Category: Featured

Featured

  • நம்பிக்கை… அதானே எல்லாம்!

    அன்பு நண்பர்களே,

    154802_391620084268266_1265729100_nநம் வல்லமை குடும்பத்தில் நம்மோடு இணையும் முனைவர்.நா.சங்கரராமன் தற்போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். பேராசிரியர் பணியில் 8 ஆண்டுகால அனுபவம் பெற்ற இவர் பல்வேறு பள்ளி, கல்லூரிகளிலும் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். பல்வேறு இதழ்களில் தன்னம்பிக்கை குறித்த கட்டுரைகளை எழுதியும் வருகிறார். தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பினை மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரனார், புதுமைப்பித்தன் ஆகியோர் பயின்ற பெருமைமிகு நெல்லை ம.தி.தா. இந்துக்கல்லூரியில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டம் முடித்து தமிழ் மீது கொண்ட மோகத்தால் முதுகலை மற்றும் முனைவர் பட்டத்தை தமிழிலே முடித்தவர்.

    கல்லூரிக் காலங்களில் பொருநை எனும் மாணவ இதழைத் திறம்பட நடத்தி பலரின் பாரட்டுகளைப் பெற்றவர். பேச்சு,கட்டுரை, கவிதை போன்ற துறைகளில் சிறந்து விளங்கி தேசிய, மாநில, பல்கலைக்கழக அளவில் பரிசுகளை நிரப்பி பாராட்டுக்களைப் பெற்றவர். மாணவர்கள் மத்தியில் நம்பிக்கை விதைகளை தினந்தோறும் தூவி வருபவர்.

    தற்போது எஸ்.எஸ்.எம். சமுதாய வானொலியில் நாளொரு கதை, உன்னாலும் முடியும் என்ற நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பேசி வருபவன். உலகை மாற்றிய கண்டுபிடிப்புகள், நினைவுகள் (கவிதைத் தொகுப்பு) முதலான நூல்களைத் தொடர்ந்து மூன்றாவது நூலான “வெற்றிகள் விற்பனைக்கு அல்ல” என்ற நூலினை கடந்த 2012 ஆகஸ்டு மாதம் கோவை விஜயா பதிப்பகத்தார் சிறப்பான முறையில் வெளியிட்டுள்ளனர்

    அன்புடன்
    ஆசிரியர்

    ‘‘ நீ பிறப்பதற்கு முன்பே

    உன் உணவிற்காக

    உன் தாயின் மார்பகங்களில்

    பாலினைச் சுரக்கச் செய்தவன் இறைவன்…’’

    -யாரோ.

    நம்பிக்கை தரும் வரிகள் இவைகள். இந்த உலகம் நம்பிக்கை எனும் வார்த்தைகளால் மட்டுமே சுழன்றுகொண்டிருக்கிறது என்பதை ஞாபகப்படுத்தும் வரிகள். இந்த பூமியில் நாம் பிறப்பதற்கு முன்பே நமக்குத் தேவையான எல்லாவற்றையும் படைத்தவன் இறைவன் என்ற நம்பிக்கை விதைகளை நம்மிடையே விதைக்கும் வரிகள். அடுத்த நகர்வை நம்பிக்கையோடு எதிர்கொள்ளும் மனிதனையே வெற்றியும் எதிர்கொள்கிறது. நல்ல நம்பிக்கைகள் ஒருபோதும் தோற்பதில்லை என்பதே வாழ்ந்துகாட்டிய மகான்கள் நமக்கு விட்டுச் சென்ற உண்மையாகும்.

    சமீப காலமாக தொலைக்காட்சிகளில் அடிக்கடி பார்க்கும் விளம்பரம்… பிரபல நகைக்கடை ஒன்றிற்கு இளையதிலகம் பிரபு வரும் விளம்பம் அது. ஆதில் அவர் கூறும் வார்த்தைகள்தான் எனக்கு இந்தக் கட்டுரையை எழுதத் தூண்டியது. அந்த உற்சாகம் தரும் வார்த்தைகள்தான் நம்பிக்கை அதானே எல்லாம் ..

    நம்மில் அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் நம்பிக்கை இருக்கும். அவை நல்ல நம்பிக்கைகளாக இருக்க வேண்டும். நேர்மறை நம்பிக்கையாக இருக்கவேண்டும். சமீபத்தில் எனக்கு ஒரு திருமணப்பத்திரிக்கை வந்தது. நண்பரின் திருமணம்… தேதியை பார்த்ததும் அசந்துபோனேன். நீங்களும் அசந்துபோவீர்கள். திருமணம் நடக்கும் நாள் 21.12.2012. உலகமே அழிந்து விடும் என்று அவநம்பிக்கைவாதிகள் குறித்த தேதி அது. உடனே நண்பருக்கு தொலைபேசியில் இரண்டு வாழத்துக்களைத் தெரிவித்துக்கொண்டேன். முதல் வாழ்த்து அவனின் திருமணத்திற்கு… இரண்டாவது வாழ்த்து அவன் தேர்ந்தெடுத்த நாளுக்காக… வணிக விஞ்ஞானிகளைப் புறம்தள்ளிய அவனது நம்பிக்கைக்காக… உலகமே பயந்து ஒதுக்கிய அந்த நாளை நம்பிக்கையோடு தன் வாழ்க்கையைத் தொடங்க முடிவெடுத்த அந்த நண்பரைப்போல நம்பிக்கையுடையவர்களால்தான் இந்த உலகமே இயங்கிக்கொண்டிருக்கிறது.

    “அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும். நமக்கெல்லாம் இது நடக்குமா?”.. நம்மோடு இருக்கும் சிலரின் முணுமுணுப்புகளை நாம் கேட்டதுண்டு. நம்பிக்கை இழந்து பேசும் நண்பர்களைப் பார்க்கும்போது சற்று வருத்தமாக இருக்கும். தனது இயலாமையை வெளிப்படுத்த அவர்களுக்குக் காரணம் வேண்டும் இல்லையா?… அந்த காரணம்தான் முணுமுணுப்பாக வெளிவருகிறது. தயவு செய்து சீக்குப்பிடித்த சிந்தனைகளையும் அழுக்குப்பிடித்த மூளைகளையும் அப்புறப்படுத்திவிடுங்கள்.

    வருடம் தவறாமல் நமது வேடந்தாங்கலுக்குக் கண்டங்களையும் கடல்களையும் தாண்டி வரும் பறவைகளைப் பாருங்கள். எத்தனை பெரிய நம்பிக்கையோடு வருகின்றன. வாயிலே ஒரு மரக்குச்சியை கவ்விக்கொண்டு மனம் நிறைய நம்பிக்கையோடு பறந்து வரும் பறவையின் நம்பிக்கை நம்மில் எத்தனை மனிதர்களுக்கு இருக்கிறது?.

    இளைப்பாறுதல் தேவைப்படும்போதெல்லாம் மரக்குச்சியை கடலின்மேல் மிதக்கவிட்டு அதன்மேல் அமர்ந்து ஒரே சிந்தனையோடு தனது இலக்கை நோக்கி பயணம் செய்யும் பறவைகள் நமக்கு நம்பிக்கையைக் கற்றுத்தந்து விடுகிறது.

    நேர்மறைச் சிந்தனைகளை விட எதிர்மறைச் சிந்தனைகளே நம்மில் பலருக்கு அதிகம். “கடைக்குப் போய் சாமான் வாங்கிட்டு வாடா” என்றால் “கடை பூட்டியிருந்தால் என்ன செய்ய?” என்ற சாதாரண கேள்வியில் இருந்தே தொடங்குகிறது நமது எதிர்மறைச் சிந்தனைகள்.

    ஒரு சிறிய கதை உங்களுக்காக…

    கனவுகளைச் சுமந்து நிற்கும் இளைஞன் அவன். சிறுவயதில் இருந்தே அவன் எதிர்மறைச் சிந்தனைகளாலும் சீக்குப்பிடித்த செயல்பாடுகளாலும் நிரம்பி காணப்பட்டவன். “நான் படிச்சு என்ன செய்யப்போறேன்..? இதுவரைக்கும் படிச்சவன்லாம் என்ன பண்ணிட்டான்?..” இந்த வசனங்களைப் போலான வசனங்களை அடிக்கடி பேசுபவன். “நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்” என்ற பி.எஸ்.வீரப்பாவின் வசனங்கள்தான் அவனுக்கு மிகவும் பிடித்தவை. சுருக்கமாகச் சொன்னால் எதிர்மறை எண்ணங்கள் அதிகம் கொண்ட இளைஞன் அவன்.

    வீட்டில் யார் எது சொன்னாலும் கேட்பதில்லை. நல்ல விசயங்கள் எல்லாம் அவனது ஒரு காது வழியே புகுந்து மறு காது வழியே வந்து விடும். இவனை என்ன செய்யலாம் என்று யோசித்து விட்டு நிறைவாக ஒரு குருவிடம் அழைத்துச் சென்றார் இளைஞனின் தந்தை. “குருவே ! இவனை நீங்கள் தான் மாற்ற வேண்டும். எதைச் சொன்னாலும் எதிர்மறையாகவே செய்கிறான்” என்றார். குருவோ சற்று நிதானமாகக் கேட்டு விட்டு “இந்த உலகத்தில் யாரும் யாரையும் திருத்த முடியாது. தவறுகளை உணரச் செய்வதன் மூலமே ஒருவரை மாற்ற முடியும். இவனின் தவறுகளை உணர வைக்க முயற்சி செய்கிறேன். உங்கள் மகனை என்னிடம் இரண்டு நாட்கள் விட்டுவிடுங்கள். திரும்பி வரும்போது திருந்தி வருவான்” என்றார்.

    மறுநாள் வழக்கம்போல்தான் விடிந்தது. குரு அந்த இளைஞனை அழைத்தார். “மகனே! இன்று உனக்கு ஆசிரமக் கூரைகளை வேயும் பணியினைத் தருகிறேன்” என்று கூறிவிட்டு கையில் ஒரு பெரிய உணவுப் பொட்டலத்தைக் கொடுத்தார். “இந்த உணவுப் பொட்டலத்தை வைத்துக்கொள். நீ சாப்பிட்ட பின்பு மீதமுள்ளதை உன் இடையில் கட்டி தொங்கவிட்டுக்கொள். எந்தக் காரணம் கொண்டும் அதனை கீழே வைத்துவிடாதே. நான் வந்து வாங்கிக்கொள்கிறேன்”, என்று சொல்லிவிட்டு வெளியிலே சென்று விட்டார். இளைஞனும் தன் வேலையைத் தொடங்கினான். காலை உணவு நேரம் வந்தது. பொட்டலத்தைப் பிரித்தான். சாப்பிட்டுவிட்டு மீதமுள்ளதைப் பொட்டலமாகக் கட்டி தன் இடையில் தொங்கவிட்டு விட்டு தன் வேலையைத் தொடர்ந்தான்.

    மதிய நேரமானது. பசிக்க ஆரம்பித்தது. மீண்டும் பொட்டலத்தைப் பிரித்தான். வெயில் அதிகமான காரணத்தாலும் ஏற்கனவே சாப்பிட்ட உணவு என்பதாலும் உணவு கெட்டு துர்நாற்றம் அடிக்க ஆரம்பித்தது. பசிதான்… கெட்டுப்போன உணவினைச் சாப்பிட முடியவில்லை. தண்ணீர் அருந்திவிட்டு வேலையைத் தொடர்ந்தான். சிறிது நேரத்தில் குரு அங்கே வந்தார். இளைஞனுக்கு மகிழ்ச்சி பொங்கியது. பொட்டலத்தை கொடுத்துவிடலாம் என்று குருவை நெருங்கினான். குருவோ பொட்டலத்தை வாங்கவில்லை. “வைத்திரு.வாங்கிக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்றார்.

    மாலை நேரம் வந்துவிட்டது. துர்நாற்றம் அதிகமாகியது. கொசுக்களும் ஈக்களும் பொட்டலத்தை சுற்றின. இரவு வந்தது. குரு வரவில்லை. துர்நாற்றமும் கொசுக்களும் அவரைத் தூங்கவிடவில்லை. இரவு முழுவதும் தூங்காததால் காலையில் குருவை எதிர்பார்த்தான். குரு வந்தார். “குருவே! இதை வாங்கிக் கொள்ளுங்கள். இனி ஒரு நிமிடம் கூட இந்த பொட்டலத்தைத் தூக்க முடியாது” என்றான். குருவோ நிதானமாக “இதை ஏன் நான் வாங்கிக்கொள்ள வேண்டும்?” என்று கேட்டார். இது கெட்டுப்போன உணவுப்பொட்டலம். துர்நாற்றம் வருகிறது. என்னால் சுமக்க முடியவில்லை’’ என்றான் இளைஞன்.

    குரு இளைஞனுக்கு கூறிய பதிலில்தான் இந்தக்கதையின் அர்த்தமும் நம் வாழ்க்கையின் அர்த்தமும் அடங்கியுள்ளது. குருவின் பதில் ‘‘கெட்டுப்போன உணவினை உன்னால் ஒருநாள் கூட சுமக்கமுடியவில்லை. 20 வருடங்களாக கெட்டுப்போன மனதினை எப்படிச் சுமந்து கொண்டிருக்கிறாய். உடனடியாக அதனை அகற்றி எறி..” என்பதுதான்.

    தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.. நம்மில் எத்தனை பேர் இவ்வாறு இருக்கிறோம் என்று மனசாட்சியோடு எண்ணிப் பார்ப்போம். குப்பைகளைக் கொட்டி வைக்கும் குப்பைத் தொட்டியல்ல மனம் என்பதை உணருங்கள். நல்ல எண்ணங்களால் மனதினை நிரப்புங்கள். நம்பிக்கையுடையவர்களையே உலகம் தேடுகிறது. விரும்புகிறது. மனதினை அவ்வப்போது உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களால் அடைய முடியாத இலக்கு என்று எதுவும் கிடையாது. தகுந்த பயிற்சியும் இடைவிடாத முயற்சியும் இருந்தாலே எட்ட முடியாத இலக்கையும் எளிதில் அடையலாம் என்பதே சாதனையாளர்கள் நமக்கு விட்டுச்சென்ற பாடமாக அமைகிறது.

    நம்மில் பலருக்கு விழிப்பதற்கும் எழுவதற்குமே அதிக இடைவெளி உள்ளது என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டியுள்ளது. காலையில் எழும்பும்போது மனதிற்கும் உடலிற்கும் இடையிலே ஒரு பெரிய சண்டையே நிகழ்கிறது. “காலைல சீக்கிரமே எழுந்திருச்சா படிக்கலாம். உடற்பயிற்சி செய்யலாம்….” என்று மனம் பலவற்றைச் சொல்கிறது.

    உடலோ “நல்லா குளுருது. இப்போ எழுந்திருச்சு என்ன சாதிக்கப்போறோம்?. அதெல்லாம் எழுந்திருச்ச பிறகு பார்த்துக்கலாம்… இல்லை நாளைல இருந்து சீக்கிரமா எழுந்திருக்கலாம்” என்று சொல்லும். மனம் சொன்ன படி நடந்தவர்கள் எல்லாரும் சாதனையாளர்களாக மலர்ந்துள்ளார்கள். உடல் சொன்ன படி கேட்டவர்கள் சராசரி மனிதர்களாக வாழந்து(?)கொண்டிருக்கிறார்கள்.

    இதில் நீங்கள் எந்த வகை என்பதை உங்கள் மனசாட்சியைக் கேட்டு முடிவு செய்யுங்கள்.

    நல்ல நம்பிக்கையோடு செயல்படும் அனைவருமே சாதனையாளர்களாக மலர்ந்துள்ளார்கள் என்பதே சரித்திரம் நமக்குத் தரும் பாடமாக உள்ளது. நம்பிக்கையோடு செயல்படுங்கள் … வெற்றி உங்களுக்காக காத்திருக்கிறது.

    நல்லவர்களிடம் பேசும்போதே

    நம்பிக்கை பிறந்துவிடுகிறது

    Share
  • மகாபாரத முத்துக்கள்!

    புவனேஷ்வர்

    வியாசர் இயற்றிய மகாபாரதத்தில் இருந்து எனக்குப் பிடித்த சில சுவையான பகுதிகளை “மகாபாரத முத்துக்கள்” என்ற பெயரில் கடந்த ஓராண்டாக எழுதி வைத்துக்கொண்டு வருகிறேன். அவற்றை வல்லமை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வியாசர் சொன்னதைத்தான் தமிழில் ஓர் கதைசொல்லியாக சொல்லுகிறேன். மொழிபெயர்ப்பு + கதைசொல்லல் என்று கூட சொல்லிவிடலாம்.

    பாரத நாட்டுக்கே உரிய பண்பாடு, நாகரிக கோட்பாடுகள் ஆகியவை அந்நாளில் எங்ஙனம் இருந்தது என்பதை இக்காலத்தில் உள்ளோர் அறிந்து கொள்ள இவை உதவும். வெறும் கதையாக இல்லாமல் வாழ்வியல் நெறிகளையும் குறைவறக் கூறும் பண்டை நூற்கள் உற்ற தோழர்களே.
    முதல் பாகமாக, பூரிசிரவஸ் வதம் என்னும் பகுதியைக் காணலாம். இது நான்கு பாகங்களாக வரும். ராமாயணத்தில் வாலி வதம் போல மகாபாரதத்தில் பூரிசிரவஸ் வதம் சர்ச்சைக்குரிய ஒன்று (அபிமன்யு வதம் தார்தராஷ்டிரர்கள் பண்ணினது. இது பாண்டவர் பக்கம் செய்த ஒன்று).

    அதில் முதல் பாகம் – துரோணரின் அறிவுரை:

    அன்புடன்,
    புவனேஷ்வர்

    மகாபாரத முத்துக்கள்: பூரிசிரவஸ் வதம் – பகுதி 1 – துரோணரின் அறிவுரை!

    அபிமன்யு அநியாய விதமாக ஜயத்ரதனால் கொல்லப்பட்டதை அறிந்த அருச்சுனன் ரௌத்ராகாரமாக “நாளை மாலைக்குள் ஜயத்ரதனை கொல்வேன்; அவன் உயிருக்குப் பயந்து ஓடியோ, அல்லது தரும புத்திரரிடமோ க்ருஷ்ணணிடமோ சரண் அடைந்தாலோ அன்றி, நாளை மாலைக்குள் அவன் உயிரை காண்டீபம் குடிக்கும். இல்லையேல் ஜொலிக்கும் தீயினில் பாய்ந்து மகன் சென்ற உலகுக்கு நானும் செல்வேன், இது சத்தியம்” என கோரமான சபதம் பண்ணினான்.

    ஜயத்ரதனை முடிக்க முனைந்து அருச்சுனன் சென்றான். வில்லை இரு கைகளாலும் பிடித்து இடது கையாலும் அம்பெய்யும் திறமையை பெற்றவன் அர்ஜுனன் (சவ்யசாசி) என்று எல்லாரும் அது நாள் வரை கேள்விப்பட்டுத்தான் இருந்தார்கள். அன்று தான் கண்கூடாக பார்த்தார்கள்.

    இது வரை பதின்மூன்று நாட்கள் யுத்தத்தில் கூட, அருச்சுனன் வந்தால் எவரும் அவன் முன்னால் நிற்க முடியாது என்ற நிலை இருந்தது தான். வாய் திறந்த அந்தகனை போல அவன் எதிரிகளுக்குக் காட்சி தந்தான். ஆனால் அதுவரை கௌரவப்படை கண்ட அருச்சுனன் ஒன்றுமே இல்லை என்று ஆக்குவது போல அன்று காண்டீபம் தன் முழுப்பண்பையும் காட்ட ஆரம்பித்தது. பாணங்களை எடுப்பதும் தொடுப்பதும் விடுப்பதும் கண்ணுக்குத் தெரியவில்லை. அர்ஜுனனின் வில்வன்மையும் கண்ணனின் சாரத்யமும் சேர்ந்து, பயம் கொண்ட கௌரவப்படைகளுக்கு ஒரு அர்ஜுனன் அல்ல, நூறு நூறு அருச்சுனர்கள் தெரிய ஆரம்பித்தார்கள். “இதோ அருச்சுனன், இதோ விஜயன்” என கத்தி தங்களுக்குள்ளேயே வெட்டி மடிந்து பைத்தியம் கொண்டவர்கள் போல அப்படை குலைய ஆரம்பித்தது.

    யுத்தத்தில் அர்ஜுனனுக்கு சகாயம் செய்ய சாத்யகி போகிறான். வருஷ்ணி குலத்தவனும் அருச்சுனனின் உயிர் நண்பனும், சீடனும் ஆவான் சாத்யகி. அர்ஜுனனை மிஞ்சும் அளவுக்கு வில் வன்மை கொண்டவன் என வியாசர் அவனை புகழ்வார். துரோணருடன் புரிந்த போரில் அவரிடமே பாராட்டு பத்திரம் வாங்கின வீரன். போரில் அவர் வில்லை ஒரு அம்பால் உடைத்தான் சாத்யகி. கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அடுத்த வில்லை பிடித்து நின்றார் ஆசாரியர். அடுத்த கணம் கழுகு இறக்கைகள் பூட்டிய அம்பு ஒன்று அந்த வில்லை கைப்பிடியில் துண்டாக்கியது. அடுத்த வில்லை நாணேற்றினார் துரோணர். நாணேற்றும் போதே அதுவும் உடைந்தது. அதற்கு அடுத்த வில்லை நாணேற்ற கூட நேரம் தராமல் சாத்யகி ஒரே அம்பால் சேதித்தான். இப்படி தொண்ணூற்றாறு விற்களை ஆசாரியர் எடுக்க எடுக்க எடுத்ததும் உடைத்தான் யாதவ குல வீரன். பின் நடந்த யுத்தம் மயிர்க்கூச்செறியும் படி நடந்தது. இவன் சாதாரணமானவன் அல்ல என திவ்ய அஸ்திரங்களை விடுத்தார் பிராமணர். பயப்படாமல், அவர் பிரயோகித்த ஒவ்வொரு அஸ்திரத்துக்கும் பதிலடி கொடுத்தபடி சளைக்காமல் போரிட்டான் சாத்யகி. “யுத்தத்தில் இந்த சாத்யகி ஸ்ரீ ராமனையும், பரசுராமனையும், அர்ஜுனனையும், கார்தவீரியார்ச்சுனனியும் போல போர் புரிகிறான். அவர்களின் வில்வன்மையை நான் இவனுடன் காண்கிறேன்” என்று ஆசாரியார் மகிழ்ந்து பாராட்டினார். எதிரியாக வந்தாலும் வீரனின் மித்தையை ரசித்து பாராட்டும் ஆசாரியரின் உயர்ந்த பண்பு தான் என்னே! சஞ்சயனும் “இன்றைய உலகில் ஸ்ரீ கிருஷ்ணனும், அருச்சுனனும், சாத்யகியுமே சிறந்த வில்லாளிகள். நான்காவது யாரும் கிடையாது” என கண்ணிழந்த மன்னனிடம் பாராட்டினான்.

    அந்த சாத்யகி யுத்தத்தில் அதாகதம் பண்ணுகையில் அவனை எதிர்க்க கர்ணன் சென்றான். தோற்றான். கர்ணனை தான் கொல்வதாக அர்ஜுனனின் சபதத்தை நினைத்து அவனை கொல்லாமல் அனுப்பினான் சாத்யகி. க்ருதவர்மன் சென்றான். மயங்கி கிடந்தான். சில பல வீரர்கள் சென்றார்கள். சென்ற வேகத்திலேயே யமனுக்கு விருந்தாளியாக சென்றார்கள்.

    பின்னர் துச்சாதனன் போனான். கொஞ்ச நேரம் யுத்தம் நடந்தது. கர்ணனையும் துரோணரையும் தோற்கடித்த சாத்யகிக்கு துச்சாதனனை கர்வபங்கம் பண்ண அதிக நேரம் பிடிக்குமா என்ன? தேரிழந்து வில்லிழந்து ஆயுதங்கள் அழிந்து புறங்காட்டினான் துச்சாதனன். பீமனின் சபதத்தை எண்ணி அவனை உயிரோடு விட்டான் சாத்யகி.

