Author: க. பாலசுப்பிரமணியன்

  • கற்றல் – ஒரு ஆற்றல் (4)

    க. பாலசுப்பிரமனியன்

    மூளையும் உடற்பயிற்சியும்

     education

    மூளையின் வளர்ச்சியைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் சில விஞ்ஞானிகள் (Developmental  Biologists) மூளை வளர்ச்சியின் போது அதில் அடிப்படியாக இருந்த உணர்வு பயம் என்று. வாதிடுகின்றனர்.  தட்ப வெட்ப சூழ்நிலைகளிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள முயன்ற போது பிறந்த ஒரு உணர்வே பயம். “சர்வைவல் இன்ஸ்டிங்கட்” என்று சொல்லப்படும் இந்த பாதுகாப்புப் போராட்டம் ஒவ்வொரு நிலையிலும் அதன் வளர்ச்சியை முன்நிறுத்திக்கொண்டு கொண்டு பயத்திற்கு இரையானது.

    மூளையின் வளர்ச்சிப் பாதையில் நடந்த ஒரு முக்கியமான திருப்பம் .. நான்கு கால்களால் நடப்பதை விட்டு உயிரினங்கள் (மனித இனம்) இரண்டு கால்களால் மட்டும் நடக்கத் துவங்கியது. இந்த நிகழ்ச்சியினால் மனித இனத்திற்கு இரண்டு கைகள் மற்ற வேலைகளுக்காக விடுபட்டதுமட்டுமன்றி நடக்கும் செயலுக்கு தேவையான சக்தியின் தேவையும் குறைந்தது. இதனால் மூளைக்கு தேவையான அதிக சக்தி கிடைக்கும் வாய்ப்பும் ஏற்பட்டது.

    ஜான் மெடீனா என்ற ஆராய்ச்சியாளர் கூறுகின்றார் -” ஓர் சராசரி மனிதனின் உடல் எடையில் 2 விழுக்காடே உள்ள மூளை அவன் உட்கொள்ளும் சக்தியின் 20 விழுக்காடுகளை பெற்றுக்கொள்ளுகிறது”

    தற்போதைய நிலையில் இருக்கின்ற மனித மூளை உருவாவதற்கு இயற்கையின் வளர்சிக்காலக் கோட்டில் பல லட்சம் ஆண்டுகள் கடந்திருக்கின்றன. ஆகவே, இதை மனித இனம் மூளையை  இயற்கையிலிருந்து தங்களுக்குக் கிடைத்த ஒரு மிகப் பெரிய பரிசாகக் கொள்ளவேண்டும்.

    மூளை நமக்கு கொடுக்கும் தகவல் தான் என்ன? அதை நாம் அறிந்தால் மிக ஆச்சரியத்தில் ஆழ்ந்து விடுவோம்.

    “என்னை உபயோகப் படுத்து அல்லது இழந்து விடு” என்பதுதான். (Use it or lose it). எவ்வளவுக்கு எவ்வளவு இந்த மூளையை நாம் உபயோகப் படுத்துகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அது அதிகம்  வேகமாகவும் திறமையுடனும் வேலை செய்கின்றது.  “கத்தியை தீட்டாதே, உந்தன் புத்தியைத் தீட்டு.” என்று கவிஞர் சொன்னது உண்மைதானே?”

    ஆராய்ச்சியில் அறியப்பட்ட மற்றொரு உண்மை – “முற்காலத்தில் மனிதன் தேவைகளுக்காக காடு மேடுகளில் தேடி அலைந்தான். இந்தத் தேடுதலில் சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளுக்கு 12 மைல் தூரம் நடந்தான். அவன் அதிகம் நடக்க நடக்க அவனுடைய மூளைக்குத் தேவையான இரத்தப் ஓட்டமும்  சக்தியும் கிடைத்தன. அதனால் அதன் வளர்ச்சியின் முன்னேற்றம் நன்கு பெருகியது.” . இது உடலுக்கும் மூளைக்கும் இருக்கின்ற நெருங்கிய உறவை வெளிப்படுத்துகின்றது. ஆகவே நடை, உடல் பயிற்சி, மற்றும் உடல் உழைப்பு மூளையின் நலனைப் பாதுகாப்பதில்  மிக்க பயனுள்ளதாகும்.

    சிறு வயது முதல் கொண்டு குழந்தைகளை விளையாட்டிலும் உடல் பயிற்சியிலும் ஈடுபடுத்துதல் மிகவும் அவசியம்.  மாலையிலே சற்று நேரம்  சிறுவர்கள் விளையாடுவதால் அவர்களுடைய படிப்பின் தரம் குறையும் என்றோ அல்லது அதனால் நேரம் வீணாகிறது என்றோ பெற்றோர்கள் நினைத்தால் மிகப் பெரிய தவறு. மாறாக உடல் பயிற்ச்சியும் விளையாட்டுக்களும் அவர்களுடைய கற்கும் திறனை வேகப்படுத்துகிறது மற்றும் அதிகரிக்கிறது என்பது ஆராய்ச்சி கண்ட உண்மை.

    உடல் பயிற்ச்சியிலும் உடல் உழைப்பிலும் ஈடுபடாதவர்களுடைய கற்கும் திறனையும் அதில் ஈடுபடுபவர்களுடைய கற்கும் திறனையும் சோதித்துப் பார்த்ததில் மிக அதிகமான அளவில் உடல் பயிற்சி செய்வோரின் கற்கும் திறன் அதிகமாக இருந்தது. அது மட்டுமல்ல, உடல் பயிற்சி செய்வோரின் சிந்தனைத் திறனின் பல வடிவங்கள் சிறப்பாக இருந்தன. உதாரணமாக அவர்கள் ஒரு விஷயத்தை அணுகும் முறை, (approach) அதை ஆராய்ந்து  அறியும் திறன், (analytical skills) கவனம் (attention), மற்றும் முடிவு எடுக்கும் திறன் (decision making  skills)  ஆகியவை மற்றவர்களைக் காட்டிலும் மிகச் சிறப்பாக இருக்கின்றன.

    “ஓடி விளையாடு பாப்பா, நீ ஒரு பொழுதும் ஒய்ந்திருக்கலாகத்து பாப்பா” என்ற பாரதியின் பாட்டில் எத்தனை உண்மை உள்ளது? நாமும் நம் குழந்தைகளை கொஞ்சம் விளையாட விடுவோமே !

    Share
  • அம்மா…..

    க.பாலசுப்பிரமணியன்

    “சார்,  நான் ரெடி” டிரைவர் சேகர் வாசலிலிருந்து குரல் கொடுத்தான்.

    “இதோ வந்துட்டேன். என்னோட பெட்டி தண்ணீர் பாட்டில் எல்லாம் எடுத்து வண்டியில் வை.. இரண்டு நிமிடத்தில் வந்துடுவேன்..” தன்னுடைய கழுத்தில் தொங்கும் டையை சரி செய்துகொண்டு கண்ணாடி முன் நின்று ஒரு முறை பார்த்துக்கொண்டார். விஸ்வம்.

    “சாரு .. நான் கிளம்பிட்டேன். நேரம் ஆச்சு. பத்து மணிக்கு மீட்டிங். நேரத்துக்கு போகணும். இப்போல்லாம் டிராபிக் ரொம்ப ஜாஸ்தியாக இருக்கு. அதுவும் அந்த டோல் கேட்தாண்டவே பத்து நிமிடம் ஆகுது. “

    ” இதோ.. லஞ்ச் பாக்ஸ் ரெடி” என்று சொல்லிக்கொண்டே அவர் மனைவி சாரு சமையல் அறையிலிருந்து வெளியே வந்தாள்.

    அவருடைய பெயர் விஸ்வநாதன். அனால் எல்லாரும் சுருக்கமாக “விஸ்வம்” என்று அழைப்பதால் அவர் தன்னுடை கையெழுத்தை விஸ்வம் என்றே போடத்தொடங்கினார் அவருடைய ஹோண்டா சிட்டி கார் நன்றாகத்  துடைக்கப்பட்டு மின்னிக்கொண்டிருந்தது.

