Author: அண்ணாகண்ணன்
-

மறவன்புலவு சச்சிதானந்தன் அரசியல் கள அனுபவங்கள்
அண்ணாகண்ணன்மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்களுடன் நேற்று காசி திரையரங்கில், விடாமுயற்சி திரைப்படம் பார்த்தோம். அடையாறு ஆனந்த பவனில் மதிய உணவு உண்டோம். அவருடைய அரசியல் கள அனுபவங்கள், எங்களுக்குப் புத்துணர்வு ஊட்டின. உற்சாகம் கொள்ள வைத்தன.83 வயது நிறைந்த ஐயா, இன்றும் துடிப்புடன் தாமே மகிழுந்து ஓட்டி வருகிறார். மக்கள் நலன் சார்ந்த ஏராளமான பணிகளை இடையறாது ஆற்றி வருகிறார். இவரது முயற்சியின் விளைவாக, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியுள்ளது. அடுத்து, சரக்குக் கப்பல் போக்குவரத்தும் தொடங்கும் நிலையில் உள்ளது. இந்திய அரசுத் தரப்பிலும் இலங்கை அரசுத் தரப்பிலும் வணிகர்கள் தரப்பிலும் பலரைச் சந்தித்து, இதை நிகழ்த்திக் காட்டியுள்ளார்.இலங்கையில் சிவசேனையின் தலைவராக, எழுச்சிமிகு பணிகளை நடத்தி வருகிறார். மதமாற்ற முயற்சிகள் எந்த வகையில் வந்தாலும் அவற்றைத் தடுத்து நிறுத்துவதில் வெற்றி கண்டுள்ளார்.இலங்கைக்குப் பால் தினகரன் வந்து பேசும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்கள் ஒட்டப்பட்டிருந்தன. ஒரே ஒரு சட்டக் குறிப்பினை வைத்து அவரைத் திருப்பி அனுப்பச் செய்தார். சுற்றுலா விசாவில் வரும் பால் தினகரன், மதப் பிரசாரம் செய்ய அனுமதியில்லை என்ற குறிப்பினை முன்வைத்ததும் அரசே அவரைத் திருப்பி அனுப்பியது.யாழ்ப்பாணப் பகுதிகளில் மதப் பிரசாரம் செய்வோரை வெளியேற்ற, புதுமையான உத்தியைப் பின்பற்றினார். அவர்கள் தங்கியிருந்த வீட்டு உரிமையாளரிடம், நீங்கள் குடியிருக்க வீடு கொடுத்தீர்களா? மதமாற்றம் செய்ய வீடு கொடுத்தீர்களா? என்ற கேள்வியை அங்குள்ள மக்களைக் கேட்க வைத்தார். விளைவு, அந்த வீடு மட்டுமின்றி, வேறு எங்கும் அவர்களுக்கு வீடு கிடைக்கவில்லை.யாழ்ப்பாண நகருக்குள் மாடுகளை வெட்டக் கூடாது, மாட்டிறைச்சிக் கடை இருக்கக் கூடாது என்ற முழக்கத்தை மக்களே முன்வைக்க வைத்தார். இதில் அங்குள்ள ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்ற வைத்து, அந்தக் கடைகளை அப்புறப்படுத்தினார்.பீட்சா ஹட் என்ற நிறுவனத்தில் இதே போல் இறைச்சிப் பண்டங்கள் விற்கக் கூடாது என வலியுறுத்தி வெற்றி கண்டார். அதைத் தொடர்ந்து உலகின் ஒரே சைவக் கடையாக இது செயல்படுகிறது.யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபராகக் கிறித்தவ மதமாற்றி ஒருவரை நியமிக்கும் செய்தி வந்ததும் அதைச் சிவசேனை எதிர்த்தது. அவர் மதமாற்றி என்பதற்கான ஆதாரங்களை அளித்ததும் அவர் பதவியேற்பதற்கு முன்பே அவரை அரசு இடமாற்றியது.யாழ்ப்பாண வலையக் கல்விப் பணிப்பாளர் பிறட்லீ, பொறுப்பேற்ற முதல் நாளில் கல்விப் பணிமனையில் இருந்த சைவக் கடவுள்களின் திருவுருவப் படங்களை அகற்றினார். சிவசேனை போராடியது. வடமாகாணக் கல்விச் செயலாளரின் கவனத்திற்கு இந்தச் செய்தியைக் கொண்டு சென்றது. சைவக் கடவுள்களில் படங்கள் உரிய இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டன.இதில் எங்கும் வன்முறை இல்லை. ஜனநாயக முறையில், அற வழியில் போராடி, சட்ட நுணுக்கங்களுடன் கோரிக்கைகளை முன்வைத்து, உத்திகள் மூலமாகவே மகத்தான வெற்றி கண்டுள்ளார். மக்களைச் சரியாக வழிநடத்தி, தங்கள் உரிமைகளைப் பெற வைத்துள்ளார். எவருக்கும் அஞ்சாமல் துணிச்சலுடன், நெஞ்சுரத்துடன் நந்திக் கொடியைப் பறக்கவிட்டுள்ளார். அனைத்துத் தரப்பினரின் மதிப்பை, மரியாதையைப் பெற்றுள்ளார். இவை, தொலைநோக்கு உள்ள, தனிப் பெரும் தலைவருக்கு உரிய அடையாளங்கள். தமிழ்ச் சமூகம், இவரை உரியவாறு பயன்படுத்தி உய்ய வேண்டும். -

