Tag: திருச்சி புலவர் இராமமூர்த்தி

  • சேக்கிழார் பாடல் நயம் – 107

    சேக்கிழார் பாடல் நயம் – 107

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    யானையும், முத்தும்  சிறந்த   மலையாள நாட்டில் தோன்றிய  விறன்மிண்டர் சிவத்தலங்கள் தோறும் சென்று வழிபாடு செய்தவண்ணம் திருவாரூருக்கு  வந்தார். அங்கே அடியார்கள்  பலரும் வழிபாடு செய்யும் தேவாசிரய  மண்டபத்திலே அவர்களொடு  கலந்து மகிழ்ந்தார்.

    அவர் அடியார்களுடன் இணைந்து மகிழ்ந்திருக்கும் போது, அம்மண்ட பத்தின் வழியே சுந்தரமூர்த்தி சுவாமிகள் இறைவனையே  காணும் குறிக்கோளுடன் வழியில் இருந்த சிவனடியார்களைக்  காணாமல் சென்றார்.

    அவ்வாறு அடியாரை வணங்காமல் சென்ற சுந்தரரை, விறன்மிண்டர்  ‘’அடியாரைப்  பேணாமல் உள்ளே சென்றவர்  யாரானாலும் சிவபெருமானுக்குப் புறம்பானவரே !’’ என்று விலக்கி வைத்தார். பின்னர் இறைவனே  சுந்தரரிடம் அடியாரைப் பேணி வணங்காத செயல் அடியார் நெறிக்குப் புறம்பானது. என்று உணர்த்தினார், இவ்வாறு இறைவன் திருவருளைப் பெற்ற  விறண்மிண்டரின் உறுதியான சிவப்பற்றினை வேறு யார் பெறுவார்கள் என்ற சிறப்பைப் பெற்றார் .  இதனைச்  சேக்கிழார் ,  புகழ்ந்து பாடினார்.

    அருட்டிரு நிறைந்த பெருமை எந்நாளும் விளங்குகின்ற தேவாசிரிய மண்டபத்திற் பொலிந்து பொருந்தி வீற்றிருக்கின்ற சிவனடியார்களைத் தொழுது, அவர்கள்பால் வந்து அணையாமல் ஒரு புறமாக ஒதுங்கிச் செல்லும் வன்றொண்டன் புறகு என்று உரைப்பதற்குச் சிவபெருமானருளிற் பெருகுகின்ற பெரிய பேறு பெற்றார் இந்நாயனார். அதுவேயுமன்றி மேலும் பெறுதற்கமைந்து நின்றாரானார்,  மேலும் பாடினார் .

    சேணார்  மேருச்   சிலைவளைத்த  சிவனாரடியார்  திருக்கூட்டம்
    பேணாதேகும்   ஊரனுக்கும் , ‘’பிரானாந்தன்மைப் பிறைசூடிப்
    பூணாரரவம்  புனைந்தார்க்கும்  புறகு!’’ என்றுரைப்ப மற்றவர்பால்
    கோணா வருளைப்  பெற்றார்  மாற்றினியார் பெருமை  கூறுவார்

    என்று பாடினார். இதன் பொருள்

    சேணிடையிலும் உயர்ந்து நிறைந்த மேருமலையை வில்லாகவளைத்த சிவபெருமானடியார் திருக்கூட்டம் பேணாது செல்லும் நம்பியாரூரருக்கும் அவரை ஆண்ட தலைவராந் தன்மையுடைய, பிறையைச் சிரத்திற் சூடிப் பாம்பை அணியாக அணிந்த பெருமானுக்கும் புறகு என்றுரைப்ப மற்ற அவர்களிடமே கோணாத அருளைப் பெற்றார். இதனின் வேறு பெருமையும் யாவர் சொல்ல வல்லார்?

    என்பதாகும்.. “அகில காரணர் தாள்பணி வார்கடாம், அகில லோகமு மாளற்குரியர்“ ஆதலால் சிவப்பிரானைப் பேணி வணங்கும் விறன்மிண்டருக்குத் தலைமைப்பேறு கிட்டியது. இவ்வாறு அடியாரையும் ஆண்டவனையுமே புறகு என்று உரைக்கும் வலிமை பெற்றார் அவர். இவர் அவ்வாறு சினம் கொண்டதும் இறைவனையும் புறகு எனது தள்ளியதும் இறைவனின் நாடகமே யாகும்

    இறைவரும் உலகம் உய்யத்திருத்தொண்டத்தொகையினைத் தோற்றுவிப்பதும், நம்பிகளைத் திருக்கூட்டத்தினுட் கூட்டுவிப்பதும் ஆகிய இரண்டினையும் தாமே செய்வதினும் இந்நாயனாரைக் கொண்டு செய்விப்பது தக்கதென்று திருவுளம் பற்றி இவ்வாறு இவர் சொல்லுமாறு செய்தனர்     என்று உரையாசிரியர்  கூறுகிறார்.

    விறண்மிண்டருடைய செயலால் , அடியார் பெருமையை சுந்தரர் அறிந்து கொண்டார். இறைவனே சுந்தரருக்கு, ‘’தில்லைவாழ்அந்தணர்தம்  அடியார்க்கும்  மடியேன்’’ என்று அடியெடுத்துக்  கொடுத்தார். பின்னர் அவரைத் தொடர்ந்து பலரும் திருத்தொண்டர் பற்றிப் பாடினர். சேக்கிழார்  பெருந்தகையும் அவற்றை ஒட்டியே இப்புராணம் பாடினார்.  இதனால் விறன்மிண்டர் எஞ்ஞான்றும் எவ்விடத்திலும் வளையாத திருவருளைப் பெற்றார் என்பதைச் சேக்கிழார் ‘’;கோணா அருளை பெற்றார் ‘’ என்ற தொடரால் குறிக்கிறார்.

    இப்பாடல் விறன்மிண்டர் சினத்தால்  அவர்  பெருமை,  இறைவன் பெருமை, சுந்தரர் பெருமை, திருத்தொண்டர்  திருவந்தாதி பாடிய நம்பியாண்டார் நம்பி  பெருமை, சேக்கிழாரின் பெருமை ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய சிறப்புடையதாயிற்று.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 106 (அப்பொன்)

    சேக்கிழார் பாடல் நயம் – 106 (அப்பொன்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    பாடல்:

    அப்பொன்  பதியின்   இடைவேளாண்   குலத்தை  விளக்க  அவதரித்தார்
    செப்பற் கரிய பெருஞ்சீர்த்திச் சிவனார் செய்ய   கழல்பற்றி
    எப்பற் றினையும்  அறஎறிவார்; எல்லை  தெரிய  ஒண்ணாதார்
    மெய்ப்பத்   தர்கள்பால்   பரிவுடையார்  எம்பி   ரானார்;  விறன்மிண்டர்

    பொருள்:

    அந்த அழகிய பதியிலே வேளாண் குலத்தை விளக்கம் செய்ய அவதரித்தார்; சொல்லுதற்கரிய பெருஞ் சீர்த்தியுடைய சிவபெருமானாரின் சேவடிகளையே பற்றுக்கோடாகக் கொண்டு ஏனைய எல்லாப் பற்றுக்களையும் அறஎறிவார்; எல்லையிட வொண்ணாதார் உண்மையடியார்களிடத்து அன்புமிக உடையவர்; எமது பெருமானாராகிய விறன்மிண்டர்.

    பொன்பதி – பொன் -அழகு. திருவுடைமையுமாம். இவற்றின் காரணம் முன்பாட்டில்  உரைக்கப்பெற்றது.

    வேளாண் குலத்தை விளக்க  – என்ற தொடர்  வேளாளர் என்ற குலம் இவர் அதனுள் வந்தவதரிக்கப் பெற்றமையால் விளக்கமடைந்தது. வேளாளர் குலத்திற்கு முன்னரிருந்த அளவிளாத பெருமைகளினும், திருத்தொண்டத்தொகையை உலகம் பெற்றுய்தற்குக் காரணராயிருந்த இவரைத் தன்னுட் பெற்றது அக்குலத்திற்கு மிகப் பெருமையும் விளக்கமும் தந்தது என்க.

    “ஆசின் மறைக்,
    கைப்படுத்து சீலத்துக் கவுணியர் கோத்திரம் விளங்கச்,
    செப்பு நெறி வழிவந்தார் சிவபாத விருதயர்“       என்றும்,

    “கானவர் குலம் விளங்கத் தத்தைபாற் கருப்பம் நீட“ என்றும் சேக்கிழார்  கூறிய   திருவாக்குக்கள்  குலமாண்பை சிறப்பித்தமை  காண்க.

    செப்பற்கரிய பெருஞ் சீர்த்திச் சிவனார் –  என்ற தொடர்  ‘செப்பற்கரிய’  அதாவது , “உலகெலா  முணர்ந்   தோதற் கரியவன்“ என முதற்கண்ணே ஒதியதை  நினைவூட்டுகிறது.

    “யதோ வாசோ நிவர்த்தந்தே“ – (எதினின்றும் வாக்குக்கள் திரும்பிவிடுகின்றனவோ) – என்னும் பொருள் காட்டும்  உபநிடதத்தால்   செப்பற்கருமை உணரப்படும். பெரும் – மிகச்சிறியதும் செப்பரிதாம்   ஆதலின் அதனை  விலக்க, ‘பெரும்’ என்றார்.

    சீர்த்தி – இச் சீர்த்திகளை மறைகள் பற்பலவாறு பேசித் திளைத்துணர்த்தும் சிவம் என்ற சொல் இருத்தல் – கிடத்தல் எனப் பொருள் தருதலால், எங்கும் இருப்பது – எங்கும் பதிந்து கிடப்பது எனப் பொருள் கொண்டு சிவபெருமானது எல்லா மறியுந் தன்மை, ஒன்றாயும் வேறாயும் உடனாயும் இருக்குந் தன்மை முதலிய பல சீர்த்திகளையும் மறைகள் பேசும். வேதங்களுள்ளே திருவுருத்திரமும்,

    “மண்ணாகி விண்ணாகி மலையு மாகி
    வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகி“,

    “மண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை
    மலையல்லை கடலல்லை வாயு வல்லை“,

    என்பன முதலிய எண்ணிறந்த தமிழ் மறைகளும் இறைவன் எல்லாமாய் அல்லனுமாய் நின்றருளும் இச்சீர்த்தியை மிக விதந்து பேசுகின்றன. இறைவன் உயிர்களுக்கருள்புரியும் சீர்த்தியே அவனது கீர்த்திகளுள் மிகச் சிறந்ததாம். மாணிக்கவாசக அடிகள் கீர்த்தித் திருவகவலுள்ளே இதனை விரித்துப் பாராட்டியிருத்தலைக்  கண்டு தெளிக..

    இனி வேதம்,  முன்னுரையாகப்  பிரமன் விட்டுணு முதலிய தெய்வங்களின் புகழ்களையும் பேசும். ஆனால் அவை, இறைமைக் குணங்கள் முற்றும் உடையவரல்லாதாரை அவையுடையரெனப் பேசுதலால், பொருள் சேராவாம். அவை அவற்றினும் வலிமையுடைய கூற்றுக்களாற் பாதிக்கப்பட்டு இறுதியில் சிவனது சீர்த்தியே பெரியதாய்ப் பேசப்பெறும்.

    பிரமனை, அயன் – அசன் – பிறப்பில்லாதான் என உபசரிக்கும் கூற்று, பிரமன் விட்டுணு உந்தியிற் பிறந்தான் என்றபோது பொருள் சேராப் புகழாயொழியும். அவ்வாறே விட்டுணுவைப் பேசும் நாராயண உபநிடதம், நாராயணன் ஆத்மா – ‘’அவர் சத்தியம் – அவர் முதலில் இருந்தவர் – அவரே இந்திரன்’’ – என்றெல்லாம் புகழும். ஆயின் முடிவில் நாராயணன் ஆத்மா – அவர் சத்தியம் – அவர் முதலில் இருந்தவர் – அவரே இந்திரன் – என்றெல்லாம் புகழும். ஆயின் முடிவில், நாராயண:பரோத்யாதா – சுவேதாசுவதரம், அவர்தியானிக்கிறவர்;சிவனொருவனே தியானிக்கத்தக்கவர்; தியானிக்கப் படுபவர். சிவ ஏகோத்யேம்: (அதர்வசிகை) என முடிக்கின்றபோது முன்னர்க் கூறிய புகழ்கள் பொருள் சேராவாம்.

    “பையஞ் சுடர்விடு நாகப் பள்ளி கொள் வானுள்ளத் தான்“, “திருமாலகத்தான்“, “தொழப்படுந் தேவர் தொழப்படுவானை“, “சேர்ந்தறியாக் கையான்“, “தன்னாற் றொழப்படுவா-ரில்லை தானே“ என்பனவாதி எண்ணிறந்த தமிழ் மறைகளும் இக்கருத்தே பற்றியன.

    (இவை திரு.க. சதாசிவ செட்டியா ரவர்கள் உரைக் குறிப்புக்கள்.)

    சிவனார்- ஆர் விகுதி உயர்வு குறித்தது. செய்ய கழல்- சேவடி “அரவணையான் சிந்தித் தரற்றும்படி“ என்பது முதலாகத் திருவடித் திருத்தாண்டகத்திற் கூறியன காண்க.

    கழல்- ஆகுபெயர். திருவருள் நிறைவே திருவடியாகக் கூறப்பெறும். இறைவனுக்குத் திருமேனி கற்பிக்கப் பெறும்போது திருவடியும் கற்பிக்கப் பெறுமென்க. திருவடியே சிவசத்தியாம் – அதுவே தாரகமாவது.

    செய்ய – செம்மையுடைய – வீடுபேறுதரும் – என்ற பொருளில் வந்தது. செய்ய -சிவந்த எனக் கூறலுமாம். எல்லாரும் மலரிட்டு அருச்சித்து வணங்குதலால்  சிவந்தது.

    “தேவரெல்லாந் தொழச்சிவந்த செந்தாள் முக்கட் செங்கரும்பே“- தாயுமானார்;

    “நின்போ லமரர்கள் நீண்முடி சாய்த்து நினைந்துகுத்த,
    பைம்போ துழக்கிப் பவளந் தழைப்பன“ (அப்பர் – திருவிருத்தம்).

    அருச்சித்த மலர்களினின்றும் தேன்பாய்ந்து சிவந்தது என்பதுமொரு கருத்து.

    “சிறந்து வானோர் ,
    இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற
    வின்மலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி,
    நனைந்தனைய திருவடி“ என்பது  திருமுறை .

    கழல்பற்றி எப்பற்றினையும் அற எறிவார் – பற்றத்தக்கது கழலேயாம் என்பது. அதனைப் பற்றுவதும் பிற எல்லாப் பற்றுக்களும் அறுதற்கேயாம். பிற பற்றுக்களற்ற போதே திருவடிப் பற்று உளதாம். திருவடிப் பற்று உளதாகப் பிற பற்றுக்கள் அறும். இவ்விரண்டும் திருவருளால் உண்டாகவேண்டும் என்க.  “முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் பற்றா பாவமே“ என்ற தேவாரமும் காண்க.

    எப்பற்றினையும்- யான் எனது என்ற அகப்பற்று, புறப்பற்றுக்கள்  அனைத்தையும்; தேவலோக நாகலோக பூலோகப் பற்றுக்களையும்.

    “போகம்வேண்டிவேண்டிலேன்புரந்த ராதி இன்பமும்,
    ஏக நின் கழலிணை யலாது  இலேன்“ என்பது திருவாசகம்.

    கழற்பற்று ஒன்றொழித்து வேறு எல்லாப் பற்றுக்களையும் எப்பற்றினையும் என்றதனால் “வீடும் வேண்டா விறலின் விளங்கினார்“, “ஈசனோ டாயினு மாசை யறுமின்“ என்றபடி நிராசையாகிய தொண்டர் நிலையுங் கொள்ளப்பெறும்.

    இந்நாயனார் இறைவனிடத்து வீடும் வேண்டா விறலை உடையராய், அவனையும் புற கென்ற திறத்தைக் காண்க. அற எறிவார் – அற – அறவே – முழுதும். அறும்படியாக என்றலுமாம். எறிவார் – எறிவாராயினர்.

    எல்லைதெரிய ஒண்ணாதார்  என்ற தொடர்,  பொருளின் அளவால் அளக்க லாகாதவருடைய. முன் செப்பற்கரிய என்றது உரையின் அளவால்  அளக்கலாகாமை குறித்தது.  இதனை நாயனார்க்குக் கூட்டி, அளவிடமுடியாத பெருமையுடையவர் என்றுரைப்பதும்  உண்டு. எல்லை தெரிய ஒண்ணா இறைவன் கழல்பற்றியவராதலின் இவரும் அத்தன்மையினரே.