    விஸ்வம் வண்டியில் ஏறி உட்கார்ந்ததும் அவர் காதில் அந்தக் குரல் கேட்டது. “சேகர். என்னப்பா பூனை குரல் கேட்குது.?. கொஞ்சம் சுத்திப் பாரு. வண்டிக்கு அடியிலே பூனை ஏதாவது இருக்குதான்னு..”

    புறப்படும் நேரத்தில் பூனையின் குரலா? இன்னிக்கு டெண்டர் மீட்டிங் .. இது என்ன புறப்படும் போது  பூனையின் குரல்? மனம் கொஞ்சம் உறுத்தியது..

    கீழே குனிந்து வண்டியை ஒரு முறை சுற்றிப்பார்த்த பின் டிரைவர் சேகர் சொன்னார் ” சார். இங்கே ஒண்ணும் இல்லே. பக்கத்திலே எங்கேயாவது இருக்கலாம். “

    “இல்லே. சேகர். பின்னாலே தோட்டத்திலே பூனை ஒண்ணு  நாலைந்து குட்டி போட்டிருந்தது. ஒரு வாரம் ஆயிடுத்து..அந்தக் குட்டியெல்லாம் இங்கே தான் விளையாடிக் கொண்டிருக்கும். எங்கயாவது மாட்டிக்கப் போகுது.. இன்னொரு தடவை சரியாகப் பாரு..”

    மீண்டும் ஒரு முறை பார்த்து விட்டு சேகர் சொன்னான் ” பார்த்துட்டேன்  சார்., இங்கே இல்லை. “

    வண்டி கிளம்பியது..அவருடைய ஆபீஸ் கிட்டத்தட்ட பதினைந்து கிலோ மீட்டர். .. ஒரு ஆறு கிலோ மீட்டர் போன பின்  மீண்டும் அந்த பூனையின் மெல்லிய குரல்.. அதுவும் ஒரு பயம் கலந்த குரல்..

    “சேகர்.. கேட்டியா.. மறுபடியும் பூனையின் குரல்.”

    சேகர் சிரித்துக் கொண்டே.. “சார்.. அதெல்லாம் ஒண்ணும் இல்லை சார்…” வண்டி நகர்ந்தது.

    விஸ்வத்தின் மனம் அந்த பைல் உள்ளே இருக்கும் விஷயங்களில் ஈடு படவில்லை…பூனையின் குரல் ஏதோ “அம்மா… அம்மா.. ” என்று அழைப்பது போல்.

    காலையில் ஆபீஸ் சென்றடைந்த விஸ்வம் மனம் வழக்கம் போல் இல்லை. அவருடைய உதவியாளர் தன் சக ஊழியரிடம் கூறினார். ” பாஸ் இன்னிக்கு மூட்ல இல்லை.. உள்ளே ஜாக்கிரதையாகப் போ. “

    வழக்கமாக ஆறு மணிக்கு மேலும் ஆபீஸ் வேலையில் ஈடு படும் விஸ்வம் இன்று நாலு மணிக்கே கிளம்பி விட்டார். தன்னுடைய உதவியாளரிடம்  ” இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரம் போறேன். லேசா தலை வலிக்கிற மாதிரி இருக்கு

    தன்னுடைய அறையிலிருந்து  கிளம்பி வெளியே கார் பார்க்கிங் நோக்கி வந்தார். சீக்கிரமே கிளம்பி விட்ட தன் முதலாளியைப் பார்த்த சேகருக்கு ஆச்சரியமாக இருந்தது.

    “சேகர். வண்டியை நல்லா  பார்த்துட்டயா ? ”  சேகருக்குப்  புரிந்தது. அவர் மனம் அந்த பூனையின் குரலைச் சுற்றியே இருக்கிறது என்று.

    “சேகர்.. நல்லா கேளு.. இப்பவும் அந்த பூனையின் குரல் மெல்லிசா…கொஞ்சம் கீழே உட்கார்ந்து செக் பண்ணு. “

    குனிந்து பின் பக்கச் சக்கரம் பக்கத்தில் உட்கார்ந்த சேகர்  ” ஆமாம் சார்.. இங்கே பூனையின் குரல் கேட்குது..” தன்னுடை கையை பின் பக்க டயர் மேல் ஒரு தடவை தடவிப் பார்த்தான். அந்த குரலின் வேகம் அதிகரித்தது.

    “சேகர். நீ வண்டியை கவனமாக எடு “

    வண்டி வீடு நோக்கிக் கிளம்பியது.. பாதி தூரத்தில் அந்தப் பூனையின் வேதனையும் பயமும் கலந்த குரல் வேகம் அதிகரித்தது…

    “சேகர்…வண்டியை பக்கத்திலே எதாவது மெக்கானிக் கடைக்கு எடுத்திண்டு போய் செக் பண்ணு…”

    வண்டி அருகிலுள்ள கடைக்குச் சென்றது.  அங்கே பின் பக்க சக்கரத்தைக் கழட்டிப் பார்த்த போது அங்கே உள் பாகத்தில் உள்ள ஒரு ரப்பர் மறைவுக்கு மேல் ஒரு சிறிய பூனைக் குட்டி அமர்ந்திருந்தது..

    “சனியனே!.. நீ இங்கேயா இருக்கே ” அந்தப் பூனையின் கழுத்தைப் பிடித்துத் தூக்கிய மெக்கானிக் தன் வழக்கமான மொழியிலே அதைத் திட்டினான்.

    “நல்ல காலம். அது அடி பட்டு சாகலே. ” விஸ்வத்தின் மனம் குளிர்ந்தது.

    அந்தப் பூனைக்குட்டியை தன் கையில் வாங்கிய டிரைவர் சேகர்..”சார். ஒரு ரெண்டு நிமிஷம் டைம் கொடுங்க ..இதை அந்தப் பார்க்கில் கொண்டு விட்டுட்டு வந்துடறேன். “

    ” அப்போ.. அந்த அம்மா பூனை தேடாதா?”  இது விஸ்வம்.

    “அது தலைவிதி சார்.. அதுக்கெல்லாம் நம்ம எப்படி சார் கவலைப் படறது?” சேகர் பதிலளித்தான்.

    ஒரு நிமிடம் யோசித்த விஸ்வம்  :” சேகர். அந்தப் பூனைக்குட்டியை இங்கே குடு . வாங்கி அதை தன்னுடன் பின் சீட்டில் வைத்துக் கொண்ட விஸ்வம்.. ” நீ எவ்வளவு பணம் கொடுக்கணுமோ அதை கொடுத்துட்டு வண்டியை எடு “

    வண்டி நகர்ந்தது… விஸ்வத்தின் நினைவும் தான்..

    மதுரை அவர் பிறந்து வளர்ந்த ஊர். அழகான சிறிய வீடு. தந்தை பக்கத்து தாசில்தார் ஆபீசில் வேலை பார்த்தார். அவருக்கு இரண்டு சகோதரர்கள். இவர் தான் கடைக்குட்டி. வீட்டில் செல்லம்!

    அன்று வைகையில் அழகர் ஆற்றில்  இறங்கும் திருவிழா.. சித்திரை பௌர்ணமி …லட்சக் கணக்கில் மக்கள் கூட்டம்… குடும்பத்துடன் விழாவிற்கு வந்த இடத்தில் விஸ்வம் தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து விட்டார். அப்போது அவருக்கு ஐந்து வயது.

    “அம்மா…அம்மா ” என்று அழுது கொண்டே அங்கே அலைந்தது அவருக்குத்தான் தெரியும். அவர் அழுகையைப் பார்த்த பலரும்  “பாவம். அம்மாவை விட்டுப் பிரிந்திடுத்து போல இருக்கிறது. ” என்று சொல்லிக்கொண்டு மேலே போனார்கள். அவர்களைப் பார்த்த விஸ்வத்திர்க்கு கோபமாக வந்தது..

    எப்படியோ போலீஸ் உதவியோடு அன்று மாலை தன் அம்மாவுடன் சேரும் வரை அவர் பட்ட பாடு அவருக்குத்தான் தெரியும்

    வண்டி வீட்டு வாசலில் நின்றது.  மெதுவாக அந்தப் பூனைக்குட்டியைத் தூக்கிக்கொண்டு விஸ்வம் நேராக வீட்டின் பின்புறத் தோட்டத்தை நோக்கிச் சென்றார்.. அங்கே  அந்த தாய் பூனை தன்னுடைய மற்ற குட்டிகளோடு அமர்ந்திருந்தது.

