுக காண்குவம் பாக” (அகம்.- 54)

    என்னும் தலைவன் கூற்று பாணனின் தொழில் நுட்பத்தை அடியொட்டியது.

    “…… ….. ……. … உளையணி
    உலகு கடப்பன்ன புள்ளியல் கலிமா
    வகையமை வனப்பின்” (அகம்.- 64)

    என்பதால் உலகையே கடப்பது போன்ற தன்மையுடைய குதிரை பறவை பறப்பது போல் தேரிழுப்பதைப் பற்றிப் பாகனோடு சொல்லாடுகிறான் தலைவன். தாழ்ந்த நிலம் நோக்கிப் பாயும் வெள்ளம் போலக் குதிரைகள் பாய்ந்து சென்றிழுக்கும் தேரைத் தோழி காட்சிப்படுத்துகிறாள் (அகம்.- 400)

    கழியைக் கடக்குங்கால்  சுறாமீன்  குதிரையைத் தாக்கப்;  போக்கு தடைப்பட்டமையால் நேர்ந்த தலைமக்கள் சந்திப்பு  குறித்துத் தோழி செவிலியிடம் அறத்தொடு நிற்கும் போது;

    “வயச்சுறா எறிந்தென வலவன் அழிப்ப” (அகம்.- 190)

    எனக் கூறுகிறாள். பாகனின் பணியில் நேரும் சிக்கல்; வேறு ஒரு குதிரையைக் கொண்டு வந்து சேர்த்த பிறகே தீருமாதலால் தலைமக்கள் நட்பு வளர ஏதுவானது என்கிறாள்.

    பாகனால் இன்புறும் இளையர்

    தலைவன் தேருக்குப் பின்னே ஓடிவரும் இளையர் இன்புறுவதும் பாகனின் திறமையில் பொருந்தி உள்ளது; ஏனெனில் அவர்களுக்கும் வினைமுடித்து வீடுதிரும்பும் காலம் விரைவில் வாய்ப்பது பாகனின் செயல்திறனைப் பொறுத்ததே.

    “வென்வேல் இளையர் இன்புற வலவன்
    வள்பு வலித்து ஊரின் அல்லது முள்ளுறின்” (அகம்.- 104)

    என்று தோழி கூறுகிறாள்.

    ஈரநெஞ்சு கொண்ட தலைவனும்  பாகனும்

    காட்டுவழியில் தேரைச் செலுத்தி வரும்போது தேரின் மணியொலியோ; குதிரையின் குளம்பொலியோ கேட்காதவண்ணம் செலுத்துவாயாக என்று பாகனை வேண்டும் தலைவன்; மான் முதலிய அஃறிணை உயிர்களின் நடுநாள்  புணர்ச்சிக்கு இடையூறு செய்யக்கூடாது என்னும் கொள்கை உடையவன் ஆதலால்;

    “இடிமறந்து ஏமதி வலவ” (அகம்.- 134)

    என்கிறான். பாகனும் நெய்தல் நிலத்தில் தேரோட்டும் போது தன் தேர்ச் சக்கரத்தில் நண்டுகள் சிக்கி விடாதபடி பார்த்து ஓட்டியமை;

    “ஆழி மருங்கின் அலவன் ஓம்பி
    வலவன் வள்பு ஆய்ந்து ஊர” (நற்.- 11)

    என்று புனைந்து உரைக்கப்படுகிறது.

    பாகன் பாத்திரம் புலப்படுத்தும் தமிழ்ச் சமுகநிலை

    வினைமுற்றி மீளும் தலைவன் பல பாடல்களிலும் வேந்தனுக்காகவோ அன்றி மன்னனுக்காகவோ போரில் பங்கேற்றுத் திரும்புபவனாக உள்ளான். அப்போர் விளைநிலமாகிய நாட்டை மன்னனிடம் திறைப்பொருளாகப் பெற்ற பிறகு முடிவு அடைவதைக் காண்கிறோம்.

    வேந்தன் பகை தணிந்தமை கூறிக் கிளம்பச் சொல்கிறான் தலைவன்

    “இருநிலம் குறையக் கொட்டிப் பரிந்தின்று
    ஆதி போகிய அசைவில் நோன்தாள்
    மன்னர் மதிக்கும் மாண்வினைப் புரவி
    கொய்ம்மயிர் எருத்தில் மெய்ம்மணி ஆர்ப்பப்
    பூண்கதில் பாக நின் தேரே……………………
    உறுபகை தணிந்தனன் உரவுவாள் வேந்தே” (நற்.- 81)

    என்று பாகனை ஏவும்போது தனது தேரையும் குதிரையையும் அறிமுகம் செய்கிறான் தலைவன். ‘அகன்ற நிலம் குழியும்படித் தன் கால்களால் கொட்டி நடந்து; விரைந்து ஆதி என்னும் நெறிப்படி நேராக ஓடுகின்ற குதிரையின் கொய்ம்மயிர் உடைய பிடரியில் கட்டிய மணிகள் ஒலிக்கத் தேரில் பூட்டுக’ என்கிறான். தனது குதிரை மன்னனும் விரும்பத் தக்கது என்று விதந்து கூறுவதால் அவன் மன்னனைச் சார்ந்திருக்கும் தலைவன் என்பதில் ஐயமில்லை.

    மன்னர் திறை கொடுத்ததால் பகை நீங்கி; வேந்தனும் மன்னரும் நட்பினராகி விட்டனர் என்ற நிலையைக் கூறி;

    “ஊர்க பாக” (அகம்.- 44)

    என ஏவுவதையும் காண்கிறோம்.

    தான் சார்ந்த வேந்தன் மன்னனிடம் இருந்து நன்செய் நிலங்களைத் திறையாகப் பெற்றமையால் வினை முடிந்தது என்று கூறித் தன் மனையை நோக்கி விரையச் சொல்கிறான் இன்னொரு தலைவன்.

    “நாடு திறை கொண்டனம் ஆயின் பாக” (அகம்.- 334)

    எனக் கூறிக் கிளப்புகிறான்.

    புராணப் பாகன்

    பரிபாடலில் சிவபெருமான் தன் காளை வாகனத்தை ஓட்டும் பாகனாகச் சித்தரிக்கப்படுகிறார்.

    “செவ்விடைப் பாகன் திரிபுரம் செற்றுழி ” (பா.- 23)

    எனத் திரிபுரம் எரித்த புராணக்கதை புனையப்பட்டுள்ளது.

    முடிவுரை

    பாகன் வலவன் என்றும் அழைக்கப்படுகிறான். தலைவன், தோழி, தலைவி, காமக்கிழத்தி ஆகியோர் கூற்றில் பாகன் இடம் பெறுகிறான். ஒரே ஒரு பாடலில் பாகன் பேசியதாகக் காமக்கிழத்தி கூறுகிறாள். குதிரைகள் பற்றிய நூலறிவு உள்ள பாகன் தோலாலான கடிவாளத்தை இழுத்து; முள் முனை உள்ள தாற்றுக்கோலால் தீண்டி; நான்கு குதிரைகள் பூட்டிய தேரைக் காற்றுப்  போலவும்; பள்ளம் நோக்கிப் பாயும் வெள்ளம் போலவும் செலுத்திய கைவன்மை மிக்கவன் ஆவான். மதிநுட்பம் மிக்க பாகன்; தேவைப்படும் போது புதுவழி உண்டாக்கித் தலைவனுக்கு உதவினான். தலைவன் தன்னுடைய அந்தரங்கத்தைக் கூடப் பாகனுடன் பகிர்ந்து அவனை விருந்தாக ஏற்றுப் போற்றினான். புறத்தொழுகும் தலைவனுக்கும் பாகன் உதவி; வசை பெறுகிறான். தேர் கழியைக் கடக்குங்கால்  சுறாமீன்  குதிரையைத் தாக்கப்;  போக்கு தடைப்படுவது பாகனுக்கு ஏற்படும் பெரிய சிக்கல் ஆகும். தலைவன் தேருக்குப் பின்னே ஓடிவரும் இளையர் இன்புறுவதும் பாகனின் திறமையில் பொருந்தி இருந்தது. அஃறிணை உயிர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்னும் கொள்கை தலைவனிடமும் பாகனிடமும் இருந்தது. வேந்தனுக்காகவோ அன்றி மன்னனுக்காகவோ போரில் பங்கேற்றுத் திரும்புபவனின் தேர்ப்பாகன் என்ற பாத்திரத்தின் பங்கேற்பு மூலம் அன்றைய தமிழ்ச் சமூகநிலையும் புலனாகிறது.. போரானது விளைநிலமாகிய நாட்டை மன்னனிடம் திறைப்பொருளாகப் பெற்ற பிறகு முடிவு அடைவதைக் காண்கிறோம். சிவபெருமான் தன் காளை வாகனத்தை ஓட்டும் பாகனாவார்.

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 18 (கேளிர்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 18 (கேளிர்)

    ச. கண்மணி கணேசன் (ப.நி.),
    முன்னாள் முதல்வர்& தமிழ்த்துறைத் தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    சிறுபாத்திர வரிசையில் தனிப்பாத்திரங்கள், பிற தலைமைப் பாத்திரங்களையும் துணைப் பாத்திரங்களையும் தன்னுள் அவ்வப்போது  சேர்த்துக் கொள்ளும் தொகைப் பாத்திரங்கள், தம்மளவில் குழுவாக அமையும் பாத்திரங்கள் என  இதுவரை கண்டோம். கேளிர் என்னும் தொகைப்பாத்திரம் சிக்கலான சித்தரிப்பை உடைய தொகைப்பாத்திரமாக அமைந்துள்ளது.

    ‘கேள்’ எனும் ஒருமைப் பெயர்ச் சொல்லுக்கு உரியோர்

    சேரிப்பரத்தை  

    காமக்கிழத்தியின் கோணத்தில் ‘கேள்’ என்னும் உறவுப்பெயர் நட்புடையவர் என்று பொருள்பட்டுச் சேரிப்பரத்தையைக் குறிக்கிறது. ஐங்குறுநூற்றின் மருதப் பாடல்களுள் கிழவனுக்குரைத்த பத்தில் தலைவனைப் பார்த்து அவனுக்குப் புதிதாக வாய்த்த பரத்தையை;

    “நின் கேளே” (பா.- 121-128)

    என்று மீண்டும் மீண்டும் சுட்டி அமைகிறாள் கூற்று நிகழ்த்தும் பெண். உரையாசிரியர் அவளைக் காமக்கிழத்தி என்கிறார்.

    தலைவன்

    தலைவனின் புறத்தொழுக்கம் காரணமாக அவன் தனது ‘கேள்’ இல்லை என்பதைக் காமக்கிழத்தியே;

    “கேளலன் நமக்கு அவன் குறுகன்மின்” (கலி.- 68)

    என்று வாயில் மறுப்பதைக் காண இயல்கிறது.

    திருமணத்திற்கு முன் தன் காதலன் ஏறு தழுவி வெற்றி பெற்றுப் புண்ணோடிருக்க; ஆயர்குலத் தலைவி  எல்லையில்லா மகிழ்ச்சி கலந்த அக்கறையுடன் இறைஞ்சிக்;

    “கொலையேறு சாடிய புண்ணை எம்கேளே” (கலி.- 106)

    என்று பாடியாடிக் குரவை அயர்கிறாள். தன் தலைவனைக் ‘கேள்’ என்றே சுட்டுகிறாள்.

    இல்லறத்தில் பிரிவின் போது ஆற்ற இயலாமல் இரங்கி;

    “எம்கேள் இதனகத்து உள்வழி காட்டீமோ” (கலி.- 144)

    என நிலவோடும் காற்றோடும் கடலோடும் தன் துன்பத்தைச் சொல்லி அரற்றும் மனைவிக்குக் ‘கேள்’ ஆக அமைபவன் கணவனே. தலைவி தலைவனைக் ‘கேள்’ என்று உறவுமுறை கொண்டாடும் பல பாடல்கள் தொகை நூல்களில் உள்ளன (நற்.- 359; ஐங்.- 271; கலி- 5).