    மெய்ப்பத்தர்கள் – உண்மை யன்பர்கள். மெய்ப்பொருணாயனார் போலல்லாது இந்நாயனார் உண்மை யன்பர்கள் பாலே பத்தி செய்வார். ஆயின் இவர் வேடத்தைச் சிந்தை செய்யாரோ எனின், வேடத்துடன் உண்மை யன்பும் உடன்சேர்த்தி எண்ணி அன்பு செய்வார் என்க.

    இது இவரது சரிதக் குறிப்பாகும். நம்பியாரூரரையும் அவரை ஆட்கொண்ட பெருமானையும் புறகு என்று கூறவல்ல விறல் படைத்தவராதலின் இவரது திருவுள்ளம் மெய்ப் பத்தர்கள் பாற் பரிவுடையது என்றார். பரிவுடைமை – அன்பு பூண்டொழுகுதல்.

    எம்பிரானார் – எமது பெருமானார். தலைவர் என்று ஆசிரியர் இங்குக் குறித்ததன் காரணம்இப்புராணப்  பாட்டிற் காண்க. இப்புராணத்திற்கு முதனூலாகிய திருத்தொண்டத் தொகை இவராலே உலகம் பெறுதற்குக் காரணமாயிற்று என்ற நன்றி கருதி வணங்கினார் என்க. அதனாலே தொண்டர் கூட்டமும் அவர் புகழும் உலகெலாம் எங்கும் நிலவி நின்றதென்பதுமாம்.

    அவதரித்தாராகவும், எறிவாராகவும்,   உடையாராகவும்,  பிரானாராகவும்   விளங்கிய  விறன்மிண்டர் என முடிக்க.

    நாயனாரது பெயரை முதலிற் கூற நேர்ந்தபோது, இவ்விடத்து “மெய்ப்பத்தர்கள்“ அடியின் அடியில் ஆசிரியர் அமைத்துக்காட்டி, நாயனாரது உண்மை நிலையைக் குறித்த அழகு காண்க. மெய்ப்பத்தர்கள்பாற் பரிவுடைமையே “கூட்டம் பேணா தேகும் ஊரனுக்கும் புறகு“ என்று நாயனார் கூறக் காரணமாயிற் றென்பதும், இதுவும் இச்சரிதக் குறிப்பாம் என்பதும் இங்கும் காண்க. வரும் பாட்டுக்களிலும்   காண்போம்.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 163 (அருமறை)

    சேக்கிழார் பாடல் நயம் – 163 (அருமறை)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு:

    திருத்தலையூரில் வாழ்ந்த  சிவனடியார்  தம் குல வழக்கப்படி நாள்தோறும் மூன்று வேளையும் உருத்திரனாகிய  சிவபெருமானைத் துதிக்கும் உருத்திர மந்திரத்தை ஓதி வந்தார். அவ்வகையில் இவர் ஓதிய மந்திரத்தைச்  செவியுற்ற  சிவபெருமான்  மகிழ்ந்தார், அதனைச் சேக்கிழார்,

    அருமறைப்  பயன் ஆகிய உருத்திரம் அதனை
    வரும் முறைப் பெரும்  பகலும் எல்லியும் வழாமே
    திருமலர்ப்  பொகுட்டு  இருந்தவன்  அனையவர் சிலநாள்
    ஒருமை உய்த்திட  உமையிடம்  மகிழ்ந்தவர் உவந்தார்

    என்று பாடினார். இப்பாடலின் பொருள், அரிய மறைகளின் பயனாகிய உருத்திரத்தை வருமுறையில் பெரும்பகலிலும் மாலையிலும் தவிராமல் தாமரையினது பொகுட்டில் இருக்கும் பிரமதேவனைப் போன்ற பசுபதியார் சிலநாள் ஒன்றுபட்ட வுணர்வுடன் இவ்வாறு கணித்தபோது, உமையம்மையாரை இடப்பாகத்தில் மகிழ்ந்து வைத்த சிவபெருமான் உவந்தனர்.

    விளக்கம்:  அருமறைப்பயன் ஆகிய உருத்திரம்-  உருத்திரனே பரமன் என்று காட்டும் சிவமந்திரத்தைத் தன் னடுவுட்கொண்டு விளங்குதலால் மறைப்பயனாகிய உருத்திரம் என்றார். அருமறை என்றது ஞானத்துக்கு முதலாயிருக்கும் தன்மைபற்றி. ஞானத்தின் முடிந்தநிலை திருவுருத்திரத்திற் பெறப்படுவதனால் அதனை மறைப்பயன் என்றார்.

    மறைகள், மந்திரம் – பிராமணம் -உபநிடதம் என்று மூன்று பாகுபாடுபெறும். சாமானிய காமியாதிகளைப் பயக்கும் யாக முதலியவற்றுக்கு உதவுவன மந்திரம் என்ற பாகம் எனவும்,இந்த யாகாதிகளுக்குரிய சடங்குகளை வகுப்பன பிராமணம் எனவும், இறைவனது இலக்கணங்களை எடுத்துச்சொல்வன உபநிடதங்கள் எனவும் கூறுவர்.

    உருத்திரமானது மந்திரமாகியும், வேள்வித்தீயைத் தன்னுளடக்கிக் கொண்டதாயும் உள்ளதோடு, சிவனே “தனிமுதலாம் பரன்” என்று சிவனது முழுமுதற்றன்மையும் கூறுவதனால் அது வேதங்களின் மூன்று தன்மைகளையும். தன்னுட்கொண்டு விளங்குதல்பற்றி அதனை அருமறைப்பயன் என்றார் என்பதுமாம். அன்றியும், ஆன்மாக்கள் பக்குவபேதத்திற்கேற்பப் பலபல தெய்வங்களை வழிபடுவர்; அவ்வாறு வழிபடப்படும் இந்திரன், அக்கினி, யமன், பிரமன் முதலிய பிற எல்லாத் தேவர்களையும் எடுத்து ஓதி, முகமனால் அவர்களுக்கு வழிபாடு வேதத்தினுட் கூறப்படும்; ஆயினும், இம்மந்திரத்தினை இதயத்தில் வைத்துப் போற்று முகத்தால் முழுமுதல்வன் சிவனேயாம் என்ற உண்மையைத் தேற்றம்பெறவேதம் எடுத்துக் காட்டுவதனாலே இது மறைப்பயனாயிற்று என்றலும் பொருந்தும்.

    அருமறைப்பயனாகிய உருத்திரம் – 1. ஸ்ரீருத்ரம் அல்லது திருவுருத்திரம் எனத் தமிழில் வழங்கப்படும். ஸ்ரீருத்ர ப்ரச்னம், ஸ்ரீருத்ரசூக்தம், ஸ்ரீருத்ராநுவாகம் என்பன முதலிய பெயர்களால் ஆரிய மொழியில் இது வழங்கப்படும்.

    ஸ்ரீ அல்லதுதிரு என்பதற்குப் பார்வதிதேவி, சம்பத்து, காந்தி என்பன பொருளாம். இம் மூன்றனோடும் என்றும் கூடியிருத்தலின் சிவபெருமானுக்கு ஸ்ரீருத்ரன் எனப் பெயர் போந்தது.

    2. துன்பக் கடலினுட்பட்ட தொண்டரை எடுத்து இன்பக்கரைக்கண் ஏற்றுவதனால் சிவபெருமானுக்கு உருத்திரன் என்னும் திருநாமம் எய்திற்று, அப்பெருமான் தந்த திருக்குமாரர்களுக்கும், அவனடி யடைந்தோர்க்கும், அவனுடைய கணங்கட்கும், அவனுருவந் தாங்கினோர்க்கும் அவன் சார்பு பற்றி உருத்திரப் பெயர் வழங்கும்.

    3. முழுமுதற்கடவுளாகிய அவ்வுருத்திர மூர்த்தியின் எல்லா வடிவங்களும் கோரவடிவம், சாந்தவடிவம் என்னும் இரண்டனுள் அடங்கும். அவற்றுள் கோரவடிவம் பிறவிப் பெரும் பிணிக்கு மருந்தாக உள்ளது. சாந்தவடிவம் சிவத்துவ விளக்கந் தருவது. முன்னது திருவுருத்திர நமக மந்திரங்களால் துதிக்கப்படுவது. பின்னது சமக மந்திரங்களால் துதிக்கப்படுவது.

    4. வேதம் மூன்றனுள் நடுவிலுள்ள யசுர் வேதத்தின் ஏழு காண்டங்களுள் நடுக்காண்டத்துள்ளது திருவுருத்திரம். இது பதினோரு அநுவாகங்களாகிய உட்பிரிவுகளை யுடைமையால் ‘’உருத்திரை காதசநீ’’ என்றும் பெயர்பெறும். இப் பதினொரு அநுவாகங்களிலும், இருக்கு, யஜுஸ் ஆகிய மந்திரங்கள் கூறப்படும்.

    அவற்றுள் 1 – வது அநுவாகத்தில் 15 இருக்கும், 2 முதல் 9 வரை  அநுவாகங்களில் முறையே, 13, 17, 17, 15, 15, 16, 17, 19 யசுசும், 10 – வது அநுவாகத்தில் 12 இருக்கும், 11 – வது அநுவாகத்தில் 10 இருக்கும் 3 யஜுஸும் ஆக இருக்கு 37 – ம், யசுசு 132 – ம் ஆக மந்திரங்கள் 169 கூறுப்பட்டுள்ளன. இம்மந்திரங்களை நியமமாக ஓதும் முறை, தியானம், பயன் முதலிய எல்லாம் உருத்திர கற்பத்துள்ளும், ஏனைய கற்ப சூத்திரங்களிலும் விரிவாகக் காணலாம்.

    இவ்வுருத்திரப் பிரசினத்தின் பாடியம் இரண்டனுள் பட்டபாஸ்கரர் பாடியத்தும் அவை கூறப்படுதல் காணலாம்.

    5. பிரளயாகலராகிய ஆன்மாக்களுள் மலபரிபாக மெய்திச்,சிவபெருமானால் நிரதிகரணமாகத் தீக்கை செய்யப்பெற்று, முத்தராகிப், பல்லாயிரங்கணங்களுடன் கூடிய நூற்றுப் பதினெட்டு உருத்திரருள், நிவிர்த்திகலையின் பிருதிவிதத்துவ அண்டங்கள் ஆயிரகோடியினும் அமைந்த நூற்றெட்டுப் புவனங்களுள், புறத்தேம் கிழக்கு முதலிய பத்துத் திசையினும் ஒவ்வொரு திசைக்கும் பதின்மராக வைகும் புவன பதிகளாகிய உருத்திரர் நூற்றுவர்க்கும் அவர் கணங்கட்கும் வணக்கங்கூறி, இவர் அனைவரையும் பரிசனங்களாகவுடைய முழுமுதலாய்ச் சாந்தியதீத கலாபுவனாந்தம் முழுதும் யாவையும் இறுதியுறச் சங்கரிக்கும் மகாருத் திரனாகிய சிவபிரானுக்கு வணக்கங்கூறிப், பிறவிப் பெரும்பிணித் துன்பவெள்ளக் கடல் நீந்துங் கருத்தே மிக்குச் சாந்தி வேண்டிக்கோடலின் அருமறைப் பயனாகிய திருவுருத்திரம் ‘’சதருத்திரீயம்’’ எனவும் பெயர்பெறும். இங்குக்கூறிய உருத்திரர் பெயர் முதலியனவும் பிறவும் ஸ்ரீ பவுட்கராகம விருத்தியில் பசுபடலத்தின் அத்துவப் பிரகரணத்திற் காண்க.

    “தைத்திரீய சாகையின் உருத்திரப் பிரசின முடிவிலே அவ்வத்திக்கி னிருப்போராகிய இவ்வுருத்திரர்கள் பப்பத்து எண்ணிக்கையோடும் நமஸ்காரத்தோடும் சுருக்கமகக் குறிக்கப்பட்டனர்” என அப்பிரகரண முடிவில் கூறியதும் இங்கே சிந்திக்கற்பாலது.

    6. வேதம் நான்கினும் மெய்ப்பொருளாகிய திருவைந்தெழுத்து இத்திரு வுருத்திரத்துள் இருத்தலின், இதனை வேத புருடனுக்குக் கண்ணாகவும், திருவைந்தெழுத்தைக் கண்மணியாகவும் பெரியோர் கூறுப. நிற்பனவும் நடப்பனவுமாகிய உலகப்பொருள் அனைத்தினும் இறைவன் பகுப்பின்றி அவையேயாய்க் கலந்துநிற்றல் பற்றி, இறைவனை விசுவரூபனாகவும் விசுவேசனாகவும் புகழ்ந்து வணக்கங் கூறும்.

    இத்திருவுருத்திரம்.1 வருமுறை – முன்சொன்ன அம்முறையாகிய நியதியிலே. பெரும்பகல் – உச்சி வேளை வரையுள்ள சிறுபொழுது என்ற  காலப்பகுதி, எல்லி- மாலை. “அல்லும் பகலும்” என்றது வகை நூல்.

    “அந்தியு நண்பகலு மஞ்சு பதஞ்சொல்லி” என்ற நம்பிகள் தேவாரங் காண்க.

    வழுவாமே என்ற சொல்  அன்பாலும், சொல்லாலும், செயலாலும் தவிர்தலிலராகி. என்பதைக் குறித்தது.

    திருமலர்….அனையவர் – திருமலர் – தாமரை –  “பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை” “பூவெனப் படுவது பொறிவாழ் பூவே”. பொகுட்டு – கொட்டை. மலரில் இருந்தவன் – பிரமன். செங்கமலப் பொய்கையுள் மேவியிருத்தலாலும், வேத மோதுதலாலும் பிரமனைப் போன்றவர் என்றார்.

    சிலநாள் என்ற தொடர்  இந்தக் கடுந்தவத்தை அவர் நீண்டகாலம் செய்யவிட்டுத் தாழ்க்காதபடி இறையவர் சில நாட்களிலே மகிழ்ந்து அருள் புரிந்தனர் என்பதைக்க குறித்தது.

    ஒருமையுய்த்திட – மனவொருமைப் பாட்டுடன் செலுத்த. வழுவாமே – உய்த்திட என்று கூட்டுக. உய்த்தல் – செலுத்துதல்.

    உமை இடம் மகிழ்ந்தவர் – இடம் – இடப்பாகம். உமை – சிவனருள்.

    உவந்தார் – மகிழ்ந்து ஏற்று அருள் புரிந்தனர்.

    1இவை ஸ்ரீமத் முத்துக்குமாரத் தம்பிரான்சுவாமிகள் அன்புடன் எழுதிய குறிப்புக்கள்.

    இப்பாடலால் வேதத்தின்  பகுதியாகிய  உருத்திர மந்திரத்தின் பொருளும், வகையும், இதனை ஓதுதலால்  உண்டாகும் பயனாகிய  ‘’சிவதரிசனம், சிவலோகப்பிராப்தி’’  ஆகியவற்றை  நாம் உணர்ந்து கொள்கிறோம்!

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் 162 (பகர்ந்துலகு)

    சேக்கிழார் பாடல் நயம் 162 (பகர்ந்துலகு)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி 

    மும்மையால்  உலகாண்ட சருக்கம் 

    19 திருநாளைப்  போவார்  புராணம் 

    வரலாறு

    அடுத்து  வருபவர் திருநாளைப்போவார்  நாயனார். இவரைப்பற்றி சேக்கிழார் கூறிய வரலாறு, பிற்காலத்தில் மாற்றங்களுடன் அமைந்துள்ளது. இங்கே பத்தொன்பதாம் நாயனாராகிய திருநாளைப்போவார் வரலாறு புராணமாகக் கூறப்பெறுகிறது. இந்நாயனார் தோன்றிய ஆதனூர் என்ற ஊரின் சிறப்பை சேக்கிழார் கூறுகிறார்.

    பாடல் 

    பகர்ந்துலகு சீர்போற்றும் பழையவளம் பதியாகுந்
    திகழ்ந்தபுனற் கொள்ளிடம்பொன் செழுமணிக டிரைக்கரத்தான்
    முகந்துதர விருமருங்கு முளரிமலர்க் கையேற்கும்
    அகன்பணைநீர் நன்னாட்டு மேற்கானாட் டாதனூர்.

    பொருள்

    விளக்கங்கொண்ட நீரினையுடைய கொள்ளிடம் என்ற ஆறு, பொன்னையும் செழுமணிகளையும் அலைகளாகிய கையினால் முகந்துதர இருபக்கங்களிலும் உள்ள தாமரைகளின் மலர்க்கையினாலே அவற்றைஏற்றுக்கொள்கின்ற இடமகன்ற வயல்களையுடைய நன்மை தருகின்ற நீர் நாட்டிலே மேற்கானாட்டின் உள்ள ஆதனூர் என்பது; உலகம் அதன் சிறப்பினை எடுத்துச்சொல்லித் துதிக்கின்ற பழைமையாகிய வளத்தையுடைய வூர்.