தீதும் நன்றும் பிறர்தர வாரா
அண்ணாகண்ணன்
அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட பலரும் சுமார் 50 லட்சம் செலவு செய்து, பல்வேறு அபாயகரமான வழிகளில் அமெரிக்காவுக்குச் சென்றிருக்கிறார்கள். கடன் வாங்கியும் பலர் அங்கே சென்றிருக்கிறார்கள். இவ்வளவு தொகை புரட்ட முடிந்த இவர்கள், இந்தியாவிலேயே எவ்வளவோ தொழில்கள் செய்திருக்கலாம். பானி பூரி, இட்லி கடை, பரோட்டா கடை, பிரியாணி கடை என்று சாலையோரங்களில் கடை போட்டு, மிகக் குறைவான முதலீட்டில் தொழில் செய்து இங்கே கோடிக்கணக்கானோர் வாழ்ந்து வருகிறார்கள். பேராசைப் பட்டு, குறுக்கு வழியில் சென்றால் என்ன நடக்கும் என்று இப்போது அவர்கள் உணர்ந்திருப்பார்கள். தீதும் நன்றும் பிறர்தர வாரா. நம் செயல்களுக்கு நாமே பொறுப்பு. அதற்குரிய விளைவுகளை ஏற்கத்தான் வேண்டும்.
அமெரிக்கா இவர்களை நல்ல முறையில் திருப்பி அனுப்பவில்லை. மனிதாபிமானம் குறித்து எகிப்துக்கும் ஜோர்டானுக்கும் கூறும் அமெரிக்கா, அதே அடிப்படையில் தானும் நடந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால், தங்கள் நாட்டின் சட்டத்தை மதிக்காதவர்களுக்கு இந்த மரியாதை தான் அளிக்க முடியும் என அவர்கள் காட்டியிருக்கிறார்கள். இந்த நடவடிக்கை, இவர்களுக்கு மட்டுமில்லை. இது போன்று அமெரிக்காவுக்குள் நுழைந்து, அமெரிக்க அரசை ஏமாற்றி வாழ்ந்துவிட முடியும் என நம்பி எதிர்காலத்தில் வரக்கூடியவர்களுக்கும் இதுவே பதில். இனியாவது இத்தகையோர் பாடம் கற்பார்களா என்பதே கேள்வி.
இப்போது இந்திய அரசு, ஒரு முக்கியமான பணியைச் செய்ய வேண்டும். வெவ்வேறு முதலீடுகளில் செய்யக்கூடிய சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் குறித்து விரிவான விழிப்புணர்வை ஊட்ட வேண்டும். ஏற்கெனவே இதற்கென ஒரு துறை இருக்கிறது. இந்தத் துறை, சில பயிற்சிகளையும் அளிக்கிறது. இது தொடர்பான விளம்பரங்கள், நாளிதழ்களில் அடிக்கடி வருகின்றன. ஆனால், இதை மிகப் பெரிய அளவில் செய்ய வேண்டும். ஒவ்வொருவரையும் தேடித் தேடிச் செய்ய வேண்டும். பயிற்சி அளிப்பதோடு, நம்பிக்கை அளிக்க வேண்டும். ஏற்கெனவே இவ்வாறு தொழில் செய்து முன்னேறியவர்களின் அனுபவங்களைப் பதிவு செய்து, விரிவாக அவற்றைக் கொண்டு செல்ல வேண்டும். புதிய தொழில்முனைவோருக்காகத் தனிச் செயலி, இணையத்தளம், யூடியூப் அலைவரிசை, தொலைக்காட்சி ஆகியவற்றைத் தொடங்க வேண்டும். நல்ல திறமைசாலிகளை, சிறந்த பொருள்களை அரசே விளம்பரப்படுத்தலாம். இந்தப் பொருள் தேவையா? இந்தச் சேவை தேவையா? இவர்களை அணுகுங்கள் என வாடிக்கையாளருடன் இணைக்கலாம்.
இந்தியச் சந்தையைக் குறிவைத்து, அயல்நாட்டு நிறுவனங்கன் பலவும் இங்கே வருகின்றன. ஆனால், இந்தியர்களோ வெளிநாட்டைத் தேடிச் செல்கிறார்கள். எனில், இந்தியாவின் மதிப்பை இந்தியர்கள் பலர் இன்னும் உணரவில்லை. அவர்கள் அதை உணரும்போது, இந்தச் சிக்கல் தீரும். இந்தியாவும் இதனால் வளம் பெறும்.
#us #usa #america #india #indians #illegalimmigration
-

கேரள மருத்துவக் கழிவுகள் – என் முதல் கேள்வி
அண்ணாகண்ணன்
கேரள மருத்துவக் கழிவுகள், திருநெல்வேலியில் கொட்டப்பட்டுள்ளன. ஏற்கெனவே கன்னியாகுமரியில் இவ்வாறு மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டன. சாலையோரம் கொட்டப்பட்ட கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசுவதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இவற்றை மீண்டும் கேரளத்துக்கே அனுப்பி வருகின்றனர். இவற்றுக்கு ஆகும் செலவு குறித்துத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் என் முதல் கேள்வி, கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ள சோதனைச் சாவடிகளைக் கடந்தே இந்த லாரிகள் வந்துள்ளன. இந்தச் சோதனைச் சாவடிகளில் பணியில் இருந்தோர், என்ன செய்தனர்? முறையாகச் சோதிக்கவில்லையா? அவர்களும் உடந்தையாகச் செயல்பட்டனரா? இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டதா? சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனரா? சோதனைச் சாவடி அலுவலர்களும் குற்றவாளிகளாக ஏன் சேர்க்கப்படவில்லை? அவர்கள் அனுமதித்ததால் தானே இந்த லாரிகள், தமிழ்நாட்டுக்குள் நுழைந்தன? இந்த அலுவலர்கள் தங்கள் கடமையைச் சரியாகச் செய்யவில்லை என்பதால் அவர்களை இடைநீக்கம் செய்ய வேண்டும். மருத்துவக் கழிவுகளை அனுப்பியோர் மீது கடும் நடிவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் குப்பை அகற்றும் துப்புரவுப் பணியாளர்களே பல இடங்களில் குப்பைகளை எடுத்துச் செல்லாமல், ஆங்காங்கே தீவைத்து எரிக்கின்றனர். இதன் விளைவுகளை எடுத்துரைத்து, இதுகுறித்துப் பணியாளர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டும். இதில் அலட்சியமாகச் செயல்படுவோருக்கு உரிய அபராதம் விதிக்க வேண்டும். மேலும், குப்பை அகற்றுதல், வகை பிரித்தல், மறுசுழற்சி செய்தல் ஆகியவற்றில் முழுமையாக எந்திரங்களைப் பயன்படுத்துவதே இந்தச் சிக்கலுக்குத் தொலைநோக்குடன் கூடிய தீர்வாக இருக்கும்.
#waste #medicalwaste #kerala #tamilnadu
-

