Category: கட்டுரைகள்

கட்டுரைகள்

  • முயற்சி பண்ணுகிறேன்

    நிர்மலா ராகவன்

    உத்தியோகத்திற்கான பேட்டியில்:

    “இந்த வேலையில் சேர்ந்தால், நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்குமே!”

    “கடுமையான உழைப்பு யாரையும் சாகடித்தது கிடையாது!” இப்படிச் சொன்னவருக்கு வேலை கிடைத்தது.

    `முயற்சி செய்கிறேன்,’ என்று சொல்லியிருந்தால், அது அரைமனதான பதிலாக இருந்திருக்கும் — `பார்க்கலாம்,’ என்று தட்டிக்கழிப்பதுபோல்.

    ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்ய ஒத்துக்கொள்பவர், `சரி,’ அல்லது `இப்போது முடியாது,’ என்று கூறினால், அவர் முழுமனதுடன் அதில் ஈடுபடுவார் என்ற நம்பிக்கையாவது எழும்.

    `எனக்கு அவனைவிடத் திறமை அதிகம். படிப்பிலும் நான் அவனை மிஞ்சியவன்! அவனுக்கு என்னமோ அதிர்ஷ்டம்!’ என்று தன்னை மிஞ்சிவிட்ட ஒரு நண்பனைப் பார்த்துப் பொருமுகிறவர்களைப் பார்த்திருப்பீர்கள்.

    அறிவும் திறமையும் முக்கியம்தான். ஆனால், அவற்றை முழுமையாக வெளிக்காட்ட கடும் உழைப்பு வேண்டாமா?

    சிலர் ஒரு காரியத்தை ஆரம்பிப்பார்கள். ஆரம்பித்த வேலை நீண்டுகொண்டே போனால், `இதற்கு என்னதான் முடிவு!’ என்ற அலுப்பு ஏற்படும். அப்போது அரைகுறையாக, எப்படியோ செய்து முடிக்கத் தோன்றிவிடும்.

    வேலை செய்யும் தருணங்களை ரசித்தால், செய்பவருக்கு மகிழ்ச்சி கிட்டும். எடுத்த காரியமும் சிறப்பாக அமையும்.

    பிடிக்கிறதோ, இல்லையோ, செய்துதான் ஆகவேண்டும் என்ற நிலை வரும்போது, முழுமனதுடன் ஈடுபட்டால் செவ்வனே செய்து முடிக்க முடியும்.

    எதுவாக இருந்தாலும், படைப்பவர் ரசித்துச் செய்தால்தான் பிறருக்கு மகிழ்ச்சி ஏற்படும். சமையல், இசை, எழுத்து – எதுவாக இருந்தார் என்ன!

    “சமைப்பது என்றால் எனக்கு வெறுப்பு! மிளகாய் நெடியால் தும்மிக்கொண்டே, எதற்கு அந்த வேலை!” என்று அலுத்துக்கொள்வாள் என் தோழி ஒருத்தி.

    அவள் சமைத்ததை அன்றாடம் சாப்பிட வேண்டியிருக்கும் குடும்பத்தினரிடம் பரிதாபம்தான் எழுந்தது எனக்கு.

    “நான் எத்தனை வருடங்களாக எழுதுகிறேன்! எனக்கு ஒரு பட்டம்கூடக் கிடைக்கவில்லை,” என்று என்னிடம் குறைப்பட்டார் ஒரு பத்திரிகை ஆசிரியர்.

    பரிசுகளும், பட்டங்களும் பெறலாம் என்ற நோக்கத்துடன் எழுத ஆரம்பித்தால் அந்த இலக்கே சரியில்லை. எத்தனை கால அனுபவம் இருந்தாலும், புதிய விஷயங்களைக் கற்று, காலத்திற்கேற்ப எழுதுவது ஒருபுறமிருக்க, எழுதும்போதே மகிழ்ச்சியாக உணர்ந்தால்தான் ஒருவரது படைப்பு சிறப்பாக அமையும். எழுதுபவரது மகிழ்ச்சி பிறரை போய்ச்சேரும்.

    எந்தக் காரியமானாலும் அதை ஒரு சவாலாக ஏற்று, விடாமுயற்சியுடன் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும்.

    வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவால் என்று நினைத்து, அதன்படி செயல்படுகிறார்கள் சிலர்.

    இது அறிவுடைமையா, முட்டாள்தனமா?

    கதை

    சரவணன் ஒரு பெண்ணை மணந்தான். காதல் வயப்பட்டு அல்ல. அவள்மேல் பரிதாபப்பட்டு. அவளுக்கு ஏதோ வியாதி. `நம்மை விட்டால் வேறு யார் இவளை மணக்கப்போகிறார்கள், பாவம்!’ என்று எண்ணினான்.

    மணந்தபின், நோஞ்சானான அவளுடைய உருவத்துக்கும் மனதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று.

    கணவனை வார்த்தைகளாலேயே துளைத்தாள் — தான் கிடைத்தற்கரிய பிறவி, அதனால்தான் இந்த முட்டாள் தேடிவந்து மணந்தான் என்றெண்ணியவளாக. `எந்த விஷயத்திலும்’ ஒத்துழைக்கவில்லை.

    மிகவும் குழப்பத்திற்கும் வருத்தத்திற்கும் ஆளான சரவணன் என்னிடம் ஆலோசனை கேட்டபோது, “மனைவியாகத் தன் கடமையைச் செய்ய மறுப்பவளுடன் எதற்குச் சேர்ந்து வாழவேண்டும்? இவளை விவாகரத்து செய்ய வேண்டியதுதான்!” என்றேன்.

    “அது பாவமில்ல?” என்று குழம்பியவனிடம், “உங்கள் சந்தோஷம் மட்டும் முக்கியமில்லையா? உங்களுக்கு இன்னும் இளமை இருக்கிறது. ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்து, இன்னொரு கல்யாணம் செய்துகொள்ளுங்கள். எத்தனை காலம் இப்படியே நொந்துபோய் இருப்பீர்கள்?” என்றேன் வற்புறுத்தலாக. வேறு வழி தெரியவில்லை.

    அப்படியே செய்தான். சில மாதங்களுக்குப்பின், “நீங்க சொன்னபடி செய்தேன். இப்போ ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன், ஆன்ட்டி,” என்று தெரிவித்தான்.

    பெண்கள் இவ்வளவு சீக்கிரம் திருமண வாழ்வை முறித்துக்கொள்ள மாட்டார்கள்.

    உயிர் போகும் நிலையில் காப்பாற்றப்பட்டு, அந்த மாது மறுவாழ்வு நிலையத்தில் இருந்தபோது சந்தித்தேன்.

    சுமார் முப்பது வருடங்கள் கணவரிடம் வன்முறையைத் தவிர வேறு எதையும் அனுபவித்திராதவள், “அவர் மாறுவாருன்னு பொறுமையா இருந்தேங்க,” என்றாள். அப்போதும் அவளுக்கு அடுத்து என்ன செய்வது என்ற தெளிவு இருக்கவில்லை.

    தன்னம்பிக்கையை இழந்தவர்களிடம் எந்த ஆற்றலையும் எதிர்பார்க்க முடியாது.

    கெண்டகி fried சிக்கன் நிறுவனத்தை ஆரம்பித்தபோது, கர்னல் ஸாண்டர்ஸ் என்பவருக்கு 67 வயது. அதற்குமுன், தெரு ஓரத்தில் ஒரு சிறிய உணவுக்கடை வைத்திருந்தார். வேறு ஒருவர் அப்பண்டத்தை விற்றபோது, அதில் குறை கண்டுபிடித்து, அதைவிடச் சிறப்பாகத் தயாரித்து, பெரும் வெற்றி பெற்றார்.

    இளம்வயதில் பண்ணையாளாக, பஸ் கண்டக்டராகப் பணி புரிந்திருந்த ஒருவர் தனது 88-வது வயதில், உலகிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்த துரித உணவுச் சங்கிலியின் (fast food chain) நிறுவனராக எப்படி ஆனார்?

    தன் திறமையில் அவருக்கு நம்பிக்கை இருந்தது. பிறர் பாராட்டாவிட்டாலும், பின்வாங்காது தன் இலக்கைக் குறிவைத்துச் சென்றார். கடுமையாக உழைக்கப் பயந்து, பின் வருத்தப்படுவது எதற்காக?

    வழியில் எத்தனையோ தவறுகள் வந்திருக்கலாம். அவைகளிலிருந்து சரியான வழி எது என்று கற்றிருப்பார்.

    பிறர் பொறாமைப்படுவதற்காகப் பெருமைப்படவேண்டுமே அல்லாது, பயந்துவிடக்கூடாது என்று புரிந்திருப்பார்.

    `கிட்டத்தட்ட தொண்ணூறு வயதிலும் தன் அனுபவங்களையும், திறமையையும் கொண்டு சாதித்திருக்கிறாரே, இவருக்கெல்லாம் உடலில் அப்படி ஒரு பலமா!’ என்ற பெருவியப்பு எழுகிறதா?

    மனிதனோ, மிருகமோ, என்றென்றும் ஆரோக்கியமாக இருப்பது என்பது நடக்காத காரியம். இது புரியாது, உடல்நலம் பாதிக்கப்பட்டால், தன்னைப் பார்த்துத் தானே பரிதாபப்பட்டுக்கொண்டு இருந்தால் யாருக்கு நஷ்டம்?

    ஒருவருக்கு இடுப்புவலி. மருத்துவர் slip disc என்று ஏதோ பெரிய பெயர் சொல்ல. மனிதர் பயந்துவிட்டார். அதன்பின், உடல்நிலை சரியானபோதும், மாடிப்படிகளில் ஏற பயம். மிகக் கனமான சாமான்களைத் தூக்க முடியாது என்றால் நியாயம். நடக்கவே பயந்தால்?

    இப்போதெல்லாம் வியாதியைப்பற்றிப் பேசுவது நாகரிகமாக ஆகிவிட்டது.

    முன்பெல்லாம், வயது முதிர்ந்த பெண்கள் சந்தித்துக்கொள்ளும்போது, “சௌக்கியமா?” என்று விசாரிப்பார்கள். இப்போது அந்த முகமன், “என்னென்ன மருந்து சாப்பிடுகிறீர்கள்?” என்று மாறிவிட்டது. ஒருவர் தன் உடல் உபாதையைப்பற்றி விவரிக்க, அடுத்தவர் அனுதாபம் காட்டவேண்டும். அதனால், உடல்நிலை சீராகிவிடுமா என்றெல்லாம் கேட்கக்கூடாது.

    நாம் ஒவ்வொரு முறையும் நமக்கு வந்த, ஆனால் இப்போது சரியாகிவிட்ட, நோயைப்பற்றி ரசனையுடன் விவரித்தால் கேட்பவர்களுக்கு எப்படி இருக்குமோ, நம் உல்லாசம் பறிபோய்விடும்.

    ஒரு சிலர், தாம் ஆரோக்கியமாக இருந்தாலும், தமக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள் ஆகியோரின் உடல்நிலைக் குறைபற்றி விவரிப்பார்கள்.

    `நமக்கு இப்படியெல்லாம் நேரவில்லேயே!’ என்ற நிம்மதியாலா? அல்லது, தம் ஆரோக்கியக்குறைவை சில நொடிகளாவது மறப்பதற்காகவா? எனக்குப் புரியத்தானில்லை.

    Share
  • தமிழக முதலமைச்சர் விஜய், நீடூழி வாழ்க!

    தமிழக முதலமைச்சர் விஜய், நீடூழி வாழ்க!

    அண்ணாகண்ணன்

    தமிழக முதலமைச்சர் விஜய், நீடூழி வாழ்க

    செயலே சிறந்த சொல் என்பதற்கு வாழும் எடுத்துக்காட்டாக இருக்கிறார். அவர் அமைதியாக இருக்கிறார். ஆனால், தமிழகத்தில் பெரும் மாற்றங்களைக் காண்கிறோம்.

    வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்காமல் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இலஞ்சம், ஊழலுக்கு எதிராக ஒரு மெளனப் புரட்சி நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

    முந்தயை ஆட்சிக் காலத்தில் சிஎம்டிஏ (CMDA), டிடீசிபி (DTCP) மூலம் கட்டட அனுமதிக்கு சதுர அடிக்கு ரூ.27 வீதம் வசூலிக்கப்பட்டு வந்த ‘பார்ட்டி ஃபண்ட்’ (Party Fund) முறை, ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்தக் கட்டாய வசூல் முறை முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.

    2006 -2011 தி.மு.க., ஆட்சியில் மின் துறை அமைச்சராக இருந்தபோது, தனியார் வீராசாமி சூரியமின் உற்பத்தி திட்டத்தில், அரசு அனுமதிக்கு, 1 மெகா வாட்டுக்கு 5 லட்சம் ரூபாய் ‘கட்சி நிதி’ வசூலிக்கப்பட்டது. அதையடுத்து, அ.தி.மு.க., ஆட்சியில் விஸ்வநாதன் அமைச்சராக இருந்த காலத்தில், 10 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. பின், தங்கமணி அமைச்சரான பின், 15 லட்சம் ரூபாயாக கூடியது. கடந்த தி.மு.க., ஆட்சியில், செந்தில் பாலாஜி பதவி காலத்தில், 1 மெகா வாட்டிற்கு, 25 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. உதாரணமாக, ஒரு நிறுவனம், 10 மெகா வாட் மின் திட்டத்துக்கு, அரசு அனுமதி கோரி விண்ணப்பித்தால், 2.5 கோடி ரூபாய் ‘அழ’ வேண்டும். 25 ஆண்டுகளாக இருந்து வந்த இந்த ஊழல் நடைமுறை, த.வெ.க., ஆட்சிக்கு வந்த பின் தற்போது முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது (தினமலர் செய்தி).

    ‘அங்கீகாரம் புதுப்பித்தல் மற்றும் தடையில்லாச் சான்றுக்கு, தனியார் பள்ளிகளிடம் கடந்த ஐந்தாண்டுகளில், 300 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளது’ என, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார் கூறியுள்ளார். ஒவ்வொரு பள்ளிக்கும், ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை பணம் பெறப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டது. கடந்த ஐந்தாண்டுகளில், அங்கீகாரத்துக்காக, தனியார் பள்ளிகளிடம் மொத்தம், 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் வசூலிக்கப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழக மாநாட்டு மலர் வெளியிட, ஒவ்வொரு பள்ளியிடமும், 50,000 முதல் 1,00,000 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது. அதே போல, தி.மு.க., கட்சி பொதுக் கூட்டத்துக்கு, தனியார் பள்ளிகளின் வாகனங்கள் வலுக்கட்டாயமாக பயன்படுத்தப்பட்டன. இப்போது எந்தக் கையூட்டும் இல்லாமல் ஒப்புதல் வழங்கப்படுகிறது. இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல், தகுதியின் அடிப்படையில் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. முறையான பாதுகாப்புச் சான்றிதழ்களைக் கொண்டுள்ள பள்ளிகள், எந்தவித லஞ்சமும் செலுத்தாமல் எளிதாகப் புதுப்பித்தல் ஆணைகளைப் பெற முடியும் (தினமலர் செய்தி).

    வாகனங்களுக்கு விருப்பமான (பேன்சி) எண்களைப் பெற முறைகேடுகள் மற்றும் லஞ்சம் நடைபெறுவதைத் தடுக்க, தமிழக அரசு இ-ஏல (e-auction/e-bidding) முறையைக் கொண்டுவந்துள்ளது.இதன் மூலம் முறையான வெளிப்படைத்தன்மை உருவாக்கப்பட்டுள்ளதுடன், விருப்பமான எண்களுக்கு அரசு நிர்ணயித்த அடிப்படை கட்டணத்தை மட்டும் செலுத்தி இணையவழியாகப் பெறலாம் (இந்து தமிழ் திசை).

    தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க, சுகாதாரத் துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. துறையில் “ஒரு ரூபாய் கூட லஞ்சம் இருக்காது” என அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் போன்ற மருத்துவமனைகளில் லஞ்சம் வாங்கிய ஊழியர்கள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. (பாலிமர் நியூஸ்).

    தமிழகம் முழுவதும், முறைகேடுகளில் ஈடுப்பட்ட குவாரிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. கல் குவாரிகளின் உரிமங்களைப் புதுபிக்கவும், புதிய குவாரிகளைத் தொடங்கி நடத்தவும், விரிவுபடுத்தவும் பெரும் தொகைகளை கட்சி நிதி என்ற பெயரில் லஞ்சமாக கொடுக்க வேண்டிய நிலை, விஜய் ஆட்சியில் ஒழிக்கப்பட்டுள்ளது. ஒரு பைசா லஞ்சம் கொடுக்காமல், தனது கல் குவாரியின் உரிமத்தைப் புதுப்பிக்க முடிந்ததாக கரூரைச் சேர்ந்த கல் குவாரி உரிமையாளர் ஒருவர் கூறியுள்ளார் (யாழ் இணையத்தளம்).

    பள்ளிக்கரணை குடியிருப்புத் திட்டம் ரத்து: சென்னை பெரும்பாக்கம் – மேடவாக்கம் இடையே பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் தனியார் நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) ரத்து செய்துள்ளது.

    பி.ஏ.பி. கால்வாய் சீரமைப்புத் திட்டம் ரத்து: ரூ.4,500 கோடி மதிப்பிலான பி.ஏ.பி. (பரம்பிக்குளம் – ஆழியாறு) கால்வாய் சீரமைப்பு திட்டம் கைவிடப்பட்டு, அதற்குப் பதிலாகக் குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் புதிய திட்டம் தயாரிக்கப்படவுள்ளது.

    கோயில் திருமண மண்டபங்கள் ரத்து: திருக்கோயில்களின் நிதிச்சுமையைக் கருத்திற்கொண்டு, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ரூ.246 கோடி மதிப்பிலான 46 புதிய திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டும் திட்டங்களை அதிரடியாக ரத்து செய்துள்ளது.

    சென்னை – உத்தண்டி உயர்மட்ட சாலை திட்டம் ரத்து: சென்னை திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை கிழக்குக் கடற்கரைச் சாலையில் (ECR) ரூ.2,100 கோடி மதிப்பில் 13.3 கி.மீ தூரத்திற்கு உயர்மட்ட சாலை அமைக்கும் திட்டம் ரத்து. ஒரு கிலோ மீட்டருக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையில் ரூ. 10.89 கோடி அதிகமாக டெண்டர் விடப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, இந்த டெண்டரை தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

    இவை அனைத்தும் பத்திரிகைகளில் வந்த செய்திகள். இன்னும் இவை போன்ற பல்வேறு செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. பட்டா மாறுதலுக்கு லஞ்சம் கொடுக்கவில்லை, குவாரி புதுப்பித்தலுக்கு லஞ்சம் கொடுக்கவில்லை, பள்ளி அங்கீகாரப் புதுப்பித்தலுக்கு லஞ்சம் கொடுக்கவில்லை எனப் பயனாளிகள் நேரடியாகப் பேசியிருக்கிறார்கள்.