    தூக்கத்தின் போது கனவு கண்டு உளறிய தலைவன் பிரிந்து செல்லப் போகிறான் எனப் புரிந்துகொண்ட தலைவி தோழியிடம் மனக்குறையுடன்;

    “இன்தீம் கிளவியாய் வாய்மன்ற நின்கேள்” (கலி.- 24)

    என்று பேசும்போது தலைவன் தோழியின் ‘கேள்’ ஆகிறான்.

    தலைவி

    தலைவனுக்குத் தானே ‘கேள்’ என்று தலைவி கூறுமிடமும் உளது. ஏறுதழுவிக்;

    “கேளாளன் ஆகாமை இல்லை” (கலி.- 101)

    என்பது தலைவியைக் ‘கேள்’ ஆக அவன் ஆளப்போகிறான் என்ற நம்பிக்கையைத் தான் உணர்த்துகிறது.

    கேளிர் என்னும் பன்மைப்பெயர்ச்  சொல்லுக்கு உரியோர்

    கிளைஞரல்லா உறவினரும் நண்பரும்

    குடும்ப உறவினருள் பங்காளிகளைக் கிளை என்று குழுப் பாத்திரமாகச்  சுட்டுவதை முன்னர்க் கண்டோம் (பார்க்க- அகஇலக்கியச் சிறுபாத்திரங்கள்- கிளை) கிளை அல்லாத உறவினரையும் நண்பரையும் கேளிர் என்னும்  தொகைப்பாத்திரத்துள்  அடக்க  இயல்கிறது.

    “கேள் கேடுஊன்றவும் கிளைஞர் ஆரவும்
    கேளல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்” (அகம்.- 93)

    என்று தொடங்கும் பாடல் தலைவன் பொருள் தேடச் சென்ற காரணத்தைச் சொல்கிறது. இங்கு பங்காளிகள் தனியாகக் கிளைஞர் என்று சொல்லப்பட்டிருந்தும்; அதற்கு முன்னரே ‘கேள்’ என்று விதந்தோதி இருப்பது அவரல்லாத உறவினரைக்  குறிக்கிறது என்பது பொருத்தமாகப் படுகிறது. ஏனெனில் அடுத்த அடியில்  ‘கேளல் கேளிர்’ என்று தொடர்ந்து பேசுவது நட்புறவு இல்லாத கேளிரை; அதாவது நொதுமலரைச்  சுட்டுகிறது.  எனவே கேளிர் நண்பரையும் கிளையல்லா உறவினரையும் உள்ளடக்கிய தொகைப்பாத்திரம் ஆகிறது. உரையாசிரியர் கேளிர் என்ற சொல்லுக்கு சுற்றம் என்று சொல்லிச் செல்கின்றனர். ‘தமர்’ என்னும் வழக்கு பலதிறப்பட்ட  சுற்றத்தைச் சுட்டப் பயின்று வருவதை முன்னர்க் கண்டோம் (பார்க்க- அகஇலக்கியச் சிறுபாத்திரங்கள்- தமர்) சுற்றம் என்னும் பொதுப்பொருள் மேற்சுட்டிய பாடலடிக்குப் பொருந்தி வரினும் இரண்டு அடிகளையும் விளக்க முற்படும் போது; கிளையல்லா உறவினரும் நண்பரும் என்று பொருள் கொள்வது ஏற்புடைத்து ஆகிறது. இதே போல கேளிர், நண்பர், நொதுமலர் மூவரையும் விதந்தோதும் பாடல் உளது (அகம்.- 279).

    “எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்” (குறுந்.- 40)

    என்ற தலைவனின் கேள்வியில் கேளிர் உறவினர் ஆவது ஒருதலை.

    மிதமிஞ்சிய காமநோயால் அவதியுறும் தன்னை இடித்துரைப்பவர்களைப் பார்த்து;

    “கேளிர் வாழியோ கேளிர் நாளும் என்” (குறுந்.- 280)

    ‘நெஞ்சம் பிணித்த அஞ்சிலோதியை ஒருநாள் புணர்ந்தால் அதற்கு மேல் அரைநாள் வாழ்க்கையும் வேண்டேன்’ என்ற தலைவன் பேச்சில் இடம் பெறும் கேளிர் நண்பர் கூட்டத்தினர் என்பதில் ஐயமில்லை.

    கேளிர் பேச்சு

    தான் சந்தித்த பெண்ணிடம் இவ்வாறு அடக்கமாட்டாத ஆர்வம் கொள்வது தவறு எனும் நண்பர் கூட்டத்திடம்;

    “இடிக்கும் கேளிர் நும்குறை ஆகம்
    நிறுக்கல் ஆற்றினோ நன்று மற்று இல்ல” (குறு.- 58)

    என்கிறான் தலைவன். ‘என்னை இடித்துரைக்கும் உங்கள் செயலால் என் உடம்பு உருகாமல் நிறுத்த இயலுமானால் அதைக்  காட்டிலும் நற்செயல் வேறேதும் இல்லை’ என்ற மறுமொழியைத் தலைவன் உரைக்கும் காரணம் அவனது நண்பர்கள் அவனிடம் கூறிய அறிவுரையே ஆகும். ஆக கேளிர் பேசியமை பற்றித் தலைவன் உரைக்கிறான். உரையாசிரியர் இப்பாடலில் இடம்பெறும் கேளிர் பாங்கனைக் குறிப்பதாகப் கூறியுள்ளார். பாங்கன் ஒருமைக்குரிய உறவுமுறைப் பெயர்ச்சொல் ஆகும். கேளிர் பன்மைப் பெயர்ச்சொல் ஆதலால்; அப்பொருள் ஏற்புடைத்தன்று. பாங்கன் துணைப்பாத்திரமாகத் தொல்காப்பியரால் குறிப்பிடப்படுகிறான். பாங்கன் கூற்று நிகழ்த்தும் இடங்களையும் அவர் வரையறுத்துள்ளார். ஆனால் கேளிர் கூற்று நிகழ்த்துவது பற்றித் தொல்காப்பியர் குறிப்பிடவில்லை.

    உறவினராகும் கேளிரின் பேச்சு  பற்றிய குறிப்பு செவ்விலக்கியக் காலக் குடும்ப அமைப்பைத் துல்லியமாகக் காட்டுகிறது. பொருள் தேடிச் சென்றவன்; வெற்றிகரமாக வினைமுடித்து  விட்டான்.  இனி வீடு நோக்கிப் பயணத்தைத் தொடங்க வேண்டும். வீட்டை விட்டுக் கிளம்பிய நாளில் இருந்து காட்டைக் கடக்கவும்; அயல்நாட்டில் பாடுபடவும் தான் கடந்த சோதனைகளும் கொண்ட விடாமுயற்சியும் மனதில் தோன்றி மறைகின்றன. அத்தனைக்கும் துணையாகத் தன் கேளிர் கூறிய சொற்களும் அவர்களது அன்பும்  ஊக்கமூட்டியமையை நினைத்துப் பார்க்கிறான். தான் கிளம்பிய போது அவர்கள் அனைவரும் வழியனுப்பிய காட்சி மனக்கண்ணில் ஓடுகிறது.

    “பெறலரும் கேளிர் பின்வந்து விடுப்ப” (அகம்.- 351)

    அது தன் கடமையை முடிக்க எந்த அளவிற்குத் துணைநின்றது என்பதை நெஞ்சோடு உரைக்கிறான். ‘சென்று வா’  என்று விடைகொடுத்த உறவினரின் பேச்சு இங்கே தலைவன் மனதிற்குள் அசைபோடும் அன்பு வெளிப்பாடாக அமைந்து அழகூட்டுகிறது. கேளிர்க்குக்  குடும்ப அமைப்பில் இருந்த முக்கியத்துவத்தைப் பிற பாடல்களிலும் காண இயல்கிறது (அகம்.- 151&173).

    பின்புலத்தில் கேளிர்

    பரத்தமையில் ஈடுபட்ட தலைவன் தன்  வீட்டிற்குத் திரும்புகிறான். தலைவியோ வாயில் மறுத்து உள்ளே வரக்கூடாது என்கிறாள். தோழி இடித்துரைக்கிறாள். அவனை உள்ளே விட்டால் அதற்குப் பின்னர் என்ன ஆகும் என்று தலைவி விளக்கம் கூறுகிறாள்.

    “கள்ளின் கேளிர் ஆர்த்திய உள்ளூர்ப்
    பாளைதந்த பஞ்சியங் குறுங்காய்
    ஓங்கிரும் பெண்ணை நுங்கொடு பெயரும்
    ஆதி அருமன் மூதூர் அன்ன
    அயவெள் ளாம்பல் அம்பகை நெறித்தழை
    தித்திக் குறங்கின் ஊழ்மாறு அலைப்ப
    வருமே சேயிழை” (குறுந்.- 293)

    என்கிறாள். இங்கே ‘கள்ளின் கேளிர்’ என்று குறிப்பிடப்படுபவர் கள்ளுக்கடைக்கு உரியவரான களியர். ‘கள்ளை இறக்கச் சென்ற சுற்றம்;  பனைமரம் பூத்துக் காய்த்து விட்டதால் அதற்குப் பதிலாக பஞ்சு போல் மிருதுவான நுங்கின் காய்களைப் பறித்துக் கொண்டு வரும்; ஆதி அருமன் என்பானது மூதூரைப் போல; வளமான வெள்ளாம்பலோடு ஒத்துத் தோன்றும் நெருக்கிக் கட்டின தழையுடை தன் தொடையில் மாறி மாறி அலைத்து மோத;  இளவயதினளாகிய அப்பெண் வீடுதேடி வந்து விடுவாளே’ என்று தயங்குகிறாள். இங்கு பனைமரம் பூத்துக் காய்த்து மென்மையான நுங்குடன்  இருப்பது அப்பெண்ணின் இளமை, அழகு, இன்பம்  அனைத்தையும் உள்ளுறுத்தி  அமைகிறது. அவளது ஆடை அலங்காரம் பற்றிய வருணனை தலைவியின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது. இவ்வளவு இளமையும் அழகும் வாய்த்த பெண்ணைத் தலைவன் தவிர்க்க மாட்டான்; அவளும் வீடு தேடி வரத்  தயங்க மாட்டாள். அப்படி வந்து விட்டால் பின்னர் என்ன ஆகும்? என்று வினவுகிறாள். பண்டைத் தமிழ்ச் சமுதாயத்தில் இல்லறத்தில் ஈடுபடும் பெண்டிர் எதெற்கெல்லாம் பயந்து இருந்தனர் என்பதுடன்; ஆடவரின் புறத்தொழுக்கம் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தியது என்ற அவலம் இப்பாடலில் வெளிப்பட்டுச் சமூகநிலையைக்  காட்டுகிறது.

    உவமையில் கேளிர்

    பொருள்வயிற் பிரிய நினைக்கும் தலைவனிடம் செலவு அழுங்கக் கூறும் தோழி;

    “மேல்நின்று மெய்கூறும் கேளிர்போல் நீசெல்லும்” (கலி.- 3)

    ‘கானமே உன் செலவை விலக்கும்’ என்கிறாள். உனக்கும் மேம்பட்டவராக நின்று இடித்துரைக்கும் நண்பர்  கூட்டம் போல நீ செல்லும் காடு உன்னைத் தடுக்கும் என்ற உவமையில் கேளிர் தலைவனை நெறிப்படுத்தும் மேன்மை மிகுந்த நண்பர் குழுவினர் ஆவர்.