விடுதலை 1 & 2 – திரை விமர்சனம்
அண்ணாகண்ணன்
விடுதலை திரைப்படத்தின் இரண்டு பாகங்களையும் பார்த்தேன். பொதுவுடைமைக் கட்சியின் சித்தாந்தப் பிடிப்பையும் தமிழர் விடுதலைப் படையைப் பற்றியும் அதை நடத்திய விஜய் சேதுபதி உள்ளிட்ட தோழர்களைப் பற்றியும் அழித்தொழிப்பு வரலாற்றையும் தெரிந்துகொள்ள முடிந்தது. இவற்றை விட, காவல் துறையில் உள்ளே போட்டி, பொறாமை, அதிகார அடுக்குகள், விசாரணை என்ற பெயரில் நிகழ்த்திய கொடூரங்கள், போராளிகளுடன் சண்டையிடும்போது சகோதரக் காவலர்களையே இரகசியமாகக் கொன்றது, தனக்குப் பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காகச் சரணடைய வந்தவரையே சுட்டுக் கொன்றது, மனிதர்களைக் கொன்றதை விட அறம் கொன்ற நிகழ்வுகளை அதிகமாக அறிய முடிந்தது.
சூரியின் காதலியாக நடித்த பவானி ஸ்ரீ (தமிழரசி), முதல் பாகத்தின் இறுதியில், காவல் துறையின் நிர்வாண விசாரணையில் உண்மையை ஒப்புக்கொள்கிறார். அதன் பிறகு அவருக்கு என்ன ஆனது என இரண்டாம் பாகத்தில் எங்கும் காட்டவில்லை. இடைநீக்கம் செய்யப்பட்ட சூரி, நான் தமிழரசியுடன் எங்காவது போய் வாழ்ந்துக்கிறேன் என்கிறார். அப்படியானால், அவரைக் காவல் துறை விடுவித்துவிட்டதா?
சுயநலத் தலைவர்கள், அவர்களின் நலனுக்காக உழைக்கும் அதிகாரிகள், இவர்கள் இணைந்து சுரங்கத் திட்டத்துக்காக இயற்கை வளங்களைச் சுரண்டி, இதை எதிர்க்கும் அனைவரையும் கொன்று சாய்க்கிறார்கள். இந்தத் தலைவர்களின் உத்தரவுகளை நிறைவேற்றுவதே நியாயமான காவலர்களுக்கும் கடமை ஆகிறது. இந்நிலையில், ஒட்டுமொத்த தமிழகமும் அற வீழ்ச்சியின், அதிகார துஷ்பிரயோகத்தின், அரச பயங்கரவாதத்தின் களமாக மாறி நிற்பதைக் கனத்த நெஞ்சத்துடன் காண்கின்றோம்.
சூரி, விஜய் சேதுபதி, கிஷோர், ராஜிவ் மேனன், கென் கருணாஸ் உள்ளிட்ட பலரின் நடிப்பு மிகச் சிறப்பு. முக்கியமாக, விஜய் சேதுபதியின் உடல்மொழியும் துணிச்சலும் தலைமைத்துவமும் அபாரம். இந்தப் படத்துக்காக அவரைத் தேசிய விருதுக்குப் பரிந்துரைக்கிறேன். இளையராஜாவின் இசை சிறப்பு. இயக்குநர் வெற்றி மாறன், தனது அறச்சீற்றத்தைக் கலாப்பூர்வமாகத் தொடர்ந்து முன்வைக்கிறார். போராடியவர்களின் நியாயத்தைக் காட்டுவதோடு, அநியாயம் செய்தவர்களுக்கு என்ன ஆகிறது என்பதையும் அடுத்தடுத்த படங்களில் அவர் காட்ட வேண்டும்.
#viduthalai #viduthalai1 #viduthalai2 #soori #vijaysethupathi #vetrimaaran
-

செயற்கை நுண்ணறிவுப் பயிலரங்கு
பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவுக் கருப்பொருளில் ஆசிரியப் பெருமக்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிலரங்கு


-

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முன்னுரிமைகள்
அண்ணாகண்ணன்
அமெரிக்க அதிபராக டிரம்ப், அடித்து ஆடத் தொடங்கிவிட்டார்.
உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுகிறது. காரணம், அமெரிக்கா அந்த அமைப்பிற்கு வழங்கும் நிதியைச் சேமிக்க. வெளிநாட்டுப் போர்களில் அமெரிக்கா இனிப் பங்கேற்காது. காரணம், நிதிச் சிக்கனம். டாலரில் வர்த்தகம் செய்யாத நாடுகளுக்கு 100 சதம் கூடுதல் வரி என எச்சரித்துள்ளார். இதன் மூலம் டாலரின் முக்கியத்துவத்தை இழக்காமல், தன்னைச் சார்ந்திருக்கும் நிலையை ஏற்படுத்துகிறார்.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதைக் குறைத்து, அமெரிக்காவைப் பொருள்களின் உற்பத்தி மையமாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் உள்ள எண்ணெய் வளங்களைக் கண்டறிந்து, பெட்ரோலிய இறக்குமதியைக் குறைக்கவும் திட்டம் வைத்துள்ளார்.
பனாமா கால்வாயில் அமெரிக்கக் கப்பல்களுக்கான கட்டணத்தைக் குறைக்க வேண்டும் அல்லது அதன் நிர்வாக உரிமையை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, அமெரிக்கப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே அவரது முன்னுரிமையாக இருக்கிறது. நிச்சயமாக டிரம்ப், அயல் பணி ஒப்படைப்பிலும் கை வைக்க வாய்ப்பு இருக்கிறது.
டிரம்பின் அடுத்த முன்னுரிமை, அமெரிக்கப் பெருமிதம். செவ்வாய்க் கோளில் அமெரிக்கக் கொடி பறக்கும் என்பதும் மெக்சிகோ வளைகுடா இனி அமெரிக்க வளைகுடா எனப் பெயர் மாற்றம் செய்வதும் இதையே குறிக்கிறது. அமெரிக்கக் குடியுரிமையைக் கட்டுப்படுத்துவது, அமெரிக்கர் என்னும் அடையாளத்தை அவ்வளவு எளிதில் மற்றவர்கள் பெற முடியாது என்பதைச் சுட்டவே. அமெரிக்கப் பொருள்களை வாங்குங்கள் என அவர் பரப்புரை செய்தால், ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பார். அமெரிக்கப் பொருளாதாரமும் வளரும். அமெரிக்கப் பெருமிதமும் உயரும்.
புதிய தலைவர் பொறுப்பு ஏற்கும்போது அதிரடி அறிவிப்புகள் வருவது இயல்பே. ஆரம்ப ஆரவாரங்களைக் கடந்து, அனைவரது நன்மையையும் அவர் கருத்தில் கொண்டால், புதிய சகாப்தம் படைப்பார்.
-

