Category: ஆய்வுக் கட்டுரைகள்

ஆய்வுக் கட்டுரைகள்

  • கவிதைப் புனைப்பில் கையாளும் காவிய நயங்கள்

    சி. ஜெயபாரதன், கனடா

    aj

    காவியப் படைப்புகளில் கவிதை ‘கலைத்துவ இளவரசி ‘ என்று புகழப்படுகிறது. எழுத்தாளர், ஓவியர், இசைஞர், நர்த்தகி, நடிகர், சிற்பிகள், சிந்தனா மேதைகள் யாவரும் கவிதைகளில் தமது மனதைப் பறி கொடுத்தவரே! கவிதைப் போதையில் மூழ்காத கலைஞரைக் காண்பது மிக அபூர்வம்! கவிதைகள், அவற்றின் கிளைப் படைப்பான பாடல்கள் ஆகிய இரண்டும் இசைக் கலைக்கு வடிவம் தருபவை. கலைகளில் சிறந்த நாட்டியக் கலைக்குப் புத்துயிர் அளிப்பவை, இசையும் பாடல்களும். கீதங்களைக் கேட்டு கற்கள் கூட உருகிவிடும் என்று பல உலக இலக்கியங்கள் மொழிகின்றன!

    கவிச்சக்ரவர்த்தி கம்பன் இராமாயணம் முழுவதையும் கவிதை மாலையில் கோர்த்துத் தமிழ் உலகுக்கு அளித்தான். அதுபோல் வில்லிப்புத்தூரார் மகாபாரதத்தை தமிழ் கவிதைகளில் வடித்தார். சிலப்பதிகாரத்தைக் காவியக் கவிதையில் எழுதி, சேர, சோழ, பாண்டிய நாடுகளில் நிகழ்ந்த கண்ணகியின் வரலாற்றைக் கூறினார், இளங்கோவடிகள். ஆங்கில நாடக மேதை ஷேக்ஸ்பியர் பல அரிய நாடகங்களைக் கவிதையில் புனைந்தார். மகாகவி காளிதாஸ் சகுந்தலையின் கதையைக் கவிதைக் காவியமாகப் படைத்தார். தமிழ் வேதஞானி திருவள்ளுவர் திருக்குறள் அறநூலைத் தமிழ் மக்களுக்கு ஈரடிக் கவிதைகளில் அளித்தார். அவரைப் போல் ஆத்திச்சூடி ஒளவையாரும், திருப்பாவை ஆண்டாளும் தமது காவியங்களைக் கவிதா வழியில் வடித்தார்கள். சுதந்திரச் சிற்பி சுப்ரமணிய பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் ஆகியோர் தமிழகம் பெற்றெடுத்த கவி மேதைகளில் சிறந்த காவியப் படைப்பாளிகள்.

    மரபுக் கவிதைகள் யாப்பிலக்கண அமைப்பாடில் உருவெடுப்பவை. விடுதலை வரிகளாக யாப்பிலக்கணத்தைப் புறக்கணித்து, புதுக்கவிதைகள் ஆக்கப்படுகின்றன. புதுக்கவிதை ஒரு டென்னிஸ் கன்னி! வலையில்லாமல், வரம்பில்லாமல் டென்னிஸ் பந்து விளையாடுவது போல் புதுக்கவிதை பின்னப் படுகிறது! கவித்துவம் மிளிரும் படைப்புகள், யாப்பிலக்கண நெறிகளில் படைத்தால் என்ன ? விடுதலை வசனத்தில் படைத்தால் என்ன ? அவற்றில் கவித்துவ மணம் வீசுகிறதா என்று நுகர்வதே ஞானமாகும்.

    கவிதைகளின் தனித்துவப்பண்பு சுருங்கச் சொல்லி சுவையை அளிப்பது. அவசியமற்ற சொற்களையோ பகுதிகளையோ நீக்குவது, தொளதொள வென்று அணியும் சட்டையை அளவாகக் கத்தரித்து, உடம்புக்கு ஏற்க கச்சிதமாய்த் தைப்பதை ஒத்தது! யாப்பிலக்கணப்பூர்த்திக்கு இடைச்செருகாக எப்போதாவது தேவையற்ற சில சொற்கள் பயன்படுத்த நேரலாம். அதே சமயத்தில் போதிய சொற்கள் பயன்படாமல் போனாலும், [துணி பற்றாமல் இறுக்கித் தைத்த சட்டையை அணிவது போல்], கவிதையைப் படிப்போருக்கு அருவருப்பு உண்டாக்கலாம்! சில புதுக்கவிதைகள் கற்பனை மிகுந்து, சிக்கலாகப் புதிராகப் படைக்கப்பட்டு, என்ன கருத்தைக் கூறுகின்றன என்பதே படிப்போருக்குப் புரியாமல் போகிறது!

    கவிதைப் புனைப்பு நான்கு தொகுப்பு நயங்களால் நளினம் பெறுகிறது. முதலாவது கவிதையின் அடிப்படை அதன் ‘கருத்தழகு ‘ [Theme]. கருத்தழகு இல்லாவிடின் கவிதை உயிரற்ற வெறும் உடலாகி விடுகிறது. ஒரு கவிதையின் ஆத்மாவே அதற்கு உள்ளொளியாய் இருந்து வெளியே சுடர்வீசும் அதன் ஆழ்ந்த கருத்துதான்! அக்கருத்துக்கு உருவம் தந்து கவிதையைக் கட்டுபவை, செங்கல் போன்ற அதன் சொற்கள். எதுகை, மோனை, மற்றும் சீர், தளை ஆகியவற்றைக் கொண்டு யாப்பிலக்கணத்தைப் பயன்படுத்திப் பாக்கள் அமைப்பதைச் ‘சொல்லழகு’ என்று குறிப்பிடுகிறேன். அவை வடிவம் பெற்ற பின், கவிஞனின் சிந்தனையில் உதயமான கருத்து எழுத்துருவில் பதிவாகிறது! அடுத்து வாசகர் நெஞ்சில் நடனமிட கவிதையின் உடலுக்கு வனப்பூட்டுவது, அதன் ‘நடையழகு ‘ [Style]. நான்காவது கவிதையின் இயற்கை மேனிக்கு ஒளி ஊட்டக் கவிஞர் கையாளும் ‘அணியழகு ‘ [Figure of Speech: Similie, Metaphor, Personification etc]. இவை நான்கையும் ஏற்ற அளவில் குழைத்துத் தூரிகையில் வரையக் கவிஞனின் கற்பனா சக்தியே, கவித்துவ ஆக்க சக்தியாகப் பயன்படுகிறது.

    ஒரு கவிதையில் கருத்தாட்சி, சொல்லாட்சி, நடையாட்சி, அணியாட்சி ஆகிய நான்கும் பொருத்தமான அளவில் கலந்து பின்னப்பட்டிருந்தால்தான், ஒருவர் அதைப் படித்துச் சுவைக்க முடிகிறது. எந்தக் கோணத்தில் கருத்தழகைக் காட்டுவது, மற்ற மூன்று நயங்களையும் எந்த அளவில் கலப்பது, எப்படிக் கையாளுவது என்பதில்தான், கவிஞனின் ‘கலைத்துவத் திறமையே ‘ [Artistic Talent] அடங்கி உள்ளது. பாரதியார், கவிதைக்கு இந்த நான்கு நயங்களுடன் திறமையாக ‘இசையழகும் ‘ கொடுத்து, சில கவிதைகளை காதுக்கினிய பாடல்களாக ஆக்கிவிட்டார். பாரதியாரின் சில பாட்டுகள் கண்ணுக்கினிய நாட்டியமாகப் பலமுறை அரங்கேற்றப்பட்டுள்ளன ! ஓடி விளையாடு பாப்பா, தீராத விளையாட்டுப் பிள்ளை, வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே போன்றவை இசைப்பாடல் வகையைச் சேர்ந்தவை.

    ஒரு கவிதை தனது கருத்தைத் தானாக எதிரொலிக்க வேண்டும். வாசகர் சிந்தனையைத் தூண்டிவிடும் ஒரு கவிதை தரத்தில் உயர்ந்தது. வாசகர் உணரப் போகும் உணர்ச்சியை, கவிதையே சொல்லி விடக்கூடாது! திரைப்படம் போன்று ஓர் அனுபவத்தைக் காட்ட வேண்டியது, கவிதையின் கடமை. வாசகரின் இதயத்தை வரிகள் பளிச்செனப் பற்றவேண்டும்! படிப்போரின் மனதில் கவிதை ஓர் உணர்ச்சியோ, எழுச்சியோ, புரட்சியோ, எதிரொலியோ, பூரிப்போ, சோகமோ ஏதாவது ஒன்றை எழுப்பினால், அது ஆக்கப்பட்டதின் பலன் நிறைவேறுகிறது.

    கவிதை சில சமயம் வெறும் ‘சொல்லாட்சியே’ மிகுந்து வாக்கியமாகக் காணப்படுகிறது. ஒருவரின் முதல் ஆக்கத்தில் உரைநடைபோல் அமையும் வாக்கியத்தை மடக்கிச், சொற்களை முன்னுக்குப்பின் இடம் மாற்றி அமைத்து, அவற்றை ஒருவிதக் கவிநடையாக்கலாம். அடுத்துத் தொகுக்கும் போது நளின நடையழகும், போதிய அணியழகும் கவிதைகளில் சேர்க்க முயல வேண்டும். கவிஞர் ஒருவரின் தனித்துவ நடையழகை அவர் ஒருவர்தான் படைக்க முடியும். ஒரு நாடகத்தைக் கவிஞன் ஒரு கவிதையில் காட்ட முடியும்! ஒரு கதையைக் கவிஞன் ஒரு கவிதையில் காட்ட முடியும்!

    பாரதியாரின் கவிதை: ‘வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே ‘. ‘உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும், அச்ச மில்லை! அச்ச மில்லை! அச்ச மென்ப தில்லையே ‘ நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை எழுதிய, ‘கத்தியின்றி, ரத்தமின்றி யுத்த மொன்று வருகுது ‘ இப்பாடல்களில் உள்ள வல்லினச் சொற்களின் ஓசையே நிகழ்ச்சியைப் பறைசாற்றுகின்றன. இதை ஆங்கிலத்தில் ‘The Sound echoing the Sense ‘ என்று கூறுவார்கள்.

    பாரதியார் எழுதிய ‘சோலை மலரொளியோ, உனது சுந்தரப் புன்னகைதான்! நீலக்கடல் அலையோ, உனது நெஞ்சின் அலைகளடா ‘ என்ற வரிகளில் ஓர் நளின ஒப்பணியைக் [Metaphor] காணலாம்! அதுபோல் ‘வீணையடி நீயெனக்கு, மேவும் விரல் நானுனக்கு! பூணும் வடம் நீயெனக்கு, புது வயிரம் நானுனக்கு! பாயுமொளி நீயெனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு! தோயுமது நீயெனக்கு, தும்பியடி நானுனக்கு! வானமழை நீயெனக்கு, வண்ண மயில் நானுனக்கு! பானமடி நீயெனக்கு, பாண்டமடி நானுனக்கு! ‘ போன்ற வரிகளிலும் பாரதியார் கையாண்ட ஒப்பணி நயங்களைச் சுவைக்கலாம்.

    திண்ணை.காம் இல் 1999-2000 ஆண்டுகளில் ‘ரேகா ராகவன் ‘ என்பவர் பல இனிய கவிதைகள் எழுதியுள்ளார். அவை யாவும் தரத்தில் உயர்ந்தவை. அவர் கையாளும் சொல்லாட்சி, கருத்தாட்சி, நடையாட்சி, அணியாட்சி யாவும் சுவைத்து இன்புறத் தக்கவை! அவரது ‘மரம் ‘ என்னும் புதுக் கவிதையில், ‘வெள்ளைச் சுவற்றில் கறுப்புக் கோலங்கலாய், அந்த இலையுதிர்ந்த மரத்தின் நிழல் அமாவாசை நாளின் விதவை வானம் போலப் பொலிவிழந்து நிற்கிறது! அந்த விருட்சம் இலையுதிர்ந்தாலும், பொலிவிழந்தாலும், வேரூன்றி, நாளை வரப்போகும் சூரிய உதயத்துக்காக உயிர் பிடித்து நிற்கிறது!’ மேலும் அவர் எழுதிய ‘மழை ‘, ‘கடவுள் ‘, ‘இருத்தல் ‘, ‘நீ ‘ யாவும் படித்து மகிழத்தக்கவை.

    ****************

    Share
  • திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! (4)

    இசைக்கவி ரமணன்

    kural-2

    திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! – பகுதி 3

    கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின் (2)

    தூய அறிவினை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவர்க்குக் கற்ற கல்வியினால் உண்டான பயன் என்ன?

    ஆய = ஆகிய, ஆன, இறந்த காலம், பெயரெச்சம்

    வாலறிவன் = எங்குமுளான் யாவும்வலான் யாவுமறிவான் என்று தங்குபல மதத்தோர் சாற்றுவதும் இங்கிதையே என்பான் பாரதி. இங்கே வாலியோன் அறிவன் (Omnisicient)

    ஆசிரியர் சொல்வார். `கொள்கை வேறு, கோட்பாடு வேறு. நாம் கொள்வது கொள்கை. நம்மைக் கொள்வது கோட்பாடு.` பாரத நாட்டில், இறை அல்லது இறைநம்பிக்கை என்பது கொள்கை அல்ல, கோட்பாடு. அவனே தலைவன் என்பது அடிப்படை அறிவு, நம்பிக்கை, மற்றும் பிரகடனம்.

    இப்படி இருக்க, கற்று முடித்தேன் என்று நினைத்துக்கொள்ளலாமா, எல்லாவற்றுக்கும் காரணமான, வேரான, முதலான, மூலமான அவன்தாள் பணியாமல்? `பிலக்கணம் பாடும் நேரத்தில் இலக்கணம் துணைவருமா?` என்று கேட்கிறாரே சங்கரர்?

    தாள் தொழுதல் என்பதைச் சிலர் வள்ளுவர் உருவ வழிபாட்டைச் சுட்டுவதாகவும், சிலர் அது ஒரு குறியீடு என்றும் கொள்வர். `தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே` என்ற அப்பர் வாக்கும் இங்கு நினைந்தோரத் தக்கது.

    கற்றதனால் என்ன பயன் என்று கேட்கிறவர்தான் இன்னோரிடத்தில் கற்க என்கிறார். எனில், கல்வி என்பது எதற்காக? நம் கசடுகள் நீங்குவதற்காக. இதைத்தான் சித்த சுத்தி என்பார்கள் பெரியோர். சித்த சுத்தி எதற்காக? இறைவனை அடைவது, உண்மையை உணர்வது, தன்னை அறிவது என்பதெல்லாம் சித்த சுத்தி இல்லாமல் சாத்தியமே இல்லை. எல்லாவற்றுக்கும் மூலம் `ஆதிபகவன்` என்ற உணர்வுதான் மனிதனுக்கு மிகப்பெரும் தன்மையாகிய பணிவு என்பதைத் தரும். பணிவற்ற மனிதன், இரக்கம் நீங்கி, அரக்கனாக மாறும் அபாயம் இருக்கிறது. பணிவு என்பது என்ன? `யாரையும் சமமாகக் கருதுதல்; ஐயம் வந்தால், எவரையும் நம்மைவிட உயர்வாகக் கருதுதல்,` என்பார் என் குருநாதர்! இதனால்தான், ஞானத்திற்குப் பிறகு யோகம் பயில்வதே பாதுகாப்பானது என்பார்கள். ஞானம்தான் குருநாதர் சொன்ன பணிவு என்னும் மனப்பான்மையை நல்கும். பணிவின்மை, உயர்த்துவதுபோல் உயர்த்தி, மனிதனை வீழ்த்திவிடும். பணிவற்ற வித்தை படிகாட்டி, மாலை அணிவித்துக் கீழுருட்டுமாம்.’ பணிவுள்ள மனிதன், மனிதருள் தெய்வமாக மதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. அடக்கம் என்பது, மனிதப் பண்புகளின் ஆதாரம். பணிவு என்பது, மனிதப் பண்புகளின் சிகரம். ஏன்? அதுதான் வாழ்வின் இலக்கான இறைவனிடம் நம்மைச் சேர்ப்பிக்கும். யார் உயிர்களின் தலைவனான ஆதி பகவனோ, அவனைப் பணியாமல் கல்வி ஒருவனைப் பண்புள்ளவனாக ஆக்காது.

    எங்கள் ஆசிரியர் ஒரு கதை சொல்வார். ஒரு பெரிய செல்வந்தர் இருக்கிறார். கொடைவள்ளலாகவும் இருக்கிறார். அவரிடம் ஏராளமான பசுமாடுகள் இருக்கின்றன. ஒருவர் அவரிடம் சென்று, `ஐயா! எனக்கு தினமும் பால் தேவைப்படுகிறது. ஒரு பசுவைத் தருகிறீர்களா?` என்று இறைஞ்சுகிறார். வள்ளல், `ஒன்றென்ன, இரண்டு பசுக்களை எடுத்துக்கொள்ளுங்களேன்,` என்கிறார். கேட்டவருக்கு மகிழ்ச்சி. ஆனால் அந்த மகிழ்ச்சி அத்தோடு முடிகிறது அது என்பதை அப்போது அவர் உணரவில்லை. என்ன? பசுவைக் கட்டிக் காப்பாற்றுவதென்பது எளிதான காரியமா என்ன? இருபத்து நான்கு மணிநேர வேலையாகிவிடுகிறது. நிம்மதியாய் உறங்கவும் முடியாது போகிறது.

    இன்னொருவர், அதே வள்ளலிடம் சென்று, `ஐயா! எனக்கு தினமும் பால் தேவைப்படுகிறது,` என்கிறார். வள்ளல், `இரண்டு பசுக்களை எடுத்துக்கொள்ளுங்களேன்,` என்கிறார். கேட்டவர், `வேண்டாம் ஐயா, தினமும் எனக்கு இரண்டு லிட்டர் பாலை நீங்கள் வீட்டுக்கு அனுப்பிவைத்தால் மகிழ்வேன்,` என்றார். வள்ளலும் புன்னகையுடன் சம்மக்கிறார்!

    திருஞானசம்பந்தர் தந்தையைக் காணாமல் குளக்கரையில் அழுதார். தந்தையும் தாயுமான அம்மையப்பனைக் கண்டார். அம்மையிடமிருந்து பாலருந்தினார். ஞானமாகிய பாலை அருந்தி ஞானமயமான பாடல்களைப் பாடினார். என்ன குறிப்பு? இறைவனைப் பணிந்து பெறக்கூடிய கல்வி, கலைகள், திறமைகள் எல்லாமும் ஞானமயமாக இருக்கும். மற்றவர்க்கு நலம்சேர்க்கும் விதமாக அமையும். `தந்தது உன்றனை; கொண்டது என்றனை,` என்னும் மாணிக்க வாசகரின் பாடல் இங்கே நினைவுகூரத்தக்கது. நாம் பணியாமல், நம்மைக் கொடுக்காமல் அவனைப் பெறமுடியாது. நம்மைத் தந்தால் தன்னைத் தருவதே அவனியல்பு.

    பணிவு என்ற சொல்லின் முழுவடிவம் அனுமன். ராமபிரானை அனுமன் சந்திக்கும்போது அனுமன் என்னவாக இருந்தான்? யோகி, ஞானி, மாவீரன், நவ வியாக்கிரண வேத்தா அட இழுப்பானேன், ருத்திரனல்லவா அனுமன்? எனில், ராமனை அனுமன் சந்திக்கிறபோது, ராமனிடமிருந்து எதையும் பெறவேண்டிய தேவை அனுமனுக்கு இல்லை. இருப்பினும் அவனே தன் தலைவன், தான் என்றும் அவனுடைய தொண்டன் என்றல்லவா கருதுகிறான்! இதைத்தான் என் குருநாதர், ‘Goalless faith,’ என்பார். இலக்கற்ற, எதிர்பார்ப்பில்லாத நம்பிக்கை.

    பணிவாலன்றிப் பரமனை அடைய முடியாது. இறைவனைப் பணியாமல் பணிவும் வராது! இறைவனைப் பணிந்தவன் எல்லா உயிரிடத்தும் இறைவனைக் காணும் நிலையை எய்துகிறான். எல்லார்க்கும் இனியனாகிறான்.

    மனித வடிவம் மட்டுமே ஒருவனை மனிதனாக்கிவிடாது. மனிதனுக்கென்று சில பண்புகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பேணி வளர்ப்பதன் மூலமே ஒருவன் மனிதனாகிறான். அந்தப் பண்புகளை அடைய ஒருவனுக்குக் கல்வி, செல்வம், அழகு, திறமை போன்றவை இருக்கவேண்டும் என்பதில்லை. இவையேதும் இல்லாமலே ஒருவன் பண்பாளனாகத் திகழ முடியும். சொல்லப்போனால், இவற்றையெல்லாம் மீறித்தான் ஒருவன் பண்பாளனாக இருக்க வேண்டியுள்ளது! அந்தப் பண்புகளில் தலையாயது பணிவு.

    எவன் இறைவனைப் பணிகிறானோ அவனுக்குப் பணிவு இயல்பாக வருகிறது. அந்தப் பணிவே அவனை முழு மனிதனாக்குகிறது. அவனுடைய கல்வி, செல்வம், திறமை, அழகு, பதவி அனைத்திற்கும் கெளரவம் தருகிறது. `எல்லோரையும் நம்மைப்போலே கருதுதல், அல்லது நமக்கு உயர்வாய் நினைத்தல்,` என்னும் பணிவு, இறைவனைத் தொழுதல் மூலமே வருகிறது.

    நலமே விளைவிக்கும் தாள் என்பதால் நற்றாள். தலையும் அடியும் சேர்வது சமயக் கோட்பாடு. தலை என்பது தலைமை. அடியிலிருந்துதான் அடிமை. ஆனால், இங்கே சுவாரசியம் என்னவென்றால், இறைவனுடைய நற்றாளாகிய அடிதான் தலைமை! அதை நம் தலை அடிமையாகிப் பணிவதில்தான் நமக்கு விடுதலை!

    இறைவனைத் தொழுதுதான் இறைவனை அடைய முடியும். பகவனைத் தொழுதே ஆதியில் கலக்க முடியும். அதுவே வாழ்வின் இலக்கு. அதற்காக வாய்த்ததுவே மனிதப் பிறவி.

    பரம்பொருளே பேரறிவு. அதற்கே உயிர்களையும் உலகையும் அறியவல்ல வாலறிவு உண்டு என்கிறது உபநிடதம்.

    ஆக, கற்றது கழலடி தொழவே! அதற்கே அப்பர் சொல்லும் இந்த `மனித்தப் பிறவி.`

    இறைவன்தான் தலைவன் என்று சொன்ன வள்ளுவர், அவன் எங்குமுளான், யாவும் வல்லான் என்று விளக்கவில்லை. ஆனால், அவன் யாவுமறிந்தவன், அதாவது வாலிய அறிவுடையவன் என்பதில் மட்டுமே நிற்கிறார். இறைவன் தூய அறிவுடையோன். இதைத்தான் சத்-சித்-ஆனந்தம் என்போம். சத் என்பது மாற்றம் வளர்ச்சி இவற்றுக்கு உட்படாத சத்தியம் அல்லது இருப்பு. சித் என்பது அந்த இருப்பின் விகசிப்பு, அல்லது, அறிவின் விரிவு. சித் என்பது aura அதாவது ஒளிவட்டம் அல்ல! அது கல்லுக்கும் மரத்திற்கும்கூட உண்டு. மரத்தின் ஒளிவட்டம் aura. முனிவனின் ஒளிவட்டம் சித் என்று புரிந்துகொள்ளலாம். ஆனந்தம் என்பது ecstasy மட்டுமல்ல. அது அமைதியின் வெளிப்பாடு. அமைதி, நிறைவால் வருவது.

    ஆன்மாவுக்கு, குணம் கிடையாது. ஆனால், அதற்கு ஒரு தன்மை உண்டென்று கருதினால் அது அமைதிதான். சீரான, தொடர்ந்த அமைதி. மனத்துக்கு அமைதி கிடையாது, தெரியாது. சஞ்சலம், அதாவது அசைவு என்பது மனதின் இயல்பு. ஆன்மாவின் அமைதி, சித்தம் என்னும் திரையில் பிரதிபலிக்கும்போது, மனம், அதனை ஆனந்தம் என்றே புரிந்துகொள்கிறது. இப்போது சித் நமக்கு நன்றாக விளங்குகிறதல்லவா. இதுதான் வாலிய அறிவு, அல்லது pure intelligence.

    தொடருவோம்

    Share
  • சுந்தரரால் ‘பொய்யடிமையில்லா புலவர்’ எனப்பாடப்பட்டவர் மாணிக்கவாசகரே (பகுதி-1)

    பேராசிரியர். முனைவர். கிருஷ்ணன் நல்லபெருமாள், ம.சு.பல்கலைக்கழகம்.

    சைவசமயிகளிடம் பரவலாக இருந்துவரும் ஐயம் ஒன்று உண்டு; அது, மாணிக்கவாசகப் பெருமான் அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவரா? இல்லையா? என்பதே. ‘திருத்தொண்டர்தொகை’ பதிகத்தில் சைவசமய நாயன்மார்களான ஞானியர் ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு  அவர்தம் அடியவர்க்கு தாம் அடியேன் என்று பாமாலை சாசனமிட்டுப் பரவிப் பாடியுள்ளார் எம்பெருமான் தம்பிரான்தோழர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். திருத்தொண்டர்தொகையை அடியொற்றி திருத்தொண்டர் திருவந்தாதியை அருளினார் சைவத் திருமுறைகளைத் தொகுத்து அருளிய நம்பியாண்டார் நம்பிகள். தெய்வச் சேக்கிழார் பெருமான், தம்பிரான்தோழர் அருளிய திருத்தொண்டர்தொகையினை முதல் நூலாகவும், நம்பியாண்டார் நம்பிகள் அருளிய திருத்தொண்டர் திருவந்தாதியை சார்பு நூலாகவும் கொண்டு பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணத்தை அருளினார்.  திருத்தொண்டர்தொகை பதிகத்தில் மாணிக்கவாசகப் பெருமானை சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறிப்பிட்டுள்ளாரா என்பதில் எழுந்த ஐயமே மாணிக்கவாசகப் பெருமான் அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவரா என்ற ஐயத்திற்குத் தொடக்கப் புள்ளியாக இருக்கிறது. “திருத்தொண்டர்தொகை பதிகத்தில் மாணிக்கவாசகப் பெருமான் பெயர் வெளிப்படையாக இடம்பெறவில்லை; ஆகவே, மணிவாசகரை சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டர்தொகையில் குறிக்கவில்லை” என்ற கருதுகோளை அடிப்படையாகக் கொண்டே பெரும்பான்மையான தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் மாணிக்கவாசகரின் காலம் சுந்தரமூர்த்தி நாயனாரின் காலத்திற்குப் பிற்பட்டதெனவும், அறுபத்து மூவரில் மாணிக்கவாசகர் ஒருவரல்லர் என்று கொள்கின்றனர். இந்தக் கருதுகோள் குறித்து சைவசமயநெறிக்கு உட்பட்ட ஆய்வு முறையில் வரலாற்றுப் பார்வையுடன் ஆராயலாம்.

     

    சைவ மெய்யியல் இலக்கிய வரலாறுகளின் சிக்கல்கள்

    மொழி இலக்கிய மற்றும் மெய்யியல் இலக்கிய வரலாறு எழுத முயல்வோர், தொல் இலக்கியச் சான்றுகள், கல்வெட்டுகள் மற்றும் வரலாற்றுச் சான்றுகள் என்ற முப்பரிமாணங்களையும் சீர்தூக்கிக் கணக்கில் கொண்டால் மட்டுமே சரியான முடிவுகளை அடைய இயலும். நம் கெட்டகாலமோ என்னவோ, தமிழ் இலக்கிய மற்றும் தமிழ் மெய்யியல் இலக்கிய வரலாறுகள் படைத்தவர்கள் முடிவெடுத்து எழுதியுள்ளமையைக் காணும் எவருக்கும், அம்முடிவுகள் இம்மூன்று பரிமாணங்களும் ஒன்றுக்கொன்று முரண்படும் வகையிலே முடிவெடுத்து எழுதியுள்ளமை புலப்படும். அத்தகைய முரண் ஆய்வுகள் தமிழ் இலக்கிய வரலாற்றின் நம்பகத் தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

     

    சைவ மெய்யியல் இலக்கிய வரலாறு ஆய்வுநெறிகள்

    மெய்யியல் ஞானியர்தம் இலக்கிய வரலாற்றையோ அல்லது  காலவரலாற்றையோ கணிப்பதைப் பொருத்தமட்டில், இலக்கியச் சான்றுகளில் முதலாவதாக அதிக முக்கியத்துவத்துடன் கணக்கில் கொள்ளப்படவேண்டியது அவர்தம் அகச்சான்றுகள், (அதாவது, ஒரு ஞானியே அவரைக் குறித்து அவர் படைத்த இலக்கியத்தில் கூறும் நிகழ்வுகளின் பதிவுகள்); இரண்டாவதாக, அவ்ஞானியர்தம் பிற்கால மற்றும் சமகால இலக்கியச் சான்றுகள் அடுத்தநிலை முக்கியத்துவமும் பெறுகின்றன. அடுத்ததாகவே, வரலாற்றுச் சான்றுகளும், கல்வெட்டுச் சான்றுகளும் கணக்கில் கொள்ளப்படவேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை, கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சி மட்டுமே இருந்த காலத்தில். வரலாற்றுப்பதிவு ஆவணங்களாக இலக்கியங்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படவேண்டும்; ஏனெனில். அக்காலத்தில், போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு மட்டுமே அவர்தம் ‘மெய்கீர்த்தி’ என்னும் ‘புகழ்’ குறித்து கல்வெட்டுகளில் பொறிக்கும் ‘நடுகல்’ அல்லது ‘பள்ளிப்படை’ எடுக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை அரசாண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் புலவர்களின் பாடல்களையே தத்தம் காலச்சுவடுகளாக, ஆட்சியின் மாண்புரைக்கும் அளவுகோலாகக் கொண்டிருந்தனர். காட்டாக, “மாங்குடி மருதன் தலைவனாகப் புலவர் பாடாது ஒழிக என் நிலவரை (புறநானூறு 72)” என்று நெடுஞ்செழியன் வஞ்சினம் கூறும் புறநானூற்றுப் பாடலில்,  பாண்டியன் அவையில் புலவர் ஒருவர் தலைமையில் பல புலவர்கள் கூடிக் கவிபாடினர் என்னும் செய்தியை அறியலாம்.

     

    தமிழகத்தைத் தமிழ் மன்னர்கள் மட்டுமே ஆண்ட காலம் அறத்தின் காலம்

    தமிழ் மன்னர்கள் மட்டுமே தமிழகத்தை ஆண்ட காலங்களில், யார் ஆண்டாலும், தமிழ்புலவர்களைப் புரத்தல் (தமிழைக் காத்தல்) என்பதில் ஒரே நிலைப்பாட்டை அவர்கள் கொண்டிருந்தமையால், புலவர்கள் நடுவுநிலையோடு காலச்சுவடுகளைக் கவிதைகளில் பதித்தனர். சங்ககாலத் தமிழ்ப் புலவர்கள் மூவேந்தர்களையும், குறுநில மன்னர்களையும்,வள்ளல்களையும் பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்தோரே ஆயினும், ஆட்சியாளர்களின் குறைகளை இடித்துரைத்தும், அறிவுரை கூறித்  திருத்தும் வல்லமையையும் கொண்டிருந்தனர். அக்கால அரசர்கள் புலவர்களை நண்பர்களாகவும், மதிகூறும் அமைச்சர்களாகவும் போற்றி வாழ்ந்ததால், பகையரசர் தம்மில் நட்பும் அறமும் செழிக்கப் புலவர்கள் உறுதுணையாக இருந்தமை புறநானூற்றுப் பாடல்களில் காணக் கிடக்கின்றன. காட்டாக,  கிள்ளிவளவனிடமிருந்து சேரனின் கருவூரைப் போரினின்று காத்த ஆலந்தூர் கிழார், அதியனுக்கும் தொண்டைமானுக்கும் நிகழவிருந்த போரைத் தவிர்த்த ஔவையார்,  உறையூர் சோழன் முடித்தலை கோப்பெருநற்கிள்ளிக்கும், கருவூர் சேரன் அந்துவஞ்சேரல் இரும்பொறைக்கும் நிகழவிருந்த போரைத்தவிர்த்த உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்,  கோப்பெருஞ்சோழன் தம் புதல்வர்களுடன் நிகழ்த்தவிருந்த போரைத் தடுத்த புல்லாற்றூர் எயிற்றியனார் எனப்பலர். இக்கால கட்டங்களில் வரலாற்றுக் காலச்சுவடுகளை இலக்கியங்களே பெரிதும் கொண்டிருந்தன.

    தமிழர்கள் அல்லாத ஆட்சியாளர்கள் (களப்பிரர் மற்றும் பல்லவர்) தோன்றிய பின், புலவர்களைப் புரக்காத நிலை தமிழ் மண்ணில் நிலவியது காரணமாக தமிழுக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும் பெரும் பின்னடைவு நேர்ந்தது; அவர்தம் காலங்களிலும், அவர்க்குப் பின்னரும் தோன்றிய ஆட்சியாளர்கள் காலத்தில்தான் கல்வெட்டுகள் பெருமளவு தோன்றின என்பதை அறிதல் நலம். எனவே,  கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னுள்ள சான்றாவணங்கள் வேண்டி கல்வெட்டுச் சான்று தேடியலைந்தோ, வரலாற்றுச் சான்று நோக்குவதோ தராத பலனை, அக்கால இலக்கியத் தரவுகளிலிருந்து எளிதில் பெற முடியும். இந்நுணுக்கங்களையெல்லாம் நோக்காமல், தமிழ்இலக்கிய வரலாறுகள் சில புகழ்பெற்ற அறிஞர்களால் படைக்கப்பட்டமையாலேயே, சைவசமய இலக்கிய வரலாறு, குறிப்பாக, ‘சமயாசிரியர் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகப் பெருமான் அறுபத்துமூவரில் ஒருவராக இடம் பெறுகின்றாரா’ என்பது குறித்த பெருங்குழப்பம் இன்றுவரை நிலவிவருகின்றது. அதை நேர்செய்யுமுகத்தானே இவ்வாய்வுக்கட்டுரை எழுதப்படுகின்றது.

     

    திருத்தொண்டர்தொகை பதிக அமைப்பு முறை

    திருத்தொண்டர்தொகை பதிகம் “தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என ஆரூர்த் தியாகேசப் பெருமானே அன்பு கூர்ந்து எடுத்துக் கொடுத்த அமுத வாக்கைத் தொடக்கமாக வைத்து, முதல் ஒன்பது திருப்பாட்டுக்களில் ஐம்பத்தியாறு தனியடியார்களையும், பத்தாவது திருப்பாட்டில் ஏழுதொகையடியார்களையும், பதினொன்றாவது கடைக்காப்புத் திருப்பாட்டில், ஐந்து தனியடியார்களைப் பாடிய பின்,  “அரனடியே அடைந்திட்ட சடையனார் – இசைஞானியம்மையார்பால்  பேரன்பு பூண்ட திருநாவலூர்க்கோன் அன்ன ஆரூரன் பாடிய அடியவர் அடிமை திருப்பாட்டைக் கேட்டுவுவப்பார் திருவாரூர் அம்மானுக்கு அன்பராவார்”, என்று இப் பதிகத்தைப் பாடுவோர் பெரும் பலனைப் பாடி நிறைவு செய்கின்றார் சுந்தரமூர்த்தி பெருமான். பதிகம் என்பது பத்துப் பாடல்கள் கொண்ட தொகுப்பு என்ற இலக்கணத்தின் அடியொற்றி, முதல் ஒன்பது திருப்பாட்டுக்களைத் தனியடியாருக்கும், பத்தாவது திருப்பாட்டைத் தொகையடியாருக்கும் பாமாலையிட்டு, பதிகபலன் கூறும் பதினொன்றாம் திருப்பாட்டைப் பாடி பதிகத்தை நிறைவு செய்கின்றார்.

     

    சடையனார், இசைஞானியாரை  நாயன்மாராக சுந்தரர் கொள்ளவில்லை

    மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்

    வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்

    தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்

    திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்

    என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்

    இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்

    அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்

    ஆரூரில் அம்மானுக் கன்ப ராவாரே.

     

    பதினோராவது திருப்பாட்டில் ஐந்து தனியடியார்களுக்கு மட்டுமே ‘அடியார்க்கும் அடியேன்’ என்று அடைகொடுத்துப் பாடிய பெருமான், சடையனார் – இசைஞானியம்மையார் ஆகியோரைப் பெருமானின் பெற்றோர் என்ற முறையிலேயே பாடியதல்லாது, அவர் தம்மைத் தனியடியாரெனக் கொள்வது சுந்தரமூர்த்தி பெருமானின் கருத்தன்று என்பது இங்கு வெளிப்படை. (சடையனார் – இசைஞானியம்மையார் ஆகியோருக்கு ‘அடியேன்’ என்ற அடைகொடுத்துப் பாடவில்லை என்பது மிக முக்கியமான செய்தி). பெருமான் முதல் ஒன்பது மற்றும் பதினொன்றாம் திருப்பாட்டு ஆக பத்துத் திருப்பாட்டுக்களில் அறுபத்தொன்று தனியடியார்களையும், பத்தாம் திருப்பாட்டில் கூறிய ஏழு தொகையடியார்களுடன், இறைவன் அடிஎடுத்துக் கொடுத்த தில்லைவாழ் அந்தணராம் தொகையடியார்களுடன் சேர்த்த எட்டுத் தொகையடியார்களுடன் கூட்ட, அறுபத்தொன்பது அடியார்களே சுந்தரமூர்த்தி சுவாமிகளால் திருத்தொண்டர்தொகையில் பேசப்பெறுகின்றனர். (பின்பு, நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியில்,  திருத்தொண்டர் தொகை பாடிய சுந்தரர், அவரை ஈன்ற சடையனார், இசைஞானியார் ஆக மூவரையும் சேர்த்து எழுபத்திரண்டு என்று அமைத்து வைத்தார்). எனவே, தனியடியார்களாக சுந்தரர் பாடியருளியது அறுபத்தொன்று நாயன்மார்களே என்று தெளிவோம்.

     

    ‘பொய்யடிமையில்லாப் புலவர்’ தனியடியாரே.

    மேற்கூறிய காரணங்களால், தனியடியாரைப் பாடும் ஏழாவது திருப்பாட்டில் வரும் ‘பொய்யடிமையில்லாத புலவர்க்கும் அடியேன்’ என்ற வரி தனியடியாரைக் குறிப்பதே ஆகும். அதைத் தொகையடியாராகக் கொண்டு விளக்கப் பாட்டு எழுதியவர் திருத்தொண்டர்தொகைக்கு சார்பு நூலாம் ‘திருத்தொண்டர் திருவந்தாதி’யை அருளிய  நம்பியாண்டார் நம்பிகள். அவ்விளக்கப் பாட்டும் அதற்கு யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர் எழுதிய பொழிப்புரையும் பின்வருமாறு:

     

    பொய்யறியாக் கபிலரொடு பரண ராதிப்

    புலவோர்பொற் பார்கலைகள் பொருந்த வோதிச்

    செய்யுளிடை வளராக மதுர நல்ல

    சித்திரம்வித் தாரமெனத் தெரிக்குஞ் செம்மை

    மெய்யுடைய தொடைகளெல்லா மன்று ளாடன்

    மேவியகோ னிருதாளில் விரவச் சாத்திக்

    கையுடையஞ் சலியினரா யருளான் மேலைக்

    கருதரிய வமருலகங் கைக்கொண் டாரே.

    –     ‘திருத்தொண்டர் திருவந்தாதி’:நம்பியாண்டார் நம்பிகள்.

     

    ‘பாண்டிநாட்டிலே சிறந்து விளங்குகின்ற துவாதசாந்தபுரமாகிய மதுராபுரியிலே, சோமசுந்தரக்கடவுளிடத்திலே, சதுரமாய் இரண்டு சாணளவினதாகி மெய்ப்புலவர்களுக்கெல்லாம் முழம் வளர்ந்து இருத்தற்கு இடங்கொடுக்கின்ற சங்கப்பலகையைப் பெற்று, அதனில் இருந்துகொண்டு தமிழ் மொழியை வளர்த்த கடைச்சங்கப்புலவர்கள் கபிலர், பரணர், நக்கீரர் முதலாக நாற்பத்தொன்பதின்மர்.  அவர்கள் விபூதி ருத்திராக்ஷதரர்களாய், ஸ்ரீ பஞ்சாக்ஷர ஜபபரர்களாகி, அகத்தியம் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல்களின்படி, ஆசு மதுரம் சித்திரம் வித்தாரம் என்னு நாற்கவிகளினாலும் மெய்யன்போடு பரமசிவனையே பாடி, பொய்யடிமையில்லாத புலவர்கள் எனப் பெயர்பெற்றுச் சிவபதம் அடைந்தார்கள்.’

    – யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர் விளக்கம்

     

    திருத்தொண்டர்தொகையினை முதல் நூலாகவும், திருத்தொண்டர் திருவந்தாதியை சார்பு நூலாகவும் கொண்டு பெரியபுராணம் என்னும் விரிநூலாகிய திருத்தொண்டர் புராணத்தை அருளிய சேக்கிழார் பெருமான், சார்புநூலாசிரியர் நம்பியாண்டார் நம்பிகள் கூறும்    ‘பொய்யறியாக் கபிலரொடு பரண ராதிப் புலவோர்’ என்ற கருத்தில் முற்றிலும் மாறுபட்டு, ‘‘பொய்யடிமையில்லாத புலவர்க்கும் அடியேன்’ என்ற வரிக்குப் பின்வருமாறு கருத்துரைக்கின்றார்:

     

    பொய்யடிமை யில்லாத புலவர் புராணம்

    1. செய்யுள் நிகழ் சொல் தெளிவும் செவ்விய நூல் பல நோக்கும் 

             மெய் உணர்வின் பயன் இதுவே எனத் துணிந்து விளங்கி ஒளிர்

             மை அணியும் கண்டத்தார் மலர் அடிக்கே ஆளானார்      

             பொய் அடிமை இல்லாத புலவர் எனப் புகழ் மிக்கார்        

     

    1. பொற்பு அமைந்த அரவாரும் புரிசடையார் தமை அல்லால்

             சொற்பதங்கள் வாய் திறவாத் தொண்டு நெறித் தலைநின்ற   

            பெற்றியினில் மெய் அடிமை உடையாராம் பெரும் புலவர் 

            மற்றவர் தம் பெருமையார் அறிந்து உரைக்க வல்லார்கள்

                                                                                             –     சேக்கிழார் பெருமான்

     

    முதற் செய்யுளின் பொருள்: பொய் அடிமை இல்லாத புலவர் எனப் புகழ் மிக்கார் யார் என்றால், தாம் அருளிய செய்யுளில் தோன்றும் ஒவ்வொரு சொல்லும் (நிகழ் சொல்) பொருள் தெளிவுடன் (சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து) உரைப்பவரும், செவ்விய நூற்கள் பலவும் உணர்த்த முயலும் பயன் சிவபெருமான் திருவடிப்பேறே என்று விளங்கி உணர்ந்து, அம் மைஅணியும் கண்டத்தார் மலரடிக்கே ஆளானவர் அவர் ஆவார்.

     

    இரண்டாம் செய்யுளின் பொருள்: ‘அப்பொய்யடிமை இல்லாத புலவர், பொற்பமைந்த புரிசடை வள்ளல் ‘சிவபெருமானின் புகழைப் பாடுவதை அல்லால் வேறெதெற்கும் சொற்பதங்கள் வாய்திறவாத தொண்டுநெறி’ வாழ்வோரில் முதன்மையானவராம் பேறுபெற்றதால், மெய் அடிமை உடைய பெரும் புலவர் ஆவார்; அன்னாரின் பெருமையை அறிந்து உரைக்க யாரால் இயலும்?’ என வியந்து போற்றுகின்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.

     

    சுந்தரமூர்த்தி நாயனாரின் ‘பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்’ என்ற திருவாக்குக்கு, ‘கபிலர், பரணர் போன்ற தொகையடியாராம் கடைச் சங்கப் புலவர்கள்’ என்று பொருள் உரைத்த நம்பியாண்டார் நம்பிகளின் பாடலை ஏற்றுக் கொள்ளாத சேக்கிழார் பெருமான், அவர்தம் நிலைப்பாட்டினைத் தெளிவுபட, ‘புரிசடையார் தமை அல்லால் சொற்பதங்கள் வாய் திறவாத் தொண்டு நெறித் தலைநின்ற பெற்றியினில் மெய் அடிமை உடையாராம் பெரும் புலவர்” என்று தம் சொற்பதங்களால் பரமனைப் பாடுவதற்கல்லால் வாய்திறவா தொண்டுநெறி வாழ்வோரில் முதன்மையானவர் அம் மெய்யடிமை உடைய பெரும்புலவர் என்று உறுதிபடக் கூறியதால், ‘பொய்யடிமை இல்லாத புலவர்’ தனியடியாரே என்று திண்ணமாகக் கூறிவிட்டார் சேக்கிழார் பெருமான்.

     

    இயற்பெயரைக் குறிக்காது,  ‘பொய்யடிமை இல்லாத புலவர்’ என்ற சிறப்புப் பெயரால் சுந்தரமூர்த்தி நாயனார், ‘திருத்தொண்டர் தொகை’யில்  சிறப்பித்துப் பாடியது ஒரு தனியடியாரையே என நிறுவிய சேக்கிழார் பெருமான், அப்பொய்யடிமையில்லாப் புலவரின் சிறப்புத் தகுதிகளை விரித்தும் விளக்கியுள்ளார். சுந்தரமூர்த்தி நாயனார் தம் ‘திருத்தொண்டர் தொகை’யில் ‘பொய்யடிமை இல்லாத புலவர்’ போல் வேறு தனியடியார்களை இயற்பெயர் குறிக்காது சிறப்புப் பெயரால் குறித்துள்ளாரா என்ற இயல்பான கேள்விக்கான விடைகளே சேக்கிழாரின் கூற்றுக்கு மேலும் வலுச்சேர்க்கும் செய்திகளாம். நாம் சுந்தரமூர்த்தி நாயனாரின் ‘திருத்தொண்டர் தொகை’யிலேயே இக்கேள்விக்கான விடையைத் தேடலாம்.

     

    ‘திருத்தொண்டர் தொகை’யை உற்றுநோக்கினால், இயற்பகை, மெய்ப்பொருள், அமர்நீதி, எறிபத்தர், கண்ணப்பர், திருநாளைப் போவார், திருக்குறிப்புத் தொண்டர், பேயார், சிறுத்தொண்டர், கழறிற்று அறிவார் என்று அந்நாயன்மார்களின் அரும்பெரும் செயல்கள், இயல்புகளால் ஏற்பட்ட சிறப்புப் பெயர்களால் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டர்தொகையில் குறித்துள்ளதைக் காணக் கிடைக்கின்றன. இங்ஙனம் தனியடியார்கள் பலரையும் இயற்பெயரால் குறிக்காமல் அவர்தம் சிறப்புப் பெயர்களால் சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறிப்பிடப்பட்டுள்ளார் என்பது முக்கியமான செய்தியாகும்.

     

    இயற்பகை, மெய்ப்பொருள், அமர்நீதி, எறிபத்தர், கண்ணப்பர், திருநாளைப் போவார், திருக்குறிப்புத் தொண்டர், பேயார், சிறுத்தொண்டர், கழறிற்று அறிவார் போன்ற தனியடியார்களைப் போலவே, ‘பொய்யடிமையில்லாத புலவர்’ என்ற சிறப்புப் பெயரால் அறியப்படுபவரும்  ஒரு ‘தனியடியாரே’ என்பது தெளிவு. மேலும், அத்தனியடியார் ‘புரிசடையார் தமையல்லால் சொற்பதங்கள் வாய்திறவா தொண்டுநெறி’ பூண்டோரில் ‘தலைநின்ற’ காரணம் பற்றியே, அவரல்லாத ஏனைய‘புரிசடையார் தமையல்லால் சொற்பதங்கள் வாய்திறவா தொண்டுநெறி’ பூண்டு வாழும் தொகையடியார்களைப் பெருமைப்படுத்தவே  ‘பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்’ என்று சுந்தர் மீண்டும் குறிப்பிட்டபாங்கை தெளிந்துரைக்க சேக்கிழாரையன்றி வேறு யாரால் இயலும்?

     

    அவ்வாறு தெளிந்துரைத்தாரே ஆயினும், நம்பியாண்டார் நம்பிகளின் கருத்தைப் பற்றி மறுப்பேதும் கூறாது அமைந்தமை, அவர்பால் சேக்கிழார் கொண்டிருந்த பெருமதிப்பின் காரணம் பற்றியே என்பதை நாம் அறியவேண்டும். நம்பியாண்டார் நம்பிகளின் கருத்தில் உடன்படாமையைப் பதிவு செய்யாமல், சேக்கிழார் பெருமான் சரியான விளக்கத்தைப் பாடிச்சென்றமை அவர்தம் பண்புக்கும் சான்றாக விளங்குகின்றது.

     

    மேலும், ‘கபிலர், பரணர் போன்ற தொகையடியாராம் கடைச் சங்கப் புலவர்கள்’ என்று பொருள் உரைத்த நம்பியாண்டார் நம்பிகளின் கருத்து ஏன் ஏற்புடையது அன்று எனச் சற்று ஆழ்ந்து சிந்திக்கலாம். நம்பியாண்டார் நம்பிகள் குறிப்பிடும் சங்கப் புலவர்களில் ஒருவரான நக்கீரர், இறைவன் சங்கம் போந்து நெற்றிக்கண் காட்டித் தன்னை வெளிப்படுத்திய போதும் இறைவனை எதிர்த்தார் என திருக்காளத்திப் புராணம் பின்வருமாறு கூறுகின்றது:

     

    ‘ஏற்றினான் நெற்றிக் கண்ணும் எரிமருள் சடையும் காட்ட

    மாற்றரும் மருட்சியான்கண்  வடிவெலாம் காட்டி னாலும்

    சாற்றிய செய்யுள் குற்றம் சடைகொண்டு வெருட்டல் வேண்டா

    தோற்றிலன் இதனுக்கு என்றான் தொலைவிலான் வெகுண்டு சொல்வான்’

     

    இவ்வாறு, ‘நான்’ என்னும் ஆணவமலத்தின் முழுஆதிக்கத்தின் வசப்பட்டு தான் கூறியதே சரியானது என்று இறைவனையே  எதிர்த்துப் பேசும் நக்கீரர் உள்ளிட்டோர் ‘பொய்யடிமையில்லாப் புலவர்’ ஆக மாட்டார்.

    பதினொன்றாம் திருமுறையில் திருமுருகாற்றுப்படை தவிர்ந்த ஏனைய நூல்கள் சொல் வழக்கு முதலியவற்றாலும் பொருள் அமைதியாலும் தேவார திருவாசகக் கருத்துக்கள் சொற்றொடர்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளதாலும் இந்நக்கீரதேவர் தேவார திருவாசக ஆசிரியர்களின் காலத்திற்குப்பின் கி.பி. 9-ஆம் நூற்றாண் டில் வாழ்ந்தவர் ஆகலாம் எனப் பேராசிரியர் திரு.க. வெள்ளை வாரணனார் பன்னிரு திருமுறை வரலாற்றில் ஆராய்ந்து நிறுவியுள்ளார்.

    நக்கீரர் பற்றிய கதை வழக்கிற்குக் காரணமாகக் கூறும் சான்று, நக்கீரர் பாடிய பெருந்தேவபாணியில்

     

    சொலற்கருந் தொன்மைத் தொல்லோய் நீயே – அதனால்

    கூடல் ஆலவாய்க் குழகன் ஆவது

    அறியாது அருந்தமிழ் பழிச்சினன் அடியேன்

    ஈண்டிய சிறப்பின் இணையடி சிந்தித்து

    வேண்டும் அதுஇனி வேண்டுவன் விரைந்தே

     என்பதாகும்.

     

    கபிலதேவ நாயனார் பதினொன்றாம் திருமுறையில் மூத்தநாயனார் திரு இரட்டை மணிமாலை, சிவபெருமான் திரு இரட்டை மணிமாலை, சிவபெருமான் திரு அந்தாதி ஆகிய மூன்று பிரபந்தங்களை அருளியவர். கடைச்சங்கப் புலவராகிய கபிலரும் இவரும் ஒருவரே எனக் கருதுவோரும் உளர். இவர் அருளிய யாப்பு வகைகள் பிற்காலத்தன ஆதலினானும் இவர்தம் நூல்களின் சொல்லாட்சிகள் பிற்காலத்தனவாய் இருத்தலானும் இவரும் கி.பி. 9-ஆம் நூற்றாண்டினை அடுத்து வாழ்ந்தவர் ஆதல் கூடும் எனப் பேராசிரியர் திரு. க வெள்ளைவாரணனார் ஆராய்ந்து நிறுவியுள்ளார். இளம்பூரணர் தொல்காப்பியப் பொருள் அதிகாரச் செய்யுளி யலில், கபிலர் இயற்றிய இரண்டு செய்யுட்களை மேற்கோள் காட்டியிருத்தலின் இக்கபிலர் இளம்பூரணர்க்கு முற்பட்டவர் எனக் கொள்ளலாம்.

     

    சங்கப்புலவராகிய கபிலர் வேள்பாரியின் இனிய நண்பர். அந்தணர், `பொய்யா நாவிற் கபிலன்` எனப் போற்றப்பட்டவர். ஆரிய அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்திக் குறிஞ்சிப்பாட்டுப் பாடியவர். செல்வக்கடுங்கோ வாழியாதன் மீது பதிற்றுப் பத்துள் ஒரு பத்துப் பாடிப் பரிசில் பெற்றவர். கலித்தொகையில் குறிஞ்சித்திணை பாடிக் `குறிஞ்சிக் கபிலன்` என்ற பெயரைப் பெற்றவர்.

     

    பரணர் பதினொன்றாம் திருமுறையில் இருபத்துமூன்றாவது பிரபந்தமாக இலங்கும் சிவபெருமான் திருஅந்தாதியை அருளியவர்.

     

    ஒன்றைப் பரணர் உரைத்தஅந் தாதிபல

    ஒன்றைப் பகரில் ஒருகோடி – ஒன்றைத்

    தவிரா துரைப்பார் தளரார் உலகில்

    தவிரார் சிவலோகம் தான்

     

    என்று இந்நூலின் இறுதியில் கூறப்பட்டுள்ள வெண்பாவால் இந்நூலை அருளியவர் பரணர் என்பதையும், இந்நூல் மிக்க அருள் நலம் உடையது என்பதையும் அறியலாம்.

     

    கபிலபரணர்

    சங்ககாலப் பரணர், கபிலரோடு கொண்டிருந்த நட்பின் சிறப்பால் கபில பரணர் என இருவர் பெயரையும் இணைத்து வழங்குவதால் அறியலாம். சங்க காலத்தில் வாழ்ந்த இப்பரணர் கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன் மீது பதிற்றுப் பத்துள் ஒரு பத்துப் பாடியவர் ஆவார். இவர் மற்றும் பல அரசர்கள் மீது பாடல்கள் பாடியுள்ளார். சங்காலப் புலவர்களில் பரணரும் வன்பரணரும் வேறு வேறானவர்கள். இச் சங்கப்புலவர் பெயர் தாங்கிய பதினொன்றாம் திருமுறை ஆசிரியராகிய பரணதேவர் பிற்காலத்து அருட்கவிஞர் ஆவார்.

    மேலும், சங்கப்புலவரில் சமண, பௌத்த சமயத்தவரும், வைணவரும் இருந்தனர்; ஆகவே, பொத்தாம் பொதுவாக, நாற்பத்தொன்பது சங்கப் புலவர்களே ‘பொய்யடிமையில்லாப் புலவர்’ என்ற கூற்று முற்றிலும் பொருந்தாக் கூற்று ஆகும். எனவே, ‘பொய்யடிமையில்லாப் புலவர்’ ஒரு தனியடியாரே என்பது திண்ணம்.

    நம்பியாண்டார் நம்பிகளின் கருத்துடன் சேக்கிழார் பெருமான் கருத்து மாறுபடும் இன்னொன்றையும் இங்கு குறிப்பிடுவது நம் பார்வையைத் தெளிவாக்கும்.

     

    ‘பொய்யடிமையில்லாப் புலவர்’ – மணிவாசகர்

    உலகோர் வழக்கில் ‘பொய்’ (False) என்ற சொல்லுக்கு ‘மெய்’ அல்லது ’உண்மை’ (True) என்ற சொல் இனவகை எதிர்ச்சொல். ஆனால், இறையியலாகிய  மெய்ப்பொருளியலில் இவை பின்வருமாறு வரையறுக்கப்படுகின்றன:

    மெய் (சத்து): எக்காலத்தும் நிலை பெற்றுள்ள தன்னியல்பே மெய் எனப்படும்.

    பொய் (அசத்து): இடையில் தோன்றி மறையும் பொதுவியல்பே பொய் எனப்படும்.

    கருவி, கரணங்களுடன் கூடிய மனித உடல் உள்ளிட்ட இவ்வுலத்தில் தோன்றும் அனைத்துப் பொருட்களுமே இடையில் தோன்றி மறையும் பொதுவியல்பு கொண்டவையே. உடல் உட்பட இவ்வுலகப் பொருட்கள் எதிலும் பற்று வைக்காது, அடிமைப்படாது ‘தேடும் பொருளும் சிவன் கழலே’ எனச் சிந்தித்துப் பொற்பமைந்த புரிசடை வள்ளல் ‘சிவபெருமானின் புகழைப் பாடுவதை அல்லால் வேறெதெற்கும் சொற்பதங்கள் வாய்திறவாத தொண்டுநெறி’ பூண்டு, இமைப்பொழுதும் அரன்தாள் நெஞ்சில் நீங்காது வாழ்வோரே பொய்யடிமையில்லாப் புலவர்கள் ஆவார். அன்னோரன்ன புலவர்களில் தலையாயவராம் மனிவாசகப்பெருமானே  சுந்தரமூர்த்தி நாயனாரால் தனியடியாரில் குறிக்கப்படும் பேறுபெற்றுச் சேக்கிழார் பெருமானால் சிறப்பிக்கப்பட்டார் என்பதை இங்கு விரிவாகக் காணலாம்.

     

    பரமனையே பாடுவோரும் பொய்யடிமையில்லாப் புலவர்களும்

    ‘சிவபெருமானின் புகழைப் பாடுவதை அல்லால் வேறெதெற்கும் சொற்பதங்கள் வாய்திறவாத தொண்டுநெறி’ பூண்டோர் அனைவரும் ‘பரமனையே பாடுவோர்’ ஆவார். பரமனையே பாடும் ஞானியரில் சிலர், இறைவனின் அழகிய திருவுருவத்தின் அழகில் ஆழங்கால்பட்டு, இறைவனைக் காண்பதற்காகவே இம்மனிதப் பிறவியும்  வேண்டுவர்; தில்லை நடராஜப் பெருமானிடம்

     

    “குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிழ்சிரிப்பும்,

    பனித்தசடையும், பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்,

    இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் காணப்பட்டால்,

    மனித்தபிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே”

     

    என்று கூத்தப்பெருமானின்  இவ்வழகிய நிருத்தத் திருக்காட்சியைக் காணும்பேறு பெற்றால், இம் மனிதப் பிறவியையே வேண்டுகின்றேன் என விண்ணப்பிக்கும் அப்பர் பெருமானும்,

     

    ‘பச்சைமாமலைபோல் மேனி, பவளவாய் கமலச்செங்கண்,

    அச்சுதா அமரர் ஏறே, ஆயர்தம் கொழுந்தே என்னும்

    இச்சுவைத்தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்

    அச்சுவைப் பெறினும் வேண்டேன் அரங்கமா நகர் உளானே’

     

    என்று இந்திரலோகம் ஆளும் சுவை வேண்டாது, அரங்கனின் அழகிய திருவுருவைக் காணும் சுவையையே தந்தருள்க என்று திருவரங்கப் பெருமாளிடம் விண்ணப்பிக்கும் திருமங்கையாழ்வாரும் இத்தகையோர்.

     

    சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய ஞானியர் அனைவருமே கணந்தோறும் மாறிக்கொண்டேவரும் பொய்யாலான (மாயையால் ஆன) இவ்வுலக இன்பங்களை விரும்புபவர் அல்லர்; இவர்களும் பொய்யடிமையில்லாத தன்மையினரே ஆவர். ஆயினும் அம்மூவருமே திருத்தொண்டிற்காக இறைவனிடமிருந்து பொன் வேண்டிப் பெற்ற வரலாறு அவர்தம் பதிகங்களில் அகச்சான்றாகக் காணப்படுகின்றன. ‘பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை’ என்று சுந்தரர் சிவபெருமானைப் பாடிய பாடல் உலகியலோடு மெய்ப்பொருளை வேண்டிப்பெரும் ‘திரோதானம்’ என்னும் ‘உலகியல்வழி மெய்யியல் அடையும் வழி’யை விளக்கும்.

     

    மாணிக்கவாசகப் பெருமானோ சிவத்திடம் சிவத்தை (திருவடிப்பேறு) அல்லாது வேறு எதையும் வேண்டி விண்ணப்பம் செய்தவர் அல்லர். இத்தனிப்பண்பு சுந்தரமூர்த்தி நாயனாரின் உள்ளத்தைக் கொள்ளைகொண்டிருக்கவேண்டும். எனவேதான், தனியடியார்களைப் பாடிய ஏழாவது பாடலின் முதலடியில் ‘பொய்யடிமை இல்லாப் புலவர்க்கும் அடியேன்’ என்று குறித்துவிட்டு, தொகையடியார்களைமட்டும் பாடிய பத்தாவது பாடலில், ‘பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்’ என்று தனியாகக் குறித்தார்.   எனவேதான், இவரை, ‘புரிசடையார் தமை அல்லால் சொற்பதங்கள் வாய் திறவாத் தொண்டு நெறித் தலைநின்ற பெற்றியினில் மெய் அடிமை உடையாராம் பெரும் புலவர்” என்று பொய்யடிமையில்லாதோரில் தலைநின்ற பேறுபெற்றவர் அம்மெய்யடிமை உடைய பெரும்புலவர் என்று மாணிக்கவாசகரைச் சிறப்பிக்கின்றார் சேக்கிழார் பெருமான்.

     

    மேலும், ‘பொய்’ என்ற பதத்திற்குத் திருவாசகமொழியினால் தெளிவான மெய்யியல் இலக்கணம் வகுத்தவர் மணிவாசகப் பெருமான். அம்மெய்யியல் இலக்கண வரையறை சுந்தரமூர்த்தி நாயனாரின் உள்ளத்தை மட்டுமல்ல, அவர் காலச் சைவசமயிகளின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டிருக்க வேண்டும்; அதன் வெளிப்பாடாகவே அவர் மணிவாசகருக்கு ‘பொய்யடிமையில்லாப் புலவர்’ என்ற அடை தருவதற்கு தூண்டுதலாக இருந்திருக்கவேண்டும்; மற்றவர் இந்த வேறுபாட்டினை உணரவேண்டும் என்பதற்கே ‘பரமனையே பாடுவோர் அடியார்க்கும் அடியேன்’ என்பதைத் தொகையடியாரில் கவனமாகச் சேர்த்து இருக்கவேண்டும் என்று கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. இந்தக் கருதுகோளை உறுதி செய்யும் ‘பொய்’-என்பதற்கான திருவாசக மெய்யியல் வரையறைகளைக் இப்போது காணலாம்:

     

    ‘பொய்’ – திருவாசகத் தலையாய மெய்யியல் வரையறை–1

    ‘மெய்யர்’ என்போர் சிவபெருமானின் திருவடிகளைக் கண்டோரே ஆவார்; ‘பொய்யர்’ என்போர்  சிவபெருமானின் திருவடிகளைக் காணாதோரே ஆவார்; மெய்யராவதே மனித வாழ்வின் குறிக்கோள்.

    திருப்பெருந்துறையில் தன் பழ அடியார் கூட்டத்தோடு மறைபயில் அந்தணனாக வந்து மணிவாசகரை ஆட்கொண்ட சிவபெருமான், அடியார்களோடு தானும் உருக்கரந்து மறையக் கண்ட மணிவாசகப் பெருமான் மனமுருகி அருளிச் செய்தது நூறு பாடல்கள் கொண்ட ‘திருச்சதகம்’ பதிகத்தின் ஐம்பத்தியிரண்டாம் திருவாசகப் பாடல் ‘பொய்யர் என்பவர் யார்?’ என்று வரையறை தருகின்றது.

     

    செய்வது அறியாச் சிறுநாயேன் செம்பொன் பாதமலர் காணாப்

    பொய்யர் பெறும் பேறு அத்தனையும் பெறுதற்கு உரியேன் பொய்யிலா

    மெய்யர் வெறியார் மலர்ப்பாதம் மேவக் கண்டும் கேட்டிருந்தும்

    பொய்யனேன் நான் உண்டு உடுத்தி இங்கு இருப்பது ஆனேன் போர் ஏறே.    – திருவாசகம்:திருச்சதகம்:52

     

    மனிதப்பிறவியின் நோக்கம் மூலமலமாம் அறியாமை என்னும் ஆணவ இருள் நீங்க, வினைப்பயனால் கிடைத்த, கணந்தோறும் மாறும் மாயா உலகின் ஐம்பூதக் கலவையினால் ஆன பொறி, புலன்களுடன் கூடிய பொய்யுடல் வாழ்வின் வழியே, என்றும் மாறாத  மாக்கருணைவெள்ளச் சிவபெருமானின் திருவடிகளே அடையத்தக்க செம்பொருளாம் மெய் என்று உணர்ந்து, அவனருளாலே அவன் தாள் அடைவதே ஆகும்.

    Share
  • எழுவகைப் பெண்கள்: 7

    அவ்வை மகள்

     பெண்ணின் “பெரினியம்” எனப்படும் மூலாதார யோகமுத்திரை

    பெண்ணியம் என்பதை விடப் பெண்ணியலும் பெண்ணறமும் தான் மிகவும் முக்கியம் என்ற அந்த இராணுவ அதிகாரியைப் பார்த்துக்கொண்டே அப்படியே எழுந்து ஒரு சல்யூட் அடித்துவிட்டு உட்கார்ந்தேன். “என்ன சொல்லிவிட்டேன் என்று இப்படிப் பரவசப்படுகிறீர்கள்!” என்றார். “ஐயா! நான் நெகிழ்ந்ததன் காரணம் சொல்கிறேன் கேளுங்கள்” என்று சொன்னேன்:

    ‘“வங்கக் கடல்கடைந்த
    மாதவனைக் கேசவனைத்
    திங்கள் திருமுகத்துச்
    சேயிழையார் சென்றிறைஞ்சி”

    என்ற எங்கள் மொழியில் உள்ள ஒரு பாசுரம் நினைவுக்கு வந்தது. குறிப்பாக, அதில் வரும் “சேயிழையார்” என்கிற சொல் என் முழு கவனத்திலும் வியாபித்தது. அதன் பொருளை நான் இந்நாள் வரை முழுதுமாய்ப் புரிந்துகொள்ளவில்லை – ஞானோபதேசம் செய்தீர்கள். நீங்கள் பேசப்பேச என்னுள், எங்கள் மொழியில் எங்கள் மூதாதையர்கள் சொல்லிவிட்டுப்போயிருக்கிற “சேயிழையார்” என்ற அந்தச் சொல்லின் ஆழ்ந்த பொருளும் அதிலே அவர்கள் சேர்த்துவிட்டுப் போயிருக்கிற அளப்பிலா நுட்பமும் புரிந்தது – நன்றி மீண்டும்” என்றேன்.

    என்ன மொழி என்றார் – “இந்த உலகில் உள்ள எல்லா பேசப்படும் மொழிகளுக்கும் மூத்தமொழி எம்மொழி” என்றேன். பெயர் கேட்டார், “தமிழ்” என்றேன். என்றேன். அதற்குச் செம்மொழி தகுதியும் கூட உண்டோ? என்றார். “ஆம் ஐயா!” என்றேன். கணினி சென்றார் – உங்கள் நாடு இரண்டு செம்மொழிகளை வைத்திருக்கிறதே என்றார். சமஸ்கிருதமும் தமிழும் தொடர்புடையவையா என்றார். “ ஆம்! இரண்டிற்கும் பல பொதுப் பண்புகளும் உண்டு. பல தனிப் பண்புகளும் உண்டு” என்றேன். “Bravo!” என்று சொல்லி எழுந்து நின்று கை தட்டினார் – கை குலுக்கினார். உங்கள் திராவிட மொழிகளில் கன்னடம், தெலுங்கு, மலையாளம் இவையெல்லாம் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் கலந்து உருவானாவை போல் தெரிகின்றனவே என்றார். மனதுக்குள் ஒரு நிமிடம் நம்மூரில் மொழி நிலைமை திரையோடியது – “மொழியைப் புரிந்து கொள்ளும் இந்த இந்த எளிமை அங்கும் வர வேண்டுமே1” என்று எண்ணம் வேண்டியது.

    “சரி விஷயத்திற்கு வருவோம், சேயிழையார் என்று ஏதோ சொன்னீர்களே அது என்ன?” என்றார். “நீங்கள் பெண் உடல் பற்றி சொன்ன யாவற்றையும் “சேயிழையார்” என்கிற ஒற்றைச் சொல்லில் எங்கள் மூதாதையர்கள் இரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். அந்தச் சொல்லை நாங்கள் அறிவோம் என்றாலும் அதனை மேலோட்டாமாகப் பேசிப் போந்தோமே தவிர அதன் தாத்பரியத்தை உணர்ந்து கொள்ளவில்லை. இன்று அவற்றை உணர்ந்தேன் உங்கள் பேச்சின் மூலம்” என்றேன்

    சேயிழை என்கிற சொல் எங்கள் மொழியில் எண்ணிறந்த இலக்கியப் பாடல்களில் பயன்படுத்தப்படுகிறது – பெண்களைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் “சேயிழை” என்ற சொல் வரும். அதனை நாங்கள் பெரும்பாலும் அழகிய அணிகலன்களை அணிந்த சிவந்த நங்கையர் எனவே அறிந்து கொள்வோம். அந்த சொல்லுக்குப் பிற அர்த்தங்களும் உண்டுதான் – ஆனால், நாங்கள் அவற்றை அதிக சிரத்தையோடு பார்த்ததில்லை. உங்கள் பேச்சு என் சிந்தனையைத் தூண்டியது!” என்றேன். “என் மருத்துவ அறிவியலின் வழியே புதிய சிந்தனைகள் பிறந்தன!” என்றேன்.

    “Quite interesting” மேலே தொடருங்கள் என்றார். அவருக்கு நான் அளித்த பதில் இதோ:

    “ சேயிழை – இங்கு இழை என்பதை இடை எனும் சொல்லும் அந்த இழைக்குள் இருப்பதாகக் கொள்ளவேண்டும். ஏனெனில் பெண்களுக்கு இடையே பிரதானம். அதுவும் அவர்களுடைய இடை – நெய்ய்ந்து பின்னியதோர் அமைப்புள்ள எலும்பால் ஆக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல பெண்ணுக்கு இடையே பிரதானம் என்பது விளங்கும் படியாக, பிரம்மன், பெண்ணின் இடையுடன் அவளது மூளையையும் இருதயத்தையும் மட்டுமல்ல பிரபஞ்சத்தையே இணைத்து வைத்திருக்கிறான்.

    பெண்ணின் இடையில் பிரபஞ்சம் அடக்கம் என்பதற்கு எடுத்துக் காட்டாக, நிலவின் இயக்கம் பெண்ணின் இடையில் நிகழ்வதைக் காண்கிறோம். அவளது மாதவிலக்கின் காலச் சுழற்சியின் கால அளவும் நிலவின் சுழற்சியின் கால அளவும் ஒன்று. ருதுவான பெண்ணுக்கு, மாதவிடாய் என்பது ஒவ்வொரு 28 நாட்களிலும் நிகழ்வது. இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமிகளுக்கு இடையில் உள்ள காலம் 28 நாட்கள் என்பதை நாம் அறிவோம். நிலவுக்கு வளர் பிறை பாதி – தேய் பிறை பாதி என்பது போல. பெண்ணின் இடுப்பில் உள்ள சூலகத்தில் கரு முட்டை இருப்பது பாதி நாட்கள் – இல்லாமல் இருப்பது பாதி நாட்கள். ஒவ்வொரு மாதமும், அமாவாசையிலிருந்து மூன்றாம் பிறை – மொத்தம் நான்கு நாட்கள் – ஒவ்வொரு மாதமும் பெண் குருதி சொரியும் முக்கியமான நாட்கள் நான்கு. மாதவிலக்கு முடிந்த நான்காம் நாள் பெண்ணின் உடலில் மகோன்னத எழிலும் சக்தியும் செறிந்து நிற்கின்றன. முழு நிலவை விட மூன்றாம் பிறையை எழிலுக்கும் வசீகரத்துக்கும், புனிதத்துக்கும், எடுத்துக்காட்டாய் முதன்மைப்படுத்தி வளர் பிறையின் மூன்றாம் பிறையை மிக முக்கியமான நாளாக நிலவின் இயக்கத்தில் காண்பிப்பது இது பற்றியே.

    அது மட்டுமல்ல பெண்ணின் இடையில் கடவுளே கூட இணைந்திருக்கிறான். எங்கள் ஆலயங்களில் கர்ப்பக் கிரகத்தில் தான் மூலவர் இருப்பார். எங்கள் ஆலயத்தில் “Sanctum sanctorum” என்னும் மூலஸ்தானத்திற்குப் போகும் வழியில் நாங்கள் சில வாசல்களைக் கடந்து செல்ல வேண்டும் – பெண்ணுறுப்பில் உள்ள வாசல்களின் – துளை நிலைகளின் சாட்சிகள் அவை” என்றேன்

    அப்படியா? ஆச்சரியமாய் இருக்கிறதே! மேலே சொல்லுங்கள் என்றார் – தொடர்ந்தேன்.

    சேயிழை என்பதில் உள்ள “சே” எனும் எழுத்து “சிவப்பு” என்று பொருள் படும். எங்கள் ஊர் வெப்பப் பிரதேசம் – அங்கே சிவந்த நிற மங்கையர் இல்லை எனவே இங்கு சிவப்பு என்பது பெண்களின் தோலை – மேனியைக் குறிப்பதாகக் கொள்ளமுடியாது. எனவே சேயிழை என்பதை சிவப்பு இழை என்றே கொள்ளவேண்டும். இடை என்பது இழையில் ஏற்கனவே ஒளிந்திருக்கிறது என்பதை நான் குறிப்பிட்டேன் அல்லவா? அதன் வழியில் சென்று, இங்கு இழை என்பது எதைக்குறிக்கிறது என்று நீங்கள் கேட்டால் அது பெண்ணின் இடுப்பில் பொருந்தியிருக்கிற, முற்றிலும் இழையாலான, உறுப்பான பெரினியத்தை (perineum) குறிக்கிறது என்பேன்.

    ஒரு பெண் என்ற முறையிலும் – ஒரு தாய் என்ற முறையிலும் – மருத்துவ அறிவியலில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக உழன்று கொண்டிருப்பவள் என்ற முறையிலும் பெண்ணின் பெரினியத்தின் தன்மைகளை நான் மிகவும் அறிந்தவள். எந்த நிறப் பெண்ணாக இருந்தாலும் சிவப்பு நிறத்தில் முற்றிலும் திசு இழைகளால் மட்டுமேயான ஒரு உறுப்பு எல்லாப் பெண்களிடமும் இருக்கிறது என்றால் அதுதான் பெரினியம். எனவே “சேயிழை” என்பதை உடல் மருத்துவ ரீதியாகப் பார்த்தால் அது பெரினியமே எனக் கொள்ளலாம்.

    சொல்லப்போனால் இந்தப் பெரினியத்தின் தன்மையை மருத்துவ அறிவியல் தொழிலுக்கு வருவதற்கு முன்பே நான் அறிந்து கொன்டேன். எப்படி என்றால் எனக்குப் பதினாறு வயது இருக்கும்போது ஓரிரவு மதுரை சென்று கொண்டிருந்தேன். அக்காவின் கணவருக்கு, விபத்து ஏற்பட்டுப்போய் தகவல் வர, உதவிக்கு என்னை உடனடியாக அனுப்பி வைக்க, சென்னையிலிருந்து செல்கிறேன் -அந்த சமயத்தில் ஒரு பெண்ணுக்கு பஸ்ஸிலேயே பிரசவம் ஏற்படலானது. அவளுக்கு உதவி செய்யப்போனேன். அப்போது பெரினியத்தின் தரிசனம் கிடைத்தது – அதன் வடிவைப் பார்த்து அப்படியே அசந்து போய்விட்டேன். அவ்வுறுப்பின் நிறமும் தெய்வீக வடிவும், அந்த சிசு அதனுள் உட்புறமிருந்து பிரவேசிக்கும் அந்தப் பிரசவத்தின் ஆற்றல் வெளிப்பாடும் என்னுள் அன்று மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கின. அன்று நான் கண்ட தொப்புள் கொடியையும் – வெளிவந்த குருதி வெள்ளத்தையும், வெளித்தள்ளப்பட்ட நஞ்சையும், சிசுவின் மேலிருந்த சாம்பல் பூச்சையும், வெளிக்காற்றை அனுபவித்த நொடி அந்த சிசுவின் உடலில் ஏற்பட்ட சிலிர்ப்பையும் – அந்த சிலிர்ப்பில் அது கண் திறந்த அந்த க்ஷணத்தையும் நான் இறக்கும் வரை மறவேன்.

    அதுவும் அத்தருணம், தமிழில் பெரினியத்திறகு இட்டுள்ள பெயர் என் நினைவுக்கு வரவும் அது என்னை அப்படியே ஒரு உலுக்கு உலுக்கி என்னை நிறுத்திச் சொன்னது, “அடி பெண்ணே! நீ ஒரு பொக்கிஷம் – நீ ஒரு முழு முதல் தெய்வம் – நீ ஒரு பிரம்மா மட்டுமல்லடி – நீ ஒரு தாய் – தாய் என்பவள் மூன்று தெய்வங்களும் சேர்ந்த முழுமுதல் தெய்வம் – நீ படைக்கிறாய் – படைத்ததைக் காக்கிறாய் – படைத்தலும் அதைக் காத்தலும் என்ற பணியில் – உன் படைப்புக்கு எதிரிடையாய் வரும் அனைத்துத் தீய சக்திகளையும் அழித்தெறிகிறாய்! நீயே சக்தி! – உன்னால் தானடி இங்கு உள்ளவை யாவும் – நீயே அனைத்தும் நீயே பிரபஞ்சம்!” என்றது.

    இத்தனை முக்கியத்துவமா – இத்தனைப் புளகாங்கிதமா என்றார் – என் நா தொடர்ந்து.

    உண்மையில், பெண்ணின் பெரினியத்தின் வடிவம் ஒரு யோக முத்திரையாகும். – ஒரு பெண்ணின் உடலம் ஒரு யோக முத்திரையில் அமர்ந்திருக்கும் காட்சி பெண்ணின் பெரினியத்தில் தெரியும் – இந்த வடிவை உற்று நோக்கினால் அதற்குள்ளே அண்ட சராசரங்களும் பொருந்தியிருப்பது புரியும் எங்கள் ஊரில் ஐயப்ப சாமி ஏறக்குறைய இந்த முத்திரையோடு தான் அமர்ந்திருப்பார்.

    பேசிக்கொண்டே கணினியில் சென்று எதையோ அவர் பார்த்த அந்நொடியில் அவருள் என்ன தோன்றியதோ தெரியாது – கண் பளபளத்தது.

    சரி, உங்கள் மொழியில் பெரினியத்தின் பெயர் என்னவென்றார்
    “மூலாதாரம்” “The ultimate origin” என்றேன்.

    கண்ணில் நீர் திரண்டு முத்தாய் இறங்கியது

    கலாச்சாரம் வேறு – நாடு வேறு – இருப்பதோ இராணுவப் பணி – முரடும் – கடினமும் – கொண்ட ஆள் – வாழ்வில் எத்தனையோ பெண்களைப் பார்த்தவர் – மூன்று முறை டைவர்ஸ் செய்திருக்கிறவர். ஐம்பது வயதில் நான்காம் திருமண பந்தம் ஏற்படுத்திக் கொண்டிருப்பவர். அப்படம் கண்டு நெகிழ்ந்தார்.

    நீங்களும் பார்க்கலாம் – வயதுவந்தவராக இருந்தால்

    https://en.wikipedia.org/wiki/Pelvis#/media/File:Gray408.png

    What can be more noble than the female body? என்றார்.

    உங்கள் மொழியும் உங்கள் கலாச்சாரமும் இத்தனை உயர்வாய் இருக்கிறதே என்றார். மூலாதாரம் என்கிறீர்களே அது பற்றி மேலும் விளக்கமுடியுமா என்கிறார். அதற்கு நான் அவ்வையைத் துணைக்கழைக்க வேண்டும். அவ்வை எங்கள் ஊரில் ஒரு சிறப்பு மிக்க பெண் புலவர் – விவேகி என்றேன்.

