செப்டெம்பர் 15, 2014

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு திரு. எம். ஜெயராமசர்மா அவர்கள்

 

எம்.ஜெயராமசர்மா

 

சமயக் கல்வி பயிற்றுவித்தலுக்கு  நல்லதொரு செயல் வடிவம் அமைத்து, புலம் பெயர்ந்த பெற்றோர்களுக்கு வழிகாட்டும் பணியில்  ஈடுபட்டிருக்கிறார்  திரு. எம். ஜெயராமசர்மா.  இவர் வல்லமை இதழில் சென்ற வாரம், மதக் கல்விக்கு செயல்வடிவம் தரும் நோக்கில் எழுதியக் கட்டுரைக்காக இவ்வாரத்தின் வல்லமையாளராக வல்லமை இதழ் குழுவினரால் பாராட்டப்படுகிறார்.

சமயம் என்றால் என்ன, மதங்களின் நோக்கம் என்ன, அவை சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகள் யாவை   போன்ற  சமயத்தின் தேவையின் அடிப்படையை  மக்கள் மறந்து வெகுகாலமாகிவிட்டது. வெறும் சடங்கு சம்பிராதயங்களில் மூழ்குவதும், மதத்தின் அடிப்படையில் சண்டையிட்டுக் கொள்வதும் இன்று நேற்று என்று இல்லாமல் தொடர் கதைகளாக நடந்து வருகிறது. அது மனித குலமே மதம் பிடித்து  ஒன்றை ஒன்று தங்களை  அழித்துக் கொள்ளும் நிலையாக  உலகத்தில் பரவியிருக்கிறது.

உலக மதங்கள்  அனைத்திலுமே இன்று காணப்படும் இந்த  தடம் மாறிய நிலைக்கு  இந்து மதமும் விதிவிலக்கல்ல.  இந்து மதத்தின் தாய்நாடான  இந்தியாவில் பிறந்து வளந்தவர்களுக்கும் தங்கள் இந்து  மதத்தின்  சமுதாயப் பங்கு பற்றிய தவறானக் கருத்துகள் வேரூன்றிவிட்ட  நிலையில், வரும் தலைமுறையினரை, அதுவும் தாய்நாட்டிற்கு வெளியே வாழும் அடுத்த தலைமுறையினரை, அறிவில் சிறந்து பல்நோக்கும் கொண்டு வளரும் சிறார்களை, இந்து மதம் காட்டும் உண்மை நல்வழியை உணரச் செய்வது எப்படி என்ற கேள்விகள் புலம் பெயர்ந்த பெற்றோர்கள் மனதில் எழுந்த வண்ணம்தான் உள்ளன.

இந்து மதத்தின் பண்பு, மிகப் பண்டையத் தோற்றத் தொன்மையின் காரணமாகவே காலத்திற்குப் பொருந்தாத சில கருத்துக்களையும் கதைகளையும் உள்ளடக்கியிருப்பது.  கைபேசி வழியே உலகத்தையே அறிந்து தகவல்களை விரல் நுனியில் கொண்டிருக்கும் இக்கால சிறுவர்களிடம், நடப்புலகிற்குப் பொருந்தாத அந்தக் கதைகளே சமயக்கல்வி கொடுத்து வழிநடத்தும் முயலும் பெற்றோர்களுக்கு  மேலும் சவாலை முன் வைத்து விடுகிறது.  சமயக் கல்வியினை  சரியான முறையில் வழங்க இக்காலத் தேவைகள் யாவை? புதிய கோணத்தில் முன்னெடுத்துச் செல்ல  வழியென்ன?  இதற்கு யாரால் சரியான வழியைக் காட்ட இயலும்? என்ற கேள்விகள் நம்மிடையே தோன்றிய வண்ணம் உள்ளன.

இந்தத் தேவையை சரியான முறையில் எதிர் கொண்டு  தீர்வு காணும் பின்புலத்தைக் கொண்டிருக்கிறார் வல்லமையாளர்  ஜெயராமசர்மா.  தமிழ்நாட்டின்  தாராபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜெயராமசர்மா வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்.  தற்போது  ஆஸ்திரேலியாவின் குடியுரிமை பெற்று அங்கு மெல்பேண்னில் வசிக்கிறார்.