சென்னை புத்தகக் காட்சி – சில அனுபவங்கள்
அண்ணாகண்ணன்
சென்னை புத்தகக் காட்சியில் கடந்த ஆண்டுகளில் நுழைவுச் சீட்டு எடுக்கும் இடத்திற்கு வலது புறம், பொதுவாக யாரும் நுழையும் வகையில் கழிவறை இருந்தது. இந்த ஆண்டு அதை, அரங்கிற்குள் நுழைந்து செல்வது போல் அமைத்துள்ளார்கள். ஆக, நுழைவுச் சீட்டு எடுத்த பிறகு தான் கழிவறைக்கே செல்ல முடியும். அவசரத்திற்குச் செல்ல வேண்டும் என்றாலும் அந்தக் கடைசிக்குச் சென்று நுழைவுச் சீட்டு வாங்கி, மீண்டும் இந்தக் கடைசிக்கு வந்து அரங்கிற்குள் நுழைந்து செல்ல வேண்டும். இது, மிகவும் சில்லரைத்தனமானது. அடிப்படை வசதிகளையும் தாமதப்படுத்துவது, மக்களை மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கும்.
அரங்கிற்குள் நுழைந்து தண்ணீர் குடிக்கலாம் எனத் தேடினால், கோடியில் ஓர் இடத்தில் தண்ணீர் கேன் வைத்திருக்கிறார்கள். ஆவலாக அருகில் சென்றால், அதில் டம்ளர் ஏதும் இல்லை. தண்ணீர் பாட்டில் வைத்திருப்பவர்கள் அதில் பிடித்துக் குடிக்கலாம். மற்றவர்கள் எப்படிக் குடிப்பது? நான் தண்ணீர் குடிக்காமலே வெளியில் வந்தேன். நடுவில் தண்ணீர் நிறைந்த பாட்டில்களுக்கு என்றே ஒருவர் கடை போட்டிருந்தார். அவரிடம் வாங்க வேண்டிய கட்டாயத்தைப் பபாசி ஏற்படுத்துகிறதா என்ற கேள்வி எழுந்தது.
முன்னர், நுழைவாயிலில் டிக்கெட் கவுன்ட்டர்கள் நிறைய இருக்கும். எதில் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். இந்த முறை அதே போல் இருந்தாலும், ஏதோ ஒன்றில் மட்டும் நுழைவுச் சீட்டுகள் கொடுத்தார்கள். ஏன் மக்களை இப்படி அலைய விடுகிறார்கள்? எல்லாக் கவுன்ட்டரிலும் கொடுத்தால் தான் என்ன? நுழைவுச் சீட்டுப் பரிசோதகர்களாக நிற்பவர்களே நுழைவுச் சீட்டு விற்றால் என்ன? இந்தச் செயலுக்கு எதற்கு இரண்டு பேர்?
நுழைவுச்சீட்டு வாங்கி அரங்கினுள் நுழைந்த பிறகு, ஒரு பாதையில் கடைசி வரை சென்று, அடுத்த பாதையில் திரும்பி, இந்தக் கடைசி வரை வந்தால், மூன்றாவது பாதைக்குத் திரும்ப வழியில்லை. மீண்டும் வெளியே வந்து, மீண்டும் நுழைவுச் சீட்டினைக் காட்டி, மூன்றாவது பாதைக்குத் திரும்ப வேண்டும். இப்படி ஒவ்வோர் இரண்டு வரிசைக்கும் ஒரு முறை வெளியே வந்து, மீண்டும் நுழைவுச் சீட்டினைக் காட்டிய பிறகே உள்ளே நுழைந்தேன். இது வாசகர்களின் நேரத்தை வீணடிக்கவில்லையா? ஏன் உள்ளேயே வளைந்து வளைந்து செல்லும் வகையில் அமைக்கவில்லை?
ஒவ்வொரு வரிசைக்கும் ஒருவர் பெயரைச் சூட்டி, இந்தப் பாதை, அந்தப் பாதை என வைத்திருக்கிறார்கள். ஒருவருக்கு அடையாளம் சொல்லும்போது நான் இந்தப் பாதையில் இருக்கிறேன் என்று சொன்னால், அவர்களுக்குப் புரிவதில்லை. மேலும், ஒரு குறிப்பிட்ட பாதையின் நடுவில் நாம் இருக்கும்போது இது என்ன பாதை என்ற குழப்பம் எழுகிறது. பாதையின் பெயர்கள், தொடங்கும் இடத்தில் மட்டுமே உள்ளன. பெயர்கள் மட்டும் இல்லாமல், ஒவ்வொரு பாதைக்கும் ஒன்று, இரண்டு, மூன்று என இன்னும் ஓர் அடையாளம் கொடுக்கலாம். அந்த எண்ணை அந்த வரிசையின் இரண்டு பக்கத்திலும் மிகப் பெரிய அளவில் எழுதி வைக்கலாம். தொலைவில் இருந்து பார்த்தாலும் தாம் எந்த எண் கொண்ட பாதையில் இருக்கிறோம் என ஒருவர் அறிய முடியும். அடுத்தவருக்குச் சொல்லவும் முடியும்.
அரங்கின் உள்ளே பல இடங்களில் செல்பேசி சமிக்ஞைகள் சரிவரக் கிடைப்பதில்லை. இதனால் தகவல் தொடர்பில் இடைவெளி ஏற்படுகிறது. மின்னணுப் பணப் பரிவர்த்தனையும் பாதிக்கப்படுகிறது. சிக்னல் பூஸ்டர் போல் ஏதும் இதற்குச் செய்ய முடியாதா?
மிதமான கூட்டம் இருக்கும்போதே அரங்கில் வியர்வை கசகசக்கிறது. எப்போது வெளியே போவோம் என எண்ண வைக்கிறது. உள்ளிருக்கும் காற்றை வெளியே அனுப்பி, வெளியிலிருந்து புதுக் காற்றை உள்ளே அனுப்பும் வசதி செய்யப்பட்டுள்ளதா?
அரங்கிலிருந்து வெளியே வந்தால், கார் நிறுத்துமிடம் எங்கே எனக் கறுப்பு உடையணிந்த காவலரிடம் கேட்டேன். தவறாக வழிகாட்டினார். நீண்ட தூரம் நடந்து, பிறகு திரும்பி வந்து, உரிய இடம் சென்றேன். மீணடும் அவரிடம் திரும்பி வந்து, அவரால் நேர்ந்த இடரை விளக்கினேன். அவர் தான் தவறான தகவல் கொடுத்ததையே ஒப்புக்கொள்ளவில்லை. காவலர்களுக்கு உரிய பயிற்சி அளித்துப் பணியில் அமர்த்த வேண்டும்.
இந்தப் புத்தகக் காட்சியில் என்னை மிகவும் கவர்ந்தது, வாசகர்கள் ஓய்வெடுக்க நான்கு அரங்குகளை ஒதுக்கியதே. இது மிகவும் பயனுள்ளது. அதே போல், ஷீ டாய்லெட் எனப் பெரிய பேருந்துகளையே பெண்களுக்கான நடமாடும் கழிவறையாக வடிவமைத்து நிறுத்தியிருக்கிறார்கள். இதுவும் மிகவும் பயனுள்ள செயல். அரங்கின் நடைபாதையிலேயே தேநீரும் சுண்டலும் உருண்டு வருகின்றன. களைப்பின்போது இவை சற்றே ஆறுதல் அளிக்கின்றன.
48 ஆண்டுகளாகப் புத்தகக் காட்சி நடக்கிறது. ஓராண்டில் நாம் பெறும் பாடங்களைக் கொண்டு அடுத்த ஆண்டில் மேம்படுத்த வேண்டும். ஆனால், இன்னும் அடிப்படை வசதிகளுக்கே போராட வேண்டியிருக்கிறது. நாம் இன்னும் நெடுந்தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது.
-

