Tag: மறவன்புலவு க. சச்சிதானந்தன்

  • ஒரே நாடு! ஒரே சட்டம்! வரவேற்கிறோம்!

    ஒரே நாடு! ஒரே சட்டம்! வரவேற்கிறோம்!

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    சிவ சேனை, இலங்கை

    மேதகு குடியரசுத் தலைவர் கோதபய இராசபட்சர், நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் ஆற்றிய உரையில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையை முன் வைத்துள்ளார்கள்.

    சைவர்கள் ஆகிய நாங்கள், இந்தக் கொள்கையை முழுமனதோடு வரவேற்கிறோம். ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையால் இலங்கையின் வேரோடும் வேரின் மண்ணோடும் கூர்ந்து கிளர்ந்த பண்பாடும் வாழ்வு முறையும் செழிக்கும்.

    பல்லாயிரம் ஆண்டுகளாக, தொடர்ச்சியாக இலங்கையில் சைவத் தமிழர் தமக்கெனப் படிப்படியாகக் காலங்கள் ஊடாகத் திருத்தியும் சேர்த்தும் நீக்கியும் உருவாக்கிச் சட்டமாக்கிய தேசவழமைச் சட்டத்தின் கூறுகள், புத்த சிங்கள மக்களிடையேயும் வேரூன்றிப் பரவியுள்ளன.

    தேசவழமைச் சட்டத்தையே நடைமுறைப்படுத்துவேன் என விடாப்பிடியாகக் கூறிய சங்கிலி மன்னனை வீழ்த்தியவர்கள் வந்தேறிகளான கத்தோலிக்கப் போர்த்துக்கேயர்.

    தேசவழமைச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனத் தங்களுக்கு தாமே சட்டங்களை எழுதி வாழ்வாகக் கொள்பவர்கள் வந்தேறிகளான முகமதியர்கள்.

    தென்னிந்தியாவில் தமிழர், வடுகர், கன்னடர், கேரளர் என நான்கு இனத்தாரும் தேசவழமைச் சட்டத்தினைக் கைக் கொள்வதில்லை. ஆனால் தெற்கே வாழும் சிங்கள புத்த மக்கள் பலர் தேசவழமைச் சட்டத்தின் கூறுகளையே வாழ்வியல் ஆக்கியுள்ளார்கள்.

    மேலைத்தேய மற்றும் முகமதியச் சட்டக் கூறுகள், இலங்கை மண்ணுக்கு முற்றிலும் பொருந்தாதவை. அவை இங்கு உருவாகியவை அல்ல. இலங்கையின் மண், காற்று, வானம், பகல், இரவு, காடுகள், மரங்கள் என மண்ணின் மக்களின் பூமி புத்திரரின் வாழ்வியலோடு கலந்தவை அல்ல.

    உரோம ஒல்லாந்த ஆங்கிலேயர் முகமதிய வந்தேறிச் சட்டங்களின் நற்கூறுகளை உள்வாங்கித் தேசவழமைச் சட்டத்தின் அடித்தளத்தில் ஒரே நாடு ஒரே சட்டம் உருவாகுவதை மேதகு குடியரசுத் தலைவரின் கடந்த வார நாடாளுமன்ற உரையில் கூறியதை, சைவ மக்களின் சார்பில் சிவசேனை வரவேற்கிறது. இந்த முயற்சியை வாழ்த்துகிறது, பாராட்டுகிறது.

    Share
  • காங்கேயன்துறையிலிருந்து காரைக்காலுக்குச் சைவ வழிபாட்டுப் பயணிகள் கப்பல்

    காங்கேயன்துறையிலிருந்து காரைக்காலுக்குச் சைவ வழிபாட்டுப் பயணிகள் கப்பல்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    சிவ சேனை, இலங்கை

    இந்திய நடுவண் அரசின் கப்பல் துறை அமைச்சரின் வழிகாட்டலுக்கு அமைய, காரைக்காலில் இருந்து காங்கேயன்துறைக்குச் சைவ வழிபாட்டு பயணிகளுக்காகக் கப்பல் விடுவதாகப் புதுச்சேரி முதலமைச்சர், வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை வழி புதுச்சேரிச் சட்டசபையில் அறிவித்தார்.

    புதுச்சேரி முதலமைச்சரின் நிதி நிலை அறிக்கையின் 145ஆவது பந்தி

    இன்று நண்பகல் இலங்கைச் சைவர்களின் சார்பில் புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு நாராயணசாமி அவர்களுக்குத் தொலைப்பேசியில் வாழ்த்துச் செய்தியைக் கூறினேன், நன்றியைக் கூறினேன்.

    கடந்த மூன்று ஆண்டுகளாக இலங்கையிலும் இந்தியாவிலும் இக் கப்பல் சேவையைத் தொடங்குமாறு ஈர் அரசுகளையும் வலியுறுத்திக் கடிதங்கள் கொடுத்து வருகிறேன்

    இலங்கை அரசு, வடமாகாண மேதகு ஆளுநர் றெசினால்டு கூரே காலத்திலேயே இக் கப்பல் சேவைக்கு ஒப்புதல் வழங்கி இருந்தது.

    இலங்கைக் கடற்படைத் தளபதி பல முறை என்னை அழைத்தார். கப்பல் சேவை எப்பொழுது தொடங்குகிறது நாங்கள் உதவுகிறோம் என ஒவ்வொரு முறையும் கூறியுள்ளார்.

    அவ்வாறு அக்காலத்தில் குடியரசுத் தலைவரின் முதன்மைச் செயலாளராக இருந்த திரு. ஒஸ்டின் பெர்ணாந்து, இலங்கைக் கப்பல் கூட்டுத்தாபனத்துடனும் இந்தியத் தூதருடனும் நேராகப் பேசி, இக் கப்பல் சேவையை விரைவாகத் தொடங்குங்கள் என ஆணையிட்டிருந்தார்.

    இதையடுத்து நான் சென்னைக்கும் தில்லிக்கும் பல முறைகள் சென்றேன்.

    சென்னையில் என் வேண்டுகோளை ஏற்ற தமிழக அரசின் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள், தமிழக அரசின் ஒப்புதலைத் தில்லிக்கு வழங்கியிருந்தார்.

    அக்காலத்தில் மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் திரு. இல கணேசன் அவர்கள், என்னை வெளிநாட்டு அமைச்சுக்கும் கப்பல் சேவை அமைச்சுக்கும் அழைத்துச் சென்று அவர்கள் ஒப்புதல் வழங்கக் காரணமாயிருந்தார்.

    அவ்வாறு இந்தியப் பிரதமர் அலுவலகத்தின் ஆலோசகராக இருந்த திரு. எஸ் குருமூர்த்தி அவர்கள், பிரதமர் அலுவலகத்தில் ஒப்புதல்களைப் பெற உதவினார்.

    சென்னையிலும் தில்லியிலும் உள்ள இந்து சமய அமைப்புகள், சார்பாளர்கள் யாவரும் இக்கருத்தை இந்திய அரசுக்கு எடுத்துக்கூறி வலியுறுத்தினார்கள்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து இணை அமைச்சர், புதுச்சேரிக்கு வந்தார். காரைக்கால் துறைமுகத்தைப் பார்வையிட்டார். கப்பல் சேவை தொடங்குவதற்கான வழிகாட்டல்களைக் கொடுத்திருந்தார்.

    இந்த வாரம் புதுச்சேரி சட்டசபையில் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த மாண்புமிகு முதலமைச்சர் நாராயணசாமி, மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு அமைய காரைக்காலிலிருந்து காங்கேயன்துறைக்குக் கப்பல் சேவையைத் தொடங்குவதற்கான உயர்மட்டக் குழுவை அமைத்து இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

    Share
  • சைவத் தமிழ்ச் சங்கிலியனும் சட்டத் தொடர்ச்சியும்

    சைவத் தமிழ்ச் சங்கிலியனும் சட்டத் தொடர்ச்சியும்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    இலங்கையில் மூவர் அமரும் நீதிமன்றங்கள் அமைவது மிகக் குறைவு. ஆங்கிலத்தில் Trial-at-Bar எனச் சொல்வார்கள்.

    சங்கிலி மன்னனின் கடைசிக் காலங்களை 1976ஆம் ஆண்டு கொழும்பில் மூவர் நீதிமன்றத்தின் முன் பேசினர். சூடானில் நடந்தவை, சிம்பாப்வேயில் நடந்தவை, அவற்றுக்கும் சங்கிலி மன்னனுக்கும் என்ன தொடர்பு?ஆனாலும் நீதிமன்றத்தில் பேசினர்.

    குலேந்திரன், மகேந்திரன் அல்லது குலோதரன், மகோதரன் என்ற யாழ்ப்பாண (நாகநாடு) மன்னர்களை மகாவமிசம் கூறும்.

    முதலாம் கயவாகுவை மணம் முடித்தவள் யாழ்ப்பாண மன்னர் மகள் என மகாவமிசம் கூறும்.

    பூம்புகார்ச் சோழ மன்னன் கிள்ளிவளவன் மணம் முடித்ததும் யாழ்ப்பாண மன்னனின் மகள் என்று மணிமேகலை கூறும்.

    ஓர் அரசனிடமிருந்து மற்றோர் அரசனுக்கு ஆட்சி கைமாறும். அரசன் இறந்தால் இளவரசன்/ இளவரசி அரசராகுவர். அரசன் போரில் தோற்றால் வென்ற அரசன் அரசனாவான்.

    வாரிசு அரசன் ஆகலாம். போரில் வென்றவன் அரசன் ஆகலாம். அங்கே இறைமைத் தொடர்ச்சி, ஆட்சித் தொடர்ச்சி, சட்டத் தொடர்ச்சி.

    மகாவம்சம் கூறும் மகோதரனுக்கு முன்பும் பல அரசர். பின்பும் பல அரசர். இடை இடையே குறுகிய காலங்கள், சேரர் சோழர் பாண்டியர் எனத் தமிழரே யாழ்ப்பாணத்தைத் தொடர்ச்சியாக ஆண்டனர். போரில் வென்றதால் ஆண்டனர்.

    நீண்ட ஆட்சியாக யாழ்ப்பாணத் தமிழ் அரசர்கள் ஆண்டனர். இடையே கலிங்க மாகன் ஒருவன், சாவகச் சந்திரபானு மற்றவன், யாழ்ப்பாணத்தை வீழ்த்தித் தமது ஆட்சிக்குள் கொண்டுவந்தனர். இவர்கள் இருவருமே தமிழர் அல்லாத அரசர்.

    வரலாறுக்கு முற்பட்ட காலங்களிலிருந்து தொடர்ச்சியாக யாழ்ப்பாண அரசைத் தமிழரான வாரிசு அரசர்கள், போரில் வென்ற அரசர்கள் ஆண்டனர்.

    இடையில் திடீரென்று முளைத்த எவரும் அரசர் ஆகவில்லை. கலிங்க மாகனையும் சாவகச் சந்திரபானுவையும் தவிர அன்னியர் ஆட்சியில் யாழ்ப்பாணம் ஒருபோதும் இருந்ததில்லை.

    முடியாட்சிக் காலத்தில் இறைமைத் தொடர்ச்சி, ஆட்சித் தொடர்ச்சி, சட்டத் தொடர்ச்சி என யாழ்ப்பாணத்தில் பல நூற்றாண்டுகளுக்கு ஊடாக நிலையான ஆட்சி. தமிழரான செண்பகப் பெருமாளின் 16 ஆண்டு கால ஆட்சியைச் சிங்கள ஆட்சி எனலாமா?

    சங்கிலியனைப் போர்த்துக்கேயர் வீழ்த்தும் நாளில் தமிழரின் நீண்ட தொடரச்சியான முடியாட்சி அற்றது. சைவத் தமிழச் சங்கிலி மன்னனிடம் இருந்த தமிழர் இறைமை, கத்தோலிக்கப் போர்த்துக்கேய மன்னனைச் சென்றடைந்தது. போத்துக்கேயர் தாம் பெற்ற இறைமையை, ஆட்சி உரிமையை கிறித்தவ ஒல்லாந்த மன்னரிடம் கையளித்தனர். ஒல்லாந்தரும் அவற்றைக் கிறித்தவ ஆங்கிலேய மன்னரிடம் கையளித்தனர்.

