Tag: பத்மநாபபுரம் அரவிந்தன்

  • தினைப்புனம்

    -பத்மநாபபுரம் அரவிந்தன்

    தோழியோடு கையில்
    கவண் கல் கொண்டு
    தலைவி வந்தாள்
    தினைப்புனம் காவல் காக்க…

    குருவிகள் விரட்டப்
    பரண் மேலேறிப்
    பார்த்துப் பார்த்துச்
    சலித்துப் போனவள்
    செல்ஃ போன் எடுத்துத்
    தந்தைக்குச் சொன்னாள்
    ”அப்பா… ஒரு குருவியைக் கூட
    காணும்” என்று!

     

    Share
  • பேரவஸ்தை

    -பத்மநாபபுரம் அரவிந்தன் 

    உன் நினைவிலிருந்து
    மனதைப் பிரித்தெடுக்கப்
    பூத்துக் குலுங்கும் கொன்றையை,
    குலை தள்ளிய வாழையை
    வயலை, மலையை
    பார்த்து நின்றும்…

    இவையனைத்தையும் புறந்தள்ளிக்
    கருநீலப் பாவாடையும்
    வெளிர்மஞ்சள்  தாவணியுமாய்
    ஈரமுலராக் கூந்தல் விரிந்த
    உன் முகம் மனதைப் பிசையும்…

    இன்றாவது உன்னைப்
    பார்ப்பதைத் தவிர்த்து
    என் மன அவஸ்தைகளை
    அடக்க நினைத்தபடி
    எதிர்வரும் உன்னைத்
    தலை நிமிராமல் கடந்ததும்
    மனம் முன்னேறும்
    என் கைவிட்டு உனை நோக்கி…

    பிறகு தினம்போல்
    இன்றும் தந்து செல்கிறாய்
    இனம்புரியா உணர்வுடன்
    ஒரு பேரவஸ்தையை…!

     

    Share
  • காகமும் வாழ்வும் !

    -பத்மநாபபுரம் அரவிந்தன் 

    இரையுண்ணும் போதும்
    நிம்மதியற்றுத்
    தற்காப்புணர்வுடன்
    எச்சமயமும் பறக்கத்                         crow1
    தயாராய் இருக்கும்
    காகம் போல மாறிவிட்டது
    மனித வாழ்வும்…

    யதார்த்த நிலை தொலைத்து
    ஒரு பதட்டத்துடன்
    நகர்கின்றன நாட்கள்…

    நடிப்பைச் சதா கைக்கொண்டு
    இயல்பைத் தொலைத்து
    வாழ்ந்துதான் ஆக வேண்டியிருக்கிறது!

    இதில் சற்றே ஏமாந்தால்
    நொடியில் துளைத்து விடுகிறது
    ஒரு தோட்டா!

     

    Share
  • தேடல்

    -பத்மநாபபுரம் அரவிந்தன்

    சில ஆண்டுகளுக்கு முன்பு
    தொலைந்துபோன தன்
    மூக்குத்தியை
    இன்றைக்கும்
    தேடுகிறாள் பாட்டி…

    தினப்படிச் செயலென்று
    தேடுவதைத் தொடர்கின்றாள்…

    ‘வேலயத்தக்  கிழவியென்று’   
    அனைவரும் சொல்லும்போதும்
    பாட்டிக்குக் கவலை இல்லை!

    புதியதொரு மூக்குத்தி
    வாங்கிவந்த பெரியம்மா
    ‘இது நீ போட்டுக்கோ… இனிமேலும்
    தேடாதே’ என்று சொன்னபோது…

    பாட்டி கேட்டாள் ஒரு கேள்வி
    ‘உன்னப்பன் செத்துப்போய்
    பல வருஷம் ஆயாச்சு
    அவரைத் தேடுறப்போ
    வாங்கித்தந்த மூக்குத்திய
    தேடாம விடுவேனா?

    சீவம் போற  மட்டும் 
    தேடிப்  பாத்திருவேன்…

    மூக்குத்தியையும் உன் அப்பனையும்
    தொலைச்சவ நான்தானே…எனக்குத்
    தண்டனையா இருக்கட்டும்
    தேடுறது நடக்கட்டும்…     

    அன்றுதான் புரிந்தது
    பாட்டி தேடியதும், தேடுவதும் 
    மூக்குத்தி வடிவில் தாத்தாவின்
    காதலையென்று!     

     

    Share
  • நினைவில் உறையும் வாசனைகள்!