    விஸ்வம் அந்தப் பூனைக்குட்டியை மெதுவாக கீழே இறக்கினார். அந்தத்  தாய் பூனை வேகமாக ஓடி வந்து தன்னுடைய நாக்கால்  குட்டியை நக்கியது. குட்டியின் முகத்தில் இருந்து ஆனந்தம் கண்ட விஸ்வத்திற்கு  அன்று மதுரையில் தன்னுடைய தாயை தான்  இறுக்கிக் கட்டிகொண்டது நினைவில் வந்தது. கண்கள் பனித்தன.

    xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

    Share
  • “ஆறு படை அழகன்” — (6)

    க.பாலசுப்பிரமணியன்

    images

    தாளிரண்டும்  தாராயோ தணிகை மலை நாதா

    தோளிரண்டில் தாங்கிடுவேன், தங்க மயில் வேலா !!

     

    சொல்லிரண்டில் உன்னை வைத்து

    சுமைகள்  பல தூக்கி விட்டேன் – வாழ்க்கையில்

    சுவையில்லா உணர்வுகளையும்

    உன் அருட்சுவையில் மறந்து விட்டேன் !!

     

    சிலையாக நீயிருந்தும் குறையனைத்தும்

    சளைக்காமல் கேட்டு நின்றாய் !!

    மலையான துயரத்தையும்

    மயில் தோகைகொண்டே விரட்டிட்டாய் !!

     

    மூவிரண்டு முகத்தினிலே ஒளி மின்னும்

    ஆறிரண்டு கண்களிலே அருள் வெள்ளம்

    ஓரிரண்டு மணித்துளிகள் உன்னை நினைக்க

    உன்னிரண்டு பாதங்கள் என் பக்கம்.

     

    அஞ்சுகின்ற நெஞ்சொன்று இங்கிருக்க

    ஆறுபடை வீடும் உனக்கெதற்கு ?

    கொஞ்சு தமிழ்மொழியிலே பாட்டிசைப்பேன்,

    கெஞ்சுகின்றேன் நீ வந்து நெஞ்சிலுருப்பாய் !

     

    நூறுமுறை உனைப் பார்த்தாலும்

    நூறு கலை நூதனமாய் தெரியுதய்யா !!

    ஆறுமுகம் நீயிருக்க வேறுமுகம் எனக்கெதற்கு?

    ஆனைமுகன் அருகிருக்க ஆதரவாய் இருந்திடய்யா !!

     

    தாளிரண்டும்  தாராயோ தணிகை மலை நாதா

    தோளிரண்டில் தாங்கிடுவேன், தங்க மயில் வேலா !!

    Share
  • கற்றல் – ஒரு ஆற்றல்   (3)

    க. பாலசுப்பிரமணியன்

    education

     மூளைஒரு உன்னதமான படைப்பு

    ஒவ்வொரு மனிதனுடைய மூளையும் ஒரு விசித்திரமான படைப்பு. எப்படி ஒருவனுடைய கைரேகைகள் அவனுக்கே உரித்தானதாக இருக்கின்றதோ அதே போல் தான் ஒவ்வொரு மனிதனுடைய மூளையும் ஒரு தனித்துவம் வாய்ந்தது. ஆகவே ஒருவரைப் போல மற்றவர்கள் சிந்திப்பதோ, இல்லை கற்பதோ இயற்கையில் நடப்பதில்லை.

    ஒரு தனி மனிதனுடைய மூளை அவன் பிறப்பு மற்றும் சூழ்நிலைகளால் பாதிக்கப்படுவதால். ஒவ்வொரு மனிதனுடைய சிந்திக்கும் திறனும் முறைகளும் ஒரு தனி வரைபடமாக அமைகின்றது .(cognitive map ) . நம்முடைய பார்வைகள் மூளையால் அலசப்பட்டு அதற்கு ஒரு அர்த்தத்தை உருவாக்கும் செயல் ( meaning making )  மிகவும்  திறன் வாய்ந்த செயல். இதைச்  செய்வதற்கு மூளையின் பல பாகங்கள் ஒருங்கிணைந்தவாறு செயல்படுகின்றன. ஆகவே, ஒரே பொருளை இருவர் நோக்கும் பொது அதன் அர்த்தங்கள் வேறு வேறாக இருக்க வாய்ப்புண்டு. இதனுடைய தாக்கம் கற்றலில் அதிகமாக ஏற்படுகின்றது. ஆகவே ஒவ்வொருவருக்கும் கற்கும் திறன், ஆழம், முறை மற்றும் அவர்களின் அர்த்தங்கள் மாறுபட்டிருக்கும். உதாரணமாக ஒரு விபத்தை இருவர் நோக்கினால் இருவருடைய பார்வைகளும், சிந்தனையும் அதன் பாதிப்பால் ஏற்படும் செயல்களும் வேறாக இருக்க அதிக வாய்ப்புண்டு.

    மனிதனுடைய இந்த மூளை மற்ற பிராணிகளின் மூளையிலிருந்து எவ்வாறு மாறுபடுகின்றது?

    ஒரு மனிதனுடைய மூளை வளர்ச்சியடைந்த நிலையில் சுமார் 1300-1400 கிராம் எடை உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர், இதற்க்கு மாறாக ஒரு கொரில்லா குரங்கின் மூளை சுமார் 450 கிராமும் ஒரு டால்பின் மீனுடைய எடை 1800 கிராமும் ஒரு திமிங்கலத்தின் மூளையின் எடை 7800 கிராமாகவும் இருப்பதாக விஞ்ஞானப் பரிசோதனைககளால் அறிய முடிகின்றது..

    நம்முடைய மூளை எதனால் ஆனது? இது சுமார் 78 விழுக்காடு தண்ணீராலும் 10 விழுக்காடு கொழுப்புச் சத்துக்களாலும், 8 விழுக்காடு ப்ரோடீன்களாலும் ஆனது என்று விஞ்ஞான சோதனைகளால் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மூளையின் எடையும் வடிவும் ஒவ்வொரு மனிதருக்கும் சிறிதளவில் மாறுபட்டிருக்கக் கூடும்.

    ஒவ்வொரு மனிதனுடைய விருப்பு வெறுப்புகளும், ஈடுபாடுகளும், ஆர்வங்களும் மாறுபட்டு இருக்கின்றன. இதை நாம் புரிந்துகொண்டால் நம்மில் பலர் ஏன் ஒருமித்த கருத்துடையவராக இல்லை என்பதை நன்கு உணரலாம். மற்றும் ஏன் ஒவ்வொரு மாணவனின் செயல்பாடுகளும் கற்பனைத் திறன்களும் கற்றலும் மாறுபடுகின்றது என்பதையும் உணர முடியும்.

    ஆகவே, ஒரு வீட்டில் குழந்தைகளைப் பார்த்து பெற்றோரும், பள்ளியில் மாணவனைப் பார்த்து ஆசிர்யர்களும் “அவன் எப்படிப் படிக்கிறான் பார். நீ ஏன் அவனைப் போல் படிக்க மாட்டேன் என்கிறாய் ” என்று வாதிடுவது அறியாமையின் அறிகுறி.

    ஜான் மெடினா என்ற உலகப் புகழ் வாய்ந்த மூளை நரம்பியல் பேராசிரியர் கூறுகின்றார்.” எவ்வாறு ஒரு பெரிய இசைக் கச்சேரியில் பல இசைக் கருவிகள் ஒருங்கிணைந்து வாசிகின்றதோ, அது போல நமது மூளையின் பல பாகங்கள் எப்பொழுதும் ஒன்றாக இணைந்து செயல் படுகின்றன. சொல்லப்போனால் நமது மூளையின் உள்ளே ஒரு இசைக் கச்சேரி எப்போதும் நடந்து கொண்டிருக்கின்றது.”

    இந்த இசைக் கச்சேரியில் நமது பங்கு என்ன? இந்தக் கச்சேரியின் நடுவில் நாம் இடைத் தரகர்களாகி  பாடல்களின் போக்கை மாற்ற முடியுமா? போகப் போக நமக்குப் புரியும்….