    ஆங்கிலேயர் விட்டுச் சென்ற பொழுது சோல்பரி அரசியலமைப்புக் கொண்ட இலங்கை, விடுதலை பெற்று ஆங்கிலேய மன்னரின் கீழ் குடியாட்சி (Dominion) நாடாகியது.

    இலங்கையின் உச்ச நீதிமன்றத்தை நாடுவோர், அதன் தீர்ப்பை எதிர்த்து இங்கிலாந்து அரசவை நீதிமன்றத்துக்கு விண்ணப்பிக்கலாம், தீர்ப்பைக் கோரலாம். 1948-1972 ஆக 24ஆண்டுகளாக இந்த நிலை.

    1795 தொடக்கம் 22 மே1972 வரை சங்கிலிய மன்னன் கையளித்த சைவத் தமிழர் இறைமை ஆங்கிலேய அரசியிடம்.

    இலங்கை நாடாளுமன்றமே அரசியலமைப்பைத் திருத்தாமல், சட்டத் தொடர்ச்சி இன்றி, புதிய அரசியலமைப்பு யாக்க அவையை, கொழும்பு ரோயல் கல்லூரி மண்டபத்தில், நவரங்கல மண்டபத்தில் 1971 ஸ்ரீமாவோ ஆட்சியின் கீழ் கூட்டிய பொழுது சங்கிலியன் கையளித்த தமிழரின் இறைமையை யார் பயன்படுத்துவது? என்ற வினா.

    புதிய அரசியல் அமைப்பு யாக்க அவையில் தமிழர் பங்கு பற்றாததால் சைவத் தமிழச் சங்கிலியன் கையளித்த சைவத் தமிழரின் இறைமை கத்தோலிக்கப் போர்த்துக்கேயர், கிறித்தவ ஒல்லாந்தர், கிறித்தவ ஆங்கிலேயர், சோல்பரி அரசியலமைப்பு எனச் சட்டத்தொடர்ச்சியாக 1972 மே 22ஆம் நாள் மீண்டும் தமிழரிடம் வந்தது.

    படைப் புரட்சி வழியாகச் சூடான் நாட்டில் சட்டத் தொடர்ச்சியற்ற ஆட்சியை அமைத்தார்கள்.

    தமக்குத் தாமே விடுதலையை (Unilateral Declaration of Independence) அறிவித்துச் சட்டத் தொடர்ச்சியற்ற  ஆட்சியை சிம்பாப்வேயில் வெள்ளையர் அமைத்தனர்.

    இலங்கையில் நாடாளுமன்றத்துக்கு அப்பால், சோல்பரி அரசியலமைப்புக்கு அப்பால், நவரங்கல மண்டபத்தில் கூடி, நாடாளுமன்றத்துக்கு வெளியே கூடி, சட்டத் தொடர்ச்சியற்ற ஆட்சியைச் சிங்களவர், புத்த சமயத்துக்கு முன்னுரிமையுடன் அமைத்தனர்.

    சைவத் தமிழ் மன்னன் சங்கிலியன் கையளித்த தமிழரின் இறைமையை, ஆட்சி உரிமையாக்கப் புதிய அரசியலமைப்பு இடம் தராது. சட்டத் தொடர்ச்சியற்ற அரசியலமைப்பு இடம் தராது எனக் கொழும்பில், மூவர் நீதிமன்றத்தின் முன் 1976இல் இராணியின் வழக்குரைஞர், சட்டத்தரணி திரு மு. திருச்செல்வம் அவர்கள் வாதிட்டார்.

    தமிழரின் ஆட்சியின் எதிர்காலம் சைவத் தமிழ்ச் சங்கிலியன் விட்டுச் சென்ற சட்டத் தொடர்ச்சிப் பங்களிப்பு இன்றி இல்லை, எனத் திரு மு. திருச்செல்வம் அவர்கள் வாதிட்டார்.

    அவருடைய வாதத்துக்கு அமையச் சங்கிலியன் கையளித்த இறைமையைத் தமிழரின் ஒப்புதலின்றி ஆட்சியுரிமை ஆக்க எவராலும் முடியாது.

    ஈழத் தமிழரின் இறைமை, போரில் தமிழரிடம் இருந்து பறிபோன நாள், அதன் நினைவு நாள், அதன் 401ஆண்டு ஆண்டு நினைவு நாள் இன்று.

    கலியுகம் 4720, சகாப்தம் 1541, திருவள்ளுவராண்டு 1650, விபவ ஆண்டு, 27 வைகாசி புதன்கிழமை (05.06.1619) தேய்பிறை எட்டாம் நாள் அட்டமி பூரட்டாதி நட்சத்திரம் அன்று சைவத்தமிழ் அரசு வீழ்ந்தது. வீழ்த்தியவர்கள் மேலைநாட்டுக் கத்தோலிக்கப் போர்த்துக்கேயர்.

    கலியுகம் 5121, சகாப்தம் 1942, திருவள்ளுவராண்டு 2051, சார்வரி ஆண்டு, 30, வைகாசி சனிக்கிழமை (13.06.2020) தேய்பிறை எட்டாம் நாள் அட்டமி பூரட்டாதி நட்சத்திரம் அன்று சைவத்தமிழ் அரசு வீழ்ந்து 401ஆவது ஆண்டு. அதுவே சங்கிலியன் நினைவு நாள்.

    Share
  • பாறாங்கல் படகையே கவிழ்க்கும்

    பாறாங்கல் படகையே கவிழ்க்கும்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    பேராசிரியர்கள் சிவத்தம்பி, கைலாசபதி, இந்திரபாலா,
    எழுத்தாளர்கள் டானியல், பிரேம்சி,
    அரசியல்வாதிகள் குமாரசூரியர், அருளம்பலம், தியாகராசா, அல்பிரட் துரையப்பா,
    தொழிலதிபர்கள் சிவானந்தன், கே. சி. தங்கராசா,
    மருத்துவர் ஆனந்தராசா, நீதியரசர் தம்பையா,

    இவர்கள் அனைவரும் ஒரே அணியில், ஒரே கருத்தில், ஒரே கொள்கையில், ஒரே கோட்பாட்டில்.

    நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைக் கொழும்பில் நடத்த வேண்டும் என்ற சிறீமாவோ அரசின் கொள்கையை முன்னெடுத்த அணியினரே இவர்கள்.

    1973 ஆம் ஆண்டு வைகாசி, ஆனி, ஆடி, ஆவணியில் கொழும்பில் பம்பலப்பிட்டி, மிலாகிரியா நிழற்சாலையில் உள்ள அலுவலகத்தில் கூட்டங்கள் நடந்தன.

    சிறிமாவோ அரசின் சார்பானோர் ஒருபுறம்.

    யாழ்ப்பாணத்தில் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்த வேண்டும் என்ற அணியினர் மறுபுறம்.

    பேராசிரியர் வித்தியானந்தன், அறிஞர் யேம்சு இரத்தினம், பேராசிரியர் பத்மநாதன், திருமதி புனிதம் திருச்செல்வம், கலைஞர் வி. எசு. துரைராஜா, மறவன்புலவு க. சச்சிதானந்தன் ஆகிய நான், அறிஞர் அம்பிகைபாகன் எனப் பெரும்பான்மையோர் யாழ்ப்பாணத்தில் நடத்த விரும்பினோம்.

    அக்காலத்தில் உடல் நலக் குறைவால் வளலாயில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வணக்கத்துக்குரிய தனிநாயகம் அடிகளாரும் யாழ்ப்பாணத்தில் நடத்தவேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.

    சிறீமாவோ அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆண்ட காலம். மாவை சேனாதிராசாவை ஒத்த 60க்கும் கூடுதலான எண்ணிக்கையில் இளைஞர்கள் பூசாவிலும் வெலிக்கடையிலும் யாழ்ப்பாணத்திலும் சிறைகளில் தவமிருந்த காலம்.

    ஒரு நாள் மாலை. பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக் கிளையின் கூட்டம்.

    நாற்காலிகளை வட்டமாக அடுக்கி இருந்தோம். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தோம். ஏறத்தாழ 30 தொடக்கம் 40 பேர் வரை இருந்தார்கள்.

    நான் எழுந்து பேசினேன். நீதியரசர் தம்பையா அவர்களே யாழ்ப்பாணத்தில் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்துவதாக இருந்தால், நீங்கள் தலைவராகத் தொடருங்கள் அல்லது தலைமைப் பதவியில் இருந்து விலகுங்கள், எனக் கேட்டேன்.

    கொஞ்சம் சலசலப்பு. ஆனாலும் நான் விட வில்லை. மீண்டும் என் கருத்தை வலியுறுத்தினேன். பல செய்திகளைப் பேசினோம். பலர் பல கருத்துகளைச் சொன்னார்கள்.

    மறுநாள் நல்ல செய்தி. நீதியரசர் தம்பையா தலைமைப் பதவியிலிருந்து விலகினார். தொழிலதிபர் சிவானந்தர், கே. சி. தங்கராசா, மருத்துவர் ஆனந்தராசா, ஆகியோரும் விலகினார்கள். தாம் கொடுத்த நன்கொடைகளை திரும்பத் தருமாறும் கேட்டனர்.

    எனக்கு யார் மீதும் வெறுப்பு இல்லை. பகை இல்லை. துரோணரின் மாணவன் அருச்சுனனுக்கு இலக்காகப் பறவையின் கண் மட்டுமே தெரிந்தது போன்று, யாழ்ப்பாணத்தில் மாநாட்டை நடத்த வேண்டும் என்ற கொள்கையே எனக்குத் தெரிந்தது.  அதற்காகத் தலைமையிலிருந்து நீதியரசர் தம்பையாவைப் பதவி விலகக் கோரும் துணிச்சல் எனக்கு இருந்தது.

    பெட்டிப் பாம்பாக மகுடிக்குப் படம் எடுத்துச் சீறுவது போல் நடித்துப் பின் அடங்கி விடும் மனோநிலை எனக்கு இருக்கவில்லை.

    தந்தை செல்வாவிடம் சைவ சமயிகள் சார்பில் நான் எடுத்துக்கூறிய பல ஆலோசனைகள் அவர் கேட்டார். நடைமுறைக்குக் கொண்டு வந்தார். தந்தை செல்வா தலைவர் என்பதனால் அவர் சொன்ன அனைத்தையும் ஏற்கும் மனநிலையில் நான் இருக்கவில்லை.

    மாற்றுக் கருத்து உண்டெனில் அதை அவரிடம் சொல்லி அந்த நியாயங்களை எடுத்துச் சொல்லி அவரை ஏற்க வைத்திருக்கிறேன்.

    எனது இருபது ஆண்டுகாலத் தொடர்பில் அவர் மீதுள்ள மதிப்பு உயர்ந்தமைக்கு அவருடைய பொறுமையும் நல்ல கருத்துக்களை ஏற்று நடைமுறைக்குக் கொண்டுவரும் பண்புமே காரணம்.

    திருச்செல்வம் மூத்த வழக்குரைஞர். 13 ஆண்டுகாலம் அவரோடு பணிபுரிந்தேன். அமைச்சராக இருந்த காலத்தில் தனி உதவியாளராகவும் இருந்தேன். அவரோடு உடன்படாத கருத்துக்களை நான் சொல்வேன். அவர் தூக்கி எறிய மாட்டார். தம்பி நீர் சொல்வதில் நியாயம் இருக்கிறது என்பார். நடைமுறைக்குக் கொண்டு வருவார்.

    தந்தை செல்வாவுக்கு நினைவுத்தூண் அமையுங்கள் என்ற கருத்தை அமிர்தலிங்கம் அவர்களிடம் முன்வைத்தேன். முதலில் தயங்கினார். வலியுறுத்தினேன், ஏற்றுக் கொண்டார். என்னையே அப்பணியைச் செய்யுமாறு பணித்தார். வெற்றிகரமாகச் செய்து கொடுத்தேன்.