    வேட்கை மிகுந்த தலைவன் தோழியிடம் ஏதோ கூற நினைக்கிறான். ஆனால் வார்த்தை வரவில்லை. அவனது வாய்ச்சொற்களை எதிர்பார்த்துத் தோழி அவனது முகத்தை நோக்கும் போது அவளது பார்வையைக் கூடத் தாங்கமாட்டாமல் நிலத்தை நோக்கினான். இந்த மென்மையான நுட்பமான உணர்வுப் போராட்டத்தை  அழகான உவமை மூலம் தோழி உரைக்கிறாள்.

    “அல்லல் களைதக்க கேளிர் உழைச் சென்று” (கலி.- 61)

    ‘தம் வருத்தத்தைக் களையத்தக்கவர் என்று நினைத்து வாய்விட்டுப் பேசத் தொடங்கிப்; பின்னர் முழுவதுமாக உரைக்க மாட்டாமல் தடுமாறுவது போலத் தலைவன் பலமுறை என்னைப் பார்த்தான்’ என்று புனைகிறாள். இவ்உவமையில் இடம்பெறும் கேளிர் உறவினர் ஆவர். இதுபோல் உவமையில் கேளிர் இடம்பெறும் பிற பாடல்களும் உள (கலி.- 149).

    முடிவுரை

    தலைவன், தலைவி, சேரிப்பரத்தை முதலியோர் ‘கேள்’ என்னும் உறவுமுறைப் பெயர்ச் சொல்லால் குறிப்பிடப்படுகின்றனர். உரையாசிரியர் சுற்றம் என்று குறிப்பிடும் கேளிர் என்னும் பன்மைப் பெயர்ச்சொல் தொகைப் பாத்திரமாகிக் கிளையல்லா உறவினரையும்  நண்பரையும் தன்னுள் அடக்கிக் கொள்ளக் கூடியது. உரையாசிரியர் கேளிர் என்ற சொல்லுக்குப் பாங்கன் என்று பொருள்  கூறுவது ஏற்புடைத்தன்று. பாங்கன் ஒரு துணைப்பாத்திரமாகும். எனினும் நண்பரைக் குறிக்கும் கேளிர் சிறுபாத்திரம் ஆவது குறிப்பிடத்தகுந்தது.  ‘கள்ளின் கேளிர்’ என்று குறிப்பிடப்படுபவர் கள்ளை இறக்கச் சென்ற சுற்றம் ஆகும். பண்டைத் தமிழ்ச் சமுதாயத்தில் இல்லறத்தில் ஈடுபடும் பெண்டிர் எதெற்கெல்லாம் பயந்து இருந்தனர் என்பதுடன்; ஆடவரின் புறத்தொழுக்கம் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தியது என்ற அவலம் கேளிர் பற்றிய குறிப்பு இடம்பெறும் பாடலில் வெளிப்பட்டுச் சமூக நிலையைக்  காட்டுகிறது. கேளிர்  பற்றிய குறிப்பு செவ்விலக்கியக் காலக் குடும்ப அமைப்பைத் துல்லியமாகக் காட்ட உதவுகிறது. பின்புலத்திலும் உவமைகளிலும் கேளிர் இடம்பெறுவதுண்டு.

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 17 (தமர்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 17 (தமர்)

    ச.கண்மணி கணேசன் (ப.நி.),
    முன்னாள் முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    அகஇலக்கியச் சிறுபாத்திரங்களுள் சுற்றம் எனப் பொருள்படும் தமர் பற்றியும்; அவர் பேசியமை  பற்றியும் பிற பாத்திரங்கள் பேசுகின்றன. தமர் நேரடியாகப் பாடல் காட்சியில் இடம் பெறுவதில்லை. அளவில் பெரிய தொகைப்பாத்திரமாகிய தமர் சூழலுக்கு ஏற்ப அகஇலக்கியத்தின் ஏதேனும் ஒரு குழுப்பாத்திரத்தையோ அல்லது சில பல குழுப்பாத்திரங்களையோ தன்னுள் அடக்கும் தன்மை  உடையதாக உள்ளது. யாருடைய கூற்று; யாரை நோக்கிய கூற்று என்பதை அடியொட்டி ‘நுமர்’ என்றோ ‘எமர்’ என்றோ வடிவமாற்றம் பெறுவது மற்றோரு தன்மை ஆகும்.

    சுற்றம் எனப்  பொருள்படும் தமர்

    தலைவனிடம் இரவுக்குறி நேரும் தோழி அதிலிருக்கும்  வசதி பற்றிப் பேசும்போது;

    “தமர் தம் அறியாச் சேரியும் உடைத்தே” (நற்.- 331)

    என்கிறாள். சுற்றத்தார் கூட ஒருவரை ஒருவர் அடையாளம் காண இயலாத சேரியில் இரவில் சந்தித்தால் எந்த ஒரு இடையூறும் நேராது என்று குறிப்பாகச் சொல்கிறாள். புறஇலக்கியத்திலும் தமர் சுற்றத்தைக் குறிக்கும் உறவுமுறைச்  சொல்லாகப் பயின்று வந்துள்ளது.

    “தமர்தம் அறியா அமர் மயங்கு அழுவம்” (புறம்.- 294)

    எனப் போர்க்களத்தின் தன்மை எடுத்துரைக்கப்படுகிறது. ‘இவர் நம்  சுற்றத்தார்’ என்று அடையாளம் காண இயலாமல் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்ளும் இடம் என்பதே பொருளாகும். அச்சுற்றம் ஒவ்வொரு சூழலிலும்  வெவ்வேறு உறுப்பினர்களைக் கொண்டு இலங்குவதை அகஇலக்கியம் முழுவதிலும் காண இயல்கிறது.

    நுமர் ஆகும் தமர்

    காதலைப் புரிந்து கொள்ளும் பருவம் எய்தாத பெண்மகள்; மனதில் வேட்கையைத் தூண்டும் பேரழகுடன் அலைவது பற்றித் தருக்கித் தன்னுள் சொல்லி இன்புறுபவன்;

    “நீயும் தவறிலை நின்னைப் புறங்கடைப்
    போதரவிட்ட நுமரும் தவறிலர்” (கலி.- 56)

    என்று படைத்த இறைவனைத் தவறுடையவனாகப் பழிசுமத்தும் போது; அவளது தமரை ‘நுமர்’ என்கிறான். இது போல் தலைவியின் சுற்றத்தை ‘நுமர்’  என்று அழைக்கும் பிற பாடல்களும் உள (கலி.- 58, 112).

    எமர் ஆகும் தமர்

    தமர் தொழில் நிமித்தம் சென்றுவிடுவர் என்று குறியிடமும் நேரமும் பற்றிப் பேசிக் குறிப்பாக வரைவு வற்புறுத்தும் போது;

    “எமரும் வேட்டம் புக்கனர் அதனால்” (நற்.- 67)

    என்ற தோழியின் பேச்சில் தலைவியின் தமர் ‘எமர்’ ஆகின்றனர். தலைவனும் தலைவியும் தத்தம் சுற்றத்தை ‘ஏமர்’ என்று அழைக்கும் பிற பாடல்களும் உள (கலி.- 105,110, 112& 114)

    தமரின் பேச்சு

    மிகவும் செல்லமாக வளர்ந்த தலைவி; எந்த அளவுக்கு எனின் அந்தச் செல்வமிகுந்த பெருமனையில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த கிளையினர் அனைவரும் அவளைக் கொஞ்சிக் கொஞ்சி வளர்த்தனர். அவர்கள் கொஞ்சியதையே தோழி பாராட்டு என்கிறாள்.

    “தாயுடை நெடுநகர் தமர் பாராட்ட” (அகம்.- 310)

    அமைந்த வளர்ப்பு அவளிடத்தில் மடமையை மிகுவித்துள்ளது என்று தலைவனிடம் அவளது போக்கிற்கு விளக்கம் அளிக்கிறாள் தோழி. ‘தலைவிக்கு உன்னிடத்தில் மிகுந்த மயக்கம் உள்ளதெனினும் அச்சமும் நாணமும் விஞ்சியுள்ளது’ என்பதைக் குறிப்பாகப் புலப்படுத்துகிறாள். உமணரின் உப்புவண்டியோடு வந்த பேடை அஞ்சியோடும்படி இடிபோல ஒலித்துக் கடலலை எழுந்து சிதறி விழுகிறது என்ற இடப்பின்புலம் தோழி வெளிப்படையாகச் சொல்லாத நாணத்தின் காரணத்தையும் அச்சத்தையும் தலைவனுக்கு மட்டுமின்றி நமக்கும் தெளிவிக்கின்றன. இப்பாடல் தமரின் பாராட்டைக் குறிப்பிடுவதன் மூலம் தமரின் பேச்சைக் குறிப்பாகப் புலப்படுத்துகிறது.

    “ஆர்வுற்று எமர் கொடை நேர்ந்தார்” (கலி.- 104)

    என்று சுற்றத்தார் மகட்கொடைக்குச் சம்மதித்ததைச் சொல்லும் போதும் அவரது பேச்சு குறிப்பாகவே புலப்படுகிறது.

    தலைவன் பாணனின் தமராதல்

    குறித்த காலத்தில் திரும்பாத தலைவனை எண்ணி ஆற்றி இருக்கும் தோழி பாணனிடம் பேசும்போது;

    “கைவல் சீறியாழ் பாண நுமரே
    செய்த பருவம் வந்து நின்றதுவே” (ஐங்.- 472)

    என்று தலைவன் தனக்கு ஏதிலன் என்பது போலவும் அவனைப் பாணனின் சுற்றம் என்பது போலவும் பேசுகிறாள்.

    பெற்றோர் தலைவியின் தமராதல்

    நடக்கவிருக்கும் திருமணம் பற்றிய எதிர்பார்ப்புடன் பேசும் தலைவன்; தன் காதலியிடம் அவளது பெற்றோரை ‘நுமர்’ என்று சுட்டி; அவர்கள் மகளின் கையைப் பிடித்துத் தன்னிடம் ஒப்படைப்பதை;

    “நேரிறை முன்கை பற்றி நுமர்தர” (குறிஞ்சிப்.- அடி- 231)

    இல்லறம் தொடங்கலாம் என்று கூற; அதைத் தோழி செவிலிக்கு எடுத்துச் சொல்கிறாள். இன்றும் பல சமூகங்களின் திருமணநிகழ்ச்சிகளில் ‘கைப்பிடித்துக் கொடுத்தல்’ எனும் சடங்கு நடைமுறையில் இருப்பது நினைந்து இன்புறத்தக்கது. இச்சடங்கு ஈராயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்தது என்பதைத் தொகைநூற் தரவு காட்டுகின்றது.

    முதலிரவு பற்றிக் கற்புக் காலத்தில்  ஊடலின் போது சிந்தித்துப் பார்க்கும் தலைவன்;

    “தமர் நமக்கு ஈந்த தலைநாள் இரவின்” (அகம்.- 136)

    எனத் தன் நெஞ்சிற்குச் சொல்லும் போதும் பெற்றோரே தமர் எனச்  சுட்டப்படுகின்றனர்.

    குடும்பத்தார் தலைவியின் தமராதல்

    தலைவி பற்றித் தன் நெஞ்சோடு பேசிக் கொள்ளும் தலைவன் ‘அவள் இரவுக்குறியில் தன்னோடு இருக்கும் போது தனக்கு ஒத்தவளாகவும்; விடிந்த பிறகு அவளது குடும்பத்தாரோடு ஒத்தவளாகவும்; ஆக இருவேறு நடத்தையை உடைய கள்வியாகத் திறம்பட நடந்து கொள்கிறாள்’ என்று வியக்கும்போது;

    “தமர் ஓர்அன்னள் வைகறையானே”  (குறுந்.- 312)

    எனக் குடும்பத்தாரை அவளது தமர் என்கிறான். இக்குடும்பத்துள் கூட்டுக் குடும்ப உறுப்பினர்களாய்த்  தலைவியின் பெற்றோர், உடன்பிறப்புகள்,  பங்காளிகள், பெற்றோரைப் பெற்ற  ஆயி ஐயன் அனைவரும் அடங்குவர்.