    ஓடி வந்தவன் நேரே துரோணரிடம் வந்தான். அவனை துரோணர் நன்றாக திட்டி, சமாதானம் பண்ணிக்கொள், இப்போதும் கூட ஒன்றும் பாழாகவில்லை என கூறினார். போர்க்களத்தின் நடுவே துரோணர் உபதேசித்த வார்த்தைகள் இனி. வருபவை. இவை வியாசரின் வார்த்தைகள். தமிழ் நடைக்கு மட்டுமே நான் பொறுப்பு!

    “துச்சாதனா, ஏன் இந்த ரதங்கள் சிதறி ஓடுகின்றன? அரசன் நலம் தானே? சிந்து தேசத்தரசன் ஜெயத்ரதன் நலம் தானே? நீ ஒரு இளவரசன். நீ ஒரு அரசனின் சகோதரன். நீ ஒரு தேர் வீரன் தானே? ஏன் இப்படி யுத்தத்தில் பயந்து புறங்காட்டி பறந்தோடி வருகிறாய்? யுத்தத்தில் ஜெயித்து நீ இளவரசனாக வேண்டியது தானே?

    முன்னொரு நாளில் நீ பதிவ்ரதையான குற்றமற்ற திரௌபதியிடம் சொன்னாயே நினைவிருக்கிறதா? “சூதாட்டத்தில் ஜெயிக்கப்பட்ட நீ எங்கள் அடிமை, உன் கணவர்களுக்கு கட்டுப்படாமல், உன் கற்பை கழற்றி வீசி விட்டு துரியோதனனின் ஆடைகளை சுமந்து வா; உன் கணவர்கள் இறந்து விட்டவர்களுக்கு சமம், விதை அற்ற எள்ளுக்கு சமானமான அற்பர்கள் உன் கணவர்கள்” என கூசாமல் தைரியமாக அந்த பெண்ணிடம் சொன்னாயே, இப்போது ஏன், ஓ துச்சாதனா, யுத்தத்தில் தைரியம் கெட்டு மானமில்லாமல் ஓடி வருகிறாய்?

    நீ தானே இந்த கொடும் பகையை பாண்டவர்களுடனும் பாஞ்சாலர்களுடனும் மூட்டி விட்டாய்? மூடனே, இப்போது சாத்யகியை கண்டே தொடை நடுங்குகிறாயே? அன்றைக்கு உருட்டிய பகடைகள் சட்டை உரித்த விஷ சர்ப்பங்களை ஒத்த கூரிய அம்புகளாக உருமாறி தாக்கும் என உனக்கு அன்று புரியவில்லையா?

    ஒரு குற்றமும் அறியாத பாண்டவர்களை கேவலமான பல வார்த்தைகளால் சகோதரர்கள் எனவும் பாராது திட்டியவன் நீதானே?

    பாஞ்சாலியின் துயரங்கள் உன்னையே வேராக கொண்டவை. அன்று காட்டிய உனது மமதையும் கர்வமும் இப்போது எங்கே? அன்று பாண்டவர்களை சீண்டிய நீ இப்போது ஏன் புறங்காட்டி ஓடுகிறாய்?

    பயந்து போன இந்தப் படைகளை காக்காமல் ஏன் நீயே ஓடி வருகிறாய்?

    சாத்வத குலத்தை சேர்ந்த சாத்யகி ஒருத்தனை கண்டே உன் மனம் கோழைத்தனத்தை அடைந்து விட்டதே, நீயெல்லாம் காண்டீபத்தை கண்டால் என்ன செய்வாய்? பீமசேனனை கண்டால் என்ன செய்வாய்? இரட்டையர்களை (நகுல சகாதேவர்களை) கண்டால் என்ன செய்வாய்?

    நீ கண்டு பயந்து ஓடி வந்தாயே, அந்த சாத்யகி எய்த அம்புகள், சூரியனைப் போல யுத்தத்தில் எரிக்கும் அருச்சுனன் கையில் உள்ள காண்டீபத்தில் இருந்து வெளிப்படும் அம்புகளுக்கு சிறிதும் நிகராக மாட்டா, தெரிந்து கொள். நீயெல்லாம் காண்டீபத்தைக் கண்டால் என்ன செய்வாய்?

    இவ்வளவு பயந்து ஒடுபவனாக இருக்கிறாயே!

    உன் நன்மையை கருதி சொல்லுகிறேன், கேள். தருமராஜன் நல்லவன், நீதி தவறாதவன். அனைவருக்கும் இனியவன், எதிரிகளையும் அன்பால் கவர்பவன். அவனை போய் பகைக்கிறாயே. உன் அண்ணன் அவன். அவனுக்கு ராஜ்யத்தை கொடுத்து சமாதானம் பண்ணிக்கொள்.

    சட்டை உரித்த விஷ நாகங்கள் புற்றுக்குள்ளே நுழைவது போல போல ஒப்பற்ற பல்குணனின் (அர்ஜுனனின்) அம்புகள் உன் உடலுக்குள் புகும் முன், பாண்டவர்களோடு சமாதானம் செய்து கொள். மகாத்மாக்கள் பாண்டவர்கள் உன் நூறு சகோதரர்களையும் கொன்று ராஜ்யத்தை அடைவதற்கு முன், நீ அவர்களோடு சமாதானம் செய்து கொள்.

    இன்னும் கோபப்படாத யுதிஷ்டிரன் கோபப்படும் முன் சமாதானம் பண்ணிக்கொள். யுத்தத்தில் களிப்பவனான கிருஷ்ணன் ஆத்திரப்ப்படுமுன், தோள்வலியில் நிகரற்ற பீமசேனன் இந்த படைகளுக்குள் புகுந்து உன் சகோதரர்களையும் உன்னையும் யமனுக்கு விருந்தாளிகள் ஆக்குவதற்கு முன் சமாதானம் செய்து கொள்.

    பாண்டவர்களை யுத்தத்தில் ஒருத்தராலும் ஜெயிக்க இயலாது, அவர்களோடு சமாதானம் பண்ணிக்கொள் என ஒப்பற்ற பேரறிவுடைய பீஷ்மர் உன் அண்ணனுக்கு (துரியோதனுக்கு) சொன்னார். மூடனும் கொடியவனுமான உன் அண்ணன் அவரது நன்மொழிகளை கேட்கவில்லை.”

    இதையெல்லாம் கேட்டு அப்புறமாவது துச்சாதனன் திருந்தினானா என்றால், அது தான் இல்லை. துரோணர் சொன்னது எதுவுமே தனக்கு காதில் விழாதது போல, அங்கிருந்து நழுவி சண்டைக்கு சென்றான். அவன் ஆயுள் துரோணர் சொன்னது போல பீமனின் வாளின் முனையில் மூன்று நாட்களில் முடிந்தது என்பது வேறு விஷயம்.

    (தொடரும்…)

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 84 (12.08.13)

    மலர் சபாpicture 84

     

    புகார்க்காண்டம் – 08. வேனில்காதை

    திருமுகத்தைக் கோவலன் மறுத்த செய்தியை வசந்தமாலை மாதவிக்கு உரைத்தல்

    அழகிய பொன் தோடு அணிந்த
    அழகுமுகத்தை உடைய மாதவி
    அழகிய தாழை மடலில்
    வரைந்து அனுப்பிய திருமுகத்தைக்
    கோவலன் வாங்க மறுத்தான்.
    இதனை உரைக்க,
    வாடிய மனதுடன்,
    இதழ்விரி மாலையணிந்த மாதவியிடம்
    விரைந்து சென்றனள் வசந்தமாலை.

    மாதவி செயலற்ற உள்ளத்துடன் மலர் அமளியில்
    கண் துயிலாது கிடத்தல்

    இதைக்கேட்ட மாதவி
    “சிறந்த அணிகலன்கள் அணிந்தவளே!
    இம்மாலைப் பொழுதில் அவர் வருவார்;
    வாராது போனாலும்
    நாளைக் காலையில் அவரைக் காணலாம்”
    எனக் கூறினாள்.
    பின் செயலற்ற மனத்தோடு
    தான் இருந்த மலர்ப்படுக்கையின் மீது
    அழகிய மலர் போன்ற கண்களையுடைய அவள்
    இமைகள் மூடாது வாடியே கிடந்தனள்.

    வெண்பா

    செந்தாமரை மலர்கள் விரிந்தன;
    மாமரங்களில் தளிர்கள் அழகுடன் துளிர்த்தன;
    அழகு பொருந்திய அசோகம் இதழ் விரித்தது;
    இளவேனில் காலம் வந்துவிட்ட இவ்வேளையில்
    அழகிய கண்களையுடைய
    மாதவியின் மனம் கோவலனைப் பிரிந்ததால்
    என்னவெல்லாம் துன்பறுமோ!

    உலகில் ஊடிப் பிரிந்து
    வாழும் உள்ளங்களே!
    நீங்கள் எல்லாம் கூடி வாழுங்கள்!
    இது மன்மதன் ஆணை!
    என்று கூவி அறிவித்தன குயில்கள்.

    மாதவி பாடிய கானல்வரி கேட்டு
    ஊடி நிற்கும் கோவலனே!
    உன்னோடு எப்போதும் கூடிக் கலந்திருந்த
    அவளின் அழகிய முகத்தை
    இந்த இளவேனில் பொழுதில்
    நினைவு கூர்ந்து காண்பாயாக!

    (வேனில் காதை முற்றிற்று.
    அடுத்து வருவது கனாத் திறம் உரைத்த காதை)

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 111 – 126
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram25.html

    படத்துக்கு நன்றி:
    https://www.facebook.com/PaintingsLover

    Share
  • கென்யா பயணம் – 4

    நாகேஸ்வரி அண்ணாமலை

    நைரோபியில் எங்களைப் பயண வழிகாட்டி கூட்டிச் சென்ற இன்னொரு இடம் மாநாட்டு அரங்கம் (Convention Centre).   இது வணிக மையம்.  இது கென்யாவின் வணிக வளத்திற்கு ஒரு அடையாளம்.  நைரோபி நகரில் உள்ள கார்களின் எண்ணிக்கை நைரோபி தேசிய பூங்காவில் உள்ள வனவிலங்குகளின் எண்ணிக்கையை விட அதிகம் என்று ஒருவர் ஜோக்கடித்தார்.  கிழக்கு ஆப்பிரிக்காவில் டான்ஸானியா, எத்தியோபியா, உகாண்டா, சூடான், சோமாலியா ஆகிய நாடுகளில் அதிகம் வளர்ந்திருப்பது கென்யா; ஆப்பிரிக்கக் கண்டத்தில் தென் ஆப்பிரிக்காவிற்கு அடுத்தபடியாக வளம் நிறைந்தது கென்யா.  வளர்ந்து வரும் இந்நாட்டின் வளத்தைப் பறைசாற்றுவது இது போன்ற இடங்கள்.  இது பல மாடிகளைக் கொண்டது.  44-வது மாடிக்குச் சென்று நைரோபியின் முழு தோற்றத்தையும் பார்க்கலாம்.  ஒரு பக்கம் பல மாடிக் கட்டடங்கள்; இன்னொரு பக்கம் நைரோபியின் சேரிப் பகுதி.  கென்யாவின் மக்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை நைரோபியிலேயே காணலாம்.

    அடுத்து நாங்கள் சென்றது Nairobi City Market என்று அழைக்கப்படும் மார்க்கெட்.  சென்னையின் பழைய மூர் மார்க்கெட்போன்றது. இங்கு பல வகையான சாமான்கள் விற்கிறார்கள்.  ஆனால் மலிவான சாமான்கள்.  விலையுயர்ந்த சாமான்கள், அமெரிக்கச் சாமான்கள் எல்லாம் அமெரிக்க மாடல் மால்களுக்குச் சென்றுவிட்டன.  இந்த மார்க்கெட்டிற்குள் சென்றுவிட்டால் ‘எங்களிடம் வாங்குங்கள்’ என்று நம்மை கையைப் பற்றி இழுக்காத குறையாகக் கடைச் சொந்தக்காரர்கள் நம்மைச் சூழ்ந்துகொள்கிறார்கள்.  அதை விடச் சிரமமானது அவர்களிடம் பேரம் பேசுவது.  நம் இந்தியாவில் போல்தான் அங்கும் பேரம்பேசத் தெரிந்தவர்கள் பாடு கொண்டாட்டம்தான்.  இந்த சிட்டி மார்க்கெட்டின் ஒரு பக்கம் மீன் மார்க்கெட்டும் இருந்தது.  இங்கும் நம் இந்தியாவில் போலவே மீன் அப்போதுதான் பிடிக்கப்பட்டது, மிகவும் fresh-ஆக் இருக்கிறது என்பதை நிரூபிக்க மீனின் தலையின் பக்கவாட்டில் இருக்கும் அலகுகளைத் திறந்து காட்டுகிறார்கள்.  எனக்கு எங்கள் ஊர் மீன்மார்க்கெட்தான் ஞாபகத்திற்கு வந்தது.  அலகுகளின் அடியில் இருக்கும் மீனின் சுவாச உறுப்புக்களான gills  சிவப்பாக இருந்தால் புதிதாகப் பிடிக்கப்பட்ட மீன் என்று அர்த்தம்.

    நைரோபியின் இன்னொரு முக்கியமான இடம் 1998-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி கென்யாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெடி வைத்து அல்கொய்தாவால் தாக்கப்பட்டதை நினைவுகூறும் நினைவுப் பூங்கா.  இந்தப் பூங்காவில் தாக்குதலில் எரிந்த கட்டடத்தின் சில இரும்புக் கம்பிகளை ஒரு உருவமாக வடித்துவைத்திருக்கிறார்கள்.  சம்பவத்தன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களின் சிறு கண்காட்சியும் இருக்கிறது.  பூங்காவிற்குள் நுழையக் கட்டணம் உண்டு.  இருபது ஷில்லிங்தான்.  இருப்பினும் இங்கே உஹுரு (சுதந்திர) பூங்காவில் போல ஏழைகளைப் பார்க்க முடியவில்லை.

    தாக்குதல் நடந்த பதினைந்தாவது ஆண்டு தினத்தில் – இந்த ஆகஸ்டு ஏழாம் தேதி – நைரோபி விமானநிலையம் தீப்பற்றி எரிந்திருக்கிறது.  இது அல்கொய்தாவின் வேலையோ என்று ஒரு சந்தேகம் இருக்கிறது.  பெரிய தீ விபத்தைச் சமாளிக்கும் அளவிற்கு தீயணைப்புச் சாதனங்கள் இல்லாததால் விமானநிலையத்தின் பெரும்பகுதி சேதமடைந்திருப்பதாகத் தெரிகிறது.

    மசாய் பழங்குடி மக்களின் கைவினைப் பொருள்களை விற்கும் திறந்த வெளிச்சந்தை ஒன்று நைரோபியில் தினம் வேறு வேறு பகுதிகளில் நடக்கிறது.  இங்கு வரிசை வரிசையாகக் கடைகளில் மரத்தால், தோலால், துணியால் செய்த பொருள்கள் விற்கப்படுகின்றன்.  இங்கும் பேரம் உண்டு.  ஆனால் சிட்டி மார்க்கெட் அளவு மோசம் இல்லை.  தங்கள் பொருள்களை விற்கும் பழங்குடி மக்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள்.  இது பயணிகள் விரும்பி வரும் இடம்.  இந்தச் சாமான்களை வாஙக கென்ய இந்தியர்களும் வருகிறார்கள்.

    நைரோபியின் சாலைகளை ஒட்டிய நடைபாதைகளில் ஏழை வியாபாரிகள் கடை விரித்திருக்கிறார்கள்.  இந்தக் கடைகளில் நம் நாட்டு நடைபாதைக் கடைகளைப் போல வாழைப்பழம், பப்பாளி, ஆப்பிள் போன்ற பழங்கள், செருப்புகள், தயார் உடைகள் முதலியன கிடைக்கும்.  இங்கு சாமான் வாங்க ஸ்வாஹிலி தெரிந்திருக்க வேண்டும்.  ஒரு சாலையிலிருந்து பிரிந்து செல்லும் ஒரு சந்தில் நெடுகக் காய்கறிக் கடைகள் இருந்தன.  இந்தக் கடைகளில் தேங்காய், பச்சைமிளகாய், பாகற்காய் போன்ற இந்தியக் காய்கறிக்ளும் இருந்தன.  இங்கும் வியாபார மொழி ஸ்வாஹிலியே.  காய்கறிகள் வாங்கும் கென்ய இந்தியப் பெண்களும் இந்த மொழியிலேயே பேரம் பேசுகிறார்கள்.

    சூப்பர் மார்க்கெட்டிலும் டிபார்மெண்ட் ஸ்டோர்களிலும் இந்தியர்கள் உப்யோகிக்கும் பல பொருள்கள் கிடைக்கின்றன.  குக்கர், சாஸ் பேன் போன்ற எவர்சில்வர் பாத்திரங்கள், மிக்ஸர், முறுக்கு முதலான பலகாரங்கள் எல்லாம் கிடைக்கின்றன . பல இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டவை.  பல கடைகள் கென்ய இந்தியர்களுக்குச் சொந்தமானவை.

    அமெரிக்க மாடல் மால்களில் கிட்டத்தட்ட அமெரிக்க பிராண்டு சாமான்கள் எல்லாம் கிடைக்கின்றன.  சாக்கலேட்டுகள், சானிடரி நாப்கின்கள், குழந்தைகளுக்கான டயப்பர்கள் ஆகிய எல்லாம் கிடைக்கின்றன.  அமெரிக்காவைப் பின்பற்ற ஏன் இப்படி எல்லா நாடுகளும் துடிக்கின்றனவோ.  அமெரிக்க மாடலிலேயே கடைகள் எல்லாம் அமைக்கப்பட்டிருக்கின்றன.  நைரோபி முழுவதும் இப்படிப்பட்ட மால்கள் ஆங்காங்கே இருக்கின்றன.  பணம் படைத்த பகுதியில் இருந்த மால் மிகவும் பெரியதாகவும் வசதிகள் நிறைந்ததாகவும் இருந்தது.  அதற்கு அருகே இருந்த வீடுகள் பெரிய மான்ஷன்களாக இருந்தன.  இந்த மான்ஷன்களைச் சுற்றியிருந்த மிக உயரமான சுவர்களில் நவீன பாதுகாப்புச் சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்தன.  பணக்கார அமெரிக்கா, ஏழை அமெரிக்கா என்ற இரண்டு அமெரிக்காக்கள் உருவாவதைத் தடுக்க வேண்டும் என்று அமெரிக்க அரசியல்வாதிகள் அறைகூவுவார்கள்.  கென்யாவிலும் இந்த மாதிரியான அரசியல் பேச்சு இருக்கிறதா என்று தெரியவில்லை.  ஆனால் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

    தொடரும்

    நைரோபி நகரின் படங்களை இந்த இணைப்பில் பார்க்கலாம்.

    https://picasaweb.google.com/108173580006522327175/ScenesFromNairobi?authkey=Gv1sRgCIellMKNpa7szgE

    படங்கள்: மெல்லியல்

    Share
  • திருப்பாவை தந்த திருப்பாவை

     

    -கவிநயா

    கோபிகளுடன் கண்ணன் விளையாடிக் கொண்டிருக்கிறான். இந்தப் பக்கம் ஒருத்தியின் கண்களை ஒரு கையால் மூடிக் கொண்டே, அந்தப் பக்கம் இன்னொருத்தியின் பின்னலைப் பிடித்திழுக்கிறான். கூடவே ஒருத்தியின் காதுகளில் இரகசியம் வேறு பேசுகிறான்! பொல்லாத கண்ணன் என்பது சரியாகத்தான் இருக்கிறது!

    இந்தக் கோபியர்களின் பாவனையில்தான் எத்தனை மகிழ்ச்சி! எத்தனை துள்ளல்! உலகமே இவர்கள் காலடியில் கிடப்பது போல் அப்படி ஒரு பெருமிதம், இவர்கள் முகத்தில்! பூமியில் கால் பாவாமல், எங்கோ ஆகாயத்தில், கவலைகளே அற்ற ஒரு உலகத்தில் இருப்பது போன்ற எண்ணம் போலும்! வீடு என்று ஒன்று இருப்பதும், அங்கு பெற்றோர் இவர்களுக்காகக் காத்திருப்பதும், இவர்கள் நினைவிலிருந்தே மறைந்து விட்டது! கண்ணன்… கண்ணன்… கண்ணன்…மட்டும்தான் அவர்களின் கண்களுக்குத் தெரிகிறான். எங்கெங்கும் அவனுடைய குறும்புப் பார்வையும் கனிந்த புன்னகையும் மட்டும்தான் தெரிகிறது. அப்படி இருக்க, அவர்களுக்கென்ன பகலும், இரவும், பசியும், தாகமுமா தெரியப் போகிறது!

    அவன் மீது அவர்கள் கொண்டிருக்கும் பிரேமைக்கு அளவே இல்லை. கண்ணா, கண்ணா, என்று இவர்கள் அவனைத் தூக்கி வைத்துக் கொஞ்சிக் கொண்டாடிக் கூத்தாடுவதும், இவனும் ஒற்றை ஆளாக இருந்து கொண்டு அத்தனை பெண்களையும் சமாளிப்பதும்! எப்படித்தான் இவனால் முடிகிறதோ! ‘கண்ணன் எனக்கு மட்டுமே சொந்தம்; என்னிடம்தான் அவன் அதிகப் பிரியம் வைத்திருக்கிறான்’, என்று ஒவ்வொருத்தியும் எண்ணும்படியல்லவா நடந்து கொள்கிறான்!

    “கண்ணா! என்னைப் பாரேன்… என்னைப் பாராமல் ஏன் வேறெங்கோ பார்த்துக் கொண்டிருக்கிறாய்?”, ஒருத்தி அவன் முகவாயைப் பற்றித் தன் பக்கமாகத் திருப்புகிறாள்.

    “உன்னைப் பார்க்கப் பயந்துதான் அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டிருந்தேன்”, என்கிறான் அந்தக் கள்வன்.

    “என்னைப் பார்க்க பயமா?” செல்லக் கோபத்துடன் சிணுங்குகிறாள், அவள். “நான் என்ன அவ்வளவு பயங்கரமாகவா இருக்கிறேன்?”

    “அடடா. உன்னைப் பார்த்துக் குருடன் கூட அப்படிச் சொல்ல மாட்டானே. அப்படியிருக்க நான் சொல்வேனா என்ன? உன் கரிய பெரிய விழிகளைப் பார்த்தால், என் வசமிழந்து நான் அவற்றில் தொலைந்து விடுவேனோ என்று அஞ்சித்தான் அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டிருந்தேன்”, என்றானே பார்க்க வேண்டும்! அவள் முகத்தில் பெருமை பிடிபடவில்லை!

    “அப்படியானால்… நீ என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது?” என்று இன்னொருத்தி சிணுங்குகிறாள், இப்போது!

    “உன் மீது வைத்த கண்களை எடுக்க முடியாமல்தானே திணறிக் கொண்டிருந்தேன்…”, என்கிறான் அந்த திருடன்!

    இது மட்டுமா? கோபியர்கள் யமுனையில் நீராடப் போகையில் கண்ணனும் பின்னாலேயே போகிறான்… அவர்கள் ஆடைகளை மெதுவாக எடுத்து ஒளித்து வைத்து விடுகிறான்! அவனுடைய புல்லாங்குழல் இசையில் மயங்கி அனைவரும் இன்புற்று கிறங்கிக் கிடக்கும் போது, கோபிகளின் பின்னல்களை ஒன்றோடொன்றாக முடிந்து வைத்து விடுகிறான்! புத்தம் புது ஆடைகளை அவர்கள் உடுத்தி வந்தால், அவற்றில் மண்ணை வாரி இறைக்கிறான்!