    -பத்மநாபபுரம் அரவிந்தன்

    சில வாசனைகள் நம்மை
    அதை – முன்பு எப்பொழுதோ
    நுகர்ந்த காலத்திற்கு
    அழைத்துச் சென்று
    அச்சம்பவத்தின்
    நிழலுருவை மீட்டுத் தரும்…!

    அப்படியொரு மீட்டெடுப்பு
    நிகழ்ந்தது இன்றெனக்கு
    இவளின் வாசனை
    என்னுள் அதிரப்பள்ளி
    அருவியின் நினைவினை
    மீட்டெடுத்து வலைபோல்வீசி
    மனம் பின்னோக்கி நகர்ந்து
    அருவியில் குளித்தது
    நகர்வாழ் இவளுக்கு
    எப்படி வந்தது
    காட்டருவி வாசனை…?

    இவ்வாசனை இனி
    நுகர்கையில்
    இவள் நினைவும்
    உடன் வருமோ
    அருவியில் நனைந்ததைப் போல்!

     

    Share
  • வன் கயிறு

    -பத்மநாபபுரம் அரவிந்தன்

    துடித்த கயிறு
    அடங்கிய போது
    எதையோத் திறந்து
    எதுவோ போனது

    விறைத்த கழுத்தில்
    அழுந்தப் பதிந்த
    கயிற்றின் தடம்

    இருந்த இடமிருந்து
    வெளிவந்து வெறித்த கண்கள்
    கத்த நினைத்த நாக்கைக்
    கடித்தழுத்திப் பிடித்த பற்கள்

    கடை சொட்டுச் சிறுநீரும்
    கால்வழி வழிய
    இனியில்லை சுமையொன்றும்!

    நிமிடத்தில் நிகழ்கிறது
    வாழ்க்கையின் புரட்டல்
    மறுயோசனை பற்றிச்
    சாத்தியமற்றுப் போன
    சில நிமிட அவகாசத்தில்
    துடித்தடங்கியது வன்கயிறு

     

    Share
  • என் செய்ய?

    -பத்மநாபபுரம் அரவிந்தன்

    பணிமுடித்துக் களைத்து
    வீடுவந்து குளிக்கையில்
    நினைவு வருகிறது
    அன்று செய்ய மறந்த
    முக்கிய வேலை!

    மடிக் கணினி எடுத்துச்
    சோர்வுடன் சுவாரஸ்யமற்று
    அமர்ந்தபோது பேச்சின்றி
    வெறிக்கிறது மனைவி
    குழந்தையின் கண்கள்…

     

     

    Share
  • கடலலை

    -பத்மநாபபுரம் அரவிந்தன்

    எழுந்து விழும் அலைகளில்
    ஏழாமலை ஆணலை                                  sea-waves
    ஆறு பெண்ணலைகள் தொடர்ந்து
    மீண்டுமொரு ஆணலை…

    ஆணலை வீரியம்
    பெண்ணலை சற்றே அமைதி
    இதுதான் கடலலை கணக்கு!

    ‘அலைகளில் கூட இப்படியா?’
    என்றென் கேள்விக்கு
    அவர் சொன்னார்…
    மனிதர்கள் கணக்கில்
    வீரியம்… அமைதியில்
    பெருமாற்றம் உண்டென்று…

     

    Share
  • மனக்காடு

    -பத்மநாபபுரம் அரவிந்தன்

    நீ என்னை வெறுக்க வெறுக்க
    நான் எங்கோ விரும்பப் படுகிறேன்
    உன் வார்த்தைகள் என்னைக்
    காயப்படுத்தும் போதெல்லாம்
    அசரீரிபோல் எங்கிருந்தோ
    நான் வாழ்த்தப்படும் ஓசை
    காதுள் ஒலிக்கிறது…

    உன் கண்கள் தீட்சண்யம் அற்றுபோய்
    என்னை வெறுப்புடன் வெறிக்கையில்
    என் மனக்கண்ணுள் தெரிகிறது
    கவர்ந்திழுக்கும் இரு காந்தக் கண்கள்…

    உனக்கு மிக நன்றாய்த் தெரியும்
    உன்னை நான் வெறுப்பதில்லை என்பது
    அதனாலேயே குறை குடமாய்க்
    கூத்தாடுகிறது உன் மனது…

    உனக்கு ஒருபோதும் புரிவதில்லை
    ஆந்தையின் அலறலுக்குக்
    காடு ஒருபோதும் அதிர்வதில்லை
    காடு அசைந்து கொடுப்பதே
    குயிலின் கூவலுக்குத்தான்!

     

    Share
  • சிலவரிக் கவிதைகள்!