    ஆயர் குலப்பெண் மோர் விற்றுக்கொண்டு வருகிறாள். அவளிடம் மோர் வாங்கும் பெண்கள் ஒவ்வொருவரும் தம் மனையின் வாயிலை அடைத்து நின்றுகொண்டு; தம் கணவர் அவள் பின்னே தொடர்ந்து செல்லாதவாறு காக்கின்றமையை; அவள் மேல் மையல் கொண்ட தலைவன் காண்கிறான். அவளின் மயிர்முடியில் அவளது தமர் கட்டிச் சூட்டிய கண்ணி அழகூட்டுகிறது.

    “பண்ணித் தமர்தந்து ஒருபுறம் தைஇய” (கலி.- 109)

    அக்கண்ணியைச் சுமக்க மாட்டாதவள் போல மோர்க்குடத்தைச்  சுமந்து கொண்டு ஒயிலாக வரும் தோற்றம் கண்டு பெண்களே மருளுகின்றனர். ‘விரைவில் உன் கிளையோடும் சென்று சேர்க’ என்று சொல்லி அனுப்புகின்றனர். இங்கே ‘தமர்’ அவளது கிளையுடன் கூடிய குடும்பத்தைச் சுட்டுகிறது என்பதைப் பாடலின் பிற்பகுதி மூலம் அறிகிறோம்.

    மடலேறியேனும் தான் விரும்பிய பெண்ணை மணக்க முடிவு செய்த   தலைவனுக்கு;

    “…. …. வழுதிக்கு அருந்திறை
    போலக் கொடுத்தார் தமர்” (கலி.- 141)

    என்று அச்சத்துடன் பெண் கொடுத்தவர் பெற்றோரும் கிளையும் சேர்ந்த தமர் எனலாம். ஒரு ஆண் ஊரார் முன்னர் அறிவித்து; ஒரு பெண்ணை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டிக் கேட்டுவிட்டால்; அதன் பின்னர் அந்தப் பெண்ணின் இல்லற வாழ்க்கை நலம் கேள்விக்குறியாக அக்காலத்தில் இருந்தமை இதனால் தெளிவாகிறது.

    தலைவியின் நட்பு வீட்டில் உள்ளவர்க்குத் தெரிந்தக்கால் அவளைக் குடும்பத்தினர் கண்காணிப்பது இயற்கையே. அத்தருணத்தில்;

    “தமரின் தீராள் என்மோ” (குறுந்.- 392)

    என்று தும்பியிடம் பேசுவதுபோல் சிறைப்புறம் நின்ற தலைவனிடம் தெரிவிக்கிறாள் தோழி. இங்கும் தமர் ஒரே பெருமனையில் வாழும் கிளை  கூடியிருக்கும் குடும்பத்தையே சுட்டுகிறது.

    பெற்றோரும் உடன்பிறப்புகளும் தமராதல் 

    தமரில் பல திறத்தவர் அடங்குவர். அவர்களுள் இரத்த சம்பந்தமுள்ள உறவுடையவரும் இருப்பர்; அப்படி இல்லாதவரும் தமராதல் உண்டு என்பதைக் குறிப்பாகப் புலப்படுத்துவதற்கு ஏற்ப;

    “பிறந்த தமரிற் பெயர்ந்து ஒரு பேதை
    பிறங்கல் இடையிடை புக்குப் பிறழ்ந்து …
    செல்குவள் ஆங்கு தமர் காணாமை” (பரி.- 19)

    எனத் திருப்பரங்குன்றின் மேல் விழாக்காலத்தில் ஏறித் தொலைந்து நின்ற பேதைப்பெண் பற்றி வருணிக்கிறது ஒரு பாடல். அவள் ‘பிறந்த தமரை’ விட்டுப் பிரிந்தாள் என்பதால் குருதித் தொடர்புடைய பெற்றோரும் உடன்பிறப்புகளும் மட்டுமே இங்கு தமர் என்று குறிப்பிடப்படுகின்றனர். இப்பாடலின் புனைவில் திருவிழாவில் தொலைந்து போன குழந்தையின் அவசமும்  செயலும்  மிக இயல்பாக வருணிக்கப் பட்டுள்ளது.

    தோழியர் தலைவியின் தமராதல்

    தலைவனோடு நட்பு பாராட்டிப் பின்னர் தயங்கும் தலைவியிடம்;

    “நீயும் கண்டு நுமரொடும் எண்ணி
    அறிவறிந்து அளவல் வேண்டும்” (நற்.- 32)

    என்று அறிவுரைக்கிறாள் தோழி. ‘முன்பு நட்டு இப்போது விலகுதல் தகாது. என் சொற்கள் உனக்கு ஏற்புடைத்தாகத் தோன்றவில்லை எனில் நீயே யோசித்துப் பார்; அத்துடன் பிற தோழியரோடு ஆராய்ந்து அவனிடம் அளவளாவுவாயாக’ என்று வழிகாட்டும் தோழி கூறும் ‘நுமர்’ தோழியர் ஆவர். புராணச்செய்திகளை மிகுதியாகக் கொண்ட பரிபாடல் வள்ளியின் தோழியராகும்  கொடிச்சியரை ‘வள்ளி தமர்’ என்கிறது (பா.- 9- அடி- 67).

    மங்கலப் பெண்டிர் தலைவியின் தமராதல்

    திருமணம் என்னும் மங்கல நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுள் சுமங்கலிகளாகிய; பெற்றவள்,  கிளையுள் இருக்கும் பெண்டிர், கிளையல்லாத சொந்தத்தில் இருக்கும் பெண்டிர், உறவல்லாத ஊர்ப் பெண்டிர் அனைவரும் அடங்கும் வாய்ப்புளது. அவர்கள் மணப்பெண்ணை வாழ்த்தியமை;

    “பேரில் கிழத்தி ஆகெனத் தமர்தர” (அகம்.- 86)

    என்ற தலைவன் பேச்சில் இடம்பெறக் காண்கிறோம். தோழியிடம் பண்டு நடந்ததை நினைவுகூரும் தலைவன்; ‘மக்களைப் பெற்ற மகராசிகள்’ என்ற இக்கால வழக்கை ஒட்டி; பிள்ளைப்  பேற்றினால் தம் வயிற்றில் சுருக்கக் குறிகளைப் (stretch marks) பெற்ற வாழ்வரசிகளைச் சுட்டி அமைகிறான். இன்றும் திருமண நிகழ்ச்சிகளில் இத்தனை வகைப்பட்ட பெண்களும் முதலிடம் பெறுவதைத் தமிழ்ச் சமூகத்தில் காண இயல்கிறது. இப்பாடலில் மணப்பெண்ணின் தமர் மங்கலப் பெண்டிர் ஆகின்றனர்.

    கிளையும் கிளையல்லா உறவினரும் தலைவியின் தமராதல்

    மகட்போக்கிய செவிலி தன் குறைபாட்டை வெளிப்படையாகக் கூறி அரற்றுகிறாள்.  தலைவியின் மனநிலையை அறிந்து கொள்ளத் தனக்குத் தெரியவில்லை என்று புலம்பித் தவிக்கிறாள். கூந்தலை ஒப்பனை செய்து கொள்ளச் சொன்ன தன்னைப் புலந்த தலைவியின் உட்கிடக்கையைப் புரிந்து கொள்ளத் தெரியாத அவலத்தைக் காரியம் கைமீறிய பிறகு எண்ணி உளம் வருந்துகிறாள்.

    “தமர் மணன் அயரவும் ஒல்லாள்” (அகம்.- 369)

    எனத் திருமண ஏற்பாடு நடந்த பின்னரும்; அவள் மனம் ஒருப்படாமல்  தான் விரும்பிய தலைவனோடு சென்று விட்டமை குறித்துப் பேசும் அவள்; தன்னைத் தானே நொந்து கொள்கிறாளே அன்றி மகளைக் குறை கூறவில்லை. சுற்றத்தார் செல்வ மனையைப் புதுப்பித்து மணவிழா நடந்தேற ஆயத்தம் செய்தனர் என்பதால்; மணவினை தொடங்கி அது   நடந்தேறும் முன்னர் அவள் தலைவனுடன்  போய்விட்டாள் என்பது தெளிவாகிறது. அதனால் இங்கே ‘தமர்’ திருமணத்திற்கு முதலிலேயே வந்து சேரும் சொந்தபந்தம் அனைத்தையும் சேர்த்தே சுட்டுகிறது.

    தாயாதிகள் தலைவனின் தமராதல்

    ‘மணந்து கொள்வேன்; வாக்குத் தவற மாட்டேன்; அதுவரை தலைவியைப் பேணிப் பார்த்துக் கொள்வாயாக’ என்று கூறிய தலைவன் சொற்களை நம்பிக்கையுடன் ஏற்றுத் தொடர்கிறாள் தோழி. உலக்கைப்பாட்டில்  தலைவனின் குடிப்பெருமையைப் பாடிக்கொண்டே  குற்றும் பின்புலத்தைக் காட்சிப்படுத்துகிறாள். பின்னர் தொடர்ந்து மேலான ஒழுக்கம்  உடையவரின் சொல்லும் செயலும் நடைமுறைப் படுத்தப்படும் முறையை விளக்கிப் பேசும் போக்கு குடிச்சிறப்பைக் கூறுவதால்;

    “காஞ்சி நீழல் தமர்வளம் பாடி…….
    அறனும் பொருளும் வழாமை நாடித்
    தன் தகவுடைமை நோக்கி மற்று அதன்
    பின் ஆகும்மே முன்னியது முடித்தல்
    அனைய பெரியோர் ஒழுக்கம்” (அகம்.- 286)

    என்ற பாடற்பகுதியில் இடம்பெறும் தமர் ஒரு குடியின் தாயாதிகளைக் குறிக்கிறது என்பதே பொருந்துகிறது. தாயாதிகள் பல தலைமுறைகளைச் சேர்ந்த கிளையினராக ஒரே குடியின் வழிவந்தோராவர்.

    உற்றார், தமையர், கிளை, உறவினர் அனைவரும் தலைவியின் தமராதல்:

    காதலியை உடனழைத்துக் கொண்டு காட்டு வழியாகத் தன் ஊர் செல்லும் தலைவன் அவளை ஓய்வெடுக்கச் சொல்லும் போது;

    “அமர் வரின் அஞ்சேன் பெயர்குவென்
    நுமர்வரின் மறைகுவென் மாஅயோளே” (நற்.- 362)

    என்று வெளிப்படையாகத் தன்  மனத் தடுமாற்றத்தையும் நடுக்கத்தையும்  காட்டிப் பேசுங்கால்; தலைவியைத் தேடி வரும் அவளது சுற்றத்தாரை எண்ணி அஞ்சுவது வெளிப்படை. உடன்போகும் தலைவியைத் தேடி வரும் சுற்றத்தில் தமையர், கிளையோடு பிற உறவினர், ஊரார், இளையர், நண்பர் என எல்லோரும் அடங்குவர் என்பதே தலைவனின் அச்சத்திற்குரிய காரணம் ஆகிறது. தனியொருவனாக அவளை அழைத்துச் செல்லும்போது அவன் சண்டைக்கு அஞ்சவில்லை ஆயினும்; அவனது மனத்திண்மைக்குச் சவாலாக அமைவது தமரின் பெருங்கூட்டம் எனில் மிகையாகாது. இக்கருத்தை அரண் செய்யும் இன்னொரு சான்றுப்பாவும் உளது. அது கற்புக்கால   நிகழ்ச்சியாக அமைந்து நகை ஊட்டுகிறது. பிரிவை உணர்த்துகிறான் தலைவன்; அவன் செல்ல வேண்டிய காடு தலைவி கண்முன்னர் தோன்றி மயக்கத்தைத் தருகிறது. ஏனெனில் அவள் தலைவனோடு அதே காட்டுவழியில் வந்து தான் இல்லறத்தைத் தொடங்கினாள். அப்போது ஆறலைப்போரால் ஏற்பட்ட துன்பத்தைத் தலைவன் தனியொருவனாய் எதிர்கொண்டே  நீக்கிவிட்டான்; ஆனால் தலைவியின் தமர் தேடி வந்தபோது ஒளிந்து கொண்டான்.