    வீடுகளில் சிரமப்பட்டு எடுத்து வைத்த வெண்ணை எல்லாவற்றையும், கூட்டாளிகளோடு களவாடித் தின்று விடுகிறான்! வெண்ணை, தயிர், மோர், என்று இதெல்லாம் உண்டது போறாதென்று, மண்ணை வேறு உண்டு வைக்கிறான்!

    ஆனால், அவன் என்ன செய்தாலும், அவனை யாராலும் கோபித்துக் கொள்ளவே முடியவில்லை! மேலும் மேலும் அன்பைத்தான் பொழிகிறார்கள். மாயக் கண்ணன் என்பது சரியாகத்தானே இருக்கிறது!

    ஆயர்பாடியினரின், கோபியரின், அன்பையும், பக்தியையும், பிரேமையையும், பார்த்துக் கொண்டே இருந்த பிராட்டிக்கு ஒரு ஆசை வந்து விட்டது! தானும் கண்ணன் மேல் உருகி உருகி பிரேமை கொள்ள வேண்டும், அன்பு செய்ய வேண்டும், பக்தி செய்ய வேண்டும், காதலிக்க வேண்டும், என்று!

    அதோ… விஷ்ணுவை மட்டுமே தன் சித்தத்தில் நிறுத்திய விஷ்ணு சித்தர், தன் நந்தவனத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். களை எடுத்து, வாடிய இலைகளையும், உதிர்ந்து விட்ட பூக்களையும் அப்புறப்படுத்துகிறார். மலர்ச் செடிகளுக்கெல்லாம் நீர் பாய்ச்சுகிறார்…. துளசி, எம்பெருமானுக்கு மிகவும் உகப்பானது. அதைப் பார்க்கும் போதே அவருக்கு அவன் நினைவு வந்து விடும், உருகி விடுவார்…அந்தத் துளசிச் செடியின் அருகில்… அது என்ன?

    வித விதமான வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் அந்தப் பூந்தோட்டத்தில், சற்றே பெரியதொரு தாமரை மலர் போல, தன்னுடைய சின்னக் கைகளையும், தண்டைக் கால்களையும், உதைத்துக் கொண்டு, பொக்கை வாயைத் திறந்து’களுக்’கென்று சிரிக்கிறது, பேரழகான ஒரு பெண் குழந்தை!

    திருவாடிப் பூரத்து நாயகி, ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே, சரணம்!

     

    படத்திற்கு நன்றி: http://omsakthionline.com/?aanmigam=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8&publish=3079

    Share
  • பட்டமங்கலம்

     

    திருசிற்றம்பலம்

    பட்ட மங்கலம்

    ஓர் பாண்டிய நாட்டு திருவாசக தலம்

    pttmngklm2raja

    நூ.த.முத்துமுதலி மயிலை

    தி.ஆ.2044/விஜய ஆடி 12 ஞாயிறு

     

    தமிழகத்து சித்தாந்த சைவநெறியின் பெருமறையாம் பன்னிரு திருமுறை 18000+ பாடல்களில் போற்றப்பட்ட 600க்கும் மேலுள்ள சிவவழிபாட்டிடங்கள் 1350 ஆண்டுகள் வரை பழமை உடையன எனும் மாண் பினால் இறை வழிபாட்டில் ஊக்கமுடையோர் வாழ்நாளில் ஒர் முறை சிலவற்றிற்காவது நேரடி வழிபடுதல் மரபெனக் கொண்டமை காண்கின்றோம். இக்கருத்தினிலேயே தென் இந்தியாவில் வாழ்வோர் வடகிழக்கு எல்லை இமயமலையில் உள்ள கயிலாயம் முதல் காசி போன்ற தலங்கள், ஈழத்திலுள்ள கேதீச்சரம் திரிகோணமலை எனும் தலங்களுக்கும் வடஇந்தியர் தென்கோடி இராமேசுவரம் வரை தீர்த்தங்கள் ஆட தெற்கே வருவதும் கண்கூடு.

    தேவாரப் பாடல் பெற்றத்தலங்களாவன திருநாவுக்கரசர், திஞானசம்பந்தர் சுந்தரர் எனும் மூவர்முதலிகளால் இயற்றப் பெற்று தே-வாரம் எனும் இனிமைமிகு பண்ணிசை அமைக்கப்படவை முதல் ஏழு திருமுறைகளாக பகுக்கப்பட்டுள்ள 8274 பாடல்களில் குறைந்தது ஓர் பதிகமாவது பெற்றவை 276ஆகும். முழுபதிகம் ஏதும் கிடைக்கப் பெறாமல் இத்தேவாரப் பாடல்களின் ஊடே சிவனுறை கோயில் என குறிக்கப்படுவன, வைப்புத் தலங்கள் எனவும் அறியப்படுவன, 325 க்கும் மேலாகும் ஓர் வளர்தொடர் என ஆய்வாளர் வகுத்து வருவது

    தேவாரக் காலத்து அடுத்து 1150 ஆண்டுகளுக்கு முன் இயற்றப் பெற்று எட்டாம் திருமுறையாக வைக்கப் பட்டுள்ள மாணிக்கவாசகரின் திருவாசகம்/திருக்கோவையார், தேவாரம் குறித்த சிலவற்றுடன் காட்டாத சில தலஙகளை போற்றியது. உத்தரகோசமங்கை, ஓரியூர், கல்லாடம், கவைத்தலை, குவைப்பதி, கொடிமங்கை, கோகழி, சந்திரதீபம், சாந்தம்புத்தூர், பட்டமங்கலம், பஞ்சப்பள்ளி, பாண்டூர், புன்னைத்துறை, பூந்துறை, பூவலம், பெருந்துறை, மணற்குன்று, வேலம்புத்தூர் என்பன அவை.

    நாம் இங்கு காணவந்தது இதனில் ஒன்று பட்டமங்கலம். திருவாசகம் கீர்த்தித் திருஅகவல் குறிக்கும் ஓர் தலம், பாண்டி நாட்டு பாடல்பெற்றத் தலமாம் திருப்பத்தூருக்கு தெற்கில் காளையார்கோயில் என இந்நாள் வழங்கப்படும் மற்றோர் பாடல்பெற்றத் தலமாம் கானப்பேருக்கு இடையே கற்சாலையில்5 மற்றும் 20 கி மீ தூரத்தே நல்ல பேருந்து தடத்தினில் இந்நாள் தட்சணாமூர்த்தி கோயில் என வியாழன் எனும் கோள்சிறப்பு வழிபாட்டுக் கோயிலாக அப்பகுதி மக்களால் பெரிதும் போற்றப்படுகின்றது. தமிழக வைணவரின் பெருமறையாம் ஆழ்வார்கள் இயற்றிய 3892 பாசுரங்களிலுள்ள 108 இல்ஓர் திவ்யதேசமாம் திருக்கோட்டியூர் இதனுக்கு 5. கிமீ மேற்கே அமைந்துள்ளது.

     

    வடக்கு வாயில்

    pttmngklm1

     

    இந்நாள் புதுமையாக மிகமிக நேர்த்தியான கருங்கற்சிற்பங்கள் மிளிறும் நல்கற்றளியாக நாட்டுக்கோட்டை சமூகத்தினரால் கிழக்கு நோக்கிய 5 நிலை கோபுரத்துடன் காணப்பட்டாலும் முன் ஓர் பழமையான கோவில் ஆகும் எனலாம். இங்குள்ள ஏழேழ் விழுதுகள் கொண்ட தென்முகக் கடவுளாம் தட்சணாமூர்த்தி எங்கும் அமரும் ஓர்ஆலமரம் சிறப்பானதாக போற்றப்படுவதைக் காணலாம். அதான்று பெரியதான தெப்பக் குளமும் மேற்காக உள்ளது. மிகத்தூய்மையாக தனியாரர் மேற்பார்வையில் பேணப்படும் இக்கோயில் தமிழ்மக்கள் தம் வாழ்நாளில் தவறாமல் ஒர் நாள் சென்று வழிபட வேண்டிய ஒன்றே என்றால் மிகையாகாது.

    சிற்றூர் ஆனாலும் பல பேருந்து தடங்கள் திருப்பத்தூர், திருக்கோட்டியூர், கல்லல், ஆலங்குடி, என பல ஊர் களிலிருந்தும் செல்ல வாய்ப்புகள் மிகஎளிதாக உள்ளன. காரைக்குடி அருகுள்ள ரயிலடியாகும்.

     

    பட்ட மங்கையில் பாங்காய் இருந்(து) அங்கு

    அட்டமா சித்திகள் அருளிய அதுவும்

    திருவாசக கீர்த்தித் திருஅகவல் (வரி 62-63)

    தமிழகத்தே பட்டமங்கலம் என சில ஊர்ப் பெயர்கள் இருப்பதாக காணினும் இவற்றில் பாண்டிநாட்டில் அமைந்த மதுரைக்கு அருகு அமைந்த பட்டமங்கலமே பல திருவாசக வரிகள் காட்டும் திருவிளையாடல் தொடர்பினால் நன்கு பொருந்தும். மேலும் அருகுள்ள வாதவூரார் என வழங்கிய மாணிக்கவாசகரின் மதுரைப் பிணைப்பு நன்கே அறிந்த புராண வரலாறு. மணிவாசகரின் தொடர்புடைய மற்றொரு பெயர்பெற்ற தலம் ஆவுடையார்கோயில் என அறியப்படும் திருப்பெருந்துறையும் பாண்டிய நாட்டிலேயே அருகு அமைந்துள்ளது. உத்தரகோசமங்கை, ஓரியூர், கொடிமங்கை, என்பனவும் பாண்டிநாட்டில் அமைந்தவையே பல மதுரைத் திருவிளையாடல்கள் திருவாசக கீர்தித் திருவகவல் வரிகளிலேயே குறித்தல் காண்க.

     

    “பட்ட மங்கையில் பாங்காய் இருந்(து) அங்கு
    அட்ட மாசித்தி அருளிய அதுவும்” 8.2.62 – அட்டமா சித்திகள் செய்த படலம்

    “கேவேடர் ஆகிக் கெளிறது படுத்தும்” 8.2.17 – வலை வீசிய படலம்

    “பூவணம் அதனில் பொலிந்து இருந்து அருளித்
    தூவண மேனி காட்டிய தொன்மையும்” 8.2.51 – மெய்காட்டிட்ட படலம்

    “நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்” 8.2.36 – நரியைக் குதிரைஆக்கிய படலம்

    “பாண்டியன் தனக்குப் பரிமாவிற்று” 8.2.392 – நரியைக் குதிரைஆக்கிய படலம்

    “மதுரைப் பெருநல் மாநகர் இருந்து
    குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும்” 8.2.45 – நரியைக் குதிரை ஆக்கிய படலம்

    பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்” 8.2.47 – பிட்டுக்கு மண்சுமந்த படலம்

    “தண்ணீர்ப் பந்தல் சயம்பெற வைத்து 8.2.58 – தண்ணீர்பந்தல் வைத்த படலம்

    நல்நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும்”
    “ஓரியூரில் உகந்(து) இனி(து) அருளி
    பாரிரும் பாலகன் ஆகிய பரிசும்” 8.2.68 – விருத்த குமார பாலனாகிய படலம்

     

     

    ஏழேழ்ழேழ் விழுது ஆல்

    pttmngklm2alam

    தெப்பக்குளம்

    theppakkulam

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (22)

    பவள சங்கரி

    ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்!

    live-your-life

    அன்று ஞாயிற்றுக் கிழமை. ஊரின் மத்திய பூங்கா ஒன்றிற்குச் சென்றிருந்தோம். அங்கு ஒரு புறம் சிரிப்பொலி அதிர்ந்து கொண்டிருந்தது. தன்னிச்சையாக அங்கு கண்கள் சென்றபோது, ஒரு கூட்டமாக சில முதியவர்கள் அமர்ந்து ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துகொண்டு சத்தமாக சிரித்துக் கொண்டு, அந்த உலகில் அவர்களைத் தவிர வேறு எவருமே இல்லை என்பது போல கொண்டாடிக் கொண்டிருந்தனர். அவர்களின் குழந்தைத்தனமான அந்த நடவடிக்கை பார்ப்பதற்கே மகிழ்ச்சியாகவும், உற்சாகம் அளிப்பதாகவும் இருந்தது. அப்போது அருகில் என்னைப் போலவே பார்த்து இரசித்துக் கொண்டிருந்த இன்னொரு பெண் அவர்கள் அருகில் சென்று அதே உற்சாகத்துடன் தன்னை அறிமுகம் செய்துகொண்டு, அவர்களைப் பற்றியும் அறிந்து கொள்ளும் ஆவலில் பெயரையும், ஊரையும் கேட்டவர், அடுத்தது வயதையும் கேட்டுவிட்டார். அவ்வளவுதான். உடனே அனைவரின் முகத்திலும் உற்சாகம் குறைந்ததோடு, லேசான கலக்கமும் தெரிந்தது. அதில் ஒருவர், கோபமாக ‘என்பது வயசு ஆவுது.. இப்ப என்ன அதுக்கு?’ என்றார். மிக யதார்த்தமாக, நட்புடன் கேட்ட கேள்வியாக இருப்பினும் அது அவர்களுடைய மகிழ்ச்சியை மொத்தமாய் சீர்குலைத்துவிட்டது. அனைவரும் ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்துவிட்டனர். சற்று நேரம் முன்பு அத்துனை கலகலப்பாக உரையாடிக் கொண்டிருந்தவர்கள் முகத்தில் இப்போது ஈயாடவில்லை. அவர்கள் சுய நினைவிற்கு வந்து, தங்களின் வயதைப் பற்றி சிந்திக்க வேண்டிய தேவை வந்தபோது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். திடீரென்று அவர்களின் மனநிலையில் அப்படி ஒரு மாற்றம் ஆச்சரியம் ஊட்டக்கூடியது. சுயபச்சாதாபத்தில், வேதனையோடு எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த நடையில் முன்பிருந்த உறுதியும் குறைந்திருந்தது. உலகில் பிறந்தவர் அனைவரும் இது போன்ற மாற்றங்களுக்கு ஒரு நாள் தயாராகத்தான் இருக்க வேண்டிவரும். ஒரு சிலர் அந்த முதுமையையே தங்களுக்குக் கிடைத்த மரியாதைக்குரிய காலமாகக் கருதி நிம்மதி கொள்பவரும் இருக்கின்றனர்.

    imagesஉண்மையிலேயே இது மிகவும் வேடிக்கையான விசயம்தான். நம்மில் பலர் நம் இளமைக் காலங்களில் வளர வேண்டி பந்தயத்தில் வேகமாக ஓடிக்கொண்டிருந்துவிட்டு, முதுமைக் காலத்தில் இழந்த இளமையைத் தேடி வேதனைப்படுகிறோம். எந்த வயதாக இருந்தாலும் நாம் திருப்தியற்ற ஒரு வாழ்க்கையை வாழ முற்படுவதன் வினைதான் இது. எத்தனை கோடி செலவு செய்தாலும் இழந்த நம்முடைய இளமையையோ அல்லது வயது ஏறிக்கொண்டே போவதையோ நம்மால் ஒருக்காலும் தடை செய்ய இயலாது. சிலர் இதையறிந்தும் அதற்காகத் தேவையில்லாமல் பல வழிகளை முயற்சி செய்துவிட்டு இறுதியில் ஏமாற்றத்தில் மேலும் வேதனையை அதிகப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே நிதர்சனம். நம்முடைய ஆன்மாவின் தற்காலிக இருப்பிடமான நம் உடலை, அக்கறையுடன், கவனத்துடன் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது நம் கடமை காரணம் அது இறைவனால் நமக்கு அளிக்கப்பட்ட பரிசு அல்லவா! ஆம், நாம் ஒரு உடலுக்குள் நுழைந்து நம்முடைய மனித வாழ்க்கையை வாழ்கிறோம். அது முடியும் தருணம் வந்தவுடன் அந்த உடலை விட்டு வெளியே வந்துவிடுகிறோம். இந்த இடத்தில் ‘நான்’ என்பது அந்த உடல் அல்ல. எதை நம்மால் எக்காரணம் கொண்டும் மாற்றவோ அல்லது தவிர்க்கவோ இயலாதோ அதை அப்படியே முழுமையாக ஏற்றுக்கொள்வதே நிம்மதிக்கான சிறந்த வழி அல்லவா? அப்படி ஏற்றுக்கொள்ளும்போதுதான் நம் உடலுக்கேற்ற, வயதுக்கேற்ற உணவு முறை, உடற்பயிற்சி, ஓய்வு என அனைத்தையும் சரியாகக் கடைபிடித்து ஆரோக்கியத்துடன் உற்சாகமாக வளைய வர முடியும். நம் எண்ணங்களின் சக்தியே நம் வயதை வெளிப்படுத்துகிறது. எந்த நொடியில் நமக்கு வயதாகிக் கொண்டிருக்கிறதே என்று வேதனைப்பட ஆரம்பிக்கிறோமோ அந்த நொடியிலிருந்துதான் முதுமை நம்மை நெருங்க ஆரம்பிக்கிறது. தவிர்க்க முடியாத அந்த எண்ணங்களுக்கு அதிக முக்கியத்துவம் தராமல் இருப்பதே அதனிலிருந்து விடுபட சிறந்த வழி. சோம்பலாக முடங்கிக் கிடக்கும் ஒரு இளைஞனுக்கும், தன்னுடைய முதுமையிலும் ஏதேனும் சாதிக்கத் துடிக்கும் அந்த உற்சாகத்திற்கும் உள்ள வித்தியாசம் மிக அதிகம். இந்த இடத்தில் அந்த இளைஞனைக்காட்டிலும், அந்த முதியவரே அனைவரின் கவனத்தையும் ஈர்க்கக்கூடியவராக இருப்பார் என்பதே சத்தியம்!  அந்த வகையில் அவரவர் எண்ணங்களே தங்களின் வயதை நிர்ணயிக்கிறது என்பதே நிதர்சனம்.

    கழுகு போல வாழ நினைத்தால் வாழலாம்!

    http://www.slideshare.net/ardraja/rebirth-of-the-eagle-presentation

    பறவைகளின் அரசன் என்று அழைக்கப்படும் கழுகின் மறு பிறவி பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். 70 ஆண்டுகள்வரை வாழக்கூடியது கழுகு. ஆனால் தன்னுடைய 40வது வயதில் அதற்கு முதுமைக் கோலம் வந்துவிடுகிறது. அதாவது தன் உணவைக் கொத்தித் தின்னும் அலகின் கூர்மையையும், கால் நகங்களின் மூலம் தன் உணவைக் கவ்வி எடுக்கும் சக்தியையும் மற்றும் கனத்துப்போய் தன் மார்போடு ஒட்டிக்கொள்ளும் சிறகுகளால் பறக்கும் வல்லமையையும் இழக்கிறது. இந்த நேரத்தில் அந்தக் கழுகு வாழ்வா அல்லது சாவா என்ற ஒரு கட்டாய முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது. இப்படியே விட்டுவிட்டால் உணவின்றி இறந்து போக வேண்டியதுதான். ஆனால் கழுகுகள் தாம் எடுக்கும் துணிச்சலான முடிவினால் மறு பிறவி எடுத்து மீண்டும் 30 ஆண்டுகள் வாழுகின்றன. 40 வயதைக் கடந்தவுடன் அது மலை உச்சியில் உள்ள தன் கூட்டிற்குச் செல்கிறது. அன்றிலிருந்து 5 மாதங்கள் போராட்டமான வாழ்க்கைதான் அதற்கு. ஆம், முதலில் ஒரு பாறையின்மீது அமர்ந்து தன்னால் ஆனமட்டும் அந்த அலகு தேய்ந்து அறுந்து உதிரும்வரை அந்தப் பாறையில் உராயும். பிறகு அந்த அலகு புதிதாய் முளைக்கக் காத்திருக்கும். புதிய கூரிய அலகு முளைத்தவுடன், வலுவிழந்த தன் கால் நகங்களை பிய்த்து எரிந்துவிடும். புதிய நகங்கள் முளைக்கும் வரை காத்திருந்து, முளைத்தவுடன், பின் கனத்துப்போன தன் சிறகுகளை உதிர்த்துவிடும். அடுத்து புத்தம் புதிய சிறகுகளும் முளைக்க அன்றிலிருந்து புது பிறவி எடுக்கும் அந்த கழுகு மேலும் 30 ஆண்டுகள் சுகமாக இளமையுடன் வாழும்!

    முதுமையை விரட்ட நமக்கும் இப்படி சில மாற்றங்கள் தேவைப்படுகிறது. உயிர் பிழைத்து வாழ்வதற்கு ஒரு மாற்றுத்திட்டம் தேவைப்படுகிறது. சில நேரங்களில் கழுகின் நைந்துபோன சிறகுகளைப் போன்ற நம்முடைய பழைய நினைவுகள், பழக்க வழக்கங்கள் மற்றும் பழைய மரபுகள் என அனைத்தையும் உதிர்த்துவிடத்தான் வேண்டும். பழஞ்சுமைகளிலிருந்து விடுபட்டால்தான் , நிகழ்காலத்தின் வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியும்!

    தொடருவோம்

    படங்களுக்கு நன்றி :

    http://www.google.co.in/imgres?imgurl=http://rishikajain.com/wp-content/uploads/2012/09/live-your-life.jpg&imgrefurl=http://rishikajain.com/2012/09/10/live-your-life-and-forget-your-age/&h=338&w=510&sz=22&tbnid=Uvb-MclZ5m6C8M:&tbnh=83&tbnw=125&zoom=1&usg=__-KzbLUfXpOoogPFogBVgnP6bp-k=&docid=E9U2febtOrX48M&sa=X&ei=rN0DUtucIMn4rQfGl4C4BQ&ved=0CDUQ9QEwAQ&dur=114

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . (69)

     

    -சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்களுடன் அடுத்த மடலுடன் உங்களோடு இணைகிறேன்.

    அரசியல் எனும் அஸ்திரம் பொதுநலத்திற்காகப் பிரயோகிக்கப்பட வேண்டும் என்பதே மனிதாபிமானத்தின் அடிப்படையாகும். ஆனால் அதே அரசியல் , அரசியல் கட்சிகளின் செல்வாக்கைப் பலப்படுத்தும் ஆயுதமாகப் பாவிக்கப்படும் போது ஏற்படும் தாக்கங்கள் மிகவும் சிந்திக்கப்பட வேண்டியவை.

    இங்கிலாந்தைப் பொறுத்தவரை யார் விரும்பினாலோ , விரும்பாமல் விட்டாலோ இங்கு பல்கலாசார அடிப்படையே சமூகங்களில் நிலவுகிறது.

    அதிகமான எண்ணிக்கை வெளிநாட்டவர்கள் இங்கிலாந்துக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள் எனும் குற்றச்சாட்டு பல்வேறு திசைகளில் இருந்து, பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து கிளம்பினாலும் இந்நாடு பல கலாசாரங்களைக் கொண்ட மக்கள் இணைந்து வாழும் நாடு என்பது அனைவராலும் மறுப்பின்றி ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதொன்றாகும்.

    இங்கிலாந்தின் கூட்டரசாங்கம் இந்நாட்டின் பொருளாதார நடவடிக்கையைச் சீராக்க எடுக்கும் நடவடிக்கைகளினால் மக்கள் மத்தியில் பலமாக செல்வாக்கை இழந்து கொண்டு வந்தது.

    பொருளாதாரக் கொள்கையின் வெற்றியின் அடிப்படையில் தமது அரசியல் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்ள முடியாது தவித்தன இக்கூட்டரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கன்சர்ட்வேடிவ் கட்சியும், லிபரல் டெமகிரட்ஸ் கட்சியும்.

    இந்நாட்டின் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்கு ஒரேவழியாக வெளிநாட்டுக்காரரின் குடியேற்றம் அதாவது immigration ஒரு பெரிய பிரச்சனையாக்கப்பட்டது.