    இவை அனைத்தும் விஜய் அரசு பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் நடைபெற்றுள்ளன. அப்படியானால், ஒட்டுமொத்த அரசு எந்திரமும் விஜய் சொன்னதைச் செய்கின்றது. செயலில் காட்டுகின்றது என்பதே உண்மை. ஆனால், விஜய் வாயைத் திறந்து பேசவில்லை என்பதையே திமுக மீண்டும் மீண்டும் பேசுகின்றது. விஜயோ, செயலே சிறந்த சொல் என்று செய்து காட்டி வருகிறார்.

    ஆக்கப்பூர்வமாக அரசு செயல்படுகிறது. தொலைநோக்குடன் கூடிய திட்டங்கள் உருப்பெறத் தொடங்கியுள்ளன. நம்பிக்கை அளிக்கும் நாயகராகத் திகழ்கிற விஜய் நீடு வாழ்க! நிலைபெற வாழ்க! மக்கள் மனங்களில் நின்று வாழ்க! மனம் நிறைந்து வாழ்க!

    Share
  • கவியரசர் பாடல்களில் ஆன்மீகம் – (18)

    கவியரசர் பாடல்களில் ஆன்மீகம் – (18)

    சக்தி சக்திதாசன்

    பாத்தா பசுமரம்
    படுத்து விட்டா
    நெடுமரம்

    சேத்தா விறகுக்காகுமா
    ஞானத்தங்கமே
    தீயிலிட்டா
    கரியும் மிஞ்சுமா

    கட்டழுகு
    மேனியை பார்
    பொட்டும் பூவுமா
    நீட்டி கட்டையில
    படுத்துவிட்டா
    காசுக்காகுமா

    வட்டமிடும்
    காளையை பார்
    வாட்ட சாட்டமா

    கூனி
    வளைஞ்சு விட்டா
    உடம்பு இந்த
    ஆட்டம் போடுமா

    பொன்னும் பொருளும்
    மூட்டகட்டி
    போட்டு வச்சாரு

    இவரு
    போன வருஷம்
    மழைய நம்பி
    வெதவெதச்சாரு

    ஏட்டு கணக்க
    மாத்தி மாத்தி
    எழுதி வச்சாரு

    ஈசன்
    போட்ட கணக்கு
    மாறவில்லே
    போய் விழுந்தாரு

    அறுவடையே
    முடிக்கும் முன்னே
    விதைக்கலாகுமா

    அட ஆண்டவனே
    உன் படைப்பில்
    இத்தனை வேகமா

    பத்து புள்ள
    பெத்த பின்னும்
    எட்டு மாசமா
    இந்தப்பாவி மகளுக்கெந்த நாளும்
    கர்ப்பவேஷமா ?

    திருவிளையாடல் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல், வெளிப்படையாகப் பார்க்கையில் வாழ்க்கையின் நிலையற்ற தன்மையைச் சுட்டிக்காட்டும் ஒரு புலம்பல் போலத் தோன்றினாலும், அதன் உள்ளார்ந்த தளத்தில் அது ஆழ்ந்த ஆன்மீகப் பார்வையைக் கொண்ட ஒரு தத்துவச் சித்திரமாக விளங்குகிறது.

    கவியரசர் கண்ணதாசன், மிக எளிய கிராமிய உருவகங்களைக் கொண்டு, ஆத்மா–உடல், மாயை–உண்மை, கர்மம்–இறைச்செயல் ஆகிய பரந்த ஆன்மீக கருத்துகளை மக்கள் வாழ்வோடு இணைத்து சொல்லும் திறமை பெற்றவர்.

    அந்த அடையாளங்கள் இந்தப் பாடலின் ஒவ்வொரு சரணத்திலும் தெளிவாக வெளிப்படுகின்றன.

    “பசுமரம் படுத்து விட்டா நெடுமரம் சேத்தா விறகுக்காகுமா” என்ற தொடக்கம், உயிருடன் இருக்கும் மனிதனும் உயிர் நீங்கிய உடலும் என்ன வித்தியாசம் என்பதை மிகத் துல்லியமாக எடுத்துரைக்கிறது.

    பசுமரமாக இருந்தது நெடுமரமாக மாறுவது என்பது, உயிருள்ள உடல் சடலமாக மாறுவதைக் குறிக்கிறது.

    இங்கு கண்ணதாசன் உடலின் நிலையற்ற தன்மையையும், உயிரின் மதிப்பையும் ஒரே வரியில் சொல்கிறார்.

    “தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா” என்பது, உடலின் இறுதி நிலையை நினைவூட்டும் ஒரு உவமை.

    இந்த உடல் எவ்வளவு அழகாக இருந்தாலும், இறுதியில் அது சாம்பலாகி விடும் என்பதை அவர் நினைவூட்டுகிறார்.

    இது பகவத் கீதையின் “அநித்யம் அசுகம் உலகம்” என்ற கருத்தோடு ஒத்துப்போகிறது.

    “கட்டழுகு மேனியை பார் பொட்டும் பூவுமா” என்ற வரிகளில், மனிதன் தனது உடலை அலங்கரிக்கும் பற்று வெளிப்படுகிறது.

    ஆனால் “நீட்டி கட்டையில படுத்துவிட்டா காசுக்காகுமா” எனும் கேள்வி, அந்த அழகின் பயனற்ற தன்மையைச் சுட்டுகிறது.

    இறந்த உடலை வைத்துப் பணம் சம்பாதிக்க முடியாது.

    அதுபோல, வாழ்நாளில் நாம் சேகரிக்கும் வெளிப்புற அலங்காரங்கள் ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவாது என்பதே கருத்து.

    இது சைவ சித்தாந்தத்தின் “உடம்பு ஒரு கூடு” என்ற பார்வையோடு இணைகிறது.

    “வட்டமிடும் காளையை பார் வாட்ட சாட்டமா” என்ற வரிகள், உலக வாழ்க்கையின் சுழற்சியைப் பிரதிபலிக்கின்றன.

    காளை ஒரு வட்டத்தில் சுற்றிக் கொண்டே இருப்பது போல, மனிதனும் ஆசை, பேராசை, துன்பம், இன்பம் ஆகியவற்றின் சுழற்சியில் சிக்கிக் கிடக்கிறான்.

    “கூனி வளைஞ்சு விட்டா உடம்பு இந்த ஆட்டம் போடுமா” என்பது, வயதான உடல் இந்த உலக ஆட்டத்தில் பங்கேற்க முடியாது என்பதை நினைவூட்டுகிறது.

    இங்கு கண்ணதாசன், காலத்தின் தாக்கத்தையும், உடலின் சிதைவையும், அதனுடன் வரும் விழிப்புணர்வையும் எடுத்துரைக்கிறார்.

    “பொன்னும் பொருளும் மூட்டகட்டி போட்டு வச்சாரு” என்ற வரி, மனிதன் சேமிக்கும் செல்வங்களின் மீது வைத்திருக்கும் பற்றை வெளிப்படுத்துகிறது.

    ஆனால் “இவரு போன வருஷம் மழைய நம்பி வெதவெதச்சாரு” என்பது, மனிதன் தனது திட்டங்களைக் கொண்டு வாழ்ந்தாலும், இயற்கையும் இறையும் தான் இறுதி முடிவை நிர்ணயிக்கின்றன என்பதை உணர்த்துகிறது.

    இங்கு “ஏட்டு கணக்க மாத்தி மாத்தி எழுதி வச்சாரு” என்பது மனிதன் தனது கணக்குகளை மாற்றிக் கொண்டே இருப்பதை குறிக்க, “ஈசன் போட்ட கணக்கு மாறவில்லே போய் விழுந்தாரு” என்பது இறைவனின் திட்டம் மாற்றமில்லாதது என்பதை வலியுறுத்துகிறது.

    இது கர்ம சித்தாந்தத்தின் மையக் கருத்து.

    “அறுவடையே முடிக்கும் முன்னே விதைக்கலாகுமா” என்ற வரி, வாழ்க்கையின் இயற்கை ஒழுங்கை எடுத்துரைக்கிறது.

    விதைப்பு–வளர்ச்சி–அறுவடை என்ற சுழற்சி, மனித வாழ்க்கையிலும் பொருந்தும்.

    ஆனால் “அட ஆண்டவனே உன் படைப்பில் இத்தனை வேகமா” என்ற வரி, அந்த இயற்கை ஒழுங்கு சில நேரங்களில் உடைந்து போகும் போது மனிதனின் குழப்பத்தையும் வேதனையையும் வெளிப்படுத்துகிறது.

    இது மனிதன் எதிர்பாராத இழப்புகளை சந்திக்கும் போது எழும் ஆன்மீகக் கேள்வி.

    “பத்து புள்ள பெத்த பின்னும் எட்டு மாசமா இந்தப்பாவி மகளுக்கெந்த நாளும் கர்ப்பவேஷமா” என்ற இறுதி வரிகள், மிகவும் ஆழ்ந்த துயரத்தையும் அதே சமயம் வாழ்க்கையின் அநியாய உணர்வையும் வெளிப்படுத்துகின்றன.

    ஆனால் இந்த துயரத்தின் உள்ளே கூட, இறைவனின் லீலைக்கான ஒரு ஒப்புதல் இருக்கிறது.

    இது திருவிளையாடல் என்ற கருத்தோடு நேரடியாக இணைகிறது .

    இறைவன் செய்கின்ற எல்லாமும் ஒரு விளையாட்டு.

    மனிதன் அதை புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறான்.

    இந்தப் பாடல் முழுவதும், கண்ணதாசன் மிக எளிய மொழியில், கிராமிய உருவகங்களைக் கொண்டு, அத்வைதம், கர்மம், மாயை போன்ற சிக்கலான ஆன்மீகக் கருத்துகளை மக்களின் அன்றாட வாழ்க்கையோடு இணைக்கிறார்.

    இதுவே அவரது கவிதைத் திறமையின் உச்சம்.

    அவர் தத்துவத்தை பாடலாக்குகிறார்.

    பாடலை வாழ்க்கையாக மாற்றுகிறார்.

    சாதாரண மனிதனின் வாழ்க்கையில் இந்தப் பாடல் ஒரு கண்ணாடியாக நிற்கிறது.

    நாம் சேகரிக்கும் செல்வம், நாம் பெருமைபடும் அழகு, நாம் திட்டமிடும் எதிர்காலம் இவை அனைத்தும் ஒரு கணத்தில் மாறக்கூடியவை.

    ஆனால் அந்த மாற்றங்களின் பின்னால் ஒரு பெரிய சக்தி இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தால், வாழ்க்கையைப் பற்றிய நம் பார்வை மாறும்.

    அதுவே ஆன்மீகத்தின் தொடக்கம்.

    கவியரசர் கண்ணதாசன், இந்தப் பாடலின் மூலம், “வாழ்க்கை நிலையற்றது” என்ற ஒரு சாதாரண உண்மையை மட்டும் சொல்லவில்லை.

    “நிலையற்றதின் பின்னால் இருக்கும் நிலையானதைத் தேடு” என்ற ஆழ்ந்த ஆன்மீக அழைப்பை வழங்குகிறார்.

    அதனால் தான் அவரது பாடல்கள் காலத்தைக் கடந்தும் வாழ்கின்றன.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 314

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 314

    சக்தி சக்திதாசன்

    அன்பினிய வல்லமை வாசகர்களே !

    மீண்டும் இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் மூலம் உங்களிடையே வருவது மகிழ்ச்சில் ஆழ்த்துகிறது.

    இங்கிலாந்தின் அரசியல் களத்தில் பற்பல காட்சிகள் அங்கேறிக் கொண்டிருக்கின்றன.

    வெளிப்படையாக அமைதியான ஜனநாயக அமைப்பாகத் தோன்றினாலும், அதன் அடித்தளங்களில் மெல்ல மெல்ல அதிர்வுகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

    அரசியல் போட்டிகள், சமூக மனநிலைகள், மற்றும் பொருளாதார அழுத்தங்கள்  இவை அனைத்தும் ஒன்றோடொன்று கலந்த ஒரு சிக்கலான சூழலை உருவாக்கியுள்ளன.

    தற்போதைய பிரதமரின் நிலைமை, இந்தப் பரபரப்பின் மையத்தில் நிற்கிறது.

    அதிகாரத்தில் இருப்பது மட்டுமே ஆட்சியை உறுதிப்படுத்துவதில்லை என்பதைக் காட்டும் வகையில், அவரின் அரசியல் நிலை தடுமாறிக் கொண்டிருக்கிறது.

    வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பு, தேசிய சுகாதார சேவையின் அழுத்தம், மற்றும் குடியேற்றக் கொள்கைகளில் ஏற்பட்ட குழப்பம் ஆகியவை பொதுமக்கள் மனதில் நம்பிக்கையின்மையை விதைத்துள்ளன.

    இதனால் இடைத்தேர்தல்கள் வெறும் தொகுதி முடிவுகளாக இல்லாமல், ஆட்சியின் மீதான மக்களின் தீர்ப்பாக மாறுகின்றன.

    இந்த சூழலில் தொழிற்கட்சி தன்னுடைய அடுத்த கட்ட அரசியல் வடிவமைப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    அண்டி பேர்ன்காம் முன்னாள் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்.

    சில வருடங்களுக்கு முன்னால் தொழிற்கட்சியின் தலைமைத்துவ போட்டியில் வெற்றியடையாததினால் பாரளுமன்ற அரசியலை விட்டு ஒதுங்கியவர், பின்னர் தனது வாழ்விடமான மான்செஸ்டர் பகுதி உள்ளாட்சி தேர்த்லில் மேயராக தெரிவு செய்யபட்டு இன்றுவரை மான்செஸ்டர் மேயராக பணியாற்றுகிறார்.

    அங்கு பல மக்கள் ஆதரவு பெற்ற மாற்றங்களை உள்ளாட்சி மூலம் நிறைவேற்றியுள்ளார்.

    அவர் இங்கே முக்கியமான பாத்திரமாக உருவெடுக்கின்றார்.

    மான்செஸ்டர் நகரில் அவர் உருவாக்கிய நிர்வாக முறை  மக்களுடன் நேரடி தொடர்பு, சமூகநல முன்னுரிமைகள், மற்றும் மத்திய அரசுக்கு எதிரான தன்னம்பிக்கை இவை அவரை ஒரு மாற்று தேசியத் தலைவராக முன்னிறுத்துகின்றன.

    அவர் மீண்டும் பாராளுமன்றத்திற்குள் நுழைய முயல்வது, தனிப்பட்ட அரசியல் முன்னேற்றம் மட்டுமல்ல.

    தொழிற்கட்சியின் எதிர்கால திசையை நிர்ணயிக்கும் ஒரு முக்கியக் கட்டமாகும்.

    இந்தப் பின்னணியில் ஸவுதாம்டன் நகரில் நிகழ்ந்த சம்பவம், ஒரு தனிப்பட்ட சட்ட ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் பார்க்க முடியாது.

    அது ஒரு சமூக உளவியல் வெடிப்பாகக் கருதப்பட வேண்டும்.

    இந்த நகரம் வரலாற்று ரீதியாக ஒரு துறைமுக நகரமாக இருந்து, பல்வேறு நாடுகளிலிருந்து வந்த மக்களின் குடியேற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.

    ஆனால், கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார சுருக்கம், வேலை வாய்ப்பின் குறைவு, மற்றும் சமூக சேவைகளின் மீது ஏற்பட்ட அழுத்தம் ஆகியவை உள்ளூர் மக்களிடையே மறைமுக அதிருப்தியை உருவாக்கின.

    இந்த அதிருப்தி நேரடியாக வெளிப்படாமல், மெதுவாக “மற்றவர்களை” குறிவைக்கும் மனநிலையாக மாறியது.

    குறிப்பாக வெளிநாட்டவர்களை குற்றம்சாட்டும் உரைகள், சமூக ஊடகங்களில் பரவிய தவறான தகவல்கள், மற்றும் அரசியல் மேடைகளில் ஒலித்த குடியேற்ற எதிர்ப்பு குரல்கள் இவை அனைத்தும் இந்த மனநிலையை ஊட்டி வளர்த்தன.

    இந்நிலையில், சமீபத்தில் ஸவுதாம்டன் நகரில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் ஒரு துயரச் சம்பவம், இந்த பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

    ஒரு வெள்ளை இனத்தைச் சேர்ந்த இளைஞர் மாணவன், சீக்கிய கலாசாரப் பின்னணியைக் கொண்ட ஒருவரால் கத்திக்குத்துக்கு இலக்காகி பின்னர் உயிரிழந்ததாக செய்திகள் பரவின.

    மேலும், சம்பவத்திற்கு முன்பே ஏற்பட்டிருந்த பதட்ட அறிகுறிகளைப் பொலிசார் போதிய கவனத்துடன் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

    இந்தச் சம்பவம் தனிப்பட்ட குற்றச் செயலா, அல்லது விரிவான சமூகத் தோல்வியின் அறிகுறியா என்ற கேள்வி பொதுமக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.

    இந்தச் சம்பவம் ஒரு குற்றவியல் விசாரணைக்குரிய விஷயம் மட்டுமல்ல.

    அது சமூக நம்பிக்கையின் முறிவை வெளிப்படுத்துகிறது.

    “பாதுகாப்பு” என்ற அடிப்படை உணர்வு சிதைந்துவிட்டால், மக்கள் தங்கள் அச்சத்தை அரசியல் கோஷங்களாக மாற்றத் தொடங்குகிறார்கள்.

    இதுவே இன அடையாள அரசியலுக்கு ஊக்கமாகிறது.

    இங்கே நைஜல் வெராஜ் அவர்களின் அரசியல் பேச்சு முக்கியமாக ஆராயப்பட வேண்டும்.

    அவர் பயன்படுத்தும் மொழி நேரடியாக வன்முறையை அழைப்பதில்லை என்றாலும், அது ஒரு “அச்ச மனநிலையை” உருவாக்குகிறது.

    “நாடு இழக்கப்படுகிறது”, “எல்லைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்”, “உள்ளூர் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்” போன்ற கருத்துக்கள், அரசியல் வாதங்களாகத் தோன்றினாலும், சமூகத்தில் ஒரு மறைமுகப் பிரிவினையை உருவாக்குகின்றன.

    அரசியல் மொழியின் தாக்கம் உடனடியாக கணக்கிடப்பட முடியாது.