    அறைக் கூட்டங்களில் அமிர்தலிங்கம் அவர்களோடு முரண்பட்டு இருக்கிறேன். உங்களுக்கு அரசியல் தெரியாது என்றும் ஒருமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார். மாலையில் மனைவியொடு என் வீட்டுக்கு வருவார். நீங்கள் சொன்னதில் நியாயம் இருக்கிறது அதன்படி செய்வோம் என்பார்.

    அனைத்துப் போராளி இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு நான் என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வந்திருக்கிறேன். வன்முறையில் எனக்குக் கிஞ்சித்தும் நம்பிக்கை கிடையாது என நேரடியாகவே அவர்களிடம் சொல்வேன். ஆனாலும் உங்களுடைய ஈடுபாடும் தியாகமும் நல்ல நோக்கமும் என் மதிப்புக்குரியன. எனவே உங்களுக்கு என்னால் முடிந்தததைச் செய்வது என் கடமை என்பேன்.

    2000ஆம் ஆண்டில் ஒரு சூழ்நிலையில் பிரபாகரன் கொண்ட கருத்தைத் தலைகீழாக மாற்றுமாறு கேட்டேன். அவர் செய்திருக்கிறார். என் அணுகுமுறையில் உள்ள தமிழ்த்தேசிய நன்மையை அவர் பின்பும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

    என் வாழ்நாளில் ஒரு முறையாவது தமிழ்த்தேசியத்தில் ஈடுபாடுகொண்ட எவரையும் அந்நியர் எவரிடமும் சுட்டிக்காட்டித் தவறிழைக்கிறார் எனச் சொல்வதில்லை.

    சரி பிழைகளைத் தளர்வுகளைத் தொய்வுகளை நடைமுறை மாற்றுகளை நமக்குள்ளே பேசலாம். அந்நியரிடம் பேசலாமா? அதுவும் அடிமை கொள்ள விழையும் அந்நியரிடம் பேசலாமா?

    அவ்வாறு பேசியவரைச் சம்பந்தன் அவர்கள் காப்பாற்றுகிறார் எனில் பெட்டிப்பாம்பாக இருக்காமல் பொங்கியெழுந்து தமிழ்த் தேசியத்திற்காகச் சம்பந்தன் அவர்களிடமே உரத்துப் பேசி, சுமந்திரனை நீக்க வேண்டிய கடமை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொருவருக்கும் உண்டு.

    மைத்திரிபால சிரிசேனா, இரணில் விக்கிரமசிங்க கூட்டணிக்கு வாக்களிக்காதீர் என சிவகரன், அனந்தி நான் மூவரும் ஊடகத்தாரிடம் கூறினோம். அக்கருத்து அவர்களின் தனிக் கருத்து எனக் கருதியிருக்கலாமே?

    சுமந்திரனின் கை மேலோங்கியதால் சிவகரனையும் அனந்தியையும் நீக்கினார்கள். கட்சி உடைந்தது.

    சுமந்திரன் கை மேலோங்கியதால் தமிழ்க் காங்கிரசும் ஈபிஆர்லெஎஃபும் கூட்டமைப்பில் இருந்து விலகின.

    சுமந்திரனின் கை ஓங்கியதால் அவைத் தலைவரான சிவிகே சிவஞானமே வெட்கங்கெட்டு ஆளுநரிடம் சென்றார், முதலமைச்சருக்கு எதிராக. கூட்டமைப்பை உடைப்பதற்காக.

    இன்றைய ஒருங்கிணையாத தமிழர் அரசியல் கள நிலைக்கு, இரணிலின் கைப்பாவையாகிய சுமந்திரனின் கை ஓங்கியமையே காரணம்.

    அருளம்பலம் தியாகராசா கனகரத்தினம் அல்பிரட் துரையப்பா குமாரசூரியர் என நீளும் அரசியலார் வரிசையில் சுமந்திரன் இருக்கிறார்.

    அன்று அல்பிரட் துரையப்பாவுக்குத் துணைபோன சிவிகே சிவஞானம் இன்று சுமந்திரனுக்கு துணை போகிறார். அடையாளங்கண்டு தமிழ்த் தேசியப் பயிர்களை வளர்க்க வேண்டிய கடமை தமிழ்த் தேசியத்தாருக்கு உண்டு.

    சுமந்திரன் இல்லாத சூழ்நிலையில் விரல்களாக வேறுபட்டாலும் கையாக இணைவோம் என வெவ்வேறு கொள்கையரும் ஒரே அணிக்கு மீள்வர். தமிழ்த் தேசியத்தார் வலிமை பெறுவர்.

    நீதியரசர் தம்பையா தலைமைப் பதவியில் இருந்து விலகியதால் தமிழ்த் தேசியம் ஓங்கியது. நீதியரசர் சிவசுப்பிரமணியம் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகியதால் சைவத் திருக்கோயில்களை அரசு கையேற்காமல் காத்தோம். இருவரது விலகலுக்கும் எனது பங்களிப்புக் காத்திரமானது.

    சுமந்திரனை விலக்குக. அல்லது நீங்களும் விலகுக எனச் சம்பந்தன் அவர்களிடம் எடுத்துக்கூறும் துணிச்சல் உள்ளவர்களை அழைக்கிறேன். படகு பெரிய பாறாங் கல்லுடன் மிதக்க முடியாது. பாறாங்கல்லை நீருள் தள்ளிப் படகைக் காக்க அழைக்கிறேன்.

    Share
  • ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்

    ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    சித்திரை 29 2051 செவ்வாய் (12.05.2017)
    ஊடகத்தாருக்கு அறிக்கை

    சுமந்திரனைக் கட்சியில் இருந்து தூக்கி எறியுங்கள்.

    1961 அறப்போர் காலத்திலிருந்து இன்றுவரை தமிழ்த் தேசியம் ஈழத்தமிழர் நலம் எனத் தமிழரசுக் கட்சி சார்ந்து பணிபுரிந்து கொண்டிருக்கிற மறவன்புலவு க. சச்சிதானந்தன் கோருகிறேன்.

    சுமந்திரனைத் தமிழரசுக் கட்சியை விட்டுத் தூக்கி எறியுங்கள் என 2018 நவம்பர் 6இல் நான் திரு மாவை சேனாதிராஜா அவர்களுக்கு எழுதினேன்.

    சுமந்திரனின் நாக்கு, கரி நாக்கு. தமிழை தமிழரை தமிழ் தேசியத்தை உணராத அறியாத புரியாத தெரியாத விரும்பாத ஒருவரின் நாக்கே சுமந்திரனின் நாக்கு என நான் அன்று கூறினேன்.

    எனவே தமிழரசுக் கட்சியில் இருந்து நீக்குங்கள் எனத் தலைவருக்குக் கடிதம் எழுதினேன்.

    அதற்கு முன்பு 30.12.2015இல் வட மாகாணசபையை முடக்குவதற்கு அக்காலப் பிரதமர் இரணில் விக்கிரமசிங்கர் எடுத்த முயற்சிக்கு சுமந்திரன் கைகொடுத்தார் எனக் குற்றம்சாட்டி எழுதினேன்.

    சென்னையில் 100 அடி சாலையில் அமர்ந்திருந்த உயர்தர விடுதியொன்றில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுக் கிளையினர் 2015இல் நடத்திய கருத்தரங்கில் முதல் முதலாகச் திரு சுமந்திரனைச் சந்தித்தேன். ஈழத்தமிழரின் சார்பில் அவர் அங்கு பேசினார்.

    அங்கே அவரின் பேச்சைக் கேட்டேன். இவருக்கும் தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ்த் தேசியத்திற்கும் என்ன தொடர்பு? இத்தகைய கரிநாக்கராக இருக்கிறாரே என மனத்துள் சினந்தேன்.

    1961 முதலாக தமிழ் தமிழர் தமிழ் தேசியம் ஈழத்தமிழரின் நன்மை என்பவற்றுக்காக தமிழகத்தில் நானும் இணைந்து சிறிது சிறிதாகக் கட்டியெழுப்பிய ஈழத்தமிழர் ஆதரவுக் கொள்கையைப் போட்டு உடைத்தார் 2015இல் சென்னையில் சுமந்திரன்.

    சிங்களத் தொலைக்காட்சி பேட்டியில் சுமந்திரன் கொடுத்த விடைகள் கரிநாக்கராக அவரை உறுதி செய்துள்ளன.

    தமிழர் இயல்பிலேயே அறநெறியாளர். ஆயுதங்களை 400 ஆண்டுகளாக அறியாதவர். அவர்களை ஆயுதம் தூக்குமாறு தூண்டியோர் 1948இல் விடுதலைக்குப் பின் வந்த சிங்கள அரசுகள். சிங்கள அரசுகளும் சிங்களக் குண்டர்களும் தொடர்ச்சியாக 1952இல் 56இல் 58இல் 61இல் 72இல் 74இல் 77இல் 82இல் 83 நடத்திய தமிழர் மீதான கொடும் பயங்கரவாதத்தை அரச பயங்கரவாதத்தை நினைவுகூரச் சுமந்திரன் தவறிவிட்டார்.

    அப்பாவிகளாக இருந்த தமிழ் இளைஞர்களை ஆயுத தாரிகள் ஆக்கிய அரச பயங்கரவாதத்தை, சிங்களத் தலைவர்கள் பலரையும் ஒப்புக்கொண்ட எதார்த்த நிலையை சுமந்திரன் அடிக்கோடிட்டுக் கூறாமல் விட்டார்.

    ஏனெனில் அவர் தமிழ் தமிழர் தமிழ்த்தேசியம் என்பவற்றைக் கிஞ்சித்தும் அறியாதவர் கொஞ்சமும் உணராதவர்.

    இப்பொழுதும் காலம் கடந்து விடவில்லை.

    தமிழரசுக் கட்சியின் தலைவர் திரு மாவை சேனாதிராஜா அவர்களே முதற்கட்டமாக அவரைக் கட்சியிலிருந்து இடை நிறுத்துங்கள். விசாரணையைத் தொடங்குங்கள். அவர் வேட்பாளர் இல்லை என்பதை மக்களுக்குத் தெரிவியுங்கள்.

    அவருக்கு வாக்களிக்க வேண்டாம் எனத் தமிழ் மக்களிடம் கூறுங்கள்.

    வரலாற்றை அறியாத தமிழ் தேசியத்தில் ஊறாத தமிழ்த் தேசியத்தில் ஈடுபாடற்ற ஒருவரை, அகத்தே முரட்டுக் குணத்துடன் கொடிய நோக்கத்துடன் ஓநாயாகிப் புறத்தே ஆட்டுத்தோல் போர்த்திய பொய்யர்களான போலிகளை அடையாளம் கண்டு ஒதுக்குங்கள் என இயேசுபிரான் கூறியதாக மத்தேயு 7:15இல் கூறியதை இங்கு நினைவு கூர்வது பொருத்தம்.

    Share
  • ஆறுமுக நாவலர் அனைத்துலக வானூர்தி நிலையம்

    ஆறுமுக நாவலர் அனைத்துலக வானூர்தி நிலையம்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    ஆறுமுக நாவலர் அனைத்துலக வானூர்தி நிலையம்

    சிவ சேனையின் செய்தியறிக்கை

    தொடர் வண்டிகள் இல்லை. எந்திரக் கப்பல்களோ, வள்ளங்களோ இல்லை வானூர்திகள் இல்லை.  மகிழுந்துகள், பேருந்துகள், சரக்குந்துகள், உழவுந்துகள், மலையுந்துகள் எதுவுமே இல்லை.

    ஆனாலும் பயணித்தார். மக்களுக்காகப் பயணித்தார். நாட்டுக்காகப் பயணித்தார். மரபுகளைப் பேணப் பயணித்தார். பண்பாட்டை வாழவைக்கப் பயணித்தார்.

    தனக்காக எதையும் வைத்திருக்கவில்லை, சேமிக்கவில்லை, விட்டுப் போகவும் இல்லை.

    நமது மண், நமது நீர், நமது வானம், நமது காற்று, நமது முன்னோர் இவற்றோடு வாழ்ந்தனர். ஒவ்வொரு செயலும் சோதனையே. நன்மை தருவனவோ? தீமை தருவனவோ? நன்மை தருவனவற்றைப் பெருக்குவதும் தீமை வருவனவற்றை ஒதுக்குவதும் ஆக, சோதனைகளின் விளைவுகளாகப் படிப்படியாகச் செதுக்கிச் செதுக்கி உருவாக்கிய தமிழ் மரபுகள், மண்ணின் மரபுகள் அழிந்து விடாமல் காப்பதற்காகப் பயணித்தவர்.

