Author: சக்தி சக்திதாசன்

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(160)

    –சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    இங்கிலாந்து நாட்டின் சிறப்பம்சங்களில் ஒன்று அந்நாட்டின் கலாச்சார பெருமைகளுக்கு அந்நாட்டின் மக்கள் கொடுக்கும் முக்கியத்துவமே ஆகும்.

    ஒரு நாட்டின் பெருமையை அதன் கலாச்சார மகிமைகளை உணர்ந்து கொண்டால்தான் அந்நாட்டைப் பெருமைப்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடிய மனப்பக்குவத்தை மக்கள் பெறுகிறார்கள்.

    அப்படிப்பட்ட ஒரு மனப்பக்குவத்தைப் பெற்ற ஒரு சமுதாயமே தனது நாட்டின் புனிதத்தன்மையைப் போற்றும் தகமையை அடைகிறது.

    தமது நாட்டின் காலாச்சாரப் பெருமைகளை காப்பாற்றுவது மட்டுமல்ல வரும் வெளிநாட்டு விருந்தினர்களுக்கு அப்பெருமைகளை விளக்கி கூறி தமது நாட்டின் பெயரைப் பெருமைப்படுத்துவதிலும் இங்கிலாந்து நாட்டினர் முன் நிற்கிறார்கள்.

    எதைப்பற்றி மடல் வரைய இத்தனை முன் விளக்கம் என்று எண்ணுகிறீர்களா ?

    சென்ற வார விடுமுறையில் நானும் எனது மனைவியும் எனது மகனும் இங்கிலாந்து நாட்டின் தொன்மை பொருந்திய தேவாலயமான “கண்டபரி கதீட்ரல்” ( Canterbury Cathedral ) தேவாலயத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றிருந்தோம்.

    கண்டபரி எனும் கெண்ட் பகுதியச் சேர்ந்த அந்நகரமே மிகவும் பரபரப்பாக இருந்தது. அது ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆயினும் அந்நகரமே மக்கள் கூட்டத்தினால் அலைமோதிக் கொண்டிருந்தது. சாப்பாட்டு கடைகளெல்லாம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அந்நாளுக்கு மெருகூட்டும் வகையில் ஆதவனும் தனது உஷ்ணக்கதிர்களால் வழமையாக குளிரினால் வாடும் மக்களை உஷார் படுத்திக் கொண்டிருந்தான். பல வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் அக்காலாச்சரப் பழமையுடன் இணைந்த நகரைப் பார்வையிடுவதற்காக கைகளில் தமது ஸ்மார்ட் தொலைபேசியின் கேமராக்களை வைத்து கிளிக் செய்வதும், தம்மைத் தாமே செல்பிஃ எடுத்துக் கொள்வதுமாக இருந்தார்கள்.

    இந்நாட்களில் இங்கிலாந்துக்கு வரும் உல்லாசப் பயணிகளில் அதிகமாக சீன தேசத்து உல்லாசப் பயணிகளாகக் காணப்படுவது சீனாவின் பொருளாதார முன்னேற்றத்தைக் காட்டுவதாக அமைகிறது. இங்கிலாந்தின் பழம்பெரும் உடைகள் விற்பனை செய்யும் அங்காடியாக “டெபனாம்ஸ் ( Debenams) எனும் நிலையம் திகழ்கிறது. இந்த கண்டபரி எனும் இடத்திலுள்ள இவ்வங்காடியின் சிறப்பு என்னவென்றால் அதை அப்படியே பழமைப் பாணியில் இன்னமும் பாதுகாத்து வருவதே .

         சக்திதாசன்1     சக்திதாசன்8

    இப்படியாக அந்நகரின் பல தெருக்களின் வழியாக நாம் நடந்து அத்தேவாலயத்தை வந்தடைந்தோம். ஞாயிற்றுக்கிழமையாதலால் அத்தேவாலயத்தினுள் இலவசமாக அனுமதிக்கப் பட்டோம். அங்கு வழிபட வந்த கிறிஸ்துவர்கள் வரிசையாக சென்று கொண்டிருந்தார்கள். அத்தேவாலயம் அமைந்திருந்த இடமே உள்ளத்தைக் குளிரவைக்கும் வகையில் அமைந்திருந்தது. பச்சைப் பசலேன்ற புற்தரை ஒருபுறமிருக்க, அத்தேவாலாய மணிகளின் ஒருங்கிணைந்த ஓசை உள்ளத்தின் ஆன்மீக உணர்வுகளைத் தாலாட்டிக் கொண்டிருந்தது.

                                சக்திதாசன்2          சக்திதாசன்3

    உள்ளே நுழைந்தோம் அப்பப்பா ! அக்கட்டிடத்தின் அழகு எம்மைப் பிரமிக்க வைத்தது. மிகவும் நீண்ட தேவலயத்தினுள் உட்கார்ந்து வழிபட இருக்கைகள் நீண்டு அழகாக அடுக்கி வைக்கப்பட்ட விதத்தில் நிறுவப்பட்டிருந்தன. அண்ணாந்து பார்க்கும் போது அக்கட்டிடத்தின் கூரையின் உட்புறத்தில் அழகிய வேலைப்பாடுகள் அமைக்கப்பட்டிருந்தன. அத்தேவாலயக் கட்டிடத்தைத் தாங்கி நிற்கும் தூண்களின் அழகிய வேலைப்பாடு கண்ணைக் கவரும் விதத்தில் அமைந்திருந்தன.

         சக்திதாசன்4     சக்திதாசன்6

    கிறிஸ்துவிக்குப் பின் 590ம் ஆண்டிலிருந்து இன்றுவரை அத்தேவாலயத்தின் பிரதம மதகுரு, அதாவது இங்கிலாந்தின் ஆஸ்தான மதகுருவாக மதிக்கபடும் “ஆர்ச்பிஷப் ஆப் காண்டபரி ( Archbishop of Canterbury)“ ஸ்தானத்தை வகித்த அனைவரது பெயரும் ஆண்டுப் பிரகாரம் வரிசையாக அங்கு எழுதப்பட்டிருந்தது. அதைத் தவிர மரணமடைந்த சில முக்கியமான பிரமுகர்களின் சமாதியும் அமைக்கப்பட்டு அதன்மேல் ஒரு உருவம் படுத்திருப்பது போன்ற ஒரு சிலை அமைக்கப்பட்டிருந்தது.

         சக்திதாசன்5     சக்திதாசன்7

    இத்தகைய சரித்திரப் பிரசித்தி பெற்ற தேலயத்தின் பின்னனிதான் என்ன ?

    இங்கிலாந்தின் கிறிஸ்துவத்தின் ஆரம்பம் எத்தனையாம் ஆண்டு என்பது சரியாகத் தெரியாமலிருந்தாலும் இரண்டாவது நூற்றாண்டிலே இங்கிலாந்தில் கிறிஸ்துவப் பின்னணி இருந்ததாக நம்பப்படுகிறது. அப்போதைய கிறிஸ்தவர்களுக்கு ரோமானிய பின்னணியும், செல்டிக் எனப்படுவோரின் பின்னணியும் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இவ்விரண்டு சமுதாயத்தினருக்குமிடையில் முரண்பாடு இருந்ததாகவும் ரோமானியப் பின்னணி கொண்டோர்கள் கிறிஸ்துவுக்குப்பின்னர் 410ம் ஆண்டளவில் இங்கிலாந்தை விட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

    அப்போதைய காலகட்டத்தில் ஆங்கிலோ சாக்ஸன்ஸ் எனப்படும் கிறிஸ்தவர்கள் முறையற்ற சீரற்ற வாழ்க்கையை மேற்கொண்டு வந்ததால், அப்போதைய போப்பாண்டவராக இருந்த கிரேகரி என்பவர் அகஸ்டீன் எனும் மதகுருவையும் அவரோடு சார்ந்த 40 சிஷ்யர்களையும் கெண்ட் நகரத்துக்கு அவர்களின் வாழ்வை முறையானதாக்க அனுப்பி வைத்தார். அவரை அப்போதைய கெண்ட் நகர அரசரான எதில்பேர்ட் எதிர்கொண்டு அழைத்து கண்டபரி எனும் இடத்தில் தேவாலயத்தை அமைக்க ஏற்பாடு செய்தார். அதன் பின்னால் அகஸ்டீன் இங்கிலாந்தின் முதல் ஆர்ச்பிஷப் ஆஃப் காகண்டபரியாக நியமிக்கப்பட்டார் என்பதுவே சுருக்கமான இத்தேவாலயத்தின் வரலாறு.

    இத்தனை வருடங்கள் கடந்தும் இந்நாட்டு மக்கள் தமது நாட்டின் காலாச்சார அடையாளமான இத்தேவாலயத்தை பராமரிப்பது மட்டுமல்ல தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் அனைத்தும் எவ்வித அரசியல் பாகுபாடும் காட்டாது இதற்கான நிதியை ஒதுக்கி வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. எமக்குப் புகலிடம் கொடுத்து நாம் எமது வாழ்க்கையை ஸ்திரப்படுத்த ஓர் சந்தர்ப்பத்தை அளித்த இந்நாட்டின் காலாச்சார அடையாளங்களில் ஒன்றைப் பார்க்க முடிந்தது எனும் நிறைவான மனதுடன் கடந்த வார விடுமுறை எமைக் கடந்து சென்றது.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(159)

    –சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்களுடனும் துயரம் நிறைந்த மனதுடனும் உங்களிடம் இம்மடல் மூலம் மனம் திறக்கிறேன்.

    இருவாரங்களுக்கு முன்னால் தமிழ்த் திரையுலகின் இசைவேந்தனாக திகழ்ந்த மெல்லிசை மன்னன் எம்.எஸ்.வி அவர்களை இறைவன் தன்னுடன் அழைத்துக் கொண்ட நிகழ்வின் போது என் உள்ளத்து உணர்ச்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

    இதோ இருவாரங்களில் மீண்டும் ஒரு மாமனிதனின் மறைவின் தாக்கங்கள் கொடுத்த உணர்வுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் வகையில் மீண்டுமொரு நிகழ்வு.

    இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்ட துயரமான செய்தியைத் தாங்கி வந்தது கடந்த செவ்வாய்க்கிழமை.

    இதற்கு முன்னால் இந்திய தேசம் எத்தனையோ ஜனாதிபதிகளைச் சந்தித்துள்ளது. அவர்களும் திறமையில் ஒன்று சளைத்தவர்களல்ல.

    அப்படியாயின் டாக்டர் அப்துல் கலாம் அவர்களில் இருந்து எப்படி வேறுபட்டவர் ?

    மக்களின் ஜனாதிபதி எனும் மாபெரும் மதிப்பை, கெளரவத்தை அவர் நேசித்த மக்களிடமிருந்தே பெற்றுக்கொண்ட ஒரு அரசியல் கலக்காத உன்னதமான “மனிதர்” என்பதே அவருடைய தனிப்பெரும் விசேடத் திறமையாகும்.

    தான் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் என்பதை அவர் தான் வாழ்வில் எந்த நிலையை அடைந்த போதும் மறக்கவில்லை.

    தான் தன்னுடைய மதத்தை மதித்த அதே சமயம் தன்னை மதத் தீவிரவாதி எனும் முத்திரை குத்தி என்றுமே அடையாளைப் படுத்தியவரில்லை.

    அதற்கு மேலாக மற்றைய மதங்களின் சிறப்பம்சங்களை அறிந்து அவற்றையும் மதித்தார் என்பதுவே அவரது மனிதத்தன்மை மதங்களைக் கடந்த ஒரு மகத்துவம் வாய்ந்தது என்பதற்கு உதாரணமாகிறது.

    ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி அதன் முதுகெலும்பாகிய மாணவ சமுதாயம் தம்முடைய நாட்டின் முன்னேற்றத்தில் எத்தனை தூரம் ஆர்வம் கொண்டிருக்கிறது என்பதிலேயே தங்கியுள்ளது என்பதில் முழு நம்பிக்கை வைத்திருந்தார்.

    தாம் எத்தனை வறுமை நிலையிலிருந்தாலும் தமது கனவுகளை, லட்சியங்களை இளைஞர்கள் தொலைத்து விடக்கூடாது என்பதில் அவர் முனைப்பாக இருந்தார்.

    இந்தியா 2020இல் வல்லரசாக மாறும் என்பதில் நம்பிக்கை வைத்திருந்த அவர், அந்நம்பிக்கை கொண்டதோடு மட்டுமல்லாமல் அந்நம்பிக்கையை நிஜமாக்க இளைய சமுதாயத்தை எழுச்சி மிக்க ஒரு சமுதாயமாக மாற்ற தன்னாலான முழு முயற்சிகளையும் எடுத்து பாரத தேசத்தின் பட்டி தொட்டியெல்லாம் சென்று இளைஞர்களின் உணர்வைச் சரியான பாதையில் கூர்மைப்படுத்தினார்.

    இத்தனைக்கும் மேலாக அவர் தமிழ் மீதும் இலக்கியத்தின் மீதும் கொண்டிருந்த காதல் அளப்பரியது.

    ஒரு மனிதன் வாழ்வில் எத்தனை பெரிய சிகரத்தைத் தொட்டாலும் தான் ஒரு மனிதன் என்பதை எப்போதும் மறந்து விடக்கூடாது என்பதை வாழ்ந்து காட்டிய அவரது எளிமை போற்றத்தக்கது.

    தனது 83வது வயதிலும் தான் கொண்ட நம்பிக்கையை நிஜமாக்க மாணவ சமுதாயத்தின் முன்னே உரையாற்றிக் கொண்டிருந்த போது உயிர்நீத்த அவருக்கு இத்தகைய ஒரு மகத்தான இறுதி நேரத்தை அளித்து இறைவன் தான் அவரது மகத்துவத்தை இரட்சித்தேன் என்று கூறிவிட்டான்.

    இந்த அரும் பெரும் மனிதன் வாழ்ந்த காலத்தில் அவன் உதித்த தமிழகத்தின் மண்ணில் எனது கால்களும் பதிந்தது என்பதே எனது வாழ்வின் பாக்கியமென்பேன்.

    இதோ அம்மாமனிதனுக்கு இச்சிறியேனின் அஞ்சலிக் கவிதை …

    புண்ணியர் பூமி என
    போற்றிப் பாடிடும்
    தென்கோடிக் கரையதுவாம்
    ராமேஸ்வரம் தனிலே
    விழுந்த ஒரு விதை
    வித்தாகிச் செடியாகி
    பொன்னெழில் பொங்கிடும்
    ஆலமரமாக ஓங்கியெழுந்ததுவே !

    ஐயா ! அப்துல் கலாம்
    ஐக்கியமாகியிருக்கலாம் நீ
    ஆண்டவனுடன்
    ஆனால்
    அழியாமல் பதிந்து விட்டாய்
    அகிலத்தோர் நெஞ்சங்களில்

    சிந்தி விளையாடும் சிகையுடன்
    சிரிப்பினை அள்ளி வீசிடும்
    சிங்கார வதனத்துடன்
    சிந்தனைச் சிற்பியாய் நீ
    வலம் வந்தனையே !

    தூக்கத்தில் காணும்
    கனவல்ல கனவு
    இளைஞனே ! உன்னைத்
    தூங்க விடாமல்
    வைத்திருக்கும் இலட்சியக்
    கனவுகளை வளர்த்திடு
    அவற்றை நோக்கி
    அயராமல் உழைத்திடு
    எனும் உனது ஊக்கமிகு
    வார்த்தைகள் எத்தனை
    இளந்தலைமுறையினரை
    எழுச்சி கொள்ள வைத்தது

    இந்திய தேசத்தினை
    உலகின் விஞ்ஞான வரைபடத்தில்
    வரைந்து வைத்த வித்தகனே !
    விரைந்து நீ சென்றாயே !
    வேகுதய்யா எம் மனது

    கல்வியின் மகத்துவத்தை
    பட்டி தொட்டியெலாம்
    எடுத்துச் சென்று
    வள்ளுவன் வகுத்த வகை
    வாழ்ந்து காட்டிய
    வாழ்க்கைச் சிற்பி ஐயா நீ !

    மாணவ சமுதாயமே !
    ஒரு நாட்டின் முதுகெலும்பென
    ஓயாமல் ஓங்கி ஒலித்தது
    உந்தன் ஓங்காரமான குரல்

    ஏழ்மையில் அவதரித்து
    கல்வியெனும் ஏணியில் ஏறி
    விஞ்ஞானத்தின் உச்சியை
    அஞ்சாமல் தொட்டவன் நீ !

    எளிமையின் மறு உருவமாய்
    மனிதாபிமானத்தின் மொத்த வடிவாய்
    பண்பெனும் மகத்துவத்தின்
    மாபெரும் உதாரணம் நீ !

    அன்பு நிறைந்தவனே ஐயா
    அப்துல் கலாம்
    நீ காலமாயிருக்கலாம்
    ஆனால் உன் தாய்த்திருநாட்டின்
    மாற்றத்தைப் பற்றி
    நீ கண்ட கனவுகள்
    கால காலமாய் கலாம்
    எனும் ஓசையோடு பாரத தேசத்து
    இளைய சமுதாயம் மட்டுமின்றி
    பாரெங்கும் வாழும் தமிழர்களின்
    இதயங்களில் வாழ்ந்து கொண்டுதானிருக்கும்

    ஆண்டவனுக்கு உந்தன்
    ஆலோசனை தேவைப்பட்டது போலும்
    அழைத்துக் கொண்டான் உன்னை
    அவசரமாக . . .
    அங்கிருந்து கொண்டே
    உந்தன் மணிச் சிரிப்பின் மூலம்
    மனித நேயத்தை மேலும்
    வளர்த்தெடுக்க ஊக்குவிப்பாய்

    ஐயா உந்தன்
    கடைசி மணித்துளி மூச்சு
    உள்ளவரை
    எந்த மாணவர் சமுதாயத்திற்காக
    உழைத்தாயோ
    அந்த மாணவ சமுதாயத்தின்
    முன்றலில் உந்தன் இறுதி மூச்சி
    விடைபெற்றதய்யா !

