மார்ச் 16, 2015

இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு முனைவர் ந. சுந்தரம் அவர்கள்

 

Dr. N. Sundaram. retired Professor of Hindi 1

மேனாள் மாநிலக் கல்லூரி இந்திப் பேராசிரியர் முனைவர் ந. சுந்தரம் அவர்கள் தன் 80ஆவது வயதில் 1ஆம் திருமுறையை இந்திக்கு மொழிபெயர்த்து முடித்து நூலாக்கியுள்ளதைப் பாராட்டி அவரது பணியைப் போற்ற விரும்பி, அவரை வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளராக அறிவித்து வல்லமைக் குழுவினர் மகிழ்கிறோம். அவரது தொடர் மொழிபெயர்ப்புப் பணியில் இப்புதிய சாதனையை குழுவினரின் பார்வைக்குக் கொண்டுவந்த வல்லமையின் எழுத்தாளரும் வாசகருமான மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கன்னட மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ந. சுந்தரம் அவர்கள், பெரியகுளத்தைச் சேர்ந்த புரோகிதர் ஒருவரின் மகனாக ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர். பள்ளி நாட்களில், 15 வயதிலேயே தனது தந்தையை இழந்தவர். நூற்பாலை ஒன்றில் பணிபுரிய இவரது தாய் கோவைக்குச் சென்றுவிட, பள்ளிப்படிப்பை முடிக்கும் பொருட்டு பெரியகுளத்திலேயே இவர் தங்க நேர்ந்தது. பெரியகுளத்தின் இந்திப் பிரச்சார சபாவில் தங்குவதற்கு இடமும், நூலகப் பணியும், அங்கே இந்தி கற்கும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது.

நடமாடும் நூலக ஊழியராக வாசகர்களின் வீடுகளுக்கு தமிழ் வார இதழ்களான கல்கி, ஆனந்த விகடன் ஆகியவற்றைக் கொண்டு சேர்க்கும் பணிக்காக மாதம் பத்து ரூபாய் ஊதியம் பெற்றார். அத்தொகை இவரது பள்ளிக் கட்டணத்திற்குப் பெரிதும் உதவியது. கல்கி, தேவன் ஆகியோரின் கதைகளை பிற வாசகர்களுக்கும் முன்னரே தனக்கு படிக்கும் வாய்ப்பு கிடைத்ததை மகிழ்சிகரமான அனுபவமாகக் கூறும் இவர் தேவனின் துப்பறியும் சாம்பு பாத்திரத்தின் ரசிகர். இவரது பள்ளித் தோழர்களில் ஒருவர் மேஜர் சுந்தரராஜன். அவருடன் இந்தி நாடகங்களில் நடித்துள்ளார். இவர் நூர்ஜகானாகவும், மேஜர் ஷாஜகானாகவும் ஒரு இந்தி நாடத்தில் நடித்துள்ளார்.

ந. சுந்தரம் அவர்கள் இந்தியில் முதுகலை பட்டம் பெற்ற பிறகு, புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியேற்றார். அங்கு இவர்தம் வாழ்வின் திருப்புமுனைக்குக் காரணமான சமஸ்கிருதப் பேராசிரியர் புதுக்கோட்டை ஏ. ஸ்ரீனிவாச ராகவன் அவர்கள் இவரை இந்தியில் முனைவர் ஆய்வு மேற்கொள்ளப் பணித்தார். தமிழ், இந்தி ஆகிய இரு மொழி இலக்கியங்களிலும் ஆண்டாள், மீரா ஆகியோரைப் பற்றி ஒப்பிலக்கிய ஆய்வு செய்ய வழிகாட்டியதுடன், திவ்யப்பிரபந்தத்தை படிக்கச் சொல்லி பக்தி இலக்கியத்தின் சுவையையும் அறிய வழிவகுத்தார்.

கோதை ஆண்டாளின் திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகியவற்றை இந்தியில் மொழி பெயர்ப்பது ஒரு சவாலாக அமைந்தது இவருக்கு. தமிழ் சொல்லிற்கு ஈடான சமஸ்கிருத சொற்கள் எளிதில் கிடைப்பது போல இந்தியில் அமையாத பொழுது, பேராசிரியர்கள் சிலரின் உதவியுடன் இந்தி மொழிபெயர்ப்பை மேற்கொண்டு வெற்றிகரமாக ஆய்வை முடித்தார். ஃ போர்ட் நிறுவனம் ஒருங்கிணைத்த மொழியியல் கோடைப்பள்ளிகளில் பத்தாண்டுகள் மொழியியல் பயின்றார். அக்காலங்களில் திருக்குறளையும், பாரதியார் பாடலையும் இந்தியில் மொழி பெயர்த்தார்.

இவரது வழிகாட்டியான சமஸ்கிருதப் பேராசிரியர் புதுக்கோட்டை ஏ. ஸ்ரீனிவாச ராகவன் அவர்கள் வைணவ இலக்கியமான திவ்யப்பிரபந்தத்தை இந்தியில் மொழி பெயர்த்திருந்தாலும், தமிழ்ச் சைவஇலக்கியங்கள் இந்தியில் மொழிபெயர்க்கப்படாமல் இருந்தன. சாந்திநிகேதனின் விஸ்வபாரதி பல்கலைக்கழகம் மொழிபெயர்ப்பிற்காக இவரை அணுகியபொழுது, மகிழ்ச்சியுடன் அவ்வாய்ப்பை ஏற்று திருவாசம், அப்பர், சுந்தரர், சம்பந்தர் பாடல்களை இந்தியில் மொழி பெயர்த்து நூலாக வெளியிட்டுள்ளார்.