    சொல்லில் வல்லவர். எழுத்தில் எழுஞாயிறு. சொல்லையும் செயலையும் வாழ்வாக்கியவர். சோர்விலர். அஞ்சா நெஞ்சினர். ஆற்றலர். பயணத்தையே வாழ்வாக்கியவர்.

    அவரே ஆறுமுக நாவலர்.

    சீனாவில் Wei Yuan (1794-1856), Li Hongzhang (1823-1901), Kang Youwei (1858-1927), Liang Qichao (1873-1929), and Tan Sitong (1865-1898) இந்தியாவில் Dayanand Saraswati  (1824-1883), Vishnu Bhikaji Gokhale (1825-1871) என ஆசிய நிலப் பரப்பில் வாழ்ந்த இவரின் சம காலத்தவர் போன்றே இவரும் அலையென வந்த அந்நியப் பண்பாட்டுப் படையெடுப்பைத் தனி ஒருவனாய் ஈழத்தில் தடுத்தவர்.

    ஓடங்களில் வள்ளங்களில் படகுகளில் தோணிகளில் வடகடலைக் கடந்து தமிழகம் சென்று மீண்டவர்.

    மாட்டு வண்டிகளில் குதிரை வண்டிகளில் ஈழத்திலும் தமிழகத்திலும் தெருத்தெருவாக அலைந்தவர்.

    யாழ்ப்பாணத்திற்கு அனைத்துலக வானூர்தி நிலையம் மீண்டும் வந்துவிட்டதே எனத் தமிழர்கள் மகிழ்கிறார்கள்.

    தன் பயணங்களால் நாட்டுக்காக, மக்களுக்காக, கால்கள் தேய்ந்து, உடல் நலம் குன்றி வாழ்ந்த ஆறுமுக நாவலரின் பெயரே யாழ்ப்பாணம் அனைத்துலக வானூர்தி நிலையத்தின் பெயர் ஆகவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

    ஆறுமுக நாவலர் அனைத்துலக வானூர்தி நிலையம் என்று தம் வானூர்தி நிலையத்தை அழைக்க ஈழத் தமிழர்கள் விரும்புகிறார்கள்.

    சைவ தமிழ் அமைப்புகள் ஒரே குரலில் இலங்கை அரசுக்கு இந்த வேண்டுகோளை வைப்பதால், இந்த மண் பெற்றெடுத்த பயணப் பெருமகன், நடைபுகழ் நாவலர் அனைத்துலக ஆறுமுக நாவலர் ஆவார்.

    Share
  • அத்துரலிய இரத்தின தேரரின் கோரிக்கைகளில் இரண்டு நிறைவேற்றம்

    அத்துரலிய இரத்தின தேரரின் கோரிக்கைகளில் இரண்டு நிறைவேற்றம்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன் 
    சிவசேனை
    இலங்கை தீவில் இனிமையான சிவபூமியில் மண்ணின் மரபுகளை காக்கக் காலவரையற்ற உண்ணா நோன்பு கைக்கொள்ளும் வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரரின் கோரிக்கைகளில் இரண்டை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றியமையைப் பாராட்டுகிறேன்.
    கிழக்கு மாகாணச் சைவத் தமிழ் மக்களின் நெடு நாள் கோரிக்கையை நிறைவேற்றிய இலங்கை அரசைப் பாராட்டுகிறேன்.
    மேதகு குடியரசுத் தலைவரின் பணியை எளிதாக்கிக் கொப்பளிக்கும் உணர்ச்சிகளுக்கு அணை கட்டினார்கள். மேதகு ஆளுநர்களாக இருந்த திரு அலி திரு இசுபுல்லர் இருவரும், இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தைக் கொண்டுவரும் நடவடிக்கையாகத் தங்கள் பதவிகளை விட்டுக் கொடுத்ததைப் பாராட்டுகிறேன்.
    வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரரின் எஞ்சிய கோரிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றி மீண்டும் வளர்ச்சிப் பாதையில் மக்களைத் திசைதிருப்பிச் செல்வமும் செழிப்பும் மிக்க நாடாக இலங்கையை மாற்ற இனங்களுக்கிடையே நல்லுறவும் நல்லிணக்கமும் அன்பும் அருளும் அறனும் நிலைக்க வேண்டுகிறேன்.
    =================================================================================
    01.06.2019 அன்று மறவன்புலவு க. சச்சிதானந்தன் வெளியிட்ட முந்தைய அறிக்கை
    வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரரின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி அவரைக் காப்பாற்றுக.
    மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    சிவசேனை கோரிக்கை
    இலங்கை சிவபூமி. திருமூலர் அன்றே கூறினார். புத்தர்கள் சிவபூமியை மதித்து நடக்கிறார்கள் புத்த விகாரைகளில் சிவனுக்கும் இடமுண்டு சைவக் கடவுளருக்கும் இடம் உண்டு.
    400 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைகுள் வலிந்து புகுந்த கிருத்தவ மதம் சைவர்களையும் புத்தர்களையும் ஏளனம் செய்தது சைவக் கோயில்களும் புத்த விகாரங்களும் சாத்தானின் இருப்பிடங்கள் என வலிந்து கூறினர். பீரங்கி முனையில் துப்பாக்கி முனையில் வாள் முனையில் சைவர்களையும் புத்தர்களையும் கிறித்தவர்கள் ஆக்கினர்.
    இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயரோடு புகுந்த முகமதியர்கள் தொடக்கத்தில் இந்த மண்ணின் மரபுகளை மதித்து உள் புகுந்தனர். படிப்படியாக மண்ணின் மரபுகளை இழித்துப் பேச தொடங்கினர் அண்மைக்காலங்களில் மிதித்து நடக்க முற்படுகின்றனர்.
    சிவ பூமியில் இருந்த காளி கோயிலை அகற்றினேன் அந்த இடத்தில் முகமதியர் வழிபாட்டிடம் கட்டினேன் மசூதி கட்டினேன் அதற்காக அமைச்சர் அதிகாரத்தைப் பயன்படுத்தினேன் என்ற பொருள்பட இன்றைய கிழக்கு மாகாண ஆளுநர் இசுபுல்லர் கூறிய சொற்கள் அவர் இலங்கை அரசில் எந்தப் பதவியையும் வகிக்கத் தகுதியற்றவர் என்பதையே எடுத்துக் காட்டின.
    முசலிப் பிரிவில் சிவபூமிக்குள்ளே அடாத்தாகக் காடுகளை வெட்டி ஆயிரத்துக்கும் அதிகமான முகமதியரைக் குடியேற்றியவர் இரிசாத்தர் பதியுதீன்.
    முல்லைத்தீவில் சில ஆயிரம் ஏக்கர் பரப்பளவைக் கையகப்படுத்தி அங்கு முகமதியரைக் குடியேற்ற இரிசாத்தர் பதியுதீன் முனைந்த பொழுது வடமாகாண சபை தலையிட்டுத் தடுத்தது.
    சிவபூமியில் மாட்டிறைச்சிக்கடை கூடாது எனச் சைவர்கள் களம் இறங்கிய பொழுது உள்ளுராட்சி அமைப்புக்கள் தீர்மானங்கள் இயற்றிய பொழுது உள்ளூராட்சித் தலைவர்களை மிரட்டியவர் இரிசாத்தர் பதியுதீன்.
    இசுபுல்லரும் இரிசாத்தர் பதியுதீனும் அரசுப் பதவிகளில் இருப்பதால் சைவர்களுக்கு வேண்டாததைச் செய்கிறார்கள் என்ற முறைப்பாடு வடக்கே கிழக்கே மலையகத்திலே நெடுங் காலமாக உண்டு.
    கிழக்கு மாகாணச் சைவத் தமிழர்கள் ஒன்றிணைந்து இசுபுல்லர் பதவி விலக வேண்டும் என ஒரு நாள் முழுவதும் கடையடைப்பு நிகழ்த்தியதை மறக்கமுடியாது.
    கண்டியில் தலதா மாளிகையில் வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரர் காலவரையற்ற உண்ணா நோன்பு இருக்கிறார்.
    சைவத் தமிழர்களாகிய நாங்கள் எதை இந்நாள்வரை கோரிக்கையாக வைத்திருந்தோமோ அதையே புத்தத் தேசியவாதியான வணக்கத்துக்குரிய தேரரும் வைத்திருக்கிறார் களத்தில் இறங்கி போராடுகிறார்.
    வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தன தேரர் பெருமானின் கோரிக்கைகளில் நியாயம் உண்டு. நீதி உண்டு.
    இலங்கை அரசு செவி சாய்க்க வேண்டும். அவரது கோரிக்கைகளை நிறைவேற்றி இலங்கைத்தீவின் மண்ணின் மரபுகள் பேணுவோரின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.
    வணக்கத்துக்குரிய தேரரின் கோரிக்கைகளை ஏற்று உரிய நடவடிக்கைகளை எடுத்தால் இலங்கையைச் சிவபூமியாக கொண்டு வாழ்கின்ற சைவத் தமிழர்கள் இலங்கை அரசைப் பாராட்டுவார்கள்.
    வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரர் அவர்களும் அவரது அருமைத் தொண்டர்களும் புத்த தேசியத்தை முன்னெடுத்து மண்ணின் மரபைப் பேண விழைகிறார்கள்.
    இந்த வரலாற்று முயற்சியில் பத்த சிங்கள மக்களுக்கு உறுதுணையாக இந்த மண்ணின் மரபுகளைப் பாதுகாத்துப் பேணிக் காக்க விரும்புகின்ற சைவத் தமிழர்கள் இருப்பார்கள்.
    Share
  • இலங்கையில் வன்முறையின் கோரத் தாண்டவம் – Ugly face of terror in Srilanka

    (இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பையும் இதற்குக் காரணமானவர்களையும் வல்லமை கனத்த இதயத்துடன் கண்டிக்கிறது. – அண்ணாகண்ணன், முதன்மை ஆசிரியர், வல்லமை)


    St.Sebastian's Church,Katuwapitiya,Negombo,Sri Lanka

    (St.Sebastian’s Church,Katuwapitiya,Negombo,Sri Lanka)

    சிவசேனை, மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு ஆய நகரங்களில் நடைபெற்ற வன்முறைத் தாக்குதல்களைச் சைவ சமயத்தோர் ஏற்கார், கண்டிப்பர், புறந்தள்ளுவர்.

    வழிபாட்டிடங்களில் அன்பும் அறனும் அருளும் பெருக்கும் நாளில், பெரிய வெள்ளிக்கிழமையைத் தொடர்ந்த குருத்தோலை ஞாயிறன்று 21.04.2019 அன்று எம் அன்புக்கும் பாசத்துக்கும் மதிப்புக்கும் உரிய கிறித்தவ மக்கள் மனமுருகி வழிபாட்டில் ஈடுபட்டிருக்கையில் ஒன்றும் அறியா அப்பாவிகளை நூற்றுக் கணக்கில் காயமாக்கியும் பலரின் உயிர்களைப் பறித்தும் நிகழ்த்திய தாக்குதல்களைச் சைவ மக்கள் ஒரு பொழுதும் ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.

    நெஞ்சார்ந்த இரங்கல்கள். துயரத்தில் பங்கு கொள்கிறோம். காயமுற்றோர் விரைந்து நலமுறச் சிவபெருமான் அருள்வாராக. வழிபடுகிறோம், வேண்டுகிறோம். இரங்குகிறோம்.

    Siva Senai, Maravanpulavu K. Sachithananthan

    Violent attacks in Colombo, Negombo and Batticaloa are not acceptable to the Saivaites of Sri Lanka. We condemn these attacks outright.

    We Saiva Tamils denounce any attack in any form in places of worship. Our Christian brothers to whom we have high respect, regard and unbounded love as fellow citizens of this land. The Easter Friday followed by resurrection Sunday 21.04.2019 are days for prayer worship and meditation. To attack on such pious and holy days to harm hundreds of innocent worshippers and to take the lives of many is condemnable. Saiva Tamil world does not accept such disastrous barbarous acts. 