    “அமரிடை உறுதர நீக்கி நீர்
    எமர் இடை உறுதர ஒளித்த காடே” (நற்.- 48)

    என்ற தலைவியின் மறுப்பில் தான் அதை மறக்க முடியாத காரணம் எதனால் என்பது குறிப்பாக இடம்பெற்றுச் சுவை கூட்டுகிறது.

    தாய்வீட்டார் மணம்முடிந்த பெண்ணின் தமராதல்

    பறவைக்கூட்டம் மரக்கொம்பில் இருந்து கொண்டு; விளையாடும் மகளிர் தம்மை அலைத்தமை பற்றி அவர்களது சுற்றத்தார்க்குக்  கூறுவன போல் பலகாலும் பல ஒலிகளை எழுப்பிய ஊரினை உடையவன் தலைவன் என்ற இடப்பின்புலத்தில் இடம்பெறும் தமர் தலைவியின் தாய்வீட்டார். ஏனெனில் தலைவனின் புறத்தொழுக்கம் பற்றிய பாடலில்

    “தமர்க்கு உரைப்பன போல் பல்குரல் பயிற்றும்”  (கலி.- 75)

    என்ற பறவைகளின் ஆரவாரம் பற்றிய வருணனை உள்ளுறுத்தி அமைவது; அன்றாடம் ஒரு பெண்ணைத் தேடும் தலைவனின் பரத்தமை தலைவியின் தமரது காதுகளைச் சேர்வதைத் தவிர்க்க இயலாது என்பதாம்.

    புகுந்த வீட்டார் தலைவியின் தமராதல்

    புறத்தொழுக்கத்தை நீட்டிக்கும் தலைவனை இல்லத்திற்கு மீட்டு வரவழைக்க எண்ணும் தோழியிடம் தலைவி ‘அது தேவையற்றது; என் துன்பம் எமர்க்குத் தெரியக் கூடாது; அது போதும்’ என்கிறாள்.

    “நோய்மலி வருத்தம் காணன்மார் எமரே” (நற்.- 64)

    என அவள் தன் துன்பத்தைக் குடும்பத்தாரிடம் மறைக்க நினைக்கிறாள். ‘எமர்’ என்று அவள் சுட்டுவது புகுந்த வீட்டாரையே ஆகும்.  இவ்விடத்தில் சிலப்பதிகாரக் கண்ணகி மதுரை சேர்ந்தவுடன் கோவலனிடம் பேசிய சொல்லும்  மனநிலையும் செயலும் ஒப்பு நோக்கத்தக்கன.

    ஊரார் தலைவியின் தமராதல்

    இரவுக்குறியில் துய்க்கும் தலைவனை வரைவிற்குப் பக்குவமாகத் தூண்டும் தோழி அவனிடம் ஊரிலுள்ள பரதவர் அனைவரும் வேட்டைக்குக் கடல்மேற் சென்று விட்டதைக் குறிப்பிட்டு; இரவில் அவன் தன் இருப்பிடத்திற்குத்  திரும்புவதில் உள்ள சிக்கல்களைக் கூறி ‘எங்கள் ஊரில் விருந்தினன் போல வந்து தங்கிச் செல் என்கிறாள்.

    “இன்று நீ இவணை ஆகி எம்மொடு
    தங்கின் எவனோ தெய்ய செங்கால்
    கொடுமுடி பரியப் போகிய
    கோட்சுறாக் குறித்த முன்பொடு
    வேட்டம் வாயாது எமர் வாரலரே” (நற்.- 215)

    ‘வளைத்து முடியிட்ட வலை கிழியும்படி இடர் செய்த சுறாவைக் கொல்லாமல் எம் ஊரார் யாரும் திரும்ப மாட்டார். ஆகையால் ஊருக்குள் வந்து தங்குவதில் உனக்குச் சிக்கல் எதுவுமில்லை’ என்று தோழி தலைவனுக்கு உறுதியளிப்பதால் அவள் கூறும் ‘எமர்’ ஊராரே. இதே போக்கில் மேலும் சில பாடல்கள் உள்ளன (அகம்.- 300; நற்.- 49)

    பரத்தையர் தலைவனின் தமராதல் 

    புறத்தொழுகிய பின் மனைவியைச் சேர நினைத்துக் கெஞ்சும் தலைவனிடம் தோழி பரத்தையரை அவனது தமர் என்கிறாள்.

    “அகலநீ துறத்தலின் அழுதுஓவா உண்கணேம்
    புதல்வனை மெய்தீண்டப் பொருந்துதல் இயைபவால்
    நினக்கொத்த நல்லாரை நெடுநகர்த் தந்துநின்
    தமர்பாடும் துணங்கையுள் அரவம்வந்து எடுப்புமே” (கலி.- 70)

    என்ற பாடலில்; நீண்ட காலமாகத் தலைவியைத் துரந்த தலைவனிடம் பேசும் தோழி; ‘புதல்வனை அணைத்துக் கொண்டு தூங்க முயன்ற தலைவியை அவனது பரத்தையர் பாடி ஆடிய துணங்கையின் ஆரவாரம் தூங்க விடவில்லை’ என்ற மனக்கசப்பின் வெளிப்பாடு இடம் பெற்றுள்ளது. அத் துன்பமிகு உரையில் பரத்தையரைத் தலைவனின் தமர் என்று சுட்டுகிறாள். அதுவும் அந்தப் பரத்தையர் தலைவனின் மனைக்கு நேரில் வந்து பாடி ஆடினர் என்னும் செய்தி அன்றைய சமூகப்பழக்கத்தைக் காட்சிப்படுத்துகிறது.

    ஏவலிளையர் தலைவனின் தமராதல் 

    போர் மேற்சென்ற தலைவன் மனைக்குத் திரும்புங்கால்; தன்னுடன் வந்து போரில் பங்கேற்றுத் துணைசெய்த இளையர்; தனக்கு முன்னர் சென்று மனையாளிடம் தன் வரவை உரைப்பின்; அவள் மகிழ்ச்சி அடைவாள் என்று பாகனிடம் கூறும் போது;

    “தமர் விரைந்து உரைப்பக் கேட்கும் ஞான்றே” (அகம்.- 144)

    என்கிறான். (பார்க்க- அகஇலக்கியச்  சிறுபாத்திரம்- இளையர்) இங்கு தலைவனுக்கு அவனது ஏவலராகிய கூலிப்படையினரே தமர் ஆகின்றனர்.

    நண்பர் தமராதல்

    வென்ற வேந்தருக்குத் திறை செலுத்தி மன்னர் நண்பர்  ஆயினமை அகப்பாடல் தலைவனின் கூற்றாக அமைகிறது.

    “தம் திறை கொடுத்துத் தமர் ஆயினரே” (அகம்.- 44)

    என்று வேந்தனுக்காக வினைமேற் சென்ற தலைவன் தன் மனைக்குத் திரும்பும் போது கூறுகிறான். இப்பாடலில் பெரும்பூட்சென்னி கணையன் என்ற மன்னனை வீழ்த்திக் கழுமலத்தைக் கைப்பற்றிய செய்தி உள்ளது. கணையன் திறைப்  பொருளைக் கொடுத்து சோழ வேந்தனின் நண்பன் ஆயினமையால் தமராயினான்

    கரும்பனூர் கிழானின் குறும்பல் குறும்பில் இருந்த இயந்திரப் படுபுழைக்குள் நண்பர் யாவராயினும் நுழையலாம் என்பதை;

    “தமரெனின் யாவரும் புகுப” (புறம்.- 177)

    என்றே புலவர் பாடியுள்ளார்.

    இனத்தார் தமராதல்

    ஆயர்குலப் பெண் தலைவனுடன் பேசும்போது;

    “ஆயர் எமரானால் ஆய்த்தியேம்  யாம்மிக” (கலி.- 108)

     என்று பேசுவதில் ‘எமர்’ ஆயர் இனத்தைக் குறிக்கிறது.

    “நல்லினத்து ஆயர் ஏமர்…
    புல்லினத்து ஆயனை நீ” (கலி- 113)

    என்று பசுக்கூட்டம் மேய்க்கும் ஆயரும்; ஆடு மேய்க்கும் ஆயரும் தொழில் அடிப்படையில் பிரித்துப்  பேசப்படினும் அப்பிரிவில் உயர்வு தாழ்வு கற்பிப்பதால் அங்கு சாதி வேறுபாடு தலை தூக்குவதைத் தலைமாந்தர் இடையே நிகழும் உரையாடல் காட்டுகிறது.

    “கோட்டினத்து ஆயர்மகனோடு யாம் பட்டதற்கு
    என்கண் எமரோ பொறுப்பர் பொறாதார்
    தம்கண் பொடிவது எவன்” (கலி.- 105)

    என்று தான் எருமைக்கூட்டம் மேய்க்கும் ஆய்மகனோடு கொண்ட நட்பைத் தனது சுற்றத்தார் ஏற்றுக்கொண்டாலும் விமர்சனம் செய்யும் பிறர் சொற்களைத் தான் கண்டுகொள்ளப் போவதில்லை என்று வாதிடும் தலைவியின் தாய் அவளைக் கண்களாலேயே கோல்கொண்டு புடைக்கிறாள். இப்படிக் குழப்பம் ஏற்படக் காரணம் இப்பாடல்கள் தோன்றிய காலத்தில் நிலவிய சாதி வேறுபாடு என்பதைப் புறப்பாடல்கள் நிறுவுகின்றன.

    “எமர்க்கும் பிறர்க்கும் யாவராயினும்
    கொடைக்கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன்” (பதி.- 20)

    இமயவரம்பன் ஆவான் என்று புகழும் குமட்டூர் கண்ணனார் ‘எமர்’ என்று சுட்டிக் கொள்வது தன் இனத்தவரை ஆகும். இங்கு பரிசில் வாழ்க்கை உடைய கூத்தர், பொருநர், விறலியர் ஆகியோர் பிறர் என்று சுட்டப்படுவதால் பாடும் அவர் பாணர் இனத்தைச் சேர்ந்தவர் ஆகிறார்.

    கபிலர் பாரிமகளிரை அழைத்துக் கொண்டு இருங்கோவேளிடம் சென்று அவர்களை மணந்து கொள்ள வினவிய பொழுது பாரியை;

    “நுமருள் ஒருவன்” (புறம்.- 202)

    என்கிறார். வேள்பாரியும் இருங்கோ வேளும் ஒரே இனத்தவர் என்பதைத் தான் ‘நுமர்’ என்னும் சொல்லால் குறிக்கிறார். செவ்விலக்கியக் காலத்தில் ஜாதிப்பாகுபாடு இருந்தது என்பதற்கு இது தக்க சான்றாகிறது.

    தலைவன் மேல் ஊடல் கொண்டு பேசும் பரதவர் குலப்பெண் எமர் என்ற சொல்லிற்குப் பதிலாக எம்மனோர் என்ற சொல்லைப் பயன்படுத்திச் சாதி வேறுபாட்டைக் குறிப்பிடுகிறாள்.

     “எம்மனோரில் செம்மலும் உளரே” (நற்.- 45)

    என்ற அவளது கூற்றில் ‘எம்மனோர்’ எமருக்கு ஈடாவர்.