    இதற்கு தகுந்த காரணங்கள் இல்லாமல் இல்லை. ஜரோப்பிய யூனியன் நாடுகளின் எண்ணிக்கை விஸ்தரிக்கப்பட்டு முன்னைய கம்யூனிசக் கூட்டமைப்பில் இருந்த கிழக்கு ஜரோப்பிய நாடுகளில் பல இவ்வொன்றியத்தில் இணைந்ததால் அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் இலகுவாக இங்கிலாந்துக்குள் நுழைந்து இந்நாட்டின் சமூக நலனின் அடைப்படையில் இவ்வரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவிகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டது.

    இதனால் இக்கிழக்கு ஜரோப்பிய நாடுகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மக்கள் இங்கிலாந்துக்குள் நுழைந்தார்கள். இவர்கள் தமது வேலைகளைப் பறித்துக் கொள்வதான உணர்ச்சி இங்கிலாந்து நாட்டின் மக்கள் மனதில் எண்ணம் மேலோங்கியது இதனால் இவ்வெளிநாட்டுக் காரரின் வருகையையும், ஜரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்தின் அங்கத்துவமும் சர்ச்சைக்குரியதாக்கப்பட்டது.

    இக்கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல் கட்சிகள் மக்கள் மத்தியில் செல்வாக்கடையத் தொடங்கியது.

    இக்கட்சிகளின் செல்வாக்கின் முன்னேற்றத்தைக் கண்ணுற்ற கூட்டரசாங்கத்தின் முக்கிய கட்ச்சியான கன்சர்வேடிவ் கட்சியில் தாம் எங்கே அடுத்த தேர்தலில் தோற்று விடுவோமோ எனும் பயம் ஏற்பட்டது.

    விளைவு,

    மக்கள் மத்தியில் தாம் வெளிநாட்டுமக்களின் குடியேற்றக் கொள்கையில் மிகவும் கடினமானவர்கள் எனும் தோற்றத்தைக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டார்கள்.

    அதன் நிமித்தம் சமீபத்தில் அவர்கள் எடுத்த ஓர் நடவடிக்கை மக்கள் மத்தியில் மிகவும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

    அது என்ன என்கிறீர்களா?

    எந்தெந்த நகர்களில் வெளிநாட்டு மக்களின் குடியேற்றம் அதிகளவில் காணப்படுகிறதோ அந்த இடத்தில் ஓர் வாகனத்தில் கட்ட வலம் வரச் செய்யப்பட்ட ஒரு விளம்பரப் பலகையே சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

    ஆமாம் அவ்விளம்பரத்தில், “நீங்கள் இந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறி இருக்கிறீர்களா? நீங்களாகவே எம்மைத் தொடர்பு கொண்டால் நாம் உங்கள் நாடுகளுக்கு திரும்பிச் செல்ல ஆவன செய்வோம், இல்லையெனில் கைது செய்யப்படுவீர்கள். ஏற்கனவே உங்கள் இடத்தில் பலர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சட்டவிரோதமாக வசிப்பவர்கள் இந்த நம்பருக்கு குறுஞ்செய்தி அனுப்புங்கள்” எனும் விளம்பரப் பலகையத் தாங்கிய வாகனம் வலம் வருவதே சர்ச்சைக்குரியதாக்கப்பட்டுள்ளது.

    இதற்கான எதிர்ப்பலைகளின் விரிவாக்கத்தை அடுத்த வார மடலில் பகிர்ந்து கொள்கிறேன்.

    அடுத்த மடலில் சந்திக்கும் வரை
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • ஸ்னோடென்

    பொய்மையைச் சுட்டெரிக்க புறப்பட்ட அக்கினி குஞ்சு

    எஸ் வி வேணுகோபாலன்

    உலகின் ஆகப் பெரும் சுதந்திர நாடு என்று தன்னை அறிவித்துக் கொள்கிற அமெரிக்காவில் தான் “உஷ்…சத்தம் போடக் கூடாது” என்ற அதிகார மிரட்டல் அமலில் இருக்கிறது. பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை எல்லா உரிமைகளும் குடிமக்களுக்கு உண்டு. ஆனால் ‘நீங்கள் பேசுவது, எழுதுவது, கருதுவது எல்லாவற்றையும் வேவு பார்க்கும் உரிமை எங்களுடையது’ என்கிறது அமெரிக்க ஆட்சி அதிகாரம். சீட்டு ஆட்டத்தில் அடுத்தவர் கண்ணில் படாமல் தங்களது சீட்டுக்களை அத்தனை சாமர்த்தியமாய் மறைத்துக் கொண்டு ஆடுகிற பலே கில்லாடி ஆட்டக்காரர்கள் உண்டு. அப்போது அங்கே இருக்கவே செய்யாத வேறு ஒரு நபர் வேறு எங்கோயிருந்து அவரை அலைபேசியில் அழைத்து, இந்தச் சீட்டை வச்சுக்காதே, அத எடுத்து ஆடு ” என்று சொன்னால் அவருக்கு எத்தனை அதிர்ச்சியாக இருக்கும்?

    Snowden 1இப்படி உலகத்தைத் தனது உள்ளங்கையில் மை தடவிப் பார்த்துவிடுகிற வஞ்சக மந்திரவாதியாக பெரிய உரு எடுத்து நிற்கிறது ஏகாதிபத்தியம். மதுரை மீனாட்சி கோவிலுக்குள் நுழையும்போதே, நீங்கள் கண்காணிக்கப் படுகிறீர்கள் என்று வெளியே ஒரு பலகையில் எழுதி வைத்திருப்பதைப் பார்க்க முடியும். அப்படி எதுவும் எழுதி வைக்காமல் உலகம் முழுக்கத் தனது கண்காணிப்பில் கொண்டு வந்து வைத்திருக்கிறது அமெரிக்கா. வெறும் உளவு இல்லை அது, தனி நபர் சுதந்திரத்தின் மீதான களவு என்பதைத் தான் எட்வர்ட் ஸ்னோடென் என்ற 29 வயது இளைஞர் அம்பலப் படுத்தினார். அவர் சொன்னதை விட்டுவிட்டு அவரைச் சிறைக்குள் தள்ளத் துடித்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. அவர் மீது என்ன குற்றம் சாட்டப் பட்டிருக்கிறது தெரியுமா, ஒற்று வேலை பார்த்ததாக !

    எட்வர்ட் ஸ்னோடென் அமெரிக்காவின் உளவுத் துறை நிறுவனமான தேசிய பாதுகாப்பு ஏஜென்சியில் (NSA), பூஸ் அலென் ஹேமில்டன் என்கிற தனியார் குழுமம் ஒன்றினால் காண்டிராக்டு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தவர். ஆனால் உள்ளே என்ன நடக்கிறது என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்த்து அதிர்ந்து போய்விட்டார். இப்படி சொந்த மக்களையே உளவு பார்க்கும் தேசத்திலா நாம் வாழ்கிறோம் என்று வெறுத்துப் போனார். தொலைபேசி உரையாடல்கள், மின்னஞ்சல் வழி நடக்கும் விவாதங்கள், கடித போக்குவரத்துக்கள் என ஒன்று விடாமல் மூன்றாவது நபர் ஒருவர் தங்களுடனே பயணம் செய்து கண்காணிக்கிறார், படிக்கிறார், கேட்கிறார், பதிவு செய்து கொண்டிருக்கிறார் என்பதை அறியாத மக்களுக்கு உண்மைகளை உடைத்துச் சொல்லிவிடுவது என்று முடிவெடுத்தார்.

    தக்க காரணம் சொல்லப்பட்டு வெளிப்படையான முறையில் எழுத்து பூர்வமான வகையில் யாரை எந்த இடத்தில் சோதனை செய்யப் போகிறோம் என்ற தகவல்nsa hq தெரிவிக்கப்படாமல் இருக்கும் வரை, குடிமக்களுக்குத் தமது உடல்,வீடு, தஸ்தாவேஜுகள் எல்லாவற்றையும் குறித்த பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது என நான்காவது திருத்தம் கொண்டுவரப்பட்ட அமெரிக்க அரசியல் சாசன சட்டம் 1791 கூறுகிறது. ஸ்னோடென் ஒரு தனி நபர். மனசாட்சி உள்ள ஒரு தனி நபர். தமது நாட்டு அரசியல் சாசன சட்டம் சொல்வதை – ஆட்சியாளர்கள் சத்திய பிரமாணம் எடுத்தவற்றை நம்பிக் கொண்டிருந்த, ஆனால் நடைமுறையில் அவை அத்துமீறப்படுவதை நேரடியாகக் கண்டு நிம்மதி குலைந்துபோன ஒரு தனி நபர். தனது மனம் தனக்கு இட்ட ஓர் ஆணையைத்தான் அவர் நிறைவேற்றினார். தமக்கு என்னவும் நேரலாம்,என்ன நேர்ந்தாலும் சரி என்ற தெளிவோடு தான் அவர் அதைச் செய்தார்.

    வெராக்ஸ் (உண்மை விளம்பி) என்ற புனைபெயரை வைத்துக் கொண்டு, ஸ்னோடென் இரண்டு முக்கிய பத்திரிகையாளர்களுக்கு சங்கேத மொழியில் மின்னஞ்சல்கள் அனுப்பி வைத்தார். பார்டன் ஜெல்மன் (வாஷிங்டன் போஸ்ட் ) மற்றும் க்ளென் க்ரீன்வால்ட் (கார்டியன்) இருவருக்கும், அவர் இணைத்து அனுப்பியவை 2038ம் ஆண்டு வரை வெளிப்படையாக்கப் படக் கூடாதவை என்று வகைப்படுத்தப்பட்ட ஆவணங்கள். இந்த ஜூன் 6ம் தேதியன்று மேற்படி நாளிதழ்கள் இந்த ஆவணங்களில் உள்ளவை குறித்து அம்பலத்திற்குக் கொண்டு வந்தார்கள். மூன்று நாட்கள் கழித்து தமது உண்மை பெயரையும் வெளியிட்டு விடுமாறு ஸ்னோடென் கேட்டுக் கொண்டதை வைத்து அந்த இரு நாளிதழ்களிலும் அவரது பெயரும் மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. நான் செய்வது ஒவ்வொன்றும் நான் அறியாது வேவு பார்க்கப்படும் ஒரு தேசத்தில் வாழவே நான் விரும்பவில்லை என்று பேசிய சமயம், ஸ்னோடென் ஹாங்காங் சென்று அடைந்திருந்தார்.

    ஜார்ஜ் புஷ் காலத்தில் பல மடங்கு கூடிப் போயிருந்த ரகசிய .உளவு மற்றும் கண்காணிப்பு வேலைகளால் கொதித்துப் போயிருந்த அமெரிக்க மக்களிடம், தாம் வித்தியாசமாக நடந்து கொள்வோம் என்று தேர்தல் பிரச்சார நேரத்தில் சொன்னவர் பாரக் ஒபாமா. அவரைப் பற்றிய மதிப்பீட்டின் உயரத்தை வெட்டி வீழ்த்திக் கொண்டிருக்கிறது ஸ்னோடென் கட்டவிழ்த்துவிட்ட சங்கதிகள். எனவே ஒபாமா உடனடியாகக் கருத்து சொல்ல வேண்டி வந்தது. அவர் என்ன சொன்னார் என்பது முக்கியமானது.ஸ்னோடென் வெளியிட்ட விஷயங்கள் உண்மையா, பொய்யா என்று தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் குறித்துக் கூட ஒபாமா கண்டுகொள்ளவே இல்லை. நமது அனைத்து நடவடிக்கைகளின் ரகசியங்கள் எதுவும் இப்படி கசிவதை அனுமதிக்க முடியாது. ஸ்னோடென் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தப் படவேண்டும் என்றார். இப்போது ஸ்னோடென் சொந்த தேசத்திற்கு எதிராகக் குற்றம் அல்ல, துரோகம் இழைத்தவராக அரசினால் அடையாளப்படுத்தப் பட்டுவிட்டார். அவர்களுக்கு ஏன்இத்தனை காட்டமாகக் கோபம் வருகிறது என்றால் ஸ்னோடென் அம்பலபடுத்தி இருக்கும் உளவு வேலைகள் அப்படி!

    வெரிசான் என்னும் அமெரிக்காவின் இணையதள மற்றும் தொலை தொடர்பு நிறுவனத்தை அமெரிக்க அரசு அதிகார மிரட்டல் செய்து, அவர்களது சேவையைப் பயன்படுத்தி வருகிற எல்லா தொலைபேசி அழைப்புகளின் விவரங்களையும் தங்களுக்கு தெரிவிக்க உத்தரவு போட்டிருக்கிறது. உலகளாவிய அளவில் இணையதள சேவை வழங்கிக் கொண்டிருக்கும் ஆப்பிள், கூகிள், முகநூல், மைக்ரோசாப்ட், யாகூ, யூ டியூப் உள்ளிட்ட அமெரிக்காவின் ஒன்பது முக்கிய நிறுவனங்களிடமிருந்து தொடர்ச்சியான முறையில் விவரங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறது அமெரிக்க அரசு. தங்களது வசமுள்ள விவரங்களைத் தோண்டி எடுத்துக் கொள்ள தாங்கள் யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை என்று இந்த நிறுவனங்கள் சொல்லிக் கொள்கின்றன. ஆனால் அரசின் வசம் எல்லா விவரங்களும் போய்க் கொண்டிருக்கின்றன.

    உலக நாட்டாமையாகத் தன்னைக் கருதிக் கொள்ளும் அமெரிக்க ஏகாதிபத்தியம் இப்படி சொந்த நாட்டு மக்களின் நிழலையே திருடிக் கொண்டிருப்பதை ஸ்னோடென் அம்பலப் படுத்தியது பேரதிர்ச்சி செய்தியாக மூண்டது. ஆனாலும், ‘இதெல்லாம் தவிர்க்க முடியாதது’ என்ற ஒரு கருத்தாக்கத்தையும் அந்த சமூக அமைப்பு விதித்திருப்பதை, கருத்துக் கணிப்பின் ஏற்ற இறக்கங்களிலிருந்து காண முடிகிறது. செப்டம்பர் 11, 2001 இரட்டை கோபுர தகர்ப்பு பயங்கர நிகழ்வை எந்த அமெரிக்கக் குடிமகனும், குடிமகளும் மறக்க முடியாது. ஏற்கெனவே உலக அளவில் தங்களுக்கு சவால், எதிர்ப்பு, பகைமை இருப்பதாக சித்தரித்துக் கொண்டே தான் இதர உலக நாடுகளுக்கு சவாலாக, அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கும் ஏகாதிபத்தியம் மக்களது பாதுகாப்பு உணர்வைத் தூண்டியே அவர்களை பாதுகாப்பற்றவர்களாக நடத்துகிறது.

    என் எஸ் ஏ தனது நாட்டு மக்களை மட்டும் உளவு பார்க்கவில்லை. பிரிட்டன் உதவியோடு உலக அளவிலான முறையில் இந்த வேலையைத் திறம்பட செய்து கொண்டிருக்கிறது. 2 பில்லியன் டாலர் – இப்போதைய மதிப்பில், 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உடா என்ற இடத்தில் பெரிய பாதுகாப்புப் பெட்டகம் ஒன்றை நிறுவிக் கொண்டிருக்கிறது. அதில் எந்த அளவுக்கு விவரங்கள் சேகரித்து வைக்க முடியும், தெரியுமா? இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் தலா பத்து லட்சம் டிவிடி வைத்திருந்தால் அவற்றின் மொத்த சேமிப்பு அளவு எவ்வளவோ அந்த அளவுக்கு!

    ஸ்னோடென் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கும் செய்திகளால் பிரிட்டனிலும் மக்கள் அரசைக் கடுமையாகக் குறை கூறத் தொடங்கி உள்ளனர். ஆனால் பிரதமர் கேமரூன் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவே இல்லை. “சட்டத்தை மதிக்கும் யாரும் இத்தகு உளவு நடவடிக்கைகளைக் கண்டு அஞ்சுவதற்கு எதுவுமில்லை, அவரவர் பாதுகாப்புக்காக சிறிது விலை கொடுத்துத் தான் ஆகவேண்டும்” என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டுவிட்டது.

    உலக அளவில் நடக்கும் கூட்டங்களில் எந்தெந்த நாட்டிலிருந்து யார் யார் வந்து என்னென்ன சொல்லப் போகின்றனர் என்று முன் கூட்டியே திருட்டுத் தனமாக ஒட்டுக் கேட்டுப் பதிவு செய்து கொள்ளும் வேலையையும் என் எஸ் ஏ உரிய ஆட்களை வைத்து செய்து கொண்டுதான் இருக்கிறது. ஜி 20 கூட்டம் நடக்கையில்,பொருளாதார நிபந்தனைகள், நிர்ப்பந்தங்கள் போன்ற நுட்பமான விஷயங்கள் குறித்து முன்கூட்டியே விவரங்களை கள்ளத் தனமாக அறிந்து வைத்திருந்து பேச்சு வார்த்தைகளின் போது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளின் சார்பாக பங்கேற்கும் பிரதிநிதிகள் உரிய விதத்தில் அவற்றைப் பயன்படுத்தி தங்களுக்கு சாதகமான முடிவுகள் எடுக்கும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துவது உள்பட இப்போது அம்பலத்திற்கு வந்திருக்கிறது. 2009ல் லண்டனில் நடந்த அத்தகைய உச்சி மாநாடு ஒன்றில் அமெரிக்க உளவு நிறுவனத்துடன் பிரிட்டன் நிறுவனமான ஜி சி ஹெச் கியூ (UNITED KINGDOM’S GOVERNMENT COMMUNICATIONS HEAD QUARTERS) இணைந்து வேவு பார்த்திருக்கின்றனர். மேற்படி மாநாட்டில் நமது பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்து கொண்டிருந்தார் என்பதையும் சேர்த்து முந்தைய வரியை வாசிக்கவும்.

    இப்போது ஆபத்தின் இன்னொரு பரிமாணத்தை கவனிப்போம். என் எஸ் ஏ வேவு பார்க்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. நம்மைக் குறித்த விவரங்களின் அளவு, 6.3 பில்லியன் விவரங்கள் அதாவது 6300 கோடி ! எப்படி இவ்வளவு விவரங்கள் போகின்றன என்பதைச் சொல்ல சித்தர் வித்தை எதுவும் தேவை இல்லை. கூகிள், யாஹூ, ஹாட் மெயில் ஆகிய மூன்று முக்கிய நிறுவனங்கள் வழியாகத் தான் மின்னஞ்சல் பரிமாற்றம் நடத்திக் கொண்டிருக்கிறோம். அவ்வளவு ஏன், இந்தக் கட்டுரையை ஜி மெயிலில் தான் தீக்கதிருக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறேன். அதைப் பெரும்தீக்கதிர் ஆசிரியர் மின்னஞ்சல் முகவரியும் ஜி மெயிலில் தான் இருக்கிறது. தனி மனிதர்களை விடுங்கள். அரசு நிறுவனங்கள், அமைச்சகங்கள், பிரதம மந்திரி அந்தரங்க செயலாளர் உள்பட அனைத்து வகையிலும் செய்திகள், கொள்கை முடிவுகள், விவாதங்கள், கருத்துக்கள், முரண்பாடுகள் எல்லாம் அமெரிக்காவுக்கு முதலில் போய்விட்டுத் தான் மனிதர்களைப் போய்ச் சேரும் அளவு என் எஸ் ஏ தகவமைப்பு செய்துகொண்டிருக்கிறது.

    ஆதார் அட்டை வாங்கியாயிற்றா என்று பய பக்தியோடு நடுத்தர வர்க்கம் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருக்கிறது. தேடித் தேடித் போய் நின்று அப்பாடா கடமையை முடித்தோம் என்று பெரிய பெருமிதம் பொங்க வாங்கிக் கொண்டு வந்து நிற்கிறோம். ஆதார் விவரங்களை தக்க வைத்துக் கொள்ளவும்,விவரங்களை உரிய இடத்தில் உரிய வகையில் பாதுகாத்துப் பொருத்தி வைக்கவும் மூன்று அமெரிக்க நிறுவனங்களிடம் தான் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அந்த நிறுவனங்கள் அமெரிக்க அரசு கேட்கும் எந்த விவரத்தையும் மறு பேச்சின்றி எடுத்துக் கொடுத்தாக வேண்டிய இடத்தில் இருப்பவை என்பதை மறந்துவிடக் கூடாது.

    Julian Asangeஇறைவனது சக்தியைப் பாடும் பக்தர்கள் “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்று பாடுவார்கள். அமெரிக்கக் கொள்கையை எதிர்ப்பதானாலும் அவர்கள் அருளால், அவர்களுக்கு முதல் தகவல் தந்துவிட்டுத் தான் நாம் எதிர்க்கவே முடியும். அவ்வளவு ஏன், இந்தக் கட்டுரையும் அவர்களது பார்வைக்கு முதலில் போயிருக்கும். மிக மிக மோசடியான, மோசமான, நய வஞ்சகமும், சூழ்ச்சியும் இணைந்த வலைப்பின்னலாகத் தனது உலக அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறது ஏகாதிபத்தியம். இதன் சில முனைகளை ஏற்கெனவே வெளிக் கொண்டுவந்த விக்கி லீக்ஸ் நிறுவனத்தின் ஜூலியன் அசாஞ்சே இன்னமும் பிரிட்டன் மண்ணில்தான் இருக்கிறார். தமக்கு பாதுகாப்பு கொடுத்திருக்கும் ஈகுவடார் நாட்டு தூதரகத்தின் உள்ளே காத்திருக்கும் அவரை ஈகுவடார் நாட்டுக்கு செல்ல இன்னமும் பிரிட்டன் அனுமதிக்கவில்லை. பிராட்லி மேனிங் என்ற இராணுவ வீரர், இராக் போரில் அமெரிக்கா செய்த அத்து மீறல் போர்க் குற்றங்களை புகைப்படம் எடுத்ததை விக்கி லீக்ஸ் நிறுவனத்திற்குத் தந்துதவிய குற்றத்திற்காக 2010 முதல் தனிமைச் சிறையில் வைக்கப் பட்டிருக்கிறார். அண்மையில் இராணுவ நீதிமன்றம் அவர் மீது சுமத்தப் பட்டிருக்கும் குற்றச் சாட்டுக்களில் இரண்டைத் தவிர அனைத்தும் நிரூபிக்கப் பட்டிருப்பதாகவும், மேனிங் குற்றவாளி தான் என்றும் சொல்லிவிட்டது. அவர்கள் கணக்குப் படி, இந்தக் குற்றங்களுக்காக மேனிங்குக்கு என்ன தண்டனை வழங்கப் படலாம் என்று யோசிக்கும்போது, கிட்டத் தட்ட 130 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப் பட வேண்டியிருக்கும்.

    ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற புகழ் பெற்ற நூலை எழுதிய அமெரிக்கர் ஜான் பெர்கின்ஸ், தனது வாழ்விற்குத் துணிந்து தான் உலக வங்கியின் சதி நடவடிக்கைகள் குறித்து புத்தகத்தை வெளியிட்டார். ஆரன் ஸ்வார்ட்ஸ் என்ற கணினி நிபுணரான 26 வயது இளைஞர் (ஆர் எஸ் எஸ் பீட் என்னும் வலைத்தளங்களிளிருந்து உடனுக்குடன் விவரங்கள் கிடைக்கப்பெற உதவும் மென்பொருளை உருவாக்கியவர்), அமெரிக்காவின் மாசாசூட்ஸ் பல்கலைக் கழகத்தின் ஜோ ஸ்டார் காப்பகத்தில் விலைக்காக சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கணக்கற்ற அறிவியல் ஆய்வுகள், விவரங்கள் அடங்கிய உலகின் வாசலை தமது மென்பொருள் ஒன்றின் உதவியால் உடைத்துத் திறந்து ஆர்வமுள்ள யாரும் திறந்து படிக்கட்டும், பயன்படுத்தட்டும் என்று வழிகாட்டியதற்காக விசாரணைக்கு உட்படுத்தப பட்டார். சித்திரவதை தாளாமல் இந்த ஆண்டு ஜனவரி 11 அன்று தன்னை மாய்த்துக் கொண்டார்.