    மேலும் பேசுவோம்

    Share
  • நரியைக் குதிரையாக்கிய திருவிளையாடல் மணிவாசகருக்காகவே நிகழ்த்தப்பட்டது

    பேராசிரியர். கிருஷ்ணன் நல்லபெருமாள், ம.சு.பல்கலைக்கழகம்

    maanikavasagar

     

     

     

     

     

     

     

     

     

    நரியைப் பரியாக்கிய சிவபெருமானின் திருவிளையாடல் மாணிக்கவாசகருக்காக நிகழ்த்தப்பட்டது என்பது சைவசமயிகளின் உணர்வில் கலந்த நிகழ்வு. இந்நிகழ்வு தனக்காக நிகழ்த்தப்பட்டதென்றோ, தனது வாழ்வில் நிகழ்ந்ததென்றோ திருவாசகத்தில் மாணிக்கவாசகர் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்றும் மற்றவர்கள் கூறுகின்றனர்; இறைவனின் மற்ற திருவிளையாடல்களை வர்ணிப்பதுபோலத்தான் நரியைப் பரியாக்கிய திருவிளையாடலையும் கூறுகின்றாரே அன்றித் தன்வாழ்வில் நடந்ததாகக் குறிப்பிடவில்லை என்பது இவர்கள் வாதம். அதனால் திருவாசகத்தில் உள்ள அகச்சான்று வலுவாக இல்லை என்றும், நரியைப் பரியாக்கிய திருவிளையாடல் மாணிக்கவாசகருக்காகவே நிகழ்த்தப்பட்டது என்பது மறைமலையடிகளைப் போன்ற ஒரு சிலரின் கருத்தேயன்றி, ஆய்வு முறையில் நோக்கினால் இது ஒரு வலுவற்றவாதம் என்றும் முனைவர்.அ.ச.ஞானசம்பந்தன் போன்ற தமிழ் ஆய்வறிஞர்களும், திரு.கோதண்டராமன் உள்ளிட்ட அண்மைக்கால வேதசைவர்களும் கருதுகின்றனர். நரியைப் பரியாக்கிய திருவிளையாடல் மாணிக்கவாசகருக்காகவே நிகழ்த்தப்பட்டது என்பதை நிறுவ திருவாசகத்தின் கீர்த்தித் திருஅகவல் ஒன்றே போதுமானது. திருவாதவூரர் குதிரை வாங்கப் பாண்டியன் அரண்மனையிலிருந்து பொன் எடுத்துப் போனதும், எடுத்த பொன்னுக்குக் குதிரை வாங்கமுடியாமற் போனதும், நரிகளைப் பரிகளாக்கிப் பாண்டியனுக்கு விற்ற இறைவன், (முன்பே பாண்டியனிடமிருந்து திருவாதவூரர் குதிரை வாங்கப் பொன் எடுத்துச் சென்றமையால், வாதவூரரின் கடனை அடைக்க) பாண்டியன் கொடுத்த பொன்னை ஏற்றுக்கொள்ளாது சென்றதையும், திருவாதவூரர் எல்லாம் அவன் அருள் விட்டவழி என்று இருந்ததுவும் கீர்த்தித்திருவகவலில்

    “அரியொடு பிரமற்கு அளவறி யொண்ணான் நரியைக் குதிரையாக்கிய நன்மையையும்

    ஆண்டுகொண்டருள அழகுறு திருவடி பாண்டியன் தனக்குப் பரிமா விற்று

    ஈண்டு கனகம் இசையப் பெறாஅது ஆண்டான் எங்கோன் அருள்வழி இருப்ப”

                                                                                                       –     திருவாசகம்: கீர்த்தித்திருவகவல்

    என்று மணிவாசகப் பெருமான் மிகத்தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

    திருவம்மானை இருபதாம் பாட்டிலே, தம்மை பிறரால் அறிவதற்கு அரிய பெருந்துறைப் பெருமான், பெற்ற பொன்னுக்குக் குதிரை வாங்காமல் நிற்கும் அடியவரான தனது குற்றங்களை நீக்கியதோடல்லாமல், தன்னைச் சுற்றிய வினைத்தொடரறுத்து, பற்றிய பாசங்களைப் பற்றுஅற அப்பெருமானைப் பற்றியப் பேரானந்தத்தை இதோ மகிழ்வோடு பாடுகின்றார்:

    ‘பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான் 

    கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித் தன்னடியார்

    குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச் 

    சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான் தொல்புகழே

    பற்றியிப் பாசத்தைப் பற்றறநாம் பற்றுவான் 

    பற்றிய பேரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய்.

                                                            –     திருவாசகம்: திருவம்மானை-20

    திருப்பெருந்துறையில் தன்னை ஆட்கொண்ட பெருமானே கொற்றக் குதிரையின் மீதேறி வந்து தனது குற்றங்களை நீக்கினான் என்று உறுதிபடக் கூறுகின்றார் மணிவாசகப் பெருமான்.

    திருவாசகத்தில் ஆனந்தமாலைப் பதிகத்தின் ஏழாம் பாட்டில் ‘நரியைக் குதிரைப் பரியாக்கி, இவ்வுலகோரெல்லாம் அறியும்வண்ணம் மதுரையெல்லாம் பிச்சேற்றிய பெரிய தென்னனாம் எம் பெருந்துறைப் பெருமானே!’ என்று ஆனந்திக்கின்றார் மணிவாசகப் பெருமான்.

    ‘நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லாம் நிகழ்வித்துப்

    பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்ச தேற்றும் பெருந்துறையாய்’

                                                                              –     திருவாசகம்: ஆனந்தமாலை-7

    மீண்டும் திருவாசகம் திருவேசறவுப் பதிகத்தின் முதற்பாடலில், ‘கங்கையை முழுவதுமாக தனது சடையினிலே உலவுமாறு செய்த எம் உடையானே! நரிகளை எல்லாம் பெருங்குதிரைகளாக்கியது உன் பேரருளே அல்லவா!’ என்று பரவசமடைகின்றார் பெருமான்.

    ‘ஒருங்குதிரை உலவுசடை உடையானே நரிகளெல்லாம்

    பெருங்குதிரை ஆக்கியவாறு அன்றேஉன் பேரருளே’

                                                                           –     திருவாசகம்: திருவேசறவு-1

    கீர்த்தித்திருவகவல் தொடங்கி, திருவாசகமெங்கும்   சிவபெருமானின் மற்ற திருவிளையாடல்களைக் குறித்துப் பாடும்போதெல்லாம், சிவபெருமானைத் தன்மையில் வைத்துப் பாடிவரும் மணிவாசகப் பெருமான், சிவபெருமான் நிகழ்த்திய நரியைப் பரியாக்கி, குதிரைச் சேவகனாக வந்த திருவிளையாடளைக் குறிப்பிடும் போதெல்லாம், ‘திருப்பெருந்துரையானே! என்றும், ‘உன்பேரருளே!’ என்றும், முன்னிலையில் வைத்துப் பாடுவது அத்திருவிளையாடல் அவர் பொருட்டே சிவபெருமானால் நிகழ்த்தப்பட்டது என்பதற்கான வலுவான சான்றுகளாகும்.

    இவைகளுக்கெல்லாம் மணிமுடி வைத்தாற்போல, திருவாசகத்தின் திருப்பாண்டிப்பதிகத்திலே ‘இருக்கும் காலத்தை நன்றாகப் பயன்படுத்தி சிவபெருமான் மேல் அன்புசெய்யுங்கள்! நம் கருத்தினால் அறிவதற்கு அரியவனான ஈரேழுஉலகங்களைஎல்லாம் உண்ட திருமாலொடு, நான்முகனும், வானவர்களும் அடைதற்கு அரிய ஆலகால விடத்தையுண்ட எங்கள் பாண்டிப்பிரானாகிய சிவபெருமான் தன் அடியவருக்காக  மூலபண்டாரமாகிய பேரின்பச் செல்வத்தை வழங்குகின்றான்;   விரைந்து வந்து பெற்றுக்கொள்ளுங்கள்!’ என்று அடியவர்களை எல்லாம் விரைந்து அழைக்கும் மணிவாசகப்பெருமான், குதிரைச் சேவகனாக வந்த எம்பெருமான் வடிவையன்றி யாருடைய வடிவத்தையும் என் உள்ளம் அறியமாட்டாது (‘பரிமேல் கொண்ட சேவகனார் ஒருவரையன்றி உருவறியாது என்றன் உள்ளமதே!’’) என்று முதற்பாடலிலேயே உருகிப் பாடுகின்றார்..

    இத்துணை அளவு ‘நரியைப் பரியாக்கிய திருவிளையாடல்’ குறித்து மணிவாசகப்பெருமானின் திருவாசகத்திலே அகச்சான்றுகள் தெளிவாகப் பதிவுசெய்யப்பட்டிருந்தும்,  முனைவர்.அ.ச.ஞானசம்பந்தன் போன்ற தமிழ் ஆய்வறிஞர்களும், திரு.கோதண்டராமன் உள்ளிட்ட அண்மைக்கால வேதசைவர்களும் ஐயம் எழுப்புவதின் நுண்ணரசியலைச் சற்று உற்றுக் காண்போம்.

    நரியைப் பரியாக்கிய திருவிளையாடலை மாணிக்கவாசகருக்காகவே நிகழ்த்தப்பட்டது என்ற  உண்மை ஆய்வு மூலம் நிறுவப்பட்டுவிட்டால், மாணிக்கவாசகரின் காலம் குறித்த பல தமிழாய்வுகள் நீர்த்துப்போய்விடும்; இறைக்கொள்கையின்றி துறவைப் பெரிதாகத் தூக்கிப்பிடித்த பௌத்த, சமண ஆதிக்கத்தால், பெருவாரித் தமிழர்கள் இல்லறம் துறந்ததால், மக்கள்தொகை குறைந்து போர்த்தொழில் மறந்த தமிழினம், களப்பிரர் வசம் எளிதில் வீழ்ந்தது;  தமிழினத்தைத் துறவினின்று மீட்டுத் தலைநிமிரச் செய்தது கி.பி. மூன்று மற்றும் நான்கு ஆண்டுகளில் தொடங்கிப் பின் ஆறாம் நூற்றாண்டு தொடங்கி பேரெழுச்சி பெற்ற சைவமறுமலர்ச்சி இயக்கம், அம்மையப்பனாக, சிவசக்தியாக இறைவனை முன்னிறுத்தி, இல்லறமே நல்லறம் என்றும், இல்லறக்கடமையாற்றி, முழுமையான அன்புவழிபாட்டினால் இறைவனை அடைய இயலும் என்றும் முழங்கிற்று. அதன் காரணமாகக் களப்பிரர் ஆதிக்கத்தினின்று விடுபட்டு வீறுகொண்டு மீண்டது தமிழினம். சைவம் தமிழின மீட்பு இயக்கமாவே தோற்றமாகியது என்பதை நினைவு கொள்வது அவசியம்.

    வேள்வியை மையமாகக் கொண்ட வேதமதமும், பக்தியை மையமாகக் கொண்ட சைவமதமும் முற்றிலும் வேறுவேறு நிலைப்பாடு கொண்டவை என்றாலும், வேதமதம் இறைக்கொள்கை கொண்டதாதலால் அதனுடன் சமரசம் செய்துகொண்டு, சைவம் பக்தி இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றது. காரைக்கால் அம்மையார், திருமூலர், மாணிக்கவாசகர் ஆகியோர் சைவ பக்திஇயக்கத்தின் முன்னோடிகள். இவர்களின் பாடல்களில் வேதமதத்தைக் குறித்த சமநோக்கு சமரசக்கோட்பாடு மட்டுமே காணப்படுவது இவர்கள் வேதமத சமரசக்கோட்பாடு முன்னோடிகள் என்பதற்குச் சான்றுகள்.

    வேதங்களைக் குறித்த மிகுதியான பதிவுகளைப் பிற்காலச் சைவ இலக்கியங்களில் காணப்பெறலாம். வேதமதப்பதிவுகள் அதிகம் உள்ள சைவ இலக்கியங்களான மூவர் தேவார காலங்களை முன்னோக்கி நகர்த்த வேண்டியது வேதமதத்தை சைவத்தில் முதன்மை பெற வைப்பதற்கு முதல் தேவை; மேலும் அப்பர் மற்றும் சம்பந்தர் தேவாரங்களில் காணக்கிடைக்கும் நரியைப் பரியாக்கிய திருவிளையாடல் பதிவுகள் மாணிக்கவாசகரின் காலத்தை முன்னோக்கி நகர்த்திவிடுவதைத் தடுக்க ஒரே வழி அத்திருவிளையாடல் மாணிக்கவாசகருக்காக நிகழ்த்தப்பட்டது அன்று என்று நிரூபிப்பதே ஆகும். அதைச் செய்துவிட்டால் வேதத்திலிருந்தே சைவம் தோன்றியது என்ற கருத்துரு நிலைநிறுத்தப்படும். வேதகாலத்திற்கு முற்பட்ட சங்கத்தமிழனின் தத்துவப்பின்புலங்கள் வேதத்தில் கரைக்கப்பட்டுவிடும். எல்லாவற்றிற்கும் மேலாகத் தமிழனுக்கென்று சொந்தமாக வழிபாடு முறைகளோ, சமயமோ, மெய்யியலோ, தத்துவமோ, மெய்யியல்தத்துவமோ கிடையாது; இவையெல்லாம் வேதமதம் தமிழனுக்கிட்ட பிச்சை என்று எளிதாக நிறுவிவிடலாம். இந்த சமயநுண்ணரசியலே நரியைப்-பரியாக்கும் திருவிளையாடல் மாணிக்கவாசகருக்காக நிகழ்த்தப்பட்டது அன்று என்று நிறுவ முயலும் முயற்சிகளின் பின்னணி.

    ஏழாம் திருமுறை தேவாரம் அருளிய சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகளால் திருத்தொண்டர் தொகையில் ‘பொய்யடிமையில்லாத புலவர்க்கு அடியேன்’ என்று அடையாளம் காட்டப்பெற்ற மணிவாசகரின் திருவாசகம் எட்டாம் திருமுறையிலும், ‘நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்’ என்று வெளிப்படையாக அடையாளம் காட்டப்பெற்ற திருமூலதேவநாயனாரின் திருமந்திரம் பத்தாம் திருமுறையிலும், காரைகாலம்மையாரின் பதிகங்கள் பதினொன்றாம் திருமுறையிலும் வைக்கப்பட்டதற்கு அக்காலகட்டத்தில் நிலவிய ‘சைவசமயாசிரியர் என்பவர் சுயமத ஸ்தாபனமும் பரமதக் கண்டனமும் தீர்க்கமாகச் செய்தவரே ஆவர்’ என்னும் வரைவிலக்கணத்தை உள்ளடக்கிய சமயநுண்ணரசியலே காரணமன்றி, சைவசமயாசிரியர்கள்  வாழ்ந்த காலத்தின் அடிப்படையில் அன்று என்பதை அறிதல் நலம்.

    வேள்வியை மையமாகக் கொண்டு, வேள்வித்தீ மூலம் படையல்களைக் கடவுளர்க்குப் படைக்கும்  வேதமதத்தின் ஆணிவேரான வேதங்களே அனைத்து சமயங்களின், குறிப்பாக தமிழர்களின் சமயமான சைவசமயத்தின் மூலம் என்று நிறுவுவதே, சைவசமயத்தில் ஊடுருவிய வேத தத்துவவாதிகளின் முக்கிய நோக்கமாக இருந்தது.

    எல்லாம் சரி! இது ஒன்று மட்டுமா காரணம்? ஏன் மாணிக்கவாசகர் அறுபத்து மூவரில் ஒருவராக ஏற்கப்படவில்லை? திருத்தொண்டர் தொகையில் ‘பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்’ என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறிப்பிடுவது மணிவாசகரையா? பட்டினத்துப் பிள்ளைக்கு முற்பட்ட அப்பர், சம்பந்தர், சுந்தரர், நம்பியாண்டார் நம்பி,  சேக்கிழார் உள்ளிட்ட சைவ ஞானியர்களும், சைவ அறிஞர்களும் ஏன் வெளிப்படையாக மணிவாசகப் பெருமானின் திருவாசகத்தை முன்மொழியாமல், மறைவாகவே தங்கள் பதிகங்களில் குறிப்பிட்டுள்ளனர்? சைவச் சாத்திர நூலான திருமூலரின் திருமந்திரம் ஏன் சைவத் தோத்திர நூலாக பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டது? திருமுறைகளின் தொகுப்பு வைப்புமுறைகளின்  அடிப்படைகள் யாவை?  இந்தக் கேள்விகளுகெல்லாம் விடை காண்பது சைவ இலக்கிய வரலாற்றை நேர் செய்ய உதவும்; மேலும் வேதக் கலப்பை சுத்திகரித்துத் தமிழனின் சுய தத்துவ வரலாற்றை மீட்டெடுக்கவும், தமிழ்ச் சைவ மரபை மீள்நிறுத்தவும் அவசியமாகும். இவை குறித்து விரிவான கட்டுரைகள் எழுதப்படும். இந்தக் கட்டுரை நரியைக் குதிரையாக்கிய திருவிளையாடல் மாணிக்கவாசகருக்காகவே நிகழ்த்தப்பட்டது என்பதை மாணிக்கவாசகரின் திருவாசக அகச்சான்றுகளின் வழி நிறுவுதல் என்ற அளவில் நிறைவு பெறுகின்றது.

    Share
  • கலியன் குரல் காட்டும் வைணவ முப்பொருள்களுள் ஒன்றான இதம்

    முனைவர் மு.பழனியப்பன்,

    தமிழ்த்துறைத் தலைவர்,

    அரசு கலை , அறிவியல் கல்லூரி,

    திருவாடானை.

         வைணவத் தத்துவங்களில் ஆழங்கால்பட்டு, அதனில் கரைந்து, அதனில் தோய்ந்து அத்தத்துவங்களை எளிமையான முறையில் எடுத்துரைத்த தமிழறிஞர்களுள் குறிக்கத்தக்கவர் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் ஆவார். காரைக்குடிக்குக் கம்பன் அடிப்பொடி ச. கணேசன் அவர்களால் வரவழைக்கப் பெற்றவர். காரைக்குடி கல்வியியல் கல்லூரியில் ஏற்பட்ட தமிழ்ப்பேராசிரியர் பணியிடத்திற்கு உரியவராக பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் அமைந்தார். சிலகாலம் இங்குப் பணிபுரிந்த பேராசிரியர் இதன்பின்னர் திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்திற்குத் தமிழ்த்துறைத்தலைவராகப் பொறுப்பேற்றார். இதுமுதல் வைணவ இலக்கியத்தின்பால் பேராசிரியரின் நோக்கு ஆழம் பெற்றது. இவர் வைணவம் தவிர பல்வேறு துறை சார்ந்த நூல்களைப் படைத்தளித்தவர். அடிப்படையில் அறிவியல் மாணாக்கர் என்ற போதும் தமிழின்மீது விருப்பம் ஏற்பட்டுக் கற்றவர். இவர் அறிவியல் தமிழின் முன்னோடியாகக் கருதப்பெறுகிறார். இவரின் நூல்களில் காணப்படும் எளிமையான தமிழ் நடை கற்போரைத் தெளிவடையச் செய்கிறது. மேலும் கற்கத் தூண்டுகிறது. இவரின் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடும் இப்பொழுதில் இவரின் ~கலியன் குரல்| என்ற நூலில் அடங்கியுள்ள வைணவ முப்பொருளில் ஒன்றான இதம் பற்றிய கருத்துகளைத் தொகுத்தும் பகுத்தும் உரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

    கலியன் குரல்

                    அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வைணவ இலக்கியம் தத்துவம் பற்றிப் பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார் நிகழ்த்திய அறக்கட்டளைப் பொழிவு ~கலியன் குரல|; என்னும் தலைப்பில் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தொன்பதாம் ஆண்டு நூல்வடிவம் பெற்றது. திருமங்கை ஆழ்வாரின் பாசுரங்களில் காணப்படும் இலக்கிய இன்பம், தத்துவ ஆழம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் அமைப்பில் இந்தப் பொழிவுகள் அமைந்தன. திருமங்கை ஆழ்வாரை மையப்படுத்தி இப்பொழிவை அமைத்ததற்குப் பல காரணங்களை மொழிகிறார் பேராசிரியர். குறிப்பாக சிதம்பரம் அண்ணாமலைப் பலைக்கலைக்கழகம் திருமங்கை ஆழ்வார் ஆண்ட. பிறந்த பகுதிகளுக்கு அருகில் இருப்பது முக்கிய காரணம் என்பது அவர் தரும் முதற்காரணம் ஆகும்.; தேர்ந்து ஒரு செயலைச் செய்யும் வல்;லமையைத் தனக்குள் கொண்டவர் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் என்பதற்கு இச்சொற்பொழிவு சான்றாகிறது.

    வைணவ முப்பொருள்

                    திருமங்கை ஆழ்வாரின் பாசுரங்களுள் காணலாகும் வைணவ தத்துவக் கருத்துகளை எளிமைபட தம் பொழிவில் எடுத்துரைத்துள்ளார் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார். வைணவ தத்துவங்களில் மூன்று அடிப்படைக் கருத்துகள் அமைந்துள்ளன. அவை தத்துவம், இதம், புருஷார்த்தம் என்பனவாகும். இவை துவைதம்,அத்துவைதம், விசிஷ்டாத்வைதம் என்ற தத்துவங்களுக்கு முற்பட்ட பழமை உடையவை.

                    இவற்றுள் தத்துவம் என்பது மூன்றாக அமைவது. சித்து. அசித்து, ஈசுவரன் ஆகியன கொண்டது. இதனை தத்துவத்திரயம் என்பர். இதம் என்பது வீடுபேற்றிற்காக கடைபிடிக்கப்படும் வழியாகும். இது இருவகைப்படும். பக்தி, பிரபக்தி என்பன அவையிரண்டும் ஆகும். புருஷார்த்தம் என்பது பரமபதநாதனுக்கு அடிமைத் தொழில் புரிவது, அதன் காரணமாக எம்பெருமான் மகிழ்தல் ஆகியன கொண்டதாகும்.

                    வைணவ தத்துவங்களில் மூன்றில் நடுநாயகமாக விளங்குவது ~இதம் | என்பதாகும்.  ~~இதம்|| என்பது உயிர்கள் கடைத்தேற வழிகாட்டுவது. இறைவனைப் பக்தி வழியில் அணுகுவது, அல்லது சரணாகதி அடைந்து பெறுவது என்பதாகும். இப்பொருள் பற்றி கலியன் குரலில் காட்டப்பெற்றுள்ள செய்திகளை வகுத்துரைப்பது என்பது இக்கட்டுரையின் அமைப்பாகும்.

    பக்தி நெறி

                    ~இதம்| என்பதின் இருநிலைகளில் ஒன்றாக அமைவது பக்தி நெறியாகும். இப்பக்தி நெறியின் இயல்பினைப் பின்வருமாறு பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார் காட்டுகிறார். ~~பக்தி நெறி- இதில் பல படிகள் உண்டு. இதனை வீடுபேறு அடையும் வரையில் அநுட்டித்துக்கொண்டே இருத்தல் வேண்டும். பலன்பெற நெடுங்காலம் கழிய வேண்டும். இதனை அங்கங்களுடன் அநுட்டிக்கும் முறை மிகக் கடினமானது. இக்கால்தில் பக்தி நெறியை அநுட்டிப்பதற்கு அதிகாரிகள் இலர் என்று கூடக் கூறலாம். நாதமுனிகள் போன்ற யோகமுறை தெரிந்தவர்கள் தாம் இதற்கு அதிகாரிகளாவர்| (கலியன் குரல், ப.174) என்று குறிப்பிடுகிறார் பேராசிரியர். இக்கருத்தின் வாயிலாக பக்திநெறி வழி எம்பெருமானை அணுகுவது என்பது காலஅளவில் நீண்டது என்பதை உணரமுடிகின்றது.

    பிரபக்தி நெறி

                    பிரபக்தி நெறி என்பது உயிர்கள் தாமாக முன்வந்து தம்மைப் பரம்பொருளிடம் அடைக்கலப்படுத்திக்கொள்ளும் நிலை ஆகும். பிரபக்திநெறி பற்றி பின்வருமாறு குறிக்கிறார் பேராசிரியர். ~பிரபக்தி நெறி- இதுவே சரணாகதி நெறியாகும். எல்லோரும் எளிதாக அநுட்டிக்கக் கூடியது. சுக்கிரீவன், வீடணன், காகம் (காகாசுரன்) போன்றோர் இந்நெறியைக் கடைபிடித்தே உயந்தவர்கள். இந்த பிரபக்தி நெறியை உபதேசித்தவர் நம்மாழ்வார். இவரைப் ~பிரபந்த ஜன கூடஸ்தர்| என்று வழங்குவதும் உண்டு. பிரபக்தி நெறியைக் கடைபிடிக்கும் வைணவர்கள் யாவர்க்கும் தலைவர் என்பது இதன் பொருள். திருமங்கை ஆழ்வார் கடைப்பிடித்த நெறியும் இதுவே|| (கலியன் குரல், ப. 114) என்பது பிரபக்தி நெறி பற்றிப் பேராசிரியர் தரும் விளக்கம் ஆகும்.

                    இக்கருத்தின்வழி ;வைணவ சம்பிரதாயங்களில் சரணாகதி என்பது முக்கியமானது. அனைவராலும் எளிமைபட கைக்கொள்ளத்தக்கது என்பது தெரியவருகிறது. எனவே உயிர்கள் அனைத்தும் சரணாகதியாக ஆண்டவனைப் பெற்றால் கடைத்தேறுவது எளிது என்பது உறுதியாகின்றது.

                    திருமங்கை ஆழ்வார் பிரபக்தி நெறியில் நின்றமைக்கு பெரிய திருமொழியில் உள்ள ஒன்பதாம் திருமொழியைப் பேராசிரியர் எடுத்துக்காட்டுகிறார். திருமங்கை ஆழ்வார் ஒன்பது முறை தன்னை இத்திருமொழியில் அடைக்கலப்படுத்திக்கொண்டுள்ளார்.

                    தாயேதந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்

                    நோயே பட்டொழிந்தேன் உன்னைக் காண்பது ஓர் ஆசையினால்

                    வேயேய் பூம்பொழில்சூழ் விரையார் திருவேங்கடவா

                    நாயேன் வந்தடைந்தேன் நல்கியாள் என்னைக் கொண்டருளே (பெரியதிருமொழி-1028)

    என்ற பாடலின் ஒருபகுதியை எடுத்துரைத்துப் பேராசிரியர் திருமங்கையாழ்வார் அடைக்கலப்படுத்திக்கொண்டமையை அடையாளப்படுத்தியுள்ளார். ~ஆனாய் வந்தமைடந்தேன், அன்றே வந்தடைந்தேன், அலந்தேன் வந்தடைந்தேன், அப்பா, வந்தடைந்தேன், அண்ணா, வந்தடைந்தேன், அரிய வந்தடைந்தேன், ஆற்றேன் வந்தடைந்தேன், அற்றேன் வந்தடைந்தான் என்று ஒன்பது பாடல்களில் தன்னை அடைக்கலப்படுத்திக்கொண்டுள்ளார் திருமங்கை ஆழ்வார். மேற்பாடலில் தாய், தந்தை, தாரம், கிளை, மக்கள் ஆகியோரின் தொடர்பினைக் கொண்டதால் நோயே பற்றியது. அவற்றை விடுத்து, எம்பெருமானே உன்னை அடைந்தேன் என்று ஆழ்வார் குறிப்பிடுகிறார். இது அடைக்கலப்படுத்துவதில் முதல்நிலையாகும். மேலும் இவரின் அடைக்கலப்படுத்தியத்தன்மைக்கு

                    துறந்தேன் ஆர்வச் செற்றச் சுற்றம், துறந்தமையால்

                    சிறந்தேன் நின் அடிக்கே அடிமை திருமாலே

                    அறம்தான் ஆய்த்திரிவாய் உன்னைஎன மனத்தகத்தே

                    திறம்பாமல் கொண்டேன் திரு விண்ணகரானே ( பெரிய திருமொழி. 1469)

    என்ற மூன்றாம் பெரிய திருமொழிப்பாடலையும் காட்டுகிறார் பேராசிரியர். இதற்கு காஞ்சி பிரதிவாதி அண்ணங்கராசாரியார் எழுதிய உரை பின்வருமாறு. ~~ப்ராக்கருதர்களான அநுகூலரிடத்தில் அநுராகமும், ப்ரதிகூலரிடத்தில் பகையும் ஆபாஸபந்துக்களிடத்தில் உறவம் உள்ளவரையில் எம்பெருமாள் திருவடிகளில் அன்பு நிலை நிற்கமாட்டாதாதலால் அம்மூன்றும் தமக்கு ஒழிந்தமையை அருளிச் செய்து தேவரீர் திருவடிகட்கே அடியேன் தகுந்தவனாயினேன் என்கிறார். ~ப்ரித்யக்தா மாய லங்கா|| (விட்டொழித்தேன் இலங்கையை) என்ற விபீஷணாழ்வானைப்போல் அருளிச்செய்கிறார் காண்மின்|| என்ற கருத்தும் இங்கு ஒப்புநோக்கத்தக்கது.

                    அடைக்கலமாகின்றபோது, நண்பர்கள், பகைவர்கள், உறவுகள் ஆகியோர்களின் உறவுகளை விட்டொழித்து கடவுளைச் சரணடையவேண்டும் என்பது இத்திருமொழி வாயிலாகப் பெறப்படும் கருத்தாகும். அடைக்கலப்படுத்திக்கொள்வதில் இது இரண்டாம் படிநிலையாகும். அடுத்து,

                    வேறாய் யான் இரந்தேன் வெகுளாது மனக்கொள்எந்தாய்

                    ஆறா வெந்நகரத்து அடியேனை இடக்கருதி

                    கூறா ஐவர்வந்து குமைக்க குடிவிட்டவரைத்

                    தேறா துன் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே|| (1464)

    என்ற பாடலில் ஐம்புலன் ஆசைகள் விடுத்து வந்த உன்னை அடைந்தேன் என்று பாடுகிறார் திருமங்கை ஆழ்வார். இதன்வழியாக அடைக்கலம் புகுமுன் ஐம்புல வேட்கையினை விட்டொழிக்கவேண்டும் என்று தெரிகிறது. ~~படைப்புக்காலத்தில் என் நன்மைக்காக என்னிடத்தில் குடியேறியுள்ள ஐம்பலன்களும் என்னை மிகவும் துன்புறுத்துகின்றன. அவற்றை  நம்பாமல் உன்னிடம் சரண் புகுகின்றேன். காத்தருள்க|| என்று இப்பாசுரத்திற்கு விளக்கம் தருகிறார் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார். இது மூன்றாம் படிநிலையாகும்.

                    நைமிசாரண்யத்து எம்பெருமானைப் பாடும்போதும் ~திருவடி அடைந்தேன்| என்று குறிப்பிட்டுப் பாடுகிறார் திருமங்கை ஆழ்வார்.

                    வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து பிறர்ப்பொருள்தாரம் என்றிவற்றை

                    நம்பினார் இறந்தால் நமன் தமர்ப்பற்ற எற்றி வைத்து எரியெழுகின்ற

                    செம்பினாலியன்ற பாவையைப் பாவீ தழுவென மொழிவதர்க்கஞ்சி

                    நம்பனே வந்துத் திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்

    என்ற பாடலில் இழிவான செயல்களில் இருந்து மீண்டு பரம்பொருளை வந்தடைந்தேன் என்று ஆழ்வார் குறிப்பிடுகிறார். தம் மனைவியைத் துறந்து, பிறன் மனைவி, பொருள் இவற்றை விரும்பும் ஒருவன் இறந்தால் அவனை எமதூதர்கள் வந்து இழுத்துச்சென்று,  செம்பின் குழம்பினால் செய்யப்பெற்ற தீப்பற்றி எரிகின்ற பொம்மையைக் கொடுத்துத் தழுவச் சொல்வார்கள் என்று தண்டனை அளிக்கப்பெறும் என்று ஆழ்வார் குறிக்கிறார்.. அதற்கு அஞ்சி நம்பன் திருவடி அடைந்தேன் என்று குறிக்கிறார் ஆழ்வார். இது நான்காம் படிநிலையாகும். பாவச்செயல்களைச் செய்பவன் பாவி. அவனை அழுத்திக் குறிக்க இப்பாசுரத்தில் பாவீ என்று நீட்டல் விகாரம் அளிக்கப்பெற்றுள்ளது. பாவங்களில் இருந்து நீங்கி நிற்பது என்பது அடைக்கலப்படுத்துவதில் நான்காம் நிலையாகும்.

                    ஆழ்வாரின் பாடல்களை, தாய், தந்தை, மக்கள், நண்பர், எதிரிகள்,சுற்றம், ஐம்புலன்கள் ஆகிய தொடர்பினை அறுத்துக் கொண்டால் அடைக்கலம் பற்றுவது எளிது என்ற நிலையில் பேராசிரியர் வரிசைப் படுத்தித் தந்துள்ளார். மேலும் பாவச் செயல்களைப் புரியாது அதிலிருந்து மீண்டு ஆண்டவனை அடைக்கலமாகவேண்டும் என்ற நிலையையும்  ஆழ்வார் காட்டுவதை வெளிப்படுத்தியுள்ளார் பேராசிரியர். மேற்சுட்டப்பெற்ற நான்கு படிநிலைகளைக் கடந்தால் பரம்பொருளை அடைக்கலமாகலாம்.

    நம்மாழ்வாரின் அடைக்கலநிலை

                    திருமங்கை ஆழ்வாரின் அடைக்கல நிலையை எடுத்துரைக்க வந்த பேராசிரியர், அதனுடன் நம்மாழ்வார் தம்மை அடைக்கலப்படுத்திக் கொண்ட நிலையையும் எடுத்துரைக்கிறார். பேராசிரியர் ந.சுப்புரெட்டியாரின் உள்ளம் நம்மாழ்வார் பாடல்களில் தோய்ந்தது என்பதற்கு இப்பகுதி சான்றாகிறது. ~~சரணாகதித் தத்துவத்தின் தந்தை போன்றவர் பிரபந்தர்களின் தலைவராக விளங்கும் நம்மாழ்வார். அவர் தம்முடைய திருவாய்மொழியில் ~நம்பெருமான் அடிமேல் சேமங்கொள் தென்குருகூர்;ச்சடகோபன்|, (5.9.11) என்றும், கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்;ச்சடகோபன் (5.8.11) என்றும், தம்மை அறிமுகப்படுத்திக்கொள்கிறார். ~எனக்கு நின் பாதமே சரணாகத் தெந்தொழித்தேன்|| (5.8.11) என்று எம்பெருமான் தமக்குச் சரணாக அமைந்தமையையும் ~உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே| (6.10.10) என்று தாம் எம்பெருமானின் கழலிணைகளில் சரணாகப் புகுந்தமையையும் புலப்படுத்துகின்றார்|| (கலியன் குரல், ப. 177)  என்ற குறிப்பு நம்மாழ்வாரின் சரணாகதி நிலையை எடுத்துரைப்பதாக உள்ளது. வைணவத்தில் மிக முக்கியமான பக்தி நிலை பிரபக்தி நிலை என்பதை இக்கருத்துகள் உணர்த்துகின்றன. இவ்வாறு சரணாகதி நிலையின் பெருமை பற்றியும் அதனை அடைய உயிர்கள் தொடர்பற்று இருக்கவேண்டிய நிலையையும் திருமங்கை ஆழ்வாரின் வாக்கின் வழியாக எடுத்துரைக்கிறார் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.

    பிரபத்தி செய்வோருக்கு வேண்டப்பெறுவன

                    பிரபத்தி செய்வோருக்கு இரு நிலைகள் வேண்டப்பெறுகின்றன. அவை. 1. ஆகிஞ்சந்யம், 2. அநன்னியகதித்துவம் என்பனவாகும்.

    ஆகிஞ்சநயம்

    ஆகிஞ்சநயம்; என்பது, கன்ம ஞான பக்திகளாகின்ற மற்ற உபாயங்களின் தொடர்பற்று இருக்கை. அதாவது முன்னர் சொன்ன தாய்,தந்தை, பிள்ளைகள், உறவுகள். ஐம்புலன்கள் தொடர்பற்று இருத்தல். இவை திருமங்கை ஆழ்வார் வாக்கின் வழியாகவே இக்கட்டுரையில் விவரிக்கப்பெற்றுள்ளன.

    அநன்னியகதித்துவம்

                    அநன்னியகதித்துவம் என்பது ஆன்மா பதிகாப்பிற்கு எம்பெருமாளைத் தவிர வேறொரு காக்கும் பொருள் அற்றிருக்கை. இதற்கு திருமங்கை ஆழ்வாரின் ஒரு பாடலைச் சான்றாக்குகிறார் பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார்.

                    குலந்தானெத்தனையும் பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்

                    நலந்தானொன்றுமிலேன் நல்லதோர் அறம் செய்துமிலேன்

                    நிலம்தோய் நீள முகில்சேர் நெறியார் திருவேங்கடவா

                    அலந்தேன் வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே (1031)

    என்ற பாடலில் எம்பெருமானைத் தவிர வேறுயாரும் என்னை ஆட்கொண்டருள இயலாது என்று தெளிந்து உரைக்கிறார் திருமங்கையாழ்வார்.

                    இவ்வகையில் கலிகாலத்தில் கலியன் குரல் கொண்டு எம்பெருமானை அடைய சரணாகதியே சிறந்தவழி என்று காட்டுகிறார் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார்.

    Share
  • போயரின மக்களின் நாட்டுப்புற விளையாட்டுக் கலைகள்

    க.பிரகாஷ், எம்.ஏ எம்.பிஃல், தொழில் நுட்பக் கள ஆய்வுப் பணியாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கழைக்கழகம், கோயம்புத்தூர் – 46


    தருமபுரி மாவட்டத்திற்கு  உட்பட்ட அரூர் வட்டத்தைச் சேர்ந்த சந்தப்பட்டி ஊராட்சி மற்றும் சந்தப்பட்டி கிராமம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் தெலுங்குமொழி பேசும் போயர் இன மக்களின் விளையாட்டுக் கலைகளும், பிற இன மக்களின் விளையாட்டுக் கலைகளும், வேறுப்பட்டுக் காணப்படுகிறது. சந்தப்பட்டி கிராமப் பகுதிகளில் வசிக்கும் போயர் இன மக்கள் ஒரு சிலர் வெளியூருக்குச் சென்று கூலித் தொழில், கட்டிடம் கட்டுதல், கல் கட்டுதல், விவசாயம் போன்ற தொழில்கள் செய்து வருகின்றனர். இவர்கள் விழாகாலங்களில் மட்டுமே சொந்த ஊருக்கு வருவதுண்டு. இங்கு படிக்கும் சில குழந்தைகள், இளைஞர்கள் மட்டுமே உள்ளுரில் இருக்கின்றனர்.  மற்றவர்கள் எல்லாம் வெளியூரில் இருப்பதால், தைப் பொங்கல், புரட்டாசி தேர் திருவிழா,  ஊர் திருவிழா, தீபாவளி, ஆடிப் பண்டிகை, போன்ற விழாகாலங்களில் ஊருக்கு  வருகின்றார்கள். அவ்வாறு விழாகாலங்களில் வரும் குழந்தைகள் ஒரு சில  விளையாட்டுகளைத்  தொடர்ந்து விளையாடுவதுண்டு. ஒவ்வொரு காலக்கட்டத்திற்கு  ஏற்றவாறு விளையாட்டுக்களை விளையாடுவார்கள். மழை காலம், வெயில்காலம், போன்ற காலங்களில் விளையாட்டை ஆடுவதுண்டு. அவ்விளையாட்டுகள், குரங்காட்டம், மரம் மரம், அஞ்சாங்கள், அச்சுக்கல், கோலி, செம்பா, இது போன்ற விளையாட்டுக்கள் ஆடி வருகின்றனர். இவ்வகை விளையாட்டில் ஒரு சில விளையாட்டு வகைகளை காண்போம்.

     குரங்கு ஆட்டம்Kuranga

    குரங்காட்டம் என்பது ஒரு மரத்தை விட்டு இன்னொரு மரத்திற்கு தாவுவது  குரங்காட்டம் என்கின்றனர். இவ்வாட்டத்தை தொடங்குவதற்கு முன்பு எத்தனை நபர்கள் ஆட இருக்கின்றார்களோ அத்தனைப் பேரும் “ஒப்புக்கைச் சப்பா” (சாபூத்ரி) போட்டு அவுட்டாகும் ஒரு நபரை தேர்ந்தெடுப்பது உண்டு. இதில் மூன்று பேர் அல்லது ஐந்து பேர் ஒப்புக்கைச் சப்பா போடும்போது இருவர் உடைய கரங்கள் கருப்பாகவும், ஒருவருடைய கைகள் வெள்ளையாக இருந்தால், வெள்ளையாக இருக்கும் ஒரு நபர் தகுதியானவர் என்று குறிப்பிடுகின்றனர். பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் விளையாட இருக்கும் மரங்களில் ஏறிவிடுவார்கள். தோற்றவராக இருக்கும் ஒரு நபர் குறிப்பிட்ட தூரத்தில் நிற்கவைத்து அவர்கள் விளையாடும் மரங்களின் அருகில் ஒரு வட்டம் வரைந்து, அந்த வட்டத்தில் இருந்து இரண்டடி நீளம் கொண்ட குச்சியினை வீசுவார். பிறகு வீசிய குச்சியினை பிடித்துவிட்டால், வீசும் இந்த நபர் அவுட்டாகிவிடுவார். அவுட்டான அந்த நபர் வீசிய குச்சியினை எடுத்து கொண்டு வந்து அந்த வட்டத்தில் வைத்துவிட்டு மரத்தில் இருக்கும் நபர்களை தொட வேண்டும். அப்படி தொட வரும்போது மரத்தில் இருக்கும் நபர்கள் அருகில் இருக்கும் மரங்களுக்கு தாவுவதுண்டு. ஒரு சிலர் கீழே இறங்கி அந்தக் குச்சியினை தொடுகின்றனர். தொட்டவுடன் மீண்டும் அந்தக் குச்சியினை வீசிவிட்டு மரம் ஏறிவீடுவார். இப்படி இவ்விளையாட்டு தொடர்ந்து கொண்டே வரும்.