    ஆண்டவன் உன்னை
    அந்தரிக்க விடவில்லை
    நோயில் அழுந்தி நீயும்
    கட்டிலில் விழவில்லை
    உழைத்துக் கொண்டே
    உயிர் விட்டாய்
    உயர்த்தி விட்டாய்
    உன் இலட்சியத்தை

    உன் ஆத்ம சாந்திக்காய்
    லட்சோப லட்ச தமிழர்களோடு
    இணைந்து நானும் பிரார்த்திக்கின்றேன்

    அஞ்சலிகளுடன்
    சக்தி சக்திதாசன்

    மீண்டும் அடுத்த மடலில்
    துயரத்துடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(158)

    –சக்தி சக்திதாசன்.

     

    Teach English British Council Sri Lanka

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    வாரங்கள் ஒவ்வொன்றாய் ஓடி மறையுது. காலங்கள் காற்றாய் கனவேகத்தில் பறக்குது. ஜனனங்கள் ஒருபுறம், மரணங்கள் ஒருபுறமென இயற்கை தன் செயற்பாடுகளை கனகச்சிதமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

    வாழ்க்கை நிலைத்திடும் எனும் நினைப்பில் மனிதன் தனது தேவைகளுக்கான தேடல்களில் தன் மகிழ்ச்சியைத் தொலைத்துக் கொண்டிருக்கிறான்.

    அன்னையின் பாதுகாப்புக் கவசமான கருப்பையிலிருந்து இந்த பூமாதவின் மடியில் விழும்போது வெற்றுக் காகிதம் போல எமது மனங்கள் பால் போல வெளுத்து இருக்கிறது.

    கூட்டிலிருந்து குஞ்சு இரை தேடைப் போகும் முன்னால் அதற்குத் தேவையான பாதுகாப்பு யுத்திகளை தாய்ப் பறவையும், தந்தைப் பறவையும் கற்றுக் கொடுப்பது போல எமது பெற்றோர் நாம் எமது பாடசாலை வாழ்க்கையைத் தொடங்கும் வரை தம்மாலான வகையில் எமக்கு எவை முக்கியமாகத் தேவைப்படுகிறதோ அதைக் கற்றுக் கொடுக்கிறார்கள்.

    அதன் பின்னால் ஆசிரியர்கள் எமை இந்த உலகிற்குத் தேவையான வகையில் செதுக்கி எடுக்கிறார்கள். ஆனால் எமது செதுக்கல்களுக்கு முற்று முழுதாக ஆசிரியர்கள்தான் காரணமா?

    எமது இல்லங்களில் நாம் வாழும் சூழல்கள் நாம் எவ்வகையில் எதிர்காலத்தில் உருவாக்கப் படப் போகிறோம் என்பது முக்கியமான பங்கை வகிப்பதை மறுக்க முடியாது.

    முன்னைய காலங்களில் எமது தாய்நாடுகளில் பெற்றோரின் பங்களிப்பு மிகவும் நேர்மறையான, மனித தர்மத்திற்கு உட்பட்ட வகையில் எமை வளர்த்தெடுக்க உதவியது எனும் கருத்து நிலவியது.

    புலம்பெயர்ந்த எம் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சனைகள் வித்தியாசமானவை. ஒரு புதிய நாட்டில் தம்மைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தாமே வேறொரு வகையில் செதுக்கப்படவேண்டியவரானார்கள்.

    அதே சமயம் குடும்ப சமேதரராய் புலம்பெயர்ந்தவர்கள் தமது குழந்தைகளுக்கு வழி காட்ட வேண்டியவர்களாகவும் இருந்தார்கள்.

    விளைவு !

    புலம் பெயர்ந்த ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தாம் தமைச் சார்ந்தவர்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கியே புலம் பெயர்ந்தார்கள்.

    இது இயற்கையே! ஒரு புது இடத்திற்கு நாம் செல்லும் போது எமது வாழ்க்கையின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேட விளைவது ஒரு இயற்கையான செய்கையே!

    தாம் தமது வாழ்க்கையை நிலைப்படுத்திக் கொண்ட பின்பும் அதே சமூகத்தினுடனேயே தம்மைப் பிணைத்து வைத்திருப்பதையே அவர்கள் விரும்பினார்கள். அதனால் பலர் தாம் புலம் பெயர்ந்து வாழும் நாட்டின் மொழியை, கலாச்சாரத்தை உள்வாங்கிக் கொள்ளவில்லை.

    எங்கே தாம் தமது கலாச்சார அடையாளங்களை, மொழியின் தனித்தன்மையை இழந்து விடுவோமோ எனும் ஆதங்கத்தினால் அவற்றை இறுகப் பற்றிக் கொள்வதான எண்ணத்தில் அடுத்தவற்றை அறவே ஒதுக்கினார்கள்…

    இதன் தாக்கம் உடனடியாக அவர்களுக்குத் தென்படப்போவதில்லை. தாக்கம் அவர்களின் அடுத்த தலைமுறையைத்தான் தாக்கப் போகிறது, தாக்குக்கிறது.

    எப்படி எனும் கேள்வி எழுகிறது இல்லையா ?

    அவ்வடுத்த தலைமுறை பல சந்தர்ப்பங்களில் தாம் யார்? எனும் குழப்பத்திற்குள்ளாகிறார்கள். இரு தோணியில் கால்வைத்துப் பயணம் செய்யும் வாழ்க்கை எனைப் போன்ற முதலாவது புலம்பெயர் தலைமுறையுடன் முடியாது அடுத்த தலைமுறைக்கும் பரவுகிறது.

    பல்கலாச்சார வாழ்வு முறையைக் கொண்ட இங்கிலாந்து தேசம் எனும் இப்பரந்த பூமியில் நாம் எமது சமூகம் எனும் குறுகிய வலயத்துக்குள் வாழ்ந்து விட்டு பாடசாலையிலும் வேலைத்தளங்களிலும் மற்றைய சமூகத்தினருடன் போட்டி போட வேண்டிய ஒரு இக்கட்டான நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

    சிறுவயது முதலே அனைத்து சமூகத்தினருடனும் கலந்து வாழப்ப்பழகும் ஒருவருக்கும், குறுகிய வலயத்துக்குள் தமது பிள்ளைப்பராயத்தை முடித்து அதன் பின்னே இப்பல்சமூக வலைப்பின்னலுக்கிடையில் தள்ளப்படும் ஒருவருக்கும் இடையிலுள்ள வாழ்வு மீதான கண்ணோட்டத்தின் வித்தியாசம் பாரியது.

    நாம் வாழும் இந்நாட்டின் சமூகப் பின்னனியை அறிந்து கொள்வதும், இந்நாட்டின் சரித்திர வரலாறுகளை அறிந்து கொள்வதும் எமது அடுத்த தலைமுறைக்கல்ல எமக்கே அத்தியாவசியமானது.

    அவற்றின் தெள்ளிய அறிவின் மூலமே நாமும் எமது அடுத்த தலைமுறையும் இந்நாட்டின் அரசியல் நீரோட்டத்தில் எமை இணைத்துக் கொள்ளலாம்.

    அரசியல் நீரோட்டத்தில் ஜனநாயக வழிமுறைகளின் மூலம் எம்மவர்கள் செய்யும் பங்களிப்புகளே வருங்காலச் சந்ததி இந்நாட்டில் ஒரு ஸ்திரமான வாழ்வை வகுத்துக் கொள்வதற்கு உகந்த செயற்பாடாகும். தமிழ், தமிழர் எனும் எமது அடையாளம் என்றுமே அழிக்கப்படமுடியாதது. எமது இனத்தின் திறமையை, எமது சமூகத்தின் ஆற்றலை, எமது மொழியின் ஆளுமையை அடுத்த இனத்தவரும் புரிந்து கொள்ள வேண்டுமானல் நாமும் இச்சமூகத்துடன் கலந்து செயற்படுவதே புத்திசாலித்தனமான செயலாகும்.

    அன்பினிய நெஞ்சங்களே! எனது இந்தக் கருத்து எமது கலாச்சாரத்தை, எமது மொழியை, எமது அடையாளத்தை இழந்து விட வேண்டும் என்று யாரும் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

    எமது மொழியின் மீது , எமது கலாச்சாரத்தின் மீது நான் கொண்ட காதல் அளப்பரியது. ஆனால், அதற்காக மற்றைய மொழிகள , மற்றைய கலாச்சாரங்களை நாம் முற்றாக ஒதுக்க வேண்டும் என்று எண்ணுவதே தவறானது.

    மற்றைய மொழிகளை அறிவதன் மூலம் எமது குழந்தைகள் தவறான பாதைக்கு, தவறான வழிக்கு இட்டுச் செல்லப்பட்டு விடுவார்கள் என்று எண்ணுதல் தவறாகும்.

    அப்படியாயின் எமது தாய்நாடுகளிலே வாழும் எவருமே தவறான வழியைப் பின்பற்றக் கூடாதே! அப்படி யாருமே இல்லையா?

    என் இனிய வாசக உள்ளங்களே! அனைத்தையும் அறிவோம், அவற்றை அறிந்ததினால் எமது மொழி உயர்ந்ததென மகிழ்வோம். எமது தமிழ் இனம் அனைவரையும் அரவணைத்துக் கொள்ளும், அனைவரோடும் ஒத்துப் போகும், ஒரு திறமை மிக்க இனம் என அனைவரும் ஏற்று அதன் மூலம் எமது தமிழன்னைக்குப் புகழ் சேர்ப்போம்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    படம் உதவி: English language teaching, teacher training and curriculum development, British Council – http://www.britishcouncil.lk/teach

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(157)

    –சக்தி சக்திதாசன்.

    M. S. Viswanathan

    அன்பினியவர்களே !

    ஒருவாரம் ஓடி விட்டது. அந்த ஒருவாரக் காலத்துக்குள் எத்தனை நிகழ்வுகள்!!!! காலத்தால் அழியாத சாதனைகள் படைக்கப்பட்டதும், அச்சாதனைகளின் படைப்பாளிகள் பறிக்கப்பட்டதும் என பலவகையான நிகழ்வுகள்.

    பிறந்த நாம் எல்லோரும் ஒருநாள் மடிய வேண்டுமென்பது காலத்தின் நியதி. பிறந்தோர் அனைவருமே ஏதாவது ஒருவகையில் வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் எனும் இலட்சிய நோக்கிலேயே வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம்.

    யதார்த்த வாழ்க்கையில் நாம் அழைத்துச் செல்லப்படும் பல்வேறு நெளிவுகளும் சுளிவுகளும் நாம் போக எண்ணிய இடத்தை விட்டு வேறு இடத்திற்கு எம்மை அழைத்துச் சென்று விடுகிறது.

    அப்படியானால் எமது வாழ்க்கை தோற்று விட்டது என்று அர்த்தமா ? இல்லவே இல்லை… நாம் எதிர்பார்த்ததை அடையவில்லையானால் வாழ்க்கை தோற்றது என்று கொள்வதுதான் தோல்வி.

    அடைந்த வாழ்க்கையின் அதி உச்ச நிலையை அடைந்து மகிழ்ச்சியாக வாழ்வதுதான் உண்மையான மனித வாழ்வின் வெற்றி.

    எதற்காக இந்தத் தத்துவ வரிகள் என்று நீங்கள் எண்ணலாம்.

    எம்மிடையே மெல்லிசைத் தென்றலாக எமையெல்லாம் தாலாட்டிக் கொண்டிருந்த “மெல்லிசை மன்னர்” என்று அனைவராலும் கொண்டாடப்பட்ட இசைச்சக்கரவர்த்தியாகக் கொடி கட்டிப் பறந்த எம்.எஸ்.விஸ்வநாதன் ஐயா அவர்களைக் கடந்த வாரம் தன்னுள் ஐக்கியப்படுத்தி விட்ட நிகழ்வு அனைத்து நெஞ்சங்களையும் துயரத்தில் ஆழ்த்தி விட்டது.

    மிகச்சிறிய வயதினிலேயே தந்தையைப் பறிகொடுத்து தாயின் பராமரிப்பில் வளர்ந்து பள்ளிப் பக்கமே எட்டிப் பார்க்காமல் இன்று தமிழ்த்திரைவானில் ஒரு இசைச்சக்கரவர்த்தியாக கோலோச்சிய எம்.எஸ்.வி ஐயா அவர்களின் வாழ்க்கை இளைய தலைமுறை அனைத்தினாலும் முன்னுதாரணமாகக் கொள்ளப்படவேண்டும்..

    ஒரு அற்புதமான இசையமைப்பாளர் என்பதை விட ஒரு அதிஉன்னதமான மனிதர் என்பதுவே அவரை அறிந்த ஒவ்வொருவரும் கூறும் ஒரே கருத்து.

    வாழ்க்கை தம்மீது போட்ட சவால்களையெல்லாம் எதிர்த்து நின்று தான் எடுத்துக் கொண்ட துறையின் அதிஉயர் நிலையை அடைந்த அவரின் ஆற்றல் அளப்பரியது.

    அவரை நான் என் வாழ்க்கையில் சந்தித்தது இருமுறைகள்.

    2011ம் ஆண்டு என எண்ணுகிறேன்… எனது சென்னை விஜயத்தின் போது எனது அருமை நண்பர் காந்தி கண்ணதாசனுடன் பேசிக்கொண்டிருந்தேன். எனது மானசீகக் குருவான கவியரசரைப் பற்றிய வியப்பானச் செய்திகளை அறியும் ஆர்வம் எனக்குண்டு.

    அப்போது அவருக்கும் எம்.எஸ்.வி ஐயாவிற்கும் இடையே இருந்த அதிஉன்னத நட்பைப் பற்றிய பேச்சு எழுந்தது.

    எம்.எஸ்.வியுடன் பேசினால் எனக்கு இன்னும் அதிகமான ஆர்வமிக்க செய்திகள் கிடைக்கும் என்று கூறி உடனே நண்பர் காந்தி கண்ணதாசன் அவருக்கு ஃபோன் செய்தார்.

    அன்று மாலையே என்னைச் சந்திப்பதாக கூறிய எம்.எஸ்.வி தான் அதன் பின்பு வெளியே செல்ல இருப்பதால் தவறாமல் 5மணிக்கு முன்னர் வருமாறு கூறினார்.

    துரதிர்ஷ்ட வசமாக நான் சென்ற சமயம் சென்னையின் போக்குவரத்து நெரிசலில் அகப்பட்டதால் 4.55க்குத்தான் நான் அவர் இல்லத்திற்குச் சென்றேன்.

    அவர் கால்களில் விழுந்து ஆசிர்வாதத்தைப் பெற்ற போது ஒரு தந்தைக்குரிய அதிகாரத்துடன் “இதெல்லாம் எதுக்கு” என அதட்டினார். நான் கொண்டு சென்ற எனது படைப்பான “கண்ணதாசன் ஒரு காவியம் ” எனும் நூலைப் பெற்றுக் கொண்டு சிறிது நேரமே என்னுடன் அவரால் பேச முடிந்தது.

    கவியரசரைப் பற்றி சொல்வதற்கு இன்னும் நிறைய விடயங்கள் உண்டு அடுத்தமுறை சந்திக்கும் போது நிச்சயம் பேசுவோம் என்றார்.

    காலத்தின் கோலம் அவர் சொன்ன அடுத்த முறை அவரை ஒரு திருமணத்தில் தான் சந்தித்தேன். மிகவும் சுருக்கமாகவே பேச முடிந்தது.

    எனது இந்த இரு சந்திப்புகளிலும் நான் எம்.எஸ்.வி எனும் ஒரு மாபெரும் இசையமைப்பாளரைச் சந்திக்கவில்லை ஒரு இனிமையான மனிதத்துவம் நிறைந்த எளிமையான, ஆரவாரமில்லாத அற்புத மனிதரையே சந்தித்தேன்.

    பாடலாசிரியர்கள் திரைக்கதையின் காட்சிக்கு ஏற்றவாறு பாடல் வரிகளைத் தருகிறார்கள். அவ்வரிகளுக்கு உயிரூட்டுவதில் முன்னணியில் இருப்பது இசையே ! அதைத் தொடர்ந்து அப்பாடலைப் பாடுபவரின் திறமையோடு இணைந்தே அப்பாடல் திரும்பத் திரும்ப கேட்கப்படுகிறது.

    கவியரசர் கண்ணதாசன் – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இணைந்து வழங்கிய பாடல்களில் பெரும்பான்மையானவை அப்பாடல்களைக் கேட்டவர்கள் மனதில் இன்று நிலைத்திருக்கிறது என்பதுவே உண்மை.

    பாலச்சந்தரின் கைவண்ணத்தில் உருவான படம் “வறுமையின் நிறம் சிவப்பு” அதில் ஒரு பாடல் காட்சி.

    கதாநாயகி சிறீதேவி சந்தங்களை எடுத்துக் கொடுப்பதாகவும் கதாநாயகன் கமல்ஹாசன் அதற்கு வரிகளைக் கொடுப்பதாகவும் அக்காட்சி அமைந்திருக்கும்.