    சொந்த நாட்டு மக்களையும் உலகையும் வேவு பார்க்கும் அரசை அம்பலப் படுத்திய ஸ்னோடென் இப்போது ஹாங்காங்கிலிருந்து மாஸ்கோ சென்று அங்கே காத்திருக்கிறார். அவர் ரஷ்யாவில் இருப்பதில் தங்களுக்கு பெரிய ஆட்சேபனை இல்லை, ஆனால் அவர் இந்த அம்பலப் படுத்தும் வேலைகளை விட்டுவிட வேண்டும் என்றும்,என்றும் ரஷ்ய அதிபர் புடின் சொல்லியிருக்கிறார். ஸ்னோடெனுக்கு அடைக்கலம் தர ஈகுவடார் தயார் என்று அந்த நாட்டுத் தலைவர் ரபேல் கொரியா சொல்லியிருக்கிறார். நிலைமைகள் எப்படி விரியும் என்று பொறுத்துத் தான் பார்க்க முடியும். அண்மையில் வந்த செய்தியின்படி, ரஷ்யா அவருக்கு அடைக்கலம் வழங்கிவிட்டது. அதனால் அமெரிக்கா கடும் கோபத்தில் இருக்கிறது.

    இந்திய ஆட்சியாளர்கள் ஸ்னோடென் குறித்து எதுவும் வாய் திறக்கவில்லை. தங்களது நாடு உள்பட அமெரிக்காவின் ரகசிய கண்காணிப்பில் இருக்கிறது என்பதைப் பற்றி கவலை கொள்ளாதவர்கள் ஸ்னோடென் பற்றி எதற்கு யோசிக்கப் போகின்றனர்? அண்மையில் பிரண்ட்லைன் இதழுக்கு நேர்காணல் அளித்திருக்கும் சிந்தனையாளர் தாரிக் அலி, ஸ்னோடென் துரோகி அல்ல, விடுதலை போராளி என்று வருணித்திருக்கிறார். ஆனால் பாவம், அவர் தனி நபர். மக்கள் இயக்கமாகப் புறப்படாமல் அரசுகளின் பயங்கரவாதத்தை முறியடிக்க முடியாது என்பதையும் அவர் விளக்குகிறார். ஸ்னோடென் நேர்மையான உள்ளத் துடிப்பு கொண்டு சிறகடிக்கும் இளைய தலைமுறையினரின் குறியீடு. அக்கினி குஞ்சு. பொய்மையைச் சுட்டெரிக்க எரியும் தீ. அது நின்று எரிவது அவசியம். அந்தத் தீயைப் பரப்புவது எதிர்கால உலக சமூகத்திற்கு நல்லது.

    ***********
    நன்றி புதிய ஆசிரியன் (ஆகஸ்ட் 2013)

    Share
  • ரசனையும், சொல் நயமும் தோய்ந்த பாடல்களில் எந்நாளும் வாழ்பவர்

    அஞ்சலி: கவிஞர் வாலி

    ரசனையும், சொல் நயமும் தோய்ந்த பாடல்களில் எந்நாளும் வாழ்பவர்

    vaali 2

    எஸ் வி வேணுகோபாலன்

    ஆனைக்கட்டித் தெரு ரவி தான் எனக்கு முதன்முதலில் கவிஞர் வாலியின் கவிதை ஒன்றை ரசனையுடன் வாசித்துக் காட்டியது. கண்ணதாசனையும், வாலியையும் திரைப்படப் பாடல்கள் மூலமாக மட்டுமே அறிந்திருந்த எனக்கு, ரவி தான் அவர்களைக் கவிஞர்களாக அடையாள படுத்தியது. என் அண்ணனுடைய கல்லூரித் தோழர் அவர் (இப்போது எங்கே இருக்கிறீர்கள் ரவி ?). எட்டாம் வகுப்பு படிக்க நான் காஞ்சிபுரம் செல்ல நேர்ந்த அந்தக் காலம் எனக்கு நிறைய இலக்கிய வாசல்களைத் திறந்து வைக்கத் தொடங்கியது. எழுபதுகளில் குமுதம் இதழில் வாராவாரம் கண்ணதாசனும், அதே நேரத்தில் ஆனந்த விகடனில் வாலியும் கவிதை எழுதிக் கொண்டிருந்தனர். முச்சங்கப் புலவர் முதல் முந்தா நாள் புலவர் வரை என்று தொடங்கிய வாலியின் நான் என்ற தலைப்பிலான கவிதை ஓர் அருமையான அறுசீர் விருத்தம். கிளிப் பொருத்திய அட்டை ஒன்றைக் கையில் வைத்தபடி சிந்தனை முகமாக உட்கார்ந்திருக்கும் வாலியின் புகைப்படம் இன்றும் என்னுள்ளத்தில் பொருந்தியிருக்கிறது. .ஆனால், வாலி, மக்கள் மத்தியில் திரைப்படப் பாடல்களால் தான் பிரபலமாக அறியப்பட்டிருந்தார். வாலியின் மறைவு சாதாரண மக்களையும் பேச வைப்பது அதனால் தான்..

    ஐந்து பத்தாண்டுகள். பத்தாயிரத்திற்கு அதிகமான பாடல்கள். எத்தனையோ நடிக நடிகையருக்காக, எத்தனையோ இசையமைப்பாளர்களுடன் அமர்ந்து எத்தனையோ பாடகர்கள் குரல் வழி தமது அனுபவத்திலிருந்தும், கற்பனையின் வெளிப்பாடாகவும் விரிந்த அவரது பாடல் உலகம் திரை இசைப் பாடல்கள் குறித்த ஆய்வுகளில் தவிர்க்க முடியாத இடத்தில் .இருக்கிறது. குறும்பும், நையாண்டியும் நிறைந்த பாடல் வரிகள் முதற்கொண்டு காதல், கொண்டாட்டம், சோகம், தனிமை என பல வித உணர்வுகளையும் தத்தகாரம் என்று சொல்லப்படும் திரை இசை மெட்டுக்குள் கொண்டு வந்தவர் அவர். இனிமையும், உருக்கமும், வேகமும், எழுச்சியும் இசையமைப்பாளரின் திறமை, கற்பனை, இசைக் கலைஞர்களின் உழைப்பு என்றிருந்தாலும் பாடல்களைக் காலம் கடந்து நிற்கச் செய்வதில் பாடல் வரிகளுக்கு முக்கிய இடம் இருக்கிறது. சாதாரண மக்கள் மனத்தில் நிலைத்து நிற்க வேண்டுமானால் அசாத்திய எளிமையும் வேண்டியிருக்கிறது. கருத்தும் பளிச்சென்று வந்து விழுந்தாக வேண்டும். இந்தத் திறன் பெற்றவர்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்க முடிகிறது. இதில் வாலிக்கு தவிர்க்க முடியாத தனியிடம் இருக்கவே செய்கிறது. தான் இயற்கை எய்தும் காலம் வரை அவருக்கு அந்த ஆற்றல், ஒருங்கிணைப்பு, ஒத்திசைவான உளவியல் வாய்த்திருந்தது என்பது முக்கியமானது.

    எம் ஜி ஆரின் ஒரு முழு படத்திற்கு அத்தனை பாடல்களையும் எழுதி அவை வெற்றி பெற்றது வாலியை முக்கிய கவிஞராக அடையாளப்படுத்தியது. அந்தப் படம் படகோட்டி. ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார், ஒவ்வொரு நாளும் துயரம், ஒரு சாண் வயிறை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம் என்ற வரிகளின் நுட்பம் அசாத்தியமானது. எம் ஜி ஆர் தனது படங்களில் பாடலுக்கு தனி கவனத்தை எடுத்துக் கொள்வார் என்பது எல்லோரும் அறிந்தது. இந்த சமூக தாக்கத்தை அவர் வாலியிடம் கண்டெடுத்ததை அடுத்தடுத்து தமது படங்களில் இடம் பெறச் செய்து கொண்டார். சிவாஜி நடித்த பாபு படத்தின் புகழ் பெற்ற இதோ எந்தன் தெய்வம் என்பது வாலியின் அருமையான பாடல்களில் ஒன்று. அதிலும் அவர் தி மு க வின் ஏழையின் சிரிப்பில் இறைவன் என்ற முழக்கத்தை கடைசி சரணத்தில் கொண்டு வந்திருப்பார்.

    அதே பாபு படத்தில் இன்னொரு பாட்டு. வரதப்பா கஞ்சி வரதப்பா என்பது பழைய காலத்து மடக்கணி சரக்கு..அதைப் பல்லவியாகக் கொண்டு சிவாஜி நடித்த பாபு திரைப்படப் பாடல் ஒன்றை எழுதியிருப்பார் வாலி. அந்தக் காலத்தில் கூடையில் கேரியர்களை (பம்பாய் டப்பாவாலா போல) எடுத்து வரும் பெண் பாத்திரத்தை முன்வைத்து அந்த வீதி நடனப் பாடல். கஞ்சி கலயம் தன்னைத் தலையில் தாங்கி வஞ்சி வரதப்பா என்று தொடரும் பல்லவி.

    அதன் ஒரு சரணத்தில் இப்படி வரும்:

    குலாம் காதர் புலாவிலே கறி கெடக்குது – அது
    அனுமந்தராவ் அவியலிலே கலந்திருக்குது
    மேரியம்மா கேரியரில் எறா இருக்குது – அது
    பத்மநாப அய்யர் வீட்டுக் குழம்பில் மிதக்குது

    சமையல் எல்லாம் கலக்குது – அது
    சமத்துவத்தை வளர்க்குது

    சாதி சமய பேதமெல்லாம்
    சோத்தைக் கண்டா பறக்குது – ஆமாம்
    சோத்தைக் கண்டா பறக்குது

    பல வித்தியாசமான பாடல்களை திரைப்படங்களுக்காக எழுதியவர் வாலி. புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ( இரு கோடுகள் ) பாடல் ஓர் ஆணின் வாழ்வில் ஒருவர் அறியாமல் மற்றவர் இடம் பெற்றுவிடும் இரு பெண்களின் குரலாக ஒலித்தது. சக்கை போடு போடு ராஜா (பாரத விலாஸ்) மனசாட்சியோடு பேசித் திண்டாடும் நாயகனின் பாடல். மௌன ராகம் படத்தின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு தன்மையில் அமைந்திருந்தது. மணமுடித்தவனோடு மனம் பொருந்தி இல்லறம் காண முடியாது தவிக்கும் பெண்ணும், அவளைப் புரிந்து கொள்ள இயலாது தத்தளிக்கும் ஆணுமான பாத்திரப் படைப்புக்கு (மன்றம் வந்த தென்றலுக்கு, நிலாவே வா ) வாலியின் பாடல்கள் மிகப் பெரிய அளவில் மதிப்பு கூட்டியிருந்தன. அபூர்வ சகோதரர்கள் படத்தின் பாடல்கள் அனைத்துமே வேகம் பொருந்திய ரசனையில் வெற்றி பெற்றவை என்றாலும், உன்ன நெனச்சு பாட்டப் படிச்சேன் என்ற சுய கழிவிரக்கப் பாடல் தனித்துவம் வாய்ந்தது.

    திரைப்படப் பாடல்களில் பல்லவி சரியாக அமைவது மிக மிக முக்கியமான அம்சம். கண்ணதாசன், வாலி இருவரின் பெருமைக்குரிய விஷயம் இந்தப் பல்லவி. பத்ரகாளி படத்தில் ஜேசுதாஸ், பி சுசீலா குரல்வழி சிறப்பு பெற்ற வாலியின் “கண்ணன் ஒரு கைக் குழந்தை” பாடலுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அந்த மெட்டு அப்படி. எல்லா வரிகளையும் இந்த முதல் வரியில் வரும் சொற்களைக் கொண்டே தாள லயத்திற்குப் பிசகின்றிப் பாடிவிட முடியும். பூக்காரி படத்தில் முப்பது பைசா மூணு முழம் என்று ஒரு பல்லவி வரும். பத்து பைசா ஒரு முழம் என்று பாடிப் பாருங்கள். கணக்கு தான் சரியாக வரும். மெட்டு ஓடிவிடும். அதே போல் பூக்காரப் பெண்கள் விரைந்து விற்றுத் தீர்க்க எப்படி சொல்லி வாடிக்கையாளரை அழைப்பார்களோ அந்த சங்கதியும் இந்தப் பல்லவியில் இருக்கிறது. பூக்காரப் பெண்ணிடம் வம்பு செய்ய ஆட்கள் இருப்பதும், அவள் அதற்கு சரியான பதிலடி கொடுப்பதும் அந்தப் பாடலில் உண்டு. அதன் கடைசி சரணத்தில் அரசியலும் இருக்கிறது (இந்தா தம்பி செந்தாமரைப் பூ, இருக்கிற துட்டை நீ போடு. நம் கண்ணாயிருந்து நெஞ்சில் நிறைந்த அண்ணா சிலைக்குப் பூ போடு என்ற வரிகளின் சந்தமும், எளிமையும் கவனிக்கத் தக்கது).

    எம் ஜி ஆர் தனிக்கட்சி தொடங்கிய நேரத்தில், மு க முத்து திரையுலகில் நுழைந்தபோது அதை மனத்தில் வைத்து அவருக்காக எழுதப் பட்ட வரிகள் உள்ளிட்டு வாலியின் பாடல்கள் பலவற்றில் அரசியல் வாடை வீசும். ஜெயசங்கர் படத்தின் பாடல் ஒன்றில், ராமரை வருணிப்பது போல், முழுக்க முழுக்க எம் ஜி ஆர் புகழ் பாடும் ஜானகியின் நாயகனே ராமச்சந்திரா என்ற பாடலும் வாலி தான் எழுதியிருக்க முடியும். திரைப்படங்கள் சிலவற்றிற்கு வசனமும் எழுதியிருக்கும் வாலி, கலியுகக் கண்ணன் படத்தில் தேங்காய் சீனிவாசன் கடவுளைப் பார்த்துக் கேள்வியாகக் கேட்கும் ஓரிடத்தில் “ஓய் உமக்கு கருணாநிதின்னு பேரு வச்சது சரிங்காணும், எல்லாக் கேள்விகளுக்கும் ரெடிமேடா பதில் வச்சிருக்கீர் என்று எழுதியிருப்பார். மேடை நாடகங்களும் எழுதியிருக்கிறார் வாலி. அவரது சம்பூர்ண ராமாயணம் என்ற சமூக நாடகத்தில், புராண பாத்திரங்களும் வருவார்கள். அனுமன், ராமனைப் பார்த்து ஏ டி எம் கே ராமச்சந்திரா என்று அழைப்பார். ராமன் அதிர்ந்து போய் என்ன இது அரசியல் என்பார். அதில்லை, நீங்கள் அயோத்தியாவின் தசரத மகாராஜாவுக்கும் கவுசல்யாவிற்கும் பிறந்தவர் தானே, உங்கள் இனிஷியலைத் தான் அப்படி சொன்னேன் என்பார். அரங்கம் அதிரும். கவியரங்க மேடைகளிலும் அவரது அரசியல் வெடிகள் பிரசித்தம்.

    திரையுலகில் கண்ணதாசன், வாலி இருவருக்குமான பொற்காலம் ஒன்று பகிர்ந்து கொள்ளப் பட்டிருந்தது. தொலைக்காட்சிப் பெட்டியோ, கணினியோ வந்து சேராத – ரசிகர்கள் வானொலிக்கு மிகவும் கடன்பட்டிருந்த அந்த காலத்தில், சிவாஜி-எம் ஜி ஆர் படங்களை வைத்து விவாதங்களும், முரண்பாடுகளும், விளையாட்டுச் சண்டைகளும் நடந்தது போலவே, இந்த இரு கவிஞர்களின் பாடல்களை வைத்தும் ஒரு தளத்தில் அப்படியான சர்ச்சைகள் நடப்பதுண்டு. யார் எந்தப் பாடல் எழுதியது என்பதில் கருத்து மாறுபாடுகளும் தோன்றிவிடும். இதயத்தில் நீ படத்தில் வாலி எழுதிய உறவு என்றொரு சொல் இருந்தால் பிரிவு என்றொரு பொருள் இருக்கும் என்ற பாடலும் (பழகி வந்த புதிய சுகம் பாதியிலே மறைந்தாலும் என்று தொடங்கும் அதன் தொகையறா (?) சிறப்பாக இருக்கும்), கண்ணதாசன் எழுதிய ஆனந்த ஜோதி படத்தின் நினைக்கத் தெரிந்த மனமே என்ற பாடலும் ஒன்றே போல் மயக்கத்தை ஏற்படுத்தக் கூடிய உணர்வுகளை உள்ளடக்கியவை.

    வாணி ஜெயராம் என்ற அற்புதமான பாடகியை தமிழ்த் திரை இசையில் எம் எஸ் வி அறிமுகம் செய்த மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ பாடல் வாலியின் இனிய பாடல்களில் ஒன்று. நானே நானா யாரோ தானா (அழகே உன்னை ஆராதிக்கிறேன்), என் கல்யாண வைபோகம் உன்னோடுதான், மல்லிகை முல்லை பூப்பந்தல் (அன்பே ஆருயிரே) போன்ற பல பாடல்களை வாணி பாடினார். இசை ராகங்கள் குறித்து வாலிக்கு ஞானம் இருந்தது அவரது பாடல்களில் அப்படியே வந்திறங்குவதைப் பார்க்க முடியும். நீ ஒரு ராக மாலிகை என்ற பாடலில் பல ராகங்களின் பெயரை அத்தனை ரசமாக வருணிப்பின் வரிகளுக்குள் வாலி.

    எப்போதும் சத்தமாகப் பாடும் எல் ஆர் ஈஸ்வரி, ‘காதோடு தான் நான் பாடுவேன்’ என்று மெல்லிய குரலில் பாடிய அந்தப் பாடல் வாலி எழுதியது. அது இடம் பெற்ற வெள்ளிவிழா படத்தில் அதன் இசை அமைப்பாளர் இன்னொரு சாதனையும் செய்தார். தனது இசையமைப்பில் வேறு ஓர் இசை அமைப்பாளரான எம் எஸ் விஸ்வநாதனைப் பாடவைத்தார். எம் எஸ் வி பாடிய உனக்கென்ன குறைச்சல் என்ற அந்த அருமையான பாடலில், தனிமையை இப்படி விவரிப்பார் வாலி: கடந்த காலமோ திரும்புவதில்லை. நிகழ் காலமோ விரும்புவதில்லை. எதிர்காலமோ அரும்புவதில்லை. இது தானே அறுபதின் நிலை. ஆனால் இளமை நம்பிக்கை துள்ளும் மடை திறந்து பாடலில் (நிழல்கள் – எஸ் பி பாலசுப்பிரமணியன்) நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம், இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம், வருங்காலம் வசந்த காலம் என்று எழுதியிருப்பார் அவர்.

    திரைக்கதையை பாடல்களில் சொல்லிவிடுவது வேறெங்கும் கிடையாது என்று ஒரு முறை எழுத்தாளர் அசோகமித்திரன் குறிப்பிட்டார். அதை அத்தனை கச்சிதமாகச் செய்ததில் வாலியும் ஒருவர். தசாவதாரம் படத்தின் ‘கல்லை மட்டும் கண்டால்’ பாடலில் சைவ வைணவ முரண்பாடுகளைக் கருவாகக் கொண்ட அடிப்படை விஷயத்தைக் கொண்டு வந்திருப்பார். ஆனால் மதங்களைக் கடந்து நேசிக்கும் மனம் அவருக்கு இருந்ததை அவரது எழுத்துக்களிலும், பேச்சுக்களிலும் அவர் வெளிப்படுத்தி வந்ததுண்டு. நீ இல்லாத இடமே இல்லை என்று தொடங்கும் அல்லா அல்லா என்ற பிரபல பாடல் அவர் எழுதியது தான்.

    அவரது “அம்மா” என்ற கவிதை தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் கி வா ஜகந்நாதன், சிருங்கார ரசம் என்பது கத்தியில் நடப்பதைப் போன்றது, பாரதி எழுதியதையே வ ரா விமர்சித்திருப்பார். அவர் இந்த தொகுப்பைப் பார்த்தால் வாலியின் சில கவிதை வரிகளை என்ன சொல்வார் என்று எழுதியிருந்ததாக நினைவு. கவிதையை விடவும், திரைப்படப் பாடல்களில் வாலி எத்தனை விரசமாகவும் எழுதித் தர சித்தமாக இருந்தார். கொச்சையான ரசனை தூண்டும் வரிகளையும், வலிய எழுதித் தள்ளிய வெற்று அடுக்குமொழி சொற்கள் நிரம்பிய கவிதைகளையும் வாலி மிக இலகுவாக தவிர்த்திருக்க முடியும். அத்தனை அனுபவ மொழியும், சொல் வளமும் அவருக்கு வாய்த்திருக்கவே செய்தது. தாள லயமும், சந்தமும், சொல் நயமும், இலக்கிய வாசிப்பும் அவருக்குக் கை கூடியிருந்தது. ஆனாலும் அவர் அப்படியான பாடல்களில் ஒரு போதை உருவாக்கிக் கொண்டார்.

    நான் என்ற அவரது கவிதையில் ஓரிடத்தில், உள்ள வயல் நெடுக உணர்வென்னும் ஏர் கொண்டு/ மெல்ல உழுதுவிட்டு மேவுகின்ற கற்பனையாம்/ நல்ல விதை தூவி நற்கவிதை பயிராக்க/ வல்ல புலவர்தம் வரிசையிலோர் உழவன் நான் என்று சொல்லியிருப்பார். 82 வயதில் அவர் மரணமுற்ற போது, இன்றைய தலைமுறையினர் அவரை அறிந்திருக்கும் வியப்புக்குரிய விஷயம், அவரது தொடர்ச்சியான எழுத்தினால் மட்டும் சாத்தியமானது அல்ல, மறக்க முடியாத வரிகளில் இப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் அவரது பழைய பாடல்களில் அவரது திறமையின் வேர்கள் ஊடோடி இருப்பது தான் காரணம். அதைவிடவும் முக்கியமானது, தமது வாழ்நாள் முழுக்க தமக்குப் பேரும் புகழும் வாய்த்திருந்தாலும், கர்வம் ஓங்கிவிடாது மற்றவர்களைப் பற்றி உன்னதமாகவும், மேலான சொற்களிலும் மதித்துப் பேசிவந்த அவரது வாழ்க்கை அறமும் கவனிக்கத் தக்கது. ரசனையும், சொல் நயமும் மிக்க பல வித்தியாசமான பாடல்களை திரை உலகுக்குத் தந்த வாலியின் நினைவுகள் நலம் வாழ எந்நாளும் நல்வாழ்த்துக்கள் (மறுபடியும்) !