    ஆனால் அது மனிதர்களின் சிந்தனையை வடிவமைக்கிறது.

    அந்த சிந்தனை ஒரு கட்டத்தில் செயலாக மாறும் போது, ஸவுதாம்டன் போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன.

    எனவே, இந்தச் சம்பவம் ஒரு நகரத்தின் பிரச்சனை அல்ல.

    அது ஒரு நாட்டின் சமூக ஆரோக்கியத்தைக் காட்டும் எச்சரிக்கை.

    மேலும் கவனிக்க வேண்டியது, இங்கிலாந்தின் அரசியல் உரையாடல் மெதுவாக மையத்திலிருந்து விலகி இரு முனைகளாகப் பிரிகிறது என்பதே.

    ஒரு பக்கம் சமத்துவம், உடன்பிறப்பு, மற்றும் பல்வகைமையை வலியுறுத்தும் குரல்கள்.

    மறுபக்கம் பாதுகாப்பு, அடையாளம், மற்றும் எல்லை கட்டுப்பாட்டை முன்னிறுத்தும் குரல்கள்.

    இந்த இரு திசைகளின் மோதல் தான் இன்றைய அரசியல் களத்தின் உண்மையான வடிவம்.

    இந்தச் சூழலில் அண்டி பேர்ன்காம் போன்றவர்கள் ஒரு “இணைப்புக் குரல்” ஆக மாற முடியுமா என்பது எதிர்கால அரசியலின் முக்கியக் கேள்வியாகும்.

    அதே சமயம், நைஜல் வெராஜ் போன்றவர்கள் உருவாக்கும் அரசியல் அலை, எவ்வளவு தூரம் சமூக அமைப்பை பாதிக்கும் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

    மொத்தத்தில், இங்கிலாந்து இன்று ஒரு அரசியல் மாற்றத்தின் விளிம்பில் நிற்கிறது.

    அது வெறும் ஆட்சிமாற்றம் அல்ல.

    அரசியல் மொழியின் மாற்றம், சமூக உறவுகளின் மாற்றம், மற்றும் தேசிய அடையாளத்தின் மறுபரிசீலனை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பரந்த மாற்றமாகும்.

    பொறுத்திருந்து பார்ப்போம்

    (மீண்டும் அடுத்த மடலில்)

    Share
  • வரலாறு படைத்த பாரதிராஜா

    வரலாறு படைத்த பாரதிராஜா

    அண்ணாகண்ணன்

    பாடல் பெற்ற தலங்கள் என்று திருக்கோவில்களைச் சொல்வார்கள். ஆனால், பட்டி தொட்டிகளை எல்லாம் பாடல் பெற்ற தலங்களாக மாற்றியவர் பாரதிராஜா. செட்டுக்குள் சிறைப்பட்டிருந்த சினிமாவுக்கு விடுதலை தந்து, எட்டுத் திக்கும் உலாவச் செய்தவர்.

    அவருக்கு முன்பும் கிராமத்தையும் கிராமத்து மனிதர்களையும் காட்டினார்கள். ஆனால், அவர்கள் சிறப்பு ஒப்பனைகளால் தங்கள் சிறப்பை இழந்தவர்கள். இவர்தான் மண்வாசனையுடன் அசலான மனிதர்களையும் அவர்களின் உயிர்ப்புள்ள வாழ்வையும் காட்டினார். ஓரத்தில் நின்றுகொண்டிருந்த கிராமத்து மாந்தர்களை மையப் பாத்திரங்களாய் மாற்றினார். இதன் மூலம் அவர்களின் வட்டார வழக்கையும் நடை, உடை, பாவனை, சிகையலங்காரம் உள்ளிட்ட வாழ்வியலையும் ஊரையும் உணர்வையும் ஆவணப்படுத்தினார்.

    அவரையே கிராமம் என்ற சிமிழுக்குள் அடைக்க முயன்ற போது, அந்தக் கோட்டையும் அழித்தார். தமிழ் என்ற வட்டத்துக்கு வெளியே தெலுங்கிலும் இந்தியிலும் படம் எடுத்தார். இன்று உடல் என்ற கூட்டுக்குள்ளிருந்து விடுதலை பெற்றுவிட்டார்.

    அவரது திரைப்படங்கள் (முதல் மரியாதை), திரைக் காட்சிகள் (நான் கரை ஏறிட்டேன்), வசனங்கள் (பத்த வச்சிட்டியே பரட்டை), பாடல்கள் (சிறுபொன்மணி அசையும்) எனப் பலவும் சாகா வரம் பெற்றவை. தான் வரலாற்றில் இடம் பெற்றதோடு புதிய வரலாறு படைத்தார். தன்னுடன் ஒரு பெரும் கூட்டத்தையும் மிகப் பெரும் நிலப்பரப்பையும் வரலாற்றில் இடம்பெறச் செய்தார். மக்கள் நினைவுகளில் என்றும் வாழ்வார்.

    Photo Credit: Stills Ravi / The Hindu Archives

    Share
  • அண்ணாமலையின் புதிய இயக்கம்

    அண்ணாமலையின் புதிய இயக்கம்

    அண்ணாகண்ணன்

    அண்ணாமலையின் உரையைக் கேட்டேன். அவர் கூறியவை அனைத்தும் முற்றும் முழுதாகக் காந்தியக் கொள்கைகள். மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்றால் முதலில் நாம் மாற வேண்டும் என்கிறார். மாறுவோம், மாற்றுவோம் என்பது கேட்க, நன்றாக இருக்கும். ஆனால், நடைமுறையில் மிகக் கடினமானது. அவரும் அவரைப் பின்பற்றும் அனைவரும் மகாத்மாக்களாக இருந்தால் / மாறினால் ஒழிய, இந்த மாற்றம் நிகழாது. எனவே இது அவரது முதல் தடை.

    நாயக வழிபாடு வேண்டாம் என்கிறார். தலைவர், பொறுப்பு, அதிகாரம் என்று வந்துவிட்டால், இத்தகைய நாயக வழிபாடு, இயல்பாகவே வந்துவிடும். அண்ணாமலையே இதற்கு முன்னால் பலரையும் நாயகராகக் கொண்டாடியவர். காலில் விழுந்து வணங்கியவர். பொதுவாக, அவரது உடல்மொழியே அதீதப் பணிவுடன் உள்ளது. இந்தியச் சமுதாயக் கட்டமைப்பும் நிறுவனக் கட்டமைப்பும் குடும்பக் கட்டமைப்பும் அதிகாரப் படிநிலைகளைக் கொண்டது. அனைவரையும் சமமாகப் பார்க்கின்ற வாய்ப்பு, இதில் மிகக் குறைவு. இந்த இயக்கத்தில் அண்ணாமலையை நாயகராகத்தான் கருதுவார்கள். We the leader என்ற தளத்தின் பெயரும் உறுப்பினராகச் சேரும் தன்னார்வலர்களை Active Leaders என்று அழைப்பதும் ஒவ்வொருவரையும் நாயகராகப் பார்க்கவே உதவும்.

    அறம் செய்ய விரும்பு என்ற வாசகம், அவரது இணையத்தளத்தில் உள்ளது. அப்துல் கலாம் பெயரில் அறத்தையும் அரசியலையும் கற்றுத் தரப் போவதாகக் கூறியுள்ளார். நம் பாடத் திட்டங்களில் திருக்குறளும் இன்னபிற அற நூல்களும் தொடர்ந்து இடம் பெறுகின்றன. இவற்றைக் கற்காமல், தமிழ்நாட்டுப் பள்ளிகளிலிருந்து யாரும் வெளியே செல்வது இல்லை. பிறகு ஏன், சமூகத்தில் அறம் ஓங்கி நிற்கவில்லை? இதற்கான காரணங்களைத் தேடினால், இவரது இந்த முயற்சி எவ்வளவு கடினமானது என்பதை அவர் அறிவார்.

    பொறுப்புகளுக்கும் பதவிகளுக்கும் கால வரையறை வைப்பது நல்ல திட்டம். செயல்படுத்தக் கூடியதே. இதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இதை நிறைவேற்ற, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். முக்கியமாக, இது தேசிய அளவிலான கொள்கை. தேசிய அளவில் அனைத்துக் கட்சிகளும் ஒப்புக்கொண்டு, தேர்தல் ஆணையமும் ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும். பதவி சுகம் கண்டவர்கள், அவ்வளவு எளிதில் இதை நிகழ்த்த விடுவார்களா? அவரது கட்சித் தலைவர் பதவிக்கு வேண்டுமானால் இத்தகைய விதிகளை வைத்துக்கொள்ளலாம்.

    நாமெல்லாம் மிடில் கிளாஸ் என்று அவர் சொன்னது, பலருக்கும் நெருக்கமாக இருக்கலாம். நடுத்தர வர்க்கத்தினரின் குரலாக அவர் ஒலித்தால், உடனடியாக அவருக்கு ஒரு பெரும் எண்ணிக்கையிலான மக்களின் ஆதரவு கிடைக்கலாம்.

    அறத்துக்குப் பயிற்சி அளிப்பது பயன் அளிக்கிறதோ இல்லையோ. அரசியல் நடைமுறைகளுக்குப் பயிற்சி அளித்த பின் போட்டியிட வைப்பது, நல்ல முயற்சி. இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாதது. அடிப்படையிலிருந்து தொடங்க வேண்டும் என்ற எண்ணம் நன்று. இதை அரசியல் கல்லூரியாக நிறுவினால், இதர கட்சியினரும் அரசியல் ஆர்வலர்களும் இதில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.

    இதை எழுதும் நேரத்தில் அவரது தளத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை, பத்து லட்சத்தை நெருங்கியுள்ளது. என்னிடத்தில் ஆற்றல் மிக்க நூறு இளைஞர்களைக் கொடுங்கள். நான் இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்று விவேகானந்தர் கூறினார். இதோ அண்ணாமலையிடம் பத்து லட்சம் பேர் இருக்கிறார்கள். உலகையே மாற்றிக் காட்டலாம்.

    பெரிதினும் பெரிது கேட்கும் அண்ணாமலைக்கு வாழ்த்துகள்.

    Share
  • Lexifyd – தமிழ் கற்க ஒரு செயலி

    Lexifyd – தமிழ் கற்க ஒரு செயலி

    தமிழ் கற்க, இதோ ஒரு நல்ல வாய்ப்பு. இதில் விளையாட்டைப் போல் தமிழ் கற்கலாம். இதில் தமிழ் மொழியுடன் கூடவே தமிழ் மரபையும் கற்கலாம். இதன் உள்ளடக்கத்தை உருவாக்கியதில் எனக்கும் சிறு பங்கு இருக்கிறது.

    வணக்கம் நண்பர்களே!

    எங்கள் மாத்யமிக் குழுவினர், 5 முதல் 8 வயதுக் குழந்தைகளுக்காக Lexifyd என்ற தமிழ் கற்கும் செயலியை (App) கூகுள் பிளே ஸ்டோரில் வெளியிட்டுள்ளோம்!

    உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ தமிழ் கற்க விரும்பும் குழந்தைகள் இருந்தால், தயவுசெய்து இந்தத் தகவலை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    பதிவிறக்கம் செய்ய (Download Link): https://play.google.com/store/apps/details?id=com.maadhyamik.kanchi

    முதல் நிலையில் (Level-1) உள்ளவை:

    முழுமையான எழுத்துகள்: எழுத்துகளின் வடிவங்களை அறிந்து, அவற்றைத் தொடுதிரையில் எழுதிப் பழகுவதோடு, சரியான உச்சரிப்பையும் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

    10 சுவாரசியமான பாடங்கள்: குழந்தைகளுக்கு ஏற்ற தலைப்புகளில், உயர்தர நிகழ்படங்கள் (Videos), வரைகலை ஓவியங்கள் (Graphics) மூலம் வடிவமைக்கப்பட்ட பாடங்கள். மேலும், குழந்தைகளின் கற்றல் திறனைப் புரிந்துகொள்ளத் திருப்புதல் பாடங்களும் (Review Lessons) இதில் உள்ளன.

    விளையாட்டுகள்: சொல் சார்ந்த பல விளையாட்டுகள் மூலம் குழந்தைகள் தங்களுடைய சொற்களஞ்சியத்தையும் (Vocabulary) எழுத்துத் திறனையும் வளர்த்துக்கொள்ளலாம்.

    தேவையானவை (Pre-requisites): எதுவுமில்லை! எளிய பேச்சுத் தமிழைப் புரிந்துகொள்ளும் திறன் மட்டும் இருந்தால் போதும்.

    (இதன் iOS பதிப்பும் அடுத்தடுத்த நிலைகளும் விரைவில் வரவுள்ளன!)

    இதை நீங்கள் பயன்படுத்திப் பார்த்துவிட்டு, மற்றவர்களுக்கும் பகிர்ந்து உதவ வேண்டுகிறேன். மிக்க நன்றி!

    Learn Tamil through play! Fun, interactive lessons on language and heritage.

    #Lexifyd #Tamil #Tamillearning #LearnTamil #Maadhyamik #Tamillessons #TamilAlphabets #Games #app #androidapp #தமிழ்

    Share
  • மீண்டும் இணையவழிக் கல்வி

    மீண்டும் இணையவழிக் கல்வி

    முனைவர் திரிவேணி சுப்ரமணியம்
    தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்
    ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி
    கோயம்புத்தூர் – 641014
    மின்னஞ்சல்: venitamil@srcw.ac.in

    “கல்வியைவிடப் பரிசுத்தமான ஒரு பொருளை மனிதன் எங்குமே கண்டறிய இயலாது” – பிளேட்டோ

    தொன்மை காலந்தொட்டுக் கற்றலின் நோக்கமும் வடிவமும் மாறினாலும் கூடக் கல்வியின் முக்கியத்துவமும் மேன்மையும் போற்றப்பட்டு வந்திருக்கிறது. இந்தியக் கல்விமுறையானது மேம்பட்ட ஒன்றாக உலக நாடுகளால் மதிக்கப்பட்டிருந்தது. உலகின் பல நாடுகளில் இருந்தும் மாணவர்கள் வந்து பயிலும் இடமாக நாளந்தா பல்கலைக்கழகம் இருந்தது. கணிதவியல், இலக்கணம், தத்துவம், மனையியல், உளவியல் முதலியவை இந்தியக் கல்வியின் தலைசிறந்த கொடைகளாகக் கருதப்பட்டன. பாரம்பரியக் கல்விமுறையில் இந்தியாவில் உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் கல்வி கற்றலின் முக்கிய அம்சமாகக் கருதப்பட்டன. அதன் மூலம் பலதரப்பட்ட அனுபவங்கள் கிடைக்கும் என்பதால் பயணங்கள் அப்போதைய கல்வியில் முதன்மை இடம் பெற்றிருந்தன.

    ஆரம்பக் கல்வி, உயர் கல்வி எனக் கற்றல் இரண்டாகப் பகுக்கப்பட்டிருந்தது. கல்வியின் எந்த நிலையிலும் அனுபவங்களும் செயல்வழிக் கற்றலும் முதன்மையானதாக வலியுறுத்தப்பட்டது. கல்வித்துறையில் உலகின் மிகப் பழமையான நாடான இந்தியா தற்போது மிகப் புதுமைக் கூறுகளைத் தன்னகத்தே ஏற்றுக்கொள்ளும் நாடாக விளங்குகிறது.

    கொரோனா பரவல் காரணமாக மக்கள் வாழ்வில் பல இடர்ப்பாடுகள் இருந்தபோதிலும் தடைகளைக் கடந்து மாணவர்களைச் சென்றடைய இணையவழிக் கல்வி உதவியது. தற்பொழுது போர் காரணமாக எழுந்திருக்கும் எரிபொர்ள் தட்டுப்பாடென்னும் பெரும் இடர்ப்பாடு மீண்டும் உலகை ஐந்து வருடங்கள் பின்னோக்கித் திருப்புகிறது. மீண்டும் இணைய வழிக் கல்வியை நோக்கித் திரும்புவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. ஆரம்பத்தில் இணையவழிக் கல்வியை நடைமுறைப்படுத்துவது குறித்த கருதுகோள்கள் அதற்கு முன்னரே இருந்தாலும் நடைமுறையில் சாத்தியமற்ற, கற்பனைக்கெட்டாத ஒன்றாகவே கருதப்பட்டது. ஆனால் பெருந்தொற்றுக் காலம், உலகைப் பல்லாயிரம் மைல்கள் தூரத்தை ஒரே தாவலில் கடந்து செல்லத் தள்ளியிருக்கிறது. தற்போது இணையவழிக் கற்றல் நடைமுறைக்கு வந்துவிட்ட சூழலில் இணையவழிக் கற்றலில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதாயினும் நன்மைகளும் அதிகம் என்பதை உணர்ந்து இணையவழிக் கற்றலைப் பயனுள்ளதாக்கிக் கொள்ள மாணவர்கள் முழுமுனைப்போடு செயல்பட வேண்டும். முழுமையாக இல்லாவிடினும் இணையவழிக் கற்றலை இனி எப்போதும் கைவிடாதிருப்பது கூடுதல் நன்மையாக அமையும்.

    யாதும் ஊரே

    இணையம் உலகிற்குக் கிடைத்த பெரும் கொடை. இதனால் இன்று எந்த ஊரிலிருந்தும் கல்வி, பணி என மக்கள் தங்களது வாழ்வைத் தொடரலாம். இணையமும் அலைபேசியும் பல்கிப் பெருகிவிட்ட தற்காலத்தில் அவற்றை சில தவறுகளுக்காகவும் குறைகளுக்காகவும் முடக்குவதைவிட, ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்தக் கற்றுத்தரலாம். நகரமயமாக்கல், கிராமங்கள் மனிதர்களற்றுப் போதல் போன்ற சமூகக் குறைகளை இணையவழிக் கற்றலும் வேலைவாய்ப்பும் நிவர்த்தி செய்துள்ளன என்பது மறுக்கமுடியாத உண்மை.

    தீதும் நன்றும் பிறர் தர வாரா

    இணையவழிக் கற்றலின் காரணமாகக் கல்வியை, அறிவைப் பெற விரும்பும் ஒருவர் தான் விரும்பிய துறையில் திறனடையலாம். வயது வேறுபாடு, இடம், சூழல் போன்ற எந்தத் தடைகளும் அதற்குக் கிடையாது. SWAYAM, NPTEL போன்ற இணையதளங்கள் மட்டுமல்லாது தற்போது குறிப்பிட்ட துறைசார் ஆர்வலர்களால் யூடியூப் கற்றலும் சாத்தியமாகி உள்ளது. இதனால் கற்க விரும்பும் ஒருவர் தான் விரும்பிய துறைகளை, விரும்பிய நேரத்தில் கற்கலாம்.