    முடிவுரை

    அளவில் பெரிய தொகைப்பாத்திரமாகிய தமர் நேரடியாக அகப் பாடல் காட்சியில் இடம் பெறுவதில்லை. சுற்றம் எனப்படும் தமருள் ஒவ்வொரு சூழலிலும்  வெவ்வேறு உறுப்பினர்கள் இயைந்து  இலங்குவதை அகஇலக்கியம் முழுவதிலும் காண இயல்கிறது. தலைவன், இனத்தார், பெற்றோர், தமையர், குடும்பத்தார்,  கிளை, தோழியர், சொந்தபந்தம், பிறந்த வீட்டார்,  புகுந்த வீட்டார், தாயாதிகள், மங்கலப்பெண்டிர், ஊரார், பரத்தையர், இளையர், நண்பர் எனும் அனைவரிலும் சிலரையோ பலரையோ உள்ளடக்கிய உறவுமுறைச் சொல்லாகத் தமர், நுமர், எமர் ஆகிய சொற்கள் அகஇலக்கியத்தில் பயின்று வந்து சிறுபாத்திரத் தகுதியை அடைகின்றன. தலைவனின் தமராகும் பரத்தையர் அவன் மனைக்கு நேரில் வந்து பாடி ஆடினர் என்னும் செய்தி அன்றைய சமூகப்பழக்கத்தைக் காட்சிப்படுத்துகிறது. ஆயர் இனத்தவருள் சாதி வேறுபாடு இருந்தமையை நுமர், ஏமர் ஆகிய சொல்வழக்குகள் நிறுவுகின்றன. பரதவர் இனத்தில் இருந்த சாதி உணர்வு ‘எம்மனோர்’ என்ற சொற்பயன்பாட்டில் புலப்படுகிறது.  புறப்பாடல்களில் தமர் பற்றிய குறிப்புகள் குறிப்பிட்ட இனத்தைச் சுட்ட மட்டுமே பயன்பட்டுள்ளன.

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 16 (ஐயர்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 16 (ஐயர்)

    ச. கண்மணி கணேசன் (ப.நி.),
    முன்னாள் முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    சிறுபாத்திர வரிசையில் தந்தையை அடுத்து நிற்பவர் ‘ஐயர்’. இத்தொகைப் பாத்திரம் எந்தப்  பாடல் காட்சியிலும் நேரடியாக  இடம் பெறவுமில்லை; எங்கும் பேசவுமில்லை; பேசியதாகக் கூறப்படவுமில்லை. ஆனால் தலைவன், தலைவி, தோழி,  மூவரின் பேச்சிலும் ஐயரைப் பற்றிய குறிப்புகள்  உள்ளன.

    ‘ஐயர்’- பொருள் பரப்பும் விரிவும்

    ஐயர் எனும் சொல் இன்று தமிழகத்தில் ஒரு  சமூகத்தைக் குறிக்கும் சொல் ஆகும். செவ்விலக்கியக் காலத்தில் அண்ணன்களுக்கு உரிய உறவுமுறைப் பெயராக இருந்து; பின்னர் அண்ணன்மாரோடு கிளையையும் சேர்த்துச் சுட்டுவதாக விரிந்து; தொடர்ந்து தலைமைத்தன்மை உடையோர்க்குப் பொருந்துவதானது. இப்படிச் சில படிநிலைகளைத் தாண்டித் தந்தையைக் குறிக்கவும் எடுத்தாளப்பட்டுள்ளது. இன்றும் தந்தையைக் குறிக்கும் உறவுமுறைச் சொல்லாகச் சில சமூகங்களில் ஐயா என்னும் விளிமுறை வழங்கி வருகிறது.

    தம் + ஐயன் = தமையன்

    தமையன் என்பவன் அண்ணன் ஆகையால்;  ஐயன் அண்ணன் ஆவான்.  பன்மைப்பொருள் பெறும்  போது இச்சொல் ஐயர் ஆகும். இச்சொற்பிரிப்பு முறையை ஒத்துக் கொள்ள ஏதுவாக; நச்சினார்க்கினியரும் அவரை ஏற்றுத் தொடர்ந்த இளவழகனாரும்;

    “என் ஐயர்க்கு உய்த்துரைத்தாள் யாய்” (கலி.- 39)

    என்ற பாடலடியில் இடம்பெறும் ‘ஐயர்’ அண்ணன்மார் என்கின்றனர்.

    அகநானூற்றுக்கு இணைந்து உரையெழுதிய ந.மு.வேங்கடசாமி நாட்டாரும் ரா. வேஙகடாசலம் பிள்ளையும்;

    “மால் இருள் நடுநாள் போகித் தன் ஐயர்
    காலை தந்த கணைகோட்டு வாளைக்கு” (அகம்.- 126)

    என்ற அடிகள் இடம்பெறும் பாடலுக்குக்  ‘காவிரியின் மடுவில் நிலை கொள்ளாத நீரிடத்து இரவில் சென்று காலையில் தமையன்மார் கொண்டுவரும் கோடுகளை உடைய வாளைமீனுக்குப் பண்டமாற்றாகப் பாண்மகள் நெல்லை வாங்க மறுத்து; முத்துக்கள் பதித்த அணிகலனை வாங்கினாள்’ என்று பொருள் கூறியுள்ளனர். பின்புலமாக  ஐயரின் செயல் இடம்பெறும் இப்பாடல் பாணர் குலப்பெண்ணின் இயல்பான ஆசையை அழகாகக் கூறியுள்ளது.

    கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த வேளாண்மைச் சமுதாயத்தில் இச்சொல்லின் பொருள் விரிந்து  மாற்றமடைந்தது. உடன்பிறந்த அண்ணன்மார் மட்டுமின்றி ஒன்றுவிட்ட அண்ணன்கள், தந்தையின் உடன்பிறந்தோர் அனைவரையும் குறிக்கும் பொதுச்சொல்  ஆகியது. தந்தையின் பெருமை தன் பங்காளிகளாகிய கிளையைத் தாங்கும் வாழ்க்கை முறையில் உள்ளதாகவே அகப்பாடல்கள் சுட்டுவதை முன்னர்க் கண்டோம். (அகஇலக்கியச் சிறுபாத்திரங்கள்- 8 கிளை). கிளையையும் ஐயரையும் வேறுபடுத்தும் கூறு எது என்று சிந்திக்கும் போது; ஆண் முதன்மைச் சமுதாயத்தில் சொத்தைப் பங்கீடு செய்யும் உரிமையுள்ள பங்காளிகளை மட்டுமே கிளை என்னும் உறவைமுறை குறிக்க; ஐயர் தலைவியின் உடன்பிறந்த சகோதரர்களையும்  சேர்த்துச் சுட்டப் பயன்படும் பெயராக உள்ளது.

    குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்திணைகளில் எத்திணையாயினும் பங்காளிகளோடு சேர்ந்து தொழில் செய்தமையைக் கிளை என்னும் சிறுபாத்திரம் மூலம் அறிகிறோம். புன்செயில் தினை விதைக்கும் நடைமுறையைச் சொல்லும்;

    “இருங்கல் அடுக்கத்து என் ஐயர் உழுத” (நற்.- 122)

    என்ற கூற்று; வேளாண்மையில் கூடிப்  பாடுபட்டவர் உடன்பிறந்தோரும் கிளையும் சேர்ந்த தொகுதி என்று எண்ண இடமளிக்கிறது. கடலில் மீன்பிடிக்கும் வேட்டையைப் புனையும் போதும்;

    “பன்மீன் வேட்டத்து என் ஐயர் திமிலே” (குறுந்.- 123);

    என்ற பரதவப்பெண்ணின் கூற்றில் அதே உறவுத் தொகுதியைப் பொருத்தி வைத்து எண்ணுவதைத் தவிர்க்க முடியவில்லை. குறமகளை எண்ணி மாந்தளிரிடம் பேசும் தலைவன்;

    “கணமா தொலைச்சித் தன் ஐயர் தந்த” (ஐங்.- 365)

    ‘நிணவூனை உணக்குகிறாள்’ என்று சொல்லும் தலைவியின் செய்கையோடு தொடர்புறுபவர்  அவளது தமையரும் கிளையும் ஆவர் என்றே எண்ண வைக்கிறது.

    வெற்றிகரமாக அறத்தொடு நின்று காரியம் சாதித்த தோழி பொதுவனாகிய ஆயர் குலத்தலைவனுக்கு மணமுடிக்க அடை சூழ்ந்தார் யார்யாரென்று தலைவிக்கு எடுத்துக்கூறும் போது; தந்தையும்;

    “ஐயன்மார் எல்லாம் ஒருங்கு” (கலி.- 107)

    என்கிறாள். இங்கு தமையரோடு தந்தையும் கிளையும் சேர்ந்து பாக்கு வெற்றிலை மாற்றிக் கொண்ட சுபநிகழ்ச்சியே வருணிக்கப்படுகிறது.

    தலைமைத் தன்மைக்கு உரிய பெயர்ச்சொல் ஆதலால்; அறிவுடையோரைக்  குறிப்பதற்கும் ஐயர் என்ற சொல்  பயன்பட்டமை;

    “ஆசறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை” (குறிஞ்சி.- அடி- 17)

    என்ற தோழி கூற்றால் தெரிகிறது. அணிகலன் கெட்டால் திருத்தி விடலாம்; சால்பு முதலிய மக்கட்பண்புகள் கெட்டால் அதை நீக்கிப் புகழை நிறுவுதல் குற்றமில்லாத அறிவுடையோர்க்கும் அரிது என்பது அவள் வலியுறுத்தும் கருத்து ஆகும். இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர் உடன்போக்கைத் தவிர வழியே இல்லை என்ற சூழல் உருவாகும் போது;

    “………… …………. …….நின் ஐயர்

    புலிமருள் செம்மல் நோக்கி” (அகம்.- 259)

    நீ அஞ்சிப் பின்வாங்காதே; துணிந்து தலைவனோடு சென்று வா எனத் தூண்டும் தோழி; ஐயரின் ‘செம்மல்’ என்று செறிவாகக் கூறுவது; புலியை ஒத்த அச்சம் தரும் தலைமைப் பண்பைக் குறிக்கிறது.

    தான் பிடித்து வந்த பல மீன் தொகுதிகளைத் தந்தை தமையர்க்குக் காட்டுவர் என்ற நிகழ்வுப் புனைவில்;

    ”பல்மீன் கூட்டம் என் ஐயர்க் காட்டிய
    எந்தையும் செல்லுமார் இரவே” (அகம்.- 240)

    என்று இரவுக்குறியின் ஏதத்தைச் சொல்லும் போது; ஐயரும் தந்தையும் வேறுபிரித்துக் காட்டப்பட்டுள்ளனர். ஆனால் தந்தை களிற்றின் முகத்தைப் பிளந்த அம்போடு கொலைத்தொழில் தவிர வேறேதும் தெரியாத ஏவலருடன் விலங்கின் பின் சென்று விட்டதைத்  தோழி கூறும் போது “ஐயும்” (நற்.- 389) என்னும் உறவு தந்தையைக் குறிக்கிறது.

    காலப்போக்கில் ஏற்பட்ட பொருள் மாற்றம்

    முருகனைச் சுட்ட ஐயன் என்ற சொல்லைத் தோழி எடுத்தாள்கிறாள்.

    “ஐயனை ஏத்துவாம் போல” (கலி.- 43)

    வள்ளைப் பாட்டில் தலைவனைப் பாடித் தலைவியின் ஆற்றாமையைப் போக்கியது பற்றித் தோழி சிறைப்புறமாக இருந்த தலைவனுக்கு உணர்த்தும் போது ‘ஐயன்’ முருகன் ஆகிறான். ஏழாம் நூற்றாண்டளவில் துறவிகளைக் குறிப்பதற்கு ஐயர் என்ற பெயர்ச்சொல் வழங்கியது. முருகப்பெருமானின் பன்னிரு கைகளில் ஒன்று;

    “விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது”  ( அடி- 107- திரு.).