    ***************
    நன்றி வண்ணக்கதிர் ஆகஸ்ட் 4, 2013

    Share
  • வாரணாசிக் ‘கரப்பான் பூச்சி’

    தமிழ்த்தேனீ

      காசி  என்பது இந்துக்களின்   புனித ஸ்தலம், இப்படிப்பட்ட காசியின் புனித  வரலாற்றை எனக்கு நினைவூட்டியது ஒரு சாதாரண  கரப்பான் பூச்சி  என்பதே  மிகவும் விசேஷமான  செய்தி, இந்த கரப்பான் பூச்சியை  சாதாரண  கரப்பான் பூச்சி  என்று நான் சொன்னதே தவறு,

    காலம் காலமாக, எல்லாவித இயற்கை உற்பாதங்களையும்  கடந்து, எவராலும் அழிக்க முடியாத  அளவுக்கு எதிர்த்து  நின்று இன்று வரை  தன் இனத்தை  வெற்றிகரமாக  பெருக்கிக் கொண்டிருக்கும் சிரஞ்சீவி  இந்த கரப்பான் பூச்சிகள்,

    மிக உத்தமமான  கரப்பான் பூச்சிகள், என்பதை  நான் பிரயாணம் செய்த  பெங்களூர் எக்ஸ்பிரஸ் வண்டியில் என்னுடைய  பயணச் சீட்டை  சரிபார்க்க வந்த  அதிகாரி சொல்லும்போதுதான்  எனக்கே இந்த ஞானோதயம் உண்டானது என்றால்  அது மிகையல்ல

    இரவு  மணி 11.30   பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் குளிர்சாதன இருக்கையின் கீழே பெட்டிகளை வைத்துவிட்டு அப்பாடா  இரண்டு நாட்களாக தூக்கமில்லை, காலையில்  பெங்களூர் சென்று சேரும்வரை இன்றாவது  நிம்மதியாக  தூங்க வேண்டும் என்ற   எண்ணத்துடன்  விளக்கை   அணைத்துவிட்டு  படுக்கையில்  படுத்தேன் , காதில் ஏதோ குறு குறுவென்றது  எழுந்து விளக்கை எரியவிட்டுப் பார்த்தால் ஒரு சிறிய கரப்பான் பூச்சி,

     ஆஹா  நம் காதில் இந்தக் கரப்பான் பூச்சி  உள்ளே சென்றிருந்தால் என்ன ஆகியிருக்கும்  என்ற எண்ணமே  என்னை திடுக்கிட வைத்தது, பார்த்துக்கொண்டிருக்கும் போதே படுக்கையில் நிறைய கரப்பான் பூச்சிகள்  மேயத்தொடங்கின, சற்று நேரத்தில் அந்த அறை முழுவதுமே  கரப்பான் பூச்சிகள், அந்த  அறையில் இருந்த அனைவரும் எதைப்பற்றியும் கவலைப்படாமல்  தூங்கிக்கொண்டிருந்தனர்,

    என்னால் தூங்க   முடியவில்லை.  பயணச்சீட்டை  பரிசோதனை செய்யும் அதிகாரியை  அழைத்து என்ன இது, இப்படி  கரப்பான் பூச்சிகள் இருந்தால் எப்படி  தூங்குவது  என்றேன் நான், அதற்கு அந்த அதிகாரி சார் இந்த கரப்பான் பூச்சிகளை  சாதாரணமாக நினைக்காதீர்கள், இவை அத்தனையும்  வாரணாசி என்னும் புனித ஷேத்திரத்திலிருந்து  வந்தவை  என்றார் நமட்டுச் சிரிப்புடன்.

    உடனே  நான் அப்படியா  ! அப்படியானால்  இவைகளைக் கையெடுத்து  கும்பிடத்தான்  வேண்டும் என்று கூறிவிட்டு  கைகளை  மேலே உயர்த்தி  வாரணாசி கரப்பான் பூச்சிகளுக்கு  ஒரு கோவிந்தா  போட்டேன்.

    அந்த அதிகாரி  உடனே  சிரித்தார்!  சரி எப்படியும் தூங்கப் போவதில்லை  இவரிடமாவது  பேசிக்கொண்டிருப்போம்  என்று அவர் வேலைகளை  முடித்துவிட்டு  வரும் வரையில் காத்திருந்தேன்,   அவரும் வந்து  நட்பு முகத்துடன்  என் பக்கத்தில் அமர்ந்தார், என்ன சார் செய்ய முடியும் நீங்க  என்கிட்ட சொல்றீங்க, நான்  மேலிடத்தில் சொல்ல முடியும் அவ்வளவுதான் என்றார். ஆனால் மேலிடத்திலும்   அவர்கள் மிக  அக்கறையுடன் பொறுப்பாகத்தான்   செயல்படுகிறார்கள், குறிப்பாக  இந்த பெட்டி வாரணாசியிலிருந்து  வந்த  தொடர் வண்டியிலிருந்து  பிரித்து    பெங்களூர் செல்லும்  இந்த  வண்டியுடன்  இணைத்திருக்கிறார்கள்

     நீங்களே  யோசித்துப்பாருங்கள்  வாரணாசியிலிருந்து  வரும் தொடர் வண்டியில் பிரயாணம் செய்வோர்  அனைவருமே  தொடர்வண்டி ஓடிக்கொண்டிருக்கும்போதே  உணவுப் பொருட்களை  உண்கிறார்கள்,அது தவறில்லை ,ஆனால்  மீதமாகும் உணவுப் பொருட்களை அதற்குண்டான குப்பைத்தொட்டியில் போட்டால் நல்லது,அப்படியில்லாமல்  கண்ட கண்ட இடங்களில்  போடுகிறார்கள். அந்த உணவுப் பொருட்களை  மோப்பம் பிடித்து  கரப்பான் பூச்சிகள்  வருகின்றன, அரசாங்கத்தையே  குறை கூறிக்கொண்டிருப்பதை  விடுத்து  நாமும் நம்முடைய பொறுப்பை உணர்ந்து  நடந்துகொண்டால்  ஓரளவு  சுத்தத்தையும் ,சுகாதாரத்தையும், அதன் மூலமாக  ஆரோக்கியத்தையும் நாம் பெற முடியும், என்றார்,

    ஆமாம்  தொடர் வண்டியில் இணைக்கப்படும் பெட்டிகளை  சுத்தப்படுத்துகிறீர்களே பிறகும் எப்படி இந்தக் கரப்பான் பூச்சிகள் வருகின்றன  என்றேன்

    சார்  இந்தப் பெட்டிகளை  எல்லா ஜன்னல்கள், கதவுகள்  அனைத்தையும் மூடிவிட்டு  ஒரு குறிப்பிட்ட சிறிய மாத்திரையை  வைப்பார்கள், அந்த மாத்திரை  சற்று நேரத்தில்  காற்றில் கரைந்து  ஒருவிதமான  ரசாயன  மாற்றம் ஏற்படுத்தி அந்தப் பெட்டியில் உள்ள  அனைத்து  கரப்பான் பூச்சிகளையும் கொன்றுவிடும்,

    அதன் பிறகு குறிப்பிட்ட நேரம்  கழித்து  இந்தப் பெட்டியை  சுத்தம் செய்வார்கள், அதன் பிறகே  இந்தப் பெட்டிகளை  இணைக்கிறோம், என்றார்

    சரி  இவ்வளவு  செய்தும்  கரப்பான் பூச்சிகள்  இருக்கிறதே எப்படி என்றேன் நான், அதற்கு அவர்  அதுதான்  விசேஷம், நாம் செய்த  புண்ணியம்,  பெட்டிகளை  ஜன்னல், கதவுகள்  எல்லாம் மூடலாம்,ஆனால் இந்த இணைப்புப் பெட்டிகள் மொத்தமாக இருக்கும்   மிகப்பெரிய இடமான கேரேஜில் இந்த  மாத்திரைகளை  வைத்து  மூடிவைக்க முடியாது. அங்கே  உணவுப் பொருட்கள் இருக்கும் இணைப்புப் பெட்டிகளை நோக்கி  இந்த கரப்பான் பூச்சிகள்  படையெடுத்து  ஆக்ரமிப்பதை  தடுக்க முடியாது.  இந்தப் பெட்டி  வாரணாசியிலிருந்து வந்தவுடன்  அதிலிருந்து  பிரித்து  சுத்தம் செய்ய நேரமில்லாமல்  உடனே  இந்த  ரயிலுடன் இணைக்கப்பட்டதால்  நம்மால்  வாரணாசி கரப்பான் பூச்சிகளை தரிசனம்  செய்ய முடிந்தது.

    அது நம் கொடுப்பினை என்றார், வெகு வேகமாக விரைந்து கொண்டிருந்த வண்டி .  அப்போது காமசமுத்ரா  என்னும்  ஸ்டேஷனைக் கடந்து சென்றது, இந்தக் காமசமுத்ரத்தில் நாம் என்ன செய்தாலும் சில விளைவுகளிலிருந்து தப்பிக்க  முடியாது  என்பது புரிந்தது. பயணச்சீட்டு  பரிசோதகர் நான் மீண்டும் ஒரு முறை உள்ளே  சென்று என்னிடம் புகார் கொடுப்பவர்களை  சந்தித்து  வருகிறேன், நீங்கள்  இந்த வாரணாசிக் கரப்பான் பூச்சிகளின் மகத்துவத்தை  உணர்ந்து யோசித்துப்பாருங்கள்  என்று கூறிவிட்டுப் போனார்.

    நானும் வாரணாசியைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்,  வருணா,  அசி  என்னும் இரு நதிகள் சங்கமிக்கும்  இடமாக இந்தப் பகுதி  அமைந்திருப்பதால் , இந்த இரு நதிகளின் சங்கமத்தால்  வாரணாசி  என்னும் பெயர் பெற்றது இந்த  இடம், புகழ் பெற்ற  காசி விஸ்வநாதர். ஆலயத்தில் சைவர்கள்  வழிபடும்  பன்னிரண்டு லிங்கங்களுள் ஒரு முக்கியமான  லிங்கமான  ஜோதிலிங்கம் இருக்கும் இந்த  ஷேத்திரம்  உத்திரப் பிரதேச மாநிலத்தில் கங்கைக் கரையில்  அமைந்துள்ளது,

    ஒவ்வொரு இந்துவும்   வாழ்க்கையில்  ஒரு முறையாவது  காசிக்கு சென்று ,அங்கே  உள்ள  கங்கையில் நீராடி புனித ஸ்தலங்களை தரிசித்து வந்தால்  முக்தி கிடைக்கும்   என்று நம்புகிறார்கள், அப்படிப்பட்ட  ஷேத்திரமான  காசிக்கு செல்லும்போது  தாங்கள் மிகவும் விரும்பும் ஏதேனும் ஒன்றை  இனி வாழ்நாளில்  உபயோகப்படுத்த மாட்டேன்  என்னும் உறுதி எடுத்துக்கொள்வது  வழக்கம்,.

    சூரிய  வம்சத்தில்  தோன்றிய  சகரன்  என்னும் மன்னன் அஸ்வமேத  யாகம் செய்தான். இதைக் கண்ட  இந்திரன் தன்னுடைய  இந்திர பதவி பறிபோய்விடுமோ என்று பயந்துஅச்வமேத யாகத்துக்கு என்று தேர்வு செய்து வைத்திருந்த  குதிரையை திருடிக்கொண்டு போய், இமாலயத்தில் தவம் இயற்றிக்கொண்டிருந்த கபிலர் என்னும் மஹாமுனியின் ஆஸ்ரமத்தில்   கட்டிவைத்தான்,

    இதை அறியாத   மன்னன் சகரனின்  புதல்வர்கள் அஸ்வமேத யாகத்திற்கு வைத்திருந்த  குதிரையைத் தேடிக்கொண்டு  வரும்போது அந்தக் குதிரையை கபிலரின் ஆஸ்ரமத்தில் கண்டு  அவர்தான்  அந்தக் குதிரையை திருடிக்கொண்டுவந்து  கட்டி வைத்திருக்கிறார்  என்று தவறாக  எண்ணி அவரை துன்புறுத்தினர்,

    ஒரு தவறும் செய்யாத  கபிலர்  கோபமடைந்து   மன்னன் சகரனின் பிள்ளைகளையும், அவர்களுடன் வந்த  அனைவரையும்  தன் தவ வலிமையால்  எரித்து சாம்பலாக்கினார். இதை  அறிந்த  சகரன் மிகவும் விரக்தி அடைந்து அவனுடைய பேரன் அம்சுமானுக்கு முடிசூட்டிவிட்டு கானகம் அடைந்து தவம் செய்து  சொர்கம் புகுந்தான்.

    கபில முனிவரின்  கோபத்துக்கு ஆளான இளவரசர்கள் யாருக்குமே முக்தி கிடைக்கவில்லை, அம்சுமான் மன்னனின் அரண்மனைக்கு வந்த தவஸ்ரேஷ்டர்கள் கபிலரின் தவ வலிமையால் எரிந்து போனவர்களின் சாம்பலின் மீது தேவலோகத்தில் பிரவகிக்கும் கங்கையின் நீரைத் தெளித்தால்  அவர்கள் முக்தி அடைவார்கள்  என்று கூறியதால் கங்கையை பூமிக்கு  கொண்டுவர  அனைத்து முயற்சிகளும் செய்தான்.

    ஆனால் அவனால் இயலாமல் போனது. அம்சுமானின்  குமாரன் அசமஞ்சன் தானும் பெரு முயற்சி செய்தான் அவனாலும் முடியவில்லை,  அசமஞ்சனின்  குமாரன் பகீரதன்  அந்த முயற்சியைத் தொடர்ந்தான்.

    பகீரதன்  கங்கையை  பூமிக்குக் கொண்டு வரும் நோக்கில்கடுந்தவம் செய்தான். இதைத்தான்  பகீரதப் ப்ரயத்தனம் என்பர்,  அவனது தவத்தை ஏற்று கங்கா தேவியும் பூமிக்கு வரச் சம்மதித்தாள். சிவபெருமான் தனது திருமுடியில் கங்கையை விழச்செய்து பூமியில் நதியாக ஓடச் செய்தார். இவ்வாறு ஓடிய கங்கை நதியில் பகீரதனின் முன்னோர்களின் அஸ்திகள் கரைக்கப்பட்டன, இதனால் அவர்கள் முத்தி பெற்றனர். அன்றிலிருந்து கங்கையில் அஸ்தியைக் கரைத்து முன்னோர்களின் ஆன்மாக்களை முத்தியடையச் செய்து வருகின்றனர். இதுவே காசியின் சிறப்பு ஆகும்.

    காசிக்கு போவது என்பது  அந்தக் காலத்தில் மிகவும் கடினமான  ஒரு செயல், பிரயாணம் மட்டுமல்ல, காசிக்குப் போவதற்கு கொடுப்பினை இருந்தால்தான் போய்வரமுடியும் என்பது  இந்துக்களின் அசைக்கமுடியாத  ஒரு ஆன்மீக நம்பிக்கை.

    ஒன்று மிக நன்றாகப் புரிந்தது! கொடுப்பினை இருந்தால்தான் வாரணாசிக் கரப்பான் பூச்சிகளின் தரிசனமும் கிடைக்கும், ஆமாம் என்னைத்தவிர அனைவரும் தூங்கிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் மேல்  வாரணாசிக் கரப்பான் பூச்சிகள்  வர்ண பேதமில்லமல், ஜாதி வித்யாசம் பார்க்காமல், ஆண் பெண்  பேதமில்லாமல், கீழ் ஜாதி, மேல்ஜாதி பேதமில்லாமல், வர்ணாஸ்ரம தர்மங்களைப் பற்றியெல்லாம்  யோசிக்காமல்  ஊர்ந்து கொண்டிருக்கின்றன,

    நான் வாரணாசிக் கரப்பான்பூச்சிகளையும், அவைகள்  ஊர்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள் அனைவரையுமே  ஒரு வித பயத்துடன், பக்தியுடன் பார்த்துக்கொண்டே  இருந்தேன்,

    அன்புடன்

    தமிழ்த்தேனீ

    rkc1947@gmail.com,  http://thamizthenee.blogspot.com ,http://peopleofindia.net

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    கடித இலக்கியம் என்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இதைப் பற்றிய ஒரு சில பதிவுகளும் என் வலைப்பூவில் உண்டு. கடிதம் எழுதுவதும் அதை ரசித்துப் படிப்பதுமே ஒரு கலை. ஆதியில் கடிதங்கள் பலவிதங்களாக அனுப்பப்பட்டதைப் பழைய காவியங்கள் பலவகையாக சொல்வதை நாமும் படித்திருக்கிறோம். எத்தனைதான் இக்காலத்தில் மிகப் புதுமையான அளவில் தகவல் தொழில்நுட்ப வசதிகள் வந்தாலும் உணர்ச்சிகரமான உள்ளத்தோடு, அந்த உணர்வில் பேனா மைகொண்டு கலந்து எழுதும்போது கிடைக்கும் மகிழ்ச்சியோ அல்லது திருப்தியோ, இந்த தற்கால வசதிகளில் கிடைக்காது என்பது என்னவோ வாஸ்தவம்தானே.

    கடிதங்களால் மனத்தின் குறைகளை நம்மால் இறக்கிவைக்க முடியும் என்பதும் கடிதங்களால் உறவுகள் பலமடையும் என்பதும் நாம் அனுபவத்தில் கண்டதுதான். தேவன், குமுதினி போன்ற பெரிய எழுத்தாளர்கள் இந்தக் கடிதங்களைக் கொண்டே பல கதைகள் எழுதியுள்ளார்கள்., ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு நீதி சொல்லும்

    கடிதங்களில் காதல் கடிதம் மிகவும் ருசிகரமானவைதான். காதலி எழுதினாலும் சரி, காதலன் எழுதினாலும் சரி, அதன் தனித்துவம் மட்டும் அவர்கள் இருவருக்குமே தெரியும், அதன் மகத்துவமும் புரியும். உணர்ச்சிகளின் இதய ஓட்டத்தை அவர்களால் மிகச் சரியாக வெளிப்படுத்த இந்த கடிதங்கள் எழுதப்படுகின்றன என்பதோடு அவர்கள் காதலையும் கெட்டிப்படுத்துகிறது என்பது கூட உண்மைதான். ஆனால் இன்றைய அதிநவீன உலகில் இக்கடித இலக்கியம் அழிந்துவருவதாகத்தான் தோன்றுகிறது.இப்படி நினைக்கையில்தான் இந்த வாரத்தில் ஒரு தமிழ்மடல் கண்டேன்.. இதோ உங்கள் பார்வைக்கு.

    என் உயிரானவரே…!

    vinmugilalஎப்பொழுது வருவீர்கள், பயணித்த களைப்பு தீரும் முன்னே திரும்பிவிடுங்கள், கதவடைத்த சன்னல்களும், உட்புறம் தாழிட்ட கதவும், நீங்கள் இல்லை என்று பொய் சொல்லுகிறது என்னிடத்தில். இதயத்தின் இரகசிய அறையில் ரம்மிய காதலுடன் தளும்பும் தங்களின் புன்னகை முகத்தை அவர்களிடம் காண்பிக்கவில்லை நான். விழிவிளிம்பில் வழியும் நீர் மேற்கூறையில் உங்கள் முக பிம்பம் கண்டு, மகிழ்ச்சியின் பன்னீர் மலர்களை மாலையாக்குகிறது இருபுறமும். இறுக்கத்தில் இடைபுகுந்த காற்றின் இளஞ்சூட்டில், தங்களின் மூச்சுக்காற்றோ என்று மகிழ்ந்து திரும்புகிறேன் நான். அங்கு வெற்றிடம் கண்டு வெந்து போகிறது மனது. இடப்பட்ட நெற்றி முத்தம் ஒன்று நினைவில் அரும்ப மகிழ்ந்து பின் கூம்புகிறது இதயம்.

    தட்டென்று வைக்கப்பட்ட பாத்திரத்தில் அடிப்பட்டு தரை, நோகிறதென்று முகம் திருப்புகிறது. காகம் கரைந்ததில் கதவை திறந்து வைத்திருக்கிறேன் நான். என் இதய காவலனை வரவேற்கவென்று என் கூந்தல் மலர்கள் வாசற்கோலத்தில் தவங்கிடக்கிறது.

    மஞ்சள் முகம் தழுவி, குங்குமத்தில் சிரிக்கிறது என் காதல். விழிகள் மையிட்டு ஏக்கமும் நேசமுமாய் வசீகரிக்க தவிக்கிறது தங்களை.

    கொல்லை புற தென்றல், தங்கள் அருகாமை பொழுதை நினைவுட்ட வெட்கத்தில் கோலம் போடுகிறது கட்டைவிரல். கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சும் கண்ணீர், கொஞ்சம் ஏக்கம், கொன்று போடும் எதிர்பார்ப்புமாக நகருகிறது நாழிகை. உங்களை பார்க்கும் அந்த நாழிகை என்ன செய்வேன். அழுவேனா? ஓடிவந்து அணைத்துக்கொள்வேனா? முகம் முழுவதும் முத்தங்கள் கொட்டி வெட்கம் துறப்பேனா? பிரிவு தந்த துயரில் அழுந்த பதித்த முத்தம் தங்களை வலிக்க செய்யுமோ…?

    என் இளைப்பாறுதலுக்கு இதமாக உங்கள் நெஞ்சம் தயாராகுமா? உங்கள் விரல்கள் என் கூந்தல் கோதுமா? முத்தங்கள் வஞ்சனையில்லாமல் பரிமாறப்படுமா? என்னவளே என்று இதயம் அரற்றுமா? இதழ்கள் காதில் கிசுகிசுக்குமா? மீசையின் கிச்சுக்கிச்சு மூட்டுதலில், தேகம் சிலிர்த்தெழுமா?
    இத்தனை வினாக்களுக்குள்ளும் நகராது நிற்கிறது நாழிகைகள். ஒவ்வொரு நொடியும் யுகமாய் நீள்கிறது. என் வேதனை பொறுக்காமல் நிலவு மேக முந்தாணையால் முகம் மறைத்து அழுகிறது. தழுவ வந்த காற்றும் தழுவாமல் கடந்து போகிறது. விண்மீன் கூட்டங்கள் கண்செய்கையால் தேற்றமுடியாமல் பரிதவிக்கிறது. அண்டசராசரங்களுக்கும் தெரிந்திருக்கிறது, என் உயிரான நீங்கள் இல்லாமல், தேகம் குலைந்து போகும் அணு அணுவாய் என்று.

    என் அலங்காரங்கள் அழிந்து கலைந்த கூந்தலில் கவலை தொற்றகிறது. கண்ணீர் காய்ந்து தண்ணீர் அற்ற ஆறு போல் உப்புப்பாலங்களால் வெடித்துப்போகிறது கன்னம். எச்சில் வற்றி இதழ்களில் புன் நோகிறது. நான் வேதனை வெடித்து கதறும் முன் வந்துவிடுங்கள் என்னவரே”

    உணர்ச்சிகள் இயல்பாகப் பொங்கும் இக்கடித இலக்கியத்தை எழுதியவர் தமிழ்ச்செல்வி அவர்கள். இவரின் தமிழ் இக்கடிதத்தில் சுகமாய் விளையாடி தாலாட்டுப் பாடி நம்மையும் சற்று மயக்கமடையச் செய்கிறதைக் காணலாம். அந்தத் தமிழ் மயக்கத்தைத் தந்த தமிழ்ச்செல்வியை இந்த வார வல்லமையாளராக அறிவிக்கிறோம். அவருக்கு நம் வாழ்த்துகள்!!

    கடைசி பாரா: திரு க. சச்சிதானந்தத்தின் ‘குறவன் பாட்டு”

    துறவறம் பூண்ட முனிவனின் மனமும்,

    கலவரம் பூணும் கானுருக் கண்டு!

    குலவறம் காக்கும் குறவனின் மனமோ

    இலகுறக் கண்டு கானினை வெல்லும்!

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 83 (05.08.13)

    மலர் சபாpicture 83

    புகார்க்காண்டம் – 08. வேனில்காதை

    முன்பு ஒரு முறை
    யான் அவளைப் பிரிந்து வாழ்ந்தபோது
    பிரிவாற்றாமையால்
    மிக்க வருந்துபவள் போல் காண்பித்து
    எனது உறவினர் முன்
    தான் மிகவும் துயரப்படுபவள் போல் பாவித்து
    துயரங்களை எல்லாம்
    ஆராய்ந்து கூறுபவளாய் நடிப்பாளே..
    வசந்தமாலையே!
    இதுதான் அவள் நடித்த தேர்ச்சிவரி.

    வண்டுகள் வந்து ஊதிப் பூக்கவைக்கும்
    பூங்கோதையை உடைய அவள்
    மாலைப் பொழுதினில்
    காம நோயால் வருந்துபவள் போல் காண்பித்து
    கண்ணில் படுகின்ற சுற்றத்தாரிடம்
    தம் துன்பத்தைக் கூறி
    அவர்கள் அனுதாபத்தைப் பெற நடிப்பாளே…
    வசந்தமாலையே!
    இதுதான் அவள் நடித்த காட்சிவரி.