    நோதலும் தணிதலும்

    இணையவழிக் கற்றலில் சைபர் க்ரைம், தவறான வழிகாட்டுதல், உடல் மற்றும் மனநலச் சீர்கேடுகள் போன்றவை குறித்த அறிவு புகட்டலும் வழிகாட்டுதல்களும் அவற்றைச் சரியாகக் கையாளத் தேவையான பயிற்சிகளை வழங்குவதும் அத்தியாவசியமானது. இதுவும் ஒருவகைக் கற்றலேயாகும்.

    கல்வியின் முக்கியக் கூறுகள்

    கற்றவர் – கற்பிப்பவர் – சமூகம் என்ற அமைப்புடையது கல்வி. இம்மூன்று தளங்களிலும் இணையவழிக் கல்வி நன்மை பயக்கக் கூடியதாகும். கற்பவருக்குச் சுதந்திரமும் ஈடுபாடும் தரவல்லதாக ஒலி- ஒளி அமைப்பு, வீடியோக்களுடன் கூடிய இணைய வழிக் கல்வி ஈர்க்கிறது.

    கற்பித்தலில் நன்மைகள்

    கற்பித்தலில் மூன்று படிநிலைகள் உள்ளன.

    1. கற்பித்தல்
    2. மதிப்பீடு
    3. திறன் மேம்பாடு

    கற்பித்தலில் பலவித நன்மை தரும் செயல்பாடுகளை உள்ளடக்கியதாக இணையவழிக் கற்றல் அமைகிறது. யூடியூப் வீடியோ, படக்கதை, உருக்காட்சிப் பயன்பாடு, படக்கோப்புகள் எனப் பல வகைகளைக் குறிப்பிடலாம்.

    மதிப்பீட்டுக்கு உதவும் இணைய வழித் தளங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. Quizizzes.com, Kahoot.com, google forms போன்றவை வினாக்களை மாற்றித் தருவது, உடனடி மதிப்பீடு, மதிப்பீட்டில் துல்லியம் எனப் பல பயன்களோடு கூடுதலாக மாணவர் ஆர்வத்தைத் தூண்டும் அம்சங்களோடும் அமைந்துள்ளன.

    திறன் மேம்பாடு

    ஒளிப்படங்களை உருவாக்குதல், ஒலி – ஒளிக் கோப்புகளை உள்ளீடு செய்தல் போன்ற செயல்களால் ஒவ்வொரு பாடத்துக்கும் பாட்டு, கதை, உரையாடல் எனச் சுவையான கோப்புகளை உருவாக்க முடியும். அரசுப் பள்ளிகளில் பாடத்திட்டம் இவ்வாறாக வடிவமைக்கப்பட்ட பிறகு மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதே இதன் நன்மைக்குச் சான்றாகும். கல்லூரிகளில் அல்லது உயர் வகுப்புகளில் பயிலும் மாணவச் செல்வங்களுக்கு இத்தகைய கோப்புகளையும் வீடியோக்களையும் அவர்களே உருவாக்க வழிகாட்டும் போது அவர்களுக்குக் கற்றல் இனிமையானதாக அமையும்.

    மீம்ஸ் உருவாக்கமும் காணொளிகளை உருவாக்குவதும் தற்போது மிகப் பிரபலமாகி வருகிறது. பாடம் சார்ந்த மீம்ஸ்களையும் காணொளிகளையும் இசைக்கொர்ப்பு மற்றும் பாடல்களுடன் சேர்த்து மாணவர்களே உருவாக்கினால்  கற்றலில் ஈடுபாடு அதிகமாகும். அவர்களது படைப்பாற்றல் மற்றும் கற்பனைத் திறனும் மேற்கூறிய செயல்பாடுகளால் மேம்படும்.

    மனிதமும் கல்வியும் உலகம் முழுமைக்கும் பொதுவானது. அவற்றை எத்தகைய கால இடர்களுக்கும் பலியாக்காமல் காப்பது மனிதர்களாகிய நம் கடமை. நம் தலைமுறையானது பெருந்தொற்று மற்றும் போர்கள் எனப் பல கடினமான சவால்களைக் கண்டும் கடந்தும் வருகிறது. இவற்றால் கிடைக்கும் அனுபவங்களும் மிக வல்லமைமிக்கதாக இருக்கும். எதிர்கால மக்களுக்குப் பொறுப்புள்ளவர்களாகச் சில கடமைகளை மேற்கொள்வதும் சிலவற்றை அத்தியாவசியமானது என இனங்கண்டு கடைபிடிக்க வேண்டியதும் நம் கடமை என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    கல்வி என்பது உயிரும் உடலும் மனமும் இணைந்த மனிதர்களுக்கானது. அதை உயிரற்ற சுவர்களுக்குள் சம்பிரதாயமான சடங்காக மாற்றாமல் ஆர்வமும் ஈடுபாடும் உள்ளதாக, செயல்வழிக் கற்றலாக மாற்றும் போது அறிவானது மாணவர்களின் உள்ளத்தில் இருந்து மலரக் கூடியதாக அமையும். தன்னம்பிக்கையும் சுய சார்பும் பழக்கமாகும். அவர்களின் படைப்பாற்றலையும் சுய சிந்தனையும் மழுங்கடிக்கப்படாமலிருக்க இணையவழிக் கற்றல் பெரிதும் உதவும்.

    விழுந்த இடத்திலேயே வாழ்வதற்கான வல்லமை பெற்று வருவது தானே மனிதனின் மாண்பு. தனக்கான வாழ்வு தேடி வரும் ஒரு விதை போல மனித இனமும் முழு உலகுக்கும் விஸ்வரூபம் எடுத்து எழுந்து நின்று எல்லைகள் கடந்து அறிவால் ஆள இணையவழிக் கற்றலைப் பரவலாக்குவோம்.

    Share
  • விளம்பரத்தில் ஒரு பிழை

    விளம்பரத்தில் ஒரு பிழை

    அண்ணாகண்ணன்

    திருச்சியில் காவேரி மருத்துவமனையின் விளம்பரத்தைப் பல இடங்களில் கண்டேன். படியேறு பாட்டி என்பது ஒரு நல்ல வாசகம். ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் மூட்டுச் சிக்கல் இருந்தாலும் பெண்ணைக் குறிவைத்து இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளார்கள். ஏனெனில், அப்பாவையும் தாத்தாவையும் விட அம்மாவையும் பாட்டியையும் கூடுதலாகக் கவனிப்பார்கள். அவர்களுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வார்கள் என்ற உளவியல் இதன் பின்னே இருப்பதாக நினைக்கிறேன்.

    அதிநவீன VELYS (DePuy Synthes) ரோபோ உள்ள ஒரே மருத்துவமனை என இதில் விளம்பரம் செய்திருக்கிறார்கள். அப்படியா என்று கூகுளிடம் கேட்டேன். வேறு பல மருத்துவமனைகளில் இந்த வசதி உள்ளது எனத் தெரிகிறது.

    இதர மருத்துவமனைகள் கூட இதைக் கேள்வி கேட்கவில்லையா? எங்களிடம் இந்த வசதி உள்ளது என்று கூறலாம். எங்களிடம் மட்டுமே உள்ளது என்று கூறக் கூடாது.

    இதைப் போன்றே ஒரு துறையில் உள்ள பல நிறுவனங்களும் (பத்திரிகைகள் உள்பட) நாங்களே நம்பர் ஒன் என விளம்பரப்படுத்துகிறார்கள். இவற்றை யாருமே சரிபார்ப்பதோ, சுட்டிக் காட்டுவதோ இல்லை. விளம்பரங்களுக்கும் உண்மை சரிபார்ப்பும் தணிக்கையும் தேவை.

    Share
  • டெலிபிராம்ப்டர் என்கிற உரைத்திரை

    டெலிபிராம்ப்டர் என்கிற உரைத்திரை

    அண்ணாகண்ணன்

    சட்டப் பேரவையில் நான் கவனித்த ஒன்று.

    பேரவைத் தலைவர், தற்காலிகப் பேரவைத் தலைவர், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பலரும் எழுதி வைத்தே படித்தார்கள். பிரேமலதா உள்ளிட்ட சிலரே நேரடியாகப் பேசினார்கள். நேரடியாகப் பேசுவோரும் கையில் குறிப்புகள் வைத்திருப்பது வழக்கம்.

    திரைப்படப் படப்பிடிப்புகளில் கதை, திரைக்கதை, வசனம் அனைத்தும் முன்னரே எழுதிய பிறகே படப்பிடிப்புக்குச் செல்வார்கள். வெகு சிலர், அந்த இடத்தில் எழுதி அல்லது பேசி வசனத்தைச் சொல்வார்கள். கதையைக் கூடத் திடீரென மாற்றுவோர் உண்டு. இதனால் தேவையற்ற தாமதங்களும் விரயங்களும் ஏற்படும். எழுத்தாளர் முழுவதும் எழுதி முடித்துவிட்டால், திரைப்பட இயக்குநரின் பணி 90 சதம் முடிந்துவிட்டது என்ற ஹரால்டு ராமிஸின் கூற்று புகழ்பெற்றது.

    எழுதிப் படிப்பதன் பின்னுள்ள இன்னோர் உண்மை, இக்காலக் கல்விச் சூழலும் தொழில்நுட்பக் கருவிககளின் வளர்ச்சியும். முன்னர், அனைத்தையும் மனப்பாடம் செய்வது ஒன்றே வழியாக இருந்தது. கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம், தேவாரம், திவ்யப் பிரபந்தம் போன்றவற்றை எழுத்தெண்ணிக் கற்றவர்கள் எனச் சிலரைப் பாராட்டுவார்கள். அதில் உள்ள ஒவ்வொரு பாடலும் ஒவ்வோர் எழுத்தும் அவர்களின் நினைவில் இருக்கும். மடமடவென்று இவற்றைச் சொல்லியே பெரும் புலவர் என்ற பெயரைப் பெற்றார்கள். உண்மையில் இவை அனைத்தின் பின்னும் இருந்தது, அவர்களின் மனப்பாடத் திறனே. இப்படிக் கற்றதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் வாய்மொழியாகவே கற்பித்தார்கள். இப்படித்தான் முற்றோதல், பஜனை, தொடர் சொற்பொழிவு உள்ளிட்டவை முகிழ்த்தன.

    அச்சுக் கருவிகளைக் கண்டுபிடித்த பிறகு, புத்தகங்கள் எளிதாகக் கிடைக்கத் தொடங்கின. நூலகங்கள் உருவாகின. ஒவ்வொரு வீட்டிலும் புத்தகங்களை வைத்துக்கொள்ளும் வாய்ப்பு அமைந்தது. இவற்றை மனப்பாடம் செய்யாமல், புத்தகத்தைப் புரட்டிப் பார்த்துக்கொள்ளலாம் என்ற நிலை உருவானது. எனவே, பெரும் புலவர்கள் கூட, நூறு, இருநூறு பாடல்களுடன் தங்கள் புலமையைச் சுருக்கிக்கொண்டார்கள்.

    கணக்கில் கால்குலேட்டர் வந்ததும் மனக்கணக்கு பெரும்பாலும் மறைந்துவிட்டது. சிறிய கணக்குகளையும் அதன் வழியாக போடத் தொடங்கினோம். ஒரு தொலைபேசி எண்ணைக் கூட நம்மால் நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை.

    கணிப்பொறி, செல்பேசி, இணையம் வந்த பிறகு நிலைமை இன்னும் மோசமானது. நூலகத்திற்குச் சென்று தேடி எடுக்கும் சிக்கலும் இல்லை. ஒரு சொடுக்கில் அனைத்தும் நம் விரல் நுனிக்கு வந்து சேர்ந்தது. இப்போது எழுதும் தேவையும் குறைந்து வருகிறது. நாம் பேசினாலே கணிப்பொறி தானாகவே எழுதிக்கொள்ளும். செயற்கை நுண்ணறிவு வந்த பிறகு, நாம் எழுதியதை அதுவே மேம்படுத்தித் தரும். இப்போது நாம் எழுதவும் பேசவும் தேவையில்லை. என்ன வேண்டும், எப்படி வேண்டும் என்று குறிப்பாகக் கட்டளை இட்டால் போதும். அதுவே இடத்துக்கு ஏற்ப எழுதிக் கொடுத்துவிடும். அதே எழுத்தைப் பேச்சாகவும் கொடுத்துவிடும்.

    இந்தச் சூழலில் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்களில் வெகுசிலர் மட்டுமே தானாகப் பேசுவதற்கும் வெகுநேரம் பேசுவதற்கும் உடனுக்குடன் பேசுவதற்கும் உரிய ஆற்றலைப் பெற்றவர்கள். இப்போது வெகுநேரம் பேசுவதற்கான தேவையும் குறைந்துவிட்டது. அப்படிப் பேசினால், கேட்பதற்கும் பலருக்குப் பொறுமை இல்லை. இந்த மனப்பாட மாற்றம் என்பது, ஒரு தலைமுறைக்கான இயல்பு. இதை நாம் புரிந்துகொண்டால், அதை வைத்து ஒருவரின் திறனை நாம் மதிப்பிட மாட்டோம்.

    டெலிபிராம்ப்டர் என ஒரு கருவி உள்ளது. தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர்கள், இதைப் பார்த்தே செய்தி வாசிக்கிறார்கள். உலகம் முழுவதும் பெரும் தலைவர்கள், இதைப் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்கள் முன்னால் உள்ள திரையில், அவர்கள் தயாரித்த பேச்சின் எழுத்து வடிவம் தோன்றும். ஆனால், அந்தக் கருவி மக்களுக்குத் தெரியாது. அவர்கள் மக்களைப் பார்த்துப் பேசுவது போலவே இருக்கும். ஆனால், ஒவ்வொரு சொல்லையும் அதிலிருந்தே படிப்பார்கள்.

    தமிழ்நாட்டு அரசியலில் டெலிபிராம்ப்டரை அறிமுகப்படுத்தினால், இந்தச் சிக்கல் தீரும். பேச்சாளர், அவையைப் பார்த்துப் பேசலாம். ஆனால், அவருடைய பேச்சு முழுவதும் திரையில் தோன்றும். இப்படி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம். துண்டுச் சீட்டுக்கும் தேவையில்லை. என்ன, முன்னதாகவே பேச்சைத் தயாரிக்க வேண்டியது அவசியம்.

    இதற்கும் செயற்கை நுண்ணறிவு பெரிதும் உதவும். அவையில் உறுப்பினர் ஒருவர் ஒரு தரவைச் சொல்கிறார் என்றால், உடனடியாக அதைச் சரிபார்க்க முடியும். அதில் ஏதும் பிழை இருந்தால் உடனடியாகச் சுட்டிக் காட்ட முடியும். நாம் சொல்லும் தகவலுக்கும் உடனடியாக ஆதாரங்களைத் தர முடியும்.

    எனவே தமிழக அரசியலுக்கு இப்போது உடனடித் தேவை, டெலிபிராம்ப்டர் என்கிற உரைத்திரையும் செயற்கை நுண்ணறிவும்.

    Share
  • ரகசியக் காப்பு உறுதிமொழியில் ஒரு பிழை

    ரகசியக் காப்பு உறுதிமொழியில் ஒரு பிழை

    அண்ணாகண்ணன்

    முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஏற்றுள்ள ரகசியக் காப்பு உறுதிமொழியில் ஒரு பிழை உள்ளது.

    இதன் ஆங்கில வடிவம்

    Form of oath of secrecy for the Chief Minister:

    “I, A.B., do swear in the name of God / solemnly affirm, that I will not directly or indirectly communicate or reveal to any person or persons any matter which shall be brought under my consideration or shall become known to me as the Chief Minister for the state of Tamil Nadu, except as may be required for the due discharge of my duties as the Chief Minister.”

    இப்போதுள்ள தமிழ் வடிவம்:

    நான், தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சர் என்ற முறையில் எனது கவனத்திற்கு வருவதும் அல்லது எனக்குத் தெரியவருவதுமான எந்த ஒரு பொருளையும், முதலமைச்சரின் கடமைகளை உரியவாறு நிறைவேற்றத் தேவையான அளவுக்கன்றி, ஒருவரிடமோ அல்லது பலரிடமோ நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ அறிவிக்கவோ அல்லது வெளிப்படுத்தவோ மாட்டேன் என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன்.”

    ஆங்கிலத்தில் உள்ள matter என்பதைத் தமிழில் பொருள் எனப் பெயர்த்திருக்கிறார்கள்.

    பொருள் என்ற சொல்லுக்குத் தமிழில் பல பொருள்கள் உள்ளன. அர்த்தம், பணம், பொருண்மம், சடப் பொருள், பருப்பொருள், உட்பொருள், மறைபொருள்… என ஏராளமான அர்த்தங்கள் உள்ளன. இதில் எந்தப் பொருளை அவர்கள் சொல்கிறார்கள் என்பது இந்தச் சொல்லாட்சியில் கூர்மையாக இல்லை.

    ரகசியக் காப்பு உறுதிமொழியில் உள்ள matter என்பது, விஷயத்தைக் குறிக்கிறது. கூகுள் கூட இதை எவ்விஷயத்தையும் என்றே மொழிபெயர்க்கிறது. இதைச் செய்தி என்றும் சொல்லலாம். ஆனால், News என்ற பொருள் அதற்கு ஏற்கெனவே உள்ளது. தகவல், விவரம் என்று கூறலாம். ஆனால், விஷயம், விவரம் ஆகியவை தமிழ்ச் சொற்கள் இல்லை. தகவல் என்பது தமிழா என்று ஆராய வேண்டும். ஆனால், தரவு என்ற சொல், டேட்டாவைக் குறிக்கிறது. ரகசியக் காப்பில் உள்ள மேட்டர் என்பது ஒரு வகையான டேட்டா. எனவே இதைத் தரவு என்றே குறிப்பிடலாம்.

    விஜய்க்கு முன்னதாகப் பொறுப்பேற்ற முந்தைய முதலமைச்சர்களின் ரகசியக் காப்பு உறுதிமொழியையும் கவனித்தேன். அவர்களும் மேட்டரைப் பொருள் என்றே சொல்லியிருக்கிறார்கள். இந்தப் பொருளைத் தரவு என்று மாற்றுவது பொருத்தமாக இருக்கும்.

    இவ்வளவும் சொல்லிவிட்டு ரகசியக் காப்பில் ரகசியம் என்பது மட்டும் தமிழா என்றும் நீங்கள் கேட்கலாம். அது தமிழில்லை. அதைக் கமுக்கம் எனத் தமிழில் அழைக்கிறோம். கமுக்கக் காப்பு உறுதிமொழி அல்லது தரவுக் காப்பு உறுதிமொழி என இனி அழைக்கலாம். தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழி என்பதை நிலைநாட்ட, இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தலாம்.