பேராதனை பல்கலைக்கழக தமிழ் சிறப்புப் பட்டதாரியான இவர், கல்வியியல் துறையில் டிப்ளமா, சமூகவியல் துறையில் டிப்ளமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர். உதவிக் கல்விப் பணிப்பாளராகவும், தமிழ், இந்துகலாச்சார  விரிவுரையாளராகவும் பணியாற்றி இருக்கிறார். இவரது சமயப் பணிகளில், 2008ல் மதுரை மாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ‌ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாள‌ராகவும் பங்கேற்றமையும்; அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று தமிழ், கலாச்சாரம், இந்து சமயம், சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளவையும் அடங்கும்.  சமயம், தமிழர் பண்பாடு சம்பந்தமாக பேட்டி கண்டு நேரடியாக வானொலி ஒளிபரப்புகளையும் வழங்கியுள்ளார். தற்பொழுது தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும், விக்டோரியா இந்து கல்வி மையத்தின் ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார். இத்தகைய பின்புலத்தைக் கொண்டிருக்கும் இவருக்கு, சமயக் கல்வி பற்றிய வழிமுறைகளை வகுத்துத் தர  இவரது கல்வித்துறை மற்றும் சமயத்துறை அறப்பணிகள் பெரிதும் உதவியாக இருந்திருக்கின்றன எனக் கொள்வது மிகையாகாது.

வல்லமையில் தொடர்ந்து தனது படைப்புகளைப் பகிர்ந்து வரும் இவரை வல்லமை வாசகர்கள் ஒரு சிறந்த கவிஞராகவே அறிவார்கள்.  இவர் எழுதிய பற்பல கவிதைகள் பல கருத்துகளையும் உள்ளடக்கியவை. வல்லமையின் ஆண்டுவிழா வாழ்த்து முதற்கொண்டு, சில இறைவணக்கப் பாடல்களும் வழங்கியுள்ளார்.  பொதுவாக கவிதைகள் பாடப்பெறாத இக்கால பிரபலங்கள் பலரைப் பற்றியும் கவிதைகள் எழுதியுள்ளார்.  அவரால் பாடப்பெற்றவர்கள் வரிசையில் நெல்சன்மண்டேலோ, பாலு மகேந்திரா, உ வே சா, வாரியார், அன்னை தெரசா, ராமகிருஷ்ணர், சிவாஜி, வாலி, வைர முத்து, பாலமுரளி கிருஷ்ணா,  பாரதி, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, விவேகானந்தர், கண்ணதாசன் எனப் பலர் அடங்குவர்.

அம்மா, அப்பா , குழந்தை, பெண்ணினம் போன்ற உறவுகளைப் போற்றும் கவிதைகளுடன், சமுதாய அக்கறையுடன் எழுதப்பட்ட கவிதைகள் அழகு தமிழ் பேசிட, பக்குவத்தை அடைய, தலைவனாய் உயர, தாய்ப்பால் கொடுத்திட,  பெண்ணினைக் காத்திட என்ற வகையில் விரிகின்றன.   சற்றே வித்தியாசமான கவிதைக் கருக்களைக் கொண்ட சர்க்கரை வியாதி, ஆலமரம், குருவிக்கூடு, விஞ்ஞான வளர்ச்சி, புத்தாண்டு, மாடிவீட்டு ஏழைகள், நூலகம் போன்ற கவிதைகளும் இவரது கவிதைக் களத்தில் அடங்கும்.

எடுத்துக்காட்டாக, யாழ் நூலகம் எரியுண்ட தினமான மே 31, 1981 நினைவாக…

“சூறை ஆடி விட்டார்கள்!”(https://www.vallamai.com/?p=46342) என்ற கவிதையில்

[…]
யாழ்ப்பாண நூலகத்தை யாருமே மறக்கார்கள்
வேண்டிய புத்தகத்தை விரைவுடனே தந்துநிற்கும்
தென்கிழக்கு ஆசியாவின் சிறந்தவொரு நூலகமாய்
சிறந்தோங்கி நின்றதனை தேசமே தானறியும்

எத்தனையோ வகையான புத்தகங்கள் இருந்ததங்கே
அத்தனையும் படிப்பவர்க்கு அருமருந்தாய் அமைந்தப்போ
சொத்தாக மதித்துமே புத்தகத்தைக் காத்தார்கள்
சுவையறியா அரக்கர்களோ சூறையாடி விட்டார்கள்

கற்றுணர்ந்தோர் வாழ்ந்தவிடம் கல்விக்கூடம் நிறைந்த இடம்
கண்ணியத்தின் உறைவிடமாய் கருத்திலே நின்றஇடம்
பெற்றவர்கள் பிள்ளைகளை பெரிதாக்க நின்றஇடம்
பித்தர்களின் வெறியாலே சொத்தையெல்லாம் இழந்தார்கள்
[…]

என அந்த நிகழ்ச்சிக்கு வருந்தி கவிதை  வடித்துள்ளார்.