    We Saivites express out heart felt condolences to the bereaved families. We pray for the early recovery of those injured. We pray Lord Shiva to shower his holiest blessings towards relief at a time of your hour of deep grief.

    Share
  • செம்மாந்த நோக்கர் சிலம்பொலி செல்லப்பனார்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    கற்றிலனாயினும் கேட்க என்றார் வள்ளுவர். தாம் கற்றவற்றை மற்றவர்களுக்குச் சொல்பவர் கேள்வி ஞானத்தை வளர்க்கிறார்.

    கல்வியைப் பரப்புவதற்காகவே மேடைப் பேச்சாற்றல்.

    நுணுகித் தேடல், தேடியதைத் தொகுத்தல், கேட்பார் வேட்கை தணிக்கச் சுவையுடன் ஒழுங்கு செய்தல், வேட்ப மொழிதல் யாவும் மேடைப் பேச்சாளரின் இயல்புகள்.

    பேச்சு உள்ளத்தில் இருந்த வரவேண்டுமடா. உள்ள உணர்வுகளையும் அறிவையும் சரி சமமாகக் கலந்து பேசுபவனே கேட்பவனுக்குக் கற்பிக்கிறான் என என்னிடம் சொன்னவர் பேரா. அ. ச. ஞானசம்பந்தன்.

    அத்தகைய நுண்மா நுழைபுலத்தார் சிலம்பொலி செல்லப்பனார். ஆழ்ந்த மனித நேயமும் கற்றுத் துறை போகிய அறிவும் செறிவாகப் பெற்றவர் சிலம்பொலி செல்லப்பனார்.

    சச்சிதானந்தன் சிறையில் வாடலாமா? கேட்டவர் சிலம்பொலி செல்லப்பனார்.

    யாரிடம் கேட்டார்? மேடையில் தனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியிடம் கேட்டார்.

    எங்கே? சென்னை, ஏவிஎம் இராசேசுவரி மண்டபத்தில்.

    எப்பொழுது? 1997 பிப்புருவரி இறுதியில்.

    முதலமைச்சர் சொன்ன பதிலால் இன்றுவரை நிறைவடையாதவர், சிலம்பொலி செல்லப்பனார்.

    ஈழத்து நோயாளிகளுக்கு அக்காலத்தில் போதிய மருந்துகள் கிடைப்பதில்லை என்பதைச் சென்னையில் பேசிக்கொண்டிருந்தாம். மருந்து கடத்த முற்பட்டேன் எனக் குற்றம் சாட்டினர். 1997 பிப்புருவரி 9ஆம் நாள் சிறையிட்டனர். சென்னைச் சிறையில் ஒரு மாதம் என் வாழ்க்கை.

    1986இல் காந்தளகப் பதிப்புப் பணியால் சென்னையில் தமிழ் அறிஞரிடையே வரவேற்பைப் பெற்றிருந்தேன். தரமான நூல்களைப்பதிப்பித்ததால் கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட புகழ்பூத்த எழுத்தாளர்களுக்குப் பக்கமாக்கல் பணியைக் கூலி வாங்கிச் செய்து கொடுத்து வந்தேன்.

    சிலம்பொலியார் காந்தளகம் வந்திருக்கிறார், ஈழத்து நூல்களை வாங்கிச் சென்றிருக்கிறார். வேறு தொடர்பில்லை.

    என் சிறைவாசம் குறித்து முதல்வரிடம் அவர் பேசிய காலத்தில் நான் சிலம்பொலி செல்லப்பனாருடன் நேரடிப் பழக்கமில்லாதவன்.

    சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும்
    என் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்
    ஓடையிலே என் சாம்பல் கரையும் போது
    ஒண்தமிழே சலசலத்து ஓடவேண்டும்

    என்ற வரிகளைப் பாரதிதாசன் இயற்றிய வரிகளாகத் தமிழ்நாட்டு மேடைகளில் ஓங்கி உரத்துச் சொல்வோர் சிலர் இருந்தனர்.

    அந்த வரிகள். பாரதிதாசனுடையவை அல்ல, தவறாகச் சொல்கிறார்கள், ஈழத்துக் கவிஞர் மாவிட்டபுரம் பண்டிதர் க. சச்சிதானந்தன் எழுதிய வரிகள் என அடிக்கடி முழங்குபவர் சிலம்பொலி செல்லப்பனார்.

    ஈழத்துக் கவிஞர் மாவிட்டபுரம் பண்டிதர் க. சச்சிதானந்தனைச் சிலம்பொலியார் நேரில் பார்த்துப் பேசிப் பழகாதவர். அவரின் நூல்களை விரும்பிப் படிப்பவர்.

    நேரிடையாகப் பழக்கமில்லாத ஈழத்தவர் இருவர். தமிழகத்தில் அவர்களுக்காகக் குரல் கொடுத்த ஒரே காரணம், அறம் சார்ந்த சிலம்பொலியாரின் செம்மாந்த நோக்கும் சான்றாண்மையுமே.

    மனிதநேயம் என்மீதும், புலமை நேயம் ஈழத்துக் கவிஞர் மாவிட்டபுரம் பண்டிதர் க. சச்சிதானந்தன் மீதும் கொண்டருந்ததால் குரல் கொடுத்தார். தவறுகளைத் திருத்த முயன்றார்.

    2000இன் தொடக்க ஆண்டுகளில் சென்னைக்கு ஈழத்துக் கவிஞர் மாவிட்டபுரம் பண்டிதர் க. சச்சிதானந்தன் வந்திருந்தார். ஒரு நாள் முன்னறிவிப்பு இன்றியே காந்தளகத்துக்கு வந்தார். எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

    எவ்வளவு நாள் தங்குகிறீர்கள் எனக் கேட்டு, அவருக்கு வரவேற்பு விழா ஒன்றை ஏற்பாடு செய்தேன். அந்த விழாவில் பாராட்டுரை வழங்கக்கூடியவர் சிலம்பொலியார் என ஓர்ந்து அவரிடம் முதன்முறையாகச் சென்றேன்.

    திருவான்மியூரில் கலாச்சேத்திரக் குடியிருப்பில் ஒருநாள் மாலை வேளையில் முன்தெரிவித்துச் சென்று பார்த்தபோது நெடுநாள் பழகியவர்போல வரவேற்றார். நிகழ்ச்சிக்கு வரப் பெருவிருப்புக் கொண்டார்.

    பின்னர் ஆனந்தம் திரையரங்க வளாகத்தில் நிகழ்ச்சிக்கு வந்தார், ஈழத்துக் கவிஞர் மாவிட்டபுரம் பண்டிதர் க. சச்சிதானந்தனின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக எடுத்துக் கூறினார்.

    சுவாமி விபுலானந்தவரின் மாணவராகவும் உதவியாளராகவும் இருந்தவர் ஈழத்துக் கவிஞர் மாவிட்டபுரம் பண்டிதர் க. சச்சிதானந்தன். கணிதம், வானியல், தமிழ்மொழி, தமிழிசை, கவிதை எனப் பன்முக ஆற்றல் பெற்றிருந்த புலமை நேயத்தாரை நேரில் சந்தித்ததில் சிலம்பொலியார் மிக மகிழ்ந்தார்.

    அதற்குப் பின்னர், சிலம்பொலியாருக்கும் எனக்கும் இடையே தொடர்புகள் வலுப்பெற்றன. பொது நிகழ்ச்சிகளில் சந்தித்துக் கொள்வோம்.

    நாமக்கலில் அவர் சென்று வாழ்ந்த காலங்களில் அவருடன் கடிதத் தொடர்பும் வைத்திருந்தேன்.

    2010 முற்பகுதியில் அவரே கேட்டதால், உலகெங்கும் தமிழர் என நான் தயாரித்த வரைபடத்தைச் செம்மொழி மாநாட்டில் பயன்படுத்த, அவரிடமே நேரில் சென்று, எணினி வடிவத்தைக் கொடுத்துவந்தேன். மாநாட்டில் பெரிய படமாக்கி வைத்ததாக மாநாடு சென்ற பலர் என்னிடம் கூறினர்.

    காந்தளகம் வெளியிட்ட நூல் ஒன்றுக்குக் கடந்த 2011 வைகாசியில் பரிசு கிடைத்தது. நூலாசிரியருக்குப் பரிசு என்றாலும் பதிப்பகத்தாருக்கும் வாழ்த்து, பாராட்டு, பரிசு சான்றிதழ் வழங்கும் மரபு தமிழகத்தில் உண்டு.

    காந்தளகம் சார்பில் பாராட்டையும் பரிசையும் வாங்க முகாமையாளர் சென்றிருந்தபொழுது, பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த என்னை மேடையில் இருந்த சிலம்பொலியார் அடையாளம் கண்டார். ஒருவரை என்னிடம் அனுப்பினார். பரிசைப் பெற நானே மேடைக்கு வரவேண்டும் என்றார். முகாமையாளருடன் சேர்ந்து பரிசைப் பெற்றேன். சிலம்பொலியார் என் மீது கொண்ட அன்பும் பாசமும் வாஞ்சையும் அளப்பில.

    கடந்த சில மாதங்களுக்கு முன், சிட்னியில் பழனியப்பனாரின் மகனுக்கு நடந்த திருமண வரவேற்பு நிகழ்வுக்குப் போயிருந்தேன். பழனியப்பனாரின் மருமகள், சிலம்பொலியாரின் பெயர்த்தி முறையானவர். கொங்கு நாட்டவர். அங்கு சென்றதும் தெரிந்துகொண்டேன், மகிழ்ச்சியைப் பழனியப்பனாரிடம் தெரிவித்தேன்.

    பங்குனி 27, 2043 (09.04.2012) மாலை சிலம்பொலியாரின் இல்லம் செல்லும் வாய்ப்புக் கிட்டியது. திருவான்மியூரில் அருள்மிகு மருந்தீச்சரர் திருக்கோலுக்குத் தெற்கே சிலம்பொலியாரின் இல்லம்.

    என்னை அழைத்துச் சென்றவர் பேராசிரியர் அரங்க இராமலிங்கம். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

    என் சிறைவாசம் தொடர்பாக, முதலமைச்சராகக் கலைஞர் சொன்ன பதில் தனக்கு இன்றும் நிறைவைத் தரவில்லை எனக் கூறினார்.

    அறிஞர் அண்ணா, எம்ஜியார், கலைஞர் எனத் தொடர்ச்சியாக முதமைச்சர்களுடன் பணிபுரிந்த சுவையான நிகழ்வுகளைப் பகிர்ந்தார். ஈழத்துப் பேராசிரியர்கள் வித்தியானந்தன், கைலாசபதி, சிவத்தம்பி பற்றிய தன் மதிப்பீடுகளைக் கூறினார்.

    சிட்னியில் பழனியப்பனாரின் மருமகளைச் சந்தித்ததை நினைவு கூர்ந்தேன். சிலம்பொலியாரின் அண்ணன் பாவலர் முத்துசாமியின் மகன், எம்பிஏ படித்தவர், காந்தளகத்தின் தொடக்க காலத்தில் பொறுப்பாளராகப் பணிபுரிந்ததையும் நினைவு கூர்ந்தேன். அறிஞர் அண்ணா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர், பாவலர் முத்துசாமி.

    திருவான்மியூரில் 09.04.2012 அன்று பதிந்த காட்சிகளைக் காண்க, பகிர்க.

    Share
  • ஜார்ஜ் பெர்னாண்டஸ் (1930-2019)

    -மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    இலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின் தாக்குதலில் 64 தமிழ்ப் பொது மக்கள் இறந்தனர். வியத்நாமில் மைலாய் நகரில் 1968 மார்ச்சு 16இல் அமெரிக்கப் படைகள் தாக்குதலில் 300-500 வியத்நாமியப் பொதுமக்கள் இறந்தனர். வியத்நாமில் அமெரிக்கப் படைகள் செய்ததையே வல்வெட்டித்துறையில் இந்தியப் படைகள் செய்ததாகக் குற்றம் சாட்டிய ஜார்ஜ் பெர்னாண்டஸ், வல்வெட்டித்துறையை இந்தியாவின் மைலாய் என அறிவித்தார்.