    இக்காட்சியின் அமைப்பின் பின்னணிக்கு ஒரு காரணம் உண்டு. அதாவது டைரக்டர் பாலச்சந்தர் கவியரசருக்கும் மெல்லிசை மன்னருக்குமிடையே இருந்த புரிந்துணர்வை எடுத்துக் காட்ட எண்ணியே அக்காட்சியை அமைத்ததாகச் செய்தி உண்டு.

    உலகெங்கும் வாழும் தமிழர்கள் மனங்களில் நீங்கா இடம்பெற்று வாழ்பவர் எம்.எஸ்.வி.

    பல பின்னணிப் பாடகர்கள், பாடகிகளை மிகவும் ஊக்குவித்து அவர்களின் குரல்வகைக்கு ஏற்றவாறு பாடல்களின் இசையமைத்து அவர்களை முன்னணியில் நிறுத்தியவர் எம்.எஸ்.வி என்றால் மிகையாகாது.

    தமிழ்த்திரைப்பட உலகிலே பொற்காலமாகத் திகழ்ந்த ஒரு காலத்தில் தனது திறமையை நிலைநாட்டியவர் எம்.எஸ்.வி.

    இசையமைத்தது மட்டுமின்றி பாடல்கள் பலவற்றைப் பாடியும், சில படங்களில் நடித்தும் தனது சகலதுறைத் திறமைகளையும் வெளிக்காட்டியவர் எம்.எஸ்.வி.

    தனது இசையின் மூலம் தமிழர்களின் மனங்களில் எப்போதும் நிறைந்த எமது மெல்லிசை மன்னர் சுகந்தமான, சுகமான ராகமாக தென்றலோடு கரைந்து விண்ணேகி விட்டார்.

    அவரது ஆன்மா அவரது உடலை விட்டுப் பிரிந்தாலும் அவரது நினைவுகள் எம் அனைவரோடும் காலத்தால் கரையாத இசையாகக் கலந்து நிறைந்து இருக்கிறது.

    எம்.எஸ்.வி ஐயா அவர்களின் ஆத்ம சாந்திக்காய் உங்கள் அனைவரோடு இணைந்து நானும் பிரார்த்திக்கிறேன்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(156)

    –சக்தி சக்திதாசன்.

     

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    ஒருவார இடைவெளியின் பின்னால் உங்களுடன் இந்த மடல் மூலம் இணைகிறேன். வாழ்க்கை எனும் இந்த ஓட்டப்பந்தயத்தில் ஓடும் குதிரைகள்தான் நாம். எம்மைக் காலம் எனும் குதிரை ஓட்டுனர் இயற்கை வகுத்த வழிகளில் இழுத்துக் கொண்டு ஓடுகிறார்.

    நான் செய்ய எத்தனிக்கும் விடயங்கள் நாம் எண்ணும் போது செய்து முடிக்க முடியாமல் போய் விடுகிறது.

    எது இப்போது நடைபெறாது என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோமோ அது கண்ணிமைக்கும் பொழுதுக்குள் நிகழ்ந்து விடுகிறது.

    ஆம் எம்மனைவருக்கும் தெரிந்த வாழ்க்கைக் கணக்கைத்தான் நான் குறிப்பிடுகிறேன்.

    சீட்டாட்டத்தில் ஒவ்வொருவருக்கும் சீட்டுக்கள் வீசப்படுகின்றன. யாருக்கு என்ன சீட்டு விழப்போகிறது என்பது யாருக்கும் தெரியாது கையில் கிடைக்கும் அந்த சீட்டுக்களை வைத்துக் கொண்டு எதிராளியை திணறப்பண்ணுவதே சீட்டாடத்தின் திறமை.

    அதேபோல எமது ஒவ்வொவருக்கும் எவ்வகையான வாழ்க்கை அமையப் போகிறது என்பது எவருக்குமே முன்னால் தெரிவது இல்லை.

    அப்படித் தெரிந்தால் சுவாரஸ்யம் குறைந்து விடும் என்பதால் தானோ என்னவோ அது மறைத்து வைக்கப்படுகிறது ?

    எமக்கு கிடைப்பவைகளை வைத்து ஒவ்வொருவரும் தத்தமது வாழ்வை, தமது எண்ணத்தின் படி, தமக்கு வசதியாக அமைத்துக் கொள்வதற்காகப் போராடுகிறார்கள்.

    சிலர் அதில் வெற்றியடைகிறார்கள். பலர் அதை நோக்கிய தமது போராட்டத்தை முடிக்காமலே தமது வாழ்வை முடித்துக் கொள்கிறார்கள்.

    என்னடா இது ? எதற்காக சக்தி இந்தப் பீடிகை போடுகிறான் என்று எண்ணுகிறீர்களா ?

    வேறொன்றுமில்லை பதினெட்டு வருடங்களின் பின்னால் முதன் முதலாக கன்சர்வேடிவ் கட்சி தமது வரவு செலவுத் திட்டத்தை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. ஆமாம், 2015 மே மாதம் நடந்த பொதுத்தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றியீட்டிய டேவிட் கமரன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி அநேக எதிர்பார்ப்புகளுடன் கூடிய வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளது.

    என்ன கடந்த முறையும் டேவிட் கமரன் தானே பிரதமராகவிருந்தார். அப்போது சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டங்களுக்கும் இப்போது சமர்ப்பிக்கும் வரவு செலவுத் திட்டத்திற்கும் என்ன வேறுபாடு எனும் எண்ணம் எழுவது இயற்கை… கடந்த டேவிட் கமரன் தலைமையிலான அரசு ஒரு கூட்டரசாங்கம். அப்போது சமர்ப்பிக்கப்பட்ட அத்தனை வரவு செலவுத் திட்டங்களும் லிபரல் கட்சியின் அனுசரணையுடன் சமர்ப்பிக்கப்பட்டதினால் பல கன்சர்வேடிவ் கட்சியின் கொள்கைகளை நடைமுறைக்கு கொண்டு வரமுடியவில்லை. ஆனால் இப்போது அவர்கள் தனித்துவமாக அரசமைத்திருப்பதால், தமது கொள்கைப் பிரகடனங்களை முன்னிறுத்தி இவ்வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    அரசியல் அவதானிகள் வேறொரு முக்கிய விடயத்தையும் முன்வைக்கிறார்கள். டேவிட் கமரன் அவர்கள் தாம் இம்முறை பிரதமரானால் இதுவே தமது கடைசிமுறை என்றும் தான் அக்கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகி விடுவதாகவும் அறிவித்திருந்தார். விளைவு ! ஐந்து வருடங்களின் பின்னால் அரசமைத்திருக்கும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் பதவி வெற்றிடமாகும். அதற்கு போட்டியிடுவதற்கு இப்போதைய நிதியமைச்சர் ஜார்ஜ் ஒஸ்போன் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறார் என்றும், இந்த வரவு செலவுத் திட்டம் அதற்கான முதல் அடி இது என்பதே அக்கருத்தாகும்.

    budget-Osborne 2015

    சரி அப்படி என்ன முக்கிய விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது ?

    # இங்கிலாந்தின் கடன் தொகையைக் குறைத்து 2020ம் ஆண்டு கணக்கில் செலவை விட வரவை அதிகரிக்கப்பண்ணும் கொள்கையில் இவ்வருடத்திற்கு 12 பில்லியன் ஸ்ரெலிங் பவுண்ஸ் இங்கிலாந்து அரசால் மீதப்படுத்தப்பட வேண்டும்.

    # அரச உதவி பெறும் வேலையற்ரொருக்கான உதவிப்பணம் வருடமொன்றுக்கு ஒரு இல்லத்திற்கு 23000 பவுண்ஸ் ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    # 18 – 21 வயது கொண்ட இளையோர் மேற்படிப்புக்குச் செல்லாமல் இருந்தால் அவர்களுக்கு உதவிப் பணம் வழங்கப்பட மாட்டாது. அவர்கள் வேலை ஒன்றைத் தேடிக் கொள்ள வேன்டும் இல்லையெனில் ஏதாவது ஒரு துறையில் தமது பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும்.

    # பலர் பகுதிநேர வேலையில் ஈடுப்பட்டிருக்கிறார்கள். இதுவரை வருடத்திற்கு 6500 பவுண்ஸ்க்கு குறைவாக ஊதியம் பெறுவோருக்கு அரச உதவி கிடைத்து வந்தது. அதை இப்போது 3500 பவுண்ஸ் ஆக குறைத்துள்ளார்கள்.

    # தேசிய அளவிலான அதிகுறைந்த ஊதியம் மணியொன்றுக்கு 7 பவுண்ஸ் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது இனி சட்டமூலமாக்கப்ப்படுகிறது.

    இப்படியாக பலவழிகளில் அரசாங்கச் செலவினைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை இவ்வருட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்துகிறார்கள்.

    அதே நேரம் முதல் 12000 பவுண்ஸ் வரை வரி அளவிடப்படமாட்டாது என்று அதன் அளவைக் கூட்டி அடிமட்டத் தொழிலாளர்களுக்கு தாம் உதவி புரிந்துள்ளோம் என்கிறார்கள்.

    இத்திட்டங்களுக்கு சார்பாகவும், எதிராகவும் பலமுனைகளில் இருந்து வாதங்கள் கிளம்புகின்றன. பொதுவாக எடுத்துப்பார்த்தால் ஓய்வூதியம் பெறுவோரும், வாழ்வின் மத்தியதர வர்கத்தினரின் கூடுதலான ஆதரவாகவும்; மாணவர்கள், வேலையற்றோர், இளையோர் எனும் பகுதியினர் எதிராக இருப்பது போலவும் தென்படுகிறது.

    அடுத்த பிரதமராக வேண்டும் எனும் இலட்சியத்தில் முதல் அடி எடுத்து வைத்துள்ள நிதியமைச்சர் ஜோர்ஜ் ஒஸ்போன் அவர்களின் கனவு நனவாகுமா? இல்லையேல் கனவாகவே கலைந்து விடுமா?

    மக்கள் குரலே மகேசன் குரல் !

    மீண்டும் அடுத்தவார மடலுடன்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(155)

    –சக்தி சக்திதாசன்.

     

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    இனியதோர் வாரத்தில், இதயத்தில் உருளும் இனிமையான உணர்வுகளின் துணையோடு மீண்டும் உங்களோடு உறவாட விழைகிறேன்.

    இந்தவாரம் அதாவது எம் கண் முன்னே கடந்து சென்ற வாரம் தன்னோடு சுமந்து சென்ற பெருமையென்ன ?

    தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கேயுரிய அந்தஸ்தோடு கோலோச்சிய எமது கவியரசர், கவிதைக்கோமகன் கண்ணதாசன் அவர்களின் 89வது பிறந்த தினத்தை தனக்குள் தாங்கிச் சென்ற ஒரு உன்னதமான வாரம்.

    புலம்பெயர்ந்து அந்நியநாடுகளை தமது சொந்தநாடுகளாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர் லட்சோப லட்சம்.

    இவர்கள் புலம்பெயர்ந்ததற்கான காரணங்கள் பல. குறிப்பாக இலங்கைத் திருநாட்டைச் சேர்ந்த எனது ஆயிரமாயிரம் உடன்பிறப்புகள் யுத்த காலங்களில் அங்கு பாதுகாப்பாக வாழமுடியாத சூழலினால் இடம் பெயர்ந்தவர்கள் பலர்.sakthi.sakthithasanஎன்னைப் போன்ற நிலையிலுள்ள பலர் தமது உயர் கல்வியை பல்வேறு காரணங்களினால் தொடரமுடியாமல் வெளிநாடுகளில் தமது உயர் கல்விக்காகப் புலம் பெயர்ந்து பின்னர் அந்நாடுகளின் சூழல்களில் தம்மை ஐக்கியப் படுத்திக் கொண்ட காரணத்தினால் தொடர்ந்தும் தமது வாழ்வை அந்நாடுகளிலே தொடரும் நிலை.

    அப்படிப்பட்ட மக்களின் அடுத்த தலைமுறை அவர்கள் வாழும் அந்தப்புலம் பெயர் மண்ணையே தமது தாய் மண்ணாகக் கருதி வாழும் ஒரு நிலை காணப்படுகிறது.

    இந்தச் சூழலிலே தாய்நாட்டின் ஏக்கங்களையும், தமிழின் மீது கொண்ட காதலின் கனத்தையும் தமது இதயங்களிலே சுமந்து வாழும் அம்மக்களோடு கவியரசர் பின்னிப் பிணைந்திருப்பது காலத்தால் மாற்ற முடியா உண்மை.

    அவரது பாடல்கள், அப்பாடல்களில் புதைந்துள்ள எளிமையான கருத்துக்களின் ஆழம் என்பன தமது தாய்மண்ணைத் தொலைத்து விட்டு நிர்க்கதியாகி நிற்கும் பல உடன்பிறப்புகளின் உள்ளத்தின் ரணங்களுக்கு களிம்பாகிறது என்பது வெள்ளிடை மலை போலத் தெரிகிறது.

    ஒரு திரைப்படப் பாடலாசிரியர் எனும் பணியினால் உயர்ந்து நவீன கால தமிழன்பர்களுக்கு கண்ணதாசன் என்றால் தமிழ் எனும் வகையில் அவரை அவர்களுடன் இணைத்து வைத்துள்ள உண்மை புலனாகிறது.

    அவர் வரைந்த காதல் பாடல்கள் பல, சோகப் பாடல்கள் பல , தத்துவப் பாடல்கள் பல. ஆனால், இவைகள் அனைத்திலும் புதைந்துள்ள சிலவரிகளை எடுத்துப் பார்த்தால் அவை எமது மண்ணைப் பிரிந்த எமது ஏக்கப் பிரதிபலிப்புகளை எடுத்துக்காட்டுபவை போல அமைகிறது.

    அப்போது நான் லண்டன் வந்த ஒரு இரண்டு அல்லது மூன்று வருடங்கள் இருக்கும். தாய்மண்ணைப் பிரிந்த ஏக்கம் தந்த இருள் நெஞ்சைக் கவ்விக் கொண்டிருக்க இலண்டன் நகர பனிக்கால இருளோடு குளிரும் இணைந்து உடலை வாட்டும் ஒரு இரவில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தேன்.

    அப்போது கை எனது கட்டிலருகே தலைமாட்டில் எப்போதும் எனக்குத் துணையிருக்கும் ஒரு டேப்ரிக்கார்டரைத் தட்டி விட்டது.

    காதல் சிறகைக் காற்றில் விரித்து
    வானவீதியில் பறக்கவா ?

    எனும் கவியரசரின் அழகிய வரிகளோடு சுசீலா அம்மாவின் குயில் குரல் ஒலித்தது. மனம் பாட்டின் வரிகளோடு லயித்தது. கவிதைபால் நாட்டம் கொண்டிருந்ததாலோ என்னவோ எப்போதும் மனம் பாட்டின் இசையை ரசித்தாலும் அதன் பொருள் தேடி ஏங்கும்.

    அப்போது ,

    எண்ணங்களாலே பாலம் அமைத்து
    இரவும் பகலும் நடக்கவா
    இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
    இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
    இரு கை கொண்டு வணங்கவா
    இரு கை கொண்டு வணங்கவா

    kdasan1எனும் வரிகள் ஒலித்தது. என்னையறியாமல் என் கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது. ஆமாம் எனது தாய்மண்ணின் பிரிவோடு நான் அவ்வரிகளை இணைத்துப் பார்த்தேன். பல்லாயிரம் மைல்களுக்கப்பால் தாய்மண்ணை விட்டுப் பிரிந்து இருக்கும் நான் எப்படி என் தாய்நாட்டை அக்கணத்தில் அடைவேன்? எண்ணங்களினாலே பாலம் அமைப்பது ஒன்று மட்டும்தானே பொருளாதாரச் சிக்கலில் தவிக்கும் ஒரு புலம்பெயர் மாணவனால் இயலும், அதைத் தவிர வேறு மார்க்கம் ஏது?

    எத்தனை காலம் பிரிந்து இருந்தேன் என் தாய்மண்ணை அதை எண்ணிக் கண்ணீர் வடிப்பது ஒன்று தானே அப்போது உணர்வுகளை ஆற்றிக் கொள்ள ஒரே வழியாகிறது. அதுதான் கவியரசரின் மகத்துவம். எளிமையான வரிகள் அதனுள் எத்தனையோ வகைகளில் ஆராய்ந்து பார்க்கக்கூடிய ஆழமான கருத்துக்கள்.

    மற்றுமொரு இனிய பாடல் …

    ஆண் நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது
    இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது

    ஆமாம் இது போன்ற கவியரசரின் பாடல்கள்தான் என் போன்ற புலம் பெயர்ந்தவர்களை மிகவும் கடினமான தாய்நாட்டு ஏக்க காலங்களில் கரை சேர்க்க உதவியது. காலத்தால் அழியாத கவிஞன், எத்தனையோ நாடுகளில் வாழும் எத்தனையோ நாடுகளைச் சேர்ந்த தமிழர்களால் இன்றும் போற்றிப் பேசப்படும் ஒரு ஈடற்ற படைப்பாளி.

    அவரது இந்தப் பிறந்த தின வாரத்தின் வாயிலாக அவரை நினைவுகூற கிடைத்த சந்தர்ப்பத்திற்கு நன்றி கூறிக்கொண்டு விடைபெறுகிறேன்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(154)

    –சக்தி சக்திதாசன்.

    web-human-rights-act

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    புதியதோர் வாரத்தில் புலரும் கருத்துகளுடன் உங்களோடு உறவாட மீண்டும் உங்கள் முன்னே மடல் வாயிலாக விழைகிறேன்.