     Maramமரம் மரம் ஆட்டம்

    மரம் மரம் விளையாட்டு என்பது ஒரு மரத்தை விட்டு இன்னொரு மரத்தைப் பிடிப்பது மரம் மரம் விளையாட்டு என்கின்றனர். இவ்விளையாட்டை இருபாலர் எத்தனை பேர் வேண்டுமானாலும் ஆடலாம். விளையாட இருக்கும் நபர்கள் அனைவரும் “ஒப்புக்கைச் சப்பா” (சாபுத்ரி) போட்டு தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். தேர்ந்தெடுக்காத நபர் அவுட்டாக அறிவிக்கப்படுகின்றார். பிறகு அவர்களுக்குப் பிடித்த ஒரு மரத்தில் முதலில் விளையாட தொடங்குவார்கள். மரத்தை பிடித்துள்ள நபர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு வினாவை எழுப்புவது உண்டு.

                “மரம் மரம் எந்த மரம்”

                 மரம் மரம் அசோக மரம்” – என்று குறிப்பிடுவதுண்டு.

    அங்கு விளையாட இருக்கும் இடத்தில் எத்தனை மரங்கள் இருக்கின்றனவோ அத்தனை மரங்களின் பெயர்களை சுட்டிக்காட்டுவது உண்டு. அப்படி சுட்டிக்காட்டும் மரங்களை ஓடிச் சென்று பிடிக்கவேண்டும். அப்படி பிடிக்க ஓடும் போது தொட்டுவிட்டால் அவுட்டாகி விடுகின்றனர். இப்படி இவ்விளையாட்டும் தொடர்ந்து கொண்டே வரும்.

    Koliகோலி ஆட்டம்

    கோலி விளையாட்டுக்களில் சில வகைகள் உண்டு. அவை!

    பேந்தா

    அஞ்சல் அறுவல்

    கொத்தாட்டம்

    என்பது போன்ற வகைகளும் உண்டு.

     

    பேந்தா

    இவ்விளையாட்டை எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம். முதலில் விளையாட இருக்கும் நபர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து, செவ்வக வடிவில் ஒரு பேந்தாவை வரைந்து அதை இரண்டாகப் பிரித்து, அங்கிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவில் நீளமாக கோடு வரைந்த பிறகு, அனைவரும் அக்கோட்டில் நின்று பேந்தாவை நோக்கி கோலியை உருட்டவேண்டும். பிறகு அந்த கோலிகள் யாருடைய கோலி பேந்தாவுக்குப் பக்கத்தில் இருக்கிறதோ, அந்த அணியினர் விளையாட தொடங்குகின்றனர். எதிரணியினர் பேந்தாவில் கோலிகளை வைக்க வேண்டும். பின்னர் பேந்தாவில் உள்ள கோலிகளை நோக்கி கோலிகளை உருட்டிவிடுவார்கள். உருட்டிய கோலிகள் பேந்தாவில் உள்ள ஏதாவதொரு  கோலியை அடித்துவிட்டால் அது முதல் ஆள் அடி என்றும், இரண்டாவதாக உருட்டும் நபருடைய கோலி அடித்துவிட்டால் இரண்டாவது ஆள் அடி என்றும் குறிப்பிடுவது உண்டு. முதல் ஆள் அடிக்கும் கோலியின் நபர் மட்டுமே முதலில் அடிக்க வேண்டும். இரண்டாவதாக ஆள் அடித்த கோலியின் நபர் இரண்டாவதாகவே அடிக்க வேண்டும். இப்படி அடிப்பதற்கு பதிலாக மாற்றி அடித்துவிட்டால்  அந்த அணி அவுட்டாகிவிடும். இப்படி அடித்த கோலிகளையும், மற்ற கோலிகளையும் அந்த நபர்களுக்குப் பிரித்துவிடுவது உண்டு. பிரித்து விட்ட கோலியின் நபர்களே அந்த கோலியினை அடிக்க வேண்டும். இப்படி அடித்து ஒரு குறிப்பிட்ட தொலைவில் நீளமாக கோடு வரைந்துள்ளனர். அக்கோட்டில் கோலிகளை நிற்காமல் அடிக்க வேண்டும். அப்படி அடித்துவிட்டால் அவுட்டாகிவிடுகின்றனர். நிற்காமல் அக்கோட்டை தாண்டி அடித்து அவுட்டாகும் வரை ஆடி கொண்டே இருப்பார். இப்படி ஆடும் பொழுது அந்த அணியில் யாருமே அடிக்கவில்லை என்றால் அவுட்டாகிவிடுவார். பிறகு எதிராக ஆடிய அணியினர் அக்கோலிகளை தனது மணிக்கட்டியாலும், முழங்கையாலும் பேந்தாவை நோக்கி தள்ள (தோக்க) வேண்டும்.  இப்படி தள்ளும் போது வெற்றி பெற்ற அணியினர் பேந்தாவில் இருந்து அக்கோலிகளை மீண்டும் அடிப்பார். அடிக்கும்போது தடுத்துவிட்டால், “தடுத்தா எட்டடி எண்ணிப்பார்த்தா பதினாறு அடி” என்று சொல்லி அடிப்பது உண்டு. இப்படி இவ்விளையாட்டும் தொடர்ந்து கொண்டே வரும்.

    Anjalஅஞ்சல் அறுவல்

    அஞ்சல் அறுவல் என்பது கோலி ஆட்டத்தில் ஒரு வகை விளையாட்டு. இவ்விளையாட்டை எத்தனை பேர் வேண்டுமானாலும் ஆடலாம். இவ்விளையாட்டிற்கு முதலில் ஒரு கோலி அளவிற்குக் குழியைப் பறித்து அக்குழியில் இருந்து குறிப்பிட்ட அளவிற்கு கோடு வரைந்து அந்தக் குழியை நோக்கி உருட்ட வேண்டும். அப்படி உருட்டும் கோலி குழியில் விழுந்துட்டால் தொண்ணூறு (தொம்பன்) என்றும் மற்றவர் கோலிகள் குழியில் விழுகாமல் இருந்தால் குழியை நோக்கி உருட்டவேண்டும். அப்படி உருட்டினால் ஐம்பது (அஞ்சல்) என்று குறிப்பிடுகின்றனர். இவ்விளையாட்டில் குறிப்பிடப்படும் சொற்கள்

     

                           தெலுங்கு       –           தமிழ்

                            அஞ்சல்           –           50

                            அறுவல்           –           60

                            எழுவல்            –           70

                            எட்டன்            –           80

                            தொம்பன்        –           90

                            தெசிங்             –           100

    இப்படி ஒவ்வொருவரும் கோலியை உருட்டிய பிறகு குழிக்கு அருகில் இருக்கும் நபரே முதலில் அடிக்க வேண்டும். ஒருவருடைய கோலியை இன்னொருவர் அடித்தால் பத்து என்ற கணக்கில் அடிக்க வேண்டும். குழியில் உருட்டி விட்டு அடித்தால் அஞ்சல் அறுவல் என்று அடிக்க வேண்டும். இப்படி தெசிங்கை வெற்றி பெற்றவர் பழம் ஆகிவிடுவார். இப்படி எல்லோரும் ஆடிய பிறகு தோல்வியடைந்த நபர் அக்குழியில் இருந்து முன்று அடி தன் கால்களால் அளந்து கோலியை வைக்க வேண்டும். வெற்றி பெற்றவர் அனைவரும் கோலியை உருட்டி அக்கோலியினை அடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். யாருமே அடிக்காவிட்டால் தோல்வியடைந்த நபர் கோலியை எடுத்துக் கொண்டு குழியை நோக்கி ஓடி வர வேண்டும்.

     கொத்தாட்டம்

    இதுவும் கோலி விளையாட்டின் ஒரு வகை விளையாட்டுதான். இவ்விளையாட்டை எத்தனை பேர்வேண்டுமானாலும் விளையாடலாம். இவ்விளையாட்டை யாராவது ஒருவர் விளையாட தொடங்கலாம். முதலில் மூன்று கோலிகளும், சுவர் வோரத்தில் ஒரு கோடு வரைந்து அதனுள் கோலி அளவிற்கு மூன்று குழிகள் பறிக்க வேண்டும். ஆட இருக்கும் நபர், அல்லது அனைவரும் சேர்ந்து ஓர் குறிப்பிட்ட தொலைவை தேர்ந்தெடுத்தப் பிறகு விளையாட ஆரம்பிப்பார்கள். ஆட இருப்பவர் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து இரண்டு கோலிகள் மட்டும் உருட்டி விடுவார். பின்னர் கீழே, மேலே (எதரா, மேழு – தெலுங்கு) என்று குறிப்பிட்டப் பிறகு மற்றொரு கோலியால் எதிராக ஆட இருப்பவர் குறிப்பிட்ட கோலியை அடிக்கவேண்டும். அவர் குறிப்பிட்ட கோலியை தவிர மற்ற கோலியை அடித்துவிட்டால் (பச்சா) அவுட்டாகிவிடுவார். அதே போல் அக்குழியில் விழுந்து விட்டால் ஒரு புள்ளி என்றும் அதை அடித்துவிட்டால் இரண்டு புள்ளி என்றும் குறிப்பிடுவதுண்டு.

    இவ்விளையாட்டில் குறிப்பிடப்படும் சொற்கள்

                தெலுங்கு       –           தமிழ்

                எதற்                –           கீழே

                மேழு               –           மேலே

                இஷ்டம்           –           விருப்பம்

                பச்சா               –           இரண்டு கோலியும் அடித்தல்

    Kottiகோட்டிப் புல்

    கோட்டிப் புல் ஆட்டம் என்பது நமக்குத் தேவையான அளவிற்கு (அல்லது) ஒன்றரை அடி அளவிற்கு நீண்ட குச்சியினையும், (கோட்டியினை) அறையடி அளவிற்கு சிறு குச்சியினையும் (புல்லினையும்) செய்த பின்னரே ஆடத் தொடங்குவர். இவ்வகை கோட்டிப்புல்லை எந்த வகை மரங்களிலும் செய்துகொள்ளலாம். எத்தனை பேர்வேண்டுமானாலும் ஆடலாம். எத்தனை நபர் இருக்கின்றனர் என்று பார்த்தப் பிறகு சமமாக இரண்டு அணிகளாகப் பிரிக்கின்றனர். இந்த அணியில் முதலில் ஆடத் தொடங்க இருப்பவர் புல் அளவிற்கு குழியைப் பறித்துவிட்டு, அந்தக் குழியின் முன்னாடி வைத்து  தள்ளவேண்டும் (தோக்க). அப்படி தள்ளும் போது எதிரணியினர் பிடித்துவிட்டால் புல்லை தள்ளியவர் தோற்றுவிடுவர். அப்படி பிடிக்கவில்லை என்றால் அந்தப் புல்லினை கொண்டு அக்கோட்டியின் மீது வீச வேண்டும் . அப்படி வீசும் போது அப்புல் கோட்டி மீது விழுந்துவிட்டால் அவுட். விழுகவில்லை என்றால் அப்புல்லை மூன்று முறை அடிக்க வேண்டும். முதல் முறை அடிக்கவில்லை என்றால் அவுட். முதல் முறை அடித்துவிட்டு இரண்டாவது முறை அடிக்கவில்லை என்றால் எதிரணியினர் தலை மீது அப்புல்லினை வைத்து சுத்தி கீழே போட வேண்டும். அதற்குப் பிறகு அடிக்கவேண்டும். அப்படி முதல் முறையாக அடிக்கும் போது அந்தப் புல்லை எத்தனை தடவை அடிக்கின்றாரோ, அதுவே முதலில் ஏத்துக்கப்படும். (கோட்டியால் புல்லை இரண்டு, மூன்று, நான்கு முறை தொட்டு அடித்தல்) இப்படி மூன்று முறை அடித்ததில் எவ்வளவு தூரத்தில் இருக்கிறதோ, அங்கிருந்து  தோராயமாக இருபது, ஐம்பது என்று எண்ணிக்கையில் குறிப்பிடுவது உண்டு..

    கோட்டிப் புல்லை மூன்று முறை அடிக்கும் போது அளக்கும் முறை

                மூன்று முறை அடிக்க வேண்டும்

                முதலில் அடித்தால்                  –           கோட்டி

                இரண்டு முறை அடித்தால்      –           புல்

                மூன்று முறை அடித்தால்         –           தீக்குச்சி

                நான்கு முறை அடித்தால்        –           கண் முடி

                ஐந்து முறை அடித்தால்           –           நெல்

                ஆறு முறை அடித்தால்            –           ராகி

                ஏழு முறை அடித்தால்             –           மண்

    இப்படி ஒவ்வொரு முறை அடிக்கும் போது, ஒரே முறை தொடர்ச்சியாக அடித்தால் இந்த வகையில் அளக்க வேண்டும். இப்படி இரண்டு அணிகளில்  யார் புள்ளி அதிகமாக எடுக்கின்றனரோ அவர் வெற்றி என்று குறிப்பிடுகின்றனர். வெற்றி பெற்ற அணியினர் விளையாடிய இடத்தில் இருந்து எத்தைனை பேர் ஆடினரோ அத்தனை பேரும் மூன்று முறை கோட்டியால் புல்லை அடித்து விடுவார். தோல்வியுற்றவர் அடிக்கும் போது அப்புல்லை பிடித்துவிட்டால் அல்லது பிடிக்காமல் இருந்தால்  இறுதியாக எந்த இடத்தில் புல் இருக்கிறதோ, அங்கிருந்து அப்புல்லை கையில் எடுத்துக் கொண்டு மூச்சி விடாமல் பாட்டு பாடிக் கொண்டே விளையாடிய இடத்திற்கு வந்து சேரவேண்டும். அப்படி மூச்சி விட்டால் விட்ட இடத்தில் இருந்து மீண்டும் அப்புல்லை ஒரு அடி அடித்துவிடுவார். அங்கு இருந்து வேரொருவர் எடுத்துக் கொண்டு வருவார், வந்த பிறகு தோல்வியடைந்தவர் மீண்டும் ஆட தொடங்குவார்கள்.

    இவ்விளையாட்டில் குறிப்பிடப்படும் சொற்கள்

                தெலுங்கு                   –           தமிழ்

                தோக்கு                       –           தள்ளு

                சினுக்கு                       –           தொடர்ச்சி

                குடுகு                          –           ஓடு

                கொளுசு                      –           அளவு

    Sanangolசாணாங்கோல்

    சாணாங்கோல் என்பது நம் உயரத்திற்கு ஒரு குச்சியினை  (கோல்) எடுத்து கல் மீது வைத்து ஆடுவது சாணாங்கோல் என்கின்றனர். இவ்விளையாட்டை எத்தனைப்பேர் வேண்டுமானாலும் விளையாடலாம்.  விளையாட்டை முதலில் “ஒப்பக்கைச் சப்பா” போட்டு ஆவுட்டான நபரை தேர்ந்தெடுத்தப் பிறகு விளையாட தொடங்குவார்கள். இதில் கடைசியாக யார் விளையாட வருகின்றார்களோ அவர் அவுட்டாக அறிவிக்கப்படுகின்றனர். பின்னர் விளையாட தொடங்குகின்றனர். விளையாட இருக்கும் அனைவரும் எந்த குச்சியினை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.  பிறகு இரண்டு கைகளால் அக்குச்சியினைத் தூக்கிவைக்க வேண்டும். தூக்கிவைத்தப் பிறகு யாராவது ஒரு நபர் அக்குச்சியினைத் தனது குச்சியால் தூக்கி எரிந்து விட்டு பின்னர் அவருடைய குச்சியினை  கல் மீது வைக்க வேண்டும். அப்படி வைக்கவில்லை என்றால் அவுட்டாகிவிடுவார்.  இப்படி அக்குச்சியினை நகர்த்தி கொண்டு இருப்பார். நகர்த்தும் போது கல் மீது வைத்துக் கொண்டு இருக்க வேண்டும். இப்படி இவ்விளையாட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்கின்றனர்.

     Aabiyamஆபியம் மணியாபியம்

    ஆபியம் மணியாபியம் என்பது ஆண்கள் மட்டுமே விளையாடக்கூடிய விளையாட்டாகும். இவ்விளையாட்டை முதலில் “ஒப்பக்கைச் சப்பா” போட்ட பிறகு அவுட்டான ஒருவரை குணியவைத்து ஒவ்வொருவரும் அவரை தொடாமல் தாண்டவேண்டும். தாண்டும் போது ஒரு பாட்டைப் பாடிக் கொண்டே தாண்டுவதுண்டு. அப்பாட்டு!

                “ஆபியம்

                 மணி ஆபியம்

                 ரெட்டைக் கொக்கு

                 லட்சத்திர மண்ணள்ளி

                 ஒத்தக் காலா, இரட்டைக்காலா

                 லடி லடி குண்டியில் அடி”

    ஆபியம், மணி ஆபியம், இரட்டைக் கொக்கு, இவை மூன்றும் பாடும்போது ஒரே மாதிரியாகவே இருக்கும். லட்சத்திர மண்ணள்ளி என்று சொல்லி தாண்டும்போது மண்ணை அள்ள வேண்டம். அள்ளாவிட்டால் தாண்டியவர் அவுட்டாகிவிடுவார். ஒத்தக் கால் அடி, இரட்டைக் கால் அடி என்று சொல்லி தாண்டும் போது, ஒரு கால் உதைக்கச் சொன்னால் ஒரு காலிலும், இரட்டைக் கால் உதைக்கச் சொன்னால் இரட்டைக் காலிலும் உதைக்க வேண்டும். லடி லடி குண்டியிலடி என்று சொல்லி தாண்டும் போது குணிந்து இருக்கும் அவரது குண்டியில் உதைத்துவிட்டு தாண்ட வேண்டும். அவர் குறிப்பிட்டதை செய்யவில்லை என்றால் அவுட்டாகி விடுகின்றர். இப்படி இவ்விளையாட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்கின்றனர்.

     Nondiநொண்டி

    நொண்டி விளையாட்டு என்பது ஆண், பெண் இருபாலரும் ஒருகாலை மடக்கிக் கொண்டே ஆடும் ஆட்டத்திற்கு நொண்டி என்கின்றனர். இவ்விளையாட்டை இரண்டு பேர், அல்லது  நான்கு பேர் (இரண்டு அணியாக) பிரித்து ஆடுவதுண்டு. இரண்டு அணியில் ஒரு அணி விளையாடத் தொடங்கும் போது, முதலில் ஒரு கோடு (பட்டை) வரைந்து அதை நான்காகப் பிரித்து விடுகின்றனர். பின்னர் ஆட இருக்கும் ஒருவர் விளையாட வைத்திருக்கும் கல்லை (சில்லியை) எல்லை கோடு தாண்ட வீச வேண்டும். வீசிய பிறகு ஒவ்வொரு பாகத்திலும் கோட்டை மிதிக்காமல் நொண்டிக் கொண்டு அந்தக் கல்லை மிதிக்கவேண்டும். அப்படி மிதிக்கவில்லை என்றால் அவுட்டாகிவிடுவார். இக்கல்லை வீசும் போது   ஒவ்வொரு தடவையும் ஒன்று குறிப்பிடுவதுண்டு. அவை!

                    தெலுங்கு                   –           தமிழ்

                    விசரா                         –           வீசுதல்

                    ஒன்னா                       –           ஒன்று

                    ரெண்டா                    –           இரண்டு

                    மூனா                          –           மூன்று

                    நாலா                          –           நான்கு

                    வெள்ளையா             –           உள்ளங்கை

                    கருப்பா                      –           கையின் மேல்புறம்

                    காலா                          –           கால்

                    தலையா                     –           தலை

     

    முதலில் கல்லைக் (சில்லி) கொண்டு பட்டையின் எல்லைக்கு வீசி விட்டு அதை மிதிப்பது வீசுதல் (விசரா) என்கின்றனர்.

    ஒன்னா என்பது வீசுதல் முடிந்த பிறகு முதல் பட்டையில் கல்லைப் (சில்லி) போட்டு மிதிப்பதற்கு ஒன்று (ஒன்னா) என்கின்றனர்.

    ரெண்டா என்பது ஒன்னா முடிந்த பிறகு இரண்டாவது பட்டையில் கல்லைப் (சில்லி) போட்டு மிதிப்பதற்கு இரண்டாம் என்கின்றனர்.

    மூனா என்பது ரெண்டா முடிந்த பிறகு மூன்றாவது பட்டையில் கல்லைப் (சில்லி) போட்டு மிதிப்பதற்கு மூன்றாம் என்கின்றனர்.

    நாலா என்பது மூனா முடிந்த பிறகு நான்காவது பட்டையில் கருவியைப் (சில்லி) போட்டு மிதிப்பதற்கு நான்காம் என்கின்றனர்.

    வெள்ளையா என்பது நான்கு பட்டைகளில் கல்லைப் (சில்லி) போட்டு மிதித்தப் பிறகு வலது உள்ளங்கையில் கல்லை (சில்லி) வைத்து கையை நீட்டிக் கொண்டு பட்டையை மிதிக்காமல் நொண்டிக் கொண்டு நான்காவது பட்டைக்கு வந்து சேர்ந்த பிறகு, அங்கு இருந்து அந்தக் கல்லைக் கீழே போட்டு மிதிக்க வேண்டும்.

    கருப்பா என்பது வெள்ளையா போல் வலது கையின் மேல்புறத்தில் அந்த கல்லை (சில்லி) வைத்துக் கையை நீட்டிக் கொண்டு பட்டையை மிதிக்காமல் நொண்டிக் கொண்டு நான்காவது பட்டைக்கு வந்து சேர்ந்த பிறகு, அங்கு இருந்து அந்தக் கல்லைக் கீழே போட்டு மிதிக்க வேண்டும்.

    காலா என்பது பெருவிரல் இடையில் அந்தக் கல்லை (சில்லி) வைத்துக் கொண்டு பட்டையை மிதிக்காமல் நொண்டிக் கொண்டு நான்காவது பட்டைக்கு வந்து சேர்ந்த பிறகு, அங்கு இருந்து அந்தக் கல்லைக் கீழே போட்டு மிதிக்க வேண்டும்.

    தலையா என்பது இவை அனைத்தும் முடிந்தப் பிறகு தலையில் வைத்துக் கொண்டு பட்டையை மிதிக்காமல் நொண்டிக் கொண்டு நான்காவது பட்டைக்கு வந்து சேர்ந்த பிறகு, அங்கு இருந்து அந்த கல்லைக் கீழே போட்டு மிதிக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு முறையும் செய்தால் நான்கு பட்டையில் ஒரு பட்டை பழம் பெறமுடியும். பழம் பெற்ற பிறகு எதிரணியினர் அப்பழத்தை மிதிக்காமல் தாண்டுதல் வேண்டும். இது போல் ஒவ்வொரு முறையும் விளையாடிக் கொண்டு வந்த பிறகு எல்லாப் பட்டையும் பழம் பெறுவது இவ்விளையாட்டின் நோக்கமாகும்.

    இப்படி ஒவ்வொரு விளையாட்டும் வித்தியாசமாகவும், வேறுபாடின்றியும், புதுமையாகவும் விளையாடிக் கொண்டு இருந்த இம்மக்கள் தற்போது ஒருசில விளையாட்டுகள் மட்டுமே விளையாடிக் கொண்டு இருக்கின்றனர். போயர் இன மக்களின் நாட்டுப்புற விளையாட்டு வகைகள் அதிக அளவிற்கு இருந்தது. இவ்வகை விளையாட்டுகள் விளையாடியதால் உடல் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க பயனுள்ளதாக இருந்தது. இனி வரும் காலக்கட்டத்திற்கு இவ்வகை விளையாட்டுகள் இருக்கும் என்பதற்கு சாத்திய கூறு இல்லை. இவர்கள் விளையாடிய விளையாட்டுகளில் இன்றைய காலகட்டத்தில் விதிகள் மாற்றப்பட்டு வருகிறது. இக்கால கட்டத்தில் விளையாட்டுகளை விளையாடுவதற்கு இயற்கைச் சூழல் இருந்தது. இன்றைய நாகரிக வளர்ச்சியின் காரணமாக இவ்வகை விளையாட்டுக் கலைகள் மறைந்து கொண்டு இருக்கின்றது. இனி வரும் எதிர்கால சந்ததியினருக்கு இவ்விளையாட்டுக் கலைகளை எடுத்து விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    தகவலாளர்

    த.கொடியரசன்           – 15

    த.சந்தோஷ்                 – 12

    க.சின்னதுரை             – 21

    க.குமரேசன்                – 23

    வே.லோகநாதன்         – 22

    க.சதிஷ்                       – 24

    Share
  • இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-20

    உன்னைக்குறைகூறல் நேர்மையாமோ?

    மீனாட்சி பாலகணேஷ்

    ஏழெட்டுச் சிறுமியர்; தமது வழக்கமான சிற்றில் விளையாட்டை மும்முரமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அழகான சிறிய வீட்டைக்கட்டுகிறாள் ஒருத்தி. மலர்களாலும் கிளிஞ்சல்களாலும் சோடனைசெய்கிறாள் இன்னொரு சிறுமி. பக்கத்தில் அழகான பள்ளம் ஒன்றினைத் தோண்டி, அதில் நீரைநிரப்பித் தாமரைக்குளம் அமைத்துவிட்டாள் வேறொருத்தி. தாமரை எனும் பெண் ஓடோடிச்சென்று பக்கத்துக்குளத்திலிருந்து மலர்ந்த தாமரைமலர்கள் இரண்டினைப் பறித்துவந்து அதில் மிதக்கவும் விட்டுக்களிக்கிறாள். எல்லாரும் தாமிழைத்த இச்சிறு வீட்டைச் சுற்றிநின்று பாடிக்களிக்கிறார்கள்: கைகொட்டி ஆடுகிறார்கள்!

    ‘ஆத்தோரம் வீடுகட்டி, அழகான தோட்டம் வைத்து
    பாத்திருந்தோம் கண்ணாலே பரவசமா இந்நாளே!
    தாமரைப் பூங்குளமாம் அதிலேதுள்ளும் மீன்களுமாம்
    நாமெல்லாம் ஆடிடுவோம் நன்றாகப் பாடிடுவோம்’

    திடீரென்று ஓடோடி வருகிறான் ஒரு குறும்புக்காரச்சிறுவன். உயர்ந்து எழும்பி இவர்கள் சிற்றிலைச்சிதைக்கக் காலைத்தூக்கியபடி தாவுகிறான். எல்லாரிலும் பெரியவளான மங்கைக்கு இத்தகைய எதிர்ப்புகளை அவ்வப்பொழுது எதிர்பார்த்தே பழக்கம். தக்கசமயத்தில் சென்று அந்தச்சிறுவனை- அவன் பெயர் குமரன்- பின்புறத்திலிருந்து கட்டிப்பிடித்துக் கொண்டு அவன் தாவுவதைத் தடுத்துவிடுகிறாள்.
    மற்ற சிறுமிகளுக்கெல்லாம் ஒரே ஆத்திரம். அவனை அடிக்காதகுறைதான். அவனோ பெரிய இடத்துக்குழந்தை. வயதிலும் மிகச்சிறியவன். ஐந்தேபிராயம் நிரம்பியவன். அதனால்தான் யோசிக்கிறார்கள். சிவகாமிக்கு அழுகையே வந்துவிட்டது. சிலகணங்களில் அவர்கள் அழகான சிற்றில் சிதைந்திருக்குமே! காலையிலிருந்து முதுகெல்லாம் நோகும்படி, மணலைக்கொழித்துப் பார்த்துப்பார்த்து அமைத்த சிற்றிலல்லவோ?

    தன்முயற்சி தடைப்பட்டு விட்டதால், கைகால்களை உதைத்துக்கொண்டு, மங்கையின் பிடியிலிருந்து விடுபட எத்தனிக்கும் குமரனை அவள் இப்போது தன் இடுப்பில் எடுத்துக்கொண்டு, நல்லவார்த்தைகள் சொல்லி, கையில் ஒரு கொய்யாக்கனியைக் கொடுத்து, மரத்துக்கிளியைப் பிடித்துத்தருகிறேன் என ஆசைகாட்டி சமாதானம் செய்கிறாள். மற்ற சிறுமியர் கேட்கின்றனர்: ஐந்துபிராயத்துக் குழந்தைக்குப் புரியுமோ புரியாதோ அவர்கள் சொல்வது; ஆனால் அவன் சிவனின் குமரனல்லவா? பராசக்தி அன்னையின் மைந்தனல்லவா? தகப்பன் சாமியல்லவா? ஏன் புரியாது? அவர்கள் கேட்பதனை நாமும் செவிமடுப்போமா?



    “உன்தாய் பெரும் தவம்செய்து உன்னைப் பெற்றெடுத்தாள் குமரா! எல்லாக்கடவுள்களையும் அழைத்துக்காப்பிட்டு உன்னைத் தொட்டிலில் கண்வளர்த்தினாள். நீ தவழ்ந்து உன் திருமுகத்தை நிமிர்த்திச் செங்கீரை மொழிவதனைக்கேட்டும், ஆடுவதனைக்கண்டும் இன்புற்றாள். தாலாட்டுப்பாடி உறங்கவைத்தாள். பின் நீ எழுந்து உட்கார்ந்த பருவத்தில் உன்னை இருகரங்களையும் குவித்துச் சப்பாணி கொட்டவைத்தாள் அல்லவோ? உன் கொழுவிய சிவந்த கன்னங்களில் முத்தமிட்டும் மகிழ்ந்தாள். நீ நடைபழகும் காலத்தில், “அப்பா வா,” என உன்னை அழைத்து, கொஞ்சிக்குலாவி மகிழ்ந்து எடுத்து அணைத்துக்கொண்டாள். உனக்கென்ன குறைவைத்தாள்? ஒன்றும் இல்லை.

    “பின்னர் அந்திப்பொழுதில் வானில் உலாவரும் அம்புலியைக் காட்டிச் சோறும் ஊட்டினாள். நீ சிறிது வளர்ந்ததும், வெளியே வீதியில்போய் விளையாடி வா அப்பா என்று உன்னை அனுப்பிவைத்தும் விட்டாள். உன் குறும்புப்புத்தியை அவளறியாது இருப்பாளா என்ன? இவ்வாறு எங்கள் சிற்றிலைச் சிதைக்க நீ முயன்றதனால் உன்னை எதற்காகக் குறைகூறுவது? இவ்வாறு உன்னை வளர்த்த தாயையல்லவோ நாங்கள் நொந்துகொள்ள வேண்டும்? இப்போதாவது கூறுகிறோம். அவள் அன்னை பராசக்தி; அவளை ‘பிள்ளையை வளர்த்த அழகைப்பார்,’ என்று குறைகூறுதல் நன்றாகவா இருக்கும்? குறுக்குத்துறை எனும் இவ்வூரில் வாழும் நிமலனே, எங்கள் சிற்றிலைச் சிதைக்காதே,” என வேண்டுகின்றனர்.

    குறுநகைபுரியும் இளங்குமரன் இவர்கள் வேண்டுதலுக்கு இரங்கமாட்டானா என்ன?

    முந்தித் தவமே புரிந்துன்னை
    முயன்று பெற்றுக் காப்பாற்றி
    முகமே தூக்கிச் செங்கீரை
    மொழிந்தே ஆடத் தாலாட்டிக்
    குந்திக் கரத்தால் சப்பாணி
    கொட்டச் செய்து முத்தமிட்டுக்
    கூவியழைத்து வருகவெனக்
    கொஞ்சிக் குலவி யெடுத்தணைத்தே
    அந்திப் பொழுதைக் கடந்துவரும்
    அம்பு லிகாட்டிப் பின்னருனை
    ஆடி நீவா எனமறுகில்
    அனுப்புந் தாயர் தமைவிடுத்து
    நொந்திங் குன்னைக் குறைகூறல்
    நேர்மை யாமோ உணர்ந்திதனை
    நீர்சூழ் குறுக்குத் துறைவாழும்
    நிமலா சிற்றில் சிதையேலே
    (குந்தி- அமர்ந்து; மறுகில்- வீதியில்)

    (குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ்- வித்துவான் தி. சு. ஆறுமுகம். சிவதாசன், திருநெல்வேலி)

    ~~~~~~~~~~

    சரி; கதையிலிருந்து இலக்கியத்துக்குள் சிறிது புகுவோம். பெண்கள் கூற்றாக, சிற்றில்பருவத்துப் பிள்ளைத்தமிழ்ப்பாடலை இயற்றிய புலவர் வித்துவான் தி. சு. ஆறுமுகம் சிவதாசன் ஆவார். இது குறுக்குத்துறையில் வாழும் முருகப்பிரான்மேல் இயற்றப்பட்டது. இப்பாடலின் இலக்கியநயம் யாதெனில், ஆண்பால் பிள்ளைத்தமிழின் எட்டாவது பருவமாக அமையும் சிற்றில்பருவத்திற்கு முன்பு ‘சிற்றிலை அழிக்காதே’ எனச்சிறுபெண்கள் வேண்டும் பாடலில், இயல்பாகவே வரும்விதத்தில் பிள்ளைத்தமிழின் மற்ற முதல் ஏழுபருவங்களையும் (காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி ஆகிய ஏழுபருவங்கள்) வரிசைப்படுத்திக் கூறியிருப்பதுதான். பாடலின் பொருளோடு இவை இயைந்து வருவது அருமையிலும் அருமை. இவ்விலக்கிய நயங்களுக்காகவே பிள்ளைத்தமிழ் நூல்களை ஊன்றிப்படிக்கவேண்டும்!

    ~~~~~~~~~

    இளங்குமரனைக் கண்ணுற்ற சிறுமியருக்கு அவன்பால் தாய்ப்பாசம்தான் மிகுகிறது! “ஏதோ அறியாப்பிள்ளை! சிற்றிலை அழிக்க முற்பட்டான். போனால் போகட்டும். நம்முடன் விளையாடச் சேர்த்துக்கொள்வோம்,” என்கிறாள் சிவகாமி.

    “வா குமரா! எங்களுடன் அமர்ந்து நாங்கள் சமைத்த இந்தச் சிறுசோற்றை உண்டு மகிழ்வாய்.” என்று பெருந்தன்மையுடன் விருந்தோம்புகிறாள் செங்கமலம். அவள், தன்அன்னை இவர்கள் சிற்றில் விளையாட்டிற்காகவெனப் புதியதாகச் செய்தளித்த வெல்லப்பணியாரம், கடலைச்சுண்டல் முதலானவற்றை, வட்டிலில் கொண்டுவந்திருக்கிறாள். மங்கை புளியஞ்சோறு கொண்டுவந்திருக்கிறாள். விளையாட வரும்வழியில் தகப்பன்மார்களைக்கேட்டு, தோட்டத்திலிருந்து சில மாங்கனிகளையும், இளம் நுங்குகளையும் கூடக்கொணர்ந்துள்ளனர் இச்சிறுமியர். திட்டமிடுவதில் தம் தாய்மார்களையும் விஞ்சிவிட்டனர்போலும்! இலைகள் போடப்பட்டு பரிமாறப்பட்ட உணவு சிறுவர்கள் வாயில் நீர் ஊறச்செய்கிறது! ஆனந்தத்தை உண்டுபண்ணி, பகையை மறக்கச்செய்து, கூடியிருந்து உண்ணச் செய்கிறது.

    “ஆமாமடா குமரா, சிற்றிலை அழிப்பதனைமட்டும் செய்யவேண்டா! உண்டு களிப்பாயாக. நாங்கள் செய்த பலவிதமான தின்பண்டங்களை முதன்முதலில் உனக்குத்தான் படைக்கிறோம் தெரியுமா? நாங்களே இன்னும் தின்றுபார்க்கவில்லை. எங்களுக்கு உன்மீது எத்துணை அன்பு (பக்தி) பார்த்தாயா? எங்கள் சிறுவீட்டினை அழிக்காதேயப்பா,” என்கிறாள் தாமரை.

    சிவகாமி குறும்பு கொப்பளிக்க, “ஒருமுறை இந்தப் பண்டங்களை நீ உண்டுவிட்டாயானால் போதும்; பின்பு, நாங்கள் எப்போது திரும்பச் சிற்றிலிழைத்துச் சிறுசோறு சமைத்து உண்போம் என மறுபடியும் மறுபடியும் நீயே கேட்பாய் முருகா! அத்துணை சுவைமிகுந்தவை இவையாம்,” எனக்கூறி நகைக்கிறாள்.

    “அவனைப் பக்கத்தில் இருத்திக்கொண்ட மங்கை சொல்வாள்: “உனக்கன்றி வேறு எவருக்கு இவற்றையெல்லாம் நாங்கள் ஆசையாகக் கொடுப்போம். வா, வந்து உண்டுமகிழ்வாயாக! மாறுபடாத வளங்கள் நிறைந்த தண்மையான துறைகள் கொண்ட குறுக்குத்துறை எனும் ஊரின்கண் வாழும் செல்வனே, எங்கள் சிற்றிலைச் சிதைக்காதே! குழந்தைச்சிறுமிகளாகிய எங்கள் சிற்றிலைச் சிதைக்காதே!”

    ஆவலுடன் சிறுமியர் குமரனுடன் சிறுசோறு உண்டுகளிக்கின்றனர். நமக்குக்கூட அவர்களிடம் சிறிது பொறாமையும், அச்சிறுமிகள் சமைத்திருக்கும் உணவுக்காகச் சிறிது ஆசையும், இதைப் படிப்பதனால் உள்ளத்தில் பெரும்உவகையும் எழுகின்றன.

    உருகா யோநீ உளம்விரும்பின்
    உவப்பா யெம்பா லுடனமர்ந்தே
    உண்டு மகிழ்வாய் சிற்றிலிதை
    உலையா தருள்செய் தேகிடுவாய்
    முருகா சிறியர் யாம்பெரிதும்
    முயன்று செய்த பலபண்டம்
    முன்னா லுனக்கே படைக்கின்றோம்
    முயலாதேயெம் மில்சிதைக்க
    ஒருகா லுண்ணின் மறுகாலும்
    உண்டா வுண்டா எனக்கேட்பாய்
    உனக்கல் லாது யார்க்கிவைதாம்
    உவந்தே யளிப்போம் ஏற்றிடுவாய்
    திருகா வளஞ்சேர் ஆவடுதண்
    துறையார் குறுக்குத் துறைவாழும்
    செல்வா சிற்றில் சிதையேலே
    சேயேம் சிற்றில் சிதையேலே.
    (திருகா- மாறுபடா)

    (குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ்- வித்துவான் தி. சு. ஆறுமுகம். சிவதாசன், திருநெல்வேலி)

    இது ஓர் அருமையான பிள்ளைத்தமிழ் நூல். சமீபகாலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். குறுக்குத்துறை எனும் இடத்தைப்பற்றி, நூலின் தொடக்கத்திலுள்ள ,
    ‘அகழ்சேர் பொருநை யணிகரைபால்
    அழகார் பதியாம் நெல்வேலி
    அணித்தாம் குறுக்குத் துறைதங்கி
    அன்பர்க் கருளுந் திருக்குமரன்’ எனும் பாடலால் இது திருநெல்வேலியருகில் அமைந்தவிடம் என அறிகிறோம். ஆசிரியர் பெயரும் கடைசிப் பாடலில் கிட்டுகிறது.
    வேறு அதிகமாகச் செய்திகள் கிடைக்கவில்லை.
    ஆயினும் தமிழ்ச்சுவை நிரம்பிய அழகான நூல்.
    ~~~~~~~~
    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ~~~~~~~~~~~~~~~~~

    Share
  • இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-19

    மீனாட்சி பாலகணேஷ்

    கைவண்ணமும் கால்வண்ணமும்…

    சிறு மல்லிகைச்செண்டு போலும் அழகான பெண்மகவு. இந்தப் பிஞ்சுக்குழந்தையைக் கண்ணுறும்போது, பெற்றோருக்குத் தம் கவலைகள் அனைத்தும் மறந்துவிடுகின்றன. ஏழையோ எளியவனோ, உடல்நிலை சரியில்லாதவரோ, “ஏன் இவ்வுலகில் பிறந்தோம்?” என சலித்துக் கொள்பவர்களும் அதைப்பற்றிய சிந்தனையே இல்லாமல், குழந்தையின் அழகிலும், குறும்பிலும் மழலையிலும் உள்ளம் பறிகொடுத்து விடுகிறார்கள். மிகுந்த மகிழ்ச்சி எனும் பேரானந்தக்கடலில் மூழ்கிவிடுகிறார்கள்.