    -பத்மநாபபுரம் அரவிந்தன்

    பறவைகளின் உடல்
    மறைக்கும் உடைத்
    தூவல்கள்…

    எப்பொழுது வரவேண்டுமென்று             ARAVINDHAN BOOK
    மயிலிடம் கேட்கிறது
    மழைக்குமுன் சிறு தூவல்…

    சேவலே கூவிவிடாதே
    இன்னமும் நேரமிருக்கிறதென்கிறது
    விடியலுக்கு முன்பான இருட்டு…

    உனக்காகத்தானே
    இத்தனை நாட்கள்
    காத்துக் கிடந்தேனென்று
    ஓடி வந்துக் கலக்கிறது
    குட்டையில் மழைநீர்…

    பொறுத்திரு சிலநாட்கள்
    முழுமையாய் வருகிறேன்
    மேகத்திடம் சொல்கிறது
    வளர் பிறை…

    தலை சுற்றச் சுற்ற
    காற்றள்ளி வீசுகிறது
    மின் விசிறி…

    தொலைதூரம் ஓடிவந்து
    படுக்கையில் கிடக்கிறது
    கனவு…

    உதடும் கோப்பையும்
    உரசிக்கொள்ளக்
    கள்வெறி கொள்கிறது
    மது…

     

    Share
  • ஊர்க் காதல்!

    -பத்மநாபபுரம் அரவிந்தன்

    தடகளப் போட்டியில் ஓடிவந்தவன்
    போல் துடித்ததென் இதயம்
    முதலில் உன்னைப் பார்த்ததும்…

    உன் கண்களால் என் நெஞ்சுள்
    நீண்ட நாட்களெரியும் ஒரு
    கற்பூரத்தை ஏற்றினாய்…

    விளக்கமுடியாப் புல்லரிப்பும்
    புது சுகமும் பரவியது
    உனைப் பார்த்தபோது…நீ பார்த்தபோது…

    எடுத்த பிறவிக்குப் பயனென்று
    உனை நினைத்தேன்…

    உன்னிடம் பேசவென்று சேர்த்து
    வைத்த வார்த்தைகள் பேசாமலேயே
    நெஞ்சையடைத்து நிறைந்தது…

    உனக்கும்கூட அப்படியிருந்திருக்கலாம்
    எனவேதான், போலி இருமலால்
    அவற்றை வெளியேற்றினாய் போல…

    எத்தனைக் கூட்டமிடையிருந்தாலும்
    நம் கண்கள் சந்திக்கமட்டும்
    தவறியதேயில்லை…பேசுவதற்குக்
    கிடைத்த சந்தர்ப்பங்களையும், நேரங்களையும்
    நாம் பார்வையாலேயே கொன்று போட்டோம்…பேசாமலேயே…

    முதன்முதலாய் நீ பேசியபோது
    பல முத்துக்கள் உதிர்ந்தன
    என்பதாய் நினைவு…

    நீ கேட்ட,” சுகமா?” என்ற
    கேள்விக்குப்பின் நான் சுகமாகவேயில்லை…
    நீ பிடித்திருக்கிறதென்று
    சொன்ன பிற்பாடுதான் நான்
    மீண்டும் சுகமானேன்…!

     

    Share
  • தெரியாதவைகள்

    பத்மநாபபுரம் அரவிந்தன்

    வண்டுகள் தேனுறியும் போது
    மலர்கள் ரசிக்குமா? துடிக்குமா?

    பூமி துளையுற்று                                                                                  bee-on-yellow-flower
    ஊற்றுக்கண் உடைபட்டு
    நீர் பொங்கி வழிகையில்
    பூமி நடுங்குமா? பூரிக்குமா?

    மலை தடவிச் செல்லும் மேகம்
    உள்ளுள் சிலிர்க்குமா? அதைத்
    தடையென்று நினைக்குமா?

    ஆற்றின் கரையுடைத்துப்
    பாய்ந்தோடும் புது வெள்ளம்
    தன் சுதந்திரத்தை ருசிக்குமா?
    ஆற்றை விட்டு வந்ததில்
    சோகமாய்த் தவிக்குமா?

    கூண்டுள் அடைபட்ட பறவைகள்
    பெருவானை நினைக்குமா?
    கூடேதான் வானமென்று கிடக்குமா?

    இப்படித் தொடரும்
    கேள்விகள் இன்றோடு முடியுமா?
    தினந்தோறும் தொடருமா??

     

    Share
  • சிக்னலில் குழந்தைகள்!