    ஜார்ஜ் பெர்னாண்டஸ், கொங்கணக் கத்தோலிக்கர். மேற்குக் கடற்கரையோர மங்களூரில் 1930இல் பிறந்தவர். பாதிரியாரகப் பயிற்சிக்கு பங்களூர் போனவர் இடை நிறுத்தி மும்பை சென்று தொழிற் சங்கவாதி ஆனவர்.

    சமதருமக் கோட்பாடுகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். எளிமையானவர், இனிமையானவர், அடித்தள மக்களின் மேம்பாட்டுக்கு அச்சாணியானவர். 1967இல் நாடாளுமன்ற உறுப்பினரானவர்.1994இல் சமதாக் கட்சியைத் தொடங்கியவர். பிகாரின் இன்றைய முதலமைச்சர் நிதிஷ்குமார், சமதாக் கட்சியில் இருந்து வளர்ந்தவர்.

    வங்கத்துக் கவிஞர், நேரு அமைச்சரவையில் அமைச்சர் உமாயூன் கபீரின் மகள் இலைலாவை விரும்பி மணந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். சீன் அவர்களின் ஒரே மகன்.

    1983க்குப்பின் இந்திய மனித உரிமை இயக்கங்கள் இலங்கைத் தமிழர் மீதான சிங்களவரின் தாக்குதல்களையும் தமது நிகழ்ச்சி நிரலில் ஆர்வத்துடன் சேர்த்துக்கொண்டன.

    சென்னையில் ஊடகவியலார் தி என் கோபாலன் மிகுந்த ஆர்வம் காட்டினார். வி ஆர் கிருஷ்ண ஐயர், ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற தமிழரல்லாத மனித உரிமை ஆர்வலர்களை, சமதரும ஈடுபாட்டாளரைச் சென்னைக்கு அழைத்து இலங்கைத் தமிழர் அழிப்புத் தொடர்பான மாநாடுகளை நடாத்தி வந்தார்.

    அக்காலத்தில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தமிழகத்தில் பலருக்கு இலங்கைத் தமிழர் ஆதரவாளராக அறிமுகமானார். அதற்குப்பின்னர் வாழ்நாள் முழுவதும் அவர் அந்தக் கொள்கையில் இருந்து பின்வாங்கவில்லை.

    இலங்கைத் தமிழருக்காக மட்டுமன்றி, மியன்மார், வங்கதேசம், நேபாளம் என அவரின் இரக்கக் கண்கள் பரந்து பார்த்தன, அடக்கியோரை எதிர்த்து விரைந்து குரல் கொடுத்தன.

    இந்திராவின் நெருக்கடி நிலைக் காலத்தில் ஜார்ஜ் பெர்னாண்டஸுக்கு அடைக்கலம் கொடுத்தவர் கருணாநிதி. ஆனாலும் இலங்கைத் தமிழர் ஆதரவு நிலையில் தமிழகத்தில் பழ.நெடுமாறன், வைகோ, கி. வீரமணி மூவரும் ஜார்ஜ் பெர்னாண்டஸுடன் நெருக்கமாகப் பணிபுரிந்தவர்கள்.

    விடுதலையை வேரறுக்க முடியாது. அதற்கான போராட்டங்கைளையும் நசுக்க முடியாது. தமது நாட்டில் விடுதலைக் குரல்களை ஒடுக்கியோர், பிறிதொரு நாட்டில் விடுதலைக்கு ஆதரிப்பது இரட்டை வேடமே. மனதார ஆதரிக்கார். ஒப்புக்காக ஆதரிப்பார். இதனாலன்றோ உரத்த ஒலியுடன் குரல் எழுப்பியிருந்தாலும் இந்திரா காந்தியின் தமிழர் போராட்ட ஆதரவுக் கொள்கை தோல்வி கண்டது. எம்ஜியாரும் எதையும் செய்யமுடியவில்லை. ஆனாலும் அடக்கி ஆள்வோர் நடுவே எம்ஜியார் விடுதலைக்காகக் குரல் கொடுத்ததால் தனித்து ஒளிர்கிறார் என ஜார்ஜ் பெர்னாண்டஸ் எழுதினார் (பக். 61, மனித உரிமைகள், 1998).

    இந்தியப் படைகளை மீளழைக்க வேண்டும் என்ற தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் குரல் 1989 ஆனியில் ஓங்கி ஒலித்த நாள்களில், விடுதலைப் புலிகளின் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம், ஜார்ஜ் பெர்னாண்டசுடன் தொடர்பு கெண்டார். இந்தியப் படைகள் விலகினால் விடுதலைப் புலிகளைப் பிரேமதாசா அழித்துவிடுவார் எனக் கூறினார். பாலசிங்கத்தை ஜார்ஜ் பெர்னாண்டஸ் கமுக்கமாகச் சந்தித்ததாகவும் செய்தி உண்டு. இந்தியாவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்தக் கேட்டுக்கொண்டார்.

    இந்தியப் பிரதமரிடம் எடுத்துச் சொல்லும் நிலையில் தான் இல்லை எனப் பதிலளித்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், குடியரசுத் தலைவர் வேங்கடராமனுக்குக் கடிதம் எழுதினார். ஜார்ஜ் பெர்னாண்டஸிடம் மேலும் தகவல்களைக் கோரிப் பெற்ற வேங்கடராமன், பிரதமருக்கு அவை யாவற்றையும் அனுப்பினார். (இந்தியா டுடே, யூலை 31, 1989 இதழ்)

    1997 பெப்ருவரியில் ஜார்ஜ் பெர்னாண்டஸைத் தில்லியில் முதன்முதலாகச் சந்தித்தேன். என்னுடன் வந்தவர் திருமதி மாலினி இராசநாயகம். இலங்கைத் தமிழர் ஆதரவு நிலைக்காக அவருக்கு நன்றி தெரிவித்தோம்.

    1998 தொடக்கம் 2001 வரை ஜார்ஜ் பெர்னாண்டஸ், இந்தியப் பாதுகாப்பு அமைச்சர். முந்தைய அரசு, இலங்கைக்குக் கடலோரப் பாதுகாப்புக் கப்பல்களைக் கொடுத்திருந்தது. ஒரு கப்பலை அனுப்பியபின் மற்றக் கப்பல் அனுப்பும் நிலையில் ஜார்ஜ் பெர்னாண்டஸ், இந்தியப் பாதுகாப்பு அமைச்சரானார். பழ் நெடுமாறனின் வேண்டுகோளை ஏற்ற ஜார்ஜ் பெர்னாண்டஸ் இரண்டாவது கப்பலை இலங்கைக்கு அனுப்ப மறுத்தார்.

    2000ஆம் ஆண்டு யூன் 3ஆம் நாள். சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம். முதலமைச்சர் கருணாநிதியின் 77ஆவது பிறந்த நாள் விழா.

    இரத்தம் சிந்தாமல் ஒரே நாடு பிரிந்தது. செக் நாடும் சுலோவாக் நாடும் உருவாகின. அதே போல இலங்கைத் தீவில் தமிழர் தாயகம் தனியாகவும் சிங்களவர் தாயகம் தனியாகவும் பிரிந்து தமிழருக்குத் தனி நாடு அமைய வேண்டும். கருணாநிதி தன் உரையில் இவ்வாறு கூறினார்.

    வாஜ்பாய் பிரதமர். திமுகவும் அரசில் கூட்டணி. மாறன் அமைச்சர். ஜார்ஜ் பெர்னாண்டஸ் பாதுகாப்பு அமைச்சர்.

    முதலமைச்சர் கருணாநிதியின் பேச்சு இந்திய அரசின் கொள்கையா? இந்திய எதிர்க் கட்சிகள் கூவின. இலங்கையில் சிங்களவர் கூச்சலிட்டனர். மேற்கத்தைய நாடுகளும் குரலெழுப்பின.

    வாஜ்பாயின் பதிலை ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறினார். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர் விரும்பும் தீர்வே இந்தியக் கொள்கை என்றார். ஜார்ஜ் பெர்னாண்டஸ் விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமானவர் என்பதால் வாஜ்பாய் அவர் வழி கூறினார். அதே நாளில் இந்திய வெளியுறவு அமைச்சர் யஸ்வந்த் சிங் கொழும்பில் நின்றார்.

    2000 யூலை 1, 2 நாள்கள். இடம் ஈரோடு. வைகோ தலைமையிலான மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் “தமிழக மீளெழுச்சி மாநாடு”. உள்துறை அமைச்சர் அத்வானி, பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், மின்சக்தி அமைச்சர் அரங்கராசன் குமாரமங்கலம், முதலமைச்சர் கருணாநிதி, பாட்டாளி மக்கள் கட்சி மருத்துவர் இராமதாசர் எனப் பலர் பங்குபற்றிய மாநாடு.

    அந்த மாநாட்டிலும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் பேசினார். 1987-1988இல் இந்திய அரசின் தவறான கொள்கையைப் பிரதமர் வாஜ்பாய் பின்பற்றமாட்டார் எனக் கூறிய அவர், தமிழரும் சிங்களவரும் இணைந்து கேட்டாலே இந்திய அரசு தலையிடும் எனக் கூறினார்.

    2008 வைகாசியில் தில்லியில் மீண்டும் ஜார்ஜ் பெர்னாண்டஸைச் சந்தித்தேன். குணபாலசிங்கம், பத்மநாதன் ஆகிய இருவருடனும் தில்லி சென்றிருந்தேன். இலண்டனில் அவர்கள் இருவரும் சார்ந்த அமைப்பு நடத்த இருந்த இலங்கைக் தமிழர் ஆதரவு மாநாட்டிற்காக ஜார்ஜ் பெர்னாண்டஸை அழைக்கச் சென்றிருந்தோம்.

    இலண்டன் மாநாட்டிற்காக, ஜார்ஜ் பெர்னாண்டஸை அனுப்ப உதவினேன். தென் ஆபிரிக்க அமைச்சர் என் நண்பர் படையாட்சியையும் அனுப்ப உதவினேன். தில்லியில் இருந்து இந்திய வெளியுறவுத் தூதரக அநுபவம் நிறைந்த என் நண்பர்களையும் அனுப்ப உதவினேன்.

    மற்றொரு முறை தில்லி சென்ற பொழுது, ஜார்ஜ் பெர்னாண்டஸ் வாழ்ந்த கிருஷ்ண மேனன் மார்க் இல்லம் சென்றேன். அவர் மருத்துமனையில் இருப்பதாகக் கூறினர்.

    2019 ஜனவரி 29 அன்று அவர் காலமானார் என்ற செய்தி அறிந்து கலங்கினேன். இலங்கைத் தமிழரின் உணர்வுபூர்வமான நண்பர். அடித்தட்டு மக்களின் இதயத் துடிப்பு. விடுதலை இயக்கங்களுக்கு நீரூட்டி வளர்ப்பவர். அவரின் மறைவு இந்தியாவுக்கு மட்டுமன்று, மனித நேயர்களுக்குப் பேரிழப்பு.

    Share
  • அடிமைத் தளைகளை அகற்ற உறுதிபூணும் நாள்

    -மறவன்புலவு க. சச்சிதானந்தன்

     இலங்கையில் யாழ்ப்பாணத்தில் நல்லூரைத் தலைமை இடமாகக் கொண்டு அமைந்த சைவத்தமிழ் அரசானது 400 ஆண்டுகளாகச் சங்கிலித் தொடர்ச்சியாக அமைந்த அரசு.தென்மேற்கே ‘வாய்க்கால் ஆறு’ அதன் எல்லை.தென்கிழக்கே ‘கொம்புக்கல் ஆறு’ அதன் எல்லை. சில காலங்களில் ‘மாணிக்கக் கங்கை’ வரை அதன் எல்லை விரிந்து இருந்ததாம்.