மொழிபெயர்ப்பை ஒரு தார்மீகக் கடமையாகச் செய்யும் இவர், தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் “ஒரே ரத்தம்” நூலையும், அதிலுள்ள இந்திக்கு எதிரான கருத்துகளையும் சற்றும் பிசகாமல் அப்படியே இந்தியில் மொழிபெயர்த்த விதம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், இவரது மொழிபெயர்ப்பின் நெறிகளை வெளிப்படுத்தி புகழ் சேர்க்கும் விதத்தில் அமைந்தது.

ராதா என்ற பாத்திரம் ஒரு கருத்துருவாக்கம், ஒரு கற்பனைப் பாத்திரம், பண்டைய இலக்கியங்களில் ராதா என்ற குறிப்பு இல்லை, பாகவதத்தில் “அநாயா ராதிதோ”என்ற அன்பைக் குறிக்கும் குறிப்பு மட்டுமே உள்ளது, ராதா என்ற பெயர் காணப்படவில்லை என்று கூறும் ந. சுந்தரம் அவர்கள், ஆழ்வாரின் நப்பிண்ணையுடன், பிற்கால இந்தி இலக்கியங்களில் காணப்படும் ராதாவை ஒப்பிட்டு ஒப்பிலக்கிய ஆய்வும் செய்துள்ளார்.

Dr. N. Sundaram. retired Professor of Hindi

இவர் எழுதியுள்ள 40 நூல்களில் 25 நூல்கள் மொழி பெயர்ப்பு நூல்களாகும். ஒரு மொழியின் இலக்கியத்தை அதன் அழகு குறையாமல் மற்றொரு மொழிக்கு மொழிபெயர்ப்பது ஒரு சவாலான செயலாக இருப்பினும், அதை இவர் மிகவும் விரும்புகிறார்.

இதுவரை இவர் இந்திக்கு மொழி பெயர்த்துள்ள திருமுறைகள் விவரம்:

1 ஆம் திருமுறையை இவர் இந்திக்கு மொழிபெயர்த்து முடித்து நூலாக்கியுள்ளார்.

2 ஆம் 3 ஆம் திருமுறைகளை இவர் இந்திக்கு மொழிபெயர்ப்பது தொடர்கிறது.

4, 5, 6 திருமுறைகளை இவர் இந்திக்கு மொழிபெயர்த்து, பாட்னாவில் உள்ள நாளந்தா திறந்தவெளிப் பல்கலைக்கழகம் அவற்றை நூலாக வெளியிட்டுள்ளது

7 ஆம் திருமுறையை இவர் இந்திக்கு மொழிபெயர்த்து, வார்தாவில் உள்ள மகாத்மா காந்தி அறநிலையம் அதனை நூலாக வெளியிட்டுள்ளது

8 ஆம் திருமுறை திருவாசகத்தை இவர் இந்திக்கு மொழிபெயர்த்து, கொல்கத்தா சாந்திநிகேதன், விசுவ பாரதிப் பல்கலைக்கழகம் அதனை நூலாக வெளியிட்டுள்ளது

10ஆம் திருமுறையை இவர் இந்திக்கு மொழிபெயர்த்து, அதனை தில்லிப் பதிப்பாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

 

எண்பது வயதிலும் தளரா ஆர்வத்துடன் தமிழ் நூல்களை இந்திக்கு மொழிபெயர்த்து தமிழ்ப்பணியாற்றும் பேராசிரியர் சுந்தரம் அவர்களைப் போற்றுவதுடன், அவரது 2 ஆம் 3 ஆம் திருமுறைகளை இந்திக்கு மொழி பெயர்க்கும் முயற்சியை வல்லமைக் குழுவினர் பாராட்டி வாழ்த்துகிறோம்.

 

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

 

தகவல்களும், படங்களும் தந்துதவிய இந்து நாளிதழுக்கும், கட்டுரை ஆசிரியர் சுகந்தி கிருஷ்ணமாச்சாரி அவர்களுக்கும் நன்றி.
The language bond, SUGANTHY KRISHNAMACHARI, November 4, 2010, The Hindu
http://www.thehindu.com/books/the-language-bond/article868614.ece

 

முனைவர் ந. சுந்தரம் (Dr. N. Sundaram)அவர்களை தொடர்பு கொள்ள:
தொலைபேசி: 0091 9444896916
மின்னஞ்சல்: drnsundaram@gmail.com

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இந்த வார வல்லமையாளர்!

  1. முனைவர் சுந்தரம், எனது இரு கவிதைகளை 1998 காலக்கட்டத்தில் இந்திக்கு மொழி பெயர்த்தார். அத்துடன், வேறு பல மொழிகளுக்கும் உரியவர்களை அறிமுகப்படுத்தி உதவினார். அதன் தொடர்ச்சியாகவே 32 மொழிகள் வரை என் கவிதைகள் மொழிபெயர்ப்பு ஆகின.

    வல்லமையாளரைப் பாராட்டி வாழ்த்துகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.