டிரான்ஸ் – திரை விமர்சனம்
அண்ணாகண்ணன்
மிகத் துணிச்சலான படம், டிரான்ஸ் (மலையாளம்). கிறித்துவ மதப் பிரசாரகர்களின் அற்புத சுகமளிக்கும் கூட்டங்களின் பின்னணியை, உண்மை நிலையைத் தெள்ளத் தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள். அமேசான் பிரைமில் கிடைக்கிறது.
நாயகன் பஹத் பாசில், அபாரமாக நடித்திருக்கிறார். சுய முன்னேற்றப் பயிற்சியாளரான அவர், கிறித்துவ மத போதகராக எப்படி மாற்றப்படுகிறார், எப்படியெல்லாம் பயிற்சி அளிக்கப்படுகிறது, மக்கள் எப்படி நம்ப வைக்கப்படுகிறார்கள் எனத் தத்ரூபமாகச் சொல்கிறார்கள். உச்சஸ்தாயியில் அல்லேலுயா எனக் கத்துவது, முடவர்களை நடக்க வைப்பது, பார்வையிழந்தவர்களைப் பார்க்க வைப்பது, மக்களை எழுச்சி கொள்ள வைப்பது என ஒவ்வொன்றிலும் பஹத் பாசில் கலக்கியிருக்கிறார்.
இந்தக் கூட்டங்களை நடத்துவோர், கார்ப்பரேட் பாணியில் எப்படி நடத்துகிறார்கள் என்பதை, நன்கொடை திரட்டுவதை, புனித நீர் என்று புட்டியில் அடைத்து விற்பதைப் பிட்டுப் பிட்டு வைத்திருக்கிறார்கள். மதம் மிகப் பெரிய வணிகப் பொருளாக மாறியிருப்பதை, மத நம்பிக்கையாளர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதைத் துணிச்சலாக முன்வைத்திருக்கிறார்கள். அதிரடித் திருப்பங்களுடன் விறுவிறுப்பாகப் படம் செல்கிறது.
கதை எழுதிய வின்சென்ட் வடக்கன், தயாரித்து இயக்கிய அன்வர் ரஷீத் இருவரின் துணிச்சலை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வருத்தப்பட்டுப் பாரம் சுமப்பவர்கள், விழிப்புணர்வு பெற வேண்டும்.
-