இவரது படைப்புகள் வல்லமையில் மட்டுமின்றி திண்ணை, தமிழ் ஆஸ்திரேலியன், தமிழ்முரசு, அக்கினிக்குஞ்சு, நெற்றிக்கண், தேனீ, ஜியோ தமிழ், மாற்றம்,  ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம் பத்திரிக்கைகளில் வெளி வந்துள்ளன.  பிற கலைத் துறைகளிலும் இவர் பங்களிப்பு அதிகம். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத் தயாரிப்பாளராகவும் கடமையாற்றிய இவர்,  10க்கு மேற்பட்ட நூல்களையும், 100 ஓரங்க நாடகங்களையும், 10க்கு மேற்பட்ட வில்லுப் பாட்டுக்களையும், 20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு “முதற்படி” என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து வெளியிட்டுள்ளார்.

பல்துறை வித்தகரான ஜெயராமசர்மா வல்லமையில் பகிர்ந்து கொண்ட கட்டுரைகள் தலைமுறை இடைவெளிகளினால் ஏற்படும் கருத்து பேதங்கள், சமையக் கல்வியின் முக்கியத்துவம் போன்ற வகைகயில் அமைந்தவை.

சென்ற வாரக் கட்டுரையான ,

“புலம்பெயர்ந்த நாடுகளில் சமயம் கற்பித்தலில் கையாளப்படும், கையாளப்படவேண்டிய அணுகு முறைகள்”  என்ற கட்டுரையில்  முன்னாள் கல்விப்பணிப்பாளரான இவர் தனது சிந்தனைகளையும் அனுபவத்தையும் முன்னிறுத்தி பலருக்கும் பயன்தரும் வகையில் அதை  எழுதியுள்ளார்.  சிறந்த விளக்கங்களுடன், தனது வாழ்வில் பெற்ற அனுபவங்களையும்  சான்றாகக் காட்டி இவர் அளித்தக் கட்டுரை முழுமையாக வாசிக்க வேண்டிய ஒன்று.  அக்கட்டுரையின் முக்கியக் கருத்து கீழே சுருக்கமாக வழங்கப்பட்டுள்ளது.

“சமயம்” என்றால் என்ன?  “மதம்” என்றால் என்ன? என்பதை நாம் நன்றாக அறிந்துவைத்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டும் ஒன்றா அல்லது இரண்டுமே வேறா என்பதே எம்மில் பலருக்கும் தெரியாத பொழுது எமது பிள்ளைகளுக்கு எப்படி இதனைப் பற்றி விளக்கிச்சொல்லமுடியும். இக்காலத்தில் வளருகின்ற பிள்ளைகள் எம்மைப் போன்றவர்கள் அல்லர் என்பதை நம்மில் பலரும் தெரிந்துகொள்ளுவது  இல்லை. அவர்களது சிந்தனைகளும், செயற்பாடுகளும் வித்தியாசமானதாக இருக்கும். நாங்கள் வளர்ந்த சூழல் வேறு. நாங்கள் படித்த சூழல் வேறு. எங்களைச் சுற்றியிருந்த சூழலும் வேறு.  அப்படியான சூழலில் இருந்து வந்த வளர்ந்தவர்களான நாங்கள் ….   எங்கள் பிள்ளைகளை எங்களைப்போல அவர்கள் நடக்கவில்லையே என்று மனக் குழப்பம் அடைதல் கூடாது.

[…]

புலம்பெயர் நாடுகளில் சமயம் போதிக்க வருகின்றவர்கள் தாம் முன்னர் படித்தவைகளையும், தமக்கு ஆசிரியர் எப்படிப்படிப்பித்தாரோ அப்படியே படிப்பிக்க நினைத்துச் செயற்படும் பொழுதுதான் எடுத்துகொண்ட நோக்கம் குறைபடுகிறது. எனவே சமயம் போதிப்பதில் பல புதிய அணுகு முறைகளைக் கையாண்டால்த்தான் எமது நினைப்பு நிறைவேறும் என்பதை மனங்கொள்வது பொருத்தம் என நினைக்கின்றேன்.