    Share
  • “ஆறு படை அழகன்”  — (5)

    க. பாலசுப்பிரமனியன்

    images

    விழி தேடும் அழகன் நீ

    மதி தேடும் அறிவு !

    உயிர் தேடும் உறவு நீ

    துயர் தீர்க்கும் மருந்து !

     

    தேயாத நிறை நிலவு நீ

    திகட்டாத அருள் வடிவு !

    குறையாத கருணை வெள்ளம் நீ

    கலையாத அழகின் மஞ்சம் !

     

    சுவையான சொல்லுக்குச் சொந்தம் நீ

    சுடரில் பிறந்த ஒளிவெள்ளம் !

    கருத்துக்குள் அடங்காத கவிதை  நீ

    கன்னித்தமிழுக்குத் தந்தை!

     

    புவி காணாத ஈர்ப்பு நீ

    புலன் சிலிர்க்கும் வியப்பு !

    பழமாகப் பழுத்த பிள்ளை நீ

    பரமனுக்கும் குருவான விந்தை !

     

    தினைக் காட்டுத் தலைவன் நீ

    தீந்தமிழ் போற்றும் பண்பு !

    வினை தீர்க்கும் வேலன் நீ

    வேதனைகள் தேடும் விடியல் !

     

     

     

     

    Share
  • “ஆறு படை அழகன்”  — (4)

    க. பாலசுப்பிரமணியன்

    Six-Abodes-of-Murugan1

    குக்குக்கூ…….குக்குக்கூவெனக்  குயில் போலக்கூவும்

    என் நெஞ்சம் மயில் போல ஆடும்!.. முருகா..  குக்குக்கூ…….குக்குக்கூவெனக் குயில் போலக்கூவும்

    என் நெஞ்சம் மயில் போல ஆடும் !!

     

    குன்றத்திலே .. பரங்குன்றத்திலே ..

    திருப்பரங்குன்றத்திலே உனைக் கண்டால்….. முருகா

    குக்குக்கூ…….குக்குக்கூ…. குயில் போலக்கூவும்,

    என் நெஞ்சம் மயில் போல ஆடும் !!

     

    செந்தூரக்கடலோரம் உனைக்கண்டோ ..முருகா

    கடலலை போலப் பாயும் .. என் நெஞ்சம்

    கந்தா, உன் காலிரண்டை நாடும்-கந்தன்

    கருணையிலே காலமெல்லாம் வாழும் !!

     

    தணிகையிலே .. திருத்தணிகையிலே

    உனைக்கண்டோ முருகா..!

    தென்றலாய் மாறும் என் நெஞ்சம் !! ..

    திருவருள் வேண்டி உன்னை நாடும்

     

    சோலையிலே .. பழமுதிர்சோலையிலே .

    உனைக்கண்டோ ..முருகா .. என் நெஞ்சம்

    ஆறும்… இளைப்பாறும் .. உன் விழிவாசலிலே.

    துயர் நீக்கிக் களைப்பாறும் !!

     

    பதியினிலே,  பழநிப்பதியினிலே

    உனைக்கண்டோ ..முருகா,,,  என் நெஞ்சம்

    பாடும், தமிழ் பாட்டொன்று பாடும் ..

    முத்தைத்தரு பத்திதிருநகையென ஓதும் !!

     

    மலையினிலே .. சுவாமிமலையினிலே…

    உனைக்கண்டோ …முருகா  ..

    நாடும் அருள் நாடும் — அப்பனைப்போல்..

    கைகட்டி வாய்பொத்தி அருள்மொழி கேட்கும் !!

     

    அறுபடை வீடினிலே உனைக்கண்டால்  முருகா

    .என் நெஞ்சம் ஆடும் ….அது பாடும்

    கொஞ்சம் தாவும்.. …உந்தன் அருள் நாடும்

    கூவும்… குக்குக்கூவெனக் குயில் போலக்கூவும்!!!

     

    குக்குக்கூவெனக் குயில் போலக்கூவும்

    என் நெஞ்சம் மயில் போல ஆடும் .. முருகா..

    குக்குக்கூவெனக் குயில் போலக்கூவும் .

    அது மயில் போல ஆடும் !!

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • “ஆறு படை அழகன்”  — (3)

     க. பாலசுப்பிரமணியன்

    am

    வரமொன்று கேட்பேன், வரமொன்று கேட்பேன்,

    இரு கரம் கூப்பி வரமொன்று கேட்பேன்

    பன்னிரு கை கொண்டு படியளக்கும் அழகா…..  !

    உன்னிரு பாதம் பிடித்து வரமொன்று கேட்பேன் !

     

    இமைப்பொழுதும் உனை மறவாத நெஞ்சொன்று வேண்டும்

    இங்கென்றும்  அங்கென்றும் அலையாத  மனமொன்று வேண்டும்

    வானென்றும் நிலமென்றும், நீரென்றும் நெருப்பென்றும்

    நானென்றும் நீயென்றும் பிரிக்காத நினைவொன்று வேண்டும் !!

     

    நலமான உறவென்றும்  வேண்டும்

    நலியாத உடலென்றும் வேண்டும்

    விதியென்று வீழ்ந்தார்தம் மதி காக்க வேண்டும்

    உனையே கதியென்று வந்தார்தம் விதி மாற்ற வேண்டும் !!

     

    குறையாத அறிவென்றும் வேண்டும்

    நிறைவான மனமென்றும் வேண்டும்.

    அறுசுவையும் ஒருசுவையாக வேண்டும்

    அதுவனைத்தும் உன் அருட்சுவையாக வேண்டும்!!

     

    பிறக்கின்ற சேயெல்லாம் உன் பரிசாக வேண்டும்,

    புவிதன்னில் அமைதிக்கு வித்தாக வேண்டும்

    குன்றாக வேண்டும் ;மனம் குணக்குன்றாக வேண்டும்

    அதில் நீ குடியேற வேண்டும் !!

     

    வரமொன்று கேட்பேன் வரமொன்று கேட்பேன்,

    இரு கரம் கூப்பி வரமொன்று கேட்பேன்

    பன்னிரு கை கொண்டு படியளக்கும் அழகா…..  !

    உன்னிரு பாதம் பிடித்து வரமொன்று கேட்பேன்  !!

    Share
  • “ஆறு படை அழகன்”  — (2)

    க. பாலசுபிரமணியன்

    amurugan-03

    சுட்ட பழம் தருவாயோ?  சுடாத பழம் தருவாயோ?

    சுட்ட பழம் தருவாயோ? சுடாத பழம் தருவாயோ? — முருகா

     

    ஆணவத்தை சுட்டெரித்துக் கொஞ்சம் அனுபவத்தைத் தந்தாய்,

    அனுபவத்தை சுட்டெரித்துக் கொஞ்சம் அறிவினையே தந்தாய்,

    அறிவினையும் சுட்டெரித்துக் கொஞ்சம் அமைதியினைத் தந்தாய்,

    அந்த அமைதியிலே நீ அருட்சுடராய் நின்றாய் !!

     

    சொந்தமெல்லாம் சுட்டதென்று உன் காலைப்பிடிதேன் –

    பந்தமெல்லாம் சுட்டதென்று உன் வேலைப்பிடிதேன்

    மோகமென்னைச் சுட்டதென்று  உந்தன் சொல்லைப்பிடிதேன்-முருகா

    வாழ்க்கை சுட்டெரிக்கச் சுட்டெரிக்க சுற்றி சுற்றிப் பிடித்தேன்!!

     

    அவ்வையவள் பாட்டினைக் கேட்டிடவே ஆடி ஆடி வந்தாய்,

    அருணகிரி புகழ் கேட்டிடவே ஓடி ஓடி வந்தாய்,

    அடியார் தம் துயர் தீர்க்க தேடித்தேடி வந்தாய்-

    அகிலமெல்லாம் ஏங்குதையா. இன்று எங்கு சென்றாய் ?

    Share
  • “ஆறு படை அழகன்” — (1)

    க.பாலசுப்பிரமணியன்

    arupadai

    வேலழகா!  உந்தன் விழியழகா ?

    கோலழகா?  உந்தன் கொடியழகா ?

    பேரழகா! உந்தன் பெயரழகா ?

    சொல்லழகா!  சொல்லின் சுவையழகா?

     

     

    பாலழகா? பன்னீர் மணமழகா?