    #vijay #cmvijay #tvk #tamil #tamilnadu #swornin #oath #terminology

    Share
  • விஜய் எனும் சாதனையாளன்

    விஜய் எனும் சாதனையாளன்

    அண்ணாகண்ணன்

    ஏனெனில்
    ஓய்வுக்குப் பிறகு இல்லை, உச்சத்தில் இருக்கும்போதே நீ அரசியலுக்கு வந்தாய்

    ஏனெனில்
    கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் நீ ஆட்சியைப் பிடித்தாய்

    ஏனெனில்
    மாறி மாறி அமைந்த 59 ஆண்டுக்கால திராவிட ஆட்சியை நீ அகற்றினாய்

    ஏனெனில்
    தனித்து நின்று, ஒன்றே முக்கால் கோடி வாக்குகளை நீ பெற்றாய்

    ஏனெனில்
    வாக்குக்குப் பணம் கொடுத்து வெல்லும் பார்முலாக்களை நீ தூக்கி எறிந்தாய்

    ஏனெனில்
    த.வெ.க. வேட்பாளராகப் பல்வேறு சாதியினருக்கும் வாய்ப்பளித்து வெற்றி பெற வைத்தாய்

    ஏனெனில்
    பொதுத் தொகுதிகளில் தலித் வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெறச் செய்தாய்

    ஏனெனில்
    இளைஞர்களை நீ முன்னிறுத்தினாய். த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்களில் 23 பேர், 35 வயதுக்கு உட்பட்டவர்கள்

    ஏனெனில்
    அரசியல் பொதுக்கூட்டம், மாநாடு, பரப்புரை ஆகிய அனைத்தையும் குறுகிய நேரத்தில் நிகழ்த்தினாய். இதன் மூலம் புதியதொரு விதி செய்தாய்

    ஏனெனில்
    உன் மதத்தை நீ மறைக்கவில்லை. நான் ஜோசப் விஜய் என்று வெளிப்படையாகச் சொன்னாய்

    ஏனெனில்
    எளிய திரைப்பட ரசிகர்களை நீ அரசியல்மயப்படுத்தினாய்

    ஏனெனில்
    வாக்குரிமை இல்லாத குழந்தைகள் மனத்தையும் நீ வெற்றி கொண்டாய்

    ஏனெனில்
    மக்களின் நம்பிக்கையாக, மாற்றத்தின் அடையாளமாக நீயே இருக்கிறாய்

     

    Share
  • ஒப்பீட்டு நோக்கில் மகாகவிகளின் பாடுபொருட்கள்

    முனைவர் த. ராதிகா லட்சுமி
    இணைப்பேராசிரியர்-தமிழ்த்துறை,
    நல்லமுத்துக் கவுண்டா் மகாலிங்கம் கல்லூரி,
    பொள்ளாச்சி

    இந்திய இலக்கிய வரலாற்றில் ஒரே காலக்கட்டத்தில் சுப்பிரமணிய பாரதியார், இரவீந்திரநாத தாகூர் என்ற இரு மகாகவிகள் கவியாட்சி புரிந்தார்கள். தமிழ்நாட்டின் எட்டயபுரத்தில் பிறந்து ‘நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்’ என்ற கொள்கையோடு கவிஞனாக வாழ்ந்தவர் சுப்பிரமணிய பாரதியார். இவர் நாமகளின் திருவருளால் சொல்வளத்தில் சிறந்தாரே தவிர திருமகளின் திருவருள் கிடைக்காததால் வாழ்நாள் முழுவதும் வறுமையில் வாடி தவித்தார்.  வங்காளத்தின் ஜெஸ்சூரில் பிறந்து நோபல் பரிசு பெற்றவர் இரவீந்திரநாத தாகூர். திருமகளின் செல்வத்துடன் நாமகளின் சொல்வளமும் ஒருங்கே பெற்றவர். தாகூரின் குடும்பம் சர்வதேச அளவில் கலையுலகத் தொடர்புடையது. தாகூர் பலமுறை வெளிநாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார்.

    பாரதி, தாகூரின் படைப்புகளில் தேசப்பற்று, பிரபஞ்ச சக்தி, தெய்வம் எங்கே?, இறைவேண்டல், ஒளி குறித்த வருணனை, பெண் முன்னேற்றம் யந்திரங்களின் வளர்ச்சி, மற்றும் காலனை மதித்தலும், மிதித்தலும் போன்ற சிந்தனைக் களங்களை ஒப்பீட்டு நோக்கில் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    தேசப்பற்று:

    சுப்பிரமணிய பாரதியார் மானிடத்தேவைகள் அனைத்திலும் மிக முக்கியமான சுதந்திரத்திற்காக அதிகமாகப் போராடுகிறார். இதற்காக போற்றுவதற்குரிய சுதந்திரதேவியின் பாதத்தில் எத்தகைய தியாகத்தைப் புரியவும் தயாராக இருக்கிறார். ‘நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை’ என வருத்தமுற்றப் பாட்டிலும் ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் சுதந்திர தாகத்தை உருவேற்ற முயலுகிறார்.

    ‘தேவி! நின்னொளி பெறாத
    தேயமோர் தேய மாமோ?
    ஆவியங் குண்டோ? செம்மை
    அறிவுண்டோ? ஆக்க முண்டோ?
    காவிய நூல்கள் ஞானக்
    கலைகள் வேதங்க ளுண்டோ?
    பாவிய ரன்றோ நிந்தன்
    பாலனம் படைத்தி லாதார்? ‘

    ‘சுதந்திர தேவியின் துதி’ என்ற பாடலில் தேசம், உயிர், அறிவு, ஆக்கம், காவியநூல்கள், கலைகள் என அனைத்தும் வேண்டுமென்றால் சுதந்திரம் வேண்டும் என்று தேசபக்தியை ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் விதைக்க முற்படுகிறார். ‘அச்சமில்லை! அச்சமில்லை!’ என்று அச்சத்தை நீக்கும் தாரக மந்திரத்தை முழங்குகிறார். ‘ஜெயமுண்டு பயமில்லை மனமே! இந்த ஜன்மத்திலே விடுதலையுண்டு’ என நம்பிக்கையை மனதில் துளிர்விடச் செய்கிறார்.

    அச்சமின்றி தலைநிமிர்ந்து நிற்கும் இதயம், அறிவு வளர்ச்சிக்கான பூரணவிடுதலை, குடும்பத்தின் குறுகிய தடைகளால் குலையாத உலகின் ஒருமைப்பாடு, மெய்ந்நெறிகளின் அடிப்படையில் உருவாகும் வாய்ச்சொற்கள், விடாமுயற்சியுடன் பூரணத்துவத்தை நோக்கி செல்லுதல், தெளிந்த அறிவோட்டம், பாழடைந்த பழக்கத்தால் வறண்ட பாலையை நோக்காத, வழிதவறாத பயணம் என்பதுடன்

    ‘நோக்கம் விரியவும்
    ஆக்கவினை புரியவும்
    இதயத்தை எங்கே
    வழிநடத்திச் செல்கிறாயோ, அந்த
    விடுதலைச் சுவர்க்க பூமியில்
    எந்தன் பிதாவே!
    விழித்தெழுக
    என் தேசம்’

    என்று தன் தேசம் குறித்த தன்னுடைய எதிர்பார்ப்பை இரவீந்திரநாத தாகூர். கீதாஞ்சலியில் பதிவுசெய்துள்ளார். விடுதலையான பூமி சுவர்க்க பூமியாக அதாவது மகிழ்ச்சியின் குறியீடாக அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு இதயமும் ஆக்கப்பூர்வமாக, தனித்துவமாக, அச்சமின்றி ஒருமைப்பாட்டுடன் செயல்படவேண்டும் என்ற விருப்பத்தை வலியுறுத்துகிறார்.

    பிரபஞ்ச சக்தி:

    பாரதியார் பிரபஞ்சத்தைச் சக்தியின் வடிவமாக நோக்கியவர். துன்பமில்லா நிலை, தூக்கமில்லாத கண்விழிப்பு, அன்பு கனிந்த கனிவு, இன்பமுதிர்வு, முக்திநிலையின் முடிவு, சொல்லில் விளங்கும் சுடர், தெய்வத்தை எண்ணும் நினைவு, பாட்டினில் வந்த களிப்பு, வாழ்வைப் பெருக்கும் மதி, மாநிலம் காக்கும் மதி, ஊழ்வினை நீக்கும் உயர்வு, உள்ளத்தில் ஒளிரும் விளக்கே சக்தி என்று சக்தியின் வடிவங்களை மனக்கண்ணில் நிறுத்துகிறார். இச்சக்தியிடமே பாரதியார் காணிநிலம் வேண்டும் என்றும், மோகத்தைக் கொன்றுவிடு என்றும் தன் வேட்கைகளை முறையிடுகிறார்.

    ‘விசையுறு பந்தினைப்போல் – உள்ளம்
    வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்…
    அசைவறு மதிகேட்டேன் இவை
    அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?’

    என்று வினா தொடுக்கும் அளவிற்கு பாரதி பிரபஞ்ச சக்தியிடம் நெருக்கமானப் பிணைப்பைக் கொண்டிருக்கிறார். இவ்வுலகத்தை இயக்கும் சக்தியின் மேல் பாரதிக்கு இருந்த நிலைப்பாடு புலனாகின்றது.

    இயற்கையையும், ஐம்பூதங்களையும் சக்தியாக காணும் பாரதியார் ஓரிடத்தில் இவை அனைத்தும் மாயைகளோ? என்று தளர்ந்து போனதை ‘நிற்பதுவே நடப்பதுவே’ பாடலில் காணமுடிகிறது. சொற்பனங்களாக, தோற்ற மயக்கங்களாக, அற்பமான மாயைகளாக, கானல்நீராக, காட்சிப்பிழைகளாக, கண்முன் உள்ள காட்சிகள் மறைந்து தோன்றுவது ஏன்? என உலகை நோக்கி வினவுகிறார்.

    ‘காண்பதுவே உறுதி கண்டோம்
    காண்பதல்லால் உறுதி இல்லை
    காண்பது சக்தியாம் இந்தக்காட்சி நித்தியமாhம்’

    என்ற இறுதியடிகளின் வாயிலாக உலகின் இயக்கமாக சக்தியைக் காண்பது உறுதி என பாரதியார் கூறுவது திண்ணம்.

    இரவீந்திரநாத் தாகூர் இருபத்தைந்தாவது வயது வரை கங்கைக்கரையில் உள்ள படகு வீட்டில் தனிமையோடு வாழ்ந்தவர் என்பதால் இயற்கைக்கூறுகளே அவருக்கு துணையாக இருந்திருக்கின்றன. தனிமையில் அவர் கனவுகளுக்கு உயிர் கொடுத்ததன் விளைவாகவே கீதாஞ்சலி தோன்றியதாக தாகூர் குறிப்பிடுகிறார்.

    ‘சூரியன் மறையும் மாலை நேரங்களில் தனிமையில் அமர்ந்து நிழல்களைப் போல தோற்றமளிக்கும் மரங்களைக் கவனிப்பேன். மதிய நேரத்தின் அமைதியான தருணங்களில் குழந்தைகளின் கூச்சல் தொலைவில் இருந்து மெதுவாக எனக்கு கேட்கும். எனக்கு இந்த குழந்தைகளின் மகிழ்ச்சிக் குரல்களும், பாடல்களும் மரங்களை நினைவூட்டும். ஏனெனில் இந்த மரங்களும் அந்த மகிழ்ச்சியான பாடல்களைப் போன்று பூமியின் இதயத்தில் இருந்து ஏக்கங்கள் மற்றும் மகிழ்ச்சியின் மொத்த வெளிப்பாட்டின் குறியீடுகளாகிய நாமும் நம் ஏக்கக் குரல்களை விண்ணுக்கு அனுப்புகிறோம். இதை நான் என் இதயத்தின் அடித்தளத்தில் உணர்ந்ததால் கீதாஞ்சலி என்ற கவிதை நூலை எழுதினேன்.’

    என்ற தாகூரின் உரை அவர் இயற்கையை உள்வாங்கிய விதத்தை வெளிப்படுத்துகிறது. தனிமையில் இருந்தபடி இயற்கையை ரசித்து. அனுபவித்து, உண்டு அவற்றில் தன் பிரம்மச் சக்தியைக் கீதங்களின் வாயிலாக நிரப்பி கீதாஞ்சலியை உலகுக்கு அளித்துள்ளார்.

    காற்றினிலே வருமென் கீதம், வானத்து விண்மீன், புல்லின் இலை, புல்லாங்குழலின் ஓசை, அகண்ட கடல், ஆனந்தப்பறவை, நித்திய ஒளி, மெல்லிசை போன்ற சொற்களின் மூலம் தாகூர் இயற்கையின் ஆற்றலையே கடவுளாகக் காண்கிறார். அதன் வாயிலாக உலகை அறிய முற்படுகிறார். அதனால் சக்தியை நோக்கி வினாக்களைத் தொடுக்காதவராக அன்பு, கருணை, ரசனை என இன்பங்களை அமைதியாக உட்கொண்டவராக திகழ்வதைக் காணமுடிகிறது.

    தெய்வம் எங்கே? :

    பக்தியையும். மனிதாபிமானத்தையும் இணைத்து நோக்கிய பார்வையால் இரு மகாகவிகளுமே உழைப்பவர்களிடத்தில் தெய்வத்தின் திருவுருவைக் காணமுற்படுகின்றனர்.

    ‘இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே!
    யந்தி ரங்கள் வகுத்திடு வீரே
    கரும்பைச் சாறு பிழிந்திடு வீரே
    கடலில் மூழ்கிநன் முத்தெடுப் பீரே!
    அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்
    ஆயி ரந்தொழில் செய்திடு வீரே!
    பெரும்பு கழ்நுமக் கேயிசைக் கின்றேன்
    பிரம தேவன் கலையிங்கு நீரே!’

    என்று பாரதியார் பிரமதேவனின் கலையாக தொழில் செய்பவர்கள் இருப்பதாக பாடுகிறார். தாகூர் ‘இறைவன் எங்கிருக்கிறான்’ என்ற பாடலில் துதி பாடி, சுலோகம் கூறி. ருத்திராட்சம், ஜெபமாலை உருட்டி, கோயிலில் சென்று காரிருளில் இறைவனைத் தேடாதே! இறைவன் அங்கில்லை!

    ‘மெய்வருந்தி
    இறுகிப் போன வயலை
    உழவன் எங்கே
    உழுது கொண்டு இருக்கிறானோ,
    வேர்வை சிந்தி
    நடைபாதை போடுபவன்
    எங்கே கல்லுடைத்து வருகிறானோ
    அங்கே உள்ளான் இறைவன்!
    வெட்ட வெயிலிலும்
    கொட்டும் மழையிலும்
    தூசி படிந்த ஆடையுடன்,
    உழைப்பாளி
    கூடவே குடியுள்ளான் இறைவன்!’

    தியானத்தை விடுத்து, நறுமணப்புகைகளைப் புறக்கணித்து விட்டு வியர்வையைச் சிந்திடும் உழைப்பாளியிடம் இணைந்து நில்! என்று பாடுகிறார். உழைப்பவர்களின் உருவில் தெய்வத்தைக் காணும் போக்கில் இருகவிகளிடமும் வேறுபாடு உண்டு. பாரதியார் உழைப்பாளர்களைச் சிருஷ்டி கர்த்தாக்களாக காண தாகூர் உழைப்பாளர்களை மனிதாபிமானத்தோடு அணுகுவதைக் காணமுடிகிறது

    இறைவேண்டல்:

    இரு மகாகவிகளுமே இறைவனை நேசித்தவர்கள். ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்கள். தாகூர், நெஞ்சில் உதிக்கும் தாழ்வான எண்ணங்களை வேரோடு அழிப்பாயாக! இன்பதுன்பத்தைத் தாங்கும் பொறுமையை அளிப்பாயாக! நற்பலன்களைத் தரும் பணிகளைச் செய்வேனாகுக! வழியோரை என்றும் மறக்காமல், நெறியற்ற மூர்க்கரை வணங்காதிருக்கும் வைராக்கியத்தைத் தந்திடுவாயாக! தெய்வமிடும் பணிக்கு நான் பாசமோடு உழைக்கும் சக்தியைத் தருவாயாக!

    ‘தினச் சச்சரவிலிருந்து விடுபட்டு
    மனம் அப்பால் சென்று
    எனது உள்ளம் உயர்ந்து சிந்திக்க
    மனத்தெளிவைத் தந்திடு!’

    என இறைவனிடம் வேண்டுவதில் தன் மனிதப்பண்பை மேம்படுத்த விரும்புவதை நோக்கமுடிகிறது. ஆனால் பாரதியோ,

              ‘எண்ணிய முடிதல் வேண்டும்
    நல்லனவே எண்ணல் வேண்டும்
    திண்ணிய நெஞ்சம் வேண்டும்
    தெளிந்த நல்லறிவு வேண்டும்’

    என்பதில் எண்ணங்களின் தோற்றுவாய், உழைப்பு, விடாமுயற்சி, வைராக்கியம், நற்சிந்தனைக்கான நல்லறிவு போன்றவற்றை நல்கும்படி இறைவனிடம் இறைஞ்சுகிறார். இங்கு இருமகாகவிகளின் எண்ணவோட்டங்கள் ஒரே அலையில் பயணிப்பதைக் கண்கூடாக அறியமுடிகிறது.

    ஒளி குறித்த வருணனை:

    ‘ஒளியே நீ யார்?
    ஞாயிறின் மகளா?
    அன்று நீ ஞாயிற்றின் உயிர். அதன் தெய்வம்’

    ஞாயிற்றின் வடிவம் என்பது ஒரு உடல். ஓளியாகிய நீ தான் உயிர்? உன் தோற்றம் எப்போது?

    உன்னை யார் படைத்தார்? நீ அறிவின் மகளா? உறங்கிக் கிடக்கும் தெளிவா? உனக்கும், வானவெளிக்குமான பழக்கம் எத்தனை காலம்? எத்தகைய அன்பு? எவ்வாறு வானவெளியில் இரண்டறக் கலக்கிறாய். உன்னைப் படைத்த விந்தைக்கரிய மோஹினியைத் தொழுகிறோம் என பாரதியார் ஒளியைக் கண்டு வியப்படைந்து வினாக்களைத் தொடுக்கிறார். இறுதியில் சக்தியே ஒளியைப் படைத்ததாகக் குறிப்பிட்டு தலைவணங்குகிறார். ஓளியின் அழகைத் தாகூர் ஒளியின் நர்த்தனமாக உவமித்துப் பாடுகிறார்.