    அடிப்படை மனிதஉரிமை என்பது மகத்தான பொதுவுடமையாகும். மனிதன் மனிதனாக மதிக்கப்பட்டு அவனுக்கு உலகில் நியாயமான அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பது யாவராலும் எதிர்பார்க்கப்படும் ஒரு அத்தியாவசியமானத் தேவையாகும்.

    உலகவரலாற்றில் அதாவது ஐரோப்பியக் கண்டத்தில் இம்மனித உரிமையின் முக்கியத்துவம் மிகவும் அதீத வகையில் உணர்த்தப்பட்டது எனலாம்.

    எப்படி என்கிறீர்களா ?

    1928ஆம் ஆண்டு அமெரிக்க ஸ்டாக் எக்ஸ்ச்சேஞ் வீழ்ச்சியடைந்தது. அது அமெரிக்காவில் ஒரு பாரிய பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியது.

    அமெரிக்கா தான் அந்நியநாடுகளுக்கு அளித்திருந்த கடனுதவியை தனது நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை மேற்கோள் காட்டித் திரும்பக் கோரியது.

    இந்த நடவடிக்கை ஜெர்மனிய நாட்டை மிகவும் நெருக்கடிக்குள்ளாக்கியது. ஜெர்மனியின் வேலையில்லாதோர் தொகை ஆறு மில்லியனாக உயர்ந்தது.

    ஜெர்மனிய அரசாங்கம் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தது, 1930ம் ஆண்டு ஜெர்மனிய அதிபதி ஹின்டன்பேர்க் ப்ரூனிங் அரசாங்கச் செலவுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பல செலவுகளைக் குறைத்தார். அதன் நிமித்தம் வேலையற்றோருக்கு கொடுக்கப்படும் உதவிப்பணம் நிறுத்தப்பட்டு பலரின் சம்பளம் குறைக்கப்பட்டது. இத்தகைய நடவடிக்கை ஏற்கனவே பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியிருந்த மக்களை வெகுவாக பாதித்தமையால் அவர்கள் வெகுண்டெழ அரசாங்கம் இதை அவசரக்கால திட்டத்தின் மூலம் நடைமுறைப் படுத்தியது.

    ஆத்திரமுற்ற மக்கள் கம்யூனிசத்தின் பால் திரும்புவது கண்டு அச்சமுற்ற தொழிலதிபர்கள் தீவிர வலதுசாரிக் கொள்கை கொண்டவரும், இனவேற்றுமையை தீவிரப்படுத்துபவரும், யூதர்களுக்கு எதிரானவருமான ஹிட்லரை ஆதரிக்கத் தலைப்பட்டார்கள். 1928ஆம் ஆண்டில் 12 இடங்கள் மட்டுமே பெற்றிருந்த ஜெர்மனிய நாஸிக் கட்சி, 1932ம் ஆண்டு 230 இடங்களைக் கைப்பற்றுமளவிற்கு ஆதரவைப் பெற்றது. ஜெர்மனிய அரசாங்கம் நிலைகுலைந்தது. ஜனாதிபதி ஹின்டன்பேர்க் ப்ரூனிங்கை பதவியிறக்கி ஆறுமாதமே தாக்குப்பிடித்த பாப்பன் அவர்களை பிரதமராக்கினர். அவரைத் தொடர்ந்த ஸ்லெய்ச்சர் இரண்டு மாதமே தாக்குப்பிடித்தார். அந்நிலையில் அவர்கள் இருவரும் இணைந்து ஹிட்லருக்கு உதவிப்பிரதமர் பதவி கொடுக்கத் தீர்மானித்தார்கள். ஆனால், ஹிட்லரோ பிரதமர் பதவியை மட்டுமே எதிர்பார்த்தார்.

    விளைவு !

    1933ஆம் ஆண்டு ஹிட்லர் ஜெர்மனிய நாட்டு அதிபதியானார். அதைத் தொடர்ந்து நடந்த உலக அநியாயங்களில் முதலிடம் வகிப்பதான ஹிட்லரின் யூதப்படுகொலைகள் அரங்கேறியதும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் நாமனைவரும் அறிந்ததே !

    சரி எதற்கு இந்த சரித்திர அலசல், இதற்கும் மனித உரிமைகள் பற்றி ஆரம்பத்தில் கூறியவற்றிற்கும் என்ன தொடர்பு என்றுதானே எண்ணுகிறீர்கள். இதோ வருகிறேன் …

    இங்கிலாந்தின் புதிய அரசாங்கத்தின் பழைய பிரதமர் டேவிட் காமரன் அவர்கள் 2015ஆம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது செய்த கொள்கைப் பிரகடனங்களில் ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் நிறைவேற்றப்பட்ட மனிதஉரிமைச் சட்டத்தில் இடம்பெறும் நாடுகளில் ஒன்றாக அதைக் கடைப்பிடிப்பதை நிறுத்தி இங்கிலாந்து நாட்டிற்கான தனியான மனிதஉரிமைச் சட்டம் ஒன்றை தாம் பதவிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்பதே. இவருடைய இந்தக் கொள்கைப் பிரகடனத்திற்குக் கணிசமான அளவில் மக்கள் ஆதரவும் உண்டு.

    அட, தமது உரிமைகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் பாதுகாக்கும் உரிமைகளை இவ்வளவு இலகுவாக விட்டுக்கொடுக்கச் சம்மதிக்கிறார்களே என்று வியப்பதற்கு இடமுண்டு. சமீபகாலமாக உலகில் பலபாகங்களிலும் மதங்களின் பெயரால் இடம்பெற்று வரும் பயங்கரவாதச் செயல்களைப் பற்றி நாம் நன்கறிவோம். அத்தகைய பயங்கரவாதச் செயல்கள் புரிவோரை பகிரங்கமாக ஆதரிக்கும் வெளிநாட்டினரை இங்கிலாந்தில் இருந்து அப்புறப்படுத்த இங்கிலாந்து நீதிமன்றங்கள் உத்தரவிட்ட போதும் அவர்கள் இம்மனித உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ஐரோப்பிய நீதிமன்றத்தின் மூலம் தொடர்ந்தும் இங்கிலாந்தில் தங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

    இதி இங்கிலாந்து மக்கள் பலரை மிகவும் ஆத்திரமூட்டியுள்ளது. எப்போது இந்த மனிதஉரிமைச் சட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டது ?

    MAIN-Magna-Cameronஹிட்லர் யூத மக்களுக்குச் செய்த அகோரச் செயல்களின் பின்னர், ஹிட்லர் தோற்கடிக்கப்பட்ட பின்னால் இனிமேல் உலகில் குறிப்பாக ஐரோப்பாவில் இத்தகைய கொடிய செயல்கள் இடம்பெற இடமளிக்கக் கூடாது எனும் காரணத்திற்காக அப்போதைய ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து இந்த மனிதஉரிமைச் சட்டத்தை அமுலாக்கின. ஆயிரக்கணக்கில் மனித உயிர்கள் ஒரு தனிமனிதனின் கொள்கைக்காகப் பறிக்கப்பட்டதினால் உருவாக்கப்பட்ட பாதுகாப்புச் சட்டம், மதத்தின் பெயரால் காவு கொள்ளப்படும் உயிர்களினால் மீண்டும் எதிர்க்கப்படும் ஒரு துயரமான சந்தியில் நிற்கிறோம்.

    இச்சட்டத்தை இங்கிலாந்தில் நிறுத்தக்கூடாது எனும் குரல்கள் பலபாகங்களிலும் ஒலிக்கத்தான் செய்கிறது. 800 ஆண்டுகளுக்கு முன்னால் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட உரிமைகளுக்கான சட்டம் “மக்னா காட்டர்” என்பதே முதன்முதாலக ஐரோப்பிய பகுதியில் ஏற்படுத்தப்பட்ட மனித உரிமைச் சட்டம். இச்சட்டத்தின் 800ஆவது ஆண்டுவிழா கொண்டாடப்படும் வேளையில், இத்தகைய சட்டத்தை ஐரோப்பாவில் அனைவர்க்கும் முதலாக ஏற்படுத்திய எமக்கு, எமது மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை எம்மால் ஏற்படுத்த முடியாதா ? என்று வாதிடுகிறார் பிரதமர் டேவிட் காமரன்.

    ஏதோ ஒருசில பயங்கரவாதிகளுக்காக வேறுபல நன்மைகளைத் தரும் ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமைச் சட்டத்திலிருந்து நாம் விலகுவது ஒரு மூடத்தனமான காரியம் என வாதிடுகிறார்கள் பல முன்னணி அரசியல்வாதிகள். மனிதனை மனிதனாக வாழவிடுவதற்கு ஒரு சட்டமூலம் அவசியம் எனும் நிலை வந்த பின்பு . . . .

    ம் . . . பொறுத்திருந்து பார்ப்போம் …

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(153)

    –சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே!

    இனிய வணக்கங்கள். வினாடிகள் நிமிடங்களாக, நிமிடங்கள் மணிகளாக, மணிகள் நாட்களாக, நாட்கள் வாரங்களாக இதோ அடுத்ததொரு வாரம் அடுத்ததொரு மடல்.

    காலங்கள் ஓடிக்கொண்டேயிருக்கின்றன. ஓடும் அக்காலங்கள் தம்முள் கடந்து செல்லும் நிகழ்வுகளைச் சரித்திரங்களாகப் பதிவு செய்கின்றன. அச்சரித்திரம் அந்நாட்டின் வரலாற்றினை அடுத்துவரும் காலங்களுக்கு காலத்தின் கண்ணாடியாக எடுத்துச் சென்று காட்டி நிற்கின்றன. அச்சரித்திரம் பேணப்பட வேண்டுமாயின் அவை அவற்றின் முக்கியத்துவம் கெடா வகையில் அத்தாட்சியுடன் பதிவு செய்யப்பட வேண்டும். எது எப்படியாயினும் அச்சரித்திர நிகழ்வுகளே அந்நாட்டின் மீது மக்கள் பெருமை கொள்ளவும், அப்பெருமையின் அடிப்படையில் அந்நாட்டின் மகத்துவத்தைப் பேணவும் வழி கிடைக்கிறது.

    இங்கிலாந்து நாட்டில் நான் காலடி வைத்த நாள் முதல், இங்குள்ள நாட்டினரிடம் கண்டு ஆச்சரியப்பட வைப்பது இவர்கள் தமது கடந்தகால சரித்திரத்திற்கும், தமது வாழ்முறை கலாச்சாரத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவமே! எந்தக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று அரசமைத்தாலும் அவர்கள் தமது கலாச்சார, சரித்திர அடையாளங்களைப் பேணுவதற்காக தமது வரவு செலவுத் திட்டத்தில் கணிசமான தொகையை ஒதுக்கிக் கொள்கிறார்கள். இது அவர்களது கொள்கை அடிப்படையோ இல்லையோ, அவர்கள் இவ்வாறு செய்வதன் காரணம் இந்நாட்டு மக்கள் அவற்றிற்குக் கொடுக்கும் மதிப்பும் அரசியல் கட்சிகள் மக்களின் கருத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவமேயாகும் .

    என்னடா இவன் கதையளப்பது போல் மடலில் அடுக்கிக் கொண்டே போகிறானே என்று அன்பான வாசகர்கள் எண்ணலாம். இதை நான் இப்போது குறிப்பிடுவதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. ஆமாம் ஏறத்தாழ 200 வருடங்களின் முன்னால் நிகழ்ந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த போர் ஒன்றினை இருநூறு வருடங்கள் கழித்து இவர்கள் நினைவு கூர்வதும், அதற்குக் கொடுக்கும் முக்கியத்துவமுமே ஆகும்.

    waterloo 200“Battle of Waterloo” அதாவது “வாட்டர்லூ யுத்தம்” எனும் யுத்தம் ஜூன் மாதம் 18ம் தேதி 1815ம் ஆண்டு “வாட்டர்லூ” எனும் இடத்தில் நிகழ்ந்தது. இந்த ” வாட்டர்லூ ” எனும் இடத்திற்கும் தற்போது இங்கிலாந்தில் உள்ள “வாட்டர்லூ” எனும் இடத்திற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. இந்த யுத்தம் நிகழ்ந்த “வாட்டர்லூ ” எனும் இடம் தற்போதைய “பெல்ஜியம்” ஆகும். அப்போது இந்த இடம் “நெதர்லாந்து ஐக்கிய இராச்சியம் ( United Kingdom of Netherlands) எனும் அமைப்பாக இருந்தது.

    1815 ஆம் ஆண்டு, மாவீரன் நெப்போலியன் திரும்பவும் அதிகாரத்தைக் கைப்பற்றிய நேரம். நெப்போலியனின் அதிகாரத்திற்கு எதிரான பல நாடுகள் நெப்பொலியனின் அரசுக்கெதிராகக் கூட்டணி அமைக்க முயற்சித்துக் கொண்டிருந்த நேரம். ஃபிரெஞ்சு தேசத்திற்கு அண்மித்த “வாட்டர்லூ” எனும் இடத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த ” வெலிங்டன் பிரபு” (Duke of wellington) தலைமையில் அந்நாளைய இராணுவத் தளபதி “பிரஸ்சியன்கெப்கார்ட் வொன் பிளெச்சர்” (Prussian Gebhard von Blücher) என்பவர் அமைத்த “ஏழாவது கூட்டணி” (Seventh Coalition) எனும் இராணுவக் கூட்டமைப்பு நிலை கொண்டது.

    அக்கூட்டணியை எதிர்த்து மேலும் பல இராணுவங்கள் இணைந்து தாக்குதலை மேற்கொண்டால்தான் அவர்களை இலகுவாக வெற்றி அடையலாம் என்று திட்டம் தீட்டிய மாவீரன் நெப்போலியன் தனது முக்கியமான தாக்குதலை “வாட்டர்லூ” எனும் இடத்தில் நிகழ்த்தினார். இத்தாக்குதல் நிகழ்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் பிரஸ்ஸியன் இராணுவம் மற்றொரு இடத்தில் ஃபிரெஞ்சு இராணுவத்திடம் தோல்வியுற்றிருந்தது. இத்தோல்வியின் பின்னால் மீண்டும் பலமாக பிரஸ்ஸியன் ராணுவம் கட்டியெழுப்பப்பட்டதை அறிந்த வெலிங்டன் பிரபு, அவர்கள் தனது நெப்போலியனுக்கெதிரான போருக்கு ஆதரவளிப்பார்கள் எனும் நம்பிக்கையோடு தாக்குதலை எதிர்கொண்டார்.

    அன்று மாலைவரை நெப்போலியனின் தாக்குதலை தனது திட்டமிடுதலினால் சமாளித்துக் கொண்டிருந்த வெலிங்டன் பிரபுவின் படைகளோடு பிரஸ்ஸியன் இராணுவமும் ஒன்றிணைந்து ஃபிரெஞ்சு இராவணுத்தைச் சிதறடித்து ஃபிரெஞ்சு நாட்டின் அதிகாரத்தை 18ம் லூயி மன்னனிடம் கையளித்தார்கள். நெப்போலியன் கைது செய்யப்பட்டு செயிண்ட் ஹெலினாவிற்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு நெப்போலியன் 1821ம் ஆண்டு உயிர் நீத்தார்.

    யார் இந்த “வெலிங்டன் பிரபு “?

    Sir_Arthur_Wellesley,_1st_Duke_of_Wellington

    1769ம் ஆண்டு – மே மாதம் 1ம் நாள், அயர்லாந்து நாட்டில் பிறந்த “ஆர்த்தர் வெல்லஸ்லீ” (Arthur Wellesley) என்பவரே இவர். “ஃபீல்ட் மார்ஷல்” எனும் இராணுவ உயர் பதவியை வகித்தவர். அந்நாளைய பிரித்தானியாவின் இராணுவ வீரர்களில் இவர் மிகச் சிறந்தவராகக் கருதப்பட்டார்.

    1787ம் ஆண்டு – இராணுவத்தில் இணைந்த இவர் ஒரு கர்னலாக பதவி வகித்தார். இவர் அயர்லாந்து பாராளுமன்றத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

    1796ம் ஆண்டு – நெதர்லாந்து , இந்தியா ஆகிய நாடுகளில் பல போர்களில் பங்கு கொண்டார் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நடந்த, திப்பு சுல்தான் கொல்லப்பட்ட நான்காவது ஆங்கில மைசூர் போரில் இவர் இங்கிலாந்து படைக்குத் தலைமை தாங்கினார்.

    1799ம் ஆண்டு – ஸ்ரீரங்கப்பட்டினம், மைசூர் ஆகிய பகுதிகளின் கவர்னராக நியமிக்கப்பட்டார்.

    1814ம் ஆண்டு – நெப்போலியன் தலைமறைவாக இருந்த காலத்தில் இவர் ஃபிரெஞ்சு நாட்டின் பிரித்தானிய தூதுவராக கடமையாற்றும் போது இவருக்கு ” டியூக்” (Duke) எனும் பட்டமளிக்கப்பட்டது. இவரது இராணுவ காலம் முடிவுற்றதும் பிரித்தானிய அரசியலில் குதித்த இவர் இரண்டுமுறை கன்சர்வ்வேடிவ் கட்சியின் சார்பில் பிரதமராக பதவி வகித்தார்.

    1852ம் ஆண்டு – இவரது இறுதி காலம் வரை இங்கிலாந்து இராணுவத்தின் தலைமைக் கட்டளைத் தளபதியாகக் கடமையாற்றினார்.

