திருச்சி புலவர் இராமமூர்த்தி

பொன்தட   வரையில்  பாங்கர்ப்  புரிவு  உறு  கடன்கள்  முற்றி
வில் தொழில்   காலத்தில்  நண்ணி, விதிமுறை  வணங்கி, மேவும்
அற்றைநாள்   தொடங்கி, நாளும்  அடல்சிலை  ஆண்மை  முற்றக்
கற்றனர்  என்னை ஆளும்  கானவர்க்கு  அரிய  சிங்கம்

வரலாறு

திண்ணன்  தம் ஐந்தாம் வயதில் சிறு சிறு விலங்குகளை வேட்டையாடி வீட்டில்  கட்டினார்.  பின்னர் வில்லாற்றல் உடைய முதியோர்  இவருக்கு வில்வித்தை கற்பித்தனர். அதனை ஒரு விழாவாகவே கொண்டாடினர். திண்ணன்  வில்லை வணங்கி அவ்வித்தை பயின்றார். ஊரவரும் உதவி புரிந்தனர். விற்பயிற்சிக் களத்தை அடைந்த திண்ணன் மிகவும் பணிவுடன் அதனைக் கற்றான். இதனைச் சேக்கிழார் பாடுகிறார்;

பொன்தட   வரையில்  பாங்கர்ப்  புரிவு  உறு  கடன்கள்  முற்றி
வில் தொழில்   காலத்தில்  நண்ணி, விதிமுறை  வணங்கி, மேவும்
அற்றைநாள்   தொடங்கி, நாளும்  அடல்சிலை  ஆண்மை  முற்றக்
கற்றனர்  என்னை ஆளும்  கானவர்க்கு  அரிய  சிங்கம்!

இப்பாடலின் பொருள்

அழகிய பெரிய மலையின் சாரலில் விருப்ப மிக்க (விற்றொழிலின்) கடன்களை யெல்லாம் முன்னர்ச் செய்துவைத்த விற்றொழிற் களத்திலே சேர்ந்து விதிப்படி முறையாக வணங்கிப் பொருந்திய அன்றைய நாளிலே தொடங்கி, ஒவ்வொருநாளும் வலியவில்லை ஆளுந்தொழிலினை முற்றுப் பெறுமாறு, என்னை ஆளுகின்ற கானவர்குலத்தில் அரியராய் அவதரித்த சிங்க வேறுபோன்ற திண்ணார்.முழுவதும் கற்றுத்  தேறினார்.

நயம்

பொன்தட வரையின் பாங்கர் – இது விற்றொழில் பயிற்றும் பயிற்சிக் களமிருந்த மலைச்சாரல் குறித்தது.

புரிவுறு கடன்முன் செய்த – செய்யத் தக்கனவாகிய கடன்களை முன்னமே செய்து வைத்திருந்த. அவை, தொழிற் பயிற்சிக் களத்தில் முன்னர்ச் செய்து வைக்கத்தக்க கடவுட்பராவுதல் முதலிய கடமைகள். வில்லினையும் மாணவனையும் காப்பணிவித்தலும், சிலையைச் சூழ்ந்து ஏழு நாள் குறிச்சியை வலங்கொள்ளுதலும், விற்பிடிப்பித்தலும், முதலிய கடன்கள் குறிச்சியிற் செய்யப்படுவன.

விற்றொழிற் பயிற்சிக்களம் குறிச்சிக்குப் புறம்பாய் அடுத்த மலைச்சாரலில் அமைவதாம். சிலைபிடிப்பிக்கு நன்னாளின்முன்னர் அவ்விடத்திலும் இதுபோலவே செய்கடன்களை முன்னரே செய்துவைத்தல் மரபு. சிலை பிடிப்பித்த பின்னர்க் குறிச்சியினின்று மாணாக்கனை ஆசிரியன் அக்களத்துக்கு அழைத்துச் சென்று விற்றொழில் பயிற்றுவிக்கத் தொடங்குவான். அச்சிறப்பு இங்குக் கூறப்பட்டது.

விற்றொழிற் களம் – விற்றொழில் கற்றற்குரிய களம். முற்காலத்தில் கலைபயில் இடங்கள் நகர முதலிய குடியிருப்பு இடங்களை அடுத்துப் புறம்பே அமைப்பது ஊர் அமைப்பாகும். விற்றொழிற் பயிற்சி யிடமாகிய களமும் இவ்வாறே குன்றவர் வாழும் ஊராகிய குறிச்சிக்குப் புறம்பே அதனை அடுத்த மலைச்சாரலில் அமைவதாம். இவ்வமைப்பு இக்கலைப் பயிற்சிக்கு இன்றியமையாததுமாம். என்னை? அம்புகளைக் குறிவைத்து எய்யும் கலையாதலின் அதற்குரிய அகன்ற வெளியும், மரங்கள் முதலிய பிறவும் வேண்டப்படும்; தனியிடமல்லாது குடியிருப்புக்கு அணிமையாயின் அங்கு வாழ்வாருக்கு இப்பயிற்சியால் இடையூறு நேரும்; இவை முதலிய காரணம் பற்றி விற்றொழிற்களம் பொன்  தடவரையின் பாங்கர் அமைக்கப்பட்ட தென்க. ஊர்ப்புறம்பே ஒதுகிடைகளும் யாக சாலைகளும் அமைந்த அமைப்பினைச் சண்டீசநாயனார் புராணத்தில்  கூறியதும்காண்க.