    ‘மின்னொளியே!
    என்னரும் ஒளியே!
    உள்ளத்துக் கினிய ஒளியே!
    விழிகள் முத்தமிடும் ஒளியே!
    உலகை மூழ்கடிக்கும் ஒளியே!
    நர்த்தனம் ஆடும் ஒளிக்கதிர்கள்
    என் கண்மணியே!

    வானத்தின் வெடிச்சிரிப்பே மின்னல், பட்டுப்பூச்சிகள் ஒளிக்கடலில் மிதக்கும் படகுகள், ஒளியலையில் அல்லியும், மல்லியும் ஊர்திகள், முகிலில் பொன்னிறக்கதிர்கள் என ஒளியை வருணிக்கிறார். உள்ளத்தின் களிப்பு ஆகாயக் கங்கையால் வெள்ளமாய் பெருக்கெடுக்கிறது என ஆனந்தத் தாண்டவமிடும் ஒளியின் அழகைக் குறிப்பிடுவதில் இருமகாகவிகளின் உள்ளமும் ஒளிக்கு அடிமையாகியிருப்பதை அறியமுடிகிறது.

    பெண் முன்னேற்றம்:

    ‘பெண்டாட்டி தனையடிமைப் படுத்த வேண்டிப்
    பெண் குலத்தை முழுதடிமைப் படுத்தலாமா?’

    என்று கேட்டதுடன் பெண்ணடிமையுற்றிருப்பதால் இந்திய மக்களும் அடிமையுற்றிருப்பதில் வியப்பில்லை. வீட்டிலுள்ள பழக்கமே நாட்டில் இருப்பது இயல்பு. அதனால் வீட்டில் பெண்களின் அடிமை நிலை மாறவேண்டும் என்று பாரதியார் ‘தாய் மாண்பு’ என்னும் கவிதையில் பாடியுள்ளார்.

    ‘சமூகத்தில் தாங்களே முக்கியமானவர்கள், தங்கள் ஆதிக்கமே ஓங்கியிருக்க வேண்டும் என்று ஆண்கள் எண்ணி வந்தது … பெண்கள் அறியாமையிருளிலும், குருட்டு நம்பிக்கையிலும் ஆழ்ந்திருக்கும் வரை நம் இஷ்டம் போல் ஆடலாம். பெண்களுக்கு இடங் கொடுத்தால் நாம் நிம்மதியாக இருக்க முடியாதே என்பதே அவர்கள் கருத்து”

    என தாகூர் கூறியதில் ஆண்கள் தங்கள் சுயநலத்திற்காக பெண்களை அடிமைப்படுத்தும் நிலையைச் சுட்டுகிறார். இருவருமே பெண்களை மதிக்கவேண்டும் என்ற கருத்தையே வலியுறுத்துகின்றனர். தாகூர் தன் பெரிய தமக்கை முதல்முதலாக பல்லக்கில் ஏறி பள்ளிக்குச் சென்றபோது பெரியமனிதர்கள் தங்களுக்கு தலைகுனிவு ஏற்பட்டதாக கருதியதைத் தாகூர் குறிப்பிடுகிறார். பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் என புதுமைப்பெண்ணிற்குரிய வரையறையாக பாரதியாரும் பெண்கல்வியை முன்னிறுத்துகிறார். இதன்வாயிலாக பெண்குல விடுதலையே மானிடகுல விடுதலை என்பதை இரு மகாகவிகளும் உணர்ந்து செயல்பட்டதை அறியமுடிகிறது.

    யந்திரங்களின் வளர்ச்சி:

    இன்றைய உலகின் தவிர்க்க முடியாத இயக்கச் சாதனங்களாக தொழில் வளர்ச்சியையும், எந்திரங்களையும் குறிப்பிடலாம். யந்திரத்தின் வருகையைப் பற்றி பாரதியும் தாகூரும் வெவ்வேறு அணுகுமுறைகளைக் கொண்டிருக்கின்றனர். சுப்பிரமணிய பாரதியார் ‘கைத்தொழில் போற்று’ என்றும் ‘கூடித்தொழில் செய்’ என்றும் புதிய ஆத்திச்சூடியில் இயற்றியுள்ளார். ‘பாரததேசம்’ என்ற பாடலிலே பல தொழில்கள் குறித்துப் பாடுகிறார்.

    ‘ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்,
    ஆலைகள் வைப்போம், கல்விச் சாலைகள் வைப்போம்…
    வானையளப் போம், கடல் மீனையளப்போம்
    சந்திர மண் டலத்தியல் கண்டு தெளிவோம்’

    குடைகள், உழுபடைகள், இரும்பாணிகள், வண்டிகள், கப்பல்கள்   செய்வோம் என்று தொழிலுக்கு வந்தனை செய்கிறார். இன்று சந்திர மண்டலத்தில் விண்கலம் ஏவிவிடுதலை எதிர்நோக்கி அன்றே பாடியுள்ளார். புதிய இந்தியாவிலே கைத்தொழிலின் வளர்ச்சி, தொழில் செய்ய யந்திரங்கள் , அவற்றை இயக்கும் மனிதர்களின் அறிவு வளர்ச்சி சிறக்கவேண்டும் என ஆசைப்பட்டார். மேலும் எதிர்காலத்தை நோக்கி குறி சொல்லும் விதத்திலே

    ‘குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
    நல்லகாலம் வருகுது நல்லகாலம் வருகுது…
    தொழில் பெருகுது தொழிலாளி வாழ்வான்
    சாத்திரம் வளருது: சூத்திரம் தெரியுது:
    யந்திரம்; பெருகுது: தந்திரம் பெருகுது’

    என புதிய கோணங்கி பாடலில் தொழில் வளர்ச்சியையும், தொழிலாளியையும், யந்;திரங்களையும் குறித்து பேரானந்தத்தோடு பாடுவதை உணரமுடிகிறது. 1916 ஆம் ஆண்டு பாரதியார் எழுதிய ‘புதிய உயிர்’ என்ற கட்டுரையிலே உலகம் மேன்மையுற கைத்தொழில்கள் பெருகவேண்டும், இவற்றில் சாத்தியமில்லை என்றுரைப்பதில் பயனில்லை என்று குறிப்பிட்டுள்ளார். ‘ஜப்பான் தொழிற்கல்வி’ என்ற கட்டுரையிலே நம் இந்தியப் பிள்ளைகளை ஜப்பானிற்கு அனுப்பி பலவிதமான தொழில்களும், சாஸ்திரங்களும் கற்றுக் கொள்ளும்படி செய்யவேண்டும். மேலும் கைத்தொழில் வளர்ச்சிக்காக உழைப்போரும் உண்மையான தேசபக்தரே என குறிப்பிட்டிருப்பதில் பாரதியின் தேசபக்தியை அறியமுடிகிறது.

    யந்திரங்களை அணுகிய விதத்தில் பாரதிக்கு நேர்முரணான கருத்தைத் தாகூர் கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் அவர் நிகழ்த்திய ‘இந்தியாவில் தேசியம்’ என்ற சொற்பொழிவில் பின்வருமாறு கூறுகிறார்.

    ‘இன்று உலகில் காணப்படும் பெரிய கைத்தொழில் ஸ்தாபனங்களிலே எனக்கு நம்பிக்கையில்லை, அவை குருபமாக இருப்பதே சிருஷ்டியமைப்புக்கு முரணாக இருக்கின்றன என்பதைக் காட்டுகிறது. இயற்கையின் மகத்தான சக்தியானது பயங்கரத்தில் தோற்றமளிப்பதில்லை. அழகிலேயே காட்சி தருகிறது. யந்திர நாகரிகமானது இன்பத்தைப் பலியிட்டுப் பணத்தைத் திரட்டுகிறது. தான் நிறுவும் (யந்திர) கருவிகளுக்கு அதிகபட்ச இடமளிப்பதற்காக மனிதன் தனது மனிதப்பண்பைக் குறைந்தபட்ச அளவு ஒடுக்கிக் கொள்கிறான். மனித உணர்ச்சிகள் யந்திரங்களை இலகுவில் ஏற்க மறுப்பதால் – யந்திரங்களின் பாதையை மறிப்பதால் – அந்த நல்லுணர்ச்சிகளை ஏளனம் பண்ணுகிறான் மனிதன்’

    என்பதில் இயற்கையின் மடியிலே பிறந்து வளர்ந்த தாகூர் இயற்கைக்கு முரணான யந்திரங்களையும், புகை கக்கும் ஆலைகளையும் விரும்பாதது இயல்பே. எனினும் வறுமையில் வாடும் மக்களின் வளர்ச்சிக்காக சிந்திக்காமல் யந்திரங்களை வேண்டாம் என்று கூறியது ஆச்சரியத்தையே அளிக்கிறது.

    பாரதியார் ஜப்பான் நாட்டின் தொழில் வளர்ச்சி குறித்து நூல்களில் படித்தும், பிறர் சொல்ல கேள்விப்பட்டதையும் கொண்டு நம் இந்திய இளைஞர்கள் ஜப்பான் சென்று தொழில்நுட்பத்திறமை பெறவேண்டும் என்றார். ஆனால் தாகூரோ பல முறை ஜப்பானுக்கு சென்று அக்காட்சிகளையே நேரிலே கண்டவர். அதனால் ஜப்பான் நவீன மயமானதில் மானுடச்செல்வங்கள் அழிந்ததாக குறிப்பிடுகிறார். இரு மகாகவிகளின் இவ்வேறுபட்ட   சிந்தனைக்குக் காரணத்தை நுணுக்கமாக கவனித்தால் இருவரும் வளர்ந்த சூழல் மாறுபாட்டைக் குறிப்பிடலாம். பாரதியார் நாட்டின் வளர்ச்சிக்கு யந்திரங்களின் இன்றிமையாமையைக் கருத்தில் கொண்டு பாடியதில் அவருடைய இந்திய தேசியப்பற்றை அறியமுடிகிறது. ‘மனிதன் மனிதனே யந்திரம் யந்திரமே என்றுமே இணையமுடியாது’ என்ற கருத்துடைய தாகூர் நாட்டைவிட மனிதகுலப் பண்புகளையும், இயற்கையையும் நேசித்ததை அறியமுடிகிறது. யந்திரங்கள் உலகில் ஒருசிலரிடம் மட்டுமே இருந்து போட்டி, பொறாமைகளை உருவாக்கி மனிதனை அழிப்பதைக் கண்கூடாகக் கண்ட தாகூர் யந்திரங்களை நிராகரிக்க பாரதியார் சமத்துவம், வேலைக்குத் தகுந்த கூலி என்றதோடு யந்திரங்களை வரவேற்றதில் இருமகாகவிகளின் உள்ளுணர்வும் புலனாகின்றது.

    காலனை விரும்புதலும், எதிர்த்தலும்:

    மரணம் என்பது ஒவ்வொரு உயிர்களுக்கும் ஏற்படக்கூடியது. தவிர்க்கமுடியாதது என பாரதியார் பல பாடல்களில் குறிப்பிட்டிருப்பினும்,

    ‘பார் மீது நான்சாகா திருப்பேன் காண்பீர்
    சாவினை வேண்டேன் தவிர்ப்பாய் போற்றி’

    என்பதில் பாரதியார் மரணபயத்தைத் தவிர்க்க விரும்புபவராகவும், சாகாவரத்தைத் தெய்வத்திடம் கேட்பவராகவும் காணப்படுகிறார். இதன் பொருட்டே பாரதியார் தமது இறுதியாண்டுகளின் போது மரணம் என்ற சிந்தனையில் உழன்று அலைக்கழிக்கப்பட்ட காலத்தில் ‘காலனுக்கு உரைத்தல்’ என்ற பாடலில்,

    ‘காலா உன்னைச் சிறுபுல்லென மதிக்கிறேன் – என்றன்
    காலருகே வாடா! சற்றே உன்னை மதிக்கிறேன்’

    என்று காலனின் மீது வெகுண்டெழுகிறார். ஆனால் தாகூரோ மரணதேவனை வரவேற்கிறார். இறைவனின் பணியாளான மரணதேவன் கடல்கடந்து என் வீட்டிற்கு வர காரிருள் சூழ்ந்த இரவில், நெஞ்சில் அகத்தடன் கையில் தீபமேந்தி வாசலைத் திறக்கிறேன்.

              ‘வரவேற்கிறேன் நான்
    சிரம் தாழ்த்தி
    மரணதேவனை!’

    நான் கரங்களைக் குவித்து, இதயத்தை அர்ப்பணிக்க மரணதேவன் ஒருநாள் இறைவனின் கட்டளையை நிறைவேற்றி செல்வான். என் தனி ஆன்மா மட்டும் இறைவனுக்கு இறுதிக்கொடை என தாகூர் ‘மரணதேவனுக்கு வரவேற்பு’ பாடல் பாடியுள்ளார். ஒவ்வொரு நாளும் மரணதேவனின் வருகைக்காக வழிமேல் விழி வைத்துக் காத்திருப்பதாக ‘மரணதேவனுக்கு மணமாலை’ கவிதையில் குறிப்பிட்டுள்ளார். இங்கு இளம்வயதில் உயிரினைத் தொலைக்க முற்பட்ட சுப்பிரமணிய பாரதியார் காலனை மிதிக்க, முதுமைப்பருவத்தில் உயிரினைத் துறக்க முற்பட்ட தாகூர் மரணதேவனை வரவேற்று பரிசினையும் நல்குவதில் இரு மகாகவிகளின் இறப்பு குறித்த எண்ணங்கள் புலப்படுகின்றது.

    தொகுப்புரை:

    சமகால கவிஞர்களான பாரதியும், தாகூரும் ஒவ்வொரு இந்தியரிடத்தும் தேசப்பற்றை உருவாக்கவும், மனித மனதின் எண்ணங்களில் தெளிவை ஏற்படுத்தவும் விழைந்தனர். பிரபஞ்ச சக்தியிடம் பாரதி உரிமையுடன் வினாக்களைத் தொடுக்க தாகூர் இயற்கையை அமைதியுடன் உட்கொள்வராய் திகழ்கிறார். இருவருமே தெய்வத்தை உழைப்பாளரிடத்தில் வெவ்வேறு கோணங்களில் நோக்குகின்றனர். மனித குலப்பண்புகளை மேம்படுத்த இறைவனிடம் வேண்டுவதிலும், இயற்கையை ரசிப்பதிலும், பெண் முன்னேற்றத்திலும் ஒத்த சிந்தனையே கொண்டுள்ளனர். யந்திரங்களின் வளர்ச்சியை நாட்டின் முன்னேற்றப் பார்வையில் பாரதி நோக்க, தாகூரோ மானிடகுலப்பண்புகளை அழிப்பதாக கருதுகிறார். வாழ்க்கையை வாழ்ந்து முடித்த தாகூர் முதுமைப்பருவத்தில் காலனை வரவேற்க, தன் விருப்பங்கள் நிறைவேறாத பாரதியார் காலனை மிதிக்க எண்ணுகிறார்.

    பாரதியார் உலக அரங்குக்குள் போக வாய்ப்பேதும் கிட்டாத. வறுமையில் வாடினும் மிடுக்கான தமிழகக் கவிஞனாக வாழ்ந்து மறைந்தான். தாகூர் வங்காளத்தில் பிரபு வம்சத்தில் பிறந்து, பல வெளிநாடுகளுக்கு செல்கின்ற வாய்ப்புகள் பெற்றவர். ஆங்கிலமொழி பாண்டித்தியமும், வெளிநாட்டு மக்களின் தொடர்பும் நட்புறவும் பெற்றிருந்ததால் உலக அரங்கில் தன் கீதங்களை எடுத்து செல்லும் வல்லமை கிட்டியது. அதனால் நோபல் பரிசு வெல்லும் வாய்ப்பும் பெற்றார். பாரதியின் பாடல்கள் எழுச்சி மிக்கதாக, கோபத்துடன் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்குக் காரணம் அவர் வாழ்ந்த சூழலேயாகும். தாகூரின் பாடல்கள் கனிவுடன் மென்மையான இறகுகளால் வருடுவதைப் போன்றிருப்பதற்கு காரணமாக அவருடைய தனிமையையும், பொருளாதார நிறைவையும் குறிப்பிடலாம். இரு மகாகவிகளுமே தன்னம்பிக்கையுடன் உலகை எதிர்நோக்கி வழிகாட்டுபவராக திகழ்ந்தனர் என்பதில் ஐயமில்லை. நோபல் பரிசு பெற்ற வங்கக்கவிஞரான தாகூருக்கு சற்றும் சளைத்தவரல்ல நம் தமிழகக்கவிஞர் பாரதியார் என்பது திண்ணம்.

    துணைநூல்கள்:

          1.பாரதியார் கவிதைகள் – ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

    1. பாரதியார் கட்டுரைகள் – பாரதி புத்தக நிலையம்
    2. கீதாஞ்சலி – இரவீந்திரநாத தாகூர் மொழிபெயர்ப்பு – ஜெயபரதன்
    3. ரவிந்திரர் கட்டுரைத்திரட்டு – தமிழாக்கம்- த.நா.குமாரஸ்வாமி
    4. பாரதி என்றென்றும் – தொகுப்பாசிரியர் பொன்னீலன்
    5. இலக்கியக் கோட்பாடுகள் நோக்கில் பாரதி படைப்புக்கள் – பதிப்பாசிரியர்கள் முனைவர்அ.பிச்சை, முனைவர் பா. ஆனந்தகுமார்
    6. மகாகவி பாரதி பற்றி சோவியத் அறிஞர்கள் – பதிப்பு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
    7. இரு மகாகவிகள் – க.கைலாசபதி
    8. மகாகவி பாரதியார் – வ.ரா

    Share
  • கவியரசர் பாடல்களில் ஆன்மீகம் – 17

    கவியரசர் பாடல்களில் ஆன்மீகம் – 17

    சக்தி சக்திதாசன்

    அன்பினுமினிய வல்லமை வாசகர்களே !

    மீண்டும் உங்கள் முன்னே கவியரசரின் பாடல் வரிகளுக்குள் புதைத்திருக்கும் வரிகளின் ஆன்மீகத்தை எனது கோணத்தில் பார்த்ததை பகிர்கிறேன்.

    1962ம் ஆண்டு வெளிவந்த ” வளர்பிறை ” எனும் திரைப்படத்தில் வெளிவந்த ” பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியம் ” எனும் பாடல் கே.வி.மகாதேவன் இசையில் டி.எம்.எஸ் குரலில் ஒலித்தது.