பர்வீன் சுல்தானா, எழுத்தாளர் இல்லையா?
அண்ணாகண்ணன்
பர்வீன் சுல்தானா பேச்சாளர் தான்; அவர் எழுத்தாளரே இல்லை எனச் சிலர் எழுதியுள்ளதைப் பார்த்தேன். இவை அவர் எழுதியுள்ள ஆய்வு நூல்கள்:
1. இஸ்லாமிய இனக்குழு மக்களின் வாழ்வியல் சடங்குகள் முதற் பதிப்பு(செப்டம்பர் 2004)
2. படைப்போர் இலக்கியங்களில் போர் நெறிமுறைகளும் கதைமாந்தர்களும் இரண்டாம் பதிப்பு(2007)
3. அந்திரயவனி படைப்போர் ஆய்வும் மூலமும் இரண்டாம் பதிப்பு(2007)
4. காசீம் படைப்போரும் காசீம் படைவெட்டும் இரண்டாம் பதிப்பு(2007)
5. இசுலாமிய படைப்போர் இலக்கியம் சமூக-சமயப் பண்பாட்டுக் கூறுகள் இரண்டாம் பதிப்பு(2007)இளவழகன் பதிப்பகம், சுமன் வெளியீடு, தி பார்க்கர் ஆகியவை இவற்றை வெளியிட்டுள்ளன.
நன்றி: விருபா.காம்
அண்மையில் ஆ.இரா.வேங்கடாசலபதிக்குச் சாகித்திய அக்காதெமி விருது அளித்தபோதும் இத்தகைய எதிர்வினைகள் எழுந்தன. ஆய்வு நூலுக்கு விருதா? அபுனைவுக்கு அக்காதெமி விருதா? என்றெல்லாம் கேட்டிருந்தார்கள்.
எழுத்தாளருக்குத் தெளிவான வரையறைகள், எல்லைகள் கிடையாது. ஒரு புத்தகம் எழுதினாலும் ஒரு சிறுகதை எழுதினாலும் ஒரு கவிதை எழுதினாலும் அவர்களும் எழுத்தாளர்களே. உரையை எழுத்தாக்கினால் வாய்மொழிப் பாடகர்களும் கதைசொல்லிகளும் கூட எழுத்தாளர்கள் ஆகிவிடலாம். உள்ளடக்கம் தான் முக்கியமே தவிர, அவர் அதைக் கையால் எழுதினாரா, வாயால் சொன்னாரா என்பது கிடையாது. மகாபாரதமே சொல்லச் சொல்ல எழுதியது என்பர்.
பர்வீன் சுல்தானா எந்த வகையில் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதைத் தேர்வுக் குழுவினர் விளக்க வேண்டும் எனக் கேட்கலாம். அவர் எழுத்தாளரே கிடையாது என்பது அறிவுப்பூர்வமான வாதம் கிடையாது.
-

ஜாகிர் உசேன்!
பக்க வாத்தியத்தை முக்கிய வாத்தியமாய் முழங்கிய
பக்கா வாத்தியக்காரன்!தபலாவின் மையத்தில் மட்டுமா நீ வாசித்தாய்?
தபலாவையே மையத்தில் வைத்து வாசித்தாய்!இசை காதுகளுக்கானது என்பர்
உனது இசையோ
கண்களுக்கும் ஆனதுதபலாவில்
உன் விரல்கள் ஆடும் நடனம்
ஒரு பேரருவியின் முத்தம்!அதிலிருந்து பெருகும் இசை
ஒரு ஜீவ நதியாய் ஓடிக்கொண்டே இருக்கும்!– அண்ணாகண்ணன்
#zakir #zakirhussain
-

சச்சி – 84 | மறவன்புலவு க. சச்சிதானந்தன் நீடூழி வாழ்க!
அண்ணாகண்ணன்
உலகத் தமிழர், தமிழறிஞர், பதிப்பகச் செம்மல், திருமுறைச் செல்வர், அன்பிற் சிறந்த சான்றோர் மறவன்புலவு க. சச்சிதானந்தன், கார்த்திகை மாதம், மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர். நட்சத்திரப்படி அவருக்கு, 15.12.2024 அன்று 84ஆவது பிறந்த நாள்.
நுண்மாண் நுழைபுலம் மிக்க ஈழத் தமிழறிஞர்; ஐ.நா. உணவு – வேளாண் கழக முன்னாள் ஆலோசகர்; இலங்கையில் சிவசேனை அமைப்பை நிறுவியவர்; காந்தளகம் பதிப்பகத் தலைவர்; தனித்துவம் மிக்க தமிழ்நூல்.காம், தேவாரம்.ஆர்க் தளங்களின் நிறுவனர் – வழிகாட்டி – காப்பாளர்; தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்குத் தமிழக அரசு ரூ.100 கோடி ஒதுக்கிட முக்கிய காரணர்களுள் ஒருவர்… எனப் பற்பல பெருமைகளுக்கு உரியவர், நம் சச்சிதானந்தன்.
ஆஸ்திரேலியாவில் பொங்கல் திருநாள் அன்று சச்சியை உரையாற்ற அழைத்தார்கள். புலம்பெயர் இளையோர் நிறைந்த அந்த அவையில் இவர் ஆற்றிய உரையின் தலைப்பு: The Photosynthesis Day என்பதாகும். இத்தகைய அறிவியல் கண்ணோட்டம் கொண்டவர், இவர்.
ஒளி அச்சுக் கோப்பு, நிலவரை என்ற கலைச் சொற்களைப் புதிய பொருளுடன் அறிமுகப்படுத்தியவர்; 60 நாடுகளுக்கும் மேல் பயணித்தவர்; இலங்கை அரசியல் நிகழ்வுகளின் நோக்கர்; சேது சமுத்திரத் திட்டம் என்கிற தமிழன் கால்வாய்த் திட்டத்தைப் பல முனைகளுக்கும் எடுத்துச் சென்ற கடலியல் வல்லுநர்; தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்துத் தொடங்குவதற்கு அடிகோலியவர்.
தமிழில் காசோலைகளை எழுதி, அதை ஏற்காத வங்கிகளுடன் சட்டப்பூர்வ – தனி நபர்ப் போராட்டங்களை நடத்தியவர். தமிழால் அனைத்தும் முடியும் என்பதை நிலைநாட்டும் வண்ணம் செயலாற்றி வருகிறார். தமிழையும் சைவத்தையும் தம் இரு கண்களாகக் கொண்டவர்.
எதையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகுவதில் இவர், சிறந்த முன்மாதிரி. புதிய சிந்தனைகள், ஆக்கப்பூர்வ செயல்திட்டங்கள், பொருள் செறிந்த நுணுக்கமான மொழி நடை… ஆகியவற்றுடன் மகத்தான ஆளுமையாக நம் முன் நிற்கிறார். செய்யும் அனைத்தையும் செவ்வனே செய்யும் ஐயாவின் ஆற்றலைத் தமிழுலகம் இன்னும் சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும்,
தமிழுக்காக அளப்பரிய தொண்டாற்றும் சச்சி ஐயா, நீடூழி வாழ்க!
-