    நல்லிசைப்புலமைப் பெரியோர் கூற்றில் குழந்தைக்குத் தாய்மார்கள் அமைவது மூன்றுவிதம். முதலாமவள், தன் குழந்தை மற்ற குழந்தைகளைப்போலும், இன்னும் சிறிது புத்திசாலியாகவும் வளருவதனைக்கண்டு பெருமிதம்கொள்ளும் சாமானிய மானிடத்தாய்; இரண்டாமவள், ‘தெய்வமே எனக்கு இக்குழந்தையாக வந்து பிறந்துள்ளது,’ என உருகும் பக்தித்தாய். இவள் குழந்தையின் செயல்களுக்கெல்லாம் ஒரு தெய்வப்பொருளைக் காரணம் கற்பித்துக் கொள்பவள்; மூன்றாமவள், இன்னும் ஒருபடி மேல்சென்று, குழந்தையின் வடிவில் பரம்பொருளைத் தரிசிக்கும் ஞானத்தாய்! தன்னை உய்விக்க இவ்வுலகில் வந்துதித்த தெய்வமே இக்குழந்தை எனத்தெளிவாக இருப்பவள். இந்த மூன்றுவிதமான தாயின் நிலைகளையும் எல்லாப் பிள்ளைத்தமிழ் நூல்களிலுமே கண்டுணர்ந்து மகிழலாம்; மெய்சிலிர்க்கலாம்!

    திரிசிரபுரம் மாகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பல பிள்ளைத்தமிழ் நூல்களைத் தமிழ்ச்சுவையும் பக்திச்சுவையும் பொங்கிப்பெருக இயற்றியுள்ளார். திருக்குடந்தை மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ் இவற்றுள் ஒன்று. அதிலிருந்து ஓரிரு பாடல்களின் நயத்தைக் காணலாமா?

    *********

    856ce7c0-e568-4007-9426-24a6b1cd62d3
    மலர்போன்ற சிறுகரங்களைச் சேர்த்து சப்பாணி கொட்டுவாயாக எனக் குழந்தையைத் தாயும் மற்றும் செவிலியரும் வேண்டுகின்றனர். குழந்தையின் வளர்ச்சியில் அது தனது கையால் ஒலியெழுப்ப இயலும் என உணரும் பருவமிது. மேலும், கையைப் பயன்படுத்தி, இன்னாரைச்சுட்டி, ‘அம்மா, அப்பா,’ எனவெல்லாம் உணரும், உணர்த்தும் பருவமும் கூட. தாயும், செவிலியரும் குழந்தையைக் கைமுகிழ்த்தொரு (இருகைகளையும் இணைத்துச்சேர்த்து) சப்பாணிகொட்ட வேண்டுகின்றனர். சக(ஹ) + பாணி= சப்பாணி; இரு கரங்களையும் இணைத்துக் கொட்டுதல். கையின் உபயோகத்தைக் குழந்தை புரிந்துகொண்டு அக்கைகளால் என்னவெல்லாம் செய்ய இயலும் என உணர்ந்து, செய்து, களித்துத் தானும் மகிழ்ந்து தாயையும் மற்றோரையும் களிப்பில் ஆழ்த்துகிறது. இது வளரும் குழந்தையின் கைகளுக்குப் பயிற்சியும்கூட ஆகும். இவ்வாறெல்லாம் சப்பாணிகொட்டும் சின்னஞ்சிறு கையைத் தாயானவள் பெருமிதத்துடன் போற்றுகிறாள். மங்களவல்லியான இந்தப் பெண்மகவு தலைவனான சிவபிரான் செய்யும் நிருத்தத்திற்குத் தாளம்தாக்குகின்றது (கொட்டுகின்றது). அம்பிகை தாளம்கொட்டுவதைக் காரணமாக்கி சிவப்பரம்பொருளின் நடனத்தை அழகுறப்போற்றுகிறார் பிள்ளையவர்கள்.

    அத்தனாகிய சிவபிரான் தன் கையிலேந்திய தமருகத்தை ( துடி, உடுக்கை) ஒலியெழுப்பி ஆக்கும் (படைக்கும்) தொழிலைச் செய்கின்றான். அவனுடைய அமைந்தகரமானது அபயமளித்துப் புரக்கின்றது. தீயாகிய அனலை ஏந்திய கரம் சாம்பலாய் அனைத்தையும் அழிக்கும் தொழிலைச் செய்கின்றது. முயலகன் தலைமீது ஊன்றியிருக்கும் திருப்பாதம் திரோதம் என்னும் மறைத்தல் தொழிலைச் செய்கின்றது. இந்த மறைப்பைப்போக்கி முத்தியளித்து உய்விக்கும் தொழிலைத் தூக்கிய திருவடியாகிய குஞ்சிதத்தாள் செய்கின்றது.

    bfedbda9-c32a-49de-af24-065738a98665

    இங்கு, ‘தோற்றம் துடியதனில் தோயும் திதி அமைப்பில்
    சாற்றியிடும் அங்கியிலே சங்காரம்- ஊற்றமா
    ஊன்று மலர்ப்பதத்தில் உற்ற திரோதம் முத்தி
    நான்ற மலர்ப்பதத்தே நாடு,’

    என்று இக்கருத்தை அழகுற வலியுறுத்தும் உண்மை விளக்கப்பாடல் இங்கு சிந்தை கூரத்தக்கது.

    ஆடலரசனின் ஐந்தொழில் நடனத்தில் ஆழ்ந்து கருத்தூன்றிய பெரியோர்கள் அக்கருத்துக்களைத் தாமியற்றும் பாடல்களில் பலவிடங்களில் பொருத்தமாக இணைத்துக் காட்டுவது பயில்வோருக்குப் பேரின்பத்தை நல்கும். இப்பாடலும் அத்தகைமைத்தே!

    இந்த ஐந்து செய்கைகளும் இடையறாது நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. சுருதி எனப்படும் எழுதாமறையாகிய வேதங்கள் ஐயனுடைய இத்தொழிலைப்போற்றி வாழ்த்துகின்றன. ‘இனி, நம்மைத் தொடரும் துன்பம் தொலைந்துபோயிற்று; ஐயனின் இந்த ஐந்தொழில் புரியும் நடனத்தினால் நாம் உய்ந்தோம்,’ என்று சகல உலகங்களும் போற்றிப் பாடிப் புகழ்கின்றனவாம். இந்த ஆனந்தத் திருநடனத்தைக் கண்ணுற்ற புலிப்பாத முனிவன் என அறியப்படும் வியாக்ரபாதர், பணி நெடுந்தவமுனிவன் என அறியப்படும் பதஞ்சலி முனிவர் ஆகிய இருவரும் ஆனந்தத்தில் மூழ்கிவிடுகிறார்கள்.
    இவ்வாறு தில்லையம்பலத்தில் மாதேவனாகிய எம்பெருமான் ஆடுகின்ற புதுமையான இந்த நடனத்திற்கு இயைந்தவண்ணம் அம்மை தன் திருக்கைகளால் தாளம் இடுகிறாள். அவளுடைய திருக்கைகள் அழகுறத் தாளமிடும்போது தாமரைமலர் போலச் செந்நிற ஒளிதுளும்பக் காணப்படுகின்றன. ‘அந்த ஒளிமிகுந்த கைகளைச் சேர்த்துக்குவித்து ஒரு சப்பாணி கொட்டியருளுக! இனிமையான தமிழின் வளம் நிறைந்த குடைந்தைநகரில் வாழும் மங்களவல்லியே சப்பாணி கொட்டியருளுக,’ என வேண்டுகிறாள் தாய் என்பது புலவர் பாடல்.

    இவள் அன்னை பராசக்தியல்லவா? அதனால் ஐயனின் நடனத்திற்கியைவாகக் கைகளைக் குவித்துத் தாளமிடுகிறாள் எனும் கற்பனை இனிமையானது.

    ஆக்குந் தொழிற்றமரு கம்புரக் குந்தொழி லமைந்தவப யஞ்சாம்பரா –
    வழிக்குந் தொழிற்றீ மறைக்குந் தொழிற்றலை யமைந்தூன்று தாண்மறைப்புப்,
    போக்குந் தொழிற்குஞ் சிதத்தா ளிவைந்தும் பொலிந்திடச் சுருதிவாழ்த்தப் –
    புன்மையின் றுய்ந்தன மெனச்சகல புவனமும் போற்றெடுத் தேத்தமடமை,
    நீக்கும் புலிப்பத முனித்தலைவ னும்பணி நெடுந்தவ முனித்தலைவனு –
    நிறைமகிழ் திளைப்பமா தேவன்மன் றிடைநவி னிருத்தக் கியைந்ததாளந்,
    தாக்குந் திருக்கைத் தலத்தொளி துளும்பவொரு சப்பாணி கொட்டியருளே
    தண்டமிழ் வளம்பொலி குடந்தைமங் களவல்லி சப்பாணி கொட்டியருளே.

    சப்பாணி என்பது கைகளால் கொட்டப்படுவதனால், சப்பாணிப்பருவத்தில் அக்கைகளைப் புகழ்ந்து பாடுவது பிள்ளைத்தமிழுக்குரிய ஒரு வழக்கு. பாட்டுடைத்தலைவன் அல்லது தலைவியின் திருக்கைகளின் பெருமையே சப்பாணிப்பருவத்தில் பாடுபொருளாக அமைந்துவிட்டதென்று முனைவர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி அவர்கள் கூறுவார்.

    ———–

    கைவண்ணம் கண்டோம்; இனி அன்னையின் கால்வண்ணத்தைக் காண்போமே!

    தளர்நடை பயிலத்துவங்கியுள்ளாள் குழந்தை. இதனையே, ‘கண்டோர் பவத் துன்பு காணார்களாய்ப் பருங்களி ஆர்கலிக் கண்மூழ்கி,’ என்கிறார் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள். தத்தித் தத்தி மயில்போல நடந்து வரும் குழந்தையைக்கண்டு பரவசத்தில் உள்ளம் பறிகொடுத்து, தாயின் நிலையிலும், அடியாரின் நிலையிலும் இருவிதமாகவும் நின்று, அவளைப் பலவிதமாக வர்ணிக்கிறார் புலவர். தெய்வக்குழந்தையல்லவா இந்த மங்களாம்பிகை? ‘இவளைக் கண்ணால் கண்டாலே பிறவிக்கடலில் மூழ்கிப்படும் துயரமெல்லாம் பறந்தோடும்; பேரானந்தம் கொண்டு உள்ளம் கடல்போல ஆரவாரிக்கும்,’ என்பது பொருள்!

    சிவபிரானின் பெருமைகள் அனைத்தும் அன்னை பார்வதியாம் மங்களவல்லிக்கே உரித்தாக்கப்படுகின்றன. சிவனும் சக்தியும் இணைபிரியாதவர்களல்லவா? அயனும் திருமாலும் அன்னமாகவும், வராகமாகவும் உருவெடுத்து ஐயனின் அடிமுடி காணப்புகுந்த வரலாறு இது. தீயோர்களை நாசம்செய்யும் சுதரிசனம் எனும் சக்கரப்படையை ஏந்தியவன் திருமால். அவன் ஒரு விலங்காக (பன்றி, வராகம்) வடிவெடுத்து தேவர்களுக்கெல்லாம் தலைவனான சிவபெருமானின் இரண்டு திருப்பாதங்களைத் தேடிக்காணமுயன்றான். பூமியின் அடிவரை சென்று தேடியும் காணஇயலாமையால் மனமும் உடலும் துவண்டு மீன்கள் நிறைந்த கடலில் (இங்கு பாற்கடலில் எனப் பொருள்கொள்ள வேண்டும்) விழுந்து இளைப்பாறுகிறான். அடுத்து பிரம்மா அன்னப்பறவை வடிவெடுத்து சிவனின் முடிதேடியதனை அழகுற விளக்குகிறார். உயர உயரப்பறந்து தேடியும், முடியைக் காண இயலவில்லை. இனி எங்குபோய்த் தேடுவது எனச் சிந்திப்பவனுக்கு ஒரு எண்ணம் உதிக்கின்றதாம். அவன் தேடிய சிவபிரானின் முடியானது ஊடல்கொண்ட அன்னையிவள் சின்னஞ்சிறு பாதங்களின்மேல் வைக்கப்பெற்றுள்ளது. ஆகவே, பிரம்மன் தான் தேடும் சிவபிரானின் முடியைக்காண ‘அன்னையின் பாதங்களை நாடினாலே போதுமே; ஆகவே, அதனைச் செய்வோம்,’ என எண்ணுகிறான். இனிய கற்பனை. குறுக்குவழியில் இலக்கை அடைவது பற்றிய சிந்தனை புராணகாலம் தொட்டு இருந்துள்ளது போலும்!! யாருக்கும் எட்டாத பரம்பொருளின் திவ்விய வடிவை, முடியை, எளிதிலடைந்து விட முடியுமா? முடியாதுதான். அண்ணல் சிவபிரானின் முடி அயன் கண்களுக்கெட்டாத கற்பகக்கனியாகி விட்டது.

    இனி என் செய்வான்? அன்னம் ஆகி (ஓதிமம்) வருந்திக் களைத்து நின்ற அவன் கருத்து குழந்தையாகி நடைபயிலும் அன்னையின் தேன்நிறைந்த மலர்போன்ற திருவடிகளில் பதிகின்றது. அது பயிலும் மென்னடையில் அவன் சிந்தையும் கருத்தும் பதிகின்றது; அயன் தேடிவந்ததென்னவோ, சிவபிரான் திருமுடிக்காட்சியைத்தான். ஆனால், அது எட்டாக்கனியாகிவிட்ட நிலையில், அன்னையின் நடையழகு அவன் கருத்தைக் கவர்ந்துகொண்டுவிட்டது. மற்ற அன்னங்கள் இவள் நடையைக் கற்க ஆவல்மிகுந்து அவளைப் பின் தொடர்கின்றன. தாமரைமலரில் வீற்றிருக்கும் இந்த (பிரம்மா) அன்னமும் அவைகளுடன் அன்னையைப் பின் தொடர்கின்றதாம்.

    இவ்வாறு அன்னங்கள் பின்தொடருமாறு தளர்நடை பயில்பவள், வானளாவ உயர்ந்த இமயமலையில்பிறந்த வனிதையாகிய மங்களவல்லி. இவள் தங்குமிடமோ வேதியர்கள் ஓதும் மறைவாழ்த்தொலி விண்ணளாவ முழங்கும் திருக்குடந்தை நகராகும். அம்மடந்தையை வருக வருகவே எனத் தாயர் அழைப்பதாகப் புலவர் கற்பனை விருந்து படைக்கிறார்.

    ஊன்றோய் சுதரி சனப்படையா னொருமா வுருக்கொண் டும்பர்பிரா
    னுபய பதமுங் காண்பான்புக் கொன்றுங் காணா துழிதந்து
    மீன்றோய் பரவைப் புடைவிழுந்தான் விரும்பி யிவள்சிற் றடிதொடரின்மேற்
    விழைந்து முயன்ற முடிகாணன் மேவு மேவா விடினுமிவ
    டேன்றோய் மலர்த்தாட் டொடர்பொன்றே திருந்து மெனவுட் கொடுமலர்
    றிகழோ திமமென் னடைகற்பான் செறியோ திமங்க ளொடுந்தொடர
    வான்றோ யிமய வரைப்பிறந்த வனிதாய் வருக வருகவே
    மறைவாழ்த் தொலிசா றிருக்குடந்தை மடந்தாய் வருக வருகவே.

    சிந்தை களிகூரக் கால்வண்ணம் கண்டோமல்லவா? இனியும் தொடர்ந்து கண்டு மகிழ்வோம்.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    *****

    Share
  • சங்க இலக்கியத்தில் களவும் – கற்பும் உறவாடியது

    –க.பிரகாஷ்

    download

    சங்க இலக்கியம் என்பது தமிழில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியம் ஆகும். 473 புலவர்களால் 2381 பாடல்கள் பாடப்பட்டுள்ளது. இப்புலவர்கள் பலதரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் ஆவர். சங்க இலக்கியங்கள் அக்காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைகளையும் மற்றும் பண்டைத் தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளையும் அறியவைக்கின்றன.

    சங்க இலக்கிய கூறுகள் மற்றும் பண்புகள்

    அகம், புறம், ஐவகை நிலபுலன்கள், வாழ்க்கை முறைகள் போன்றவைகளை எடுத்துவிளக்கும் சங்க இலக்கியப் பாட்டுகளில் பழைய மரபுகள் பல காணப்படுகின்றன. காதல் பற்றிய கற்பனையை அகம் என்றும் வீரம், கொடை, புகழ் முதலிய வாழ்க்கைத் துறைகளைப் புறம் என்றும் பகுத்த பாகுபாடு அந்த மரபுகளுள் முதன்மையானது ஆகும்.

    அகப்பாட்டுகளில் கற்பனைத் தலைவன் தலைவியின் காதல் பாடப்படும். புறப்பாட்டுகளில் நாட்டை ஆளும் தலைவனுடைய சிறந்த வீரச்செயல்களும், கொடைப்பண்பும் குடிமக்களுள் சிறந்தவர்களின் அருஞ்செயல்களும் பிறவும் பாடப்படும். ஆகவே, பெரும்பாலும், அகப்பாட்டுக்கள் கற்பனையாகவும், புறப்பாட்டுகள் உள்ளது கூறலாகவும் அமைந்துள்ளன எனலாம்.

    சிற்றூர்கள் பலவாகவும் நகரங்கள் ஒரு சிலவாகவும் அவற்றிடையே போக்குவரத்தும் கலப்பும் குறைவாகவும் இருந்த காலம் அது. சிற்றூர் மக்கள் மலையிலும் காட்டிலும் வயற்புறத்திலும் கடற்கரையிலும் அமைந்த ஊர்களில் வாழ்ந்து அந்தந்த நிலத்தில் கிடைத்த உணவுப்பொருள்களுக்காக வேட்டை, உழவு, மீன்பிடித்தல் முதலிய தொழில்களில் ஈடுபட்டு வந்தனர். அன்பு, அறிவு, அழகு, வயது முதலியன பொருத்தமாக வாய்ந்த ஆணும் பெண்ணும் காதல் கொண்டு திருமணம் செய்து இல்லற வாழ்க்கை நடத்தினர். அத்தகைய காதலும் இல்லறமுமே சிற்றூர்களில் இயல்பான வாழ்க்கையாக இருந்தன. அந்த ஊர்களில் தோன்றி வழங்கிய வாய்மொழிக் கதைகளும் பாடல்களும் நாடகங்களும் அந்தக் காதல் வாழ்க்கையையே மையப் பொருளாக கொண்டிருந்தன. சிற்றூர் மக்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வும் தொழில்களும் நாட்டுப் பாடல்களில் பாடப்பட்டன. மலை, காடு, வயல், கடல் ஆகியவற்றின் இயற்கை அழகும் சிறப்பும் அவற்றில் பாடப்பட்டன. இயற்கைப் பொருள்களும் தொழில் முதலிய வகைகளும் வாழ்வுக்காக அமைந்தவை.

    ஆகையால், காதல்வாழ்வே அந்தப் பாடல்களின் உரிப்பொருள் என்று போற்றப்பட்டது. அந்த வாழ்வை எடுத்துக்காட்டும் பொருள்களாக உள்ள மரம், விலங்கு, பறவை, தொழில் முதலிவை கருப்பொருள்கள் எனப்பட்டன. அந்த வாழ்வுக்குப் பின்னணியாக விளங்கிய நிலமும் காலமும் முதற்பொருள்கள் எனப்பட்டன. இயற்கைப் பொருள்களும், தொழில்களும் பழக்கவழக்கங்களும் வேறுவேறாக இருந்தமையால் நாட்டுப் பாடல்களும் வெவ்வேறு வகையாக அமைந்தன. சங்க இலக்கிய காலத்தில் அந்த நாட்டுப் பாடல்களே புலவர்களின் கைப்பட்டு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐந்திணைப் பாடலாக அமைந்தன. அவற்றின் மரபுகளை ஒட்டிப் புலவர்களால் இயற்றப்பட்ட ஐந்திணைப் பாட்டுகளும் முழுவதும் கிடைக்க வழியில்லை.

    ஒரு காதல் நிகழ்ச்சியைக் கற்பனைசெய்து பாடும்போது இவ்வாறு அதற்கு உரிய நிலம், பொழுது, பறவை, விலங்கு, மரம், பூ முதலிய இயற்கைப்பொருள்களையும் அமைத்துப்பாடும் மரபு நெடுங்காலமாக இருந்துவந்தது.

    ஊர்ஊராக மக்கள் எழுதாமலே பாடிவந்த நாட்டுப் பாடல்களிலேயே அந்த மரபு இருந்து வந்தமையால் புலவர்கள் அந்த மரபுகளை அவ்வாறே கையாண்டு இலக்கியம் படைத்தனர். அதனால் .கணவனும் மனைவியும் ஊடல் கொண்டு பிணக்குவதைப் பாட விரும்பினால் புலவர் அதற்கு ஏற்ற வயல் சார்ந்த மரபு நிலத்தையும் அந்த நிலத்து இயற்கைப் பொருள்களையும் அமைத்துப் பாடவேண்டி இருந்தது. மலையையோ காட்டையோ பாடுவதற்கு அந்த மரபு இடம்தரவில்லை.

    நாட்டு மக்களின் எழுதா இலக்கியமாகிய நாட்டுப்பாடல்களிலேயே அவ்வளவு ஆழமாக அந்த மரபு வேரூன்றி இருந்தபடியால் எழுதும் இலக்கியத்தைப் படைத்த புலவர்களும் அந்த மரபை மீறாமல் போற்ற நேர்ந்தது. அதனால், அக்காலத்து அகப்பாட்டு, இயற்கை வர்ணனை மிகுந்துவிளங்கக் காண்கிறோம். இயற்கையைப் பாடுவதாகவே அமைந்த பாட்டுகள் போலச் சில தோன்றும். மனிதரின் காதலைப் பாடுதலே அந்தப் பாட்டுகளின் முதன்மையான நோக்கம்.

    ஐந்திணையில் காதல் குறிப்பு

    குறிஞ்சித்திணை, முல்லைத்திணை, மருதத்திணை, நெய்தல்திணை, பாலைத்திணை ஆகியவை அன்பின் ஐந்திணை ஆகும்.

    ஒரு தலைவனும், தலைவியும் முதன்முதலாக ஒருவரை ஒருவர் கண்டு இயல்பாகவே அன்பு கொண்டு மனம்கலந்து உறவு கொள்வது குறிஞ்சித்திணையாகும்.

    அன்பால் நெருங்கிப் பிணைந்த தலைவனும், தலைவியும் பிரிந்து ஒரு குறிப்பிட்ட காலம்வரை அப்பிரிவைத் தாங்கிக்கொண்டிருந்தல் முல்லைத் திணையாகும். பிரிவு பல காரணங்களால் உண்டாகும்.

    இல்லற வாழ்வில் தலைவன் பல காரணங்களால் வெளியிடங்களில் அடிக்கடித் தங்கிவந்தால் தலைவி கோபமுற்று ஊடல் கொள்வது மருதத்திணையாகும்.

    ஏதோ ஒரு காரணத்தால் தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் குறித்த காலத்திற்குள் வரமுடியாது கால தாமதம் ஆவதால் தலைவிக்கு ஏற்படும் வருத்த்தைப்பற்றிக் கூறுவது நெய்தல்திணையாகும்.

    மணந்துக்கொள்ளும் பொருட்டுத் தலைவன் முயன்று பொருள் தேடவோ, மேலும் கல்விகற்கவோ அரச கட்டளையால் தூது செல்லவோ பிரியும் பிரிவு பாலைத்திணையாகும்.

    களவு

    களவு என்பது ஒத்த பருவம், உருவம் முதலிவையுள்ள ஒருவனும், ஒருத்தியும் தாமே எதிர்ப்பட்டுக் கூடும் கூட்டம். தமக்கேற்ற வாழ்க்கைத் துணைவரைத் தாமாகவே தேர்ந்தெடுத்துக் கொள்வது இதில் பேசப்படும்.

    கற்பு

    கற்பு என்பது களவொழுக்கம் ஒழுகிக் காதலன்பு முதிர்ந்து மணந்து கொண்ட காதலர் ஒரு மனப்பட்டு இல்லறம் நடத்துதல் ஆகும். 

    இல்லறம்

    தலைவனும் தலைவியும் கொடுக்கும் முறைமையையுடைய பெற்றோர் உடன்பட்டுக் கொடுப்ப மணஞ்செய்துகொண்டு நடத்தும் இல்லற வாழ்க்கையே கற்பு வாழ்க்கை. இல்லறமே கற்பு ஆகும். இக்கற்பு வாழ்க்கை, களவொழுக்கம் முற்றி விளைந்த விளைவு. களவொழுக்கத்தின் கனி கற்பு; அஃதாவது அன்பின் வெற்றி ஆகும்.

    தலைவனும் தலைவியும் எதிர்பட்டுக் கொண்ட காதலன்பு கெடாமல் இருவரும் மணந்து கொண்டு இல்லறம் நடத்துதலும், தலைவன் பிரிந்தால் தலைவி அன்பு வழுவாமல் ஆற்றியிருந்து வெற்றி பெறுதலும் உடைமையின் இது கற்பு எனப்படும். “மறை வெளிப்படுதல் கற்பு” கணவன் மனைவி இருவரையும் ஒன்றுபடப் பிணித்து நிற்கும் மனங்கலந்த அன்பின் பயனே கற்பு வாழ்க்கை.

    இன்பம்

    இன்பம் என்பது அகப்பொருளின் கூறு. ஆண், பெண் என்னும் இருபாலின்கண் நிகழ்வது, மக்களேயன்றி மற்ற விலங்கு, பறவை முதலிய உயிர்களுக்கும் ஆண், பெண் என்னும் கூறுபாட்டால் பொருந்தி நிகழ்வது; எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும் என்பது தொல்காப்பியக் குறிப்பு.

    ஆண் பெண் புணர்ச்சிக்குக் காரணமாகிய காதல் ஒருவனும் ஒருத்தியும் தாமாகவே எதிர்ப்பட்டுக் கூடுதல் இயற்கையாதலால், அதைத் தடைசெய்வதும், இழித்துக் கூறுவதும், அகப்பொருளின் உண்மையை இயற்கையாற்றலை – இன்றியமையாப் பயன்பாட்டை அறியாக் குறையேயாகும். வாழ்க்கை நலத்திற்குக் காரணமான அகவொழுக்கமென்னும் பேரின்பத்தினைத் தகாத வழியில் செலுத்தியும் தவறான பொருள்கொண்டும் சிற்றின்பம் என இழிவுபடுத்தி விட்டனர்; மக்கள் விலக்கத்தக்க பொருள்களில் ஒன்றாகச் செய்து விட்டனர். இது சமயச் சார்பில் நேர்ந்த தவறு.

    உலகுயிர்த் தோற்றமே ஆண் பெண் இருகூறாய் அமைந்திருக்க, அவற்றின் கூட்டுறவே உலகுயிர்த் தோற்றத்திற்குக் காரணமாய் அமைந்திருக்க அஃது எவ்வாறு சிற்றின்பமாகும்? உயிர்கள் அடையும் இன்பங்களில் பேரின்பம் அதுவே. “ கண்ணால் கண்டும், காதல் கேட்டும், வாயால் உண்டும், மூக்கால் மோந்தும், உடம்பால் தீண்டியும்” இன்புறும் ஐவகையான இன்பமும் பெண்ணிடத்தேயுள்ளன”; இவளோடு கூடி வாழும் இன்பத்தை விட உலகில் மிகுதியான இன்பம் வேறு எதுவுமில்லை என்பது வள்ளுவர் கருத்து.

    காதலின் பெருமை

    இருவேறு உருவினரான ஆணையும் பெண்ணையும் ஒன்றாக்கி “ இருதலைப் புள்ளின் ஓருயிராம்” என்னும் நிலையை உண்டாக்கி, ஒருவர்க்கு உண்டான நலக்கேடு இருவர்க்கு ஒத்த பங்காகக் கொண்டொழுகும்படிச் செய்வது காதல்.

    காதலன் ஒருவன் தன் காதலியிடம் எனது தாயும் நினது தாயும் ஒருவருக்கொருவர் எம் முறையினராவர்? என் தந்தையும் நின் தந்தையும் ஒருவருக்கொருவர் என்ன முறையையுடைய சுற்றத்தினர்? ஒரு முறையும் இல்லையே! அவ்வாறிருக்கவும், நானும் நீயும் எவ்வாறு ஒருவரையொருவர் அறிந்தோம்? முன்பின் அறியாதவர் நாம் அவ்வாறிருந்தும் நம் அன்புடைய நெஞ்சங்கள் பயிர் செய்வதற்குத் தகுதியாக உழுது பண்படுத்தப்பட்ட செம்பாட்டு நிலத்தில் பெய்த மழைநீர் போலக் கலந்துவிட்டனவே! என்னே காதலின் பெருமை! இன்னார் என்று அறியாத இருவர் நான் நீ என்னும் வேறுபாடின்றி ஒருமைப்பட்டதை என்னவென்பது? எனும் குறுந்தொகை காதலின் பெருமையை நன்கு விளக்குவதாகும்.

    “யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
     எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
     யானும் நீயும் எவ்வழி அறிதும்
    செம்புலப் பெயல்நீர் போல
    அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே: – (குறுந் – 40) 

    காளைப் பருவத்தையும் கன்னிப் பருவத்தையும் அடையுமுன் ஆண் பெண் இருவரும் ஒருவரையொருவர் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. திடீரென ஒருநாள் எதிர்ப்பட்டு அன்புகொள்ளச் செய்யும் பெருமையுடையது காதல்.

    காதல் மனம்

    ஒருவனும் ஒருத்தியும் காதற் கலப்புற்று வரும்போது சிலர் தம் தோழர்களிடம் தமது கருத்தை வெளியிடுவர். சிலர் தம் காதலியிடம் நெருங்கிப் பழகும் பெண்களிடம் தெரிவிப்பர். இம்முறை இன்றும் நடைமுறையில் இருந்து வருகின்றது.

    சில பெண்கள் தம் தோழியரின் குறிப்பு வேறுப்பாட்டைக் காதற் குறிப்பைக் குறிப்பால் உணர்ந்து அவளது பெற்றோரிடம் கூறுவர். சில பெண்கள் தம் தோழியரிடம் தாங்கொண்ட காதலைக் குறிப்பால் உணர்த்துவர். சிலர் தம் பாட்டியரிடம் கூறுவர். அப்பாட்டியர் பெற்றோரிடம் கூறுவர். பெற்றோர் மனமுவந்து  அக்காதலர்க்கே மணமுடிப்பர்.

    காதலர்களின் காதற் கலப்பு பெரும்பாலும் பிறர்க்குத் தெரியாமல் நடைபெறும். அவர்களது காதலைப் பெற்றோரே அறிந்து மணம் முடிப்பதுமுண்டு. காதலர்களின் தோழரும் தோழியரும் அவர்தம் பெற்றோர்க்கு மணம் முடிப்பதும் உண்டு.

    சங்க இலக்கியத்தில் கற்பு பற்றிய சொற்கள்

    மாசில் கற்பு, முல்லை சான்ற கற்பு, கடவுட் கற்பு, நகரடங்கிய கற்பு, நிலைஇய கற்பு, அடங்கிய கற்பு, உவர் நீங்கு கற்பு, மறுவில் கற்பு, அருந்ததி அனைய கற்பு போன்ற பல தொடரமைப்புக்கள் கற்பின் மேம்பாட்டை உணர்த்துகின்றன.

    களவிலும் – கற்பிலும் – புணர்ச்சி

    “கண்தர வந்த காம ஒள்எரி
    என்புஉற நலியினும் அவரொடு பேணிச்
    சென்று, நாம்முயங்கற்கு அருங் காட்சியமே…(குறுந் -305)

    கண்தர வந்த காமம் என்றது அவனைக் கண்ட போதே அவன்பால் விருப்புடையார் ஆயினதைக் குறித்தாம்; அதனை ஒள்எரி என்றது, சுடரிட்டுப் பலரும் காண நிகழ்வது; அங்ஙனமன்றி எவரும் காணாவிடத்து நிகழும் குப்பைக் கோழிப்போர் என்றனள். களைவார் இலர் என்றது, தோழி நீதான் அதனைப் போக்காயோ, எனக் குறிப்பால் தோழியை வேண்டியதாம்.

    உள்ளப் புணர்ச்சி

    ஆண் பெண் உறவுக்குக் காதல் காரணம் என்றோம். காதலுக்குப் பால் காரணம் என்றோம். அறிதோறும் அறியாமை கண்டதல்லது என்ன விளக்கம் கண்டோம்? ஒத்த தலைவனும் தலைவியும் காதற் குறிப்பொடு காண்பர் எனின், அவ்விருவரும் ஒத்தவர்களாக இருப்பதற்குக் காரணம் பிறிதுண்டோ? ஒப்பு என்பது எது? அஃது ஒரு பிறவி யொப்பா பல்பிறவி யொப்பா?

    “இம்மை மாறி மறுமையாயினும்
    நீயா கியரென் கணவனை
    யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே – (குறுந் – 49) 

    இம்மை மாறி மறுமை யாயினும் நீயாகியர் என் கணவனை யான் ஆகியார் நின் நெஞ்சு நேர்பவளே என்பதைக் கவனிக்க வேண்டும். நின்னால் மாண்புற்ற போதும் இம்மைக்கண்ணும் அவர் நின் மனைவியர் ஆகார். நீயும் அவர்க்குரிய கணவன் ஆக மாட்டாய். மறுமையின்கண் தொடர்ந்து பெறும் நட்புக் கற்புடையாட்டியாகிய எனக்கன்றி அவர்க்கு வாயாது என்று கூறித் தலைவனிடத்தே தான் கொண்ட உழுவலன்பை உணர்த்துகின்றன.

    கற்பு – திருமணமாக முடியுங்கால் களவுநெறி, நன்னெறி எனப் போற்றப்படும். இன்றேல் கள்ளத்தனம் என இகழப்படும். கற்பென்னும் மணவாழ்க்கைக்கு முன்னரெல்லாம் களவென்னும் மறைவுநெறி ஒருதலையாக நடக்க வேண்டுமோ எனின் இல்லை. களவின் முடிபு கற்பு என அகத்திணை வலியறுத்தும்;. கற்பு வழக்காவது தலைவியைக் கொடுத்தற்குரியோர் கொடுப்பக் கரணமுறையால் தலைவன் ஏற்றுக் கொள்வதாகும்.

    “கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
     கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
     கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே”
     (தொல் – 1087 )

    தொல்காப்பியர் தமிழ்ச் சமுதாயத்தின் மணமுறையைச் சுருக்கமாக உரைப்பர். திருமணம் என்னும் கட;டுப்பாடு யாண்டும் இன்றியமையாதது; மாறாதது. மணச்சடங்குகள், தேயந்தோறும், இனந்தோறும் வேறுபடுவன; காலந்தோறும் கூடுவன, குறைவன மயங்குவன. ஆதலின் வாழ்வியலறிஞர் தொல்காப்பியர் கற்பென்னும் தலையாய அறத்தை வலியுறுத்திக் கரணமொடு புணர என்று சடங்கினைப் பொதுப்படக் கூறினார்.

    “பொன்னவிர் சுணங்கொடு செறிய வீங்கிய
     மென்முலை முற்றம் கடவா தோரென
     நற்றென் கங்குலும் பகலும் இயைந்தியைந்து
     உள்ளம் பொத்திய உரஞ்சுடு கூரெரி   – ( அகம் – 279) 

    நண்பினர் பிடியையும் உறவினர் துயரத்தையும் பகைவர்களின் எக்களிப்பையும் உள்ளுரில் இருந்தே பார்த்துக் கொண்டிருப்பர். அவர் யாரெனின் பொன்னிறச் சுணங்கும் திரட்சியும் வீக்கமும் மென்மையும் பொருந்திய முலைத்தடத்தை விட்டு அகலமாட்டா ஆடவர்கள்.

    “இல்லோர்க் கில்லென் றியைவது காத்தல்
    வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும்
    பொருளே காதலர் காதல்…” (அகம் -53)

    காதலர் காதல் மாறிவிட்டது எனவும் அதற்குக் காரணம் ஈகைப்பற்று எனவும் தலைமகளே கூறுதல் காண்க. நாடுகாவற் பிரிவு, பகைவயிற் பிரிவு, தூதிற் பிரிவு, ஓதற் பிரிவு, பரத்தையிற் பிரிவு எனப் பிரிவு வகைகள் பல. இவற்றினும் பொருள்வயிற் பிரிவே எல்லார்க்கும் உரியது. களவிற்கும் கற்பிற்கும் பொதுவானதாகும்.

    பார்வை நூல்கள்: 

    தமிழ்க் காதல்    –   வ.சுப. மாணிக்கனார்
    குறுந்தொகை    –   புலியூர்க்கேசிகன்
    அகநானுறு         –   புலியூர்க்கேசிகன்
    தமிழ் இலக்கிய அறிவுக் களஞ்சியம்   – செந்துறையான்
    தமிழ் இலக்கிய வரலாறு      – மது. ச. விமலானந்தம்
    தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம்   – க. பிரகாஷ்

    ***

    க.பிரகாஷ் எம்.ஏ, எம்.பிஃல்,
    தமிழ்த்துறை
    தொழில்நுட்பக் களஆய்வுப் பணியாளர்
    பாரதியார் பல்கலைக்கழகம்
    கோயம்புத்தூர் – 46

     

     

    Share
  • நாவற்குடா இளையதம்பி தங்கராசாவின் “நான் என் அம்மாவின் பிள்ளை” புதினம் குறித்த மதிப்பீடு

    முனைவர் மு.இளங்கோவன்
    பட்டமேற்படிப்பு மையம்
    புதுச்சேரி – 605 008

     

    ammavin Pillai

    ஈழத்துப்பூராடனார் என்னும் முதுபெரும் தமிழறிஞர் வழியாக ஈழத்து இலக்கிய அறிமுகமும் இலக்கிய அறிஞர்களுடனான தொடர்பும்  எனக்குக்  கிடைக்கலாயிற்று (1993). அதன்பிறகு வளர்பிறைபோல் ஈழத்து இலக்கியத் தொடர்பு வளர்ந்துகொண்டுள்ளது. அண்மைக்காலமாகப் பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்கள் வழியாக ஈழத்துத் தொடர்பைப் புதுப்பித்த வண்ணம் உள்ளேன்.

    அண்மையில் பிரான்சுக்குச் சென்றிருந்தபொழுது ‘மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் பிள்ளையார் மான்மியம்’ என்னும் பெயரில் அமைந்த தமிழ் மற்றும் ஆங்கில நூல்களைப் பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் வழங்கினார்கள். நூலினை மேலோட்டமாகப் பார்த்தபொழுது, நூலாசிரியர் நாவற்குடா இளையதம்பி தங்கராசா என்ற பெயர் எனக்கு மிகவும் அறிமுகமானதாக  இருந்தது.

    ஒருநாள், ஈழத்து அன்பர் சிவபாதசுந்தரம் அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபொழுது, அவரின் அருகில் இருந்த இளையதம்பி தங்கராசா அவர்களுடன் உரையாடும் வாய்ப்பு அமைந்தது. அப்பொழுது தங்கராசா அவர்கள் தமக்கும் ஈழத்துப்பூராடனாருக்கும் அமைந்த தொடர்பைக் கூறியதும் அவரின் மேல் மிகுந்த மதிப்பு உண்டானது.

    Thangarajaஇளையதம்பி தங்கராசா தாம் ஒரு புதினம் எழுதியுள்ளதாகவும் அதன் இருதொகுதிகளை அனுப்புவதாகவும் கூறினார். சொல்லியவண்ணம் அனுப்பியும் வைத்தார். “நான் என் அம்மாவின் பிள்ளை” என்னும் பெயரில் அமைந்த 1098 பக்கங்கள் கொண்ட இரு தொகுதிகளும் (27+484=511 பாகம்-1; 27+560= 587 பாகம்-2) கிடைத்ததும் உருவுகண்டு மலைத்தேன். எனக்கிருந்த பல்வேறு பணிகளுக்கிடையே இதனைப் படித்து முடிக்கக் காலம் ஆகலாம் என்று நினைத்தபடி மேலோட்டமாகப் பார்வையிட்டேன்.

    பேராசிரியர் இ.பாலசுந்தரம், திரு.எதிர்மன்னசிங்கம், செல்வி க.தங்கேஸ்வரி ஆகியோரின் மதிப்புரைகளும், பண்டிதர் ம. செல்வராசா அலெக்சாந்தர் அவர்களின் வெண்பாக்களும் நூலாசிரியரின் முன்னுரையும் உடனடியாக இந்த நூலினைப் படிக்க வேண்டும் என்ற உந்துதலைத் தந்தன.

    தமிழகத்தில் புதின ஆசிரியர்கள் சிலர் தங்கள் படைப்புகளை எழுதுவதற்கும், அதனைப் பரப்புவதற்கும் கைக்கொண்டிருக்கும் பல்வேறு உத்திகளைக் கண்டு கண்டு, உண்மை உணர்ந்தவன் என்ற அடிப்படையில் தரமான புதினங்களை மட்டும் தேடிப்பிடித்துப் படிப்பது என் வழக்கம். புலம்பெயர்ந்தோர் ஆய்வுநூல்கள், மரபிலக்கியங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகளைப் படித்துள்ளேனே தவிர, பெரிய அளவில் புதினங்களைப் படித்ததில்லை.