    பஞ்சாமிர்த சுவையழகா ?

    பூவழகா!! கொன்றைப்பூவழகா !!

    பூசிய நெற்றித் திருநீரழகா !

     

     

    போரழகா? போரில் கொண்ட சினமழகா?

    சினமழிந்து நின்ற சோலையழகா ?

    அலையழகா! செந்துரக்கடலுறை அழகா !!

    மலையழகா? மலை நின்ற நிலையழகா??

     

     

    அன்னை தந்த சக்தி வேலழகா?

    அப்பனுக்கு நீ சொன்ன பொருளழகா?

    அவ்வையிடம் கேட்ட பாட்டழகா??

    அடியார்தம் கொண்ட அன்பழகா?

     

     

    முத்தமிழழகா! மூவிரண்டு முகமழகா?

    முன்வினை தீர்க்கும் அருளழகா ?

    முக்காலும் உந்தன் நினைவழகா?

    முருகாவென்று உருகும் மனமழகா?

     

     

    சொல்லழகா,  பேரழகா!!

    வேலழகா, உந்தன் விழியழகா??

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • கற்றல் – ஒரு ஆற்றல் (2)

    க. பாலசுப்பிரமணியன்

    education

    கருவும் கற்றலும்சில உண்மைகள்

    தாயின் வயற்றில் கருவாக இருக்கும் பொழுதே கற்றல் என்ற செயல் ஆரம்பித்து விடுகிறதா என்பதை பல நாடுகளிலே ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஒரு தாய் கருவுற்ற எட்டாம் வாரத்திலிருந்தே வெளிச் சூழ்நிலைக்கு ஏற்ப அந்தக் கருவின் அசைவுகள் இருப்பதாக மனோதத்துவ விஞ்ஞானிகள் சொல்லுகின்றனர்.

    இதைப் பற்றி ஆராய்ச்சி செய்ய பல நாடுகளில் கருவாக இருக்கும் நிலையில் கற்றல்- புரிதல் பற்றிய ஆராய்ச்சி செய்ய தனியான மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன   (Department of pre-natal Cognitive Psychology )

    டேவிட் சம்பெர்லைன்  என்ற மனோ தத்துவ விஞ்ஞானி கூறுகின்றார். ” ஒரு சமுதாயத்தில் வன்முறைகளைப் பின்பற்றுவோர்களுடைய  செயல்களை அவர்கள் கருவில் இருக்கும் போது போதிய ஊட்டச்சக்திகள் இல்லாமை, கவனக்குறைவுகள் மற்றும் வளர்ந்த குடும்பச் சூழ்நிலைகளின் அடிப்படியில் ஊகிக்கமுடியும் ”

    “மேலும் இளம் பிராயத்தில் பெற்றோர்களோடு பாசமின்மை, பெற்றோர்களை விட்டுப் பிரிந்து இருத்தல் போன்ற காரணங்களால் பல பின் விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்றும் நினைக்கின்றனர்.”

    தன்னுடைய தாயாரின் குரலை ஒரு கரு கிட்டத்தட்ட பதினாறு வாரங்களில் அடையாளம் கண்டு கொள்கிறது  இருபத்தி ஏழாவது வாரத்தில் குழந்தையின் பிரதிபலிப்புக்கள்  தாயின் குரலின் குணாதிசயங்களை உணர்ந்து வெளிப்படுத்துவதாக இருக்கின்றன.  அது மட்டுமல்ல, அந்தக் கரு தன் தாயின் உணர்வு   நிலைகளையும் (emotional state ) அடையாளம் கண்டு கொள்கிறது.

    ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் கருவாக இருந்த நிலையில் தாய் பார்த்த ஒரு ஹாலிவுட் படத்தின்   ஒலிகளையும் குரல்களையும் கேட்ட குழந்தை, பிறந்து சில வாரங்களில் அதே படத்தை போட்டபொழுது கருவில் காட்டிய அதே அசைவுகளைக் காட்டியதாகவும் கண்டுபிடிக்கப் பட்டது.

    சாரா பில்லே என்ற ஓர் விஞ்ஞானி தனது ஆராய்ச்சியின் அடிப்படையில் கருவாக இருக்கும் பொழுது மூளையில் வளர்ச்சி  பெற்றோர்களின் மனநிலை மற்றும் உணர்வு நிலைகளால் அதிகம் பாதிக்கப் படுகிறது என்று கூறுகின்றார்.  அன்பான, அமைதியான சூழ்நிலைகளில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி மிகச் சிறப்பாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

    ஆகவே, கற்றல் என்ற ஒரு செயல் கருவுற்ற காலம் முதல்  துவங்குகின்றது.

    கருத்தரித்த காலத்தில் ஒரு தாய் படும் வேதனைகளும் துயரங்களும் குழந்தையின் மூளை வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. குறைவான மூளை வளர்ச்சி, வயதுக்கு தகுந்த அளவு மூளை வளர்ச்சி இல்லாமல் இருத்தல், மூளைக் கோளாறுகள்  போன்றவைகளை கருத்தரித்த காலத்தில்  நடந்த நிகழ்சிகளோடு இணைத்து  பார்த்தால் பல உண்மைகள் வெளிப்படும் என்றும் விஞ் ஞானிகள் கூறுகின்றனர்.

    அதே போல, பெற்றோரிடமிருந்து சில திறன்களையும் குழந்தைகள் கற்றுக் கொள்ளுகின்றனர். கருவுற்ற காலத்தில் இசை போன்ற பல கலைகளில் நாட்டம்  உடையவர்களுடைய குழந்தைகளைக்கு மூளை வளரும் நேரத்திலேயே இதில் ஈடுபாடு ஏற்படுவதாகவும் ஆகவே பிறந்த பின் அவற்றில் சுலபமாக நாட்டம் ஏற்பட்டு விடுவதாகவும் சொல்லுகின்றனர்.

    ஆகவே, மகளிருக்கு கருவுறும் காலம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலம். ஒரு சந்ததியின் தலை எழுத்தை நிர்ணயிக்கத் தயாராகும் காலம்.

    பல நுண் கருவிகள் மூலம் தாயின் வயிற்றில் ஒரு கரு காட்டும் உணர்வுகள் படம் பிடிக்கப் பட்டிருக்கின்றன. கருவாக இருக்கும் நிலையிலேயே  முகத்தில் உணர்வுகளைக் காட்டும் குழந்தைகளின் படங்களைக் கண்டால் அந்த நிலையைப் பேணிப் பராமரிக்கும் தேவையை நாம் உணர முடிகின்றது .

    ஆகவே, பெற்றோர்கள் குழந்தை உருவாகும் நிலையில் அன்பு, அமைதி மற்றும் ஆக்கபூர்வமான சூழ்நிலை உருவாக்குதல் மிக அவசியம்.

    Share
  • கற்றல் – ஒரு ஆற்றல் (1)

    க. பாலசுப்பிரமணியன்

    கற்றல்சில பார்வைகள்

    education

    “கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு” ..-

    இது அவ்வையின் அறிவுரை. “அவங்களுக்கென்ன சொல்லிட்டுப்  போயிட்டாங்க.. இது என்ன முடியற காரியமா?” அலுத்துக்கொள்ளும் பல நெஞ்சங்கள்.

    “ உனக்கு படிக்க டியூஷன் செலவு பண்ணியே நான் போண்டியாயிட்டேன். நீ பேசாமே படிக்கிறதை விட்டுவிட்டு மாடு மேய்க்க போகலாம்” என அலுத்துகொள்ளும் தந்தை..

    “அப்போ மாடு மேய்க்கிறதுக்கு மூளை வேண்டாமா?” என இடக்காகக்   கேட்கும் மகன்.

    “என் பையன் உங்களை மாதிரித்தானே இருப்பான்.  சட்டியிலே இருப்பது தானே அகப்பையில் வரும் ” எனக்  கேலி செய்யும் தாய்..

    “உனக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதை விட இந்த மரத்திலே போய் முட்டிக்கலாம்” என செய்யப்போகாத ஒரு செயலை செய்வதாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு ஆசிரியர்.