    விளக்கம்

    சீர்பகர்ந்து உலகம் போற்றும் என்பது பொருள். அத்திருப்பதியின் சீர் இந்நாயனாருக்கு முற்காலத்தில் போற்றப்படாமல், அவர் அருள்பெற்ற பின்னரே பேசப்படுவதனால்சீர் என்பதனை முன்வைக்காது பின்வைத்தோதினார். சீர் என்ற சொல்  நந்தனார் அவதரித்து வாழ்ந்து திருவருள் பெறநின்ற சிறப்பைக் குறித்தது..

    பழைய வளம்பதி – என்ற தொடர் , நந்தனார் அவதரித்ததன் பின், சீர்,வந்ததேயாயினும் அதன் வளம் பழைமையுடைத் தென்பது. பழைய வளமாவது கொள்ளிடத் திருநதியின் நீர்வளத்தாலாவது என்பார், அதனை  பொன் – மணி – முளரி – பணை – நீர் – நன்னாடு என்றிவற்றால் விளக்கினார்.

    பதி ஆகும் – என்ற தொடர் இதுவே உயிர்களுக்கு ஆகுவது எனவும்,  ஏனை வெறும்உலக வளம்பதிகள் இத்தகையன ஆகா என்பதும் குறிப்பு.

    திகழ்ந்த புனல் கொள்ளிடம் – என்ற தொடர் கொள்ளிடத் திருநதியானது காவிரியினது மிக்க நீரினைக் கடலினுட் செல்ல விடுத்தற்கமைந்த வடிகால் ஆறு, பெரிய அணையின்கீழ் வடியும் ஊற்றுநீர் இதனுள்ளே செல்வதாதலின் எப்போதும் தெளிந்த நீரினையுடையது என்று குறிக்கத் திகழ்ந்தபுனல் என்றார்.  திகழ்ந்த என்பதற்கு இவ்வாறன்றி வெள்ளகாலத்தில மிகுதியாய்ப்போந்து விளங்கிய என்றுகூறுதலுமாம்.

    பொன் செழுமணிகள் – என்ற தொடர்  பொன்னையும் செழுமணிகளையும் குறித்தது .பொன்னும் மணிகளும்காவிரியினால் மலையினின்றும், வழியில் உள்ள நிலங்களினின்றும்அலைத்துக்கொண்டு வரப்பட்டன.. பொன்விளை மலைநிலங்களிற் போந்து பொன் கொண்டு வருதலிற் பொன்னி எனப்படும்.

    திரைக் கரத்தால் முகந்துதர – திரைக்கரம் – முகத்தலும் தருதலும் செய்தலால் திரையைக் கையாக உருவகம் செய்தார். முகந்து தர – எடுத்துக் கொடுக்க. உருவகத்தால் இயைந்த வினையை விரித்ததுக் காட்டியவாறு.

    “நீரிற் சுருட்டு நெடுந்திரைகள்” என்றபடி காற்றின் வேகத்தால் நீரின் பரப்பு உந்தப்பட்டுச் சுருண்டுமேலே எழும்; அவ்வாறு அது சுருண்டு எழும்போது நீரின் கீழே கிடந்த பொன்மணல் மணி முதலியவற்றை அள்ளிக்கொண்டு மேற்கிளம்பும்; பின்னர்க் கரையில் மோதிப்பரவும்போது அவற்றை அங்கு உதிர்த்துவிடும். இச்செயல்களையே  முகத்தலாகவும் தருதலாகவும் உருவகித்தார்.

    கொள்ளிடத்தின் இரு கரைகளிலும் அகன்ற வயல்கள் உள்ளன.அவற்றினுள்ளும் அங்குள்ள தடாகங்களினுள்ளும் தாமரைகள்பூத்துள்ளன. அத்தாமரைப் பூக்களினுள் கொள்ளிடத்தின் அலைகளால்  தரப்படும் பொன்னும் மணிகளும் சென்றுதங்கும் தோற்றம் தாமரைமலராகிய கைகளினால் பணை அவற்றை ஏற்கின்றது போன்றது என விரிவு செய்துகொள்க.

    மலர்க்கை – திரைக்கை என்றதற்குரைத்தபடி உரைத்துக்கொள்க. “வயல்புகு பொன்னி” என்றபடி காவிரியின் நீர் வயலுள்ளே வந்து புகுவதுபோலக் கொள்ளிடநீர் புகாது; வெள்ளம் பெருகும் காலத்தில் அலைகளால், நீர், கரைகளின் அயலின் வயல்களில் வீசப்படும் இயல்பு குறிக்கப்பட்டது.

    வள்ளன்மையுடையோர் தம் வழியிற்சென்றுகொண்டே தமது பொருள்களை வாரிஇறைத்து ஈந்து செல்லும் இயல்பும், அவ்வாறே அவ்வழியிலே நின்ற இரவலரும் தாந்தாம் இருந்த இடத்தைவிட்டுப் பெயராது தம் கைகளை விரித்திருந்து அவற்றுள் வீழ்வனவற்றைப் பெறும் இயல்பும் போலக் கொள்ளிடத்தின் திரைகள் பொன்மணிகளை வீச இருபுறமும் முளரிக்கைகளால் அகன்பணைகள் ஏற்றன என்ற குறிப்பும் காண்க.

    ஈதலும் ஏற்றலுமாகிய தற்குறிப்பேற்ற அணியின்சுவையும் கருதுக.

    நீர் நன்னாடு – என்றதொடர், நீர் நாடு என்று வழங்கும் சோழநாடு.நன்மைஎன்பது இங்கு ஏற்குமிடத்து வந்த இடைப்பிறவரல்.

    மேற்கானாடு – சோழநாட்டின் உள்நாடுகளுள் ஒன்று.கானாடு – கோனாடு – கானாட்டுமுள்ளூர் முதலியவை காண்க.

    ஆதனூர்- நந்தனார் அவதரித்த ஊரின் பெயர். ஆதனூர் -பதி ஆகும் – இது நாயனாரது திருவவதாரத்தினால் தன்
    சீரினை உலகு பகர்ந்து போற்றும் பதி ஆகும் பெருமைபெற்றது என்பது குறிப்பு.

    இப்பாட்டு, தன்மை, உவமை, உருவகம், தற்குறிப்பேற்றம் முதலிய பல அணிநலன்களும் விரவிக், குறிப்பு முதலிய பல உள்ளுறைகளுடன் விளங்கும் கவிநயம் காண்க.

    “உணர்வினின்வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்” என்றதற்கு இஃது ஒப்பற்ற இலக்கியமாய் விளங்குவதென்க.

    இப்பாட்டில் கொள்ளிடத்தின் கரையில்  அமைந்த வயல்களில் நீட்டிய தாமரைக் கைகளில் பொன், முத்து ஆகியவற்றைக்  கொடுக்கும் காட்சி, தம் தாழ்வை எண்ணி  ஒதுங்கியபோதும் , நந்தியை விலக்கிக் காட்சி தந்த சிவபெருமானின் எளிவந்த தன்மையை விளக்குகிறது.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் 161 (நீடும்)

    சேக்கிழார் பாடல் நயம் 161 (நீடும்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு

    அத்தகைய  அந்தணர், அரிய மறையாகிய உருத்திரத்தை நேயம் மிக்க நெஞ்சுடன் ஓதினார். பறவைகள் ஒலிக்க, மீன்கள் பிறழும் பொய்கையில் இறங்கிக்  கழுத்தளவு நீரில் இறைவன் மேல் பற்றுடன் கைகூப்பி  நின்று ஓதினார். சிலநாள்கள்  தொடர்ந்து இவர் ஒதுவதைக் கண்ட இறைவன் சிவபுரி என்னும் திருத்தலையூர்  அருகே சென்றார். அந்நிலையில் நிகழ்ந்ததைச் சேக்கிழார் பாடுகிறார்.

    பாடல்

    நீடும் அன்பினில் உருத்திரம் ஓதிய நிலையால்
    ஆடு சேவடி அருகு உற அணைந்தனர் அவர்க்குப்
    பாடு பெற்ற சீர் உருத்திர பசுபதியார் ஆம்
    கூடு நாமமும் நிகழ்ந்தது குவலயம் போற்ற.

    பொருள்

    நெடிது வளரும் அன்புடனே திருவுருத்திரத்தை ஓதிய நிலைமையினாலே இறைவரது ஆடுகின்ற திருவடியின் அருகு பொருந்த அணைந்தனர். (ஆதலின்) அவருக்குப் பெருமைபெற்ற சிறந்த உருத்திரபசுபதியார் என்று கூடும் பெயரும் உலகம்போற்ற நிகழ்ந்தது.

    விளக்கம்

    இந்நாயனாருக்கு உருத்திரபசுபதியார் என்ற பெயர் வழங்குதலின் காரணத்தை அறிவிப்பது இத்திருப்பாட்டு. முதனூலாகிய திருத்தொண்டத் தொகையினுள் உருத்திர பசுபதிக்கும், அடியேன்;என்று  இப்பெயரால் இவர் போற்றப்பட்டமையால் இதன் காரணத்தை விரிநூல் விரித்துக் கூறவேண்டிய நியதிபற்றி இவ்வாறு எடுத்துக்காட்டியபடியாம். இதனை  மேலும் விரித்து

    அந்தாழ் புனல்தன்னில் அல்லும்  பகலும்நின் றாதரத்தால்
    உந்தாத அன்பொ டுருத்திரஞ்  சொல்லிக் கருத்தமைந்த
    பைந்தார் உருத்(தி)ர பசுபதி  தன்னற் பதிவயற்கே
    நந்தார் திருத்தலை யூர்என் றுரைப்பர்இந் நானிலத்தே. 

    என்று  திருத்தொண்டர் திருவந்தாதி  கூறுகின்றது. நீடும் அன்பு- “தூய அன்பு” , நீடுதல் – பெருகுதல்.

    “ஈறே முதல் அதனின் ஈறலா வொன்றுபல,
    வாறே தொழும்பு  ஆகும்   அங்கு”

    என்ற சிவஞானபோதத்தின் படி,  முத்திநிலையிலும் உயிர் இறைவனுக்கு அடிமையாய் நிற்கு மாதலின், சிவபுரி எல்லையிற் சேர்ந்த பசுபதியார், அங்கும், நீடிய அன்பினால் அடிமைத்திறம் புரிந்து  இறைவனது சேவடியின் அருகுற அணைந்திருந்தனர் என்றலுமாம்..

    ஆடுசேவடி – தூக்கிய திருவடி. அதுவே உயிர்களை மலச்சேற்றினின்றும் எடுத்து அருள்தருவதாதலின் அவ்வருளினைப்பெற்ற பசுபதியார் அதன் அருகு அணைந்தனர். அருகுற அணைதல் – அருகுற அணைதல் அரிதின் முயன்றடையும் பெரும் பேறென்பதனை,

    “தேடியிமை யோர் பரவுந்தில்லைச்சிற் றம்பலவர்,
    ஆடிவரும் போதருகே நிற்கவுமே யாட்டாரே”

    என்று அகப்பொருளில் வைத்துப் புருடோத்தம நம்பிகள் திருவிசைப்பா வினுள் அருளியதுகாண்க.

    அவர்க்குக் கூடும் நாமமும் நிகழ்ந்தது – கூடுநாமம் – உருத்திரம் என்னும் சொல். தமது பசுபதியார் என்னும் பெயரின் முன்னே கூடப்பெற்ற நாமம். பெருமை கூடிய என்ற குறிப்பும் காண்க. உருத்திரபசுபதியார் ஆம் என்றதும் இதனை விளக்கிற்று. ஆம் – ஆகின்ற. முன் பசுபதியார் என்றது இப்போது உருத்திரபசுபதியார் என ஆகின்ற என்க.

    பாடு பெற்றசீர் – பாடு -பெருமை. பாடு – தவம், உடல் வருத்தல். என்று கொண்டுபசுபதியார் செய்த கடுந்தவத்தின் பயனாகப்பெற்ற என்றலும் ஆம்.

    குவலயம்போற்ற நிகழ்ந்தது – உலகத்துள்ளார் அத்திருப்பெயரைப் போற்றும்படி வழங்கியது. போற்றுதல் – திருத்தொண்டத்தொகையாலும், அது கொண்டு உலகராலும் துதிக்கப்படுதல்.

    தாம் பாடிய உருத்திரமந்திரத்தால்  அடியார் திருப்பெயருக்கு முன் அம்மந்திரம் சேர்ந்தது என்பதை இப்பாடல்  குறிக்கிறது! இவ்வாறு சேர்வது அடியாரின் இடையவிடாத தவத்தினால்  விளைந்தது  என்பது புலனாகின்றது.  திருநாளைப்போவார் என்ற பெயர் நந்தனாருக்கு அமைந்ததும் இவ்வாறே எனலாம்.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 160 (அங்கண்)

    சேக்கிழார் பாடல் நயம் – 160 (அங்கண்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    4. மும்மையால் உலகாண்ட சருக்கம்

    18. உருத்திர பசுபதி நாயனார் புராணம்

    வரலாறு :

    திருத்தொண்டர் புராணத்தின்  அடுத்த அடியார் உருத்திர  பசுபதி நாயனார் ஆவார். அவர்  காவிரிக் கரையில் விளங்கிய திருத்தலையூரில் வேள்விகள் மழையையும், மலர்கள் தேனையும், மாடுகள் பஞ்சகவ்யத்தையும் அளித்தலால் அவ்வூர்   தருமமும் நீதியும்  சால்பும் பெற்று விளங்கியது.

    அங்கே  மறையவர் மரபில் தோன்றிய  பசுபதியார்,  காளையையும் உமையம்மையையும்  உடைய  சிவபிரானின் தொண்டராய் விளங்கினார். இதனைச்  சேக்கிழார்,

    அங்கண் மா நகர் அதன் இடை அருமறை வாய்மைத்
    துங்க வேதியர் குலத்தினில் தோன்றிய தூயோர்
    செங்கண் மால் விடையார் செழும் பொன் மலை வல்லி
    பங்கனார் அடிமைத் திறம் புரி பசு பதியார்.

    என்று பாடினார்.

    பொருள்:

    இடமகன்ற அந்நகரத்தில் அருமறைகளின் வாய்மையில்  நிற்கும் உயர்ந்த மறையவர் மரபில் தோன்றிய தூயவர், செங்கண்ணுடைய பெரிய இடபத்தை ஊர்ந்து வருபவரும் செழித்த இமயமலையின் மகளாராகிய கொடிபோன்ற பார்வதியம்மையாரை ஒருபங்கிற் கொண்டவரும் ஆகிய சிவபெருமானது அடிமைத்திறத்தை விரும்பும் பசுபதியாரென்ற பேருடையவர்.

    அங்கண்மையாவது எவ்வுயிர்கள் மாட்டும் அருளுடைமை. இதற்கு அழகிய இடமுடைய என்றுரைப்பாருமுண்டு.

    அருமறை வாய்மை  என்பதற்கு , சிவமாந் தெய்வத்தின்மேற் றெய்வமில்லை என்னும் சைவ உண்மை.என்று பொருள். துங்க வேதியர் – துங்கம் – பெருமை – உயர்வு. இது வாய்மையான் வந்த தென்பார் வாய்மைத் துங்கம் என்றார். இவர் ‘’அந்தணர்தம்  குடி முதல்வர்”   என்றும், “மரபிரண்டுஞ் சைவநெறி”  என்பவற்றால்  விளங்கும் . வைதிகத்தோடு சைவமும் உடைமையே துங்கம் என்பது “விப்போத் துங்க” என்ற சிவபூசாஸ்த்தவ வியாக்கியானத்துங் கூறப்பட்டது.

    தூயோர் – புறமும் அகமும் தூயராகுதல். இவற்றுள் அகத்தூய்மையே சிறந்ததது. ஆயின்,

    “புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை,
    வாய்மையாற் காணப்படும்”  என்றபடி,

    புறந்தூய்மை முன்வைக்கப்படும். என்னை? அகக்கரணங்கள் தூயனவாதற்குப் புறக்கரணங்களின் தூய்மையே சாதனமென்பது நூற்றுணிபு. ஆதலின் சாதனமாகியபுறத் தூய்மை முதற்கண் வேண்டப்படுவது. நீரிற் குளித்தல் முதலியவற்றாற் புறுத்தூய்மை செய்தபின் பூதசுத்தி செய்தல் மரபு. தூய்மை என்பது பற்றி

    “உண்பொழுது நீராடி யுண்டலு மென்பெறினும்,
    பால்பற்றிச் சொல்லா விடுதலுந் தோல்வற்றிச்,
    சாயினுஞ் சான்றாண்மை குன்றாமை யிம்மூன்றுந்,
    தூஉயமென்பார்தொழில்”

    என்ற திரிகடுகமும் காண்க. இதனால் (உடல்) மெய்யின் தூய்மை கூறப்பட்டது. ஏனை மொழி மனங்களின் தூய்மை மேல்வரும் பாட்டில் “வழுத்தும் தூய அன்பொடு” என்றமையாற் கூறுவார்.