    பிரிவுத்துயர் தாங்காமல்
    காமநோயுற்றவள் போல
    அடுத்து அடுத்துப்
    பொய் மயக்கம் கொண்டு
    என் சுற்றாத்தாரிடம் தன் துயர்
    எடுத்து எடுத்துக் கூறி நடிப்பாளே..
    வசந்தமாலையே!
    இதுதான் அவள் நடித்த எடுத்துக்கோள்வரி

    ஆயிழையே,
    அவள் ஒரு ஆடல் மகள் ஆதலால்
    இங்ஙனம் இயல்பாய் அவள் நடித்த நடிப்புகள்
    அவள் கலைக்குப் பெருமை சேர்ப்பதேயாகும்!
    என்றெல்லாம் இகழ்ந்து கூறிய கோவலன்
    மாதவி அவள் கடிதம் பெற மறுத்துவிட்டனன்.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 101 – 110
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram25.html

    படத்துக்கு நன்றி:
    http://cheapestinindia.com/price/raja-ravi-varma-painting-title-radha-waiting-for-krishna-in-kunjavan-723379

    Share
  • வேர்களுக்கு நன்றி சொல்வோம் …

    20130728001059_00001எஸ்.ஆர்.எஸ். என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்பெறும் திரு எஸ்.ஆர். சுப்பிரமணியம் அவர்கள் மிகச் சிறந்த தொழிலதிபர், நிலக் கிழார் சமூக நல ஆர்வலர், சிறந்த எழுத்தாளர், என பன்முக நாயகராக விளங்குபவர். அன்னைத் தமிழ் மற்றும் தாய் மண் இரண்டையும் தம் இரு கண்களாகப் போற்றும் வல்லமையாளர். எம்.ஏ. வரலாறு பட்டதாரியான இவர் பல்வேறு நூல்களும், தினமணி, காலைக்கதிர், தினமலர் போன்ற நாளேடுகளில் பல்வேறு பிரபலமான தொடர் கட்டுரைகளும் எழுதி அனைவராலும் அறியப்படுபவர். இவருடைய நூல்களில் மிக முக்கியமானவைகள், ‘தண்ணீரைத் தேடி’, ‘சரங்கள்’, ‘அண்ணா ஒரு அண்ணல்’ போன்றவைகள். உழவர் பெருமக்களின் நலனில் பெரும் அக்கறை கொண்டவரான இவரின் படைப்புகள் அனைத்தும் பெரிதும் உழவர் பெருமக்களின் வாழ்வின் மலர்ச்சியின் அடிப்படையிலேயே அமைந்திருப்பது சிறப்பு. திராவிட இயக்கத்தின் வரலாற்றை அதன் அடித்தளத்தினூடே அருமையாக ஆய்வு செய்திருப்பவர். மிகச் சிறந்த சிந்தனையாளர். நதிநீர்ப் பிரச்சனையான காவிரி, முல்லைப் பெரியாறு ஆகியவைகளின் தோற்றம் மற்றும் அதன் பிரச்சனைகள் குறித்த ஆதாரப்பூர்வமான தகவல்களை வெளியிட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கவித் திறமும், உரைத்திறமும் ஒருங்கே அமையப் பெற்றவர். விவசாயம், நதிகள், தண்ணீர் பிரச்சனை பற்றி இவர் எழுதியுள்ள ‘நதிகளின் சங்கமம்’ என்ற நூல் அரிய பல தகவல்களைக் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    இந்தியக் குறுநில மன்னர்கள் ஒற்றுமையின்றி வாழ்ந்த காலமது. வியாபாரம் செய்ய வந்த கிழக்கிந்தியக் கம்பெனி இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு நம் இந்திய நாட்டையே வளைத்துப் பிடிக்கத் திட்டமிட்டது. இவர்களை எதிர்த்துப் போரிட்டு தம் இன்னுயிரையும் தியாகம் செய்த எண்ணற்ற தியாகச் செம்மல்களில் சிறந்த போர்க்கலை வல்லவன், தேசப் பற்றும், வீரமும், விவேகமும் என அனைத்தும் அமையப் பெற்ற வீரமகன் தீரன் சின்னமலையும் ஒருவர். இவருக்கு ஈரோடு மாநகரில் மாபெரும் விழா எடுக்க முன்னின்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர் என்ற பேருவகையுடன், தாய் நாட்டிற்காகத் தம் இன்னுயிர் ஈந்த அந்த மாபெரும் வீரனின் வாழ்க்கை வரலாற்றை இத்தருணத்தில் எழுதி வெளியிட்டிருப்பது சாலப் பொருந்தும். கன்னட நாட்டின் போர்வாள் என்று பாராட்டப் பெற்ற திப்புசுல்தானின் கரத்தைப் பலப்படுத்தியவர் தீரன் சின்னமலை. கொங்கு மண்ணில் அவதரித்த மாவீரன் , மூன்று முறை கிழக்கிந்தியக் கம்பெனிப் படையை புறமுதுகுகாட்டி ஓடச் செய்தவன் தீரன் சின்னமலை. 1805ம் ஆண்டு ஆடித் திங்கள் 18ம் நாளான, இதே நாளில் ஆங்கிலேயர்களால் சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டு வீர மரணம் அடைந்த தீரன் சின்னமலை பற்றிய வாழ்க்கை வரலாற்றை தெள்ளுத் தமிழில், அழகு நடையில் கட்டுரை வடித்துக் கொடுத்து அவர் நினைவைப் போற்ற நமக்கும் வாய்ப்பளித்திருக்கும் திரு எஸ்,ஆர்,எஸ் அவர்களை வல்லமை வாழ்த்தி வரவேற்கிறது. இன்னும் பல்வேறு ஆகச் சிறந்த படைப்புகளை அவரிடம் எதிர்பார்க்கிறோம்.

    அன்புடன்
    பவள சங்கரி

      தீரன் சின்னமலை நினைவு நாள் 31.07.1805 … 

    எஸ், ஆர். சுப்பிரமணியம்

    நல்ல இமயம்

    நலம் கொழிக்கும் கங்கை நதி – மகவாய் வளர்க்கும் தாய் காவேரி

    வெல்லத் தமிழ் நாட்டின் மேன்மைப் பொதியமலை

    செழுங்கரும்புத் தோட்டங்கள், செந்நெல் வயல்கள்

    தின்னக் கனிகள்

    தெவிட்டாப் பயன்மரங்கள்

    புராணங்கள், இதிகாசங்கள், நீதிநூல்கள்

    தத்துவக்கோவைகள், உபதேச மஞ்சரிகள், அறப் பேருரைகள்

    இத்தனையும் செறிந்திருக்கும் நாடு, இந்தியத் திருநாடு !

                    வளங்கள் அனைத்தையும் இயற்கையிடம் வரமாகப் பெற்ற இந்தியா, கருத்துக்கு எட்டாத காலம் முதல் உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. முத்தும், பவளமும், வைரமும், வைடூரியமும் வரம்பின்றிக் கிடைக்கும் தேசம் இந்தியா என்று கேள்விப்பட்டவர்கள் ஆசியாவிலிருந்தும், ஐரோப்பாவிலிருந்தும் வந்து கொண்டே இருந்தார்கள்.

                    கொட்டிக்கிடக்கும் தங்கத்தையும், மணியையும் கொண்டுபோக வந்தவர்கள் பலபேர்! தத்துவ ஞானத்தின் தாய்வீடு என மதித்துக் கற்க வந்தவர்கள் பலபேர் ! கொள்ளலாம் என்றும், தமது பொருள்களைக் கொடுக்கலாம் என்றும் கடலின் முதுகில் ஏறிக் காற்றின் துணையால் கரையில் வந்து இறங்கியவர்கள் பலபேர் ! பாருக்குள்ளே இது எப்படி நல்லநாடு என்று பார்ப்பதற்காக, காடுமலை பலகடந்து, சமவெளிகளில் சஞ்சரித்து, மன்னர்களையும் மக்களையும் சந்தித்து, பயணிகளாய் வந்தோர் பலர் !  ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் கண்டு வரலாம் என்பதற்கும் கற்றுவரலாம் என்பதற்கும் வழிகேட்டு வந்த கலைவாணர்கள் பலர் ! மாயங்கள் நிறைந்த மர்மதேசம் இந்தியா என்று கேள்விப்பட்டு, மனதில் வளர்த்த கதைகளை நனவாக்க வேண்டும் என்று அலை அலையாய் வந்த அன்னிய மக்கள் பலர் ! உலக இனங்களை எல்லாம் ஒருமுறையாவது காணவேண்டும் என்று துடித்த, உன்னதத்துக்கு இன்னொரு பெயர்தான் இந்தியா ! இத்தனை பெருமைகளையும் முற்று மோனையாகப் பெற்ற இந்தியாவைப் பார்த்து மகிழ்ந்தவர்கள் அத்தோடு நிற்கவில்லை !  அள்ள அள்ளக் குறையாத அத்தனைச் செல்வங்களையும் கொள்ளை கொள்ளத் துடித்தார்கள். காட்டுமிராண்டி மனிதர்கள் கொள்ளை கொண்டு போனது ஒருபக்கம் ! நாகரிக நாட்டில் சுரண்டிக் கொண்டு போனது ஒரு பக்கம் !  இப்படி முப்புறமும் பாரதத்தை முற்றுகையிட்டவர்கள் தாக்கிய தாக்குதல்களால் இந்திய வரலாறே திசை மாறிப் போனது. உலகப் பந்து காயப்படுவது இடியாலோ, மின்னலாலோ, சூறாவளியாலோ, சுனாமியாலோ அல்ல ! அதில் வாழ்கின்ற மக்களின் வன்செயலால் !

                    தனது சுதந்திரத்தைக் கொண்டு மகிழ்ச்சியடைய வேண்டிய ஒரு நாடு, மற்ற நாடுகளின் சுதந்திரத்தைக் கண்டு மாச்சரியம் கொள்வதும், அவற்றை அடிமைப்படுத்த முயல்வதும் மனித நேயத்துக்கு விடப்படும் அறை கூவலாகும். இதற்கு அதிக ஆராய்ச்சி வேண்டியதில்லை. அண்மைக்கால நூற்றாண்டுகள் இதற்குச் சாட்சியளிக்கும். 18, 19, 20ஆம் நூற்றாண்டுகளில் ஆங்கில வணிகர்களும், ஆங்கில அரசும் இந்திய மக்களுக்கு இழைத்த கொடுமைகளைக் கேட்டால் மண்ணும், மலையும் உருகும் ! சோப்பு, சீப்பு விற்க வந்தவர்கள் ஒரு துணைக் கண்டத்தையேச் சூறையாடி, கொள்ளையடித்து, ஆயிரம் ஆயிரம் மக்களின் ஆவிகுடித்த பயங்கரக் கதையே ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்த இந்திய அடிமை வரலாறு !

                    வணிகக்குழு அமைத்து வியாபாரம் செய்யவந்த கிழக்கு இந்தியக் கம்பெனியினர் இந்திய குறுநில மன்னர்களின் ஒற்றுமையின்மையைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியப் பெருநாட்டின் ஆட்சியாளர்களாகத் துடித்தனர். அந்நாளிலேயே அவர்களது ஆதிக்கம் காலூன்றுவதை எதிர்த்த வீரப் பெருமக்களில் கொங்கு நாட்டுப் பகுதியில் தீரன் சின்னமலை 07.04.1756இல் பிறந்தார். இவருக்கு  தீர்த்தகிரி சின்னமலை என்றும், தம்பாக்கவுண்டர்  என்ற செல்லப் பெயரும் உண்டு.  18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், கிழக்கிந்தியக் கம்பெனியாருக்குக் கோவை, ஈரோடு மாவட்டப் பகுதியில் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் தான் மாவீரன் தீரன் சின்னமலை (1756-1805).

    பிரபல திரைப்பட நடிகரும் சிறந்த ஒவியருமான திரு சிவக்குமார்
    நன்றி: பிரபல திரைப்பட நடிகரும் சிறந்த ஒவியருமான திரு சிவக்குமார்

                    15.08.1947இல் நாம் விடுதலை பெற்றோம்.  நாம் பெற்ற விடுதலை எளிதாகக் கிடைத்துவிடவில்லை.  பலர் விடுதலைக்காகப் போராடினர்.  அப்போரில் சொல்லொணாத் தொல்லைகளுக்கு உள்ளான பலர் தம் இன்னுயிரையும் ஈந்தனர். இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக நடைப்பெற்ற போராட்டத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

                    ஆங்கிலேயர் ஆட்சி அமையும் போதே அவர்கள் தலைமையை ஏற்க மறுத்துப் போராடியது என்பது முதல் கட்டம்.

    எந்த உத்தரவிற்கும் காத்திராமல் தாங்களாகவே முன்வந்து, விடுதலை வேள்வியில் தங்கள் இன்னுயிரை பலிபீடத்தில் ஆகுதியாகத் தந்த வீரத் திலகங்கள் பலர். அவர்களில்,

    நெட்கட்டுங்சேவல் புலித்தேவன் 1767

    சிவகங்கை முத்துவடுகநாதப் பெரியஉடையாத்தேவர் -1772

    ராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி – 1795

    தஞ்சாவூர் அமர்சிங் – 1798

    சிவகங்கை வேலுநாச்சியார் – 1798

    பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் -1799

    மருது சகோதரர்கள் – 1801

    ஊமைத்துரை – 1801

    போன்ற பலரும் தென்தமிழகம் சார்ந்தவர்கள். வட தமிழ்நாட்டின் சுதந்திரக்கனல் அவியவில்லை எனக்காட்ட முனைந்து கிழக்கிந்தியக் கம்பெனியாரின் விரட்டும் வீரப்போரில் கலந்து கொண்ட மாவீரன் கொங்கு நாட்டு தீரன் சின்னமலை (1756).

                    ஆங்கிலேயர் ஆட்சி வேரூன்றிய பின், அவர்கள் ஆட்சியை எதிர்த்துப் போராடியது இரண்டாவது கட்டம்.

                    இரண்டாம் கட்டப் போருக்கு திலகர்,  மகாத்மா காந்தி, பண்டிட் ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபபாய் பட்டேல், மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராசர், தீரர் சத்தியமூர்த்தி  போன்றோர் தலைமையேற்றனர்.  இது தான் இந்திய சுதந்திர வரலாறு…

                    ஆடிப்  பதினெட்டு… இன்று போர்க்களம் முடிந்தது. தருமத்தின் வாழ்வைச் சூது கவ்விய இருண்ட காலம் முடிவு பெற்றது. குருட்சேத்திரத்தின் மகாபாரதப் போரில் தருமம் இறுதி வெற்றி பெற்ற நாள். அமுதமும், விஷமும் ஒரே இடத்தில், நன்மையும் தீமையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். காலதேவனின் கணக்குப் புத்தகத்தில் ஜனனமும், மரணமும் ஒரு பக்கத்தில் எழுதப்படுகிறது. தருமம் அரியணையேறிய அதே நாளில் என் மண் எனக்கே சொந்தம், பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம், பரிபூரணருக்கே அடிமை என்று வாழ்வோம் என்று உரிமைக்கு வாழ்ந்த ஒரு உன்னத சுயமரியாதைக்காரனை ஒண்ட வந்த பிசாசுகள் சங்ககிலிக் கோட்டையின் அரண்களின் நடுவே தூக்கிலிட்டுக் கொன்றனர்.

                    கங்கையைச் சிமிழுக்குள் அடைக்க நினைத்தனர், அகம்பாவக்காரர்கள். எரிமலையின் உச்சியில் அமர்ந்து கொண்டு வெற்றி எக்காளமிட்டனர், ஆதிக்க வெறியர்கள். அலைகடலை நில்லென்று உத்திரவிட்டனர் அதிகார ஆட்சியாளர்கள். ஆம், கொங்கு நாட்டில், 18-ஆம் நூற்றாண்டு இறுதியில் காவிரியின் மேற்கே உள்ள கொங்குப் பகுதியில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கம் ஏற்படாமல் தடுத்து நிறுத்திட வீரப்போர் புரிந்து தூக்குக்கயிற்றை முத்தமிட்டவன் மாவீரன் தீரன் சின்னமலை.

    20130727235840_00002

                    நில வளத்திற்கும், மக்கள் மனவளத்திற்கும், உறுதியான ஊக்கத்திற்கும், இடைவிடாத உழைப்பிற்கும் பெயர் பெற்றது கொங்கு மண்டலம். சங்க காலத்திற்கு முன்னரே சிந்துவெளி நாகரிகம் போல் நொய்யல் வெளி நாகரீகத்திற்குச் சொந்தக்காரர்கள் கொங்கு நாட்டவர்கள். பல்வேறு பன்முகப்பட்ட மாட்சிகளையுடைய கொங்கு மண்டலம் வணிகத்தின் பொருட்டு இங்கு வந்து நாட்டை வளைக்க முற்பட்ட கிழக்கிந்திய கம்பெனியாரை வேர் கொள்ளச் செய்யாமல் விரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டது.

                    சின்னமலைக்கு ஒரு அண்ணனும் (குழந்தைசாமி) மூன்று தம்பியரும் (பெரியதம்பி, கிலேதார், குட்டிச்சாமி) ஒரு தங்கையும் (பருவதம்) இருந்தனர். மூத்த அண்ணன் குழந்தைச்சாமிக்கும் கடைசி சகோதரரான குட்டிச்சாமிக்கும், தங்கை பருவதத்துக்கும் மட்டுமே திருமணம் நடந்தது.  மற்ற சகோதரர்கள் மேலப்பாளையத்தில் விவசாயத்தில் ஈடுபட்டனர்.

                    அக்காலத்தில் கொங்கு நாட்டில் பல இடங்களில் இருந்த சிலம்பக் கூடங்களில் தடிவரிசை, மல்யுத்தம், வில் பயிற்சி, புலிப் பாய்ச்சு, வாள் போர், போன்றவைகளை இளைஞர்கள் கற்றனர்.

                    தீர்த்தகிரியும், பெரியதம்பியும் கிலேதாரும் மேலப்பாளையத்தில் இருந்த சிலம்பக் கூடத்தில் இதுபோன்ற போர்க்கலைகளையெல்லாம் நன்கு கற்றதோடு, அதில் நல்ல பயிற்சியும் பேராற்றலும் பெற்றனர். அப்போது மைசூர் மன்னர் உடையார் மரபினர் கொங்கு நாட்டை ஆட்சி புரிந்தனர்..  காங்கேய நாட்டில் வசூலிக்கப்படும் வரிப் பணம் சங்ககிரி சதுக்கத்துக்குச் சென்று பின்னர் மைசூர் சேரும்.

                    ஒருமுறை தீர்த்தகிரி சகோதரர்கள் மூவரும் காட்டுவழி சென்ற போது சங்ககிரிக்கு வரிப்பணம் எடுத்துச் செல்வதைப் பார்த்த தீர்த்தகிரி சகோதரர்கள் அவர்களை மறித்து விசாரித்து ‘இது கொங்கு நாட்டுப் பணம், மைசூருக்கு ஏன் செல்ல வேண்டும்?” என்று அவர்களிடமிருந்து பிடுங்கி அப்பணத்தை ஏழையருக்கும், இரவலருக்கும் பகிர்ந்து அளித்தனர்.

                    வெறும் கையோடு சங்ககிரிக்குச் சென்று நடந்த விபரங்களைக் கூறவே, சில வீரர்கள் தீர்த்தகிரியை பிடித்துச் செல்ல மேலாப்பாளையம் வந்தவர்களை சிலம்பக் கூடப் பயிற்சியாளரின் ஆட்கள் மூலம் சங்ககிரி வீரர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். சங்ககிரிப் பணியாளர்கள் வரிப்பணத்தை பறிந்தவர்  யார் என அறிவிக்கக் கேட்கவே, ‘சிவன்மலைக்கும் சென்னிமலைக்கும் இடையில் உள்ள சின்னமலை” என்று அவர்களிடம் கூறவே எங்கும் ‘சின்னமலை” என்பதே பேச்சாயிற்று பின்னர் அப்பெயரே நிலைத்தது தீர்த்தகிரிக்கு.

                    இந்த நிகழ்சிக்குப் பின்னர் சின்னமலை தனக்காக ஒரு படையை உருவாக்கிக் கொண்டார்.  தன்னோடு கருத்து ஒத்த மற்ற பாளையக்காரரின் துணையையும் நாடி ஆதரவைப் பெருக்கிக் கொண்டார்.

                    07.12.1782ல் ஐதர் அலியின் மரணத்திற்குப் பின் திப்பு சுல்தான் கர்நாடக நாட்டுத் தலைமை ஏற்றுக் கிழக்கிந்தியக் கம்பெனி எதிர்ப்புப் போரை மிகவும் தீவிரப்படுத்தினார்.  மைசூர் உடையார்கள் ஆட்சிக்குட்பட்ட கொங்குநாடு அப்போது திப்புவின் வசத்தில் இருந்தது. திப்புவின் படைக்குப் போர் வீரர்கள் தேவைப்பட்டதால் கொங்கு வீரர்கள் திப்புவின் படைக்கு அழைக்கப்பட்டனர். சின்னலையின் தூண்டுதலால் கொங்கு வீரர்கள் பலர் சீரங்கப்பட்டணம் சென்று திப்புவின் படையில் சேர்ந்து பயிற்சி பெற்றனர்.

    ஒரு நாள் பெரியதம்பி, கிலேதார், கறுப்பசேர்வை, வேலப்பன் ஆகியோருடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை அழைத்துக் கொண்டு காட்டு வழியாக மைசூர் சென்றார். சின்னமலை.

    அமைச்சர் பூரணய்யாவும், தளபதி சையது சாயபுவும், சின்னமலையை வரவேற்றுத் திப்புவிடம் அழைத்துச் சென்றனர். ஜாகோபின் கழகம் பிரெஞ்சு விடுதலை மன்றப் படைவீரர்கள் சீரங்கப் பட்டணத்தில் அப்போது இருந்தனர்.  அவர்களிடமும், கொங்கு வீரர்கள் சிறந்த போர்ப்பயிற்சி பெற்றனர்.  அங்கு கொங்குப்படை அமைக்கப்பட்டது.  கருப்பசேர்வை பிரெஞ்சு மொழியை நன்கு கற்றார்.  அதன் பயனாக திப்புவிற்காக நெப்போலியனிடம் சென்ற தூதுக்குழுவில் கருப்பசேர்வை இடம் பெற்றார். நான்காம் மைசூர் போரில் சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர் முனைகளில் சின்னமலையின் கொங்குப்படை திப்புவிற்காகச் சிறப்பாக போரிட்டது.

    04.05.1799ல் போர் முனையில் திப்பு வீரமரணமடையவே சின்னமலையும் அவர் தம் கொங்குப்படையும் ஊர் திரும்பியது.   அதற்குப் பின்னர்தான் கொங்கு நாட்டு பெருமக்கள் அளித்த காட்டுப் பகுதியில் வேளாளர்  பெருமக்களின் ஆதரவோடு ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் வலிமையான கோட்டை ஒன்றைக் கட்டிச் சின்னமலை படை பலத்தைப் பெருக்கியபோது, திப்புவின் படைவீரர் சிலரும் வந்து ஓடாநிலையில் தங்கினர்.

    சீரங்கப்பட்டணம் உடன்படிக்கைப்படி கொங்கு நாடு கம்பெனிக்கு உட்பட்டாலும், கோவைக்கும், சங்ககிரிக்கும் இடைப்பட்ட பகுதி கம்பெனியார் வசப்படவில்லை. சின்னமலையின் கண்காணிப்பிலும் அவருடைய ஆதரவாளர்களின் ஆதிக்கத்திலும் அப்பகுதி இருந்தது.  ஆங்கிலேயர் அதைத் தன்வசமாக்க விரும்பினர்.