    நாவற்குடா இளையதம்பி தங்கராசா அவர்களின் “நான் என் அம்மாவின் பிள்ளை” புதினம் மிகச்சிறந்த நோக்கத்துடனும் திட்டமிடலுடனும் படைக்கப்பட்டுள்ளது. உயர்வு நவிற்சியில் அமையும் சில செய்திகளை நோக்காது, இதில் இடம்பெறும் கதைக்கூறுகளையும், நாட்டார் வழக்காற்று மரபுகளையும் எடுத்துரைப்பு உத்திகளையும் முன்கதைத் தொடர்ச்சிகளை உரிய இடங்களில் நினைவூட்டிச் செல்லும் உத்தி முறைகளையும் நோக்கும்பொழுது இந்தப் புதினத்தின் தேவையும் முக்கியத்துவமும் தெரியவரும்.

    ஹினெர் சலீம் அவர்களின் “அப்பாவின் துப்பாக்கி” என்ற புதினத்தைப் பேராசிரியர் வெங்கட சுப்புராய நாயகர் அவர்களின் தமிழ்மொழிபெயர்ப்பில் படித்தபொழுது சலீம் என்ற குர்திஸ்தான் போராளியின் வாழ்க்கை வரலாற்று வழியாக அவர்களின் நாட்டுவரலாறு, பழக்கவழக்கங்கள், இன்றையநிலை முதலியவை மிக நுட்பமாகச் சித்திரித்துக் காட்டப்பட்டிருப்பதைக் கண்டு வியந்ததுண்டு. அப்பாவின் துப்பாக்கிபோல் கதையமைப்பில் மொழி, இன, நாட்டுச்சிறப்பு உணர்த்தும் படைப்புகள் வெளிவருமா? என ஏங்கிக்கொண்டிருந்த என் மனக்குறையை ‘நான் என் அம்மாவின் பிள்ளை’ என்ற புதினம் நீக்கியது.

    இளையதம்பி தங்கராசா அவர்களின் புதினத்தில் கிழக்கிலங்கை மக்களின் பண்பாட்டு மரபுகள் மிக நுட்பமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற ஆவணப்படுத்தல் முயற்சிகளில் தமிழர்கள் ஈடுபடாததால் பலவற்றை இழந்து நிற்கின்றோம். இளையதம்பி தங்கராசா அவர்களைப் போலும் படைப்பாளிகள் ஈழத்திலும் தமிழகத்திலும் நிலவும் நம் மரபுகளையும் பண்பாடுகளையும் தங்கள் படைப்புகளில் ஆழமாகப் பதிவுசெய்ய வேண்டும். மொழி, இன, நாட்டுக்குப் பயன்படாத எந்தப் படைப்புகளையும் அது என்ன வகையான விளம்பரங்களுடன் வெளிவந்தாலும் அவற்றைக் கவனத்தில் கொள்ளவேண்டிய தேவையில்லை. அதேபொழுது மொழி, இன, நாட்டு மீட்சிக்குப் பயன்படும் ஆக்கங்களை இந்த உலகின் எந்த மூலையிலிருந்து எவர் தந்தாலும் அவர்களை உச்சிமேல் வைத்துக் கொண்டாடும் நிலை தமிழுலகிற்குத் தேவையாகும்.

    இளையதம்பி தங்கராசா அவர்கள் புதினம் எழுதுவதன் ஊடாக மட்டக்களப்பு மக்களின் வாழ்வியல், பொருளாதாராம், பண்பாடு, மொழி வழக்கு, இலக்கியம், கலைகள், தொழில்முறைகள், சமூக அமைப்பு எனப் பல செய்திகளைப் பதிவுசெய்துள்ளார் என்று முனைவர் இ.பாலசுந்தரம் அவர்கள் தம் அணிந்துரையில் முன்மொழிவு தந்துள்ளார்.

    இலங்கையில் பிறந்த அகத்தியன் என்னும் இளைஞன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள கப்பலில் பயணம்செய்து, அமெரிக்கத் துறைமுகம் ஒன்றில் அகதியாக இறங்குகின்றான். பத்தி என்ற பெயருடன் கப்பலில் பணிசெய்த பணியாளன் ஒருவன் அந்த நேரத்தில் நேர்ச்சியில் இறந்துவிட, அவன் பெயரில் அமெரிக்காவில் நுழைந்து கல்விகற்று, அணுசக்தி குறித்த பேரறிவு பெற்ற அறிவியலாளனாக, அமெரிக்காவின் சொத்தாக உயர்வு பெறுகின்றான். பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து, தாயக நினைவுடன் இலங்கை வந்து, தம் மட்டக்களப்பு மக்களின் கல்வி முன்னேற்றத்திற்குப் பலவகை முயற்சிகளைச் செய்வதும், தாயகத்தில் தாம் திருமணம் செய்துகொள்வதுடன் தம்மைச் சார்ந்தவர்களுக்குத் திருமணம் செய்துவைத்து, அனைவருடன் மீண்டும் அமெரிக்காவுக்குச் செல்லும் நிகழ்வுகளும்தான் புதினத்தின் கதைக்களமாகும்.

    இந்தக் கதையை இளையதம்பி தங்கராசா அவர்கள் மிகச் சிறப்பாகப் புனைந்து, படிப்பவர்களை உடன் பயணிக்கவைக்கின்றார். அமெரிக்காவிலிருந்து ஆப்பிரிக்கா செல்லுதல்,  அங்கிருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு வருவது, அங்குச் சரயு என்ற பெண்ணைச் சந்திப்பது, மெனிக்கே என்ற சிங்களப் பெண்ணைக் காண்பது, சென்னைக்கு வருதல், சிதம்பரம், மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஊர்களில் அமைந்துள்ள கோயில்களைப் பார்த்துக்கொண்டு, சென்னைக்குத் திரும்புவது என்பவை கதைப்போக்காக உள்ளன. இடையிடையே கோயில்கள் குறித்து அளித்துள்ள விளக்கங்கள் தங்கராசா அவர்களின் சமய ஈடுபாட்டையும் இசைப்புலமையையும் காட்டுகின்றன.

    அகத்தியன் சென்னையிலிருந்து இலங்கை வருவது; ரங்கதுரை என்ற தம் குடும்ப நண்பரைச் சந்திப்பது; வீட்டிற்குத் தேவையான பொருள்களைக் கொழும்பில் வாங்குவது; மட்டக்களப்பில் உள்ள தன் இல்லத்தை அகத்தியன் அடைவது; பெற்றோர் மற்றும் நண்பன் மாணிக்கன் உள்ளிட்டவர்களின் அன்பில் மகிழ்தல்; தாய்மாமன் குடும்பத்தாரின் தப்புக்கணக்கு, நண்பன் மாணிக்கனின் தங்கை சுவனீயை மணக்கத் திருமண ஏற்பாடு, தம்பி ஆனந்தனுக்குக் கராச்சியில் கண்ட பெண் சரயுவையும், நண்பன் மாணிக்கனுக்கு மெனிக்கே என்ற சிங்களப் பெண்ணையும் மணம்செய்ய நடைபெறும் முயற்சிகள் யாவும் கதையை இன்பமுடிவு நோக்கி நகர்த்துகின்றன. அகத்தியன் புதிய வீடு கட்டுவது, வயலில் வீடுகட்டுவது, மிகுதியான திருமணங்கள், மட்டக்களப்புப் பல்கலைக்கழகத்தை அமெரிக்க வாஷிங்டன் பல்கலைக்கழகம் பொறுப்பேற்று நடத்தும் ஒப்பந்தம், பட்டமளிப்பு விழாக்கள், அனைத்துப் பணிகளும் நிறைவுற்றதும் அகத்தியன் குடும்பத்தாருடன் அமெரிக்கா திரும்புவது, அமெரிக்க அதிபர் இலங்கைக்கு வருவது என்று கதைப்போக்கு நீள்கின்றது.

    பாத்திரப் படைப்புகள்

    ‘நான் என் அம்மாவின் பிள்ளை’ புதினத்தில் இடம்பெறும் கதைப்பின்னலின் ஊடே, நனவோடை உத்தி வழியாகத் தங்கராசா சில பாத்திரங்களைத் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். கதையோட்டத்தில் பல்வேறு பாத்திரங்கள் அறிமுகமாகின்றன. தெவ்வியம்மா, மாணிக்கன், சுவனீ, வேலப்போடியார், இரேவதி, மார்க்கண்டர், யோகராணி, ஆறுமுகம், நாராயணன், பார்வதி அம்மா, ரங்கவடிவேல், ஆனந்தன், சரயு, மெனிக்கே, செல்லம்மா, இளையவர், கோபாலகிருஷ்ணன், மாதவி, மாஅக் கிறகர், நன்சி, தொம்சன், உவட்சன், பற்றீரிசியா, காண்டிராக்டர் சுப்பிரமணியம், அலிஹாஜியார், அப்துல்லா, அதுறலிய, மச்சந்தி, தரணி, தவசி, மகேந்திரன், ஜெகதீஸ்வரி, வரகுணபாண்டியன், வாசுகி, சாமி உள்ளிட்ட பாத்திரங்கள் நம் நெஞ்சைவிட்டு நீங்காதவையாகும்.

    இளையதம்பி தங்கராசா அவர்களின் மண் பற்று இந்தப் புதினத்தில் சிறப்பாக வெளிப்பட்டு நிற்கின்றது. தம் மட்டக்களப்புப் பிரதேசத்தின் இயற்கை வளம், விருந்தோம்பல், வழக்கில் உள்ள மந்திரச்சடங்கு, வழிபாடுகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், மீன்பிடித்தொழில்கள், அறுவடைத்தொழில்கள், உணவுப் பழக்கவழக்கம், மக்களின் திருமண உறவுகள், நாட்டார் வழக்குகள், பாடல்கள், பழமொழிகள், கல்விமுறைகள் என யாவற்றையும் இந்தப் புதினத்தில் பொருத்தமான இடங்களில் அமைத்து, கற்பார்க்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் வழங்கியுள்ளார்.

    மட்டக்களப்புப் பகுதியில் உள்ள அவணம், கிறுகி, குளுத்தி, கொட்டான், பொடியன், நுளம்பன், போடியார், மடைப்பெட்டி, மயண்டை, முல்லைக்காரன், வாவி, வரம்பு, பதைச் சுழுந்து, ஆள்வெருட்டி, உப்பட்டி, வரவை, பூச்சி பட்டை, கொல்லா / விசாள், சேருவக்கால், கரத்தை, தேசிக்காய், குடுகு, பசளை, சவள், வாடி, சல்லு, கூடு, குசினி, களிசான், கோப்பிசம், வக்கடைகள், கண்ணாக்காடு, கரச்சை, திராய் (192), விசளம், வட்டாமடை, கொல்லா, புறியாணி, றீ(டீ), சிக்கின், பிளேன்ரீ போன்ற வழக்குச் சொற்களை இந்த நூலில் பெய்து எழுதியுள்ளார். இலங்கை மக்களுக்குப் புரியும் இச்சொற்கள் தாயகத் தமிழ்மக்களுக்குப் புரிய வாய்ப்பில்லை.

    இளையதம்பி தங்கராசா அவர்கள் கற்பவர்களுக்குச் சலிப்பு ஏற்படாதவாறு பல்வேறு உத்திகளைப் பின்பற்றிப் புதினத்தை உருவாக்கியுள்ளார். பத்தி என்பவனை அறிமுகப்படுத்தி, அவன் அகத்தியனாக நம் இதயத்தில் பதியும்வரை உள்ள பகுதிகள் ஒரு மர்மப் புதினம் படிக்கும் உணர்வை உண்டாக்குகின்றன. அமெரிக்காவிலிருந்து புறப்படும் பத்தி, ஆப்பிரிக்காவில் தரையிறங்கும்பொழுது அகத்தியனாகின்றான். அங்கிருந்து கராச்சிக்குச் சென்று, தங்கி இந்தியாவுக்குப் பயணமாவதும் அவனுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புகளும் மிகச் சிறப்பாக உலகியல் நோக்கி அமைக்கப்பட்டுள்ளன. கதையின் முக்கியப் பாத்திரங்களாக மாறப்போகும் சரயு, மெனிக்கே ஆகியோரைக் கராச்சியில் சந்திக்கவைத்து, உரையாடல் புனைவுகளால் கதையை மிகச்சிறப்பாக நகர்த்தியுள்ளார்.

    கராச்சியை நோக்கி விமானம் பறந்தபோது தமது பழைய வாழ்க்கையை அகத்தியன் அசைபோடுவதாகப் புதின ஆசிரியர் பழைய நிகழ்வுகளை நமக்கு எடுத்துரைக்கின்றார். தம்மைத் தற்காத்துக்கொள்ளக் கொலைசெய்யவும் துணிந்த அகத்தியனைக் காத்த தெவ்வியம்மாளின் வழியாக அகத்தியனின் இளமை வாழ்க்கை அறிமுகம் செய்யப்படுகின்றது. அகத்தியன் திறமையானவன் என்பதும் அவன் வளர்ச்சி, புகழ்கண்டு மாமன்மகன் மோகன் பொறாமையால் ஆள்வைத்து அடிக்க முயற்சி செய்வதும் அதில் நிகழஇருந்த கொலை தடுக்கப்படுவதும் அதிலிருந்து விடுபட அகத்தியன் வெளிநாட்டுக்குப் புறப்படுவதும் என அமெரிக்கா புறப்பட்டதற்கான புதிர் விடுவிக்கப்படுகின்றது. அகத்தியன் மந்திரக்கலையில் வல்லவன் என்று குறிப்பிடும் வகையில் மட்டக்களப்புப் பிரதேசத்தில் வழக்கில் உள்ள மந்திரம், சடங்கு, அஞ்சன மைபோட்டுப்பார்க்கும் பழக்கம், காட்டுப்பிள்ளையார் வழிபாடு என்று பல செய்திகளைப் புதின முகப்பில் ஆசிரியர் அறிமுகம் செய்கின்றார்.

    இளையதம்பி தங்கராசா அவர்களின் புதினத்தில் தமிழ் இலக்கியச் செய்திகள், திரைப்படப்பாடல்கள், இசைப்பாடல்கள் சிறப்பாக நினைவுகூரப்பட்டுள்ளன. திருமுறைகளையும், கம்பராமாயணத்தையும் (II. 475), பெருங்கதையையும், கீதையையும் பாரதியார், பாரதிதாசன் பாடல்களையும் அயல்நாட்டுப் பழமொழிகளையும் வழக்கில் உள்ள தமிழ்ப் பழமொழிகளையும் பொருத்தமாக ஆண்டுள்ளார். எல்லாளன், துட்டுகைமுனு வரலாற்றையும் உரிய இடத்தில் நினைவூட்டுகின்றார் (II, 476). இவ்வாறு மரபுவழிப்பட்ட செய்திகளையும் முன்னோர் மொழிபொருள்களையும் எடுத்தாளும் உள்ளம் பண்பாடு காக்க முனைவோர்க்கே வாய்த்த ஒன்றாகும். 

    தமிழ்–சிங்கள உரையாடல்

    இளையதம்பி தங்கராசாவின் புதினத்தில் சிங்களச் சொற்களும் உரையாடல்களும் பொருத்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கொழும்பு – குருணாகலை செல்பவர்கள் அன்னாசிப் பழங்கள் விற்கும் கடவத்தை என்னும் இடத்தில் இறங்கி அன்னாசிப் பழங்களை வாங்கிக்கொண்டு செல்வார்கள். அகத்தியன் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு செல்லும் வழியில் தேநீர் குடிக்க வண்டியை நிறுத்தியபொழுது, அங்கு,

    “அனாசிக்கெடி ஓணதை மகாத்தையா”

    “றத்தாங் பகட்ட றவும முரிசு கேடி தியணவத?”

    “ஓணதறங் தியனவா மகாத்தையா,

    மகாத்தைஐயாட்ட கெடி கீயதோணே”

    அபிட்ட கெடி விஸ்சக் தோறலா தெண்ட”(பக்கம் 189)

    என்று தொடரும் உரையாடல்கள் சிங்கள-தமிழ் மக்களின் வணிக உறவைக் காட்டும் தொடர்களாகும்.

    மெனிகேயின் தந்தை கராச்சியில் இலங்கை அரசின் தூதுவராகப் பணியாற்றுபவர். தம் மகளுக்குத் திருமண வாழ்க்கை அமைய உள்ள மகிழ்வில் இரகசியமாக மட்டக்களப்பு வருவதும் தன் மகளின் மகிழ்ச்சியான வாழ்க்கையை நினைத்து, மாணிக்கனுக்கு அவளைத் திருமணம் செய்துவைக்க விரும்புவதும், தன் மகளுடன் சிங்களத்தில் உரையாடுவதும் இந்தப் புதினத்தில் நெஞ்சை உருக்கும் பகுதிகளாகும். மெனிகே, “வேண்டாம் தாத்தே”, ”துக்கத்தில் அழவில்லையடா துவே” “பூஞ்சி அம்மே, நங்கி, மல்லிலா, கொகோமத தாத்தே”, “சியலுதெனாம ப்பெயிங் இன்னவா துவே” (பக்கம் II, 132), சீயா, (136)) என்னும் சிங்களச் சொற்களும் உரிய உரையாடல் சூழலில் ஆளப்பட்டுள்ளன.

    மாலு மாலு மாலு
    ரஞ்ஜனீட்ட மாலு
    ரஞ்ஜனீட்ட மாலு கெனவா

    மாலு மாலு மாலு
    ரஞ்ஜனீட்ட மாலு
    ரஞ்ஜனீட்ட மாலு கெனவா

    என்ற இலங்கையில் பாடப்படும் பைலா பாட்டினை அதுறலிய அவர்கள் பாடியதாகக் காட்டியுள்ளது இலங்கை நாட்டின் இசைமுறையை நாம் அறிந்துகொள்ளும் வாய்ப்பாக அமைகின்றது(147).

    கொட்டைகுத்திப் புல்லுக்கு விளக்கம் தருவது (230, 231), புதிர் எடுத்தலும் புதிர் சாப்பிடுவதும் (469, 470), சூடடித்தல், களவட்டிப் பொங்கல் (II 62), பொலிப்பாடல், அறக்குப்புதையல் (II 173), வலதுகால் எடுத்து வைத்தல் (II 188), பாடும் மீன்கள், யானைக்கல் (II 225), சாவல் காக்காவின் சாப்பாட்டுக்கடை, பரவற்கல் (II 252), மீனவர் வாழ்க்கை (II 257), மீன்கடிக்கும் நேரம் (II 262), மடைப்பெட்டி எடுத்தல் (I. 76), றாகத்தான சாப்பாடு (I 199), தாலிக்குப் பொன்னுருக்குதல் (II 282), மட்டக்களப்பு வாவி, மாணிக்கக்கற்கள் (II. 328), கொழுக்கட்டைப்பெட்டி (II. 405) முதலிய செய்திகளோடு விபுலானந்த அடிகளாரின் பணிகள் மற்றும் இசைப்புலமையையும் (I.101), (I. 429, 444), (II 237-240,) உரிய இடங்களில் நினைவு கூருவதும் நாட்டார் மரபைப் போற்றும் இளையதம்பி தங்கராசா அவர்களின் உள்ளத்திற்குச் சான்றாகும். 

    பழமொழிகள்

    தங்கராசா அவர்கள் தம் புதினத்தில் பழமொழிகள், வழக்குச்சொற்கள், பட்டறிவு மொழிகளை மிகுதியாக ஆண்டுள்ளார்.

    “செட்டிக்கு வெள்ளாமை ஜென்மப் பகை”

    “பசு தம்பிரானுக்கு பால் நம்பியானுக்கு”

    “தாரமும் குருவும் தலை எழுத்துப் படி”

    “போன மச்சான் திரும்பி வந்தான்
    பூமணத்தோட”

    “காகமும் இருக்கக் குரும்பட்டியும் அதன்மேல் விழுந்த கதை” (1, 232)

    “ஆத்தாத நாய் கழிக்கோலைக் கடிக்குமாம்” (1, 278)

    “எட்டாத பழம் புளிக்கும்தானே”

    “Good things no cheep and cheep things no good” சீனப் பழமொழி

    “இருண்ட வானத்திலும் ஒருவெள்ளிக்கரை தெரியும்” (1,.331)

    “எறும்புக்கு எருமை மாட்டின் சிறுநீர்,
    ஏகப்பட்ட ஏரியாகத் தெரியுமாம்” (1, 456)

    “பல்லால கிழிக்க வேண்டிய பனங்கிழக்குக்கு
    வல் இட்டுக் கிட்டியும் ஆப்பையும் பாவிப்பது  மாதிரி” (1, 477)

    “கைப்புண்ணைப் பார்ப்பதற்குக்
    கண்ணாடி என்னத்திக்கிடா” (II 477)

    “மந்திரம் கால், மதி முக்கால்”(II 479)

    “அகத்தி ஆயிரம் காய்களைத்தான் காய்த்தாலும் அது புறத்தி புறத்தி தானே”(II,90)

    “முதலைக்குட்டிக்கு நீந்தக் கற்றுக்கொடுக்கத் தேவை இல்லை”(I 29)

    ஆள்பாதி ஆடை பாதி,(I 181),

    “Footwear and headwear” – ஆங்கிலச் சொலவடை

    “தலையால் வருகின்ற செல்வத்தைக் காலால் உதைத்துத் தள்ளிவிடாதே”(I. 295)

    முதலிய பழமொழிகளைப் பொருத்தமாக ஆண்டுள்ளார். இவை நாட்டார் இலக்கியம் குறித்த ஆய்வுலகிற்குப் பயன்படும் செய்திகளாகும்.

    “காத்தான்குடி முஸ்லீம்கள் நண்டு உண்பதில்லை” (IV 140) என்றும் “கரடியனாற்று கட்டித் தயிரையும், வாகனேரித் தேனையும்” (II.165). முருங்கைக் கீரை, முருங்கைக் காயின் மகத்துவம், ஏறாவூர் சந்தை (I, 192), ஆள்வெருட்டி (I 371) பற்றியும் அரிய உண்மைகளைப் பதிவு செய்துள்ளமை தங்கராசாவின் படைப்புத்திறனுக்குச் சான்று பகரும் இடங்களாகும்.

    பில்லிவிடுதல், சூனியம், கொழுந்து முறித்தல், நெட்டை முதலான மந்திரம் தொடர்பான செய்திகளையும் தம் புதினத்தில் விளக்குகின்றார்.

    இலங்கையின் சிறப்பு இசைக்கூறாகப் பொலிப்பாடல்கள் விளங்குகின்றன. நாட்டார் இசையில் சிறப்பிடம் பெறும் பொலிப்பாடல்களை உழவர்கள் ஆர்வமுடன் பாடுவது மட்டக்களப்புப் பிரதேசத்தில் வழமையான நிகழ்வாகும். இந்தப் புதினத்தில் பொலிப் பாடல்கள் உயிர்பெற்று விளங்குகின்றன,

    “தாயே பொலி, தம்பிரானே பொலி
    பூமிபொலி, பூமாதேவித் தாயே
    மண்ணின் களமே, மாதாவே நிறைகுடமே
    பொன்னின் களமே, பொலி பொலியோ!

    முன்னங்கால் வெள்ளையல்லோ
    பொலியம்மா தாயே – நீ
    முகம் நிறைந்த சீதேவி
    பொலி பொலியோ!

    வெள்ளி வெளிச்சத்திலே – நீ
    விளையாடி வா பொலியோ
    வாரி சொரியப் பொலி தன்ம தாயே – இந்த
    வளநாடு பொன் சொரியப் பொலி பொலியோ” (II, 74)

    என்பன பொலிப்பாட்டுக்குச் சான்றாகும் பாடல்களாகும்.

    குழுக்குறிச் சொற்கள்

    மட்டக்களப்புப் பிரதேசத்தில் உழவுத்தொழிலின்பொழுது சூடடிக்கும் இடத்தில் சில குழூக்குறிச் சொற்களைத்தான் பயன்படுத்துவார்கள் என்று கூறி, அதற்குரிய காரணத்தையும் புதின ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

    இலங்கையை இராவணன் ஆண்டபொழுது நிகும்பலை யாகம் செய்தான். அந்த யாகத்திலிருந்து பல பூதங்கள் வெளியேறின. அந்தப் பூதங்கள் சக்தி வாய்ந்தவை. இவைகளைக் கொண்டு இராவணன் மக்களுக்குத் தேவையான ஆக்கப் பணிகளைச் செய்தான் எனவும் அவன் மறைவுக்குப் பிறகு அந்தப் பூதங்கள் 108-உம் கைவிடப்பட்ட நிலையில் உணவுதேடி அங்கும் இங்கும் அலைந்தன எனவும், பகலில் குகை ஒன்றில் இவை ஒளிந்துகொள்வதாகவும் மக்கள் நம்பினர். இராம பக்தையாகிய ஆடக சௌந்தரி என்னும் இளவரசி இராம மந்திரம் ஓத, அப்பூதங்கள் அவளை வணங்கி, அவள் அடிபணிந்தன. அவற்றை அழைத்துச்சென்று, நாளொன்றுக்கு 24 கலம் அரிசிக் கஞ்சி வழங்குமாறு இளவரசி தம் பணியாளர்களுக்குக் கட்டளையிட்டாள். அந்தப் பூதங்களைக் கொண்டு பல நீர்த்தேக்கங்களைக் கட்டினாள் எனவும் 140-ஆம் வயதில் அவள் இறையடி சேர்ந்த பின்னர் மீண்டும் அப்பூதங்கள் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் திரிகின்றன எனவும் மக்கள் நம்புகின்றனர். எனவே சூடடிக்கும் களங்களில் மக்களின் வழக்கில் உள்ள சொற்களைச் சூடுமிதிப்பவர்கள் பேசினால் அப்பூதங்கள் புரிந்துகொண்டு தொல்லை விளைவிக்கும் என நம்பி, அதனால் வயற்களத்தில் பலவகையான குழுக்குறிச் சொற்களை மக்கள் பயன்படுத்துகின்றனர் என்று கூறி, 32 குழுக்குறிச் சொற்கள் நமக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

    அவையாவன:

    1. பொலி – நெல்
    2. களம் – சூடுமிதிக்கும் இடம்
    3. வெள்ளம் / கலங்கல் – தண்ணீர்
    4. வேலைக்காரன் – வைக்கோலைக் கிளறும் வளைதடி
    5. போர் – சூடு – நெற்கதிர் குவியல்
    6. வாரிக்காலன் – சூடுமிதிக்கும் மாடுகள்
    7. கரைஞ்சான் – வாழைப்பழம்
    8. வலிச்சான் – உறட்டி
    9. வெள்ளோடன் – தேங்காய்
    10. கூரைக்கோடு – வீடு
    11. பொலிக்கொடி – வைக்கோல் / வைக்கோல் கயிறு
    12. கணக்கன் – மரைக்கால்
    13. குஞ்சுவாயன் – கைப்பெட்டி
    14. பெருவாயன் – கடகம்
    15. நெடுமுளவன் – கயிறு
    16. கட்டு – வா / போ
    17. பெருக்கம் – குறைவு / முடிந்துவிட்டது
    18. மின்னிக்கட்டுதல் – நித்திரை கொள்ளல்
    19. நெடுமின்னி – மரணம்/ இறப்பு
    20. வாடி கட்டுதல் – ஓரம் கட்டுதல்(களவட்டியின்)
    21. வருணன் – மழை
    22. கூளக்கையன்- பேய் – பூதம்
    23. பெருமாள் – ஆண்பிள்ளை
    24. அடைக்கலச்சல்லி – பெண்பிள்ளை
    25. கடற்கரும்பு – மீன்
    26. கருங்காய் – பாக்கு
    27. புகைஞ்சான் – புகையிலை
    28. களம் பொலிதல் – சூடடித்து முடிதல்
    29. வெள்ளப்பெருக்கம் – தண்ணீர் குறைவு – இல்லை
    30. அரக்கன் – சூடு மிதிக்கும் முல்லை மாடு
    31. வெட்டி வாயன் – மண்வெட்டி
    32. அவுரி – பொலிதூற்றப் பாவிக்கப்படும் முக்காலி

    இளையதம்பி தங்கராசா அவர்கள் இசை ஈடுபாடும் நாட்டிய ஈடுபாடும் உடையவர் என்பதை இந்த நூலில் எடுத்து வழங்கியிருக்கும் இசைப்பாடல்களிலிருந்தும் நாட்டியம் குறித்த செய்திகளிலிருந்தும் அறிந்துகொள்ளலாம். மாதவி அம்மா, கோபால கிருஷ்ணன், மச்சந்தி, அகத்தியன், சரயு உள்ளிட்ட யாவரும் ஒவ்வொரு கலைகளில் தேர்ந்த அறிவுடையவர்களாக இந்தப் புதினத்தில் காட்டப்பட்டுள்ளனர். இவர்கள் இசையிலும் நாட்டியத்திலும் சிறப்புற்று விளங்குவதாகப் புதின ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

    “மகா கணபதி”,

    “எந்தரோ மகானுபாவலு அந்தரீக்கு வந்தனம்”(II, 181)

    “தலையைக் குனிந்த தாமரையே (II,183),

    ஓர் ஆயிரம் பார்வையிலே (II, 184),

    “ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை

    காணக் கண் ஆயிரம் வேண்டாமோ” (II 209 ),

    “தங்கத் தடாகத்தில்” (II 234),

    “மன்மத லீலையை”

    “நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே”

    “தண்டலை மயில்கள் ஆட” (II 256),

    போன்ற இசைத்தொடர்புடைய வரிகளை ஆண்டுள்ளமை இவர்தம் இசையீடுபாட்டுக்குச் சான்று பகர்வனவாகும்.

    உணவு வகைகள்

    ஈழத்தில் வழக்கில் இருந்த உணவுகளை இந்த நூலாசிரியர் வாய்ப்பு நேரும் இடங்களில் எல்லாம் பதிந்துவைத்துள்ளார். இவற்றைச் சமைப்பதையும், பரிமாறுவதையும் நயம்பட உரைக்கும் நூலாசிரியர் கற்போருக்கு இந்த உணவு வகைகளின்மேல் ஈர்ப்பு உண்டாகும்படிச் செய்துவிடுகின்றார்.

    அவற்றுள், கைக்குத்தரிசி மாவால் தயார் பண்ணப்பட்ட இடியாப்பம், கூனி இறால் சுண்டல், ஒட்டி மீன் தீயக்கறி, தேங்காய்ப்பூ போட்டு அவித்த அரிசிமாப்புட்டு, மணலைமீன் கறி, இறால் பாலணம், பாலப்பம், இறால் கருவாட்டுச் சம்பல் (II, 192), இறால் கறி, மாசிச்சுண்டல், இட்டிலி, தோசை, இஞ்சிப் பிளையின் டீ, பறங்கி வாழைக்குலை, முட்டைக் கொத்து, சிக்கின் கொத்து, இறால், மீன் பொரியல், கொத்து ரொட்டி, சினை நண்டுப் பொரியல், மட்டுறால் பொரியல், உவைன், நண்டின் சினை, முட்டை, பச்சை மிளகாய் கீறல், ஒம்லெட், ஒட்டி மீனும் முருங்கைக்காயும் சேர்த்துச் சமைத்த வெள்ளைக்கறி, முட்டையப்பம், குத்தரிசி மா இடியாப்பம், மட்டன் குறுமா, சிக்கின் புரியாணி, கரடியனாற்றுக் கட்டித்தயிர், வாகரைத்தேன், கட்டுச்சோறு, கோப்பி, இடியாப்பம், ஆணம், கட்டித்தயிர், தேன், புட்டு, பிஞ்சுப் பலாக்காயுடன் மாசியும் போட்டுக் காய்ச்சிய ஆணம், மாம்பழ ஒட்டி மீன் தீயக்கறி, நண்டுச்சினை ஓம்லெட், மாம்பழங்கள், மணலைமீன் பொரியல், பால் றால் பொரியல், சீனி காய்ச்சி வார்த்த முந்திரியம் பருப்புகள், நண்டு.றால், கணயான் கருவாடு போட்ட கத்தரிக்காய் குழம்பு, துண்டு, முருங்கை இலைச்சுண்டல், முருங்கைக்காய் கறி, கட்டுச்சோறும் கட்டாப்பாரை கருவாட்டுக்கறி, நாட்டுக்கோழிக் கறி, சீனி அப்பம், சாவல் ஸ்பெசல் மட்டுறால் (Tigher shrimps), கீரிமீன் பொரியல், முட்டைக்கொத்து, முடிச்சுசோறு (Lump rice) என மட்டக்களப்புப் பகுதியில் பரிமாறப்படும் உணவு வகைகளை அறியும்பொழுது தமிழர்களின் உணவுப்பழக்கம் நமக்கு அறிமுகம் ஆகின்றது.

    “நான் என் அம்மாவின் பிள்ளை” என்ற புதினம் பல்வேறு உண்மைகளைத் தமிழ் உலகுக்குச் சொல்லி நிற்கின்றது. கல்விஅறிவில் எந்த உயர்நிலைக்குச் சென்றாலும் பிறந்த மண்ணையும் மக்களையும் நினைக்க வேண்டும்; ஒரு மனிதனுக்குத் தேவையான உயர்ந்த பண்புகளுள் நன்றியுணர்வு குறிப்பிடத்தக்க பண்பாகும்; எளியவர்களுக்கும், தேவையானவர்களுக்கும் உதவுவதற்கு வாய்ப்பு அமையும்பொழுது முன்னுரிமை தந்து உதவ வேண்டும்; மரபுகளையும், பழைமையையும் போற்றுவதில் ஆர்வம்காட்ட வேண்டும்; பெற்றோரை மதிப்பதில் அனைவரும் ஆர்வம்காட்ட வேண்டும் என்பன போன்ற அறவுரைகளை இந்தப் புதினம் வழியாக அறியமுடிகின்றது. அதற்குத் தகுந்தாற்போல் பாத்திரப் படைப்புகள் வார்க்கப்பட்டுள்ளன.

    அகத்தியன் போன்ற மக்கள் பற்றாளர்கள், அறிவை ஆக்கப்பணிகளுக்குப் பயன்படுத்த முன்வந்துள்ளமையும், தம் செல்வத்தையும், செல்வாக்கையும் மக்கள் முன்னேற்றத்திற்கு வழங்கியுள்ளதையும் புதினம் உணர்த்தி நிற்கின்றது.

    பல இனங்களைச் சேர்ந்தவர்களும், பல மதங்களைச் சேர்ந்தவர்களும், பல தொழில்களைச் செய்பவர்களும் இந்தப் புதினத்தில் தோன்றித் தங்கள் மரபுகளைப் பேணியுள்ளதை நுட்பமாகப் புதினத்தைப் படிக்கும்பொழுது விளங்கிக்கொள்ளலாம். தமிழர்களின் விருந்தோம்பல் பண்பை இந்தப் புதினம் பல இடங்களில் அடையாளப்படுத்தியுள்ளது. உழவுத் தொழிலை மேற்கொள்ளும் மக்கள் காலவரிசையில் செய்யும் தங்கள் தொழில்சார்ந்த முன்னேற்பாடுகளும் வேலைகளும் மிகச்சரியாக இந்தப் புதினத்தில் காட்டப்பட்டுள்ளன. நடவு தொடங்கி அறுவடை வரையிலான அனைத்துப் பணி நிலைகளையும் புதின ஆசிரியர் கதையின் வழியாகக் கட்டமைத்துக் காட்டியுள்ளார்.

    மட்டக்களப்புப் பிரதேசத்தின் முதன்மைத் தொழில்களுள் ஒன்றான மீன்பிடித்தொழில் குறித்த பல்வேறு நுட்பங்களை இந்தப் புதினத்தில் புதின ஆசிரியர் படைத்துள்ளார். மீன்பிடி கருவிகள், மீன்பிடி முறைகள், மீன்வகைகள், மீன் சமைத்தல், மீன் விற்பனை, மீன் வலைகள், மீனவர்களின் சோகம் நிறைந்த வாழ்க்கை, படகுகள், கட்டுமரங்கள் குறித்த பல விவரங்களை இந்தப் புதினம் வழியாக அறியமுடிகின்றது.

    அகத்தியன், மாணிக்கம், ஆனந்தன், தரணி உள்ளிட்டவர்களின் திருமணத்தை ஒட்டி நடைபெறும் பல்வேறு நடைமுறைகள், சடங்குகள், பழக்கவழக்கங்கள், பண்பாட்டுக்கூறுகள், உடைகள், யாவும் தமிழர்களிடம் தொன்றுதொட்டுக் காணப்படும் மரபுத்தொடர்ச்சியை உலகுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கும். திருமணத்தின்பொழுது செய்யப்படும் தாலி செய்தல், குண்டு செய்தல் என்பன முக்கியச் செயல்களாகும். அதனை நினைவிற்கொண்ட புதின ஆசிரியர், அகத்தியன் தந்தையார் வழியாக தம் மரபுநிலைப் பழக்கவழக்கங்களை அழகாக மொழிந்துள்ளார். இன்றைய வேலை வாய்ப்பு, பணிச்சூழலில் பெண்கள் தாலி அணிவதில் உள்ள சிக்கல்களை நினைவூட்டி, அதே பொழுது தாலியின் அவசியத்தை வலியுறுத்துவது அவரின் உள்ள விருப்பத்தை நமக்குக் காட்டுகின்றது. மெட்டி அணிதல், மோதிரம் எடுத்தல், வலதுகால் எடுத்துவைத்தல், கெட்டிமேளம் போன்ற சடங்குகளின் முக்கியத்துவத்தைப் புதின ஆசிரியர் விளக்கிச் செல்வது அவர்தம் பல்துறைப் புலமையை மதிப்பிட உதவுகின்றது.

    சிங்கள மக்களின் ஆடை அலங்கார முறை, பெண்களின் திருமணத்தின்பொழுது வழங்கும் சீர்ப்பொருள்கள், அவர்களின் நாகரிகமும், வளமும் நிறைந்த பொருளாதார வாழ்க்கையை மெனிகே திருமணத்தின் வழியாகவும், மெனிகேயின் தாயினுக்குக் கொடுக்கப்பட்ட சீர்ப்பொருள்களின் வழியாகவும் அறிந்துகொள்ளமுடிகின்றது. முதல் மனைவியின் மகளான மெனிகே மீது அவளின் தந்தை கொண்டிருந்த பாசமும், மகளுக்குத் தன் இரண்டாம் மனைவி மற்றும் பிள்ளைகளைப் பிரிந்துவந்து, அவளுக்குத் திருமணம் நடைபெற உள்ள சூழலை அறிந்து அவர் அடைந்த மகிழ்ச்சியும் படிப்பவர்களைக் கரைந்துருகச் செய்யும் பகுதிகளாகும். மெனிகேயின் தாத்தா மெனிகேக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று சேர்த்துவைத்துள்ள சீதனப் பொருள்களை அறியும்பொழுது ஒட்டுமொத்தக் குடும்பமும் மெனிகே மீது வைத்திருந்த அன்பும், அவளுக்கு அவர்கள் எதிர்பார்த்த திருமண வாழ்வு அமைந்த முறையும் புதினத்தின் சிறப்புப் பகுதிகளாகும். பேராதேனியப் பல்கலைக்கழகத்தின் பௌதீகப் பேராசிரியர் மகன் லலித், சிறீமா திருமணம் பற்றிய குறிப்புகளிலும் சிங்கள மக்களின் செல்வச் செழிப்பைக் காணமுடிகின்றது (I. 261).

    முசுலிம் மக்களின் பண்பாடு, பழக்கவழக்கம், வணிகம், மீன்பிடித்தொழில் குறித்த செய்திகளையும் புதின ஆசிரியர் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். காலம் காலமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள முசுலீம் மக்களின் பிரதிநிதிகளாக வெள்ளையன் காக்காவும், சுல்தான் காக்காவும், மீன் வியாபாரி செய்யதும் காட்டப்படுகின்றனர். பீதாம்பரம் என்னும் மீன்பிடிக்காரர், மெண்டிஸ் போன்றவர்களையும் கடல்பயணத்தில் காண முடிகின்றது. சட்டத்திற்குப் புறம்பாக மீன்பிடிப்பதற்கான காரணங்களையும் இந்தப் புதினம் குறிப்பாகச் சுட்டுகின்றது.

    மட்டக்களப்பு வாவியில் மீன்பாடும் பகுதியையும் மீன்கள் பாடுவதற்கான காரணத்தையும் நமக்கு அங்கு வழங்கும் பல்வேறு செய்திகளின் அடிப்படையில் புதின ஆசிரியர் வழங்கியுள்ளார். விபுலானந்த அடிகள் அவர்கள் மீன்பாடும் செய்திகுறித்தும் இசை குறித்தும் சொன்ன செய்திகளை புதினம் பொருத்தமாக நமக்குக் அறிமுகம் செய்துள்ளது.