    திருமுருகாற்றுப்படை ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது; அதனால் தான் அதைப் பாடியவர் நக்கீர தேவ நாயனார் என்று அழைக்கப்படுகிறார். இங்கு முருகனின் ஒரு கை துறவிகளுக்கு அருள் பாலித்தது என்றே பொருள் கிடைக்கிறது. தீமுறை வழிபாடு செய்யும் இருடிகளை;

    “ஐயர் அவிர் அழல் எடுப்பரோ”  (கலி.- 130)

    என்று பாடியிருப்பதால் ‘ஐயர்’ வேதியரைக் குறிக்கத் தொடங்கியமையும் காண இயல்கிறது. வையை வெள்ளத்தில் நறவு கலந்ததால்;

    “ஐயர் வாய் பூசுறார் ஆறு” (பரி.- 24)

    என அந்நீரை வைத்து வாயைத் தூய்மைப்படுத்த இயலாத பார்ப்பனர் பற்றிப் பேசுவதையும் காண்கிறோம். கலித்தொகையும்  பரிபாடலும்  பிற தொகை நூல்களைக் காட்டிலும்  காலத்தால் பிற்பட்டவை  என்பதற்கு இந்தப் பொருள் மாற்றம் தக்க சான்றாகிறது.

    தலைவன் கூற்றில் ஐயர்

    கடக்கவியலாக் காமநோயால் தலைவியை மீண்டும் ஒருமுறை துய்க்க விரும்பும் தலைவனிடம் பாங்கன்; அதனால் ஏற்படும் இன்னல் என்ன என்பதைக் கூறி மட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறான். தலைவனுக்கும் அவளது ஐயர் பற்றி நன்கு தெரியும். அவர்கள் வில்லேந்திச் சீழ்க்கை ஒலியுடன் வேட்டையாடும் போது; தன் இனத்தைப் பிரிந்த பெண்மானுக்கு எதிரிலேயே அதன் இணையாகிய கலைமானை அம்பால் வீழ்த்துவர். அத்தகைய ஈரமில்லாத வாழ்க்கை முறையுடைய வேட்டுவர் இனத்தைச் சேர்ந்தவள் தலைவி. ஆனாலும் அவளது கண்ணழகு அவளை மறக்கவொட்டாமல் தடுக்கிறது. அந்தக் கண்களின் செவ்வரிகள்; அவளது ஐயர் தாம் கொன்ற கலைமானின் உடலினின்று  அம்பைப் பிடுங்கி எடுக்கும்போது; அதில் படர்ந்திருக்கும் குருதிச் சிவப்பினை ஒத்தவை; தலைவனின் மனக்கண்ணை விட்டு அகலாதவை.

    “புன்கண் மடமான் நேர்படத் தன் ஐயர்
    சிலைமான் கடுவிசைக் கலைநிறத்து அழுத்தி” (குறு.- 272)

    என்று தோழனிடம் தன் காதலின் வேதனையைக் கூறும் தலைவன் ‘ஐயர்’ என்று சுட்டுவது தலைவியின் தமையன்மாரையும் கிளையையும் உளப்படுத்தும் கூட்டத்தை  ஆகும்.

    தலைவனின் கூற்றை ஆழ்ந்து நோக்கும் போது இன்றைய செய்தித் தாள்கள் சித்தரிக்கும் கௌரவக் கொலைகள் நம் மனக்கண்ணில் தோன்றித் திடுக்கிட வைப்பதைத் தவிர்க்க முடியவில்லை. இனத்தைப் பிரிந்த பெண்மானுக்கு எதிரிலேயே ஆண்மானைக் கொல்வது; தலைவி தன் சுற்றத்தை விட்டுத் தலைவனுடன் சென்றால்; அவனும் அந்த ஆண்மானைப் போல் அவர்களது அம்புக்கு இரையாக வேண்டியிருக்கும் என்ற மறைபொருளைச் சொல்லாமல் சொல்கிறது. அதுமட்டுமன்று; பாய்ந்த அம்பைப் பிடுங்கும் கொடுமையில்; தலைவியின் கண் முன்னர் தலைவன் சித்ரவதைப்பட்டு உயிரை விட வேண்டிய சூழலும் ஏற்படும் என்ற உறுதியான எதிர்பார்ப்பை உள்ளுறையாகக்  கொண்டுள்ளது. இரண்டாயிரம் ஆண்டு காலமாகத் தமிழ்ச் சமூகத்தில் நடக்கும் காதல் திருமணம் தொடர்பான நடப்புகள் சற்றும் மாறுபடவில்லை என்ற உண்மை இப்பாடலில் பொதிந்துள்ளது. ஆயிரமாயிரம் ஆண்டுகள்  ஆனாலும் பண்பாட்டு வரையறைகளும் வாழ்க்கை முறையும் எளிதில் மாறுவதில்லை. அவ்வளவு சீக்கிரம்  மாறுபாட்டுக்கு  மனிதமனம் ஒப்புவதும்  இல்லை.

    தலைவி கூற்றில் ஐயர்

    குறமகள் மலைப்புறத்தில் விதைத்த தினை முற்றியமை பற்றிப் பேசும் போது;

    “இருங்கல் அடுக்கத்து என் ஐயர் உழுத” (அகம்.- 302)

    என்று உழவுத்தொழிலை இணைந்து செய்யும் உறவுக் கூட்டத்தைக் குறிப்பிடுகிறாள்.

    தோழி கூற்றில் ஐயர்

    மணவாழ்வில் கணவனின் புறத்தொழுக்கத்தால் நொந்து மன அழுத்தத்திற்கு ஆளான பரதவப்பெண் தன் மனஇறுக்கம் தளரத் திருமணத்திற்கு முன்னர் தான் வைத்து விளையாடிய பாவையை எடுத்துக் கொண்டு  தோழியைக் கழிக்கரைச் சோலைக்கு அழைக்கிறாள். அவளது ஐயரோ மீன் வேட்டையும் சுறாக்களைக் கொல்லுதலும் தவிர வேறேதும் அறியாத சினமிகுந்தவர் ஆவர்.

    “கல்லாக் கதவர் தம் ஐயர் ஆகவும்” (நற்.- 127)

    எனத்; தலைவியின் தமையன்மார்க்கு விபரம் தெரிந்தால் நேரவிருக்கும் முட்டல் மோதல் இங்கு பட்டும்படாமல் எடுத்துரைக்கப்படுகிறது. தலைவன் தவறே செய்யாதவன் போல வாயில் வேண்டி நிற்கிறான். தோழி கழியில் ஆர்ந்த நாரை இறகை உலர்த்தும் போது; சிதறித் தெறிக்கும் நீர்த்துளி நடுக்கத்தை ஏற்படுத்தும் நெய்தல் பின்புலத்தைச் சொல்லி; அவனது பொய்யால் மனம் நடுக்குறுவதை உள்ளுறைத்து உரைக்கிறாள். ஐயர் சினம் பற்றிய பேச்சு தலைவனை மெல்ல மிரட்டும் தொனியில் அமைந்துள்ளமை இப்பாடலின் சிறப்பம்சமாக உள்ளது.

    கொழுநன் தொழலும் ஐயர் வளமும்

    வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தலைவி தலைவனுக்குக் கற்புக்கடம் பூண்ட வரலாறு தோழிக்குத் தெரியும். சிறுகுடி மக்கள் அலருக்குக் காரணம் உள்ளது. அதைத் தலைவியின் ஐயர்க்குப் பூடகமாகச் சொல்ல முனையும் தோழி அறத்தொடு நிற்கிறாள்.

    “தாம் பிழையார் கேள்வர் தொழுது எழால் தம் ஐயரும்
    தாம் பிழையார் தாம் தொடுத்த கோல்”   (கலி.- 39)

    என்று சாமர்த்தியமாகக் காய் நகர்த்துகிறாள்.  குறமகளிர் தம் தலைவரைத் தப்பாமல் தொழுது வணங்க; அவரது அண்ணன்மார் குறி வைத்து எய்யும் அம்பு தப்பாது என்கிறாள். அவளது நோக்கம்; தலைவனுக்கும் தலைவிக்கும் திருமணம் நடக்க வேண்டும் என்பதே. தலைவியைப் பெண்கேட்டு வருகிறான் கானகல் நாடன் மகனாகிய தலைவன். தான் காப்பாற்றிய குறமகளுடன் இயற்கைப் புணர்ச்சி நடந்தேற; அறிவன், பெற்றோர், சுற்றம், ஊர்ப்பெரியோர் அனைவரையும் அழைத்துக் கொண்டு வரும் அவனிடம் மறுக்காமல் மகட்கொடை நேர வேண்டும் தலைவியின் ஐயர்.  அதைச் சாதிக்க; ஒரு சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிக்கும் உத்தியாகத்; தலைவி அவனைக் கணவனாக வாய்க்கப் பெற்றுத் தொழுதால் சிறுகுடியில் மழை பொழிய வைக்கும் திறனுடையவள் ஆவாள் என்கிறாள் தோழி.  இக் கூற்றும் கொள்கையும் தோழியின்  சொல்வன்மை என்று விளக்கப்பட்டது அந்தக் காலம். இதைப் பெண்மொழி என்று பெயர் சூட்டி ஆராய்வது இந்தக் காலம்.

    “தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது  எழுவாள்
    பெய் எனப் பெய்யும் மழை”

    என்று திருவள்ளுவர் பாடிய பொருளின் வேர் தொகை இலக்கியத்தில் தான் இருக்கிறது. அதுவும் ஆணாதிக்கவாதிகளின் கொள்கையாக இல்லை. பெண்மை தன் காரியத்தைச் சாதிக்கக் கையாண்ட உத்தியாகக் காணப்படுகிறது. எந்த அளவுக்குப் பெண்கள் இந்த உத்தியைப் பயன்படுத்தி உள்ளனர் என்பது; திருவள்ளுவர் போன்றோர் அதை நம்பிக்கையோடு பாடியுள்ளனர் என்பதிலிருந்து தெரிகிறது.

    முடிவுரை

    ஐயர் எனும் சொல் செவ்விலக்கியக் காலத்தில் அண்ணன்களுக்கு உரிய உறவுமுறைப் பெயராக இருந்து; பின்னர் அண்ணன்மாரோடு கிளையையும் சேர்த்துச் சுட்டுவதாக விரிந்து; தொடர்ந்து தலைமைத்தன்மை உடையோர்க்குப் பொருந்துவதாகித் தந்தையைக் குறிக்கவும் எடுத்தாளப்பட்டுள்ளது. முருகனையும், துறவிகளையும், வேதியரையும் ஐயர் என்று அழைப்பதைத் திருமுருகாற்றுப்படை, கலித்தொகை, பரிபாடல் ஆகிய நூல்களில் காண இயல்வதால் அவை காலத்தால் பிற்பட்டவை என்று துணியலாம்.  ஆண் முதன்மைச் சமுதாயத்தில் கிளை என்பது தந்தையுடன் சொத்தைப் பங்கீடு செய்யும் உரிமையுள்ள பங்காளிகளை மட்டுமே குறிக்கும் உறவுமுறையாக இருக்க; ஐயர் தலைவியின் உடன்பிறந்த சகோதரர்களையும் சேர்த்துச் சுட்டப் பயன்படும் பெயராக உள்ளது. தலைவி, தோழி, மூவரின் பேச்சிலும் ஐயரைப் பற்றிய குறிப்புகள்  உள்ளன.  ‘தலைவி தலைவனைத் தொழுதால் தான் அவளது ஐயர் எடுத்த காரியத்தில் எல்லாம் வெற்றி பெறுவர்’ என்பது போன்ற சாதுர்யமான பேச்சு செவ்விலக்கியக் காலத்தில்  பெண்களாலேயே தம் வசதிக்காக உருவாக்கப்பட்டது என்பதற்குத் தொகை இலக்கியம் சான்றாகிறது.