புஷ்பா – லக்கி பாஸ்கர் – மட்கா
அண்ணாகண்ணன்
புஷ்பா படத்தில் நாயகன், செம்மரங்களை வெட்டிக் கடத்திக் கோடிகளைக் குவிக்கிறான். மட்கா படத்தில் நாயகன், சூதாட்டத்தின் மூலம் பெரும் பணம் குவித்து, துபாய்க்குத் தப்பிச் செல்கிறான். லக்கி பாஸ்கரில் நாயகன், பங்குச் சந்தையில் பணம் குவித்து, அமெரிக்காவில் செட்டில் ஆகிறான்.
இவை மூன்றும் தெலுங்குப் படங்கள். ஒரே காலத்தில் வெளிவந்தவை. இவற்றில் குற்றவாளிகளே நாயகர்கள். குற்றங்களில் படிப்படியாக முன்னேறி, கோடிகளைக் குவிக்கிறார்கள். தந்திரமாகத் தப்பிச் செல்கிறார்கள். இவர்களுடன் ஒத்துழைத்தவர்களும் பணம் குவிக்கிறார்கள். எதிர்த்தவர்கள் அழிக்கப்படுகிறார்கள். குறுக்குவழியில் வேகமாக ஜெயிக்கலாம். தண்டனையிலிருந்து தப்பித்தும் விடலாம் என அழுத்தமாகக் காட்டப்பட்டுள்ளது.
இவை இந்திய மொழிகள் பலவற்றில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. கோடிக்கணக்கானவர்கள் பார்த்துள்ளார்கள். இவற்றைப் பார்ப்பவர்கள் மனத்தில் இவை என்ன சிந்தனையை விதைக்கும்?
#pushpa #pushpa2 #luckybaskhar #matka
-

காரன் / காரி வேர்ச்சொல்
அண்ணாகண்ணன்புல்வந்தி என்ற மராத்தித் திரைப்படத்தைப் பார்த்தேன். படத்தைப் பற்றிப் பிறகு எழுதுகிறேன். இதில் கலைஞர் என்பதைக் கலாகார் என அழைக்கிறார்கள். இதில் கலை என்பதை நாம் நன்கறிவோம். இதன் இரண்டாம் பகுதியான கார் என்பதை ஆராய்ந்தேன்.வடமொழியிலும் இந்தியிலும் கார் என்பது, ஒன்றைச் செய்பவரைக் குறிக்கிறது. கலை செய்பவர், கலாகார். இப்படியே சித்திரக்கார், சங்கீத்கார், சில்ப்கார், நாடக்கார், கிரந்த்கார், இதிஹாஸ்கார் எனப் பெருவழக்காக உள்ளது. இந்தக் கார் என்பது பாலி, பெர்சியன், உருது, மராத்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு எனப் பல மொழிகளிலும் பயன்பாட்டில் இருக்கிறது.தமிழில் உள்ள வேலைக்காரன், வேலைக்காரி, கரகாட்டக்காரன், ஆட்டக்காரி, வண்டிக்காரன், பாட்டுக்காரன், கொள்ளைக்காரன், சூனியக்காரி, ஆட்டோக்காரன், மேளக்காரன்… என ஒரு வேலையைச் செய்பவர்களைக் காரன் / காரி என அழைக்கிறோம். இதே போல் வீட்டுக்காரன், வீட்டுக்காரி, மூளைக்காரன், பொய்க்காரி, பூக்காரி, சொந்தக்காரன், சொந்தக்காரி என ஒன்றை உடையவர்களையும் இவ்வாறு அழைக்கிறோம். மேலும், இந்திக்காரன், சிந்திக்காரி, மதுரைக்காரன் என ஒரு மொழியை, இடத்தை, நாட்டைச் சேர்ந்தவர்களையும் இவ்வாறு அழைக்கிறோம்.இவற்றைத் தூய தமிழ் என யாரும் நினைத்துக்கொள்ள வேண்டாம். இந்தக் கார், காரா (சம்ஸ்காரா), காரம் (உபகாரம்), காரன், காரமு போன்றவை பல மொழிகளிலும் நிறைந்துள்ளன. ஒரு மொழி தெரியாமலே அதைப் புரிந்துகொள்ள முடிகிறது என்பது இந்த வேர்ச்சொற்களின் முதல் ஆதாயம். -

Annakannan Ideas 58 – Split & Connect Wiring
The Jhansi hospital fire incident due to a short circuit has claimed the lives of 10 infants. World over, one of the main reasons for fire accidents is short circuits. How to prevent such incidents in future?
I like to restructure the wiring style; instead of lengthy wiring, we can make multiple parts & unite them with junction points every 10 meter. The whole wiring unit should be monitored at a central dashboard in the building / premise / campus. The electricity flow, load, pressure, leakage, wire quality… etc should be monitored by the system. Nearby temperature, humidity, wind flow of the wire can also be monitored.
If we find any abnormal thing in the electric flow, any spark or more heat in any wire, the system should automatically stop electricity to the particular point & isolate it from other junctions. It will stop spreading the fire; save lives & assets. It should also alert the nearby electricity management team & building owner. If we isolate that point, remaining rooms / areas can get electricity. After solving the issue, we can allow electricity in the wire.
This Split & Connect method can be used in every electrical equipment like fridge, TV, AC, Washing machine, hospital machines, industrial machines. If any issue in any equipment, the electricity should be stopped automatically, along with surrounding 10 meters of junction points. This will stop further damage to the equipment also. We can also use this method in electric cars & two wheelers, in case of any fire.
What do you think?
-