    செங்கண் மால்விடையார்- சிவந்த தாமரைக்கண்ணன் என்னும் திருமாலாகிய விடையினையுடையவர் என்றலுமாம்.

    “இடபமதாய்த் தாங்கினான் றிருமால்”  என்பது திருவாசகம்)

    “செங்கண்மால்விடையாய்” என்ற நம்பிகள் தேவாரமும் காண்க.

    பொன்மலை வல்லி – பொன்மலை- இமயமலை;

    “பொன்னின் வெண்டிரு நீறு புனைந்தெனப்,
    பன்னு நீள்பனி மால்வரைப் பாலது”,

    “பொன்மலைப் புலிவென் றோங்க” முதலியன காண்க. ஞாயிறு உதிக்கும்கால் இதன் கொடுமுடிகள் பொன்னேபோற் றோன்றுதலின் இமயமலையும் பொன்மலை எனப்படும். மலையரசன் மகளாராய் வந்தாராதலின் உமையம்மையார் மலைவல்லி எனப்படுவர். வல்லி கொடி – கொடி போன்ற அம்மையார்.

    அடிமைத் திறம்புரி – புரிதல் – விரும்புதல். அடிமைத் திறம் – உயிர்கள் எஞ்ஞான்றும் இறைவனுக்கு அடிமைகள் என்பது உண்மைநூன் முடிபு. அதனை வேதம் உள்ளுறையாகக்கொண்டு நடுவில் வைத்துத் திருவுருத்திரத்தினால் அறிவிக்கும். அவ்வுருத்திர மந்திரத்தை எப்போதும் விரும்பிச் சொல்பவராதலின் அடிமைத் திறம்புரி என்றார். புரிதல் – செய்தல் என்று கொண்டு, அடிமைத் திறத்திற்சாரும் செயல்களைச் செய்கின்ற என்றுரைத்தலுமாம்.

    பசுக்கள் இறைவனைப் பதியாக உடையன என்ற பொருள்கொண்ட பசுபதியார் என்ற பெயர்பூண்டமையாலும் இது விளங்கும்.

    பசுபதியார் – இந்நாயனாரின் இயற்பெயர். முருகனார் என்ற பெயர்ப் பொருள் உரைக்கப்பட்டது. பசுபதியாகிய சிவபெருமானிடத்து மிக்க அன்புபூண் டொழுகும் துங்கவேதியர் குலத்தில் தோன்றினாராதலின் இவர்தம்  பெற்றோர்கள் தங்கள் வழிபடுகடவுளின் பெயரை இவருக்கு இட்டனர்போலும். ஆரூரர் என்ற பெயர் ஆளுடைய நம்பிகளுக்கு இட்டமை காண்க.  உருத்திர  பசுபதியார் என்ற பெயரின் காரணம் பின்னர்  கூறுவர்.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 159 (அங்கண்)

    சேக்கிழார் பாடல் நயம் – 159 (அங்கண்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    பாடல்

    அங்கண் அமரும் திரு முருகர் அழகுஆர் புகலிப் பிள்ளையார்
    பொங்கு மணத்தின், முன் செய்த பூசை அதனால் புக்கு அருளிச்
    செங்கண் அடல் ஏறு உடையவர் தாம் சிறந்த அருளின் பொருள் அளிக்கத்
    தங்கள் பெருமான் அடி நீழல் தலையாம் நிலைமை சார்வு உற்றார்

    வரலாறு

    வயலில் கயல் உகளும் அவ்வூரில் வாழும்  முருகநாயனார்  தாம் செய்த தவத்தால்,  விடை மேல் வரும் சடையார் அணிந்து கொள்ளத்தக்க திருப்பள்ளித்தாமம் எனப்படும் தலை மாலைக்குரிய பூக்களைப் பறித்து   பூணூல் அணிந்த வேதியராகிய அடியார், வேதவாக்கியங்கள் நான்கிற்கேற்ற  அவற்றைத் தனித்தனிப்  பூக்கூடை களில்  இட்டார்.

    மரங்களிலும், செடிகளிலும் , கொடியிலும், நீரிலும்  பூக்கின்ற  மலர்களின் தரம், விரியும்  நேரம், பறிக்கும் நேரம்  ஆகியவற்றை  நுட்பமாக  உணர்ந்து வேதத்தின் ஆறங்கம் போன்ற கோவை, இண்டை, கண்ணி , மாலை, பிணையல், தொடை ஆகிய ஆறு  வகைகளில் அஞ்செழுத்து ஓதித்  தொடுத்தார்.

    அவர் வேதியர்  என்ற முறையில்  திருஞான சம்பந்தரின் நண்பர்  என்ற பெருமை பெற்றார். அயனும் மாலும் அறியாத சிவன் எழுந்தருளும் வர்த்தமான ஈச்சுரத்தில்  நாளும் பொழுதும் வழுவாமல் அஞ்செழுத்தோதி வழிபட்டார். பின்னர் திருஞான சம்பந்தருடன் இணைந்து இறைவன் திருவடி அடைந்தார். இதனைச் சேக்கிழார்,

    அங்கண் அமரும் திரு முருகர்   அழகுஆர் புகலிப் பிள்ளையார்
    பொங்கு மணத்தின், முன் செய்த   பூசை அதனால் புக்கு அருளிச்

    செங்கண் அடல் ஏறு உடையவர் தாம்  சிறந்த அருளின் பொருள் அளிக்கத் தங்கள் பெருமான் அடி நீழல்   தலையாம் நிலைமை சார்வு உற்றார்

    என்று பாடினார்,

    அப்பாடலின் பொருள்

    அவ்விடத்து அமர்கின்றதிருமுருகனார்,அழகிய புகலியில் வந்த ஆளுடைய பிள்ளையாருடைய சிவம் பொங்கும் திருமணத்தில் முன்செய்த பூசையின் பயனாலே புகுந்தருளிச், செங்கண்ணுடைய வலிய இடபத்தையுடைய சிவபெருமான் சிறந்த அருளாகிய இனிய பொருளை அளிக்கத், தம் பெருமானாரது திருவடிநீழலின்கண்ணதாகிய நிலைபெற்ற தன்மையைச் சார்வுற்றனர்.

    விளக்கம்

    அங்கண்  என்ற சொல்  அவ்விடத்து என்ற பொருளில்  அவ்வூராகிய  புகலூரில் என்றும்,  அதன்கண் அஃதாவது பூசையின்கண் என்று உரைப்பினும்  அமையும். அங்கண்மை- அன்புடைமை என்ற உட்குறிப்பும் காணப்படும்.

    அமரும் என்ற சொல், விரும்பியிருக்கும். பூத்திருப்பணியிலும், பூசையிலும் ஆளுடையபிள்ளையாரது நண்பினிலும் விரும்பி ஒழுகும் என்ற பொருளைக் காட்டும் அழகார் புகலி  என்ற தொடர் ,  புகலி என்ற  சீகாழியைக் குறிக்கும்.  புகலியின் அழகுச் சிறப்புக்களை ஆளுடைய பிள்ளையாரது திருப்பதிகங்களாலும், பாட்டுக்களாலும், பிறவிடங்களாலும் கண்டுகொள்ளலாம்

    பொங்குமணம் என்ற தொடர்,  சிவம்பெருக்கும் பிள்ளையாரது சிவம் பெருக்கும் திருமணத்தைக்  குறித்தது . பொங்குதல் – மேன்மேல் வளர்தல். திருமணத்தில் வந்த எல்லாரும் சோதிவாயிலினுள்ளே புகும்வரை சோதியோங்கியும் அத்திருவாயில் திறந்தும் சிவத்துவம் வளர்ந்துகொண்டேயிருந்த வரலாற்றைக் காட்டியது..

    முன்செய்தபூசை  என்ற தொடரில்,  இப்பிறப்பிற்செய்த பூசையும், அப்பூசைக்குக் காரணமாயிருந்த  முன்னைத் தவமும் கூறப்பெற்றது

    பூசையதனாற்புக்கருளி என்ற தொடர், ஆளுடைய பிள்ளையாரது திருமணத்திற் புகுவதற்குப் பூசைகாரணமாகிய.து. பூசையாகிய தவம் செய்தோரே அத்திருமணத்திற் புகப்பெற்றார் என்பதுண்மை. என்னை? அதிற்புகுந்தோர் அனைவரும் முத்தியடைந்தமையாலும்,

    சிவஞான சித்தியாரில்,

    “வேத சிரப்பொருளை மிகத்தெளிந்தும் சென்றால்  சைவத், திறத்தடைவர்
    இதிற் சரியை கிரியா யோகஞ் செலுத்தியபின் ஞானத்தாற் சிவனடியைச் சேர்வார்”

    என்பதும், தவஞ் செய்யாதார் சிவனடி சேரார் என்பதும் உண்மை முடிபாதலாலும் முன்செய்த பூசைகாரணமாகத் திருமணத்திற்புக்கனர் என்றார். அவ்வாறு திருமணத்திற் புகுதலே முத்திபெற்ற தாய் முடிந்ததாலின் புக்கருளி என்று அருமைப்பாடு பெறக்கூறினார்.

    சிறந்த அருள் இன்பொருள்  சிவனருளையும் இனிய சிவானந்தப் பயனையும் குறித்தது.

    அடிநீழல் தலைஆம் நிலைமை என்ற தொடரில்,  நீழல் தலை – நீழலின் கண்ணே என்பதைக் காட்டியது. ஆம் – ஆகின்ற. நிலைமை – நிலைபெற்ற தன்மை – மீளாநிலையாகிய  பேராவியற்கை ஆகும்.  இது சிவனடி பெறுதலாகிய நிலைத்த வீடுபேறு…

    சிவஞான சித்தியாரில் .”செலுத்தியபின் ஞானத்தாற் சிவனடியைச் சேர்வார்” என்றும்,

    “ஈனமிலாப்பொருளதனைச் சிந்தித்த லைந்தும்,
    இறைவனடி யடைவிக்கும் எழில்ஞான பூசை”

    என்றும் கூறியபடி இந்நாயனார் செய்த பூசை இவருக்கு ஞானசம்பந்தரின்  திருமணத்தின் வழியே இறைவனடியில் குடியிருக்கும் நிலை தந்தது. ஞானத்தாற் சிவனடி சேர்தல் என்ற உண்மையானது இந்நாயனாரளவில் ஞானசம்பந்தரது துணையால் என்ற குறிப்புத்தர நிகழ்ந்ததும் காண்க. அது குறிக்கவே ஆசிரியர் “மணத்திற் புக்கருளி அடிநீழல் – நிலைமை சார்வுற்றார்” என்றருளினர்.

    இந்நாயனார் மலர்பறித்துச் சாத்திமகிழ்தலாகிய சரியையும், சாந்தம் புகை முதலியன கொண்டு சிவலிங்கத்தில் பூசித்தும் அருச்சித்தும் வழிபடுதலாகிய கிரியையும், அஞ்செழுத்துப் பயிலும் அகப்பூசையாகிய யோகமும், செலுத்தியபடியால் அவை காரணமாக ஞானத்தினுட் புகுந்தனர் என்ற குறிப்பும் பெறப் பூசையதனால் புக்கருளி என்ற தொடரின்  நயமாயிற்று.

    சார்வுற்றார் என்ற தொடரில்  சார்பு – சைவசித்தாந்தம்  உணர்த்தும் மரபுப்பெயர். முன்னர், இப்பிறவியின் சார்வுற்ற உயிர், தான் சாரவேண்டிய மேலைச்சார்பினையுணர்ந்து, இவ்வுலகச் சார்பு கெட ஒழுகிய சிவஞான ஒழுக்கத்தாலே சிவனடி நீழலாகிய நிலைத்த சார்பினை அடைந்தார்!  இவ்வாறு இந்நாயனார் சிவனடி நீழல் சார்வுற்ற சிறப்பை,

    “சீர்பெருகு நீலநக்கர் திருமுருகர் முதற்றொண்டர்”

    என்ற திருஞானசம்பந்த நாயனார் புராணத்திருப்பாட்டாலும் அறிகிறோம்.

    இப்பாடலில்  முருக நாயனார் ஞானசம்பந்தப் பெருந்தகையின் நட்பைப்  பெற்றதையும்,  தாம் செய்த சரியை முதலிய நான்கின் வழியிலும்,  அவருடன்  சிவலோகம் சென்றதையும் விளக்குகிறது!

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 158 (ஆன பெருமை)

    சேக்கிழார் பாடல் நயம் – 158 (ஆன பெருமை)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு :

    பெரிய புராணத்தின்  அடுத்த நாயனார்   முருக நாயனார்  ஆவார்.  உமை யம்மையைத்  தழுவிச்  சடையில் கங்கையை தரித்த பெருமானின் அடியார்கள் விரும்பி  அடையும்  ஊர், சோழநாட்டில் உள்ள பூம்புகலூராகும். அவ்வூரில் அடியாரணிந்த  திருநீற்றொளியால் இரவும் வெளிச்சம் தரும்; மலரில் உறையும் வண்டும்  ஒலியுடன் விளங்கும். அங்கே அவ்வண்டுகள்  தாவியமரும் மலர்களில் தென் பொழியும்; அதுபோல அங்கே மலர்கலில் தேன் உண்ணும் வண்டுகளும், பறவைகளும்  தேன்போன்ற பதிகஇசை  பாடும்.  அங்கு  வண்டுகளின் இசை கேட்டுத்  தேன் துளிக்கும்  மலர் போலப்  பதிக இசை கேட்ட மக்களின் முக மலரும் கண்ணீர் துளிக்கும்.

    பாடல் :

    ஆன பெருமை வளஞ்சிறந்த வந்தண் புகலூ  ரதுதன்னின்
    மான மறையோர் குலமரபின் வந்தார் முந்தை மறைமுதல்வர்,
    ஞான வரம்பின் றலைநின்றார், நாகம் புனைவார் சேவடிக்கீழ்
    ஊன மின்றி நிறையன்பா லுருகு மனத்தார் முருகனார்.

    பொருள் :

    அத்தகைய பெருமையும் வளனும் சிறந்து விளங்கிய அழகிய குளிர்ச்சியுடைய புகலூர் என்னும் அந்தத்தலத்தில்,  பெருமையுடைய வேதியர் குலத்தில் அவதரித்தார்; முந்தையாகிய வேத முதல்வர்; ஞானத்தின் முடிந்த எல்லையிற் சிறந்து நின்றார்; அரவை அணியாகக் கொண்ட சிவபெருமானது திருவடிகளின்கீழ்க் குற்றமில்லாது நிறையும் அன்பினால் உருகும் மனத்தினை யுடையவர் முருகனார் எனப்படுவோர்.

    ஆன  என்ற சீர்  மேற்கூறியபடி உயிரினை உயர்த்துதற்கான; உலக நிலைக்கான  ஏனையபெருமைகள் ஆகாதன என்பதாம். ஆனபெருமை வளம் முன்பே  கூறப்பட்ட சிவத்துவ விளக்கத்துக்குரிய பெருமையும், அது விளங்குதற்குரிய இடமாகிய உலகவளங்களும் ஆகும்.

    அந்தண் புகலூர் – அழகு – சோலைகள், தடங்கள், அவற்றிற்பூக்கும் மலர்கள் என்றிவற்றாலாகுவது. தண்மை – பிறவிவெப்பத்துக்கு அஞ்சிப் புகல் அடைந்தோரது வெப்பத்தைமாற்றிக் குளிர்ச்சிசெய்யுந் தன்மை.

    “வஞ்சநமன் வாதனைக்கும் வன்பிறவி வேதனைக்கும்,
    அஞ்சி யுனையடைந்தே னையா பராபரமே”

    என்றபடி இங்கு உலகத் துயிர்கள் சரண்புக அவர்களுக்கு அபயங்கொடுத்துக் காத்தல் குறித்தது.

    ஆனபெருமை – ஆளுடைய பிள்ளையார், ஆளுடைய அரசுகள், ஆளுடைய நம்பிகள் என்ற மூவரும் ஈரிரண்டு முறை வந்து தரிசித்தனர். பிள்ளையாரும் அரசுகளும் திருநீலநக்கர், சிறுத்தொண்டர் முதலிய பல அடியார் திருக்கூட்டத்துடன் முருகநாயனாரது திருமடத்திற் பலகாலம் தங்கித்

    “திருத்தொண்டின் நிலையுணர்ந்து” ,

    “திருத்தொண்டர்பெருமையினை விரித்துரைத்தங்கு,
    ஒருப்படுசிந் தையினார்கள் உடனுறைவின் பயன்பெற்றார்” .