    இவர்களுக்கு நடுவே ஒரு விந்தைப் பொருளாக மாணவன். ,,

    “நான் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டேன். மண்டையிலே ஏற மாட்டேங்கறது சார் …  இதையெல்லாம் எவன்தான் கண்டுபிடித்தானோ, அவனுக்கு மட்டும் இந்த மூளை எப்படி வேலை பார்த்தது?.” சோர்வுடன் கேட்கும் மாணவர்கள்.

    இந்த மூளை தான் என்ன?. இறைவன் கொடுத்த வரமா? அது எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்கிறதா? அதற்க்கும் சாதி மத பேத பாவங்கள் உண்டா? பணக்காரனின் மூளையும் ஏழையின் மூளையும் வித்தியாசப்பட்டதா? ஆண்களின் மூளையும் பெண்களின் மூளையும் ஒரே மாதிரித்தான் உள்ளதா? அவர்களின் சிந்தனையின் வடிவங்களில் மாற்றங்கள் இருக்கின்றதா?

    நன்றாகப் படித்து விட்டு தேர்வில் உட்காரும் மாணவனுக்கு அங்கு சென்ற உடனேயே எல்லாம் ஏன் மறந்து போகின்றது? நம்முடைய கற்றல் என்ற செயல் எப்போது ஆரம்பிக்கின்றது?

    கேள்விகள் ஆயிரம்…!!

    இவைகளுக்கெல்லாம் பதில் எங்கே இருக்கின்றது? இவைகளைப் பற்றி என்ன ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன? இந்தத் தொடரின் நோக்கம் இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடி அறிந்து கொள்வதுதான்?

    கற்றல் ஒரு ஆற்றல்….. இது எப்போது தொடங்குதின்றது?

    ஒரு முறை ஒரு தாய் ஓர் ஜென் துறவியைக் காணச் செல்கின்றார். ” குருவே.. என் குழந்தைக்குக் கற்றுக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும் எப்போது தொடங்கலாம்? ” என்று வினவுகின்றார்.

    அந்த குரு அவளிடம் கேட்கிறார் ” உன் குழந்தைக்கு என்ன வயதாகின்றது?” என்று.

    :” குருவே. என் குழந்தை பிறந்து ஐந்து மாதங்களே ஆகின்றன.”

    “அப்படியா? ஏற்கனவே நீ பதினான்கு மாதங்கள் கால தாமதம் செய்து விட்டாயே.”  என  பதிலளிக்கிறார்.

    அப்படியென்றால் ஒரு குழந்தை கருவில் இருக்கும் போதே கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறதா? இதைப் பற்றி விஞ்ஞான ஆராய்ச்சிகள் என்ன சொல்லுகின்றன?

    நம்முடைய புராணங்களில் அபிமன்யுவைப் பற்றியும் பிரகலாதனைப் பற்றியும் சொல்லப்பட்டது கட்டுக் கதையா? அதில் சிறிதளவேனும் உண்மை இருக்குமா,  என்றெல்லாம் கேள்விகள் எழும்புகின்றன.

    இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் சர் வின்ஸ்டன் சர்ச்சில் தன் இளம் பிராயத்திலே சொன்னாராம் ” நான் கற்றுக் கொள்ள விரும்புகிறேன் . ஆனால் கற்பிக்கப் படுவதை வெறுக்கிறேன்” என்று.

    நம்முடைய மாணவர்களில் எத்தனை பேர் சர்ச்சில் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கின்றார்கள்? அவர்களால் சர்ச்சில் போல வாழ்க்கையில் முன்னேற முடியுமா?  அவர்கள் எப்படி கற்றிக்கொள்கின்றனர்?

    கல்வி என்பது ஒரு மாணவனை ஏதாவது ஒரு தெருவினில் வெற்றிபெறச் செய்வதா? அறிவு என்பது வெறும் புத்தக அறிவா? ஒரு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அதற்க்கு நிகரான அறிவு நிச்சயம் இருக்கின்றதா? பள்ளிக்குச்செல்லாத நம் முன்னோர்கள் எவ்வாறு  அறிவிலும் திறனிலும் மேம்பட்டு இருந்தனர்?

    இப்படி பல கேள்விகள் நம் மனிதினில் அடிக்கடி தோன்றுகின்றன. இவற்றிக்கு அறிவு பூர்வமாகவும் அறிவியல் மூலமாகவும் என்ன பதில்கள் கிடைக்கின்றன ?

    தொடரின் அடுத்த பகுதியில் பார்ப்போம்.!

    Share
  • ஒரு இதயம் துடிக்கிறது..

    .பாலசுப்ரமணியன்

    சுப்ரமணிய கௌண்டர் என்றாலே கோவை வட்டாரத்தில் தெரியாதவர்களே கிடையாது. அந்த ஊரில் அவர் ஒரு பெரிய புள்ளி. அவருடைய கண்காணிப்பில்  கிட்டத்தட்ட ஏழெட்டு தொழிற்ச்சாலைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. பல கோடி சொத்துக்களுக்கு அவர் முதலாளி . வீட்டில் எப்போதும் ஐந்து அல்லது ஆறு கார்கள் தயாராக இருக்கும்.  ஆனால் அந்த ஆடி காரைமட்டும் அவரைத் தவிர வேறு யாரும் உபயோகிப்பதில்லை.

    அவரிடம் ஏழெட்டு டிரைவர்கள் வேலை பார்த்தாலும் அந்த ஆடி காரை அவர் மட்டும் தான் ஓட்டுவார். டிரைவர்களிடம் அவர் கொடுப்பதில்லை. அவர் ஓட்டுவதைப் பார்க்கும் போது டிரைவர்களுக்கே கொஞ்சம் பயமாக இருக்கும். அவ்வளவு வேகமாக ஓட்டுவார்.

    நேற்று காலை அவர் கோவையிலிருந்து சேலம் சென்றபோது  சேலம் நகருக்கு முன்னால்  ஒரு சிக்னல்,  சிவப்பு வண்ணம் மாறுவதற்காக அவர் வண்டியில் காத்த்திருந்தார் .

    “சார், சார்,,, பசிக்கு ஏதாவது போடுங்க சார்..” அந்தப் பிச்சைக்காரி வண்டியின் ஜன்னல்களைத் தட்டி பிச்சை கேட்டுக்கொண்திருந்தாள் .

    “போ.. போ.. கதவைத் தட்டாதே.” கை அசைவின் மூலம் அவளுக்கு சைகை காட்டிவிட்டு வண்டியை  நகர்த்தினார்.

    “சார், சார், ஏதாவது பிச்சை போடுங்க சார்.. சாப்பிட்டு இரண்டு நாளாச்சு சார்..”

    “பொய் சொல்லறதே …..உங்களுக்கு  பொய் சொல்லறதே வழக்கமாகப் போச்சு “

    சிவப்பு வண்ணம் விலகி பச்சை வண்ணம் கண்டதும் வண்டியை முன்னே நகர்த்தினார்.

    ” தானம் தர்மம் பண்ணறத்துக்கு ஜனங்களுக்கு மனசே வர மாட்டேங்கறது.”  அந்தப் பிச்சைக்காரி மேலே நகர்ந்தாள்

    மாலையில் சேலத்தில் தன் வேலைகளை முடித்துக்கொண்ட சுப்ரமணிய கௌண்டர்  திரும்புவதற்கு முன்னால்  சூடாக ஒரு கும்பகோணம் டிகிரி காப்பியை சாப்பிட்டு விட்டு தன வண்டியைக் கிளப்பினார். தன்னுடைய வேலை வெற்றிகரமாக முடிந்த சந்தோசம் அவர் மனதில் நிரம்பியிருத்தது. அதன் பிரதிபல்லிப்பு அவர் வண்டியின் வேகத்தில் நன்றாகத் தெரிந்தது.

    சேலத்திற்கு வெளியே நேஷனல் ஹை வேயில் அவர் வண்டி நூறு கிலோ மீட்டர்களைத்  தாண்டி பறந்து கொண்டிருந்தது.