    Lorddouroஇப்போது இந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த போரில் டியூக் ஆஃப் வெலிங்டன் அடைந்த வெற்றியின் போது உயிர் நீத்த 24,000 வீரர்களை 200 வருடங்களின் பின்னால் நினைவு கூரும் முகமாக லண்டன் “வாட்டர்லூ” இரயில் நிலையத்தில் ஒரு நினைவுச் சின்னம் திறக்கப்பட்டது. இந்நினைவுச் சின்னத்தை அப்போரின் வெற்றிக்கு காரணமான டியூக் ஆஃப் வெலிங்டனின் பரம்பரையில் வந்தவரான 9வது டியூக் ஆஃப் வெலிங்டன் சார்ல்ஸ் வெலரியன் வெலஸ்லீ என்பவர் திறந்து வைத்தார். மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்நிகழ்வு இந்நாட்டு மக்கள் மக்கள் தமது சரித்திர நிகழ்வுகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பறைசாற்றி நிற்கிறது.

    இத்தகைய உணர்வுகளே தமது நாட்டின் மீது தாம் கொண்ட மதிப்பையும் அதன் அடிப்படையில் அந்நாட்டைச் சுத்தமாகவும், சுகாதாரமாகவும், வசதிக் குறைவின்றி வைத்துக் கொள்ளும் மனோபாவத்தின் அடிப்படையாகிறது. நம்மில் எத்தனைப்பேர் நமது நாடுகளின் சரித்திர நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் ?

    ஆச்சரியமாக இல்லையா ?

    மீண்டும் அடுத்த மடலில் …
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(152)

    –சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்களுடன் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    அரசியல் ஒரு சாணக்கிய சூத்திரம் என்பது ஒரு பொதுப்படையான கருத்து. இது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். அரசியலில் இரண்டு வார காலமே மிக நீண்ட காலம் என்று முன்னைய இங்கிலாந்துப் பிரதமர் அமரர் ஹரால்ட் வில்சன் அவர்கள் கூறியதுண்டு. அன்றாடம் மாறிக் கொண்டேயிருக்கும் இந்த உலக அரங்கிலே அரசியலும் அதற்கேற்ற வகையில் மாறிக் கொண்டேயிருக்கிறது. எவ்வளவுதான் மாற்றமடைந்தாலும் அரசியலின் முக்கிய நோக்கம் அந்நாட்டு மக்களின் வாழ்வைச் சீரமைப்பதே என்பதே அடிப்படை உண்மையாகிறது. இவ்வுண்மையை மையப்படுத்தியே அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளும் பொருட்டு அரசியல் கட்சிகள் தமது பிரச்சாரப் பீரங்கிகளை இயக்குக்கிறார்கள்.

    மக்களின் நன்மையைக் கருதி அரசியல்வாதிகள் கொள்கையளவில் எடுக்கும் பல தீர்மானங்கள் அவர்கள் பதவிக்கு வந்ததும் பல்வேறு அகப்புறச் சூழல்களினால் நிறைவேற்றப்பட முடியாமல் போவதும் உண்டு. அதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும், அனைத்து அரசியல்வாதிகளும் மக்களை ஏமாற்றுவதையே தமது நோக்கமாகக் கொண்டு அரசியலில் இறங்குகிறார்கள் என்பது என்றுமே உண்மையாகாது. மக்களின் சேவையை மனதில் கொண்டே பெரும்பான்மையான அரசியல்வாதிகள் அரசியலில் இறங்குகிறார்கள். ஆனால், சிலரை சில சமயங்களில் அவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் தவறான பாதைக்கு இட்டுச் சென்றுவிடுகின்றன என்பதுவே உண்மை.

    எதற்காக எனது மடலின் ஆரம்பம் அரசியலையும், அரசியல்வாதிகளையும் சிறிது அலசியிருக்கிறது என்ற எண்ணம் ஏற்படலாம். காரணம் இருக்கிறது வருகிறேன்.

    ஒவ்வொரு மனிதனும் வாழும் போது அவனைச் சுற்றி இருப்போர் அவன் இருப்பைக் கண்டு கொள்வது போல் காட்டிக் கொள்வதில்லை. அம்மனிதன் தனது இறுதி முடிவைத் தழுவிக் கொள்ளும்போது அவனது இறுதிச் சடங்கில் அவனது புகழாரம் ஓதப்படுக்கிறது. அவர்களது இழப்பின் உண்மை அவனது சரித்திரத்தைப் புரட்டி பார்த்துப் பேசவைக்கிறது.

    என்ன இது என்று வியக்காதீர்கள். கடந்த திங்கட்கிழமை (ஜூன் 1, 2015) அன்று தனது மரணத்தைத் தழுவிக் கொண்ட ஸ்கொட்லாந்து நாட்டைச் சேர்ந்த லிபரல் டெமகிரட்ஸ் கட்சியைச் சார்ந்த சார்ல்ஸ் கென்னடி (Charles Kennedy) அவர்களின் மறைவினைத் தழுவிய மடலே இது. இவரை அதிகம் தெரிந்தவர்கள் குறைவு என்றே கூற வேண்டும்.

    யார் இந்த சார்ல்ஸ் கென்னடி ?

    Charles_Kennedy_2009ஸ்காட்லாந்து நாட்டிலுள்ள இன்வேனர்ஸ் எனும் இடத்தில் இயன் கென்னடிக்கும் மேரிக்கும் மகனாக 1959ம் ஆண்டு பிறந்தார் சார்ல்ஸ் கென்னடி. கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் அரசியல், தத்துவம் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் வாங்கிய இவர். பட்டம் பெற்றதும் பி.பி.ஸி ஸ்கொட்லாந்து நிறுவனத்தில் ஊடகவியளாலராகப் பணியாற்றினார்.

    CK11982ம் ஆண்டு அமெரிக்க இன்டியானா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டார். அப்போது இங்கிலாந்தில் லேபர் கட்சியில் அதிருப்தி அடைந்தவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட சோஸல் ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஸ்கொட்லாந்து நாட்டிலுள்ள ஒரு தொகுதியில் போட்டியிடத் தெரிவு செய்யப்பட்டார். 1983ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றியீட்டி 23 வயதில் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தின் இளைய உறுப்பினர் எனும் பெயர் பெற்றார். 1983ம் ஆண்டு தொடக்கம் சமீபத்தில் நடந்து முடிந்த 2015 தேர்தல் வரை அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்ற இவரின் முதல் தோல்வி நடந்து முடிந்த இந்தப் பொதுத் தேர்தலிலேயாகும்.

    மிகவும் தீவிரமான இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்டிருந்த இவர் மிகவும் திறமையான ஒரு இளம் அரசியல்வாதியாகக் கணிக்கப்பட்டார். சோஸல் ஜனநாயகக் கட்சி தன்னை லிபரல் கட்சியுடன் இணைத்துக் கொள்ளும் முடிவை முன்மொழிந்த ஐந்து பேரில் இவரும் ஒருவராவார். அதைத் தொடர்ந்து உருவான லிபரல் டெமகிரட்ஸ் கட்சியின் மிக முக்கியமான ஒரு உறுப்பினராகத் திகழ்ந்தார். அக்கட்சியின் தலைவர் படி ஆஷ்டவுண் (Paddy Ashdown) தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்த போது இவரே அக்கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். 1999 ம் ஆண்டிலிருந்து 2006ம் ஆண்டு வரை லிபரல் டெமகிரட்ஸ் கட்சியின் தலைவராக இவர் பதவி வகித்த காலத்திலேதான் முதன் முறையாக லிபரல் கட்சியின் வெற்றிக்குப் பின்னால் லிபரல் கட்சி உள்ளடங்கிய லிபரல் டெமாக்கிரட்ஸ் கட்சி 52 இடங்களில் வெற்றியீட்டி சாதனை செய்தது எனலாம்.

    இவரது தலைமையின் கீழ் இவரது கட்சி ஈராக் யுத்தத்திற்கு தமது முழுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. இவரது மறைவு குறித்து அனைத்து கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தமது கட்சி பேதங்களை மறந்து இவரின் மீதான தமது மதிப்பை வெளிப்படுத்தினர்.

    நேற்று (ஜூன் 3, 2015) தேர்தலுக்குப் பின்னர் பாராளுமன்றத்தில் நடைபெற்ற முதலாவது பிரதமர் கேள்வி பதில் நிகழ்ச்சியில் இவருக்கான இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாராளுமன்றத்தில் பார்வையாளர்களுடன் இவரது இரண்டே வயது நிரம்பிய மகன் டொனால்ட் டும் அவரது மனைவியும் அமர்ந்திருந்தார்கள்.

    பொதுவாக இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் பேசும்போது அவர்கள் பாராளுமன்றத்தில் பார்வையாளர்கள் இருக்கும் இடத்தை நோக்கிப் பேச அனுமதிக்கப் பட மாட்டார்கள். இது அவர்கள் பாராளுமன்றத்தை ஒரு பிரச்சார மேடையாக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே. ஆனால் நேற்றோ சபாநாயகர் இதற்கு விதி விலக்களித்து உறுப்பினர்கள் தமது இரங்கற் செய்தியை அவரது மகன் அமர்ந்திருந்த இடத்தை நோக்கிச் செலுத்த அனுமதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    எதற்காக இவர் மீது இத்தனை அபிமானம்?

    CK3

    பொதுவாக அரசியல்வாதிகள் என்றாலே கொஞ்சம் சந்தேகத்துடன் நோக்கும் மக்கள் இவர் மீது கொண்டிருந்த அபிமானமே இதற்குக் காரணமாகும். நாட்டின் பெரும்பான்மையினர் அன்றைய பிரதமர் டோனி பிளேயரின் விளக்கத்திற்கு ஆதரவளித்து ஈராக் மீதான யுத்தத்தை ஆதரித்தனர். எதிர்க் கட்சிகளும் அதனை ஆதரித்தன. ஆனால் தனியொரு மனிதனாக நட்டிலுள்ள பெரும்பான்மையினருக்கெதிராக தான் கருதப்பட்டாலும் பரவாயில்லை என்று ஈராக் மீது போர் தொடுக்கக்கூடாது எனவும், அதனால் ஏற்படும் விளைவுகள் பாரதூரமாக இருக்கும் என்றும், ஐநா சபை மூலம் நாடுகள் ஒன்றாக எடுக்கும் நடவடிக்கையே வெற்றியளிக்கும் என்று குரல் கொடுத்து இதற்கான வாக்களிப்பில் தனது கட்சியினரை வாக்களிக்காது வழி நடத்தியவர் இத்தலைவர்.

    அது தவிர 2010ம் ஆண்டு கன்சர்வேடிவ் கட்சியுடன் லிபரல் டெமகிரட்ஸ் கட்சி கூட்டணி அமைக்கும் போது தமது கட்சிக்கெதிராக குரல் கொடுத்து அதனால் தமது கட்சி அடையப்போகும் பாரதூரமான விளைவுகளை எடுத்துக்கூறியவர் இவர். இவர் தலைவராக இருந்த நேரத்தில் இவர் மதுவுக்கு அடிமையாக இருந்து அதற்கான சிகிச்சையில் ஈடுப்பட்டதை தொலைக்காட்சி ஒன்று வெளிப்படுத்த எண்ணியபோது, தானாகவே தனது பலவீனத்தை மக்கள் மத்தியில் எடுத்துக்கூறி தனது தலைமைப் பதவியை இராஜினாமச் செய்த துணிச்சல் மிக்கவர் இவராவார்.

    CK4

    இத்தகைய இவரது தனிப்பட்ட குணங்களினாலேயே இவருக்கு மக்கள் மத்தியிலும் மற்றைய அரசியல்வாதிகள் மத்தியிலும் நல்ல செல்வாக்கு இருந்தது. இத்தகைய ஒரு பண்பட்ட அரசியல்வாதி தனது 55வது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தது இங்கிலாந்து ஜனநாயக அரசியலின் இழப்பு என்றே சொல்ல வேண்டும்.

    “மக்கள் குரலே மகேசன் குரல் ” இதை மதிப்பவர்களின் தொகை குறைந்து கொண்டே போகிறதோ ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(151)

    –சக்தி சக்திதாசன்.

     

    அன்பினியவர்களே!

    இனிய வணக்கங்கள்…

    இவ்வார மடலுடன் உங்கள் முன்னே மீண்டும் ஒரு கருத்துப் பரிமாறல்.

    மனிதப்பிறவி என்பது அளப்பரியது. இறைவன் மனிதனுக்கு அளிக்கும் வரப்பிரசாதமே மனிதப்பிறவியாகும்.

    தாய், தந்தை, உடன்பிறந்தோர், மனைவி, மக்கள் என மனிதனுக்கு இறைவன் அளிக்கும் உறவுகள் ஆயிரம்.

    எங்கே, எப்படி, யாருக்கு குழந்தையாகப் பிறக்கப்போகிறோம் என்பது எமது கைகளில் தங்கியிருப்பதில்லை.

    யாரோ போட்ட விதையில் எங்கோ செடியாக முளைக்கும் எமக்கு விதைத்தவர் தந்தையென்றும் அதற்கு விளைநிலமானவரே அன்னை என்பதும் அறிவு தெரிந்தவுடன் புரிகிறது.

    யார் தமக்கு குழந்தையாகப் பிறக்கப் போகிறார்கள் என்பதை அறியாமலே அக்குழந்தை மீது அளவு கடந்த பாசம் கொள்கிறார்கள் பெற்றோர்கள்.

    பிறக்கும் அக்குழந்தையும் வளர்ந்து ஒரு விஞ்ஞானியாகவோ அன்றி ஒரு நாட்டின் தலைவராகவோ அன்றி ஒரு நாட்டின் விடுதலைக்காகப் போராடுபவராகவோ அன்றி ஒரு தீரா வியாதிக்குட்பட்டவராகவோ உருவெடுக்கலாம்.

    இத்தகைய அளப்பரிய, அதிசயமான மனிதப்பிறவியாக உருவெடுக்கும் எமக்கு, எமது பிறப்பில் எந்த விதமான கட்டுப்பாட்டையும் கொண்டிராத எமக்கு எமது உயிரைப் பறிக்கும் அதிகாரம் இருக்கிறதா?

    மிகவும் வியத்தக்க வினா இல்லையா?

    என்ன சக்தியின் இக்கேள்வி எந்த வழிக்கு எம்மை இழுத்துச் செல்கிறது எனும் கேள்வி உங்களுக்குள் எழுவது இயற்கை.

    நாம் அனைவரும் வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் எனும் எண்ணத்துடன் தான் எமது வாழ்க்கையைத் தொடங்குகிறோம்.

    நாம் வாழும் போதும் சரி, அன்றி மறையும் போதும் சரி எமது உறவுகளுக்குப் பாரமாக அமைந்து விடக்கூடாது என்பதுவே பெரும்பான்மையானவர் மனங்களில் குடி கொண்டிருக்கும் நினைவாகும்.

    ஆனால் நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்து விடுகிறதே!

    வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள் எமது வாழ்வினில் நாம் விரும்பாத முடிவுகளுக்கு எம்மைத் தள்ளி விடுவதை நாம் பலமுறை கண்கூடாகப் பார்த்திருக்கிறோம்.

    எந்த வழியைத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்று எண்ணுகிறோமோ அந்த வழிக்கு வாழ்வின் எதிர்பாராத நிகழ்வுகள் எம்மைத் தள்ளி விடுகிறது.

    சில நாட்களுக்கு முன்னால் நடந்த ஒரு நிகழ்வு இப்போது இங்கிலாந்தில் மிகவும் பலமான விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

    54 வயது நிரம்பிய ஒரு வெற்றிகரமான வியாபாரத்தின் சொந்தக்காரர் ஜெஃப்ரி ஸ்பெக்டர் (Jeffrey Spector) என்பவர். அவர் சுவிட்சர்லாந்தில் தனது வாழ்வின் முடிவைத் தேடிக் கொண்ட நிகழ்வே இவ்விவாதம் மீண்டும் தலைதூக்கக் காரணமாகிறது.

    151                        151.2151.3

    அவர் அத்தகைய ஒரு முடிவுக்கு வருவதற்கு என்னதான் காரணம் ?

    அவருக்கு முதுகெலும்பில் ஒரு புற்றுநோய்க்குக் காரணமான “ட்யூமர்” ஒன்று வளர்ந்திருந்தது.

    மருத்துவர்களின் கணிப்புகளின் படி இது மிகவும் பாரதூரமான நோய். மிகவும் மோசமான விளைவுகளைக் கொடுக்கக்கூடியது. அறுவை சிகிச்சையின் மூலமே இவரது வாழ்வை நீடிக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தன.

    அறுவை சிகிச்சையின் பின்னால் அவர் நடக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக அவர் எச்சரிக்கப்பட்டார்.

    தான் எடுக்கும் எந்த முடிவுகளும் தனது குடும்பத்தினரை நீண்டகால உபாதைகளுக்கு உள்ளாக்கக் கூடாது என்பதில் இவர் மிகவும் உறுதியாக இருந்தார்.

    எந்த வித அறுவை சிகிச்சைக்குள்ளாகாமல் இன்னும் எத்தனை காலத்திற்கு அவர் சாதாரணமாக நடமாட முடியும் என்பதை எந்த வைத்தியராலும் அறுதியாகக் கூறமுடியாத நிலைமை.

    இங்கிலாந்துச் சட்டத்திட்டங்களின் படி எந்த ஒரு நிலையிலும் யாரும் தனது உயிரைத்தானே எடுத்துக் கொள்வது அனுமதிக்கப்படுவதில்லை.

    மேலும் யாராவது அவர்களது தற்கொலைக்கு உதவினார்களேயானால் அவ்வுதவி செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

    ஆனால் சுவிட்சர்லாந்தில் இத்தகைய தற்கொலைகள் அதாவது விரைவில் மரணமடையக்கூடிய தீராநோய் கொண்டிருப்பவர்கள் தனது உயிரைத் தாமே மாய்த்துக் கொள்வதற்கு அந்நாட்டுச் சட்டத்தில் இடமுண்டு.