    திப்பு சுல்தான் வீழ்ச்சிக்குப் பின் அவருடைய வீரத்தளபதி மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக் கம்பெனி எதிர்ப்பாளர்களுக்கிடையே பெரும் ஆற்றல் பெற்று விளங்கினார். கொங்குத்தூதர்கள் வெங்கடரமணய்யா, ரிஷாசாகிப், விருப்பாட்சி கோபால நாயக்கரின் தூதர் தும்மச்சி முதலியார் மூலம் காவிரிக்கு மேற்கில் சின்னமலையும் காவிரிக்குக் கிழக்கே ஓசூர் கானி ஜாகானையும் தலைவராக ஏற்றுக் கொள்ளுமாற தூண்டாஜி வாக் பணித்தார். அதனை எல்லாரும் ஏற்றுக் கொண்டனர்.

    கோலாப்பூரில் தங்கியிருந்த தமிழக விடுதலைக்குழு ஆங்கிலேயே எதிர்ப்புக்காரர்களை ஒன்று சேர்ந்து உதவி பெற விரும்பியது. அணைகுந்திப் பாளையக்காரர், விஜயநகர அரசின் வாரிசுகள், நிஜாமின் சர்தாரிகள், ஷோலாப்பூர் ராயதூக்குத் தலைவர்கள், குவாலியரின் சிந்தியா, திப்புவின் எஞ்சிய படைத் தலைவர்கள் உதவியைக் கொங்குப் போராளிகள் பெற விரும்பினர்.  சிலர் ஆதரவளிக்க முற்பட்டனர்.  சிலர் தேவைப்படும் போது படையுடன் வருவதாகக் கூறினர்.

    மருது சகோதரர்கட்கும், கொங்குத் தலைவர்கட்கும் தொடர்பை ஏற்படுத்த விருப்பாட்சிப் பாளையக்காரர் கோபால் நாயக்கர் விரும்பினார்.

    இவர்கள் சேர்ந்து சின்னமலையின் தலைமையில் போராட முயற்சி செய்ததே ‘கோவைப்புரட்சி” என்று அழைக்கப்படுகிறது. கோயமுத்தூர் கொங்கு நாட்டின் ஒரு முக்கியமான பகுதி. 18ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் மைசூர் மன்னர்கள் சாமராஜ உடையார் கிருஷ்ணராஜ உடையார் கோவைப்பகுதியை ஆட்சி புரிந்தனர்.  அவர்கள் சார்பில் குமாரதேவய்யன், குறிக்கார மாதய்யன் ஆகியோர் கோவையில் அதிகாரம் செலுத்தினர்.

    ஐதரும், திப்புவும் ஆட்சிக்கு வந்தபோது அவர்கள் கையில் வந்தது.  அப்பொழுது கோவைக்கு ஒரு கோட்டை இருந்தது.  திப்பு சுல்தான் பலப்படுத்திய கொங்கு கோட்டைகளில் கோவைக் கோட்டையும் ஒன்று. 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் நிலை மாறியது. மூன்றாம் மைசூர் போர் நடைபெற்றபோது கோவை ஆங்கிலக் கம்பெனியார் கைக்கு வந்துவிட்டது.  ஜெனரல் மெடோஸ் தலைமையில் கோவைக் கோட்டையில் ஒரு படை இருந்தது.

    பவானியின் வடகரையில் சத்தியமங்கலம் அருகே திப்புவின் படையோடு மோதிய பிளாயிட் தோற்றோடி வந்து கோவைக்கோட்டையில்தான் தஞ்சம்புகுந்தான். 1800ஆம் ஆண்டு, கோவைக் கோட்டையின் தலைவனாக விளங்கியவன் லெப்டினன்ட் கர்னல் கே.மக்னிஸ்டர் என்பவன்.  கிழக்கிந்தியக் கம்பெனியின் 5ம் பட்டாளம் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது.  அங்கிருந்து கொண்டு தளி, விருப்பாட்சி, மலபாரோடும் தொடர்பு கொள்ள ஆங்கிலேயர் வாய்ப்பு ஏற்படுத்திக் கொண்டனர்.

    கோவைக் கோட்டை ஆங்கிலேயர் வசம் இருப்பது தங்களுக்கு ஆபத்து என்பதனை விடுதலைப் போராளிகள் உணர்ந்தனர்.  எப்படியாவது கோவைக் கோட்டையை மீட்பது என்று முடிவு செய்தனர்.  திண்டுக்கல் கூட்டமைப்பினர் அதற்கான  பணியைச் செய்வதெனவும், கோட்டைமீட்பு முயற்சிக்குத் தீரன் சின்னமலை தலைமை தாங்குவது எனவும் தீர்மானம் செய்யப்பட்டது.

                    கோவைப் புரட்சியை 03.06.1800 அன்று நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. கோவைக் கோட்டையில் ஆங்கிலேயர் படையில் முஸ்லீம் வீரர்கள் கனிசமான அளவு இருந்தனர். 03.06.1800 அன்று மொகரம் நாள்;. முதிய முஸ்லீம் வீரர்கள் தொழுகைக்குச் சென்றுவிடுவர். இளைய முஸ்லீம் வீரர்கள் விருந்திற்கும், கேளிக்கைகளுக்கும் சென்றுவிடுவர். அந்தச் சந்தர்ப்பத்தில் கோட்டைமீட்பு எளிதாகும் என்று கருதினர். ஒரு மாதம் முன்பே விடுதலை வீரர்கள் பலர் கோவைக்குச் சென்று மக்களோடு மக்களாகக் கலந்தனர். மக்களிடையே பெருத்த ஆதரவு இருந்தது. எல்லாவகையான உதவிகளையும் அவர்கள் செய்து வந்தனர்.  கோவை நரசிங்கராவ் விடுதலை வீரர்கட்குப் பல வசதிகளைச் செய்து கொடுத்தனர். பலர் விரைவில் கோவைக்கு வருவதாகச் சின்னமலைக்கு இரகசியத் தகவல் அனுப்பியிருந்தனர். ஓசூர் பத்தே முகம்மதும், இச்சிப்பட்டி ரோனோன் உல்லாகானும் வந்த கொண்டிருந்தனர். கஜ்ஜல்ஹட்டிக் கணவாயிலிருந்து ஒசூர் கானி ஜா கான் 4000 குதிரை வீரர்களோடு வந்து கொண்டிருந்தான். திண்டுக்கல் லக்கம நாயக்கரும், விருப்பாட்சி கோபால நாயக்கரும் உதவி அனுப்பி இருந்தனர்.

                    சின்னமலையின் நண்பர்களான பூந்துறை வாரணவாசி, ஈரோடு வெள்ளை கவுண்டர், பெருந்துறை குமாரவெள்ளை, அரவக்குறிச்சி பெரியதம்பி ஆகியோரும் தம் ஆட்களுடன் வந்து விட்டனர். கோவை நகரை ஒட்டிய மணியக்காரம்பாளையம், கணபதி, சிரவணம்பட்டி, பேரூர், இராமநாதபுரம், புலியகுளம், பூளைமேடு ஆகிய இடங்களில் வீரர்கள் தலைமறைவாகினர்.

     சேலத்திலிருந்து பரமத்தி அப்பாச்சிக்கவுண்டர், நீலப்பகவுண்டர் ஆகியோர் வந்து கொண்டிருந்தனர். சின்னமலை பெரிதும் எதிர்பார்த்தது வட கர்நாடகத்  தலைவர் தூண்டாஜிவாக், மேல் கர்நாடகக்தலைவர் மாகி கிருண்ணப்ப நாயக்கர் ஆகியவர்களின் படை வருகையைத்தான். கடைசி நேரம்வரை அவர்கள் வரவில்லை. மிக முக்கியமானவரான தூண்டாஜி வாக்கிடமிருந்து எந்தத்தகவலும் இல்லை. காரணமும் தெரியவில்லை.

                    சிவகங்கை மருதுபாண்டியர் கூட படை அனுப்புவதாகக் கூறியிருந்தனர். தூண்டாஜி வாக்கிடமிருந்து எந்த சைகையும் வராததால் மருது பாண்டியர் படைகளை அனுப்பவில்லை. இருப்பினும் சின்னமலை சோர்வடையவில்லை. பம்பரமெனச் சுற்றிக் கொண்டிருந்தான். மொகரம் நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. விடுதலை வீரர்கள் மாறு வேடத்தில் பால்க்காரர் போலவும், காய்கறி விற்பவர் போலவும், சோதிடம் கூறுபவரைப்போலவும்,  விறகு வெட்டுபவரைப் போலவும் கோவைக் கோட்டை அருகில் சென்று நோட்டம் பார்த்தனர்.

                    சில விடுதலை வீரர்கள் தங்கள் ஆர்வத்தின் காரணமாக மொகரத்தின் முதல் நாளே கோட்டை அருகில் போர் நடவடிக்கையில் ஈடுபட ஆயத்தமாயினர். புதிய நபர்களின் நடவடிக்கைகளைக் கண்ட கோவை தாசில்தார் கோவைப் புரட்சிச் செய்தியை உணர்ந்தார். உடனே தளபதி மக்ளிஸ்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெள்ளைப்படைகளையும், ராஜபுத்திரப்படைகளையும் அவர் தயார்படுத்தினார். முஸ்லீம் படை வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கோட்டையின் எல்லா நிலைகளும் உஷார் ஆயின. நகரெங்கும் பல பகுதிகளில் பரவலாக இருந்த விடுதலைப் படையினர் ஒன்று சேர்வது தடுக்கப்பட்டது. விடுதலை வீரர்களிடையே செய்திகள் உரிய காலத்தில் சென்று சேர ஏற்பட்ட தடைகளும் கோவைப் புரட்சி தோல்வி அடைய ஒரு காரணமாக இருந்தது.

                    வெண்ணைய் திரண்டு வரும்போது தாழி உடைந்த கதை ஆயிற்று. இரண்டு மாத்திற்கு மேல் செய்த முயற்சிகள் வீணாயின. விடுதலை வீரர்கள் பின்வாங்கினர். பலர் தத்தம் பகுதிகட்குத் திரும்பிச் சென்றனர். இன்னும் பலர் அடுத்த ஆணையை எதிர்பார்த்து நின்றனர். சின்னமலை சகோதரர்கள் ஓடாநிலை திரும்பினர்.

                    மக்ளிஸ்டாரின் படைவீரர்கள் 42 பேரை விடுதலைக் கைதிகளாகப் பிடித்தனர். பவானியில் இருந்த வில்லியம் கேரோவிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. 42 பேரும் பல இடங்களில் தூக்கில் போடப்பட்டனர். இந்நிகழ்ச்சி 08.06.1800 அன்று நடைபெற்றது. ஒரு சிலர் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவுக்கு நாடு கடத்தப்பட்டனர். தூக்கிலிடப்படுவதற்கு முன் ஆங்கிலேயர் , ‘போலி  இராணுவவிசாரணை’ நடத்தி அவர்களிடம் வாக்குமூலம் வாங்கினர்.

                    சின்னமலை தலைமை தாங்கித் திட்டமிட்டு நடத்திய கோவைப்புரட்சி சிலரின் ஆர்வக்கோளாறால் நடைபெறாமல் தோல்வி அடைந்தது. இப்புரட்சி வெற்றி பெற்று இருந்தால் அது ஆங்கிலேயேரை எதிர்த்து நடத்திய சுதந்திரப் போரில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

                    கோவைப்புரட்சிக்குப் பின்னர் சின்னமலை சோர்ந்துவிடவில்லை. தன்னுடைய ஓடாநிலைக் கோட்டையைப் பலப்படுத்தினார். சின்னமலையிடம் சங்ககிரிக் கம்பெனி அதிகாரி, சின்னமத்தம்பி என்பவரைத் தூதாக அனுப்பினார். கம்பெனி ஆதிக்கத்தைச் சின்னமலை ஏற்றுக்கொண்டால் அவரையே அப்பகுதிக்குத் தலைவர் ஆக்குவதாகவும், வரிப்பணத்தில் பத்தில் மூன்று பகுதி கம்பெனிக்குக் கொடுத்தல் போதும் என்றும் பேரம் பேசினார். சின்னமலை இசையவில்லை. கம்பெனியார் அதிர்ச்சியுற்றனர்.  சின்னமலையுடன் போருக்கு ஆயத்தமாயினர்.

                    எப்படியும் சின்னமலையை ஒழித்துவிடுவது என்று கம்பெனியார் முடிவு செய்தனர். அதற்காகச் சின்னமலையுடன் மூன்று பெரும் போர்களை நடத்தித் தோற்றனர். 1801-ல் காவிரிக் கரையிலும், 1802-ல் ஓடாநிலையிலும், 1804-ல் அரச்சலூரிலும் நடைபெற்ற போரில் சின்னமலையே பெரும் வெற்றி பெற்றார். ஓடாநிலைப் போரில் கம்பெனித் தளபதி மேக்ஸ்வெல் கொல்லப்பட்டான். அரச்சலூரில்  கம்பெனியின் குதிரைப்படையைக் குண்டுவீசி நிலைகுலைய வைத்து பின்வாங்கி ஓடுமாறு செய்தனர். ‘பல இடங்களில் தன் பெரும்படையால் வெற்றி பெற்ற மேக்ஸ்வெல் ஒரு சிறிய படையிடம் தோற்றார்’  என்று கம்பெனிக் குறிப்பு  கூறுகிறது.

    ஆங்கிலேயப் படைகளின் நடவடிக்கைகளை உளவு சொல்ல, சின்னமலையின் நெருங்கிய நண்பர் வேலப்பன் கள்ளிக்கோட்டையில் ஆங்கிலேயப் படையில் ரகசியமாகப் பணி புரிந்தார். 1805-ஆம் ஆண்டு திடீரென வேலப்பனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், 32 பெரும் பீரங்கிகளுடன் ஓடாநிலை கோட்டையை தகர்க்க ஆங்கிலேயப் படை புறப்பட இருப்பதாக கூறப்பட்டிருந்தது. ஓடாநிலையை விட்டு வெளியேறி, பழனிமலை தொடரில் உள்ள கருமலையில் மறைந்து வாழ முடிவு செய்தார். சின்னமலை மற்றும் அவரது ஆட்களுக்கு சமையல் செய்ய நல்லப்பன் என்பவனை உடன் அழைத்துச் சென்றனர். குறிப்பிட்ட ஒரு நாள் கள்ளிக்கோட்டையிலிருந்து ஆங்கிலேயேரின் பீரங்கிகள் ஓடாநிலைக்கு மூன்று கிலோ மீட்டர் மேற்கேயுள்ள ஓலவலசு கிராமத்தில் வந்து நின்றன. சின்னமலை தப்பிய செய்தி அறிந்து ஆங்கிலேயர்களின் கைகளில் வேலப்பன் எழுதிய கடிதம் கிடைத்தது. கோட்டை வாயிலில் வேலப்பன் சுடப்பட்டார். தொடர்ந்து பீரங்கிகள் ஓடாநிலை கோட்டையைத் துளைத்தெடுத்தன. கோட்டை மண் மேடாகும் வரை அவை ஓயவில்லை.

    கருமலையில் தங்கியிருந்த சின்னமலை துடி துடித்துப்போனார். கோட்டை இடிக்கப்பட்டதை விட, நண்பர் வேலப்பனின் மறைவு அவரை வாட்டியது. தொடர்ந்து கருமலையிலேயே தங்கினார். அங்கு பீரங்கிகள் செய்ய ஆயத்தமானார். கள்ளிவலசு, விருப்பாட்சி, பழனியில் இருந்து பாளைய ஆட்கள் அவருக்கு உதவினார்கள்.

    தனது கவலையை மறைக்க சின்னமலை விவசாயப் பணிகளிலும் ஈடுபட்டார். இந்த காலகட்டத்தில் சமையல்காரன் நல்லப்பனை ஆங்கிலேயேரின் ஆள் ஒருவன் சந்தித்தான். பணம் கைமாறியது., சின்னமலையின் நடமாட்டத்தைக் காட்டிக் கொடுத்தான் கயவன் நல்லப்பன்.

    ஆங்கிலேயப்படை சின்னமலையையும், சகோதரர்களையும் சூழ்ந்து கைது செய்து முன்னும், பின்னும் பீரங்கி வண்டிகள் வர சின்னமலையும் அவரது சகோதரர்களும் சங்ககிரி கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கொங்கு நாடே கண்ணீர் விட்டு அழுதது. சின்னமலை உள்ள இடமே தன் இடம் என்று கருதிய கறுப்பசேர்வை சங்ககிரி கோட்டையில் சரணடைந்தார்.

    31.07.1805 ஆடிப் பதினெட்டு பண்டிகை நாள் …….. கொங்கு நாட்டு வரலாற்றில் ஒரு கொடிய நாள் ……. சங்ககிரியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கதவுகள் அடைக்கப்பட்டன். 10 வாயில்களும் மூடப்பட்டன. மலையில் தமிழ் வீரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.  கடைசி நேரத்தில், தங்கள் படையுடன் சேர்ந்து கொண்டால் விடுதலை செய்வதாக,  ஆங்கிலேயே தளபதி மார்ஷல் ஆசை வார்த்தை கூறினான். மயங்காத சுதந்திரச் சுடரொளி சின்னமலை மார்ஷல் முகத்தில் காரித்துப்பினார்.

    சங்ககிரி மலை உச்சியில், பொழுது காண்பாழிக்குக் கிழக்கில், ஆலமரத்தின் வடக்கே நான்கு தூக்கு மரங்கள் தயாராக இருந்தன. சின்னமலை, பெரியதம்பி, கிலேதார், கறுப்பசேர்வை ஆகிய நால்வரும் தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டனர். தூக்கிலிடும் ஆட்களை தன் கண் சைகையால் அப்புறப்படுத்தினார், சின்னமலை. நால்வரும் தங்கள் கழுத்தில் தாங்களே  தூக்குக் கயிற்றை மாட்டிக் கொண்டனர்.

    சுதந்திரச் சுடர் அணைந்தது …..  கொங்கு மாவீரர்கள் கொடியவர்  சூழ்ச்சிக்குப் பலியாயினர். …..  கொங்கு நாடே கதறியது   …..   தியாக சீலனை இழந்ததால்  …..!

                                                                                        முற்றும்.

    Share
  • ஜூலை (2013) மாத சிறுகதைப் போட்டி முடிவு!

    வெங்கட் சாமிநாதன்

    இம்முறை மூன்று பேர்களின் கதைகள் முன் நின்றன. ஒன்று பார்வதி ராமச்சந்திரனின் சரயு, பழமை பேசியின் பேச்சி, தேமொழியின் அனிச்ச மலர்கள். தேர்ந்த கையான பழமை பேசியின் பேச்சி யில் கிராமத்து சூழல் மிக அடர்த்தியாக எழுப்பப்பட்டிருக்கிறது. கதையென்று ஏதும் இல்லாது சூழல் கொஞ்சம் அதிகமாகவே அடர்த்தி கொண்டுள்ளது. அனிச்ச மலரில் பிராமணப் பெண் என்று அழுத்திச் சொல்ல வேண்டாத இடங்களில் எல்லாம், பள்ளிக்கூடத்தில் கூட பிராமணப் பேச்சு வலிந்து புகுத்தப்பட்டுள்ளது. சிறு பெண்கள் சித்திரம் தடித்த கோடுகளால் வரையப்பட்டுள்ளது. மூன்று பேரில் பார்வதி ராமசாந்திரனின் சரயு கதை தான் சாதாரணமாக குடும்பங்களில் நடக்கும் நிகழ்வையும் அதன் பாரம்பரிய சிக்கல்களையே சொன்னாலும் குறைந்த சொற்களில் திறம்படச் சொல்வதில் வெற்றி கண்டுள்ளது.

    என் தேர்வு பார்வதி ராமச்சந்திரனின் சரயு. அவருக்கு என் வாழ்த்துக்கள்.

    பழமை பேசி, தேமொழி இருவருக்கும் கூட என் வாழ்த்துக்கள்.

    கடந்த ஒரு வருட காலத்தில் மூன்று நான்கு புதிய திறன்களைக் கண்டு கொண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவர்களுக்கெல்லாம் என் வாழ்த்துக்கள்..

    போட்டியில் பங்குபெற்ற சிறுகதைகள்:

    2.

    உறக்கத்திலோர் உளறல் !!!

    3.

    ஓடிப் போன புத்தர்

    4.

    “பத்ரமா இருங்கப்பா!”

    5.

    நான் வேற அப்பாவிற்குப் பிறந்திருக்கலாம்

    6.

    அந்த நூறு நாட்கள்!

    7.…விடுகதை!…

    8.

    சரயு…

    9.

    ஆங்காரியும் கோணங்கியும் இடையிலொரு அம்புஜவல்லியும்

    10.

    முசுட்டுத் தாத்தா …

    11.

    நன்றி

    12.

    புரியாத புதிர்

    13.

    டேய். நம்ம காலேஜ் சல்யூட்டை அடி!!!

    14.

    பேச்சி

    15. ‘நீர்’

    17. அனிச்ச மலர்கள்

     

    அன்பு நண்பர்களே,

    வணக்கம். இப்பொழுதுதான் போட்டி ஆரம்பித்தது போல் இருக்கிறது. ஒரு வருடம் ஓடிவிட்டது. முதன் முதலில் நாம் ஒரு சிறுகதைப் போட்டி நடத்தினால் நன்றாக இருக்கும் என்று எழுத்தாளர் திரு வையவன் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் உடனே மிக உற்சாகமாக, “நல்ல விசயம்தானே உடனே செய்யுங்கள், அதற்கான பரிசுத் தொகையும் அறிவித்துவிடுங்கள். எங்கள் டிரஸ்ட் மூலமாக நான் கொடுத்து விடுகிறேன். அதுமட்டுமல்லாமல், மாதம் ஒரு சிறுகதையைத் தேர்ந்தெடுத்து அதற்கும் 100 ரூபாய் பரிசு வழங்கலாம், பரிசு பெற்ற கதைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாகவும் வெளியிடலாம்” என்று மனமுவந்து கூறினார். உடனடியாக அந்த மாதமே போட்டி ஆரம்பிக்கப்பட்டது, இதே ஜூலை மாதம் 2012ம் ஆண்டு. சிறுகதைப் போட்டிக்கு பல படைப்பாளிகள் தங்கள் அற்புதமான படைப்புகளை வழங்கி இப்போட்டியை வெற்றிப் பாதையில் இட்டுச் சென்றிருக்கின்றனர். போட்டிக்கான பரிசுக் கதையை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை முதுபெரும் எழுத்தாளர், மிகச் சிறந்த விமர்சகர் என்று அனைவராலும் போற்றப்படும் ஐயா வெங்கட் சாமிநாதன் அவர்கள் மிக மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார்கள். தன்னுடைய பல்வேறு பணிகளுக்கிடையில் காலந்தவறாமல், குறிப்பிட்ட நேரத்தில் அதனைத் தேர்ந்தெடுத்து பாரபட்சமற்ற தீர்ப்பையும் வழங்கியுள்ளார்கள். இதற்கெல்லாம் அனைவருக்கும் நன்றி என்ற மூன்றெழுத்து வார்த்தையைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும். இப்போது அடுத்தக் கட்டத் தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் நகர்கிறது. விரைவில் அதற்கான முடிவும் அறிவிக்கப்படும். இதுவரை போட்டியில் தங்கள் பங்களிப்புகளை அளித்துள்ள அனைத்து படைப்பாளர்களுக்கும், வெற்றி வாகை சூடியவர்களுக்கும், மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து நம் வல்லமைக்கு ஆதரவு அளித்து வரும் நம் வாசகர்களுக்கு மனமார்ந்த நன்றி. இன்னும் பலப்பல நல்ல நல்ல படைப்புகளை தங்களிடமிருந்து எதிர் நோக்கி காத்திருக்கிறோம். தொடர்ந்து எழுதுங்கள் நண்பர்களே.

     

    அன்புடன்

    பவள சங்கரி

    Share