    கவியரசரின் வரிகளை சரணங்களில் பார்ப்போம்,

    பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
    புரியாமலே இருப்பான் ஒருவன் – அவனை
    புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்

    தென்னை இளநீருக்குள்ளே தேங்கியுள்ள ஓட்டுகுள்ளே
    தேங்காயைப் பொல் இருப்பான் ஒருவன் தென்னை இளநீருக்குள்ளே தேங்கியுள்ள ஓட்டுகுள்ளே
    தேங்காயைப் பொல் இருப்பான் ஒருவன் – அவனை
    தெரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்

    முற்றும் கசந்ததென்று பற்றறுத்து வந்தவர்க்கு
    சுற்றமென நின்றிருப்பான் ஒருவன்
    முற்றும் கசந்ததென்று பற்றறுத்து வந்தவர்க்கு
    சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் – அவனை
    தொடர்ந்து சென்றால் அவன் தான் இறைவன்

    கோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி வைத்து
    வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன்
    கோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி வைத்து
    வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன் – அந்த
    ஏழையின் பேர் உலகில் இறைவன்

    கவியரசர் கண்ணதாசன் தமிழ் திரையிசை உலகில் மட்டுமல்ல, தத்துவ இலக்கிய உலகிலும் தனி இடம் பெற்றவர்.

    அவரது பாடல்கள் வெறும் சொல் அழகுக்காக மட்டும் எழுதப்படவில்லை.

    அவை மனித உள்ளத்தின் ஆழத்தைத் தொட்டு, இறைவனின் இயல்பை எளிய உருவகங்கள் வழி விளக்கும் தத்துவ நூல்கள்.

    “பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியம்” என்ற இப்பாடல் அதற்கு சிறந்த சான்று.

    நான்கு சரணங்களில் அவர் இறைவனின் நான்கு வேறுபட்ட தத்துவ இயல்புகளை அகண்ட இயல்பு, மறைந்திருக்கும் தன்மை, அன்பின் வடிவம், படைப்பின் மர்மம்
    நேர்த்தியாக விரிக்கிறார்.

    முதல் சரணம்

    பூஜ்ஜியத்தில் ராஜ்ஜியம்: அகண்ட தத்துவம்

    “பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்” என்ற வரிகளில் கண்ணதாசன் வேதாந்தத்தின் உயரிய சிந்தனையை ஒரே வரியில் சுருக்கி வைக்கிறார்.

    பூஜ்ஜியம் என்பது வெறுமை அல்ல
    அது எல்லாமற்ற நிலை அல்ல, எல்லாமுடைய நிலை.

    கணித உலகில் பூஜ்ஜியம் இல்லாமல் எந்த எண்ணும் அர்த்தமற்றது.

    அதைப் போலவே இறைவன் இல்லாமல் எந்த படைப்பும் அர்த்தமற்றது என்பதை இந்த உருவகம் ஆழமாகப் பேசுகிறது.

    “ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமல் இருப்பான்” என்பது மிக முக்கியமான தத்துவம்.

    இறைவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், ஆட்சி செய்கிறான் என்பது நம் அன்றாட வாழ்வில் நாம் காணவே முடியாத சக்திகளை சுட்டுகிறது.

    காற்று புரியாமலே மூச்சாகிறது.

    இதயம் புரியாமலே துடிக்கிறது.

    பூமி புரியாமலே சுழல்கிறது .

    இவை யாவும் அந்த “புரியாத ராஜ்ஜியத்தின்” வெளிப்பாடுகளே.

    “புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்” என்று கவிஞர் முடிக்கும்போது, இறைவனை அறிவது புத்தகங்களால் அல்ல, உள்ளுணர்வால் மட்டுமே என்ற உபநிஷத சாரத்தை உணர்த்துகிறார்.

    பூஜ்ஜியம் என்ற கணித சொல்லை இறையியல் தத்துவத்தோடு இணைத்தது கண்ணதாசனுக்கே உரிய அறிவுத் திறன்.

    இரண்டாம் சரணம்

    தேங்காய் உருவகம்: மறைவில் வாழும் இறைவன்

    “தென்னை இளநீருக்குள்ளே தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே தேங்காயைப் போல் இருப்பான் ஒருவன்” இந்த உருவகம் தமிழ் கவிதை மரபில் அரிதானது.

    ஒரு தென்னை மரத்திலிருந்து இளநீரை எடுத்துக் கொள்கிறோம், குடிக்கிறோம்.

    ஆனால் அந்த இளநீரின் உள்ளே ஒரு மெல்லிய சதை படர்ந்திருக்கிறது.

    அது காலப் போக்கில் தேங்காயாக திடமாகிறது.

    ஆக, ஒரே பொருளுக்குள் மூன்று நிலைகள் இளநீர், ஓடு, தேங்காய்  ஒரே நேரத்தில் இருக்கின்றன.

    இறைவனும் அப்படியே உலகின் மேற்பரப்பில் புரிந்துகொள்ளும்போது வெறும் திரவமாகவே தெரிகிறான்.

    ஆழமாகத் தேடும்போது ஓட்டின் உறுதியாகத் தெரிகிறான்.

    மேலும் ஆழமாக உணரும்போது தேங்காயின் நிறைவாக அனுபவிக்கப்படுகிறான்.

    “தெரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்” என்ற வரி, இறைவனை அறிவது தேடல் மட்டுமே என்று சொல்கிறது.

    அறிவு சாஸ்திரங்களில் இல்லை, அனுபவத்தில் இருக்கிறது என்ற ஞானமார்க்கத்தை இந்தச் சாதாரண தென்னை மரம் கற்றுத் தருகிறது.

    கண்ணதாசனின் சிறப்பு என்னவென்றால், ஒரு தமிழகத் தோட்டத்தில் கிடைக்கும் பொருளை எடுத்து, அதனுள் பிரபஞ்ச ரகசியத்தை புதைத்து வைத்திருக்கிறார்.

    உயர்ந்த தத்துவம் உயரிய வார்த்தைகளில் மட்டுமல்ல, எளிய வாழ்வின் உருவகங்களிலும் இருக்கிறது என்ற அவரது நம்பிக்கை இங்கே வெளிப்படுகிறது.

    மூன்றாம் சரணம்

    துறவியின் சுற்றம்: அன்பின் இறைவன்

    “முற்றும் கசந்ததென்று பற்றறுத்து வந்தவர்க்கு சுற்றமென நின்றிருப்பான் ஒருவன்” இந்த சரணம் உணர்வு நிலையில் மிகவும் ஆழமானது.

    உலகின் எல்லாப் பற்றுகளையும் விட்டு, சுற்றமும் நண்பரும் சொத்தும் சுகமும் கசந்துபோய், தனிமையாக நிற்கும் ஒருவனுக்கு இறைவன் என்ன செய்கிறான்?

    அவனுக்கு சுற்றமாக, குடும்பமாக நிற்கிறான் என்கிறார் கண்ணதாசன்.

    இது ராமகிருஷ்ண பரமஹம்சர் முதல் திருவள்ளுவர் வரை பேசிய ஒரு உண்மை இறைவன் தேவையானவர்களுக்கே தன்னை வெளிப்படுத்துகிறான்.

    “பற்றறுத்து வந்தவர்க்கு” என்ற தேர்வு மிக முக்கியமானது.

    அனைவருக்கும் அல்ல பற்றை விட்டவர்களுக்கு மட்டுமே அவன் நெருங்குகிறான்.

    வெற்றிடத்தில் மட்டுமே ஒளி நுழையும்; நிறைந்த கலசத்தில் மழைத் தண்ணீர் சேராது என்ற ஆன்மீக விதியை இங்கே காண்கிறோம்.

    “தொடர்ந்து சென்றால் அவன் தான் இறைவன்” என்ற வரி பக்தி மார்க்கத்தின் சாரம்.

    நாம் அவனைத் தேடினால் அவன் ஓடமாட்டான்.

    நாம் விலகினால் அவன் காத்திருப்பான்.

    ஆக, சாதனையும் தொடர்ச்சியும் மட்டுமே இறைவனை அடைவதற்கான வழி என்று கவிஞர் வழிகாட்டுகிறார்.

    நான்காம் சரணம்

    கோழி-முட்டை மர்மம்: படைப்பின் அதிசயம்

    “கோழிக்குள் முட்டை வைத்து, முட்டைக்குள் கோழி வைத்து, வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன்” இந்த சரணம் படைப்பின் மர்மத்தை மிக அழகிய தர்க்கத்தில் சொல்கிறது.

    கோழி முதலா, முட்டை முதலா என்ற மனித மனத்தின் நெடுங்காலமான கேள்விக்கு கண்ணதாசன் பதில் சொல்ல மறுக்கிறார் ஏனெனில் அந்தக் கேள்வியே தவறானது.

    அந்த வட்டத்தை உருவாக்கியவன் இறைவன்.

    அதனுள் சிக்கிக் கேள்வி கேட்பவர்கள் மனிதர்கள்.

    “வாழைக்கும் கன்று வைத்தான்” என்பது மிக நுட்பமானது.

    வாழை மரம் விதையால் உருவாவதில்லை அது கன்றால் வளர்கிறது.

    ஆக, இயற்கையின் படைப்பு முறை ஒரே வழியில் இல்லை என்றும், படைப்பாளனின் கைவண்ணம் அளவற்றது என்றும் சொல்கிறார்.

    கோழி-முட்டை வட்டம் சுழல் படைப்பைக் காட்டுகிறது; வாழை கன்று நேர் படைப்பைக் காட்டுகிறது.

    இரண்டும் ஒரே இறைவனின் வெவ்வேறு வடிவங்கள்.

    “அந்த ஏழையின் பேர் உலகில் இறைவன்” என்ற முடிவு முழு பாடலின் உயிர் நாடி.

    ஏழை என்று இறைவனை அழைப்பது ஆழமான அன்பின் வெளிப்பாடு.

    ஏனென்றால் எல்லா ஆடம்பரங்களையும் விட்டு, படைப்பின் மர்மத்தை தன்னுள் சுமந்து, யாரும் புரிந்துகொள்ளாமல் இருக்கும் அவன் ஒரு “ஏழை”யே.

    இது அன்பின் நகை  கடவுளை ஏழை என்று அழைக்கும் தைரியம் பக்திக்கு மட்டுமே உண்டு.

    இப்பாடலில் கண்ணதாசன் வெளிப்படுத்தும் சிறப்புகள் பன்முகமானவை.

    முதலில், அவர் கணிதம், இயற்கை, சமூகவியல், தர்க்கம் என்ற நான்கு வெவ்வேறு துறைகளிலிருந்து உருவகங்களை எடுத்து ஒரே இறைவனை நான்கு கோணங்களில் விவரிக்கிறார்.

    இது ஒரு கவிஞனுக்கு அரிதான அறிவுத் திறன்.

    இரண்டாவது சிறப்பு அவர் சமஸ்கிருத தத்துவ சொற்களை பயன்படுத்தாமல், தமிழ் மண்ணின் பொருட்களையே தென்னை, வாழை, கோழி, முட்டை  கருவிகளாகக் கொள்கிறார்.

    இது தமிழ் ஆன்மீகத்தின் நேரடி வாரிசு.

    சித்தர்கள் பாடல்களிலும், திருக்குறளிலும் காணும் “அகம் சொல்லி புறம் காட்டும்” மரபை அவர் தொடர்கிறார்.

    மூன்றாவது சிறப்பு ஒவ்வொரு சரணமும் ஒரு வேறுபட்ட மார்க்கத்தை சுட்டுகிறது.

    முதல் சரணம் ஞானமார்க்கம்.

    இரண்டாம் சரணம் தேட முயலும் சாதகனின் பாதை.

    மூன்றாம் சரணம் பக்தி மார்க்கம்.

    நான்காம் சரணம் படைப்பின் மர்மத்தை வியக்கும் சரணாகதி.

    நான்கு வழிகளிலும் ஒரே இறைவனை அடையலாம் என்று கவிஞர் சொல்கிறார்  இது பகவத் கீதையின் எதிரொலி.

    நான்காவது சிறப்பு “அவனை புரிந்தால், தெரிந்தால், தொடர்ந்தால்” என்று ஒவ்வொரு சரணமும் வேறு வேறு வினையால் முடிவடைகிறது.

    புரிதல் — புத்தி நிலை.

    தெரிதல் — அனுபவ நிலை.

    தொடர்தல் — சாதனை நிலை.

    இவை மூன்றும் வேவ்வேறு நிலையில் உள்ள மனிதர்களுக்கான அழைப்புகள்.

    எந்த நிலையில் இருந்தாலும் இறைவனை அடையலாம் என்ற அடக்கமான நம்பிக்கையை கவிஞர் வெளிப்படுத்துகிறார்.

    கண்ணதாசன் வெறும் வரிகள் எழுதவில்லை .

    அவர் ஒரு தத்துவ இலக்கியம் படைத்தார்.

    திரைப் பாடலின் இசை ஒரு நாள் மறைந்தாலும், இந்த வரிகளில் புதைந்திருக்கும் தத்துவம் மறையாது.
    பூஜ்ஜியம் முதல் ஏழை வரை  கணிதம் முதல் கருணை வரை  இறைவனை ஒரு பயணமாக வரையறுக்கும் இப்பாடல், தமிழ் ஆன்மீக கவிதையின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாக என்றும் நிலைத்திருக்கும்.

    அன்பினியவர்களே !

    கவியரசரின் ஆற்றல் ஒரு ஆழி போல எம்முன்னே விரிந்து கிடக்கிறது.

    இங்கே நான் ஒரு சிறுவன் கடற்கரையில் ஒரு வாளியினுள் அவ்வாழியின் நீரை அள்ளி விளையாடுவது போன்றே எனது முயற்சி.

    மீண்டும் அடுத்தொரு பகுதியில் சந்திக்கிறேன்.

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 32

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 27. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (5)

    எலும்பைப் பெண்ணாக்கியது

    மயிலாப்பூரில் வணிகர் குலத்தில், சிவனடி மறவாச் சீலர் சிவநெறித் தொண்டில் ஈடுபட்டு ஈசனடியாரை நேசிக்கும் இயல்புடையாரான  சிவநேசர் என்னும் அடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். சைவ சமயமே மெய்மைச் சமயம் என்பதையும், பிற சமயமாகிய சமண, பௌத்த மதங்களைத் தமிழ்நாட்டிலிருந்து விரட்டி, சைவப் பயிர் செழித்தோங்கச் செய்யும் உறுதியுடையோராய்த் திகழ்ந்தவர். தமது மூன்றாம் அகவையில் திருக்காழிப்பதியில் ஞானப்பால் உண்டு, முத்துச் சிவிகை, முத்துப்பந்தர், பொற்றாளம் சிவபெருமான் கருணையால் பெற்றவர், மதுரை மூதூர் சென்று சமணர்களை வென்று சைவம் தழைத்தோங்கச் செய்த அருமைப் பெருமைகளுக்கு உரியவரான ஞானசம்பந்தர் பற்றி கேள்வியுற்று அவர்பால் எல்லையில்லாத பேரன்புடையராயினார். அவருக்கு அழகிற் சிறந்த பூம்பாவை எனும் ஒரு பெண் மகவு இருந்தாள். மணப்பருவம் எய்திய நிலையில் இருந்த அப்பெண் திருமகளென அழகும் கலைமகளென அறிவும் மிக்கவளாய் இருந்தாள். அவளையும், தன்னையும், தன் செல்வத்தையும் ஞானசம்பந்தருக்கே உடமையாக்கி அவர் மடியில் சமர்ப்பிப்பேன் என்று உறுதி கொண்டார்.

     

    இந்நிலையில் பூம்பாவை பூஞ்சோலையில் மலர் பறிக்கச் சென்றபோது அரவு தீண்டி உயிர் துறந்தாள்.  சிவநேசர் மிகவும் வருந்தினாலும் அப்பெண், சம்பந்தப் பெருமானின் உடமையென்பதால் தாம் ஏன் கவலை கொள்ள வேண்டும் என்று உளம் தெளிந்து, அவள் உடலைத் தகனம் செய்து, எலும்பையும் சாம்பலையும் ஒரு மட்குடத்திலிட்டு, அதைக் கன்னி மாடத்தில் வைத்து அக்குடத்திற்குப் பூம்பாவை பூணும் அணிகலன்களையெல்லாம் அணிவித்துப் பூசனை செய்து வந்தார். ஞானசம்பந்தர் திருவொற்றியூரில் தங்கியுள்ளார் என்ற செய்தியை அவ்வூர் மக்கள் சிவநேசரிடம் தெரிவித்தனர். அகமலர்ந்த சிவநேசர் சம்பந்தரை வரவேற்கத் திருவொற்றியூர் சென்று எதிர் கொண்டழைத்தார். ஞானசம்பந்தரைக் கண்டு வணங்கிய அளவில் உடன் வந்த அடியார்கள் அவரை அறிமுகம் செய்ததோடு அவள் மகள் இறந்த செய்தியையும் அவரிடம் கூறினர்.

    ஞானசம்பந்தர் மயிலாப்பூருக்கு எழுந்தருளி கபாலீசுரரை வழிபட்டு, சிவநேசரை அழைத்து அவர்தம் மகளின் என்பு நிறைந்த குடத்தினை எடுத்து வரச் செய்து அக்குடத்தை இறைவன் திருமுன் வைக்கும்படி பணித்தார். சிவநேசரும் வெந்த சாம்பலோடு எலும்பு நிறைந்த குடத்தினைச் சிவிகையில் வைத்து எடுத்து வந்து கபாலீச்சுவரப் பெருமான் திருமுன் வைத்து வணங்கினார். `மண்ணினிற் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும் அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல் என்பது உண்மையாயின் உலகவர் முன் இப்பூம்பாவை உயிர் பெற்று எழுந்து வருவாளாக` எனக்கூறி இறைவனை வேண்டிப் பூம்பாவைத் திருப்பதிகமாகிய,

     

    மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக்
    கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
    ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்
    கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்

     

    எனத் திருப்பதிகம் தொடங்கி, முதல் பாடலிலே உருவம் பெற்ற பூம்பாவை, இப்பதிகத்தின் இரண்டு முதல் ஒன்பது வரையான எட்டுப் பாடல்களைப் பாடிய அளவில் பன்னிரெண்டு வயதுடையவளாக மாறி நின்றாள்.

     

    உரிஞ்சாய வாழ்க்கை அமணுடையைப் போர்க்கும்

    இருஞ்சாக் கியர்கள் எடுத்துரைப்ப நாட்டில்

    கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான்

    பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்!