    இம்மனிதர் தனது குடும்பத்தினருக்கு தனது நிலையை விளக்கி விட்டு சுவிட்சர்லாந்துக்கு பயணித்து அங்கே இத்தகைய தற்கொலைக்கு உதவும் வைத்தியசாலையில் தானே தன்னை அனுமதித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

    இவரது மரணத்தைத் தொடர்ந்து இவரது நண்பர்களும், குடும்பத்தினரும் அவரது முடிவைத் தாம் மதிப்பதாகக் கூறியுள்ளார்கள்.

    ஆனால் இங்கிலாந்தில் சட்டம் மாற்றப்பட்டு இத்தகைய முடிவு சட்டத்திற்கு புறம்பானதல்ல என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தால் தமது அன்புக்குரிய அம்மனிதரின் கடைசி நேரத்தில் தாம் உடனிருந்திருந்திருக்கலாம் என்பதுவே தமக்கு வேதனையளிக்கிறது என்கிறார்கள்.

    சுவிட்சர்லாந்துக்கு செல்வதற்கு முன்னால் பேட்டியளித்த அம்மனிதர் இந்நாட்டில் தனது முடிவு சட்டப்பூர்வமானதாக இருந்திருந்தால் தான் இன்னமும் நடமாடும் நிலையில் இருக்கும் போது தனது உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டியிருந்திருக்காது என்று கூறியிருந்தார்.

    ஏன் என்கிறீர்களா ?

    அவர் தனது உயிரை இப்போது எடுத்துக் கொண்டிருக்காவிடில், ஒருவேளை நோய் தீவிரமடைந்து நடமாடமுடியாத நிலை வந்திருந்தால், அதன் பின்னால் அவர் சுவிட்சர்சலாந்து சென்று தனது உயிரைத் தானாகவே எடுத்திருந்திருக்க முடியாது.

    அந்நிலையில் தன்னை சுவிட்சர்லாந்துக்கு தனது குடும்பத்தினர் கொண்டு சென்றிருந்தால் அவர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்பட்டு விடுவார்கள்.

    இதுவே அவரது இந்த அவசர முடிவுக்குக் காரணம் என்றிருந்தார்.

    இங்கிலாந்து சட்டம் அவரது எதிர்பார்ப்புக்கு அமைய மாற்றப்பட்டிருந்தால் அம்மனிதர் இன்னும் சிலகாலம் தன் அன்புக்குரியவர்களுடன் வாழ்ந்திருப்பார் என்று வாதிடுகிறார்கள் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று கோருபவர்கள்.

    இல்லை, யாருக்கும் தமது உயிரை எடுக்கும் அதிகாரம் இல்லை. சட்டம் மாற்றப்பட்டால் அவசியமின்றி பலர் தமது வாழ்வை அனாவசியமாக முடித்துக் கொள்ளும் அபாயமிருக்கிறது என்கிறார்கள் அதை எதிர்ப்பவர்கள்.

    “லார்ட் யங்” (Lord Young ) எனும் அரசியல்வாதி மீண்டும் இச்சட்ட மாற்றத்தை இங்கிலாந்தின் பாரளுமன்றத்தின் முன்னால் விவாதத்திற்குக் கொண்டு வரும் முயற்சியிலீடுபட்டிருக்கிறார்.

    இம்மனிதப் பிறப்பு . . . ஆண்டவன் நிர்ணயிப்பு …

    இம்மனிதனின் முடிவு . . . . ?

    பொறுத்திருந்து பார்ப்போம்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(150)

    –சக்தி சக்திதாசன்.

     

    hands

     

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள் …

    150 மடல்கள், 150 வாரங்கள் இனிய உறவுகளான உங்களோடு என் மனக்கருத்துகளை மடல் வாயிலாக நான் பகிரத் தொடங்கி இத்தனை காலங்கள் ஓடிப் போயினவா?

    ஏதோ நேற்றுதான் சகோதரி பவளாவுடன் ஆரம்பித்தது இம்மடலின் துவக்கம்; 150 வார காலங்களுக்குள் எத்தனை எத்தனை நிகழ்வுகள்? எப்படி எப்படி நடந்து முடிந்து போயின.

    நீர்க்குமிழி போன்ற இந்த வாழ்க்கையில் நாம் காணும் எத்தனையோ வண்ணக் கனவுகள் கறுப்பு வெள்ளையாய் முடிந்து போயிருக்கின்றன. அதே சமயம் எத்தனையோ கறுப்பு வெள்ளையாக ஆரம்பித்தவைகள் வண்ண நினைவுகளாகவும் மிளிர்ந்திருக்கின்றன.

    என் அண்ணனின் இளம் மைந்தனின் மறைவு, என் நல் நண்பனின் அகால மரணம், என் மனைவியின் சித்தப்பாவின் மறைவு, என் மனைவியின் தந்தை… என் அருமை மாமனாரின் மறைவு என உள்ளத்தை உருக்கும் துயரமான நிகழ்வுகள் ஒரு புறம் …

    என் அருமை மைந்தனின் திருமணம், அதன் மூலம் மருமகளாக எமக்கு வாய்த்த ஒரு அன்பு மகள் என உள்ளத்தை உற்சாகத்தின் உச்சிக்கே கொண்டு செல்லக்கூடிய மகிழ்வான கணங்கள் மற்றொருபுறம் …

    அப்பப்பா! இவ்வாழ்க்கை எனும் பயணத்தில் எத்தனையோ உணர்வுகளின் கூட்டும் நிகழ்வுகள்.

    ஆம், இது ஒரு மகிழ்ச்சியான பயணம்தான். இது எங்கே எவ்விதம் தொடங்கும் என்றோ, எங்கே எப்படி முடியும் என்றோ கணித்துக் கூறக்கூடியவர் எவருமே இல்லை எனலாம்.

    இத்தகைய வாழ்க்கையிலே அடுத்தொரு துயரமிகு செய்தியாக எனக்கு நேற்று ஒரு செய்தி காதுக்கு எட்டியது.

    ஆமாம் 83 வயதான எனது ஒன்று விட்ட சகோதரரின் மறைவு !

    என் தாயாரின் மூத்த சகோதரியின் தலைப்பிள்ளை மூத்த மைந்தன். எனது தாய்வழி உறவில் குடும்பத்தில் மூத்தவர் எனும் அந்தஸ்து பெற்றவர். நானோ அதே வழியில் அனைவர்க்கும் இளையவன் எனும் அந்தஸ்தைப் பெற்றவன்.

    எனக்கும் அவருக்கும் ஏறத்தாழ 24 வயதுகள் வித்தியாசம்.

    நான் குழந்தையாக இருந்த போதே அவர் லண்டனுக்கு மேற்படிப்புக்காகச் சென்று விட்டார்.

    எனக்கு அறிவில் முதிர்ச்சி ஏற்படும் வரை அவரைப் பற்றி பெயரளவிலேயே கேள்வியுற்றிருந்தேன்.

    பின்பு அவர் இலங்கைக்கு விடுமுறையில் வரும்போது தனது சித்தியான என் அன்னையிடம் அடிக்கடி வந்து விடுவார். என் அன்னையின் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தார்.

    இலங்கையிலே எனது வாலிப வயதுகளை வீணாக்கி விட்டு ஏதாவது ஒரு வகையில் வாழ்வில் முன்னேற வேன்டும் என்பதற்காக தாய்மண்ணில் கல்வியைத் தொலைத்தவன் மேல்நாட்டில் அதைத்தேடி லண்டன் செல்ல முற்பட்ட வேளையது…

    அப்போது லண்டனில் மாணவனாக நுழைவதற்கு வேண்டிய தகமைகளில் ஒன்றாக லண்டனில் எமக்க்குத் தேவையான வசதிகளை நல்கி எம்மை வழிநடத்துவதற்கு ஒருவர் கடித மூலம் உறுதிமொழி கொடுக்க வேண்டும். அதை ஆங்கிலத்தில் “ஸ்பான்சர் லெட்டர் ” என்பார்கள்.

    லண்டனுக்கு வந்த பின்பு நாம் ஏதாவது ஏடாகூடமாகச் செய்து மாட்டிக் கொண்டால் அதற்கு அக்கடிதம் கொடுத்தவரே பொறுப்பாவார்..

    அதனால் பலர் இதற்குத் தயங்குவார்கள்.

    ஆனால் என் ஒன்று விட்ட அண்ணனிடம் எனது தேவையை எனது அன்னை தெரியப்படுத்தியதும் எதுவித தயக்க்கமுமின்றி உடனடியாக எனது தேவையைப் பூர்த்தி செய்தவர் அவர்.

    ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு நிலையில் எடுக்கும் ஒரு தீர்மானம் அவனை கீழ்நிலைக்குத் தள்ளும் அல்லது மேல்நிலைக்குக் கொண்டு செல்லும்.

    அத்தகையதோர் முக்கியமான சந்தியில் யார் எமக்குக் கை கொடுக்கிறார்களோ, எமது வாழ்க்கையின் மாற்றத்திற்கு முக்கிய காரணமானவர்களோ அவர்களை நாம் மறக்கக் கூடாது என்று என் தந்தை எனக்கு அடிக்கடி சொல்லும் ஒரு அறிவுரை எப்படியோ என் மனதில் தங்கி விட்டது.

    அதனால் லண்டன் வந்ததும் அவருக்கு நான் ஒவ்வொரு முறை எனது மாணவ விசா அனுமதி புதுப்பிக்கப்பட்டதும் தொலைபேசியில் நன்றி சொல்வதுண்டு.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவப் பெண்மணியே எனது அண்ணியாவார். என் அண்ணனுக்கேற்ற அருமையான பண்புகள் அனைத்தையும் அண்ணியும் கொண்டிருந்தார்.

    இலண்டன் மாணவ வாழ்க்கை என்பது நான் வந்த காலகட்டங்களில் மிகவும் சிரமான ஒன்று. கல்லூரிக்குச் சென்று படிப்பது மட்டுமன்றி எமது வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக்கொள்வதற்காக ஒய்வுள்ள நேரங்கள் அனைத்தும் ஏதாவது ஓரிடத்தில் பகுதி நேர ஊழியம் செய்ய வேண்டியது அக்காலத்தின் கட்டாயம்.

    இது எனக்கு மட்டுமல்ல அக்காலகட்டத்தில் இங்கு வந்திருந்த பல்லாயிரக்கணக்கான என் தாய்நாட்டுச் சகோதர, சகோதரிகளுக்கும் உள்ளான நிலையே.

    அதனால் எனது அண்ணனுடனான தொலைபேசித் தொடர்பு கூட எப்போதாவது ஒருமுறைதான் நிகழும்.

    இந்நிலை மாறியது என் திருமணத்தின் பின்னால். நான் திருமணம் புரிந்ததும் அவருடன் ஒருநாள் பேசும் போது நான் அவருடன் தொடர்பு கொள்வது எப்போதாவது என்பது பற்றி மிகவும் கடிந்து கொண்டார்.

    அப்போதுதான் எனது போக்கின் தவறு புரிந்தது. அது மட்டுமல்ல அப்போது என் தவறை அழகாகச் சுட்டிக்காட்ட என் மனைவி என் கூட இருந்தது எனது புரிந்துணர்வை கூட்டியது.

    அதன் பின்னால் அவருடன் அடிக்கடி தொடர்பில் இருந்தேன். வைத்தியரான அவருடன் ஏதாவது வைத்திய சம்பந்தமான பிரச்சனை இருந்தால் கலந்துரையாடுவேன் மிகவும் அன்பாக அறிவுரைகள் வழங்குவார்.

    எல்லோருடனும் மிகவும் அன்பாகப் பழகும் சுபாவம் படைத்த என் மனைவியின் மீது என் அண்ணனும், அண்ணியும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார்கள்.

    இலண்டனில் தங்கியிருந்த என் பெற்றோர் உடல்நிலை தளர்ந்திருக்கும் வேளையில் தன்னால் முடிந்த வேளைகளில் அவர்களை வந்து பார்ப்பார்.

    என் மகன் டாக்டராகப் பட்டம் பெற்றதும் நானும் என் மனைவியும் அவனை அழைத்துச் சென்று அண்ணனிடமும், அண்ணியிடமும் ஆசீர்வாதம் பெற்றோம்.

    அப்போது தனது வைத்தியப் பணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்த அவர் தன்னிடமிருந்த வைத்திய சம்பந்தமான நூலை என் மகனுக்குக் கொடுத்து ஒரு நல்ல டாக்டாராக பணியாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை தனது நாற்பது வருடகால சேவையின் அனுபவங்களைக் கூறி விளக்கியது இன்னும் என் மனதில் நிலை கொண்டுள்ளது.

    சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னனதாக தனது மனைவியை புற்றுநோய்க்கு பலி கொடுத்த அவரின் உடல்நிலை அதன் பின்னால் கொஞ்சம் கொஞ்சமாக பின்னடைந்து வந்தது.

    எப்போதும் தானே தனது தேவைகளைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்த அவர் இரண்டு நாட்களுக்கு முன்னால் இங்கிலாந்தில் ரெடிங் எனும் இடத்திலுள்ள வைத்தியசாலையில் இறைபதமடைந்தார்.

    அவரின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்கிறேன்.

     

    அன்புச் சகோதரனே !
    சக உதிரத்தில் உதிக்கவில்லை
    சகோதரனாக மிளிர்ந்தாய்
    என் வாழ்க்கைத் தோட்டத்தில்
    மலர்ந்த செடிகளுக்கு நீயும்
    நீர் வார்த்திருக்கிறாய் என்பதுவே
    யதார்த்தமான உண்மை
    உண்மை, உழைப்பு, நேர்மை
    எனும் பொறுப்பான ஆயுதங்களுடன்
    வாழ்க்கை எனும் களத்தில்
    அகவைகள் எண்பத்து மூன்று
    ஆற்றியது ஒரு போராட்டமே
    மூத்தவனாய் நீ சென்ற
    அடிகளில் தொடர்ந்து
    இளையவன் நானும் செல்ல
    தொடர்ந்து ஆசிகள் அளிப்பாய்
    ஞானமாய் உதித்த உன் சொற்கள்
    ஞானேஸ்வரன் உனை எனக்கு என்றும்
    ஞாபகப்படுத்திக் கொண்டேயிருக்கும்
    வைத்தியனாய் நீ ஆற்றிய தொண்டு
    வையத்தில் தமிழனாய் உனை என்றும்
    தலைநிமிர்த்தி வைக்கும்
    என் அன்பு ஞானேஸ் அண்ணா
    என்றும் எப்போது நல்லறிவு வேண்டுமெனில்
    உன்னுடன் ஒரு உரையாடல் போதுமே !
    உள்ளத்தில் அமைதி பொங்குமே !
    அன்னம்மா ! அன்னம்மா என்றெனது அன்னையை
    உன் சிற்றன்னையை அன்புடன் நீ விளிக்கும்
    சொற்களை இனி எப்போது
    என் செவி மடுக்கும்?
    வந்தவர் எல்லாம் செல்வது நியதி
    இருப்பினும் சிலரின் இழப்பு
    நெஞ்சினில் நீங்காத வடுவை
    நீக்கமற நிறுத்தி விடும்.
    அவர்களில் என் அண்ணா
    நீயும் ஒருவனென்பேன்.
    உன் ஆத்மசாந்திக்காய்
    கண்ணீர் அஞ்சலிகளோடு. . . .

    tear

    என் இனிய உறவுகள் உள்ளத்தை உருக்கும் துயரத்தை இம்மடல் வாயிலாக உங்கள் முன்றலில் இறக்கி வைத்து இளைப்பாற சந்தர்ப்பமளித்த உங்களுக்கும் என் இனிய வல்லமை ஆசிரியர் குழுவிற்கும் எனது பணிவன்புடன் கூடிய தாழ்மையான நன்றிகள்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

     

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(149)

    –சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே!

    இனிய வணக்கங்கள்.

    அடித்துப்பிடித்துக் கொண்டு ஓடி வந்து விட்ட அடுத்ததொரு வாரம், கைவிரல்களின் அசைவினால் உள்ளத்தின் உணர்வுகளை மடல் மூலம் கொட்டித் தீர்க்கும் அவா. ஆமாம் இவ்வார மடலுடன் மீண்டும் உங்களோடு உறவாடுகிறேன்.

    கடந்தவாரம் இங்கிலாந்திலே ஒரு முக்கியமான வாரம். ஆமாம், தேர்தலும் அதன் முடிவின் படி இனிவரும் ஐந்து வருட காலத்திற்கு யார் இந்த இங்கிலாந்தில் அரசாட்சி எனும் தேரை ஓட்டிச் செல்லப் போகிறார்கள் என்னும் கேள்விக்கு விடை பகிறப்பட்ட வாரம்.

    சுருக்கமாகச் சொன்னால் இங்கிலாந்து பாராளுமன்றத்திலே 650 பாரளுமன்ற உறுப்பினர்கள். இங்கிலாந்து சட்ட விதிகளின் படி ஒரு கட்சிக்கு அரசமைக்கும் உரிமை அது தேர்தலில் 326 ஆசனங்களைக் கைப்பற்றினால் தான் கிடைக்கிறது.

    கடந்த தேர்தலில் இங்கிலாந்தின் இரு பெரும் அரசியல் கட்சிகளான கன்சர்வேடிவ் கட்சியோ அன்றி லேபர் கட்சியோ இந்த 326 ஆசங்கள் எனும் பலத்தை பெற்றிருக்கவில்லை. விளைவு கூட்டரசாங்கம் அமைப்பதன் மூலம் தான் இந்த இரண்டு கட்சிகளில் ஒன்று ஆட்சி அமைக்கக்கூடிய நிலமை இருந்தது.