    ஆளுடைய அரசுகள் பொய்ப்பாசம் போக்குவார் இங்குத்தங்கி

    “நையுமனப் பரிவோடு நாடோறுந் திருமுன்றிற்,
    கைகலந்த திருத்தொண்டு செய்துபெருங் காதலுடன்,
    வைகுநா ளெண்ணிறந்த வண்டமிழ் மாலைகள் மொழிந்து”

    “புகலூரன் என்னையினிச் சேவடிக்கீழ்  இழித்திடுமென் றெழுகின்ற,
    முன்னுணர்வின் முயற்சியினால்  திருவிருத்தம் பல மொழிந்து” ,

    “நண்ணரிய சிவானந்த ஞானவடிவே யாகி,
    அண்ணலார் சேவடிக்கீழ்”

    அமர்ந்திருக்கப்  பெற்றனர்! உலகத்தாருக்கு அடிமைத்திறத்தின் பெருமை யைக் காட்டியருளும் வகையாலே பங்குனி உத்திரத் திருவிழாவில் அடியார்களை ஊட்டுதற்குப் பொன் வேண்டிய ஆளுடைய நம்பிகள் செங்கல் செழும்பொன்னாகப் பெற்றனர். இவ்வரலாறுகள் இத்தலத்தின் பெருமையை விளக்குவனவாய் இங்குக் கருதத்தக்கன.

    மறையோர் குலமரபின் வந்தார் என்றதனால் அவர் அவதரித்தது வேதியர் குலமென்பதும், மறைமுதல்வர்என்றதனால் அக்குலத்தில் அவதரித்த பெருமை மட்டினமையாது, அக்குலத்துக் கேற்ப வேதியரொழுக்கத்தாலும், சிறந்து வேத வாய்மையின் முதன்மைபெற்று விளங்கினார் என்பதும் உணர்த்தப்பட்டது!

    ஞான வரம்பின் தலைநின்றார்  என்ற தொடர்,  வேதம் வல்லவராய் விளங்கியதோடு சிவாகம சீலராகிச் சிவாகமங்களிற் சொல்லப்பட்ட சிவஞானங் கைவரப்பெற்ற முதன்மையுடையவராய் அத்துறைகளில் விதிப்படி ஒழுகி நின்றனர் என்பதாம்.

    இங்கு நாயனார் செய்த தொண்டு சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்குபாதங்களின் திருத்தொழில்களுமாம் என்பது மேல்வரும் ஏழு திருப்பாட்டுக்களிற் போந்த பொருளாவதும் காண்க. மேற்சொன்னமறை என்பது வேதங்களையும், இங்குக்கூறிய ஞானம் என்றது சிவாகமங்களையும் குறித்தது. தலை நிற்றல் – ஒழுக்கத்திற் சிறத்தல்.

    ஊனம் என்ற சொல்,  இடையறாது அன்பு செலுத்துதற்கு வரும் தடைகளைக்  குறித்தது. அன்பால் மனம் உருகுதலாவது – பெரியவற்றுளெல்லாம் பெரியவனாகிய இறைவன் உயிர்களின் சிறுமை எண்ணாது எஞ்ஞான்றும் செய்துவரும் பேரருளின் பெருமையினை எண்ணியெண்ணி அன்பு செய்தலால் உள்ளம் நெகிழ்தல்.

    “அத்தாவுன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்….
    பிழைத்தனக ளெத்தனையும் பொறுத்தாயன்றே….
    எம்பெருமான் றிருக்கருணை யிருந்தவாறே” ,

    “நாய் சிவிகை யேற்றுவித்த அம்மை”;

    “நாயனைய வென்னைப் பொருட்படுத்தி நன்கருளித்,
    தாயனைய னாயருளும் தம்பிரான்”

    முதலிய திருவாக்குக்கள் காண்க.

    வேதங்களில்  தலைசிறந்ததனால் சிறப்பாகிய சிவாமங்களில்  தேர்ந்தார்; அதனால் ஞானவழி நின்றார்; அதன் பயனாகச் சிவன்சேவடிகளில் அன்பினால் உருகி, அவரது நாமம் பயின்றார்; அதனாற் சிவபூசையே உறுதிப்பொருள் என்றறிந்து சிவனை முப்போதும் மலர்கொண்டு அலங்கரித்துப் பூசித்து அழகு பார்த்துக் களித்தார்; திருவடி ஞானத்திற் சிறக்கவே அடி அணைந்த அடியார் தொண்டினிற் சிறந்தொழுகினார்; அதனாற் சிவனடிப் பேறுபெற்றனர் என்று இம்முறையே, இப்பாட்டிற் சொல்லிய இத்தன்மைகளே மேல்வரும் சரித நிகழ்ச்சிகளாய் விளைந்தன என்பதும்கண்டுகொள்க.

    “வேதச் சிரப்பொருளை மிகத்தெளிந்துஞ் சென்றாற் சைவத்,
    திறத்தடைவர்  இதிற்சரியை கிரியா யோகஞ் செலுத்தியபின்
    ஞானத்தாற் சிவனடியைச் சேர்வர்”

    என்ற சிவஞான சித்தியார் திருவாக்கு இங்குக் கருதத்தக்கது.

    முருகனார்  வந்தார்;   அவர்  முதல்வர்;  அவர்  தலைநின்றார்; அவர்  மனத்தார் எனமுடித்துக்கொள்க. அவர் என்ற சொல் வருவித்து முதல்வர் முதலிய மூன்று பெயர்ப் பயனிலைகளுடன் கூட்டிமுடிக்க.

    இப்பாடலில்   முருக நாயனார் வேதியர் மரபில் வந்து, சிவாகமம் கற்று, சிவனடி மறவாத சிந்தையராய் , சிவநாமம் பயின்றார். அதனால் சிவபூசை செய்து, அடியார்களின் தொண்டில் சிறந்து விளங்கினார். அதனால் சிவன்  திருவடிப்பேறு  பெற்றார் என்பதைச் சுருக்கமாகக்  கூறுகிறது. பின்னர்  விரிவைக் காணலாம்.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 157 (பாதம்)

    சேக்கிழார் பாடல் நயம் – 157 (பாதம்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு:

    மூர்த்தி நாயனாரை அடக்கியாண்ட வடுக மன்னன் சிவச்சார்பு இல்லாமையால்  விரைவில் மாண்டு நரகம் புக்கான். மக்கள் அவனுக்கு இறுதிக்கடன்  செய்தனர். அவனுக்கு வாரிசு இல்லாமையால், மன்னன்  இல்லா அரசு உயிரற்ற உடல்போன்றதாகும்.  என்றனர். ஆதலால் யானை ஒன்றைக்  கண்கட்டி அனுப்பினால், அவ்வேழம் கைக்கொண்டமனிதன் அரசாட்சி கொள்வான் என்று, பூசனைசெய்து, ‘’உரிய அரசனைக் கொணர்க’’  என்று ஏவினர். அந்த யானை எங்கும்  திரிந்து , ஆலவாய்  அண்ணல் கோயிலை அடைந்தது.

    முன்னாள்  இரவில் மூர்த்தியார்  கனவில்  இறைவன்  அருள் வாக்கு கூறியதைக் கேட்ட  அடியார் ‘’இறைவன் அருளியவாறே  அரசுரிமை பெறுவேன்’’ என்று  திருக்கோயில் வாயிலுக்கு வந்தார்.   அரசயானை அங்கே வந்து உலகம் உய்யும் பொருட்டு, அடியாரை எடுத்து தன்  பிடரிமேல் தாங்கிச் சென்றது. மக்கள் பணிந்து   செய்த  ஆரவாரத்தின் இடையே அரசனின் ஆட்சி மன்றத்தில் இருந்த  அரியாசனத்தில்  அடியாரை ஏற்றி  வணங்கியது.

    மக்கள் அனைவரும் அடியாராகிய அரசனைப் போற்றி, அரசாபிடேகம் செய்ய விரும்பினார். மக்கள் வேண்டியதால்  சடாமுடியே அரசமுடி, திருநீறே  அபிடேகம்  சிவனுடைய  மாலைகளையே அணிகலன்கள்  எனக் கொண்டு  தவராச  யோகியாக  அரியணை ஏறினார்.  அறிவார்ந்த  அமைச்சர்களும் அதற்கேற்ற சடங்குகள் செய்தனர். அவ்வாறே அரசேற்ற அடியார்  அரச வீதியில் யானைமேலேறிச் சென்று , சிங்காதனம் ஏறினார்.

    சமணர் நெறி நீக்கிச்  சிவநெறி  மேற்கொண்டு அக்கமணிமாலை தாங்கி  மூர்த்தியார், அரசாட்சி  செய்யத்  தொடங்கினார்.  பெண்களின் பால் காமம் நீக்கி,  ஐம்புலன்களையும் அடக்கி, உலக உயிர்களுக்கு இடர் வராமல் காத்து, அவர் ஆண்ட  இறைவனடி  சேர்ந்த  சிறப்பைச்  சேக்கிழார் பாடுகிறார்,

    பாடல்:

    பாதம் பர மன்னவர் சூழ்ந்து பணிந்து போற்ற
    ஏதம் பிணியா வகை இவ் உலகு ஆண்டு, தொண்டின்
    பேதம் புரியா அருள் பேர் அரசுஆளப் பெற்று
    நாதன் கழல் சேவடி நண்ணினர் அண்ணலாரே.

    இதன்பொருள்: தமது பாதங்களைவேற்றரசர்கள் சூழ்ந்து பணிந்துபோற்றக், கெடுதிகள் பீடிக்காதவகையால் இவ்வுலகினை அரசாண்டு திருத்தொண்டினின்றும் விலகாத அருட்பேரரசும் ஆளப்பெற்று, இறைவனாரது கழலணிந்த திருவடிகளைப் பெருமையுடைய மூர்த்தியார் அடைந்தனர்.

    விளக்கம்:

    பரமன்னவர் – வேற்றரசர். வென்றனர் என்பது முன்னரே  கூறினாராதலின், அவ்வாறு வெல்லப்பட்ட பரமன்னரும், வெல்லப்படாமல் தாமே இவரது நீதியும் ஆணை வலிமையும் கண்டு வந்து சாரும் மன்னரும் வந்து பாதம் பணிந்து போற்றினர் என்க.

    திருவாதவூரடிகளது அமைச்சுத்திறத்தினை நயந்து பலதேய மன்னர்களும் தாமே வந்து பணிந்து நட்புரிமை கொண்டு நடந்தனர் என்ற செய்தியை இங்கே நினைவுகூர்க.

    ஏதம் பிணியா  வகை  இவ்வுலகு ஆண்டு  என்பதற்கு,  புறப்பகையால் வரும் ஏதம்

    பிணியாவகையிலும், அகப்பகையால் வரும் ஏதம் பிணியாவகையிலும் உலகாண்டனர் என்க.

    தொண்டின் பேதம் புரியா – சிவத்தொண்டினின்றும் பிரியாத – சிறிதும் திறம்பாத. அருட்பேரரசு – சிவனதருளின் கீழதாகிய பெரும்பாக்கியம். உலகாளும் அரசினும் அரனது திருத்தொண்டாகிய அரசே பெரிது என்று காட்டுவார்  அருட்பேரரசு எனச் சிறப்பு அடைமொழி தந்து விதந்து எடுத்துக் கூறினார். உலகுயிர்மேல் வைத்த சீவகாருண்ணியத்தினும் சிவனருட் பெருமையே பெரிதெனக் கொண்டனர் மூர்த்தியார் என்பது காண்க. (உலகு) ஆண்டு என்றமைந்த ஆசிரியர், (பேரரசு) ஆளப்பெற்று என்று சிறப்பித்துக் கூறிய திறனும் இக் கருத்தே பற்றியது. மேல்வரும் பாட்டில் களிற்றன்பர் என்றதும் காண்க.

    முடிமன்னர்களாகிய தமிழ் மூவேந்தர்களில் ஒருவராய், “மன்னவரும் பணிசெய்ய வடநூல்தென் றமிழ்முதலாம், பன்னுகலை பணிசெய்யப் பாரளிப்பா” ராகிய ஐயடிகள் காடவர்கோ னாயனார் இக் கருத்துப்பற்றியே (உலக)

    “அரசாட்சி இன்னல் என  இகழ்ந்து  அதனை யெழிற்குமரன் மேல் இழிச்சி,

    நன்மைநெறித் திருத்தொண்டு நயந்தளிப்பா ராயினார்”

    என்ற சரிதம் கேட்கின்றோம். அவரது திருவுள்ளநிலை இக்கருத்தே பற்றிய தென்பது

    “படிமுழுதும்  வெண்குடைக்கீழ்ப்    பாரெலா   மாண்ட,
    முடியரசர்   செல்வத்து  மும்மை  – கடியிலங்கு,
    தோடேந்து  கொன்றையந்தார்ச்   சோதிக்குத்   தொண்டுபட்டு
    ஓடேந்தி   யுண்பது  உறும்”

    என்று அவர் அருளிய க்ஷேத்திரத் திருவெண்பாவினால்  அறியப்படும். இதனையே வியந்து எடுத்துப் பாராட்டி

    “முடியரசாம்   அத்திற்கு   மும்மைநன் றால்  அரற்கா
    ஐயம்  ஏற்றலென்னும், பத்திக்கட லையடிகள்”

    என்று துதித்தருளினர் நம்பியாண்டார்நம்பிகள் .

    “போகம்வேண்டி வேண்டிலேன் புரந்தராதி யின்பமும்”

    என்ற திருவாசகம்  முதலியவை காண்க.

    “கோல நீடிய நிதிபதி வாழ்க்கையுங் குறியேன்;
    மேலை யிந்திர னரசினைக் கனவினும் வெஃகேன்;
    மால யன்பெறு பதத்தையும் பொருளென மதியேன்;
    சால நின்பதத் தன்பையே வேண்டுவன் றமியேன்”

    என்று  கந்தபுராணத்தில்  வீரவாகுதேவர் கேட்ட வரத்தின் உள்ளுறையும் கருதுக.

    அண்ணலார்  என்ற சொல்,  பெருமையுடையவரைட் குறித்தது.  பெரும்பேறாகிய

    சிவனடிப் பேறு பெற்ற இடமாதலின் இப்பெயராற் கூறினார்.

    இப்பாடலால், ‘’அரசாட்சி  ஏற்பவர்  துறவியாக  இருக்க வேண்டும்’’  என்ற உலகியல்  மொழியைப்  பெரிய புராணம்  கூறுவதை  உணரலாம்.  இறையருளையே  வேண்டுபவர்  செய்யும் அரசாட்சி  இறையருளாட்சியாகவே  இருக்கும் என்பதை  இப்பாடல் குறிக்கிறது.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம்- 156 (நாளும்)

    சேக்கிழார் பாடல் நயம்- 156 (நாளும்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    நாளும் பெரும் காதல் நயப்பு உறும் வேட்கை யாலே,
    கேளும் துணையும் முதல் கேடு இல் பதங்கள் எல்லாம்
    ஆளும் பெருமான் அடித் தாமரை அல்லது இல்லார்;
    மூளும் பெருகு அன்பு எனும் மூர்த்தியார்; மூர்த்தியார்தாம்.

    வரலாறு

    செல்வத்தாலும் பல்துறைத் தொழில்களாலும் சிறந்த, மாட மாளிகைகள் நிறைந்த  பழம்புகழ் மேவியது பாண்டிநாடு.மங்கையர் பண்பாடும் வாய்களில் இன்சொல் நிறையும்; கடலில் முத்துக்கள் நிறையும். அங்கே மலையச்  சந்தனம்  கமழும்  தென்றல் வீசும்; தெய்வத்தமிழ்த்  துதிகள் காற்றில்  தவழும்;  தாமரை மேல் வாழும் திருமகள் பாடும் யாழ்போன்ற மொழியும் இன்னிசை பாடும் வண்டும்  நிறைந்த நகரம்  மதுராபுரி யாகும்.

    அம்மூதூரில் நூல்கள்  பாயும் இடம்  சங்கமாகும்;  எருமைகள்  சொரியும் பால் பாயும்  குளங்களில் தாமரைத் தேனும் , மீன்களும் பாயும்;  அங்கே  சங்குகள் கரையேறும்;  அங்கே மங்கையர் மார்பிலும், முகத்  தாமரையிலும் முத்துக்கள் வரிசை காட்டும்;  மூவுலகங்களிலும் சிறந்த அந்நகரில்  நூல்களின் பொருள் தரும் திரு ஆலவாயில், பிறவியறுக்கும் தமிழ்ச் சங்கம் இருந்தது.  வணிகர் மரபு  செய்த தவத்தால், பற்றுக்களை நீக்கி ஓரடியார்வாழ்ந்தார். அவரைச் சேக்கிழார்  பாடுகிறார்,

    பாடல்

    நாளும் பெரும் காதல் நயப்பு உறும் வேட்கை யாலே,
    கேளும் துணையும் முதல் கேடு இல் பதங்கள் எல்லாம்
    ஆளும் பெருமான் அடித் தாமரை அல்லது இல்லார்;
    மூளும் பெருகு அன்பு எனும் மூர்த்தியார்; மூர்த்தியார்தாம்.