    திடீரென்று அவருக்கு ஓர் ஷாக். . அந்த மங்கிய இருட்டில் ஒரு  உருவம் அந்த ஹை வேயை வேகமாகக் கடந்தது. அவர் கால் அசுர வேகத்தில் பிரேக்கை அழுத்தியது. “கிரீச்”  என்ற சத்தத்துடன் அந்த கார் நிற்கும் முன்.. “ஓ மை காட். ” என்று அவர் அலற, காரில் அடிபட்ட அந்த உருவம் வானில் பத்தடி உயரத்தில் பறக்க…

    காரை ஓரமாக நிறுத்திய கௌண்டர் அந்த உருவம் தலையில் அடிபட்டு ரத்தம் சொட்டச் சொட்ட …….. கிழே கிடப்பதைப் பார்த்தார்.

    சுற்றும் முற்றும் பார்த்தவர்  “நல்லவேளை. கும்மிருட்டு.. இங்கே யாரும் இல்லை. நம்ம வண்டியையும் யாரும் பார்க்கவில்லை.. பார்த்தால் என்ன ஆகும்? அவரால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

    பைத்தியம் பிடித்தவர் போல வண்டியை நோக்கி ஓடியவர் அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்து வேகமாக மேலே சென்றார். உடலெல்லாம்  வியர்த்தது. . அந்த வண்டி கோவை வரை எங்கேயும் நிற்கவில்லை. தான் செய்வது முற்றிலும்  அவருக்குத் தெரிந்திருந்தாலும் உள்மனத்தில் இருந்த பயம் அவரை விரட்டியது.

    வீடு திரும்பியதும் காரேஜில் காரை நிறுத்திவிட்டு அதைச் சுற்றிவந்து ஏதாவது தடயங்கள் வண்டியில் தென்படுகிறதா என தேடிப்பார்த்தார். தடயங்கள் ஒன்றும் தென்படாததால் சிறிது  அமைதியுடன் வீட்டின் உள்ளே நுழைந்தார் .

    “என்னங்க,  டென்ஷன் போல..உடம்பெல்லாம் வியர்த்து .. போன காரியம் எதாவது சரியா முடியல்லையா?” அவர் மனைவியின் கேள்விகளுக்கு அரைகுறை பதில் சொல்லிவிட்டு, ” கொஞ்சம் தலைவலி.. நான் படுத்துக்கப்போறேன்.. தொந்தரவு செய்யாதீங்க. “

    காலை நாலு மணி.  நெஞ்சில் ஏதோ ஒரு பாறையை தூக்கி வைத்தால் போல் ஓர் வலி.. உடல் .வியர்த்துக்கொட்டியது. நா வறண்டது ..  அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை நோக்கி கை சென்றது. ஆனால் அதை பிடிக்க முடியவில்லை.

    ” சாவித்திரி.. ..சாவித்திரி.” அவர் குரல் .கொடுத்தார்.

    பயந்து கொண்டே எழுந்த சாவித்திரி.. “என்னங்க.., என்ன ஆச்சு?”

    “நெஞ்சு வலிக்கிதும்மா…”

    “அய்யய்யோ, இருங்க டாக்டரைக் கூப்பிடறேன்…”

    “இல்லே, ஷியாமைக் கொஞ்சம் எழுப்பி என்னை ஆஸ்பத்தரிக்கு அழைத்துக் கொண்டு போகச்சொல்லு.”

    ஆஸ்பத்திரியில் அவர்க்கு உடனே ஐ. சீ .யு வில் அட்மிஷன் .. ஊரில் உள்ள பெரிய இதய அறுவை  சிகிச்சை நிபுணர்கள் அங்கே  கூடினர்.

    இரண்டு மணி நேரம் அவரை பரிசோதித்த பின்  டாக்டர் ஷியாமையும் கௌண்டரின் மனைவியையும் தனியாக அழைத்துப்  பேசினார்.

    “ஷியாம் உங்க அப்பாவுக்கு டோடல் ஹார்ட் பைலியர். இதயத்தின் ரெண்டு வால்வுகள் வேலை  பார்க்கவில்லை. இதயத்தின் தசைகள் சுருங்கி விரியமுடியாத நிலையில் உள்ளன.. அவர் உயிர் பிழைக்க ஒரே வழி.. இதய மாற்று சிகிச்சை.. அதற்கு உடனே ஒரு இதயம் கிடைக்கணும்.. அது மிகவும் கடினமானது. அதுவரைக்கும் ரிஸ்க்தான். “

    சாவித்ரியின் கண்களில் நீர் வழிந்தது.. “அந்த மருதமலை முருகன் தான் வழிவிடணும்.”

    “நான் முயற்சி செய்கிறேன்… எங்காவது இதயம் கிடைக்குமாவென்று. பொதுவாக இதய மாற்று சிகிச்சைகளை  இதயம் கிடைத்து ஓரிரு மணி நேரங்களுக்குள்  செய்ய வேண்டும்.”

    இரண்டு  மணிநேரத்திற்குப்  பிறகு ஷியாமை டாக்டர் அவசரமாக  அழைத்தார்.” “ஷியாம். ஒரு குட் நியூஸ். சேலத்திலே ஒரு பெண் விபத்திலே மாட்டிக்கொண்டு அவளுக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதால் அவள் இதயத்தை தானமாகத் தர அவர் உறவினர்கள் ஒத்துக்கொண்டுள்ளனார். உங்களுக்கு    சம்மதம் என்றால் அதை இங்கே கோவைக்கு எடுத்து வர ஏற்பாடு பண்ணலாம். அவரைக் காப்பாற்ற அது ஒன்றுதான் இப்போதைக்கு வழி. “

    “டாக்டர்.. அது முடியுமா..?”

    இப்போதைக்கு ரிஸ்க் 90 விழுக்காடு… ஒரு வேளை இதய மாற்று சிகிச்சை பண்ணினால் சில ஆண்டுகள் வாழ வாய்ப்புண்டு..”

    தங்கள் குடும்பத்தினரைக் கூடி ஆலோசித்தபின் ஷியாம். இதய மற்று சிகிச்சைக்கு ஒத்துக் கொண்டான்.

    டாக்டர் பேஷண்டை அறுவை சிகிச்சைக்குத் தயார் பண்ணுங்க..” பெரிய டாக்டர் தன் இளையவருக்கு ஆணையிட்டார். போர் வேகத்தில் வேலைகள் நடந்தன.

    சேலத்திலிருந்து ஆம்புலன்சில் இதயம் கோவைக்கு வந்து அங்கு மாற்று சிகிச்சை நல்லபடியாக நடந்தது..

    சாவித்திரியின் வேண்டுகோளை அந்த  மருத மலையான் கேட்டுவிட்டான்.!

    ஓரிரு வாரங்களுக்குப் பிறகு டாக்டர் இதயத்தை தானமாகக் கொடுத்தவர்களுக்கு நன்றி சொல்ல அவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்தார்.

    நாற்பது வயதுடைய ஓர் நபரும் அவருடைய  மகனும்  வந்திருந்தனர்.

    சுப்ரமணிய கௌண்டர் டாக்டரிடம் அவர்களுக்கு ஏதாவது பணம் அன்பளிப்பாகக் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்.

    டாக்டர் வந்தவரிடம் ” சார். உங்களுக்கு ஏதாவது பண உதவி செய்யணும் என்கிறார்” என்றார்..

    கைகூப்பி நின்ற அந்த நபர்  “அய்யா, நாங்க பிச்சை எடுத்து .பிழைக்கிறவங்க. இந்த பொம்பிளை அங்கே சிக்னலிலே தினசரி பிச்சை எடுக்கும். பிச்சையெடுத்தாவது  இந்தப்பையனை நல்லாப் படிக்க வைக்கணும்னு சொல்லிச்சுங்க.. அன்னிக்கு ராத்திரி பக்கத்துக்  கடையிலே கொஞ்சம் அரிசி வாங்கப் .போச்சு.  ஏதோ புறம்போக்கு காரிலே போற மமதையிலே அடிச்சுப் போட்டுட்டுப் போயிட்டான்.  மூளையிலே அடிபட்டது ….உசிரு போச்சு. இந்த ஜென்மம் அடிக்கடி .சொல்லுங்க. “ஆண்டவன் நம்மை பிச்சை எடுக்க  வச்சிட்டான் .. என்னிக்காவது நம்மளும் நாலு பேருக்கு ரெண்டு காசு தர்மம் பண்ணனும்னு. . அதுதான்  முடியலே.. போற போக்கிலே அதோட உடம்பாவது நாலு பேருக்கு உபயோகமா .இருக்கட்டுங்க…  இதுக்குப்போயி போயி காசு வாங்கினா அந்த ஜென்மம் என்ன மன்னிக்காதுங்க..”