    இவற்றில் கன்சர்வேடிவ் கட்சிதான் அதிக இடங்களைப் பெற்றிருந்தது எனவே மூன்றாவதாக 50 க்கும் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றி இருந்த லிபரல் டெமாக்கிரட்ஸ் கட்சியுடன் இணைந்து கன்சர்வேடிவ் கட்சி கூட்டரசாங்கம் அமைத்தது. டேவிட் கேமரன் பிரதம மந்திரியானர். லிபரல் டெமாக்கிரட்ஸ் தலைவரான நிக் கிளேஹ் பிரதிப் பிரதமரானார்.

    அது பழையகதை சரி இனி இந்த 2015 புதுக்கதைக்கு வருவோம் …

    தேர்தல் தினமான மே 7ம் தேதி வரை எடுக்கப்பட்ட பொதுக் கருத்துக் கணிப்புகள், மற்றும் ஊடகங்கள், பிரபல அரசியல் அவதானிகள் அனைவருமே இத்தேர்தலில் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் இம்முறையும் நிச்சயம் கூட்டரசாங்கம் தான் அமையும் என்று அடித்துக் கூறினர். சரி கூட்டரசாங்கம் எனில் யார் யாருடன் கூட்டரசாங்கம் அமைக்கப் போகிறார்கள் எனும் கேள்வி அனைவருடைய மனங்களிலும் தொக்கியிருந்தது.

    பிரதான கட்சிகளான கன்சர்வேடிவ் கட்சியும், லேபர் கட்சியும் தான் பெரும்பான்மை பலமிக்க கட்சிகளாகும் இவர்களுடன் யார் சேரப் போகிறார்கள்?

    அடுத்து அனைவருக்கும் தெரிந்த நிதர்சனமான உண்மை இதுநாள்வரை லேபர் கட்சியின் கோட்டையாக விளங்கிய ஸ்காட்லாந்து இம்முறை முற்று முழுவதுமாக ஸ்காட்லாந்துக்கு தனிநாடு கோரி நிற்கும் ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் வசமாகி விடும் என்பதே!

    அக்கட்சியின் தலைவரோ திரும்பத் திரும்ப இனியும் இங்கிலாந்தில் டேவிட் கேமரன் ஆட்சி அமைய விடக்கூடாது நாம் லேபர் கட்சியுடன் இணைந்து அரசமைப்போம் என்று பகிரங்கமாகக் குரல் கொடுக்கத் தொடங்கினார்.

    அடித்தது அதிர்ஷ்டம் கன்சர்வேடிவ் கட்சிக்கு, பிடித்துக் கொண்டது தன் வாதத்தை. “மக்களே நீங்கள் லேபர் கட்சிக்கு வாக்களித்தால் பின் வாசல் வழியே ஸ்காட்லாந்து தேசிய கட்சியை அரச கதிரையில் அமர்த்திவிடுவீர்கள். லேபர் கட்சியின் தலைவர் எட் மில்லிபாண்ட் ஸ்காட்லாந்து தேசியவாதிகளின் கைப்பாவையாகி விடுவார் விளைவு ஐக்கிய இராச்சியம் துண்டாடப்பட்டு விடும்” என்பதைத் தாரக மந்திரமாக்கி அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தமக்குச் சாதகமான ஊடகங்களிலும் ஊதத் தொடங்கினார்கள்.

    ஏற்கனவே ஸ்காட்லாந்து பிரிந்து போவதற்கான பொதுஜன வாக்கெடுப்பு நடந்ததால் குழம்பிப் போயிருந்த மக்கள் மனதில் பீதி உருவாகத் தொடங்கியது. கன்சர்வேடிவ் கட்சியுடன் கூட்டரசாங்கம் அமைத்ததால் ஏற்கனவே தமது செல்வாக்கை முற்றாக இழந்திருந்தனர் லிபரல் டெமாக்கிரட்ஸ் கட்சியினர்.

    யூகிப் எனும் இங்கிலாந்து விடுதலைக் கட்சியினருக்கு வாக்களித்தால் மீண்டும் டேவிட் கேமரனின் ஆட்சி அமையும். பொதுநலத்துறைகளின் மீதான நிதிக்குறைப்பின் மூலம் அடிமட்டத் தொழிலாளர்களே பாதிக்கப் படுவார்கள். கன்சர்வேடிவ் கட்சியின் ஆதரவாளர்கள் என்று கருதப்படும் முதலாளிகள் தமது பணப்பலத்தைப் பெருக்கிக் கொள்வார்கள்.

    இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை கொஞ்சம் கொஞ்சமாக தனியார் நிறுவனங்களுக்கு விலை போய்விடும் போன்ற வாதங்களை லேபர் கட்சியினர் முன் வைத்தனர். அதற்குப் பதிலாக நாட்டின் பொருளாதாரத்தை முற்று முழுதாகச் சிதைத்தவர்கள் பழைய லேபர் கட்சியினரே, நாட்டின் பொருளாதாரம் சீராகி வரும் வேளையில் மீண்டும் லேபர் கட்சியிடம் பொறுப்பைக் கொடுத்து நாட்டின் வளர்ச்சியைப் பின் தள்ளப் போகிறீர்களா ? என்றனர் கன்சர்வேடிவ் கட்சியினர்.

    யூகிப் எனும் கட்சியினரின் ஆதரவுப் பெருக்கத்துக்குக் காரணம் மக்களுக்கு ஐரோப்பிய யூனியனின் மீது இருந்த சந்தேகமே. இச்சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையில் இங்கிலாந்தில் குடியேறும் வெளிநாட்டவரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்தது. இவ்வதிகரிப்பு மக்கள் மனதில் நியாயமானதொரு பீதியைக் கிளப்பி விட்டிருந்தது. இப்படியான சூழல்களுக்கு மத்தியில் ஒருவாறு மே 7ம் திகதி தேர்தல் நடந்து முடிந்தது.

    முடிவு!!!

    யாருமே எதிர்பார்க்காத வகையில் டேவிட் கேமரனின் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி 332 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடனான அரசாங்கத்தையமைத்து விட்டது. பொதுக்கருத்துக் கணிப்பு நிறுவனங்கள், அரசியல் அவதானிகள், ஊடகங்கள் அனைவரின் முகங்களிலும் அளவற்ற அசடு வழிந்தது.

    லேபர் கட்சி எதிர்பார்ப்புகளுக்கு முற்றும் மாறாக மோசமான தோல்வியைத் தழுவியது.

    லிபரல் டெமாக்கிரட்ஸ் கட்சி யாருமே எதிர்பார்க்காத வகையில் கடந்த பாராளுமன்றத்தில் 50 க்கும் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றியிருந்த நிலையில் இத்தேர்தலில் எட்டே எட்டு ஆசனங்களை மட்டுமே கைப்பற்றி படு தோல்வியடைந்தது. இக்கட்சியின் பல முன்னணித் தலைவர்கள் தோல்வியடைந்தனர்.

    ஸ்காட்லாந்து தேசிய கட்சியினர் அங்கு போட்டியிட்ட 59 ஆசனங்களில் 56 ஆசனங்களைக் கைப்பற்றி அமோக வெற்றியீட்டினர்.

    யூகிப் எனும் கட்சியினர் எதிர்பார்ப்புக்கு முரணாக ஒரேயொரு ஆசனத்தை மட்டும் கைப்பற்றினர்.

    விளைவு !!!

    2015ம் ஆண்டு இங்கிலாந்துத் தேர்தல் மூன்று கட்சித் தலைவர்களைக் காவு கொண்டு விட்டது. ஆமாம் லேபர் கட்சித் தலைவர் எட் மில்லிபாண்ட் , லிபரல் டெமாக்கிரட்ஸ் கட்சித் தலைவர் நிக் கிளெஹ் , யூகிப் தலைவர் நைஜல் ப்ராஜ் ஆகிய மூவரும் சடுதியாக தாம் தமது கட்சியின் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக விலகுவதாக அறிவித்தார்கள்.

    சரி அரசியல் அறிவில் பூஜ்ஜியமான இந்தப் பாமரனின் கணிப்பில் இத்தேர்தல் முடிவுகளின் காரணம் ?

    2015-1கன்சர்சேடிவ் கட்சியின் வெற்றிக்கு …
    இவர்கள் தமது தேர்தல் பிரசாரத்தை மிகவும் புத்திசாலித்தனமாக முன்னெடுத்தார்கள்
    லேபர் கட்சியினர் அரசமைக்க ஒரேவழி ஸ்காட்லாந்து பிரிவினைவாதிகளுடன் சேர்ந்த கூட்டரசாங்கமே எனும் வாதத்தில் வெற்றி கண்டார்கள்
    அதிர்ஷ்டவசமாக இங்கிலாந்தின் பொருளாதாரச் சூழல் தேர்தல் சமயத்தில் இவர்களுக்கு ஆதரவாக இருந்தமை

    லேபர் கட்சியின் தோல்விக்கு …
    இக்கட்சியின் தலைவரான எட் மில்லிபாண்ட் மீது மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை
    இக்கட்சி தன்னை இடதுசாரிக் கொள்கைகளின் வழி இழுத்துச் சென்றமை
    இக்கட்சி சிறு தொழில் செய்வோரையும், நாட்டில் செல்வத்தை ஈட்டும் தொழிலதிபர்களையும் எதிர்ப்பது போன்றதோர் உணர்வை எழுப்பியமை.
    ஸ்காட்லாந்தில் கடந்த தேர்தலில் முப்பதுக்கும் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றிய இவர்கள் இப்போது ஒரு ஆசனத்தைக் கைப்பற்றுவது கூட சந்தேகம் எனும் எண்ணம் மக்களிடையே வலுப்பெற்றது

    2015-2லிபரல் டெமாக்கிரட்ஸ் கட்சியின் தோல்விக்கு …
    கடந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாணவர்கள் சர்வகலாசாலை செல்கையில் செலுத்தும் கட்டணத்தை அறவே ஒழிப்பது என்று அறிவித்து விட்டு பின்பு கூட்டரசாங்கத்தில் இணைந்ததும் அதை அப்படியே கைவிட்டதும்
    அடிப்படையில் இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்டிருந்த இவர்கள் 2010 தேர்தலின் பின்னால் முழு வலதுசாரிகளான கன்சர்வேடிவ் கட்சியுடன் இணைந்து கூட்டரசாங்கம் அமைத்தது இவர்களின் பல ஆதரவாளர்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்தது.
    இவர்களது பிரசாரத்தில் கடந்த கூட்டரசாங்கத்தின் வெற்றி பெற்ற நடவடிக்கைகளில் தங்களுக்குரிய பங்கைச் சரிவர மக்களுக்கு விளக்காமல் விட்டது.

    ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் வெற்றி அனைவரும் எதிர்பார்த்தது போலவே மைந்தது. கடந்த வருடம் நடைபெற்ற ஸ்காட்லாந்து பிரிந்து போவதற்கான பொதுஜன வாக்கெடுப்பு ஸ்காட்லாந்து மக்களிடையே தேசியவாத உணர்ச்சியை உசுப்பி விட்டதே இவர்களது அதீத வளர்ச்சிக்குக் காரணம் எனலாம்.

    யூகிப் எனும் கட்சியின் நிலை அவர்களுக்கு ஓரளவு வெற்றி என்றுதான் கூற வேண்டும். ஒரு ஆசனத்தை மட்டுமே கைப்பற்றி இருந்தாலும் நாடளாவிய ரீதியில் ஏறத்தாழ இவர்களுக்கு நான்கு இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்திருக்கின்றன.

    2015-3இது இப்போது ஒரு புது சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளது.

    இரண்டு இலட்சத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற ஸ்காட்லாந்து தேசிய கட்சி 56 ஆசனங்களைப் பெற்றுள்ளன, ஆனால் அதேநேரம் நான்கு இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற யூகிப் ஒரேயொரு ஆசனத்தை மட்டுமே பெற்றுள்ளது. இது பலரை விகிதாசார முறையில் ஆசனங்கள் பிரித்தளிக்கப்பட வேண்டும் எனும் கோஷத்தை முன்வைக்கப் பண்ணியுள்ளது.

    அடுத்து வரும் ஐந்து வருட காலங்கள் நம் பிரதமர் டேவிட் கேமரன் எமை எங்கே கொண்டு செல்லப்போகிறார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டுமோ ?

    “மக்கள் குரலே மகேசன் குரல் ” எனும் கோட்பாட்டை பல அரசியல்வாதிகள் மறந்து போய்விடுகிறார்களோ ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(148)

    சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    இங்கிலாந்தில் தேர்தல் நடக்கும் இவ்வாரத்திலே இம்மடல் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் மகிழ்கிறேன்.

    ஒவ்வொருநாடும் அந்நாட்டிலுள்ள மக்களை உள்ளடக்கிய சமூகங்களினாலும், சமுதாயங்களினாலும் ஆக்கப்பட்டுள்ளன.

    அந்நாட்டின் கலாச்சார வழமைகள் அந்நாட்டின் பெரும்பான்மையான மக்களின் பின்னனியில் காலமாற்றங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றன.

    இந்தச் சமூகங்களும், சமுதாயங்களும் எவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன? சமுதாய அங்கத்தினர்கள் ஏதோ தனியாக, விசேடமாக படைக்கப்பட்டவர்களா ?

    அன்றி நாட்டினை ஆளும் அரசியல்வாதிகளும் மற்றைய அரசியல் அங்கத்தினர்களும் ஏதோ அதற்கெனவே பயிற்றுவிக்கப்பட்டவர்களா?

    இல்லை. சமுதாயம் என்பது சாதரண மக்களை உள்ளடக்கிய ஒரு அமைப்பே ! அதேபோல அரசியல்வாதிகள் என்போரும் அச்சமுதாயத்திலிருந்து நாட்டினில் மாற்றங்களை ஏற்படுத்தி மக்களின் வாழ்வை முன்னேற்றும் பொதுநலநோக்கம் கொண்ட சாதாரண மக்களே !

    சமீபத்தில் நான் எதிர்கொண்ட ஒரு நிகழ்வு என் மனதில் பல சிந்தனைத்துளிகளுக்கு வித்திட்டது.

    சில நாட்களுக்கு முன்னால் எமது வீட்டிற்கு அருகாமையில் உள்ள அங்காடி ஒன்றில் சில பொருட்களை வாங்கச் சென்ற என் மனைவியை அவ்வங்காடியின் முன்னால் இறக்கி விட்டு விட்டு நான் காரினுள் உட்கார்ந்திருந்தேன்.

    அந்த அங்காடியின் முன்னே ஒரு நாலு அல்லது ஐந்து கார்களை நிறுத்துவதற்கான வசதியே இருந்தது. என்னுடைய காரை நிறுத்தியதும் வேறு கார்களை நிறுத்த இடமிருக்கவில்லை.

    அப்போது ஒரு புத்தம் புதிய பென்ஸ் காரொன்று அக்கார்கள் நிறுத்தியிருந்த இடத்தின் முன்னே வந்து நின்றது.

    அக்காரை நிறுத்த அங்கே இடமில்லாததினால் அக்கார் எமது கார்களுக்கு முன்னால் நின்றிருந்தது. அதன் முன் இருக்கைகளில் இரண்டு ஆங்கிலேயப் பெண்மணிகள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் கார்ச்சாரதி.

    அக்காரின் பின்கதவு திறந்து அதிலிருந்து ஒரு வயதான ஆங்கிலேய மனிதர் இறங்கி அந்த அங்காடியினுள் நுழைந்தார்.

    அவ்விரு பெண்களும் முப்பதுகளின் நடுப்பகுதியில் இருப்பார்கள் என்பது என் அனுமானம்.

    throwing rubbish 2கார்ச்சாரதியான பெண்மணியின் ஜன்னல் திறந்தது … அக்காரினுள் அப்பெண் வைத்திருந்த குப்பைகளைச் சேகரித்து அந்த ஜன்னல் வழியாக வெளியே எறிந்தார்.

    அவரின் செய்கையை ரசித்த அவர் அருகே இருந்த பெண்மணி பலமாகச் சிரித்தார்.

    அவர்கள் அக்குப்பைகளை எறிந்த இடம் ஒரு ஒதுக்குப்புறமான இடமோ அன்றி ஒரு குப்பை கொட்டும் இடமோ அல்ல.

    அது அந்த அங்காடிக்குச் சொந்தமான மிகவும் சுத்தமாக பொதுமக்கள் பாவனை செய்யும் ஒரு இடம்.

    அதைச் செய்தவர்களோ வாழ்க்கையின் நடுத்தர வர்க்கமல்ல சமுதாயத்தில் மேல்மட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அவர்கள் வந்திருந்த காரிலிருந்து அவர்கள் அணிந்திருந்த ஆடை அணிகலன்களில் இருந்தும் தெளிவாகத் தெரிந்தது.

    இச்செயலை எனது காரில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த என் மனதில் பலவகையான எண்ணங்கள் ஓடின.

    நாம் நட்புடன் சம்பாஷிக்கும் பல ஆங்கிலேய நண்பர்களிடம் தற்போதைய இங்கிலாந்து மிகவும் மோசமடைந்து விட்டது எனும் ஒரு கருத்து பொதுவாக நிலவுகிறது.

    இந்நிலைக்குக் காரணம் வெளிநாடுகளில் இருந்து இங்கிலாந்துக்குக் குடியேறும் வெளிநாட்டவரே காரணம் எனும் கருத்தும் அநேகரிடம் உண்டு.