1) சமயத்தை ஆழமாகப் படிப்பித்தல் நல்லதல்ல.
2) தேவையற்ற கதைகளை சொல்லிப் படிப்பித்து குழப்பமான மனநிலை உருவாக்கல் ஏற்றதல்ல.
3) கூடியவரை இலகுவான மொழிப்பிரயோகமே கையாளுதல் நன்று.
4) மனத்தில் பதியும் வண்ணம்  திருமுறைகளை பாடிக்காட்டி விளக்குதல் வேண்டும் .
5) கோவிலுக்குக் கூட்டிப்போய் அங்கு நடக்கும் விஷயங்களை அவதானிக்க வைப்பதுடன் அவற்றுக்கான விளங்கங்களையும் எளிதாகக் கொடுக்கவேண்டும்.
6) பண்ணோடு பாடப்பழக்கலாம். சமய ஆசாரங்களை இலகுபடுத்திச் சொல்லலாம்.
7) கும்பிடும் பழக்கத்தின் விஞ்ஞான அணுகுமுறையை எடுத்துச் சொல்லலாம்.
8) ஒளியின் முக்கியம், ஒலியின் முக்கியம், இவற்றை சமயத்துடன் சேர்த்து விளக்கலாம்.
9) அதிர்வுகள் பற்றி பிள்ளைகள் அறிந்துள்ளதால் அதற்கும் சமயத்துக்குமான நெருக்கத்தை விளக்கலாம்.
10) கொண்டாட்டங்களின் உட்பொருள், திருவிழாக்களின் சமூகத்தொடர்பு, சேவை செய்தலின் உயர்வு, கலைகளுக்கான முக்கியத்துவம், இவற்றோடு .. உண்மை நேர்மை, உழைப்பு, பணிவு, இரக்கம், அன்பு, அன்னதானம், வறியவர்க்கு உதவுதல், பொதுச்சேவை, பெரியோரை மதித்தல், விட்டுக்கொடுத்தல், முரண்படாமை, புறங்கூறல், கொல்லாமை, மதுவை மனத்தாலும் நினையாமை, தாயைப்போற்றல், தந்தையை மதித்தல், குருவைப் பணிதல், இவையெல்லாம் எங்கள் சமயத்தின் கரு என்பதைக் கட்டாயம் சமய போதனையின் பொழுது சொல்லிக் கொடுத்தல் வேண்டும்,

சமயய வாழ்வு வாழத்தான் இவைகள் யாவும் தேவைப்படுகின்றன. எவ்வளவு படித்தாலும் அந்தப்படிப்பு இறையுணர்வையும் நல்வழியையும் ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும். “இளையோரின் முழுமன வளர்ச்சிக்கு சமயக்கல்விதான் முக்கிய மானது ”

என்று கூறி செயல்முறை நடவடிக்கையாக சமயக்கல்வியை  இந்த  வழிமுறையில் முன்னெடுத்துச் செல்லலாம் என்றுக்  காட்டிய ஜெயராமசர்மா அவர்களை இவ்வாரத்தின் வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

 

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

 1. அறிவுக்கு எட்டிய அனைத்திலும் ஆழமாய் சிந்திக்கும் மனிதர்கள் குறைவு..

  அதனிலும் தன் மனப்பதிவுகள் தருபவர் இன்னும் குறைவு…

  பற்பல துறைகளில் ஆழங்கால்பட்டு தன் அனுபவங்களையும் சேர்த்து 

  முத்திரை பதிக்கும் வித்தகர்கள் அரிதினும் அரிது….

  அவ்விதம் தாராபுரம் தந்த தங்கமாய்..  ஆஸ்திரேலியாவில் மின்னும் வைரமாய்..

  தொடுபொருள் அனைத்திலும் சடுதியில் கவிதையை புனைந்திடும் வல்லுநராய் 

  ஆகச்சிறந்த அறிஞர் பெருமகனாய் இனிதுலங்கி.. இணையதள வாயிலாகவும் – 

  வல்லமையில் தன் பதிவுகளிட்டு ஆத்மா சாந்திபெறும் ஐயா ஜெயராம சர்மா…

  வல்லமையாளர் விருது பெறும் இந்நாளோ..  பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள்..

  இத்தனைப் பெரிய மனிதர் இயம்புவதைப் பாராட்டி. அவர் உள்ளம் நுழைகிறேன்..

  விரித்து வைத்திருக்கும் அவரது எல்லைகள் வியப்பின் விளிம்பில் நம்மை நிற்க வைக்கின்றன 

  கொடுத்து வைத்தவராய் இம்மண்ணில் திகழும் வித்தகர்களில் இவர் ஒருவர்..

  நமக்கும் நண்பர் என்பதை நான் உணர்கிறேன்..  இன்னும் பல விருதுகள் பெறவும்..

  இதயம் தொடுகின்ற படைப்புகள் தரவும்.. அன்னாரை வேண்டி விரும்பிக் கேட்டு விடைபெறுகிறேன்..

  அன்புடன்..
  காவிரிமைந்தன் 

 2. My heart felt congratulations to Mr. M Jeyaramasarma for being selected as the வல்லமையாளர்.
  He is well deserved to receive this title and I am highly impressed by his achievements and his contributions to our society in many dimensions including to religious education and Tamil cultural education. I have read several of his writings and very much enjoyed his candid presentation and their deep meaning. I wish Mr. M Jeyaramasarma all the very best for continued contribution to the community. (Note: my Tamil language font is not working, hence my comments are in English). Prof Sivakumar, Singapore

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.