நந்தன் திரை விமர்சனம்
அண்ணாகண்ணன்
நந்தன் திரைப்படத்தை அமேசான் பிரைமில் பார்த்தேன். வணங்கான்குடி என்ற ஊராட்சியின் தலைவர் பதவியை மேல்சாதித் தலைவர் ஒருவரே மீண்டும் மீண்டும் வகிக்கிறார். அந்தத் தொகுதியை ரிசர்வ் தொகுதியாக அறிவித்த பிறகு, தாழ்த்தப்பட்ட ஒருவரே அந்தப் பதவியை வகிக்க முடியும் என்ற நிலை உருவாகிறது. தன் தீவிர விசுவாசியை அந்தப் பதவியில் நிறுத்தி ஜெயிக்க வைக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதைத் திரைப்படம் துணிவாக முன்வைக்கிறது.
தாழ்த்தப்பட்ட மக்கள் படும் அவலங்களை, அவர்கள் சந்திக்கும் கொடுமைகளை, தனித் தனிச் சுடுகாடு இருப்பதை, அடிமைகளாக நடத்தப்படுவதை நெஞ்சை அறுக்கும் வகையில் காட்டியிருக்கிறார்கள். இன்னும் இப்படியெல்லாம் நடக்கிறதா எனக் கேட்பவர்களின் கையைப் பிடித்துக் கூட்டிச் சென்று காட்டத் தயார் என அவர் திரையில் காட்டியது, வலிமையான வாக்கியம்.
திரைப்படம் முடிந்த பிறகு, ஊராட்சித் தலைவர்கள் பலரும் திரையில் தோன்றி, தங்கள் அனுபவத்தைச் சொல்வது, அழுத்தமாக உள்ளது. இந்தப் படத்தின் எழுத்து, இயக்கம், தயாரிப்பு ஆகிய பொறுப்புகளை ஏற்று வெளிக்கொணர்ந்த இரா.சரவணன், பெரும் பாராட்டு உரியவர்.
காலத்துக்கும் நீங்க எங்க காலுக்குக் கீழ தான்டா என்ற ஆதிக்கவாதிகளின் குரல் ஒலிக்கும்போது, (தாழ்த்தப்பட்ட) நாயகர்களின் செருப்பின் அடிப்பாகம், திரை முழுவதும் வருமாறு காட்டியிருப்பது, இயக்குநரின் முத்திரை.
அதிகாரத்துக்கு வா. அதுதான் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வு என்று சொன்னார் அண்ணல் அம்பேத்கர். அதிகாரத்துக்கு வந்தாலும் இங்கே பல பேரால நிமிரக் கூட முடியலை.
இது, படத்தில் இடம்பெறும் ஒரு வசனம். இதுவே படத்தின் சாரமாகவும் இருக்கிறது.
ஆதிக்க சாதித் தலைவராக நடித்துள்ள பாலாஜி சக்திவேலும் அவரது விசுவாசியாக அம்பேத்குமார் என்ற பாத்திரத்தில் நடித்துள்ள சசிகுமாரும் வட்டார வளர்ச்சி அலுவலராக நடித்துள்ள சமுத்திரக்கனியும் தத்ரூபமாக நடித்துள்ளார்கள்.
சசிகுமாரை நிர்வாணப்படுத்தி, அடித்து உதைத்துவிட்டு வரும் பாலாஜி சக்திவேலை அவர் அம்மா ஒரு கேள்வி கேட்கிறார். அவன் பலத்துக்கு உன்னை அடிக்கிறதுக்கு என்னேரம் ஆகும்? என்ற அவரது கேள்வி, முக்கியமானது. உடல் வலிமையை முன்னிறுத்தி, வன்முறையைத் தூண்டும் வகையில் படத்தைக் கொண்டு செல்லாமல், ஜனநாயக ரீதியில் படத்தை நகர்த்திய இயக்குநருக்குப் பாராட்டுகள். மகாத்மா காந்தி, இந்த வழிமுறையையே பின்பற்றினார்.
அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதையே மிகப் பெரிய இலக்காகக் கட்டமைக்கிறார்கள். அதுவே எல்லாச் சிக்கல்களுக்கும் தீர்வு என்பது எத்தகைய மாயை என்பதையும் படத்தில் காட்டுகிறார்கள். அப்படியானால் எது தீர்வு என்பதை இன்னும் வெளிப்படையாக, தெளிவாக, அழுத்தமாகச் சொல்ல வேண்டும்.
ஊரை விட்டு விரட்டப்பட்ட பிறகு, மகனுடைய கேள்விக்கு, சசிகுமாரின் மனைவி பதில் சொல்கிறார். நமக்குன்னு ஒரு வீடு இருந்திருந்தா யார் நம்மைத் துரத்தியிருக்க முடியும்? ஒரு குழி இடத்தைச் சம்பாரிக்கலேன்னா இப்படி ஊர் ஊரா ஓடிக்கிட்டே தான் இருக்கணும்.
நிலத்துக்கு, வீட்டுக்குச் சொந்தக்காரர்களாக ஆனால், நம்மைத் துரத்த முடியாது என்பது ஒரு தெளிவான செய்தி. தாழ்த்தப்பட்டவர்கள், பொருளாதார வலிமை அடைந்து, நில உரிமை பெற வேண்டும். அத்துடன், கூட்டாக நின்று அரசியல் வலிமை பெற வேண்டும்.
ஆனால், எதிர்த்துக் கேள்வி கேட்பவனை லாரியை ஏற்றிக் கொல்லும்போது என்ன செய்வது? சமூக மதிப்பைப் பெறுவதற்கு என்ன செய்வது? உரிமை மறுக்கப்படும்போது என்ன செய்வது? அச்சுறுத்தப்படும்போது என்ன செய்வது? ஏமாற்றப்படும்போது என்ன செய்வது? ஒரே சமுதாய மக்களிடம் பிளவு ஏற்படுத்தி, அவர்களின் வாக்கு வலிமையைப் பிரிக்கும்போது என்ன செய்வது? யாரின் பின்னால் அணி திரள்வது? எந்தக் கூட்டணியில் நிற்பது? எந்தக் கோரிக்கைகளை முன்வைப்பது? யார் நமக்கு நன்மை செய்வார்? இந்தக் கேள்விகள் ஓயப் போவதில்லை. நம் தேடலும் தான்.