    டாக்டரின் கண்களில் நீர் வழிந்தது.

    சுப்ரமணிய கௌண்டரின் இதயம் துடித்தது.  அவர் அந்த பிச்சைக்காரன் முன் கையேந்தி நிற்பது போல் மனத்தில் ஒரு நினைப்பு..

    அந்தச் சிறுவனிடம் டாக்டர் கேட்டார்  “தம்பி.. உன் பெயர் என்னப்பா?”

    “அம்மா. ஆசையா என்னை கர்ணன்னு கூப்பிடுவனாக சார்..:”

    :என்ன படிக்கறே?”

    “ஆறாம் கிளாஸ் “

    :கையிலே என்ன புத்தகம?”

    “ திருக்குறள் சார்……”

    “திருக்குறள்  தெரியுமா?”

    “நிறைய  குறள்  தெரியும் சார்..”

    :உனக்குப் பிடித்த  குறள்  ஒண்ணு சொல்லு “

    “இன்னா செய்தாரை ஒறுத்தல்

    அவர் நாண  நன்னயம் செய்துவிடல்.”

    ஒரு பிச்சைக்காரியின் இதயம் பணக்கார உடலில் உட்கார்ந்து துடித்துக்கொண்டிருந்ததா இல்லை சிரித்துக்கொண்டிருந்ததா? .. யாருக்குத் தெரியும் – சுப்ரமணிய கௌண்டரைத்தவிர?

    Share
  • வார்த்தைகளைத் தேடும் கவிதைகள்

    க. பாலசுப்பிரமணியன்

     

    உள்ளத்தில் கொந்தளிக்கும் எரிமலைகள்

    உதடுகளின் வாசலில் உதிரத்தை சுவாசிக்கும் !:

    உயிரோடு மெய் சேர்க்காமல் உணர்வலைகள்

    சொல்லுக்குச்  சுவைதேடிச் சோர்ந்திருக்கும்  !!

     

    பெருமூச்சில் நினைவுகள் சுமையிறக்கி

    சோகத்தில் சொந்தத்தை வளர்த்திருக்கும்  ..

    கல்லில் சிலைவடிக்கத் துடிக்கும் கைகள்

    உளியின் வலிக்கு ஒத்தடம் கொடுத்திருக்கும் !!

     

    கற்பனைகள் நினைவில் கதறிக் கதறி

    கால் விலங்குகளை உடைக்கத் துடித்திருக்கும்

    காய், மா, பலாவின் கதவுகளைத் தட்டிக்

    கவிதைகள் உள்ளே வரக் காத்திருக்கும்

     

    எழுதத் துடிக்கின்ற  இதயத் தேருக்கு  இயலாமை

    முட்டுக்கட்டை போட்டு முன் நிற்கும் !

    காலத்தில் கலங்கி நிற்கும் கவிதை

    காற்றுண்ட கார்மேகமாய் கலைந்து நிற்கும் !

    Share
  • நவராத்திரி நாயகியர் (9) -கூத்தனூர் சரஸ்வதி தேவி

    க.பாலசுப்பிரமணியன்

    images (4)

    அரசலாற்றின் கரைவாழும் ஆதிசக்தி !

    அன்னத்தின்  மேலமர்ந்த ஞானசக்தி !

    ஆணவத்தை அழித்துவிடும்  ஆன்மசக்தி !

    அன்னையவள் அறிவின் பராசக்தி !

     

    வெள்ளைத்தாமரையில் வீற்றிருந்து

    வேதங்கள் நான்கையும் கையெடுத்துத்

    தாய்மொழியாய் தாய்ப்பாலை தந்தெனக்குத்

    தாயாகி அறிவூட்டும் சோழநாட்டுச் சுகமே !!

     

    கூத்தனுக்குச்  சங்கத் தமிழ் தந்தவளே !

    கூத்தோடு  இயல்  இசையானவளே !

    யாழிசையின் ஓரசைவில் மனமசைய

    நாவசைவில் நாதமெல்லாம் தந்தவளே !

     

    கல்விக்கு வித்தாவாய் காலையிலே

    மனத்திற்கு இசையாவாய் மாலையிலே

    கல்லுக்குள் சிலையாவாய் கைகளிலே

    கருணைக்குப் பொருளாவாய் கருத்தினிலே !

     

    கண்ணோக்கும் காட்சியெல்லாம் கருத்தாக்கி

    கண்ணிமைக்கும் நேரத்திலே அறிவாக்கி

    வித்தைக்கு வழிகாட்டும் வித்யாதேவி

    சிந்தைக்குள் என்றும்இருப்பாய்  ஸ்ரீதேவி !!

     

    அகரம் முதல் ஆய்தம் வரை எழுதிவைத்தேன்

    அழகுதமிழ் காவியங்கள் அடுக்கிவைத்தேன் !

    ஆயிரம் கண்கள் கொண்டவளே, அம்மா !

    அறிவுக்கண்ணிரண்டும் தந்தருள்வாய் !

     

    இருள்கண்டு அஞ்சுகின்ற என் மனதினையே

    அருள்கொண்டு அரவணைக்கும்   அன்புக்கரமே!

    செல்வத்தோடு வீரத்தையும் கல்வியில் சமைத்து

    சீரான வாழ்வுக்குப்  பொருளாய் தந்தாய்  நவராத்திரி !

     

    உலகெங்கும்  அமைதியின் ஆட்சி வேண்டும்

    உயர்தமிழ்ச் சொல்லெங்கும் கேட்க வேண்டும் !

    உண்மைகள் உறங்காமல் வாழவேண்டும் !

    உன்னருளால் உலகமெல்லாம் உய்யவேண்டும் !!

    Share
  • நவராத்திரி நாயகியர் (8) -பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன்

    க.பாலசுப்பிரமணியன்

     

    பட்டதுன்பம் போதுமென்றால்durgai4

    பட்டீஸ்வரம் செல்லுங்கள் !

    பார்த்தவுடன் அருள்தருவாள்

    பாரமெல்லாம் இறக்கிடுவாள் !

     

    முக்கண் கொண்டவளே, மூலப்பொருளே !

    முகம் பார்த்தால்  அமைதிப் புயலே  !

    பக்தருக்குப் பொழியும் அருள்மழையே  !

    பைரவியின் பாதங்கள் கருணைக்கடலே !!

     

    ஆயுதங்கள்  தாங்கியவள் அமர்ந்தாள்

    அறம் காக்க அவளென்றும்  துடிப்பாள்  !

    காலனையும் வென்றுவிடும் அவள் கோலம் !

    காமனையும் எரித்துவிடும் முக பாவம் !

     

    சிங்கத்தின் மேலமர்ந்த  சிங்காரி

    சூலமேந்தி சூது விரட்டும் போராளி  !

    மகிஷனைக் காலடியில் வீழ்த்திவிட்டு

    மனங்குளிர்ந்து அருள் செய்யும் துர்க்கா !

     

    எலுமிச்சை விளக்கேற்றி வைத்ததுமே

    எல்லையில்லா அச்சங்கள் நீங்கிடுமே !

    பூரண நிலவே! பெண்மையின் எழிலே!

    பூமழை பொழிந்திட பூத்திடும் தாயே!

     

    செவ்வரளியுடன் தாமரையும் சேர்த்து

    செந்தமிழ்  பாட்டொன்றில் தோய்த்து

    சந்நிதியில் முன்னின்று பேசுங்கள்

    சக்தியவள் செவிகொடுத்துக் கேட்பாள் !

     

    புலனின் தொல்லைகள் நீங்கிவிடும்

    புரியாத பாதைகள் புரிந்துவிடும் !

    தாயாக அவளைத்  தத்தெடுத்தால்

    மாயாவி! மனதினிலே அமைந்திடுவாள் !

     

    நாளொன்று போதாது அவளை நினைக்க  !

    நாவொன்று போதாது அவளைத் துதிக்க !

    வீரத்தோடு விளையாடும் அவள்  வேதமொழி !

    விளக்கேற்றிப்  போற்றிடுவோம் சுபராத்திரி!

     

     

     

     

    Share