    அதன் பொருள்:   நாடோறும் பெரிய காதல் கூர்ந்து பொருந்த வரும் ஆசைபெருகி வேட்கையாகி விளைந்ததனாலே சுற்றமும் துணையும் முதலாகிய கெடுதலில்லாத பதங்கள் எல்லாம் ஆளும் பெருமானாகிய சிவனது திருவடித் தாமரைகளேயல்லாது வேறில்லாதவர்; மூண்டு பெருகும் அன்பு என்றதனையே தமது உருவமாகக்கொண்டவர்; அவர்தாம்   மூர்த்தியார் என்ற பெயர் பூண்டவர்.

    விளக்கம்

    பெருங்காதல் நயப்பு உறும் வேட்கை   என்ற தொடர் காட்டும் பொருள்.   விடாத விருப்பின் மிகுதி பெருங்காதலாக உருப்பட்டது; அது முறுகவே, நயப்பு என்னும் ஆசையாகியது; அது மேலிட வேட்கையாக விளைந்தது என்க. மனத்துள் அன்பு பெருகிப் படிப்படியாக வளர்ந்து கூர்தரும் வகையினை இத்தொடரில் கூறினார்.

    கேளும் துணையும் முதல் கேடு இல் பதங்கள் எல்லாம்
    ஆளும் பெருமான் அடித் தாமரை அல்லது இல்லார்

    கேள் – உயிர்ச்சார்பு. துணை – உயிர்ச்சார்பும் பொருட்சார்பும். கேடில் பதங்கள் – பதமுத்திப்போகங்கள். ஏனையவற்றை நோக்க இவை காலத்தால் நீடித்தனவாதலின் கேடில் என்றுபசரித்தார். இப்பொருளைச் சிங்கமுகாசுரன் எடுத்துச் சூரபதுமனுக்கு இனிது விளக்குகின்ற திறம் கந்தபுராணத்தினுட் கூறப்பட்டது காண்க.

    “அழிவில் மெய்வரம் பெற்றனம் என்றனையதற்கு,
    மொழி தரும்பொருள் கேண்மதி முச்சகந் தன்னுட்,
    கெழிய மன்னுயிர் போற்சில வைகலிற்கெடாது,
    கழிபெ ரும்பக லிருந்திடும் பான்மையேகண்டாய்

    என்பது அப்பாடல்.

    இறைவன் தாளில் பெறும் அபரமுத்திப் பெரும் போகம் ஒன்றேஎன்றும் அழியாததாகும் என்பது உண்மை நூல்களின் துணிபு.

    அல்லது இல்லார் என்ற தொடரில்  உறுதிப் பொருள் தர எதிர்மறை முகத்தாற் கூறினார்.  “ஈச னேநீ யல்ல தில்லை யிங்கும் அங்கும்  என்பதும்” என்ற திருவாசகம் காண்க.

    கேளும் துணையும் என்றவற்றால் ஆன்மாக்கள் இம்மையில் தமக்குப் பற்றுக் கோடாக எண்ணிக்கொள்வனவும், கேடில் பதங்கள் என்றதனால் மறுமையிற் பற்றுக் கோடாகக் கொள்வனவும் குறிக்கப்பட்டன. இம்மைத்துணை முதல் மறுமைப்பயன் வரையுள்ள எல்லாம் என்பது.

    துணை – “துணையென்று நான்றொழப் பட்டவொண் சுடரை”  என்ற நம்பிகள் தேவாரங்காண்க.

    ஆளும் பெருமான்  என்பது,  “அம்மையி னும்   துணை  அஞ்செ ழுத்துமே” என்று ஆளுடையபிள்ளையார் அருளியபடி உயிர்களுக்குப் பந்தமும் வீடும் தந்து ஆட்கொள்ளும் சிவபெருமான் என்பதாம்.

    “இம்மை வானவர்\ செல்வம் விளைத்திடும்;
    அம்மை யேற்பிற வித்துயிர் நீத்திடும்;
    எம்மையாளும் இடைமரு தன்கழல்,
    செம்மை யேதொழு வார்வினை சிந்துமே”

    என்ற அப்பர்சுவாமிகள் தேவாரமுஞ் சிந்திக்க.

    மூளும் பெருகு அன்பு என்னும் மூர்த்தியார்  என்ற தொடர், அன்பு மூண்டு பெருகிய அதுவே உருவாகி நின்ற என்பது. மூர்த்தி – உடல் – திருமேனி (வடிவம் என்பர்). மூர்த்திக்குள் இருந்து அதனை இயக்குபவர் மூர்த்திமான். ஆசனம் – மூர்த்தி- மூர்த்திமான் என்ற ஆகம பூசை முறையும் காண்க. மூர்த்தம் என்பதும் இது. மூர்த்தியார் மூர்த்தியை உடையவர்.

    மூர்த்தியார் தாம் மூர்த்தியார்- என்க. மூர்த்தியார் பின்வந்தது பெயர். இவ்வாறு அடுக்கி மொழிந்து சிறப்பிப்பது ஆசிரியரது மரபு!

    இப்பாடலில் இறையன்பையே  தம் உருவமாகக்  கொண்ட மூர்த்தியாரின் சிவத்தசாந்தின்சிறப்புகூறப்படுகிறது.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 155 (நாளும்)

    சேக்கிழார் பாடல் நயம் – 155 (நாளும்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு

    திருத்தொண்டர் புராணத்தில்  இனி அடுத்த  சருக்கம்  மும்மையால் உலகாண்ட  சருக்கம் ஆகும் .  முதலில்  மூர்த்தி நாயனார் வரலாறு பேசப்பெறுகிறது. சிறப்பும் செல்வமும் மிக்க மக்கள் மாடமாளிகைகளில் அன்புமிக்க சிந்தையராய் வாழும் பழம்புகழ் கொண்டது பாண்டிநாடு.இங்கே அழகிய இளம்பெண்களின் வாய்களில் பற்களாகிய முத்தும், கடலில்  நன்முத்தும் நிறைந்திருக்கும்.

    இந்நாட்டில் இனிய பொதிகைத்  தென்றல் சந்தன மணம் கமழும்;  உலகளந்த சிறப்புடைய தமிழ் மணமும் கமழும்.  மகளிர் நாவில் இன்னிசையும் அவர்கள் கூந்தலில் வண்டுகளும் வாழும் நகரம்  மதுராபுரி  ஆகும். அங்கே முத்தமிழ் நூல்கள் பயிலும் சங்கமும், எருமைகளின் பால் பாயும் தாமரையிடையே மீன்கள்  பாய, அங்கே வயலில் சங்குகள் ஏறும்; அங்கே மாடங்களில் ஆடும் மகளிரின் மார்பில்  முத்துப்போன்ற வியர்வையும், முத்து மாலைகளும் தங்கும்.

    அங்கே நமக்கு மெய்ப்பொருள்  தரும் ஈசன், திருவாலவாயில் தமிழ்ச் சங்கத் தலைவராய்  விளங்கி நூற்பொருளும் தருவதால்  அந்நகரம் மூவுலகங்களினும் சிறந்தது  அல்லவா? அந்த  நகரில்  வாழ்ந்த வணிகக்  குலத்தினர்  செய்த தவத்தின் பயனாகத்  தோன்றி, எல்லாப்  பற்றுக்களையும்  நீக்கி, ஏறூர்ந்த பெருமானின்  பதத்தையே பற்றி ஒருவர் வாழ்ந்தார். அவரே  இறைவன் பால் கொண்ட பற்றைத்  தவிர  மற்றைய பற்றுக்களை  நீக்கிய திருவுருவம் பெற்ற  மூர்த்தியார்  ஆவார்.  இதனைச் சேக்கிழார்,

    நாளும் பெரும் காதல் நயப்பு உறும் வேட்கை யாலே,
    கேளும் துணையும் முதல் கேடு இல் பதங்கள் எல்லாம்
    ஆளும் பெருமான் அடித் தாமரை அல்லது இல்லார்;
    மூளும் பெருகு அன்பு எனும் மூர்த்தியார்; மூர்த்தியார்தாம்.

    என்று பாடினார்

    இதன் பொருள்

    நாடோறும் பெரிய காதல் கூர்ந்து பொருந்த வரும் ஆசைபெருகி வேட்கையாகி விளைந்ததனாலே சுற்றமும் துணையும் முதலாகிய கெடுதலில்லாத பதங்கள் எல்லாம் ஆளும் பெருமானாகிய சிவனது திருவடித் தாமரைகளேயல்லாது வேறில்லாதவர்; மூண்டு பெருகும் அன்பு என்றதனையே தமது உருவமாகக்கொண்டவர்; அவர்தாம் மூர்த்தியார் என்ற பெயர் பூண்டவர்.

    விளக்கம்

    பெருங்காதல் நயப்பு உறும் வேட்கை  என்ற தொடருக்கு,  விடாத விருப்பின் மிகுதி பெருங்காதலாக உருப்பட்டது; அது முறுகவே, நயப்பு என்னும் ஆசையாகியது; அது மேலிட வேட்கையாக விளைந்தது எனலாம். மனத்துள் அன்பு பெருகிப்படிப்படியாக வளர்ந்து கூர்தரும் வகையினைக் கூறியதாகக்  கொள்ளலாம்

    கேளும் துணையும் முதல் கேடு இல் பதங்கள் எல்லாம்
    ஆளும் பெருமான் அடித் தாமரை அல்லது இல்லார்;.

    என்ற அடிகளில் – கேள் – உயிர்ச்சார்பு. துணை – உயிர்ச்சார்பும் பொருட்சார்பும். கேடில் பதங்கள் – பதமுத்திப்போகங்கள். ஏனையவற்றை நோக்க இவை காலத்தால் நீடித்தனவாதலின் கேடில் என்று  உபசரித்தார். இப்பொருளைச் சிங்கமுகாசுரன் எடுத்துச் சூரபதுமனுக்கு இனிது விளக்குகின்ற திறம் கந்தபுராணத்தினுட் கூறப்பட்டது காண்க.

    “அழிவில் மெய்வரம் பெற்றன மென்றனை யதற்கு,
    மொழி தரும்பொருள் கேண்மதி முச்சகந் தன்னுட்,
    கெழிய மன்னுயிர் போற்சில வைகலிற்கெடாது,
    கழிபெ ரும்பக லிருந்திடும் பான்மையேகண்டாய்.

    இறைவன் றாளிற் பெறும் அபரமுத்திப் பெரும் போகமொன்றே என்றும் அழியாததாகும் என்பது உண்மை நூல்களின் துணிபு. கேளும் துணையும் என்றவற்றால் ஆன்மாக்கள் இம்மையில் தமக்குப் பற்றுக் கோடாக எண்ணிக்கொள்வனவும், கேடில் பதங்கள் என்றதனால் மறுமையிற் பற்றுக் கோடாகக் கொள்வனவும் குறிக்கப்பட்டன. இம்மைத்துணை முதல் மறுமைப்பயன் வரையுள்ள எல்லாம் என்பது. இதனைச் சித்தியார்,

    “நெறியது வகையு மேலொடு கீழடங்க வெறும்பொயென நினைந்திருக்க”

    என்று  கூறும்.

    ஆளும் பெருமான் – “அம்மையி னுந்துணை யஞ்செ ழுத்துமே”  என்று ஆளுடையபிள்ளையார் அருளியபடி உயிர்களுக்குப் பந்தமும் வீடும் தந்து ஆட்கொள்ளும் சிவபெருமான் என்பதாம்.

    “இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்;
    அம்மை யேற்பிற வித்துயிர் நீத்திடும்;
    எம்மையாளு மிடைமரு தன்கழல்,
    செம்மை யேதொழு வார்வினை சிந்துமே”

    என்ற அப்பர்சுவாமிகள் தேவாரமுஞ் சிந்திக்க. மூளும் பெருகு அன்பு என்னும் மூர்த்தியார் என்ற தொடர்,  அன்பு மூண்டு பெருகிய அதுவே உருவாகி நின்ற என்பதைக்க  காட்டுகிறது.

    மூர்த்தி – உடல் – திருமேனி (வடிவம் என்பர்). மூர்த்திக்குள் இருந்து அதனை இயக்குபவர் மூர்த்திமான். ஆசனம் – மூர்த்தி- மூர்த்திமான் என்ற ஆகம பூசை முறையும் காண்க. மூர்த்தம் என்பதும் இது. மூர்த்தியார் மூர்த்தியை உடையவர். மூர்த்தியார் தாம் மூர்த்தியார் – என்க. மூர்த்தியார் பின்வந்தது பெயர். இவ்வாறு அடுக்கி மொழிந்து சிறப்பிப்பது ஆசிரியரது மரபு.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 154 (விண்ணவர்கள்)

    சேக்கிழார் பாடல் நயம் – 154 (விண்ணவர்கள்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு

    மெய்யன்பராகிய ஆனாயரின் குழலிசை கேட்டருளிய சிவபிரான், கருணை நிறைந்த உள்ளத்துடன்,  அவரைப்போன்ற  திருவுள்ளம்  படைத்த தவமுடைய பார்வதி தேவியுடன் இடப வாகனத்திலேறி, பிறைச்சடை முடியுடன் வான்வழியே வந்து சேர்ந்தார். எல்லாத்திசையிலும் புடை சூழ்ந்து பிரானின் பூதகணங்கள் கலந்து வருகின்ற பொழுதில் அவர்களில் பல்வேறு வகைப்பட்ட  ஒலிகள் கலவாமல், நாயனாரின் குழலிலிருந்து எழுந்த ஐந்தெழுத்திசை மட்டுமே விளங்கியது.  அதனைக் கேட்டவாறே, அவர் முன் எழுந்தருளினார்.   

    அப்போது தம் முன் நின்ற சிவபிரான் ஆனாய நாயனாரின் குழலோசை கேட்டு மகிழ்ந்தார். அவர் நாயனாரை, ‘’இப்படியே, குழலிசைத்தவாறே நாம் இருக்கும் கைலாயத்திற்கு வருக!’’   என்றழைத்தார். அவ்வாறே அடியாரும் தம் நிலை பெயராமல் சிவலோகத்துக்கு  வந்து சேர்ந்தார். அதனைச் சேக்கிழார்,

    விண்ணவர்கண் மலர்மாரி மிடைந்துலக மிசைவிளங்க,
    எண்ணிலரு முனிவர்குழா மிருக்குமொழி யெடுத்தேத்த,
    அண்ணலார் குழற்கருவி யருகிசைத்தங் குடன்செல்லப்,
    புண்ணியனா ரெழுந்தருளிப் பொற்பொதுவினிடைப்புக்கார்.

    என்று பாடினார்.

    இதன் பொருள்

    தேவர்கள் பொழியும் கற்பகப் பூமழை நெருங்கி உலகின்மேல் விளங்கவும், அளவில்லாத அருமுனிவர் கூட்டங்கள் மறைமொழிகளாலே எடுத்துத் துதிக்கவும், பெருமையுடைய ஆனாயர் குழலிசையை வாசித்துப் பக்கத்தில் உடன்செல்லவும், புண்ணியப் பொருளாயுள்ள சிவபெருமான் அங்குநின்றும் எழுந்தருளிப் பொன்னம் பலத்தினிடைப் புகுந்தருளினர்.

    விளக்கம்

    விண்ணவர்கண் மலர்மாரி  என்ற தொடர்,  தேவர்கள் பொழியும் பூமழையைக்  குறித்தது. . மலர் – கற்பகமலர். இவ்வுலகில் தெய்வ அற்புதங்கள் நிகழும்போது தேவர்கள் பூமழை பொழிவர்.  தேவருலகத்தில் இவ்வகைத் திருவருள் வெளிப்பாடான நிகழ்ச்சிகள் நிகழ்தற்கிடமில்லை யாதலின், அவர்கள் பூவுலகின் இவை நிகழக் கண்டபோது இவ்வாறு பாராட்டிப் பூமழை பொழிவர் , என்பதைக்  குறித்தது! இருக்குமொழி-  வேதமந்திரங்கள். இருக்கு  என்பது  நால்வேதங்களையும்  பொதுவாகக்  குறித்தது. இறைவன் திருவாக்கில் இருக்கும்மொழி என்பதும், என்றும் இருக்கும் நித்தியமான மொழி என்பதையும் குறிக்கும்.  மொழிகளால் ஏத்த என்க.

    அண்ணலார் – பெருமையுடையவர். உலகில் அவரது பெருமை விளங்கிய இடமாதலின் இப்பெயராற் கூறினார்.