    அந்த 400 ஆண்டுகளில் தமிழீழ அரசின் ஆட்சியில் சைவ சமயமும் தமிழ் மொழியும் மட்டுமே பண்பாட்டு நெறிகள்.புத்த சமயமும் சிங்கள மொழியும் தெற்கே கண்டியைத் தலைநகராகக் கொண்ட ஆட்சியாலும் தென்மேற்கே கோட்டையை தலைநகராக கொண்ட ஆட்சியாலும் சமகாலத்தில் விளங்கின.மேலை நாட்டு மொழிகள், சமயங்கள் மற்றும் அரபு நாட்டு மொழிகள், சமயங்கள், அக்காலங்களில் இலங்கையில் இல்லை. நல்லூரைத் தலைநகராகக் கொண்ட சைவத்தமிழ் அரசு 400 ஆண்டுகளுக்கு முன்பு வீழ்ந்தது.

    கலியுகம் 4720 சகாப்தம் 1541 திருவள்ளுவராண்டு 1650
    விபவ ஆண்டு 27 வைகாசி புதன்கிழமை (05.06.1619) தேய்பிறை எட்டாம் நாள் அட்டமி பூரட்டாதி நட்சத்திரம் அன்று சைவத்தமிழ் அரசு வீழ்ந்தது. வீழ்த்தியவர்கள் மேலைநாட்டுப் போர்த்துக்கேயர்.

    1617இல் கோவாவில் தமிழீழ அரசை வீழ்த்துமாறு

    போர்த்துக்கேய ஆளுநர் ஆணையிட்டார். போர்த்துக்கேயர் திறை கொடுக்குமாறு ஆணைகளை அனுப்பினர்.ஆனால், அக்காலத் தமிழீழ அரசன் சங்கிலியன், அதனை நிறைவேற்ற மறுத்தான்.

    மன்னரின் பேசாலையில் போர்த்துக்கேய யேசூற்றப் பாதிரிமார்களால் வாள்முனையிலோ சோற்றுக்காகவோகத் தோலிக்கராக மதம் மாறிய தனது குடிமக்களைச் சங்கிலியன் அழித்தான்.

    போர்த்துக்கேயரின் படையெடுப்புகளைச் சந்திக்கத் தமிழகப் பழவேற்காட்டில் முகாமிட்டிருந்த ஒல்லாந்தர்களையும் தஞ்சை நாயக்கர் படைகளையும் மலையாளக் குஞ்சலி வீரர்களின் கடற்படையையும் துணைக்கு அழைத்தான். கண்டி அரசுக்கும் செய்தி அனுப்பினான்.

    1619 பங்குனியில் பிலிப்பு  டி ஒலிவேரா தலைமையில் தெற்கே கொழும்பிலிருந்து நூறு போர்த்துக்கேய வீரரும் சில ஆயிரம் சிங்களக் கூலிப்படைகளும் இணைந்த படை ஒன்று வடக்கு நோக்கிக் கிளம்பியது

    தமிழகம், நாகப்பட்டினத்திலிருந்து போர்த்துக்கேயக் கடற்படை கப்பல்கள் யாழ்ப்பாணம் நோக்கிக் கிளம்பின.1619 சித்திரையில் பூநகரி வந்த போத்துக்கேயப் படைகள் கேரதீவுக் கடலைக் கடக்க மீனவர்களைப் பயன்படுத்தினர்.1619 சித்திரைக் கடைசியில் குடாநாட்டுக்குள் போத்துக்கேயப் படைகள் நுழைந்தன.

    கலியுகம் 4720, சகாப்தம் 1541, திருவள்ளுவராண்டு 1650, விபவ ஆண்டு, வைகாசி 27ஆம் நாள், புதன்கிழமைபூரட்டாதி நாளில் (05.06.1619) வண்ணார்பண்ணையில் நடந்த பெரும் போரில் சங்கிலியன் படை தோற்றது. சைவத் தமிழ்ப் படை தோற்றது.பிலிப்பு டி ஒலிவேராவின் கத்தோலிக்கப் போர்த்துக்கேயப் படை வென்றது.

    நல்லூரைத் தலைமையகமாகக் கொண்ட தமிழீழ அரசு வீழ்ந்தது.சைவத் தமிழ் அரசன் சங்கிலியனும் பல்லாயிரம் சைவத் தமிழ்ப் படை வீரரும் கத்தோலிக்கப் போர்த்துகேயப் படையிடம் தோற்று மாவீரராகிய நாள், அந்த நாள்.

    அந்த நாளின் 400ஆவது ஆண்டு நிறைவு நாள், அதே திதி, இந்த ஆண்டு கலியுகம் 5120, சகாப்தம் 1941,திருவள்ளுவராண்டு 2050, விகாரி ஆண்டு, வைகாசி 13, திங்கள்கிழமை, தேய்பிறை எட்டாம் நாள் அட்டமி, சதயநாளன்று (27.05.2019) வருகிறது.அந்நாள் இலங்கையின் வரலாற்று நாள். சைவத் தமிழரின் இதயத் துடிப்பு நாள்.மன்னன் சங்கிலியனையும் அவனோடு உயிர்துறந்த தமிழர் படையினரையும் நினைவுகொள்ளும் நாள். 400ஆவது ஆண்டு நினைவு நாள்.

    “கீரிமலையில் திரள்வோம், பாலியாற்றில் திரள்வோம். பாலாவியில் திரள்வோம், மோதரகம் ஆற்றில் திரள்வோம். நந்திக் கடலில் திரள்வோம், கொட்டியாற்றில் திரள்வோம். கல்லடியில் திரள்வோம், கொம்புக்கல் ஆற்றில் திரள்வோம். வாய்க்கால் ஆற்றில் திரள்வோம்,சங்கிலிய மன்னனுக்கும் படைவீரர்களுக்கும் நீத்தார் கடன் ஆற்றுவோம்.”

    இந்த ஆனி தொடக்கம் அடுத்த ஆனி வரை ஓராண்டு காலத்துக்குச் சங்கிலியன் 400வது ஆண்டு நினைவு நிகழ்வுகளை இலங்கை முழுவதும் நடத்துவோம். புலம்பெயர் தமிழர்களிடையே நடத்துவோம்.ஊர்கள் தோறும் சங்கிலியன் சிலைகள் நிறுவுவோம்.வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் சங்கிலியன் வரலாறு என்ற தலைப்பில் ஒரு பகுதி சேர்ப்போம்.

    சங்கிலியன் நாடகம் ஓரங்க நாடகமாக நாடகக் குழுகளிகளிடையே போட்டி நடத்துவோம்.சங்கிலியின் கதையில் ஏதாவது ஒரு பகுதியைப் பரதநாட்டியமாக அமைக்கும் போட்டி நடத்துவோம்.சங்கிலியன் வரலாற்றைத் தமிழிசைப் பாடல்களாக்கி இசைக்கும் போட்டி நடத்துவோம்.சங்கிலியன் வரலாறு தொடர்பாக மாணவர்களிடையே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி எனப் போட்டிகள் நடத்துவோம்.

    வைகாசித் தேய்பிறை எட்டாம் நாள் மன்னன் சங்கிலியன் மற்றும் தமிழ் படை வீரருக்கு நினைவு நாள்.ஆண்டுதோறும் நினைவுகூர்ந்து அடிமைத் தளைகளை அகற்ற உறுதிபூணும் நாள்.

    Share
  • மலையாளத்தில் ஒன்பதாம் திருமுறை முதன்முறையாக

    புரட்டாதி 10, 2049 (26.09.2018)

    இந்தியா கேரளம் திருவனந்தபுரம் ஊடக நடுவம்.
    என் செயலால் ஆவதொன்றில்லை எனினும் இறைவன் அருளால் என் கனவுகளில் ஒன்று நனவாய நாளும் இடமும்.

    ஒன்பதாம் திருமுறை மலையாள மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழா. 301 பாடல்களையும் மொழிபெயர்த்தவர், இசையுடன் பாடுமாறு நான் கேட்டு மொழிபெயர்த்தவர் என் மதிப்புக்குரிய அன்பர் திரு. சந்சிரசேகரன் நாயர் அவர்கள்.

    முன்பு நான் கேட்டுத் திருவாசகம் மொழிபெயர்த்துத் தந்தவர். நூலாக வெளிவந்து, என் வேண்டுகோளை ஏற்ற திருவனந்தபுரம் மன்னர் தம் அரண்மனை வளாகத்தில் அரங்கில் அந்நூலை வெளியிட்டவர். அம்மொழிபெயர்ப்புக்காக, திரு. சந்சிரசேகரன் நாயர் அவர்கள்.நல்லி திசை எட்டும் விருது பெற்றவர்.

    அதற்கு முன் திருமந்திரத்தில் உள்ள ஆர்வத்தால், ஈடுபாட்டால் பத்தாம் திருமுறை முழுவதையும் மொழிபெயர்த்தவர்.

    திருக்கோவையாரை மொழிபெயரத்துத் தாருங்கள் எனக் கேட்டுள்ளேன். என் செயலால் ஆவதொன்றில்லை எனினும் அவன் அருளால் மொழிபெயர்த்துத் தருவார்.

    Share
  • சிதம்பரத்துக்குக் கப்பல் திருவாதிரை 02.01.2018

    reginald-cooray02

    திருவாதிரைக்குச் சிதம்பரம் அருள்மிகு நடராசப் பெருமான் கோயிலுக்கு ஈழத்துச் சைவர்கள் காங்கேயன்துறைத் துறைமுகத்திலிருந்து அண்மையில் உள்ள தமிழகத் துறைகளுக்குக் கப்பல் வழி செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு 2016 மார்கழியில் யாழ்ப்பாணம் நல்லூர் நாவலர் விழாவில் வடமாகாண ஆளுநர் மேதகு ரெஜினால்டு கூரே அவர்களிடம் கேட்டுக்கொண்டேன்.

    மிக ஆர்வத்துடன் வடமாகாண ஆளுநர் மேதகு ரெஜினால்டு கூரே அவர்கள் என் வேண்டுகோள ஏற்றார்கள். இலங்கை அரசின் அனைத்து மட்டங்களிலும் அவரது கடும் முயற்சியால் 20.12.2016இல் இலங்கை அரச அநுமதி பெற்றார்கள்.

    பின்னர் இலங்கை அரசு இந்திய அரசுக்கு எழுதி ஒப்புதல் கேட்டது. 21.12.2017இல் இந்திய அரசின் ஒப்புதலை இலங்கை அரசுக்குத் தெரிவிக்க, இலங்கை வெளிவிவகார அமைச்சும் வடமாகாண ஆளுநர் மேதகு ரெஜினால்டு கூரே அவர்களுக்கு அறிவித்தது.

    திருவாதிரைக்குச் சிதம்பரத்துக்குக் கப்பல் வழிபோக நான் வேண்டுகோள் விடுத்தேனாயினும் அனைத்து உரிமங்களையும் பெற்று இலங்கை இந்துக்களுக்கு நல்வாய்ப்பாக அமைய முயன்றவர் நல்லுள்ளம் கொண்ட வடமாகாண ஆளுநர் மேதகு ரெஜினால்டு கூரே அவர்களே.

    இலங்கை அரசின் அலுவலகங்களிலும் இந்திய அரச அலுவலகங்களிலும் அநுமதிக்குரிய ஆவணங்கள் அலுலவலர்களின் மேசைகளில் தங்காது விரைந்து பயணிக்க நான் வடமாகாண ஆளுநர் மேதகு ரெஜினால்டு கூரே அவர்களுக்கு ஒத்துழைத்தேன்.

    கப்பல் பயண ஒழுங்குகளை ஒருங்கிணைக்கும் பணியில் வடமாகாண ஆளுநர் மேதகு ரெஜினால்டு கூரே அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். 2.1.2018 திருவாதிரை நாளன்று சிதம்பரத்துக்கு இலங்கை அடியார்கள் போகும் வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளோம். அருள்மிகு நடராசப் பெருமானை அவனருளாலே அவன்தாள் வணங்கும் வாய்ப்பைப் பெறுவோம்.

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    மார்கழி 9, 2048 (24.12.2017)

    Share
  • சைவ சமய வரலாற்றில் காதக்கல் Today is a milestone day in the annals of Saiva religion

    சைவ சமய வரலாற்றில் காதக்கல் Today is a milestone day in the annals of Saiva religion.