    -பத்மநாபபுரம் அரவிந்தன்

    a girl with a dollகையில் விலையுயர்ந்த
    கரடி பொம்மை வைத்து
    ஏ.சி. காரில் அம்மா மடியில்
    அமர்ந்து சிக்னலில்
    தெரு நோக்கும் குழந்தைத்
    தாயிடம் அழுது அடம் பிடிக்கிறது
    பிச்சைக்காரியின்
    குழந்தையின் கையிலிருக்கும்
    மரப்பாச்சி வேண்டுமென்று…

    கரடி பொம்மையைச்
    சிறிது வெறித்துவிட்டுத்
    தலை திருப்பித்
    தனது மரப்பாச்சிக்கு
    முத்தம் கொடுத்துச் சிரிக்கிறது
    பிச்சைக்காரியின் குழந்தை…

     

     

    Share
  • மென்மைகள்!

    -பத்மநாபபுரம் அரவிந்தன்

    parrot

    அதிகாலை உதயத்தில்
    அரசமரத் தளிரிலை
    மென் காற்றில் அசைகையில்
    மரக்கிளையமர்ந்து அவசரமற்று
    செவ்வளை மூக்கால்
    உடலிறகு தூய்மை செய்யும்
    பச்சைக் கிளி, மாலையில் மெதுவாய்
    மொட்டவிழ்ந்து காலையில்
    மொத்தமாய் மணம் பரப்பும்
    நித்ய கல்யாணிச் செடியிடை
    உடல் வளைத்து முகம் புதைத்துத்
    தூங்கும் வெண்ணிறப் பூனைக்குட்டி,
    மடி கனத்து மெல்ல வரும் பசு மாட்டின்
    மேலமரும் இரட்டைவால் குருவி,
    குளித்து ஈரத் தலைமுடித்துக்
    கோலமிடும் இளம் பெண்கள்,
    மெல்லக் கம்பூன்றி
    நடந்து வரும் முதியவர்கள்,
    மெத்தென்ற பெரும் பாதம்
    அழுத்தமாய்ப் பதித்துக்
    கம்பீர நடை நடந்து
    வருகின்ற கோவில் யானை,
    முலை சப்பும் ஞாபகத்தில்
    வாயசைத்துத் தூங்கும் சிறு குழந்தை,
    தூரத்தில் கேட்கும் நாதஸ்வர இன்னிசை..
    இன்னும் எத்தனையெத்தனையோ
    மென்மைகள் நிறைந்த அழகிய அதிகாலை
    விடியலின் அழகே அழகுகளில் அழகு!

     

    Share
  • யாழ் இழந்த பாணன்

    பத்மநாபபுரம் அரவிந்தன் –

     

    பாணனொருவன் புலம்பியபடி
    வந்து கொண்டிருந்தான்
    வழக்கமாய் அவன் கையில் வைத்திருக்கும்
    யாழை இழந்த புலம்பலது
    தன் மூதாதையர்களின் விரல் வருடிய
    இசையுருகிய, உயிர் கலந்த
    யாழதென்று புலம்பினான்
    ” கண்ணயர்ந்த நேரத்தில்
    என் கையில் இருந்து பறித்தனர்
    எதிர்க்கும் திராணியற்ற என்னைக்
    கூட்டமாய்த் தாக்கினர்
    பறிப்பதற்கு வேறேதுமற்ற என்னிடம்
    யாழைப் பறித்தனர்
    இசைக்கத் தெரியாத அவர்களின் விரல்களில்
    யாழ் அபசுரம் எழுப்பிய கோபத்தில்
    யாழின் நரம்புகளை அறுத்தனர் பதிலாக
    அவர்களென் உயிரைப் பறித்திருந்தால் சந்தோஷப் பட்டிருப்பேன்
    யாழற்ற இப்பாணன் இருந்துதான் இனியென்ன?
    அறுந்து தொங்கிய யாழின் நரம்புகள்
    உயிரிசையிழந்து வெறும் கம்பிகளாயின”,

    புலம்பியழுதப் பாணனை சுற்றிலும் கூட்டம் கூடியது
    ‘மீட்டுக் கொடுங்களென் அறுபட்ட யாழை
    நான் மீண்டும் இணைக்கிறேன் புதிய நரம்புகளை
    மீண்டும் இசைக்கிறேன் புதிய பாடல்களை’
    கெஞ்சும் குரலில் பாணன் கேட்க
    கூடிய கூட்டம் தலை திருப்பி
    தமக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லையென்பதாய்
    வெறுமனே பாணனின் புலம்பலை ரசித்தது
    இவர்களிடம் முறையிட்டும் கதறியும்
    ஆவது ஏதுமில்லையென உணர்ந்த பாணன்
    நடக்கத் துவங்கினான் மனதுள் யாழினை சுமந்தபடி
    பழக்கப் படாத ஏதொவொரு திசையினை நோக்கி..

     

     

    Share