    குழற்கருவி இசைத்து அங்கு உடன்செல்ல – குழல் வாசிப்பினைக் கேட்க, “நம்பால் அணைவாய்” என்று அருள்செய்யப் பெற்றாராதலின், அவ் வாணையின்படியே இறைவனருகில் குழல் இசைத்துச் சென்றார். அன்றுபோலவே இன்றும் என்றும் குழல் வாசித்து ஐயரின் அருகு ஆனாயர் எழுந்தருளி யிருக்கின்றார் என்க.

    “நான் மகிழ்ந்து பாடி
    அறவாநீ ஆடும் போதுன் னடியின்கீ ழிருக்க” வேண்டும்

    என்று அம்மையார் தாம் வேண்டிக்கொண்டபடி ஐயரது “எடுத்தருளும் சேவடிக்கீழ் என்றுமிருக் கின்றார்” என்ற சரிதம் இங்கு நினைவு கூர்தற்பாலது. மேலும் அடியார்களை ,

    “இடையறாமற் கும்பிடும் கொள்கை யீந்தார்” ,

    “தம்முன் தொழுதிருக்கும் அழிவில் வான்பதங் கொடுத்து”,

    “கணத்தின் முன்னாங்கோ முதற்றலைமை பெற்றார்”,

    “என்வலத்தில் மாறிலாய் நிற்க”,

    “துணையடிகள் தொழுதிருக்க” ,

    “நம் மன்னுலகு  பிரியாது வைகுவாய்”,

    “அரனார் மகனாராயினார்”

    “சிவலோகத்திற் பழவடிமைப் பாங்கருளி” ,

    “என்றும் பிரியா தேயிறைஞ்சியிருக்க” ,

    “வன்றொண்ட ராலால சுந்தர ராகித்தாம் வழுவாத, முன்னை நல்வினைத் தொழிற்றலை நின்றனர்;
    முதற்சேரர் பெருமானு நன்மை சேர்கண நாதரா யவர்செயு நயப்புறு தொழில்பூண்டார்” ,

    “கமலினி யாருட னனிந்திதை யாராகி, மலைத் தனிப்பெரு மான்மகள்
    கோயிலிற் றந்தொழில் வழிநின்றார்”

    என்றெல்லாம் கூறிய சிறப்பை அறிந்து கொள்ளுதல், வேண்டும்!

    புண்ணியனார் – புண்ணியங்களுக்கெல்லாம் பொருளாயும், பிறப்பிடமாயும், இருப்பிடமாயும், சேர்விடமாயும் உள்ளவர். சிவபெருமான்.

    இப்பாடலில்  ஆனாய  நாயனாரின் சிவபத்தித்திறம், அவர்தம் குழலிசையாகவே  வெளிப்பட்டதையும், அதன் சிறப்பை  நிலவுலகினரும், தேவருலகினரும் அதனைக்  கேட்டுப் போற்றிய சிறப்பையும்  விளக்கியது. இறைவன் திருவருளைப்பெற நாம், நாமறிந்தவற்றைச் செய்தாலே போதும் என்பதைக் குறித்து, இப்பாடல் நமக்கு வழிகாட்டுகிறது.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 153 (மெய்  அன்பர்)

    சேக்கிழார் பாடல் நயம் – 153 (மெய் அன்பர்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு

    மழநாட்டில் தோன்றிய ஆனாய நாயனார் ஆயர் குலத்தைச்  சார்ந்தவர். தூய திருநீறணிந்து வாயால் சிவநாமம் செப்பி,  பேயோடு ஆடும் பிரான் அடியையே போற்றுவார். ஆநிரைகளை, அகன்ற வெளியில் மேய்த்தார். கொடியவிலங்குகளாலும், நோய்களாலும்   அவை துன்புறாமல் காத்தார் . தன மாட்டுக் கொட்டில் வளரும் படிக்காப்பாற்றினார். அங்கே ஆநிரைகள் பெருகின. தம்மிடம் ஆயர்கள் பணி புரிய , அவர் புல்லாங்குழல் ஊதும் பயிற்சியில் சிறந்தார்.

    வேதமுறை கற்று, மூங்கிலில் சரியான அளவை வெட்டி, காற்று புகும் துளை , மற்றும் சுரத்தானங்கள் கொண்ட துளைகளை அமைத்துக் குழலிசைப் புலமை பெற்றார். அக்குழலில் சிவபிரானின் அஞ்செழுத்துடன், ஏழிசைச் சுருதி முறையில்  வாசித்தது அசைகின்ற ஆசையாய் பொருள்களைக் கவர்ந்து வாசித்தார். புல்லாங்குழலுக்குப் பூசை செய்து, தாமும் வெண்ணீறணிந்து அனைவரையும் கவர்ந்த அணிகலன்களுடன், நீறணிந்த மார்பில் வண்டு மொய்க்கும் முல்லை மாலை அணிந்தார்.

    தம் பாதத்தில் செருப்பணிந்து கையில் குழல் எந்தகி ஆயர் குழுவுடன் ஆநிரை மேய்க்கச்  சென்றார்.அப்போது, நீலநிறம் பொருந்திய பெரிய மயில்கள் அகவவும், வரிசையாகிய கொடிகளில் உள்ள வண்டுகள் முல்லைப் பண்ணைப் பாடவும், இந்திர கோபமாகிய வாயினில் வண்ணமுடைய வெள்ளிய  அழகிய முல்லையரும்புகள் புன்முறுவல் காட்டவும், அசைகின்ற மின்னலாகிய இடையும் சூழும் மாலைப்பொழுதாகிய முலை அசையவும் ஞாலமாகிய பெரிய அரங்கத்திலே

    ஆடுவதற்குக் காலம் என்கின்ற பருவத்தையுடைய பெண் வந்தனள்.

    ஆனாயர் தம் அடியார்களுடன் கொன்றி மரத்தைச்  சார்ந்தார். அக்கோன்டரை மரம் சிவபிரான் போலத்  தோன்றியது. அதன் நேரே நின்று  உள்ளம் உருக, சிவபத்தித் திறம் தோன்றக் குழல்  இசைத்தார்.  பக்தி பொங்கும் இசையில் ஐந்தெழுத்தை வாசித்து,ஏழு துளைகளில் விரல் தடவி,   எல்லாவுயிர்களின்  எலும்பும்   கரைந்து உருகும் வண்ணம், மூங்கில் குழற் கருவியில்  வாய் வைத்து ஊதினார். அது வண்டு  மலரை மொய்ப்பது போல் இருந்தது!

    குழலின் துளைகளில்  ஊதிய படியே ஓசையின் ஏற்ற இறக்கங்களைச்  சோதித்துப்  பண்ணிசை பெருக, இசையின் வகைகள் அனைத்தும் சேர முல்லைப்பண்ணில் சடைமுடியார் சிரமசைக்கத் தானம் முதலான ஓசைவகைகள் ததும்ப ஐந்தெழுத்தை இசைத்தார். வலிவு, மெலிவு, மத்திமம் என்ற வகைகளில் குழல் துளைகளில் விரலிட்டு அழுத்தி, இசையை எங்கும் பரப்பினார்.

    அவர் இசைத்த ஓசை நிலமெங்கும் பரவி வானகத்தேவர்களைக் கவர்ந்தது. அவர்முன் எல்லாவுயிர்களும்  தம்மை மறந்து நெருங்கின. பசுக்களும், மான்களும் பாலூட்டும் கன்றுகளும் பெரிய கொம்புடைய காளைகளும் மெய்  சிலிர்த்து வந்தன. மயில்களும் பறவைகளும் நெருங்க, மாடு மேய்ப்பவர்களும் தொழிலை மறந்து கூடினர். உலகெங்கும் உள்ளோர், குழலிசைக்கு மயங்கினர். வானத்து தேவ மகளிர், வித்யாதரர்கள், சாரணர்கள், கின்னரர்கள், தேவர்கள், வான் வழியே வந்திறங்கினர். தேவமகளிர்கள் கற்பகப் பூஞ்சோலைகளின் பக்கத்திலிருந்து மலர்போன்ற தமது கைகளால் அமுதூட்டும் கனி பொருந்திய வாயினையுடைய மெல்லிய கிளிகளுடனே தமது கூந்தல் அலையும்படி தத்தம் விமானங்களில் விரைவாக ஏறிவந்து பரவிய ஏழிசை யமுதத்தினைப் பருகினார்கள்.

    வலியோரும் மெலியோரும்  உணர்வு ஒன்றிக் கேட்டலால் , பாம்புகளும் மயில்களுடன் சேர்ந்து வரும்; சிங்கமும் பெரிய யானையும் சேர்ந்து நிற்கும்; புலியின் வாயருகே மான்கள் சேர்ந்து நிற்கும்;  அவை காலை எடுத்து வைக்கவில்லை; மரங்கள் மலர்களை அரும்ப வில்லை; அருவிகளும் காட்டாறுகளும் ஒலிஎழுப்பி ஓடவில்லை; மேகங்கள் மழை பொழிய மறந்தன;

    இடிகள் முழங்க வில்லை; கடலையையும் ஓய்ந்தன;

    இவ்வாறு அசையும்,  அசையாப்  பொருள்கள்  இசைவயப்பட்டன; அவற்றின் புலன்களும் அந்தக்கரணங்களும் அடியாரின் குழலிசையால் உருகின! உண்மையான அடியாரின் குழலிசை வையமும் வானமும் நிறைந்தது! அடுத்துச் சேக்கிழார் பாடுகிறார்..

    பாடல்

    மெய் அன்பர் மனத்து அன்பின் விளைந்த இசைக் குழல் ஓசை
    வையம் தன்னையும் நிறைத்து வானம் தன் வயம் ஆக்கிப்
    பொய் அன்புக்கு எட்டாத, பொன் பொதுவில் நடம் புரியும்
    ஐயன் தன் திருச் செவியின் அருகு அணையப் பெருகியது ஆல்.

    பொருள்

    மெய்யன்பரது அன்பினால் விளைந்த குழலினது இசையோசையானது இந்த உலகத்தையும் நிறைவித்து வானுலகத்தினையும் தன் வசமேயாகச் செய்து, பொய்யன்பினுக்கு எட்டாதவரும், பொன்னம்பலத்தினில் திருக்கூத்து இயற்றுகின்றவரும் ஆகிய ஐயரது திருச்செவியின் பக்கத்தில் அணையும்படி பெருகிற்று.

    விளக்கம்

    மெய்யன்ப ராதலின் அவரது மனத்து அன்பின்விளைந்த குழலோசை ஆண்டவர் திருசசெவியின் அருகு அணையப் பெருகியது என்பது குறிப்பு. இதனையே வலியுறுத்துவார் பொய்யன்புக் கெட்டாத என்று எதிர்மறை முகத்தானுங்கூறினார்.

    குழல் இசை  பேரோசையாகப்  பெருகிய.ஓசை . அவ்வோசை வையத்தையும்  வானத்தையும்  நிறைத்து, இறைவன் திருச்செவியையும் நெருங்கியது!

    நிறைத்து – வயமாக்கி – பெருகுதல் – என்ற தொழிற்பாடுகளின் உள்ளுறை குறிக்கத்தக்கது. தூல சூக்கும காரணநிலைகளுக்கேற்றவாறு கூறியது கண்டு கொள்க. புடைபெயர்ந்து ஒன்றை யொன்று பரம்பரையிற் றொடர்ந்து சென்று மறைவது ஒலியலைகளின் இயல்பு. நீரினுட் போகட்டதொரு கல்லினால் முதலில் அதனைச்சுற்றி மூண்ட அலைகள் உளவாம். பின் அவற்றைத் தொடர்ந்து தளர்ந்த அலைகள் உளவாம். பின்னர் அவ்வாறு மெலிந்து கொண்டே சென்று இறுதியில் ஒன்றும் அசையாமைபோல அவை மிக மெலிந்து காணப்படும். அது போலவே ஒலியலைகளும் உண்டாகும் இடத்தினின்றும் மேன்மேற் கிளம்பிச் சென்று சென்று இறுதியில் அதி சூக்குமமாகிய காரணத்தில் ஒடுங்கும். இங்கு ஆனாயர் குழலிசை ஓசை முதலில்  தூலமாகிய ஒலியலைகளாக எம்மருங்கும் பரவி வையத்தை நிறைத்து, அதன்பின் சூக்கும ஒலியலைகளாகமேற்பரவி வானத்தைத் தன் வயமாக்கி, அதன்மேல் அதிசூக்குமமாகிய காரண ஒலியுருவில் ஐயர் திருச்செவியின் அருகு அணையும்படி பெருகியது. அலைகள் முதலில் நாற்புறமும் சுருங்கக் கிளம்பிப் பின்னர் மேன் மேல் விரிவாகப் பெருகுமியல்பு பற்றிப் பெருகியதால் என்ற குறிப்பும் காண்க.

    இஃது எல்லாக் குழலோசைகட்கும் எல்லா ஓசை ஒலிகட்கும் இயல்பாமே? எனின், அற்றன்று; பூதசம்பந்தமாய் வையந்தன்னை நிறைத்த மட்டில் நின்று ஒழியும் ஏனைத் தொனியான்மக ஓசைகள் போலல்லாமல் இஃது அஞ்செழுத்தை உள்ளுறையாகக் கொண்டொழுகிய வர்ணான்மக ஓசையானதால் ஐயன் றிருச் செவியின் அருகணையப் பெருகியதென்க.

    ஆனாயரது குழலிசை இம்மை, மறுமை, வீடு என்னு மூன்றினையும் தரவல்லதாயிறறென்பதாம். வைய நிறைத்ததனால் இம்மையும், வானம் தன்வயமாக்கியமையால் மறுமையும், ஐயன்றிருச் செவியினருகணைதலால் வீடும் அளிக்கவல்லதாயினமை கூறப்பட்டது. இறைவனைப் பாடுதல் இம்மூன்று பயன்களையும் அளிக்கவல்லதென்பது

    “எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்,
    இம்மையேதருஞ் சோறுங் கூறையும்; ஏத்த லாமிடர் கெடலுமாம்,
    அம்மை யேசிவ லோக மாள்வதற் கியாதுமையுற வில்லையே”

    என்ற ஆளுடைய நம்பிகள் திருவாக்கா னறிக. பொய்யன்புக் கெட்டாத – ஐயன் – எனக் கூட்டுக.

    “பொக்க மிக்கவர் பூவு நீருங் கண்டு,
    நக்கு நிற்ப னவர்தமை நாணியே”

    என்பது தமிழ்மறை. ஐயனது பொற்பொது என்றது மெய்ஞ்ஞானமேயான அம்பலத்தை. எட்டாத பொற்பொது என்று கூட்டி உரைத்தலுமாம். பொற்பொது – பொன்னம்பலம்.

    மெய் அன்பு – மன மொழி மெய்என்ற மூன்றானும் சிவபெருமானையல்லாது வெறொன்றினையும் பற்றாத அன்பு. அங்ஙன மல்லாது தம்மையும் உலகையுமே பற்றுக்கோடாகக் கொண்டு செலுத்தும் அன்பு பொய்யன்பாம்.

    ஐயன்  திருச் செவியின் அருகணையப் பெருகுதலாவது கீழுள்ள தத்துவங்களை யெல்லாம் கடந்து சுத்த தத்துவத்தில் விளங்கும் இறைவனிடமும் செல்லும்படி வியாபித்தல்.ஆயின்,

    “சகஸ்ர சீரிஷாத் புருஷ சகஸ்ராட்ச சகஸ்ரபாத்” எனவும்,

    ஆயிர ஞாயிறு போலு மாயிர நீண்முடி யானும்”   எனவும்,

    ஆயிரங் கமல ஞாயி றாயிரமுக் கண்முக கரசர ணத்தோன்”எனவும்,

    “எங்கும் திருமேனி” (திருமூலர்) எனவும், “எங்கணும் பணிவதனங்கள்”  எனவும், “எங்குஞ் செவியுடையாய்”  எனவும்

    வரும்திருவாக்குக்களா லறியப் படுகின்றபடி எங்கும் நிறைந்து எல்லாம்கேட்பது இறைவனது தன்மையாதலின், இங்கு “ஐயன் றிருச்செவியி னருகணையப் பெருகியது” என்றது  என்னையோ? எனின், “அவன் மற்றிவ்விடங்களிற் பிரகாசமாய் நின்றே அல்லாதவிடத்து அப்பிரகாசமாய் நிற்றலான்”  என்ற  சிவஞானபோத  ஏதுவை விளக்குவாராகி, “அம்முதல்வன் யாங்கணும் வியாபகமாய் நிற்பினும் இவ்விரண்டிடத்து (பத்தரது வேடமும் சிவாலயமும்) மாத்திரையே தயிரின்நெய் போல விளங்கி நிலைபெற்று, அல்லுழியெல்லாம் பாலினெய்போல வெளிப்படாது நிற்றலான்” என்று எமது மாதவச் சிவஞான சுவாமிகள் சிற்றுரையினுள் உரைத்தது கொண்டு இதனை  அமைவுபடுத்திக் கொள்ளத்தக்கது.