    இலங்கையில் பார்த்து மகிழத்தக்க கல்லடி லேடி மஅனிங் பாலம், பாசிக்குடா கடற்கரை, பூநொச்சிமுனைக் கடற்கரை, கதிர்காமம், அறுகம்பே வாடிவீடு, குமணை சரணாலயம், பொத்துவில் வில்லுக்குளத்து யானைக்கூட்டம் போன்ற இடங்களையும் அந்த இடத்தின் சிறப்புகள் குறித்த செய்திகளையும் நமக்கு இந்தப் புதினம் வழியாக ஆசிரியர் விளக்கியுள்ளார்.

    புதினத்துடன் தொடர்புடைச் செய்திகளை விளக்கும் வண்ணப்படங்களையும் ஆசிரியர் இணைத்துள்ளமை மட்டக்களப்புப் பிரதேசப் பழக்கவழக்கங்களை அறிய விரும்புவார்க்குப் பேருதவிபுரியும்.

    “நான் என் அம்மாவின் பிள்ளை” என்ற அரிய புதினம் புலம்பெயர்ந்த தமிழர்களின் பார்வைக்கும் பயன்பாட்டுக்கும் உரிய நூலாக உள்ளது. பெரும் தொகுதியை உருவாக்கியதன் வழியாக மட்டக்களப்புப் பகுதியின் சிறப்பினையும் பண்பாட்டு மரபுகளையும் நிலைப்படுத்தி, வாழ்விக்க வழிசெய்த இளையதம்பி தங்கராசா நம் பாராட்டுக்கும் மதிப்புக்கும் உரியவர்.

    *****

    நூல்: நான் என் அம்மாவின் பிள்ளை(இரண்டு பகுதிகள்)
    ஆசிரியர்: நாவற்குடா இளையதம்பி தங்கராசா, கனடா வெளியீடு: 2015

     

     

    Share
  • மேகதூதம்

    -ல. புவனேஸ்வரி & சி. சத்தியசீலன்

    முன்னுரை:

    கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற சமற்கிருதப் புலவரான காளிதாசரால் இயற்றப்பட்ட பாடல் மேகதூதம் ஆகும். இது தமிழில் உள்ள தூது இலக்கியத்தை ஒத்ததாகும். பணி காரணமாக நீண்ட நாட்களாக திரும்பாத தலைவர், தன் மனைவிக்கு மேகத்தைத் தூதுவிடுவதாக இப்பாடல் அமைகிறது. இது இலத்தீன், ஜெர்மன், பிரெஞ்சு போன்ற பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  எளிமையும் அழகும் மிகுந்த மேகதூதக் கதையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

    1. தூது எனப்படுவது:

    நேரடியாகச் சொல்ல முடியாத வேளைகளில், ஒருவர் சொல்ல விரும்பும் செய்தியை இன்னொருவர் மூலம் தெரிவிப்பதே தூது. தூது என்ற தமிழ்ச்சொல்லுக்கு தனிப்பெரும் சிறப்பு இருக்கிறது. ஒரு நெடில் எழுத்தும் அதே எழுத்தின் குறிலும் சேர்ந்து பொருள் தரும்படியான சொல் தூது என்ற சொல் மட்டுமாகும்.

    1.1. தூதின் இலக்கணம்:  

    தூது இலக்கிய வகையின் இலக்கணத்தைப் பின்வரும் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன:

    இலக்கண விளக்கம்
    பிரபந்த மரபியல்
    சிதம்பரப் பாட்டியல், மரபியல்
    நவநீதப் பாட்டியல், செய்யுளியல்
    முத்துவீரியம், யாப்பதிகாரம், ஒழிபியல்

    பாட்டியல் நூல்கள் கூறும் இலக்கணம் மூலம் தூது இலக்கியம் என்பது,

      தூது அனுப்புவோர் ஓர் ஆணாக அல்லதுபெண்ணாக இருக்கலாம்.
    தூது பெறுவோரும் ஓர் ஆண் அல்லது பெண்ணாக இருக்கலாம்.
    காதல் காரணமாக ஏற்பட்ட பிரிவுத்துயரம், தூதுஅனுப்புவதன் நோக்கமாக அமையும்.
      தூது அனுப்புவோர், உயர்திணை மாந்தர் அல்லது ஓர் அஃறிணைப் பொருளிடம் தம் செய்தியைக்கூறி அனுப்புவது.
      தூது பெறுவோரிடம் இருந்து மாலையை அல்லது வேறு ஏதேனும் ஒரு பொருளை வாங்கிவருமாறு வேண்டித் தூது அனுப்புவது.

    என்பன தெரியவருகின்றன.

    தூது விடப்படுபவை:

    மனிதர்: தோழி, விறலி
    பிற உயிரினங்கள்: அன்னம், மயில், தென்றல், வண்டு, பூ, மான், நெல்
    அஃறிணைப் பொருட்கள்: முகில், தென்றல்
    கருத்துருக்கள்: பணம், தமிழ், நெஞ்சம்

    1.2. தூது நூல்கள்:

    கி.பி. 14ஆம் நூற்றாண்டில் தோன்றிய நெஞ்சுவிடு தூது என்ற நூலைத் தொடர்ந்து தமிழ்விடு தூது, அன்னம்விடு தூது, மேகம்விடு தூது, காக்கைவிடு தூது, பழையதுவிடு தூது, மான்விடு தூது, கிள்ளைவிடு தூது போன்று நூற்று ஐம்பதற்கும் மேற்பட்ட தூது நூல்கள் தோன்றியுள்ளன.

    2. காளிதாசரும் மேகதூதும்:

    “காளிதாசன் பரத கண்டத்திற்கு வெளியே தோன்றியவர் என்று நம்ப நிச்சயமான காரணங்கள் இருக்கின்றன. “காளிதாசன்” என்னும் அவர் பெயரே வித்தியாசமானது;megdoot அவர் பற்றிய கதைகள்கூட, அவரது பெயர் இயற்பெயர் அல்ல, அவரது வாழ்வில் பின்னர்க் கிடைத்த ஒருபெயர் என்று கூறுகின்றன. “தாசன்” (அடிமை) என்று பெயரின் பின்னால் ஒட்டிக் கொண்டிருக்கும் சொல்லின் சமூகப் பின்புலம் அழுத்தமானது; பழமையான ஹிந்துக்கள் இந்தப் பெயரைத் தவிர்த்தார்கள். காளிதாசனின் பிராமணீய பக்தி, புதிதாக மதமாற்றம் ஆன ஒருவரின் உத்வேகத்தையே காட்டிக் கொடுக்கிறது” – இப்படி ஓர் அறிஞர் (Benjamin Walker in “Kalidasa”, Hindu World) காளிதாசன் குறித்து எழுதினார். ஆனால், உண்மையில் காளிதாசன் யார்? எங்கே, எப்போது  பிறந்து வாழ்ந்தார்? யாரிடம் கல்வி கற்றார்? கேள்விகள் ஏராளம். பதில் யாரும் இன்னும் கண்டுபிடிக்க வில்லை.  

    சமஸ்கிருத இலக்கியத்தில் பெரும் ஆளுமையாக இருக்கும் காளிதாசனைப் பற்றி பல கர்ணபரம்பரைக் (செவிவழி) கதைகள் உண்டு. இவற்றுக்குப் பெரும்பாலும் ஆதாரம் இருக்காது. இவ்வாறு பரவியுள்ளவற்றில், மிகப் பிரபலமான கதை ஒன்றில், காளிதாசன் முதலில் படிப்பறிவற்ற முட்டாளாக இருந்து, சிலரின் சதியால் ஓர் இளவரசியை மணக்க நேரிட்டதாகவும், பின்னர் அந்த இளவரசி அவரை விலக்க, காளியின் அருளால் கவிபாடும் திறன் பெற்றதாகவும், அதனாலேயே காளிதாசன் என்ற பெயரும் அடைந்ததாகக் கூறுவர். இதே கதையின் நீட்சியாக, காளியின் அருளோடு திரும்பி வந்த காளிதாசனைக் கண்டு அவர் மனைவி பேச்சில் ஏதும் முன்னேற்றம் உண்டா? என்று கேட்க, இதற்கு பதிலாகக் காளிதாசன் மூன்று பெரும் காவியங்களை (குமாரசம்பவ காவியம், மேகதூத காவியம், மற்றும்  ரகுவம்ச காவியம்) இயற்றினார் என்ற ஒரு சுவாரசியக் கூற்று உண்டு.

    இன்னொரு கதை இப்படிப் போகிறது. இலங்கை அரசன் குமாரதாசன் அவையில் காளிதாசன் வீற்றிருந்தபோது, அவ்வரசன் (கமலே கமலோத்பத்தி: ஸ்²ருயதே ந து த்³ருʼஸ்²யதே) – தாமரையில் தாமரை மலர்வது கேள்விப்படுவது மட்டுமே. எங்கும் கண்டதில்லை என்ற பொருளில் ஒரு வரியைச் சொல்லி இந்த ஸ்லோகத்தை முழுமையாக்குபவர்க்குப் பரிசு என்று அறிவித்தான். பிறகு காளிதாசன் இந்த ஸ்லோகத்தை முழுமைசெய்து (பா³லே தவ முகா²ம்போ⁴ஜே கத²மிந்தீ³வரத்³வயம்) – ஓ பெண்ணே! உன் தாமரைமுகத்தில் எப்படி இரண்டு தாமரைகள் உள்ளன? (அதாவது தாமரை முகத்தில் இரு தாமரை போன்ற கண்கள்) என்ற பொருளில் அந்த ஸ்லோகத்தை நிறைவுசெய்து விட்டார். இது அரசனின் காதுக்கு எட்டும் முன் அந்த அவையில் இருந்த நடனப் பெண்ணொருத்தி, அந்த வரியை அரசனிடம் கூறி பரிசு பெற்றுக் கொண்டு விட்டாள். பின் எங்கே காளிதாசன் தான் அந்த ஸ்லோகத்தை நிறைவு செய்தது என்று தெரிய வருமோ என்று அஞ்சிக் காளிதாசனைக் கொன்றுவிட்டாள் என்று கூட ஒரு கதை உண்டு.

    காளிதாசரின் மேகதூதம் 111 சந்தங்கள் கொண்டது. இந்தக் காவியத்தை, 1813ஆம் ஆண்டு Megha Duta: The Cloud Messenger என்ற தலைப்பில் Horace Hayman Wilson என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தவறு செய்ததினால், குபேரனால் நாட்டைவிட்டு விரட்டப்பட்ட ஒரு யக்ஷன், மழைக்கால மேகங்கள் மூலம் மனைவிக்குத் தூது அனுப்புகிறான். “நீ போகும் வழியில் இயற்கைக் காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கும்; உன் மனம் நிறையும்; நீ போகும் வழியில் எல்லாம் மழை பொழிந்துகொண்டே சென்றால் பலர் உன்னை வாழ்த்துவர்” என்று அவற்றிற்கு போகவேண்டிய காரணத்தை எடுத்துச் சொல்கிறான். மேகத்தைத் தூது விடுபவர்கள் பொதுவாக வெயில்கால வெண்மேகத்தைத் தூது விடுவதில்லை.

    3. மேகதூதக்கதை:

    இம்மேகதூதம் “மந்தாக்கிரந்தம்” என்ற விருத்தப்பாவகையைச் சார்ந்தது. மந்தாக்கிரந்தம் என்றால் மெல்ல நடப்பது எனப் பொருள்படும். இந்நூல் பூர்வமேகம் மற்றும் உத்தரமேகம் என இரு பிரிவுகளைக்கொண்டது.

    பூர்வமேகம்: கடமையில் தவறிய இயக்கன் ஒருவனுக்கு, நிதிஅரசன் குபேரன் சபித்துத் தொழில்நீக்கம் செய்து மற்றும் தலைவியை ஒருவருட காலம் பிரிந்து வாழும்படி ஆணையிட்டான். இயக்கன், தன் புதுமணங்கண்ட மனைவியைப் பிரிந்து சித்திரகூட மலையில் தன் வாழ்வைக் கழித்துவந்தான். அத்தகு தனிமையில் எட்டு மாதம் துன்பப்பட்ட அவ்வியக்கன் ஆடிமாதத்தின் முதல்நாளில் அம்மலை உச்சியில் ஒருமேகம், கொம்புக்கு மண்ணெடுக்கும் யானை போலக் கிடந்ததைக் கண்டான்.

    அப்போது அவன் மனத்தில் ஓர் எண்ணம் பிறந்தது. “வடதிசையை நோக்கிச் செல்லும் இம்மேகம் என் அருமைக் காதலியையும் அளகாபுரியையும் நோக்கிச் செல்லும்மல்லவா; இதன் வாயிலாக மனைவிக்குத் தூதுசொல்லி அனுப்புதல் வேண்டும்” என்று சிந்தித்தான். சிந்தித்தவன், அன்றே மலர்ந்த கிரிமல்லிகைப் பூவினைத் தூவி, தூது போகுமாறு இரந்து வேண்டுகிறான். பின்னர் இமாலயத்திலுள்ள அளகாபுரிக்குப் போகும் வழியைக் கூறுகிறான். ”புறப்பட்ட நீ முதலில் ஆமிரக் கூடமலையை அடைய வேண்டும். அம்மலையை நீங்கி விஞ்சை மலையிலிருந்து விழும் இரேவா நதியை அடைய வேண்டும். கடப்ப மலரை நோக்கி வண்டுகள் விரையும்.  கதலிப் பூண்டின் முதல் தளிரை மான்கள் கறிக்கும். நிலத்திலிருந்து எழும் நறுமணத்தை விழுங்கி யானைகள் மகிழும். இவற்றால் உன் வழியறிந்து தசார்ணவ தேசத்தை அடைய வேண்டும்.

    மெல்லிய மலர்கள் மணங்கமழ, ஊர்மருங்கிலுள்ள பெருமரங்களில் காக்கை ஆரவாரஞ்செய்யும்; நாவன் மரங்கள் கனி பழுத்துத் தூங்கும்.    இத்தேசத்தின் தலைநகரான விதிசையைக் காண்பாய். அங்கே அழகு மிளிரும் வேத்திராவதி ஆற்றின் புனலைக் கண்டபிறகு, நீச மலையில் இளைப்பாறுவாயாக.   பின்னர், பூமியில் சுவர்க்கமாகக் கருதப்படும் உஞ்சைமா நகரச் சிறப்புகளைக் கண்குளிரக் காண்பாய். பின் நிருவிந்தை ஆற்றைக்கடந்து உஞ்சைனி வனப்பைக் கண்டபின் சண்டீசு வரனுறையும் புண்ணியத் தலத்தை அடைவாய். இங்கே, ஈசன் சன்னதியில் திருப்பலி செய்யும் மாதர், உன் துளியைப் பெற்று அயர்வு நீங்கி உன்னைக் கடைக்கண்ணால் நோக்குவர். சூலபாணிக்கு அந்திமாலையிலெடுக்கும் விழாவிலே நீ பலிமுரசறைந்து சேவை செய்தபின்னர், மாடப் புறாக்கள் கண்ணுறங்கும் மாளிகைத்தலத்தில் உன் மனையாள் மின்னலோடு இராக்காலத்தைக் கழிக்க வேண்டும். குளிர்ந்த மந்தமாருதம் உன்னை மெல்லென்று ஊக்கிச் செல்லும். 

    நீ, பின்னர் முருகவேளுறையும் தேவகிரியை அடைவாய். பின் சருமவதி என்னும் ஆற்றைக்கடந்து தசபுர மக்களுக்கு உன் வடிவைக் காட்டிச்செல்வாய். பின்னர், புகழ்பெற்ற பார்த்தன் தன் வில்லினால் எதிரிகள் தலையைக் கொன்று குவித்த குருக்கேத்திரத்தைப் பார்த்துக்கொண்டு சரசுவதியாற்றின் புண்ணியநீரை உண்டு மேற்செல்வாயாக. பின்னர் வடபாற் சென்று சிவனுறையும் வெள்ளயங்கிரியை அடைவாய். அங்கே சிவபெருமான் செய்த அட்டகாசங்கள் திரண்டு குவிந்துகிடக்கும் அக் கைலையின் சாரலில் விளங்குவது அளகாபுரி.

    உத்தரமேகம்: மேகமே! நீ அவ் வளகாபுரியின் மஞ்சு கொஞ்சும் மாளிகைகளைப் போன்றவன்; நீயோ மின்னலொடு தோன்றுவாய்; அம்மாளிகைகள் அழகிய பெண்களையுடையன; உன்னிடத்து இந்திரவில்லு; அங்கே அழகொழுகும் பல்வண்ண ஓவியங்கள்; நீ மெல்லென மெலிதாய் முழங்குவாய்; அங்கே இன்னிசை கனிந்த மத்தளவொலி. அங்கே மரங்கள் எப்போதும் மலர்களால் நிறைந்திருக்கும். மயில்கள் எல்லாப் பருவத்திலும் கலாபம் விரித்தாடும். இரவில் என்றும் வெண்ணிலா விளங்கும்.  இல்லத்தின் புறத்தே மரகதக் கல்லினால் செய்யப்பட்ட சலக்கிரீடை மற்றும் பொற்றாமரை மலர்கள் காணப்படும். அதனிடையே வீட்டுமயில் தங்குதற்கு ஒரு நிவாசத்தண்டம் அமைக்கப்பட்டிருக்கும்.

    இக்குறிப்புகளை மனத்தில் வைத்து என் இல்லத்தை அடையாளங் கண்டுகொள்வாய், அங்கே எனது காதற்கிழத்தியைக் காண்பாய். என்னை நினைந்து அழுதுகொண்டே நான் வரும் நாட்களை எண்ணிக்கொண்டிருப்பாள். வீணையை எடுத்து என் பெயரமைந்த இனிய வரிப்பாட்டுகளைப் பாட நினைத்தவள், கண்ணீரால நனைந்த நரம்புகளை இசைக்கமுடியாது வருந்துவாள்; பின்னர், அதற்குரிய பண்ணை மறந்து சோருவாள். அவளை மாடச்சாளர வழியால் கண்டுகொள். கண்டு, ”சுமங்கலி! நானுன் காதலனுக்குற்ற நண்பன்; அவன் சித்திரகூட மலையில் உயிரோடு வாழுகின்றான். இன்னும் நான்கு மாதங்களையும் ஒருவாறு கழிப்பாயாக. அதன்பின் அவனது சாபம் நீங்கிவிடும். பின்னர் நான் உன்னை வந்தடைவேன்; இவ்வாறு உன் இனிய காதலன் என்னிடங் கூறினான்” என்று முகில் தூதை அவளுக்குக் கூறுகின்றது.  

    4. முடிவுரை: மகாகவி காளிதாசர் வடமொழியில் இயற்றிய இம்மேக தூதம் vaடமொழியிலக்கியத்திலுள்ள சிறுகாப்பியங்களுக்கு மகுடமணி போன்றது. இம்மேக தூதத்தில் “பிரிவு” (பாலை) எனும் ஒரு மெய்ப்பாட்டை ஜீவசுருதியாக வைத்து மகாகவி காளிதாசர் மண், விண்ணைப் பிரிந்து வாடும் ஒரு தாபத்தை வருணிக்கிறார். இயற்கையின் தோற்றம், காதலர் கருத்தில் உண்டாகும் கிளர்ச்சிகளை வருணிக்கும் முறையில் காளிதாசருக்கு இணையில்லை என்றால் அது மிகையாகாது; அவர் ஒரு கற்பனைக் களஞ்சியம். இதனால் இவர் உலக மகா கவிகளில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளார். அவருடைய இலக்கியநடை எளிமையும் தூய்மையும் உடையது; தெளிவும் சுருக்கமும் விகற்பமில்லாத போக்குமுடையது. உவமைகள் பொருத்தமும் திட்பமும் உடையன. நாம் அவரின் காவியங்களைப் படித்து “எளிமையின் இனிய அழகே போற்றி” என வியந்து பாராட்டுவோம்.

    மேற்கோள் பட்டியல்:

    1. மேகதூதம், வடமொழி மூலம்: மகா கவி காளிதாசர், தமிழாக்கம்: நவாலியூர் சோ. நடராசன், கொழும்பு அப்போதிக்கரிஸ் லிமிற்றெட், இலங்கை.
    2. மேகதூதக்காரிகையுரை, சி. கணேசையர், சோதிடப்பிரகாசயந்திரசாலை, யாழ்ப்பாணம், 1925.

    *****

    ல. புவனேஸ்வரி & சி. சத்தியசீலன்
    முனைவர் பட்ட ஆய்வாளர், இணைப்பேராசிரியர் மற்றும் நெறியாளர்
    காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம்
    இலாஸ்பேட்டை, புதுச்சேரி – 605008

     

     

    Share
  • துணைவஞ்சி

    -முனைவர் இராம. இராமமூர்த்தி

    முன்னுரை: புறத்திணைகள் ஏழெனத் தொல்காப்பியமும், பன்னிரண்டெனப் பன்னிருபாட்டியலும், புறப்பொருள் வெண்பாமாலையும் சுட்டுகின்றன. தொல்காப்பியங் கூறிய ஏழுதிணைகளைப் பன்னிரண்டாகப் பகுத்துரைப்பதோடு சில திணைவிளக்கங்களிலும் புறப்பொருள் வெண்பா மாலை வேறுபடுகின்றது. குறிப்பாகக் காஞ்சித் திணையமைதியில் தொல்காப்பியமும் புறப்பொருள் வெண்பா மாலையும் பெரிதும் வேறுபடுகின்றன.

    காஞ்சிதானே பெருந்திணைப் புறனே
    பாங்கருஞ் சிறப்பிற் பன்னெறி யானும்
    நில்லா வுலகம் புல்லிய நெறித்தே.
      (தொல்: பொருள்: 67)

    என நிலையாமை குறித்துத் தொல்காப்பியங்கூற,

    வேஞ்சின மாற்றான் விடுதர வேந்தன்
    காஞ்சிசூடிக் கடிமனை கருதின்று.  (புறப்: 61) 

    எனப் பகை எதிர்நிலையைப் புறப்பொருள் வெண்பா மாலை கூறும். மேலும், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணைப் படலங்கள் புறப்பொருள் வெண்பா மாலையான் திணைகளாக வகுக்கப்பெற்றன. இந்நிலையில் இப்பாடல்களுக்கு உரைவகுத்த உரைகாரர், அவர் தாம் மேற்கொண்ட மதத்திற்கேற்பத் (கொள்கை) திணை, துறை வகுப்பர். இதனாற் சில பாடல்கட்கு இரண்டு மூன்று துறைகள் வகுக்கப்படுவதுமுண்டு. இந்நிலை அகப்பாடல்கட்கும் விலக்கன்று.

    புறநானூற்றுப் பாடல்கட்கு வகுக்கப்பெற்றுள்ள திணை, துறைகள், பெரும்பாலும் தொல்காப்பியம், பன்னிருபாட்டியல், புறப்பொருள் வெண்பா மாலை போன்ற நூல்களில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றி யிருப்பதைக் காணலாம். இந்நூல்களுள் கூறப்படாத துறைகளும் இருக்கலாம். அங்ஙனம் காணப்படுகின்ற ஒரு துறையே ’துணைவஞ்சி.’ இதனைக் குறித்தே இக்கட்டுரையாளர் ஈண்டுச் சிந்திக்கின்றார்.

    துணைவஞ்சித் துறையில் அமைந்துள்ள பாடல்களாகப் புறநானூற்றில் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அவை, 36, 45, 46, 47, 57, 213 என்ற எண்களில் அமைந்துள்ளன. 36-ஆம் புறப்பாடல் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது. 45-ஆம் பாடல் சோழன் நலங்கிள்ளியையும், நெடுங்கிள்ளியையும் கோவூர் கிழார் பாடியது. 46-ஆம் பாடல் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கோவூர் கிழார் பாடியது.  47-ஆம் பாடல் இளந்தத்தன் எனும் புலவரைக் காப்பான்வேண்டி, நெடுங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது. 57-ஆம் பாடல் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய பாண்டிய நன்மாறனைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது. 213-ஆம் பாடல் கோப்பெருஞ்சோழனைப் புல்லாற்றூர் எயிற்றியனார் பாடியது. இவ்வகைப் பாடல்களின் பொருளமைதியைக் காணப் புகுமுன் துணைவஞ்சியின் இலக்கணத்தைக் காண்டல் இன்றியமையாதது.

    துணைவஞ்சி: இப்பெயர் மாத்திரையானே, இத்துறை வஞ்சித்திணையின் பாற்படும் என்பதனை நன்கறியலாம். ஆனால், துணைவஞ்சி எனும் துறைப்பெயர், தொல்காப்பியப் புறத்திணை நூற்பாக்களில் ஒன்றிற்கூட இடம்பெறவில்லை. தொல்காப்பியர் ‘இயங்குபடை அரவம்’ முதலாக ‘அழிபடை தட்டோர் தழிஞ்சி’யொடு துறை பதின்மூன்றே என வஞ்சித்திணையின் துறையாமாறு சுட்டுவர். ஈண்டுத் துணைவஞ்சி என்ற பெயரான் துறையொன்றும் இடம்பெறவில்லை.

    ’வாடா வஞ்சி’ முதலாக ’நல்லிசை வஞ்சி’ யீறாக இருபத்தொரு துறைகளையே புறப்பொருள் வெண்பா மாலை சுட்டுகின்றது. இவ்வாசிரியரும் துணைவஞ்சியெனத் துறையொன்றையும் வகுக்கவில்லை. இஃதிவ்வாறாக, துணைவஞ்சி குறிக்கப்பெறும் இடத்தைக் காண்போம்.    

    ’கழிபெருஞ் சிறப்பின் துறைபதின் மூன்றே’ என்ற அடிக்குச் சிறப்புரை வரைந்த இளம்பூரணரே, முதன்முதலில் இன்னும் ”கழிபெருஞ்சிறப்பின்” என்றமையின் பேரரசர் துணையாக வந்த குறுநில மன்னரும் தாமும் பொலிவெய்திப் பாசறை நிலை உரைத்தலும் பிறவும் கொள்க. இவை பற்றியன துணைவஞ்சி. “நீயே புறவின் அல்லல்” (புறம்: 46) “வள்ளியோர்ப் படர்ந்து” (புறம்: 47) என்னும் புறப்பாட்டுகளில் காண்க” எனவுரைப்பர் (தொல்.பொருள். இளம். ப.94). இதனால், பேரரசர் துணையாகவந்த குறுநில மன்னரும் பேரரசரும் பொலிவெய்திப் பாசறைநிலையுரைத்தலும் பிறவும் துணைவஞ்சி என்பது இளம்பூரணர் கருத்துரையாகும்.  

    இனி, முன்குறித்த பாடல்கட்கு உரைவரைந்த பழையவுரைகாரர், ‘சந்து செய்வித்தலின் துணைவஞ்சி’யாயிற்றென்பர். இவர் கருத்துப்படி, போர் நிகழாவாறு தடுக்கும் நிலைமை – அமைதிப்படுத்தும் நிலைமை – துணைவஞ்சியெனச் சுட்டப்பெறுதல் காண்க. புறநானூற்றுப் பழையவுரைகாரர், இளம்பூரணர் கருத்தையே ஏற்றுக்கொண்டு துறைவிளக்கம் தந்துள்ளமை இதனாற் தெள்ளிதிற் புலனாகும்.

    அடுத்து, மேற்குறித்த புறப்பாடல்களின் பொருளமைதியையும், அவை எழுந்த சூழ்நிலையையுங் காண்போம். இத்துறையில் முதலிற் காணலாகும் பாடல் (36) கருவூர் முற்றியிருந்த சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியதாகும். காவன்மரம் வெட்டும் ஓதை செவியிற் கேட்டும், பகைஎதிர்த்து வாராதவனிடத்துப் போர்மேற்செல்லல் என்பது, நாணுத்தகவுடைத்து எனக் கூறிப் போரை விலக்கும் உட்கோள் கொண்டது இப்பாடல்.

    அடுத்த பாடல், உறையூர் முற்றியிருந்த நலங்கிள்ளியையும், அடைத்திருந்த நெடுங்கிள்ளியையும் கோவூர் கிழார் பாடியதாகும். இப்பாடல் போர் மேற்கொண்டானும் அடைத்திருந்தானும் ஒரே குடியினர் (சோழ மரபினர்) அவருள் ஒருவர் வென்றாலும் தோற்றாலும் அவர்தம் குடியே பழியை யெய்தும் எனக்கூறிப் போரைத் தவிர்க்க முயல்கின்றார் புலவர்.

    46—ஆம் புறப்பாடல், மலையமான் மக்களைக் கொல்லமுயன்ற குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கோவூர் கிழார் பாடியது. ஈண்டு, ஏதுமறியாச் சிறுவரைக் கொல்ல எண்ணிய முயற்சியைத் தடுத்தமை காட்டப் பெறுகின்றது.

    47—ஆம் புறப்பாடல், இளந்தத்தன் என்ற புலவரை ஒற்றெனக் கருதிக் கொல்லப்புகுந்த நெடுங்கிள்ளியின் செயலைத் தடுப்பான்வேண்டிக் கோவூர் கிழார் பாடியது. ஈண்டுக் கொலை முயற்சியின்றின்றும் புலவரைக் காத்தலைச் சுட்டுகின்றார் கோவூர் கிழார்.

    பகைவர் நாட்டின்மீது படையெடுத்தலைத் தவிர்(த்)தற்பொருட்டுப் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனைக் காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது 57—ஆம் புறப்பாடல். இப்பாடலில் போர் முயற்சியைத் தவிர்ப்பது சுட்டப்பெறுகிறது.

    தன்மக்கள்மேற் படையெடுத்துச் சென்ற கோப்பெருஞ்சோழனைப் புல்லாற்றூர் எயிற்றியனார் பாடியது புறம் 213. இங்கும் போர்முயற்சியைத் தவிர்த்தலே பாடற் பொருளாகிறது.

    மேற்காட்டிய ஆறு பாடல்களில் 36, 45, 46, 57-ஆம் எண்களில் அமைந்த பாடல்கள் நான்கும் பகைமேற் சென்று பொருதலைத் தவிர்ப்பான் வேண்டியெழுந்தன. இவை மண்நசையான் மேற்சென்றமை சுட்டுமாற்றான் வஞ்சித்திணைப் பாற்படும் என்பது பொருந்தும். இந்நான்கு பாடல்களிலும் புலவர்கள் சந்துசெய்ய முயன்றமையும் தெள்ளிதிற் புலனாகின்றன. சந்து செய்விக்கும் முயற்சியை நேரடியாகச் சுட்டும் துறையொன்றும் வஞ்சித்திணைக்குரிய துறைகளை விளக்கும் நூற்பாவில் இடம்பெறவில்லை.

    இந்நிலையில் வஞ்சித்திணையிற் சார்ந்தும், அத்துறைகளில் அடக்கவியலாப் பாடல்களை யாங்ஙனம் அமைப்பது என்ற எண்ணம் அறிஞர்களிடத்து எழுந்திருக்கக் கூடும். அத்தருணத்தில் இத்தகைய பாடல்களைப் புறனடையிற் சுட்டுமாறு போன்று, துணைவஞ்சி என்றொரு துறையைப் படைத்திருக்க வாய்ப்புண்டு.

    இத்தகைய புறப்பாடல்களைக் கண்ட இளம்பூரணர், ‘கழிபெருஞ் சிறப்பின்’ என்ற மிகையானே ‘துணைவஞ்சி’ என்ற ஒரு துறையை அமைத்து, அத்துறையுள் அடக்குவாராயினர்.

    ஆனால் மலையமான் மக்களை (குழந்தைகளை)க் கொல்ல முயன்ற கொலை முயற்சியைத் தவிர்க்க முயன்றமை வஞ்சித் திணையில் அடங்குமாறு யாங்ஙனம்? பகைவர் மண்ணை நச்சிப் படையெழுதலும், பகைவரை வென்றபின் அவர்தம் மக்களைப் பற்றிவந்து கொல்லும் முயற்சியும் ஒன்றாதல் பொருந்துமா என்பதை எண்ணுக. ஈதொப்பவே, ஒற்றன் எனத் தவறாகக் கருதியமையான் இளந்தத்தன் என்ற புலவரைச் சிறைப்படுத்திக் கொல்லமுயன்ற செயலும் வஞ்சித் திணையாமோ? தன்மக்கள்மீது கொண்ட சினத்தான் அவரைக் கொல்லக் கருதியமையைப் பிறர் மண்ணை விரும்பிப் படையெழும் வஞ்சித் திணையுள் அடக்குவதும் பொருந்துமாறில்லை.

    இப்பாடல்களுக்கு மன்னுயிர்மாட்டு அன்புசெலுத்தும் புலவர்தம் அருள் உள்ளங்களே கரணியமாகின்றன. பிற உயிர்கள்மாட்டு அன்புசெலுத்தும் பேருள்ளப் பாங்கினை வஞ்சித்திணையில் அடக்குவதும், துணைவஞ்சி எனப் புதியதொரு துறை வகுத்துரைப்பதும் தொல்காப்பியர் காட்டும் புறத்திணை நெறிக்குப் பொருந்தி வாராமையை எண்ணுக. அதனாலேயே தொல்காப்பியர், துணைவஞ்சி என ஒரு துறை வகுக்கவில்லை. பின்னர் விரிவாகப் புறத்திணைகளைச் சுட்டும் புறப்பொருள் வெண்பா மாலையும் ‘துணைவஞ்சி’ என ஒரு துறையை வகுக்கவில்லை.

    இவ்வஞ்சித்திணைப் பகுதிக்கு உரைவரைந்த நச்சினார்க்கினியர், துணைவஞ்சியில் இளம்பூரணர் அடக்கிய புறப்பாடல்கட்கு அத்துறை பொருந்தாதெனக் கூறி மறுப்பர். அவர், “துணை வேண்டுதல் உலகியல் வழக்கு. “நீயே புறவினல்ல லன்றியும் பிறவும்” (46) என்னும் புறப்பாட்டும், “வள்ளியோர்ப் படர்ந்து” (47) என்னும் புறப்பாட்டு முதலியனவும் துணைவஞ்சி என்பார்க்கு அவை மேற்செலவின்கண் அடங்காமையிற் பாடாண்திணை யெனப்படுமென்றுரைக்க” எனக்கூறி இளம்பூரணர் கருத்தை மறுப்பர்.

    புறநானூற்றுப் பழையவுரைகாரர் இந்த ஆறு புறப்பாடல்களையும் ‘சந்து செய்வித்தலின் துணைவஞ்சி யாயிற்று’ எனக் கூறுவதை நோக்கின், இளம்பூரணர் உரைசெல்வாக்கான் அவ்வாறு கூறியிருப்பாரோவென எண்ணத் தோன்றுகின்றது. இன்றேல் புறநானூற்றுப் பாடல்கட்குத் திணை, துறை வகுத்தார் இன்று கிட்டாதவொரு புறப்பொருள் இலக்கணநூலைப் போற்றியொழுகியிருக்க வேண்டும் என்பது புலனாம். எனினும், இத்துறை வகுப்பு தொல்காப்பியப் புறத்திணை நெறிக்குப் பொருந்துமாறில்லையென்க.

    முடிவுரை: இதுகாறுங்கூறியவற்றான், புறப்பாடல்கட்கு வகுத்துரைக்கப்பட்ட திணை, துறைகள் பொருந்துமாற்றைத் தொல்காப்பியம் அல்லது புறப்பொருள் வெண்பா மாலையை முழுமையாகப் பின்பற்றி ஆய்வுசெய்தல் வேண்டும். அவ்வாறு செய்யின், ஐயத்திற்கும் குழப்பத்திற்கும் இடமின்றிப் புறப்பாடல்கட்குத் திணை, துறைகளைத் தெளிவாய்ச் சுட்டவியலும். ஆகலின், இலக்கணிகளும் ஆய்வாளர்களும் இத்துறையில் கருத்தினைச் செலுத்துதல் வேண்டும். ஆய்வொளி பரவின் ஐயவிருள் இரிந்தோடுமன்றோ!

     

    Share
  • சங்க இலக்கியங்களில் மலர்ப்பண்பாடு

    -முனைவர் பா.பொன்னி

     

    சங்க கால மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வினை நிகழ்த்தினர். அவர்களின் வாழ்க்கைமுறை முழுமையும் இயற்கையின் பின்புலத்தில் அமைந்திருந்தது என்றால் அது மிகையில்லை. தமிழர் வாழ்க்கை முறைமையினை அகம், புறம் என்ற இரு பாகுபாட்டில் அடக்குவர். இவற்றிற்குரிய திணைகளை வகுக்கும்போதும், அகத்திணைகளுக்குரிய முதல் கருப்பொருட்களைச் சுட்டும் போதும் இயற்கைப் பின்னணியிலேயே படைத்துக் காட்டியிருப்பது இதற்குச் சான்றாக அமைகிறது. இவ்வியற்கைப் பின்னணியில் மலர்கள் குறிப்பிடத்தகுந்த இடம் வகிக்கின்றன. அவற்றின் முதன்மையை ஆராயும்போது சங்க காலப் பண்பாட்டினை மலர்ப்பண்பாடு என்று குறிப்பிட இயலுகின்றது. அதனை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

    மலர்களின் குணம்

    மணம், மென்மை, வண்ணம், தூய்மை, தன்மை, சுவை, ஒளி, எழில், கவர்ச்சி, மங்கலத்தன்மை ஆகியவற்றை மலர்களுக்கு உரிய குணங்களாகக் குறிப்பிடுகின்றனர்.

    மலர் தொடர்பான சொற்கள்

    ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டும் அல்லாது, சங்க இலக்கியத்தில் மலருக்கும் பருவங்களை வகுத்துள்ளனர். அரும்பு, நனை, முகை, மொக்குள், முகில், மொட்டு, போது, மலர்,  பூ, வீ, பொதும்பர், பொம்மல், செம்மல் போன்ற பதின்மூன்று சொற்களை மலர்களின் பல்வேறு நிலையினைச் சுட்டப் பயன்படுத்தியுள்ளனர். அவற்றுள் அரும்பு, நனை, முகை, மொக்குள், முகிழ், மொட்டு ஆகியவற்றை மலரின் இளமைப்பருவமாகச் சுட்டுகின்றனர். மலர், வீ, செம்மல் இவற்றை மலரின் முதுமைப் பருவமாகக் குறிப்பிடுகின்றனர். அரும்பின் மூன்று நிலைகள்: நனை, முகை, மொக்குள்.

    flowersஅரும்பு – அரும்பும் (தோன்றும்) நிலை
    நனை – அரும்பு வெளியில் நனையும் நிலை
    முகை – நனை முத்தாகும் நிலை
    மொக்குள் – நாற்றத்தின் உள்ளடக்க நிலை
    முகிழ் – மணத்துடன் முகிழ்த்தல்
    மொட்டு – கண்ணுக்குத் தெரியும் மொட்டு
    போது – மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை

    மலர் – மலரும் பூ
    பூ – பூத்த மலர்
    வீ – உதிரும் பூ
    பொதும்பர் – பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை
    பொம்மல் – உதிர்ந்து கிடக்கும் புதுப்பூக்கள்
    செம்மல் – உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம் பெற்று அழுகும் நிலை

    சங்க இலக்கியங்களில் மலர்ப் பின்னணி

    சங்க கால மக்கள் இயற்கையை உற்றுநோக்குவதில் வல்லவர்கள். மனிதர்களுக்கு அடிப்படைத் தேவைகளில் உணவுத்தேவையை நிறைவேற்றுவதில் இன்றியமையாத இடம் வகித்தவை மரங்கள். அம்மரங்களின் பெருக்கத்திற்குத் துணை செய்வன மலர்கள். ஆகவே, தான் இருக்கும் நிலத்திற்கும் மலர்களின் பெயரையே இடத்தொடங்கினான் மனிதன் எனலாம். சங்க காலத்தில் ஆடவர் பெண்டிர் ஆகிய இருபாலரும் மலர்களையும் தளிர்களையும் மாலையாகக் கட்டி அணிந்துள்ளனர். தலைவன் தலைவிக்குக் கையுறையாக மலர்களை வழங்குவது உண்டு. இன்றும் மலர்க்கொத்துகளைப் பரிசளிப்பதனை நாம் காணமுடிகிறது. மேலும், இன்றும் வீட்டைச்சுற்றித் தோட்டம் அமைப்பதும், இடம்இல்லாத நிலையிலும் மொட்டை மாடித் தோட்டம் அமைப்பதும் நம் அடிமனத்தில் பதிந்துள்ள எண்ணங்களின் எச்சமே எனலாம்.

    சங்க இலக்கியங்களில் மலர்பெறுமிடத்தை
    அகத்திணை, புறத்திணை என்று இரு திணைகளிலும் தனித்தனியே வகைப்படுத்திக் காணமுடிகிறது.