விதிமுறை வணங்கி – வில்லின் தொழிற்கலை பயிலத் தொடங்கும் மாணாக்கன் முதலில் வில்லினையும், ஆசிரியனையும் அதற்குரிய கடவுளையும் வேலன் முதலியவர்களையும் பெரியோரையும் வணங்குதல் மரபு. அம்மரபாலே வணங்கி.

மேவும் அற்றை நாள் –   வில்விழா முடிவுறுகின்ற ஏழாம் நாளாகிய அன்று.

நாளும் – ஒவ்வொருநாளும், கல்விப்பயிற்சி முற்றும்வரை அதனை நாடோறும் பயிலவேண்டும் என்பது முறை. அடற்சிலை – சிலைக்கு வலிமையாவது அதனை ஏந்தியோன் எண்ணியாங்கு வினைமுடிக்கத் தக்கதாகி உதவுதல்.

முற்றக் கற்றனன் – முற்ற – நிறைவெய்த. கலையின் முற்றுதலாவது அதனாலாகிய முடிந்த பயனைத் தருதல்.

“கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன்,
நற்றாள்   தொழாஅர்  எனின்” என்பது திருக்குறள்.

முற்றக்கற்றதனால் இது இறைவர்க்குப் பகலிற் கானவூ னமுதமாக்குதற்கும், இரவிற் காவல்புரிவதற்கும் பயன்பட்டதென்பதும்  புலப்படும்.

‘’என்னை ஆளும்’’  – இது கவிக்கூற்று. சிலைக்கலை முற்றும் கற்று நிரம்பிய இவ்விடத்தில் ஆசிரியர் நாயனாருக்கு ஒரு வணக்கம்செய்து மேற்செல்கின்றார். நாயனாரது சரிதத்தை உலகச்சார்பு பற்றியதும் சிவச்சார்பு பற்றியதும் என இருபகுதியாகப் பிரிப்போமாயின் உலகச்சார்பின் பகுதி நிரம்புகின்றநிலை இது. இனி இது முற்றியபின் நாயனார் வேட்டையிற் புக்குச் சென்றவாறே சிவச்சார்பு பெறப்போக உள்ள பகுதி தொடங்குகின்றது.

“ஐம்புலவேடரின் அயர்ந்தனை வளர்ந்தென” (சிவஞானபோதம் – 8ம் சூத்திரம்) என்றபடி உண்மையில் வேடர் சேரியில் வளர்கின்ற மன்னவ குமாரராகிய திண்ணனாரது; அந்தச் சேரியில் வளரும் வளர்ச்சித்திறங் கூறும் பகுதி இங்கு முற்றுப்பெறுகின்றது.

இனித் “தவத்தினி லுணர்த்த விட்டு….அரன்கழல்செல்” வதாகிய பகுதி தொடங்குகின்றது என்ற உண்மையுங் காண்க. சிவவழிபாட்டுக் கிரியைகளுட் புகுமுன் நியாசங்கள் முதலியவற்றாற் சுத்திசெய்துகொண்டு புகும் ஆகமவிதிபோல இங்குச் சிவச்சார்பு பெறப்புகும் நாயனார்க்கு வணக்கம்செய்து ஆசிரியர் மேற்பகுதி தொடங்குகின்றார். இஃது ஆசிரியரது மரபு.   ‘’என்னை ஆளும்  கானவர்க்கு  அரிய  சிங்கம்’’  என்றது  அத்தகைய மரியாதையைக்  குறித்தது.

கானவர்க்கு அரிய –  வேடர் குலத்துக்குக் கிடைத்தற்கரிய பேறாகக் கிடைத்தவர் என்பது கருத்து. சிங்கம் – சிங்கம் போன்றார். உவமையாகு பெயர்.  இதனுடன்

‘’ஏரார்ந்த  கண்ணி   யசோதை இளஞ்சிங்கம் ‘’ என்ற ஆண்டாளின்  திருப்பாவையும் கம்பரின்,

பரதனும் இளவலும்  ஒருநொடி பகிராது
இரத்தமும் இவுளியும் இவரினும், மறைநூல்
உரைதரு  பொழுதினும் ஒழிகிலர் எனைஆள்
வரதனும்  இளவலும்  எனமரு   வினரே!

என்ற பாடலும்  இங்கே ஒப்பு நோக்கத்தக்கன.

இப்பாடலில், திண்ணன், பின்னர் கண்ணப்ப நாயனாராக விளங்கப் போகிறார் என்ற பக்தியுணர்வு மேம்பட்டமையால், அவரை வழிபட்டு, ‘’என்னை ஆளும்  கானவர்க்கரிய  சிங்கம்’’ என்று  சேக்கிழார் கூறுவது எண்ணியெண்ணி  உருகத்தக்கது!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.