    அன்பின் விளைந்த இசையாதல் பற்றியே, இறைவரும், இது கேட்டவுடன் வெளிப்பட்டுவந்தனர் என மேல்வரும் பாட்டிற் கூறுதலும் கருதுக.

    திருச்செவி – என்பது அரன்றன் கரசரணாதி சாங்கமெல்லாம் அருளே என்ப; ஆதலின் ‘சிவனடிசென்னி வைப்பாம்’ என்பது போல உபசாரம். இறைவனுக்கு அருளே திருமேனியாம். அத்திருமேனியில் கண் செவி முதலாகிய அவயவப் பகுப்பெல்லாம் அருளே. இக்கருத்துப்பற்றியே

    “இத்தன்மை நிகழுநாளிவர் திருத்தொண் டிருங்கையிலை,
    யத்தர்திரு வடியிணைக்கீழ்ச் சென்றணைய வவருடைய,
    மெய்த்தன்மை யன்புநுகர்ந் தருளுதற்கு விடையவர்தாஞ்,
    சித்தநிகழ் வயிரவராய்த் திருமலைநின் றணைகின்றார்”

    என்று சிறுத்தொண்டநாயனார் புராணத்துட்கூறுதலுங் காண்க.

    இப்பாடலில் ஓசையின் செயல்களும், அளவைகளான்  அறியப்படும் அறிவியல் கருத்தும் இணைந்து,  அறிவியலையும் ஆன்மிகத்தையும் துல்லியமாக  இணைத்து விளக்கும்  நுட்பத்தைக்  காட்டுகிறது!

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 152 (ஒப்பில்)

    சேக்கிழார் பாடல் நயம் – 152 (ஒப்பில்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    இலை மலிந்த சருக்கம்
    ஆனாய நாயனார் புராணம்

    திருத்தொண்டர் புராணத்தின்  இலைமலிந்த சருக்கத்தின்கண்  அமைந்த ஆனாய நாயனார் புராணம் இனி இப்புராணத்தில் கூறப்பெறும்  முன் வரலாற்றைக் காண்போம்.சோழ நாட்டில் மழநாடு எனப்பெற்ற  நீர்வளம் நிறைந்த நாட்டில், வயலில் கரும்பும் வாழையும் செந்நெல்லும் விளைந்தன. வயல்களை மருங்கில் மான்களும் ஆடுகளும் தாவிக் குதித்தன. இவ்வாறு ஒப்பற்ற வளம் மிகுந்த மழநாட்டைச்  சேர்ந்த  திருமங்கலம் என்ற ஊரில், வயல் வளத்துக்கேற்ற மனவளமும் அறவளமும்  பெற்றோர் நிறைந்த ஆயர் குலத்தில் ஆனாயர் என்ற அடியார் இருந்தார். அவரைப் பற்றிச் சேக்கிழார் கூறுகிறார்,

    பாடல் :

    ஆயர் குலத்தை விளக்கிட வந்து உதயம் செய்தார்
    தூய சுடர்திரு நீறு விரும்பு தொழும்பு உள்ளார்;
    வாயின் இன் மெய்யின் வழுத்து மனத்தின் வினைப் பாலின்
    பேய் உடன் ஆடு பிரான் அடி அல்லது பேணாதார்.

    பொருள்:

    (அவர்) ஆயர்குலத்தை விளக்கம் செய்திட இவ்வுலகில் வந்து அவதரித்தவர்; தூயஒளி வீசுகின்ற திருநீற்றினை விரும்பும் திருத்தொண்டில் நின்றவர்; வாக்கினாலும், உண்மைபெற வழுத்தும் மனத்தினாலும் செயல் வகையினாலும் பேயோடாடுகின்ற சிவபெருமான் றிருவடிகளை யல்லது வேறொன்றினையும் பேணாதவர்.

    விளக்கம்:

    குலத்தை விளக்கிடஎன்ற தொடரில்,  குலத்தை விளக்குதலாவது சிவ வழிப்பாட்டில் நிறுத்தி வழிகாட்டுதல். இவர் அவதரித்த குலம் என்று இவரால் குலம் உலகில் விளங்கப் பெறுதல் என்றலுமாம். திருத்தொண்டத் தொகையினுள் திருமூலரும் இந்நாயனாரும் ஆகிய இவரே ஆயர் குலத்தவராவர், அவருள் சிவ யோகியாரான திருமூலர், இறந்துபோய்க்கிடந்த மூலன் என்ற இடையனது உடலினுட் புகுந்து மூலராய் விளங்கியவர். எனவே, இந்நாயனார் ஒருவரே ஆயர் குலத்திற்றோன்றியபடி சிவனடியாராய் விளங்கி அந்நிலையே சிவலோகத்திலும் வாழ்பவர். ஆதலின் இவ்வாறு சிறப்பித்தார்.

    உதயம் செய்தார் – கதிரவன் போலத் தம்மைச்சுற்றிய அனைவருக்கும் ஒளியைச் செய்தார் என்பதைக் காட்டுகிறது.

    தூய சுடர்த்  திருநீறு விரும்பு தொழும்பு  என்ற தொடர் திருநீற்றின் தூய்மையையும்  ஒளியையும்குறித்தது! தொழும்பு என்பது  திருநீறு வீடு தரும் சாதனம் என்று கொண்டு அதற்குத் தொண்டு புரிதல். “நீற்றினை நிறையப் பூசுதலும், நீறு பூசினாரைக் காணில் காதல் கொள்ளுதல் – உள்ள முருகுதல் – போற்றுதல் – அவர் வேண்டுவன செய்தல் முதலியவையும் திருநீற்றுத்தொண்டு எனப்படும். சிவபெருமான்  திருத்தொண்டாவன திருநீற்றுத் தொண்டேயாம் என்றலும் பொருந்தும்.

    வாயினின்மெய்யின்  வழுத்தும்  மனத்தின் வினைப்பாலின்  என்ற  அடி,  வாக்கு, மனம், காயம் என்ற மூன்றையும் குறித்தது. அவற்றின் வழியே செய்யும் திருத்தொண்டையும் குறித்தது.

    மெய்யின் வழுத்தும் மனத்தின் – மெய் – உண்மை. உண்மை கூர்தரச் சிந்திக்கும் மனத்தினால். உண்மை கூர, நினைப்பவர் மனத்தினுள் இறைவர் வெளிப்பட நின்றருளுவர்.

    “நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே, புக்குநிற்கும்
    பொன்னார்சடைப் புண்ணியன்”,

    “கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால், விரவாடும் பெருமானை”,

    “வஞ்சனையா லஞ்செழுத்தும் வழுத்து வார்க்குச் சேயானை” ,

    “மெய்மையன் பருள்மெய்மை மேவினார்”

    முதலிய திருவாக்குக்கள் காண்க.

    வினைப்பால் – என்பதற்குச் செயலின் பொதுமை என்றும், மெய் – உடம்பு – காயம் – என்றும் கொண்டு, வாய், மெய், மனம் என்ற மூன்றின் செயலால் எனத் தனித்தனி கூட்டி உரைத்தலுமாம்.

    “மானிடப் பிறவி தானும் வகுத்தது மனவாக்காயத்,
    தானிடத்து  ஐந்தும்  ஆடும்  அரன்பணிக் காக வன்றோ”

    என்று சிவஞான சித்தியார்  கூறும்.

    பேயுடன் ஆடும் பிரான் சிவபெருமான். பேய் – சிவகணமாகிய சுத்த தத்துவ உடம்புடைய நற்கணம். சிவபூதங்கள். பௌதிகமாகிய வாயு சரீரமுடைய பைசாசங்களல்ல .

    “பேயாய நற்கணத்தி லொன்றாய நாம்”

    என்றகாரைக்கால் அம்மையார் திருப்பாட்டும்

    “பாரிடம் பாணி செய்யப் பறை கட்சிறு பல் கணப் பேய்,
    சீரொடும் பாடல்  ஆடல் இலயம்  சிதை யாத கொள்கை”

    என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரமும்  கண்டு பொருளுணர்ந்து கொள்க.

    பேயோடாடி என்பது  நிகண்டில் சிவபெருமானது பெயர்களிலொன்றாக ஓதப்படுதலும் காண்க. பேயோடாடுதல் அவரது நித்தியத்துவம் பரத்துவம் முதலிய தன்மைகள் குறிக்கும்.

    அடி அல்லது பேணாதார் – எதிர்மறையாற் கூறினார் நியதி பிழையாமையும் உறுதிப்பாடும் குறித்தற்கு.

    இப்பாட்டால் ஆனாயரது உயிரின் நிலையாகிய அகவாழ்வாகிய சிவச்சார்பு கூறப்பட்டது. வரும்பாட்டில் உடல் பற்றிய புறவாழ்வாகிய உலகநிலை கூறுவார். உயிர்பற்றிய அகவாழ்க்கையின் சிறப்பு நோக்கி அதனை முன்வைத்தோதினார்

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 151 (பரிவுறு)

    சேக்கிழார் பாடல் நயம் – 151 (பரிவுறு)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    பாடல்

    பரிவு உறு சிந்தை அன்பர் பரம் பொருளாகி உள்ள
    பெரியவர் அமுது செய்யப் பெற்றிலேன் என்று மாவின்
    வரிவடு விடேல் எனா முன் வன் கழுத்து அரிவாள் பூட்டி
    அரிதலால் அரிவாட்டாயர் ஆயினார் தூய நாமம்.

    வரலாறு

    சாய்க்கடையில்  அமுது வீழ்ந்தது கண்ட தாயனார், என்னை ஆட்கொள்ளும் பிரான் அமுது செய்யக் காணும் பேற்றைப் பெற்றிலேன் என்றெண்ணி அரிவாளைக் கழுத்தில் பூட்டி, ஊட்டியையும் அரிந்து கொண்டார். அப்போது இறைவன் திருக்கரம்,‘’ சாய்க்கடையில் விடாதே’’ என்றபடி அவரளித்த மாவடுவைக் கடிக்கும் ஒலியுடன் அடியாரின்  கையைத் தடுத்து  எழுந்தது! உடனே அடியாரின் கை ஆண்டவன்  திருக்கரத்தின்  தொடர்பால் அவரது உடலின் காயம் நீங்கி, வணங்கிய கரமாயிற்று.

    ‘’அடியேனின் அறியாமை கண்ட பின்னும் என் அடிமைத்திறம் விரும்பி  இந்தச்  சாய்க்கடையிலும் தோன்றி  அடியேன் அளித்த உணவை அமுது செய்த , பரனே  போற்றுகின்றேன்! என்னைத் தடுத்த இடக்கரத்தை யுடைய அம்பிகை பாகனே, போற்றுகின்றேன்! நீறணி மேனியனே போற்றுகின்றேன்’’

    என்று வணங்கினார். அப்போது , தம் இடப வாகனத்தில் எழுந்தருளி, ‘’நீ புரிந்த தொண்டு நன்று! உன் மனைவியுடன் இப்போதே நம் திருக்கயிலாயம் அடைந்து வாழ்வாய்!’’ என்று கூறி விடையேறி மறைந்தார். இதனைச் சேக்கிழார்,

    பரிவு உறு சிந்தை அன்பர் பரம் பொருளாகி உள்ள
    பெரியவர் அமுது செய்யப் பெற்றிலேன் என்று மாவின்
    வரிவடு விடேல் எனா முன் வன் கழுத்து அரிவாள் பூட்டி
    அரிதலால் அரிவாட்டாயர் ஆயினார் தூய நாமம்.

    என்று பாடினார்.

    பாடல்

    பரிவு உறு சிந்தை அன்பர் பரம் பொருளாகி உள்ள
    பெரியவர் அமுது செய்யப் பெற்றிலேன் என்று மாவின்
    வரிவடு விடேல் எனா முன் வன் கழுத்து அரிவாள் பூட்டி
    அரிதலால் அரிவாட்டாயர் ஆயினார் தூய நாமம்.

    பொருள்

    அன்பு பொருந்திய சிந்தையினையுடைய அன்பராகிய தாயனார், “பரம்பொருளாகியுள்ள பெரியவராகிய சிவபெருமான் இங்கு அமுது செய்யும் பேறு பெற்றிலேன்” என்று கொண்டு வரியினையுடைய மாவடுவினது “விடேல்” என்ற ஓசையினை அவர் கேட்பிக்கு முன்பு, தம் வன் கழுத்தினை அரிவாளினைப் பூட்டி அரிதலினாலே அரிவாட்டாயர் என்ற தூய பெயரினை உடையர் ஆயினர்.

    விளக்கம்

    இப்பாட்டுக் கவிக்கூற்று. பரிவுறு சிந்தை என்ற தொடர்  பரிவு – அன்பு. மாசறு சிந்தை உடைய  அன்பர் என்பதைகள் குறித்தது. பரம்பொருளாகியுள்ளபெரியவர்  என்ற தொடர்,  எல்லாப் பொருள்களுக்கும்

    அப்பாற்பட்ட – கடந்த – எல்லையாயுள்ள பரம்பொருளைக் குறித்தது.

    அமுது செய்யப்பெற்றிலேன் என்பது உண்ணுதலைக் காணும் பேறு பெற்றிலேன்  என்று பொருள் படும்.

    வரிவடு என்பது  நிறமுடைய மாவடுவைக் குறித்தது.

    வன்கழுத்து என்பது,  அரிந்தும் அரியுண்ணாமலும், பின்னர் அருளால் ஊறுநீங்கியும், இறைவனதுகழுத்துப்போல என்று நிலைத்த வாழ்வுபெற்றும் விளங்கிய தன்மை குறிக்க வன்மை என்ற அடைமொழி தந்து கூறியதைக் காட்டும்.

    நாமம் – தாயன் என்பது அவரது பெயர்.  அவருடைய தாயன்பைக் காட்டியது. அர் – உயர்வு குறித்த பன்மை விகுதி.  தாயனார் .

    தூய நாமம் அரிவாட்டாயர் ஆயினார் என்க. தூய – தூய்மையைத் தரத்தக்க. திருத்  தொண்டத்தொகையுள் ஆளுடைய நம்பிகள் இக்கருத்துப்பற்றியே

    “எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கு மடியேன்” என்று துதிக்க நின்றமையும், அதனைத் துதித்து உலகம் தீமை நீங்கித் தூய்மை பெற்று உய்கின்றமையும் குறிக்கத் தூய என்றார். அடியார் திருநாமங்கள் தூய்மை செய்வனவாம் என,

    “அடியிணைகள்,
    சிந்தனைசெய் திந்தத் திருநாமக் கோவையினை,
    மந்திரமாக் கொண்டு மயிர் சிலிர்த்து – நைந்துருகி,
    மெய்யன்பா லென்றும் விளம்பப் பெறுவார்கள்,
    கைதவமும் புல்லறிவுங் கற்பனையும் – மையலுந் தீர்ந்,
    தத்துவிதா னந்த வகண்டபரி்பூரணத்தில்,
    நித்தியமாய் வாழ்வார் நிசம்”

    என்று திருத்தொண்டர் திருநாமக் கோவையினுள் எமது மாதவச் சிவஞானசுவாமிகள் போற்றி அருளியிருப்பது காண்க.

    “திருஞான சம்பந்தர்” என்ற நாமமந்திரம் சொல்லக் கேட்டலும் பாண்டியர் அயர்ச்சியை நீங்கினார் என்ற வரலாறும் இங்கு நினைவு கூர்க.

    இப்பாடலில் தாய் அன்னாராகிய தாயனார், தம்  அன்புத்தொண்டு பழுதாகக் கண்டு தாமே தண்டித்துக் கொள்ள முயன்ற செயலும், இறைவன் அந்த இடத்தில் தாமே தோன்றி  தாயானார் ஊறு  நீக்கியதும்,  கமரில் சிந்திய உணவை  நிவேதனமாக  அங்கேயே மாவடு கடிக்கும் ஓசையுடன் இறைவன் அமுதுசெய்த கருணைத் திறத்தையும், அரிவாளை எடுத்து  ஊட்டியை அரிந்து  கொண்ட அடியாரின்  செயற்கரிய செயலையும்  உணர்த்தி, நாயனாரின்  திருப்பெயர் ‘அரிவாள் தாயனார்‘ என்று அழைக்கப் பெற்ற  சிறப்பும் விளங்குகிறது! அதற்கும் மேலாக அரிவாள் ஏந்திய தாய்அன்னார் என்ற பொருள்படும் அரிவாட்டாயனார் என்ற முரண்பட்ட தொடர், புதிய நகை முரண்  கொண்டு விளங்குவதையும்  குறிப்பாக அறிந்து கொள்கிறோம்!

    Share