    ஆனால் அன்று என் கண்முன்னே ஒரு அநாகரிகமான செயலைச் செய்தவர்கள் ஆங்கிலேயப் பெண்மணிகளே !

    அதுவும் சமுதாயத்தில் பெரிய இடத்தில் இருப்பவர்கள்.

    இதற்குக் காரணம் தான் என்ன ? நாம் அனைவரும் இச்சமுதாயத்தின் ஒரு அங்கம். இங்கு நடக்கும் அனைத்திலும் எமக்கும் பாரிய பங்குண்டு எனும் அடிப்படைக் கருத்து அவர்கள் மனதை விட்டு அகன்றததினாலா .

    throwing rubbish 1இல்லை, அட … எல்லோரும்தான் குப்பை போடுகிறார்களே நாம் போட்டு விட்டால் மட்டும் என்ன குறைந்து போய்விடும் எனும் எண்ணமா ?

    ஒரு நாட்டின் கலாச்சாரச் சீரழிவிற்கு அந்நாட்டின் அரசியல்வாதிகள் மட்டும் காரணமில்லை. சுயநலப் போக்குக் கொண்ட அனைத்து மக்களுமே காரணமாகிறார்கள்.

    நாம் மேற்கோள் காட்டிய நிகழ்வு ஒரு சிறிய நிகழ்வே ! அட இதைப்போய் பெரிதாய் சொல்ல வந்து விட்டாயே என்று கூட நீங்கள் எண்ணலாம்.

    ஒரு சோற்றுக்கு ஒரு பதம் என்பார்கள். இச்சிறிய நிகழ்வின் அடிப்படை இந்நாட்டில் நடக்கும் பல பெரிய நிகழ்வுகளை விளக்கும் வல்லமை கொண்டது.

    நான் 40 வருடங்களுக்கு முன்னால் கண்ட இங்கிலாந்திற்கும் இன்றைய இங்கிலாந்திற்கும் என்ன வேறுபாடு என்று எண்ணும் போது வாழ்க்கையில் அடிப்படிப் பண்புகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் தன்மையில் காணப்படும் வேறுபாடே காரணம் எனும் உண்மை புரிகிறது.

    எமது நடவடிக்கைகளுக்கு நாம் உத்தரவாதம் கொடுக்க முடியாத நிலையில் அரசியல்வாதிகளை குறைகூறுவதில் என்ன பலன் ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(147)

    சக்தி சக்திதாசன்.

     

    அன்பினியவர்களே !

    பணிவான வணக்கங்களுடன் அடுத்தொரு மடலுடன் உங்கள் முன்னே மீண்டும் ஒரு வாரம் மனந்திறப்பதில் மகிழ்கிறேன்.

    “அரசியலை வெறுக்கிறேன் ” , “அரசியல்வாதிகளை கண்களில் காட்டவே கூடாது ” இப்படியான பல வாதங்களை நாம் பல இடங்களிலே கேட்டிருப்போம்.

    அரசியல் என்பது எமக்கு அப்பாற்பட்டதா ? நாம் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறோம் எனும் எண்ணங்களோடு வாழ்ந்தாலும் அரசியல் எம்மை விட்டு ஒதுங்கி விடுமா?

    இல்லை அதுதான் சாத்தியமா ?

    நாம் அனைவரும் துறவிகளல்ல, நாம் வாழ்வின் அத்தனை ஆசாபாசங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு வாழ்பவர்களல்ல. சாதாரண மனிதர்களின் ஆசாபாசங்களின் அடிப்படையிலேயே உலகின் பொருளாதாராம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

    நாம் விரும்பியோ விரும்பாமலோ நாமனைவரும் ஏதோ ஒருவகையில் அரசியலில் சம்பந்தப்பட்டிருக்கிறோம். அதாவது ஜனநாயகத் தேர்தல் நடைமுறையிலிருக்கும் எந்தவொரு நாட்டிலும் ஒவ்வொரு மனிதனும் தனது வாக்குரிமையால் அந்நாட்டின் அரசியலை மாற்றியமைக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளான் என்பதுவே உண்மை.

    ஆனால் நாட்டின் நடப்புகளையும் அரசியல்வாதிகளின் செய்கைகளையும் கண்டு மனதில் தோன்றும் விரக்தியினால் நாம் வாக்களிக்கக் கூடாது எனும் முடிவுக்கோ அன்றி எமது ஒரு வாக்கினால் நாட்டில் அப்படி என்ன பெரிய மாறுதல் வந்துவிடப்போகிறது ? எனும் எண்ணத்தில் எம்மில் பலர் வாக்களிக்காமல் இருந்துவிடும் நிலைகளும் உண்டு.

    நாம் வாக்களித்தால் அப்படி என்ன நடந்து விடப் போகிறது ? என்று எண்ணுவது போல நாம் வாக்களிக்காமல் இருந்து விட்டால் மட்டும் ஏதோ பெரிய மாறுதல் வந்து விடப்போகிறதா ? என்றும் எண்ணலாம் அல்லவா ?

    ஒவ்வொரு மனிதனுக்கும் ஜாதி, மத, இன வேறுபாடுகளின்றி அந்நாட்டின் அரசியலமைப்பை மாற்றி அமைக்கக்கூடிய அதிகாரம் கொண்ட வாக்குரிமை வேண்டும் என்பதற்காக போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தோர் அனேகம் பேர்.

    அவ்வதிகாரம் கையிலிருந்து அதை உபயோகிக்காமல் வீணடிப்போரும் பலர் உண்டு.

    election15.1எதற்காக இந்த அலசல் என்று நீங்கள் கேட்கலாம். இது இங்கிலாந்தில் தேர்தல் காலம். இன்னும் ஒரு வாரத்தில் அடுத்த ஐந்து வருடங்களுக்கு இந்நாடு போகப்போகும் திசையைத் தீர்மானிக்கும் தேர்தல் இடம்பெறப் போகிறது.

    யார் அதிகார நாற்காலியில் உட்காரப் போகிறார்கள் என்பதில் பெரிதாக எவ்விதமான மாற்றமும் வந்து விடப் போவதில்லை.

    வழமை போல கன்சர்வ்வேடிவ் கட்சியின் தலைவரும் தற்போதைய பிரதமருமான டேவிட் காமரனோ அன்றி எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவரான எட் மில்லிபாண்ட் அவர்களோ தான் பிரதமர் எனும் அந்தஸ்தைப் பெறப் போகிறார்கள்.

    election15.3கடந்த தேர்தலில் அரிதிப் பெரும்பான்மை பெற முடியாததினால் லிபரல் கட்சியுடன் சேர்ந்து கூட்டரசாங்கம் அமைத்தார் டேவிட் காமரன்.

    இம்முறையும் தேர்தல் மிகவும் சுவாரஸ்யமாயிருக்கிறது. ஏனெனில் பொதுக் கருத்துக்கணிப்புகளின் படியும் , பிரபலமான அரசியல் அவதானிகளின் படியும் இந்த இரு பெரிய கட்சிகளில் இரண்டும் அரிதிப் பெரும்பான்மை பெறுவது கடினம் எனும் கருத்து முன் வைக்கப்படுகிறது.

    அப்படியாயின் அவ்விரு கட்சிகளும் கூட்டரசாங்கம் அமைக்கும் முயற்சிகளில் எவை அதிக ஆசனங்களைப் பெறும் முயற்சியில் வெற்றி பெறுகிறதோ அதுதான் அரசமைக்க முடியும்.

    இப்போது அரசிலிருக்கும் கன்சர்வ்வேடிவ் கட்சி யூகிப் , யூடிஎப் , லிபரல், டெமாகிரட்ஸ் எனும் கட்சிகளைத் தான் நாட முடியும்.

    election15.4அதே போல லேபர் கட்சி எஸ்என்பி , கிரீன் , லிபரல் டெமாகிரட்ஸ் எனும் கட்சிகளைத்தான் நாட முடியும்.

    லேபர் கட்சிக்கு இப்போது ஒரு புதுப் பிரச்சனை முளைத்துள்ளது. ஒவ்வொருமுறையும் தேர்தலில் ஸ்காட்லாந்தில் ஏறத்தாழ முப்பதிற்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறு லேபர் கட்சி இம்முறை அங்கு ஒரு இடத்தில் வெற்றி பெறுவது கூடச் சந்தேகம் என்கிறார்கள்.

    காரணம் என்ன ?

    கடந்த வருடம் மிகவும் அமோகமாகப் பேசப்பட்ட ஸ்காட்லாந்து நாடு பிரிவதற்கான பொதுஜன வாக்கெடுப்பு நடந்தது அனைவரும் அறிந்ததே. இவ்வாக்கெடுப்பில் ஸ்காட்லாந்தில் மாநில அரசில் அதிகாரத்திலிருக்கும் எஸ்என்பிபி (SNP) எனும் கட்சி பிரிவினைவாதத்தில் மிகவும் குறைந்த வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது.

    விளைவு !

    election15.2அவர்களுக்கு ஸ்காட்லாந்து பகுதியில் இருந்த செல்வாக்கு பன்மடங்கு பெருகியது அதன் விளைவாக இதுவரை ஸ்காட்லாந்து நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்த லேபர் கட்சி தனது செல்வாக்கை பலமாக இழந்துள்ளது.

    இந்நிலையில் கூட்டரசாங்கம் அமைப்பதுதான் லேபர் கட்சியின் முன்னால் உள்ள ஒரே ஒரு தீர்வு. ஆனால் அவர்கள் எஸ்என்பி எனும் கட்சியுடன் கூட்டு வைத்தால் அவர்கள் ஐக்கிய இராச்சியத்தின் பிரிவிற்கு அடிக்கல் நாட்டுகிறார்கள் என்று வாதிடுகிறார்கள் மற்றக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.

    தாங்கள் ஒருபோதும் அக்கட்சியுடன் கூட்டுச் சேர மாட்டோம் என்கிறார் லேபர் கட்சியின் தலைவர் எட் மில்லிபாண்ட் . . . . .

    நம்பாதீர்கள் . . . . என்று ஒலிக்கிறது பல குரல்கள்.

    இந்நிலையில் எம் கைகளில் இருக்கும் வாக்குகளை நாம் வீணடிப்பது நாம் வாழும் நாட்டிற்கு நாம் செய்யும் துரோகமாகாதா ?

    நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் ஒரே வாக்காக நமது வாக்கு இல்லா விட்டாலும் பல வாக்குகளில் ஒன்றாக இருந்தோம் எனும் நிம்மதி கிடைக்குமல்லவா ?

    அடுத்த மடலில் சந்திக்கும் வரை
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(146)

    –சக்தி சக்திதாசன்.   

     

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள்.

    மூன்று வாரங்களின் பின்னே இம்மடல் வழியாக உங்களைச் சந்திப்பதில் ஆறுதல் அடைகின்றேன்.

    எதற்கிந்த இடைவேளை? எனும் எண்ணம் உங்களுக்கு ஏற்படலாம் காரணம் இருக்கிறது .

    எனது மனைவியின் தந்தை, எனது மாமனார் தனது 87வது வயதில் சென்னையில் ஏப்ரல் மாதம் 2ம் திகதி காலமானார்.

    அவரது இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வதற்காக சென்னை சென்று கடந்த ஞாயிறு காலை லண்டன் திரும்பினோம்.

    ஏ. எஸ். ராமஸ்வாமி ஐயர் !

    ஆமாம் அவர் தான் எனது மாமனார்… இல்லை… எனது தந்தையின் மறைவின் பின்னால் எனது தந்தை எனும் ஸ்தானத்தில்இருந்தவர்.

    தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார் திருநகரி எனும் ஊரில் 1927ம் ஆண்டு சுப்பிரமணியம் ஐயருக்கும், அம்மாளு அம்மாளுக்கும் மூத்த மைந்தனாகப் பிறந்தார்.

    அந்நாளில் தங்கப்பதக்கம் பெற்று சட்ட வல்லுநராகத் தேறி அரசாங்கப் பணிபுரிந்த சுப்பிரமணி ஐயரின் மறைவுக்குப்பின்னால் தனது தம்பியுடன் தாயாரின் ஊரான கடையநல்லூரில் அமைந்துள்ள கிருஸ்ணாபுரத்தில் வாழ்ந்து வந்தார்.

    வாழ்வில் பல சிரமங்களுக்கு ஊடாக, தனது விடாமுயற்சியாலும் தாயாரின் அன்பான வழிகாட்டுதலினாலும் கல்வியில்தேர்ச்சி பெற்று இந்திய வெளிநாட்டுச் சேவையான Indian Foreign Service இல் பணியாற்றினார்.

    பிரெஞ்சு, ஸ்பானிய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்த இவர் இந்திய வெளிநாட்டுத் தூதரகங்கள் பலவற்றில் உயர்அதிகாரியாகப் பணியாற்றினார்.

    1987ம் ஆண்டு தனது பணியிலிருந்து ஓய்வு பெற்றார். 1994ம் ஆண்டு தனது மனைவியைப் பறிகொடுத்தார்.

    தனது அந்திமக்காலம் வரை தனது கால்களிலேயே நிற்க வேண்டும் என்பதில் மிகுந்த சிரத்தை கொண்டிருந்தார்.

    எனது எழுத்துக்களை மிகவும் விரும்பிப் படிக்கும் அவரின் வேண்டுகோள் எனது படைப்பான தமிழ்ப்பூங்கா எப்போதும்வெளிவரவேண்டும் என்பதுவே.
    எனது நூல்களில் ஒன்றான “கண்ணதாசன் ஒரு காவியம் ” வெளியீட்டின் போது என்னால் பங்குபெற முடியாத போது எனதுசார்பாக அவ்விழாவில் கலந்து கொண்டு மறைந்த அமரர் கே . பி. பாலச்சந்தர் அவர்களிடமிருந்து அந்நூலைப் பெற்றுச்சிறப்பித்தார்.

    பொறுமைக்கு ஒரு முழு உதாரணமாகத் திகழ்ந்தவர் எனது மாமனார். நான் அவரது மகளைக் கைப்பிடித்த நாளிலிருந்துஅவர் மறைந்த காலம் வரை எமக்கிருவரிடையே இருந்த அன்பில் எப்போதுமே மாசு படிந்ததில்லை.

    இதனை அவர் மறைவதற்கு சிலநாட்களுக்கு முன்னால் தொலைபேசியில் அவர் என்னிடம் கூறியபோது என்னையறியாமல் என் கண்களில் இருந்து நீர் வழிந்தோடியது.

    தன் தந்தையின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தவள் என் மனைவி மைதிலி. ஒவ்வொரு வருடமும் இங்கிலாந்திலிருந்து மூன்றுவார கால விடுமுறையில் ஓடோடிச் சென்று தன் தந்தைக்கு தன் கைகளினால் அவருக்குப்பிடித்தவற்றை ஆக்கிக் கொடுப்பதையே தனது முக்கிய பணியாகக் கொண்டிருந்தாள்.

    இம்முறையும் கடந்த ஜனவரி மாதம் எனது மாமனாருடன் ஒரு மூன்று வார காலம் மிகவும் மகிழ்வாகக் களித்திருந்தோம்.

    தெய்வத்துடன் இணைந்து விட்ட பொறுமைத் திலகமாம் என் மானாரின் ஆத்மசாந்திக்காய் பிரார்த்திப்பதோடு அவரின்அன்பான ஆசியுடன் வழிகாட்டுதலும் தொடர்ந்து எனக்குக் கிடைக்க வேண்டும் என அவர்தம் பாதம் பணிந்துவேண்டுகிறேன்.

    20150421_183546(0)

    பொறுமைக்கு உதாரணமாய் திகழ்ந்த
    புண்ணிய சீலனாம் அயோத்தியின்
    இராமபிரானின் வழியில்
    பொறுமையின் பெருமையைக் காத்த
    இராமஸ்வாமியின் மருமகனாய்
    கிடைத்திட்ட பாக்கியத்தை நானும்
    கிளர்ந்திட்ட உணர்வுகளின் வழி
    உணர்ந்திட்ட பொழுதென்று அறிந்தேன்
    புலர்ந்திட்ட நாட்கள் அனைத்தும்
    புகட்டிட்ட பாடங்கள் எல்லாம்
    புகுத்திட்ட அனுபவங்கள் எனக்கு
    கற்பித்த பாடங்கள் ஆயிரம்
    தெரிந்திட்ட நிகழ்வுகளில் நானும்
    தெளிந்திட்ட பொழுதில் எல்லாம்
    மறைந்திட்ட என் மாமனார் மூலம்
    மனதினில் உறைந்திட்ட அறிவு ஆயிரம்
    எதையும் தாங்கிடும் இதயம் என்பார்
    அதையும் வாழ்வில் நான் கண்டிட்டது
    இருவராம் என் தந்தையும் மாமனாரும்
    தந்தை எனும் ஒளி வாழ்வில் மறைந்து
    இருளான மனம் மீண்டும் ஒளி கொண்டது
    மாமனார் எனும் பெரு ஒளிவிளக்கினால்
    இன்றதுவும் அணைந்தது என்று நான்
    மயங்கிய பொழுது எங்கிருந்தோ அசரீரியாய்
    எப்போதும் என்றும் உன் மனதில் ஒளியாய்
    நாமிருப்போம் என்று இருகுரல் ஒலியாய்
    மாமனாரும் தந்தையும் கூறினரே
    அன்பினுமினிய மாமனாரின் பாதம் பணிந்து
    ஆசி வேண்டியே அவரின் ஆத்மசாந்திக்காய்
    பிரார்த்திக்கிறேன்.

     

     

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share