    Share
  • அக இலக்கியச் சிறு பாத்திரங்கள்- 15 (தலைவனின் தந்தை)

    அக இலக்கியச் சிறு பாத்திரங்கள்- 15 (தலைவனின் தந்தை)

    ச. கண்மணி கணேசன் (ப.நி.),
    முன்னாள் முதல்வர் & தமிழ்த் துறைத்தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    அகப்பாடலில் தலைவனின் தந்தை நேரடியாகப் பாடல் காட்சியில்  இடம்பெறவுமில்லை. எங்கும் பேசவுமில்லை. பேசியதாகக் கூறப்படவும் இல்லை. ஆனால் தலைவன், செவிலி, தோழி  ஆகியோர் கூற்றுகளில் தலைவனின் தந்தை பேசப்படுவதால் சிறுபாத்திரத் தகுதி பெறுகிறான்.

    தம்முள் ஒத்த இரு தந்தையர்

    தம்முள் முகிழ்த்த காதலை எண்ணி வியக்கும் தலைவன்;

    “எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்” (குறுந்.- 40)

    என்று தலைவியை நோக்கி வினவும் போது; இரண்டு தந்தைகளும் ஒப்பவே பேசப்படுகின்றனர். காதலர் கோணத்தில் தந்தையரிடையே ஏற்றத்தாழ்வு இல்லை.

    செவிலி கூற்றில் தலைவனின் தந்தை 

    மகளின் இல்லறச் சிறப்பைக் காணவந்த செவிலி;

    “அகன்பெருஞ் சிறப்பின் தந்தை பெயரன்” (ஐங். – 403)

    சிறுதேர் உருட்டுவது கண்டு தலைவன் மகிழ்ந்தான் என்று சொல்லும் போது ‘தந்தை’ தலைவனைப் பெற்றவனைக் குறிக்கிறது. மிகுந்த புகழுக்கும்  பெருமைக்கும் உரியவனாகத் தலைவனின் தந்தை போற்றப்படுகிறான். மரபு வழாமல் தன் மகனுக்குத் தந்தையின் பெயர் வைத்து மகிழ்ந்தமையும் குறிப்பாகத் தெரிகிறது.

    தோழி கூற்றில் தலைவனின் தந்தை

    “நன்மனை வதுவை அயர இவள்
    பின்னிருங் கூந்தல் மலர் அணிந்தோயே
    இனிது செய்தனையால் நுந்தை வாழியர்” (ஐங்.- 294)

    என்று; தலைவன் அறத்தை நிலைநாட்டியவுடன் அவனது தந்தை வாழ்த்தப் பெறுகிறான். தலைவியைக் கைவிடாத அறமாகிய மணவினை அவனைப் பெற்று வளர்த்த தந்தையின் பெருமைக்குரிய சிறப்பாகிறது.

    தலைவன் கூற்றில் தந்தை

    திருமணத்திற்குப் பின்னர் புறத்தொழுகியதால் ஊடல் கொண்ட தன் மனைவியிடம் வாயில் வேண்டும்போது தலைவன்; மிகுந்த நம்பிக்கையுடன் தன் மகனை அள்ளி அணைத்து;

    “மேதக்க எந்தை பெயரனை யாம் கொள்வேம்” (கலி.- 81)

    என்று சூழ்நிலையைச் சமாளிக்கத்  தன்னுடைய தந்தையின் மேன்மையையும் அவரது பெயர் தாங்கிய மகனையும் ஒருங்கே துணைக்கு அழைக்கிறான்

    தானே தந்தையாகும் தலைவனின் பெருமையும் இழிவும்

    தலைமைப் பாத்திரமாகிய தலைவன் மகனைப் பெற்ற பின்னர்; இயல்பாகவே தந்தை எனும் தகுதி பெற்று அவ்வாறே அழைக்கப்படுவது மட்டுமின்றி; அறவழிப்பட்டுத் திருமணத்திற்கு ஒத்துழைக்கும் போது;   தோழி கூற்றில்  தந்தை என்னும் பெருமைக்கு உரியவன் ஆகிறான்.

    “புதல்வன் கவைஇயினன் தந்தை” (ஐங்.- 409);

    என்று தலைமக்களது துயிலும் நிலை பற்றிச் செவிலி வருணிக்கும் போது தலைவனே ‘தந்தை’ என்று மகிழ்ச்சி பொங்கச் சுட்டப்படுகிறான். பெண் மகவு  பெற்ற தலைவன் அகஇலக்கியம் எங்கும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வரைவிடை வைத்துப் பொருள் தேடச் சென்று மீண்டவன்   தலைவியை மணம்பேசிப் பூச்சூடிய போது தோழி மனம் நிறைந்து அவனைப்  போற்றி;

    “இனிது செய்தனையால் எந்தை  வாழிய” (அகம்.- 104)

    எனத் திருமணத்திற்கு முன்னரே தலைவனுக்குத் தந்தைப் பதவி கொடுக்கிறாள். மகப்பேற்றுக்குப் பின்னர் வினைவயிற் பிரிந்த தலைவன் மீண்டுவரத்;    தூங்கிக் கொண்டிருக்கும் மகன் பேசுவது போலத் தான் பேசும் தலைவி;

    “வந்தீக எந்தை” (நற்.- 221)

    என்று தந்தை மகன் உறவுக்கே முதலிடம் நல்குகிறாள். ‘வாருங்கள் தந்தையே’ என்று அவள் அழைத்து மகிழ்வது அவர்களது இல்லறத்திற்கு உயிரோட்டமாக இருக்கும் மகப்பேறு பற்றிய கொள்கை விளக்கம் எனில் மிகையாகாது.

    கணவன் புறத்தொழுக்கத்தில் ஈடுபட; அவனது  பரத்தமை தலைவியால் இகழப்படும் போது அங்கதச் சுவையுடன்;

    “வாழியர் எந்தை” (அகம்.- 46);

    என்று நையாண்டி செய்யப்படுகிறான். ‘இவன் மனிதனே இல்லை’ என்னும் வசை பெறும் (கலி.- 84) இல்லத்தலைவனாகிய அவன் காதுபடவே அவனது செய்கையை மகனிடம் பேசுவது போல்; ‘உன் தந்தை’ என்று சுட்டி;  விமர்சனம் செய்கிறாள் தலைவி. (கலி.- 80, 82, 85, 86). தன் கணவன் என்று சொல்லாமல் ‘உன் தந்தை’ என்று பேசும் காரணம்; இல்லறத்தின் நிலைத் தன்மைக்கு மகப்பேற்றின் அடிப்படைத்  தேவையைக் கூறாமல் கூறுகிறது.

    “அடக்கமில் போழ்தின்கண் தந்தை காமுற்ற” (கலி.- 82)

    பிற பெண்கள் பற்றிக் குழவிப் பருவத்து மகனிடமே பேசுகிறாள்.

    “மாதர் மென்நோக்கின் மகளிரை நுந்தை போல்” (கலி.- 86)

    நாடாதே என்ற அறிவுரையைக் கேட்டுப் புரிந்து கொள்ளும் பருவமோ பக்குவமோ இல்லாதவனிடம்  அவள் புலம்புவது; ஏதும் செய்யலாகாத  அவளது கையற்ற நிலையையும் ஆற்றாமையையும் தெளிவாக்குகிறது. இயல்பான நிகழ்வுக்குத் தானாகக்  காரணம் கற்பித்துத் தலைவி  கூச்சலிடும் போதும் தலைவன் தந்தை என்னும் தகுதிப்பெயர் பெறுகிறான். சேடியோடு வெளியே அனுப்பிய மகனைக் கொஞ்சிப் பரத்தை அவனுக்கு மோதிரம் அணிவித்து அனுப்ப;

    “செறியாப் பரத்தை இவன் தந்தை மார்பில்” (கலி.- 84)

    ‘செய்த புணர்குறி போல்; மகனின் கையில் சுறாவின் ஏற்றைக் குழித்த மோதிரம் அணிவித்து அனுப்புவது; என் கணவனைத் தன் வசப்படுத்தக் கொள்வேன் என்று விடும் சவாலின் குறியீடு ஆகும்’ என்று சேடியிடம் பொருமும் போது தலைவியின் மிதமிஞ்சிய மனஅழுத்தம் தான் வெளிப்படுகிறது. விளையாடச் சென்ற மகனைத் தலைவனின் புறத்தொழுக்கத்திற்குக் காரணமான பெண்கள் ஆசையுடன் எடுத்துத் தழுவ; வீடு திரும்பும் மகனின் உடலில் அவரது அணிகலன்கள் பதிந்திருக்கும் தடத்தைப் பார்த்துப் புலம்பும் போது; நிலைவாயிலைப் பற்றிக்கொண்டு தலைவன் நின்ற கோலம்;

    “தந்தையும் வந்து நிலை” (கலி.- 83)

    என்றே பதிவு பெறுகிறது.

    தொன்மக் குறிப்பில் தலைவரின் தந்தை

    மகாபாரதப் போரில் அசுவத்தாமன் தன் தந்தை துரோணாச்சாரியரைக் கொன்ற சிகண்டியைத் தானே முயன்று தலையைத் திருகிக் கொன்று சினம் தீர்த்துக் கொண்ட தொன்மக் குறிப்பு;

    “தாளின் கடந்து அட்டுத் தந்தையைக் கொன்றானை” (கலி.- 101)

    எனக் காளையைச் சிறப்பிக்கப் பயன்பட்டுள்ளது.

    மடலேறும் தலைவன் காமன் தன்னைத் துன்புறுத்துவது பற்றிப் பேசுங்கால்; இன்னொரு தொன்மத் தந்தையாகத்  திருமாலைச் சுட்டி;

    “நெடியோன் மகன்நயந்து தந்தாங்கு” (கலி.- 140)

    என நெடியோனைத் தந்தை ஆக்குகிறான்.

    ‘தந்தை’ சிறுபாத்திரம் உணர்த்தும் சமூகக் கொள்கை

    தந்தையின் பெயர் தன் மகனுக்கு உரியது எனும் பாரம்பரியம்; ‘தந்தை பெயரன்’ எனும் உறவுமுறைப் பெயரில் தொன்றுதொட்டுத் தமிழ்ச் சமூகக் கொள்கையாக நிலவி வருவதைத் தொகை நூல்கள் ஆவணப்படுத்தியுள்ளன. பெண் பிள்ளை பெற்ற தலைவனுக்கு அகஇலக்கியத்தில் இடம் காணப்படாமை  தமிழ்ச் சமுதாயத்தில் நிலவிய ஆண் முதன்மைப் போக்கை வெளிப்படுத்துகிறது.

    முடிவுரை

    காதலர் நோக்கில் தம் தந்தையரிடையே ஏற்றத்தாழ்வு இல்லை. செவிலியும் தோழியும்; தலைவனும் தன் தந்தையைப் பெருமைக்கு உரியவராகப் பேசுகின்றனர். தலைமைப் பாத்திரமாகிய தலைவன் மகனைப் பெற்ற பின்னர்; இயல்பாகவே தந்தை எனும் தகுதி பெறுகிறான். அறவழிப்பட்டுத்  திருமணத்திற்கு ஒத்துழைக்கும் போதே;  தந்தை என்னும் பெருமைக்குரியவன் ஆகிறான். பரத்தமை தலைவனை இழிந்த தந்தை ஆக்குகிறது.  தலைவனது தந்தை பெயர் அவனது மகனுக்கு உரியது என்பது தமிழர் பாரம்பரியம். பெண் குழந்தை பெற்றதாகப் பேச்சே எழாமல் இருப்பது ஆண் முதன்மைச் சமுதாயக் கொள்கையைக் காட்டுகிறது. துரோணாச்சாரியாரும் நெடியோனும் தொன்மம் சார்ந்த தந்தையராக அகஇலக்கியத்தில் இடம் பெறுகின்றனர்.

    Share