    ஐப்பசி 13, 2048 திங்கள் (30.10.2017)

    photo jeyaprakashtelugu
    திருப்பதி வேங்கடவன் பல்கலைக் கழக மேனாள் தமிழ்த்துறைப் பேராசிரியர், மதுரை காமராசர் பல்கலைக்கழக மேனாள் தெலுங்குப் பேராசிரியர், சங்க இலக்கியங்களைத் தெலுங்குக்கு மொழிபெயர்க்கும் செம்மொழி நிறுவனக் குழுத் தலைவர், பேராசிரியர் சிறீபாத செயப்பிரகாசர்.
    03.03.2011இல் முதன் முதலாகத் திருப்பதியில் சந்தித்தேன். பெரியபுரணத்தைத் தெலுங்குக்கு மொழிபெயர்க்கும் தொடக்கநிலையில் இருப்பதாகக் கூறினார். தருமை ஆதீனச் செயற்றிட்டத்தில் திருமலை திருப்பதி தேவத்தான நிதி வழங்கலுடன் மொழிபெயர்ப்பதை தொடருங்கள் எனக் கேட்டேன்.

    dharmapuram adheenam 04
    மொழிபெயர்ப்புகளைப் பகுதி பகுதியாக அனுப்பி வந்தார். இன்று அவர் அனுப்பிய மின்னஞ்சலில் 4274 பாடல் வரையான இறுதிப் பகுதி இணைப்பில் வந்தது.

    tnrgopalaaiyarsachi

    telugu jayaprakash0396
    அன்னாருக்கு நான் அனுப்பிய பதில்

    Vanakkam
    Today the entire text of 4274 hymns of Periyapuranam is in Telugu.
    An effort which squeezed the time, energy, scholarship and the multilingual capability of Prof Jayaprakash over a period of about 10 years.
    Today is a milestone day in the annals of Saiva religion.
    It is a day where Tamil – Telugu interaction provided a new bondage.
    It is a day for adorning the feather, another feather, in the cap of achievements of Prof. Jayapraksh.
    Let us celebrate the blessings of Lord Shiva Parvathi, Saraswathi, Lord Venkatesa Pathmavathi.
    Let us congratulate Prof Jayaprakash, a probable incarnate of Sekkizhaar.
    Let Devas shower the most fragrant choicest flowers on Prof.Jayaprakash, his family and Ms. Gayathri.
    Let us move to book making of this holy text and making it available at www.thevaaram.org site.
    I shall keep you informed.
    HH Gurumaha Sanithanam of Dharmapuram Adhenam, and
    Scholar par excellence, nature’s inbuilt translator, with every syllable of Tirumurai transposed in each cell of his physical form, Sekkizhaar Adipodi TN Ramachandran,
    were behind this blessed endeavor of translations (beginning 2000 CE) of Thirumurai to
    English (9, 11)
    German (portions of 1st Thirumurai),
    Telugu (1,2,3,4, 7,8,9, portions of 5,10, 11 and now the entire 12),
    Kannada (1, 8.1 and 9),
    Malayalam (8)
    Hindi (1, now 2 in progress)
    Sanskrit (4, 5, 6, 8.1 and portions of 10)
    Sinhala (8.1, 9)
    Chinese ( 1 hymn of Thevaaram with all of 8.1 now in progress)
    Malay (8.1 now in progress)
    Myanmar (thiruvembavai of 8.1)
    Thai (transcriptions of selected Tirumurai hymns in Thai language and Grantha to facilitate Thai Royality follow Saiva rituals)
    Grantha (Transcribing from Grantha to Devanagari the entire text of 12 Upamnayu Baktha Vilasam – digitized in Jaffna)
    Blessed are those universalizing the fathomless knowledge embedded in Thirumurai.
    Regards

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    Maravanpulavu K. Sachithananthan

    Share
  • குயிலி, உன்றன் திருநடம் கண்டிடப் பெற்றேன்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    யாழ் மகள் அழுதாள், விடுதலை பெறுவாள் என்ற வரிகளை வண்ணமாக்கியவர் குயிலி. வரிகளை எழுதியவர் அருள்மொழி. ஈழத் துயரத்தைக் காட்ட அழுதேன், விடிவு வரும் எனக் கண்டும் கேட்டும் மகிழ்நீர் சொரிந்தேன்.

    191a0bdf-08ee-4272-985b-801fad48393c

    பெண் எனும் பேராற்றல் எனும் எண்ணம் தந்தவர் அருள் மொழி, வண்ணம் தந்தவர் நர்த்தகி நடராசர், நடனம் தந்தவர் குயிலி.

    சென்னை மயிலாப்பூர், பாரதிய வித்திய பவன் அரங்கம். 2047 ஆடி 2 (17.07.2016) காலை 10 மணி தொடக்கம் கண்களை விரித்துக் கருத்தினை ஒடுக்கி, உள்ளத்தை ஒரே நெறிக்குள் அழைத்துச் சென்றவர்கள் நர்த்தகி நடராசரும் அவர் மாணவி குயிலியும்.

    1d562d43-56a9-47d9-8147-0f072d7ec409

    தோல்வியில் துவளாதீர், துயரில் மாளாதீர், விழிமின், எழுமின் என அழைக்கும் வரிகளைத் தந்தவர் அருள்மொழி. பெண்கள் பேராற்றலார் என 2000 ஆண்டுகளுக்கு ஊடாகத் தமிழர் வரலாற்றுப் பயணத்துக்கு அழைத்துச் சென்றார். சங்கப் பெண்ணில் தொடங்கி, யாழ் மகள் வரை அழைத்துச் சென்றார். அந்த வரிகளுக்கு வடிவம் கொடுத்தவர் நர்த்தகி. நடனமாடியவர் குயிலி.

    எண், எழுத்து, பண், பதம் என மாதவி கற்ற நாட்டிய நன்னூல் பயிற்சியின் இலக்கணமாய்க் குயிலி. மாதவி ஏந்திய மலர்களோ குயிலி ஏந்துபவை? பகுதாரிப் பண், திசுர தாளம், தக்கதிமி தா எனச் சொற்கட்டுகள். வசுந்தாவின் குரலோ குயிலுக்குக் கருத்தியல் எடுப்பு. நாராயணனின் முழவோ குயிலியின் காலடி நடப்பு. சீனிவாசனின் நரம்பிசையோ குயிலின் பதங்களின் வனப்பு. தேவராசரின் குழலிசையோ குயிலின் கண்களில் மிதப்பு. சிவநாராயணனின் யாழிசையோ அரங்கத்தின் காதுகளின் குவிப்பு. நிகழ்ச்சித் தொடக்கக் களைகட்டலில்.

    ஆடுஅமைக் குயின்ற அவிர்துளை மருங்கின் கோடை அவ்வளி குழலிசை ஆக…” எனத் தொடங்கி மலைவளம் காட்டிய கபிலரின் வரிகள், குயிலிக்குக் கற்பனை வளம், நர்த்தகிக்கு கருத்தூறும் குளம். பண்களைத் தாளமாக்கி, கண்களை மீன்களாக்கி, கழுத்தினைத் தஞ்சாவூராக்கி, கால்களை அளந்து வைத்து, உடலே நடனமாகிய,  அடவுகளைப் பொருத்தினார் விருத்தத்தில்.

    அரும்பு விரிந்தன்ன, மொட்டு மலர்ந்தன்ன, முகம் சிவந்தன்ன, தாமரையாய்க் குயிலி அலர்ந்தார். முழவுக்குச் சந்தங்கள் விரல்களாக, குரலுக்கு ஓசைகள் நாண்களாக, நட்டுவத்துக்கு நாதம் சல்லாரியாக, திருப்புகழுக்கு முருகன் பொலிந்தான் அலாரிப்பில்.

    உயிரும் உடலும் சேர்வதில் உவகை, இயற்கையின் பேராற்றலில் வியப்பு, தீயன பழிப்பதில் இழிப்பு, அடக்க முயல்வோர்மீது வெகுளி, அடங்கா நிலையின் மென்னகை, பெண்மைப் புதுமையில் மறம், இயல்பு தருமோ அச்சம், யாழ்மகளின் வெம்பலில் அவலம், வையகம் பெண்ணால் உய்வதே அறம் என ஒன்பது சுவைகளும் பல்பண்மாலைக்குள் ஆதி தாளத்துள் அருள்மொழியின் எண்ணமாய் வந்த வண்ணத்தில்.

    பாண்டியன் என் சொல்லைத் தாண்டிப் போனான்டி” எனத் தொடங்கும் பாரதிதாசன் வரிகளில் ஊடலுக்கு ஆடல். நர்த்தகியார் அறிமுகித்த அமிழ்தமாய் மராட்டியச் சாவளியில்.

    மழையைக் கண்ட மாமயில் தோகை விரித்த விதம், பாரதியின் “திக்குகள் எட்டும் சிதறி தக்கத் தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட‌….” எனத் தொடங்கும் பாடலுக்குக் குயிலியின் பதம். வசுதாவின் குரலோ, நாராயணனின் முழவோ, சீனிவாசனின் நரம்போ, தேவராசரின் குழலோ, சிவநாராயணனின் யாழோ விஞ்சியது எதுவெனின், நர்த்தகியின் தாளக் கட்டை மீறக் கெஞ்சின, தம்முள் இசைந்து கொஞ்சின, கொடுத்தன கொள்ளை இன்பம் பதத்தில்.

    58e152df-d29e-4d9e-b1f2-27334f8dc347

    அரங்கு குறியில் சிலிர்த்தது, அவை மெய்யில் சிலிர்த்தது, அழகு பொய்யில் சிலிர்த்தது, குறத்தியின் சிந்துள் திளைத்தது, பள்ளுள் அலமந்தது, தாலாட்டில் மயங்கித் தூங்கிற்று, முகக் குறியில் மனவோட்டம் பொலிந்தது, “கூடை முறம் கட்டுவோம் குறி சொல்லுவோம்….” எனத் தொடங்கும் பழம் பாடலுக்கான குறவஞ்சி நடனத்தில்.

    ஈரோடு செல்லாமல் அ(திருவ)ண்ணாமலைக்கா? அண்ணாமலையாரின் பெண்ணாகிய பெருமகள் அருள்மொழியிடம் புராணங்கள் இருந்தாலன்றோ கொளுத்தலாம். திரிபுரமும் எரித்த கதை சொன்ன வேகத்தில் பகுத்தறிவுப் பகலவனாகி முடித்தார் குயிலி தில்லானாவில்.

    செப்பமாகப் பண்ணினால் ஒப்பனையை, குயிலியின் அணிகலன்கள் இடையிடையே சிதறியிரா. கூரில் குயிலியின் காலடி குற்றுமோ, குருதி கொட்டுமோ என அவையோர் நெஞ்சமும் பதறியிரா. அய்யலுவும் அருள்மொழியும் நர்த்தகியும் குயிலியை ஆரவாரமற்ற அடக்கமான எழில் கொஞ்சும் ஆடை வடிவுள்ள நடனியாக்கினர்.

    பேச்சரவம் கேட்கவில்லை, பேச்சு மழையாகப் பொழிந்தனர், பேச்சுகளுக்கு மேடை வேறு. குயிலியின் ஆடலை மட்டும் காட்டும் மேடைக்கு மீண்டும் மீண்டும் வருவேன். நர்த்தகியின் நட்டுவாங்கம் பார்க்கக் கண்களைக் கூர்மையாக்குவேன்.

    என் அருமை நண்பர், ஈழத்தமிழரின் தமிழகக் குரல், வழக்குரைஞர் அருள்மொழியின் பெண் எனும் பேராற்றல், அவர் மகள் வழக்குரைஞர் குயிலியே. முன்பு திருமுறை மாநாட்டில் குயிலியின் நட்டுவாங்கத்துக்கு நர்த்தகியார் ஆடப் பார்த்தேன். இங்கு இடம் மாறிப் பார்த்தேன், மகிழ்ச்சி.

    தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன்

    திருநடங் கும்பிடப் பெற்று

    மண்ணிலே வந்த பிறவியே யெனக்கு

    வாலிதாம் இன்பமாம் என்று

    கண்ணிலா னந்த அருவிநீர் சொரியக்

    கைம்மல ருச்சிமேற் குவித்துப்

    பண்ணினால் நீடி அறிவரும் பதிகம்

    பாடினார் பரவினார் பணிந்தார்.

    (சேக்கிழார், திருமுறை 12005253)  

    Share