     

    எனும் பத்தாவது பாடலைப் பாடிய அளவில் செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் போல அப்பெண் உயிர் பெற்று குடம் உடைய வெளிப்பட்டு எழுந்தவள், ஞானசம்பந்தரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினாள். ஞானசம்பந்தர் திருப்பதிகத்தின் பதினொன்றாவது பாடலைப் பாடி நிறைவு செய்தார். சிவநேசர் ஞானசம்பந்தரை வணங்கித் திருவருளைப் போற்றினார். தன் திருமகளைத் திருமணம் புரிந்து ஏற்றருள வேண்டுமெனவும் வேண்டினார். அது கேட்ட ஞானசம்பந்தர், அரவு தீண்டி உயிர் துறந்த மகளை இறைவன் திருவருளால் பூம்பாவையாக மீண்டும் பிறப்பித்த்தால் அவள் தமக்கு மகளாவாள் என்ற மறை நெறி மரபை அவருக்கு உணர்த்தினார். சிவநேசர் மனத் தெளிவுற்று அப்பெண்ணை வேறொருவர்க்கு மணம் முடிக்க மனமின்றிக் கன்னிமாடத்தே இருக்கச் செய்தார். பூம்பாவையும் சிவன் அருளையே சிந்தித்துச் சிவனடி சேர்ந்தார்.
    பின்னர் ஞானசம்பந்தர் தொண்டை நாட்டுத் திருத்தலங்கள், திருவான்மியூர், இடைச்சுரம், திருக்கழுக்குன்றம் முதலான தலங்களை வணங்கிக் கொண்டு தில்லையை அடைந்து திருச்சிற்றம்பலம் உடையானைப் போற்றிச் சீர்காழிக்கு எழுந்தருளிப் பிரமபுரத்துப் பெருமானை வழிபட்டுத் தம் திருமாளிகையை அடைந்தார்.

    காழிவேந்தருக்குக் கடிமணம்!

     

    ஞானசம்பந்தர் சீர்காழிமேய பெருமானை நாளும் வணங்கி முருக நாயனார், திருநீலநக்க நாயனார் முதலிய அடியவருடன் இனிதிருந்தார். சிவபாத இருதயரும் சுற்றத்தாரும் ஞானசம்பந்தர், அக்கால மரபுப்படி திருமண வயதான பதினாறு ஆண்டு எய்திய நிலையினராய் இருத்தலை எண்ணி அவரை அணுகி மறை நெறிப்படி வேள்வி செய்ய ஒரு கன்னியைத் திருமணம் புரிந்து இவ்வுலகிற்கு நல்வழி காட்ட வேண்டும் என வேண்டினர். ஞானசம்பந்தர் முதலில் மறுத்தாலும் திருவருளை நினைந்து மறைவாழவும் அந்நெறியின் துறைவாழவும் திருமணத்திற்கு இசைந்தார்.

     

    சிவபாத இருதயர் திருநல்லூரில் வாழ்ந்த சீலமிக்க அந்தணர் குடியில் தோன்றிய நம்மாண்டவர் என்பாரின் திருமகளை மணம் பேசி நிச்சயித்தார். திருமண நாளும் குறிக்கப்பட்டது. நல்லூர் மணவிழாவினால் பொலிவு பெற்றது. ஞானசம்பந்தர் உரிய அத்திருநாளில் தோணிபுரத்தில் பெரிய நாயகியாருடன் வீற்றிருந்தருளும் எம்பெருமானை வணங்கிச் சிவிகைமீது அமர்ந்து அடியவர்கள் உறவினர்கள் உடன் வரத் திருநல்லூரை அடைந்தார். அங்கு விளங்கும் பெருமணம் என்னும் கோயிலை அடைந்து சிவபிரானைப் பணிந்து, கோயிலின் அருகே அமைந்த திருமடத்தில் திரு மஞ்சனமாடித் திருமணக் கோலம் பூண்டு திருமணச் சாலைக்கு எழுந்தருளினார். நம்மாண்டவர் நம்பியும் அவரது துணைவியாரும் அவரைப் பொற்பீடத்தில் இருத்தி, மங்கல மகளிர் மணப் பெண்ணை அழைத்து வந்து ஞானசம்பந்தரின் வலப்புறம் அமரச் செய்தனர். திருநீலநக்க நாயனார் வேத விதிப்படி திருமணச் சடங்குகளை நிகழ்த்தினார். இறைவன் திருமுன் நின்று `கல்லூர்ப் பெருமணம் வேண்டா` எனத் தொடங்கித் திருப்பதிகம் அருளிச் செய்தார். அப்போது சிவபெருமான் தூய சோதிப் பிழம்பாய்த் தோன்றி நின்று `ஞானசம்பந்தனே நீயும் நின் மனைவியும் திருமணம் காண வந்தோரும் இச்சோதியினுள்ளே வந்து சேர்மின்` எனக்கூறி அதனுள்ளே புகுதற்கு வாயிலையும் காட்டி நின்றார். ஞானசம்பந்தர் `இம்மண விழாக்காண வந்தோர் அனைவரும் இச் சோதியுட் புகுமின்` எனக் கூறி `காதலாகி` எனத் தொடங்கும் நமச்சிவாயத் திருப்பதிகம் அருளினார். திருநீலநக்கர் முருக நாயனார் சிவபாத இருதயர் நம்மாண்டவர் நம்பி திருநீலகண்டப் பெரும்பாணர் முதலானோர் தத்தம் துணைவியாருடன் சிவசோதியுட் புகுந்தார்கள். ஆளுடைய பிள்ளையாரைத் தொடர்ந்து வந்த அடியவர் பரிசனங்கள் அருந்தவ முனிவர்கள் முதலிய அனைவரும் சிவசோதியுட் புகுந்த பின் திருஞானசம்பந்தர் மணமகளைக் கைப்பிடித்து இறைவனது எழில்வளர் சோதியை வலம் வந்து அதனுள்ளே புகுந்து பெருமானோடு ஒன்றி உடனானார்.
    அச்சோதி மறைய பெருமணக் கோயில் முன் போலவே அமைந்தது. அனைவர்க்கும் சிவலோகம் வழங்கிய பெருமானை அன்பர்கள் சிவலோகத்தியாகர் எனப் போற்றினர்.

     

    கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
    பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில
    சொல்லூர்ப் பெருமணம் சூடல ரேதொண்டர்
    நல்லூர்ப் பெருமண மேயநம் பானே

    ஞானசம்பந்தர் உலகத்தார் உய்யும் பொருட்டு நன்னெறியினை அறிவுறுத்த உளங்கொண்டு ஞானமெய் நெறிதான் யார்க்கும், ‘நமச்சிவாயச் சொல்லாம்’ என்று அனைவருக்கும் ஐந்தெழுத்தாகிய நமச்சிவாயத் திருப்பதிகத்தினை அருளிச் செய்து கூட்டுச் சிவதீக்கை செய்வித்துச் சோதியில் கலக்கச் செய்தார்.

     

    திருச்சிற்றம்பலம்

    திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலம் கி.பி.7ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி என்பது வரலாற்று ஆசிரியர்கள் கணித்துள்ள உண்மையாகும். திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் சம காலத்தவர் என்பதும் அவர் தம் வரலாறுகளால் விளங்கும். குணபரன் என்ற சிறப்புப் பெயரோடு வாழ்ந்த பல்லவன் மகேந்திர வர்மன் காலம் கி.பி. 600 முதல் 630 வரை ஆகும் என்ற வகையில் அம்மன்னனும் திருநாவுக்கரசர் காலத்தில் வாழ்ந்தவன் ஆவான். திருஞானசம்பந்தர் காலத்தில் வாழ்ந்த நாயன்மார்களில் சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியார் மகேந்திரவர்மனின் புதல்வனான நரசிம்மவர்மப் பல்லவன் காலத்தில் படைத் தளபதியாக இருந்து சாளுக்கியரோடு வாதாபியில் நிகழ்த்திய போரில் வெற்றி கண்டவர். அதன் பின்னரே அவர் திருச்செங்காட்டங்குடி சென்று சிவனடித் தொண்டு பூண்டு அடியவராக விளங்கினார். நரசிம்மவர்மன் வாதாபிப் போர் நிகழ்த்திய காலம் கி.பி.642 ஆகும் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். திருஞானசம்பந்தரால் வெப்புநோய் தவிர்த்தருளப் பெற்ற பாண்டிய மன்னன் நெடுமாறன் மாறவர்மன் அரிகேசரி என்ற பெயருடையவன். மங்கையர்க்கரசியாரின் மணாளனான இம்மன்னனின் காலம் கி.பி. 640-670 என்ற வகையில் திருஞானசம்பந்தரின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இடைப்பகுதியேயாகும் என்பதை ஐயம் இன்றித் துணியலாம் என்கின்றனர்.

    “வேதெநெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை

    விளங்கப் பூத பரம்பரை பொலியப் புனிதவாய்

    மலர்ந்தழுத சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்

    பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்”

    என்ற திருத்தொண்டர் புராணச் செய்யுளால், வேதநெறியையும் சைவத்துறையையும் புனர்நிர்மாணம் செய்யும் பொருட்டாகத் திருவவதாரம் செய்தருளியுள்ளவர் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் என்பது உறுதிப்படும். ஆன்மாவானது ஞானத்தால் விளையும் மெய்யன்பின் மூலம் சிவனருளிற் படிந்து மூழ்கித் திளைத்தற்குரிய இடம் என்ற நயப் பாட்டினாலும் அத்தகு மெய்யன்பை இடமாகக் கொண்டு அதன் மயமாகவே சிவம் வெளிப்படும் என அறியப்படுதலானும் மெய்ஞ்ஞான நிலை சைவத்துறையாதல் அமையும். “ஞானம் ஈசன்பாலன்பே” எனத் திருத்தொண்டர் புராணத்தும் “அன்பே சிவமாவது” எனத் திருமந்திரத்தும் வருவன கொண்டும் அது தெளியப்படுகிறது.

    அன்பு, அறம், மறம் ஆதியனவும் அச்சிவத்தினால் அமைந்தவையே என்பது,

    “பூவினில் வாசம் புனலினிற் பொற்பு

    புதுவிரைச்சந்தினின் நாற்றம் நாவினிற்

     பாடல்கள் நள்ளாறுடைய நம் பெருமான்”

     

     “கனத்தகத்துக் கடுஞ்சுடராய் நின்றாய் நீயே

    கடல்மலைவா னாகாசமானாய் நீயே”

     

     “பண்ணி னிசையாகி நின்றாய் போற்றி”

    என்பன போன்ற தேவாரத் திருப்பதிகங்களாலும்,

     “தீயினுள் தெறல்நீ பூவினுள் நாற்றம்

    நீ கல்லினுள் மணியுநீ சொல்லினுள்

    வாய்மைநீ அறத்தினுளன்புநீ

    மறத்தினுள் மைந்து நீ வேதத்து

    மறைநீ பூதத்து முதலுநீ அனைத்துநீ

    அனைத்தினுட் பொருளுநீ”

    என்னும் பரிபாடலாலும் அறியப்படும்.

    வேள்வி நெறியாகிய வேத நெறி மீளத் தலையெடுத்தோங்க வைத்து அருளிய திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரின் விறல் மிக்க தொண்டின் மகிமை அளப்பரியது என்பது அவர்தம் வரலாற்று நிகழ்வுகளும் அவர் திருவாய் மலர்ந்தருளிய தேவாரத் திருப்பாடல்களுமாகிய அகச் சான்றுகளாலேயே இன்றளவிலும் உறுதியாக நிற்பதும் கண்கூடு.

    சைவத்துறை தழைத்தோங்கும் பொருட்டு அவர்தம் திருவவதாரம் அமைந்தது என்பதற்கு ஆதாரம், அவர் தமது மூன்றாண்டுப் பருவத்திலேயே உமாதேவியாரால் ஞானப்பாலூட்டப் பெற்று, சைவத் துறையாகிய ஞான நிலையில் விளங்கி, ஞானமுண்டார் – திருஞானசம்பந்தர் – சிவஞானசம்பந்தர் என்ற திருப்பெயர்களால் வழங்கப் பெற்றதனாலும், நின்றசீர் நெடுமாறன், மங்கையர்க்கரசியார், குலச்சிறையார் என்போர் சிவஞானிகளாகி நாயன்மார் அறுபத்து மூவர் நிரலில் அம்மூவரும் இடம்பெற அருளியமையாலும் சிவம் எனும் ஞானம் பெருக்கும் பிள்ளையார் என்றே போற்றப் பெற்றிருத்தலாலும், திருவோத்தூர்ப் பனைகளே பாசநீக்கம் பெற்றுச் சிவப்பேறடைய வைத்தமையாலும், அவர் திருவாய் மலர்ந்தருளிய தேவாரத்தமிழ், தனிப்பட்டதொரு ஞான எழுச்சியும் விறலும் உடைத்தாதலைச் சுட்டியே அதனைத் திருநெறிய தமிழெனவும் அதை விளம்பிய ஞானச்செல்வனைத் தமிழ்ஞான சம்பந்தன் எனவும் விதந்தோதப்பட்டுள்ளார்.

    “காகமுணவு கலந்துண்ணக் கண்டீர்

    அகண்டாகாரசிவ போக மென்னும்

    பெருவெள்ளம் பொங்கித் ததும்பிப்பூரணமாய்

    ஏகவெளியாய்க் கிடக்குதையோ இன்புற்றிடநாம்

    இனியெடுத்த தேகம் விழுமுன்

    புசிப்பதற்குச் சேரவாருஞ் செகத்தீரே”

    எனத் தாயுமான சுவாமிகள் விடுத்துள்ள அறைகூவலால், உலகமுள்ள அளவும் சைவஞானத்தின் பெருமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்க வல்லதாக இருக்குங்கால் இதற்குக் காரணகர்த்தராய் விளங்கிய சுவாமிகளாகிய திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரின் ஞான மகிமை எக்காலத்தும் போற்றுதலுக்குரியதாம்.

    ஞானப்பிள்ளையார், தென்பாண்டி நாட்டில் சென்றபோது நாடு இருந்த நிலையும் சைவம் இருந்த நிலையும் வேதனைக்குரியதாக இருந்தது. சமணரைக் கழுவில் ஏற்றியது சரியா என்ற வாதம் எழுவது இயல்புதான் என்றாலும் அது சிந்திக்கத்தக்க வினாவாகும். ஆனால் திருஞானசம்பந்தர் சமணர்களைக் கழுவில் ஏற்றச் சொல்லவில்லை என்பதும் உண்மைதான். சமணர்களைப் பொருத்தவரை, அவர்களே சூளுரைத்து அவர்களுக்கு, அவர்களே விதித்துக் கொண்ட தண்டனைதான் அது. வாதிலே தோற்ற சமணர்கள் தாங்கள் செய்த சபதத்தின்படி, பாண்டி வேந்தன், கழுவிலே ஏற்றுமாறு உத்தரவிட்டான். குலச்சிறையாரும் அதனை நிறைவேற்றினார். ஆனால் சமணர்கள் பல்லாயிரம் அடியார்கள் தங்கியிருந்த மடத்தில் தீ வைத்தது தண்டனைக்குரிய குற்றம் என்பதும் உண்மை. நாடாளும் மன்னனான நின்றசீர் நெடுமாறன் அரச நீதி காக்கும் பொருட்டே அவர்களைக் கழுவேற்றினான். நாட்டில் சட்டம் ஒழுங்கைச் சீர் குலைப்பது மக்களின் அமைதியான வாழ்க்கையைப் பாதிக்கும் என்பதால் அதனைச் சரி செய்வதும் மன்னனின் கடமையாகும். எனவே மன்னன் உரிய தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்டினான். இதனை சம்பந்தர் தடுத்திருக்கலாமே என்ற வினாவும் எழலாம். அவருக்குச் சமணர்கள்பால் காழ்ப்புணர்ச்சி இல்லையென்றாலும் அரச நீதியில் மதம் கலந்து விடக் கூடாது என்ற நோக்கத்தில் அடியவர்களுக்கு இழைத்த அநீதிக்காகவும் அவர் இதில் தலையிடவில்லை என்றே அறியலாம்.

    வழிபாட்டு மொழி பற்றிய ஐயம் எழுபவருக்கு ஞானச்செல்வர் எம்பெருமானை வழுத்தும் அடியவருக்கும் பெருமானுக்கும் இடையில் மொழி எந்த தடையும் இல்லை. காரணம் அனைத்து மொழியும் அறிந்தவன் சிவபெருமான். ஆகவே அடியாருக்குத் தெரிந்த மொழியால் அவன் புகழ் சொல்லிப் பரவலாம் என்பதைத் தெள்ளென விளக்குகிறார்.

    1. தம்மலரடி யொன்ற அடியவர் பரவத்

    தமிழ் சொல்லும் வட சொல்லும் தாணிழற்சேர

    அம்மலர் கொன்றை அணிந்த எம் அடிகள்

     

    1. கல்லால் நிழல்மேய கறை சேர் கண்டா என்று

    எல்லா மொழியாலும் இமையோர் தொழுது ஏத்த

     

    1. பத்தரொடு பலரும் வொலியும்மலர் அங்கை புனல்தூவி

    ஒத்த சொல்லி யுலகத்தவர் தாந்தொழ

     

    1. செந்தமிழ் தெய்வமறை நாவர் செழுநற்கலை தெரிந்த அவரோடு

    அந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரன்.

     

    சம்மந்தப் பெருமான் வழிபாட்டு மொழி எது எனில், தம் உள்ளத்தை எது ஒன்றச் செய்கிறதோ அம்மொழியே வழிபாட்டு மொழி என வழிகாட்டுகிறார்.

     

    வழிபாட்டு நெறிகள்

    1. சிவ வழிபாடு செய்தல்
    2. திருநீறு அணிந்து மகிழ்தல்
    3. ஐந்தெழுத்து ஓதல்

    ஆகிய மூன்று நெறிகளை வலியுறுத்தி நாம் வாழச் சிந்தை நிலை பெறச் சிவ வழிபாடும் அதற்குச் சாதனமாகத் திருநீறு அணிதலும், திருஐந்தெழுத்தை ஓதலுமே முத்தி பெற எளிய வழி என வலியுறுத்தி வாழ்ந்து காட்டினார்.

    திருஞானசம்பந்தர் துதி

    பரசமய கோளரியைப் பாலறா வாயனைப்பூம் பழனம் சூழ்ந்த

    சிரபுரத்துத் திருஞான சம்பந்தப் பெருமானைத் தேய மெல்லாம்

    குரவையிடத் தமிழ்வேதம் விரித்தருளும் கவுணியர்கள் குலதீ பத்தை

    விரவிஎமை ஆளுடைய வென்றிமழ இளங்களிற்றை விரும்பி வாழ்வாம்.

    திருச்சிற்றம்பலம்.

     

    Share