    அகத்திணை

    தொல்காப்பியர் ஒவ்வொரு திணைக்கும் உரிய நிலத்தினைக் குறிப்பிடும்பொழுது,

    மாயோன் மேய காடுறை உலகமும்
    சேயோன் மேய மைவரை உலகமும்
    வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
    வருணன் மேய பெருமணல் உலகமும்
    முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
    சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே   ( அகத்திணையியல் – 5 )

    என்று நிலத்தை மலர்களின் பெயரால் சுட்டிச் செல்கிறார். கருப்பொருளினைக் குறிக்குமிடத்து,

    தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
    செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
    அவ்வகை பிறவும் கருவென மொழிப
    ( அகத்திணையியல் – 20 ) 

    என்று கருப்பொருட்களைக் குறிப்பிடுகிறார். இவற்றுள் பண்கள், யாழ்கள் ஆகியவை அவ்வந்நிலத்திற்குரிய பூக்களின் பெயராலேயே அழைக்கப்படுவதனை அறியமுடிகிறது.

    சங்க இலக்கிய அகத்திணையில் மலர்களின் பயன்பாட்டினை,

    • களவுக்காலம்
    • கற்புக்காலம்

    ஆகிய இருநிலைகளிலும் அறியமுடிகிறது.

    களவுக்காலம் 

    களவுக்காலத்தில்,

    • களவு வாழ்வின் வெளிப்பாடு
    • வெறியாட்டு
    • மடலூர்தல்

    என்ற நிலைகளில் மலா்களின் இன்றியமையாமையை நாம் அறியமுடிகிறது.

    களவு வாழ்வின் வெளிப்பாடு 

    சங்க கால மகளிர் திருமணத்திற்குமுன் தங்கள் கூந்தலில் மலர் சூட்டுவது இல்லை என்பதனைச் சில சான்றுகளால் குறிப்பிட முடிகிறது. தலைவி, தலைவன் அளித்த மலரைக் கூந்தலில் சூடுகிறாள். அதனை மறந்து அன்னை முன்னர் கூந்தலுக்கு எண்ணை தடவ அமர்கிறாள். உள்ளே இருந்த மலர் கீழே விழுகிறது. நெருப்பைத் தொட்டவா்போல் அன்னை விதிர்விதிர்த்து அவ்விடம் விட்டு வெளியேறுகிறாள்.

    புல்லினத்து ஆயர்மகன்சூடி வந்ததோர்
    முல்லை ஒருகாழும் கண்ணியும் மெல்லியால்
    கூந்தலுள் பெய்து முடித்தேன்மன் தோழியாய்
    வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே
    அன்னையும் அத்தனும் இல்லரா யாய்நாண
    அன்னைமுன் வீழ்ந்தன்று அப்பூ
    அதனை வினவலும் செய்யாள் சினவலும் செய்யாள்
    நெருப்புக்கை தொட்டவர் போல விதிர்த்திட்டு
    நீங்கிப் புறங்கடைப் போயினாள்  ( கலி 115 4-12)

    என்ற பாடல் அடிகள் இதனை விளக்குகின்றன. மணமாகாத மகளிர் கூந்தலில் பூச்சூடுவது இயல்பு என்றால் தாய் அதனைக் கண்டு வேறுவிதமான உணர்வு கொள்தற்கு வாய்ப்பு இல்லை.

    மற்றொரு தாய் உடன்போக்கில் ஈடுபட்ட மகளை நினைத்து வருந்துகிறாள். அப்போது அண்டை வீட்டுப் பெண்கள் அலர் தூற்றிய போதும் என் மகளை நான் எதுவும் கேட்கவில்லை. ஆனால் உன் கூந்தல் நறுமணம் வீசுகின்றதே என்று ஒரு நாள் கேட்டுவிட்டேன். அவள் உடன்போக்கில் ஈடுபடுவதற்கு நானே காரணமாக அமைந்து விட்டேனோ? என்று வருந்திக் கூறுகிறாள்.

    அம்பல் மூதூா் அலா்வாய்ப் பெண்டிர்
    இன்னா இன்னுரை கேட்ட சின்னாள்
    அறியேன் போல உயிரேன்
    நறிய நாறும்நின் கதுப்பென் றேனே     ( நற் – 143 )

    என்ற பாடல்அடிகள் இதனை விளக்குகின்றன. தலைவன் தலைவியின் இயல்பைத் தன்னுடைய நெஞ்சிற்குக் கூறுவதாக குறுந்தொகைப் பாடல் ஒன்று அமைந்துள்ளது. அப்பாடலில் தலைவன் தலைவி தன்னை இரவுக்குறியில் சந்திக்க வரும்போது இரவில் என்னைக் கலந்து மகிழ்ச்சி அளிக்கிறாள். பின்னர், சூடிய மலர்களைக் களைந்து ஆடைகளை சரிசெய்து எதுவும் வேறுபாடு தெரியாதவாறு தன்னுடைய இல்லத்திற்குச் செல்கிறாள். என்று தலைவி தனக்கேற்ற நிலையிலும் அவள் குடும்பத்திற்கு ஏற்ற நிலையிலும் இரண்டு தன்மையிலும் நடந்து கொள்ளும் தன்மையைக் குறிப்பிடுகிறான்.

    இரண்டறி கள்வி நங் காதலோளே
    முரண்கொள் துப்பிற் செல்வேல் மலையன்
    முள்ளூா்க் கானம் நாற வந்து
    நள்ளென் கங்குல் நம்மோ ரன்னள்
    கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துச்
    சாந்துளா் நறுங்கதுப் பெண்ணெய் நீவி
    தமரோ ரன்னள் வைகறை யானே  ( குறுந் – 312 )

    என்ற பாடல் அடிகளில் விரவுமலர் உதிர்த்து என்பதால் தலைவி மலரை உதிர்த்து விட்டு வீட்டுக்குச் சென்றமையை அறியமுடிகிறது.

    முல்லைக்கலித் தலைவன் ஏற்றினை அடக்கும்போது காளை அவன் தலையில் சூடிய முல்லை மாலையினைத் தன் கொம்பினால் சுழற்றியது. அப்பூ, தலைவியின் கூந்தல்மீது சென்று வீழ்ந்தது. தலைவி அதனை விருப்பத்துடன் சூடிக் கொள்கிறாள். ஆனால் அதன்பின் தாயை எப்படிக் காண்பேன் என்று வருந்துகிறாள்.

    பெய்போ தறியாத்தன் கூழையுள் ஏதிலான்
    கைபுனை கண்ணி முடித்தாளென்று யாய் கேட்பின்
    செய்வதி லாகுமோ மற்று       ( கலி – 107 )

    இப்பாடல் அடிகளில் பெய்போதறியாத்தன் கூழை என்பதால் மலர் சூடுவதை அறியாத கூந்தல் என்பதனை அறிய முடிகிறது.

    தலைவி தன் நிலத்தில் கிடைக்கும் மலர்களைச் சூடி இருக்க வாய்ப்பு உண்டு எனலாம். வேறுநில மலர்களைச் சூடும் நிலையிலேயே இம்மலர் அவளுக்கு எங்ஙனம் கிடைத்தது? அவளுக்கு ஒரு தலைவனுடன் நட்பு உண்டு என்று ஐயம் கொள்வதாகவும் பொருள் கொள்ளலாம். எவ்வகையிலேனும் தலைவியின் களவை வெளிப்படுத்துவதில் மலர் சிறப்பிடம் பெறுகிறது என்பதனை அறிய இயலுகிறது.

    வெறியாட்டு

    வெறியாட்டு என்பது தமிழர்களின் தனித்த வழிபாடாகும். வழிபாடு செய்பவர்களின் வாயிலாக இறைவன் வெளிப்படுவான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இவ்வழிபாடு தோற்றம் பெற்றது எனலாம். மருந்தாலும் பிறவற்றாலும் நீங்காத நோய் வெறியாட்டால் நீங்கும் என்ற நம்பிக்கை கொண்டு வெறி அயர்தல் வெறியாட்டு ஆகும்.

    வெறியாடு களத்தில் முருகனுக்குரிய கடம்ப மரத்தினை முருகனாக எண்ணி மாலை அணிவிக்கும் வழக்கமும் இருந்ததனை

    …அயலது
    அரலை மாலை சூட்டி…   (குறுந்: 214)

    என்ற அடிகளால் அறியலாம்.

    மடலேறுதல்

    ஓர் ஆடவன் ஒரு பெண்ணைக் களவுடனோ அல்லது களவின்றியோ அடைய மேற்கொள்ளும் முறை  மடலேறுதல் ஆகும்.

    காமம் மிக்க தலைவன் பனை மடலால் குதிரையைப் போல் ஓர் உருவம் அமைத்து அதன் கழுத்தில் மணி மாலை முதலியவற்றைப் பூட்டித் தன் உருவத்தையும் தலைவியின் உருவத்தையும் ஒரு படத்தில் எழுதிக் கையில்ஏந்தி அதன்மேல் யாவரும் அறிய ஊர்ந்து வருதலை மடலேறுதல் என்பர். அங்ஙனம் அவன் வருதலைக் கண்ட ஊரினர் இன்னவளுக்கும் அவனுக்கும் நட்பு உண்டு என்பதனை அறிந்து அதனை வெளிப்படக் கூறிப் பழிப்பர். அதுகேட்டுத் தமர் மணம் புரிவிப்பர். மடலேறும் தலைவன் எருக்க மாலை, ஆவிரம் பூ மாலை முதலியவற்றை அணிந்து வருதல் வழக்கமென்று உ.வே.சா. அவர்கள் குறிப்பிடுவார்.

    மாவென மடலும் ஊர்ப பூவெனக்

    குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப
    மறுகின் ஆர்க்கவும் படுப
    பிறிதும் ஆகுப காமங்காழ் கொளினே ( குறுந் – 17 )

    என்ற பாடல் அடிகளில் எருக்கம் பூவினைச் சூடியமையை அறிய முடிகிறது.

    பொன்னேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த                              பன்னூல் மாலைப் பனைபடு கலிமா                                பூண்மணி கறங்க                         ( குறுந் 173 1-3 )

    என்ற பாடல் அடிகளில் ஆவிரைப் பூவினைச் சூடியமையை அறிய முடிகிறது.

    பூவல்ல பூளை யுழிஞையோ டியாத்த  ( கலி -139 )

    அணியலங் காவிரைப் பூவோ டெருக்கின்            பிணையலங் கண்ணி   ( கலி 138: 8-10 )

    மேற்சுட்டிய அடிகளின் வாயிலாக எருக்கம் பூ, ஆவிரைப் பூ, உழிஞைப் பூ, பூளைப் பூ போன்ற பூக்களைச் சூடியமையை அறிய முடிகிறது.

    கற்புக்காலம்

    • கற்பின் குறியீடு
    • திருமணத்தில் மலர் சூட்டல்
    • தலைவனோடு இணைந்திருக்கும் போது மலர்சூடல்
    • தலைவனைப் பிரிந்திருக்கையில் மலர்சூடாதிருத்தல்

    கற்பின் குறியீடு

    சங்ககாலம் இனக்குழுச் சமூக அமைப்பில் இருந்து நிலவுடைமைச் சமூகமாக மாற்றம் பெற்றது. இனக்குழுச் சமூகத்தில் வேட்டையாடிக் கிடைத்த பொருளைப் பகிர்ந்து வாழும் முறைமையே காணப்பட்டது. ஆனால் நிலவுடைமைச் சமூகமாக முல்லை நிலத்தில் வலுப்பெற்ற நிலையில் தன் நிலம் தன்மகனுக்கே செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் கற்புக் கோட்பாடு வலியுறுத்தப்பட்டது. அதனால் பெண்களுக்குச் சில கோட்பாடுகள் வலியுறுத்தப்பட்டன. ஆகவே முல்லை கற்பின் குறியீடானது.

    முல்லை சான்ற கற்பின் மெல்லியல் ( சிறுபாண் -30 )

     முல்லை சான்ற கற்பின்
      மெல்லியல் குறுமகள் ( நற் 142   11-12 )

      என்ற அடிகள் கற்பின் முதன்மையை விளக்குகின்றன. கற்பது, பயிற்சி என்னும் பொருளில் வழங்கி வந்த இச்சொல் பின்னர் பெண்களின் தனிப்பட்ட கற்பொழுக்கைக் குறிப்பதாக மாறியது.

    பார்ப்பன மகனே
    எழுதாக் கற்பின் நின் சொலுள்ளும் ( குறு 156 -5 )

    என்ற அடிகளில் கற்பு என்னும் சொல்  கற்றல் என்னும் பொருளில் பயன் படுத்தப்பட்டுள்ளது.

    ஒளிறுவாள் தானை கொற்றச் செழியன்
     வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடுதோறும் ( அகம் 106 -10-11 )

     என்ற அடிகளில் குற்றமில்லாத பயிற்சி என்ற பொருளில் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் பெரும்பாலான இடங்களில் பெண்களுக்கு உரிய உயர்ந்த பண்பாகவே சுட்டப்பட்டுள்ளது.

    வழிபாட்டில் மலர்கள்

    பெண்கள் வழிபாட்டின் போது மலர்களைப் பயன்படுத்தியமையை,

    நெல்லும் மலரும் தூஉய் கைதொழுது                                மல்லல் ஆவணம் மாலை அயர ( நெடு – 45 )

    என்ற அடிகளால் அறிய முடிகிறது.

    திருமணத்தில் மலர்கள்

     திருமணத்தின் போது மணமக்களை நெல்லும் மலரும் தூவி வாழ்த்தியுள்ளனர்.

    கற்பினின் வாழாஅ நற்பல வுதவிப்
    பெற்றோற் பெட்கும் பிணையை ஆகென
    நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி
    பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
    வதுவை நன்மணம் ( அகம் – 86  

    இவ்வாறு தூவி வாழ்த்தும் முறை பண்டைய நாகரிகங்களின் பழமையான வழக்கம். மணமக்களை வாழ்த்தும் முறையாக இவற்றைத் தூவி வாழ்த்தும் முறையில் இருவகையான கருத்தேற்றங்களைக் குறிப்பிடுவர். அவை தீய சக்திகளின் பாதிப்பில் இருந்து காப்பதற்கும் மற்றும் நிகழ்த்தும் செயலில் வளமை வேண்டியும் தூவுவர் என்பர்.

     திருமணம் முடிந்த பின்னர் தலைவியின் கூந்தலில் மலர் முடிக்கும் உரிமையைத் தலைவன் பெறுகிறான்.

    எரிமருள் வேங்கை யிருந்த தோகை                                இழையணி மடந்தையிற் றோன்று நாட                                இனிது செய் தனையால் நுந்தை வாழியர்                              நன்மனை வதுவை ய்யரவிவள்                                பின்னிருங் கூந்தல் மலரணிந்தோயே   ( ஐங்  -293 )

    என்ற பாடல் இதனை விளக்குவதாக அமைகிறது.

    தலைவனோடு இணைந்திருக்கும் போது மலர்சூடல்

    முல்லையில் வெண்முல்லை, செம்முல்லை முதலிய வகைகள் உண்டு. எனினும் வெண்முல்லைக்கே சிறப்பு அதிமாகும். இம்முல்லையைத் தளவம் என்றும் அழைப்பர். தமிழகத்தில் திணை நோக்கில் முல்லை மலர் காரணமாகவே காடும் காடு சார்ந்த பகுதியும் ‘முல்லை‘ எனப் பெயர் பெற்றது. குலமகளிர் தம் கற்பொழுக்கத்திற்கு அடையாளமாக முல்லை மலர்களைச் சூடுதல் தமிழ் மரபாகும். இதனை,

    ‘‘முல்லை சான்ற கற்பின்‘‘ (சிறுபாண்., 30-வது வரி)

    என்று சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுகின்றது. தலைவனுடன் இணைந்து இன்பமாக இருக்கும் நிலையில் தலைவி தன்னுடைய கூந்தலைப் பல வகையான மலர்களைச் சூடி அழகு படுத்துகிறாள்.

     பாரைப் பாதிரிக் குறுமயிர் மாமலர்
     நறு மோரோமொடு உடனெறிந்து அடைச்சிய
    செப்பு இடந் தன்ன நாற்றந் தொக்குடன்
    அணிநிறங் கொண்ட மணிமருளைம்பால் ( நற் 337:  4-7 )

     என்ற அடிகள் தலைவி பலவகையான மலர்களைக் கொண்டு தன் கூந்தலைப் பராமரித்தமையை விளக்குகின்றன. மலர் சூட்டும் உரிமையும் தலைவனுக்கு மட்டுமே வழங்கப் பட்டுள்ளது.

    தாதுசூழ் கூந்தல் தனைபெறத் தைஇய
    கோதை புனைகோ நினக்கு என்றான் ( கலி111: 12-13 )

    என்ற அடிகள் இதனை விளக்கி நிற்கின்றன.

    தலைவனைப் பிரிந்திருக்கையில் மலர்சூடாதிருத்தல்:

          தலைவனுடன் இணைந்திருக்கும் நிலையில் தன்னுடைய கூந்தலைப் பராமரிக்கும் தலைவி தலைவன் போரின் போதோ பொருள் ஈட்டுதல் பொருட்டோ பிரியும் நிலையில் கூந்தலைப் பராமரிப்பது இல்லை.

    மையீரோதி மாணலந் தொலைவே ( நற் 57   10 )

     போதில் வறுங் கூந்தற் கொள்வதை நினையாம் ( கலி: 80  23 )

    என்ற பாடல் அடிகள் இதனை விளக்கி நிற்கின்றன

    புறத்திணை

    புறத்தில் மலா்களின் பயன்பாட்டினை

    • போருக்குச் செல்லும் முன் போர்ப்பூ வழங்கல்
    • போரின் போது பூச்சூட்டல்
    • மன்னர்க்குரிய அடையாளப் பூ
    • மன்னர்கள் தங்கத்தால் ஆன பூவைப் பரிசாக வழங்குதல்

    என்ற நிலைகளில் ஆராயஇயலுகிறது.

    மன்னர்க்குரிய அடையாளப் பூ

    தொல்காப்பியர் மன்னர்க்குரிய அடையாளங்களைக் குறிப்பிடும்போது.

    படையுங் கொடியுங் குடையும் முரசும்
    நடைநவில் புரவியும் களிறும் தேரும்
    தாரும் முடியும் நேர்வன பிறவும்
    தெரிவுகொள் செங்கோல் அரசர்க்குரிய
      (மரபியல் – 72)

     என்று குறிப்பிடுவார்.தார் என்பது மன்னர்களுடைய அடையாள மாலையைக் குறிக்கும். தமிழகத்தை ஆண்ட சேர சோழ பாண்டிய மன்னர்கள் தத்தமக்கு எனஅடையாள மாலையைக் கொண்டிருந்ததற்கான சான்றுகளைக் காணமுடிகிறது.

    இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்        கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்
    நின்ன கண்ணியும் ஆர்மிடைந்தன்றே   நின்னொடு
    பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந்தன்றே
        ( புறம் 45 1-4 )

    என்ற அடிகள் வேந்தர்கள் அடையாளப்பூச் சூட்டியமையை விளக்குகின்றன. நெடுநல்வாடையில் ’வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகம்’ என்ற அடி அவ்விலக்கியத்தை அகத்திணையா? புறத்திணையா? என்ற ஆராய்ச்சிக்கு வித்திட்டமையை அறிய முடிகிறது.

    போருக்குச் செல்லும் முன் போர்ப்பூ வழங்கல்

    சங்க காலத்தில் போருக்குச் செல்லும் வீரர்கள் தமக்குரிய பூவைச் சூடிக் கொண்டு செல்வது மரபாக இருந்துள்ளது. அப்பூவினைப் பெற்றுக் கொள்ள வருமாறு தண்ணுமையை முழக்கியுள்ளனா்.

    நிற்படைக்கு ஒல்கா யானை மேலோன்
    குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை  ( புறம் 293  1-2 )                        

    கேட்டியோ வாழி – பாண! பாசறைப்
    பூக்கோள் இன்று என்று அறையும்
    மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே ( புறம் 289  8-10 )

     என்ற அடிகள் பறை அறைந்து போர்ப்பூ பெற்றுக் கொள்ளுமாறு ஒலிப்பதனைக் குறிப்பிடுகின்றன.

    போரின்போது பூச்சூட்டல்

     தொல்காப்பியர் புறத்திணைகளை ஏழாகக் குறிப்பிடுவார். அவை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் ஆகியவையாகும். ஆநிரைகளைக் கவரச் செல்லும் வீரர்கள் வெட்சிப்பூவினையே சூடுவர். வெற்றி பெறும் மன்னன் மட்டுமே வாகைப் பூவினைச் சூட இயலும். இவ்வாறு புறவாழ்விலும் மலர் இன்றியமையாத இடம் வகிப்பதை அறிந்து கொள்ள இயலுகிறது.

    பொற்றாமரை மலர்ப் பரிசு

    கலைஞர்களுக்குச் சிறப்புச் செய்யும்போது, பொன்னாலாகிய தாமரை மலர்களைப் பரிசளித்துச் சிறப்பிப்பர். சங்க காலத்தில் தமிழ்ப் புலவர்களையும் கலையில் சிறந்தவர்களையும் சிறப்பிப்பதற்குப் பொன்னாலாகிய தாமரைப் பூக்களைப் புரவலர்கள் வழங்கியுள்ளமை நோக்கத்தக்கது. பொன்னால் தாமரை வடிவில் மலர்களைச் செய்து அவற்றை வெள்ளிநாரால் தொடுத்துப் ‘பொன்னரி மாலை‘ என்ற பெயருடன் அதனைக் கலைஞர்களுக்கு கரிகாற்சோழன் வழங்கியதை,

    ‘‘எரியகைந் தன்ன வேடில் தாமரை
     சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி
     நூலின் வலவா நுணங்கரின் மாலை
     வாலொளி முத்தமொடு பாடினி யணிய‘‘
    (பொருநர்., 159-162-வது வரிகள்)

    எனப் பொருநராற்றுப்படை நவில்கிறது. இதனை,

    ‘‘ஒள்ளழல் புரிந்த தாமரை
     வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே“ (புறம், பாடல், 11)

    “அழல் புரிந்த வடர்தாமரை
     ஐதடர்ந்த நூற்பெய்து
     புனைவினைப் பொலிந்த பொலிநறுந் தெரியல்
     பாறுமயி ரிருந்தலை பொலியச் சூடிப்
     பாண்முற் றுகநின் நாண்மகி ழிருக்கை“ (புறம்., பாடல், 29)

    என்று புறநானூறு எடுத்துரைக்கிறது.

    • கற்பின் அடையாளம்
    • களவை வெளிப்படுத்தும் வாயில்
    • இல்லற இன்பத்தை எடுத்துக்காட்டும் அடையாளம்
    • மன்னர்களுக்கான அடையாளம்
    • வீரர்களுக்கான அடையாளம்

    போன்ற பலநிலைகளில் தமிழர் பண்பாட்டில் மலர் பெறும் சிறப்பிடத்தை அறிய முடிகிறது. இத்தகைய சிறப்புப்பெறுகின்ற மலா்களைச் சங்க காலத்தில் போற்றிப் பாதுகாத்து வந்திருப்பர் என்பதில் ஐயமில்லை.

    ***

    முனைவர் பா.பொன்னி
    உதவிப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
    எஸ். எஃப். ஆர். மகளிர் கல்லூரி (தன்னாட்சி)
    சிவகாசி.

     

    Share
  • நீதி இலக்கியங்கள் கூறும் அறக்கொள்கைகள்

    -க.பிரகாஷ்  

    நீதிஇலக்கியம் என்பது சங்க மருவிய கால இலக்கியம் அதாவது சங்க காலத்திற்குப் பின்னா்த் தமிழில் தோன்றிய இலக்கியங்களைக் குறிக்கும். கி.பி. 3- ஆம் நூற்றாண்டு முதல் 6- ஆம் நூற்றாண்டுவரை அறம் வலியுறுத்தும் நீதி நூல்கள் இருந்தன. சங்க காலத்திற்குப் பின்னா் தமிழகத்தில் களப்பிரா்கள் ஆட்சி ஏற்பட்டு, தமிழில் புது இலக்கியங்கள் தோன்றாவண்ணம் தடையான சூழல் நிலவியதாகக் கருதப்படுகிறது. இக்காரணத்தால் களப்பிரா் காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் இருண்டகாலம் என்று கருதப்படுகிறது. இக்காலத்தில், சங்க காலத்தில் போற்றப்பட்ட காதலும் வீரமும், பின்தள்ளப்பட்டு அறமும், நீதியும் பெரிதும் போற்றப்பட்டன.

         பிற்காலத்தினா் தொகை நூல்களை மேல்வரிசை நூல்கள் என்றும் கீழ்வரிசை நூல்கள் என்றும் பிரித்தனா். குறைந்த அடிகளையுடைய பாடல்களுக்குக் கீழ்வரிசை அல்லது கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் நிறைந்த அடிகள் அமைந்த பாடல்களுக்கு மேல்வரிசை அல்லது மேற்கணக்கு நூல்கள் என்றும் பெயரிடப்பட்டது.

    மேற்கணக்கு நூல்கள் பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும்; அவற்றின் எண்ணிக்கை பதினெட்டு. கீழ்க்கணக்கு நூல்களின் எண்ணிக்கையும் பதினெட்டே. மேற்கணக்கு நூல்கள் எல்லாம் பெரும்பாலும் மூன்றடி முதல் ஆயிரம் அடி வரையிலும் எழுதப்படும். அவை ஆசிரியப்பாவால் ஆனவை. கலிப்பா, பரிபாட்டு, வஞ்சிப்பா ஆகிய பாக்களைக் கொண்ட பாடல்கள் மேற்கணக்கில் உள்ளன. கீழ்க்கணக்கு நூல்கள் எல்லாம் இரண்டடி முதல் எட்டடி வரையிலும் உள்ள வெண்பாக்களால் ஆனவையே ஆகும்.

       “நாலடி நான்மணி நால்நாற்பது ஐந்திணைமுப்
         பால், கடுகம், கோவை, பழமொழி, மாமூலம்,
         இன்னிலைய காஞ்சியோடு, ஏலாதி என்பவே
         கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு.”

    இந்நூல்களில் பண்டைத் தமிழர்களின் சிறந்த ஒழுக்கங்களைக் காணலாம். சமுதாய அமைப்பு, அரசியல்முறை, பழக்க வழக்கங்கள், நாகரிகம், பண்பாட்டையும் அறநூல்கள் எடுத்துரைக்கின்றன. இது மட்டுமல்லாமல் மனிதன் வாழ்வைக் குணப்படுத்தும் அளவிற்குத் தன் கருத்துக்களை மருந்து போல் எடுத்து விளக்குவது அற நூலாகும்.

    அற இலக்கியங்களாகிய திருக்குறள், திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகிய நூல்கள் மருந்து போன்ற அருங்கருத்துகளைக் கொண்டிருக்கின்றன.

    சமண, பௌத்த சமயங்களின் வரவால் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றின. இந்தப் பதினெட்டு நூல்களில் பதினோரு நூல்கள் அற நூல்களாக அமைந்தன. இந்நூல்களின் ஒவ்வொரு பாடலும், பாடலின் ஒவ்வோர் அடியும் அறக்கருத்துகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அக்கருத்துகள் பொய்யாமை, கொல்லாமை, கள்ளுண்ணாமை, காமம் இன்மை, கள்ளாமை, ஊன் உண்ணாமை, அருளுடைமை, இன்சொல் கூறல், ஈகை, அன்புடைமை முதலியன.

    திருக்குறளில் மருந்து

    பழவினையானும், காரணங்களானும் மக்கட்கு வாதம் முதலிய பிணிகள் வரும். மனித வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திருக்குறளின் மருந்து என்ற அதிகாரத்தில் திருவள்ளுவா் மருத்துவம் பற்றிய பத்து குறட்பாக்களை கூறியுள்ளார்.

    “மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
    அற்றது போற்றி உணின்”  (குறள் – 942)

    தான் முன்புஉண்ட உணவு செரித்துவிட்டது என்பதை அறிந்து, அடுத்த வேளை உண்பானேயானால் அவனுக்கு மருந்து என்று தேவையில்லை என்பது இங்கே வள்ளுவம் கூறும் கருத்தாகும்.    

    “பசித்துப் புசி” என்பது சான்றோர் வாக்கு. பசித்த பின்பே உணவருந்த வேண்டும். பசியாமல் உண்பது அஜீரணத்துக்கு வழிவகுக்கும். அஜீரணத்தால் உடல் இயக்கம் தடைப்படும். இது பல நோய்கள் உருவாக காரணமாகிறது.

    “ஒருவேளை உண்பான் யோகி
    இருவேளை உண்பான் போகி
    முப்போதும் உண்பான் ரோகி
    எப்போதும் உண்பான் துரோகி” – 

    ஒருவன் அளவுக்கு மீறினால், தன்னைத்தானே அழித்துக் கொள்கிறான் என்பதே கருத்து.

    “அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
    பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு”  (குறள் – 943) 

    அற்றால் அளவறிந்து உண்க. முன்னுண்டது அற்றால் பின்னுண்பதனை அறுமளவு அறிந்து அவ்வளவிற்றாக உண்க. உடம்பு பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு அஃது – இறப்பவும் பலவாய பிற யாக்கைகளிற் பிழைத்துப் பெறர்க்கு அரிய இம்மானுட யாக்கையைப் பெற்றான் அதனை நெடுங்காலம் கொண்டு செலுத்தும் நெறி அதுவாகலான். (இம்மை மறுமை வீடுபேறுகள் எய்தற்பாலது ஈதொன்றுமேயாகலின் உடம்பு பெற்றான் என்றும் அது நெடிது நின்றுழி அவை பெருகச்செய்து கொள்ளலாம் ஆகலின், நெடிது உய்க்குமாறு என்றும் கூறினார்.)

    “இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
    கழிபேர் இரையான்கண் நோய்” (குறள் – 946) 

    குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்கும்.

    திரிகடுகத்தில் அறம்

    திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி என்னும் மூன்று கீழ்க்கணக்கு நூல்களும் பெயர் அமைந்துள்ள வகையிலும் நீதிப் பொருள்களைப் பாக்களில் வகுத்துத் தந்த வகையிலும் பெரிதும் ஒப்புமை உடையனவாகும். இம் மூன்றும் நோய் நீக்கி உடல்நலம் பேணும் மருந்துகளின் பெயர்களாம். இந்நூல்கள், பாடல்கள் தோறும், மூன்று, ஐந்து ஆறு என்ற அரிய கருத்துக்களை அருமையான முறையில் அமைத்துக் கொடுத்துள்ளன.

         “உலகில் கடுகும் உடலின் நோய் மாற்றும்
          அல(கு)இல் அகநோய் அகற்றும் – நிலைகொள்
          திரிகடுகம் என்னும் திகழ்தமிழ்ச் சங்கம்
          மருவுநல் லாதன் மருந்து”     

    சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்று மருந்துப் பொருள்களைக் கொண்டதே திரிகடுகம் ஆகும். சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திவாகரம். சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய திரிகடுகம் என்னும் அரிய மருந்து ஒருவர் உடல் நோயைப் போக்கும். அது போல் இந்நூலில் வரும் ஒவ்வொரு பாட்டிலும் சொல்லப்படும் மூன்று அறநெறிகளும் மனிதர்களுடைய அறியாமையாகிய நோயைப் போக்கும்.

    “பொய்வழங்கி வாழும் பொறியறையும் கைதிரிந்து
    தாழ்விடைத்து நோ்கருதும் திட்டையும் – ஊழினால்
    ஒட்டி வினைநலம் பார்ப்பானும் இம்மூவா்
    நட்கப் படாஅ தவா்”   (பாடல் – 15) 

    பொய்யான சொற்களைப் பேசி அதனால் உயிர்வாழ்கின்ற அழிவற்றவனும், முறைமைமாறி ஒருவன் தாழ்ந்த இடத்துத் தன்னை உயா்ந்தவனாகக் கருதும் மூங்கில் போன்ற புரைபட்ட மனத்தையுடையவனும், பிறரிடம் சோ்ந்து வினை ஆற்றும் போது தனக்குரிய பயனையே எதிர்பார்த்து செயல் செய்கின்றவனும் ஆகிய இம் மூவரும் யாராலும் நட்புக் கொள்ளத் தகுதியற்றவா்கள் ஆவார்கள்.

    “ஒருதலையான் வந்துறூஉ மூப்பும் புணர்ந்தார்க்கு
    இருதலையும் இன்னாப் பிரிவும் – உருவினை
    உள்ளுருக்கித் தின்னும் பெரும்பிணியும் இம்மூன்றும்
    கள்வரின் அஞ்சப் படும்”  (பாடல் – 18) 

    உறுதியாக வந்தடையும் கிழப்பருவமும், நண்பரிடையே ஏற்படும் பெருந்துன்பத்தைச் செய்கின்ற பிரிவும், உடம்பைக் கரையச் செய்து வருத்துகின்ற தீராத நோயும் ஆகிய இம்மூன்றும் கள்வரைவிட அஞ்சக் கூடியவை.

    சிறுபஞ்சமூலம் கூறும் அறம் 

    ஐந்து சிறு வேர்களுடைய பெயர்களை கொண்டு சிறுவழுதுணைவேர், நெருஞ்சிவேர், சிறுமல்லிவேர், பெருமல்லிவேர், கண்டங்கத்திரி வேர் ஆகிய ஐந்து வேர்களை கொண்டதுதான் சிறுபஞ்சமூலம் ஆகும்.

    வேர்களால் தயாரிக்கப்படும் இச் சிறுபஞ்சமூலம் ஆகிய மருந்து உடல் நலத்தைப் போற்றுவதுபோல அதில் வரும் ஒவ்வொரு பாடலிலும் சொல்லப்படும் ஐந்தைந்து கருத்துக்களும் மனித வாழ்க்கைக்குப் பெரிதும் பயன்படுவனவாக உள்ளன. அவர்களின் அறியாமையாகிய நோயைப் போக்கக் கூடிய வகையில் சிறு பஞ்சமூலம் குறிப்பிடும் பாடல்கள் அமைந்துள்ளன.

    இப்பாடல்கள் வெண்பாவில் யாக்கப்பட்டுள்ளன.

    “ஒத்த ஒழுக்கம் கொலைபொய் புலால் களவொ(டு)
          ஒத்த இவையல வோர் நாலிட்(டு) – ஒத்த
          சிறுபஞ்ச மூலம் சிறந்து” – (பாடல் – 02)

    கொலை, பொய், புலால், களவோடொத்த இவையன்றி இவற்றுக்கு மறுதலையாகிய கொல்லாமை, புலால் மறுத்தல், உண்மை பேசுதல், கள்ளாமை, என்று சொல்லப்பட்ட நாலோடு ஒழுக்கத்தையும் சேர்த்து இவ்வைந்தும் அகப்பட மிகுதியான பஞ்சத்தைத் தீர்க்கும் மழைபோல அறியாமையாகிய நோயைப் போக்குகின்ற சிறுபஞ்சமூலம் என்னும் இந்நூலை சிறப்பாக கூறுகிறார்.

    “கல்லாதான் தான்காணும் நுட்பமும் காதிரண்டும்
    இல்லாதாள் ஏக்கழுத்தம் செய்தலும் – இல்லாதான்
    ஒல்லாப் பொருளில்லார்க்கு ஈததளியான் என்றலும்
    நல்லவா்கள் கேட்பின் நகை” – (பாடல் – 5) 

    • கல்வியறிவில்லாதவன் தானே ஆராய்ந்து காண்கின்ற நுட்பமான பொருளும்
    • இரண்டு காதுகள் இல்லாதவள் தான் மிக்க அழகுடையவள் என்ற இறுமாப்பு கொள்ளுதலும்
    • பொருளில்லாதவன் இல்லாதார்க்கு ஈத்தறியான் என்றாலும், தான் வறியவரிடத்து மிக்க அருளுடையவன் என்றலும்
    • அறிவுடையவா்களாகிய சான்றோர்கள் கேட்பின் நகைப்பர்.

    “கொண்டான் வழியொழுகல் பெண்மகன் தந்தைக்குத்
    தண்டான் வழியொழுகல் தன்கிளை அஃது அண்டாதே
    வேல்வழி வெம்முனை வீடாது மன்னாடு
    கோல்வழி வாழ்தல் குணம்”  (பாடல் – 15) 

    • தன்னை மணந்து கொண்டவன் சொற்படியே ஒரு பெண் ஒழுகல்
    • மகன், தந்தையின் சொல்லைத் தட்டாதவனாய் அவன் சொல்படி நடத்தல்
    • போரின்கண் வீரா்கள் பகைவரோடு சேராமல் தன்மன்னனோடு வாழ்தல்,
    • குடிமக்கள் அரசனது கோல்வழியே வாழ்வதும் அவரவர்க்குரிய குணங்களாம்.

    ஏலாதி கூறும் அறம்

    ஏலம், இலவங்கம், சிறு நாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி என்ற ஆறு பொருள்கள் குறிப்பிட்ட அளவோடு சோ்க்கப்பட்ட ஒரு வகைச் சூரணமே ஏலாதியாகும். இச்சூரணம் உடலுக்கு வலிவையும், பொலிவையும், தெம்பையும் தரவல்லது. இதுபோல் இப்பாடல் குறிப்பிடும் ஆறு அறக்கருத்துகள் மக்களுடைய அறியாமை நீக்கி அறிவுடையோராக மாற்றுவதாகும்.

    கொலை, களவு, பொய், காமம், கள் என்னும் ஆகியவற்றை நீக்குதல் எனும் சமண சமயத்தின் அறநெறிகளை இந்நூல் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது. இல்லறம், துறவறம், விருந்தோம்பல், ஒழுக்கமுடைமை போன்ற உயா்ந்த கருத்துக்களையும் சிறந்த முறையில் எடுத்துக்காட்டுகின்றது.

    “கருஞ்சிரங்கு வெண்தொழுநோய் கல்வளி காயும்
    பெருஞ்சிரங்கு பேர்வயிற்றுத் தீயார்க்கு – அஞ்சிரமம்
    ஆற்றயூன் ஒத்(து) அவை தீா்த்தார் அரசராய்ப்
    போற்றியூண் உண்பார் புரந்து” – (57)

    • கொடிய சிரங்கு நோயும்
    • வெள்ளைத் தொழுநோயும்
    • கல்லடைப்பு நோயும்
    • வாத நோயும்
    • வருந்துகின்ற பெருஞ்சிரங்கு நோய்,
      பெரிய வயிற்றுத் தீநோய் – ஆகிய நோய்களுடையவர் பெரும் துன்பத்தை, அடைகின்றனர். அவர்களுக்கு உணவைக்கொடுத்து அந் நோய்களை நீக்கியவா்கள் மன்னராய் அனைவராலும் போற்றப்பட்டு உலகாண்டு வாழ்வர்.

    “பொய்தீர் புலவா் பொருள்புரிந் தாராய்ந்த
    மைதீா் உயர்கதியின் மாண்புரைப்பின் – மைதீர்
    சுடரின்று சொல்லின்று மாறின்று சோர்வின்(று)
    இடரின்(று) இனிதுயிலும் இன்று”  (66) 

    • பொய்ம்மை நீங்கிய சான்றோர்கள் விரும்பி ஆராய்ந்த மெய்ப் பொருளாகிய குற்றமற்ற வீடுபேற்றின் மாட்சியைச் சொல்லுமிடத்து.
    • அங்கு இருளை நீக்கும் ஞாயிறு இல்லை
    • உரையில்லை
    • நிலை மாறுதல் இல்லை
    • தளர்ச்சி இல்லை
    • துன்பமில்லை
    • இனிய துயிலுமில்லை

    வீடுபேற்றில் பகலிரவு முதலானவை இல்லை என்பதாம் இப்பாடல் கருத்து.

    ஒரு மனிதனுக்கு ஏற்படும் நோயைக் குணப்படுத்துவதற்கு எந்த அளவிற்கு மருந்து முக்கியமோ அதுபோல் ஒரு மனிதன் வாழ்வதற்குச் சில கொள்கைகளைக் கைப்பிடிக்க வேண்டும். சுக்கு, மிளகு, திப்பிலி, சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர், கண்டங்கத்திரி வோ், ஏலம், இலவங்கம், சிறு நாவற்பூ இவ்வகையான மருத்துவப் பொருட்களை அளவின்றி அருந்தினால் உடல் சரியான நிலையில் இருக்கும்.

    பொய்யாமை, கொல்லாமை, கள்ளுண்ணாமை, காமம் இன்மை, கள்ளாமை, ஊன் உண்ணாமை, அருளுடைமை, இன்சொல் கூறல், ஈகை, அன்புடைமை, இல்லறம், துறவறம், விருந்தோம்பல், ஒழுக்கமுடைமை இது போன்ற சிறந்த கொள்கைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் நோயிலிருந்து குணமடைவதுபோல், உள்ள(மன)நோய் நீங்கி இயல்பான நிலையில் வாழ்க்கையைக் கடைப்பிடித்து நல்லவண்ணம் வாழலாம்.

    ***

    பார்வை:

    திருக்குறள் – பரிலேழகர் உரை.
    பதினெண் கீழ்க்கணக்கு பகுதி – 3 – துரை. இராசாராம்

    ***

    க.பிரகாஷ் எம்.ஏ, எம்.பிஃல்,
    தமிழ்த்துறை
    தொழில்நுட்பக் கள ஆய்வுப் பணியாளர்
    பாரதியார் பல்கலைக்கழகம்
    கோயம்புத்தூர் – 46
     

    Share